Search This Blog

28.11.11

ஜாதியின் வேரறுக்கச் சட்டநகல் எரிப்பு -3

ஜாதியின் வேரறுக்கச் சட்டநகல் எரிப்பு (3) அய்யாவின் அறப்போர் வரலாறு (26-11-1957)


இன்றைய லட்சியம், முயற்சியை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். ஜாதி ஒழிய வேண்டும் என்பது ஒரு சாதாரண சங்கதி. ஆனால் அது பிரமாதமான செயலாகக் காணப்படுகிறது. பிறவியில் யாவரும் தாழ்ந்தவர்கள் அல்ல. எங் களுக்கு மேல் எவனும் இல்லை. எல்லோரும் சமம் என்ற நிலை நமக்குத்தான் அவசியமாகத் தோன்றுகிறது.

பெரியாரின் இந்த வினா நியாயமான வினா. நெஞ்சை உறுத்திக் கொண்டிருந்த நேர்மையான வினா. ஒருவன் மேல் ஜாதி; ஒருவன் கீழ் ஜாதி; ஒருவன் பாடுபட்டே சாப்பிட வேண்டும்; ஒருவன் பாடுபடாமல் உட்கார்ந்து கொண்டே சாப்பிட வேண் டும் என்கிற பிரிவுகள் அப்படியே இருக்க வேண்டுமா? தீண்டாமை ஒழிய வேண்டு மென்பது சாஸ்திரத்திற்கு, ஆகமத் திற்கு விரோதம்தான். ஆனால் தீண் டாமையை ஒழிக்க வேண்டும் என்பது அரசியல் சூதாட்டத்திற்கு ஆக அவசியமாக இருந்தது. செய்தார்கள். அது போல இதற்கு ஏன் பரிகாரம் செய்யக்கூடாது.

ஒரு மனிதன், தான் ஏன் பிறவியில் தாழ்ந்தவன் என்று கேட்கக்கூடாது. கேட்க உரிமையில்லையென்றால் இது என்ன சுயராஜ்ஜியம்?

நான் ஏன் சூத்திரன்? நான் ஏன் வைப்பாட்டி மகன், நான் ஏன் கீழ் ஜாதி? இதற்குப் பரிகாரம் வேண்டும் என்றால் குத்துகிறேன் என்றான் வெட்டுகிறேன் என்றான் குத்தாமல் வெட்டாமல் இருக்கிறதுதானே தப்பு என்றுதானே எண்ண வேண்டியுள்ளது?

பெரியார் அக்கிரகாரத்தைக் கொளுத்தி 1000 பார்ப்பனர்களையாவது வீழ்த்தினால்தான் ஜாதி ஒழியுமென்றால் அவ்வாறே கொளுத்துவோம், அவ்வாறே வீழ்த்துவோம் என்றும் சற்றுக் கடுமையாகக் கூறி மிரட்டினார்.

எனவே திருச்சியில் பெரியாரைக் கைது செய்து 117,323,324, 326, 436, 302 ஆகிய ஆறு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தனர். பின்னர் விடுவித்தனர்.

9-11-1957 இல் பெரியார் வெளியிட்ட அறிக்கையில் ஜாதியை ஒழிப்பதற்காகப் போராடினேன்! மறியல் செய்தேன்! சிறை சென்றேன்! சர்க்கார்கள் விழிக்க வில்லை. ஆகவே ஜாதிக்கு ஆதாரமான சட்டத்தைக் கிழித்து தீயிலிட்டாவது இந்திய சர்க்காரின் மனதை மாற்றலாமா என்று கருதி அதைச் செய்தேன். இதில் எந்த உயிருக்கேனும் சேதமுண்டா? இதற்காக எனக்கு மூன்றாண்டு சிறைத் தண்டனை என்றால் இதை நான் மகிழ்ச்சியுடன் வரவேற்க வேண்டாமா? ஜாதியை ஒழிப்பதற்கு மூன்றாண்டு சிறை வாசம் செய்தவன் என்பதை விடப் பெரும் பேறு, முக்கியக் கடமை வேறென்ன இருக் கிறது? இந்த விதமாக நீங்கள் ஒவ் வொருவரும் உங்களையே கேட்டுக் கொள்ளுங்கள்.

11.11.1957 அறிக்கையில் கழகத் தோழர்களே! தீவிர லட்சியவாதிகளே! நீங்கள் மூன்று ஆண்டு தண்டனைக்குப் பயந்துவிட வேண்டியதில்லை. பயந்துவிட மாட்டீர்கள். சட்டத்தைப் பார்த்து பயந்து விட்டதாகப் பேர் வாங்காதீர்கள். ஆகவே இஷ்டப்பட்டவர்கள் தஞ்சை மாநாட்டுத் தீர்மானத்தை நிறைவேற்றப் பெயர் கொடுங்கள்.

26.11.1957 சட்ட எரிப்பு நாள் என்று அறிவித்தபின் தொடர்ந்து சொற்பொழிவு கள் மேற்கொண்டு அய்யா ஆதரவு திரட்டினார். அறிக்கை வெளியிட்டார்.

10-11-1957 இல் சென்னை எழும்பூரில் சொற்பொழிவு நிகழ்த்திய பெரியார் தம் சொற்பொழிவில் அரசியலமைப்புச் சட்ட நகலை எரிப்பதைக் கூட நெறிப்படி செய்ய வலியுறுத்தினார்.

காலணாவுக்கு அரசமைப்புச் சட்டத் தின் தொகுப்புக்குக் கிடைக்கும். அதை வாங்கி வைத்து நெருப்புக் குச்சியைக் கிழித்து வைத்துக் கொளுத்த வேண்டும். 3 வருடமோ 6 வருடமோ நீங்கள் தண் டனையைப் பற்றி ஏன் கவலைப்படுகிறீர் கள்? இது கடமை, செய்ய வேண்டியது. அவ்வளவுதான். தாய்மார்களும் பெருமள வில் கலந்து கொள்ள வேண்டும். ஜோடி ஜோடியாகக் கொளுத்துங்கள். அங்கே போய் குடும்பம் நடத்தினால் போகிறது; 26 ஆம் தேதி வரையில் வெளியில் இருந்தால் என் பங்குக்கு நானும் கொளுத்துவேன்.

15 ஆம் தேதியே என்னை உள்ளே போட்டாலும் போடலாம். ஏனென்றால் எனக்குப் போட்டிருக்கும் செக்ஷன்களுக்கு என்னை ஜாமீனில் விடமுடி யாது. ஆகவே அன்றே கைது செய்து வழக்குக்கு கொண்டுபோய் ஆஜர்படுத்தலாம். ஆனதால் போராட்டத்தில் கலந்து கொள்பவர்கள் போலீஸ்காரரிடமோ, அதிகாரிகளிடமோ முரண்பட்டு நடந்து கொள்ளாமல் காரியம் செய்ய வேண்டும். கட்டுப்பாடாக நடந்து கொள்ள வேண்டும். அதுதான் நமக்குப் பெருமை. கலவரமில்லாமல் ராமன் படம் எரித்த மாதிரி அவ்வளவு கட்டுப்பாடாக நடந்து கொள்ள வேண்டும்.

ஆண், பெண் எல்லோரும் கொளுத்த வேண்டும். போலீஸ்காரர்கள் முன் கூட்டியே மிரட்டுவார்கள். நடக்காமல் செய்யத் தந்திரம் செய்வார்கள். ஜாக் கிரதையாக நடந்து கொள்ளவேண்டும். தப்பித்துக் கொள்வேன் என்று எதிர் பார்த்து எதையும் செய்யக் கூடாது. வீட்டிலிருந்து கொளுத்தினாலும் போதும். கொளுத்திக் கையில் பிடித்துக் கொண்டு போலீசின் எதிரில் நில்லுங்கள். கைது செய்திருக்கிறேன் என்றதும் பேசாமல் போய்விடுங்கள். அரசமைப்புச் சட்டம் கொளுத்தும் காரியத்துக்காக இத்தனை பேர் கைதாகி இருக்கிறார்கள் என்ற கணக்கு போதும். மூன்று வருடம் போடட்டும். குடும்பத்தோடு இருக்கலாம்.

16.11.1957 இல் விடுதலையில் சட்டத்தைக் கொளுத்துங்கள் சாம்பலை மந்திரிக்கு அனுப்புங்கள் என்று அறிக்கை வெளியிட்டார். 17.11.1957இல் வெளியிட்ட அறிக்கையில் இந்திய அரசமைப்புச் சட்டம் ஏன் எரிக்கப் படவேண்டும்? என்பதைச் சட்ட நிபுணரைவிடவும் சிறப்பாகப் பெரியார் விளக்கினார். இறுதியாக, இந்தச் சட்டத்தில் இந்து மதத்துக்குப் பாதுகாப்பு அறிவிக்கப்பட்டி ருக்கிறது. இந்து மதத்தில் ஜாதிக்குப் பாதுகாப்பு இருக்கிறது. ஜாதியை ஒழிப் பதற்கு இதில் இடமில்லை. ஜாதியைக் காப்பாற்றத்தான் இடமிருக்கிறது. இதை எளிதில் திருத்தியமைக்க ஜாதி ஒழிப்புக் காரருக்கு வசதியில்லை, வாய்ப்புமில்லை.

கடலூரில் 17.11.1957 இல் மஞ்சகுப்பத்தில் சொற்பொழிவாற்றுகையில் என்றென் றும் சூத்திரனாக இருப்பதை விட மானக் கேடு வேறு என்ன என்று கேட்டவர். தஞ்சாவூர் மாநாட்டில் தீர்மானம் போட்டுக் காலக்கெடு கொடுத்து அதுவும் தீர்ந்து விட்ட நிலையில், ஜாதிக்குப் பாதுகாப்பு சட்டத்தில் இல்லை என்று விளக்கம் கொடுக்கவோ அல்லது சட்டத்தைத் திருத் துகிறேன் என்று சொல்லாமல் சட்டத்தைக் கொளுத்தினால் 3 ஆண்டு சிறை என்று சட்டம் கொண்டு வந்து விட்டனர்.

எனவே பெரியார் அடக்கு முறைச் சட்டம் செய்த பிறகு நாம் சும்மா இருந்தால் வெளியில் தலைகாட்ட முடியுமா என்று கேட்டு இந்த நிலையில் குடும்பத்துக்கு ஒருவர் சிறைக்குப் போக நாம் துணிந்து விட வேண்டியது தானே! மூன்று வருடமோ அது மூன்று நிமிடம் என்றால் தானே நான் மனிதன் என்று கேட்டு நவம்பர் 26 ஆம் நாளன்று ஆயிரக்கணக்கில் இரகசியமாயில்லாது பகிரங்கமாகக் கொளுத்த வேண்டும். அதைக் கொளுத்தி விட்டுப் பெயர் கேட்டால் சந்தோசமாகக் கொடுங்கள். கோர்ட்டுக்கு அழைத்துக் கொண்டு போனால் செல்லுங்கள் என்றும் கூறினார்.

------------ தொடரும் - முனைவர் பேராசிரியர் ந.க.மங்களமுருகேசன் அவர்கள் 28-11-2011 “விடுதலை” யில் எழுதிய கட்டுரை

0 comments: