விநாயகர் ஊர்வலம் என்ற பெயரில் பார்ப்பனீய இந்துத்துவ சக்திகள் ஒவ்வொரு வருடமும் கலவரங்களை உண்டாக்குவது என்ற ஒரு கலாச்சாரத்தைக் கொடியேற்றிக் கொண்டாடிக் கொண்டு இருக்கின்றனர்.
இவர்களின் நோக்கம் விநாயகர் ஊர்வலம் நடத்துவதல்ல; அதன் பேரில் பெரும்பாலும் இசுலாமிய மக்களைச் சீண்டுவதுதான். கடந்த பல ஆண்டுகளிலும் நடைபெற்றது போலவே இவ்வாண்டும் கலவரங்களை ஆங்காங்கே திட்டமிட்ட வகையில் அரங்கேற்றியுள்ளனர்.
பகுத்தறிவுப் பிரச்சாரப் பணிகளுக்குக் காவல்துறையிடம் திராவிடர் கழகம் அனுமதி கேட்டால், இரண்டு மூன்று ஆண்டுகளுக்கு முன் குறிப்பிட்ட இடத்தில் நடைபெற்ற திராவிடர் கழகக் கூட்டத்தில் கல் வீசப்பட்டது;
எனவே அந்தக் குறிப்பிட்ட இடத்தில் அனுமதி கொடுக்க முடியாது என்று வித்தாரம் பேசும் காவல்துறை - ஒவ்வொரு ஆண்டும் இந்தப் பிள்ளையார் ஊர்வலத்தில் குறிப்பிட்ட இடங்களில் கலவரங்கள் உண்டாக்கப்படுகிறதே - அதனை ஏன் கருத்தில் கொள்வதில்லை?
சட்டம் என்பது எல்லோருக்கும் பொதுவானதுதானே! இப்படிக் காவல்துறை ஒரு தலைப் பட்சமாக முடிவுகளை எடுப்பது ஏன்? இதுபோன்ற காவல்துறையின் மனுநீதி மனப்பான்மைதான் காவல்துறையிடத்தில் மக்கள் கொண்டிருந்த மதிப்பும், மரியாதையும் மங்குவதற்குக் காரணம்!
பொதுவாக பிள்ளையார் சதுர்த்தி என்ற பெயரில், அந்த நாளில் பூஜை நடத்தி, அந்தப் பிள்ளையாரை பக்கத்தில் உள்ள குளத்திலோ, கிணற்றிலோதான் போடுவார்கள். அய்தீகம்பற்றி வாய்க்கிழியப் பேசும் வைதிக சிரோன்மணிகள் அந்த சடங்காச் சாரங்களை மாற்றிக் கொண்டது ஏன்? மற்றவற்றுக்கெல்லாம் சம்பிரதாயம், முன்னோர் சொன்னது என்று முணுமுணுக்கும் முப்புரிகள் இந்த அனுஷ்டானங்களைக் காலில் போட்டு மிதிப்பானேன்?
விநாயகர் ஊர்வலங்களை முன்னெடுத்துச் செல்லுவோர் யார்? இந்துக்களின் பண்டிகை என்றால் இந்து முன்னணி கொடி எங்கிருந்து வந்து குதித்தது? இந்துக்களின் விழாவா? இந்து முன்னணிகளின் விழாவா?
விநாயகர் ஊர்வலம் என்ற பெயரால் இந்து முன்னணி, ஆர்.எஸ்.எஸ். காவிகளின் செல்வாக்கை பக்தர்கள் மத்தியில் தூக்கிப் பிடித்து நிலை நிறுத்தும் ஒரு தந்திர உபாயமே இந்த விநாயகர் ஊர்வலம். இந்த ஊர்வலத்தில் எத்தகைய முழக் கங்களை எழுப்புகிறார்கள்? அதனைத் தெரிந்து கொண்டாலே இந்த ஊர்வலத்தின் அழுக்குப் படிந்த அருவருக்கத்தக்க பின்னணியைத் தெரிந்து கொள்ளலாமே!
பேராசிரியர் திரு. ஆ. சிவசுப்பிரமணியன் (இந்தியக் கம்யூனிஸ்டுக் கட்சி) அவர்களால் எழுதப்பட்ட பிள்ளையார் அரசியல் எனும் நூலில் இதுபற்றி விரிவாகவே எழுதியுள்ளார்.
இம்மதம் நம் மதம் இந்து மதம்
ஏன் இன்று இதனை மறுதலிக்கிறாய்? கணங்களின் நாயகன் கணபதியையும், சிவனையும், வாயு புத்திரனையும், எங்ஙனம் மறந்தாய்?
வெற்றுச் சின்னங்களை வணங்கி எப்பேறு பெற்றாய்?
என்னவரம் அளித்தார் அல்லா உனக்கு?
இன்று நீ முகமதியன் ஆகி விட்டாய்
அந்நிய மதம் தன்னை அன்னியப்படுத்து
உன் மதத்தை மறந்திடில் நின்வீழ்ச்சி நிச்சயம்
சின்னங்களை மதியாதே
நம் அன்னை கோமாதாவை மறந்திடாதே!
அழைத்திடுவீர் அனைவரையும்
அருமையாகக் காத்திடுவீர் நம் மதத்தை!
தூக்கி எறிவீர் பஞ்சாஸையும் நூல்களையும்;
(பஞ்சாஸ் - அய்ந்து விரல்களுடன் கூடிய உலோகக் கை) (நூல் பக்கம் 54)
மேற்கண்ட முழக்கங்களில் பொதிந்துள்ள வன்மத்திற்கு விளக்கம் தேவையில்லை.
கடவுளின் யோக்கியதை இதுதானா? கடவுள் பக்தர்களின் யோக்கியதையும் இதுதானா? மக்களிடையே பிளவையும், மாச்சரியத்தையும், கலவரத்தையும் விதைப்பதுதான் கடவுள், மதச் சமாச்சாரங்களின் நோக்கம் என்றால் இவற்றை மூளையின் பகுதியிலிருந்து தூக்கி எறிவது தானே யோக்கியமான மனிதர்களின் முழு முதற் கடமை.
பாலகங்காதர திலகர் என்ற மராட்டிய பார்ப்பன வெறியர் தான் விநாயகர் ஊர்வலத்தின் கர்த்தா! செக்கிழுப்பவனும், பெட்டிக் கடைக்காரனும் எதற்காக சட்டசபை செல்ல வேண் டும் என்று கேட்ட பார்ப்பன ஜாதி வெறியன்தான் இந்தத் திலகர்.
திலகரின் மரணத்தின் போது அங்கு வந்த காந்தியார் - தன் தோளில் திலகரின் பாடையைத் தூக்க வேண்டும் என்று முனைந்த போது! நீ வைசியன் - பிராமணனின் பிணத்தைத் தூக்கக் கூடாது! என்று அங்கிருந்த பூணூல் மேனிகள் தடை விதித்ததையும் இந்த நேரத்தில் நினைவூட்டிக் கொள்வது பொருத்தம் ஆகும்.
மும்பையில் 1893ஆம் ஆண்டில் தான் இந்த விநாயகர் ஊர்வலம் என்ற மதவெறி ஊர்வலத்துக்காக கொடியை ஏற்றி வைத்தார் பாலகங்காதர திலகர்.
இந்த ஊர்வலத்துக்கு இன்னொரு உள்நோக்கமும் உண்டு. மும்பையில் முசுலிம்கள் ஆண்டுதோறும் மொகரம் பண்டிகை கொண்டாடும் போது ஊர்வலமும் நடத்துவார்கள். இந்த ஊர்வலத்தில் இசுலாமியர் இந்துக்களும் சகோதர உணர்வுடன் இணைந்து கொள்வார்கள்.
இந்த உணர்வை மாற்ற வேண்டும் - இந்து - முசுலிம்கள் சகோதரர்களல்ல - எதிரிகள் என்ற வெறியை ஊட்ட வேண்டும் என்ற தீய நோக்கத்தோடுதான் திலகரால் இந்த விநாயகர் ஊர்வலம் தொடங்கப்பட்டது என்பதை மறந்துவிடக் கூடாது.
உண்மையைச் சொல்லப் போனால் இந்த விநாயக கடவுள் இடையிலே கொண்டு வந்து திணிக்கப்பட்டது - வேதங்களில் விநாயகன் காணப்படவில்லை. இது புராணத்தின் படைப்பு அண்டப்புளுகும் ஆகாயப் புளுகும் பெற்றெடுத்த பிள்ளை தான் இந்தப் பிள்ளையார். பிள்ளையார் பிறப்பில் ஆபாசங்களைப் படித்தாலே அது தெரியும்.
இந்தப் பிள்ளையாரை யாரும் எப்படியும் உருவாக்கலாம் பிரச்சாரம் செய்யலாம் பயன்படுத்திக் கொள்ளவும் செய்யலாம்.
கார்கில் பிள்ளையார், கிரிக்கெட் பிள்ளையார், கடன் தீர்த்த விநாயகர் என்று சகட்டு மேனிக்கு நாமகரணம் சூட்டப்படு வதை எந்த சங்கராச்சாரியார்களும் கண்டு கொள்வதில்லை.
திராவிடர் கழகத்தினர் பிள்ளையார் பொம்மையை உடைத்தால் தவறாம்; அதே பிள்ளையாரைப் பக்தர்கள் தண்ணீரில் தள்ளி அடித்து, உதைத்து காலால் மிதித்து அவமானப்படுத்திக் கரைக்கிறார்களே - அதைப்பற்றி ஏன் பேசுவதில்லை?
அய்யயோ கடவுளை அவமானப்படுத்து கிறார்களே என்று எந்தப் பக்தரும் அல்லது இந்து முன்னணியினரும் குமுறுவது இல்லையே - ஏன்?
பிடித்தால் பிள்ளையார் வழித்தெறிந்தால் சாணி என்ற பரிதாபம் இதுதானோ!
----------------------------”விடுதலை” தலையங்கம் 22-09-2015
0 comments:
Post a Comment