Search This Blog

19.5.12

சமுதாயக் குறைகளை நீக்குவதே நமது பணி-பெரியார்

அடுத்து தந்தை பெரியார் அவர்கள் இறுதியாகப் பேசுகையில் குறிப்பிட்டதாவது:-

நமது கழகம் 40 ஆண்டுகளாக தொண்டாற்றி வருவது வீண் போகவில்லை. மக்களுக்கு ஓரளவுக்காவது உணர்ச்சியை ஊட்டியுள்ளது என்பதை கண்டு மகிழ்ச்சி அடைகின்றேன். இப்படிப்பட்ட உள்கிராமங்களிலும்கூட நல்லவண்ணம் நமது கொள்கை பரவி இருப்பதைக் காணப் பெருமைப்படு கின்றேன்.

தமது கொள்கையினை தெளிவாக உணர்ந்து இந்த ஊர் ஊராட்சி மன்றத்தார் தங்கள் வரவேற்பில் குறிப்பிட்டு இருக்கின்றார்கள்.

அவர்களுக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்ளுகின்றேன். நாங்கள் சட்டசபைக்குப் போகின்றவரும் அல்ல, மந்திரி வேலைக்குப் போக விரும்புகின்றவரும் அல்ல. சமுதாயக் குறைபாடுகளுக்கு உண்மையாகவே பரிகாரம் காண பாடுபடுகின்றோம்.

மக்களை பகுத்தறிவுவாதிகளாக ஆக்கும் வண்ணமாக உள்ள சாதனம், சொத்துக்கள் தான் நாங்கள் வெளியிட்டுள்ள புத்தகங்கள் ஆகும்,

இந்த நாடு தமிழ்நாடு. நாம் தமிழர்கள். 100-க்கு 90 பேர்கள் தமிழர்களாகவே உள்ளோம். உடலுழைப்புச் செய்கின்ற மக்கள் நாம்தான். யாரும் மறுக்க முடியாது. பார்ப்பான் ஏர் உழுதலே பாவம் என்று எழுதி வைத்துக் கொண்டுள் ளான்.

இப்படி மக்களுக்குத் தேவையான தொழில் செய்யக் கூடிய நமக்குக் கிடைத்த பலன் என்ன? என்றால் நாம்; இழிமக்கள், சூத்திரர்கள், நம் பெண்கள் சூத்திரச்சிகள், பார்ப்பானுக்கு வைப்பாட்டியாக இருக்க வேண்டியவர்கள் என்று எழுதி வைத்துக் கொண்டுள்ளார்கள்.

மேலும் பார்ப்பான் மனு நீதியில் எழுதியுள்ளான். சூத்திரனுக்கு எதைக் கொடுத்தாலும் அறிவு ஏற்படும்படி கல்வி மட்டும் கொடுக்கக் கூடாது என்று எழுதி வைத்துள்ளான்.

இதன் காரணமாக நாம் வளர்ச்சி அடையவே இல்லை. காட்டுமிராண்டியாக இருந்த வெள்ளையன் இன்றைக்கு அறிவு பெற்று புதிய உலகத்தையே உண்டு பண்ணத்தக்க பெரிய அறிவாளிகளாக ஆகி விட்டார்கள். ஒரு மணிக்கு 10,000 மைல் பறக்கும்படியாக இன்று முன்னேற்றம் அடைந்துள்ளார்கள்.

ஆனால், நாம் அப்படி இருந்தோம், இப்படி இருந்தோம் என்று எழுதிக் கொண்டு பெருமை பேசும் நாமோ உலகிலேயே இன்றைய தினம் சுத்த காட்டுமிராண்டிகளாக உள்ளோம். நம்மை இந்த நிலைக்குக் கொண்டு வரக் காரணமாக இருப்பது நாம் கைக்கொண்டு உள்ள காட்டுமிராண்டி மதமும், கடவுளும், சாஸ்திரங்களுமே யாகும். இவற்றைக் கட்டிக் கொண்டு அழும் வரைக்கும் நாம் உருப்படியாக முடியாது என்று எடுத்துரைத்தார்.

மேலும், கடவுள், மதம், சாஸ்திரங்கள் ஒழிக்கப்பட வேண்டிய அவசியம் பற்றியும் தெளிவுபடுத்திப் பேசினார்.


------------------தந்தைபெரியார் -”விடுதலை” 9.11.1963

3 comments:

தமிழ் ஓவியா said...

60 வயதான நாடாளுமன்றத்தின் வரலாறு


ஆங்கிலேய ஆட்சியின் கீழ் இருந்த நமது இந்திய நாடு, 1947 ஆம் ஆண்டு, ஆகஸ்ட் 15 ஆம் தேதி விடுதலை அடைந்ததாக அறிவிக்கப்பட்டது.

பின்னர் ஆட்சி அதிகாரம் நமக்கு முழுமையாக கிடைத்தது.

இதனை அடுத்து, அரசியல் அமைப்புச் சட்டம் இயற்றும் பணி 1949-ல் நிறைவடைந்து, இந்தியா குடியரசு அந்தஸ்தைப் பெற்றது.

1950 ஆம் ஆண்டு, ஜனவரி 26ம் தேதி, இந்தியா குடியரசு ஆனது என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

அன்றே டாக்டர் ராஜேந்திர பிரசாத் இந்தியாவின் முதல் குடியரசுத் தலைவராகப் பெறுப்பேற்றார்.

முதல் பொதுத் தேர்தல் 1952 இல் நடைபெற்றது.

அரசியல் அமைப்புச் சட்டப் படி, நமது நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் வடிவமைக்கப்பட்டு, அவற்றிற்கான அதிகாரங்கள் வரையறுக்கப்பட்டன.

இதனைத் தெடர்ந்து இந்த இரு அவைகளின் முதல் கூட்டம் 1952 ஆம் ஆண்டு, மே 13 ஆம் தேதி நடைபெற்றது.

இரு அவைகளின் முதல் கூட்டம் தெடங்கி 60 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளதை குறிக்கும் வகையிலேயே இன்று சிறப்பு நிகழ்ச்சிகள் ஏற்பாடாகி இருக்கிறது.
அன்றும் இன்றும்

1952-ஆம் ஆண்டு கூடிய முதல் மக்களவைக் கூட்டத்தொடரில் மணிப்பூர் தொகுதியில் இருந்து சோஷலிச கட்சியின் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்று ரிஷாங்க் கெய்சிங் நாடாளுமன்ற உறுப்பினரானார். தற்போது 92 வயதில் காங்கிரஸ் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினராக செயலாற்றி வருகிறார்.

இவரைப் போல் உள்ள மற்றொரு உறுப்பினர் ரேஷம் லால் ஜாங்டே. காங்கிரஸ் கட்சி சார்பில் முதலாவது, இரண்டாவது மக்களவையில் அவர் உறுப்பினராக இருந்தார்.மத்தியப் பிரதேச மாநிலம் ராய்ப்பூரில் தனது மகன் ஹேம் சந்திராயுடன் வசித்து வருகிறார்.

நாடாளுமன்றம் தொடங்கிய போது உயர்நிலைக் கல்வி தகுதி கூட இல்லாமல் உறுப்பினர்கள் ஆனவர்கள் 3 விழுக்காட்டினர். இன்று 23 விழுக்காடு உறுப்பினர் கள் உயர்நிலைக்கல்வி கற்றவர்கள்.

1958ஆம் ஆண்டில் 58 விழுக் காடு உறுப்பினர்கள் பட்டப் படிப்பு படித்தவர்கள். இன்று அது 79 ஆக உயர்ந்துள்ளது.

முதலாவது மக்களவையில் 70 வயதைக் கடந்த உறுப்பினர்கள் யாரும் இல்லை. இன்று உறுப் பினர்களில் ஏழு விழுக்காட்டினர் 70 வயதைக் கடந்தவர்கள்.

முதலாவது மக்களவையில் ஐந்து விழுக்காடு பெண் உறுப் பினர்கள் இருந்தனர். இன்று 11 விழுக்காடு பெண் உறுப்பினர்கள் உள்ளனர்.

முதலாவது மக்களவையில் சராசரியாக ஆண்டுக்கு 72 சட்டங்கள் நிறைவேற்றப்பட்டன.

1976-ம் ஆண்டில் அதிக பட்சமாக 118 மசோதாக்களும் 2004-ம் ஆண்டில் குறைந்தபட்ச மாக 18 மசோதாக்கள் நிறை வேற்றப்பட்டன.

நாடாளுமன்றத்தில் அமைச்சர்களல்லாத எம்.பி.க்கள் மசோதாவைக் கொண்டு வந்தால் அது "தனி நபர் மசோதா' என்று அழைக்கப்படும். அந்த வகையில் நாடாளுமன்றம் தொடங்கியது முதல் இதுவரை 14 தனி நபர் மசோதாக்கள் மட்டுமே நிறை வேற்றப்பட்டுள்ளன. அதிகபட்சமாக 1956-ஆம் ஆண்டில் ஆறு மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன.
1970-ஆம் ஆண்டுக்குப் பிறகு ஒரு தனி நபர் மசோதா கூட நிறை வேற்றப்படவில்லை.

மக்களவைத் தலைவராக சோம்நாத் சாட்டர்ஜி இருந்த போது, நாடாளுமன்ற கட்டமைப்பை விவரிக்கும் வகையில் நாடாளு மன்ற அருங்காட்சியகம் அமைக் கப்பட்டது. அதைக் காண வரும் பொது மக்களின் வருகை ஆண்டு தோறும் அதிகரித்து வருகிறது.

தமிழகத்தைச் சேர்ந்த அனந்தசயனம் ஐயங்கார் மக்கள வையின் முதல் துணைத்தலை வராவார்.

தமிழகத்தைச் சேர்ந்த முரசொலி மாறன் 36 ஆண்டுகள் நாடாளுமன்றத்தின் இரு அவை களிலும் உறுப்பினராக இருந்தவர்

1984-ம் ஆண்டில் 8-வது மக்களவைக்கு வந்த அதிமுகவின் தம்பிதுரை. அடுத்த ஆண்டே மக்களவைத் துணை தலைவர் பொறுப்பையும் வகித்தார்.தகவல்: tamil.webdunia.com

தமிழ் ஓவியா said...

தற்கொலைகள்!


இந்தியத் துணைக் கண்டத்தில் ஆண்டு ஒன்றுக்குத் தற்கொலை செய்து கொண்டவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்தைத் தாண்டிக் குதிக்கிறது. மன அழுத்தத்தால் பாதிக்கப்படும் மாணவர்கள் 20 விழுக்காடு.

2009இல் தமிழ்நாட்டில் தற்கொலை செய்து கொண்ட மாணவர்கள் 223.

பொதுவாக இந்தத் தற்கொலை முடிவுக்குக் காரணங்கள் என்னென்ன?

காதல் தோல்வி 54%

இனம் தெரியாத வேதனை 26%

தாழ்வு மனப்பான்மையால் ஆங்கிலம் தெரியாமையால் 15%

உடன் மாணவர்களால் புறக்கணிக்கப்படுவதால் 3%

கேலிக் கொடுமையால் (ரேக்கிங்) 2% இப்படியாகக் காரணங்கள் சொல்லப்படுகின்றன. இவற்றைக் களைவதற்கு அரசு அளவிலோ, கல்வி நிறுவனங்களோ மேற்கொள்ள வேண்டிய திட்டங்கள் குறித்து ஆலோசிக்க வேண்டாமா?

கல்வியாளர்களை அழைத்து அவர்களின் கருத்துக் களைக் கேட்க வேண்டாமா? ஓர் உயிர் கோழைத் தனமாக இழக்கப்படுவது குறித்து கவலைப்பட வேண்டாமா?

போவது ஓர் உயிர் என்றாலும்; அதனால் பாதிக்கப்படுவது ஒரு குடும்பம் ஆயிற்றே!

நம் நாட்டுக் கல்வி முறை மாணவர்களை வயிற்றுப் பிழைப்புக்கான லைசென்ஸ்தாரராகத் தயாரிக் கின்றனவே தவிர துணிச்சல், தன்னம்பிக்கை, புதியன கண்டுபிடிக்கும் ஆர்வம் இவற்றை நோக்கிக் கொண்டு செலுத்தப்படுவதில்லையே!

மனப்பாடம் செய்து வாந்தி எடுத்து மதிப்பெண் பெற்றால் போதும் என்ற நிலை ஆரோக்கியமானது தானா?

சென்னை அண்ணா பல்கலைக் கழகத்தில் பொறியியலுக்குப் படித்த (civil) விழுப்புரம் - கருவேப்பிலைப் பாளையத்தைச்சேர்ந்த தைரியலட்சுமி என்ற மாணவி விடுதியில் தூக்கு மாட்டிக் கொண்டு மரணத்தை அழைத்துக் கொண்டு விட்டார் என்ற செய்தி எத்தகைய அதிர்ச்சிக்குரியது!

தமிழ் வழியில் படித்துக் கொண்டிருந்த அந்த மாணவி பொறியியல் கல்லூரி முதலாமாண்டு தேர்வில் தோல்வி களைக் கண்ட நிலையில் (போதிய மதிப்பெண்கள் பெறவில்லை) இந்த முடிவை மேற்கொண்டுள்ளார்.

முதல் தலைமுறையாக பெரிய நகரங்களுக்கு வந்து படிக்கும் கிராமப்புற இருபால் மாணவர்களுக்கென்று தனிக் கவனம் தேவை என்பதை இந்த மரணம் உணர்த்தவில்லையா?

பன்னிரெண்டாம் வகுப்பு வரை தாய் மொழியைப் பயிற்று மொழியாகக் கொண்டு படித்தவர்கள் திடீரென்று தொழில் நுட்பம் தொடர்பான படிப்பினைப் படிக்கும்பொழுது திணறும் ஒரு நிலை ஏற்பட்டதாகவே கருதப்பட வேண்டும்.

மேனிலைப் பள்ளி வரை தமிழ் பயிற்று மொழி; கல்லூரிகளில் ஆங்கில வழிப் பயிற்று மொழி என்கிற நிலைப்பாடுகளும் இருந்து வருகின்றன. தமிழில் படித்தவர்கள் மேல்படிப்புக்கு வரும் பொழுது, அதற்கான ஏற்பாடுகள் இருக்க வேண்டாமா?

இன்னும் நம் நாட்டில் தலைமுறை தலைமுறையாகப் படித்த குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்கும் முதல் தலைமுறையாகப் படிப்போருக்கும் இடையில் உள்ள ஏற்றத் தாழ்வை முக்கியமாகக் கவனிக்க வேண்டும்.

சமூக நீதி என்ற பெயரால் இடஒதுக்கீடு ஏன் என்று கேட்பவர்கள் இந்த இடத்தில் கவனம் செலுத்த வேண்டும். குடும்பச் சூழல், சுற்றுச் சூழல் வளமாக, வாய்ப்பாக இல்லாதவர்கள் மேல் படிப்புக்கு வரும்பொழுது ஏற்படும் இந்தச் சிக்கலுக்குப் பரிகாரம் என்ன?

பெயர் தைரிய லட்சுமி! செயலோ கோழை லட்சுமியாக அல்லவா செயல்பட்டுள்ளார். 2011ஆம் ஆண்டில் மட்டும் 84 மாணவ மாணவியரும் 2012 சனவரி முதல் இதுவரை 15 மாணவ - மாணவிகளும் தற்கொலை செய்து கொண்டுள்ளனர் என்றால் - இதற்குக் காரணம் நம் கல்வி முறையில் இருக்கும் குறைபாடா? சமூகத்தில் நிலவும் ஏற்றத் தாழ்வுகளின் பின்னணியா?

ஒவ்வொரு கல்வி நிறுவனத்திலும் இருபால் மாணவர்களுக்கும் கவுன்சிலிங் நடத்திட ஏற்பாடு செய்யப்பட வேண்டும்.

குறிப்பாக கிராமப் பகுதிகளில் இருந்து வரும் ஒடுக்கப்பட்ட இருபால் மாணவர்களை அணுக்கமாகக் கண்காணித்துத் தக்க நேரத்தில் உரியது செய்யப்பட வேண்டும்.

மாணவர்களின் தற்கொலையை சாதாரணமாக எடுத்துக் கொள்ளக் கூடாது! அரசும், கல்வித் துறையும் சிந்திக்குமாக! 19-5-2012

தமிழ் ஓவியா said...

சுயமரியாதை இயக்க நிர்வாக சபை அங்கத்தினர்கள்


கீழ்கண்டவர்கள் முதலாவது சுயமரியாதை மகாநாட்டில் தெரிந்தெடுக்கப் பெற்றார்கள்:-

1. தலைவர்:- டப்ளியூ. பி.ஏ.சவுந்திரபாண்டியன் எம்.எல்.ஸி, (ராமநாதபுரம் ஜில்லா போர்ட் தலைவர்) 2. உபதலைவர்கள்:- ஈ.வெ.ராமசாமி, 3. ராவ்பகதூர் ஏ.டி.பன்னீர்செல்வம் (பாரிஸ்டர், தஞ்சை ஜில்லா போர்ட் தலைவர்) 4. காரியதரிசி:- எஸ்.ராமநாதன் எம்.ஏ.பி.எல். ஈரோடு 5. பொக்கிஷதார்:-

வைசு.சண்முகம், காரைக்குடி 6. அங்கத்தினர்கள்:-

ராவ்பகதூர் எம்.கிருஷ்ணசாமி பி.ஏ. 7. ராவ்பகதூர் சி.எஸ்.இரத்தினசபாபதி எம்.எல்.சி. 8. ஆர்.கே.சண்முகம் பி.ஏ.பி.எல்., எம்.எல்.ஏ., 9. வி.பி.காயாரோகணம், நாகை 10. ஆர்.சின்னையா, மாயவரம் 11. ஜே.எஸ்.கண்ணப்பர் திராவிடன் பத்திராபதிபர் 12. வி.கனகசபை, பொறையார் 13. பிச்சப்பா சுப்பிரமணியம் (அமராவதிப்புத்தூர்) காரைக்குடி 14. கி.அ.பெ.விஸ்வநாதன், திருச்சி 15. ஆரியா எம்.ஏ., சென்னை 16. சிவராஜ் பி.ஏ., பி.எல்., எம்.எல்.சி.

- திராவிடன் சென்னை 20.02.1929, தகவல்: முனைவர் பு.இராசதுரை

.