புதுமை இலக்கியப் பூங்கா - ஆண்டவனார் தூங்குகின்றார்!
திராவிட இயக்க முன்னோடிகளில் ஒருவர்
கே.ஏ.மதியழகன். தமிழக அமைச்சராகவும், சட்டப்பேரவைத் தலைவராகவும்
பணியாற்றியவர் தென்னகம் என்ற வார இதழின் ஆசிரியராக இருந்தவர். கருத்து வளம்
செறிந்த கட்டுரைகள் பல வரைந்த திராவிட இயக்க எழுத்தாளர். அவரது
படைப்புகளில் ஒன்று உண்மை வாசகர்களுக்காக...
நானிலம் ஆண்டவனாரின் நாடக மேடை. மனித குலத்தார் அவர் ஆட்டுவிக்கும் கருவிகள். தேவைகளையும், தெவிட்டாத ஆசைகளையும், இச்சைகளையும், இன்ப எண்ணங்களையும், நம்பிக்கையையும், நடுக்கத்தையும், காதலையும், கசப்பையும் அவர்கள் வாழ்விலே நிரப்புகிறார். ஆனந்த ஊற்றுக்களைத் தொடுகிறார். வீணையின் நாதத்தை மீட்டுகிறார். விஷ ஜந்துக்களின் கொடுக்குகளால் கொட்டுகிறார். பொறிகளை அமைக்கிறார். பள்ளங்களை வெட்டுகிறார்.
நானிலம் ஆண்டவனாரின் நாடக மேடை. மனித குலத்தார் அவர் ஆட்டுவிக்கும் கருவிகள். தேவைகளையும், தெவிட்டாத ஆசைகளையும், இச்சைகளையும், இன்ப எண்ணங்களையும், நம்பிக்கையையும், நடுக்கத்தையும், காதலையும், கசப்பையும் அவர்கள் வாழ்விலே நிரப்புகிறார். ஆனந்த ஊற்றுக்களைத் தொடுகிறார். வீணையின் நாதத்தை மீட்டுகிறார். விஷ ஜந்துக்களின் கொடுக்குகளால் கொட்டுகிறார். பொறிகளை அமைக்கிறார். பள்ளங்களை வெட்டுகிறார்.
இந்தக் கூத்து ஒரு தொடர் நாடகம்.
அவரது கைப் பாவைகளாகிய இவர்கள்
போராடுவதையும் தோல்வியுறுவதையும் கவனிக்கிறார். ஒருவனை ஒருவன்
ஏமாற்றுவதையும் தன்னையே ஏமாளியாக்குவதையும் கவனிக்கிறார். எல்லாக்
குற்றங்களையும் புரியத் தூண்டுகிறார். பிறப்புகளையும், இறப்புகளையும்
கவனிக்கிறார். தொட்டில் அருகே எழும் தாலாட்டுக் கீதத்தையும்
சவப்பெட்டியருகே எழும் அழுகை ஓலத்தையும் செவிமடுக்கிறார்.
இரக்கம் என்பது இறைவனாரிடம் எள்ளளவும்
இல்லை! சலிப்பு, சஞ்சலங்கள், தற்கொலை, கோர முடிவுகள் _ இவைகளைக் கண்டு
குதூகலப்படுகிறார். படுகொலைகள், பயங்கரத் தாக்குதல்கள், விபச்சாரம்,
நீக்கப்பட்ட குழந்தைகள், நிராதரவான தன்மை ஆகியவற்றைக் கண்டு புன்னகை
புரிகிறார். எளியோர் வதை புரிவதையும், மதலையைக் கொள்ளை கொடுத்த
மாதாக்களையும், சிறைக் கம்பிகளுக்குப் பின் நிற்கும் நிரபராதிகளையும்,
தூக்கு மேடையின் மீது நிற்கும் தூயவர்களையும் பார்க்கிறார். குற்றம் கொலு
வீற்றிருப்பதையும், கபட வேஷம் தரித்திருப்பதையும் காண்கிறார்.
மழையை நிறுத்திக் கொள்கிறார்; அவரது
கைப்பாவைகள் பசியால் துடிக்கின்றனர். பூகம்பத்தின் பெயரால் பூமியைப்
பிளக்கிறார்; பலர் விழுங்கப்படுகின்றனர். வெள்ளத்தை அனுப்புகிறார்; பலர்
மூழ்கடிக்கப்படுகின்றனர். எரிமலையிலிருந்து நெருப்பைக் கக்குவிக்கிறார்;
அந்தக் கனலிலே பலர் கருகிச் சாகின்றனர். புயற் காற்றை அனுப்புகிறார்; அதிலே
பலர் சிக்கிச் சின்னா பின்னமடைகின்றனர். இடியின் வேகத்தால் இறப்புடன்
மோதுகின்றனர். நீரிலும் காற்றிலும் கண்ணுக்குத் தெரியாத வாழ்வின் வைரிகளை,
துன்பத்தின் தூதுவர்களை நிரப்புகிறார்; அவர்கள் மூச்சு விடும்போதும், நீர்
அருந்தும்போதும் கவனிக்கிறார். அவர்களின் சதைகளையும் நடுங்கும்
நரம்புகளையும் உண்டு கொழுக்க கான்சர் வியாதி உண்டு பண்ணுகிறார். இரத்தக்
குழாய்களில் விஷத்தை நிரப்பிப் பாம்புகளை உண்டு பண்ணுகிறார். அவர்களின்
எலும்புகளை நொறுக்கவும் கொட்டுகிற இரத்தத்தை உறிஞ்சவும் வனாந்திர
மிருகங்களை உண்டு பண்ணுகிறார்.
சில பரிதாபத்திற்குரியவர்களைப்
பைத்தியக்காரனாக்குகிறார். அவர்களை, இருளிலே கூசும் கண்களுடனும் கூரிய
நகங்களுடனும் தோன்றுகிற பூதங்களாகிய கற்பனையுடன் போராட வைக்கிறார். சிலரைச்
சிந்தனை ஜோதியே யின்றி இருள் செறிந்த வாழ்விலே திணற வைத்துச்
சீரழிக்கிறார். துயரங்கள், அநீதிகள், வறுமையின் கந்தலாடை, தேவையின்
சுருங்கிய கரங்கள், தாயை இழந்த சேய்கள், அங்கங்கள் பங்கமானோர்,
குஷ்டரோகிகள் _ இவை அத்தனையையும் பார்க்கிறார்.
புரண்டோடுகிற கண்ணீர் தெரிகிறது. கோவெனக்
கதறும் புலம்பல் கேட்கிறது. பள பளவெனப் பிரகாசிக்கும் வாட்கள் தெரிகின்றன.
துப்பாக்கியின் வேட்டுச் சத்தம் கேட்கிறது. இரத்தம் தோய்ந்ததால் சிவப்பேறிய
போர்க்களம் _ பிணங்களின் வெளுத்துப்போன முகங்கள் தெரிகின்றன.
ஆனால் அவர்கள் அஞ்சுகிற நேரத்தில்
நையாண்டி புரிகின்றார்; அவர்களின் ஆபத்தான அழிவு நேரத்தில் நகைத்துச்
சிரிப்பொலியால் நிரப்புகின்றார். இவை அத்தனைக்கும் தப்பி உயிருடன்
விடப்பட்ட துர்ப்பாக்கியமான கைப்பாவை முழங்காலிட்டு இருதய சுத்தியாக இந்த
சுதந்திரக்கார எத்தனுக்கு வணக்கம் செலுத்த வேண்டும்!
சொல்லப் போனால் ஆண்டவர்கள் அவர்களுடைய
அருமைக் குழந்தைகளைக் காப்பாற்றி ஆதரிக்கவில்லை. அதற்குப் பதிலாக மனிதர்கள்
ஆண்டவர்களைக் காப்பாற்றி ஆதரித்துள்ளனர். பல ஆலயங்களைக் கட்டியுள்ளனர்.
ஆடு, மாடு, குழந்தைகளைப் பலியிட்டனர். பலி பீடங்களை இரத்த அபிஷேகத்தால்
நனைத்தனர். தங்களிடமிருந்த வெள்ளி, தங்கம், வைரம் ஆகியவைகளை வழங்கினர்.
புரோகிதர்களுக்கு அன்ன ஆகாரமும் ஆடை அணி வகைகளும் அளித்தனர்.
ஆனால் ஆண்டவர்களோ பிரதி உபகாரம் ஏதும்
செய்யவில்லை. இருட்டிலே ஒளிந்துள்ள தெய்வங்கள் அவர்களின் கோரிக்கைகளுக்குப்
பதிலிறுக்கவில்லை. கூக்குரலைச் செவிமடுக்கவில்லை. குறிப்பொன்றும்
காட்டவில்லை. கரம் கொடுக்கவில்லை. கருணை மொழியொன்றும் புகலவில்லை.
பாராமுகமாய், கேளாக் காதாய், செவிடுகளாய், குருடுகளாய், ஊமைகளாய் உன்மத்தம்
பிடித்தவர்களாய்த் தமது சிங்காதனங்களிலே கொலு வீற்றிருந்தனர். ஆலயங்களின்
கோபுரங்கள் உயர்ந்தன. பிரார்த்தனையின் ஒலிச் சத்தம் அதிகரித்தது. ஆனால்
ஆண்டவனார் தூங்கினார். பலன்தான் ஏதும் இல்லை.
தெய்வங்களைத் திருப்திப்படுத்துவதற்காக
மனிதன் என்னென்ன செய்துள்ளான் என்பதை எண்ணிப் பாருங்கள். தனது பகுத்தறிவைத்
துறந்துள்ளான். அறிவின் சுடரை அணைத்துக் கொண்டுள்ளான். ஆதாரம் இல்லாமலும்
ஆதாரத்திற்கு எதிராகவும் பலவற்றை நம்பியுள்ளான். தன்னையே இழித்தும்
பழித்தும் கொண்டுள்ளான். உபவாசங்களும் உண்ணாவிரதப் பட்டினிகளும்
இருந்திருக்கின்றான். அங்கங்களைப் பங்கப்படுத்திக் கொண்டான். மேனியிலே
சூடுகளைப் போட்டுக் கொண்டுள்ளான். குருதியைக் கொட்டியுள்ளான். உடன் பிறந்த
மனித குலத்தோரைக் கொலை புரிந்துள்ளான். கொட்டறைகளில் அடைத்துள்ளான். கொடுமை
பல புரிந்து அழித்துள்ளான்; மனைவி மக்களைப் பிரிந்திருக்கிறான். அநாதையாக
ஆரண்யங்களிலே வாழ்ந்துள்ளான். சூடம், சாம்பிராணி, தூபதீப நைவேத்யம் செய்து
கொண்டு, ஜபமாலையை உருட்டிக் கொண்டு, கமண்டல நீரை மெய்யிலே தெளித்துக்
கொண்டு, கண்களை மூடிக் கொண்டு, முழங்கால் புழுதியிலே தண்டனிட்டுப் புரண்டு
வேண்டியுள்ளான். ஆனால் கடவுளர்கள் மௌனிகளாய் _ ஊமைகளாய் இருந்தனர் _
கற்களைப் போல ஊமைகளாய் இருந்தனர்.
பத்தொன்பதாம் நூற்றாண்டின் மத்தியிலே
தித்திக்கும் வளம் நிறைந்த கருத்துடைய இத்தகு வசீகர வசனங்களை எத்தனையோ
ஆயிரம் மேடைகளில் சொற்பெருக்காற்றினான், அமெரிக்க சிந்தனையாளன் இங்கர்சால்.
அறிவின் தூதர்கள் மேற்கொண்ட திருப்பணியின் விளைவு இன்று அந்த நாட்டு
ஆண்டவர்களாகிய ஓடின், தார், அபொல்லோ, மினர்வா, ஜூபிடர், மெர்குரி
போன்றவர்களைக் கண்காட்சி மண்டபத்திலேதான் சந்திக்க முடியும்.
நம்முடைய ஆண்டவர்களோ, அவர்களெல்லாம் கண்டு
பொறாமைப்படும் பெருநிலையிலேயுள்ளவர்கள். திருவரங்கம் கோவில்
கர்ப்பக்கிரகத்திலே தீப்பிடித்தாலும் பிடித்தது! எவ்வளவு அக்கறை! எவ்வளவு
கவலை! மூன்று மந்திரிமார் கோவிலைப் பிரதட்சணம் வந்தனர். சட்டசபையிலே
கேள்வி. சனாதனிகள் மத்தியிலே சர்ச்சை, லோகத்திற்கு என்ன நாசம் சம்பவிக்குமோ
என்ற சம்சயம்!
அடேயப்பா! எந்தக் குடிசை பற்றி
எரிந்தபோது, இவர்கள் வயிறு பற்றி எரிந்தது? மனிதர்களிடம் காட்டும்
அக்கறையைவிட, மந்திரிமார்கள் மகேஸ்வரனிடம் காட்டும் அக்கறைக்கு ஒன்றும்
குறைவே கிடையாது. அந்தஸ்திலே மட்டும் என்ன குறைவாம்? ஆயிரம் ஏக்கர்
நன்செய், புன்செய், தோப்பு, துரவு, வெள்ளி வாஹனம், தங்க ரிஷபம்; வைர
நகைகள், கோட்டையோ கொத்தளமோ எனச் சந்தேகிக்கத் தக்க கோவிற் பங்களா வாசம்!
அவைகளைப் பரிபாலிக்க அர்ச்சகர்கள். அவர்கள் செய்யும் ஆறுகால பூஜை,
ஆண்டுக்கொரு கலியாணம், ஆனி மஞ்சனம், ஆருத்ரா தரிசனம், மாசிமகம், மதுரைச்
சித்திரை _ அப்பப்பா! இந்த நாட்டுக் கோடீஸ்வரர்களுக்கேது அந்தக் குதூகல
வாழ்வு! வருமானம்! இந்த ஆண்டு (1969) சனவரித் திங்கள் திருமலை _ திருப்பதி
தேவஸ்தானங்களில் வெங்கடேஸ்வரர் கோவிலுக்குக் கிடைத்த வருவாய் மட்டும்
ரூபாய் இரண்டு லட்சத்து இருபத்தொன்றாயிரம்! கோவில் அதிகாரி அறிவித்துள்ள
கணக்கே இவ்வளவு!
சாதாரணமாய்க் கன்னமிடுபவன், கள்ளக்
கையொப்பமிடுபவன், காயப்படுத்துபவன், கொலை செய்பவன், கொள்ளை அடிப்பவன்
இப்படி, ஆயிரங் குற்றங்கள் நாட்டில் நடைபெறுகின்றன அல்லவா? அவைகளைக்
கண்டுபிடித்து நீதிமன்றத்திலே தண்டனை கொடுக்கப்படுகிறதல்லவா? நமது
ஆண்டவர்கள் புரிந்த குற்றத்திற்குத் தண்டனை கொடுப்பது என்று ஆரம்பித்தால்
நமது நீதிமன்றத்தில் பத்து ஆண்டுகளுக்கு வேறு வேலையே நடக்காது. தேவ
காரியத்திற்கே சரியாய்விடும்.
அகல்யாவைக் கற்பழித்தான் தேவர்கோன்
இந்திரன்; மாற்றான் மனைவியை மருவலாமா? தெய்வயானை இருக்கும்போது குறமகள்
வள்ளியை மணந்தான் குமரக் கடவுள் முருகன். இருதாரம் ஏற்புடைத்தா?
தாருகாவனத்து ரிஷி பத்தினிகளிடம் மூலக் கடவுளர்கள் மூவரும்
பிச்சைக்காரர்கள் போல் நிர்வாணமாய் நின்றனர். ஆபாசத்தின் உச்ச கட்டமல்லவா?
கண்ணன் வெண்ணெயைத் திருடினான். கானலோலன் நாரதர் கலக மூட்டினான். பாண்டவர்
பாஞ்சாலியைச் சூதாடினர். பரசுராமன் தாயைக் கொன்றான். அயோத்தி இராமன்
கர்ப்பிணி சீதாவை ஆரண்யத்திற்கனுப்பினான். ஆரண்ய விசுவாமித்திரன் அழகு
மேனகைக்குக் காதற் கொழுந்து சகுந்தலையைக் கொடுத்தான்! சேச்சே! வெட்கமாயும்
இருக்கிறது; கூச்சமாயும் இருக்கிறது எடுத்துக் கூற!
செந்தமிழிலே சொற் சித்திரம்
தீட்டுவதானாலும், செம்பஞ்சுத் தூரிகையிலே வண்ணச் சித்திரம்
தீட்டுவதானாலும், உளியிலே உருக்குவதானாலும் ஆபாசம் அருவெறுப்பைத்தான்
கொடுக்கும். அழகு நிர்வாணமானதுதான் என்று மனித மனம் ஒத்துக்கொள்வதில்லை
போர்வை தேவைப்படுகிறது. பொலிவு அங்குதான் உதயமாகிறது. நமது மந்திரிமார்கள்
அவசர அவசரமாக ஆபாச சுவரொட்டி விளம்பரங்களைத் தடுக்க மசோதா கொண்டு
வந்தார்கள்.
மத சம்பந்தமான புராண ஏடுகள், ஓவியங்கள்,
சித்திரங்கள், ஆலயங்களிலே உள்ள கற்சிலைகள், தேர்களிலே செதுக்கப்பட்டுள்ள
காமக்களி நடனங்கள் ஆகியவற்றை எந்தச் சட்டமும் தடுக்காது; கட்டுப்படுத்தாது.
எப்படியிருக்கிறது நியாயம்? ஆண்டவர்கள் பாடே அதிர்ஷ்டம்தான்! அதற்குக்
குறுக்கே நிற்க நாம் யார்?
புராண ஏடுகளிலே நிறைந்த போதைக் கருத்துகள் எத்தனை மலைமலையாக இருக்கின்றன! அவையெல்லாம் ஆபாசத்தைத் தூண்டவா?
பிருந்தாவனத்தில் நந்தகுமாரன் _ பேசும்
பொற்சித்திரம் போன்ற பெண் பதுமைகள் _ புல்லாங்குழல் இனிமையிலே சில்லெனத்
துள்ளும் உள்ளம் _ நீராடுந் துறைதனிலே ஆயர் மகளிர் _ மரத்தின் உச்சியிலே
நீலவண்ணன் _ பொன்னவிர் மேனிக்குப் போர்வை இல்லாததால், அந்தப்
பிரதிபலிப்பிலே தண்ணீரும் தங்கமெனப் பிரகாசிக்க அந்தப் பொன்மயமான காட்சி
புல்லாங்குழலூதியின் கார் வண்ணமேனிக்கும் கானகத்தின் பளபளப்பை அமளிக்க,
கூசும் கண்களும், கொடுக்க மாட்டேன் உங்கள் சேலைகளை என்று கூறிய காட்சி _
ஏட்டுச் சுவடியிலானாலும், வீட்டுச் சுவர்களிலானாலும் இந்திரியங்களெனும்
துட்டக் குதிரைகளுக்கு அறிவெனும் கடிவாளத்தையா பூட்டும்?
தமிழகத்துத் தேவாலயங்களிலே, தில்லையிலே,
திருவாரூரிலே, திருவரங்கத்திலே, காஞ்சியிலே, கன்னியாகுமரியிலே, ஆயிரங்கால்
மண்டபங்களிலும், கோவிற் பிரகாரங்களிலும் உருவாக்கப்பட்டிருக்கும்
சிற்பங்கள் ஜீவாத்மாவிற்கும், பரமாத்மாவிற்கும் உள்ள உறவு முறையை
உபதேசிக்கின்றனவா, ஆணுக்கும் பெண்ணுக்குமுள்ள உறவு முறைகளை
ஓதிக்கொண்டிருக்கின்றனவா? திவ்ய ஷேத்திரங்கள் என்கிறார்களே, அந்த
ஊர்களிலுள்ள தேர்களிலே செதுக்கப்பட்டிருக்கும் சித்திரங்கள் காமவேள்
நடனசாலையை ஞாபகப்படுத்துமா, கடவுளின் அருட்கருணையைக் கிளறுமா? இதுவெல்லாம்
ஆபாசமில்லையாம்!
ஏனெனில் கடவுள் முலாம் பூசப்பட்டிருக்கிறதே! என் செய்வது?
ஏனெனில் கடவுள் முலாம் பூசப்பட்டிருக்கிறதே! என் செய்வது?
அரசியல் சட்டத்திலேயே ஆண்டவனுக்கு
அளிக்கப்பட்டுள்ள இடம் மிகப் பெரியது. ஜனநாயகம் என்றுதான் பேசுகிறோம்.
சர்வேஸ்வரனுக்குக் கொடுக்கப்பட்டுள்ள அந்தஸ்து, சாமான்யமானவர்களாகிய
நமக்கேது? அதிலும் இந்த நாட்டு ஈஸ்வரர்கள் விஷயமே அலாதியானது. வேறு
நாட்டிலும்தான் மத சுதந்திரம், கடவுள் சுதந்திரம் இருக்கின்றன. ஆனால்
வித்தியாசம் உண்டு. ஒரே ஓர் உதாரணம்:
எந்தக் குடிமகனும் தனது விருப்பப்படி
கடவுளைத் தொழவும், மதவிரோதமான பிரச்சாரம் செய்யவும் இந்த நாட்டு அரசியல்
சட்டம் உரிமையளிக்கிறது _ இது ரஷ்ய நாட்டு அரசியல் சட்டம்.
எந்தக் குடிமகனும் தனது விருப்பப்படி
கடவுளைத் தொழவும், மத சம்மந்தமான பிரச்சாரம் செய்யவும் இந்த நாட்டு அரசியல்
சட்டம் உரிமையளிக்கிறது _ இது இந்திய அரசியல் சட்டம்.
சூட்சமம் புரிகிறதா? ரஷ்ய நாட்டில் எந்தக் கடவுளையும் தொழலாம். கடைப்பிடிக்கலாம். கதாகாலட்சேபம் செய்யக்கூடாது. ஆனால் பகுத்தறிவுக் கொள்கைப் பிரச்சாரம் அனுமதிக்கப்படும். ஊக்குவிக்கப்படும் _ இங்கு எவரும் எந்தக் கடவுளையும் பூசிக்கலாம். ஆனால் கண்ணப்ப நாயனார் சரித்திரமும், ருக்மணி கல்யாணமும், சிறீராம பட்டாபிஷேகமும்தான் பிரச்சாரம் செய்யப்பட வேண்டும்.
சூட்சமம் புரிகிறதா? ரஷ்ய நாட்டில் எந்தக் கடவுளையும் தொழலாம். கடைப்பிடிக்கலாம். கதாகாலட்சேபம் செய்யக்கூடாது. ஆனால் பகுத்தறிவுக் கொள்கைப் பிரச்சாரம் அனுமதிக்கப்படும். ஊக்குவிக்கப்படும் _ இங்கு எவரும் எந்தக் கடவுளையும் பூசிக்கலாம். ஆனால் கண்ணப்ப நாயனார் சரித்திரமும், ருக்மணி கல்யாணமும், சிறீராம பட்டாபிஷேகமும்தான் பிரச்சாரம் செய்யப்பட வேண்டும்.
பகுத்தறிவு தலைகாட்டக் கூடாது. மத
சம்மந்தமான பிரச்சாரம் இருக்கலாம். மதத்திற்கு விரோதமான பிரச்சாரம் தவறு.
சட்டப்படி குற்றம். புரிந்ததா? காரணம் கேட்காதீர்கள்!
மரகதத்தீவு, _ அயர்லாந்து தேசமுள்ளதே அந்த நாட்டினர், இங்கிலாந்து இணையற்றதாய் இருந்தாலென்ன, எங்களுக்குத் தனித் தாயகம் வேண்டுமென்றனர் விடுதலை பெற்ற வீரக்கோட்டத்தினர். அவர்களும் அவனி புகழ் அரசியல் சட்டம் செய்துள்ளனர். அந்தச் சட்டத்தில் ரோடுகள் போட, ரயில் பாதை அமைக்க, மின்சார விளக்கு அமைக்க, குடி தண்ணீர், சாக்கடை வசதிகளைச் செய்ய, கோவில் பணத்தை உபயோகிக்கலாம் என்று சட்டமியற்றி நடைமுறையிலும் நடத்துகிறார்கள். கதையல்ல, அய்ரிஷ் அரசியல் சட்டத்தின் எட்டாவது விதி இதுதான்.
மரகதத்தீவு, _ அயர்லாந்து தேசமுள்ளதே அந்த நாட்டினர், இங்கிலாந்து இணையற்றதாய் இருந்தாலென்ன, எங்களுக்குத் தனித் தாயகம் வேண்டுமென்றனர் விடுதலை பெற்ற வீரக்கோட்டத்தினர். அவர்களும் அவனி புகழ் அரசியல் சட்டம் செய்துள்ளனர். அந்தச் சட்டத்தில் ரோடுகள் போட, ரயில் பாதை அமைக்க, மின்சார விளக்கு அமைக்க, குடி தண்ணீர், சாக்கடை வசதிகளைச் செய்ய, கோவில் பணத்தை உபயோகிக்கலாம் என்று சட்டமியற்றி நடைமுறையிலும் நடத்துகிறார்கள். கதையல்ல, அய்ரிஷ் அரசியல் சட்டத்தின் எட்டாவது விதி இதுதான்.
நமக்கு எட்டாக் கோட்டையோ எனக் கொட்டாவி விடாதீர்கள்.
கோட்டையேறாவிட்டால்கூடப் பரவாயில்லை!
சிதம்பரம் கோவில் பற்றிக் குழியுமல்லவா பறித்து விட்டார்கள்! நம்முடைய
அரசியல் சட்டம்தான் அடிப்படை உரிமைகள் அனுமதித்துள்ளதே. இத்தகு
கருத்துகளுக்கு இடமில்லையா? என்று கேட்டு விடாதீர்கள். அது பெரிய கதை.
க்ஷேமநல சர்க்கார் என்றுதான் இந்த அரசுக்குப் பெயர். யாருடைய க்ஷேமம், நலம்
என்பதிலேதான் வேறுபாடு.
ரோடு போட அல்ல, மின்சார விளக்கு அமைக்க
அல்ல, ரயில் எஞ்சின் வாங்க அல்ல _ கோவில்களின் நிர்வாகத்தை
ஒழுங்குபடுத்தவும், பெருச்சாளிகளைப் பொறியிலே சிக்க வைக்கவும், கமிஷனர்கள்
நியமிக்க வேண்டும். பொது மக்கள் தர்மகர்த்தாக்களாகவும் டிரஸ்டிகளாகவும்
அமையத் தக்க அதிகாரம் படைத்த இந்து அறநிலையப் பாதுகாப்புச் சட்டம் என்ற
சட்டத்தை 1951இல் சென்னை சர்க்கார் நிறைவேற்றியது. பல கோவில்களை அதன்
அதிகாரத்திற்கு உட்படுத்திப் பதிவு செய்தனர்.
