Search This Blog

3.11.11

உண்மையான தமிழன் சிலப்பதிகார மாநாடு நடத்துவானா? - பெரியார்



நான் சொல்லுகிற எதையும் அப்படியே நம்பி விடாதீர்கள். நான் சொல்லுவதில் பல சரியானதும் இருக்காது, தவறுகளும் தெரியலாம்; நான் சொல்லுகிற சங்கதிகளையெல்லாம், நான் சொல்லுகிறேன் என்பதை மறந்துவிட்டு, நான் சொன்னவைகள் சரியானவையானதுதானா என்பதை நீங்கள் உங்கள் சொந்த அறிவைக் கொண்டு ஆராய்ந்து பார்த்து உங்களுக்குச் சரி என்று பட்டால் ஏற்றுக் கொள்ளுங்கள்; தவறாகப் பட்டால் தள்ளி விடுங்கள் என்று முதலாவதாக கேட்டுக் கொள்கிறேன்.

ஏனென்றால், நம்முடைய மக்களுக்கு இந்த ஆராயும் தன்மை இல்லை. அந்தத் தன்மை வளருவதற்கும் யாரும் இடங்கொடுக்க வில்லை. நம்முடைய வாழ்வின் நித்திய நிகழ்ச்சிகள் பலவற்றிலே அறிவைச் செலுத்துகிற நாம் ஆண்டவன் சங்கதியிலே சாஸ்திரத்திலே அறிவைச் செலுத்துவதில்லை. செலுத்தினால் பாவம் என்று கற்பிக்கப்பட்டிருக்கிறது. அதனால் தான் ஏறக்குறைய ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக பார்ப்பான் நம்மை இழிமக்களாகவும், கடைசி ஜாதி மக்களாகவும் வைத்திருக்க முடிகிறது. மக்களுக்கு மிகமிகத் தேவையான வேலை களையெல்லாம் - உழுது, நட்டு, விதைத்து, அறுத்து, கதிரடித்து, உணவு உற்பத்தி செய்கிற, பெருங் கட்டடங் களை மக்கள் குடியிருக்க எழுப்பி, நல்ல உடைகள் தயாரித்துக் கொடுத்து, மக்களின் வாழ்வுக்காக வாழ்கிற நாம் ஏன் இந்தக் காலத்திலே கூட சூத்திரர்களாய் இருக்க வேண்டும்? வேறு நாடுகளிலே இந்த அநீதியான முறை உண்டா? இல்லையே! அப்படியிருக்க இங்கு மட்டும் ஏன் இந்த அநியாயம்? என்று யாராவது கேட்டார்களா? பெரிய பக்திமான்கள், பரமனருள் பெற்றோர், ஆழ்வார்கள், நாயன்மார்கள் என்று கூறப்பட்டவர்களில் எவருமே இது பற்றி வாய் திறக்கவேயில்லையே? என்னவென்றால் இந்தத் துறையிலே மட்டும் அறிவைச் செலுத்தக் கூடாது என்ற அடக்கு முறையினால் தான் நாங்கள் மட்டுந்தான் துணிந்து இந்தக் காரியத்திலே இறங்கியிருக்கிறோம்.

(மேலும் பெரியார் அவர்கள் ஜாதி முறைகளின் கொடுமை களை விளக்கி, புராணங்களின் புன்மையை எடுத்துக் காட்டி, கடவுள்கள் என்பவர்களின் கீழ்க் குணத்தை யும், அயோக்கியத் தனத்தையும் எடுத்துக் கூறி, இதற்கெல்லாம் ஆதரவு கொடுத்து அதற்காகவே வாழ்ந்தும் வருகிற காங்கிரசின் யோக்கி யதையையும் விளக்கினார்.
மேலும் பெரியார் அவர்கள் திராவிட நாடு தனியாகப் பிரிய வேண்டியதன் அவசியத்தை விளக்கிக் கூறி, வடவர் ஆட்சியுடன் நாம் இணைந்திருப்பதனால் நாம் அடைகிற கேடுகளையும் எடுத்துக் காட்டினார்கள்.

இறுதியாகப் பெரியார் அவர்கள் கூறினார்கள்):

சென்ற வாரத்தில் சென்னையிலே சிலப்பதிகார மாநாடு என்ற பேரால் ஒரு மாநாடு நடந்தது. உள்ளபடியே கேட்கிறேன், உண்மையான திராவிடன் - தமிழ் மகனாக இருந்தால் சிலப்பதிகார மாநாடு நடத்துவானா? பார்ப்பனர்களுக்கு நல்ல பிள்ளையாக நடத்துவதற்கு ஆக நடத்தப்படுவது என்பதல்லாமல் வேறு என்ன சொல்ல முடியும்?

மற்ற நூல்களைப்பற்றி சொல்ல வேண்டியதில்லை. இந்த 15, 20 வருஷங்களில் நாம் செய்த பிரச்சாரத்தினால் மக்கள் மன்றத்தில் இராமாயணம் நாற்ற மெடுத்துப் போய்விட்டது. அதைக் கொண்டாடவே வெட்கப்படத்தக்க தன்மையிலே வந்து விட்டது. கீதை அஞ்ஞாத வாசம் செய்கிறது. அதனால்தான் இன்று இதை - சிலப்பதிகாரத்தைப் பிடித்துக் கொண்டார்கள். காரணம், இது தமிழ்நாட்டுக் கதை - தமிழன் தொகுத்தது என்று சொல்லித் தமிழர்களை ஏமாற்றுவதற்கே ஆகும்.

இதிலே மட்டும் என்ன வாழ்கிறது? ஒரு ஓவியம் மிக நன்றாக, அழகாக, கண்டோர் வியக்கச் சித்தரிக்கப் பட்டிருக்கிறது என்று வைத்துக் கொள்ளுங்கள். ஆனால், அந்த ஓவியத்திலேயே ஒரு திராவிடனைக் கால்அடியிலே, கண் பிதுங்க, நாக்கு வெளியே தொங்க, மிதித்துக் கொண்டிருக்கிற மாதிரி சித்தரிக் கப்பட்டிருக்கிறது என்றால் அதை வாழ்த்தவா முடியும்? அதிலே சொட் டுகிற கலைக்காக? அப்படித்தான் சிலப்பதிகாரமும். அதிலே கலை இருக்கிறதென்றால் இருக்கட்டுமே, அதற்காக நம் வாழ்வே இருள் காடாக வேண்டுமா?

சிலப்பதிகாரம் என்பது ஆரியத்தைப் பரப்புகிற ஒரு நூல் என்பதல்லாமல் வேறு என்ன? ஆரம்பம் முதல் இறுதி வரையிலே ஒரே ஆரியம்தானே சாட்சியளிக் கிறது. ஏதோ கதை தமிழ்நாட்டிலே நடந்ததாக ஏற்படுத்தியிருப்பதைத் தவிர.

கோவலனுக்கும், கண்ணகிக்கும் நடக்கிற கல்யாணம் ஆரியப் புரோகிதப்படி - ஆரிய முறைப் படி ஏற்பட்ட திருமணம். அது பெண் அடிமைத் திருமணம். அடுத்தபடியாக அது பண மூட்டைகள் திருமணம். கண்ணகி என்று கூறப்பட்டிருக்கிற பெண்ணுக்குச் சிறிதாவது அறிவு, மனித உணர்ச்சி, தன்மானம் இருந்தது என்று யாராவது ஒப்புக் கொள்ள முடியுமா? அந்தக் கதையின்படி மணமகன் கோவலன் திருமணத்தின்போதே தாசி மீது காதல் கொண்டு தாசி வீடு போய்விடுகிறான். அப்படி யிருந்தும் ஆரியக் கதையில் ஒரு சார்பான கற்பு என்னும் முட்டாள் தனத்தால் கணவனுக்குப் பண உதவி, பண்ட உதவி செய்து வருகிறாள். சொத்து, சுகம், நகை, நட்டு எல்லாவற்றையும் கொடுத்து விடுகிறாள். கணவன் தாசி வீடு போய்விட்டால், இருக்கிற சொத்தையெல் லாமா விட்டுவிட வேண்டும்? ஒரு கணவன் அந்தப்படி நடக்கிற ஒரு மனைவிக்கு அப்படி கொடுப் பானா? கொடுத்தால் கூட்டிக் கொடுப்பவன் என்றுதானே சொல்வோம்.

இந்தக் காலத்திலே ஒரு மடப்பெண்ணாவது இப்படி நடக்க முடியுமா? இதைப் படித்தால் பெண் ஒழுங்காய் நடப்பாளா? ஆண் ஒழுங்காய் நடப்பானா? இதுதான் கற்பு. ஆனால், அப்புறம் ஒவ்வொரு பெண்ணின் கதியும் என்னவாவது? அடுத்தபடியாக ஆருடம் சொல்லுவது, குறி சொல்லுவது போன்ற ஆரிய ஏமாற்றுப் பித்த லாட்டம் சிலப்பதிகாரத்திலே காணப்படுகின்றன.

இதெல்லாம்தான் போகட்டும் என்றால் கடைசி யிலே என்ன நடக்கிறது? நம்முடைய தமிழ்நாட்டு அரசனை ஒரு முட்டாளாகச் சித்தரித்துக் காட்டப்பட்டிருக் கிறது. யாரோ ஒரு ஆசாரி, கோவலன் தான் சிலம்பைத் திருடினான் என்று சொன்ன வுடன் கோவலனைக் கொன்று விடுகிறான். இந்த அரசனை எப்படிப் புத்திசாலி என்று ஒத்துக் கொள்ள முடியும்? இதுதான் போகட்டும் என்றால் கோவலன் இறந்த பிறகு கண்ணகி கோபங்கொண்டு ஒரு பக்கத்துக் கொங்கையைத் திருகி எறிகிறாளாம். உடனே அது நெருப்புக் கட்டியாக மாறுகிறதாம். அதனால் மதுரையே தீப்பிடித்து எரிகிறதாம். நம்ப முடியுமா? பாண்டியன் நடந்து கொண்ட அயோக்கியத்தனத்திற்கு மதுரை மக்கள் சாம்பலாக வேண்டுமா? இதுவா கற்புக்கு யோக்கியதை? தமிழ்க் கவிக்கும் பார்ப்பனக் கவிக்கும் என்ன பேதம்? ஆரியப் புராணங்களுக்கும் தமிழன் இலக்கியங்களுக்கும் என்ன பேதம்? இரண்டும் ஆரிய அடிப்படைக் கொள்கைப் பிரச்சாரம்தானே! அக்கினி பகவான் வந்து கண்ணகியை நான் யாரைச் சுட்டுச் சாம்பலாக்கட்டும் என்று கேட்டால் இந்த மகா பதிவிரதை பார்ப்பனர்களைச் சுடக் கூடாது என்று கட்டளையிடுகிறாள். இதை எப்படித் தமிழர் நூல் என்று கொள்ள முடியும்? கண்ணகிக்கும் சீதைக்கும் என்ன வித்தியாசம்? தமிழர்கள் சிலப்பதிகாரத்தின் தர்மம் வர்ணாசிரமம்தானே.

இராமாயணத்தின் கடைசி தர்மம் சூத்திரன் (சம்பூகன்) கொல்லப்பட்டு வருணாசிரம தர்மம் காப்பாற்றப்பட்டதுதானே! சிலப்பதிகாரத்தின் கடைசி தர்மம், சூத்திரர்கள் அகாரணமாய் எரிக்கப்பட்டு, பார்ப்பனர் காப்பாற்றப்பட்ட வருணாசிரம தர்மந்தானே? இந்த விஷயத்தில் இராமாயணத்திற்கும் சிலப்பதிகாரத்திற்கும் பேதம் என்ன? இதெல்லாம் பார்ப்பனர்களுக்கு நல்ல பிள்ளையாகி நலம் பெற செய்யும் தன்மானமும், இன உணர்ச்சியும் அற்ற தன்மை தானே!

-----------------------30.3.1951 அன்று காங்கேயம் பொதுக் கூட்டத்தில் மணியம்மையார் தலைமையில் தந்தை பெரியார் அவர்கள் ஆற்றிய உரை - "விடுதலை" 3.4.1951

0 comments: