Search This Blog

24.9.15

பார்ப்பனர்கள் பின்புத்தியும் தந்தை பெரியாரின் தொலைநோக்கும்!

மலையாள நம்பூதிரிப் பார்ப்பனர்கள் தங்களைச் சிறுபான்மை இனத்தைச் சேர்ந்தவர்கள் என அறிவித்து இட ஒதுக்கீடு வழங்கவேண்டும் என்று  கோரிக்கை விடுத்துள்ளனர்.
குஜராத்தின் படேல் சமூகத்தினர் தங்களை இதர பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்கக் கோரி நடத்திய கிளர்ச்சி நாடு தழுவிய அளவில் பெரும் எதிரொலியை ஏற்படுத்தியுள்ளது.
பல்வேறு மாநிலங்களிலும் பல சமூகப் பிரிவினரும் இதேபோல் கோரிக்கையை முன்வைத்து வருகின்றனர்.
இந்த நிலையில், நிலச் சீர்திருத்தச் சட்டம் அமல் படுத்தப்பட்ட பிறகு கேரளாவில் நம்பூதிரிகளின் எண் ணிக்கை குறைந்துவிட்டதால், தங்களது சமுதாயத்துக்கு சிறுபான்மையினர் தகுதி வழங்கவேண்டும் என்று யோகஷேம சபா என்ற கேரள நம்பூதிரி பார்ப்பன அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து அந்த அமைப்பின் தலைவர் அக்கீரமன் கலாதாசன் பட்டாதிரிபாட் கோட்டயத்தில் கூறியதாவது: 
சிறுபான்மையினர் தகுதியை மாநில அளவில் கணக்கிட வேண்டும். தேசிய அளவில் கணக்கிடக் கூடாது. அண்மையில் வெளியிடப்பட்ட ஜாதி, மத கணக்கெடுப்பு அடிப்படையில், இடஒதுக்கீட்டு முறையில் திருத்தம் மேற்கொள்ளப்பட வேண்டும். கல்வி, வேலைவாய்ப்பில் நம்பூதிரி பார்ப்பனர் களுக்கு உரிய இடங்கள் முறையாக வழங்கப்படுவதில்லை.
நம்பூதிரிகளுக்குச் சிறுபான்மையினர் தகுதி வழங்கப் பட வேண்டும். இதுதொடர்பாக சனிக்கிழமை தொடங்கி 3 நாள்கள் நடைபெறும் மாநில மாநாட்டில் விவாதிக்கப்படும். இந்த மாநாட்டை மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி தொடங்கி வைக்கிறார். சிறுபான்மையினர் தகுதி, இடஒதுக்கீட்டு முறை உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து மத்திய அரசிடம் மனு கொடுக்க உள்ளோம். இவ்வாறு அக்கீரமன் கலாதாசன் பட்டாதிரிபாட் கூறினார்.

இட ஒதுக்கீடே கூடாது; அது திறமைக்குப் பங்கம் விளைவிக்கும் என்று கூப்பாடு போட்டவர்கள் இந்தப் பார்ப்பனர்கள்; அக்கருத்து உண்மைக்கு மாறானது.
இட ஒதுக்கீடு காரணமாக இடம் பிடித்தவர்கள் செயல்முறைகளில் சிறப்பாக செயல்பட்டுள்ளனர் என்ப தெல்லாம் நிரூபிக்கப்பட்ட உண்மைகள். மயில்சாமி அண்ணாதுரை போன்ற தமிழர்கள், பெருமைப்படும் வகையில் சாதனை வீரர்களாக ஒளி வீசவில்லையா?
மதிப்பெண் தகுதியைப் பேசினால் ஓர் அம்பேத்கர் கிடைத்திருப்பாரா என்ற கேள்வியை உச்சநீதிமன்றத்தில் எழுப்பினாரே நீதிபதி இரவீந்திரன்.
அந்தக் கூப்பாடு பொய்யானது என்று தெரிந்த நிலை யில், அடுத்தகட்டமாக ஜாதி அடிப்படையில் இட ஒதுக் கீட்டால் ஜாதி உணர்வு மேலோங்குகிறது, தலைதூக்குகிறது என்று ஒப்பாரி வைத்தனர்.
எந்த ஜாதியின் அடிப்படையில் கல்வி உரிமை மறுக்கப்பட்டுக் கிடந்தார்களோ அந்த ஜாதியின் அடிப்படையில் கல்வி வாய்ப்பு அளிக்கப்படுவது என்பது நேர்மையையும், நீதியையும், சரியான வழிமுறையையும் சார்ந்ததாகும். கல்வி வளர்ச்சியால் ஜாதி உணர்வு குன்றுமே தவிர, தலைதூக்காது என்பது நிதர்சனமாகி விட்டது.
எதிர்த்துப் பார்த்து இட ஒதுக்கீட்டை ஒழிக்க முடியாது என்று திண்ணமாக உணர்ந்துவிட்ட நிலையில், பார்ப்பனர்கள் இப்பொழுது எங்களுக்கும் இட ஒதுக்கீடு தாருங்கள்! என்று விண்ணப்பம் போடும் இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளனர்; இது சமூகநீதிக்குக் கிடைத்திட்ட மகத்தான வெற்றியாகும்.
இந்தியாவிலேயே இட ஒதுக்கீடு அளித்த முதல் மாநிலம் தமிழ்நாடுதான் - நீதிக்கட்சி என்னும் திராவிட இயக்க ஆட்சிதான் (1928). மொத்தம் 14 இடங்களில் 2 இடங்கள் பார்ப் பனர்களுக்கு ஒதுக்கப்பட்டதே (அதாவது 14 விழுக்காடு) இதனை அன்றைக்கே எதிர்த்தவர்கள் இதே பார்ப்பனர்கள்தானே - மறுக்க முடியுமா?
14 விழுக்காடு கிடைத்த வாய்ப்பை நழுவவிட்டு விட்டு இப்பொழுது அதைவிடக் குறைவான விழுக்காட்டு இடங்கள் கேட்கும் நிலைக்கு அல்லவா ஆளாகியுள்ளனர்.

இந்த இடத்தில் ஒன்றை நினைவூட்ட வேண்டும். சமூகநீதிக் காவலர் மாண்புமிகு வி.பி.சிங் அவர்கள் மண்டல் குழுப் பரிந்துரைப்படி வேலை வாய்ப்பில் 27 சதவிகித இட ஒதுக்கீடு - பிற்படுத்தப்பட்டவர்களுக்கு அளித்தபோது, இதே கேரள நம்பூதிரிப் பார்ப்பனர்கள் பூணூலையும், தர்ப்பைப் புல்லையும் அனுப்பினார்கள் பிரதமர் வி.பி.சிங் அவர்களுக்கு. அந்தப் பார்ப்பனர்களுக்குக் காலணிகளை அனுப்பி வைத்தது திராவிடர் கழகம்!
இன்றைக்கு அதே பார்ப்பனர்கள் இட ஒதுக்கீட்டுக்கு மண்டியிடுவதை நினைத்துப் பார்க்கவேண்டும்.
பார்ப்பனர்களுக்கு முன்புத்தி கிடையாது என்று தந்தை பெரியார் கூறுவதுண்டு. இட ஒதுக்கீட்டைப் பார்ப்பனர்கள் எதிர்த்தால், அதே பார்ப்பனர்கள் இட ஒதுக்கீட்டைக் கேட்கும் காலம் வரும் என்று 1936 ஆம் ஆண்டிலேயே (குடிஅரசு, 14.6.1936, பக்கம் 11) தந்தை பெரியார் சொன்னாரே - அதுதான் எத்தகைய தொலைநோக்கு!
பார்ப்பனர்கள் தங்கள் எண்ணிக்கைக்கு ஏற்ப 3 சத விகிதம் இடம் கேட்கட்டும்; பிரச்சினைக்கு ஒரே அடியாக முடிவு ஏற்பட்டு விடுமே - சிந்திக்கட்டும்!
                   ----------------------------"விடுதலை” தலையங்கம் 24-09-2015

0 comments: