Search This Blog

15.9.15

அண்ணா பிறந்த நாள் சிந்தனை-திராவிடரா? அவர் யார்? திராவிடர் இயக்கமா அது என்ன செய்து கிழித்தது?

அண்ணா பிறந்த நாள் சிந்தனை:
(அறிஞர் அண்ணாவின் 107ஆம் ஆண்டு பிறந்த நாளான இன்று அவர்தம் சிந்தனைகள்)


காமவேள் நடன சாலையில் கர்ப்பூரக் கடை

...வடலூராரும் கண்மூடி வழக் கமெல்லாம் மண் மூடிப் போக' என்று கூறினார். கூறியதைக் கீதமாக்கிக் கொண்டனரேயொழிய, கண்மூடிப் பழக்கத்தை யார் வெட்டிப் புதைக்க முன் வந்தனர்? அருட்பாவையும் பூசத்திற்கேற்ற பாசுரமாக்கினரே ஒழிய, பூசரப்பாட்டு ஒழிப்புக்கான மார்க்கமாகக் கொண்டவர்கள் யார்? எனவேதான் ஒரு கூட்டத்திற்கு அது பார்ப்பனக் கூட்டமாக இருப்பதால் என்று மட்டுமல்ல; எந்தக் கூட்டாமா யிருப்பினும் சரியே, ஒரு கூட்டத்தின் சுயநலத்தை வளர்க்கும் எண்ணங் களைச் சுலபத்திலே மடியவிட மாட்டார்கள், இங்கு மட்டுமல்ல; எங்கும் பூமி உருண்டை என்ற புதிய கருத்தை ஏற்றுக் கொண்டதால் பூசுரக் கூட்டம் நட்டம் காண்பதில்லை. ஆனால், தேவலோகம் என்று ஒரு தனி இடம் கிடையாது. இறந்தவர்கள் அங்குச் செல்வது என்பது புரட்டு. அப்படி அவர்களைக் குடியேறச் செய்வதற்காகவே இங்கு பூதேவ ருக்குத் தட்சணைத் தரப்பட்டு சில சடங்குகள் செய்யப்படுகின்றன. இது பொருள் பறிக்கும் தந்திரம் என்ற புதிய கருத்தை ஏற்றுக் கொண்டால் பழைய கருத்தை நம்பி மக்கள் தரும் பணம் கிடைப்பது நின்று விடும். எனவே தமக்கு நட்டம் தரக்கூடிய புதுக்கருத்துகளை அப்பூசரக்கூட்டம் எங்ஙனம் வரவேற்கும்?

                         ------------------------------------------திராவிட நாடு இதழ் - (17.2.1946)
*********************************************************************************
விதைக்காது விளையும் கழனி!

விதைக்காது விளையும் கழனி எப்படியிருக்க முடியும்? ஏன் முடி யாது? உழைக்காது வாழும் மனிதர்கள் வாழும்போது விதைக்காது விளையும் கழனி ஏன் இருக்காது? உழைக்காது வாழும் மனிதர்கள் இருப்பது மட்டுமல்ல; ஊரையே ஆட்டிவைக்கும், அரசனையே ஆட்டிப் படைக்கும் மனிதர்களும் இருந்திருக்கிறார்கள் - இருக்கிறார்கள். அரசன் உழைப்பதில் லையே தவிர, ஊர் கோபத்துக்கும் வேறுவேந்தரின் படையெடுப்புக்கும் அஞ்சி வாழ வேண்டும். மன்னன் ஆளப் பிறந்தவன் என்ற எண்ணம், மக்கள் மனத் திலே ஆழப் பதிந்திருக்கும் வரையிலே தான், மணிமுடி தரித்து வாழ முடியும். கோபமோ, குமுறலோ கொப்பளித்தால், கோல் உடையும். ஓர் அரசு போனால் மற்றோர் அரசு கிடைக்கும் என்ற நம்பிக் கையோடு அவன் இருக்க முடியாது. முடி கவிழ்ந்தால், பிறகு மீண்டும் சிரம் ஏறும் என்று உறுதியாகக் கூற முடியாது. ஆனால் அரசர்களுக்கு இருக்கும் ஆபத்துக்கூட தங்களை அண்ட முடியாத படியான அரண் அமைத்துக்கொண்டு, ஆண்டிக் கோலத்திலே இருப்பினும் அரச போகத் தையும் அனாயசமாகப் பெறக் கூடிய நிலையைப் பெற்று நெடுங்காலமாகவே அந்நிலை குலையாமல் பார்த்துக் கொண்டு வாழும் கூட்டம் ஒன்று இருக்கிறது..

                             ---------------------------------------திராவிட நாடு இதழ் - (24.2.1946)
*********************************************************************************
வழக்கு வாபஸ்

அந்தக்காலத்து நீதி, இந்தக் காலத் துக்குச் செல்லாது என்றால், நாட்டை ஆளும் நீங்கள் அந்தக் காலத்து நீதியைப் போக்கும் பழையபுராணங்களை மக்களுக் குப் போதிக்கக்கூடாது. போதிப்பது சட்ட விரோதம் என்று தடுத்திருக்க வேண்டும். தங்குத் தடையின்றி பழைய நீதிகளைப் போதிக்கும் புராணப் பிரச்சாரம் பாட்டாக வும், கூத்தாகவும் நாட்டிலே நடப்பதால் இதை அனுமதிக்கும் சர்க்காரும் பழைய கால நீதியையே இன்னும் போற்று கிறார்கள் என்று நம்பினேன்.
...இந்த ஒரு விடயத்துக்காகவே என்னைப் பைத்தியக்காரன் என்று கூறு கிறீர்கள். அந்தக் காலத்து வேப்பமரத் துக்கு இன்றும் தங்களுக்குள்ளதை விட அதிகாரம் அதிகம். அன்று போலவே இன்றும் கருடனும், குரங்கும் தெய்வங் களாகவே உள்ளன. அப்படியிருக்க தாங்கள் அந்தக் காலத்து நீதி வேறு, இன்று வேறு என்று எப்படிச் சொல்லலாம்? அந்தக் காலத்து நீதி கூடாது என்றால், அவற்றை நம்பும்படிச் செய்யும் புராணப் பிரசங்கம் நிறுத்தப்பட வேண்டும்.
...சார் அவன் சொன்னதிலே நியாயம் இருக்கிறது. உண்மையிலேயே, பக்தியின் பெயரால் நடந்திருக்கின்ற அக்கிரமங்கள் ஏராளம். என்ன காரணத்தாலோ அவர்கள் எல்லாம் பக்திமான்கள் என்று கொண்டாடப்படுகிறார்கள். அவன் சொன்னது போல, மாணிக்கவாசகரும், இராமதாசரும் பிறர் சொத்தை எடுத்துத் தமது பக்தியைக் காட்டச் செலவிட்டது. எப்படி தர்மமாகும்? எப்படி நியாய மாகும்? இந்தக் கர்ப்பூரம் திருடிய வனுக்கு நாம் செக்ஷன் தேடுகிறோம்!
...ஆகையாலே, அந்தக் காலம் என் னமோ மகா பிரமாதமான புண்ணிய காலம், அந்தக் காலத்து சனங்கள் மகா உத்தமர்கள் என்று பேசுவது. அந்தப் புராணங்களின்படியே பார்த்தால் கூட அவ்வளவு உண்மை என்று தெரிய வில்லை.
வழக்கு வாபஸ் நாடகம்
                  --------------------------------------திராவிட நாடு இதழ் - (18.8.1946)
*********************************************************************************
ஒழுக்கம் கூசிற்று
ஆசிரமத்தைக் கண்டோம். கடவுள் அருளுக்கு வழி காட்டப்படும் இடம் என்று பாமரர் நம்பும் அந்த இடம் காமேவள் நடனச்சாலையாக இருக்கக் கண்டோம். இளித்தவாயர்களுக்குப் பகலிலே உபதேசம். இன்பவல்லி களுக்கு இரவிலே சரசமாம்! குருடனுக் குக் கோல் தேவையாக இருப்பது போல், ஊரை ஏமாற்றி குடி கெடுப்ப வனுக்கு வேடம் தேவைப்படுகிறது. வேடம் அணியாத வேதாந்தி - மோடி செய்யாத மாது - சோடியில்லாத மாடப்புறா - சேடியில்லாத இராச குமாரி இருக்க முடியாதாம். அரி அரதாஸ் இத்தகைய ஒரு வேடதாரி இந்த ஆசிரமத்திலே காதிலே குண்டல மாட கணத்த சாரீரம் பாட, காய்ச்சிய பால் தொண்டையில் ஒட கண்கள் கதியற்ற கன்னியரை நாட கடவுள் அருளுக்கு வழிகாட்டப்பட்டதாம். சிரித்திடும் நரி, சிவ சொரூபத்தில் இருந்தது இந்த ஆசிரமத்தில்! ஒம் சாந்தி என்று உரத்த குரலில் கூவி வந்த இந்தக் குருவைக் காண ஒழுக்கம் கூசிற்று. தருமம், இவன் இருக்கும் திக்கைக் காண மறுத்தது.
                     -------------------------------திராவிட நாடு இதழ் (16.12.1946).
************************************************************************************************************


அண்ணாவைப் புரிந்து கொள்வோம்!


1962ஆம் ஆண்டு மே திங்கள் முதல் நாளான மே தினத்தன்று அண்ணா அவர்கள் நாடாளுமன்றத்தில் மாநிலங்களவையில் ஆற்றிய உரை கன்னிப் பேச்சு என்று கூறப்பட்டாலும் அவரின் உரை - அனைவரின் புருவங் களையும் மேலும் கீழுமாக அசைக்கச் செய்தது. பார்வை யாளர் மாடம் நிரம்பி வழிந்தது - செய்தியாளர்கள் மாடமும் நெருக்கத்தில் பிதுங்கியது. மக்களவை உறுப்பினர்களும், பார்வையாளர் பகுதியில் மொய்த்துக் காணப்பட்டனர்.
அண்ணா தன் கன்னிப் பேச்சைத் தொடங்கினார். நான் திராவிட இன வழி வந்தவன்! நான் திராவிடன் என்று என்னைக் கூறிக் கொள்வதில் பெருமிதம் கொள்கிறேன். இவ்வாறு நான் கூறுவதால் வங்காளியர், குஜராத்தியர், மராட்டியர் முதலானவர்களுக்கு நான் எதிராக இருப்பவன் எனப் பொருள் படாது. ஏதோ தனிச் சிறப்பு, ஏதோ மாறுபாடு கொண்டு விளங்கி வரும் ஒரு தனித் தேசியத் தன்மை கொண்டிருப்பவர்கள் என நான் கொள்கிறேன் என்ற ஒரு பொருள் மட்டுமே இதைக் குறிக்கும்.
நாங்கள் விழைவது அனைத்து சுய நிர்ணய உரிமையாகும் என்று தன்னுரையைத் தொடங்கிய அண்ணா அவர்கள். நாட்டு விடுதலைக்குப் பிறகு தென் னாடு தொடர்ந்து புறக்கணிக்கப்படும்போது ஒருமைப்பாடு என்பது எப்படி இருக்க முடியும் என்று வினா எழுப்பினார்.
துணைக் குடியரசு தலைவர் என்ற முறையில் அவைக்குத் தலைமை தாங்கிய டாக்டர் இராதா கிருஷ் ணன் அவர்களைப் பார்த்து அண்ணா அவர்கள் தலைவர் அவர்களே! இந்தியா ஒரு நாடு என்பதற்கு ஒரு காரணம் காட்டியிருக்கிறீர்கள். கன்னியாகுமரியிலிருந்து இமாலயம் வரையிலும் இராமனையும், கிருஷ்ணனையும் தொழு கிறார்கள் என்று கூறினீர்கள். ஆனால் ஏசுநாதரை அய் ரோப்பா முழுவதும் தொழுகிறார்கள் என்றாலும் அங்கே பல தேசிய நாடுகள் இருக்கத்தானே செய்கின்றன? என்று அண்ணா எழுப்பிய கேள்விக்கு மெத்த படித்த டாக்டர் இராதாகிருஷ்ணன் அவர்களால் எதையும் பதிலாகக் கூற முடியவில்லை. அறிஞர் அண்ணாவின் அரிய கருத்தினைச் செவியுற்ற பாபு ஜெகஜீவன்ராம் அவர்கள் அண்ணாவின் கரத்தைப் பிடித்துக் குலுக்கிப் பாராட்டுத் தெரிவித்ததோடு - அவர் தெரிவித்த அந்த வரி வரலாற்றில் மிளிரும் பொன்னெழுத் துக்களே!
“I am a Dravidian from Bihar’’   என்றாரே பார்க்கலாம். (நான் பிகாரிலிருந்து வந்துள்ள திராவிடன் என்றார்)
திராவிடரா? அவர் யார்? திராவிடர் இயக்கமா அது என்ன செய்து கிழித்தது? என்று வாயிருக்கிறது என்று சொற்களைக் கொட்டும் ஆசாமிகள் சிந்தித்துப் பார்க்க வேண்டிய இடம் இது.
அண்ணல் அம்பேத்கர் அவர்களும் ஒரு கால கட்டத்தில் இந்தியா முழுமையும் பரவியிருந்தவர்கள் திராவிடர்கள்தான், நாகர்கள் என்பவர்களும் திராவி டர்களே  என்று எழுதியுள்ளார்.
திராவிடர்கள் என்று சொல்லும் பொழுது அண்ணல் அம்பேத்கரும் சரி, பாபு ஜெகஜீவன்ராம் அவர்களும் சரி - ஆரியப் பார்ப்பனர்கள் எதிர்ப்பில் மிகவும் சரியாகவும் தெளிவாகவுமே இருந்துள்ளனர்.
அண்ணா அவர்களின் கருத்தும் இதில் எத்தகையது என்பது எல்லோருக்கும் தெரிந்த உண்மையே!
இன்றைக்கு நாட்டின் நிலை என்ன? மத்தியில் உள்ள பிஜேபி ஆட்சி இந்தியையும் சமஸ்கிருதத்தையும் இந்தியா முழுமையும் பரப்ப, திணிக்க ஒற்றைக் காலில் நின்று தவம் இருப்பது ஏன்?
இந்தியாவை இந்து ராஜ்ஜியம் ஆக்குவோம் என்று துடிப்பது ஏன்? இந்தியா முழுமையும் இருப்பது ஒரே கலாச் சாரம், அது இந்துக்கலாச்சாரம் என்று சொல்லக் கூடிய போர்வையில் ஒளிந்திருப்பது பார்ப்பனக் கலாச்சாரம் தானே!
இதனை அண்ணா அவர்கள் ஆரிய மாயை நூலில் மிகவும் அழகாக ஆணித்தரமாகத் தீட்டியுள்ளார்.
இந்து என்றால் சனாதன தர்மானுசாரி! இந்துஸ்தானம் என்பதற்குப் பியர்ஸ் என்சைக்ளோபீடியா தந்துள்ள பொருள், இமயத்துக்கும் விந்திய மலைக்கும் இடையே உள்ள பிரதேசத்தில் ஒரு பகுதி என்பதாகும். இந்து என்பது ஆரியரையும் இந்துஸ்தானம் என்பது ஆரிய வர்த்தத் தையும் குறிக்கும்.
இந்த இந்துஸ்தானம் இந்து, இந்து மதம் ஆகிய வற்றிற்கும் திராவிட நாடு, திராவிடர், திராவிடர் சமயம் ஆகியவற்றிற்கும் அடிப்படையான வேறுபாடுகள் உள்ளன. நிலவளம் முதற்கொண்டு மக்கள் மனவளம் வரை வேறு பாடுகள் உண்டு. வேறுபாடுகள் இருப்பினும் கேடொன்றும் நேரிடாது, முரண்பாடுகள் உள்ளன. அவைகளை மறைத் துப் பயனில்லை. ஆரியர் காங்கிரசின் துணையை நாடியோ, இந்து மகா சபையின் துணை கொண்டோ, வெள்ளையரின் துணை கொண்டோ திராவிட மறுமலர்ச்சியைத் தடுக்க முயன்றால் தாமதம் ஏற்படக் கூடுமேயொழிய, தடை யேற்படாது, முடிவு பிரிவினைதான் என்று ஆய்வு நோக்கோடு அலசுகிறார் அண்ணா. அன்று காங்கிரஸ் என்பதால் அதனைக் குறிப்பிட்டுள்ளார். இன்று அந்த இடத்தில் பிஜேபியைப் பொருத்த வேண்டும்.
ஆம், அண்ணா அன்று எடுத்துக்காட்டிய இந்துஸ் தானம், இந்து, இந்து தர்மம் என்பதுதான் இன்றைய பிஜேபியும், அதன் சங்பரிவார்களும்.
இந்த எதிரிகளை நாம் புரிந்து கொண்டு, அவர்களை முறியடிப்பதுதான் அறிஞர் அண்ணா எடுத்துக் கூறிய அந்தத் திராவிடம், திராவிடர், திராவிடப் பண்பாடு என்பது.
தமிழ்த் தேசியவாதிகள் இதனை நுணுக்கமாகப் புரிந்து கொண்டால் நல்லது. திராவிட இயக்கம் என்று சொல்லிக் கொள்ள யாருக்குத் தகுதி என்றால் மேலே காட்டிய அய்யா, அண்ணா ஆகியோர்தம் அறிவு வழிகாட்டிய திசையைக் கடைப்பிடிப்பவர்களுக்குத்தான் பொருந்தும். அண்ணா பிறந்த இந்நாளில் உரத்த முறையில் சிந்திப் பார்களாக!
வாழ்க பெரியார்!
வாழ்க அண்ணா!!
                      -----------------------------"விடுதலை” தலையங்கம் -15-09-2015
******************************************************************************

அண்ணா காட்சிக்காக அல்ல கொள்கைக்காகவே!
இன்று (15.9.2015) அறிஞர் அண்ணாவின் 107வது பிறந்த நாள் விழா!
அறிஞர் அண்ணா என்ற மாமனிதர், பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரிடமிருந்து ஒளி பெற்ற தேய்பிறை காணாத முழு நிலா.
ஆட்சியைப் பிடித்தபோது அவரை அதிகார ஆணவம் உலுக்கவில்லை. மேலும் மேலும் தன்னடக்கத் தால் அந்தத் தண்மதி உயர்ந்த ஒளியை வீசிக் கொண்டே இருந்தது!
தன்னை ஆளாக்கிய அறிவு ஆசானிடம் அவர் காட்டிய நன்றி உணர்வும், கொள்கைப் பாசமும் வரலாற்றில் நின்று நிலைத்தவை; வென்று திளைத்தவை!
ஆம்; இந்த அமைச்சரவையே (தி.மு.க. -அமைச் சரவையையே - அரசையே) தந்தை பெரியாருக்குக் குக் காணிக்கை என்று பிரகடனப்படுத்தி, ஆட்சி வரலாற்று அற்புதப் பதிவாக இதை மாற்றியவர் வேறு எவருளர்?
அவர் மறைந்த பிறகு நடந்த லட்சோப லட்சம் பேர் திரண்ட இரங்கல் கூட்டத்திலும் அவரது ஆசான் அதைப் பெருமையுடன் தக்க பதிலடியாக, ஆச்சாரி யாரின் திரிபுவாத திசை திருப்பலுக்குத் தந்தை பெரியார் தந்தாரே!
இப்படிப்பட்ட நிகழ்வு குரு - சீடன் பாசம் - வேறு எங்கே காண முடியும்?
தந்தை பெரியாரிடம் தொண்டராகப் பணிபுரிந்த காலமே அண்ணாவின் வசந்த காலம் என்று அவரே
கூறி, பதவியைத் துச்சமாக்கினார் அப்பெருந்தகை!
ஓராண்டில் முப்பெரும் சாதனைகள் - எளிதில் எவராலும் மாற்றப்பட முடியாத மறைக்கப்பட முடியாத சரித்திர சாதனைகளாக முதல் அமைச்சர் அண்ணா செய்தாரே! அம்மூன்றும் முத்தமிழ் போல சாகா தன்மை பெற்ற சாதனைகள் அல்லவா!
தாய்த் தமிழ்நாட்டிற்கு தமிழ்நாடு என்ற பெயர்
சுயமரியாதைத் திருமண சட்ட வடிவம், தமிழ்நாடு பெயர் மாற்றம், இரு மொழிக் கொள்கை மூலம் ஹிந்தி வடமொழித் திணிப்புக்கு தடுப்பணை -
இம்மூன்றும் நிலைத்த புகழை அவருக்கும் அவர் கண்ட கட்சிக்கும், ஆட்சிக்கும் இன்றும், என்றும் தந்து கொண்டே ஒளி வீசும் அணையாச் சுடர்கள் அல்லவா!
இன்று அண்ணா பலருக்கு முகத்திரை, வெறும் படம்  - பாடமல்ல என்பதுதான் வேதனையாக உள்ளது.
அண்ணா பெயர் கொள்கைக்காக அல்ல - காட்சிக்காக என்ற நிலை வந்து விட்டதால்.
வேதனை தாக்க வெட்கப்படும் சூழ்நிலை!
இது மாறியாக வேண்டும்.
என்றாலும் திராவிடமும் அண்ணாவும் அய்யாவின் ஆயிரங் காலத்துப் பயிர்கள்.
அவை வாடாது பசுமையாகவே இருக்க, நம்மை ஆயத்தப்படுத்திக் கொண்டு சுயமரியாதை  உலகு அமைப்போம்!
பெரியார் வாழ்க! அண்ணா வாழ்க!!

---------------கி.வீரமணி தலைவர்,  திராவிடர் கழகம் 15-9-2015  , சென்னை

0 comments: