Search This Blog

18.9.15

அறிஞர் அண்ணா பற்றி தந்தை பெரியார்

கடவுள் பற்றுள்ளவன் சமுதாயச் சீர்திருத்தத் தொண்டு செய்வதென்பது பித்தலாட்டமே!


தந்தை பெரியாரவர்கள் "சமுதாயச் சீர்திருத்தம்" என்னும் தலைப்பில் அறிவுரையாற்றுகையில் குறிப்பிட்டதாவது:-

இன்றையத் தினம் நடந்த கல்லூரி மாணவர் விடுதி விழவில், அறிஞர் அண்ணா அவர்களின் படத்தினைத் திறந்து வைக்கும்படியான பணியினை எனக்கு அளித்தமைக்கு நன்றி தெரிவித்துக் கொள்வதோடு பெரும்பாலான மக்கள் பின்பற்றி நடந்து வருவதற்கு மாறானதும், பெரும்பாலான மக்களுக்கு வெறுப்பினை அளிப்பதும் நன்றிக்குரியது அல்லாததாகிய சமுதாயத் தொண்டுபற்றிப் பேசச் சொல்லி இருப்பது எனக்குப் பெரிதும் மகிழ்ச்சி அளிக்கக் கூடியது ஆகும்.

அண்ணா அவர்கள் படத்தைத் திறந்து வைப்பதில் மகிழ்ச்சியடைகிறேன். பொதுவாக யார் படத்தை திறக்கின்றோமோ அவரைப் பற்றிச் சொல்வது சம்பிரதாயமாகும். அது மட்டும் போதாது, அண்ணா அவர்களின் கொள்கைகளையும், நடப்புகளையும் அவர் பின்பற்றி நடந்ததையும் மக்கள் பின்பற்ற வேண்டும். அவர் கொள்கைப்படி நடந்து கொள்ள வேண்டியதன் அவசியத்தையும் எடுத்துச்  சொல்ல வேண்டும். படத் திறப்பு - சிலைத் திறப்பு என்பவை உண்மையாய் இருந்து தொண்டு செய்தவர்களுக்கு நடந்த காரியங்களும் உண்டு. உண்மையல்லாத கொள்கைப் பிரசாரத்திற்காகக் கற்பனையான உருவங்களை அமைத்து சிலைத் திறப்பு, படத்திறப்பு என்று நடைபெறுவது உண்டு. அதன் மூலம் பிரசாரம் செய்து மக்களை அந்தக் கொள்கையுள்ளவர்களாகச் செய்வதும் உண்டு. மேலும் அந்தச் செயலைக் கொண்டு மக்களிடையே சில கருத்துகளைப் புகுத்தலாம் என்பதாகும்.

இப்போது நாம் திறந்திருப்பது உண்மையாக இருந்து நம்மிடையே தொண்டு செய்து கொண்டு வந்தவரின் படத்தினையேயாகும். அவரது படத்தினைத் திறப்பது மூலம் அவர் தொண்டினையும் - கொள்கைகளையும் மக்கள் நினைக்கவும், அவரைப் பின்பற்றி நடக்கவும் அவர் நினைவு என்றைக்கும் இருக்கும்படியாக இருப்பதற்கு ஆகவுமே ஆகும். அறிஞர் அண்ணா அவர்களின் படத்தினை இப்படிப்பட்டக் கல்லூரிகளில் பொது இடங்களில் திறப்பது பெரும்பாலான மாணவர்கள் அவரைப் பின்பற்றி, அவர் கொள்கைப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவேயாகும்.

மேலும் அண்ணா அவர்கள் பொதுத் தொண்டின் மூலம் இன்றைய தினம் விளம்பரம் பெற்ற - புகழ் பெற்ற  - பெயர் பெற்றவர்களைப் போலல்லாமல் உண்மையாக மக்களுக்குத் தொண்டாற்றியவர். அவர் காலத்திலேயே அவர் தொண்டின் பலனைக் கண்டவர் ஆவார்.

நம் நாட்டில் பலர் அரசியலுக்காக, சுதந்திரத்திற்காக, பக்திக்காக, மோட்சத்திற்காகப் பாடுபட்டிருப்பார்கள். ஆனால் அண்ணா அவர்கள் இதற்காகப் பாடுபடவில்லை என்பதோடு, இவற்றிற்கு முற்றும் மாறான சமுதாய சீர்திருத்தத்திற்காக, சமுதாய முன்னேற்றத்திற்காக, மக்களின் நல் வாழ்விற்காக நம் மக்களுக்கு ருசியளிக்காததும், அதனால் எந்தப் பாராட்டும் கிடைக்காததுமான சமுதாயச் சீர்திருத்தப் பணியினை மேற்கொண்டிருந்தார்.

சமுதாயச் சீர்திருத்தப்பணி மற்ற பணிகளைப் போல் சாதாரணப் பணியல்ல. மக்களின் வெறுப்பிற்கும், ஏச்சுப் பேச்சுக்கும் ஆளாகி அவர்கள் நீண்ட காலமாகக் கொண்டிருக்கும் நம்பிக்கைக்கும், நடப்பிற்கும் விரோதமாகச் செய்யும் பணியாகும். சமுதாயச் சீர்திருத்தப் பணிக்கு என்ன வேண்டுமோ அதையே சிறப்புப் பெயராகக் கொண்டவர் அண்ணா ஆவார். அறிஞர் என்கின்ற பெயர் வேறு எவருக்கும் கிடைத்ததற்கரிய பெயராகும். அப்படிப்பட்ட பெயரை முதலில் அண்ணா பெற்றார். நம் நாட்டில் இதுபோல் பெயர் பெற்றிருந்தவர் புத்தர் ஒருவர் தான் ஆவார். புத்தியைக் கொண்டு சிந்தித்தாலேயே அவர் புத்தரானார். அறிஞர் என்ற பெயர் பெற்றவர்களால் தான் சமுதாயச் சீர்திருத்தம் செய்ய முடியும்.

அறிவு என்றால் மற்ற ஜீவனுக்கு இருக்கிற அறிவல்ல. சிறப்பான பகுத்தறிவும், சிந்தனையுமாகும். பொய்களையே அடிப்படையாகக் கொண்டு அறிவிற்குச் சற்றும் பொருந்தாத, சிந்தனைக்கு ஒவ்வாத மடமையையும், முட்டாள்தனங்களையும் அடுக்கி கட்டப்பட்டிருக்கும் சமுதாய அமைப்பை அடக்க வேண்டுமானால், அறிவு என்கின்ற ஆயுதத்தால் தான் முடியும். மற்ற எவற்றாலும் அதைத் தகர்க்க முடியாது. அண்ணா அவர்கள் அப்படிப்பட்ட சிறந்த அறிவினையும், தெளிந்த சிந்தனையையும் கொண்டிருந்ததால் தான் சமுதாயத் துறையில் தொண்டாற்ற முடிந்தது.

அவருடைய கொள்கைகளை, செயல்முறைகளைப் பின்பற்ற வேண்டியது ஒவ்வொருவரின் கடமை என்று கருத வேண்டும்.

சமுதாயச் சீர்திருத்தம் என்பது கஷ்டமான வேலை. அதற்கு இரண்டு காரியம் வேண்டும். ஒன்று அனுபவம்; மற்றொன்று முக்காலங்களைப் பற்றிய சிந்தனை இருக்க வேண்டும். சமுதாயச் சீர்திருத்தம் என்கின்ற தொண்டில் ஒருவர் இறங்க வேண்டுமானால், அவரது உள்ளம் சுத்தமாக - மாசுமருவற்று இருக்க வேண்டும். மனதில் எந்தப் பற்றும் இருக்கக் கூடாது - சமுதாயத் தொண்டு ஒன்றே முதல் - இடை கடையென்று இருக்க வேண்டும்.

சமுதாயத் திருத்தம் ஒன்றைத் தவிர வேறு எந்தப் பற்றும் இல்லாதிருப்பவர்களால் தான் உண்மையான சமுதாயத் தொண்டு செய்ய முடியும். தெளிவாகச் சொல்ல வேண்டுமானால் சமுதாயச் சீர்திருத்தக்காரனுக்குக் கடவுள் - மதம் - சாஸ்திர சம்பிரதாயம் - பெரியோர்கள் - பழைமையாளர்கள் - தெய்வசக்தி பொருந்தியவர்கள் - மகான்கள் - மகாத்மாக்கள் என்கின்ற பற்று சிறிதும் இருக்கக் கூடாது என்பதோடு, நாட்டுப் பற்றும், மொழழிப்பற்றும் பெரியவர்கள் சொன்னது. நீண்ட நாளாக இருப்பது என்கிறவற்றிலும் பற்றில்லாமல் இருக்க வேண்டும். நான் எந்தக் காரியங்களைச் சொன்னேனோ அதன் மேல் தான் நம் சமுதாயம் அமைக்கப்பட்டிருக்கிறது.

கடவுள் பற்றுள்ளவன் சமுதாயத் தொண்டு செய்கிறேன் என்றால் அவன் கொண்டிருப்பதாகச் சொல்லும் கடவுள் பற்று பொய்யாக இருக்க வேண்டும். அல்லது சமுதாயத் தொண்டு செய்கிறேன் என்று சொல்வது பொய்யாக இருக்க வேண்டும். கடவுள்பற்றை வைத்துக் கொண்டு சமுதாயத் தொண்டு செய்வது என்பது யாராலும் இயலாத காரியமாகும். ஒருவன் சமுதாயத்தில் உயர் சாதியாக அந்தஸ்துடையவனாக, பணக்காரனாக எப்படி இருக்கிறான் என்றால், கடவுள் செயலால், கடவுள் அமைப்பால் என்கின்றான்.

கடவுள் பற்றுள்ளவன் கடவுள் அமைப்பை - கடவுள் செயலை எப்படி மாற்ற முற்படுவான்? அவனால் எப்படிக் கடவுள் பற்றோடு அதனை மாற்ற முடியும்? அப்படி மாற்றுகிறேன் என்று சொன்னாலும் அவன் கடவுள் அமைப்பிற்கும், செயலுக்கும் விரோதமாகச் செய்ததாகத் தானே ஆகும்? எனவே, கடவுள் பற்றிருந்தால் சமுதாய அமைப்பை மாற்ற முடியாது. அது போலத் தான் மதத்திலும் கடவுள் அப்படிச் சொன்னார், மகான் அப்படிச் சொன்னார், அந்த அமைப்புப்படி தான் நடக்க வேண்டும். அதை மாற்றக் கூடாது, அந்த அமைப்பில் கைவைக்கக்கூடாது என்று சொல்லிக் கொண்டு இந்த இழிவு ஒழிய வேண்டும் என்றால் எப்படி ஒழியும்?

நம் நாட்டில் சமுதாயத் தொண்டு என்பது வயிற்றுப் பிழைப்பிற்கு, சுயநலத்திற்கு, முட்டாள்தனத்திற்கு என்று இருப்பதால் நம் சமுதாயம் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாகத் திருத்தமடையவில்லை. சமுதாயத் துறையில் ஈடுபட்டால் மக்களின் வெறுப்புக்கு ஆளாக வேண்டுமென்று இத்துறையில் முயற்சி எடுத்துக் கொள்ள யாரும் முன்வரவில்லை என்பதோடு, முயற்சி எடுத்தவர்களும் உண்மையான முயற்சி எடுத்துத் தொண்டாற்றவில்லை.

நம் சமுதாயத்திலிருக்கிற இன்னொரு குறை ஜாதிப் பிரிவுகள். ஒருவன் மிகக் கீழானவன்; இன்னொருவன் மிக உயர்ந்தவன்; ஒருவன் பறையன் - தீண்டத்தகாதவன்; இன்னொருவன் பார்ப்பான். உயர் ஜாதிக்காரன் என்கின்ற கீழ் - மேல் அமைப்பு ஆகும். சமுதாயத் தொண்டாற்றுகிறவன் எனது அறிவுதான் பெரிது, அனுபவம் தான் பெரிது என்று நீ சொல்கிற குப்பைக் கூளங்களைப் பற்றி எனக்குக் கவலையில்லை என்று துணிந்து செயல்பட்டால் தான் முடியும்.

அடுத்துக் கடவுள் கதைகள் மேலானவனைக் காப்பாற்றவும், கீழானவனை அழிக்கவும், அதாவது பார்ப்பானைக் காப்பாற்றி திராவிடனை அழித்ததாகவுமே இருக்கின்றன. ஜாதியைக் காப்பதற்காகவே கடவுள் ஆதாரங்கள் தோன்றியிருக்கின்றன.

நாட்டுப் பற்றும், நம் நாட்டு அமைப்பு, நம் நாட்டிற்குப் பெருமை; நம் சமுதாயம் இப்படியே இருப்பது தான் என்றும், இதை மாற்றினால் நாட்டின் பெருமை கெட்டுவிடும்; அமைப்பை அப்படியே பாதுகாக்க வேண்டும் என்பது தான் நாட்டுப் பற்றாக இருக்கிறது.

அப்படித்தான் மொழி, நம் மொழியில் தான் "சக்கிலி - பறையன் - பார்ப்பான் - சூத்திரன்" என்கின்ற சொற்கள், பிரிவுகள் இருக்கின்றனவே ஒழிய, வேறு எந்த மொழியிலும் பார்ப்பான், பறையன் என்பது கிடையாது.

நமது நாட்டிலிருக்கிற இலக்கியங்களிலெல்லாம் ஜாதியைச் சொல்கிறான். இந்திந்த ஜாதிக்கு இந்த வேலை. ஒரு ஜாதிக்காரன், அந்த ஜாதிக்குச் சொல்லப்பட்ட தொழிலைத் தான் செய்ய வேண்டும் என்று வகுத்து வைத்திருக்கின்றான்.

என்னை வந்து ஒருவன் இந்த நாடு அழிய வேண்டுமா? நீ மனிதனாக வேண்டுமா? என்று கேட்டால், நாடு அழிந்து குட்டிச் சுவராகப் போவதைப் பற்றி எனக்குக் கவலையில்லை, நான் மனிதனாக வேண்டும். இழிவற்று வாழ வேண்டும். அதுதான் எனக்கு முக்கியம் என்று சொல்லுவேன். நம்முடைய இழிவு நீங்காமல் இந்த நாடு எப்படி இருந்து என்ன பயன்? கடவுள் - மதம் - சாஸ்திரம் - மொழி - இலக்கியம் இவ்வளவையும் சமுதாயத்தோடு இணைந்து விட்டான். அவன் வேண்டுமென்று செய்தானோ, மடமையில் செய்தானோ, சொந்த சுயநலத்திற்காகச் செய்தானோ, வேறு எதற்காகச் செய்தானோ, அதைப் பற்றி நமக்குக் கவலையில்லை. அது மாறவேண்டும் - மாற்றப்பட வேண்டும் என்பது தான் நம் இலட்சியம்.

இப்படிப்பட்ட மட்டத்தனமான - சுயநலமான அமைப்பு ஏன் இருக்க வேண்டுமென்று சிந்திப்போமானால், நம் மடமையையும், இழிவையும், கீழ்ச்சாதித் தன்மையையும், பாதுகாப்பதற்காக என்பது விளங்கும். நம் சமுதாய அமைப்பானது முட்டாள்தனமாக - கொடுமையாக - சுய நல நோக்கத்தோடு ஏற்பாடு செய்யப்பட்டதானாலும், நாம் குற்றங்களை யார் மேலும் சுமத்தாமல் ஒரு நிலைக்கு வரவேண்டும்.

இந்தச் சமுதாய அமைப்பு அதற்கு அடிப்படையான கடவுள் - மதம் - சாஸ்திரம் - தருமம் - ஜாதி - இலக்கியம் இவை எல்லாம் இன்று நேற்று ஏற்பட்டதல்ல. மனிதன் காட்டுமிராண்டியாக இருந்த காலத்தில் தோன்றியது. அந்த அமைப்பின் மேல் குற்றம் சொல்லக் கூடிய அறிவு அற்றிருந்த காலத்தில் ஏற்பாடு செய்யப்பட்டது. இன்றைக்கிருக்கிற அறிவு - சாதனங்கள் - அமைப்பு - நடப்பு அன்று கிடையாது. எனவே அவை எல்லாம் இன்றைக்கிருக்கிற அறிவு நடப்பு ஆகியவற்றிற்கு ஏற்றபடி திருத்திக் கொள்ள வேண்டியது தான். இவற்றை ஏற்படுத்தியவர்களளைக் குறை சொல்லவில்லை. அந்தக் காலத்திலிருந்த அவர்கள் அறிவு அவ்வளவுதான். அதில் தோன்றியவற்றைத் தான் அவர்கள் எழுதி இருக்கிறார்கள்; கடைப்பிடித்து வந்திருக்கின்றார்கள். அது இப்போதும் பொருந்தும் என்பது மடமையேயாகும். பழைய காலம் தேவர்கள் காலம் என்பதையெல்லாம் விட்டுவிட வேண்டும். மற்ற காரியங்களில் எப்படிப் பழைமையை வெறுக்கின்றோமோ அதுபோல் கடவுள் - மதம் - சாஸ்திரம் என்பவற்றிலும் பழைமையை வெறுக்க வேண்டும். ஒதுக்கித் தள்ளிவிட வேண்டும்.

நம் நாட்டில் எனக்குத் தெரிய 100 வருடங்களுக்கு முன் நெருப்புப் பெட்டி கிடையாது. அப்போது சக்கி முக்கிக்கல்லில் தான் நெருப்பு உண்டாக்கிக் கொண்டிருந்தார்கள். அப்புறம் விளக்கெண்ணெய் விளக்கு, மண்ணெண்ணெய் விளக்கு, மண்ணெண்ணெய்யை ஆவியாக்கி எரியும் விளக்கு இப்படி இருந்து படிப்படியாக மாற்றமடைந்து இன்று பித்தானை அமுக்கினால் 10.00- கேண்டில் பவர் 10000 கேண்டில் பவர் வெளிச்சத்தை மயிரிழை அளவுள்ள கம்பியில் பெறும்படியான வாய்ப்பு வந்துவிட்டது.

இந்தக் காலத்தில் ஒருவன் நான் பழைமையை விடமாட்டேன், விளக்கெண்ணெய் விளக்கைத் தான் வைத்துக் கொள்வேன் என்று சொன்னால் எப்படியோ அப்படிப்பட்டது தான் கடவுள் - மத பழைமையை விடமாட்டேன் என்பதுமாகும். இவற்றை ஏற்படுத்திய வழிபட்டுக் கடைப்பிடித்து நடந்து வந்த பெரியவர்களை நீங்கள் முட்டாள் என்று சொல்ல வேண்டாம். அவர்களுக்கிருந்த  அறிவு அவ்வளவு தான் என்று சொல்லலாமே! இன்று திருவள்ளுவரை அறிவாளி என்று சொல்கிறோம். அது ஒரளவுக்குத் தான். அவருக்கு எப்படி இன்றைய எலக்ட்ரிசிட்டியைப் பற்றிய அறிவு இருந்திருக்க முடியும்? இப்படி ஒன்று தோன்றக் கூடும் என்கின்ற எண்ணமே அவருக்கு ஏற்பட்டிருக்க முடியாதே!

நாம் மற்றவற்றில் எப்படிப் புதுமைகளில் சம்பந்தப்படுத்திக் கொள்கின்றோமோ அதுபோல் கடவுள் - மத - சாஸ்திரங்களிலும் புதுமையை சம்பந்தப்படுத்திக் கொள்ள முன்வர வேண்டும். நாம் நம் பகுத்தறிவை ஆதாரமாகக் கொண்டு மற்ற நாடுகளில் நடக்கிற நடப்பையும் கொண்டு பகுத்தறிவோடு சிந்திப்போமானால் தான், சமுதாயத் தொண்டு செய்ய முடியும். முன்னோர்கள் என்கின்ற எண்ணம் சிறிது தோன்றினால் கூட சமூதாயத் தொண்டினால் பலன் ஏற்படாது.

நம்மைப் போன்ற மக்கள் வெளிநாடுகளில் அறிவைப் பயன்படுத்தி விஞ்ஞான அதிசயங்களைக் கண்டு பிடிக்கிறார்கள்.

நான் சின்னப் பையனாக இருக்கும் போது எனக்குத் தெரியும். காசிக்குப் போவதென்றால் முதலில் உயில் எழுதி வைத்து விட்டுப் போவான். 100 பேர்கள் போனால் 50, 60 பேர்கள் தான் திரும்பி வருவார்கள். அதுவும் போகும் போதே இந்த ஊரில் இந்தக் கோயிலைத் தரிசித்து, இந்தக் குளத்தில் குளித்துவிட்டு, அடுத்து அந்த ஊரில் உள்ள கோயிலுக்குப் போய், குளத்தில் குளித்து விட்டு, சத்திரத்தில் தங்கி இருந்து விட்டு என்று குறைந்தது 1- மாத காலத்திற்குத் திட்டம் போட்டுக் கொண்டு வழியிலுள்ள இந்தக் கோயில்களையெல்லாம் தரிசித்து தீர்த்தங்களில் எல்லாம் நீராடிவிட்டுக் கடைசியில் காசியில் போய்ச் சாமியைத் தரிசித்து கங்கையில் ஸ்நானம் செய்தால் தான் மோட்சம் கிடைக்கும் என்று நம்பிக் கொண்டிருந்தான்.

இப்போது காசிக்குப் போகிறவன் எவனும் ஒவ்வோர் ஊரிலும் இறங்கி அங்குள்ள கோயில்களைத் தரிசித்து விட்டு செல்வது கிடையாது. ஏனென்று கேட்டால் "அது பாட்டன் காலத்தில் போட்ட திட்டம். இன்றைக்கு ரயில் இருக்கிறது, ஏரோப்ளேன் இருக்கிறது, நினைத்ததும் போய் விட்டுத் திரும்புவதற்கு வசதி இருக்கிறது. முன் அந்த வசதி இல்லாத காரணத்தால் மனிதன் நடந்தே செல்ல வேண்டியிருந்ததால் அப்படித் திட்டம் போட்டான். இன்றைக்கு அது பொருந்தாது" என்று சொல்கின்றான்.

நாம் நடுநிலையிலிருந்து சிந்திப்போமானால், கடவுள் தானாகத் தோன்றியது கிடையாது. இன்னொருத்தன் சொல்லித்தானே கடவுள் இருக்கிறது என்று தெரிந்து கொள்ள முடிகிறதே தவிர, தானாக நம் மனதில் தோன்றுவது கிடையாது. குழந்தைகளுக்குக் கடவுள் என்றால் என்னவென்று தெரியாது. தாயோ, தகப்பனோ மற்றவரோ இது சாமி, இது கடவுள் என்று சொல்லிக் கும்பிடு என்பதால் கும்பிடுகின்றதே தவிர, அதன் அறிவில் தோன்றி அது தானாகக் கும்பிடுவது கிடையாது.

மனிதன் சிந்திக்கிற தன்மை அற்றிருந்த காலத்தில் இயற்கையில் ஏற்பட்ட மாற்றங்களைக் கண்டு அது தோன்றியதற்குக் காரணம் தெரியாது பயந்தவன் இவற்றிற்கு ஒரு காரணம் வேண்டுமென்று நினைத்து முட்டாள்தனமாகக் கற்பித்ததே கடவுள் ஆகும். கடவுளைப் பற்றிச் சொல்கிறவன் உன்னால் எதைக் கொண்டும் அதை புரிந்து கொள்ள முடியாது. நம்பித்தான் ஆகவேண்டும். நம்பிக்கை உள்ளவர்களுக்குத்தான் கடவுள் நம்பாதவர்களுக்கு இல்லை என்கின்றான். மேலும் கடவுளைப்பற்றி சொல்கிறவன் கடவுள் பற்றற்றவர் - கருணையுள்ளவர் - அன்பானவர் - வேண்டுதல், வேண்டாமை இல்லாதவர் - உருவமற்றவர் - எங்கும் நிறைந்திருப்பவர் - அவனன்றி ஓரணுவும் அசையாது என்றெல்லாம் சொல்லிவிட்டு, அதற்கு முற்றிலும் மாறான தன்மையில் மனிதனைப் போல உருவம் அமைத்ததோடு அதற்குப் பெண்டாட்டி, பிள்ளைக் குட்டி, வைப்பாட்டி என்றும் அதற்குச் சோறு - சாறு என்று படைத்தும் அவற்றிடம் அரிவாள் சூலம் - வில், வேல் போன்றப் பயங்கரமான ஆயுதங்களைக் கொடுத்தும், அதன் பெருமையை விளக்க அவனைக் கொன்றது, இவனைக் கொன்றது, அவனைக் கொடுமைப்படுத்தியது, அவன் மனைவியைக் கெடுத்தது, இவன் மனைவியைக் கற்பழித்தது என்றெல்லாம் எழுதியதோடு, மனிதன் எதை எதை ஒழுக்க கேடான காரியங்கள் என்று கருதுகின்றானோ அவற்றை எல்லாம் கடவுள் செய்ததாகக் கதை எழுதி வைத்திருக்கின்றான் என்றால் அவனை முட்டாள் காட்டுமிராண்டி என்று சொல்லாமல் வேறு என்ன சொல்வது? தருமமாக நினைத்தாலும் அந்தக் காலம் அப்படிப்பட்ட காலம், மனிதன் சிந்தனையற்றிருந்த காலம், அவன் அறிவு பண்பாடாகாத காலம் ஆனதால் அதற்கேற்ப அவன்  எழுதி இருக்கிறான்.

இதையெல்லாம் நம் அறிவைக் கொண்டு சிந்திப்போமானால் நாம் மனிதர்கள் நமக்குள்  உயர்ந்த சாதி - தாழ்ந்த சாதி எதற்காக இருக்க வேண்டும் என்பது புரியும். இன்று உலகம் மிகச் சுருங்கி விட்டது. மனிதன் நினைத்தால் சில மணி நேரங்களில் அமெரிக்கா, அய்ரோப்பா சென்று வருகின்றான். அமெரிக்காவில் 7 மணிக்குப் பேசுவதை இங்கு அதே 7 மணிக்குக் கேட்கக் கூடிய அளவிற்குச் சாதனங்கள் ஏற்பட்டுவிட்டன. உலக மக்கள் அனைவருடனும் பழக வேண்டிய வாய்ப்பு இன்று ஏற்பட்டுவிட்டது. உலகம் பூராவுக்கும் கடவுள் உண்டு என்று சொன்னால், கடவுள் இங்கு போல் தானே அமெரிக்காவிலும் இருக்க வேண்டும்? இங்கு நாம் எவனைத் தொடக்கூடாது என்று சொல்லி ஒதுக்கி வைத்திருக்கின்றோமோ அவனைச் சமையலுக்கு வைத்து அவன் சமைப்பதை அவர்கள் சாப்பிட்டு வருகின்றார்கள். அவர்களுக்குள் எந்த ஏற்றத் தாழ்வும் சமுதாயத் துறையில் கிடையாது. அனைவரும் சமத்துவமுடைய - சம உரிமை உடைய மனிதர்களாகவே மதிக்கப்பட்டு வருகின்றனர்.

எந்தக் காரியம் கண்ணிற்குத் தெரிந்தாலும், எந்தக் காரியம் நடப்பிலிருந்தாலும் அதைப் பகுத்தறிவு கொண்டு சிந்தித்து ஏற்பது தான் மனிதன் அறிவுடையவன் - பகுத்தறிவுவாதி என்பதற்கு அடையாளங்களாகும். காணப்படுகிற சமுதாய அமைப்புக்குக் கேடாக இருப்பவையெல்லாம் நாம் பகுத்தறிவைக் கொண்டு சிந்திக்காததால் இருக்கிற அமைப்புகளை நம்புவதால், அதனை அப்படியே ஏற்றுக் கடைப்பிடித்து நடப்பதால் தான் இழிசாதிகளாக, சூத்திரர்களாக, ஈனச் சாதிக்காரர்களாக, மானமற்றவர்களாக இருக்கின்றோம். இருந்து வருகின்றோம். நம்முடைய இழிவுக்கும், மானமற்றத் தன்மைக்கும் மற்றதென்று எதை ஆதாரமாகக் காட்டினாலும் அவை காட்டுமிராண்டிக் காலத்தில் ஏற்பட்டவை என்பதைத் தவிர, மனிதன் அறிவு வளர்ச்சி ஏற்பட்ட காலத்தில் ஏற்பாடு செய்யப்பட்டவை அல்ல என்பதை உணர வேண்டும்.

அறிஞர் அண்ணா கடைசி வரைக் கடவுள் நம்பிக்கை அற்றவராகவே இருந்தார். அண்ணா அவர்கள் இராமாயணம், பாரதம் ஆகியவற்றை எல்லாம் கொளுத்த வேண்டுமென்ற எண்ணம் உள்ளவர். இராமாயணத்தைக் கொளுத்த வேண்டுமென்பதற்கு அண்ணா சவால் விட்டார். யார் வேண்டுமானாலும் வந்து வாதிடலாம். இராமாயணம் புனிதமானது அதை எரிக்கக்கூடாது என்று நிரூபித்தால், நான் அதற்கு ஒத்துக் கொள்கிறேன் என்று சொன்னார்.

பெரிய அறிஞர் - நாவலர் என்று பெயர் பெற்றவர் நாவன்மை மிக்கவர் என்று பிறரால் மதிக்கப்பட்டவரான சோமசுந்தர பாரதியார் அவர்கள் அண்ணாதுரைக்கு என்ன தெரியும். சிறுவர் புரியாமல் பேசுகிறார் நான் வாதிட்டு வெல்கிறேன் என்று சொல்லி முன்வந்தார். சேலத்தில் அப்போது கல்லூரி முதல்வராக இருந்த இராமசாமிக் கவுண்டர் தலைமையில் விவாதம் ஆரம்பமாயிற்று. அண்ணா அவர்கள் நான் சிறுவனாக இருக்கலாம்; அது அல்ல இப்போது பிரச்சனை. இராமாயணம் என்கின்ற நூலானது கடவுள் சரித்திரமாக இருந்தாலும், மக்களுக்கு அறிவு ஊட்டக்கூடிய சாதனமா? இராமன் தெய்வீக சக்தி கொண்டவனா? மனித சக்தி கொண்டவனா? ஒரு சமயம் தெய்வீக சக்தியும் ஒரு சமயம் மனித சக்தியும் காட்டப்படுகிறது. இதில் எந்த சக்தி பயன்படவில்லை. தன் மனைவியை அவனுக்கு விட்டதோடு குரங்கின் காலில் விழுந்து அவன் தயவால் இராவணனைக் கொன்றிருக்கின்றான் என்று அடுக்கடுக்கான ஆதாரங்களை எடுத்துச் சொல்ல ஆரரம்பித்ததும் நாவலர் பதில் சொல்ல முடியாமல் தலைவலிக்கிறது என்று சொல்லிப் போய்விட்டார்.

அடுத்து சென்னையில் அதே போல் சட்டக் கல்லூரியில் கோவை இராமச்சந்திர செட்டியார் தலைமையில் திரு. ரா.பி. சேதுப்பிள்ளை அவர்கள் அண்ணாவோடு வாதிட வந்து பதில் சொல்ல முடியாமல் உடம்பு சரியில்லை என்று சொல்லி போய்விட்டார். அவற்றையெல்லாம் தொகுத்துப் போட்டதுதான் "தீ பரவட்டும்" என்கின்ற நூல். அடுத்து கம்பராமயணத்திலுள்ள ஆபாசங்களையெல்லாம் எடுத்து "கம்பரசம்" என்கின்ற நூலை எழுதி இருக்கின்றார்.

இராமாயணம், பாரதம் என்பவையெல்லாம் மடையனுக்குப் பாடம் சொல்கிறத் தன்மையில் உண்டாக்கினானே தவிர அறிவோடு உண்டாக்கினதாகத் தெரியவில்லை.

கடவுள் - மதம் - சாஸ்திரம், இராமாயணம், பாரதம், கடவுள் கதைகள், புராணம் ஆகியவற்றையெல்லாம் உண்டாக்கியவர்களை அயோக்கியர் என்று சொல்ல முடியாதே! அயோக்கியனாக இருந்தாலும் அறிவு இருக்குமே! ஆனால், அந்த அறிவுகூட இல்லாமல் அல்லவா எழுதி வைத்திருக்கின்றார்கள். அவனைக் கெட்டிக்காரன் என்றோ, மனிதனுக்கு அறிவூட்ட வந்தவனென்றோ, மனிதனுக்கு அறிவு புகட்டுவதற்காக எழுதினானென்றோ சொல்ல முடியாது. காட்டுமிராண்டிக் காலத்தில் மனிதன் அறிவு கொண்டு சிந்திக்க முடியாத காலத்தில் மனிதன் அறிவற்றிருந்த காலத்தில் மிருகத்தோடு மிருகமாக மிருகப் பிராயத்திலிருந்த காலத்தில் அப்போது அவனுக்கிருந்த அறிவைக் கொண்டு ஏற்பாடு செய்யப்பட்டவையேயாகும்.

மனிதனுக்கு நல்ல புத்திவர, ஒழுக்கம் வளர, மனிதன் மற்றவனிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென்பதை எடுத்துக்காட்டுவதற்காகக் கடவுள் என்று சொல்லிவிட்டு, மனிதத் தன்மைக்கு அப்பாற்பட்ட மிருகத்தன்மை உடையதாகக் கடவுளைக் கற்பித்திருக்கின்றான். நம் மக்கள் கடவுள்கள் என்று நினைத்து வணங்கி வழிபட்டு வருகின்றவற்றில் ஒழுக்கமுள்ள, நேர்மையான, மனிதன் பின்பற்றி நடக்கத்தக்க குணமுடைய கடவுள் ஒன்று கூட இல்லை. நம் கடவுளைப் பற்றித் துலுக்கனோ, கிறிஸ்தவனோ, பவுத்தனோ, சமணனோ எழுதியதைச் சொல்லவில்லை. கடவுளைக் கற்பித்து அதை மக்களிடையே பரப்பி நம்மையெல்லாம் வணங்கும்படிச் செய்த பார்ப்பான்  எழுதிய கதைகளிலிருந்தே சொல்கின்றேன்.

நம் நாட்டில் சமுதாயச் சீர்திருத்தம் என்கின்ற இந்தக் காரியத்திற்கு வந்தவனெல்லாம் அதன் மூலம் எப்படித்தான் பெருமை றெலாம் வாழ்வைப் பெருக்கிக் கொள்ளலாம் பொறுக்கித் தின்னலாம் - புகழடையலாம் எனறு கருதிக் கொண்டு வந்தானே தவிர, உண்மையாக நம் சமுதாய இழிவை மானமற்றத் தன்மையைப் போக்க வேண்டும் என்று எவனுமே முன்வரவில்லை.

இன்று 1969 இல் பத்திரிகையைப் புரட்டினால் சந்திரனுக்கு 60 மைல் தூரத்திற்குச் சென்று திரும்பினான். மனிதனைச் சந்திரனில் கொண்ட போய்க் குடியேற்றுவதற்கு முயற்சி எடுத்துக் கொண்டு இருக்கின்றான் என்பதையெல்லாம் பார்க்கின்றோம். இப்படிப்பட்ட விஞ்ஞான அதிசய - அற்புதங்கள் எல்லாம் நடைப்பெறுகிற இந்த 69- லும், நம் சமூதாயத்தில் "பார்ப்பான் - பறையன்" ஒழியாவிட்டால் நாம் என்றைக்கு மனிதத் தன்மை பெறுவது? நம் இழிவு நீங்காமல் சுதந்திரம் - ஜனநாயகம் எது வந்தும் பலனில்லை. நாம் ஜனநாயகத்தில் இருப்பதாகத்தான் பெயர்; ஆனால் பார்ப்பானும், பறையனுமாகத்தான் இருக்கின்றோமே ஒழிய, மனிதனாக இருக்கவில்லை.

இங்குக் கூடியிருக்கின்ற இந்த 1900 பேர்களும் - யார் நாளைக்கு மந்திரியாக, கலெக்டராக, ஜட்ஜாக, அய்க்கோர்ட் ஜட்ஜாகப் போகிறவர்களானாலும் - இந்த இழிவோடு தானே மந்திரியாக, கலெக்டராகப் போகிறீர்கள், சூத்திரப் பட்டத்தோடு தானே உங்களுக்குப் பதவி வருகின்றது. இந்தப் பதவிக்குப் போகிறதால் உங்கள் சூத்திரத்தன்மை நீங்கப் போவது கிடையாதே. எனவே இந்தச் சூத்திரத்தன்மையை ஒழிக்க நீங்கள் உங்களாலான முயற்சியை எடுத்துக் கொள்ள வேண்டும். சங்கராச்சாரி சாமியாரே என்னிடம், "நீ செய்கிற காரியத்திற்கெல்லாம் நான் உதவி செய்கிறேன். ஆனால், முன்னோர்கள் செய்த அஸ்திவாரத்தில் மட்டும் கை வைக்காமல் உன் காரியங்களைச் செய்து கொண்டு வா" என்று சொன்னார். அஸ்திவாரத்தில் கை வைக்காமல் எப்படிச் சமூதாயத்தை சீர்திருத்த முடியும்?

பெரிய தத்துவஞானி டாக்டர் ராதாகிருஷ்ணன் அவரும் அஸ்திவாரத்தில் கை வைக்கக் கூடாது என்றுதான் சொல்கிறார். அதறகுக் காரணம் என்ன? அதில் தான் நம் மக்களின் இழிவு - சூத்திரத்தன்மை - நாலாஞ் சாதித்தன்மை - மானமற்றத் தன்மை ஆகியவை அடங்கி இருக்கின்றன. அதில் கை வைத்தால் இவையாவும் அழிவதோடு, மேல் ஜாதித் தன்மையும் அழித்துவிடும். சமூதாய சீர்திருத்தத்தை விரும்புகிறவர்கள் சமூதாயத்தைத் திருத்த வேண்டுமென்று கருதுகிவர்கள் தங்கள் பகுத்தறிவைக் கொண்டு, கண்முன் நடப்பதைக் கொண்டு, அனுபவத்தைக் கொண்டு, செய்பட ஆரம்பித்தால் தான் முடியுமே தவிர, முன்னோர்கள் சொன்னது, பழைமையாக இருந்து வருவது  என்று நினைத்தால் ஒரு சிறிதும் திருத்த முடியாது.

இப்போதிருக்கிற உங்களுக்கு இழிவு வெளிப்படையாகத் தெரியாதிருக்கலாம். எனக்குத் தெரிய பறையனுடைய நிழல் கோயில் சுவரிலன் மேல் படக்கூடாது என்றிருந்தது. நாங்கள் சத்தம் போட்ட பின்தான் பறையன் கோயில் பக்கம் வருவதில் தப்பு இல்லை என்றாகியது. அதன் பின் போட்ட சத்தத்தில் பறையர்களும் கோயிலுக்குள் போக அனுமதிக்கப்பட்டார்கள். கோயிலுக்குள் எதுவரை அனுமதித்தார்கள் என்றால், சூத்திரர்களுக்கு எந்த அளவு அனுமதித்தார்களோ அந்த அளவுக்கு அனுமதித்தார்கள். இதனால் பறையன் என்கின்ற தன்மை சூத்திரன் என்கின்ற தன்மைக்கு வந்ததே ஒழிய, பறையன் என்கின்ற தன்மை சூத்திரன் தன்மைக்கு வந்ததே ஒழிய பறையன் என்கின்ற தன்மையில் கொஞ்சம் நஞ்சம் இருந்த பெரிய ஜாதியையும் சின்ன ஜாதியாக்குகிறீர்களே என்கிறோம். அதன் பிறகு பார்ப்பானும், சூத்திரன் எந்த அளவுக்குப் போகிறானோ அந்த அளவுக்குத் தான் போக வேண்டும் என்றார்கள். ஆனால், நடப்பில் அப்படி இருக்கிறதா என்றால் இல்லை. இதெல்லாம் மாறியதற்குக் காரணம் சுயமரியாதை இயக்கமேயாகும்.

நம்முடைய சமுதாய இழிவிற்கும், சூத்திரத்தன்மைக்கும் பார்ப்பான் மாத்திரம் காரணம் அல்ல. நம் மக்களும் காரணமாவார்கள். எப்படி என்றால் கோயிலுக்குப் போனால் தீட்டு என்று இவனே சொல்கின்றான் என்றால் இவன் தன் சூத்திரத் தன்மையை ஒத்துக் கொள்கிறான் என்று தானே அர்த்தம்.

அண்ணா அவர்களின் சவ ஊர்வலத்தில் 30 இலட்சம் மக்கள் கலந்து கொண்டது எதைக் காட்டுகிறது என்றால், நம் மக்கள் சீர்திருத்தத்திற்குத் திருந்தவில்லை என்றாலும், சீர்திருத்தத்திற்குச் சகித்திருக்கிறார்கள் என்பதைக் காட்டுவதாகவே இருக்கிறது.

எதிரிகள் செய்கின்ற பிரசாரத்தால் மனிதன் அடிக்கடி நழுவிவிடுகிறான். அப்போதைக்கு அப்போது அறிவுறுத்த ஆட்கள் கிடையாது. அறிவு பெறுவதற்கான கல்வி இல்லை. அறிவை போதிக்கக்கூடிய ஆசிரியர்கள் கிடையாது. அறிவுள்ள ஆசிரியர்களுக்கு உத்தியோகம் கொடுக்கப்படுவதில்லை. மூடநம்பிக்கையான கல்விதான் ஆசிரியர்களாவதற்குத் தகுதியாக இருக்கின்றன. இன்றைய அரசாங்கம் கல்வித்துறையில் மாற்றம் செய்ய முன்வர வேண்டும்.

இன்றைய இந்திய ஆட்சியின் தத்துவம் கடவுள் - மதம் - சாஸ்திரம் - சாதி - தருமம் இவற்றைப் பாதுகாப்பது தான் ஆகும். அரசமைப்புச் சட்டத்திலேயே இவை காப்பாற்றப்பட வேண்டும் என்று எழுதி வைத்துக் கொண்டிருக்கின்றனர்.

இங்கு இருக்கின்ற நீங்கள் பெரும்பாலும் இளைஞர்கள். உங்களுக்கு இருக்கிற இழிவைப் போக்கிக் கொள்ள இயலாவிட்டாலும் உங்களின் சந்ததியினராவது இழிவு இன்றி வாழ வேண்டாமா? இந்தத் துறையில் பாடுபட்டால் உங்களுக்காகவே நீங்கள் பாடுபடுவதோடு, உங்கள் குழந்தை குட்டி, பிற்கால சந்ததிகளுக்குப் பாடுபடுவதாக அர்த்தம்.

எவனும் தான் சூத்திரனாக இருக்க வேண்டுமென்று, இழி மகனாக இருக்க வேண்டுமென்று கருத மாட்டான் ஆனால், அஸ்திவாரத்தில் கை வைக்கப் பயப்படுகிறார்கள். மனிதனாகப் பிறந்தவனுக்குக் கடமை அதுதான்.

நீங்ளெல்லாம் வக்கீல்களுக்காகப் படித்துக் கொண்டிருக்கிறவர்கள். நாளைக்கு வக்கீல்களாகப் போகப் போகிறவர்கள். நீங்களெல்லாம் வக்கீலானால் நாமமும், பட்டையும் அடித்துக் கொண்டு வருகிறவனிடம் கேஸ் வாங்க முடியாது என்று சொல்ல வேண்டும். பக்தன் வந்தால் கடவுள் இருக்கிறார் பார்த்துக் கொள்வார் அவரிடம் கொடு போய்க் கேசைக் கொடு, ஏன் என்னிடம் வருகிறாய் என்று கேட்க வேண்டும். இப்படிக் கேட்க ஆரம்பித்தால் தானாகவே திருந்தி விடுவார்கள். நம் சமுதாய இழிவும் நீங்கும்.

------------------------------------- 15.03.1969 அன்று சென்னை - சட்டக் கல்லூரியில் (கெல்லீஸ்) தந்தை பெரியார் ஆற்றிய சொற்பொழிவு. "விடுதலை", 20.03.1969

0 comments: