Search This Blog

2.11.11

பகுத்தறிவைச் செலவு செய்யக் கூடாதா? பெரியார்

(தீபாவளி கொண்டாடியிருப்பீர்கள் அதனால் ஏற்பட்ட விளைவுகள் என்ன? என்பதை பெரியார் விளக்கியிருக்கிறார்கள். இனியாவது இது போன்ற மூடப்பண்டிகைகளை கொண்டாடாமல் இருக்கவேண்டும் என்பதற்காக இக்கட்டுரையை பதிவு செய்கிறோம். படியுங்கள்! தெளிவடையுங்கள். ----தமிழ் ஓவியா)


இவ்வருடத்திய தீபாவளிப் பண்டிகை சமீபத்தில் வரப்போகின்றது. திராவிட மக்களே, என்ன செய்யப் போகின்றீர்கள்? அப்பண்டிகைக்கும் எங்களுக்கும் யாதொரு சம்பந்தமும் இல்லை என்று சொல்லிவிடப் போகின்றீர்களா? அல்லது அப்பண்டிகையைக் கொண்டாடப் போகின்றீர்களா? என்பது தான், நீங்கள் என்ன செய்யப் போகின்றீர்கள்? என்று கேட்பதன் தத்துவமாகும். நண்பர்களே, சிறிதும் யோசனை இன்றி யோக்கியப் பொறுப்பின்றி, உண்மைத் தத்துவமின்றி, சுயமரியாதை உணர்ச்சியின்றி, சுயமரியாதை இயக்கத்தின் மீது வெறுப்புக் கொள்ளுகின்றார்களேயல்லாமல், மற்றும் சுயநல பார்ப்பனர் வார்த்தைகளையும், மூடப் பண்டிதர்களின் கூக்குரலையும், புராணப் புஸ்தக வியாபாரிகளின் விஷமப் பிரசாரத்தையும் கண்டு மயங்கி அறிவிழந்து ஓலமிடுகின்றீர்களேயல்லாமல் மேலும் உங்கள் வீடுகளிலும், அண்டை அயல்களிலும் உள்ள கிழங்களுடையவும் அழுக்கு மூட்டைகளுடையவும் ஜீவனற்ற தன்மையான பழைய வழக்கம், பெரியோர் காலம் முதல் நடந்து வரும் பழக்கம் என்கின்றதான வியாதிக்கு இடம் கொடுத்துக் கொண்டு, கட்டிப் போடப்பட்ட கைதிகளைப் போல் துடிக்கின்றீர்களேயல் லாமல், உங்கள் சொந்தப் பகுத்தறிவைச் சிறிது கூட செலவழிக்க சம்மதிக்க முடியாத உலுத்தர்களாய் இருக்கின்றீர்கள்.

பணத்தையும், மானத்தையும் எவ்வளவு வேண்டுமானாலும் செலவழிக்கத் தயாராயிருக்கிறீர்கள். சுதந்திரத்தையும், சமத்துவத்தையும் எவ்வளவு வேண் டுமானாலும் விட்டுக் கொடுக்கத் தயாராயிருக்கின்றீர்கள். ஆனால், உங்கள் பகுத்தறிவைச் சிறிது கூட செலவழிக்கத் தயங்குகிறீர்கள். அது விஷயத்தில் மாத்திரம் ஏன் வெகு சிக்கனம் காட்டுகின்றீர்கள்? இந்நிலையிலிருந்தால், என்றுதான் நாம் மனிதர்களாவது?

அன்பர்களே, சமீபத்தில் தீபாவளிப் பண்டிகை வரப் போகின்றது. இதைப் பார்ப்பனரல்லாத மக்களில் பெரும் பாலோர் கொண்டாடப் போகின்றீர்கள். பெரிதும் எப்படிக் கொண்டாடப் போகின்றீர்கள் என்றால், பொதுவாக எல்லோரும் அதாவது துணி தேவை இருக்கின்றவர்களும், தேவை இல்லாதவர்களும், பண்டிகையை உத்தேசித்துப் புதுத் துணி வாங்குவது என்பது ஒன்று.

மக்கள், மருமக்களை மரியாதை செய்வதற்கென்று தேவைக்கும், யோக்கியதைக்கும் மேலானதாகவும் சாதாரண மாக உபயோகப்படுத்துவதற்கும் ஏற்றதல்லாதுவுமான துணிகள் வாங்குவது என்பது இரண்டு.

அர்த்தமற்றதும், பயனற்றதுமான வெடி மருந்து சம்பந்தப் பட்ட பட்டாசு வகைகள்வாங்கிக் கொளுத்துவது மூன்று.

பலர் இனாம் என்றும், பிச்சையென்றும் வீடு வீடாய் கூட்டங் கூட்டமாகச் சென்று பல்லைக் காட்டிக் கெஞ்சிப் பணம் வாங்கி அதைப் பெரும்பாலும் வீணில் செலவழித்து நாடு சிரிக்க நடந்து கொள்வது நான்கு.

செலவழிப்பது அய்ந்து.

அன்று ஒவ்வொரு வீடுகளிலும் அபரிமிதமான பதார்த்த வகைகள் தேவைக்கு மிகுதியாகச் செய்து அவற்றில் பெரும் பாகம் கண்டவர்களுக்குக் கொடுப்பதும், வீணாக்குவதும் ஆறு.


இந்த செலவுகளுக்காகக் கடன் படுவது ஏழு.

மற்றும் இதுபோன்ற பல விஷயங்கள் செய்வதன் மூலம் பணம் செலவாகின்றது என்பதும், அதற்காக கடன்பட வேண்டி யிருக்கின்றது, என்பதுமான விஷயங்களொரு புறமிருந்தாலும் மற்றும் இவற்றுக்கெல்லாம் வேறு ஏதாவது தத்துவார்த்தமோ, சயன்ஸ் பொருத்தமோ சொல்லுவதானாலும், தீபாவளிப் பண்டிகை என்றால் என்ன? அது எதற்காக கொண்டாடப்படுகிறது என்கின்றதான விஷயங்களுக்குச் சிறிது கூட எந்த விதத்திலும் சமாதானம் சொல்ல முடியாது என்றே சொல்லுவோம். ஏனெனில், அது எப்படிப் பார்த்தாலும் பார்ப்பனிய புராணக் கதையை அஸ்திவாரமாகக் கொண்டதாகத் தான் முடியுமே ஒழிய, மற்றபடி எந்த விதத்திலும் உண்மைக்கோ, பகுத்தறிவிற்கோ, அனுபவத்திற்கோ சிறிதும் ஒத்ததாக இருக்க முடியவே முடியாது. பாகவதம், இராமாயணம், பாரதம் முதலிய புராண இதிகாசங்கள் பொய் என்பதாக சைவர்கள் எல்லோரும் ஒப்புக் கொண்டாகி விட்டது. கந்த புராணம், பெரிய புராணம், திருவிளையாடற் புராணம் முதலியவை பொய் என்று வைணவர்கள் எல்லாரும் ஒப்புக் கொண்டாகி விட்டது. இவ்விரு கூட்டத்திலும் பகுத்தறிவுள்ள மக்கள் பொதுவாக இவையெல்லாவற்றையும் பொய்யென்று ஒப்புக் கொண்டாய் விட்டது. அப்படி இருக்க ஏதோ புராணங் களில் இருக்கின்ற கதைகளைச் சேர்ந்த பதினாயிரக்கணக் கான சம்பவங்களில் ஒன்றாகிய தீபாவளிப் பண்டிகைக் காக மாத்திரம் மக்கள் இந்த நாட்டில் இந்தக் காலத்தில் இவ்வளவு பாராட்டுதலும், செலவு செய்தலும், கொண் டாடுதலும் செய்வதென்றால், அதை என்ன வென்று சொல்ல வேண்டும் என்பதை வாசகர்கள்தான் முடிவு செய்ய வேண்டும்.

தீபாவளிப் பண்டிகையின் தத்துவத்தில் வரும் பாத்திரங்கள் மூன்று. அதாவது நரகாசூரன், கிருஷ்ணன், அவனது இரண்டாவது பெண் சாதியாகிய சத்தியபாமை ஆகியவர்களாகும். எந்த மனிதனாவது கடுகு அளவு மூளையிருந்தாலும் இந்த மூன்று பேரும் உண்மையாய் இருந்தவர்கள் என்றாவது, அல்லது இவர்கள் சம்பந்தமான தீபாவளி நடவடிக்கைகள் நடந்தவை என்றாவது, அவற்றிற்கும் நமக்கும் ஏதாவது சம்பந்தம் உண்டு என்றாவது, அதற்காக நாம் இம்மாதிரியான ஒரு பண்டிகை தீபாவளி என்று கொண்டாட வேண்டுமென்றாவது ஒப்புக் கொள்ள முடியுமா வென்று கேட்கின்றோம்.

திராவிடர்கள் தங்களை ஒரு பெரிய சமூகக்காரர் களென்றும், கலைகளிலும், ஞானங்களிலும், நாகரிகங் களிலும் தேர்ச்சி பெற்றவர்கள் என்றும், தட்டிப் பேச ஆளில்லா இடங்களில் சண்டப் பிரசண்டமாய்ப் பேசி விட்டு எவனோ ஒரு மூடனோ அல்லது ஒரு அயோக் கியனோ காளை மாடு கண்ணு (கன்றுக் குட்டி) போட்டி ருக்கின்றது என்றால் பால் கறந்து கொண்டுவா என்று பாத்திரம் எடுத்துக் கொடுக்கும் மடையர்களாகவே இருந்து வருவதைத் தான், படித்த மக்கள் என்பவர்களுக் குள்ளும் பாமர மக்கள் என்பவர் களுக்குள்ளும் பெரும் பாலும் காண்கின்றோமேயொழிய, காளைமாடு எப்படி கன்று போடும் என்று கேட்கின்ற மக்களைக் காண்பது அரிதாகவே இருக்கின்றது.

மற்றும் இம்மாதிரியான எந்த விஷயங்களிலும் கிராமாந்திரங்களில் இருப்பவர்களை விடப் பட்டணங்களில் இருப்பவர்கள் மிகுதியும், மூடத்தனமாகவும் பட்டணங்களில் இருப்பவர்களை விட சென்னை முதலான பிரதான பட்டணங்களில் இருப்பவர்கள் பெரிதும் மூட சிகாமணி களாகவும் இருந்து வருவதையும் பார்க்கின்றோம். உதாரணமாக தீபாவளி, சரஸ்வதி பூசை, தசரா, பிள்ளையார் சதுர்த்தி, பதினெட்டு, அவிட்டம் முதலிய பண்டிகைகளை எல்லாம் கிராமாந்திரங்களைவிட நகரங்களில் அதிகமாகவும், மற்ற நகரங்களைவிட சென்னையில் அதிக மாகவும் கொண்டாடு வதைப் பார்க்கின் றோம். இப்படிக் கொண்டாடும் ஜனங் களில் பெரும்பான்மை யோர் எதற்காக ஏன் கொண்டாடுகிறோம் என்பதே தெரியாதவர்களாகவே இருக்கின்றார்கள்.

சாதாரணமாக மூட பக்தியாலும், குருட்டுப் பழக்கத்தினாலும் கண்மூடி வழக்கங்களைப் பின்பற்றி நடக்கும் மோசமான இடம் தமிழ்நாட்டில் சென்னையைப் போல் வேறு எங்குமே இல்லை என்று சொல்லி விடலாம். ஏனெனில், இன்றைய தினம் சென்னையில் எங்கு போய்ப் பார்த்தாலும் வீட்டுத் திண்ணைகளில் சரீரமில்லாத ஒரு தலை முண்ட உருவத்தை வைத்து அதற்கு நகைகள் போட்டுப் பூசைகள் செய்து வருவதும், வீடுகள் தோறும் இரவு நேரங்களில் பாரத இராமாயணம் காலட்சேபங்களும், பெரிய புராணம், திருவிளையாடல் புராணக் காலட்சேபங்களும், பொது ஸ்தாபனங்கள் தோறும் கதா காலட்சேபங்களும் நடைபெறுவதையும், இவற்றில் தமிழ் படித்த பண்டிதர்கள், ஆங்கிலம் படித்த பட்டதாரிகள், கவுரவப் பட்டம் பெற்ற பெரிய மனிதர்கள் பிரபலப்பட்ட பெரிய உத்தியோகஸ்தர்கள் மற்றும் பிரபுக்கள், டாக்டர்கள், சைன்ஸ் நிபுணர்கள், புரபசர்கள் முதலியவர்கள் பெரும் பங்கெடுத்துக் கொண்டிருப்பதையும் பார்க்கலாம். பார்ப் பனரல்லாதார்களில் இந்தக் கூட்டத்தார் கள் தான் ஆரியர் வேறு தமிழர் வேறு என்பாரும் புராணங்களுக்கும், திராவிடர்களுக்கும் சம்பந்தமில்லை என்பாரும், பார்ப்பனர் சம்பந்தம் கூடாது என்பாரும், பார்ப்பனரல் லாத சமூகத்திற்கு நாங்கள்தான் பிரதிநிதிகள் என்பாரும், மற்றும் திராவிடர்களின் பழைய நாகரிகத் திற்கு மக்களை அழைத்துச் செல்ல வேண்டு மென்பாரும் பெரு வாரியாக இருப்பார்கள். ஆகவே, இம்மாதிரியான விஷயங்களில் படித்தவர்கள், பணக்காரர்கள், உத்தி யோகஸ்தர்கள் என்கின்றவர்கள் போன்ற கூட்டத்தாரிடம் அறிவு ஆராய்ச்சி சம்பந்தமான காரியங்கள் எதிர்பார்ப் பதைவிட, பிரச்சாரம் செய்வதை விட உலக அறிவு உடைய சாதாரண மக்களிடம் எதிர்பார்ப்பதே, பிரச்சாரம் செய்வதே பயன்தரத்தக்கதாகும்.

----------------தந்தைபெரியார் - “விடுதலை” 23.10.1950

0 comments: