Search This Blog

12.11.11

துக்ளக்கின் புரட்டுக்குப் பதிலடி! -18

துக்ளக்கின் புரட்டுக்குப் பதிலடி! (18) காமராசர் - பச்சைத் தமிழர் ஏன், எப்படி?பச்சையான வருணாசிரமவாதி ஆச்சாரியார் என்கிறபோது பச்சையான தமிழர் காமராசர் ஆகிறார். இதில் என்ன குடைச்சல் குல்லுகப்பட்டர் கூடாரத்துக்கு? பச்சைத் தமிழர், சிகப்புத் தமிழர், மஞ்சள் தமிழர் என்று உண்டா என்று துக்ளக் கேலி செய்கிறது.

குலக்கல்வித் திட்ட கோமான் ஆச்சாரியார் என்றால் குலக் கல்வித் திட் டத்தை மண்ணும் மண்ணடி வேருமாகச் சாய்த்த சண்டமாருதம் காமராசர்.

ஏதோ 1952-54ஆம் ஆண்டு காலத்தில் தான் ஆச்சாரியார் பஞ்சம சூத்திர மக்களின் கல்வியில் மண்ணை அள்ளிக் கொட்டினார் என்று கருதிவிட வேண்டாம்.

1937_1939 ஆட்சிக் காலத்திலும்கூட கிராமப்பள்ளிகள் 2500அய் இழுத்து மூடிய மக்கள் விரோதி அவர்.

1949 ஆகஸ்டு 13 நாளிட்ட குடி அரசு தலையங்கத்திலே ஆச்சாரியாரின் குலதர்மச் சிந்தனைகளின் அங்க மச்ச அடையாளங்களைப் படம் பிடித்துக் காட்டியவர் தந்தை பெரியார்.

இன்னுமொரு 100, 200 வருஷங்கள் கழிந்தாலும், கட்டாயமாக அனைவரும் படித்தே ஆக வேண்டும் என்கிற நிலையை எப்படியும், யாராலாவது, உண்டாக்கப்பட்டு விடும் என்பதை உலகப் போக்கை அறிந்த நம் அருமைப் பார்ப்பனத் தோழர்கள் அறிந்து கொண்டிருக்கிறார்கள். ஆகவே, அந்த நிலைமை ஏற்படுவதற்கு, ஏற்படும் என்று எண்ணுவதற்கு அவர்களுக்கு எப்படி மனம் பொறுக்கும்? கட்டாய மாக அனைவரும் படித்து விட்டால், சுய சிந்தனையற்ற -_ அறியாமைக் குட் டையில் உழலும் - _ தன்மானமற்றவர் களை நாட்டில் எப்படிக் காண முடியும்? பார்ப்பனியத்துக்குத் துதி பாடுபவர்கள் மறைந்து, பார்ப்பனியமே பஞ்சாய்ப் பறந்து விடுமே! புரோகித வர்க்கத்தைப் புல் முளைக்கச் செய்யும், கட்டாயக் கல்வியை களவாடிகள் எப்படி வரவேற்பார்கள்? என்றெல்லாம் எவருமே எண்ணத் தகுந்த வகையில் தான் இந்த மாதம் 8ஆம் தேதி பம்பாயில் பேசிய இந்துஸ்தான் கவர்னர் ஜெனரல் ஆச்சாரியாரவர்கள் (ராஜாஜி) பேசி இருக்கிறார்.

கட்டாயக் கல்வி என்கிற பேச்சையும், அதற்காக எடுத்துக் கொள்ளப்படும் சிறு முயற்சிகளையும் தோழர் ஆச்சாரியார் அவர்களைப் போல உண்மையில் வெறுப்பவர்கள் யாருமே இல்லை என்பதுதான் நம் கருத்து. முன்பு அவர் சென்னைப் பிரதமராய் வீற்றிருந்த நேரத்தில், கட்டாயக் கல்வியைப் பரப்ப அவர் கூறிய வினோதமான திட்டத்தை நாம் மறந்துவிடவில்லை வாத்தியார் இல்லாமல், பள்ளிக்கூடம் இல்லாமல் எல்லோருக்குமே கல்வி என்ற அவரின் அட்டை மாட்டும் கல்வித் திட்டத்தை யார்தான் மறந்து விட முடியும்?

இப்படிப்பட்ட ஆச்சாரியார்தான் இன்று கவர்னர் ஜெனரலாய் இருக்கும் நேரத்தில் கட்டாயக் கல்வியைப் பற்றிப் பேசியிருக்கிறார். குழந்தைகள் அவர் களுடைய குடும்பக் கலைப் பயிற்சி யிலிருந்து முற்றிலும் தனியாகப் பிரித்துக் கட்டாயக் கல்வியைப் புகுத்த நிர்ப் பந்திக்கக் கூடாதாம். பெற்றோர்கள் செய்துவரும் தொழிலை மேற்கொள்ளத் தக்க விதமாக வாரத்தில் 3 நாள் மட்டும் படிப்புச் சொல்லிக் கொடுக்க வேண்டுமாம்.

இந்த நாட்டில் அதிர்ஷ்டவசமாக பண்டைத் தொழில் முறை (அதாவது குலத் தொழில்) பாதுகாக்கப்பட்டு வருவதனால்தான் இன்றைய அமைதியாவது காணப்படுகிறதாம். இந்த அமைப்பு மாற வேண்டும் என்று ஆசைப்படுபவர்கள் பைத்தியக்காரர் கள்தானாம்.

ஆச்சாரியாரவர்கள் வருணாசிரம தர்மத்தைத்தான் குடும்பக் கலைப் பயிற்சி என்று கூறுகிறார். வெளுப்பவன் என்றைக்குமே பரம்பரையாக வெளுத்துவர வேண்டும். சிரைப்பவன் பரம்பரையும் அப்படியே தெருக் கூட்டுபவன், மாடு மேய்ப்பவன், கக்கூஸ் எடுப்பவன் பரம்பரையும் அப்படியே செய்து வர வேண்டும். இதுதான் அவர்களுக்கு குடும்பக் கலைப் பயிற்சி! ஆரிய முன்னோர்கள் எழுதி வைத்த வர்ணாசிரம தர்மம்!

வாரத்தில் 3 நாள் சொல்லிக் கொடுக்கும் படிப்பு, எந்த அளவுக்குப் பலன் கொடுக்கும் என்பதை அவர் அறியாதவரல்லர். ஏதோ கட்டாயப் படிப்பு சொல்லிக் கொடுத்ததாகவு மிருக்க வேண்டும். அதே நேரத்தில் பலனைப் பார்த்தால் கல்லாதவர் களாகவும் ஆகியிருக்க வேண்டும்.

படிப்பிலேயே முழு நேரத்தையும் செலவழிக்கும்படிச் செய்து விட்டால் அப்படிப் பழக்கப்படுத்தப்பட்ட யார்தான், பிறகு அவரவர்கள் குலத் தொழிலை இழிவு என்று மற்றவர் களால் கருதப்படுகின்ற தொழிலை உடலை வருத்தி உழைத்தாக வேண்டிய தொழிலை செய்ய முன் வருவார்கள் என்கிற கவலையைத் தவிர, இந்தத் திட் டத்தில் வேறு என்ன நியாயமிருக்கிறது என்று சொல்ல முடியும்?

அதிர்ஷ்டவசமாக பண்டைத் தொழில் முறை பாதுகாக்கப்படுகிறது. அதனால்தான் அமைதியைக் காண் கிறோம் என்கிறார் ஆச்சாரியார். இதனுடைய கருத்தென்ன? வெள்ளை யர்களின் கூட்டுறவால் விஞ்ஞானக் கருத்துகள் கொள்ளை கொள்ளை யாய்க் குடி புகுந்தாலும், அவை எல்லாவற்றையும் தடுத்து நிறுத்தக் கூடிய மூடப் பழக்க வழக்கங்களில் நம் நாட்டு மக்கள் மூழ்கிக் கிடக்கிறார்கள். மூடப் பழக்க வழக்கங்களுக்குக் காரணமான மத சாஸ்திர புராணக் கருத்துகள், பகுத்தறிவைத் தூண்டும் கல்வி என்கிற கருவியைக் கொடுத்து விட்டால் என்ன பாடுபடும்? ஒவ் வொரு உழைப்பாளியும், உழைப்பின் உயர்வையும், உழைப்பு வஞ்சிக்கப்படும் கொடுமையையும், தானாகவே உணர்ந்து விட்டால் இந்த நாட்டில் உல்லாச வாழ்வினர்க்கு அமைதியிருக்க முடியுமா என்கிற கருத்தே தவிர வேறென்ன?..

இந்த உருப்படாத வக்கிரமான பிரச்சாரத்திற்கு அவர் காரணமும் கூறுகிறார். பெற்றோர்களின் பொரு ளாதாரக் கஷ்டமும் குறையும் சிறுவர் களின் இளம் மூளையில் குறிகளையும், வார்த்தைகளையும் திணித்து சுமை ஏற்றுவதும் குறையும். இது அவர் (ஆச் சாரியார்) கூறும் இரண்டு காரணம்.

வாரத்தில் 4 நாள் பெற்றோர் களுக்கு உதவியாய் உழைப்பதால், ஏழைகளின் பொருள் நஷ்டம் ஓரளவு குறையலாம். ஆனால் அந்த 3 நாள்கூட பள்ளிக்குச் செல்லாமல், எல்லா நாளுமே பெற்றோர்கள் இடும் வேலைகளைச் செய்து கொண்டிருந்தால் -இப்போது செய்து கொண்டிருப்பதைப் போல பெற்றோர் களுக்கு இதைக் காட்டியுமல்லவா பொருள் கஷ்டம் குறையும்.

ஆகவே, ஆச்சாரியார் கூறும் இந்த இரு காரணங்களும் எப்படிப்பட்ட, ஏமாற்றம் நிறைந்தது என்பதை விளக்க வேண்டியதில்லை. இதிலிருந்து ஆச்சாரியாரவர்கள் எவ்வளவுதான் பொது நலத் தியாகியாய், உண்மை உழைப்பாளியாய் விளங்கினாலும்கூட, வருணாசிரம அமைப்பில் அவருக் குள்ள ஆசை எவ்வளவு என்பது தெரி கிறதா இல்லையா? என்று கேட் கிறோம்? என்று குடிஅரசு தலையங் கங்கத்தில் விலாவாரியாக வரணாசிரமக் காவலர் ஆச்சாரியாரின் அடி அளந்து சூழ்ச்சிகரச் சிந்தனைகளை விளக்கி இருக்கிறார் தந்தை பெரியார்.

சட்டம் அதிகம் படித்த ஆச்சாரியார் படிக்க வேண்டிய சிறுவர்களைக் குலத் தொழில் செய்யச் சொல்லுகிறாரே இது. குழந்தைத் தொழிலாளர் தடை சட்டத்துக்கு விரோதமும்கூட அல்லவா!

மனு காலத்திலிருந்து இந்த மடி சஞ்சிக் கூட்டத்தின் மனப்பான்மை நாலாந்தர, அய்ந்தாம் தர மக்களாக ஆக்கப்பட்ட மக்களுக்கு எந்த நிலையிலும் கல்வி ஒளி பரவிவிடக் கூடாது என்பதிலே மிக மிக ஜாக்கிரதையாக இருந்து வருகின்றனர் என்பதுதான் வடி கட்டித் தெரிந்து கொள்ள வேண்டிய உண்மையாகும்.

இந்தப் பின்னணியைத் தெரிந்து கொண்டால்தான் ஆச்சாரியாரின் வருணாசிரமக் குலக் கல்வித் திட் டத்தை ஒழித்து அவர் மூடிய ஆறாயிரம் பள்ளிகளைத் திறந்ததோடு அல்லாமல், புதிதாகப் பன்னிரெண்டா யிரம் பள்ளிகளைத் தொடங்கி, மதிய உணவு அளித்து, சீருடை வழங்கி, இலவசப் புத்தகங்கள் கொடுத்து, உபகாரச் சம்பளம் அளித்து, இலவசக் கல்விக்கு வழி செய்து தந்தை பெரியார் அவர்களின் சிந்தனை வெளிச்சத்தில் கல்விப் பெரு வெள்ளம் கரை புரண்டு ஓடச் செய்த காமராசர் தம் சாதனையின் உச்சம் விளைச்சல் என்பதன் அருமை பெருமை விளங்கும்.

பச்சை வருணாசிரமவாதியாக இருந்தார் ஆச்சாரியார்; பச்சைத் தமிழராக இருந்து வருண தர்மத் தின்மீது நாலாந்தர, அய்ந்தாம் தர மக்களின் கல்வி வளர்ச்சி என்னும் உரத்தின்மீது நின்று வெடிகுண்டு வீசிய காமராசர்தம் கடமையின் ஆழம் அய்யமற விளங்கும்.

நேர்முகத் தேர்வு என்பது கல்லூரிகளில் சேர நடைமுறையில் இருந்தது சம்பந்தப்பட்ட மாணவரில் கல்விச் சூழல் சமூகச் சூழல் இவற்றை நேரில் அறிவதற்கு இதனால் வாய்ப்பு ஏற்படும். அதற்காகத்தான் 150 மதிப்பெண்கள் வைக்கப்பட்டு இருந்தது. ஆச்சாரியார் அதனை 50 ஆகக் குறைத்தார் காமராசர் முதல் அமைச்சர் ஆனவுடன் மீண்டும் அதனை 150 மதிப்பெண்களாக உயர்த்தினார். இதுபற்றி செய்தியாளர்கள் முதல் அமைச்சர் காமராசரிடம் காரணம் கேட்டபோது என்ன காரணத்திற்காக ஆச்சாரியார் ராஜாஜி 150அய் 50 ஆகக் குறைத்தாரோ, அதே காரணத்துக்காகத்தான் 50 அய் 150ஆக உயர்த்தினேன் என்று பட்டென்று பதில் சொன்னார்.

ஆச்சாரியார் பச்சைப் பார்ப்பனர் என்பதற்கும், காமராசர் பச்சைத் தமிழர் என்பதற்கும் இந்த ஒரே ஒரு எடுத்துக்காட்டுப் போதாதா?
ஆச்சாரியார் இரண்டுமுறை முதல் அமைச்சராக வந்தபோதும் ஓய்வு பெற வேண்டிய பார்ப்பனர்களை எல்லாம் தேடித் தேடிப் பார்த்து, பதவி நீட்டிப்பு செய்தார். ஓய்வு பெற்று கிருஷ்ணா, ராமா என்று பஜனையை பாடிக் கொண்டு சாய்வு நாற்காலியில் முழங்காலை அமுக்கிக் கொண்டிருந்த பார்ப்பனர்களின் முகவரிகளைத் தேடிச் சென்று இழுத்து வந்து அதிகார நாற்காலிகளில் அமர வைத்து அக்கிரகாரத்துக்கு ஜே போட்டார்.

ஆம், ஆச்சாரியார் பச்சைப் பார்ப்பனராகவே பூணூல் தர்பாராகவே ஆட்சியை நடத்தி வந்தார்.

காமராசர் ஆட்சிக்கு வந்ததும் அதனைத் தலைகீழாக மாற்றினார்.

தமிழர்களை உரிய இடத்தில் அமர்த்தினார். நெ.து. சுந்தரவடிவேலு போன்றவர்களைக் கொண்டு வந்து கல்வித் துறையின் தலைமைப் பொறுப் பில் அமர்த்தியவர் ஓர் அப்பாதுரையாரைத் தலைமைப் பொறியாளராக அமரச் செய்தார். மிஸ் மரைக்காயா என்ற முஸ்லிம் பெண்மணியை மருத் துவத்துறையின் இயக்குநராக அமர்த்தினார்.

அந்த ஆத்திரத்தில்தான் ஆச்சாரியார் காமராசரைக் கறுப்புக் காக்கை (காக்கை என்றாலே கறுப்புதான்; பிறகு ஏன் கறுப்புக் காக்கை என்று கூறியுள்ளார்? அந்தக் கறுப்பு என்பது வேறு ஒன்றும் அல்ல. கறுப்புச் சட்டைக்காரர் பெரியாரின் ஆசாமி என்று அடையாளம் காட்டவே) என்று கூறினார். அந்தக் கறுப்புக் காக்கையைக் கல்லால் அடித்துக் கொல்ல வேண்டும் என்றும் கொலை வெறியைத் தூண்டினார்.

காமராசர் வாய் மூடியாக மவுன சாமியாராக இருந்தாரா?

பதிலுக்குப் பத்தடி கொடுத்தார். ஆச்சாரியாரின் ஆணவ மண்டையின் கபாலம் நொறுங்கும் வகையில் இடி முழக்கம் செய்தாரே!


ஒருவனுக்கு நன்றாக கறி சாப்பாடு போட்டு வளர்க்கிறோம். இன்னொருத் தன் மூன்று நாள் பட்டினியில் கிடந்தவனாய் இருக்கிறான். இரண்டு பேரையும் சண்டைக்கு விட்டு, கறி சாப்பாடு சாப்பிட்டவன் ஜெயித்தால் அதற்குத் தகுதி திறமை என்று பேரா? பட்டினிக் கிடப்பவனுக்கும் அதே கறி சாப்பாட்டைப் போடு, அப்புறம் சண்டைக்கு விட்டால் இரண்டு பேர் தகுதி திறமையும் ஒன்றாகத் தானே இருக்கும். பறையன் டாக்டராக வந்து ஊசி போடுகிறான். அவன் ஊசி போட் டதாலே எந்த எந்த நோயாளி செத்துப் போய் விட்டான்? அவன் என்ஜினீய ராக வந்து கட்டின பாலம் எது இடிந்து விட்டது? அப்போ பறையனுக்கும் தகுதி வந்து விட்டதா, இல்லையா? தகுதி _ திறமை என்பது உயர்ந்த ஜாதிக்காரனி டமும், இந்தப் பரம்பரை உத்தியோக ஆதிக்கக்காரனிடமும்தானா இருக்கிறது?

இப்படி தகுதி திறமை என்று கொஞ்ச நாளாகவா நீங்க ஏமாத்துறீங்க? நாலாயிரம், அய்யாயிரம் ஆண்டு களாகவே ஏமாத்தி வருகிறீர்கள்!

மந்திரம் தந்திரம் என்று சொல்லி ஏமாத்தி கொஞ்ச நாள் ஆதிக்கம் செலுத்தினீர்கள். இப்போது படிப்பு என்று சொல்லி ஏமாத்துகிறீர்கள். புத்தகம் படித்து விட்டால் தகுதி திறமை வந்து விடுமா? இல்லை வந்து விட்டதாக அர்த்தமா? உன் திறமையும் எனக்குத் தெரியும். சொல்லிக் கொடுத்தவன் திறமையும் எனக்குத் தெரி யுமே! என்று காமராசர் கர்ச்சித்தாரே?

-------------------------(நூல்: தகுதி - திறமை மோசடி!)

இது பார்ப்பனர்களுக்குப் பச்சை யான அறைகூவல் இல்லையா? பெரி யார் பேச்சா, காமராசர் பேச்சா என்று அன்று விடுதலை தலைப்புக் கொடுத்து செய்தி வெளியிட்டதே இதனால்தான் காமராசர் பச்சைத் தமிழர் - புரிகிறதா, துக்ளக் வகையறாக்களே?

1939ஆம் ஆண்டு நிர்வாக அறிக்கை யில் உள்ளபடி பார்ப்பனரல்லாதாரைவிட பார்ப்பனர்கள் எவ்வளவு அதிகம் உயர் உத்தியோகங்களைக் கவர்ந்திருக்கின்றனர் என்பதைக் கீழ்க்காணும் பட்டியலிலிருந்து அறிந்து கொள்ளலாம்.

கெஜடெட்ஆஃபீசர் என்னும் மாதம் ரூ.300 க்கு மேல் ரூ.5000 வரை சம்பள முள்ள நீதி நிர்வாக இலாகா பெரிய உத்தியோகங்களில்,

71 158 29+11 69 382

100-க்கு 3 பேராக உள்ள பார்ப்பனர் நீதித்துறையில் 20% விகிதமும் உயர் அதிகாரிகள் பதவியில் 60% விகிதமும், கல்வித் துறையில் 50% விகிதமும் பதவி பெற்றிருப்பது கவனிக்கத்தக்கது.


மருத்துவக் கல்லூரியில் மாணவர்கள் நிலை
1951-52 1952 - 53
குமாரசாமி ராஜா ஆட்சியில்
ராஜாஜி ஆட்சியில்
பார்ப்பனர் 63 104
பார்ப்பனர் அல்லாதார் 130 56
மற்றவர்கள் 125 158
318 318
இந்நிலை காமராசர் முதல்வர் ஆன பின்பே மாறத் தொடங்கியது.

இதுவரை பார்ப்பனரல்லாதார்களே வகித்து வந்த சென்னை பிரதம மாகாண மாஜிஸ்திரேட் பதவிகள் பார்ப்பனருக்கே மாற்றியமைக்கப்பட்டு விட்டது. ஆச்சாரியார் ஆட்சிக்கு வந்தவுடனேயே பி. ராமகிருஷ்ணய்யர் அய்.சி.எஸ். என்ற பார்ப்பனரை இப்பதவிக்கு நியமித்தார்.

தமிழருக்கென்றே தமிழரால் நிறுவப்பட்ட அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தின் துணைவேந்தர் பதவிக்கு சர்.சி.பி. இராமசாமி அய்யரையே போடும்படி வற்புறுத்தி வெற்றியும் கண்டு விட்டார்.

சென்னை சர்க்காரின் பிரதம காரியதரிசி பதவியில் இருந்த ஆந்திர பார்ப்பனரல் லாதாரின் இடத்தில் டி.எஸ். ராகவன் அய்யர் அய்.சி.எஸ். என்ற பார்ப்பனரை நியமித்தார்.

ஸ்தல ஸ்தாபன இலாகா காரியதரிசி பதவிக்கு வெங்கடேசுவர அய்யரையே நியமித்தார். விவசாய இலாகா காரியதரிசி பதவிக்கு உழுதல் பாபம் என்றுகூறும் பார்ப் பன இனத் தவரான ஆர்.ஏ. கோபால்சாமி அய்யரைப் போட்டார்.
----------------(விடுதலை 17.4.1963)மூன்று ஆண்டுகட்குமுன் ரிட்டயரான திரு சுந்தரராம அய்யரை மீண்டும் மின்விசை இலாகா தலைமை எஞ்சினியராக நியமித்தார். (இப்பதவிக்கு வர வேண்டிய பார்ப்பனரல்லாதவர்கள் திரு. அப்பாதுரை, நாராயணமூர்த்தி ஆகியோரின் உரிமை இதனால் பறிக்கப்பட்டது. திரு. காமராசர் ஆட்சி வந்தபிறகே திரு. அப்பாதுரை தலைமை எஞ்சினியராக வர முடிந்தது. இவர் இந்தியாவிலேயே சிறந்த நிபுணர் என்பதும் வெளியாயிற்று. தகுதியுள்ள தமிழரை இருட்டடிப்புச் செய்து தன் இனத்தாருக்கே உத்யோகம் அளிக்கும் ஆச்சாரியாரின் கொடுமை கொஞ்சமா என்பது இதன் மூலம் விளங்கும்)

ரிட்டயரான திரு. ஏ.ஆர். வெங்கடாச்சாரி என்ற அய்யங்கார் பார்ப்பனரை பதவி நீடிப்புக் கொடுத்து ஒரு சீஃப் எஞ்சினி யராகப் போட்டார்.

திரு. பார்த்தசாரதி அய்யங்காரை சென்னை போலிஸ் கமிஷனராக (மற்றவர் சீனியாரிட்டியைப் புறக்கணித்து விட்டு)ப் போட்டார். அவரை இன்ஸ்பெக்டர் ஜெனரலாகவும் நியமித்துவிட பகீரதப் பிரயத்தனம் செய்தார் திரு. ஆச்சாரியார்.
----------------(விடுதலை, 16.4.1963)


12 ஆண்டுகளுக்கு முன்பே ஓய்வு பெற்ற பிராமண சேவா சங்கத் தலைவராக இருந்த ஆர்.வி. கிருஷ்ண அய்யர் என்ற பார்ப்பனரை அவருடைய 70ஆவது வயதில் சென்னை சட்டமன்றத்திற்கு செயலாளராக நியமித்தார். அதோடு அவருக்கு மேலும் மூன்று முறை பதவி நீட்டிப்பும் அளிக்கப்பட்டது.

10 ஆண்டுகளுக்குமுன்பாக ஓய்வு பெற்ற தலைமைப் பொறியாளர் வெங்கட கிருஷ்ண அய்யருக்கு மீண்டும் நியமனம் செய்யப்பட்டது.


சர்க்காரின் மிக முக்கியமான பதவியாகிய பொருளாதார ஆலோசகர் (Economic Adviser) பதவியில் டாக்டர் பி. நடராசன் என்ற ஒரு தமிழர் இருந்த காரணத்தால் இந்த பதவியே அனாவசியமானது தேவையில்லை என்றுகூறி அப்பதவியை ஒழித்து திறமையுள்ள தமிழர் ஒருவரை வெளியேற்றி விட்டார்.

ஆனால் அதேசமயம் செய்தி இலாகாவுக்கு ஒரு இயக்குநர் பதவி அப் போதைக்குக் தேவையில்லையென சட்ட சபையில் பல உறுப்பினர்கள் யோசனை கூறியதை ஏற்க மறுத்து விட்டார் ஆச்சாரியார். காரணம் அப்பதவியில் திரு. பார்த்தசாரதி அய்யங்கார் என்ற ஒரு பார்ப்பனர் இருந்ததுதான். அவரை வீட்டுக்கு போகச் செய்ய ஆச்சாரியார் விரும்பவில்லை.

லஞ்ச ஊழலில் பிரசித்தி பெற்று மத்திய சர்க்காரின் விசாரணையில் இருந்த எஸ்.ஏ. வெங்கட்ராம அய்யர் அய்.சி.எஸ் என்ற பார்ப்பனரை தமிழக அரசின் ரிவினியூ இலாகாவுக்கு முதன் மெம்பர் பதவி அளித்து அவரை சர்க்காரின் பிரதம காரிய தரிசி ஆக்கவும் முயற்சித்தவர் ஆச்சாரியாரே!

இதோ ஆச்சாரியார் ஆட்சியில் தமிழர்க்குக் கேடாக நடத்திய திரு விளையாடல்கள்: 1937இல் பப்ளிக் பிராசிகியூட்டர்கள் நியமிக்கப்பட்டதில் 7க்கு 3 இடங்களை பார்ப்பனர்களுக்குக் கொடுத்துவிட்டு அத்துடன் அடிஷனல் பப்ளிக் பிராசிகியூட்டர்களில் 3 பேரை பார்ப்பனராகவே போட்டார்.

சர்வீஸ் கமிஷன் ஒரு முஸ்லிமுக்கு எஞ்சினியர் வேலை கொடுத்தது; அதை ஆச்சாரியார் அப்போதைக்கு அந்த வேலையை தேவையில்லை என்று கூறி முஸ்லிம் வர முடியாமற் தடுத்துவிட்டார் ஆனால் அதற்கப்புறம் அந்த வேலை ஒரு பார்ப்பனருக்கு கொடுத்தார். அதுவும் சட்டப்படி தகுதியற்ற பார்ப்பானுக்கு அளித்தார்.

வகுப்புவாரி பிரதிநிதித்துவ முறைக்காக பார்ப்பனரல்லாதாருக்கு உயர்வு அல்லது நியமனம் கொடுப்பதற்காக தற்காலிகமாக வைத்திருந்த 80, 90 இடங்களை அந்த வேலையில் இருப்பவர் பார்ப்பனர் என்ற காரணத்தினால் உடனேயே அப்பதவிகளை நிரந்தரப்படுத்தி செய்ய உத்தரவிட்டார்!

இந்த சூழ்ச்சிகள் எல்லாம் வகுப்புவாரி முறையை ஒழிப்பதற்கே செய்யப்பட்டதாகும். 89 பேருக்கு வகுப்புவாரி முறைப்படி 11 பேர் தான் பார்ப்பனர் வர முடியும், 89ல் 80 பேர் பார்ப்பனர்களாகவே இருந்ததால் அத் தனைப் பேருக்கும் வேலை கொடுத்து ஆச்சாரியார் தன் இனத்துக்கு கெட்டிக் காரத்தனமாக இந்த ஏற்பாட்டைச் செய்தார்.

திரு. யாகூப் ஹாசன் என்ற முஸ்லீம் மந்திரி பதவி ஏற்றபின் தனக்கு சொந்த குமாஸ்தாவாக (பர்சனல் கிளார்க்) முஸ்லீம் ஒருவரை நியமித்துக் கொண்டார். மூன்றே நாட்களில் முஸ்லிம் குமாஸ்தாவை மாற்றி முஸ்லிம் மந்திரிக்கு ஒரு பார்ப்பன குமாஸ்தாவையே நியமித்து ஏற்றுக் கொள்ளச் செய்துவிட்டார்.


பனகால் அரசர் வெள்ளையரிட மிருந்த மருத்துவ இலாகாவை தமிழர்கள் கையில் ஒப்புவிக்கச் செய்ததை ஆச்சாரியார் தலைகீழாக மாற்றினார். டாக்டர் ராஜனை மந்திரியாக நியமித்து அவரைக் கொண்டே 225 கவுரவ டாக்டர்களை நியமிக்கச் செய்தார். இதில் 125 பதவிகள் பார்ப்பனர்க்கே தந்தார். தமிழர்க்கு 85 இடமே தந்தார். மற்றவை இந்து அல்லாதவர்க்கு வழங்கினார்.

ஜெனரல் ஆஸ்பத்திரியில் பிரபலமாக விளங்கிய டாக்டர் சடகோபனை (தமிழர்) வெளியேற்றி விட்டு அவருக்குப் பதிலாக 3 பார்ப்பனர்களைத் திணித்து விட்டார். என்ன அக்கிரமம். இக்கொடுமையிலிருந்து விடுபடவே தமிழ்நாடு தமிழருக்கே ஆக வேண்டுமென்றார் பெரியார். இதை யெல்லாம் வெளிப்படுத்துவதை வகுப்புத் துவேஷம், கொடுமை என்கிறார் ஆச்சாரியார். தமிழர்களை இப்படி நடத்துவது கொடுமையாக இல்லையா?

இவ்வாறு சர்.ஏ.டி. பன்னீர்செல்வம் அவர்கள் 1939 பிப்ரவரி 26ந் தேதி எழும்பூர் ஏரிக் கூட்டத்தில் பெரியாரை ஆச்சாரியார் சிறையில் தள்ளியதைக் கண்டித்துப் பேசுகையில் குறிப்பிட்டார்.
------------------------(விடுதலை 26.3.1963)


ஆச்சாரியார் ஆட்சி நடத்திய காலத்தில் அவர் தமிழ் மக்களுக்குச் செய்த கொடுமைகளைக் கொண்டே இந்த உண்மைகள் விளங்கும். ஆச்சாரியார் நடத்திய பூணூல் தர்பாருக்கு இதோ சில உதாரணங்கள்:

சிவானந்தம் அய்.சி.எஸ்., ஒரு தமிழர் என்கிற காரணத்தினாலேயே அவர் இருந்த பதவியைவிட கீழ்பதவிக்குத் தள்ளப்பட்டார். மற்றும் இரு அய்.சி.எஸ். பதவி வகித்த இரண்டு தமிழர்கள் திரு. எம். தியாகராசன் எஸ். சக்ரவர்த்தி ஆகியோருக்கு சொல்லவொண்ணாத் தொல்லை கொடுத்து வந்தார்.

மிக முக்கிய இலாகாவான போலீசு இலாகாவை திரு. புல்லாரெட்டி என்ற திரா விடரிடமிருந்து வாங்கி திரு. டி.என்.எஸ். ராகவன் அய்யங்கார் என்ற பார்ப்பனர் ஆதிக்கத்துக்கே விட்டு விட்டார்.

எல்லா மாவட்டங்களிலும், பப்ளிக் பிராசிகியூட்டர்களையும் பார்ப்பனராகவே நியமித்தார். அரசு வழக்கறிஞர்களையும் (பிளீடர்களையும்) பெரும்பாலும் பார்ப்பனராகவே நியமித்தார். தேர்தலில் மக்களால் புறக்கணிக்கப்பட்டு தோல்வி யுற்ற ஈ.வி. சீனிவாசாச்சாரி என்ற அய்யங் கார் பார்ப்பனரை, திருச்சியில் செங்கமலம் பிள்ளை என்ற தமிழரை நீக்கிவிட்டு நிய மித்தார் சென்னை காவல்துறை ஆணை யர் பார்த்தசாரதி அய்யங்காரின் சகோதரர் திரு. இராமனாத அய்யங்காரை கவர்ன் மெண்ட் பிளீடராக நியமித்தார்.

இவ்வளவையும் செய்த ஆச்சாரியார் பச்சைப் பார்ப்பனர் அல்லவா! இவற்றையெல்லாம் தலைகீழாகப் புரட்டி தமிழர்களைப் பதவிகளில் பொறுப்பாக அமர்த்திய காமராசர் பச்சைத் தமிழர் இல்லையா?

-------------------மானமிகு கலி.பூங்குன்றன் அவர்கள் 12-11-2011 “விடுதலை” ஞாயிறுமலரில் எழுதிய கட்டுரை


2 comments:

தமிழ் ஓவியா said...

சோவுக்குஎழுதப்பட்டகடிதம்


12.10.2011 துக்ளக் இதழில் 25ஆம் பக்கத்தில் தங்களது கேள்வி _ பதிலில் வை.கோ கருத்து குறித்து வாசகரின் கேள்விக்கு தங்களது பதில் சரியானதல்ல.

வழக்கமாக தாங்கள் சொல்லுகின்ற கீறல்பட்ட கிராமப் போன் இசைத்தட்டைப் போன்று பெரியார் தமிழ்மொழியை காட்டு மிராண்டி மொழி என்று சொல்லிவிட்டார் என்று தாங்கள் திரும்ப திரும்ப சொல்லிக் கொண்டு இருப்பது தங்களைப் போன்ற மிகப் பெரிய அறிவாளிகளுக்கு அழகான தல்ல. தந்தை பெரியார் அவர்கள் வேண்டு மென்றே அவ்வாறு சொல்லவில்லை. தனது பேச்சின் இடையில் இந்த வார்த்தையை அவர் சொல்லி இருக்கின்றார்.

பெற்றவன் தன் பிள்ளையை கழுதை என்று திட்டிவிடுவதாலேயே அவன் கழுதையாக மாறியதாக எங்கேயும் ஆதாரமில்லை. அதுபோன்றதுதான் பெரியாரின் வார்த்தையாகும்.

தமிழைக் காட்டுமிராண்டி என்று சொன்ன பெரியார் அவர்கள்தான் தமிழில் சீர்திருத்த எழுத்துகளை தந்து இருக்கின்றார். அதைத்தான் இன்றைக்கு புழங்கிக் கொண்டு இருக்கின்றோம். கடவுள் இல்லை என்று சொன்ன பெரியார்தான் கடவுளை கும்பிடுவதற்கு தமிழிலே மந்திரம் சொல் லுங்கள் என்று சொல்லி இருக்கின்றார்.

சமஸ்கிருதம் தேவ பாஷை. தமிழ் நீசமொழி. நீசம் என்றால் என்ன அர்த்தம்? இதை சொன்னவர் யார்? காஞ்சி சங்கராச்சாரியார் தானே?

விதவைகள் களர் நிலங்கள், பயிர் செய்ய முடியாத நிலங்கள். இதனை சொன்னது யார்? சங்கரராமன் கொலை வழக்கின் பிரதான குற்றவாளியான தங்களது ஜெயேந்திர சுவாமிகள்தானே?

வேலைக்கு போகின்ற பெண்கள் ஒழுக்கக்கேடர்கள். இதனை சொன்னது யார்? சங்கரராமன் கொலை வழக்கின் முக்கியக் குற்றவாளியான தங்களது ஜெயேந்திர சுவாமிகள்தானே?.

சோ அவர்களே இதற்கு தாங்கள் சொல்லுகின்ற பதில் என்ன?

காட்டுமிராண்டி என்ற வார்த்தையை விட நீசம் என்ற வாசகம் உயர்ந்ததா?

குறிப்பு: இக்கடிதம் துக்ளக்கில் வெளியிடப்படவில்லை.

- எஸ். ஆரோக்கியதாஸ்,
தந்தை பெரியார் உணர்வாளன்,
இரிஷிவந்தியம் - 606 205

தமிழ் ஓவியா said...

சோவுக்கு பகவத்தின் சவுக்கடி!பி.ஜே.பி.யின் செய்தித் தொடர் பாளராகவும் குஜ ராத் முதல் அமைச் சர் நரேந்திர மோடி யின் ஏஜெண்டாக வும் இருக்கக்கூடி யவர் திருவாளர் சோ ராமசாமி அய்யர் வாள்! இவ்வார துக்ளக்கில் (16.11.2011 பக்கம் 21) கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கையில் பா.ஜ.க. - ஆர்.எஸ்.எஸ். அமைப்புகளுக்கும், அன்னா ஹசாரேவுக்கும் இடையே எவ்விதத் தொடர்பும் இல்லை என்று ஓங்கி அடித்து எழுதியிருக்கிறார்.

கெட்டிக்காரன் புளுகுக்கே உச்ச வரம்பு எட்டு நாள் என்று வைத் திருக்கிறார்கள். ஆனால் சோவின் புளுகுக்கு அத்தனை நாள் தேவைப்படப் போவதில்லை.

ஆர்.எஸ்.எஸ்.சின் தலைவர் மோகன்ராம் பகவத் - அன்னா ஹசாரேவுக்கும், ஆர்.எஸ்.எஸ்.சுக்கும் உள்ள தொடர்பை நடு வீதியில் போட்டு உடைத்துவிட்டார்.

அன்னா ஹசாரேவுக்கும், ஆர்.எஸ்.எஸ்.சுக்கும் நீண்ட காலத் தொடர்பு உண்டு; ஊழல் எதிர்ப்புப் பிரச்சாரத்தை நடத்தும்படி சொன்னதே நாங்கள்தான் என்று கோணிப்பைக்குள் இருந்த பூனையை அவிழ்த்து வெளியில் தூக்கி எறிந்து விட்டாரே. ஆர்.எஸ்.எஸ். தலைவர். தி டைம்ஸ் ஆஃப் இந்தியா ஏடு (10-11-2011) முதல் பக்கத்தில் பளிச்சென்று தெரியும்படி வெளி யிட்டுவிட்டதே.

திருவாளர் சோ அய்யர் முகத்தை எங்கே கொண்டு போய் வைத்துக் கொள்வார்?
----"விடுதலை” 14-11-201