Search This Blog

2.9.15

பெண்கள் ஏன் ஆண்களுக்கு நிரந்தர - நிபந்தனை அற்ற அடிமையாக இருக்க வேண்டும்?

ஆணாதிக்க சமூகம்



இந்நிகழ்ச்சி ஒரு சமுதாய வாழ்வு நிகழ்ச்சி என்றாலும் ஒரு புரட்சிகரமான மாறுதல் நிகழ்ச்சியாகும். இதுவரை நம்மிடையே நடைபெற்று வந்த நிகழ்ச்சிக்கு முற்றிலும் மாறாக - புரட்சிகரமான மாறுதலோடு நடைபெறும் நிகழச்சியாகும். இதுவரை இந்நிகழ்ச்சியானது நம்மிடையே கல்யாணம், விவாகம், தாராமுகூர்த்தம், கன்னிகா தானம் என்னும் பெயரால் நடைபெற்று வந்தவையாகும்.

இந்நிகழ்ச்சியை மாற்றிப் புதிய முறையில் ஏற்பாடு செய்ய வேண்டிய அவசியம் ஏன் வந்தது என்றால், பழைய முறையில் பெண்களை முதலாவது ஆண்களுக்கு நிரந்தர அடிமையாக்குவது, இரண்டாவது மனிதர்களை மடையர்களாக ஆக்குவது, மூன்றாவது ஜாதி இழிவை நிலைநிறுத்துவது என்கின்றவற்றை அடிப்படையாக வைத்து நடத்தப்பட்டு வந்தவையே யாகும் என்பதற்காகத் தான் இம்முறை தோற்றுவிக்கட்டதேயாகும்.

பெண்கள் ஏன் ஆண்களுக்கு நிரந்தர - நிபந்தனை அற்ற அடிமையாக இருக்க வேண்டும்? மனிதன் ஏன் மடையனாக, காட்டுமிராண்டியாக, இழிமகனாக இருக்க வேண்டும்? என்கின்ற எண்ணம் எவருக்கும் ஏற்படவில்லை.

நம் நாட்டில் தோன்றிய மகான், மகாத்மா, தெய்விக சக்தி பொருந்தியவர்கள் என்வர்கள் அனைவரும் இம்முறையை வலியுறுத்தினார்களே தவிர, இம்முறையானது ஒழிக்கப்பட்டுப் பெண்கள் சுதந்திரமாக வாழ வேண்டும்; மனிதன் இழிவற்று - மானத்தோடு - அறிவு பெற்று வாழ வேண்டுமென்று எவரும் தொண்டாற்றவில்லை.

பெண்ணடிமையைப் பற்றி ஆண்கள் தான் கவலைப்படவில்லை என்றால், பெண்களும் தாங்கள் அடிமையாக இருக்கின்றோம், இந்த அடிமைத் தன்மையிலிருந்து விடுதலை பெற்று சுதந்திரமாக வாழ வேண்டுமென்று கருதவில்லை. தங்கள் அடிமைத் தன்மை அவர்களுக்குத் தெரியாமலே இருந்தது.

இந்தியாவிலேயே பெண்கள் விடுதலை பெற வேண்டும் என்று தொண்டாற்றக் கூடியது சுயமரியாதை இயக்கம் ஒன்று தானாகும். கடந்த 40- ஆண்களுக்கு மேலாகப் பெண்களின் விடுதலையை முக்கிய குறிக்கோளாகக் கொண்டு அதன் காரணமாகவே இம்முறைத் திருமணத்தை ஏற்பாடு செய்து மக்களிடையே பரப்பிக் கொண்டு வருகின்றது.

மேலும் திருமணம் என்றால், மனிதன் கடவுள், மதம், ஜாதி, சாஸ்திரம் இவற்றைப் பார்க்க வேண்டும். அடுத்து ஜோசியம், நேரம், சகுனம் என்று முட்டாள்தனமான தேவையற்றவையெல்லாம் பார்த்துத் தனது அறிவை மனிதன் இழந்து மடையனாக காட்டுமிராண்டியாக ஆகின்றான்.

இம்முறையில் பகுத்தறிவுத் திருமணங்கள் கடந்த 40, 45- ஆண்டுகாலமாக நடைபெற்று வந்தும், இதுவரை இம்முறைத் திருமணங்கள் சட்டப்படிச் செல்லுபடியற்றதாக இருந்தது. இன்றைய அரசு பகுத்தறிவுக் கொள்கையை உடைய அரசானதால் இம்முறைத் திருமணங்கள் சட்டப்படிச் செல்லுமென்ற சட்டம் இயற்றி உள்ளது.

அதற்காக நாம் அதனைப் பாராட்டுவதோடு நமது நன்றியினையும் அரசுக்குத் தெரிவித்துக் கொள்வது நம் கடமையாகும்.

மனிதனின் அறிவை மத்தின்படி, சாஸ்திரத்தின்படி என்று அடக்கி வைத்ததன் காரணமாக மனிதனின் அறிவானது பயன்பட முடியாமல் போய்விட்டது. 

கடவுள் - மதம் - சாஸ்திரம் - நேரம் - சகுனம் பார்த்துச் செய்த திருமணத்திற்கும், இவற்றைப் பார்க்காமல் செய்யப்படுவதற்கும் உள்ள கேடு இன்னது என்று எவரும் சொல்ல முடியாது. பொதுவாகத் திருமணம் என்றால் பெண்ணை விட ஆணுக்கு வயது அதிகமாகப் பார்த்துத் திருமணம் செய்வார்கள்.

மனித ஆயுள் வரை இருவருமே வாழ்கின்றார்கள் என்று வைத்துக் கொண்டாலும், முதலில் சாவது ஆணாகத்தான் இருப்பான். காரணம் அதிக வயதுடையவனாக இருப்பதால் அவன் முதலில் சாகவும், பெண் விதவையாகி அதன்பின் சாகவுமான நிலைமை இருக்கிறது. உலகத்திலேயே இந்தியாவில் தான் விதவைகள் தொகை அதிகமாகும். சகுனம், ஜோசியம், நேரம், நட்சத்திரம் என்பதெல்லாம் மனித சமுதாயத்தில் உழைக்காமல் வயிறு வளர்க்க வேண்டும் என்றிருக்கின்ற பார்ப்பனர்களால் ஏற்பாடு செய்யப்பட்டவையே யாகும். இன்னும் சொல்லப் போனால் தமிழனுக்கு இப்படி ஒருமுறை இருந்தது என்றே சொல்ல முடியாது. தமிழில் இம்முறையினைக் குறிப்பிட்டுக் காட்டக் கூடிய தமிழ்ச் சொல் எதுவுமே கிடையாது.

நம் இலக்கியங்கள் என்பவை அனைத்துமே பெண்ணடிமையை வலியுறுத்தக் கூடியவையாகும். மனு தர்மத்தில் எப்படி சூத்திரன் கடவுளைத் தொழக் கூடாது, பார்ப்பானைத் தான் தொழ வேண்டும், பார்ப்பானை விட்டுக் கடவுளைத் தொழுதால் அவன் கொல்லப்பட வேண்டும் என்றிருக்கிறதோடு, அதுபோலத் திருக்குறளில் பெண் தன் கணவனைத் தான் தொழ வேண்டும்.

கணவனை விட்டுக் கடவுளைத் தொழுதால் நரகத்திற்குப் போக வேண்டும் என்றிருக்கிறது. இன்னும் நம் இலக்கியங்கள் என்பவை - நீதிநூல் என்பவை பெண்களை இழிவுபடுத்துவதற்கே இருக்கின்றன. பெண் என்றால் அச்சம், நாணம், மடம், பயிர்ப்புள்ளவர்களாக இருக்க வேண்டுமென்று தான் சொல்கின்றனவே தவிர, சுதந்திரத்தோடு - அறிவோடு வாழ வேண்டுமென்று சொல்லக்கூடியன எதுவுமே கிடையாது. தமிழகத்திலே இருக்கிற இலக்கியங்களும், புராணங்களும், இதிகாசங்களும் பெண்ணடிமையை வலியுறுத்தக் கூடியவையாகவே இருக்கின்றன.

நம்மிலே ஓர் ஆணும், பெண்ணும் அதாவது தாயும், தந்தையும் சேர்ந்துதான் பிள்ளை பெறுகின்றார்கள். ஆனால் அந்தப் பிள்ளையைக் குறிப்பிடும்போது ஆணின் பெயரைச் சொல்லி அவன் மகன் என்று சொல்கிறார்களே தவிர, பெண்ணின் பெயரைச் சொல்லி அவளுடைய மகன் - மகள் என்று சொல்லுவது கிடையாது.

தந்தை என்பது ஒரு உத்தேசமே தவிர, பிரத்தியட்சமாகப் பார்க்கும் போது தாய் பத்து மாதம் சுமந்து குழந்தையைப் பெற்றெடுக்கின்றாள். ஆனால் அவள் பெயரைக் குறிப்பிடுவது கிடையாது. மேல் நாடுகளிலும் திருமணமானால் அப்பெண்ணைக் கணவன் பெயரைச் சொல்லி மிஸ்ஸஸ் இன்னார் என்று தான் சொல்வார்களே தவிர, பெண்ணின் பெயரைச் சொல்லி ஆணைக் (கணவனைக்) குறிப்பிடுவது இல்லை. அப்படிப் பெண்கள் சமுதாயமானது உலகில் ஒவ்வொரு வகையில் அடிமைப் படுத்தப்பட்டிருக்கிறது. இவை யாவும் ஒழிய வேண்டுமென்பதே நம் குறிக்கோளாகும்.

தாய்மார்கள் தங்களின் பெண்களை 20-வயது வரைப் படிக்க வைக்க வேண்டும். இப்போது கல்வி இலவசமானது போல, பெண்கள் சமுதாயத்திலே சாப்பாடு போட்டுப் படிப்பு என்றாகி விடும். இப்போது ஆதிதிராவிட சமுதாயத்தைச் சார்ந்தவர்களுக்கு, எப்படி அரசாங்கம் உணவு அளித்துச் சலுகைக் காட்டுகிறதோ அப்படிப் பெண் சமுதாயத்திற்கும் சலுகை காட்டக் கூடிய நிலைமை ஏற்பட்டே தீரும்.

நம் அறிவிற்குக் கேடானவற்றை மாற்றுவதற்கும் சமுதாயத்தில் ஒரு பாலுக்கு ஒரு நீதி என்பதை மாற்றுவதற்காகவுமே இந்நிகழ்ச்சியானது தோற்றுவிக்கப்பட்டதேயாகும்.

கடவுள் - மதம் - சாஸ்திர நம்பிக்கைகளை ஒழித்தால் தான் ஜாதி ஒழியும். இவை இருக்கிறவரை நம் ஜாதி இழிவு ஒழியாது. மனிதன் கோயிலுக்குப் போவதையும் சாம்பல் - செம்மண் அடிப்பதையும் நிறுத்திக் கொள்ள வேண்டும். இவை தான் நம்மை இழி மக்களாக, சூத்திரனாக வைத்திருப்பவையாகும். மனிதனை மடையனாக்கக் கூடிய பிரசாரங்கள் தான் அதிகமிருக்கின்றனவே ஒழிய, அறிவு வளர்க்கக் கூடிய பிரசாரங்கள் சாதனங்கள் எதுவும் நம்மிடையே இல்லை.

மணமக்கள் தங்கள் வாழ்க்கையில் பகுத்தறிவோடும், சிக்கனமாக வரவிற்கடங்கி செலவு செய்து வாழ வேண்டும். ஆடம்பரமாக வேண்டுமென்ற எண்ணம் இருக்கக் கூடாது. எளிமையான - எளிய வாழ்வு வாழ வேண்டும். தங்களால் இயன்ற உதவிகளை சமுதாயத்திற்கு செய்ய வேண்டும். கூடியவரை குழந்தை இல்லாமலிருப்பது நல்லது. முடியவில்லை என்றால் ஒன்றிரண்டோடு நிறுத்தி கொள்ள வேண்டும். கண்டிப்பாகக் கோயிலுக்குப் போகக் கூடாது.

----------------------------- 02.05.1969- அன்று திருத்தணியில் நடைபெற்ற திருமணத்தில் தந்தை பெரியார் அவர்கள் ஆற்றிய அறிவுரை. "விடுதலை", 10.05.1969

0 comments: