Search This Blog

27.11.11

பகுத்தறிவை வளர்க்கப் படிப்பகங்கள் தேவை -பெரியார்

பகுத்தறிவை வளர்க்கப் படிப்பகங்கள் தேவை

உடற்பயிற்சியைப் பற்றிப் பின்னர் தந்தை பெரியார் அவர்கள் பேசியதாவது:-

இன்றைய தினம் நடை பெற்ற பாரம் தூக்குதல் மிகவும் பிரமாதமாக நடந்தது. இதை எல்லாம் சாதாரணமாக எல்லோரும் காண்பிக்க முடியாது. இதற்கு ரொம்பவும் பழக்கம் இருந் தால்தான் ஒரு சிலருக்கு முடியும். 120 பவுண்டு முதல் 246 பவுண்டு வரை தூக்கிக் காண்பித்தது மிகவும் ஆச்சரியமாக இருந்தது. ஆனால் இதைக் கண்டு பகுத்தறிவு வாதிகள்தான் மிகவும் ஆச்சரியப்பட முடியும். ஆனால், புராண, இதிகாசங்களிலே, வைதீகத்திலே முழுகி இருக்கிற மக்களுக்கு இது ஆச்சரியமாகத் தோன்றாது. காரணமென்னவென்றால் அனுமான் சஞ்சீவி மலையைத் தூக்கியது அவர்களுக்குத் தெரியும். இன்னும் எத்தனையோ வகையான செய்கைகளை யெல்லாம் அவர்கள் புராணங்களில் கண்டிருப்பார்கள். அவற்றை அப்படியே நம்பக் கூடியவர்களுமாவார்கள். ஆனால், நாம் அதையெல்லாம் நம் பகுத்தறிவுக்குத் தப்பெனப்படுவதால் நம்பாமல் இருக்கிறோம். ஆகவே, இது நம் போன்றவர்களுக்கு மிகவும் ஆச்சரிய மானதுதான். 246 பவுண்டு என்றால் ஏறக்குறைய 100 கிலோவுக்கு குறையாத பாரம். அதாவது இரண்டு மனிதர்களைப் பொறுத்த பாரம். ஆகவே, இந்த பெரும் பாரத்தை ஒரு மனிதன் சர்வ சாதாரணமாகத் தூக்கிக் காண்பிப்பதென்றால் அது மிகவும் ஆச்சரியம்தான். இந்த பிரமாண்டமான பளுவைத் தூக்குவதற்கு இசையும்படியாக தங்களது உடலை வலுப் படுத்திப் பழக்கி வைத்திருக்கிறார்கள்.

மேலும், நமது நாட்டிலே இம்மாதிரியான காரியங்களிலே ஈடுபடுகிற மக்கள் மிகவும் குறைவு. அப்படியே ஒரு சிலர் ஈடுபட்டிருந்தாலும்கூட மற்றவர்கள் ஆதரவு கொடுப்பது கிடையாது. ஆனால், மேல்நாடு களிலே இந்த முறையை மிகவும் கூடுதலாகக் கையாண்டு வருகிறார்கள். இதை எவ்வளவோ சாதனையாகப் பழகி நான் மேல் நாடு சென்றிருந்தபோது ஒரு கூட்டத்திலே பலவிதமான வேடிக்கை செய்து காட்டினார்கள். அவற்றில் எல்லாம் இந்த மாதிரியான வேடிக்கைதான் முதலிடம் பெற்றது. தனது உடலை பலவிதமாக வளையும்படியாக பழக்கி வைத்திருக்கிறார்கள். உடலின் எந்த அவயவத்தையும் தன்னால் அசைத்துக் காட்ட முடியும். அந்த மாதிரியான வேலைகளில் அவர்கள் ரொம்பவும் சிரத்தை எடுத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், நம் நாட்டிலே அதிகமாக அதைப் பற்றிய கவலை கிடையாது.

ஆகவே, இந்த மாதிரியான வேலைகளைச் செய்வதனால் அவர்களது உடல் மிகவும் வலிவு பெறுகிறது. அதனால் அவர்களுக்கு ஒரு சிறு நோய் கூட வருவது கிடையாது. மற்றும் மனோதிடமும் ஏற்பட ஏதுவாகும். மக் களுக்கு மனவலிவு மிகவும் அவசியம். இந்த மாதிரியான காரியங்களினாலும், பழக்க வழக்கங்களினாலுமே மனிதனுக்கு மனோ திடம் ஏற்பட ஏதுவாகிறது. மனவலிவு குறைவாக உள்ள மனிதர்கள் யாரும் ஒழுங்காக நடந்து கொள்வது மிகவும் கஷ்டமான காரியம். ஆனால், மனவலிவு எவனொருவனுக்கு இருக்கிறதோ, அவன் ஒழுக்கத்துடன் நடந்து கொள்கிறான். ஆகவே, ஆங்கிலத்திலே கூட சொல்லு வார்கள் வீக்னஸ் என்று. அதாவது, உடல் பலம் இன்றி இருக்கிற ஒருவனைப் பார்த்தும் வீக்னஸ் என்றுதான் கூறுவார்கள். அதே மாதிரி கெட்ட செய்கைகளைக் கைக்கொள்ளு கிறவனைப் பார்த்தும் வீக்னஸ் உள்ளவன் என்று தான் கூறுவார்கள். ஒருவன் திருடினால் கூட அவனைப் பார்த்து வீக்னஸ் உள்ளவன், இல்லாமலிருந்தால் அவன் அப்படி செய்திருக்கமாட்டான் என்று தான் கூறுவார்கள்.

ஆகவே, மனிதனுக்கு மனவலிவு எவ்வளவு அவசியமோ, அதைப் போல் உடல் வலிவும் மிகவும் அவசியம்.

இவற்றை எல்லாம் நாம் பழகிக் கொள்கிற முறையிலே இயற்கையாக வந்து சேருகிறதுதான். நினைத்ததை எல்லாம் செய்ய ஆசைப்படுகிறவர்கள், நினைத்ததை எல்லாம் எடுத்துக் கொள்ள ஆசைப்படுகிறவர்கள், சில காரியங்களிலே தவறி விடுகிறவர்கள் பெரும் பணக் காரர்கள் முதல் ஏழைகள் வரை சர்வசாதாரணமாக நடக் கிறது. இதன் காரணமென்ன வென்றால் தங்களுடை யதைச் சரியாகப் பக்குவப்படுத்தி வலிவுபெற வைக்காத தனால்தான் இந்தவிதமான சம்பவங்கள் ஏற்படுகின்றன. நம் நாட்டிலே மக்களிடையே தப்புத்தவறான கதைகளையும், புராணங்களையும் கூறி மக்களின் மனதை வலிவு பெறாமல் செய்து விட்டனர். ஆகவே, இதெல்லாம்தான் பழகி கொள் ளும் பழக்கத்தின்மூலம் ஏற்பட வேண்டியவை. ஆகவே, இந்த மாதிரியான மனோதிடமும், உடல் வலிமையும் உள்ளவர்களை நாம் மிகவும் பாராட்ட வேண்டியதுதான்.

மக்கள் எல்லோரும் படித்திருப்பார்களானால் மிகவும் அறிவு விருத்தி ஏற்பட முடியும். ஆனால், இன்றைய தினம் அரசாங்கத்தாராலே அளிக்கப்படும் கல்வியானது மிகவும் மோசமான முறையிலே தான் இருந்து வருகிறது. ஒரு சில காரியங்களை மக்களிடையே பிரச்சாரம் செய்யவே இன்றைய கல்வி முறை பயன்படுகிறது.

மேல்நாடுகளில் விஞ்ஞானத் துறைகளிலேயும் மற்றும் பூகோள முறையிலேயும் கல்வி விருத்தி அடைந்து கொண்டு வருகிறது. அவர்கள் புதுப்புது இயந்திரங்களையும், புதுப் புது சாதனங்களையும் செய்து காண்பிக்கும் போது நமது நாட்டுக் கல்வி முறை, படித்து மார்க் எடுப்பதற்கே அன்றி அறிவிற்கும் அதற்கும் சம்பந்தமில்லாமல்தான் அமைக்கப் பட்டிருக்கிறது.

நமது மக்களுக்கு அந்த மாதிரியான விஞ்ஞான அறிவு ஒன்றும் இல்லை என்று நான் கூறவில்லை. நமது பெரிய நிபுணர்கள் பொதுவாகக் கூறினால், உலகத்தில் எந்த பாகத்திலும் இருக்கிறார்கள் எனக் கூறலாம். ஆனால், இவர்களுக்கு 100-க்கு அய்ந்து பேருக்குக் கூட பகுத்தறிவு இருக்கிறதாக மட்டும் காண முடியாது. பொதுவான எல்லோருக்கும் தெரியும் முறையிலே கூறுவதாக இருந்தால், கிரகணம் வரும் கதையை எடுத்துக் கொள்வோம்.

விஞ்ஞானத்திலேயும், படிப்பிலேயும் உயர்வு பெற்ற உபாத்தியாயருக்குக் கிரகணம் எப்படி ஏற்படுகிறது என்று நன்றாகத் தெரியும். தனது பூகோள பாட சமயத்திலும் மாணவர் களுக்கும், குளோப்பை வைத்துக் கொண்டு, பூமி, சந்திரன், சூரியன் இவற்றின் சுற்றுதலால் ஏற்படுகிறதுதான் கிரகணம் என்று நன்றாகக் கூறுவார். ஆனால், அதே உபாத்தியாயர் புராணக் கதையை நம்பிக் கொண்டு தனது வீட்டில், கிரகணம் ஏற்படுகிற அன்றைய தினத்தில், உணவுகளில் அறுகம்புல்லைப் போடுவதும், குளித்துக் கொண்டு வருவதும், கர்ப்பப் பெண்களை வெளியே போகாமல் தடை செய்து வீட்டினுள் அடைத்து வைப்பதும் வழக்கமாக இருக்கிறது. காரணம், ராகு, கேது என்ற பாம்புகள் சூரியனையும், சந்திரனையும் கடிப்ப தால்தான் இந்த இரு கிரகணங்களும் ஏற்படுவதாகக் கூறும் கதையை நம்பிக் கொண்டு, அந்த விஷம் தனது உணவுகளையும், மற்ற காரியங்களையும் பாதிக்கக் கூடுமென நினைத்துக் கொண்டு அறுகம்புல்லைப் போடுவதும், குளித்து வருவதுமாக இருக்கின்றனர். ஆகவே, இவர்கள் எவ்வளவு தூரம் அறிவு பெற்றிருந்தும், படித்து இருந்தும், பட்டங்கள் பெற்றிருந்தும் பயன் இல்லை. பகுத்தறிவு என்பது சிறிதுகூட இல்லாத காரணத் தினால்தான் இது போன்ற பழைய கொள்கைகளைக் கூட நம்ப வேண்டியது ஏற்படுகிறது. மேலும் இதற்காகப் பள்ளிக்கூடங்களில் சென்று படிக்கும் மாணவர்களும்கூட தங்களது பகுத்தறிவைப் பயன்படுத்திக் கொள்ள முடியாமல் போய் விடுகிறது.

அதே மாதிரி டாக்டராக இருப்பவர்கள் என்ன என்ன நோய் எப்படி எப்படி வருகிறது என்று நன்றாகத் தெரிந்தும்கூட சில காரியங்களில் தங்களது பகுத்தறிவைப் பயன்படுத்திக் கொள்வது கிடையாது. தங்களது உயர்ந்த படிப்பினாலும் பயனடையாமல் போகிறார்கள். உதாரணமாக, பெண்களுக்கு 30 நாட்களுக்கு ஒரு தடவை வீட்டுக்கு விலக்கு ஏற்படுவது சகஜமாக நடக்கிறது. இது எதனால் ஏற்படுகிறது என்பது எல்லாம் படித்த டாக்டர்களுக்கு நன்றாகத் தெரியும். அப்படி இருந்தும் கூட தன் வீட்டுப் பெண்களுக்கு வீட்டுக்கு விலக்கு ஏற்பட்டால் அவர்களைத் தொடாதே எனவும் வீட்டை விட்டு ஒரு மூலையிலே ஒதுக்கி வைப்பதும் வழக்கமாக இருந்து வருகிறது. அதிலும் அவர்கள் அருகிலே நடந்து வந்தால் எதிரே ஒரு ஆண் மகன் வந்து விட்டால், அவனுக்கு வருகிற கோபம் சொல்லி முடியாது. இதைவிடக் கடின கொடூரமான செய்கை, சங்கராச் சாரியார், மடாதிபதிகள் போன்றவர்களின் நேருக்கு இந்த மாதிரியான பெண்கள் 10 மைல் தூரத்திற்கு அப்பால் கூட வர யோக்கியதை அற்றவர்களாக கருதப்படுகிறார்கள். ஆகவே, இவை எல்லாம் புராணக் கதைகளால் மக்களை மதி கெட்டு குட்டிச் சுவராய், காட்டு மிராண்டிகளாய்ப் போகும்படி செய்து வைத்து இருக்கிறது. ஆகையால், அவன் எவ்வளவு தூரம் படித்தும் பட்டம் பெற்று டாக்டராக வந்திருந்தும்கூட பயன் இல்லை என்ற நிலைமை ஏற்பட்டு விட்டது. ஆகவே, மனிதன் எத்தனைத் தூரம் படித்து இருப்பினும் கூட அவனுக்குப் பகுத்தறிவு மிகவும் அவசியம்.

ஆகவே மக்களுக்கு வ.உ.சி. படிப்பகம் போன்ற படிப்பகங்கள் மிகவும் தேவை. அதன் மூலமாகத் தான் அறிவை வளரச் செய்து பகுத்தறிவைப் பயன்படுத்திக் கொள்ள வசதி கிடைக்கும். மென்மேலும் பகுத்தறிவை வளர்த்துக் கொள்ள வசதியும் ஏற்படும். மேலும் தந்தை பெரியார் அவர்கள் திராவிடர் கழகத்தினுடைய கொள் கைகளை விளக்கி, அதனின்றும் பகுத்தறிவைப் பயன்படுத்த வேண்டிய விதங்களையும் எடுத்துக் கூறினார்கள்.

---------------27.10.1951 அன்று இராங்கியம் வ.உ.சி. உடற்பயிற்சி மன்ற ஆண்டு விழாவில் தந்தை பெரியார் அவர்கள் ஆற்றிய தலைமை உரை விடுதலை 1.11.1951.

0 comments: