Search This Blog

5.9.15

சமுதாய நிலை மாறவே...பெரியார்

சமுதாய நிலை மாறவே...

பேரன்புமிக்கத் தோழர்களே! இந்த கீரனூர் ஊருக்கு இதற்கு முன்பாக இதுவரை வரவில்லை என்று கருதுகின்றேன். இந்தச் சமயத்தில் தஞ்சை மாவட்டத்தில் சுற்றுப் பயணம் செய்து வரும் பொது இங்கு வரும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. நாங்கள் அரசியல் கட்சிக்காரர்கள் அல்லர் அரசியல் பேரால் நாங்கள் பிழைப்பு நடத்துபவர்களும் அல்லர். வேறு எந்தவித பிரதிபலனும் உங்களிடமிருந்து எதிர்பார்ப்பவர்களும் அல்லர். எங்கள் சொந்த வீட்டுச் சோற்றைத் தின்றுவிட்டு உழைப்பவர்கள்.

இந்தச் சமுதாயத்தில் கடவுள், மதம், புராணங்கள் இவற்றால் நாம் மிகக் காட்டுமிராண்டிகளாக ஆக்கப்பட்டிருக்கிறோம். அதுபோலவே, அரசியல் துறையிலும் நாம் மிக்க இழிவான நிலையில் இருக்கிறோம். இப்படியாகச் சமுதாயத்துறையிலும், அரசியல் துறையிலும் நாம் மிகமிகக் காட்டுமிராண்டி ஆகத்தான் ஆக்கப்பட்டிருக்கிறோம். இக்கொடுமைகளை விளக்கி இதற்குப் பரிகாரம் காணவே நாங்கள் பாடுபடுகிறோம்.

நாம் எப்படிக் காட்டுமிராண்டியாக, சூத்தினாக இருக்கவும், நமது முன்னேற்றத்திற்குத் தடையாக இருக்கவும் - கடவுள், மதம், சாஸ்திரம், புராணம் ஏற்பட்டனவோ அதுபோலவே, நம் இடையே எதிரிகளான பார்ப்பனர்கள் நம்மை மடையர்களாக்கி, நம்மைத் தலையெடுக்க விடாமல் செய்து அவர்களே ஆதிக்கம் பெற்று இருக்க ஏற்படுத்தப்பட்டது தான் அரசியல் என்பதும். இந்த உண்மை வேறு யாருக்கும் தெரியாது. அரசாங்கம், கடவுள், மதம், சாஸ்திரம், புராணங்கள் அவ்வளவு தூரம் கொடுமையானதாக இருந்து வருவதை நாங்கள் தான் எடுத்துக் கூறி விளக்கி மக்கள் உண்மையை உணரும்படி செய்தோம்.

இந்த நாட்டில் கடவுள் துறையிலும், சாஸ்திர - மதத் துறையிலும் தோன்றியவர்களும், அரசியல் தோன்றியவர்களும், அந்தந்தத் துறையில் ஈடுபட்டு, மக்களை ஏமாற்றித் தான் பிழைத்து வயிறு வளர்த்து வந்தார்களே ஒழிய, அந்தந்தத் துறையில் உள்ள ஊழல்களை - அதனால் நமக்கு இருந்து வரும் கொடுமைகளை எல்லாம் எடுத்துக் கூறி விளக்கிப் பாடுபடவில்லை. நான் ஒருவன்தான் சமுதாயத்திடம் கடவுள், மதம், புராணம், அரசியல் துறைகளில் இருக்கும் கொடுமைகளை எல்லாம் எடுத்துக்கூறிப் பாடுபட்டு வருகிறேன். எனது 40- ஆண்டுகால இந்த உழைப்பின் பயன் இன்று ஓரளவுக்குப் பயன் அளித்து வருகிறது. எல்லா வாய்ப்புகளும் நன்மைகளும் ஒரு ஜாதிக்கே - ஒரு சாரருக்கே என்ற நிலை மாறி, எல்லா நன்மைகளும், எல்லோருக்கும் உண்டு என்ற நிலை ஏற்பட்டிருக்கிறது.

இந்த மாறுதல்களை ஒழிக்கவே இன்று பார்ப்பனர்கள் பாடுபடுகிறார்கள். இதில் பார்ப்பனர்கள் வெற்றியடைந்தால் நாம் செத்தோம்.

எனவே தான் நான் என்னுடைய போராட்டங்களை எல்லாம் ஒத்தி வைத்துவிட்டு, இந்த மாறுதலுக்குக் காரணமான காமராசர் அரசாங்கத்தைக் காப்பாற்றப் பாடுபட்டு வருகிறேன்.

----------------------- 19.05.1961- அன்று தஞ்சை மாவட்டம் கீரனூரில் பெரியார் ஈ.வெ.ரா சொற்பொழிவு. "விடுதலை", 28.05.1961

1 comments:

Anonymous said...

சமூகத் தலைவர் பெரியார் என்பது உண்மை.