Search This Blog

17.9.15

தந்தை பெரியார்பற்றி அறிஞர்கள்....

தந்தை பெரியார்பற்றி அறிஞர்கள்....




பெரியாரிடத்தில் முழு நம்பிக்கை வைத்து நடந்து கொள்ளுங்கள்

பார்ப்பனரல்லாதோருக்கு நான் சொல்வது என்னவென்றால் - தலை மைத்துவம், மக்கள் ஒற்றுமை, தலை வரிடம் மரியாதை ஆகியவற்றை மாற்றார்களிடமிருந்து பார்த்துப் படித்துக் கொள்ளுங்கள். காலம் கடவா முன்னர் கற்றுக் கொள்ளுங்கள். ஆதலால் உங்கள் தலைவரைக் குறைகூறுவது புத்திசாலித்த னமான காரியமாகாது. எனவே, தலைவர் பெரியாரிடத்தில் முழு நம்பிக்கை வைத்து மதித்து நடந்து கொள்ளுங்கள்.

_- புரட்சியாளர் அம்பேத்கர் சென்னையில் கூறியது
குடிஅரசு, 30.9.1944






கொள்கைக்காக உயிரையும் கொடுப்பவர்!

மதிப்பு வாய்ந்த என் நண்பர் தோழர் இராமசாமி நாயக்கர் அவர்கள் தற்காலத்திய பெரிய சமூகச் சீர்திருத்தக்காரராவார். அவர், சமூகச் சீர்திருத்தத்தை மிகவும் புனிதமாகக் கருதுகிறார். தம் கருத்தை நிறைவேற்றுவதில், அவர் எத்தகைய தியாகமும் செய்யத் தயாராயிருக்கிறார். எந்த ஒரு கொள்கையைத் தாம் நேர்மையானதாக எண்ணினாரோ, அதற்காக அவர் பல தடவை சிறை சென்றதும் உங்களுக்குத் தெரியும். சமூகச் சீர்திருத்தக் கொள்கை முற்போக்கடைய, இன்னும் எத்தனை தரம் வேண்டுமானாலும் சிறைக்குப் போகவும், மற்றும் தமது உயிரையே கொடுக்கவும் அவர் தயாராயிருக்கிறார். தோழர் ஆர்.கே. சண்முகம் அவர்கள் தெரிவித்தது போல், சமூகச் சீர்திருத்தத் துறையில் பலர் அனேக வருஷம் பாடுபட்டுப் பயன் பெறாமற்போன வேலையைச் சில வருஷத்தில் இவர் பயனளிக்குமாறு செய்து விட்டார்.
_ முன்னாள் முதல் மந்திரி, பனகல் அரசர் சர்.பி. ராமராயநிங்கவாரு அவர்கள் (1928) _ நூல்: தமிழர் தலைவர்

உண்மையை ஒளிக்காமல் சொல்லும் உத்தமர்
திரு. இராமசாமி நாயக்கரைப்பற்றி நான் அதிகம் சொல்ல வேண்டியதில்லை. அவரைப்பற்றி அய்ரோப்பாவிலே உள்ள பார்லிமெண்டில் பேசப்படுகிறது என்றால், நாயக்கரின் புகழைப் பற்றி நான் என்ன சொல்வது?
திரு. நாயக்கரிடத்திலுள்ள விசேஷ குணம் என்னவென்றால், மனத்திற்படும் உண்மையை ஒளிக்காமல் சொல்லும் ஓர் உத்தம குணந்தான். அவரை எனக்கு 20 வருடமாய்த் தெரியும். அவரும், நானும், ஒரே இயக்கத்தில் சேர்ந்து வேலை செய்து வந்தோம். அந்த இயக்கத்தில் (காங்கிரஸ்) நேர்மையற்றவர்கள் சிலர் வந்து புகுந்தபின், நானும் அவரும் விலகிவிட்டோம். பிறகு நாயக்கர் அவர்களால் ஆரம்பித்து நடத்தப்பெறும் சுயமரியாதை இயக்கத்தைப் பார்த்து, இது எல்லா இயக்கத்திலும் நல்ல இயக்கமாயிருப்பதால், நானும் என்னா லான உதவியை அவ்வியக்கத்துக்குச் செய்து வருகிறேன். சுருங்கச் சொல்லின், நாயக்கரவர்கள் தமிழ்நாட்டின் எல்லாத் தலைவர்களையும் விடப் பெரிய தியாகி என்றுதான் சொல்ல வேண்டும்.
கப்பலோட்டிய தமிழர், வ.உ.சிதம்பரம் பிள்ளை அவர்கள் (1928) -_ நூல்: தமிழர் தலைவர்






தமிழ், தமிழினம், தமிழ்நாடு

பெரியார் பிறவாதிருப்பா ரேல் தமிழர், தமிழ்நாடு, தமிழ்மொழி, தமிழ்ப்பண்பாடு, தமிழாட்சி, தமிழினம், தமிழ் நாக ரிகம் என்னும் உணர்ச்சியெல்லாம் தமிழ் மக்களுக்குத் தோன்றியிரா. தமிழ் வாழ்க எனும் நெஞ்சத் துணிவு ஒருகாலும் உருவாகியி ருக்காது. தமிழ் முதன்மொழி ஆனதற்கு மாறாக தன் பெயரை இழந்திருக்கும். தமிழ்ப் பண் பாட்டை ஆரியப் பண்பாடு விழுங்கி ஏப்பம் விட்டிருக்கும்.
இராவண காவிய ஆசிரியர் புலவர் குழந்தை _ ஜனவரி 1-15, 2014 உண்மை





35 கோடி பாமரர்களின் அறியாமையைப் போக்க வேண்டும்

தலைவர் இராமசாமியார் மார்ட்டின் லூதரைப்போல் மதக்கற்பனைகளை நமது நாட்டினின்று ஒழியுமாறு உங்கள் இயக்கத்திற்கு வழிகாட் டியுள்ளார். அவர் காட்டிய வழியைக் கடைப்பிடித்து நமது 35 கோடி பாமரர்களின் அறியா மையைப் போக்க வேண்டுமென உங்களை அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். அறியாமையைப் போக்குவது கஷ்டமென்று அதைரியப்படவேண்டாம். சோவியத் ரஷ்யாவில் 10 வருஷத்தில் 15 கோடி மக்களின் படிப்பின் மையைப் போக்கினார்களென்றால், நமது நாட்டு 35 கோடி ஜனங்களின் அறியாமையைப் போக்குவது கஷ்டமாமோ? அடிக்க அடிக்க அம்மியும் நகரும் என்றார் பெரியோர். ஆதலின் உங்களுக்கு ஊக்கமும், உற்சாகமும் தான் வேண்டும்.
_ ம.சிங்காரவேலர், சென்னை சுயமரியாதை மாநாட்டில் உரை, குடிஅரசு, 3.1.1932

நான் ஒரு பிறவித் தொண்டன், தொண்டிலேயே தான் எனது உற்சாகமும் ஆசையும் இருந்து வருகிறது. தலைமைத் தன்மை எனக்குத் தெரியாது. தலைவனாக இருப்பது என்பதும் எனக்குக் இஷ்டமில்லாததும் எனக்கு தொல்லையானதுமான காரியம். ஏதோ சில நெருக்கடியை உத்தேசித்தும், எனது உண்மைத் தோழரும் கூட்டுப் பொறுப்பாளருமான சிலரின் அபிப்பிராயத்தையும் வேண்டுகோளையும் மறுக்க முடியாமலும் தலைமைப் பதவியை ஏற்றுக் கொண்டிருக்கிறேனேயொழிய இதில் எனக்கு மனச்சாந்தியோ, உற்சாகமோ இல்லை.
-குடிஅரசு 13.10.1940
நாதசுரக் குழாயாய் இருந்தால் ஊதியாக வேண்டும், தவுலாயிருந்தால் அடிபட்டுத்தான் ஆக வேண்டும் என்பது போல், எனக்குத் தொண்டை, குரல் உள்ளவரை பேசியாக வேண்டும், பிரசங்கம் செய்தாக வேணடும். என்னைப் பொறுத்தவரையில், என்னைப் பின்பற்றி நடந்து வருபவர்கள் புத்திசாலிகளாய் இருக்க வேண்டுமென்ற கவலை எனக்கு சிறிதும் கிடையாது. தங்கள் அறிவை, ஆற்றலை மறந்து, என் லட்சியத்தை நிறைவேற்றிக் கொடுக்க கூடிய ஆட்கள் தான் எனக்கு தேவையே ஒழிய, அவர்கள் புத்திசாலிகளா, முட்டள்களா, பயித்தியக் காரர்களா? கெட்டிக்காரர்களா? என்பது பற்றி எனக்குக் கவலை இல்லை.
- குடிஅரசு 29.5.1948
 ************************************************************************************************************
அகவுணர்வு வளர்ந்து வரும் பேறு
இராமசாமிப் பெரியார் ஈரோட்டில் பிறந்து வளர்ந்தவர். அவர்தம் புகழோ - தென்னாட்டிலும், வட நாட்டிலும், பிற நாடு களிலும் மண்டிக் கிடக்கின்றது! காரணம் என்ன? தோழர் ஈ.வெ.ரா. வின் உண்மையும், வாய்மையும், மெய்மையுஞ் செறிந்த அறத்தொண்டாகும்.
ஈ.வெ.ரா.விடம் ஒருவித இயற்கைக் கூறு அமைந்துள்ளது. அதனின்றும் அவரது தொண்டு கனிந்தது. அஃதென்னை? அஃது அகவுணர்வு வளர்ந்து செல்லும் பேறு. இப்பேறு பலர்க்கு வாய்ப்பதில்லை; மிகச் சிலர்க்கே வாய்க்கும்.
_ திரு.வி.கல்யாண சுந்தரனார் அவர்கள் நூல்: தமிழர் தலைவர்




எளிய வாழ்வு

பெரியார் அவர்கள் எளிய வாழ்வு என்று சொல்லிக் கொள்ளாமல், வறியவனும் வெறுக்கக் கூடிய வண்ணம் பாடுபடுகிறார். கிடைத்ததை உண்பதும், கண்டதைக் குடிப்பதும், கிடைக்கா விட்டால் பட்டினியுமே. ஸ்நானம் 4, 5 நாட் களுக்கு இல்லாமலே போனாலுமே போய்விடும். கூப்பிட்ட இடத்திற்குப் போக வேண்டியது. (பிறர்) நினைத்த நேரத்திலெல்லாம் தொண்டை காய்ந்து கால் கடுக்கும் வரையில் பேச வேண்டியது. 3ஆவது வகுப்புப் பிரயாணம்தான். ஆனால், மூச்சுவிடக்கூட இடமிருக்காது கூட்டம். தப்பித் தவறி மேல்வகுப்புக்குப் போனால், அங்கும், அப்பொழுது அதே அவஸ்தைதான். பரிவாரம் ஒன்றுமில்லை. தம் பையைத் தாமே தூக்கிக் கொள்ளவேணும். தளர்ச்சி அதிகரிக்க, துணையாகச் சகா ஒருவர், இருவர் இவ்வளவுதான். சென்றவிடங்களில் அனேக மாய்த் தோப்போ, திடலோ, ரயிலடியோ அல்லது போகும் வண்டி தானோ! எங்காவது ஜாகை, சௌகரியமிருந்தால், அங்கும் 20 பேர் கூட்டம், உறங்க, ஓய்வெடுக்க இடமில்லாமல்! டாக்டர் என்றால் விரோதி. மருந்தென்றால் விஷம். வரவர இப்பொழுது தான், தன்னு டம்பும் தசை, நரம்புகளாலானதுதான் என்ற எண்ண முண்டாகியது.
_ முன்னாள் அமைச்சர், அட்வகேட் எஸ்.முத்தையா முதலியார் அவர்கள் -_ நூல்: தமிழர் தலைவர்



தன்னாட்சி

தமிழர் உண்மை யிலேயே தமிழராய், தனித் தமிழராய் உலகில் பிறருடன் ஒப்புரிமை கொள்ளத் துணிவர். தன்னாட்சி புரிவர். அறிவாட்சியில், அன்புக் கலையாட்சியில் முனைவர் என்பதற்கு அவர் வாழ்க்கையின் வெற்றி ஓர் அரிய வழிகாட்டியும் நற் குறியுமாகும்.
-_ பன்மொழிப் புலவர் கா.அப்பாத்துரையார்

ஜனவரி 1-15, 2014 உண்மை

இயற்கையின் புதல்வர்!
அநீதியை எதிர்க்கத் திறமையும், தைரியமும் அற்ற ஏழைகளாய்ச் சொரணையற்றுக் கிடந்த தமிழர்களின் உள்ளத்தை, அடிதெரியும்படி கலக்கிய பிரம்மாண்ட பாக்கியம், நாயக்கரைப் பெரிதும் சேர்ந்ததாகும். அப்பா! நாயக்கரின் அழகுப் பிரசங்கத்தை, ஆணித்தரமான சொற்களை, அணி அணியாய் அலங்காரஞ் செய்யும் உவமானங்களை, உபகதைகளை, அவரது கொச்சை வார்த்தை உச்சரிப்பை, அவரது வர்ணனையை, உடல் துடிதுடிப்பைப் பார்க்கவும், கேட்கவும், வெகு தூரத் திலிருந்து ஜனங்கள் வண்டுகள் மொய்ப்பது போல் வந்து மொய்ப்பார்கள். அவர் இயற்கையின் புதல்வர்! மண்ணை மணந்த மணாளர்! மண்ணோடு மண்ணாய் உழலும் மாந்தர்களுக்கு, நாயக்கரின் பிரசங்கம் ஆகாய கங்கையின் பிரவாகம் என்பதில் சந்தேகமில்லை... செய்ய வேண்டும் என்று தோன்றியதைத் தயங்காமல் செய்யும் தன்மை அவரிடம் காணப்படுவதைப் போல, தமிழ்நாட்டில் வேறு எவரிடமும் காணப்படுவதில்லை. தமிழ்நாட்டின் வருங்காலப் பெருமைக்கு, நாயக்கர் அவர்கள் முன்னோடும் பிள்ளை; தூதுவன். வருங்கால வாழ்வின் அமைப்பு, அவர் கண்ணில் அரைகுறையாகப்பட்டிருக்கலாம். (எவர் கண்ணிலேனும் அது முழுமையாகப் பட்டிருக்கிறதாக யார் உறுதியாகச் சொல்ல முடியும்?) ஆனால், மலைகளையும், மரங்களையும் வேரோடு பிடுங்கி யுத்தம் செய்த மாருதியைப் போல, அவர் தமிழ்நாட்டின் தேக்கமுற்ற வாழ்வோடு போர்புரியும் வகையைக் கண்டு, நாம் வியப்படையாமல் இருக்க முடியாது.
----------------------------(அக்கிரகாரத்து அதிசய மனிதர் வ.ராமசாமி அய்யங்கார்) வ.ரா. அவர்கள் (1933இ-ல் காந்தி இதழில் எழுதியது)
நூல்: தமிழர் தலைவர்





உண்மைக் களஞ்சியம்!
நம் பெரியார் அவர்கள் ஒரு மகாத் மாவல்ல. ஆனால், தாம் நினைத் ததைச் சாதிக்கும் ஒரு நேர்மைவாதி. அவருடைய அபிப்பிராயங்கள் ஆணித் தரமானவை. ஆனால், அவர் பிடிவாதக்காரரல்ல. தம் காரியத்தைச் சாதித்துக் கொள்வதற்காக, அவர் பட்டினி கிடப்பதில்லை; சாகும்வரை உண்ணாவிரத மிருப்பதில்லை. நேர்மை யான வழியிலேயே பாடு படுவார். காங்கிரஸ்காரருக்கு வார்தா எப்படியோ, அப் படியே திராவிடருக்கு ஈரோடு. அவர்கள் வார்தா போவது போல, நாம் அறிவுரை கேட்க ஈரோடு வருகிறோம். பெரியார் தமிழ்நாட்டின் உண்மைக் களஞ்சியம்!

-----------------------------_ சர். ஏ.டி.பன்னீர்செல்வம், பார் அட் லா (1938)
நூல்: தமிழர் தலைவர்



பிறர் செய்திராத பெரும்பணி செய்தவர்!

நண்பர் நாயக்கர் அவர்கள், இதுவரையில் வேறு யாரும் செய்திராத அளவு, மறுமலர்ச்சி இயக்கத்தை இந்தத் தென்னாட் டில் பரவச் செய்து விட்டார். இளைஞர் உலகத்தின் முழு ஆற்றலையும், பெருந் தீரத்தையும் ஒன்றாய்க் கூட்டிக் கலந்து, பேரெழுச்சியை உண்டு பண்ணி விட்டார். இளைஞர் கூட்டம் மட்டுமன்று, முதி யவர் கூட்டமுந்தான் அவரால் எழுச்சி பெற்று விட்டது. உள்ளபடியே தம்முடைய நாட்டு வளர்ச் சியில் நாட்டம் கொண்ட ஒவ்வொருவரும் ஈ.வெ.ரா. அவர்களுக்குக் கடமைப்பட்டுத்தான் இருக்கிறார்கள்.

-----------------_ ஆற்காடு சர்.ஏ. இராமசாமி முதலியார் அவர்கள் (1928) -_ நூல்: தமிழர் தலைவர்




செயற்கரிய செயல்

எல்லா துறைகளிலும், பிரா மணீயத்தை வெளிப்படையாகவும், உண்மையாகவும் எதிர்த்து, தமி ழரைத் தன்மானமும், பகுத்தறிவும் உள்ள மக்களாக வாழவைத்த செயல், ஏனைய எவரும் செயற்கரிய செயலாதலின் பெரியார் உண் மையில் பெரியாரே!
-------------------- _ தமிழறிஞர் தேவநேயப் பாவாணர்
ஜனவரி 1-15, 2014 உண்மை

                          --------------------------------”விடுதலை” 17-09-2015

*********************************************************************************
இன்று (17.9.2015) எம் அறிவு ஆசான் தந்தை பெரியார் அவர்களது 137ஆம் ஆண்டு பிறந்த நாள் பெரு விழா - திராவிடர் தம் திருவிழா - அருமையானதொரு கொள்கைப் பரப்பு முழு விழா!
வழக்கமாக அந்த ஞானசூரியன் கலந்து கொண்டு அறிவு கொளுத்திய லட்சிய முழக்கங்கள் ஆண்டு முழு வதும் செப்டம்பர் 17இல் துவங்கி அடுத்த செப்டம்பர் 16 வரை நாட்டில் நடைபெறுவது வாடிக்கை.
காரணம் அது வெறும் பிறந்த நாள் விழா அல்ல; அப்படிக் கருதப்பட்டிருந்தால் அது ஒரு நாள் செப்டம்பர் 17 மட்டுமே நடைபெறுவதோடு முடிந்து விடும். ஏன் ஆண்டு முழுவதும் இந்தப் பிறந்த நாள் பெரு விழா?
அய்யா அவர்களே அதனை அருமையாக விளக்கினார்:
பிறக்காத கடவுள்களுக்கும் பிறந்த நாள் கொண்டாடுகிறார்களே, ஒரு  கடவுளுக்கு சதுர்த்தி மற்ற ஒரு கடவுளுக்கு நவமி, மற்றொன்று அஷ்டமி, ஜெயந்தி, வேறு ஒன்று சஷ்டி (இச்சொற்களிலிருந்தே தமிழனுக்கும், தமிழுக்கும், இக்கடவுள்களுக்கும் சம்பந்தமில்லை - இறக்குமதி செய்யப் பட்ட கற்பனைகளே - பண்பாட்டின் படையெடுப்புகளே  என்பது புரியும்) என்று கொண்டாடுகிறார்களே - பார்ப்பனீயக் கட்டளையால் நம் பக்தர்கள்.
அது எதற்காக? பிரச்சாரத்திற்காகத் தானே? பிரச்சாரம் - விளம்பரம் செய்யாவிட்டால் சர்வ சக்தியுள்ளதாக சொல்லப்படும் அக்கடவுளையே மக்கள் மறந்து விடுவார்கள் என்பதால்தானே! எனவே நம் விழா தனிப்பட்ட பெருமைக்கல்ல; கொள்கையைப் பரப்புவதற்காகவே அந்த தொண்டு செய்த பழுத்த பழம், உடலால் மறைந்து,  42 ஆண்டுகள் ஓடி விட்டன!
இன்று உலகத் தலைவர் பெரியார் என்று அகிலமே முழங்குகிறது!
உங்கள் இயக்கம் உழக்குதானே என்று இறுமாப்புடன் எள்ளிய இன எதிரிகளுக்கு அச்சம் உலுக்குகிறது!
காரணம் கிழக்கும் மேற்கும், வடக்கும் தெற்கும் ஏந்திடும் தத்துவங்களின் தனி ஊற்றான தலைவராக நம் அறிவு ஆசான் அறியப்பட்டதோடு, பின்பற்றப்படுகிறார்.
அதனால்தான் வட அமெரிக்காவில் தொடங்கி சிங்கப்பூர், மலேசியா மியான்மா வரையுள்ள நாடுகளிலும் பெரியார் கொள்கை பரப்பு விழாக்கள் நடைபெறுகின்றன!
அவர் மண்டைச் சுரப்பை உலகு தொழுகிறது!
அய்யாவின் எதிர் நீச்சல் பாடம் நமக்கெல்லாம் அத்துபடியாகி விட்டதால், அவ்வெதிர்ப்புகள் உரங்களாகி கொள்கைப் பயிர் செழிக்க உதவுகின்றன!
தந்தை பெரியார் சந்திக்காத எதிர்ப்பு உண்டா? உலகம் கண்டதுண்டா? அவர் தந்த அந்தச் சுடர் நாளும் ஒளி விட்டுப் பிரகாசமாகி, அறியாமை இருட்டை விரட்டுகிறது!
சுடுதழலாகி, ஜாதி, தீண்டாமை, பெண்ணடிமைத்தனத்தை சுட்டெரிக்கிறது!
மகுடம் சூட்டிக் கொண்ட மதவெறி சக்திகளும், அரசியல் சந்தைக்கு வந்த ஜாதி வெறி சக்திகளும் தோள் தட்டி அறைகூவல் விடுகின்றன!
பண்பாட்டுப் படையெடுப்பினைப் புதுப்பிக்கின்றன!
எதிர் கொள்ள எமக்கென்ன தயக்கம்? முறியடிக்க முந்துவோம்.
எங்கள் அறிவு ஆசான் கொள்கைகள் வாளும், கேடயமுமாய், அறிவு ஏவுகணைகளாய் எம்மிடம் உள்ளனவே!
சுயமரியாதை உலகமைக்க சூளுரைக்கும்  நாளே இந்நாள்!
எமக்கு அறிவையும், எழுச்சியையும் ஊட்டிய எங்கள் தந்தையின் பிறந்த நாள்!
செல்வோம் பயணத்தில்! வெல்வோம் அறப்போரில்!!
வாழ்க பெரியார்! வளர்க பகுத்தறிவு!!
கி.வீரமணி
தலைவர்,  திராவிடர் கழகம்

சென்னை    
17-9-2015 
**********************************************************************************************************

பெரியார் காண விரும்பும் சகோதரத்துவ அமைதி உலகம்


பேதத்தைக் கற்பிக்கக் கூடியது கடவுளானாலும், சட்டமானாலும், மதமானாலும், சாத்திரமானாலும் அவரைப் பொறுத்தவரை அவை எல்லாம் அவரின் எதிரிகள்தாம்.


இந்த நிலையில் அமைதியும், சகோதரத்துவமும் சமத்துவமும் நிலவ வேண்டுமானால், அதற்கு மதமில்லாத ஓர் உலகம் தேவை. அந்த உலகத்தைத் தரக் கூடியது தந்தை பெரியாரியலே! ஆம், தந்தை பெரியார் உலகத்திற்கே தேவைப்படுகிறார், அதனைக் கொண்டு செலுத்த உறுதி கொள்வோம்.
                             
பழுத்த நாத்திகரான தந்தை பெரியார் 95 ஆண்டு காலம் வாழ்ந்து காட்டியதே கூட கடவுள் நம்பிக்கை யாளர்களின் சிந்தனையில் ஒரு புதிய சிந்தனை மின் வெட்டை ஏற்படுத்தும் என்பதில் அய்யமில்லை.
அவரின் கடவுள் மறுப்புக்கூட கடவுளை மறுக்க வேண்டும் என்ற நோக்கத்தில் புறப்பட்டதல்ல. மனித சமூகம் பிறப்பிலேயே ஜாதியின் பெயரால் கூறு போடப்பட்டதும், பிறப்பின் அடிப்படையில் உயர்வு - தாழ்வு கற்பிக்கப்பட்டதுமான தன்மையின் அடிப் படையில்தான் அதன் ஆணி வேருக்குச் சென்றார் தந்தை பெரியார்.
கடவுள்தான் அந்த ஜாதியை உண்டாக்கினார். சதுர்வர்ணம் மயாசிருஷ்டம் என்று கீதையிலே கிருஷ்ண பரமாத்மா சொன்னார் என்று வரும் பொழுது அவர் கிருஷ்ணனையும் கீதையையும் தோலுரித்தார்! அவற்றை வெறுக்கச் சொன்னார். இதனை வலி யுறுத்தும் மதத்தை எதிர்க்கச் சொன்னார் பிறவிப் பேதம் பேசும் சாஸ்திரங்களை எரிக்கச் சொன்னார். பேதமற்ற இடம்தான் மேலான திருப்தியான இடம் என்பது தந்தை பெரியாரின் கருதுகோள்!
இந்தப் பணியில் அவர் அரை நூற்றாண்டுக்கும் மேலாகப் பாடுபட்டு, தன் வாழ்நாளில் அதன் வெற்றி யின் கனியைச் சுவைத்தார் - மக்களையும் அனுபவிக்கச் செய்யவும் வைத்தார்.
தொடக்கத்தில் தந்தை பெரியாரின் புரட்சிகரமான கருத்துக்களைக் கேட்டு மருண்டவர்கள் கல்லால் அடித்தனர். அழுகிய முட்டையை மேடையில் வீசினர். கூட்டங்களில் பாம்புகளை விட்டனர் - கழுதையின் வாலில் வெடியைக் கட்டி வெடிக்கச்செய்து ஓட விட்டனர். அதே மக்கள்தான் பிற்காலத்தில் தந்தை பெரியார் என்று அழைத்தனர் - மதித்தனர். எடைக்கு எடை வெள்ளி நாணயங்களை அளித்தனர். தாங்கள் விரும்பிய பொருள்களையெல்லாம் தந்தை பெரியாரின் எடைக்கு எடை அளித்து மகிழ்ச்சியில் திளைத்தனர். ஓட்டு மொத்த தமிழின மக்களின் குடும்பத் தலைவ ராகவே வரித்துக் கொள்ளப்பட்டார்.
ஒடுக்கப்பட்ட மக்களின் வீழ்ச்சிக்கான காரணங் களை அங்குலம் அங்குலமாக அலசிப் பார்த்தார் தந்தை பெரியார் ஏற்றி வைத்த சமூகநீதிக் கொடி இந்தியத் துணைக் கண்டம் முழுவதும் பட்டொளி வீசிப் பறக்கிறது. இந்தியாவின் அரசியலையே நிர்ணயிக்கும் சக்தியாக அது விளங்குகிறது.
பெண்களுக்குச் சொத்துரிமை பற்றி 1928ஆம் ஆண்டிலேயே தென்னிந்திய சீர்திருத்தக்காரர்கள் மாநாட்டில் தந்தை பெரியார் விதைத்தார். இன்றைக்குப் பெண்களுக்குச் சொத்துரிமை சட்டப்படி கிடைத்து விட்டது.
பெண்களுக்காகப் பெரியார் போல சிந்தித்தவர்கள் குரல் கொடுத்தவர்கள், போராடியவர்கள் தந்தை பெரியாருக்கு இணையாக இன்னொருவரைக் கூற முடியாது.
அதனால்தான் 1938ஆம் ஆண்டிலே சென்னையில் பெண்கள் மாநாடு கூட்டி பெரியார் என்ற பட்டத்தைக் கொடுத்தனர்.
வளர்ச்சி என்பது மனிதனின் அறிவாலும், முயற்சியாலும் கிடைத்திருக்கிறதே தவிர கடவுளாலோ மதச் சிந்தனைகளாலோ அல்ல என்பது யதார்த்தம்.
இந்த நிலையில் மதம் என்பது ஒரு வணிக நிறுவனமாகி, மக்களின் சிந்தனையின் வேர்களைத் தன் பக்கம் இழுத்து அவர்களின் உழைப்பையும், பொரு ளையும், காலத்தையும் சுரண்டிக் கொழுத்துக் கொண்டிருக்கிறது.
திருப்பதி ஏழுமலையான் கோயிலின் கிளைக் கோயிலை சென்னையில் அமைக்கத் துடித்துக் கொண்டு இருக்கிறது. மூலபலத்தை நோக்கிப் போர்த் தொடுத்தார் - முன்னேற்றத்துக்கான திட்டங்களை வழிமுறைகளை வரிசையாக அணி வகுக்கச் செய்தார். அரசுகளை பணிய வைத்து அவற்றை நிறைவேற்ற வைக்கவும் செய்தார். கட்சிகளுக்கு அப்பாற்பட்ட முறையில் தமிழர்தம் உள்ளங்களில் எல்லாம் சிம்மாசனமிட்டு வீற்றிருக்கிறார்.
உலகளவில் பார்த்தால்கூட அவர் சொன்னவை எல்லாம் இன்று நிதர்சனமாகி விட்டன.
உலகளவில் எடுத்துக் கொண்டாலும் தந்தை பெரியார் அவர்களின் சிந்தனைகள் மிகவும் உண்மையானவை தொலைநோக்குடையவை.
மக்கள் தொகைப் பெருக்கத்தைப் பற்றி 1925ஆம் ஆண்டிலேயே எச்சரித்தார். கர்ப்ப ஆட்சி என்ற நூலையே கூட வெளியிட்டார். இன்று உலகமே கவலைப்படுகிறது. மக்கள் தொகையைக் கட்டுப்படுத்த வேண்டும் என்பதிலே கவனம் செலுத்த ஆரம்பித் துள்ளனர்.
இன்றைக்கு உலகை அச்சுறுத்திக் கொண்டிருப்பது மதவாதம்; படுகொலைகள் நாளும் நடந்து கொண்டிருக் கின்றன. ஒவ்வொரு மதத்திலும் தீவிரவாதிகள் தலை தூக்கி நிற்கின்றனர். இந்தியாவை எடுத்துக் கொண்டால்  இந்துத்துவா வாதம் கூர் ஈட்டியாகப் பாய்ந்து கொண் டிருக்கிறது.
மதம் யானைக்குப் பிடித்தாலும் ஆபத்து, மனித னுக்குப் பிடித்தாலும் ஆபத்தே! இந்த மதத்தால் உலகம் அமைதியைத் தொலைத்துக் கொண்டு அவதிப்பட்டுக் கொண்டிருக்கிறது.
இந்த நிலையில் அமைதியும், சகோதரத்துவமும் சமத்துவமும் நிலவ வேண்டுமானால், அதற்கு மதமில்லாத ஓர் உலகம் தேவை. அந்த உலகத்தைத் தரக் கூடியது தந்தை பெரியாரியலே! ஆம், தந்தை பெரியார் உலகத்திற்கே தேவைப்படுகிறார், அதனைக் கொண்டு செலுத்த உறுதி கொள்வோம்.
                 --------------------------------------------”விடுதலை” தலையங்கம் 17-09-2015

0 comments: