Search This Blog

3.4.13

எதிரி கலைஞரா? ராஜபக்சேவா? ஒருவருக்கொருவர் விமர்சனம் தேவையா?

பொது எதிரி யார் என்றுதான் பார்க்கவேண்டும்; நமக்குள் விமர்சனம் செய்துகொண்டிருந்தால் எதிரி தப்பித்து விடுவான்!
ஈழப் பிரச்சினையின் நிலை குறித்து தமிழர் தலைவர் கருத்துரை
சென்னை பெரியார் திடலில் 1.4.2013 திங்கள் கிழமை மாலை 7 மணிக்கு திராவிடர் கழகத்தின் சார்பில் இன்றைய காலகட்டத்தில் ஈழத் தமிழர் பிரச்சினை எனும் தலைப்பில் சிறப்புப் பொதுக் கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்திற்கு திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் தலைமை தாங்கினார். பிரச்சார செயலாளர் வழக்குரைஞர் அருள்மொழி வரவேற்புரையாற்றினார்.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் உரையாற்றினார்.

சென்னை, ஏப்.2- பொது எதிரியை முன்னிலை படுத்தாமல், நமக்குள் விமர்சனம் செய்துகொண் டிருந்தால் எதிரி தப்பித்துவிடுவான் என்றார் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள்.

சென்னை பெரியார் திடலில் நேற்று (1.4.2013) இன்றைய காலகட்டத்தில் ஈழத் தமிழர் பிரச் சினை என்ற தலைப்பில் ஆற்றிய உரை வருமாறு:

மிகுந்த எழுச்சியோடு நடைபெறக்கூடிய இந்த அறிவார்ந்த விளக்கப் பொதுக்கூட்ட நிகழ்ச்சிக்கு தலைமை ஏற்றிருக்கக் கூடிய திராவிடர் கழகத்தின் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்களே, எனக்கு முன்னாலே மிகப்பெரியதொரு சிறப்பான இதுவரையிலே சொல்லப்படாததும், திட்ட மிட்டே தேவையில்லை, இவைகளையெல்லாம் வெளிப்படுத்தவேண்டாம், நமக்குள்ளே ஒற்றுமையை காட்டவேண்டிய நேரத்திலே, சிறிது கீறல்கள் இருக்கின்றன, விரிசல்கள் இருக்கின்றன என்று காட்டவேண்டிய அவசியம் இல்லை என்ப தற்காக, எத்தனையோ செய்திகளை விழுங்கி விழுங்கிப் போட்டிருக்கிறோம்.

அந்த வகையிலே, விழுமி யங்கள்தான் முக்கியமே தவிர, விழுங்கியவையால் நமக்கொன்றும் கெடுதி இல்லை என்று சொல்லக் கூடிய அளவிலே, நாங்கள் மிகப்பெரிய அளவிலே முயற்சி செய்து, தனியே பேசிக்கொண்டிருந்தாலும், இவைகளெல்லாம் பொது மேடையிலே சொல்ல வேண்டிய அவசியம் இல்லை என்று நாங்கள் எங்களுக்குள்ளே பேசி இருக்கின்ற பல்வேறு கருத்துகளின் அடிப்படையிலே, இதுவரையிலே மறைத்து வைக்கப்பட்ட, இதுவரையிலே தேவை யில்லாமல் இதனைச் சொல்லவேண்டாம் என்பதற் காக, பல்வேறு அவதூறுகளையும், பழிகளையும் சுமந்துகொண்டும்கூட சொல்லவேண்டாம் என்ற நிலையில் இருந்த கருத்துகளையெல்லாம் இன்றைக்குத் துணிச்சலாக எடுத்துச் சொல்லி, இந்த மேடையில் மட்டுமல்ல, உலகத் தமிழர்களுக்கும் சேர்த்து, அவர்களுக்கும் வெளிச்சத்தைக் கொடுக்கக் கூடிய ஒரு அற்புதமான உரையை ஆற்றி இருக்கக் கூடிய எனது அருமை சகோதரர் மானமிகு எழுச்சித் தமிழர் விடுதலைச் சிறுத்தைகளின் தலைவர் தொல்.திருமாவளவன் அவர்களே,
சிறப்பான வகையிலே வரவேற்புரையாற்றிய கழகத்தின் பிரச்சார செயலாளர் மானமிகு வழக் குரைஞர் அருள்மொழி அவர்களே,

இங்குக் கூடியிருக்கக் கூடிய தாய்மார்களே, பெரியோர்களே, ஊடகவியலாளர்களே உங்கள் அனைவருக்கும் என் அன்பான வணக்கம்.

எழுச்சித் தமிழருக்குப் பாராட்டு!

முதலாவதாக தொல். திருமாவளவன் அவர்களைப் பாராட்டி, ஒரு செய்தியைச் சொல்லவேண் டும். இந்தச் செய்திகளைச் சொன்னதற்காக அல்ல; முதலாவதாக திராவிட முன்னேற்றக் கழகத்தைப் பின்பற்றி, அவர்களோடு இணைந்த ஒரு சூழலிலே, எத்தனையோ நேரங்களிலே அவைகளைப் பொறுத்துப் பொறுத்துக் கொண்டிருந்த அந்த நிலையில் இருந்து மாறி, அவர்கள் எடுத்த முடிவினைப் போலவே, காங்கிரசிலிருந்து நாங்களும் வெளி யேறுவோம் என்ற முடிவை அறிவித்த பிறகு, முதன் முறையாக பெரியார் திடலிலே அவர் உரையாற்று கிறார். அவருக்கு வாழ்த்துகள்.

விடுதலைச் சிறுத்தைகள், அவர் ஒருவர்தான் என்று நினைக்காதீர்கள்; அவர் ஒருவர்தான் என் றாலும், அவருக்குப் பின்னாலே, ஓராயிரம் பேரல்ல; ஒரு லட்சம் பேரல்ல; ஒரு கோடி பேரல்ல; பல கோடி பேர் இருக்கிறார்கள். உணர்வுகள்தான் மிக முக்கியம். அந்த வகையிலே அவர்களுக்கு திராவிடர் கழகத்தின் சார்பாக வாழ்த்துகளைச் சொல்லிக் கொள்கிறோம்.

தனித்து நிற்பது என்பது இருக்கிறதே, தனியே நிற்பது என்பது வேறு; தனித்தன்மையோடு நிற்பது வேறு. அதுதான் மிக முக்கியமானது.

ஆகவே, தனித்து நிற்பவர்கள் எல்லாம் தனித்தன்மையை இழந்தவர்கள் அல்ல; தனித்தன்மையை காப்பாற்றுவதற்காகவே, தனித்து நின்று உலகத் தைத் தன் பின்னாலே அழைத்துக் கொள்ளக்கூடி யவர்கள்.

தனியாகி விட்டார்கள்; தனியாகி விட்டார்கள் என்று சொல்கிறார்கள். இதற்கு முன்பு என்ன சொன்னார்கள்? ஏன் மத்திய ஆட்சியிலிருந்து வெளிவரவில்லை என்றார்கள். வெளியே வந்ததும், தனியாகி விட்டார்கள்; தனியாகி விட்டார்கள் என்று சொல்கிறார்கள்.

இதுதான் பார்ப்பனத்தனம்

இதுதான் பார்ப்பனத்தனம் என்று சொல்லக் கூடிய, ஊடகத்தினுடைய ஜாதி புத்தி. அந்த இனத்தினுடைய புத்தி அதுதான். உடனே சொல் கிறான், அனாதையாகிவிட்டார்கள் என்று. தனியே நின்றால், அனாதையா? சாக்ரட்டீஸ் தனி மனிதன் தானே? இன்றைக்கு அவர்தான் வரலாற்றில் தனித்து நின்று கொண்டிருக்கிறார்.

யார் என் பின்னாலே வரவில்லை என்றாலும் எனக்குக் கவலை இல்லை என்றார் தந்தை பெரியார். அவர் பின்னால்தான் இன்றைக்கு இந்த உலகமே திரண்டு நிற்கிறது.

ஆகவே, தனியே நின்று விட்டார்கள் என்று நினைக்காதீர்கள். எனவே, நிச்சயமாக திராவிட முன்னேற்றக் கழகமாக இருந்தாலும், விடுதலைச் சிறுத்தைகளாக இருந்தாலும், இன்றைய கால கட்டத்திலே எவர் நம் பின்னாலே இருக்கிறார்கள் என்பது முக்கியமல்ல; எவர்  பின்னாலே நாம் இருக்கக்கூடாது என்பதுதான் மிக முக்கியம்.

என்ற ஒரு தெளிவான முடிவை எடுத்து அறிவித்ததற்காக தி.மு.க.வுக்கும் நம் பாராட்டு; தி.மு.க.வோடு இணைந்து பல நல்ல செயல்களை எல்லாம் செய்து கொண்டிருக்கக் கூடிய விடுதலை சிறுத்தை களுக்கும் நமது மனமுவந்த பாராட்டு.

ஈழத் தமிழர் என்ற சொல்லைப் பயன்படுத்த தயங்குவோர்

அடுத்து நண்பர்களே, முக்கியமான ஒரு கால கட்டத்திலே எடுத்துச் சொன்னார்கள், இன்றைக்கு ஈழத் தமிழர்கள் என்று சொன்னால், இந்தச் சொல்லையே சொல்வதற்குக் கூச்சப்படாமல், இதுதான் சரியான சொல் என்பதைத் தவிர, வேறு நாம் சொல்லாத ஒரு நிலை இருக்கிறது என்று சொன்னால், அது இந்த அமைப்பைத் தவிர வேறு எந்த அமைப்பு என்பதை தயவு செய்து புரிந்து கொள்ளவேண்டும்.

இன்னமும் இலங்கைத் தமிழர்களுக்காக டெசோ என்ற அமைப்பு உருவாகியுள்ளது. கவிஞர் அவர்கள் சொன்னார்கள், வருகிற 30.4.2013 அன்று மீண்டும் டெசோ உருவாகி ஓராண்டு நிறைவாகப் போகிறது. இந்த ஓராண்டிற்குள் எந்த அமைப்பாவது, இத்தனைப் போராட்டங்களை நடத்தி இருக்கிறதா? உள்ளூர் தொடங்கி, உலகளாவிய நிலையிலே, தெருமுனைப் பிரச்சாரக் கூட்டங்களில் இருந்து, அய்.நா. மாமன்றம் வரையிலே இப்பிரச்சினை சென்றிருக்கிறது.

டெசோ மாநாடு நடைபெற்றபோது என்ன சொன்னார்கள், ஈழம் நடக்காது; ஈழம் என்று சொல் போடுவதற்கே தடை என்று சொன்னார்கள். கலைஞர் அவர்கள் உடனடியாக, ஈழ விடுதலை என்று போட்டுதான் இந்த மாநாடு நடக்கும் என்று சொன்னவுடனே,

தமிழர் தலைவரின் உரை கேட்கத் திரண்டிருந்த மக்கள் திரள் (1.4.2013)

யாரோ ஒரு அதிகாரி தவறாக உத்தரவு போட்டுவிட்டார் என்று சொல்லி, அந்த உத்தரவை திரும்பப் பெற்று மாநாட்டினை நடத்த உத்தரவு கொடுத்தார்கள். கலைஞரைத் தவிர வேறு யார் அப்படிச் செய்திருக்க முடியும்?
இதுவரையிலே, இதே நண்பர்கள் ஈழ விடு தலைக்காக மாநாடு போட்டிருக்கிறார்களே, அவர் களது காலத்தில், அதனை நடத்த முடிந்திருக்கிறதா? தயவு செய்து எண்ணிப் பார்க்கவேண்டும்.

டெசோவின் சாதனைகள்

டெசோவினுடைய உரிமை என்ன? டெசோ வினுடைய சாதனை என்ன? டெசோவினுடைய பெருமையைச் சொல்வதற்காக அல்ல நண்பர்களே,
தி.மு.க., தி.க., விடுதலைச் சிறுத்தைகள், திராவிட இயக்கத் தமிழர் பேரவை என்ற அமைப்பு ஆகியவை சேர்ந்து டெசோ அமைப்பை உருவாக்கி இருக்கிறது என்று சொன்னால், Tamil Eelam Supporters Organization (TESO) என்று சொல்லக்கூடிய டெசோவை ஏன் அதனை உருவாக்கவேண்டும்? தமிழ் ஈழம் என்பதை வலியுறுத்தித்தானே அதனை செய்திருக்கிறார்கள். ஏனென்றால், முன்பு இருந்த காலகட்டம், சந்தர்ப்பம் வேறு.

போரின் கொடுமையினாலே, பிறகு பல லட்சக்கணக்கான தமிழர்களை நாம் இழந்து, பல்லாயிரக்கணக்கான ஏறத்தாழ ஒரு லட்சம் சகோதரிகள் விதவைகளாக இருக்கிறார்கள் அங்கே என்று சொல்லக்கூடிய அளவிற்கு, மிகப் பெரிய அளவிற்குத் தொல்லைகளையெல்லாம் அனுபவித்துக் கொண்டு, ரத்தக் கண்ணீரிலே அவர்கள் மிதந்துகொண்டிருக்கிற காலகட்டத் திலே, இதற்கொரு விடியல் வேண்டாமா? என்று பார்க்கின்ற நேரத்தில், உலகத்தினுடைய பார்வை விழுந்தால் ஒழிய, இதற்கு விடியல் கிடையாது என்ற சரியான அணுகுமுறையை டெசோ எடுத்தது.

மாணவர்கள் போராட்டம்!

ஈழத்தை ஆதரிக்கும் டெசோவைப்போல், மாணவச் சமுதாயத்தினரும் எழுச்சியோடு போராடி வருகிறார்கள். மாணவ சமுதாயம் எழுச்சியோடு நின்றுவிடக் கூடாது; சிந்தித்தும் பார்க்கவேண்டும். மாணவர்களின் எழுச்சி மிகச் சிறப்பானது. மாணவர்களின் எழுச்சியைக்கூட, இந்த நாட்டினு டைய ஊடகத்துக்காரர்கள், பார்ப்பன ஊடகங் கள், உயர்ஜாதி ஊடகங்கள், திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு விரோதமாக இருக்கவேண்டும் என்று கருதக்கூடிய நிலையிலே, அவர்கள் என்ன சொல் கிறார்கள்? மாணவர்களின் எழுச்சியினால், தி.மு.க. இந்த நிலையினை எடுத்தது என்று.
தயவுசெய்து நீங்கள் எண்ணிப் பார்க்கவேண் டும். மாணவர் எழுச்சி என்பது எப்பொழுது ஏற்பட்டது? மாணவர் எழுச்சி வரவேற்கத்தக்கது; பாராட்டத்தக்கது; மாணவர்கள் இயல்பாகவே அந்த நிலையினை எடுத்தார்கள்; மாணவர்கள் மட்டுமல்ல; ஒவ்வொரு கிராமங்களிலும் அந்த நிலை ஏற்பட்டது. அதுதான் மிக முக்கியம்.

ஆனால், இந்த முறைத் தெளிவாகச் சொன்னார் கள்,  அவர்களுக்குக் குழப்பமில்லாமல் சொன் னார்கள், வாக்கெடுப்புத் தேவை; தனி ஈழம் தேவை. கிராமத்தில் இருக்கின்ற குப்பன், சுப்பன், முனியன் போன்றவர்களும் சொல்கிறார்கள். பள்ளிக்கூட மாணவன் சொல்கிறான், இனிமேல் வழியே கிடையாது; வாக்கெடுப்புதான், தனி ஈழம்தான் என்று சொல்லக்கூடிய அளவிற்கு வந்திருக்கிறது.

நாக்கும் - வாக்கும்!

சாதாரண, குப்பனுக்கும், சுப்பனுக்கும் தெரி வதுகூட, சர்வதேச கட்சிகளுக்குப் புரியவில்லை என்று சொன்னால், அவர்கள் இன்னமும் அதனைப் பற்றிப் பேசுவதற்குக்கூட நடுங்குகிறார்கள் என்று சொன்னால், பேசுகிறவர்களைக் கொச்சைப் படுத்துவதற்கு மட்டும் உங்களுக்கு நாக்கு இருக் கிறதே தவிர, உங்களுக்கு இதனைச் சொல்லலாம் என்று சொல்லக்கூடிய வாக்கு இருக்கிறதா? என்பதைப் புரிந்துகொள்ளவேண்டும்.

ஒரு காலகட்டத்திலே இதைச் சொல்லித் தீரவேண்டிய அவசியம் நமக்கிருக்கிறது.

அருமை நண்பர்களே எண்ணிப் பாருங்கள், தெளிவாக நண்பர்கள் இங்கே எடுத்துச் சொன் னார்கள் எனக்கு முன்னாலே, அதே செய்திகளை திருப்பிச் சொன்னால் விடை கிடைக்கும்.

டெசோவைப் பொறுத்தவரையிலே, எங் களுக்கு ஈழத் தமிழர்கள்மீது இருக்கின்ற உணர்வு இயல்பானது; அவர்கள் எங்கள் இனம்; எங்கள் ரத்தம். இனம் இனத்தோடுதான் சேரும்; நாங்கள் என்ன சுப்பிரமணிய சாமியின் பின்னால் போகக்கூடியவர்களா? இதனை நீங்கள் எண்ணிப் பார்க்கவேண்டாமா? எது வெண்ணெய் - எது சுண்ணாம்பு? எது பழுதை - எது பாம்பு? இதனைப் புரிந்துகொள் வதுதான் பகுத்தறிவு.

யார் அழுவது உண்மை?

பகுத்தறிவுப் பகலவன் உருவாக்கிய மேடையில் நின்று கொண்டு நாங்கள் கேட்கிறோம், தயவு செய்து புரிந்துகொள்ளவேண்டும். யார் அழுவது உண்மைக்காக? இந்த நேரத்திலே டெசோவிற்காக ஒன்றைக் கடைப்பிடிக்கிறோம்; அன்றும் சரி, இன்றும் சரி, நாளையும் சரி. கலைஞர் அவர்கள் அன்றைய நிகழ்ச்சியில்கூட அவர் தலைமை தாங்குவதற்காக அறிவிக்கப்படவில்லை; முதல் நாள் திருச்சியில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் கலந்துகொள்கிறார். மறுநாள் காலை சென்னையில் நடைபெறும் கருஞ்சட்டைப் போராட்டக் களத்திற்கு வந்துவிட்டார்.

அன்றைக்குச் சொல்கிறார், அவருடைய பெருந் தன்மையைப் பாருங்கள், இங்கே நாங்கள் போராடுவதைப் போல, இந்தி யாவிலே வேறு சில பகுதிகளிலும் ராஜபக்சேவை எதிர்த்துப் போராடுகிறார்கள். அவர்களையெல் லாம் நான் வாழ்த்துகிறேன். அவர்களுக்கெல்லாம் என் நன்றியைக் கூறிக் கொள்கிறேன்.

ஆரம்பத்தில் டெசோ மாநாட்டிலும் இதே கருத்தைத்தான் சொல்லியிருக்கிறோம்.

ஒரே அணியில் எல்லோரும் வர முடியாத சூழல் இருக்கலாம். ஆனாலும்கூட, குறைந்தபட்சம் அவரவர்கள் தனித்தனிக் குரல் கொடுத்தாலும்கூட, குரலிலே ஒரு ஒருமை இருக்கவேண்டும். அதுதான் மிக முக்கியம்.

அதைவிட மிக முக்கியமானது என்னவென்றால், நாம் பொதுவாகப் பேசும்போதும் சுட்டிக் காட்டினேன், டெசோ மாநாட்டிலே,


ஒருவருக்கொருவர் விமர்சனம் தேவையா?

நீங்கள் எங்களோடு வரவேண்டும் என்றோ, எங்கள் பின்னால் வரவேண்டும் என்றோ சொல்ல வில்லை; மிக வேகமாகச் செல்லக்கூடியவர்கள் முன்னால் செல்லுங்கள்; அது உங்களது வேகத்தைக் காட்டும். உங்கள் அளவிற்கு எங்களால் வேகமாக வர முடியாமல்கூட இருக்கலாம்.  ஆனாலும், உங்களைத் தடுப்பதற்காக நாங்கள் இல்லை.

ஆனால், அதேநேரத்திலே, நாம் ஒருவருக்கொருவர் விமர்சனம் செய்துகொண்டிருக்கவேண்டிய அவசியம் இல்லை. குறைந்தபட்சம் ஒருவருக் கொருவர் விமர்சனம் செய்யக்கூடாது. அதைத்தான் அன்றைக்குச் சொன்னார். பொதுக் கருத்திலே, தந்தை பெரியார் சொன்ன கருத்தை அன்றைக்கும், இன்றைக்கும், நாளைக்கும் நாங்கள் வலியுறுத்தக் கூடியவர்கள்.

எது நம்மை இணைக்கிறதோ, அதனை நாம் அகலப்படுத்துவோம்; எது நம்மைப் பிரிக்கிறதோ, அதனை நாம் அலட்சியப்படுத்துவோம், அதுதான் மிக முக்கியமானது.

அந்த வகையிலே பார்க்கும்பொழுது, நம்முடைய நோக்கமென்ன? கலைஞர் அவர்களுடைய அந்தக் கொள்கை என்பது இருக்கிறதே, சாதாரணமானதா?
எவ்வளவு கொச்சைப்படுத்தி இருக்கிறார்கள்; ஊடகங்களும் கொச்சைப்படுத்துகிறதே. விலாசம் இல்லாதவர் எல்லாம் கேள்வி கேட்கிறார்களே, அவர்களுடைய வரலாறு என்ன?

விடுதலைப்புலிகள் முதலில் கால் வைத்த இடம் பெரியார் திடல்தான்!

நாங்கள் விடுதலைப் புலிகளை இந்தத் திடலுக்கு அழைத்த நேரத்தில், அரசியல் என்றால் என்ன வென்று புரியாத, அரசியலில் கால் வைக்காதவர்கள் எல்லாம் இன்றைக்கு தாங்கள்தான் மிகப்பெரிய வர்கள் என்று பேச ஆரம்பித்திருக்கிறார்கள்.

நாங்கள் அவர்களின் முகத்திரையைக் கிழிக்க ஆரம்பித்தால் உங்களால் தாங்க முடியாது. இதனை ஞாபகத்தில் வைத்துக்கொள்ளவேண்டும். இதனை நினைத்துப் பார்க்கவேண்டாமா?

இன்றைக்கு நீங்கள் தொடர் உண்ணாவிரதம் இருக்கலாம்; வேஷம் போடலாம்; ஆனால், உண்மையாகவே ஆயுதம் பறிக்கப்பட்டதற்காக உண்ணாவிரதம் இருப்பதா? பிரபாகரன் உண்ணா விரதம் இருக்கக்கூடாது என்று தைரியமாக எழுதி, அது சரியான முறையல்ல என்று சொல்லி, உண்ணாவிரதத்தை முடிக்க வைத்து, பழச்சாறு கொடுத்தவன் நான்.

இதையெல்லாம் சொல்லவேண்டும் என்ற அவசி யம் எங்களுக்கு இல்லை. மார்தட்டுவது, கித்தாப்பு என்பது எங்களுக்கு முக்கியமல்ல; ஈழத்தமிழர் களின் வாழ்வு மிக முக்கியம். இன்னமும் சொல்கி றோம், எங்களுக்குப் பொது எதிரி இங்கே இருக் கின்ற கோட்டையில் இருக்கின்றவர்கள் அல்ல; கோட்டையைச் சுற்றி இருக்கின்ற சுற்றுக்கிரகங்கள் அல்ல.

பொது எதிரி ராஜபக்சேவே!

மாறாக, எங்களுடைய பொது எதிரி, இன்னமும் ஈழத் தமிழர்களை வதைத்துக் கொண்டிருக்கின்ற ராஜபக்சே. ராஜபக்சேவினுடைய அந்தக் கூட்டம்; அவனுடைய ஆதிக்கம், அந்த இட்லரிசம்; அதனை நாம் ஒழித்தாகவேண்டும். அதற்கு உலக நாடுகளை நாம் தயார்படுத்தியாகவேண்டும். உலக மக்களை நாம் ஒன்று திரட்டித்தான் அதனை நாம் செய்ய முடியும்.

எங்களுக்கு இருப்பது நாட்டுக் கண் ணோட்டம்; ஈழக் கண்ணோட்டம். ஆனால், எங்களை விமர்சிக்கக் கூடியவர்களுக்கு இருப்பது சிலருக்கு சீட்டுக் கண்ணோட்டம்; சிலருக்கு ஓட்டுக் கண்ணோட்டம். இவைகள்தானே தவிர, வேறு கிடையாது.

இலங்கைத் தூதர் வந்து, தைரியமாக தன்னு டைய உறவைச் சொல்வாரா? சொல்லியிருக்கிறாரே?

நாங்கள் பிரிவினையைக் கேட்காவிட்டாலும், அவர்கள் பிரிவினையைக் கொண்டுவரத் தயாராக இருக்கிறார்கள்.

ஆரியம் வேறு - திராவிடம் வேறு!

ஆரியம் வேறு; திராவிடம் வேறு என்று சொல்லி, நாங்கள் எல்லாம் அவர்களின் மூதாதை யர்கள் என்று சொல்லி, நடுவில் ஒரு கோடு போட்டு விட்டார். இலங்கைத் தூதுவரே உங்களுக்கு நன்றி. இதனை அடிக்கடி சொல்லுங்கள்; அப்போதுதான், காங்கிரஸ் ஏன் உங்கள் பக்கத்தில் இருக்கிறது, பி.ஜே.பி. ஏன் உங்கள் பக்கத்தில் இருக்கிறது; சர்வதேசியம் பேசுகிற கம்யூனிஸ்ட் ஏன் உங்கள் பக்கத்தில் இருக்கிறது என்று எங்களுக்குத் தெரியும்.
ஒரே ஒரு வித்தியாசம் - கம்யூனிஸ்டை பொறுத்த வரையில் உண்டு; என்ன வித்தியாசம் என்றால், எங்களைப் பொறுத்தவரையிலே, திராவிடர் கழகத்தைப் பொறுத்தவரையிலே ஒரு நம்பிக் கையை ஊட்டுகிறது, இடதுசாரிகளிடம்.

தீர்மானம் போட்டு ஒரு முடிவினை எடுப்பார் கள்; அது என்னவென்றால், சென்ற முறை எடுத்த நிலைப்பாடு தவறு என்று சொல்வார்கள். அது போல் அவர்கள் சொல்லக்கூடிய நிலை வரும் என்பதுதான்.

நீங்கள் நன்றாக நினைத்துப் பார்க்கவேண்டும். தமிழ்நாடு அரசு சட்டப்பேரவையில் தீர்மானம் போட்டார்கள் என்று சொல்கிறார்கள். அந்தத் தீர்மானத்தையும் நாங்கள் வரவேற்று இருக்கிறோம்.

சட்டப்பேரவை தீர்மானம் - டெசோவின் தீர்மானம்தானே?

ஆனால், அந்தத் தீர்மானம்கூட, டெசோ மாநாட்டிலே நிறைவேற்றப்பட்ட தீர்மானம்தானே, சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம்.
தமிழகச் சட்டப்பேரவையில் நிறைவேற்றப் பட்ட தீர்மானத்திற்கு ஆகா, ஓகோ என்று பாராட்டுகிறார்கள்; நாங்களும் வரவேற்றோம். நமக்குள் ஆயிரம் வேறுபாடுகள் இருந்தாலும், வெளியிலுள்ள எதிரியான ராஜபக்சேவை நாங்கள் பார்க்கிறோம். இவர்கள் கோபாலபுரத்தைப் பார்க்கிறார்கள். எங்களின் பார்வை ஈழத் தமிழர்கள்மீதுள்ள அக்கறையுள்ள பார்வை.
டெசோ மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களில் 10 ஆவது தீர்மானத்தை இங்கே படிக்கிறேன்:

ஈழப் பகுதியில் வாழும் தமிழ் மக்களுக்கு அனைத்து அடிப்படை வாழ்வுரிமைகளும், ஜனநாயக உரிமைகளும் வழங்கப்படவேண்டும். அவர்களின் அடிப்படை உரிமைகள் மீறப்படு வதற்கு முடிவு கட்டாதவரை இலங்கைத் தமிழர் களின் மறுவாழ்வு என்பது வெறும் கண்துடைப் பாகவும், தொலைதூரக் கனவாகவும் இருக்கும் என்று இம்மாநாடு கருதுகிறது.
இது எப்போது நிறைவேற்றப்பட்ட தீர்மானம் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 12 ஆம் தேதி நிறைவேற் றப்பட்டது.

ஏழு மாதங்கள் கழித்து, இந்தத் தீர்மானத்தை விட, குறைவான தன்மையுடைய அளவீடு உள்ள ஒரு தீர்மானத்திற்கு ஓகோ என்ற வரவேற்பு; அதேநேரத்தில், டெசோ தீர்மானம் போட்ட பொழுது, டெசோ உப்பு சப்பில்லாதது என்றனர். அது என்ன உப்பு சப்பில்லாதது; யாருக்கு உரைக்க வேண்டுமோ, அவனுக்கு அல்லவா உரைத்திருக்கிறது. மாநாட்டைப் பற்றி கவலைப்பட்டவன் யார்? அதைப்பற்றி சங்கடப்பட்டவன் யார்? ராஜபக்சே அல்லவா! வெளிநாட்டில் நுழையக்கூடாது என்று தடை விதிக்கவில்லையா?

இன்று சட்டப்பேரவையில் தீர்மானம் போட்ட வர்கள், அன்று என்ன செய்தார்கள், டெசோ மாநாடு நடைபெறக்கூடாது என்று தடை போட்ட வர்கள்தானே! அவர்கள் ராஜபக்சேவிற்கு உற வினர்களா?

நீதிமன்றத்தின் ஆணை எப்பொழுது கிடைக் கிறது தெரியுமா? டெசோ மாநாட்டு தீர்மானங் களைப்பற்றி நாங்கள் விவாதித்துக் கொண் டிருந்தோம். ஒரு மணிக்கு ஆலோசனை முடிவடை கிறது. எப்படியும் மாநாட்டினை நடத்தவேண்டும் என்பதில் குறியாக இருந்தோம். அந்த இடம் இல்லாவிட்டால், இரண்டு இடங்களைத் தேர்வு செய்திருந்தோம். ஒன்று, அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கம்; இன்னொன்று- சென்னை பெரியார்திடல். அதற்குத் தயாராக இருந்தோம். டெசோ மாநாடும் குறிப்பிடப்பட்டு இருந்த இடத்திலேயே சிறப்பாக நடைபெற்றது.
மாநாட்டினை நடத்துவதற்கு என்னென்ன கட்டுப்பாடுகள் விதித்தார்கள் தெரியுமா?

டெசோ மாநாட்டின் வரவேற்புக் குழுவில் முக்கியமானவரும், சட்டமன்ற உறுப்பினரும், தென்சென்னை மாவட்ட தி.மு.க. செயலாளருமான ஜெ.அன்பழகனுக்கு என்னென்ன விதிமுறைகள் அளித்தார்கள் தெரியுமா?
மாநாட்டிற்கு 10 ஆயிரம் பேருக்குமேல் வரக்கூடாது. ஏனென்றால், கூட்டம் அதிகமாக சேர்ந்து விடக்கூடாதாம். நிறைய பேரை வர வேண்டாம் என்று சொல்லி, தொலைக்காட்சி யிலேயே பார்த்துக் கொள்ளுங்கள் என்று சொல்லி, புறப்பட்டவர்கள் எல்லாம் நின்றார்கள் தமிழ்நாடு முழுக்க, இதுதான் உண்மை.

டெசோ தீர்மானம் என்ன?

அந்த மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத் தில் கூறியுள்ளது என்ன?
உரிமைகள் மீறப்படுவதற்கு முடிவு கிட்டாத வரை இலங்கைத் தமிழர்களின் மறுவாழ்வு என்பது வெறும் கண்துடைப்பாகவும், தொலைதூரக் கனவாக இருக்கும் என்று இம்மாநாடு கருதுகிறது.

எனவே, பின்வரும் செயல்பாடுகளே, ஈழத் தமிழர்களை சுயமரியாதையோடும், உரிமையோ டும் வாழ வைக்கும் என்று இம்மாநாடு உறுதியாக நம்புகிறது.
என்னென்ன திட்டங்கள் என்பது மிக முக்கிய மாக சொல்லப்படவேண்டியவைகள். அந்தத் தீர்மானத்தினுடைய ஒரு பகுதி:

(1) இலங்கைத் தமிழர்களிடம் அய்க்கிய நாடுகள் மன்றத்தின் மூலம் பொது வாக்கெடுப்பு நடத்தப் பட வேண்டும். அது தெற்காசிய மனித உரிமைகள் பிரச்சினையாக முன்னிலைப்படுத்தப்பட வேண்டும்.

(2) கலாச்சாரத்தை இழந்து, எந்த இனமும், மக்களும் வாழவோ, தமது மொழியையும், அடையாளத்தையும் பாதுகாக்கவோ முடியாது. இலங்கை அரசு தமிழர் கலாச்சாரமும், மொழியும் பாதுகாக்கப்படுவதை உறுதி செய்யவேண்டும். ஆனால் இலங்கை அரசு, அவற்றை அழிப்பதற்கான அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறது என்பதே வருந்தத்தக்க உண்மையாகும். ஓர் ஆட்சி மொழிக்கு உரிய தகுதி தரப்படாமல், தமிழ் வலுவிழக்கச் செய்யப்பட்டு வருகிறது. தமிழர் களின் பாரம்பரியத்தை அழிக்க அனைத்து முனை களிலும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

(3) ஆயிரக்கணக்கான தமிழர்கள் சிறைபிடிக் கப்பட்டு இலங்கைச் சிறைகளில் அடைக்கப் பட்டுள்ளனர். அவர்கள் அனைவரும் விடுதலை செய்யப்பட வேண்டும்.

(4) தங்களது நாட்டை விட்டு உயிருக்குப் பயந்து, பாரம்பரியமான தங்களது வாழ்விடங்களை விட்டு உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் குடியேறி வாழும் இலங்கைத் தமிழர்கள், தங்களது தாய் நாட்டுக்கு எவ்விதத் தடையுமின்றிப் பாதுகாப்பாக வந்து போக அனுமதிக்கப்பட வேண்டும்.

(5) தமிழ்க் குழந்தைகளின் எதிர்காலம் வளம் பெற; தமிழர் பகுதிகளில் கல்வி அறிவை மேம்படுத்துதல், வடக்கு - கிழக்கு மாவட்டங்களில் முழுமையாகச் செயல்படக்கூடிய பள்ளிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் நிறுவுதல் மற்றும் ஆசிரியர் பணி இடங்களை  நிரப்புதல் ஆகியவை முக்கியத் தேவைகளாகும்.

(6) போரில் பாதிக்கப்பட்டவர்களுக்கு  உயர்தர சேவைகளுடன் சிறப்பு மருத்துவ வசதிகள் உறுதி செய்யப்பட வேண்டும். குறிப்பாக, கண்முன்னே நடந்த போரினாலும்,  குடும்பங்களுக்கு நேர்ந்த இழப்பாலும் தமிழர்களுக்கு ஏற்பட்டுள்ள மன ரீதியான அழுத்தங்கள் சரிசெய்யப்பட வேண்டும்.

(7) இலங்கை இராணுவத்தினரின் தாக்குதல் களால் பாதிக்கப்பட்ட ஈழத் தமிழர்களின் குடி யிருப்புகள், கடைகள், வணிக வளாகங்கள், பள்ளிக் கூடங்கள், கல்லூரிகள், சாலைகள் போன்றவற்றைச் செப்பனிடவும், சீர்செய்யவும் உதவிடும் வகையில் இந்திய அரசு, ஈழத் தமிழர் மறுவாழ்வு நிதியாக வழங்கியுள்ள ரூ.500 கோடி மேற்காணும் பணி களுக்காக உரிய முறையில் பயன்படுத்தப்பட வேண்டும்.

இத்தீர்வுகளை நடைமுறைப்படுத்துவதில் உலக நாடுகளுடன் இணைந்து இந்தியா தன் முதன்மைப் பங்கினை ஆற்றவேண்டும் என்று இம்மாநாடு கேட்டுக் கொள்கிறது.

இவ்வளவையும் 10 ஆவது தீர்மானமாக நிறை வேற்றப்பட்டிருக்கிறது.
இன்றைக்குச் சட்டப்பேரவையில் நிறைவேற்றப் பட்டிருக்கின்ற தீர்மானத்தின் ஒரு பகுதி என்ன வென்றால், வாக்கெடுப்பு யார் செய்யவேண்டும் என்று இருக்கிறது; அந்தத் தீர்மானத்தை வர வேற்றார்களே, அந்த நண்பர்களுக்குச் சொல்லிக் கொள்கிறோம். ஆனாலும், அந்தத் தீர்மானத்தை நாங்கள் வரவேற்கிறோம்.

அந்தத் தீர்மானத்தின் தத்துவம், அந்த உணர்வுகள் வேறு பக்கம் இல்லை. நாங்கள் வெவ்வேறு அணியாக இருந்தாலும், வெவ்வேறு முகாம்களில் இருந்தாலும், இந்த அளவிற்காவது தீர்மானம் வந்ததே என்பது மகிழ்ச்சிதான். நீங்கள் ஏன் வரவேற்கிறீர்கள் என்று காரணம் கேட்டால், எங்களின் பதில் என்ன தெரியுமா?

நாங்கள் சொன்னதைத்தான் நீங்கள் சொல் கிறீர்கள். அப்படி என்றால், நீங்கள் எங்கள் இடத் திற்கு வந்துவிட்டீர்கள். நாங்கள் சொன்னதையே நீங்கள் சொன்னாலும் நாங்கள் தவறு என்று சொல்லமாட்டோம். அதே கருத்தை நான் சொன்னாலும், நான்தானே சொல்லவேண்டும், நீ எப்படி சொல்லலாம் என்று சொல்லக்கூடி யவர்களும் இருக்கிறார்கள்.

அதேநேரத்தில், டெசோவிற்கு சரியான பார்வை இருக்கிறது என்பதன் அடையாளம்தான், இது தென்கிழக்கு ஆசியப் பிரச்சினையாக ஆக்கப்பட்டு, உலகத் தமிழர்கள் மத்தியிலே அய்.நா. இதனைச் செய்யவேண்டும் என்று சொல்லி, ஏற்கெனவே இந்தத் தீர்மானம் வருவதற்கு முன்பே, தளபதி ஸ்டாலின் அவர்களும், டி.ஆர். பாலு அவர்களும், அய்.நா.விற்குச் சென்று யாரைச் சந்திக்கவேண்டுமோ, அவர்களைச் சந்தித்து, மனித உரிமை ஆணையத் தலைவரையும் சந்தித்து டெசோ மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களைக் கொடுத்தனர். தபாலில் போட்டாலே அய்.நா.விற்குச் சென்று விடுமே என்று சொன்னவர்களும் உண்டு.

ஆகவேதான், எவ்வளவு ஒரு குறுகிய மனப் பான்மை இவர்களுக்கு; அரசியல் இருக்கிறது இப்பிரச்சினையில்.

இதுவரையில் இதனைச் சொல்லக்கூடிய அவசி யமில்லை என்றுதான் நினைத்தோம். பெருந்தன் மைக்கும் ஒரு அளவுகோல் உண்டு.
மாணவர்களுடைய ஆர்வம் பாராட்டத் தகுந்தது; மாணவர்களுடைய உற்சாகம் குறைக் கப்படக்கூடாது. அதேநேரத்தில் மாணவர்களைக் கூட அவர்கள் முத்திரை குத்த ஆரம்பித்தார்கள்.

திருமாவளவன் அவர்களும், சுப.வீ. அவர்களும், டி.கே.எஸ். இளங்கோவன் அவர்களும் உண்ணா விரதம் இருந்த லயோலா கல்லூரி மாணவர்களைச் சந்திக்கச் சென்றபோது, ஏன் சத்தம் போடு கிறார்கள்? மாணவர்கள் சொன்னார்கள், எங் களுக்கு அரசியல் கிடையாது என்று சொன்னார் கள்.
மாணவர்களை இவர்களெல்லாம் சந்திக்கின் றார்கள் என்று, அன்றிரவே ராயப்பேட்டை மருத்துவமனைக்கு வலுக்கட்டாயமாக மாண வர்களைக் கொண்டு செல்கிறார்கள். கலைஞர் ஆட்சியில் இதனைச் செய்திருந்தால், ஆகாயத் திற்கும், பூமிக்கும் குதித்திருக்க மாட்டார்களா?

உண்மைகள் கள பலி ஆகிவிடக் கூடாதல்லவா?

சில உண்மைகள் கள பலியாகக்கூடாது; அந்த உண்மைகள் வெளிச்சத்திற்கு வரவேண்டும் என் பதற்காகத்தான் இந்தச் செய்திகளைச் சொல்கி றோம்.
என்ன செய்தாலும், அந்த அம்மாவின் குணத்தை மறைக்க முடியாதே?
கலைஞரைத் தாக்குவதற்குத்தான் சட்டப்பேர வையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம்.

எதிரி கலைஞரா? ராஜபக்சேவா? என்று நினைத்துப் பார்க்கவேண்டாமா?
மக்களுக்கு மறதி அதிகம். அந்த மறதியை எல்லாம் நினைவூட்டுவதுதான் எங்களது வேலை. மறந்து போயிருக்கின்ற செய்திகளைச் சொல்வது தான் எங்களுடைய கடமை என்று நினைக்கின் றோம்.

இரங்கற்பா எழுதியதற்கே டிஸ்மிஸ் செய்யவேண்டும் என்றவர்கள் யார்?

தமிழ்ச்செல்வம் இறந்தபோது, முதலமைச்சராக கலைஞர் அவர்கள் ஆட்சியைப்பற்றி கவலைப்பட் டாரா? அவர் இரங்கற்பா எழுதினார் அல்லவா!
உடனே இந்த அம்மையார் என்ன சொன்னாங்க, இதற்காகவா தி.மு.க. ஆட்சியை டிஸ்மிஸ் செய்ய வேண்டும் இந்திய அரசு என்று அறிக்கை விட்டாரா இல்லையா?

எதற்கெடுத்தாலும் டிஸ்மிஸ் செய்யவேண்டும்; டிஸ்மிஸ் செய்யவேண்டும் என்றுதானே சொன் னார்கள்?

ஆனால், காங்கிரஸ் கூட்டணியில் இருந்து கொண்டு இதனை சொல்கிறார்களே என்று இதனைப் பேசுகிறார்களே என்று கேட்கும் நண்பர்களுக்குச் சொல்லிக் கொள்கிறோம்,

காங்கிரஸ் கூட்டணியிலிருந்து தி.முக. வெளியே வந்தால், காங்கிரசுக்கு நான் (அ.தி.மு.க.) எங் களிடத்திலுள்ள உறுப்பினர்களை எல்லாம் சேர்த்து ஆதரவு கொடுப்பேன் என்று சொன்னாரா இல்லையா இந்த அம்மையார்?

பழையதை எல்லாம் நினைவுபடுத்தினால், கண்ணாடி வீட்டிலிருந்து கொண்டு கல்லெறிவது போல் ஆகிவிடும். ஆகவேதான் அதைச் செய்ய வேண்டிய அவசியம் இல்லை. அது தேவையும் இல்லை. இப்பொழுது நமக்கிருக்கின்ற மிக முக்கிய மான பிரச்சினையெல்லாம் ஈழத் தமிழர்களின் வாழ்வுரிமையை எப்படி மீட்பது என்பதுதான்.

தேவை உலக நாடுகளின் ஆதரவு!

அப்படி மீட்கின்ற நேரத்தில், அதற்குத் தெளிவான ஒரு சிந்தனை தேவை என்றால், உலக நாடுகளின் ஆதரவு இல்லாமல், நாம் இன்றைக்கு இந்தப் பிரச்சினையைத் தீர்க்க முடியாது.

இந்திய அரசைப் பொருத்தவரையிலே, நமக்கு ஒரு அடிப்படையான கொள்கை தேவைப்படு கிறது. வருகின்ற தேர்தலிலே அதைத்தான் முன்னிறுத்தவேண்டும் தமிழகத்தைப் பொருத்த வரையிலே. அது திராவிட முன்னேற்றக் கழகம், விடுதலைச் சிறுத்தைகள் இப்படிப்பட்டவர் களானாலும், இந்த அணியா? அந்த அணியா? என்று பார்ப்பதற்கு முன்னாலே, ஈழத் தமிழர் களையும் அல்லது இதுபோன்ற ஒரு நிலை ஏற்படுகின்ற ஒரு இனத்தவரையும் பாதுகாக்க வேண்டும்;

உலகத்திலுள்ள எல்லா தமிழர்களுக்கும் ஒரு பாதுகாப்பு வேண்டும் என்று சொன்னால், இந்தியாவில் அமையப் போகிறது அரசு இருக் கிறதே, வெளியுறவுக் கொள்கை மாற்றப்பட வேண்டும் என்பதை யார் மய்யப்படுத்துகிறார் களோ, யார் முன்னிலைப்படுத்துகிறார்களோ அவர்களுக்குத்தான் எங்களின் ஆதரவு.

இதே வெளியுறவுக் கொள்கை; பி.ஜே.பி.க்கு என்ன வெளியுறவுக் கொள்கையோ, அதேதானே காங்கிரசுக்கு. அதேதானே இவர்களுக்கு. வீராதி வீரர்களாக பேசுகிறார்களே, அகில இந்திய கட்சி இருக்கும்பொழுது, நாங்கள் அவர்களைக் கேட்க வேண்டும் என்று சொன்னார்கள் இடதுசாரிகள்.

அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் அ.தி.மு.க. கலந்துகொண்டதா?

ஈழத் தமிழர்களுக்காக, வாழ்வுரிமைக்காக ஆட்சியில் இருக்கும்பொழுது கலைஞர் அவர்கள் ஒரு அனைத்துக் கட்சிக் கூட்டம் போடுகிறார். அனைத்துக் கட்சி கூட்டம் போட்டு அவருக்குப் பழக்கம்; அனைத்துக் கட்சிக் கூட்டாத பழக்கமே இப்போது இருக்கின்ற அரசுக்குப் பழக்கம்.

ஆகவே, அந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் அ.தி.மு.க. கலந்துகொண்டதா? இதனை மறுக்க முடியுமா? ஈழத் தமிழர்களைப் பாதுகாக்கவேண்டும் என்று சொன்னால், டெசோவின் மூலமாக ஒரு ஆண்டுக் குள் எத்தனைப் போராட்டம்? ஒரு இயக்கத்தில் 50 ஆயிரம் பேர்களுக்கு மேலே ஒரு போராட்டம் நடத்தி, சிறைச்சாலைக்குப் போகக்கூடிய ஆற்றல் இந்த அமைப்பைத் தவிர வேறு எந்த அமைப்பிற்கு இருக்கிறது? இதனை நீங்கள் எண்ணிப் பார்க்கவேண்டும் தோழர்களே!

கருமத்துக்கு உரியவர்கள் நாங்கள்

ஆகவே, வசனங்கள் பேசுவது முக்கியமல்ல; அவர்களை வாழ்விப்பது எப்படி என்பதுதான் மிக முக்கியம். அதனைப்பற்றி நாங்கள் கவலைப்படுகிறோம். உண்மையாகவே, கருமத்திற்குரியவன் கடைசிவரையில் இருப்பான். அதுதான் நம்முடைய நாட்டினுடைய வழமை. அந்த அடிப்படையில் மிகத் தெளிவாக இந்தக் கருத்தினை உங்கள் முன் வைக்கிறோம்.
அவர்கள் சொன்னார்கள் அல்லவா, போலி எது? உண்மை எது? என்று தெரிந்துகொள்ளவேண்டும், அதுதான் மிக முக்கியம்.

உண்மையைவிட போலி மிக ஜொலிப்பாக இருக்கும். கள்ள நோட்டை எப்போது கண்டு பிடிக்கிறார்கள்? கடைசி நேரத்தில்தான் கண்டு பிடிக்கிறார்கள். வெங்கடாசலபதியாலே கண்டு பிடிக்கவே முடியவில்லை. வெங்கடாசலபதி  எவ்வளவுதான் சக்தி உடையவனாக இருந்தாலும், உண்டியலில் கள்ள நோட்டுப் போட்டார்கள் என்றால், அதனை ஆராய்ச்சி செய்கின்ற அதிகாரி தான் கண்டுபிடிக்கின்றாரே தவிர, வெங்கடாசலதி என்ன கள்ள நோட்டுப் போடுகிறவரின் கைகளைப் பிடித்துக் கொள்கிறாரா? ஏனய்யா, ஏழுமலை யானான என்னையே ஏமாற்றுகிறாயா?

நீ ரிசர்வ் வங்கியை ஏமாற்றலாம், என்னை ஏமாற்ற முடியாது என்று சொல்கிறாரா? ஏழுமலையானையே ஏமாற்றும்போது, நம்முடைய ஏழுமலைகள் ஏமாறுவது என்னய்யா அதிசயம்?

எனவே, எங்களைப் பொருத்தவரையிலே மக்களைத் தயார்படுத்த வேண்டியது எங்களது வேலை.

டெசோ பயணம் தொடரும்

டெசோ அமைப்பு யாருடைய பாராட்டு தலுக்காகவும் தொடங்கப்பட்டது அல்ல. யாரு டைய விமர்சனத்தைக் கண்டும் தன்னுடைய பயணத்தை நிறுத்திக் கொள்ளாது.

எங்கள் பாதை தெளிவானது; பயணம் உறுதி யானது. நடப்போம்; யார் வந்தாலும் நடப்போம்; யார் வராவிட்டாலும் நடப்போம்; காரணம், இந்த அமைப்புக்கு தலைவராக உள்ள இந்தியாவின் மூத்த ராஜதந்திரியாக இருக்கின்ற கலைஞருடைய வழிகாட்டுதல் இருக்கிறது, அது ஒரு கலங்கரை விளக்கம்போல் இருக்கும். அதனுடைய பெருமைகளை மற்றவர்கள் புரிந்துகொள்வர்.

உண்மைகள் வெல்லட்டும்!

இன்றைக்கு ஒரே ஒரு வாய்ப்பு, கலைஞரோடு இருக்கின்றவர்கள் லாபம் அடைவதைவிட, அவரை எதிர்க்கின்றவர்கள் மிக லாபமடைகிறார்கள். இதுதான் அவருக்குள்ள பெருமை. அந்தப் பெருமையோடு அவர் வாழ்க, வளர்க!

டெசோ வளர்க! உண்மைகள் வெல்லட்டும்! என்று கூறி முடிக்கிறேன், நன்றி, வணக்கம்!

வாழ்க பெரியார், வளர்க பகுத்தறிவு!

- இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் கி. வீரமணி அவர்கள் உரையாற்றினார்.
                            --------------------------"விடுதலை” 02-04-2013

7 comments:

தமிழ் ஓவியா said...


ஓ, முரளிதரனா!


அய்.பி.எல். கிரிக்கெட்டில் இலங்கை வீரர்கள் சென்னையில் விளையாட அனுமதியில்லை என்று முதல் அமைச்சர் அறிவித்தாலும் அறிவித்தார்; சில சர்ச்சைகளை எழுப்பியது.

இலங்கை அணியில் இடம் பெற்ற ஒரே தமிழர் முத்தையா முரளிதான். உலகளவில் சாதனைகளை நிகழ்த்திய சுழல்பந்து வீச்சாளர் அவர்.

இவ்வளவு திறமை இருந்தும். இலங்கை அணியின் துணைத் தலைவர் (கேப்டன்) பொறுப்பில்கூட நியமனம் செய்யப்பட்டதில்லை. காரணம் அவர் தமிழர்.

மாமனார் வீடு சென்னையில் இருந்தும் என்ன? உள் நாட்டிலேயே அங்கீகாரம் இல்லை - சென்னையில் மட்டும் உரிமை கொண்டாடி என்ன பயன்?

தமிழ் ஓவியா said...


மோடி முன்னிறுத்தப்படுவதன் முக்கிய நோக்கம்!


சோதிடம் பார்த்து, நல்ல நாள், நல்ல நேரத்தைப் தேர்ந்தெடுத்து பிஜேபியின் அகில இந்தியத் தலைவர் ராஜ்நாத்சிங் பிஜேபிக்கான நிருவாகிகளின் பட்டியலை வெளியிட்டு விட்டார்.

குஜராத் மாநில முதல் அமைச்சர் நரேந்திரமோடி கட்சியின் ஆட்சி மன்றக் குழுவுக்கு நியமனம் செய்யப்பட்டு இருப்பது குறித்து கருத்துத் தானங்களை ஏடுகள் வாரி வழங்க ஆரம்பித்து விட்டன.

மோடிதான் பிரதமருக்கான வேட்பாளர் என்று அரசல் புரசலாகக் கருத்துக்களை பிஜேபி வெளியிட்டு வந்ததுண்டு, அதில் மாறுபட்ட கருத்துகளும்கூட பிஜேபிக்குள் இருக்கத்தான் செய்தன.

இந்த நிலையில் மோடி பிஜேபியின் ஆட்சி மன்றக் குழுவுக்கு நியமிக்கப்பட்டதால் கிட்டத் தட்ட அவர்தான் பிரதமருக்கான வேட்பாளர் என்ற இடத்துக்குக் காய் நகர்த்தப்பட்டுள்ளது.

ஊழல் ஒழிப்பு வீரராக தம்மை முன்னி றுத்திக் கொண்டு கடைசியில், தானே ஊழலில் சிக்கிக் கொண்ட யோகக் குரு என்ற அழைக் கப்பட்டு வரும் ராம்தேவ் சபாஷ்! மோடிதான் பிரதமருக்கான சரியான வேட்பாளர் என்று கை தட்டி வரவேற்றுள்ளார்.

இதற்கிடையில் விசுவ ஹிந்து பரிஷத்தின் முக்கிய தலைவரான பீரவீண் தொகாடியா குஜராத்தை இந்து மாநிலமாக அறிவிப்போம்; வரும் 2015ஆம் ஆண்டுக்குள் குஜராத்தில் உள்ள 18 ஆயிரம் கிராமங்களிலும் வி.எச்.பி. கிளைகள் தொடங்கப்பட்டு, அதற்குப்பிறகு இந்து மாநிலமாக குஜராத்தை அறிவிப்போம் என்று கூறியுள்ளார்.

ஆர்.எஸ்.எஸின் தலைவர் மோகன் பகவத் அயோத்தியில் ராமன் கோயிலை பிரம்மாண்ட மாக கட்ட வேண்டும்; வருங் காலத்தில் ஒட்டு மொத்த உலகமே இந்துக்களைப் பின்பற்றப் போகிறது என்று தனது நம்பிக்கைகளைத் தெரிவித்துள்ளார்.

இதன் மூலம் ஒன்று தெளிவாகி விட்டது. பிஜேபி ஆட்சிக்கு வந்தால் மதச் சார்பின்மை என்பது ஆழக்குழி தோண்டிப் புதைக்கப்படும்; ஹிந்து ராஜ்ஜியம் உருவாக்கப்படும் என்பதை மறைமுகமாக பிரகடனப்படுத்தி விட்டார்கள் என்றே எடுத்துக் கொள்ளப்பட வேண்டும்.

இன்னொரு பக்கத்தில் ஊழல் ஒழிப்பு வீரர் காந்திக்குல்லாய் அன்னா ஹசாரே காங்கிரசை எதிர்த்து ஊழல் ஒழிப்புப் பிரச்சாரத்தைத் தொடங்கப் போவதாகவும் அறிவித்துள்ளார்.

இவற்றின்மூலம் அப்பட்டமான அடை யாளங்கள் அய்யப்பாட்டுகளுக்கு அப்பாற்பட்டு வெளிச்சத்திற்கு வர ஆரம்பித்து விட்டன.

இதில் இன்னொரு தகவலும் முக்கியமானது - கவனிக்கத்தக்கது. பீகாரில் பிஜேபியுடன் கூட்டுச் சேர்ந்து ஆட்சியை நடத்திக் கொண்டு இருப்பது நிதிஷ்குமாரை முதல்வராகக் கொண்ட அய்க்கிய ஜனதா தளம்.

மதச் சார்பற்ற கொள்கையில் நம்பிக்கை உள்ள ஒருவர்தான் பிரதமருக்கான வேட் பாளராக வரவேண்டும் என்று நிதிஷ்குமார் தொடர்ந்து கூறிக் கொண்டே வருகிறார்.
மோடி ஆட்சி மன்றக் குழு உறுப்பினராக நியமனம் செய்யப்பட்ட இந்த நேரத்தில்கூட, அய்க்கிய ஜனதா தளத்தின் பீகார் மாநில செய்தித் தொடர்பாளர் நீரஜ்குமார் அழுத்தம் திருத்தமாக தங்கள் கட்சியின் நிலைப்பாட்டை எடுத்துக் கூறியுள்ளார். மதச் சார்பற்றவரே பிரதமராக வேண்டும் என்று அழுத்திக் கூறி இருக்கிறார்.

மோடி பிரதமருக்கான வேட்பாளராக பிஜேபி யால் அறிவிக்கப்படும்பொழுது மதச் சார் பின்மையா? ஹிந்து ராஜ்யமா? என்ற கேள்வி இந்தியத் துணைக் கண்டத்தையே உலுக்கும்.

தந்தை பெரியார் அவர்களின் தத்துவத்தின் - கொள்கையின் அருமை அப்பொழுதுதான் புரியப் போகிறது - பொறுத்திருந்து பார்ப்போம்!

தமிழ் ஓவியா said...


சிந்திக்க முடிந்தது
எழுத்துரு அளவு Larger Font Smaller Font

புத்தர் அந்தக் காலத்திலேயே துணிந்து சொன்னார்; கடவுள் ஒன்று இல்லை; அது இருக்கவேண்டிய அவசியமுமில்லை என்று சொன்னார். கடவுள் இல்லை என்பதை உணர்ந்ததால்தான் புத்தரால் அறிவோடு சிந்திக்க முடிந்தது.
_ (விடுதலை, 23.1.1968)

தமிழ் ஓவியா said...


ஏப்ரல் 2: ஆட்டிசம் விழிப்புணர்வு தினம்


ஆட்டிசம் குழந்தைகள் பிறப்பு கடந்த 10 ஆண்டுகளில் அதிகரிப்பு

சென்னை, ஏப். 2- மனவளர்ச்சி... மூளை வளர்ச்சி குறைபாடுகளை போல, ஒரு விதமான வளர்ச்சி குறைபாட்டுடன் (ஆட்டிசம் பாதிப்பு) குழந்தைகள் பிறக்கின் றன. உலக அளவில் ஒவ்வொரு ஆண்டும் ஆட்டிசம் பாதிப்புடன் குழந்தைகள் பிறப்பது அதி கரித்து கொண்டே வருகிறது.

ஆட்டிசம் பாதிப்பு குழந் தைகளுக்காக 2007ஆம் ஆண்டு அய்நா ஒரு தீர்மானம் கொண்டு வந்தது. அதில், ஆட்டிசம் பாதிப் புடன் குழந்தைகள் பிறப்பதற் கான காரணத்தை கண்டுபிடிக்க வேண்டும். அதை தடுக்க ஆராய்ச்சி மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தியது. மேலும் ஏப்ரல் 2ஆம் தேதியை ஆட்டிசம் விழிப் புணர்வு தினமாக அறிவித்தது.

இதுக்குறித்து ராயப்பேட்டை ஸ்கோப் மறுவாழ்வு மைய இயக்குநர் பா.சுகுமார், வி.கேன் ஆட்டிசம் பள்ளி இயக்குநர் கீதா ஆகியோர் கூறியதாவது:

ஆட்டிசம் ஒரு நோயல்ல; வளர்ச்சி குறைபாடுதான். இது பிறவியிலேயே வரக்கூடியது. குழந்தைக்கு ஆட்டிசம் பாதிப்பு உள்ளதா என்பதை, அதன் பழக்க வழக்கம், நடவடிக்கையை வைத்து ஒன்றரை வயதிலேயே கண்டுபிடிக்கலாம். உலக அளவில் கடந்த 10 ஆண்டுகளில் ஆட்டிசம் பாதிப்புடன் பிறக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை 78 சதவீதமாக அதிகரித்துள்ளது. இதே நிலைதான் இந்தியாவிலும், தமிழகத்திலும் உள்ளது.

ஆட்டிசம் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு சிகிச்சை அளிக்க சென்னையில் மட்டும் 40, தமிழகம் முழுவதும் சுமார் 1,000 தனியார் கிளினிக்குகள் உள்ளன. இதேபோல தனியார் தொண்டு நிறுவனங்கள் ஆட்டி சம் பாதித்த குழந்தைகளுக்கு சிறப்பு பள்ளிகளை நடத்துகின்ற னர். ஆனால், அரசு மருத்துவ மனைகளில் தனியாக ஆட்டிசம் பாதிப்பிற்கு சிகிச்சை பிரிவு என்பதே இல்லை. ஆட்டிசம் பாதிப்பு குழந்தைகளுக்கு சிறப்பு பள்ளிகளையும் நடத்தவில்லை.

அதனால், அரசு மருத்துவ மனைகளில் ஆட்டிசம் பாதித்த குழந்தைகளுக்கு சிகிச்சை அளிக்க தனியாக ஒரு சிகிச்சை பிரிவை தொடங்க வேண்டும். அந்த பிரிவில், ஆக்குபேஷனல் தெரப்பிஸ்ட்டை நியமிக்க வேண்டும். அந்த குழந்தைகளுக்கு என்று சிறப்பு பள்ளிகளை அரசு நடத்த வேண்டும். ஆட்டிசம் பாதிப்பை குணப்படுத்த முடியாது. ஆனால் முறையாக பராம ரித்து மற்றும் சிகிச்சை அளித் தால், அந்த குழந்தைகள் 4 ஆண்டு களுக்குள் சாதாரண குழந்தைகள் போல மாற்றிவிடலாம்.
இவ்வாறு அவர்கள் தெரிவித் தனர்.

ஆட்டிசம் பாதித்த குழந்தை களை மாற்றுத்திறனாளிகள் பட் டியலில் சேர்த்து சிறப்பு அந் தஸ்து கொடுக்க வேண்டும். அந்த குழந்தைகளுக்கு அரசின் சலுகை கள் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. ஆட்டிசம் பாதித்த குழந்தைகளுக்கு மருந்து, மாத் திரைகள் மூலம் சிகிச்சை அளிக்க வேண்டியுள்ளது. தமிழகத்தில் தேவையான மருந்து, மாத்திரை கள் சென்னையில் மட்டுமே கிடைக்கிறது. மற்ற மாவட்டங் களில் சரியாக கிடைப்பதில்லை என்ற குற்றச்சாட்டும் உள்ளது.

அறிகுறிகள் என்ன?

ஆட்டிசம் குழந்தைகள் துரு துருவென இருப்பார்கள். ஆனால், பேச மாட்டார்கள். காது நன்றாக கேட்கும். கூப்பிட்டால் திரும்பி பார்க்க மாட்டார்கள். மற்ற குழந்தைகளுடன் பழக மாட்டார் கள். தனியாகவே இருப்பார்கள். கோபம் அதிகமாக வரும்.

ஆட் டிசம் ஆண் குழந்தைகளையே அதிகம் பாதிக்கிறது. ஆட்டிசம் குழந்தைகளுக்கு கூர்மை அதிகம். அவர்களை முறையாக பராம ரித்து, சிகிச்சை அளித்தால் மிகப் பெரிய அளவில் சாதனை புரிவார் கள். உலக அளவில் சாதனை படைத்தவர்களில் ஆட்டிசம் பாதிப்பு உள்ளவர்களே அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் ஓவியா said...


பெண்களின் தர்மம்...



சாத்திரச் சம்பிரதாயங்களில் பெண்களின் தர்மம் என்ன என்று பார்த்தால் நிபந்தனையற்ற அடிமையாக அடங்கி ஒடுங்கி வாழ்பவளே மோட்சத்திற்குப் போவாள் என்று கூறப்பட்டுள்ளது. - (விடுதலை,5.4.1961)

தமிழ் ஓவியா said...


ஏப்ரல் 5ஆம் தேதி மாலை தஞ்சையிலும், திருவாரூரிலும் திரளுவோம் தோழர்களே!


தமிழ் நாட்டு டெல்டா விவசாயிகளின் விவரிக்க முடியாத வேதனையைச் சுட்டிக்காட்டி தமிழர் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்கள் அறிக்கை ஒன்றினை வெளியிட்டார் (23.3.2013 விடுதலை).

தமிழ்நாடு அரசு நிவாரணம் அறிவித்தும் போதிய அளவு உரிய வகையில் போய்ச் சேரவில்லை என்ற உண்மையை அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டியும் இருந்தார். திராவிடர் கழகம், அதிமுக ஆட்சியின்மீது குறை சொல்வதற்காக இப்படி சொல்கிறது என்று குற்றம் கூறமுடியாது.

அ.இ.அ.தி.மு.க.வின் கூட்டணிக் கட்சியான இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்டு)யின் சட்டப் பேரவை உறுப்பினரான தோழர் கே.பாலகிருஷ் ணன் அவர்கள் சட்டப் பேரவையிலேயே இதனைச் சுட்டிக்காட்டியுள்ளார்.

வறட்சியால் பாதிக்கப்பட்ட காவிரி டெல்டா மாவட்டங்களில் வறட்சி நிவாரணம் வழங்குவதில் ஏற்பட்டுள்ள பாரபட்சம் குறித்தும் விசாரணை நடத்தி, பாதிக்கப்பட்ட அனைத்து விவசாயிகளுக் கும் நிவாரணம் வழங்க வேண்டும் என்றும், குத்தகை விவசாயிகளின் குத்தகைப் பாக்கிகளைத் தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும் சட்டப்பேரவை யிலேயே பேசியுள்ளார் (தீக்கதிர், 26.3.2013 பக்கம் 5).

25.3.2013 அன்று சென்னையில் நடைபெற்ற தி.மு.க. தலைமைச் செயற்குழு கூட்டத்தின் தீர்மானத்தில்கூட (எண் - 9) கீழ்க்கண்ட கருத்து சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

காவிரித் தண்ணீரை உரிய நேரத்தில் தேவையான அளவிற்கு ஜெயலலிதா பெற்றுத்தராத காரணத்தால் டெல்டா மாவட்டங்களில் குறுவைப் பயிரும், சம்பா சாகுபடியும் பெருமளவிற்குப் பொய்த்துப் போய் 17 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டு இறந்த பிறகும், ஜெயலலிதா அறிவித்த ஏக்கருக்கு 15 ஆயிரம் ரூபாய் நிவாரணம் கூட இன்னும் விவசாயிகளுக்கு முழுமையாய்ப் போய்ச் சேரவில்லை என்று அந்தத் தீர்மானத்தில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.

கழகத் தலைவர் அவர்கள் பயிர்களைக் கண்டு மனமுடைந்த ஏழை விவசாயிகள் தற்கொலை செய்து கொண்ட விவரத்தை உயர்நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு சுட்டிக்காட்டியிருக்க வேண்டும்; மறைக்கத் தேவையில்லை.

நீர்த் தட்டுப்பாட்டால் விவசாயம் பொய்த்து டெல்டா மக்கள் தற்கொலை செய்து கொண்டுள்ள னர் என்று எடுத்துக் கூறியிருந்தால் மேலும் பலன் கிடைத்திருக்கும் என்று கழகத் தலைவர் தம் அறிக்கையில் குறிப்பிட்டு இருந்தார்.

காவிரி நீர்ப் பிரச்சினையில் பெரும் வெற்றி பெற்று விட்டதாகக் கூறி முதல் அமைச்சருக்கு மிகப் பெரிய அளவில் விழா எடுக்கப்பட்டது. பாராட்டட்டும் - அதில் நமக்கொன்றும் வருத்தம் கிடையாது.

அந்த விழாவிலே விவசாயிகளுக்காக சில அறிவிப்புகளை ஏழை விவசாயிகள் எதிர்பார்த் தனரே - ஆரவாரத்தோடு விழா முடிந்ததே தவிர, விவசாயியின் வறுமைப் பாம்பு கடிக்கு மருந்து இல்லையே!

அதிமுகவின் முக்கிய தோழமைக் கட்சியான சி.பி.அய்.யின் விவசாய சங்கத் தலைவர் தோழர் முகுந்தன் விடுத்த வேண்டுகோள் விழாவுக்கு முன் ஜனசக்தியில் வெளிவந்ததே - விழா வெளிச்சத்தில் இந்தக் கோரிக்கைகள் மறைந்து போயிற்றே என்பதுதான் நமது வேதனை.

சரி - நிதிநிலை அறிக்கையிலாவது மின்னல் தெரிந்ததா? வெறும் அம்மா பாட்டு இருந்ததே தவிர டெல்டா விவசாயிகளின், அம் மாபெரும் கஷ்டத் துக்கு வடிகால் கிடைக்கவில்லையே.

நடுவர் மன்றத் தீர்ப்பு கெசட்டில் வெளியிடப்பட்டு விட்டதாம். இந்தப் பிரச்சினையில் எல்லாம் முடிந்து பட்டாபிஷேகம் சூட்டப்பட்டு விட்டதாக வாண வேடிக்கை விட்டோமானால் நாம் ஏமாந்தவர்கள் ஆவோம்.

இதற்கு முன்புகூட இப்படி நடந்ததுண்டு; நாளை என்ன என்பதுதான் முக்கியம்.

அடுத்த கட்ட நடவடிக்கை இதில் என்ன என்பதுதான் முக்கியம்.

அதனைச் செய்விக்க மத்திய அரசை வற்புறுத் திட வேண்டும்.

உச்சநீதிமன்ற தீர்ப்பையும், நடுவர் மன்ற தீர்ப்பையும் கூட குப்பைக் கூடையில் வீசி எறிந்தது கருநாடகம் என்பதை மறந்து விடக்கூடாது.

மேலும் விவசாயம் பஞ்சமர், சூத்திரர்களுக்கான பாவப்பட்ட தொழிலாயிற்றே - (மனுதர்மம் பாவத் தொழில் என்றே கூறுகிறது). அதனால்தான இத் தனை வேதனைகள் - சோதனைகள். விழிப்புணர்வு தேவைப்படும் காலகட்டத்தில்தான் நாம் இருக் கிறோம் என்பதை நம் கழகத் தலைவர் சுட்டிக்காட்டி இருந்தார் (விடுதலை, 22.2.2013).

இவற்றையெல்லாம் வலியுறுத்திடவே வரும் 5ஆம் தேதி மாலை தஞ்சையிலும், திருவாரூரிலும் திராவிடர் கழகத்தின் சார்பில் திராவிடர் விவசாய தொழிலாளர் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம்! ஆர்ப்பாட்டம்!!

விவசாயப் பெருங்குடி மக்களே!

கட்சி - அரசியல் கண்ணோட்டம் கிஞ்சிற்றும் இல்லாத தமிழ்நாட்டின் உரிமை இயக்கமாம் திராவிடர் கழகம் குரல் கொடுக்கிறது.

பதவிப்பக்கம் செல்லாப் பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் அவர்கள் கண்ட இயக்கத்தை வழி நடத்தும் தமிழர் தலைவர் வேண்டுகோளை முன்வைத்துள்ளார்.

திரண்டு வருக - திறனைக் காட்டுக!

மாநில அரசின் காதுகளையும்

மத்திய அரசின் காதுகளையும்

கேட்க வைப்போம் - வாரீர்! வாரீர்!!

- கருஞ்சட்டை -

தமிழ் ஓவியா said...


எப்போதும் கற்போம்! எவரிடமிருந்தும் கற்போம்!!


கற்றுக் கொள்வது என்பதற்கு இதற்குமுன் நம்மில் பலரும் ஒரு குறுகிய பொருளில்தான் புரிந்து கொண்டோம். ஆனால் பகுத்தறிவைப் பயன்படுத்தி யோசித்துப் பார்த்தால், அதற்கு விரிவான விளக்கம் உண்டு.

கற்றுத் தருவோர் எவராயினும் அவர் நமக்கு ஆசிரியர்களே; குரு தான்!

பள்ளிக்கூடம், கல்லூரி, பல்கலைக் கழகம் என்றுதான் அவர்கள் இருப் பார்கள் என்பதில்லை.

இப்போதெல்லாம் நம் வீடுகளி லேயே ஏராளமாக அவர்கள் இருக் கிறார்கள்! யார் அவர்கள்?

அவர்கள்தான் நமது பேரர்களும், கொள்ளுப் பேரர்களும், பேத்திகளும், கொள்ளுப் பேத்திகளும்!

இந்த குமர குருபரர்களுக்குத் தெரிந்த பல்வேறு தொழில் நுட்பச் செய்திகள் - டெக்னாலாஜிக்கல் (Technological) நுட்பங்கள் வயது முதிர்ந்த, குடும்பத் தலைவர் என்ற வெறும் பழம் பெருமையிலேயே காலத்தை ஓட்டிக் கொண்டிருக்கிற நம்மில் பலருக்குத் தெரியாது; நாம் அவர்களிடமிருந்து தெரிந்து கொள்ள வேண்டியது மிகப் பெரும் அளவு ஆகும்!

கற்றல் என்பதற்கு வயது இடை வெளி கிடையாது; கூடாது; கூடவே கூடாது! கற்பித்தவர்கள் யார் என்பது பற்றியும் - அய்யோ என்னுடைய பெயர னிடம் இருந்தா மெத்தப் படித்த மோதாவி யாகிய நாம் கற்றுக் கொள்வது என்ற கர்வம் நம்மில் யாருக்கும் தேவையே யில்லை!

யார் யார் வாய் கேட்பினும் அப் பொருள் அறிவதுதான் நம் காலத்திற் கேற்ப பெரும் அரிய தகவல் தொழில் நுட்பம் அடங்கிய கல்வி; காரணம் தற்போதுள்ள யுகத்திற்குப் பெயரே அறிவு யுகத்தின் வெடிப்புகள் - வெளிச்சங்கள்! Knowledge Explosion - “Information Age”

தொலைக்காட்சிப் பெட்டிகள் இல்லாத இல்லங்களே பெரிதும் நம் நாட்டில் இல்லை எனலாம்.

அதுபோலவே கைத் தொலைபேசி - செல்போன் கையில் இல்லாத மனிதர் களும் வெகு அபூர்வம்.

வேலை செய்யும் பணிப் பெண்கள், கீரை விற்கும் கீர்த்தியம்மாள் முதல் சித்தாளு, கொத்தாளராக இருக்கிற தாய்மார்கள் உட்பட கைத் தொலை பேசியையே பெரிதும் பயன்படுத்துகிறார்கள்!

இது ஒருவகையான அறிவு வளர்ச்சி. கல்வியும்கூட! அமைச்சர் ராசாவின் அரிய பணி, இந்தக் கருவி சாமான்யர் களும் பயன்படுத்தும் - சகல கலா ஆயுதமாக்கி விட்டது!

ஆனால் இதை தொழில் நுட்ப வசதிகளோடு பயன்படுத்த பெரிதும் நாம் யாரிடம் கற்றுக் கொள்கிறோம்?

நம் வீட்டுப் பேரப் பிள்ளைகளிடம் தானே!

7,8 வயது குழந்தை 70, 80, வயது தாத்தாவுக்கும், பாட்டிக்கும் குமரகுருக் களாகி, போதித்துச் சொல்லிக் கொடுக் கின்ற ஆசான்களாகி விடுகிறார்கள்!

அங்கிங்கெனாதபடி எங்கும் இதே நிலைதான்! அதற்காக நாம் வெட்கப் படுகிறோமா?

இல்லையே!

அறிவும் தகவலும் எங்கிருந்து எவரிடமிருந்து, வயது வித்தியாசம் இல் லாமல் கற்றுக் கொண்டு, கடைப் பிடிக்கிறோமா இல்லையா? எனவேதான், இந்த வாழ்க்கைக் கல்விக்கு வாத்தியார்கள் நம் இளை யர்கள் - குழந்தைகள்தானே!

எனவே கற்றலுக்கும், கற்பித்தலுக்கும் வயது இடைவெளி ஒரு பொருட்டே அல்ல.
அது மட்டுமல்ல பெரிய மேதை, படிப்பாளிகள் என்பவர்களுக்குச் சட் டென்று விளங்காத செய்திகள் - சாதாரணமான பட்டறிவு உள்ளவர் களுக்கு பளிச்சென்று விளங்கி விடு கிறதே!

புவி ஈர்ப்பு பற்றிக் (Laws of Gravitation) கண்டுபிடித்த சர். அய்சக் நியூட்டன் என்ற பெரிய விஞ்ஞானி பற்றி ஒரு கதை உண்டு. (இதைப் பல விஞ்ஞானிகளின் பேர்களிலும் மாற்றி மாற்றிச் சொல்லி வருவதும் உண்டு)

தன் ஆய்வுக் கூடத்தில் ஒரு பூனை இருந்ததற்கு - தொல்லை செய்யாமல் போக அவரது அறைக் கதவில் ஒரு ஓட்டை போடச் சொல்லி தன் பணியா ளரிடம் கூறி அவரும் அதேபோல் செய்து கொடுத்தார்.

சில காலம் கழித்து அந்த பூனை குட்டிகளைப் போட்டது. விஞ்ஞானி சொன்னார்: பூனைக்குட்டிகள் போய் வர பக்கத்திலேயே கதவுகளில் ஓட்டைகளைப் போடுங்கள் என்று, அதை செய்யுமுன் பணியாளர் சிரித் தாராம்! ஏன் சிரிக்கிறாய்? என்று கேட்டார் விஞ்ஞானி!

அதற்குப் பணியாளர், அய்யா பூனை போகும் ஓட்டை மூலமே, குட்டிகளும் போகலாமே, அதற்கென ஏன் தனியே ஓட்டை போட வேண்டும் என்று கேட்ட பிறகு அக்கேள்வியில் உள்ள பகுத் தறிவு வெளிச்சமும், இவரது சிந்தனை யில் இருந்த இருட்டும் இவருக்குப் புலப்பட்டதாம்!

அதுபோல நாம் எவரிடமிருந்தும் கற்றுக் கொள்ள எப்போதும் ஆயத்த மாக இருப்பதே அறிவு வழி! வளர்ச்சிப் பாதையாகும்!
-----------கி.வீரமணி -வாழ்வியல் சிந்தனைகள் -4-4-2013