Search This Blog

21.4.13

ரத்தத்தில் அய்யங்கார் ரத்தம், பறையன் ரத்தம் என்ற பிரிவுண்டா? ஜாதிக்கு அடையாளம் என்ன?

தருமபுரி வன்கொடுமை - வெறி - ஆவணப் படம் வெளியீடு 

ரத்தத்தில் அய்யங்கார் ரத்தம், பறையன் ரத்தம் என்ற பிரிவுண்டா? ஜாதிக்கு அடையாளம் என்ன?

அரசமைப்புச் சட்டத்தில் தீண்டாமை ஒழிக்கப்படுகிறது என்பதற்குப் பதிலாக ஜாதி ஒழிக்கப்படுகிறது என்று திருத்துக!

தமிழர் தலைவர் ஆற்றிய எழுச்சியுரை
சென்னை, ஏப்.21- இந்திய அரசமைப்புச் சட்டத்தில் இடம் பெற்றுள்ள தீண்டாமை ஒழி க்கப் படுகிறது என்பதற்குப் பதிலாக ஜாதி ஒழிக்கப் படுகிறது என்று திருத்தம் செய்ய வேண்டும் என்றார் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள்.

20.4.2013 சனியன்று காலை 11.30 மணியளவில் சென்னை தியாகராயர் நகர், தியாகராயர் அரங்கில் வெறி ஆவணத் திரைப்படம் (தருமபுரி மாவட்டத்தில் தாழ்த்தப்பட்டோர் கிராமங்களை தீயிட்டுக் கொளுத்தப் பட்டது பற்றிய - விவரம்) வெளியீட்டு விழா, விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர். எழுச்சித் தமிழர் தொல். திருமாவளவன் தலைமையில் நடை பெற்றது.
ஆவணப்படத்தை திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி வெளியிட சி.பி.எம். மாநில செயலாளர் ஜி. இராமகிருஷ்ணன் பெற்றுக் கொண் டார். கு.க. பாவலன் வரவேற்புரை யாற்றினார். பசுமைத் தாயகம் நிறுவனர் பேராசிரியர் தீரன், இயக் குநர் சமுத்திரக்கனி, முகம்மதுயூசுப், சிந்தனைசெல்வன், பாலாஜி முதலியோர் பங்கு கொண்டனர்.

ஆவணப்படத்தை வெளியிட்டு திரா விடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள் உரையாற்றியதாவது:

தருமபுரியில் ஜாதி வெறியர்களால் கொளுத்தப்பட்ட கிராமப் பகுதி களையும், பாதிக்கப்பட்ட மக்களின் அவல நிலைகளையும் நேரில் பார்த் தவர்கள் நாங்கள். அந்தத் துயரங் களை விவரிக்க வார்த்தைகள் கிடையாது.

வெறி எனும் தலைப்பு

அந்தக் கொடுமைகளையெல்லாம் ஆவணப்படுத்தும் வகையில் வெறி எனும் சரியான தலைப்பின் கீழ் செய்திப் படமாகத் தயாரித்திருப்பது மிகவும் சரியான நடவடிக்கையே! பிறவியிலேயே பேதம் எனும் வருணாசிரம ஜாதிக் கொடுமை இந்த நாட்டில்தான் உள்ளது.

கிட்டவரக் கூடாதவன், தொடக் கூடாதாவன், திருமண உறவு கொள்ளக் கூடாதவன் என்று ஆக்கி வைக்கப்பட்டுள்ளது. இப்பொழுது சிலர் இந்த ஜாதியை வைத்து அரசியல் நடத்தலாமா என்று புறப்பட்டுள்ளனர்.

புதிய தலைமுறையினருக்கு

புதிய தலைமுறையைச் சேர்ந்தவர் களுக்குச் சில அடிப்படையான உண் மைகளைத் தெரிவிக்க வேண்டும்.

ஜாதி ஒழிப்புக்காக எவ்வளவுக் கடுமையான விலை கொடுத்து வந்துள்ளோம் - கொஞ்சம் அசந்தால் மீண்டும் பழைய நிலைக்குத்தான் தள்ளப்படுவோம்! மறந்து விடாதீர்கள்.

நல்ல தலைப்பு கொடுக்கப்பட்டுள் ளது; வெறி இருக்கலாமா? இருக்க லாம் என்று எவரேனும் சொல்லு வார்களேயானால் அவர்கள் இருக்க வேண்டிய இடமே வேறு! அது மன நல மருத்துவமனையே! கொஞ்சம் புரியும்படிச் சொன்னால் பைத்தியக்கார ஆஸ்பத்திரிதான்.

முன்பெல்லாம் ஒரு வார்த்தையைச் சொல்லுவார்கள்; என்ன கீழ்ப்பாக் கத்திலிருந்து வந்துள்ளீர்களா? என்று சிலரைப் பார்த்துக் கேட்பதுண்டு.
என்ன கீழ்ப்பாக்கமா?

கீழ்ப்பாக்கத்தில் உள்ள மன நல மருத்துவமனையின் நூற்றாண்டை ஒட்டி சிறப்புமலர் வெளியிடப்பட்டது.

அதிலே இடம் பெற்றிருந்த ஒரு தகவல் என்ன தெரியுமா?

பிராமின் வார்டு என்பதாகும். பைத்தியக்காரர்களுக்கான மருத்துவ மனையில்கூட பிராமின் வார்டு, பைத்தியத்தில்கூட ஜாதி வந்து விடு கிறது பிராமணப் பைத்தியம், சூத்திரப் பைத்தியம், பஞ்சமப் பைத்தியம் என்றா இருக்கிறது?

தந்தை பெரியாரும் -  அண்ணல் அம்பேத்கரும்

தந்தை பெரியாரும், அண்ணல் அம்பேத்கரும் யாரென்றால் ஜாதிப் பைத்தியங்களைத் தெளிய வைக்கும் மனநல மருத்துவர்கள் ஆவார்கள்.
மனிதனுக்கு வெறி பிடித்தாலும் ஆபத்து, நாய்க்கு வெறி பிடித்தாலும் ஆபத்து. கடிபட்டவனுக்கு ஊசி போடு வது ஒருமுறை, கடிக்கும் பிராணி வெறி வராமல் தடுப்பூசி போடுவது அதைவிட முக்கியமானதாகக் கருதப் படுகிறது. நாடு சுதந்திரம் அடைந்து விட்டதாகச் சொன்னார்கள். சுதந்திர நாட்டில் ஜாதி தாண்டவமாடுகிறது; வெறி பிடித்துத் திரிகிறது.

பெரியார் நிறைவேற்றிய தீர்மானம்

தந்தை பெரியார் அவர்கள் இறுதியாக ஒரு மாநாட்டை 1973 டிசம்பரில் சென்னை - பெரியார் திடலில் நடத்தினார். அதில்  பெரியார் அவர்களே ஒரு தீர்மானத்தை உருவாக்கினார்கள்.

இந்திய அரசமைப்புச் சட்டத்தில் தீண்டாமை ஒழிக்கப்படுகிறது என்று உள்ளது.
அந்தத் தீண்டாமை ஒழிக்கப்படுகிறது என்பதற்குப் பதிலாக ஜாதி ஒழிக்கப்படுகிறது என்று இந்திய அரசமைப்புச் சட்டத்தில் திருத்தம் கொண்டு வர வேண்டும் என்று கூறினார்கள்.

ஜாதி வெறியும் - மத வெறியும்

ஜாதி வெறியாக இருந்தாலும் சரி, மதவெறியாக இருந்தாலும் சரி, அவை ஒழிக்கப்பட்டாக வேண்டும். எவ்வளவு நாள்களுக்குப் பொறுத்துக் கொண்டு இருக்க முடியும்?

வன்முறையில் ஈடுபட வேண்டும் என்று நான் சொல்ல வரவில்லை. அதே நேரத்தில் இந்த இழிவை இன்னும் எவ்வளவு காலத்திற்குப் பொறுத்துக் கொண்டு இருக்க முடியும் என்பதும் முக்கியம்தானே?

ஜாதி என்பதற்கு விஞ்ஞான ரீதியாக ஆதாரம் உண்டா?

அய்யங்கார் ரத்தம், பறையர் ரத்தம் என்று உள்ளதோ?

உயிருக்கு ஆபத்தான நிலையில் அறுவை சிகிச்சை உடனடியாகத் தேவை என்கிறபோது குருதி தேவைப் படுகிறது.

குருதியில் அய்யர் ரத்தம், அய்யங்கார் ரத்தம், முதலியார் ரத்தம், நாடார் ரத்தம், வன்னியர் ரத்தம், பறையன் ரத்தம் என்ற பிரிவுகளா இருக்கிறது?

என்ன குரூப் ரத்தம் என்று கேட் டால் நாயுடு குரூப், கவுண்டர் குரூப் என்று யாரும் சொல்லுவதில்லை. அப்படி எந்தப் பிரிவும் கிடையாது.

இப்பொழுதெல்லாம் கண் கொடை, குருதிக் கொடை என்பது போல சிறுநீர்க் கொடை, இருதயக் கொடை என்றெல்லாம் வந்து விட்டதே!

இதற்குப் பிறகும் ஜாதி பேசு கிறார்கள் என்றால் அதனை அனு மதிக்கலாமா?

விஞ்ஞானம் ஜாதியின் அடிப் படையையே மாற்றிடவில்லையா? 

விஞ்ஞானத்தையும் அனுபவித்துக் கொண்டு ஜாதியையும் காப்பாற்ற வேண்டும் என்று நினைக்கலாமா?

ஜாதி அரசியல்

இப்பொழுது கையில் எந்த சரக்கும் இல்லாதவர்கள், கொள்கை வற்றிப் போனவர்கள் அரசியலில் ஜாதியைப் பிடித்துக் கரையேறலாம் என்று ஆசைப்படுகிறார்கள்.

இனிமேல் இங்கு மனிதன் பிறக்க வேண்டுமே தவிர, பார்ப்பானும் பிறக்கக் கூடாது, பறையனும் பிறக்கக் கூடாது.

ஜாதியைக் காப்பாற்ற கடவுளும், மதமும் சாஸ்திரமும் குறுக்கே வருமானால் அவற்றையும் எதிர்த்து அழிப்பது என்பது நமது கடமையாகும்.

இனியும் தருமபுரிகள் நடக்கக் கூடாது?

தருமபுரிகள் நடக்க இனியும் அனுமதிக்கக் கூடாது. பாதிக்கப்பட்ட அந்த பகுதிக்கு நாங்கள் சென்ற போது தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்களைத் திருமணம் செய்து கொண்டு வன்னிய சமூகத்தைச் சேர்ந்த பெண்கள் இருபது ஆண்டு களுக்கும் மேலாக நல்ல முறையில் மகிழ்ச்சியுடன் வாழ்வதாக எங்களிடம் சொன்னார்கள்.

முதலில் கொள்ளை - பிறகு தீ வைப்பு!

அந்தப் பகுதியில் ஜாதி வித்தியாசமின்றி மக்கள் வாழ்ந்து கொண்டு இருக்கும்போது, வெளியில் உள்ளவர்களுக்கு என்ன வந்தது?
பீரோவை உடைத்து நகைகளை யும், பணத்தையும் பொருள்களையும் கொள்ளையடிப்பது, அதற்குப் பிறகு வீட்டைக் கொளுத்துவது என்று ஒரு முறையை வகுத்துக் கொண்டல்லவா வேட்டையாடியிருக்கிறார்கள்.

பொருளாதாரம் இருந்தால் போதுமா?

இவ்வளவுக்கும் அந்தப் பகுதி மக்கள் வெறும் குடிசைகளிலும் வாழ வில்லை, ஓரளவு வசதி வாய்ப்போடு தான் வாழுகிறார்கள் - பிள்ளைகள் எல்லாம் கல்லூரிகளில் படிக்கி றார்கள், அரசுப் பணிகளிலும் இருக்கிறார்கள் - பெங்களூருக்கு சென்று சம்பாதிக்கிறார்கள்.

இந்த இடத்தில் இன்னொன் றையும் கவனிக்கத் தவறக் கூடாது. 

பொருளாதாரம் வளர்ந்தால் ஜாதி போய்விடும் என்று கூறுவோரும் உண்டு. அப்பகுதி மக்கள் பொருளா தாரத்தில் ஓரளவு வளர்ந்தவர்கள் தான்; அதனைக் கண்டு ஜாதி வெறி யர்களுக்குப் பொறுக்கவில்லையே!

இப்பொழுது ஒன்றைக் கூறு கிறார்கள். தீண்டாமை ஒழிப்புச் சட்டம் தவறாகப் பயன்படுத்தப்படுகிறது. அந்தச் சட்டத்தையே நீக்க வேண்டும் என்று கூறுபவர்கள் உண்டு. எழுதுபவர்கள் உண்டு.

சட்டத்தை அமல் செய்வதில் மென்மை கூடாது!

உண்மையைச் சொல்ல வேண்டு மானால், முன்பு எப்பொழுதையும்விட அந்தச் சட்டத்தைத் தீவிரமாகச் செயல்படுத்த வேண்டியது இந்தக் கால கட்டத்தில்தான்.

பாதிக்கப்பட்ட பகுதியில் உள்ள மக்களுக்கு வெறும் பண உதவி அளித்தால் மட்டும் போதாது; கொளுத்தப்பட்ட இடிக்கப்பட்ட வீடுகளுக்குப் பதில் புதிய வீடுகளைக் கட்டிக் கொடுக்க வேண்டும். சுயமரியாதையுடன் சமத்துவத்துடன் ஒடுக்கப்பட்ட மக்கள் வாழ்ந்திடப் பாதுகாப்புகள் அவசியம்.

ஆங்கிலத்திலும் வரட்டும்

இங்கே தயாரிக்கப்பட்டுள்ள ஆவணப்படம் தமிழில் இருந்தால் மட்டும் போதாது; ஆங்கிலத்திலும் மொழி மாற்றம் செய்து மற்றவர்களுக்கும் கூடத் தெரியும்படிச் செய்ய வேண்டும். ஜாதியை ஒழிக்கக் கூடிய வர்கள் எங்கிருந்தாலும் அவர்களை இணைத்துக் கொள்ள வேண்டும்.

இங்கே கூடியிருக்கிற நாங்கள் அரசியல் கூட்டணியைச் சேர்ந்தவர்கள் அல்ல; சமூக அநீதிகளை அழிக்க நினைக்கும் சமத்துவ சமூகக் கூட்டணியாகும்.
வேண்டாம் வெறி விளையாட்டு வெறிகள் உலவக் கூடாது. மனித நேயம் சமத்துவம், பகுத்தறிவுணர்வு செழிக்க வேண்டும். அதனை முன்னெடுத்துச் செல்லுவோம் என்றார். திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள்.

                            ---------------------------”விடுதலை” 21-4-2013

23 comments:

தமிழ் ஓவியா said...

குறள் - தந்தை பெரியார்


நல்லாண்மை யென்பது ஒருவருக்குத் தான் பிறந்த
இல் ஆண்மை ஆக்கிக் கொளல்.

நாயனார் அவர்கள் குறளில், நல்ல ஆண்மை என்பது ஒருவருக்குத் தான் பிறந்த இல்லாண்மை ஆக்கிக்கொளல் என உரைத்திருக்கின்றதையும், அதன் கருத்து ஒருவனுக்கு ஆண்மை என்று சொல்லப் படுவது தன் குடியை உயர்த்திக் கொள்வது என்பதையும் அனைவரும் உணர்ந்திருப்பார்கள். ஆனால் நமது நாட்டில் ஆண்மைக்காகப் பாடுபடுகின் றோமென்று சொல்லிக் கொள்ளுகிறவர்கள் நல் லாண்மை ஏற்பட வேண்டுமானால் வகுப்பு நலனையும் குல நலனையும் மறந்துவிட வேண்டும்; தேசத்தையே பெரிதாக நினைக்க வேண்டும் என்று மனதார அர்த்தமில்லாத மாய வார்த்தைகளைச் சொல்லி, பாமர ஜனங்களாகிய தம் குலத்தாருக்கே துரோகம் செய்து, அவர்களைக் காட்டிக் கொடுத்து, அந்நிய குலத் தாருக்கு ஒற்றர்களாகி, அவர் பின்னால் திரிந்து வயிறு வளர்ப்பதையும், தத்தமக்கு ஆக்கந்தேடிக் கொள் ளுவதையும் நாம் பார்க்கும் போது நமது குலம் எவ்வளவு இழிவான நிலைமையில் இருக்கிறது என்பதும் விளங்கும். தற்கால ராஜீய உலகத்தில் எவனாவது ஒருவன் தன் வகுப்பு முன்னேற்றத்தைப் பற்றிப் பேசுவதும், மற்றும் தாழ்ந்த வகுப்பு முன்னேற்றத்தைப் பற்றிப் பேசுவதும் தேசத் துரோகமெனவும், ஆண்மைத் துரோகமெனவும் மதிக்கப்பட்டுப் போகிறது.

தமிழ் ஓவியா said...

இந்நிலையும் நமது நாட்டின் பிற்பட்ட வகுப்பாருடையவும், தாழ்த்தப்பட்ட வகுப் பாருடையவும் ஈனஸ் திதியை விளக்குவ தோடு, முற்பட்ட வகுப்பாருடையவும் உயர்ந்த வகுப்பாருடையவும் ஆதிக்கத்தையும் எடுத் துக்காட்டுகிறது. தமிழ்நாட்டில் நல் லாண்மைக்கென ஏற்பட்ட பத்திரிகைகள் மிகுந்திருந்த போதிலும் அவைகள் முற்பட்ட வகுப்பாருக்கும், உயர்ந்த வகுப்பாருக்கும் பயந்து கொண்டு, வகுப்பு நலனை நாடுவதும், இல்லாண் மையாக்கிக் கொள்ளுவதும் நல்லாண்மை ஆகாதென்றும் சொல்லி தங்கள் பத்திரிகைகளை நடத்தி வருகின்றன. நாட்டில் ஏற்பட்ட ஒவ்வொரு வகுப்பாருக்கும் தங்கள் தங்கள் ஆண்மைகளை அடையவும், நாட்டு நலன்களில் சமஉரிமை அடையவும் மார்க்க மில்லா திருக்கும் போது தேச உரிமையும், நாட்டு உரிமையும் யாருக்கு? வகுப்புரிமை பெற்றால் வகுப்புச் சச்சரவுகளை உண்டாக்கும் எனச் சொல்லிக் கொண்டு பல வகுப்புரிமைகளையும் நாசமாக்கி, ஒரு வகுப்பார் சகல உரிமைகளையும் அடைந்து முன் நிற்பதை மற்ற வகுப்பார் பார்த்துக் கொண்டு அவர்களுக்கு அடிமையாயிருக்க வேண்டும் என்று சொல்லுவதில் எவ்வளவு யோக்கியமிருக்கும்? நமது நாட்டில் பல வகுப்புகளிருந்த போதிலும் ஒவ்வொரு வகுப்பையும் கவனித்து அதற்கு வேண்டிய சுயமரியாதை ஏற்பட்டிருக்கின்றதா? தேசத்திற்கு வரும் ஆக்கம் பல வகுப்புகளுக்கும் சரிவரப் போய்ச் சேர மார்க்க மிருக்கின்றதா? என்பதைக் கவனித்து வேலை செய்தால் அது தேசத்தையே முன்னுக்குக் கொண்டு வந்ததாகும். அப்படிக்கின்றி முன்னாலிருக்கிற வகுப்பாரை மாத்திரம் கூட்டிக்கொண்டு, அவர்கள் மெச்சும்படி அவர்கள் பின்னாலும் திரிந்து கொண்டு, நாட்டுநலம், நாட்டுநலம் என்று சொல்லிக் கொண்டும், வகுப்பு நலத்தைத் தேடினால் நாடு கெட்டுப்போகும் என்றும் சொல்லிக் கொண்டு திரிந்தால் ஒரு நாடு எப்படி முன்னுக்கு வரும்? ஒரு நாடு என்பது, ஒரு நாட்டிலுள்ள பல வகுப்பாரின் சேமத்தையும் பொறுத்ததா? ஒரு வகுப்பாரின் சேமத்தை மாத்திரம் பொறுத்ததா? உண்மை நாட்டுநலம் தேடுவோர் தாழ்ந்த வகுப்பாருடைய நலத்தையும், பிற்பட்ட வகுப்பாருடைய நலத்தையும் தேடுவதைத்தான் நாட்டு நலமென்று நினைப்பார்கள். நாடு என்பது சகல வகுப்பாருக்குமேயொழிய வலுத்த வகுப்பாருக்கென்று மாத்திரம் ஏற்பட்டதல்ல. வகுப்பு நலன் தேடுவது என்றால் நமது நாடு பல வகுப்புகளை உடையதாயிருக்கிறது. ஆதலால் பல வகுப்பாருடைய நலனையும் தேடுவதாய் ஏற்படும்; அப்போது அது முடியாத காரியமாகிவிடும்; ஆதலால் நாட்டுநலம், நாட்டுநலம் என்று பொதுவாய்ச் சொல்லிக் கொண்டிருப்பதுதான் அனுகூலமானது என்று சிலர் சொல்லுகிறார்கள். நமது நாடு பல வகுப்பாரைக் கொண்டதாகவோ எந்தக் காரணத்தினாலோ ஏற்பட்டுப் போய்விட்டது. பல வகுப்பாருக்கும் நம்பிக்கை உண்டாகும்படியாக நடந்து கொள்ள வேண்டியதுதான் நாட்டின் நலன் தேடுவோரின் கடமை.

தமிழ் ஓவியா said...

நாட்டுநலன் தேடுவோரின் ஒவ்வொரு திட்டமும் சகல வகுப்பாரின் நம்பிக்கைக்கும் ஏற்றதாய்த்தான் இருக்க வேண்டும். தற்போது நமது நாட்டில் வகுப்பு என்று சொல்லக்கூடிய மாதிரியில் வகுப்புரிமைக்கு ஆவலாயும், ஒன்றுக்கொன்று அவநம்பிக்கையாயும் இருப்பது மூன்றே வகுப்புத்தான். அவை பிராமணர் - பிராமணரல்லாத இந்துக்கள் - பஞ்சமர் என்று சொல்லக் கூடிய மூன்று வகுப்பார்தான். இதை எல்லோருமே சர்க்கார் உள்பட - நாட்டு உரிமை தேடுவோர் உள்பட - எல்லோரும் ஒப்புக்கொண்டாய்விட்டது. ஆந்திரர் - தமிழர் - கர்நாடகர் - கேரளர் என்கிற பிரிவைச்சொல்லி ஜனங் களை ஏய்க்க வேண்டியதில்லை. இவற்றைத் தனித்தனி யாகவே பிரிக்கவேண்டுமென்று காங்கிரஸ் ஏற்பாடு செய்தாகிவிட்டது. காங்கிரஸிலும் அதுபோலவே பிரித் தாகிவிட்டது. ஆதலால் அதைப் பற்றிக் கவலையில்லை. எனவே மேற்சொன்ன மூன்று வகுப்பார்தான் ஒருவருக் கொருவர் அவநம்பிக்கையுடனிருக்கிறார்கள். இவர் களுக்கு உரிமை வழங்கிவிட்டால், இவர்களுக்குள்ளாகவே பல வகுப்புகள் கிளம்பும் என்று சிலர் சொல்லி ஜனங்கள் புத்தியைக் கலைக்கக்கூடும். அப்படியிருந்தாலும், சகல வகுப்பாரின் நலனையும் கவனிக்கத்தகுந்த திட்டம் போடுவதற்கு முடியா தென்று பயப்பட வேண்டியதில்லை. வகுப்புகளுக்குத் தகுந்தபடி உத்தியோகங்களையும் ஸ்தானங்களையும் அமைக்கவும் சௌகரியமிருக் கிறது. 3ஙூ கோடி ஜனங்களுக்குள்ள இங்கிலாந்து பார்லி மெண்டில் 700 மெம்பர்கள் இருந்து ராஜீய பாரம் செய்கிறார்கள். ஆதலினால் நமது நாட்டிலும் சகல வகுப்பாரையும் ராஜீய பாரத்தில் சேர்ப்பது கஷ்டமல்ல. இரட்டை முதல் வகுப்புப் படியும், 5000, 6000 ரூபாய் சம்பளமும் கொடுக்காமல் 3-வது வகுப்புப்படிச் செலவும் 400, 300 சம்பளமும் கொடுத்தால் எல்லாம் சரிக்கட்டிப் போகும். அப்போது அதிகப் போட்டி இருக்காது. ஆதலால் வகுப்புரிமையைப் பற்றி பயப்பட வேண்டியதில்லை. அல்லாமலும், நமது நாட்டில் அதிகமான பிரிவினைகள் இருக்கிறதாக நினைத்துக் கொள்ளுகின்றோமேயல்லாமல், வாஸ்தவத்தில் அளவுக்கு மிஞ்சினதாக ஒன்றுமில்லை. பிராமணர் களும் தாங்கள் ஒரு வகுப்பென்றும், தங்களைத் தவிர மற்றவர்களில் சூத்திரர் - பஞ்சமர் என இரண்டு வகுப்புகள் தான் இருப்பதாக ஒப்புக் கொள்ளு கிறார்கள். பிராமணரல்லாதாரும், மேற்சொன்ன பிராமணரல்லாதார் எல்லாம் ஒரு வகுப்பென்றும், தங்களுக்குக் கீழ் பஞ்சமர் என்று ஒரு வகுப்பும் இருப்பதாகத்தான் ஒப்புக் கொள்ளுகிறார்கள். பஞ்சமர்கள், தாங்கள் ஒரு வகுப்பென்றும், மற்றவர்கள் தங்களுக்கு மேற்பட்ட வகுப் பென்றும் ஒப்புக் கொள்ளுகிறார்கள். இம் மூன்று வகுப்பாரும் தங்களில் ஒருவருக் கொருவர் வித்தியாசமிருப்பதாகக் கற்பித்துக் கொள் ளுவதால், இம்மூவருக்கும் தான் ஒருவருக்கொருவர் நம்பிக்கையுண்டாகும் படி தக்க உரிமைகள் ஏற்பட வேண்டியது மிகவும் அவசியமானதாகும். இம்மூவரும் தங்களுக் குள் ஒருவருக் கொருவர் உயர்வு - தாழ்வு இல்லை; எல்லோரும் சமம்தான்; மனித உரிமையை அடைவதில் நாம் ஒருவருக் கொருவர் உயர்ந்தவர் தாழ்ந்தவர்களல்ல என்கிற உணர்ச்சி வருகிற காலத்தில் வகுப் புரிமையைப் பற்றிய கவலையே வேண்டியது மில்லை. வகுப்பின் பேரில் உரிமையும் கேட்க அவசியம் ஏற்படாது. அப்படிக்கில்லாமல் பல வகுப்பாரும் சேர்ந்து கஷ்டப்பட்டு ஒரு பதவியைச் சம்பாதித்தால், அதை ஒரு வகுப்பாரே அனுபவிப்பதற்கு அனுகூலமாகவும், மற்ற வகுப்பார்கள் சூத்திரர்கள் என்றும், பிற்பட்ட வரென்றும், தீண்டாதார்கள் என்றும், தெருவில் நடக்கவும் - கண்ணில் தென்படவும் அருகர்களல்ல வென்றும், ஒரு வகுப்பார் ஒரு வகுப்பாரால் கருதப் படுகின்ற போது, வகுப்புரிமையைக் கவனிக் காமல் நாட்டுரிமையைக் கவனிக்க வேண்டுமென்று சொல் லுவது நல்லாண்மையல்லாததும், அர்த்தமில் லாததும், பித்தலாட்ட உரிமையாகவுமேதான் முடியும். - குடிஅரசு - துணைத் தலையங்கம் 14.02.1926

தமிழ் ஓவியா said...


சென்னை புத்தக சங்கமம் மெரினா கடற்கரையில் புத்தக வாசிப்பு விழிப்புணர்வு நடைப்பயணம்


சென்னை புத்தக சங்கமம் மெரினா கடற்கரையில் புத்தக வாசிப்பு விழிப்புணர்வு நடைப்பயணம் - மாணவ - மாணவிகள் - முதியோர்கள் - பெரும் திரளாக பங்கேற்பு

தந்தை பெரியார் புத்தகங்களை படித்தால் பகுத்தறிவாளராக ஆகலாம்

திரைப்படக் கலைஞர் விவேக் துவக்கி வைத்துச் சிறப்புரை

சென்னை பெரியார் திடலில் நடைபெறும் புத்தகச் சங்கமத்தின் சார்பில் புத்தக வாசிப்பு குறித்த வாசிக்க வாங்க விழிப்புணர்வு நடைப்பயணத்தை சென்னை மெரினா கடற்கரை உழைப்பாளர் சிலை அருகே திரைப்பட நடிகர் விவேக் துவக்கி வைத்து உரையாற்றினார்.

இந்நிகழ்ச்சியில் கழகத் துணைத் தலைவர் கலி. பூங்குன்றன், பொதுச் செயலாளர் வீ. அன்புராஜ், பெரியார் மணியம்மை பல்கலைக் கழக பதிவாளர் முனைவர் அய்யாவு, எமரால்டு ஒளிவண்ணன், ரோட்டரி மாவட்ட ஆளுநர் ராஜா சீனிவாசன், சிக்ஸ்த் சென்ஸ் கே.எஸ். புகழேந்தி ஆகியோர் உள்ளனர். (21.4.2013)

சென்னை, ஏப்.21- சென்னை பெரியார் திடலில் மாபெரும் புத்தகச் சங்கமம் தொடங்கப்பட்டதை யொட்டி, புத்தக வாசிப்பு குறித்த விழிப்புணர்வு நடைப்பயணம் இன்று (21.4.2013) காலை சென்னை மெரினா கடற்கரையில் நடைபெற்றது. இதில் பள்ளி மாணவ - மாணவிகள் உள்ளிட்டோர் பெரும் திரளாக பங்கேற்றனர். இந்த விழிப்புணர்வு நடைப் பயணத்தைத் தொடங்கி வைத்து பேசிய திரைப்படக் கலைஞர் நடிகர் விவேக்: தந்தை பெரியாரின் புத்தகங்களை படித்தாலே போதும், பகுத்தறிவாளர்களாகி சிறந்து விளங்கலாம் என்று குறிப்பிட்டார்.

உலகப் புகழ் பெற்ற இலக்கிய மேதை வில்லியம் ஷேக்ஸ்பியர் பிறந்த நாளான ஏப்ரல் 23- யுனெஸ்கோ அமைப்பால் 1995ஆம் ஆண்டு முதல் உலக புத்தக நாளாக அறிவிக்கப்பட்டு ஒவ்வோராண் டும் உலகம் முழுவதும் தொடர்ந்து கொண் டாடப்படுகிறது.

இதையொட்டி, உலகப் புத்தக நாள் பெரு விழா ஏப்ரல் 18 முதல் 27 வரை சென்னை புத்தகச் சங்கமம் சென்னை வேப்பேரி பெரியார் திடலில் நடைபெற்று வருகிறது. குழந்தைகள்/மாணவர்கள், வாசகர்கள் பங்கேற் கும் புத்தக வாசிப்பு குறித்த வாசிக்க வாங்க என்ற விழிப்புணர்வு நடைப் பயணத்தை, சென்னை புத்தகச் சங்கமம், பெரியார் மணியம்மை பல்கலைக் கழகம், நேஷனல் புக் டிரஸ்ட், சென்னை ரோட்டரி சங்கம் (3230) ஆகியவை இன்று ஏற்பாடு செய்திருந்தன.

அதன்படி இன்று (21.4.2013) காலை 7 மணி முதல் 8.30 மணி வரை சென்னை மெரினா கடற்கரை உழைப்பாளர் சிலையில் இருந்து காந்தி சிலை வரை பள்ளி மாணவ - மாணவிகள் மற்றும் அனைத்து தரப்பினரும் பங்கேற்ற புத்தக வாசிப்பு குறித்த விழிப்புணர்வு நடைப்பயணம் நடைபெற்றது.

தமிழ் ஓவியா said...

இந்நடைப் பயணத்தை திரைப்படக் கலைஞர் சின்ன கலைவாணர். நடிகர் விவேக் கொடியசைத்து தொடங்கி வைத்து பேசுகையில்:-

புத்தக வாசிப்பை ஊக்குவிப்பதற்காக இந்த பிரச்சார நடைப் பயணம் நடக்கிறது. பெரிய பெரிய அறிஞர்கள் புத்தகங்களை வாசித்து தான் அறிஞர்கள் ஆகி இருக்கிறார்கள். தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா ஆகியோரைப் படித்து ஏராளமானோர் பயன் பெற்றிருக்கிறார்கள். உன் நண்பன் யாரென்று கூறு. நான் உன்னைப் பற்றிக் கூறுகிறேன் என்று ஒரு பழமொழி உண்டு. அந்த நல்ல நண்பன் நல்ல புத்தகம்தான்.

தந்தை பெரியார் அவர்களின் புத்தகங்களை மட்டும் படித்தாலே போதும் பகுத்தறிவாளர்களாகி வாழ்க்கையில் சிறந்த நிலைக்கு செல்லாம். சி.பா. ஆதித்தனார் அவர்களின் முயற்சியால் அச்சுக் கலையில் பெரும் புரட்சி ஏற்பட்டது. அறிஞர் அண்ணா அவர்கள் புத்தகங்கள் வாசிப்பதையே மிகவும் விரும்பினார். எனவே இன்றைய இளைஞர் களிடையே புத்தக வாசிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்பட இதுபோன்ற நடைப் பயணம் மிகவும் அவசியம்.

நல்ல புத்தகம் நமது வாழ்க்கையை நல்ல வழிக்கு மாற்றி விடும். தவறான புத்தகம் தவறான வழிக்கு மாற்றிவிடும். ஆகவே, நல்ல புத்தகத்தை படியுங்கள் என்று கருத்துரைத்தார். மற்ற இடங்களுக்கு அரை ட்ரவுசரோடு சென்றால் ஊர் சிரிக்கும். ஆனால் இங்கு யார் வேண்டுமானாலும் அரை ட்ரவுசரோடு வரலாம். யாரும் தவறாக நினைக்க மாட்டார்கள் என்று நகைச்சுவை கலந்தும் இந்த பிரச்சார நடைப் பாதையை ஒருங்கிணைந்த ஒருங்கிணைப்பாளர்கள் அனைவரையும் வாழ்த்திப் பேசினார்.

இந்நிகழ்வுக்கு ரோட்டரி சங்கம் (3230) மாவட்ட ஆளுநர் ரோட்டரி ராஜா சீனிவாசன் தலைமையேற்றார். தஞ்சை வல்லம் பெரியார் மணியம்மை பல் கலைக்கழகத்தின் பதிவாளர் முனைவர் மு.அய்யாவு முன்னிலை வகித்தார். சென்னை புத்தகச் சங்கமத்தின் ஆலோசனைக்குழு உறுப்பினர் எமரால்டு கோ.ஒளிவண்ணன் அறி முகவுரை நிகழ்த்தினார். திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் பங்கேற்று சிறப்பித் தார். சிக்ஸ்த் சென்ஸ் பப்ளிகேசன்ஸ் கே.எஸ்.புகழேந்தி. திராவிடர் கழக பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ் ஆகியோர் இந்த விழிப்புணர்வு நடைப் பயணத்தை ஒருங்கிணைத்தனர்.

இந்நடை பயணத்தில் சென்னை ராயபுரம் உதவும் கைகள் அமைப்பின் நிர்வாகி ஆனந்தி அம்மாள் தலை மையில் 50 மாணவ - மாணவிகளும், ரோட்டரி சங்கத்தினர் திரளாகவும் பங்கேற்றனர். மற்றும் கிழக்கு கடற்கரை சாலை நடப்போர் சங்கத்தின் (திருவான்மியூர்) தலைவர் ஆர்.அருணாசலம் தலை மையில் சி.மாரியப்பன், பொன்னன், எம்.பழனியப்பன், ஏ.ஆர்.ஜெயபாலன், ராம்.ராமானுஜம் மற்றும் பலர் பங்கேற்றனர்.

இந்நடைப்பயணத்தில் திராவிடர் கழக சட்டத்துறைத் தலைவர் வழக் கறிஞர் த.வீரசேகரன் சென்னை பெரியார் திடல் மேலாளர் ப.சீதா ராமன், பெரியார் வீரவிளையாட்டுக் கழகத்தின் ஒருங்கிணைப்பாளர். ப.சுப் பிரமணியம், ஆடிட்டர் இராமச்சந் திரன், அகில இந்திய பிற்படுத்தப் பட்டோர் வங்கி பணியாளர்கள் சங்கப் பொதுசெயலாளர் கோ.கருணா நிதி, பகுத்தறிவாளர் கழக மாநிலத் தலைவர் வா.நேரு, சி.வெற்றிச்செல்வி, தென்சென்னை மாவட்ட கழகத் தலைவர் இரா.வில்வநாதன். சேது, விக்னேஷ், மயிலை அசோக், பிரபாகர், வடசென்னை மாவட்ட கழகத் தலைவர் திருவள்ளுவன், பெரியார் ஊடகத்துறை செயலாளர் பிரின்ஸ், பெரியார் அய்.ஏ.எஸ்., அய்.பி.எஸ். பயிற்சி ஒருங்கிணைப்பாளர் மு.ரா ஜேஷ்குமார், வி.சி.வில்வம், பெரியார் புத்தக விற்பனை நிர்வாகி பூமிநாதன், புரசை அன்பு செல்வன், மாநில மாண வரணி துணைச்செயலாளர் சென்னி யப்பன், கொடுங்கையூர் கோ.தங்க மலை, தனலட்சுமி, ஆவடி மாவட்டச் செயலாளர் தென்னரசு.

பகுத்தறிவாளர் கழகத்தை சார்ந்த தமிழ்ச்செல்வன், கோ.வி.கோபால், இராமு, முரளி, முகுந்தன், ஜெயராமன் மற்றும் திராவிடர் கழக தோழர் - தோழியர்கள், பள்ளி, கல்லூரி மாணவ - மாணவியர் இந்நடைப் பயணத்தில் திரளாக பங்கேற்றனர்.

புத்தக வாசிப்பு குறித்த விழிப் புணர்வு நடைப்பயணத்தை தொடங்கி வைத்தும், நடைப்பயணத்தில் பங் கேற்ற திரைப்படக்கலைஞர் விவேக் அவர்களுக்கு பெரியார் புத்தகங்கள் அளித்தும், பயனாடை அணிவித்தும் சிறப்பிக்கப்பட்டது. நினைவு பரிசு சென்னை ரோட்டரி ஆர்.ராஜா அளித்தார்.

சென்னை ரோட்டரி சங்கத் தலைவருக்கு நினைவுப்பரிசுகளையும், புத்தகங்களையும் கழக துணைத் தலைவர் கலி.பூங்குன்றன் அளித்தார். இந்நடை பயணத்தில் பங்கேற்ற அனைவருக்கும், அடையார் ஆனந்த பவன் சார்பில் அதன் நிர்வாகி வெங் கடேசன் அவர்கள் காலைச் சிற்றுண்டி வழங்கினார்.

தமிழ் ஓவியா said...


சென்னைப் புத்தகச் சங்கமம் 2ஆம் நாள் விழா


ஜாதி மதத்தின் பேரால் கொடுமைகள் - இந்தியா மனிதாபிமான நாடா?

எழுத்தாளர் மனுஷ்யபுத்திரன் எழுப்பும் வினா

சென்னை, ஏப். 21- ஜாதி மதத்தின் பெயரால் கொடுமைகள் அதிகம் நடக்கும் இந்தியாவை மனிதாபிமான நாடு என்று எப்படி சொல்ல முடியும் என்கிறார் மனுஷ்யபுத்திரன்.

பெரியார் சுயமரியாதை பிரச்சார நிறுவனமும் NBT India இணைந்து நடத்தும், சென்னை புத்தகச் சங்கமத்தின் இரண்டாவது நாள் (20.4.2013) நிகழ்ச்சிகள் பெரியார் திடலிலுள்ள இராதா மன்றத்தில் மிகுந்த எதிர்பார்ப்போடு தொடங்கியது. முதல் நாளைக் காட்டிலும் மக்கள் வருகை அதிகமாக இருந்தது.

தில் ரோமியோவின் மேஜிக்கல் ஈவ்னிங்

முதல் நாள் நடந்த நாகரிக கோமாளி நிகழ்ச்சி பெரியவர்களைக் கவர்ந்தது என்றால், இரண்டாம் நாளில் நடைபெற்ற கோவையைச் சேர்ந்த தில் ரோமியோவின் மேஜிக் நிகழ்ச்சி குழந்தைகளை பெரிதும் கவர்ந்தது. வயதான குழந்தைகளைக் கூடத்தான். அடுக்கடுக்கான தந்திரக் காட்சிகளால் குழந்தைகள் வியப்பின் உச்சிக்கே சென்று விட்டார்கள். தில் ரோமியோ வெறும் வியப்போடு நிறுத்திவிடக் கூடாதென்று, இடையிடையே சாமியார்களின் மோசடிகளையும், பகுத்தறிவை பயன்படுத்தி நாம் அவர்களிடமிருந்து விலகி இருக்க வேண்டும் என்பதையும் கூறத் தவறவில்லை. சில தந்திரக் காட்சிகளை செய்யும் போது குழந்தை களை அழைத்து செய்து காட்டி அவர்களை தீராத வியப்பில் ஆழ்த்தினார். சில குழந்தைகள் இருக்கையின் நுனிக்கே வந்து விட்டனர். ஒவ்வொரு தந்திரக் காட்சியும் முடியும் போது, தங்கள் பெற்றோர்களிடம் திரும்பி, அது எப்படி, இது எப்படி என்று ஓயாமல் கேள்வி கேட்டவாறே இருந்தனர்.

மேஜிக் நிகழ்ச்சி நிறைவு பெற்றவுடன், கருத்தரங்கம் தொடங்கியது. நிகழ்ச்சிக்கு பெரியார் மணியம்மை பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் நல்.இராமச்சந்திரன் தலைமை வகித்து உரையாற்றினார். அவர் தனது உரையில், தகவல் தொழில்நுட்பம் வளர்ந்து வருகிறது என்றும்,ICT, E-Resources போன்றவற்றில் PMU--வை எப்படி பயன்படுத்திக் கொள்ள முடியுமோ அப்படி பயன்படுத்திக் கொள்ளுங்கள் என்றும் பதிப்பகங் களுக்கு அழைப்பு விடுத்து தனது உரையை நிறைவு செய்தார். முன்னதாக அவர் கவிஞர் மனுஷ்ய புத்திரனின் பணிகளுக்கு பாராட்டு தெரிவித்தார்.

மனிதனை வாசிப்போம்

மனிதனை வாசிப்போம் என்ற தலைப்பில் உரையாற்றிய மனுஷ்யபுத்திரன் அவர்களுக்கு தமிழர் தலைவர் பயனாடை அணிவித்து இயக்க நூல்கள் வழங்கினார். உடன் முனைவர் நல்.இராமச்சந்திரன் உள்ளார் (20.4.2013)

தமிழ் ஓவியா said...

துணைவேந்தரைத் தொடர்ந்து கவிஞர் மனுஷ்ய புத்திரன் மனிதனை வாசிப்போம் - என்ற தலைப்பில் உரையாற்றினார். அவர் தனது உரையில் நாம் ஏராளமானோரின் புத்தகங்களை வெளியிட் டிருக்கிறோம். வாசிப்பா ளர்களை எப்போது உரு வாக்கப்போகிறோம்? என்ற கேள்வியோடு தொடங்கினார். தொடர்ந்து அவர், தந்தை பெரியாரும் இதைத்தான் செய்தார். ஊர் ஊராகச் சென்று வாசிப்பாளர்களை உரு வாக்கினார் என்று கூறி விட்டு, நானும் அப்படிச் சென்று பேசி, ஒரு வாசிப் பாளரையாவது உருவாக் கிவிட முடியாதா என்று முயன்று கொண்டிருக்கி றேன் என்றார்.

மேலும் அவர், புத்தகம் என்பது ஒரு தனிப்பட்ட நபரைச் சார்ந்த விசய மல்ல, ஒரு கலாச்சார உரு வாக்கம் அதில் இருக் கிறது. நமது பண்பாட்டை முன்னெடுத்துச் செல்லக் கூடியது. ஜாதி, மதம் சார்ந்த பண்பாட்டை கலைக்கக்கூடியது என்று புத்தகத்தின் அருமையை சொல்லிவிட்டு, ஆனால், இப்பொழுது எப்படி இருக்கிறது சமுதாயம் என்ற கேள்வியை எழுப்பி, இன்றைய இளைஞர்களை பணம் சம்பாதிக்கும் இயந்திரங்களாக இந்த சமூகம் வளர்த்துக் கொண்டுள்ளது என்று பதிலும் கூறினார். மேலும் அவர், வெளி ஊர்களுக்குச் செல்லும்போதும் அருவியைப் பார்க்க வேண்டும், கோயில் கோபுரத்தைப் பார்க்க வேண்டும் என்று எண்ணாமல், அங்கிருக்கும் மனிதர்களைப் பார்ப்பதில்தான் எனக்கு மகிழ்ச்சி என்றார்.

ஆத்மாநாமின் கவிதை

தொடர்ந்து பேசிய அவர், நீ பழைய மனிதன் தான் என்றது ஒரு புத்தகம், நீ புதிய மனிதன்தான் என்றது ஒரு புத்தகம். நீ மனிதன்தானா என்றது வேறு ஒரு புத்தகம் என்ற ஆத்மாநாமின் கவிதையை குறிப்பிட்டு விட்டு, இப்படி போலி நியாயங்களை உருவாக்கிவிட்டு, எது சரி எது தவறு என்று அறிவதில் தெளிவில்லாமல் அதற்காக போராட் டமே நடத்த வேண்டியிருக்கிறது. இப்படி ஒரு மனித விரோத சமுதாயத்தை உருவாக்கிவிட்டு, இந்தியா மனிதாபிமான நாடு என்று சொல்லிக் கொள்வதற்கு வெட்கப்படவேண்டும் என்று தனது உள்ளக் குமுறலை வெளிக்காட்டிவிட்டு, மேலும், ஜாதி மதத் தின் பேரால் எத்தனையெத்தனை கொடுமைகள் இந்த நாட்டில், பெண்கள் எவ்வளவு கீழ்த்தரமாக நடத்தப்படுகிறார்கள். இவையெல்லாம் மாற்றப்பட வேண்டாமா? என்று பார்வையாளர்களை நோக்கி கேள்விக் கணைகளை வீசினார்.

தமிழ் ஓவியா said...

தொழில்நுட்பம் ஒரு போதும் புரட்சியை உருவாக்கிவிட முடியாது

மேலும் அவர், பார்வையாளர்களை நோக்கி கேள்விக் கணைகளை வீசியதோடு நில்லாமல், பார்வையாளர்களிடம் இருந்து கேள்விகளை எதிர்பார்த்தார். அப்படி கேட்கப் பட்ட கேள்விகளுக்கு, தொழில் நுட்பம் ஒரு போதும் புரட்சியை உருவாக்கிவிட முடியாது. மக்கள் இயக்கம்தான் உருவாக்க முடியும். என்றும், அறிவியலின் எதிர்மறை யான திறன்களையே பெரும்பாலான மக்கள் எடுத்துக் கொள்கிறார்கள் என்றும் மக்கள் மீது குற்றமும் சுமத்தினார். தொடர்ந்து அவர், இப்படிப்பட்ட சூழலில்தான் இப்படிப்பட்ட புத்தகச் சங்கமங்கள் பெருமளவில் தேவைப் படுகின்றன என்று முடித்துக் கொண் டார்.

முன்னதாக, மனுஷ்யபுத்திரன் பேசத் தொடங்கியதுமே தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் வருகை தந்து பார்வையாளர்கள் வரிசையில் அமர்ந்து கருத்தரங்கத்தை கவன முடன் சுவைத்தார். தொடர்ந்து அவர், மனுஷ்யபுத்திரன், துணைவேந்தர் நல்.இராமச்சந்திரன், தில்ரோமியோ ஆகியோருக்கு பயனாடை அணி வித்து, இயக்க நூல்கள், நினைவு பரிசு ஆகியவற்றை அளித்து சிறப்பு செய் தார்.

நேற்று தேர்வானவருக்கு இன்று பரிசு

19.4.2013 அன்று குலுக்கல் மூலம் தேர்வு பெற்ற அமிர்தவாசினிக்கு திறன்பேசியை தமிழர் தலைவர் வழங்கினார். உடன் முனைவர் நல்.இராமச்சந்திரன், எழுத்தாளர் மனுஷ்யபுத்திரன் உள்ளனர் (20.4.2013)

குலுக்கல் மூலம் நேற்று தேர்வான அமிர்தவாசினிக்கு Micromax 7 - திறன் பேசியை தமிழர் தலைவர் அளித்து சிறப்பித்தார். தொடர்ந்து இன்றைய பரிசுக்குரியவரை, பார்வையாளர் களாய் வந்திருந்த சிறுவன் ஒருவனை வரவழைத்து, எடுக்கச் செய்தனர். திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி யைச் சார்ந்த பி.எஸ்.நாகராஜன் தேர் வானதாக அறிவிக்கப்பட்டது. இந்த பரிசு நாளை அளிக்கப்படும் என்ற அறிவிப்போடு, சேகர் பதிப்பகம் சார்பாக இரண்டாம் பரிசு, பெரியார் சுயமரியாதை பிரச்சார நிறுவனம் மூலமாக மூன்றாவது பரிசு, சிக்ஸ்த் சென்ஸ் பதிப்பகம் சார்பாக நான் காவது பரிசு, அருணா பதிப்பகம் சார்பாக 5ஆவது பரிசு என்று சிவா பெர்சி, எம்.ஜனனி, ஜி.ரவிச்சந்திரன், கே.பி.ஆதித்யா ஆகியேரின் பெயர்கள் அறிவிக்கப்பட்டன. மேற்கண்ட நிகழ்ச்சியை பிரின்சு என்னாரெசு பெரியார் ஒருங்கிணைத்து நன்றி கூறி நிகழ்ச்சியை நிறைவு செய்தார்.

நிகழ்ச்சிக்கு, துணைத் தலைவர் கலி.பூங்குன்றன், கோ.கருணாநிதி, கவிஞர் மா.மதிமாறன், வெற்றிச் செல்வி, தனலட்சுமி, தங்கமணி, தமிழ் ஸ்டுடியோ அருண், கவிஞர் ராஜ சேகர், பெரியார் மணியம்மை பல் கலைக் கழகத்தின் பதிவாளர்அய்யாவு, தளபதி பாண்டியன், பெரியார் சாக்ரடீஸ், ஆடிட்டர் ஜெயராமன் பொதுக்குழு உறுப்பினர் பன்னீர் செல்வம், கி.மணிமேகலை மற்றும் ஏராளமான குழந்தைகள் தங்கள் பெற்றோர்களுடன் வருகை தந்து நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.

தமிழ் ஓவியா said...


திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி இரங்கலறிக்கை



பத்திரிக்கை துறையில் இமாலயச் சாதனை படைத்த தமிழர் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் மறைந்தாரே!

ஊடகத்துறையில் ஒப்பற்றவராகத் திகழ்ந்து, தனது தந்தையார் ஒப்படைத்த தினத்தந்தி நாளேட்டை சுமார் ஒரு கோடி வாசகர்கள் நாளும் படிக்கும் வண்ணம் வரலாற்றுச் சாதனை புரிந்த டாக்டர் சிவந்தி ஆதித்தனார் அவர்கள் நேற்றிரவு காலமானார் என்பது, மிகவும் துன்பத்தையும், துய ரத்தையும் தமிழினத்திற்குத் தரும் செய்தியாகும்!

சி.பா.ஆதித்தனார் துவக்கி நடத்திய இந்த நாளேட்டை மேலும் பல பதிப்புகளாகவும் வெளி வரும்படி பெருக்கிய ஆற்றலாளர் அவர்.

விளையாட்டுத்துறையில் ஒலிம்பிக் சங்கத்தின் தலைவராக உயர்ந்தவர். எல்லாவற்றிற்கும் மேலாக பழகும்போது மிகவும் பண்பாகவும், அன்பாகவும் பழகும் பான்மையர்.

தந்தை பெரியார் அவர்களும் ஆதித்தனார் அவர்களும் எப்படி நட்புறவுடன் இருந்தனரோ அதே நட்புறவை இறுதிவரை நம்முடன் தொடர்ந்தவர். பக்கத்துப் பத்திரிக்கையாளர் ஆயிற்றே நாம்? என்று அன்பொழுக சந்திக்கும் போதெல்லாம் கூறி மகிழ்பவர்!

தமிழர்களால் பத்திரிக்கைத் துறையில் இமாலயச் சாதனை என்ற முத்திரையைப் பொறிக்க முடியும் என்று நிரூபித்துக் காட்டிய மாமேதை அவர்!

அவரது பிரிவால் வாடும் அவரது குடும்பத் தினர் குறிப்பாக தினத் தந்தியின் நிர்வாக இயக்குநர் பாலசுப்பிர மணிய ஆதித்தனார் அவர்களுக்கும், திராவிடர் கழகத்தின் சார்பாகவும், விடுதலை நாளேட்டின் சார்பாகவும் ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

சென்னை
20.4.2013

- கி. வீரமணி
தலைவர், திராவிடர் கழகம்

தமிழ் ஓவியா said...

சீரிய தொழிற்சங்கத் தலைவர் சுயமரியாதை வீரர் செ.குப்புசாமி மறைந்தாரே!

தி.மு.கவின் தொழிற்சங்கப் பேரவையின் தொழி லாளர் முன்னேற்ற சங்கத்தின் தலைவராக பல ஆண்டுகாலம் தொண்டு செய்த தோழர் மானமிகு செ.குப்புசாமி அவர்கள் தனது 87ஆவது வயதில் உடல்நலம் குன்றிய நிலையில் நேற்று (19.4.2013) சென்னையில் காலமானார் என்ற செய்தி, தாங்கொணா துயரத்தையும், துன்பத்தையும் நமக்குத்தந்தது.



நண்பர் செ.குப்புசாமி அவர்களை எனது பல்கலைக் கழக மாணவப் பருவத்திலிருந்தே நான் அறிவேன்.

துவக்கத்தில் திராவிடர் கழகம், பிறகு திராவிட முன்னேற்றக் கழக அனுதாபி, செயல்வீரர் என்ற அளவில் பொதுவாழ்விற்கு தனது இரயில்வே பணியிலிருந்து வந்தவர் அவர்

தந்தை பெரியார் அவர்களால் துவக்கி வைக்கப்பட்ட தென்பகுதி இரயில்வே மென் யூனியன் (SRMU) என்ற அமைப்பு, திராவிடர் கழக ஆதரவாளர்களால் சிறப்புடன் நடத்தப்பட்டு வந்தது.

தோழர் எஸ்.இராகவானந்தம், சி.ஆளவந்தார், பி.வி.இராமச்சந்திரன், எஸ்.ஆர்.தாஸ், தனம், தர்ம ராஜன், ராதாகிருஷ்ணன் போன்ற பலர் இரயில்வே ஊழியர்கள் சங்கப் பொறுப் பாளர்களாக இருந்தபோது, நண்பர் குப்புசாமி அவர்கள் பண்ருட்டி, திரு வண்ணாமலை, கடலூர் போன்ற பல ஊர்களில் இரயில்வே நிலையத்தில் பணிபுரிந்தவர். தோழர் எஸ். இராக வானந்தம் அவர்கள் தி.மு.க.வில் இணைந்தபோது அவருடனேயே இணைந்தவர். அண்ணா அவர்களிடம் மிகவும் ஈடுபாடு கொண்டவராக அப்போதே திகழ்ந்தவர்.

பிறகு தி.மு.க. தொழிற்சங்கத்தைச் சிறந்தமுறையில் கட்டுவதற்கு அரும்பாடுபட்டவர். மூன்று முறை கலைஞரால் வடசென்னை தொகுதியில் தி.மு.க. வேட்பாள ராக நிற்க வைக்கப்பட்டு வென்றவர்.

சிறிது காலமாகவே உடல் தளர்ந்த நிலையில் இருந்தபோதும் தன் பணியைச் செய்யத் தவறாத கடமைவீரர்; சுயமரியாதைக் கொள்கையாளர்.
அவரது மறைவு தி.மு.க.வுக்கு, குறிப்பாக தி.தொ.மு. சங்கத்துக்கு மிகப்பெரிய ஈடுசெய்ய முடியாத இழப் பாகும்.

அவரைப்பிரிந்து வாடும் அவரது குடும்பத்தின ருக்கும், தி.மு.க.விற்கும், தொழிற்சங்க நண்பர்களுக்கும் தாய்க்கழகமான திராவிடர் கழகம் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறது.


சென்னை
20.4.2013

- கி. வீரமணி
தலைவர், திராவிடர் கழகம்

தமிழ் ஓவியா said...


பிராமண அகராதி வினா - விடை


வினா: ஆசிரமம் என்றால் என்ன?

விடை: காந்தர்வ விவாஹமும் ராட்சச விவா ஹமும் நடக்குமிடங்கள்.

வினா: சுயராஜ்யம் என்றால் என்ன?

விடை: பிராமணர்கள் உத்தியோகமும் பதவி யும் அதிகாரமும் பெறுவதுதான் சுயராஜ்யம்.

வினா: பிராமணரல்லாதார்களுக்கு உத்தி யோகமும் பதவியும் அதிகாரமும் வந்தால் அதற்குப் பெயரென்ன?

தமிழ் ஓவியா said...

விடை: அது அதிகார வர்க்கத்தின் ஆட்சி அல்லது அந்நிய ஆட்சி.

வினா: தேச சேவை யென்றால் என்ன?

விடை: பிராமணர்கள் பின்னால் திரிந்து கொண்டு ஜஸ்டிஸ் கட்சியைத் திட்டு வது போல் பிராமணரல்லாதாரைத் திட்டுவதும், பிராமணர் களிடம் பணம் வாங்கிக் கொணடு அவர்களை தலை வர், தமிழ்நாட்டுக் கர்ணன், கலியுகக் கர்ணன், மகாத்மாவின் சிஷ்யர் என்று சொல்லி பிராமணரல்லாதாரை வஞ்சித்து பிராமணர் களுக்கு ஓட்டுவாங்கிக் கொடுப்பது தான் தேச சேவை ஆகும்.

வினா: தேசத் துரோகம் என்றால் என்ன?

விடை: பிராமணரல்லாதார் நன்மையைப் பற்றிப் பேசுவதும் எழுதுவதும் தேசத் துரோ கமாகும்.

வினா : பிராயச்சித்தமில்லாத, மன்னிக்க முடியாத தேசத் துரோகம் என்றால் என்ன?

விடை: பிராமணர்களுடைய சூழ்ச்சி களையும், தந்திரங்களையும், அயோக்கியத் தனங்களையும் வெளியிலெடுத்துச் சொல்லுவதும் எழுவதும் மன்னிக்க முடியாத துரோகமாகும்.

வினா: மதுவிலக்குப் பிரச்சாரம் என்றால் என்ன?

விடை: தான் மதுவருந்திக் கொண்டும், தனது மரத்தில் கள்ளுமுட்டி கட்டித் தொங்கவிட வேண்டும். தனது பத்திரிகைளில் ஒவ்வொரு மனிதனும் வீட்டில் சாராயம் வைத்திருக்க வேண்டுமென்று எழுதிக் கொண்டும், தன்னைச் சட்டசபைக்கு அனுப்பினால் மதுவை ஒழித்து விடுகிறேன் என்று சொல்லுவதும், இப்படிப்பட்ட வர்களுக்கு ஓட்டுக் கொடுங்கள் என்று சொல்லுவதும் மதுவிலக்குப் பிரச்சாரமாகும்.

வினா : சரியான ஜனப்பிரதிநிதி சபை என்றால் என்ன?

விடை: எல்லோரும் பிராமணர்களாய் அமர்ந் திருப்பதுதான் சரியான ஜனப்பிரதிநிதி சபையாகும்.

வினா : அடுத்தபடியான ஜனப்பிரதிநிதி சபை என்றால் என்ன?

விடை: பிராமணர்களும், அவர் சொல் படி கேட்கும் பிராமணரல்லாதார்களும் அமர்ந் திருப்பது இரண்டாந்தர ஜனப்பிரதிநிதி சபை யாகும்,

வினா: ஜனப்பிரதிநிதி இல்லாத சபை என்றால் என்ன?

விடை: பிராமணர்கள் மெஜாரிட்டியாய் இல்லாத சபை எவ்விதத் திலும் ஜனப்பிரதிநிதி சபையாகமாட்டாது.

வினா: புத்தியுள்ள ஜனங்கள் என்றால் யார்?

விடை: பிராமணர்கள் வண்டி வண்டியாய் பொய்யும் புளுகும் அளந்தாலும் அதை யெல்லாம் கேட்டுக்கொண்டு சரி சரியென்று பேசாமல் இருப்பவர்கள் புத்தியுள்ள ஜனங்கள்.

வினா: குழப்பக்காரர்கள், காலிகள் என்றால் யார்?

விடை: பிராமணர்கள் வண்டி வண்டியாய் பொய்யையும் புளுகையும் அளக்கும்போது குறுக்கே யாராவது கேள்வி கேட்டால் அவர்கள் காலிகள், குழப்பக்காரர்கள் ஆகிவிடுவார்கள்.

வினா : தேசியப் பத்திரிகை என்றால் என்ன?

விடை : பிராமணர்களின் படம் போட்டுக் கொண்டும், பிராமணர் களைத் தலைவர் என்றும், பிராமணர்களைப் புகழ்ந்து எழுதிக்கொண்டும், தேவஸ்தான சட்டத்தையும் வகுப்பு வாரிப் பிரதிநிதித்துவத்தையும் கண்டித்துக் கொண்டும் அல்லது அதைப் பற்றி பேசாமல் வாயை மூடிக்கொண்டும் இருக்கிற பத்திரிகைகள்தான் தேசியப் பத்திரிக்கைகள் ஆகும்.

வினா: தேசத் துரோகப் பத்திரிகை என்றால் என்ன?

விடை: பிராமணர்களின் தந்திரங்களை எடுத்து எழுதுவதும், பிராமணரல்லாதார்களின் பெருமையைப் பற்றி எழுதுவதும் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவத்தையும் தேவஸ்தான சட்டத்தை யும் ஆதரித்து எழுதுவதுமான பத்திரிகைகள் தேசத் துரோக மான பத்திரிகைகள் ஆகும்.

- குடிஅரசு - உரையாடல் - 02.05.1926

தமிழ் ஓவியா said...


சுயராஜ்யக் கட்சியார்

கார்ப்பொரேஷனில் செய்த வேலை

சுயராஜ்யக் கட்சியார் என்கிற பிராமணர்கள் சென்னைக் கார்ப்பெரேஷனைக் கைப்பற்ற ஆட்களை நிறுத்தி ஸ்ரீமான் திரு.வி. கலியாணசுந்தர முதலியாரை சுவாதீனம் செய்து கொண்டு மூலை முடுக்கெல்லாம் ஜஸ்டிஸ் கட்சியாரை வைது பிரசங்கம் செய்த காலத்தில் தாங்கள் மிகுதியும் யோக்கியர்கள் என்றும், ஜஸ்டிஸ் கட்சியார் தேசத் துரோகிகள் என்றும், கார்ப்பொரேஷனுக்குத் தாங்கள் மெம்பர்களானால் ஜனங்களுக்கு அதிக அனுகூலம் செய்வோம் என்றும், வரிகளைக் குறைப்போம் என்றும் பொய் மூட்டைகளை அளந்தார்கள்.

இப்பொய் மூட்டைகளை ஸ்ரீமான் கலியாணசுந்தர முதலியாரும் தலையில் தூக்கிக்கொண்டு போய் ஓட்டர்கள் வீட்டில் கொட்டினார்.இப்பொய்யர்கள் வெற்றியடைந்து கார்ப்பொரேஷன் மெம்பர்களான பிறகு அவர்கள் யோக்கியதை என்ன என்பதை சென்னை வியாபாரிகள் சங்கத்தாரால் செய்த தீர்மானங்களிலிருந்தே பொது ஜனங்கள் அறிந்து கொள்ளலாம்.

அதாவது:- வியாபார சுணக்கத்தால் வியாபாரம் நடப்பதே கஷ்டமாயிருக்கும்போது வியாபாரிகளின் தொழில் வரியைக் கார்ப்பெரேஷன் கவுன்சிலர்கள் 100-க்கு 25 வீதம் அதிகமாக உயர்த்தியதை இச் சங்கம் பலமாகக் கண்டிக்கிறது என்றும், வரி உயர்வு தீர்மானத்தை இந்த டிவிஷன் கவுன்சிலரே ஆமோதித் ததையும் பிரசிடெண்டு இதற்கு அனுகூலமாய் வோட்டுக் கொடுத்ததையும் இம்மகாநாடு இன்னும் பலமாய்க் கண்டிக்கிறது.....

இந்த டிவிஷனின் சுகாதார நிலைமை மிகக் கேவலமாயிருப் பதற்காகவும், இதை கார்ப்பொரேஷன் கவுன்சிலர்கள் கவனிக்காமலிருப்பதற் காகவும் இச்சங்கம் வருந்துகிறது என்று தீர்மானித்திருக்கிறார்கள். சுயராஜ்யக் கட்சியார் எலெக்ஷன் போது வோட்டர்களிடம் கொடுக்கும் வாக்குத்தத்தத்திற்கும் அதன் பிறகு அவர்கள் நடந்துகொள்ளும் யோக்கியதைக்கும் அவர்களுக்கு வோட்டு வாங்கிக் கொடுக்கும் ஸ்ரீமான் திரு.வி. கலியாணசுந்தர முதலியாரின் யோக்கியதைக்கும் இதைவிட வேறு என்ன உதாரணம் வேண்டும்.

கார்ப்பொரேஷனில் வரி, சுகாதாரம் என்னும் இரண்டு முக்கிய காரியம் உண்டு. இந்த இரண்டு முக்கிய காரியத்திலும் இவர்கள் யோக்கியதையைப் பார்த்த வோட்டர்கள் இனியாவது சுயபுத்தியுடன் நடப்பார்களா?

- குடிஅரசு - கட்டுரை - 09.05.192

தமிழ் ஓவியா said...


கோயமுத்தூரில் பஞ்ச நிவாரண வேலையும் ஸ்ரீமான் சி.வி. வெங்கிட்டரமணய்யங்காரும்


கோயமுத்தூரில் பஞ்ச நிவாரண வேலைக்காக ரூபாய் 2102-8-0 செலவாகியிருக்கிறது. கிராமத்து ஜனங்கள் இந்தப் பணம் ஸ்ரீமான் வெங்கிட்ட ரமணய்யங்கார் தான் கையிலிருந்து செலவு செய்ததாக நினைக்கும்படி பல தந்திரங்கள் செய்ததோடு சில காங்கிரஸ் தொண்டர்கள் என்போரும் ஸ்ரீமான் அய்யங்கார் பின் சென்று ஓட்டு வாங்க, பஞ்சப்படி போட்ட அய்யங்கார் என்று அவருக்குப் பெயர் வாங்கிக் கொடுத்து கிராமத்து ஜனங்களை ஏமாற்றியிருக்கிறார்கள்.

இதன் இரகசியம் என்ன வென்றால் பஞ்ச நிவாரண வேலைக்காக பொதுஜனங்களிடமிருந்து வசூலாகி வந்த பணத்தை ஸ்ரீமான் எஸ்.சீனி வாசய்யங்கார் தூக்கி ஸ்ரீமான் வெங்கிட்டரமணய் யங்காரிடம் கொடுத்து செலவு செய்யும்படி சொல்லி யிருக்கிறார்.

அந்தப் பணத்தை வாங்கி தான் செலவு செய்ததாக அவர் நடித்திருக்கிறார். இந்த நடிப்புக்கு காங்கிரஸ் தொண்டர்கள் திரைப்பிடித்து இருக் கிறார்கள். இவ்வளவு தான் இரகசியம். இதை 3-5-26 சுதேசமித்திரன் பத்திரிகையிலேயே பார்க்கலாம்.

- குடிஅரசு - அறிக்கை - 09.05.1926

தமிழ் ஓவியா said...


என்னதான் முடிவு?


பெண்கள் பாதுகாப்பாக வாழ முடியாத நாடுகளின் வரிசையில் இந்தியாவுக்கு நான்காவது இடம் கிடைத்திருக்கிறது. அதுவும் இந்தியாவின் தலைநகரமான புதுடில்லி என்பது இந்தப் பிரச்சினையில் முதல் இடத்தில் இருக்கிறது.

கொஞ்ச காலத்துக்கு முன் (16.12.2012) மருத்துவக் கல்லூரியில் படித்துக் கொண்டு இருந்த மாணவி ஒருவர் பேருந்தில் பாலியல் வன்முறைக்கு உட் படுத்தப்பட்டது குறித்துப் பெரும் புயல் நாடு தழுவிய அளவில் வெடித்துக் கிளம்பியது. சமூகத்தில் பெரும் அதிர்வை ஏற்படுத்தியது. எவ்வளவோ மருத்துவ உதவிகளை மேற்கொண்டும் பாதிக்கப்பட்ட பெண் உயிர் பிழைக்கவில்லை.

ஊடகங்கள் உறுமின - ஓய்வு பெற்ற உச்சநீதி மன்ற நீதிபதி தலைமையில் ஆணையம் அமைக்கப் பட்டது. அவரும் பல யோசனைகளை அளித்துள்ளார்.

ஏற்கெனவே பல சட்டங்களும், விதிமுறைகளும் இருக்கத்தான் செய்கின்றன.

சட்டமும், நிருவாகத் துறையும் நீதிமன்றமும் எந்தக் கதியில் இயங்குகின்றன என்பதுதான் முக்கியம்; கடந்த 3 ஆண்டுகளில் 68 ஆயிரம் பாலியல் வன்முறை வழக்குகளில் 16 ஆயிரம் வழக்குகளில் மட்டுமே தண்டனை கிடைத்திருக்கிறது.
காவல்துறையின் கட்டப் பஞ்சாயத்து காரண மாகவோ, அல்லது காவல்துறையின் கவனத்துக்கு வராமலேயோ புதைக்கப்பட்ட வழக்குகளுக்குக் கணக்கு இல்லை.

டில்லியில் கடந்த டிசம்பரில் கயவர்களால் மருத்துவக் கல்லூரி மாணவி வேட்டையாடப்பட்ட நிலையில் வெகு மக்களும் குமுறி எழுந்த நிலையில் இது போன்ற குற்றங்கள் பெருகி வருவதுதான் அதிர்ச்சிக்கு உரியதாகும். தமிழ்நாட்டில் மட்டும் 10-க்கும் மேற்பட்ட வன்புணர்ச்சிகள் நடந்துள்ளன. நம் நாட்டு ஊடகங்களின் ஒரு சார்புத் தன்மையால் அவை வெளிச்சத்துக்கு வராமல் போய் விட்டன. அரசாங்கமும் ஒன்றும் நடக்காதது போல காய்களை நகர்த்திக் கொண்டது.

நேற்று ஏடுகளில் வெளிவந்த இன்னொரு சேதி - இதுநாடா கடும் புலி வாழும் காடா என்று நினைக்கத் தோன்றுகிறது.

5 வயது சிறுமி புதுடில்லியில் பாலியல் வன் முறைக்கு ஆளாக்கப்பட்டுள்ளார்.

குடியரசுத் தலைவர் துடியாய்த் துடிக்கிறார்; அய்க்கிய முற்போக்குக் கூட்டணியின் தலைவரான திருமதி சோனியா காந்தி வார்த்தைகள் போதாது - செயல்கள் தேவை! என்று கோபமாகச் சொன்ன தாக ஏடுகள் சொல்லுகின்றன.

அவ்வப்பொழுது இதுபோன்ற கேவலமான நிகழ்வுகள் நடப்பதும், அந்த நேரங்களில் மட்டும் வீராவேசமாகத் துள்ளிக் குதிப்பதும் பழகிவிட்ட ஒன்றாகவே ஆகி விட்டது. மக்களின் மனதும் மரத்துப் போகும் நிலைதான்.

நீதிபதி வர்மா ஆணையம் கொடுத்துள்ள அறிக்கையைக்கூட மத்திய அரசு நீர்த்துப் போகத்தான் செய்திருக்கிறது.

கீழ்நிலையில் உள்ள காவல் அல்லது ராணுவ ஊழியர் அல்லது அதிகாரி வன்புணர்வில் ஈடுபட்டால் அதற்கு அவருக்கு மேலுள்ள அதிகாரியே பொறுப் பேற்க வேண்டும் என்ற வர்மா ஆணையத்தின் அடிப்படையான பரிந்துரையையும் அரசு புறந்தள்ளி விட்டது.

நீதிபதிகள், பொது மக்கள், ஊழியர்கள் போன் றோர் பாலியல் குற்றத்தில் ஈடுபட்டால் அவர்கள்மீது நடவடிக்கை எடுக்க தனி அனுமதி தேவையில்லை எனும் நீதிபதி வர்மாவின் பரிந்துரைகூட ஏற்கப் படவில்லை.

பாலியல் குற்றம் செய்தவர் தேர்தலில் போட்டியிட முடியாது என்பது போன்ற சிபாரிசுகள் ஏற்கப் படவில்லை.

ஆணுக்குப் பெண் அடிமை எனும் மனப்பான்மை தகர்த்தெறியப்பட கடுமையான சட்டங்கள் தேவை. பாம்புக்கும் நோகாமல், பாம்பு அடித்த கொம்புக்கும் நோகாமல் சட்டம் செய்தால் அது நாக்கை வழித்துக் கொள்ளத்தான் பயன்படும்.

பெண்களுக்குப் போதிய கல்வி தந்து ஆட்சி அதிகாரத்தில் 50 விழுக்காடு இடம் தந்து, பெண்ணென்றால் பலகீனமானவர் என்ற நிலை மாற்றப்படுவதற்கான போதிய உடல் தொடர்பான பயிற்சிகள் அளிக்கப்படுவது போன்ற தொலை நோக்குகள் தேவை.

ஊடகங்கள் மூலம் எச்சரிக்கும் ஏற்பாடுகள் தேவை; இல்லை என்றால் அவ்வப்போது பேசப்படும் வெட்டிப் பேச்சாகவே அது முடிந்து போய்விடும்.

பெண்களும், ஆண்கள் பார்த்துக் கொள்வார்கள் என்று நினைத்துக் கொண்டு விடாமல் வீதிக்கு வந்து போராட வேண்டும் - இது மிகவும் முக்கியம். 22-4-2013

தமிழ் ஓவியா said...


மனிதன்


பலவிதக் கருத்துகளையும், நிகழ்ச்சி களையும்பற்றிச் சிந்தித்து இது நல்லது, இது தீயது என்று உணரக்கூடிய சக்தி பெற்று, நல்லனவற்றைக் கடைப்பிடிக்கக் கூடியவன் எவனோ அவனைத்தான் மனிதன் என்று கூற முடியும்.
(விடுதலை, 9.6.1962)

தமிழ் ஓவியா said...


ஏப்ரல் 22: புவி தினம்


நாம் வாழும் பூமியைக் காப்பதன் முக்கியத்து வத்தை வலியுறுத்தும் விதமாக, ஒவ்வோர் ஆண்டும் ஏப்ரல் மாதம் 22ஆம் தேதியை 'புவி தினம் என அனுசரிக்கிறோம். 1969இல் சான்ஃப்ரான்சிஸ்கோ நகரில் நடைபெற்ற யுனெஸ்கோ மாநாட்டில், ஜான் மெக்கன்னல் என்பவர்தான் இப்படி ஒரு தினத்தை கடைபிடிக்கவேண்டும் என்பதை முன்மொழிந்தார்.

இந்த தினத்தை 192 நாடுகள் கடைபிடிக்கப்படுகின் றன. பூமியைப் பாதுகாப்பதை நோக்கமாகக்கொண்ட இந்த தினம், சுற்றுச்சூழல் மாசு அடையாமல் காப்பது, போர், வறுமை மற்றும் அநீதிகளுக்கு எதிராகச் செயல்படுவதன் முக்கியத்துவத்தயும் உணர்த்துகிறது.

தமிழ் ஓவியா said...


விகடன் கச்சேரி

இந்த வார ஆனந்தவிகடன் (24.4.2013) தலையங்கமும், அதனைத் தொடர்ந்து கூட்டணி பவன் எனும் அரசியல் சிறப்புக் கட்டுரையும் அனேகமாக பார்ப்பனர்களின் மனப்பான்மையும், முதலாளித்துவ மனப் பான்மை கொண்டவர்களின் சிந்தனையும், எந்தத் திசையில் பயணிக்கின்றன என்பதற் கான கண்ணாடியாகும்.

மதச் சார்பற்றச் சிந்தனை கொண்ட ஒருவரைத் தான் பிரதமர் வேட்பாளராக எதிர் அணி தேர்ந்தெடுக்க வேண்டும் என்கிற கருத்துகளைப் பரப்பி, எதிர் அணியினரைக் குழப்பும் காங்கிரஸின் வியூகம் நமக்குப் புரியாமல் இல்லை.

இந்திய தேசத்தை வழி நடத்தக் கூடிய பிரதமர் மதச் சார்பு இல்லாமல் இருக்க வேண்டும் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை.

அதே சமயம் அந்த ஒற்றைத் தகுதி மட்டுமே பிரதமர் வேட்பா ளருக்குப் போதும் என்ற பிரஸ்தாபிக்க முனையும் காங்கிரஸின் துடிப்பு வடிகட்டிய முட்டாள்தனம் என்கிறது. ஆனந்தவிகடன் தலையங்கம்.

இதில் ஒன்றைக் கவனிக்க வேண்டும்; மதச் சார்பின்மை என்னும் பிரச்சினை ஏதோ காங்கிரஸ் சம்பந்தப்பட்டது போலவும் மற்ற வர்களுக்கும் அதற்கும் தொடர்பு இல்லை என்பது போலவும் எழுதுவது வடிகட்டிய முட்டாள்தனம் அல்லவா!

இன்னும் சொல்லப் போனால் காங்கிரசை விட பிஜேபி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் முக்கிய அங்கமான அய்க்கிய ஜனதா தளம் அதன் சார்பில் பிகாரில் முதல் அமைச்சராக இருக்கக் கூடிய நிதிஷ்குமார்தான் மதச் சார்பின்மை என்னும் குரலை வெண்கல நாதமாக ஒலிக்கிறார்.

அந்த ஒற்றைத் தகுதி மட்டும் போதுமா என்று ஆனந்தவிகடன் எழுப்பும் வினாவில் மோடி என்னும் மிக மோசமான இந்துத்துவா வெறியரின் நச்சுக் காற்றுக் குடிகொண்டு இருக்கிறது.

குஜராத்தில் மோடி தலைமையில் நடத்தப் பட்ட சிறுபான்மையினருக்கு எதிரான நர வேட்டை - பிஜேபியின் கதா நாயகரான வாஜ்பேயியே அதிரச் செய்துவிட்டதே! இனி எந்த முகத்துடன் வெளி நாட்டுக்குச் செல் லுவேன்? என்று அவரைப் புலம்ப வைத்ததே!

ஆனந்த விகடன் மிகச் சாமர்த்தியமாக கூறும் அந்த ஒற்றைத் தகுதி என்பது மிக மிக (எத்தனை மிக வேண்டுமானாலும் போட்டுக் கொள்ளலாம்) முக்கியமே!

காங்கிரஸின் சாதனைகளைப்பற்றி விகடன் குறை கூறியுள்ளது. காங்கிரசுக்கு வக்காலத்து வாங்குவது நமது நோக்கம் இல்லை.

அதே நேரத் தில் பொருளாதாரக் கொள்கையில் காங்கிரசுக்கும், பிஜேபிக்கும் என்ன பெரிய வேறுபாடு? வெளியுற வுக் கொள்கைதான் ஆகட்டும் என்ன வித்தியாசம்?

பி.ஜே,பி.யின் மதச் சார்பு தன்மைக்கு நேரிடையாக வக்காலத்து வாங்குவதில் ஜகா வாங்கும் விகடன், சாதனைகள் என்ற ஒன்றைக் காட்டித் திசை திருப்பப் பார்க்கிறது.

தலையங்கத்தை ஒட்டி எடுக்கப்பட்ட சிறப்புக் கட்டுரையின் சாராம்சம் அதிமுகமீது குற்றப் பத்திரிகை படிக்காமல், சில குறைகளைச் சொல்லு வதுபோலச் சொல்லி, அதிலிருந்து அது திருத்திக் கொண்டு செயல்படுவது நல்லது என்னும் அக்கறையுடன் நயமாக நல்லுரைகள் பரிமாறப் பட்டுள்ளன. துக்ளக் ராமசாமிகள் கடைப்பிடிக்கும் பாணி இது.

ஒரு பக்கத்தில் இந்திய முதலாளிகள் மோடி வர வேண்டும் என்று நாக்கைத் தொங்கப் போட்டுக் கொண்டு அலைகிறார்கள்;

இன்னொரு பக்கத்தில் இந்துத்துவாவாதிகள் பிஜேபியும், அதிமுகவும் அதிகாரபீடத்தில் இருக்க வேண்டும் என்ற ஆசையைக் கன்னத்தில் அடக்கிக் கொண்டு எழுது கிறார்கள்.

இதுதான் நாட்டின் நிலைமை!

வெகு மக்கள் விழிப்பாக இருக்க வேண்டும்.

தமிழ் ஓவியா said...


உலகப் புத்தக நாள்


இன்று உலகப் புத்தக நாள் (1995) இதனையொட்டி சென்னை பெரியார் திடலில் பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனம், பெரியார் மணியம்மைப் பல்கலைக் கழகம், நேஷனல் புக் டிரஸ்ட் ஆஃப் இந்தியா இணைந்து சென்னை புத்தகச் சங்க மத்தை இம்மாதம் 18 முதல் 27 முடிய நேர்த்தியாக நடத்திக் கொண்டு இருக்கின்றன.

இயக்கத்தின் சார்பில் தமிழ்நாடெங்கும் நடக்கும் புத்தகக் கண்காட்சிகளில் அரங்கை ஏற்படுத்திக் கொண்டு இயக்க நூல்களை விற்பனை செய்து கொண்டு இருக்கிறது என்றாலும் இயக் கமே இத்தகைய சங்கமத்தை நடத்துவது இதுவே முதல் தடவையாகும். சென்னை பெரியார் திடலில் அமைக்கப் பட்டுள்ள 68 அரங்குகளின் நேர்த்தியையும், எழிலையும் மனந்திறந்து பாராட்டுகின் றனர். ஆண்டுதோறும் இது தொடர வேண்டும் என்ற அன்பு வேண்டுகோளையும் வைத்துள்ளனர். தொடரும் என்றும் கழகத் தலைவர் உறுதிப்படுத்தியும் உள்ளார்.

வெறும் நூல்கள் விற்பனை அரங்கு மட்டுமல்ல; மாலை நேரத்தில் சிந்தனை அரங்கம் என்பது பல புதிய அறிமுகங்களின் அணி வகுப்பாக அமைந்து வருகை யாளர்களின் ஆர்வத்தை வாரி அணைத்துக் கொள் கிறது. கவினுறு கலை நிகழ்ச் சிகள் கூத்தாடுகின்றன. பொம்மலாட்டம் வீதி நாடகம், கதை சொல்லுதல், மேஜிக் காட்சிகள் என்று ஒவ்வொன் றும் கட்டம் கட்டிப் போட வேண்டிய கற்கண்டு விருந்து! காணாதார் கண்கள் இருந்து என்ன பயன்? கேட்காதார் காது களாலும் யாது பலன்? என்றே கேட்கத் தோன்றுகிறது.

ஒரு பகுத்தறிவு இயக் கத்தை உருவாக்கியதோடு அல்லாமல், நூல் வெளி யீட்டுக் கழகம் என்ற அமைப்பையும் ஏற்படுத்தி நூல்களை வெளியிட்டுக் கருத்துப் பிரச்சாரம் செய்த திலும் தந்தை பெரியார்தான் முன்னோடி!

இன்று அது மேலும் வளர்ந்து நூற்றுக்கணக் கான வெளியீடுகள் வந்து கொண்டே இருக்கின்றன.

பெரியார் நகர்வுப் புத்தகச் சந்தை தமிழ்நாடு முழுவதும் சுற்றிச் சுற்றி வந்து அறிவுப் பசியைத் தூண்டி விருந்தும் படைக்கிறது.

வணிக நோக்கில் அல்ல- கருத்துப் பிரச்சாரமே அதன் இலக்கு. இன்றுகூட பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்தின் நூல்கள் அளவுக்கு வேறு யாராலும் மலிவு விலையில் நூல்கள் விற்பனை செய்யப்படுவ தில்லை. காரணம் கருத்துப் பிரச்சார லாபமே அதன் குறிக்கோள்!

குடந்தை ஆர்.சி. வெங்கட்ராமன் எனும் இயக்க ஆர்வலர் தந்தை பெரியார் அவர்களிடத்தில் குடிஅரசு இதழுக்கு ஒரு லட்சம் சந்தா சேரும் வரை ராமாயண ஆராய்ச்சி போன்ற கட்டுரை களை நிறுத்தி வைப்பது நல்லது என்று ஆலோசனை சொன்ன நேரத்தில் நான் வருமானத்தை முன்னிட்டு பத்திரிகை நடத்தவில்லை. ஒரே ஒரு சந்தாதாரர் மட்டும் இருந்தாலும், நான் என் கொள்கையைத் தெரிவித்தே தீருவேன். இதுவரை ஆயிரக் கணக்கான ஆண்டுகள் நம் மக்கள் அறியாமையில் மூழ்கி இருந்தது போதாதா? என்று பளிச் சென்று பதில் சொன் னாரே! (விடுதலை 17.5.1959).
உலகப் புத்தக நாளில் இந்தச் சிந்தனை முக்கியம் அல்லவா!

- மயிலாடன் 23-4-2013

தமிழ் ஓவியா said...


புத்தகச் சிந்தனை
int

உலகில் நொடி ஒன்றுக்கு 16121 நூல்கள் வாங்கப்படுகின்றன.

இந்திய மொழிகளுள் முதன் முதலாக அச்சுப் புத்தகம் வெளியிடப்பட்டது தமிழில்தான். நூல்: தம்பிரான் வணக்கம்

தமிழ் ஓவியா said...


அழியாப் புகழ்


மனிதன் தோன்றியது மற்றவ னுக்கு உபகாரம் செய்ய என்று எண்ணியே செயலாற்ற வேண்டும். அப்படி நடப்பவன்தான் தனக்கு அழியாப் புகழினைச் சம்பாதித்துக் கொள்பவன் ஆவான்.
(விடுதலை, 13.8.1961)

தமிழ் ஓவியா said...


காரணம்


வடநாட்டு மக்களையும், தென்னாட்டு மக்களையும், அவர்களின் திறமை, அபிலாஷைகளையும் புரிந்துகொள்ள முடியாதவாறு பார்ப்பனர்கள் சூழ்ச்சி செய்து கொண்டே வந்திருக்கிறார்கள். பத்திரிகைகள் என்ற ஒரே ஆயுதம் அவர்களிடம் சிக்கிவிட்டிருப்பதே அதற்குக் காரணம்.
(விடுதலை, 28.8.1963)

தமிழ் ஓவியா said...


மதுரைக் கூத்து!


மதுரையில் நேற்று காலை 8.41 மணிக்கு சுந்தரேசுவரருக்கும், மீனாட்சிக்கும் கோலாகலமாக விவாஹ சுப முகூர்த்தம் - அதாவது திருக் கல்யாணம் நடந்ததாம். இப்படி ஒவ்வொரு ஆண்டும் இவர்களுக்குக் கல்யாணம் நடக்கிறது. இலட்சக் கணக்கான பக்தர்கள் அப்படியே வெள்ளமாய்த் திரண்டு வந்து சேவிக்கிறார்களாம்.

அப்படி சேவிக்கிற பக்தர்களில் ஒரே ஒருவராவது சிந்திக்கவேண்டாமா?

போன வருசம் இதே நாளில்தானே இதே இருவருக்கும் கல்யாணம் நடந்தது. இப்பொழுது மறுபடியும் கல்யாணம் என்றால், போன வருடம் செய்துகொண்ட கல்யாணம் என்னாச்சு என்று யோசிக்கவேண்டாமா?

பக்தர்களாகிய நாம் ஒவ்வொரு ஆண்டும் கல்யாணம் செய்துகொண்டா இருக்கிறோம்? இது என்ன கூத்தாயிருக்குது? போன வருசம் கல்யாணம் கட்டிக்கொண்ட மீனாட்சி வேறு - இந்த மீனாட்சி வேறா? என்றெல்லாம் கொஞ்சம் அசைப்போட வேண்டாமா?

மற்றொன்றையும் அவர்கள் நினைத்துப் பார்க்க வேண்டியது. நன்றாகப் பாருங்கள். பக்தர்கள் நம்பும் அந்த மீனாட்சிக்கு சுந்தரேச ஆண் கடவுளா, மீனாட்சியாகிய பார்வதியின் கழுத்தில் தாலி கட்டுகிறார்? இல்லையே! பார்ப்பான்தானே மீனாட்சியின் கழுத்தில் தாலி கட்டுகிறான்.

எந்த ஒரு பக்தருக்கும் ஆத்திரம் பொத்துக் கொண்டு கிளம்பவில்லையே! அகிலாண்டேசுவரியின் கழுத்தில் இந்த அற்பப் பார்ப்பன அர்ச்சகனா தாலி கட்டுவது? என்ற கோபம் கிழித்துக்கொண்டு கிளம்ப வேண்டாமா? வைரத்தாலி கட்டியதால் ரோஷம் வரவில்லையா? பக்தி வந்தால் புத்தி போய்விடும் என்று தந்தை பெரியார் சொன்னது சரியாக அல்லவா போய்விட்டது!

தந்தை பெரியார்தான் நாக்கைப் பிடுங்கிக் கொள்ளும்படிக் கேட்டார். போன வருஷம் கல்யாணம் பண்ணியதை எவன் அடித்துக்கொண்டு போனான்? என்று கேட்டாரே, அப்பொழுதுகூடப் பக்தர்களுக்குப் புத்திவரவில்லையே, வெட்கக்கேடு!

இன்னொரு படுதமாஷ். நாளை அழகர் ஆற்றில் இறங்குகிறாராம். எதற்கு? தங்கை மீனாட்சியின் திருக்கல்யாணத்தைக் கண்குளிரக் காண்பதற்கு; நேற்று காலையிலேயே கல்யாணம் ஆகிவிட்டது. நாளை தான் அழகர் ஆற்றில் இறங்குகிறாராம். ஞானக் கண்ணால் தங்கையின் கல்யாணம் நடந்ததையும் அறிந்திருக்கவேண்டாமா? பாதி வழியில் தெரிந்து கோபித்துக்கொண்டு திரும்பு கிறாராம் அழகர்! இன்னொரு கேள்வியும் நியாயமாக எழவேண்டுமே!

போன வருஷம்தான் தாமதமாக வந்தார்... இருந்துவிட்டுப் போகட்டும்; இந்த ஆண்டாவது குறிப்பிட்ட நேரத்துக்குத் தங்கையின் திருக்கல் யாணத்தைக் காண விரைந்து வந்திருக்க வேண்டாமா? மனிதன் ஒருவன் தவறு செய்தால் இந்தக் கேள்வியைத்தானே கேட்பார்கள்.

ஆனால், கடவுள் செய்த காரியமாயிற்றே! அதனால்தான் பெரியவர்கள் செய்தால் பெருமாள் செய்தது மாதிரி என்ற பழமொழியும் பிறந்ததோ!

சரி, அழகருக்குக் கோபம் வந்ததே - திரும்பி எங்கு சென்றார்? தான் குடியிருக்கும் அழகர் மலைக்கா சென்றார்?

அதுதான் இல்லை, வண்டியூருக்குத் திரும்பினா ராம்; அங்கே யார் இருக்கிறார்? துலுக்கநாச்சியார் என்ற அழகரின் வைப்பாட்டி வீட்டுக்குச் செல்லுகிறாராம்.
என்ன வாந்தி வருகிறதா? நாம் எழுதுவது கடவுள் கதை - ஞாபகம் இருக்கட்டும்!

இந்து முன்னணிகாரர்கள், அழகர், துலுக்க நாச்சியார் வீட்டுக்குச் செல்லுவதுபற்றி மூச்சு விடுவதில்லையே - ஏன்? நியாயமாக அவர்கள் மறியலில் ஈடுபடவேண்டாமா?

கடவுள் என்றால் உயர்ந்தவர்; அனைத்துயிரையும் படைத்தவர் - அனைவருக்கும் தந்தை போன்றவர் என்று சொல்லிக்கொண்டு இவ்வளவு ஒழுக்கக் கேட்டையும் செய்கிறார் என்றால், இதனை ஒட்டுமொத்தமாக நிராகரிக்கவேண்டாமா? இத் தகைய ஒழுக்கக்கேடான கோவில் விழாக்களைத் தடை செய்யவேண்டும் என்று பக்தர்கள் அரசுக்குக் கோரிக்கை வைக்கவேண்டாமா?

கடவுளைக் கற்பித்தவன் முட்டாள் என்றும், பரப்பியவன் அயோக்கியன் என்றும், வணங்கு கிறவன் காட்டுமிராண்டி என்றும் தந்தை பெரியார் சொன்னது தவறா? இப்பொழுது சொல்லுங்கள்! சொல்லுங்கள்!!