Search This Blog

7.9.15

ஜாதி மறுப்புத் திருமணம் செய்தால் ஜாதி ஒழிந்துவிடுமா?

வேறு நாடுகளிலும் இட ஒதுக்கீடு உண்டா?
குற்றாலம் பெரியாரியல் பயிற்சி பட்டறையில் பங்கேற்றோர் கேட்ட கேள்விகளுக்கு தமிழர் தலைவர் ஆசிரியர் பதில்!

சென்னை, செப்.5- வேறு நாடுகளில் இட ஒதக்கீடு உண்டா? என்பது உள்பட பல்வேறு கேள்விகளுக்கும்  திராவிடர் கழகத் தலைவர்  பதிலளித்தார்.
குற்றாலத்தில் நடைபெற்ற பெரியாரியல் பயிற்சி பட்டறையின் நிறைவு நாளான 23.8.2015 அன்று பயிற்சி பட்டறையில் பங்கேற்றோர் கேட்ட கேள்விகளுக்குத் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் பதிலளித்தார். வினா-விடை வருமாறு:

நீங்கள் ஏன்  அரசியலுக்கு வரக்கூடாது?

கேள்வி: நாட்டில் நடக்கும் அனைத்துப் பிரச்சினை களையும் தட்டிக் கேட்கும் திறமை உங்களிடம் உள்ளது - நீங்கள் ஏன் அரசியலுக்கு வரக்கூடாது?


தமிழர் தலைவர்: அரசியலுக்கு வந்தால், தட்டிக் கேட்கும் நிலை நம்மைவிட்டு போய்விடும்.


கேள்வி: ஏன்? எதற்கு? எப்படி? என்கிற கேள்விகளைக் கேட்டாலே, பகுத்தறிவு பிறக்கும் எனக் கூறிய தந்தை பெரியார், தன் இயக்கத்தில் இணைந்த யாரும், இயக்கத்தை யாரும் அப்படியே ஏற்கவேண்டும் என அய்யாவின் புத்தகம் ஒன்றில் படித்துள்ளேன்; அய்யா அவ்வாறு கூறியது ஏன்?

தமிழர் தலைவர்: நல்ல கேள்வி. சமுதாயத்தில் காலங்காலமாக இருக்கக்கூடிய சீர்கேடுகளையெல்லாம் அகற்றி, புரட்டிப் போட்டு, ஒரு புதிய உலகத்தை, புதிய சமு தாயத்தை உருவாக்கவேண்டும் என்று நினைக்கின்ற ஒரு சமுதாய புரட்சி இயக்கம் - தந்தை பெரியாருடைய இயக்க மாகும். இந்த இயக்கத்தில் ராணுவக் கட்டுப்பாடுபோல இருந்து செயலாற்றவேண்டும். இந்த இயக்கத்தைப் பொறுத்தவரையில் தலைமை சிந்திக்கவேண்டும்; தோழர்கள் செயல்படவேண்டும். ஏனென்றால், இது ஒரு சமுதாய புரட்சி இயக்கம். இது பதவி களுக்காக இருக்கக்கூடிய ஒரு தேர்தல் இயக்கம் அல்ல. இதை தேர்தல் மூலமாகவும் தோழர்கள் யாரும் மெஜாரிட்டி, மைனா ரிட்டி போட்டு எடுப்பதில்லை. காரணம் என்னவென்றால், அப்படி வந்தால், எதிர்காலத்தில் ஊடுருவல்கள் உள்ளே வந்து, பவுத்தம் அழிந்ததைப்போல,  பார்ப்பனிய ஊடுருவல்கள் உள்ளே வரும் என்பதையெல்லாம் தெளிவாக சிந்தித்துத்தான், பகுத்தறிவு சிந்தனையோடு என்னுடைய கொள்கைகளை ஏற்றுக்கொள்பவர்கள். கொள்கைகளை நடைமுறைப்படுத்தவேண்டும். இது ஒரு போராட்ட இயக்கம்; இது ஒரு சமுதாயப் போராட்ட இயக்கம் - புரட்சி இயக்கமாகும். எனவே, நாம் செய்ய வேண்டிய பணிகள் ஏராளமாக இருக்கின்றன. மக்களை நம் பின்னால் அழைத்துச் செல்லக்கூடிய இயக்கமே தவிர, மக்கள் பின் நாம் செல்லக்கூடிய இயக்கமல்ல. அப்படிப்பட்ட ஒரு தெளிவான திட்டத்தை வைத்து இயங்கக்கூடிய இயக்கம் - உள்ளே இருக்கக்கூடியவர்கள் தலைமையினுடைய கருத்தை ஏற்றுக்கொள்ளவேண்டும். ஏனென்றால், கொள்கைகள் என்பது வகுக்கப்பட்டு, அந்தக் கொள்கைகளை ஏற்றுக்கொண்டுதான் இந்த இயக்கத்திற்கு வருகிறீர்கள். தலைமையினுடைய பணி என்பதிருக்கிறதே, கட்டளை என்பது இருக்கிறதே அது அந்தக் கொள்கைகளை நடைமுறைப்படுத்த, செயல்வடிவில் கொடுக்க, நம்முடைய இலக்குகளை அடைய செய்யக்கூடிய மிக முக்கியமான ஒரு பணியாகும்.

எனவே, இந்தப் பணியில் குறுக்குச்சால் விட்டுக் கொண்டு, அது ஏன்? இது ஏன்? என்று கேள்வி கேட்டுக் கொண்டிருக்கக்கூடாது. உதாரணமாக, வகுப்பறைக்குச் செல்கின்றோம், வகுப்பறையில் சந்தேகம் வந்தால் கேள்வி கேட்கலாமே தவிர, எல்லாவற்றிற்கும் ஏன்? எதற்கு? என்று வாத்தியாரை கேள்வி கேட்டுக்கொண்டிருந்தால், வகுப்பு நடத்த முடியாது. சந்தேகம் வரக்கூடிய இடத்தில் கேள்வி கேட்கலாம். பொதுக்குழுவிலோ, மற்ற இடங்களிலோ தீர்மானம் நிறை வேற்றும்பொழுது யார் வேண்டுமானலும், எந்தக் கருத்தையும் சொல்வதற்குத் தந்தை பெரியார் அவர்கள் அனுமதிப்பார். ஆனால், முடிவெடுத்த பிறகு, அந்த முடிவை ஏற்றுக்கொள்ள வேண்டியவர்கள், எனக்கு ஒப்புதல் இல்லை என்று சொன்னால், அது சரி வராது. தமிழர் தலைவர் என்கிற புத்தகத்தில், தூத்துக்குடியில் 1948 ஆம் ஆண்டு நடைபெற்ற மாநில மாநாட்டில், தெளிவாக அய்யா அவர்கள், இந்த இயக்கம் ஒரு சர்வாதிகார இயக்கம் தான். காரணம் என்னவென்றால், ஒரு இடத்தில் கட்டுக் கடங்காத அளவிற்கு ஒரு நிலை ஏற்பட்டால், முதலில் காவல் துறையினர் என்ன செய்கிறார்கள், லேசாகத் தடியடி செய் கிறார்கள். அப்படியும் அந்த நிலைமை கட்டுக்கடங்காவிட்டால், பல பேரை காப்பாற்றுவதற்காக துப்பாக்கிச் சூடு நடத்து கிறார்கள். காவல்துறை அதிகாரி பயர் என்று சொல்லி விட்டால், காவலர்கள் அத்துணை பேரும் கையில் வைத் திருக்கும் துப்பாக்கியால் சுடுகிறார்கள்.

இராணுவத்தில் எப்படி லெப்ட் என்றால், அனைவரும் லெப்ட் திசையில்தான் செல்லவேண்டும். இல்லீங்க, லெப்ட் திசையில் திரும்பினால், ஒரு மாதிரியாக இருக்கிறது; அதனால் ரைட் திசையில் செல்லலாம் என்று கேள்வி கேட்பதற்கு அங்கே இடமே கிடையாது. அதுபோன்று இந்த இயக்கம் ராணுவக் கட்டுப்பாடு உள்ள ஒரு இயக்கமாகும். அதனால்தான் அய்யா சொல்கிறார், இந்த இயக்கத்திற்கு வருவதற்கு முன் எவ்வளவு தூரம் வேண்டுமானாலும் சிந்தித்துப் பாருங்கள்! இந்த இயக்கம் சரியா? ஏற்றுக்கொள்ளலாமா? என்று.
கொள்கையை நடைமுறைப்படுத்துவதற்குத்தான் இயக்கம்; இலக்கை அடைவதற்குத்தான் இயக்கம்; சமு தாயத்தை மாற்றுவதற்குத்தான் இயக்கம். அந்தப் பணியைப் பற்றி சிந்திக்கவேண்டிய பொறுப்பு தலைமைக்கு உண்டு. செயல்படவேண்டிய கடமை தொண்டர்களுக்கும், தோழர் களுக்கும் உண்டு. எனவே, இங்கே கேள்வி கேட்டுக்கொண் டிருந்தால், ராணுவத்தில் கேள்வி கேட்பதுபோன்றதுதான்.

ஆகவே, நிச்சயமாக இந்த இடத்தில், தலைமை சொல்வதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்றால், தாராளமாக - இந்த இயக்கத்திற்கு இரண்டு வாசல் உண்டு. ஒன்று Way-In மற்றொன்று Way-Out  உள்ளே வரலாம்; வெளியே செல்லலாம். அதனால், நீங்கள் எப்போதுவேண்டுமானாலும், வெளியில் செல்லலாம். இல்லை இல்லை நீங்கள் உள்ளே வந்துவிட்டீர்கள், கல்லானாலும் கணவன், புல்லானாலும் புருஷன் என்று சொல்கின்ற பழைய இந்து திருமண முறை போன்ற நிலை இந்த இயக்கத்தில் கிடையாது.

ஆகவே, தெளிவாக செயல்படுத்தவேண்டும் என்றால், அந்தக் கட்டுப்பாடுதான் தேவை. எனவே, எந்த இயக்கமும், எந்தக் கொள்கையும் வெற்றி பெறுவதற்கு அடிப்படையானது கட்டுப்பாடு! கட்டுப்பாடு!! கட்டுப்பாடு!!! அந்தக் கட்டுப்பாட்டை அடிப்படையாகக் கொண்டுதான் தந்தை பெரியார் அவர்கள் இந்தக் கருத்தைச் சொன்னார்கள்.

பெரியார் காலத்திலும் அதே நிலைதான்! பெரியாருக்குப் பின் அன்னை மணியம்மையார் காலத்திலும் அதே நிலை தான்! எங்களைப் போன்ற எளியவர்கள் வழிநடத்தக் கூடிய, தலைமை ஏற்றிருக்கக்கூடிய இந்தக் காலகட்டத்திலும் அதே நிலைதான்!

திராவிடர் கழகம் என்று சொன்னால், சமுதாயப் புரட்சி இயக்கம் என்று சொன்னால், நாளைக்கும் இதே நிலைதான்.  இதுதான் மிக முக்கியமானது.

அன்றைக்கு புத்த மதத்திற்கு ஏற்பட்ட ஆபத்து, இந்த இயக்கத்திற்கு வரும். எனவேதான், இங்கே கருத்திணக்கத்தின் மூலமாக தலைமை ஒவ்வொருவரையும் நியமிக்கிறது; அவர்கள் செயல்படுகிறார்கள். இந்த இயக்கத்தில் பதவிகள் கிடையாது; பொறுப்புகள் மட்டும்தான் உண்டு.
எனவே, இங்கே அலங்காரப் பதவிகளோ, பெருமை களோ கிடையாது. பொறுப்புகள்தான். அவர்கள் கடமை யாற்றவேண்டும் என்று சொல்கின்ற இயக்கம். ஆகவே, இது தனித்தன்மையான இயக்கமாகும். எனவே, தந்தை பெரியார் அவர்கள் சொன்னது நூற்றுக்கு நூறு சரியான கருத்தாகும்.

வேறு நாடுகளில் இட ஒதுக்கீடு உண்டா?

கேள்வி: இட ஒதுக்கீடு இந்தியாவை தவிர வேறு நாடுகளில் உண்டா?


தமிழர் தலைவர்: காலையிலேயே இதுபற்றி சொல்லியிருக்கிறேனே!  இந்தக் கேள்வி கேட்டவர் வகுப்பிற்கு வராமல் இருந்திருக்கவேண்டும்; அல்லது  அலட்சியமாக இருந்திருக்கவேண்டும்; அல்லது கவனித்திருந்தாலும், விளங்கிக் கொள்ளாமல் இருந்திருக்கவேண்டும். எப்படியிருந் தாலும், நான் மறுபடியும் சொல்கிறேன்.

இட ஒதுக்கீடு ஒவ்வொரு நாடுகளில் ஒவ்வொரு மாதிரி உண்டு. அமெரிக்காவில் affirmative action என்று அதற்குப் பெயர். ஒரு அலுவலகத்தை எடுத்துக்கொண்டால், இந்தியர் களுக்கு இவ்வளவு கோட்டா - கறுப்பர்களுக்கு இவ்வளவு கோட்டா என்று கட்டாயம் இருக்கவேண்டும். இல்லை யென்றால், அலுவலகம் நடத்துவதற்கு உரிமம் தரமாட்டார்கள். தனியார் துறையில் இட ஒதுக்கீடு சாத்தியமா? என்று கேட்பவர்களுக்கு இதுதான் பதில்.
அதேபோன்று, பொலிடிக்கல் ரிசர்வேசன் என்பார்கள்; பூமி புத்ரா- மண்ணின் மைந்தர்கள். துபாயில் யாரும் தனியாகக் கம்பெனி நடத்த முடியாது. நம்மாள் அங்கே வேலைக்குச் செல்லலாம்; நம்மாள் எவ்வளவுதான் முதலீடு செய்தாலும், அங்கே உள்ளவர்கள்தான் 55 சதவிகிதம் பெயரளவிற்காவது பங்கேற்கவேண்டும். டார்மென் பார்ட்னர் என்று அதற்குப் பெயர். உறங்கிக் கொண்டிருப்பவர்கள் போன்று இருப்பார்கள். ஆகவே, இட ஒதுக்கீடு அங்கே மண்ணின் மைந்தர்களைப் பொறுத்து இருக்கிறது. மற்றவர்களுக்கும், அவர்களுக்கும் உள்ள போட்டியை தவிர்ப்பதற்காக இட ஒதுக்கீடு இருக்கிறது.
இன்னொன்றையும் இந்த நேரத்தில் சொல்லியாக வேண்டும். ரிசர்வ் தொகுதி என்று இருக்கிறது பாருங்கள், அது பொலிடிக்கல் ரிசர்வேசன். உத்தியோகம், கல்வி, வேலை வாய்ப்பில் இருப்பதெல்லாம் சோசியல் ரிசர்வேசன் - சோசியல் ஜஸ்டீஸ். ஆகவே, அதற்குத்தான் பத்து வருஷம் என்று வைத்திருக்கிறார்கள்.

சில பேர் புரியாமல் என்ன செய்கிறார்கள், என்னங்க, பத்து வருஷம்தானே அரசியல் சட்டத்தில் வைத்திருக் கிறார்கள். பிறகு ஏன் இட ஒதுக்கீட்டை நீட்டிக் கொண்டே போகிறார்கள் என்று. இட ஒதுக்கீட்டிற்கு கால எல்லையே கிடையாது. ஆனால், கால எல்லை இல்லாமல் இருக்க வேண்டும் என்பது நமது கருத்தா என்றால், இல்லை. அண்மை யில் விடுதலையைப் படித்திருந்தால், உங்களுக்குத் தெளிவாகத் தெரியும்.
உதாரணத்திற்கு சுருக்கமாகச் சொல்கிறேன், ஒரு சிறிய பாலத்தை, அகலமாகக் கட்டவேண்டும் என்று அந்த சிறிய பாலத்தை இடித்துவிட வேண்டும்; அதற்குப் பக்கத்தில் மாற்று பாதை ஒன்றை ஏற்படுத்தியிருப்பார்கள் (டைவர்சன் ரூட்). இட ஒதுக்கீடு என்பது டைவர்சன் ரூட் போன்றது; பாலம் கட்டுவது - ஜாதி ஒழிப்பு.
ஜாதி ஒழிப்பு என்கிற பாலம் கட்டுகின்ற வரையில், எவ்வளவு காலத்திற்கு இட ஒதுக்கீடு என்றால், எவ்வளவு காலத்திற்கு நீங்கள் பாலம் கட்டுவதைத் தாமதம் செய்கிறீர் களோ, அதுவரை இந்த இட ஒதுக்கீடு இருக்கும்.
எனவே, இட ஒதுக்கீட்டிற்கு கால நிர்ணயம் கிடையாது. நாட்டால் வேறுபட்டிருக்கிறது; தத்துவத்தால் இருக்கிறது.

ஜாதி பெயரை நீக்க திராவிடர் கழகம் போராட்டம் நடத்துமா?

கேள்வி: கல்விக் கூடங்களில் ஜாதி பெயரை நீக்க திராவிடர் கழகம் போராட்டம் நடத்துமா?

தமிழர் தலைவர்: இட ஒதுக்கீட்டிற்காக ஜாதியைக் கேட்பது என்பது தவிர்க்க முடியாதது; தேவையும் கூட!

ஏனென்று கேட்டால், ஜாதியைக் காரணம் காட்டித்தான் நம்மை படிக்கக்கூடாது என்று சொன்னார்கள். மற்றவர்களோடு சரி சமமாக வரும்வரை - நான் சொன்ன பாலம் கட்டும்வரை - அடையாளத்திற்கு ஜாதியைப் போடவேண்டும். ஆனால், அதற்காக ஜாதி சின்னங்கள், ஜாதி வெறியோடு இருக்கிறார்கள்.

அதற்கு அய்யா அவர்கள் ஒரு நல்ல உதாரணத்தைச் சொல்லியிருக்கிறார்.

வைரஸ் காய்ச்சல் ஒருவருக்கு வருகிறது; அதற்கு ஆண்டிபயாடிக் மருந்து கொடுப்பார்கள். அந்த மருந்தை நீங்கள் நன்றாகக் கவனித்துப் பார்த்தீர்களேயானால், பாய்சன் என்று ஒரு வார்த்தையை போட்டிருப்பார்கள். குறைவான அளவிற்கு அந்த மருந்தில் விஷத்தை சேர்த்திருப்பார்கள். எதற்காக சேர்த்திருக்கிறார்கள், நோய்க் கிருமிகளை அந்த விஷம் போய் சாகடிக்கும். அந்தக் கிருமிகளைச் சாகடித் தால்தான், அந்த வைரஸ் காய்ச்சலில் இருந்து விடுபட முடியும். அதுபோன்று, ஜாதியை வைத்து நம்மை அவர்கள் தடுத் தார்கள். அந்த ஜாதியை இட ஒதுக்கீட்டிற்கு மட்டும் அடை யாளப்படுத்தக் கூடிய அளவிற்கு, அளவான விஷத்தை எப்படி மருந்தில் வைத்தார்களோ, அதுபோன்று ஜாதியை அளவான அளவில் வைக்கவேண்டும் என்று தந்தை பெரியார் அவர்கள் தெளிவுபடுத்தினார்.


அம்மைநோயைப் போக்க மருத்துவர்கள் என்ன செய்கிறார்கள்; அம்மைக் கிருமியை உடலுக்குள் செலுத்து கிறார்கள். உடலில் உள்ள அம்மை நோய் கிருமியை, உடலுக்குள் செலுத்திய அம்மை நோய்க் கிருமி எதிர்த்துப் போராடும். அதுபோன்று, ஜாதியை ஒழிக்க இட ஒதுக்கீடு தேவை. சமத்துவம் வரும்வரை தேவை. சமத்துவம் என்று சொல்வதில், நாம் மிகவும் எச்சரிக்கையாக இருக்கவேண்டும்.


ஏனென்றால், பார்ப்பான் இப்படி நுழைந்து அப்படி வருவான்; அப்படி நுழைந்து இப்படி வருவான். சமத்துவம் எல்லோருக்கும் தேவைதான்; சம வாய்ப்பு எல்லோருக்கும் தேவைதான் என்று அவன் சொல்கிறான்.


நாம் மேட்டையும், பள்ளத்தையும் சமமாக ஆக்க வேண்டும் என்று நாம் சொல்கிறோம். அதற்காக மண்ணைக் கொண்டு வந்து பள்ளத்தில் போடவேண்டும் என்று நாம் சொன்னால்,
ஆனால், அவன் என்ன சொல்கிறான், ஒரு கூடை மண்ணை பள்ளத்தில் போடுங்கள்; இன்னொரு கூடையை மேட்டில் போடுங்கள் என்றால், மேடு மேடாகத்தான் இருக்கும்; பள்ளம் பள்ளமாகத்தான் இருக்கும்.
அதற்காகத்தான் சொல்கிறோம், கொஞ்ச காலத்திற்கு மேட்டில் மண்ணைக் கொட்டாதே என்று.

நியாயமாக இட ஒதுக்கீட்டை சரியாக அமல்படுத்தினால் - இந்திய அரசியல் சட்டத்தில் இருக்கின்ற கருத்துப்படி அமல்படுத்தினால், அதில் இருக்கிற Adequate representation என்கிற வார்த்தையை சரியாக நீதிபதிகள், யோக்கியமாக, நாணயமாக வியாக்கியானப்படுத்தி செயல்படுத்தினால், கொஞ்ச காலத்திற்கு முன்னேறிய ஜாதியினருக்கு இட ஒதுக்கீடு கொடுக்கக்கூடாது; மேட்டில் கொட்டுகிற மண்ணை   நிறுத்தி விட்டு, பள்ளத்திற்கே எல்லா மண்ணையும் கொட்டவேண்டும் என்று சொல்லக் கூடிய அளவிற்கு வரவேண்டும்.

எனவே, இட ஒதுக்கீட்டைப் பொறுத்தவரையில் பல வகையான இட ஒதுக்கீடு உண்டு. அதில் ஜாதி பிரச்சினை யைப்பற்றி சொல்கிறார்கள்.

பள்ளிக்கூடங்களில் ஜாதியைக் கேட்பதினால், ஜாதி உணர்ச்சி வருகிறது என்றால், அதற்கும் ஒரு வழிமுறையைச் சொல்லியிருக்கிறோம். அது என்னவென்றால், ஜாதியை ஒழிப்பதற்கு, கலப்பு திருமணம் செய்தவர்களுக்கு இட ஒதுக்கீடு கொடுக்கவேண்டும். புதிதாக I.C. (Intercaste Quota)  கோட்டா என்று புதிதாக ஒன்றை உருவாக்கம் செய்யவேண்டும். BC, MBC, SC, ST, OBC முன்னேறியவர்களுக்கு என்று தனியாகக் கிடையாது.

இதிலிருந்து ஒரு அய்ந்து சதவிகிதத்தை எடுத்து, I.C. (Intercaste Quota) கலப்பு திருமணம் செய்கின்றவர்களின் பிள்ளைகளுக்குக் கொடுக்கவேண்டும். அய்ந்து அதில் குறையவேண்டும்; புதிதாக ஒரு அய்ந்தை உருவாக்க வேண்டும். அடுத்த ஆண்டு 10 ஆக்கவேண்டும்; அதில் 10 குறையும். ஆகவே, ஜாதி கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்து கொண்டு வந்து, ஜாதியவற்றவர்கள் அதிகமாவார்கள்.

இப்பொழுது I.C. Quota என்று வந்தால்கூட, அப்பா என்ன ஜாதி? அம்மா என்ன ஜாதி? என்று கேட்டு, மறுபடியும் ஜாதியைப் புதுப்பிக்கின்ற மாதிரி ஆகிவிடும். ஆகவே, அதற்காக என்ன செய்யவேண்டும் என்றால், Backward என்ற ஒன்று வைத்து, அதில் என்ன ஜாதி என்று காட்டக்கூடாது. இந்த ஆண்டு Backward OBC என்று மட்டும்தான் இருக்க வேண்டும். அதிலுள்ள தனிப்பிரிவை எடுத்துவிடலாம். அதே போன்று எஸ்.சி.,யில் உள்ள தனிப் பிரிவை எடுத்துவிடலாம்.

இதற்கு மிகவும் பக்குவப்படவேண்டும். இப்பொழுது பார்த்தீர்களேயானால், என் ஜாதி மேலே போய்விட்டது; கீழே போய்விட்டது என்று ஜாதி பெருமைகளைச் சொல்கின்ற உணர்வுகள் எல்லாம் அடி வாங்கி, ஜாதியைப் போட்டால் செல்லாது; அதற்குப் பதிலாக ஒரு குறிப்பிட்ட ஆண்டைக் கணக்கெடுத்துக் கொள்கிறோம். அதை இண்டக்ஸ் இயராக எடுத்துக் கொள்கிறோம். அந்த ஆண்டின்படி எவ்வளவு வந்ததோடு, அதுபோன்று தெளிவுபடுத்தி, எஸ்.சி., என்று சொன்னால், இத்தனை ஜாதிகளும் சேர்ந்து இன்னின்ன பிரிவுகளில் வந்துவிடுகிறது.

அதிலும் சப்-காஸ்ட் வைத்திருக்கிறார்கள். மட்டத்தில் ஒஸ்தி போன்று, கீழே இருக்கிறவன்; அவர்கள் செருப்பு தைக்கிறவர்கள்; அவர்களுக்கு இட ஒதுக்கீடு கொடுக்கக்கூடாது - இதை யார் சொல்கிறார்கள் என்றால், பார்ப்பான் சொல்ல வில்லை; அவர்களுக்கு மேலே உட்கார்ந்திருக்கிறார்களே, அவர்கள் சொல்கிறார்கள். அதைத்தான் அம்பேத்கர் அவர்கள் Graded Inequality 
படிக்கட்டு ஜாதி முறை என்றார். தனக்குக் கீழே யார் இருக்கிறார்கள் என்பதுதான் அவர்களுக்கு முக்கியமே தவிர, தனக்கு மேலே யார் உட்கார்ந்திருக்கிறார்கள் என்பதைப்பற்றி அவர்கள் கவலைப்படவில்லை.

மற்ற இடங்களில் இருப்பது பேதம் - அபேதம்; சமத்துவம் - சமத்துவமின்மை. இரண்டும் சமமாக இருக்கிறது.  டக்கபாரை இழுக்கும்போது சமதளத்தில் இருந்து இழுக்கிறார்கள் மற்றவர்கள். ஆனால், இங்கே அப்படியல்ல, ஒரு படி, இரண்டு படி என்று படிக்கட்டை வரிசையாக வைத்து ஒரு பக்கம் இழுக்க - மறுபக்கம் சமதளத்தில் இருந்து இழுத்தால் அது எப்படி சமமாக இருக்கும்.

ஆகவேதான், ஜாதியை நாம் அடையாளப்படுத்துகிற அளவிற்கு For Limited Use என்று சொல்லக்கூடிய அளவிற்கு மட்டும்தான் இருக்கவேண்டுமே தவிர, வேறொன்றும் இல்லை. அதுவும் ஒரு குறிப்பிட்ட காலம் மட்டும்தான்.

அதனால்தான் அய்யா சொன்னார், தீண்டாமை ஒழிக்கப்பட்டதற்கு என்பதற்குப் பதிலாக, ஜாதி ஒழிக்கப்பட்டது என்று அரசியல் சட்டத்தில் கொண்டு வந்துவிடுங்கள்; அப்பொழுது நாம் ஜாதியை போடவேண்டிய அவசியமில்லை. அதற்குப் பதிலாக, அடையாளப்படுத்துவதற்கு என்ன செய்யலாம், கொஞ்ச நாள் வரைக்கும், 10 ஆண்டுகள், 20 ஆண்டுகள் சமத்துவம் வருகின்ற வரையில், என்ன திட்டம் என்று சொன்னால், இந்த அளவிற்கு இருக்கவேண்டும் இட ஒதுக்கீடு என்று சொன்னார்.

எனவே, இட ஒதுக்கீடு என்பதற்காக ஜாதி அடையாளப் படுத்த மட்டும்தான் தேவை. இட ஒதுக்கீடு நிரந்தரமாக நமக்குத் தேவை என்பது நமது நிலைப்பாடு அல்ல!

தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சி சாத்தியமா?

கேள்வி: மாநிலத்தில் தற்பொழுது கூட்டாட்சி முறை என்கிற கருத்து வலுத்து வருகிறது. இது சாத்தியமா? பயன் தருமா?

தமிழர் தலைவர்: தவறாகக் கேட்டிருக்கிறார்; கூட்டணி ஆட்சியா? கூட்டாட்சியா? அவர் கேட்டது கூட்டணி ஆட்சி யாகத்தான் இருக்கும். எல்லாக் கட்சிகளும் பங்கேற்க வேண்டும் என்று சொன்னால், அது கூட்டணி ஆட்சியாகும்.

நேற்றுகூட இந்தக் கேள்வியைக் கேட்டார்கள்; கொள் கையில் ஒத்துப் போவதற்குக் கூட்டணிக் கட்சிகளுக்குப் பஞ்சமில்லை தமிழ்நாட்டில். மலிவாக தமிழ்நாட்டில் ஆரம்பிக்கக்கூடிய ஒன்று உண்டு என்றால், பள்ளிக்கூடம் ஆரம்பிக்க முடியாது; அரசாங்கத்திடம் அனுமதி வாங்க வேண்டும்; தொழிற்சாலையை உடனே ஆரம்பிக்க முடியாது. மிகவும் சுலபமாக இரண்டு பேர் சேர்ந்தோ அல்லது ஒருவர் இருந்தால்கூட ஆரம்பிக்கக் கூடிய ஒன்றே ஒன்று கட்சிதான், நம் நாட்டில்.
காலையில் நினைத்தால், மாலையில் உடனே ஒரு கட்சியை ஆரம்பித்துவிடலாம். இரண்டாவது ஆள் இருக்க வேண்டும் என்கிற கவலையில்லை. கணவன் கட்சி ஆரம்பித்தால், மனைவிகூட அந்தக் கட்சியில் சேர்வார்களா? என்பதுபற்றி கவலையில்லை.
பத்திரிகையாளர் அவர்களிடம் சென்று, உங்கள் கட்சிக்குப் பெயர் என்ன? உங்கள் கட்சிக்குக் கொடி என்ன? உங்கள் கட்சிக்கு கொள்கை என்ன? என்று கேட்டால், அதையெல்லாம் பின்பு சொல்கிறோம்; அதைப்பற்றி யோசித்துக் கொண்டிருக்கிறோம். எத்தனைக் கலரில் கொடி இருக்கிறது என்பதைப் பார்ப்போம். பின்பு கொடியை வடிவமைப்போம் என்று சொல்வார்.

இதுபோன்று கட்சிகள் நிறைய வந்து, தேர்தலில் போட்டியிடுகிற அளவிற்கு வந்திருக்கிறார்கள். இப்பொழுது இந்தியா முழுவதும் அய்யாயிரத்து சொச்சம் கட்சிகள் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. தமிழ்நாட்டில் 147 சொச்சம் கட்சிகள் உள்ளன. ஜாதிகள் எவ்வளவு இருக்கிறதோ, அவ்வளவுக் கவ்வளவு கட்சிகள் இருக்கின்றன.

கட்சிகளைப் பார்த்தீர்களேயானால், ஏகப்பட்ட கட்சிகள்; எல்லாக் கொடிகளையும் வரிசையாக வைத்து, இந்தக் கொடியை வைத்திருக்கிற கட்சிக்கு யார் தலைவர்? அந்தக் கட்சிக்கு என்ன கொள்கை? என்று உங்களைக் கேட்டால், நூற்றுக்கு நூறு மதிப்பெண்களை யாரும் வாங்க மாட்டார்கள் - நான் உள்பட.

அதுபோன்று புற்றீசல் போன்று நாள்தோறும் கட்சி முளைத்துக் கொண்டிருக்கின்றன.

கூட்டணி ஆட்சி வேண்டும் என்று கேட்பதற்கு முன்பு, ஒரு கூட்டுக் கொள்கை வரவேண்டும். ஆட்சிக்கு வந்தால், நாங்கள் அந்தக் கூட்டுக் கொள்கைப்படி செய்வோம் என்று ஒரு கொள்கைப் பிரகடனத்தைக் கொடுத்து, முதலில் கொள்கையில் கூட்டு வரவேண்டும்; பிறகுதான் ஆட்சியில் கூட்டு வரவேண்டும். ஆட்சியே முதலில் வருகிறதா? இல் லையா? என்று நமக்குத் தெரியாது. இப்பொழுதே கூட்டணி அரசு என்றால், நேற்றே நான் பத்திரிகையாளர்களிடம் சொன்னேன், அத்தைக்கு மீசை முளைக்கட்டும்; அப்புறம் சித்தப்பாவா? பெரியப்பவா? என்று முடிவு செய்து கொள்ளலாம் என்று.

ஆகவே, முதலில் எதைச் செய்யவேண்டும் என்றால், முதலில் கொள்கை முன்னாலே வரவேண்டும்; பதவியில் பங்கு வேண்டும் என்று சொல்வதற்கு முன்பாக, கொள்கையில் முதலில் உடன்பாடு இருக்கவேண்டும்.

ஈழப் பிரச்சினை என்றால், நமக்கு அது பிரச்சினை; வடநாட்டில் உள்ளவர்களுக்கு ஈழத்தில் எவ்வளவு பேர் செத் தாலும், அவர்களுக்குக் கவலையில்லை. மத்திய அரசாங்கம் கவலைப்படாமல் இருந்தார்கள். மோடி அரசாங்கம் வந்தால் அந்தப் பிரச்சினை தீர்ந்துவிடும் என்று சொன்னார்கள், இவர் அவர்களுக்கு அண்ணனாக இருக்கிறார்.

ஆகவேதான், கூட்டணி ஆட்சி என்பது நம் நாட்டில், கொள்கையால் கூட்டணி வராமல், வெறும் பதவிக்காக சந்தர்ப்பவாத கூட்டணி என்றால், வெற்றி பெற்றதும் என்ன சொல்வார்கள், என்னுடைய ஆதரவால்தான் நீங்கள் வெற்றி பெற்றீர்கள். இல்லை, இல்லை, என்னுடைய ஆதரவால்தான் நீங்கள் வெற்றி பெற்றீர்கள் என்கிற சண்டை பெரிய அளவிற்கு இருக்கும் - இவையெல்லாம் ஏற்கெனவே பழைய அனுபவம். ஆகவே, மிகவும் எச்சரிக்கையோடு அணுகவேண்டிய பிரச்சினையாகும்.

அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆவது எப்போது?

கேள்வி: கோவில்களில் அனைவரும் அர்ச்சகர் என்பது இரண்டு முறை தோல்வி அடைந்துவிட்டது; அது மீண்டும் வருமா? அதற்கு நாம் என்ன செய்யவேண்டும்?

தமிழர் தலைவர்: மீண்டும் வருமா? என்று கேட்கிறார். மீண்டும் வருமா? என்று கேட்பதைவிட, மீண்டு வருமா? என்று கேளுங்கள். அதுதான் மிக முக்கியம். உச்சநீதிமன் றத்தில் வழக்கு இருக்கிறது, மீண்டு வரும். தீர்ப்பு மட்டும்தான் வரவேண்டும். வழக்கு நடத்தி முடித்தாயிற்று. சில நாள்களிலோ, சில வாரங்களிலோ எந்த நேரம் வேண்டுமானாலும் தீர்ப்பு வரலாம். நிச்சயமாக மீண்டு வரும். மீண்டு வராவிட்டால், மீண்டு வர வைக்க திராவிடர் கழகம், பெரியார் தொண்டர் களும், பகுத்தறிவாளர்களும் திராவிடர் இயக்கத்தவர்களும் இருக்கிறார்கள்.

           ----------------------------------------------------------- தொடரும் ------"விடுதலை”4-9-2015
****************************************************************************************************************************************************************

அதிகமான தேர்தலில் தி.மு.க.வை ஆதரிப்பது ஏன்? குற்றாலம் பெரியாரியல் பயிற்சி பட்டறையில் தமிழர் தலைவர் ஆசிரியர்  விளக்கம்சென்னை, செப். 6- திமுகவைப் பெரும்பாலும் தி.க. ஆதரிப்பது - ஏன் என்ற மாணவனின் கேள்விக்கு குற்றாலம் பெரியாரியல் பயிற்சி முகாமில் கழகத் தலைவர் ஆசிரியர் பதில் அளித்தார்.


குற்றாலத்தில் நடைபெற்ற பெரியாரியல் பயிற்சி பட்டறையின் நிறைவு நாளான 23.8.2015 அன்று பயிற்சி பட்டறையில் பங்கேற்றோர் கேட்ட கேள்விகளுக்குத் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் பதிலளித்தார். வினா-விடை நேற்றைய தொடர்ச்சி வருமாறு:

இன்றைய பள்ளிப் பாடத்தின் தரம் குறைவாக உள்ளதே!

கேள்வி: இட ஒதுக்கீட்டினால், மக்களுக்குக் கல்வி கிடைத்தது என்பது மறுக்கப்பட முடியாத உண்மை. ஆனால்,  காமராசருக்குப் பின்பு இரு திராவிட கட்சிகளின் ஆட்சியில், கல்வியின் தரம் உயர்த்தப்படவில்லையே ஏன்? இன்றைய பள்ளிப் பாடத்தின் தரம் குறைவாக உள்ளது அதனை உயர்த்த வழி என்ன?
தமிழர் தலைவர்: கல்விக்குத் தரம் என்றால், முதலில் தரத்திற்கு என்ன அடையாளம்?  எல்லோரும் பார்த்தீர்களே யானால், பார்வதி பதே என்பதை எல்லோரும் பாடுகிறார்கள். கல்வித் தரம் குறைந்துவிட்டது; கல்வித் தரம் குறைந்துவிட்டது என்று சொன்னால், நாங்க படித்த காலத்தில் என்று அவர் சொன்னார்; அதற்கு முதலில் அவருக்குச் சொல்லிக் கொடுத்த வரும், நாங்க படித்த காலத்தில் இருந்த தரம் இல்லை என்று அவர் சொல்கிறார். இதில் என்ன விஷயம் என்றால், முதலில் பட்டினியாக இருப்பவர்களுக்கு கஞ்சியாவது கொடுக்க வேண்டும்; இல்லையென்றால், பசியினால் அவன் இறந்துவிடு வான். முதலில் பசியாதிரு என்றால், கஞ்சியாவது ஊற்ற வேண்டும்.

பசியில்லாதவனையும், பசியால் வாடுகின்றவனையும் ஒன்றாக வைக்கக்கூடாது. முதலில் எல்லோருக்கும் கல்வி கிடைக்கவேண்டும்; பிறகுதான், அதுபற்றிய பிரச்சினை. எல்லோருக்கும் கல்வி கிடைக்கக்கூடாது என்று நினைத்து உண்டாக்கின உயர்ஜாதிக்காரர்களின் கூப்பாடுதான் இந்தத் தரம், தரம் என்பது. தரத்திற்கு வேறொன்றும் அடையாளம் கிடையாது.
கல்வியில் என்ன தரம்? நம் பிள்ளைகள் எல்லாம் நன்றாகப் படித்து நல்ல நிலைமையில் இருக்கிறார்கள். இட ஒதுக்கீட்டில் வந்தவர்கள்தான் பெரிய பெரிய பதவியில் இருக்கிறார்கள். ஓபன் காம்படிஷன் என்று சொல்லக்கூடிய வற்றில் வந்திருக்கிறவர்கள் எல்லாம் நம் பிள்ளைகள்தான். அதே வாத்தியார், அதே பாடம்தான். அப்துல்கலாம் எங்கே படித்தார்; அவர் தமிழ் பள்ளிக்கூடத்தில்தானே படித்தார்.  அவர் ஒன்றும் ஆங்கில வழிக் கல்வியில் படிக்கவில்லையே! எப்படி அவர் படித்து, விஞ்ஞானியாகி, அணுகுண்டு செய்கின்ற விஞ்ஞானியாக ஆக முடிந்தது. வாயப்புக் கிடைத்தது; உழைப்பு இருந்தது; மேலே வந்தார்.

ஆங்கிலத்தில் நன்றாகப் பேசினால்தான் தரமா? அல்லது நூற்றுக்கு நூறு மதிப்பெண் வாங்கினால்தான் தரமா? இங்கே ஆசிரியர்கள் நிறைய பேர் இருக்கிறீர்கள். கல்வி அதிகாரிகளாக இருப்பவர்களும் இருக்கிறார்கள். ஆசிரியராக இருப்பவர்கள் - திருத்துபவர்கள் சரியாக திருத்துகிறார்களா? முதலில் நம்பிக்கையாக சொல்ல முடியுமா? நல்ல மூடுல அவர் திருத்த வரவேண்டும்; மனைவியுடன் சண்டை போட்டு வரக்கூடாது; அவர் மகனுடன் மோதிவிட்டு வரக்கூடாது. அப்படி வந்தால், அவர் எதையாவது மதிப்பெண் போட்டு விட்டுப் போவார்.

ரீ டோட்டிலிங் என்று எதற்காக வைத்திருக்கிறார்கள். தவறு செய்கிறார்கள் என்றுதானே அர்த்தம். எங்களுடைய ஆசிரியர் ஒருவர் இருந்தார், அற்புதமான தமிழ்ப் புலவர் அவர். அவர் சொல்வார், என்னய்யா, முதல் வகுப்பு, இரண்டாம் வகுப்பு; எவ்வளவு மதிப்பெண் வாங்கினால் முதல் வகுப்பு; 60 மதிப்பெண் வாங்கினால் முதல் வகுப்பு. அப்படி என்றால், 40 தப்பு செய்திருக்கிறான் என்று அர்த்தம். நூற்றுக்கு நூறு அவன் வாங்கவில்லை. சரி, இரண்டாவது வகுப்பு என்றால், எவ்வளவு மதிப் பெண். 50 மதிப்பெண் வாங்கவேண்டும்; அப்பொழுது 50 தப்பு செய்திருக்கிறான். இவன் தப்புக்கும், அவன் தப்புக்கும் என்ன வித்தியாசம்? பத்து வித்தியாசம்; பத்து வித்தியாசமும் வாத்தி யார் சரியாக திருத்திப் போட்டார் என்பதற்கு என்னய்யா அளவுகோல் என்று கேட்பார்.
ஆகவேதான், தரம் என்பது இருக்கவேண்டும்; அதற்காக ஒன்றுமே தெரியாதவர்கள் வரவேண்டும் என்று நாம் சொல்லவரவில்லை. ஆங்கிலமே தெரியாதவன்; படிக்கத் தெரியாதவன், பேசத் தெரியாதவன் வரவேண்டும் என்று நாம் சொல்லவில்லை. முதலில் எல்லோருக்கும் பந்தியில் சாப்பாடு போடுவோம்; முதலில் சாப்பிடட்டும்; அரை வயிறு கஞ்சியாவது எல்லோருக்கும் கொடுப்போம். அப்படி கொடுத்த பிறகு, சாப்பாட்டு தரத்தைப்பற்றி பேசலாம்.

முதலில் பசியைத் தீர்க்கட்டும்; எல்லோருக்கும் கல்வி கிடைத்ததா? என்பதுதான் மிக முக்கியம். அது இன்னும் கிடைக்கவில்லை. தாழ்த்தப்பட்ட சமுதாயம், பிற்படுத்தப்பட்ட சமுதாயத்திலிருந்து பெண்கள் இன்றைக்குத்தான் படித்து மேலே வருகிறார்கள். ஒரு காலத்தில் அடுப்பூதும் பெண் களுக்குப் படிப்பெதற்கு என்று கேட்டார்கள்; இன்றைக்கு ஊதுகிற அடுப்பே இல்லை. திருகுகிற அடுப்பு வந்துவிட்டது. மாமியார் பற்ற வைத்தால் வெடிக்காத ஸ்டவ், மருமகள் சென்றால் மட்டும் வெடிக்கிறது.
நம்முடைய இயக்கம் அறிவுத் துறையில் மாற்றங்களை உண்டாக்குகின்ற ஒரு இயக்கமாகும். அதனால், எல்லோரும் சொல்லிக் கொண்டிருக்கின்ற கிளிப்பிள்ளை பாடத்தையே நாமும் சொல்லவேண்டிய அவசியம் இல்லை.

சமஸ்கிருதத்தை அனைவரும் படிக்கவேண்டும் என்று பா.ஜ.க. அரசு சொல்கிறதே!

கேள்வி: முந்தைய காலத்தில் பார்ப்பனர்களைத் தவிர வேறு யாரும் சமஸ்கிருதம் படிக்கக்கூடாது என்று இருந்தது; ஆனால், இன்று சமஸ்கிருதத்தை அனைவரும் படிக்க வேண்டும் என்று பா.ஜ.க. அரசு சொல்லி வருகிறது. இந்த சிந்தனை மாற்றத்திற்கு என்ன காரணம்?

தமிழர் தலைவர்: இதுதான் விஷயம். அவன் தன்னை உயர்ஜாதிக்காரனாக ஆக்கவேண்டும் என்றான். இன்றைக்கு எல்லோரும் கேட்கிறார்கள், செத்த மொழி, செத்த மொழி இதற்கு ஏன் இவ்வளவு ரூபாய் கொடுக்கிறார்கள் என்று. அதற்காகத்தான், இதுதான் பொதுக் கலாச்சாரம், பொது மொழியாக வரவேண்டும் என்று அவர்கள் சொல்கிறார்கள். அப்படி பொது மொழியாக வருவதற்கு, அதனைப் படிப்பதற்கு, எழுதுவதற்கு ஆட்கள் இல்லையே! அதனால்தான், நீங்கள் வாங்க, நீங்கள் வாங்க என்று ஒன்றுமில்லாத விஷயத்திற்காக கூப்பிட்டு, ஏமாற்றுவதற்காகத்தான் அதனைச் சொல்கிறார் களே தவிர, வேறொன்றும் கிடையாது. பார்ப்பனர்கள் எப்ப வேண்டுமானாலும், பாம்பு திங்கிற ஊரில், நடுக்கண்டம் நம்மது என்று சொல்வார்கள். அவர்கள் தங்களை எவ்வளவு வேண்டுமானாலும் மாற்றிக் கொள்வார்கள். அவர்களுக்கு வசதியாக இருக்கின்ற வரையில், அன்றைய காலகட்டத்தில்  தன்னுடைய ஆதிக்கத்தை நிலைநாட்டுவதற்கு அது தேவைப்பட்டது; இன்றைய காலகட்டத்தில், தன்னுடைய ஆதிக்கத்தை மறுபடியும் புதுப்பித்து நிலைநாட்டுவதற்கு இந்த முறை தேவைப்படுகிறது. ஆக, இரண்டு முறையிலும் நாம் எச்சரிக்கையாக இருக்கவேண்டிய அவசியம் நமக்கு உண்டு.

நம்முடைய நிறுவனங்களில் சமூகநீதி கடைபிடிக்கப்படுகிறதா?

கேள்வி: தனியார் துறையில் சமூகநீதி கேட்கும் நம்மு டைய இயக்க நிறுவனங்களில், சமூகநீதி அடிப்படையில் நியமனம் நடக்கிறதா?

தமிழர் தலைவர்: வந்து பாருங்கள்; நடவடிக்கை யில்லை என்றால் பிறகு கேளுங்கள். சமூகநீதி அதிகமாகக் கொடுத்திருக்கிறார்கள் என்பதுதான் நம்முடைய நிறுவனங் களில். முன்னேறிய ஜாதிக்காரர்களுக்கு அதிகம் இல்லையே என்றுதான் மற்றவர்கள் குறை சொல்கிறார்கள் - அந்தக் குறைதான் நம்மிடம் இருக்குமே தவிர, தாராளமாக நாம் முதலில் கவனிப்பதே இட ஒதுக்கீடுபடி நம்முடைய நிறுவனம் செயல்படுகிறதா என்பதுதான்.  நீங்கள் எங்காவது நம்முடைய நிறுவனங்களில் இட ஒதுக்கீடு இல்லை என்பதை நீங்கள் கண்டுபிடித்து சொல்லுங்கள், நான் திருத்திக் கொள்ளச் சொல்கிறேன், உங்களுக்குப் பரிசும் கொடுக்கிறேன்.

பெரியாரிடம் இல்லாத பணமா?


கேள்வி: நிதி வசூலுக்குச் செல்கிறபொழுது, உங்களிடம் இல்லாத பணமா? என்று கேட்கிறார்களா?

தமிழர் தலைவர்: நீங்கள் உடனே திருப்பிக் கேளுங்கள், திருப்பதி வெங்கடாசலபதிக்கு தினமும் உண்டியலில் பணம் போடுகிறீர்கள். வெங்கடாசலபதியிடம் இல்லாத பணமா? பழனி கோவிலுக்குச் சென்று உண்டியலில் பணம் போடு கிறீர்களே! அவரிடம் இல்லாத பணமா? ஏன் திரும்பத் திரும்பப் போடுகிறீர்கள். வெங்கடாசலபதி என்ன கோபித்துக் கொண்டு போய்விடுவாரா?

நல்ல புத்திசாலியான விவசாயி, விதை நெல்லை கொண்டு போய், விருந்துக்குப் போடுவானா? விதை நெல் என்றால், நடுவதற்குத்தான் வைத்திருப்பார்கள். அதுதான் விவசாயத்திற்குப் பாதுகாப்பு. அப்பொழுதுதான் மேலே மேலே வரும். விதை நெல்லை கொண்டு வந்து விருந்து சாப்பிட்டு விட்டுப் போய்விட்டால், அதோடு சரி!

ஆகவேதான், பெரியாரிடம் கொடுத்ததை நாம் இன்ன மும் வளர்த்துக் கொண்டிருக்கிறோம். இரண்டாவது நாம் பிரச்சாரத்திற்கு அனுப்புகின்ற நோக்கம், வெறும் பணத்தைத் திரட்டுவதற்காக மட்டுமல்ல. காலையில், நம்முடைய தோழர்களிடம் உரையாடிக் கொண்டிருக்கும்போது சொன் னார்; இந்த முகாமை நடத்துவதற்காக நிதி கேட்டிருக்கிறார்; ராஜபாளையம் தோழர்கள் காய்கறிகளைக் கொடுத்திருக் கிறார்கள்; நம்முடைய குருசாமி ராயகிரியிலிருந்து அரிசி கொடுத்திருக்கிறார். அதேபோன்று கீழப்பாவூர், செல்லதுரை அய்யா போன்றோர் என்னென்ன கொடுக்க முடியுமோ கொடுத்திருக்கிறார்கள். மதுரையில் இருந்தும் கொடுத்திருக் கிறார்கள். நிறைய பேர் பொருள்களாகக் கொடுத்திருக் கிறார்கள். வெறும் மாணவர்கள் பங்கேற்ற பயிற்சி முகாம் மட்டுமல்ல; பயிற்சியாளர் பங்கேற்ற பயிற்சி முகாம் மட்டுமல்ல; 38 ஆம் ஆண்டு நிகழ்வில். பொதுமக்களும், மக்களும் பங்கேற்றது என்று வரவேண்டும்.

மக்கள் பங்கேற்று நடத்தவேண்டும்; இம்முகாமை யார் நடத்துகிறார்கள்; அய்யா வீகேயென் அவர்கள் இடம் கொடுத்திருக்கிறார்; அவருடைய இடத்தில் இந்த முகாம் நடைபெறுகிறது. தனி மனிதர் மட்டுமே செய்யக்கூடாது. கூட்டு முயற்சி செய்யவேண்டும்; அது ஒரு பிரச்சாரம். வீகேயென் அவர்களுக்கு ஒரு பெரிய ஆசை - காரணம் ஒரு நல்ல காரியத்திற்கு உதவுகிறோம் என்று.

இங்கே இந்த முகாம் நடைபெறுவது தனி மனிதருடைய உதவியல்ல; எல்லோருடைய பங்களிப்பும் உள்ளது என்பது தான் மிக முக்கியம். நாம் அதனை மேலும் மேலும் பெருக்கு கிறோம்.

பெரியாரிடம் இல்லாத பணமா? என்று கேட்டார்கள்; பெரியாரிடம் உள்ள பணம் எல்லாம் தீர்ந்து போயிருந்தால், இந்தக் கேள்வியே வந்திருக்காதே! பெரியார் பணம் இன்னும் பத்திரமாக இருக்கிறது என்று தெரிந்து வைத்திருக்கிறார்களே! அதுவே நமக்கு நல்லதுதான்! பெரியார் பணத்தை சாப்பிட்டு விட்டார்கள், சாப்பிட்டு விட்டார்கள் என்று பலர் சொல்வதற்குப் பதிலாக, பெரியாரிடம் இல்லாத பணமா? என்றால், பெரியாரிடம் இன்னமும் பணம் இருக்கிறது; பத்திரமாக இருக்கிறது என்பதை ஒப்புக்கொண்டிருக்கிறார்கள்.

சும்மா சாலையில் செல்லும்பொழுது சொல்வார்கள்; அதோ போகிறார் பாருங்கள், ஊரில் இரண்டு, மூன்று பேர்தான் இருக்கிறார்கள். ஆனால், கலக்குகிறார்கள். இவர்கள் யார் தெரியுமா? கருப்புச் சட்டைக்காரர்கள். என்னங்க தெரிய லையே என்று கேட்டால், அதான்யா, சாமி இல்லை என்று சொல்கிற கட்சிக்காரர்கள் என்று சொல்வார்கள்.

கொள்கையை சொல்லி அறிமுகப்படுத்துகின்ற ஒரே ஒரு வாய்ப்பு நம்முடைய இயக்கத்திற்கு மட்டும்தான் உண்டு. ஆகவே, அதுபோன்று இது ஒரு பெரிய வாய்ப்பு, பிரச்சார வாய்ப்பு.

குற்றாலத்தில் நடைபெறுகின்ற பெரியாரியல் பயிற்சி முகாம் அனைவருக்கும் தெரிந்திருக்கிறதே. அதுபோன்று ஒரு கூட்டம் நடைபெறுகிறபொழுது இரண்டு ரூபாயாவது வாங்கவேண்டும்; 10 பேர் இல்லை என்று சொல்லட்டும்; 11 பேரிடம் கூச்சப்படாமல் போகவேண்டும். தொண்டு செய்வது என்பது அதுதான். பெரியாரிடம் இல்லாத பணமா என்று விவாதம் வரும் பாருங்கள், அப்பொழுது நீங்கள் பொறு மையாக பதில் சொல்லவேண்டும். வெங்கடாசலபதியிடம் இல்லாத பணமா? என்று சொல்லவேண்டும்; அங்கே ஒரு திண்ணைப் பிரச்சாரம் நடைபெறும். ஆக, பிரச்சார யுக்தி! மற்றவர்களுக்கு ஒரு வாய்ப்பு!

இப்பொழுது நாங்கள் வெளியிடும் புத்தகத்தைப் பார்த்தீர்களேயானால், இவ்வளவு குறைவான விலைக்கு யாரும் கொடுக்க முடியாது. விடுதலை நாளிதழை வாங்கி நீங்கள் படிக்கிறீர்களே, இன்னமும் நஷ்டத்தில்தானே இயங்குகிறது. எல்லா நாளிதழ்களிலும் முழு பக்கம் விளம்பரம் வருகிறது; தங்க நகையை போட்டுக் கொள்ளுங்கள்; வைர நகை போட்டுக் கொள்ளுங்கள் என்று. வைர நகைகளைப் போட்டுக்கொண்டு தனியாகப் போய்விட முடியுமா இன்றைக்கு.

நான் காலையில் நடைபயிற்சிக்குச் செல்லும்பொழுது, சில பெண்கள் தனியாகச் செல்வதைப் பார்த்தேன். மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது, தனியாகச் செல்கிறார்களே என்று. நம் முடைய நண்பர் சுப்பிரமணியத்திடம் சொன்னேன், அவர்கள் கழுத்தில் மஞ்சள் கயிறை மட்டும்தான் போட்டிருக் கிறார்கள். எவ்வளவுக்கெவ்வளவு நகை போட்டுக் கொள் கிறார்களோ, அவ்வளவுக்கவ்வளவு பாதுகாப்பு இல்லை என்று அர்த்தம்.

நகையைக் கழற்றி வீட்டில் வைத்துவிட்டு வந்தால், வீட்டைத் தேடி திருடன் கண்டுபிடிக்கிறான்; கொடுக்கவில்லை என்றால், அடிக்கிறான், சென்னையில் பார்த்தீர்களேயானால், மோட்டார் பைக்கில் வந்து அறுத்துச் செல்கிறார்கள்.

நம்மைப் பொறுத்தவரையில் இந்த இயக்கம் எவ்வ ளவோ தொல்லைகளைத் தாங்கிக் கொண்டிருக்கிற இயக்க மாகும். இன்னமும் விடுதலையில் விளம்பரம் கிடையாது; சினிமா விளம்பரம் கிடையாது; ஜோசியப் பகுதி கிடையாது. கொள்கைக்காக இருக்கக்கூடிய 82 ஆண்டுகளாக தொடர்ச்சி யாக நடத்தப்படுகின்ற ஒரே பத்திரிகை - உலகத்தின் ஒரே பகுத்தறிவு நாளேடு விடுதலைதான். மேலை நாடுகளில்கூட நடத்தவில்லை. மேலை நாட்டுத் தலைவர்கள் எல்லாம்கூட சொன்னார்கள், விடுதலைதான் உலகத்தின் ஒரே பகுத்தறிவு நாளேடு என்று. இது எப்படி நடக்கிறது? பெரியார் அய்யா வைத்திருக்கிற பணத்தில், நஷ்டத்தையெல்லாம் ஈடுகட்டி, எல்லோரும் கொடுக்கின்ற அன்பளிப்புகள் எல்லாவற்றையும் வைத்துதான் டிரஸ்டு நடைபெறுகிறது.

ஆகவேதான், மிகப்பெரிய அளவிற்கு நாம் நஷ்டத்தில் இருந்தாலும், செய்யவேண்டிய காரியங்களைச் செய்கிறோம். நமக்கு வெறும் வியாபாரக் கண்ணோட்டம் இல்லை. புத்தகத் தைப் பார்த்தாலே உங்களுக்குத் தெரியும். எவ்வளவு குறைச் சலான அடக்கவிலையில் அளிக்கிறோம் என்பது உங்களுக்குத் தெரியும்.

ஆகவேதான், நம்முடைய பணி என்பது சாதாரண பணியல்ல; மிகப்பெரிய வாய்ப்புள்ள ஒரு பணியாகும்.

அதிகமான தேர்தலில் தி.மு.க.வை ஆதரிப்பது ஏன்?

கேள்வி: திராவிடர் கழகம் கொள்கையில் உறுதியாக உள்ளது; ஆனால், அதிகமான தேர்தலில் தி.மு.க.வை ஆதரிப்பது ஏன்? தி.மு.க. கொள்கையில் உறுதியாக உள்ளதா?

தமிழர் தலைவர்: தி.மு.க. கொள்கை மிகவும் உறுதி யாக இருந்து - திராவிடர் கழகத்தினுடைய கொள்கை உறுதி யாக இருந்தால், இரண்டும் ஒன்றாக இருந்திருக்குமே. இப்பொழுது திராவிடர் கழகம் தனியாக இருக்கிறது; தி.மு.க. தனியாக இருக்கிறது என்றாலே என்ன அர்த்தம்.

எந்த அரசியல் கட்சியாக இருந்தாலும், தி.மு.க. மட்டுமல்ல, திராவிடர் கழகம் அளவிற்கு உறுதியாக இருக்க முடியாது. காரணம், திராவிடர் கழகத்திற்கு ஓட்டு வாங்குகிற அவசியம் இல்லை. ஓட்டு வாங்குபவர்கள் - மக்களை தங்கள் பின்னால் அழைத்துச் செல்லக்கூடிய கட்சியல்ல. மக்கள் பின்னால், அவர்கள் செல்லக் கூடியவர்கள்.

திராவிடர் கழகம் மக்களின் பின்னால் செல்லக்கூடிய இயக்கமல்ல; மக்களைத் தங்கள் பின்னால் அழைத்துச் செல்லக்கூடிய ஒரு இயக்கமாகும்.
ஆகவே, நீங்கள் கேட்டால் கேளுங்கள், விட்டால் விடுங்கள்; இந்தக் கொள்கை உங்களுக்குப் பிடிக்கவில்லையா? அதுபற்றி எங்களுக்குக் கவலையில்லை.

பாகற்காய் கசப்பாகத்தான் இருக்கும் முதலில்; உள்ளே சென்றால்தான் அதனுடைய விளைவுபற்றி தெரியும். இனிப்பு கொடுக்கிறேன் என்று சொல்லி, ஏற்கெனவே இனிப்பு சாப்பிட்டு சாப்பிட்டு சர்க்கரை நோயாளியாக இருக்கிறவர், மீண்டும் இனிப்பு சாப்பிட்டால், ஆள் காலியாக வேண்டியது தான்.

அரசியல் கட்சிகள் யாராக இருந்தாலும், நம்மைப் பொறுத்தவரையில், கண்ணை மூடிக்கொண்டு தி.மு.க. வையோ, இன்னொரு கட்சியையோ ஆதரிப்பது இல்லை. ஆதரிக்கவேண்டிய நேரத்தில் ஆதரிக்கிறோம்; எதிர்க்க வேண்டிய நேரத்தில் எதிர்க்கிறோம். மாறுபடவேண்டிய நேரத்தில் மாறுபடுகிறோம்.

நம் கொள்கையை விட்டு அவர்கள் வேறு விதமான ஒரு நிலைப்பாட்டை எடுக்கிறார்கள் என்று வைத்துக் கொள் ளுங்கள் - உதாரணத்திற்குச் சொல்கிறேன், பி.ஜே.பி.யோடு தி.மு.க. சென்றதும், நாம் தான் முதலில் எதிர்த்தோம். அது போன்றுதான், அ.தி.மு.க. பா.ஜ.க.வோடு சென்றபோதும் எதிர்த்தோம்.

எனவே, நம்மைப் பொறுத்தவரையில் மற்றவர்களிடம் வேலை வாங்கக்கூடிய மக்களுக்குப் பயன்படக்கூடிய ஒரு அமைப்பு. எனவே, அந்தப் பணிகளைச் செய்வதில் மிகவும் எச்சரிக்கையாக இருப்போம். நட்பில் சமரசம் உண்டு; கொள்கையில் சமரசம் செய்துகொள்ளாத இயக்கம் திராவிடர் கழகம். எனவே, அதில் உறுதியாக இருப்போம்.

                             ------------------------------"விடுதலை”-6-9-2015

***********************************************************************************************************************************************************

ஜாதி மறுப்புத் திருமணம் செய்தால், ஜாதி ஒழிந்துவிடுமா?
மாணவரின் கேள்விக்கு தமிழர் தலைவர் ஆசிரியர்  விளக்கம்
சென்னை, செப். 7- ஜாதி மறுப்புத் திருமணம் செய்தால், ஜாதி ஒழிந்து விடுமா? என்ற மாணவனின் கேள்விக்கு குற்றாலம் பெரியாரியல் பயிற்சி முகாமில் கழகத் தலைவர் ஆசிரியர் பதில் அளித்தார்.

குற்றாலத்தில் நடைபெற்ற பெரியாரியல் பயிற்சி பட்டறை யின் நிறைவு நாளான 23.8.2015 அன்று பயிற்சி பட்டறையில் பங்கேற்றோர் கேட்ட கேள்விகளுக்குத் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் பதிலளித்தார். வினா-விடை நேற்றைய தொடர்ச்சி வருமாறு:


பெற்றோர்களை முதியோர் இல்லத்தில் சேர்ப்பதைத் தவிர்க்கவேண்டும் என்று தி.க. சொல்வது ஏன்?

கேள்வி: பெற்றோர்களை முதியோர் இல்லத்தில் சேர்க்கவேண்டாம்; சேர்ப்பதைத் தவிர்க்கவேண்டும் என்று திராவிடர் கழகம் சொல்வது ஏன்?

தமிழர் தலைவர்: வாழ்நாளில் இளைஞர்கள் யாருக் காவது நன்றி செலுத்தவேண்டும் என்று சொன்னால், முதலில் யாருக்கு நீங்கள் நன்றி செலுத்தவேண்டும் தெரியுமா? உங்களுடைய பெற்றோர்களுக்குத்தான் நன்றி செலுத்த வேண்டும். நீங்கள் இந்த அளவிற்கு வந்திருப்பதற்குக் காரணம், உங்களது பெற்றோர்கள்தான். ஆகவே, உங்கள் பெற்றோர்மீது பாசம் காட்டுங்கள்.

இப்பொழுது தொலைக்காட்சி, தொல்லைக்காட்சி, தொலைப்பேசி என்று வந்தவுடன், நான்கு பேர் நான்கு பக்கம் திரும்பிக் கொள்கிறார்கள். நான்கு பேர் ஒன்றாக இருந்தாலும், ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்வதில்லை. வளர்த்த பெற்றோர்களைக் கொண்டு சென்று முதியோர் இல்லத்தில் போட்டால் என்ன அர்த்தம்?

நான் வேடிக்கையாகச் சொல்வதுண்டு,

வங்கியில் பணியாற்றக் கூடிய ஒருவர், தன்னுடைய சக ஊழியர்கள், நண்பர்களுக்கு எல்லாம் அழைப்பிதழ் கொடுத்தார். நான் புதிய வீடு கட்டியிருக்கிறேன்; பெரிய வீடு மிகவும் சிறப்பாக இருக்கும்; அதற்குத் திறப்பு விழா வைத்திருக்கிறேன், நீங்கள் வரவேண்டும் என்று சொல்லி அழைப்பிதழ் கொடுத்து, அந்த விழாவிற்கும் எல்லோரும் வந்திருந்தார்கள். எல்லோருக் கும் வீட்டை சுற்றிக் காட்டினார். அந்த வீட்டிற்கு என்ன பெயர் என்றால், அன்னை இல்லம். வந்தவர்கள் எல்லோரும் மிகவும் மகிழ்ச்சியடைந்தனர்.  பரவாயில்லையே, தன்னுடைய தாயாரை மறக்காமல், அன்னை இல்லம் என்று பெயர் சூட்டியிருக்கிறாரே என்று பாராட்டி னார்கள். அந்த வீட்டிலுள்ள ஒவ்வொரு அறையாகக் காட்டி, இதுதான் மாஸ்டர் பெட்ரூட், இது டிராயிங் ஹால், இது மாடர்ன் கிச்சன் என்று சொன்னார். வந்தவர்கள் எல்லாவற்றையும் பார்த்துவிட்டு, இவ்வளவையும் காட்டினீர்களே, உங்கள் அம்மாவை காட்டவில்லையே என்று கேட்டார்கள்.

உடனே அவர், எங்கள் அம்மா முதியோர் இல்லத்தில் இருக்கிறார் என்று சொன்னார்.

ஆக, நமக்காகப் பாடுபட்டவர்களைக் கொண்டுபோய் முதியோர் இல்லத்தில் போட்டால், அதற்கு என்ன அர்த்தம்?

பெற்றோர்களோடு, வயதானவர்களோடு கொஞ்சம் அட்ஜஸ் செய்வது கடினம்தான். அதில் கொஞ்சம் சிக்கல்கள் இருக்கிறது. தலைமுறை இடைவெளி இருக்கிறது. அவர் களுக்கு வேலையில்லை; இவர்கள் இரண்டு பேரும் வேலைக்குச் செல்கிறார்கள். பல சிக்கல்கள் இருக்கிறது, இல்லை என்று நாம் சொல்லவரவில்லை. இருந்தாலும், கஷ்ட நஷ்டத்தையெல்லாம் அனுபவித்து, நீங்கள் எவ்வளவுதான் உதைத்தாலும் மருந்தை குடிக்கச் சொல்லியிருக்கிறார்களே, நீங்கள் எவ்வளவு தொல்லை கொடுத்தாலும், அந்தத் தாய் தாங்கிக் கொண்டிருக் கிறார்களே, எவ்வளவுதான் நீங்கள் மோசமாக இருந்தாலும், உங்களை 18 வயது 25 வயது வரை காப்பாற்றுவதற்காக எத்தனை நாள் பட்டினி கிடந்திருக் கிறார்கள் என்பதை நீங்கள் நினைத்துப் பார்க்கவேண்டாமா?

பெற்றோர்கள் எல்லாம் எங்கேயாவது போகட்டும் என்று சொல்வது, மனிதநேயத்திற்கு விரோதமானது. இது மனிதநேய இயக்கம். ஆகவேதான், வாய்ப்புள்ளவர்கள் நிச்சயமாக உங்கள் கடமைகளைச் செய்யவேண்டும்.

கொஞ்சம் நீங்கள் விட்டுக் கொடுக்கவேண்டும்; வயதான காலத்தில் அந்தப் பெற்றோர்கள் உங்களிடமிருந்து பணத்தை எதிர்பார்க்கவில்லை. உங்களிடமிருந்து அன்பை எதிர்பார்க் கிறார்கள்; உங்களிடமிருந்து பாசத்தை எதிர்பார்க்கிறார்கள்.

எனவே, அந்தப் பாசத்தைக் கொடுப்பதற்கு நீங்கள் தயாராக இருக்கவேண்டும்; அன்பைக் காட்டவேண்டும். அதைக் கடமை என்று கருதவேண்டும் என்று திராவிடர் கழகம் கருதுகிறது.

ஆகவேதான், பகுத்தறிவு உள்ள யாரும் தங்களுடைய பெற்றோர்களை - மிகவும் முடியாத சூழ்நிலையில் உள்ளவர் களை கவனிக்க முடியவில்லை; அவர்களைக் கவனிப்பதற்குத் தனியாக ஒரு ஆள் வேண்டும் என்ற ஒரு தவிர்க்க முடியாத நிலை ஏற்பட்டாலொழிய, பெற்றோர்களை முதியோர் இல்லத் திற்கு அனுப்புவது விரும்பத்தக்கதல்ல - கூடாது என்பது திராவிடர் கழகத்தினுடைய மனிதநேயக் கொள்கையாகும்.


ஜாதி மறுப்புத் திருமணம் செய்தால், ஜாதி ஒழிந்துவிடுமா?

கேள்வி: ஜாதி மறுப்புத் திருமணம் செய்தால், ஜாதி ஒழிந்துவிடுமா?

தமிழர் தலைவர்: பிறகு வேறு என்ன செய்தால் ஒழியும் ஜாதி? ஜாதி மறுப்புத் திருமணம் என்றாலே, ஜாதியை மறுப்பது தான். ஆகவேதான் ஜாதியை ஒழிப்பதற்காக நாம் செய்கி றோம். அதுமட்டுமே போதாது; ஜாதி ஒழிவதற்கு அது ஒரு கார ணம். தாத்தா ஜாதி மறுப்புத் திருமணம் செய்தவர்; அவருடைய அப்பா மதம் மறுப்புத் திருமணம் செய்தவர்; இப்படி ஒரு நான்கு தலைமுறை வந்தால், ஜாதி எங்கே இருக்கிறது. ஆகவேதான், ஜாதி மறுப்புத் திருமணத்திற்கு நிறைய பங்கு நிச்சயமாக உண்டு.

ஆனால், மற்ற செயல்கள்மூலமாகவும் ஜாதியை அடை யாளம் தெரியாமல் செய்யலாம். அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகவேண்டும் என்பது போன்ற பல்வேறு பிரச் சினைகள்.

எனவே, ஜாதி ஒழிப்பு என்பது அதனுடைய மிக முக்கிய மான ஒரு கூறுபாடு, ஜாதி மறுப்பு திருமணத்தின்மூலம் இருக் கிறது. மற்றவை மூலமாகவும் ஜாதிகள் அழிக்கப் படவேண்டும்; ஒழிக்கப்படவேண்டும்.


எங்கள் சந்ததிகளை சிறந்த முறையில் வழிநடத்திச் செல்வது யார்?

கேள்வி: அய்யா, உங்களையெல்லாம் சிறந்த முறையில் வழிநடத்தி சென்றது தந்தை பெரியார்; எங்களையெல்லாம் சிறந்த முறையில் வழி நடத்தி நீங்கள் செல்கின்றீர்கள்; எங்கள் சந்ததிகளை சிறந்த முறையில் வழிநடத்திச் செல்வது யார்?

தமிழர் தலைவர்: இந்தக் கேள்வியே எனக்கு ஒரு சுற்று சுற்றுகிறது. பெரியாரிடம் இதே கேள்வியைக் கேட்டார்கள்; அய்யா உங்களுக்கு வயதாகிவிட்டது; நீங்கள் யாரை தயார் செய்திருக்கிறீர்கள்; பிறகு மணியம்மையாரிடமும் அதே கேள்வியைக் கேட்டார்கள்; இன்று என்னிடமும் அதே கேள்வியைக் கேட்கிறார்கள். அப்பொழுதும் விடை கிடைத்தது; இப்பொழுதும் விடை கிடைத்தது; நாளைக்கும் விடை கிடைக்கும், அவ்வளவுதான்.


ஒரு சில ஜாதி அமைப்புகள் தங்கள் ஜாதி அமைப்புதான் உயர்ந்தது என்று சொல்கிறார்களே!

கேள்வி: திராவிடர் கழகம் சமூகநீதிக்காகவும், ஜாதி ஒழிப்பிற்காகவும் தொடர்ந்து போராட்டங்களை நடத்தி வெற்றி பெற்று வருகிறது. ஆனால், தற்பொழுதுள்ள ஒரு சில ஜாதி அமைப்புகள் தங்கள் ஜாதி அமைப்புதான் உயர்ந்தது என்றெல்லாம் நடந்துகொள்கிறார்களே?

தமிழர் தலைவர்:  அதனால்தான் நமக்கு வேலை இருக் கிறது என்று சொன்னேன்; கடைசி ஜாதி வெறியன் இருக்கின்ற வரையில், திராவிடர் கழகத்திற்கு வேலை உண்டு; கருப்புச் சட்டைக்காரனுக்கு வேலை உண்டு. போராட்டக் களம் உண்டு; பிரச்சாரக் களம் உண்டு. நம்முடைய பணி இன்னும் நிறைய உண்டு. ஆகவே, இந்த இயக்கம் இயங்கிக் கொண்டே இருக்க வேண்டும். பெரியாருடைய நுண்ணாடியை அணிந்தால்தான் சில விஷயம் புரியும். மற்றவர்களுக்குப் புரியாத விஷயம் நமக்குப் புரியும்.

சுலபமாக ஒவ்வொரு ரூபத்தில் வருவார்கள்; இப் பொழுது கூட பாருங்கள், மதுரையில் வந்து அமித்ஷா சொன்னார்; குஜராத்தில் இட ஒதுக்கீட்டிற்காக மிகப்பெரிய போராட்டமே நடைபெறுகிறது. ஆகவேதான், யார் எந்த ரூபத்தில் நடத்தினா லும், நம்முடைய இயக்கத்திற்கு கடைசி வரை பணி உண்டு. அதனால்தான் இது இயக்கம்; இயங்கிக்கொண்டே இருக்கும்.


பெரியார் தொலைக்காட்சியை காண்பது எப்போது?

கேள்வி: பெரியார் தொலைக்காட்சியை காண்பது எப்போது?

தமிழர் தலைவர்: தொலைக்காட்சிகளில் பல தொல்லைக் காட்சிகள் வருகின்றன நடுவில். பல இடங்களில் கேபிள் டி.வி. வரவில்லை என்று. இதுபோன்ற சிக்கல்கள் தீரவேண்டும் என்று காத்திருக்கிறோம். இந்த வரிசையில் ஏற்கெனவே வசதி படைத்தவர்களே சிக்கலில் மாட்டிக் கொண்டிருக்கிறார்கள். நாமும் போய் மாட்டிக்கொள்வது என்பது அவ்வளவு புத்திசாலித்த மானதல்ல. தாலி அகற்றும் போராட்டம் மாதிரி நிறைய போராட்டங்களை நடத்தினோம் என்றால், தொலைக்காட்சி நம்மை விளம்பரப்படுத்திக் கொண்டே இருக்கப் போகிறது. நாம் தொலைக்காட்சியை நடத்துவதை விட, அவர்கள் செலவிலே பிரச்சாரங்களை நடத்துவது மிகச் சுலபமாக இருக்கும். கொஞ்ச நாள் வரை அதைத்தான் செய்யவேண்டும். நிலைமை சரியானவுடன் அதுபற்றி முயற்சி செய்யலாம்.

நன்றி, வணக்கம்!

ஞாயிறு மலரில் கேள்வி கேட்கலாம்; உண்மையில் கேள்வி கேட்கலாம்; விடுதலையில் கேள்வி கேட்கலாம்; கேள்வி முடிந்துவிடவில்லை. ஆகவே, வாழ்நாள் முழுக்க கேள்வி கேட்கலாம். திராவிடர் கழகத்திற்கு ஒரு சிம்பல் போட வேண்டும் என்றால், கிறிஸ்தவர்களுக்கு எப்படி ஒரு சிலுவை போட்டிருக்கிறார்களோ அதுபோன்று ஒரு கேள்விக்குறி போட்டால், அதுதான் திராவிடர் கழகம் என்று சொல்லக்கூடிய அளவிற்கு, அவ்வளவு பெரிய வாய்ப்பு உங்களுக்கு.


ஆகவே, உங்கள் அன்பான, அறிவுபூர்வமான கேள்வி களுக்கு என்னுடைய நன்றி, வணக்கம்!

                        --------------------------------"விடுதலை” 7-9-2015

0 comments: