Search This Blog

26.11.11

ஜாதியின் வேரறுக்கச் சட்டநகல் எரிப்பு - பெரியாரின் அறப்போர் -2


ஜாதியின் வேரறுக்கச் சட்டநகல் எரிப்பு (2) அய்யாவின் அறப்போர் வரலாறு (26-11-1957)

ஜாதி ஒழியவேண்டியது நியாயந்தான் என்று தெரிந்தாலும் வெளியே வருவ தில்லை. சட்டசபைக்குப் போக இடைஞ்சல் வந்துவிடுமோ என்று பயப்படுகிறான். அதனாலேயே என்னவோ 3000 ஆண்டுகளாக இருக்கும் இழிவு இன்னும் கொஞ்ச நாள்தான் இருந்துவிட்டுப் போகட்டுமே என்கிறான்! ஆனால் ஜாதி ஒழியவேண்டும் என்பதை எதிர்ப்பதற்கு ஆள் கிடையாது. ஏன்? அது செல் வாக்குப் பெற்றுவிட்டது. அது ஒழியக் கூடாது என்று சொன்னாலும் சட்ட சபைக்கும் போகமுடியாத நிலை வந்துவிட்டது என்ற காரணத்தைக் கண்டறிந்து போராட்ட அறிவிப்பைச் செய்தார். இதனை 14-10-1957 அன்று சென்னை வண்ணாரப்பேட்டையில் பேசு கையில் தெளிவுபடுத்தினார். வண்ணாரப் பேட்டை சொற்பொழிவின் முடிவில் அய்யா நெடுங்காலமாக இருந்து வரும் மானக்கேடு போகவேண்டும். உன் அப்பன், பாட்டன் சூத்திரன். நீயும் சூத்திரன். ஆனால் உன் குழந்தைகள் சூத்திரர்களாக ஆகக்கூடாது. எதையும் இரகசியமாகச் செய்யமாட்டேன். கையெப்பம் வாங்குவேன். மளமளவென்று போட்டுத் தரவேண்டும். முதலில் அரசமைப்புச் சட்டத்தைக் கொளுத்துவேன். அதுவும் எப்படிக் கொளுத்துவேன் என்றால் சும்மா கொளுத்தமாட்டேன். முதலில் இராட்டினத்தை உடைத்துப் போட்டு, பெட்ரோலோ மண்ணெண் ணையோ ஊற்றிக் கொளுத்துவேன். அந்த நெருப்பில் இந்த அரசமைப்புச் சட்டத்தையும் போட்டு வேகவைப்பேன்! ஆகவே தோழர்களே! நீங்கள் நான் சொல்வதைக் கேட்டு உங்களுக்குச் சரியென்று பட்டால் ஆதரவு தர வேண்டும் என்று ஆதரவுக் கரம் நீட்டச் சொன்னார்.

ஆறுமாதங்களாகச் சென்னையில் நடைபெற்ற ஜாதி ஒழிப்புக் கிளர்ச்சியில் 700 பேர் வரை, 1957 இல் சிறை சென்றனர். ஆயிரம் பேருக்குப் பிறகு வேறு வழிகளைக் கையாளுவோம் என்று முன்னரே கூறியிருந்தார். ஆனால் அரசு அந்த அளவிற்குப் பின்னும் கவனிக் கவோ, ஓர் அறிக்கையும் தரவோ இல்லை.

ஜாதிக்குப் பாதுகாப்பு அரசமைப்புச் சட்டத்தில் கொடுக்கப்பட்டிருப்பதையும், ஜாதியை ஒழிக்கச் சட்டத்தில் இடமில்லை என்பதையும் மக்களுக்குத் தம்முடைய கருத்துகளைத் தெரிவிப்பதோடு, அரசின் கவனத்தையும் ஈர்க்க வேண்டியவர்களாக இருப்பதை உணர்ந்தால், ஜாதியை நிலைக்க வைக்க, ஜாதியைக் காப்பாற்றிக் கொள்ள அரசு பாதுகாப்பு அளிக்கிறது எனத் தெளிவாகப் புரிந்து கொண்டால், இன்னமும் கைகட்டிக் கொண்டு சும்மாயிருந்தால் ஜாதித் தீயை அணைக்க முடியாது என்பது தெளிவாகியது.

மக்களைப் பொறுத்தமட்டில் ஜாதியினுடைய இழிவை உணர்வதில்லை என்பதோடு ஏதோ பகவான் செயல், பகவானால் அமைக்கப்பட்டுள்ளது என்று எண்ணிக் கொண்டனர். எப்போது சமயம், கடவுள் ஆகியவற்றில் நம்பிக்கை கொள்ள ஆரம்பித்தார்களோ, அப்போ திருந்தே இந்த இழிவை உணராத நிலைக்கு வந்துவிட்டார்கள். இவ்வாறு மக்கள் பிறவித் தொழிலாளர்களாகவும், இழி மக்களாகவும், தற்குறிகளாகவும் இருப்பதற்குக் காரணமான ஜாதியை ஒழிக்கப் பெரியார் முயன்றபோது முயற்சி போதிய பயனளிக்காததற்குக் காரணம் சட்டம் முறுக்கேறி நிற்பதுதான் என்பதை 23-10-1957-இல் நெல்லை மாவட்டம் ஏரலில் பேசுகையில் அடுத்துக் கூறி யிருக்கக் காண்கிறோம்.

திருச்சியில் கூடிய திராவிடர் கழக மத்திய நிருவாகக் குழுக் கூட்டத்தில் அரசியல் சட்டத்தை எரிப்பது எனும் பிரச்சினை வந்தபோது, பெரும்பான்மை யான உறுப்பினர்கள் இந்தத் தீர்மானம் மத்திய நிருவாகக் குழுவில் மேற் கொள்வதை விட, இதற்காகத் தனி ஒரு மாநாடு கூட்டி அதில் இதை மக்களுக்கு எடுத்துச் சொல்லி மக்கள் ஆதரவு பெற்று, அதன் பின் சிறிது நாள் தவணை கொடுத்து, பிரசாரம் செய்து நடைமுறைப் படுத்தலாம் எனக் கருத்துக் கூறினர். பெரியார் டிசம்பர் 1957இல் வைத்துக் கொள்ளலாம் என்று கூறினார். இந்த நிலையில் பெரியாரின் பிறந்த நாள் விழாவைத் தனிச் சிறப்பாக நடத்தக் கருதி அவருடைய எடைக்கு எடை வெள்ளி வழங்குவது என முடிவு செய்தனர். இவ்விழாவிற்கு எல்லா மாவட்டங்களி லிருந்தும் தமிழ் மக்கள் பெருவாரியாக வருவார்கள் என்று தோன்றியது. எனவே பெரியார் தனி மாநாட்டை எடைக்கு எடை வெள்ளி வழங்கும் விழாவிலேயே வைத்துக் கொண்டால் இரண்டு வித நன்மை - அதாவது செலவும், தொந்தர வும் இருக்காது; அனைவரும் தங்கள் கருத்தை அறிவிக்க ஒரு வாய்ப்பு இருக் கும் என்று கருதி விழாவை யொட்டியே தனி மாநாடு. மிகவும் நெருக்கத்தில் 20.10.1957 இல் பத்து நாட்களில் தொடங் கப்பட்டது. எனவே தஞ்சையைத் தேர்ந் தெடுத்தனர். மாநாடு 3.11.1957 இல் எடைக்கு எடை வெள்ளி நாணயம் வழங் கிய மாநாடு. இம்மாநாடு கண்டுபெரியார் அய்யாவே பூரித்து எழுதிய வார்த்தைக் கோவைகள் இவை.

எதைச் சொல்கிறேனோ எதை எதிர்பார்க்கிறேனோ அதைத் தமிழ்நாடு பூராவும் பகுதி (பாதி) செய்கிறது என்றால் தஞ்சை மாத்திரம் பகுதிக்குக் குறையாமல் செய்யும். திராவிடர் கழகம் ஆரம்பித்து 10,15 ஆண்டுகளில் ஆதரவளித்துப் பல கட்சிகள் நாட்டில் இருந்த போதிலும் திராவிடர் கழகத்தினர் தலை சிறந்த, கட்டுப்பாடான, நாணயமான, எந்த வித சுயநலமில்லாத, வயிற்றுப் பிழைப்புக்காக அல்லாமல் எந்த விதத் தியாகத்திற்கும் முன் வந்து பாடுபடுகிறவர்கள் என்று சொல்லும்படியான நல்ல பெயரைப் புகழைத் தஞ்சை வாங்கிக் கொடுத் துள்ளது.

எனது 40 ஆண்டுப் பொது வாழ்க் கையில் எத்தனை மாநாடுகள் நடந்திருக் கின்றன. தலைமை வகித்திருக்கிறேன். சுயமரியாதை இயக்கக் காலம் முதல் சிறப்பாக முதல் மாநாடு செங்கற்பட்டில் நடந்தது. அதுதான் ரிக்கார்டு (மிகப் பெரிய பதிவுக்குரிய மாநாடு) ஜமீன் தார்கள் 60-65 பேர் வந்திருந்தார்கள். எல்லா சட்டசபை உறுப்பினர்களும் வந்தி ருந்தார்கள். நல்ல கூட்டம். இருந்தாலும் இதில் அரை பங்குக்கும் குறைவான அளவுதான் இருக்கும். அதற்குப் பிறகு பல மாநாடுகள் நடந்திருந்தாலும், இந்த மாநாட்டைத் தொடும்படியான அளவுக்குக் கூட நடந்ததில்லை. இன்று திராவிடர் கழகத் தனி மாநாடு என்பதாகக் கூட்டியுள்ளோம். என் கணக்குத் தவறாக இருந்தாலும் இருக்கலாம். இது சிறப்பான மாநாடு. ஆதரவான மாநாடு.

நான் பெருமையாகச் சொல்ல வில்லை. எங்குக் கூட்டம் குறைவாக இருந்தால் கூட்டம் இல்லை என்று சொல்லுவதுதான் என் வழக்கம். நானும் நண்பர்களும், தொண்டர்களும் மகிழ்ச் சியுடன் பேசிக் கொண்டிருந்தோம். காலை ஊர்வலம் எல்லோரையும் மயக்கிவிட்டது. ஒருவர் நாலு லட்சம் என்கிறார். உள்ள படியே கணக்குப் பார்த்தால் எவ்வளவு இருக்கும் என்று தெரியாது. இந்த மாநாடு மகிழ்ச்சிக்குரியதும் பெருமைப் படத்தக்கது மான மாநாடாகும்.

இவ்வாறெல்லாம் சொன்ன அய்யா, இந்த மாநாட்டின் பலன் வெற்றி என்று எதைக் குறிப்பிட்டார் என்று கூறுவதுதான் சிறப்பாக இருக்கும்.

என்னைக் கேட்டால் நான் சொல்லு கிறேன். திராவிடர் கழகத் தனி மாநாடு என்று சொல்லப்பட்டாலும் உங்கள் தலைவனுக்கு முக்கிய தொண்டர்களுக்கு ஜெயிலுக்குச் செல்ல வழியனுப்பு மாநாடு தான் இந்த மாநாடு. அரசியல் சுற்றுச் சார்பு சூழ்நிலை அப்படித்தான் உள்ளது. கூடிய விரைவில் அரசாங்க விருந்து இருக்கிறது. அது இலேசில் கிடைக்கக் கூடியதல்ல. முன்பெல்லாம் சாதாரணம். ஆனால் அது இப்போது எளிதில் கிடைப் பதாக இல்லை.

இம்மாநாடு தன்னைச் சிறையனுப்பும் மாநாடு என்று பூரிப்பும், உற்சாகமும், மகிழ்ச்சியும் கலந்து கூறிய ஒரே தலைவர் பெரியாராகத்தான் இருப்பார். அதே நேரத்தில் என்ன இலட்சியத்திற்காக இந்தப் போராட்டம் என்பதையும் வலி யுறுத்துகிறார்.

-------------------------------தொடரும் .......... முனைவர் பேராசிரியர் ந.க.மங்களமுருகேசன் அவர்கள் 26-11-2011 “விடுதலை” யில் எழுதிய கட்டுரை

2 comments:

தமிழ் ஓவியா said...

நவம்பர் 26

தந்தை பெரியார் போராட்டம் நடத்துவதற்காகத் தேர்வு செய்யும் நாள்கூட காரண காரியத்துடன் இருக்கும். அந்த வகையில்தான் நவம்பர் 26 (1957) அன்று நடத்தப்பட்ட சட்ட எரிப்புப் போராட்டமாகும்.

1949 நவம்பர் 26 அன்று தான் இந்திய அரசமைப்புச் சட்டம் நிர்ணயம் செய்யப்பட்ட நாள். ஜாதியைப் பாதுகாக்கும் இந்திய அரசமைப்புப் பிரிவினைக் கொளுத்தும் போராட்டத்தை தஞ்சாவூரில் நடைபெற்ற ஜாதி ஒழிப்பு தனி மாநாட்டில் (3.11.1957) அறிவித்தார்.

இந்திய அரசமைப்புச் சட்டத்தில் தீண்டாமை ஒழிக்கப்படுகிறது என்று கூறப்பட்டுள்ளது. அரசமைப்புச் சட்டம் 17ஆவது பிரிவு கூறுவது என்ன?

தீண்டாமை ஒழிக்கப்பட்டுள்ளது; மற்றும் அதனை எந்த வகையில் செயல்படுத்துவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. தீண்டாமையின் விளைவாக எழும் எத்தகைய குறைபாடும் சட்டப்படி தண்டனைக்கு உரியதாகும் என்று கூறப்பட்டுள்ளது.

தீண்டாமை என்பது ஜாதியின் விளைவே, ஜாதியை ஒழிக்காமல் தீண்டாமையை ஒழிப்பதாகக் கூறுவது - வேரை விட்டு விட்டு, வெறும் இலையைக் கிள்ளுவதற்கு ஒப்பாகும். இந்திய அரசமைப்புச் சட்டம் 13 (2), 25(1), 29(1) (2) 368 பிரிவுகள் ஜாதியைப் பாதுகாக்கும் பகுதிகள் என்பதைத் தஞ்சை மாநாட்டில் எடுத்துக்காட்டி இந்தப் பகுதிகள் நீக்கப்படாவிட்டால் அந்தப் பகுதிகள் பகிரங்கமாகவே கொளுத்தப்படும் என்று அறிவித்தார் அய்யா.

இதற்காக மத்திய அரசுக்கு 22 நாள்கள் அவகாசமும் கொடுக்கப்பட்டது. பல லட்சம் மக்கள் கொட்டும் மழையில் கூடிய ஒருமாநாட்டில், தமிழ் நாட்டின் மிகப் பெரும் தலைவர் கொடுத்த அழைப்புக் குறித்து கவலையுடன் பரிசீலிக்க வேண்டியது ஒரு ஜனநாயக அரசின் அடிப்படைக் கடமையல்லவா?

பிரதமர் நேரு உலக வரலாறு அறிந்தவர் என்றும் ஜனநாயகத்தில் நம்பிக்கை உள்ளவர் என்றும் பாராட்டப்பட்டவராயிற்றே! குதிரை கீழே தள்ளியதோடு மட்டுமல்லாமல் குழியைப் பறித்த கதையாக அவர் நடந்து கொண்டது வருத்தத்திற்குரியது.

சட்டத்தை எரிப்பவர்கள் முட்டாள்கள் (Nonsense) என்றும், சட்டத்தைப் பிடிக்காதவர்கள் மூட்டை முடிச்சுகளுடன் நாட்டை விட்டு வெளியேறட்டும் என்றும் கூறி பிரச்சினையின் வெப்பத்தை அதிகரிக் கும்படிச் செய்து, வாங்கிக் கட்டிக் கொண்டார்.

சட்டத்தைக் கொளுத்தினால் என்ன தண்டனை என்று சட்டத்திலேயே இடமில்லாத நிலையில் சென்னை மாநில அரசால் அவசர அவசரமாக தேசிய மரியாதை அவமதிப்புத் தடுப்புச் சட்டம் (Prevention of Insult To National Act, 1957) ஒன்று இயற்றப்பட்டது. இதன்படி மூன்று ஆண்டுகள் வரை கடும் தண்டனை அளிக்கப்படலாம்.

அதற்கா தந்தை பெரியார் அஞ்சுவார்? கருஞ்சட்டைத் தொண்டர்கள்தான் பின் வாங்குவார்களா?

10 ஆயிரம் பேர் எரித்தனர். மூவாயிரம் பேர் சிறைக்குள் தள்ளப்பட்டனர். 20-க்கும் மேற்பட்ட தொண்டர்கள் இன்னுயிரைப் பலி கொடுத்தனர் என்றாலும் இந்நாள் வரை ஜாதியைப் பாதுகாக்கும் அரசமைப்புச் சட்டத்தின் பிரிவுகள் நீக்கபடவில்லை.

1973 டிசம்பர் 8,9 ஆகிய நாள்களில் சென்னை பெரியார் திடலில் தந்தை பெரியார் அவர்களால் கூட்டப் பெற்ற தமிழர் சமுதாய இழிவு ஒழிப்பு மாநாட்டிலும் முக்கியமான ஒரு தீர்மானம் நிறை வேற்றப்பட்டது.

இந்திய அரசமைப்புச் சட்டத்தின் 17ஆவது பிரிவின்படி தீண்டாமை (ரவேடிரஉயடைவைல) ஒழிக்கப்படு கிறது என்பதற்குப் பதிலாக ஜாதி (உயளவந) ஒழிக்கப் படுகிறது என்று திருத்த வேண்டும் என்று அம் மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றவும்பட்டது.

ஒரு சுதந்திர நாட்டில் ஜாதி இருக்கலாமா? ஜாதி இருக்கும் நாட்டில் சுதந்திரமும், சுயமரியாதையும் இருக்குமா என்று தந்தை பெரியார் எழுப்பிய பகுத்தறிவு மிக்க மனிதாபிமான வினாவுக்கு இதுவரை விடை கிடைக்கப் பெறவில்லையே!

இதற்குப் பெயர் சுதந்திரமாம். அதற்காக ஆட வேண்டுமாம் - பாட வேண்டுமாம் - மகா வெட்கக் கேடு!

-------------------"விடுதலை” தலையங்கம் 26-11-2011

தமிழ் ஓவியா said...

இரட்டை நாக்குப் பார்ப்பனர்!


கேள்வி: குஜராத் கலவர வழக்கில் 31 பேருக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது பற்றி. . .

பதில்: இதில் மதச்சார்பின்மை வாதிகளுக்குத் திருப்தி இருக்காது. நீதி நிலை நாட்டப்பட்டிருக்கிறது என்பது அவர்களுக்கு ஒரு பொருட்டல்ல. நரேந்திர மோடிதான் கொலைகாரர் என்ற தீர்ப்பு, என்று வருகிறதோ, அன்றுதான் மதச்சார்பின்மை மலரும். -துக்ளக் 30-11-2011

கேள்வி என்ன? அதற்கு திருவாளர் சோ அளிக்கும் பதில் என்ன? ஒன்றுக்கு ஒன்று தொடர்பு இருக்கிறதா? இப்படிப்பட்ட கிணத்து வாளிதான் அவாள் மொழியில் அறிவாளியாம்!

கோத்ரா ரயில் பெட்டி எரிப்பைத் தொடர்ந்து அம் மாநிலத்தில் சிறுபான்மை இன முசுலிம்களுக்கு எதிராக வன்முறையைத் தூண்டிவிட்டதில் அம்மாநில முதல் அமைச்சர் நரேந்திரமோடிக்கு முக்கிய பங்கு உண்டு என்று அம்மாநில காவல்துறை அதிகாரிகள் - பி.ஜே.பி. சட்டமன்ற உறுப்பினர்களே (டெகல்கா பதிவு செய்த சாட்சியம்) ஒப்புக் கொண்டுள்ளனர்.

இந்த நிலையில் சோவின் உள்மனதில் குமைந்து கொண்டிருக்கும் அந்தக் காரியம் நடைபெற்றால் ஆச்சரியப் படுவதற்கில்லை.

இப்பொழுது 31 பேர் ஆயுள் தண்டனை அளிக்கப் பட்டுள்ளார்களே - மோடி ஆட்சியின் நேர்மையான செயல்பாட்டால் தண்டிக்கப்பட்டவர்களா? இல்லையே! உச்சநீதிமன்றம் மறுவிசாரணை நடத்தச் சொல்லி, புதிய புலனாய்வுக்கான அதிகாரிகளையும் உச்ச நீதிமன்றம் நியமனம் செய்து ஆணை பிறப்பித்த பின்னர் தானே இந்தத் தண்டனை கிடைத்திருக்கிறது. குற்றம் நிகழ்வதற்கு முதல் அமைச்சர் மோடிக்குப் பொறுப்பு இல்லையா?

உச்சநீதிமன்றம்தானே நீரோ மன்னன் என்று மோடிக்கு மகுடம் சூட்டியது!

ஜெயேந்திர சரஸ்வதிக்கு அநீதி இழைக்கப் பட்டுள்ளது என்று எழுதும் பேர்வழியாயிற்றே திருவாளர் சோ; எப்படிதான் எழுதமாட்டார்?
---”விடுதலை” 26-11-2011