Search This Blog

13.7.15

பெரியார் உலகமயமாகிறார்-பெரியார் பன்னாட்டுறவு பகுத்தறிவாளர் மாநாடு ஜெர்மெனியில்

பெரியார் உலகமயமாகிறார்
பெரியாரிஸ்ட்டுகள் ஜெர்மனியில் கூடுவோம்! 

உலக பகுத்தறிவாளர்கள் மாநாடு

தமிழர் தலைவர் அறிக்கை


2016 ஜூலையில் ஜெர்மனியில் நடைபெற விருக்கும் பெரியாரிஸ்டுகள் பகுத்தறிவாளர்கள் மாநாடு குறித்து தமிழ்நாடு பகுத்தறிவாளர் கழகத்தின் புரவலர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:


உலக பெரியாரிஸ்டுகளுக்கு ஓர் அரிய வாய்ப்பு; ஆம் எளிதில் கிடைக்காத அரியதோர் வாய்ப்புதான்!

பல ஆண்டுகளாக நாம் கனவு கண்டோம். சில ஆண்டுகளாக ஆழ்ந்து திட்டமிட்டோம். நம் அறிவு ஆசான் - உலகத் தலைவர் பெரியார் ஓர் ஒப்பற்ற பகுத்தறிவுப் பகலவன் என்பதை உலகத்திற்கு நாம் பறைசாற்றிட, பெரியார்தம் தத்துவங்களை பகுத்தறிவு, மானுடநேயம், பெண்ணுரிமை, மூடநம்பிக்கை ஒழிப்பு இவைகளை உலகறியச் செய்து, அவர்தம் சாதனை களை - அமைதிப் புரட்சியை அகிலம் அறியச்செய்ய ஓர் அரிய வாய்ப்பு.

ஆம் பெரியார் பன்னாட்டு அமைப்பும், பகுத்தறிவாளர்களும் இணைந்து நடத்தும் பெரியார் பன்னாட்டுறவு பகுத்தறிவாளர் மாநாடு ஜெர்மெனியில் வருகின்ற 2016 ஆண்டில் ஜூலை 28, 29, 30 ஆகிய மூன்று நாள்களில் பல்வேறு கருத் தரங்குகள் - கலைநிகழ்ச்சிகளுடன் ஜெர்மனியில் எல்லா ஏற்பாடுகளும் தொடங்கி நடைபெறுகின்றன.

ஜெர்மனி பெரியார் பன்னாட்டு அமைப்பின் தலைவரான பேராசிரியை டாக்டர் உல்ரிக் நிக்கலஸ் அம்மையார் அவர்கள் தலைமையில் அமைந்த உள்ளூர் குழுவும், பெரியார் பன்னாட்டு அமைப்பின் இருபெரும் ஆற்றல்மிகு இயக்குநர்கள் பேராசிரியர் டாக்டர் இலக்குவன் தமிழ், டாக்டர்  (மருத்துவர்) சோம.இளங்கோவன் - டாக்டர் சரோஜா அம்மை யார் போன்றவர்களும் இணைந்த வரவேற்புக்குழு வினர் தொடக்க கட்ட பணிகளைத் தொடங்கிவிட்டனர்.
அந்தப் பருவம் குளிர் இல்லாத கோடைப் பருவம்; வெளிநாடுகளிலிருந்து வந்து கலந்து கொள்பவர்களுக் குரிய அந்த தட்ப வெட்ப சூழ்நிலை மிகவும் வசதியாக இருக்கும்.

ரைன்நதி படகுப் பயணம் - இறுதி நாள் பொழுது போக்காகவும் ஏற்பாடு செய்யப்படுகிறது. வெளி நாட்டுப் பிரதிநிதிகள் - பேராளர்கள் விரும்பும் வண்ணம் மிதமான வாடகை ஓட்டல்களையும் - உள்ளூர் வரவேற்புக்குழுவினர் ஏற்பாடு செய்ய ஆயத்தமாக உள்ளனர்.

மூன்று நாள் மாநாடு ஜெர்மனியின் கொலோன் நகரில் நடந்த பிறகு ஊர் திரும்புமுன், ஒருவாரம் அல்லது 10 நாட்கள் அய்ரோப்பிய நாடுகளான சுவிட்சர்லாந்து, பிரான்ஸ், பெல்ஜியம், லண்டன் சென்று திரும்ப பேராளர்கள் விரும்பினால், அவர்கள் பிரபல பயணக் கம்பெனிகள் மூலம் (Package Tour)   அவர வர்கள் சொந்த செலவில் ஒட்டுமொத்த பகுத்தறிவா ளர்கள் குழு சுற்றுலாவாக அமைத்துக் கொண்டு தமிழகம் - சென்னை - திரும்பவும் ஏற்பாடு செய்ய யோசிக்கலாம்.

மாநாட்டில் கலந்து கொள்ளும் பேராளர்களுக்கு விமான பயணக்கட்டணம் அல்லாமல் எவ்வளவு கட்டணம் (தங்கும் ஓட்டல், மாநாட்டில் மதிய உணவு - இடையில் தேநீர் உட்பட ஆகும் தொகை) எவ்வளவு என்பது விரைவில் அறிவிக்கப்படும்.

அதிகபட்சம் வெளிநாட்டுப் பிரதிநிதிகள் (Delegates) 100 பேர்களையும், உள்ளூர்காரர்கள் 200, 300-க்கு மேல் எதிர்பார்க்கப்படுகின்றார்கள்.

100 பேர் First Cum First Served - முதலில் பதிவு செய்தவர்களுக்கே முன்னுரிமை என்ற அடிப்படையில் பதிவு செய்து பேராளர்கள் (Delegates) ஆக்கப்படுவர்.
இங்கே கணிசமானவர்கள் எண்ணிக்கை புறப் பட்டால் (Package Tour)   விமான டிக்கெட்டுகளில் விலை குறைய வாய்ப்பு இருக்கக்கூடும்.
இது சம்பந்தமாக பகுத்தறிவாளர் கழகப் பொறுப் பாளர்கள் வீ.குமரேசன் (ப.க.மாநில பொதுச் செய லாளர்), கோ.ஒளிவண்ணன், சென்னை தமிழ்ச் செல்வன், தருமபுரி ஊமை ஜெயராமன் ஆகியோர் குழுவினராக முதலில் தொடர்புக்கு செயல்படுவர்.
மற்ற விவரங்கள் அவ்வப்போது  வெளியிடப்படும்.
மாநாட்டின் தலைப்பு (Theme of the conference) கருத்தரங்க அமைப்புகள், ஆய்வுக் கட்டுரையாளர்கள் - மலர் தயாரிப்பு இப்படிப் பலப்பல பிறகு அவ்வப் போது அறிவிக்கப்படலாம்.


----------------------------கி.வீரமணி  புரவலர், பகுத்தறிவாளர் கழகம் -"விடுதலை” 13-07-2015

6 comments:

தமிழ் ஓவியா said...

காமராசருக்கு சூட்டப்பட வேண்டிய மாலை!

தமிழர் தலைவர் ஆசிரியர் அறிக்கை




இன்று கல்வி வள்ளல், சமூகநீதிச் சரித்திரம் படைத்த, குலக் கல்வித் திட்டத்தை, விரட்டியடித்த மாவீரர் - அனைவருக்கும் அனைத்தும் என்ற சுயமரியாதை இயக்கத்தின் முழக்கமான தந்தை பெரியார் கொள்கையை தனது ஆட்சிக் காலத்தில் நிலை நாட்டிய நீள் புகழ் நிர்மலர் காமராசரின் 113ஆவது பிறந்த நாள் இந்நாள்!

கல்வி நீரோடையை நாடெலாம் பாயச் செய்தவர்!

திராவிடர் இயக்க ஆட்சியான நீதிக்கட்சி ஆட்சியில் துவங்கிய கல்விப் புரட்சியை ஆச்சாரியாரின் குலக் கல்வித் திட்டம் என்ற கிரகணம் மறைத்த இருட்டினை விரட்டி அடித்து, கல்வி நீரோடை நாடெல்லாம் பாய விட்ட தமிழ்நாட்டின் அருந் தலைவர் காமராசரின் ஆட்சி மிகச் சிறப்பானது.

தகுதி, திறமை பேசி நம் மக்களை மட்டந் தட்டி வைத்தவர்களை வாயடைக்கச் செய்த நடை முறைச் செயல் வீரர்!

தந்தை பெரியார் என்ற மாபெரும் மனிதநேயத் தலைவரின் வற்புறுத்தலால் ஆட்சிக் கட்டிலில் தயங்கித் தயங்கி ஏறி, தன்னிகரற்ற ஆட்சி புரிந்து வரலாறு படைத்தவர்.
கும்பலில் கோவிந்தாவா?

காமராசரை டில்லியில் உயிருடன் (வீட்டில்) கொளுத்தி கொலை செய்ய முயன்ற கூட்டம் கூட (நவம்பர் 7 1966) இன்று காமராசருக்கு விழா எடுத்து கும்பலில் கோவிந்தா  போடுகிறது.

காமராசர் - பலருக்குப் பாடம் - சிலருக்கோ படம்!

இதைப் புரிந்து, காமராசர் விரும்பிய  ஜாதி, தீண்டாமை ஒழிந்த புதிய சமதர்ம, சமுதாயத்தை உருவாக்க உழைப்போம்.

எது அற்புத மாலை?

மதவெறி சக்திகளை மண் கவ்வச் செய்வதே, காமராசருக்குச் சூட்டும் அற்புத மாலையாகும்.
வாழ்க காமராசர்!

வருக அவர் விரும்பிய சமதர்ம சமுதாயம்!!

கி.வீரமணி
தலைவர்,திராவிடர் கழகம்


முகாம்: சிங்கப்பூர்

15.7.2015

தமிழ் ஓவியா said...

கடவுளை வணங்குகிறவன் காட்டுமிராண்டி
தந்தை பெரியாரின் கூற்று மெய்யா? பொய்யா?

இதுவரை நடைபெற்ற கூட்ட நெரிசல் விபத்துகள்..

2015  ஜூலை 14: ஆந்திர மாநிலம் ராஜமுந்திரியில் ஏற்பட்ட விபத்தில் 27 பேர் பலியாகியுள்ளனர். (பலி எண்ணிக்கை உயரலாம்) 20 பேருக்கு மேல் காயம் அடைந்தனர்.

2014 ஆகஸ்ட் 25: மத்தியப் பிரதேசம் சாத்னா மாவட்டம் சித்ரகூட் பகுதி கோயி லில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 10 பேர் உயிரிழந்தனர்.

2013 அக்டோபர் 13: மத்தியப் பிர தேசம் டாடியாவில் உள்ள ரத்னாகர் கோயிலில் கூட்ட நெரிசலில் சிக்கி 115 பேர் பலியாகினர்.

2013 பிப்ரவரி 10; உத்தரப்பிரதேசம் அலகாபாதில் நடைபெற்ற கும்பமேளா வின்போது ரயில் நிலையத்தில் ஏற்பட்ட நெரிசலில் 36 பேர் பலியாகினர்.

2012 நவம்பர் 19: பிஹார் தலைநகர் பாட்னாவில் சாத் பண்டிகையின்போது நெரிசல் ஏற்பட்டு 20 பேர் உயிரிழந்தனர்.

2012 செப்டம்பர் 24: ஜார்க்கண்ட் மாநிலம் டியோகர் மாவட்டத்தில் உள்ள ஆசிரமத்தில் ஏற்பட்ட நெரிசலில் 8 பெண்கள் உட்பட 9 பக்தர்கள் பலியாகினர்.

2012 பிப்ரவரி 19: குஜராத் மாநிலம் ஜுனாகத்தில் உள்ள கோயிலில் மகா சிவராத்திரி விழாவில் பக்தர்கள் முண்டி யடித்ததில் 6 பேர் இறந்தனர்.

2011 நவம்பர் 8:  ஹரித்வாரில் கங்கை நதிக் கரையில் உள்ள ஹர்-கி-பாரி என்ற இடத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 22 பேர் பலியாகினர்.

2011 ஜனவரி 14: கேரளாவின் சபரி மலையில் நெரிசல் ஏற்பட்டு 106 பக்தர்கள் பலியாகினர்.

2011 ஜனவரி 8: உத்தராகண்ட் மாநிலம் ஹரித்வாரில் கங்கை  நதியில் புனித நீராட கூட்டம் அலைமோதிய போது 22 பேர் உயிரிழந்தனர்.

2010 மார்ச் 4; உத்தரப் பிரதேசம், பிரதாப்கர் பகுதியில் ராம் ஜானகி கோயி லில் அன்னதானம், இலவச உடைகளை வாங்கச் சென்ற 63 பேர் நெரிசலில் சிக்கி இறந்தனர்.

2008 செப்டம்பர் 30: ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் உள்ள மலைக் கோயிலில் நெரிசல் ஏற்பட்டு 120 பேர் உயிரிழந்தனர்.

2008 ஜூலை: ஒடிசா மாநிலம் பூரியில் ஜெகநாதர் ஆலய யாத்திரை யின்போது நெரிசலில் சிக்கி 6 பக்தர்கள் பலியாகினர்.

2007 ஆகஸ்ட் 15: குஜராத் மாநிலம் பஞ்ச்மஹால் மாவட்டம் பவகாத் மலைப் பகுதியில் உள்ள மகாகாளி கோயிலில் நெரிசல் ஏற்பட்டு 11 பக்தர்கள் இறந்தனர்.

2006 ஆகஸ்ட் 3: இமாச்சலப் பிர தேசம் நயினா தேவி கோயிலில் மக்கள் கூட்டம் சிதறி ஓடியதில் 160 பேர் உயிரிழந்தனர்.

2005 ஜனவரி 26:  மகாராஷ்டிராவில் சத்தாரா மாவட்டத்தில் உள்ள மாந்தெர் தேவி கோயில் விழாவில் கூட்ட நெரி சலில் சிக்கி 350 பேர் பலியானார்கள். 200 பேருக்கு மேல் காயம் அடைந்தனர்.

2003 ஆகஸ்ட் 27: மகாராஷ்டிர மாநிலம் நாசிக்கல் நடைபெற்ற கும்ப மேளா விழாவில் நெரிசல் ஏற்பட்டு 40 பக்தர்கள் இறந்தனர்.

1992 பிப்ரவரி 18: தமிழகத்தின் கும்பகோணத்தில் நடைபெற்ற மகாமக விழாவில் நெரிசலில் சிக்கி 48 பேர் உயிரிழந்தனர்.
கடவுளை நம்பியோர் கைவிடப் பட்டார்களே!

தமிழ் ஓவியா said...

இன்றைய ஆன்மிகம்?

அவநம்பிக்கை

பூரிஜெகந்நாதக் கோயில் திருவிழாவை யொட்டி பக்தர்கள் அதி காரிகளுக்கு ரூ.5 லட்சம் காப்பீடு திட்டம் ஒன்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது எதைக் காட்டுகிறது? கடவுள் சக்தியின்மீதான அவநம்பிக்கையைத் தானே காட்டுகிறது!

தமிழ் ஓவியா said...

கதர்ச் சட்டைக்குள் கறுப்புச் சட்டை


- கி. தளபதிராஜ்



பெருந்தலைவர் காமராஜரின் பிறந்தநாள் ஜூலை 15.  இவர் ஆண்ட காலம் தமிழகத்தின் பொற் காலம். தொழில்துறையில் தமிழகம் பெரும் முன்னேற்றம் கண்டது. ஏராளமான கல்விச்சாலைகளை திறந்து மாணவர் களுக்கான மதிய உணவு திட்டத்திற்கு அதிகாரிகள் போட்ட முட்டுக்கட்டை யையும் மீறி புத்துயிர் ஊட்டினார்.

ராஜாஜியால் மூடப்பட்ட 6000 பள்ளிகளோடு மேலும் ஆயிரக்கணக் கான பள்ளிகளை திறந்து தாழ்த்தப் பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு கல்விக்கண்ணை திறந்தவர் காம ராஜர்!. அதனால் "பச்சைத்தமிழர் காமராஜர்" எனப் பாராட்டி உச்சி முகர்ந் தார் பெரியார்!.

நான் தீமிதி, பால் காவடி, அப் படீன்னு போனதில்ல. மனிதனைச் சிந்திக்க வைக்காத எந்த விஷயமும் சமுதாயத்துக்குத் தேவையில்லை. பெத்த தாய்க்குச் சோறு போடாதவன் மதுரை மீனாட் சிக்குத் தங்கத்தாலி வச்சிப் படைக்கலாமா? ஏழை வீட்டுப் பெண்ணுக்கு ஒரு தோடு, மூக்குத்திக்குக்கூட வழியில்ல. இவன் லட்சக் கணக்கான ரூபாயில வைர ஒட்டியாணம் செஞ்சி காளி யாத்தா இடுப்புக்குக் கட்டி விடறான். கறுப்புப் பணம் வச்சிருக்கிறவன் திருப்பதி உண்டியல்ல கொண்டு போய்க் கொட்றான். அந்தக் காசில ரோடு போட்டுக் கொடுக்கலாம். ரெண்டு பள்ளிக்கூடம் கட்டிக் கொடுக்க லாமில்லையா? அதையெல்லாம் செய்ய மாட்டான். சாமிக்குத்தம் வந்திடும்னு பயந்துகிட்டு செய்வான். மதம் மனிதனை பயமுறுத்தி வைக்குதே தவிர, தன்னம் பிக்கையை வளர்த்திருக்கா? படிச்சவனே அப்படித்தான் இருக்கான்னேன். கடவுள் இருக்கு, இல்லைங்கிறதைப் பத்தி எனக்கு எந்தக் கவலையும் கிடையாதுன்னேன். நாம செய்யறது நல்ல காரியமாக இருந்தா போதும். பக்தனா இருக்கிறதை விட யோக்யனா இருக்கணும். அயோக்கியத்தனம் ஆயிரம் பண்ணி கிட்டு கோயிலுக்குக் கும்பா பிஷேகம் பண்ணிட்டா சரி யாப் போச்சா? எனக் கேட்டவர் காமராசர்

இடஒதுக்கீட்டு கொள் கையினால் தகுதி போயிற்று என கூக்குரலிட்டவர்களுக்கு, "டாக்டருக்கு படிச்ச தாழ்த்தப்பட்டவன் ஊசி போட்டு எந்த நோயாளி செத்தான்னேன்? பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்த எஞ்சி னீயர் கட்டுன எந்தப் பாலம் இடிஞ்சு போச்சுன்னேன்? யாருக்கு வாய்ப்பு கொடுத் தாலும் இஞ்சினியரும் ஆகலாம். டாக்டரும் ஆகலாம்னேன்." என பொட்டிலடித்தார் போல் பதிலளித்தார் காமராசர்.

காரியம் காமராஜர்! காரணம் பெரியார்! என ஆனந்த விகடனே எழுதியது. எதைக் கொடுத்தாலும் சூத்திரனுக்குக் கல்வியை கொடுக்காதே என்கிற ஆரி யத்தின் ஆணி வேர் பிடுங்கப்பட்டது. ஆச்சாரியாருக்கு ஆத்திரம் பீறிட்டது. சென்னை கடற்கரையில் நடைபெற்ற ஒரு கூட்டத்தில் ராஜாஜி அந்த கருப்பு காக்கையை கல்லால் அடித்து வீழ்த் துங்கள் என்று பெருந் தலைவர் காமராஜரை விமர்சித்துப் பேசினார்.

தந்தை பெரியார் உடல் ராஜாஜி மன்றத்தின் மேடையில் இருந்தபோது, செய்தியாளர்கள் காமராசரிடம் கேள் விகள் எழுப்பிட முயன்றபோது குடலே அறுந்து கிடக்கிறது. இப்பொழுது என்ன பேட்டி வேண்டியிருக்கு? என்றாரே பார்க்கலாம். தந்தை பெரியார்மீது காமராசர் கொண்டிருந்த மதிப்பு சாதாரணமானதல்ல. பெரியார் போட்டுத் தந்த பாதையில்தான் என் ஆட்சி என்று கூடச் சொன்னவர் காமராசர் ஆயிற்றே! அதனால்தான் கதர்ச் சட்டைக்குள் கருப்புச் சட்டை என்று கல்கி கார்ட்டூன் போட்டது.

தமிழ் ஓவியா said...

காரணம்

வட நாட்டு மக்களையும், தென்னாட்டு மக்களையும், அவர்களின் திறமை, அபிலாஷைகளையும் புரிந்து கொள்ள முடியாதவாறு பார்ப்பனர்கள் சூழ்ச்சி செய்து கொண்டே வந்திருக்கிறார்கள். பத்திரிகைகள் என்ற ஒரே ஆயுதம் அவர்களிடம் சிக்கி விட்டிருப்பதே அதற்குக் காரணம்.
(விடுதலை, 28.8.1963)

தமிழ் ஓவியா said...

கட்சிகளின் நிலைமை


கட்சிகள் இந்த நாட்டில் பெரும்பாலும் ஜாதி - இனத்தைப் பற்றியவையாக இருப்பதால், பொதுமக்கள் நலத்தைவிட அவரவர்கள் கட்சி நலத்தையே கருதி அரசியல் நடத்தவேண்டியதாகப் போய்விட்டது.
_ (குடிஅரசு, 18.12.1943)