சிதம்பரத்தை விட்டுவிட முடியுமா? தில்லை மூவாயிரம் க்ஷேத்திரமாயிற்றே! இங்கு தானே,
குனித்த புருவமுங் கொவ்வைச்
செவ்வாயிற் குமிண் சிரிப்பும்
பனித்த சடையும் பவளம் போன்
மேனியிற் பால் வெண்ணீறும்
இனித்தமுடைய எடுத்த பொற்பாதமும்
உள்ள நடராசப் பெருமான் நர்த்தனமாடுவதாகத் திருநாவுக்கரசர் சொல்லுகிறார்?
குனித்த புருவமுங் கொவ்வைச்
செவ்வாயிற் குமிண் சிரிப்பும்
பனித்த சடையும் பவளம் போன்
மேனியிற் பால் வெண்ணீறும்
இனித்தமுடைய எடுத்த பொற்பாதமும்
உள்ள நடராசப் பெருமான் நர்த்தனமாடுவதாகத் திருநாவுக்கரசர் சொல்லுகிறார்?
தென்னாடுடைய சிவனே போற்றி!
எந்நாட்டிற்கும் இறைவா போற்றி!
என்கிறார்களே, பொன்னம்பலத்தான் புவனம் முழுதிற்கும் சொந்தமல்லவா என்ற அடிப்படையில் அட்டவணையில் சேர்த்தது.
என்கிறார்களே, பொன்னம்பலத்தான் புவனம் முழுதிற்கும் சொந்தமல்லவா என்ற அடிப்படையில் அட்டவணையில் சேர்த்தது.
அரசு தலையிடும் கோவில்களில் தீட்சதர்களின்
கண்களிலே தீப்பொறி பறந்தது. வழிபடுவதற்கு வேண்டுமானால் உரிமையுண்டு.
வாரிசுகள் நாங்களல்லவோ? என்ன அதிகாரம் இந்த குட்டி சர்க்காருக்கு என்று
இலட்சார்ச்சனையில் திட்டவில்லை; வழக்கு மன்றம் ஏறினர். வாதாடினர். சென்னை
சர்க்கார் எங்கள் உரிமைகளிலே தலையிட முடியாது, இது எங்கள் சொத்து என்றனர்.
சிதம்பரம் சபாநாயகர் கோவில் வழக்கு என்று அதற்குப் பெயர்.
வழக்கு மன்றம் ஏறிவிட்டால், வரலாறெல்லாம்
வந்துதானே ஆக வேண்டும்? தீட்சதர்கள் தங்கள் பூர்வோத்திரம் கூறினர். கனோஜி
நாட்டுப் பிராமணர்கள் நாங்கள், இரணிய வர்ணன் என்பவன் எங்கள் மூதாதையரை
இங்கு அழைத்தான். கோவில் எழுப்பித்தான். இதன் முழு உரிமைகளும் எங்களைச்
சேர்ந்தவை. வாரிசு முறை இங்குச் செல்லாது. ஒவ்வொரு திருமணத்தாலும்,
பிறப்பாலும் அந்த உரிமை பெறப்படுகிறது. தில்லைப்பெண் எல்லையைத் தாண்டாது.
ஒவ்வொரு திருமணமான தீட்சதனும் கோவிலுக்குப் பாத்தியதை உடையவன். அவர்கள்தான்
அர்ச்சகர்கள், அந்நியர் தலையிடுவது அரசியல் சட்டத்திற்கு விரோதம். ஆகவே,
அறநிலையப் பாதுகாப்புச் சட்டம் முரணானது என்றனர்.
கோவில் மணி அடிக்கிறது. அர்த்த ஜாம பூஜை
போல் தெரிகிறது! ஆண்டவனார் தூங்குகின்றார். அயர்ந்த நித்திரை. அவர்
எப்பொழுது எழுந்திருக்கப் போகிறார்? நெடுநாளாகத் தூங்கிக் கொண்டே
இருக்கிறார். மணியோசை நமது மாந்தரையாவது எழுப்பக் கூடாதா?
----------------------------------கே.ஏ.மதியழகன்- நூல்: முத்துப்பந்தல்
----------------------------------கே.ஏ.மதியழகன்- நூல்: முத்துப்பந்தல்