Search This Blog

23.5.12

நாம் காட்டுமிராண்டியா?காட்டுமிராண்டி நாடாக இருக்கக் காரணம் என்ன?-பெரியார்


பேரன்புமிக்க தலைவர் அவர்களே, தாய்மார்களே, தோழர்களே! இந்தக் கூட்டம் திராவிடர் கழகத்தின் சார்பாக கூட்டப்பட்ட கூட்டமாகும்.

திராவிடர் கழகம் சட்டசபைக்கு நிற்பது அல்ல; கழகத்தின் பேரால் பொதுத் தொண்டால் வயிறு வளர்க்கும் ஸ்தாபனமும் அல்ல; பொதுமக்களுக்கு அறிவுப் பிரச்சாரம் செய்து வரும் இயக்கம் அறிவுறுத்த இவன் யார் என்று எண்ணலாம். நான் மக்களுக்கு அறிவுறுத்துவது எனது கடமையாகக் கொண்டவன்.

நமது மக்களுக்கு எந்தவிதமான குறையும் இல்லாத இயற்கை அமைப்பைக் கொண்ட நாடாகும், நமது நாடு. இப்படிப்பட்ட நாடு மற்ற நாட்டோடு ஒப்பிட்டுப் பார்க்கும்போது காட்டுமிராண்டி நாடாக இருக்கக் காரணம் என்ன?

நாம் காட்டுமிராண்டியா என்ற அய்யம் பலருக்குப் பிறக்கும். சந்தேகம் இல்லாமல் நாம் காட்டு மிராண்டிகள்தான். இதை மெய்ப்பிக்க வேண்டுமானால், உலகில் எந்த நாட்டிலும் இல்லாத ஜாதி நம் நாட்டில்தானே உள்ளது? கழுதை, நாய் இவற்றிடம் கூட இல்லாத ஜாதி நம்மிடையே தான் உள்ளது.

அடுத்து நாம் காட்டுமிராண்டிகள் என்பதற்கு நமக்கு இருக்கின்ற மாதிரி கடவுள்கள் உலகில் வேறு எங்காவது உண்டா? எத்தனை கடவுள்? எவ்வளவு ஒழுக்கம், நாணயம் அற்றதுகள் எல்லாம் கடவுள்கள்? எவ்வளவு மடத்தனம்?

எனவே, இப்படிப்பட்ட ஜாதி, கடவுள் இவற்றைக் கட்டிக் கொண்டு அழுவது எவ்வளவு மகாமகா காட்டுமிராண்டித்தனம், நீங்கள் சிந்திக்க வேண்டும். நம் கடவுளோடு மட்டும் நிற்காதீர்கள். நமது மதம் எவ்வளவு முட்டாள்தனமான மதம்? மதம் என்றால் நாமம், சாம்பல் அடித்துக் கொள்ளத் தெரியும். இந்து மதம் என்றால் என்ன என்று எவனுக்காவது தெரியுமா?

இதுதான் நம் மதம், இதனை நாம் ஏற்றுக் கொண்டு இதன் பேரால் கீழ் ஜாதியாகவே உள்ளோம்.

அடுத்து நமது சாஸ்திரங்கள், நமக்கு இருக்கும் காட்டு மிராண்டி சாஸ்திரங்கள், புராணங்கள் உலகில் வேறு எங்காவது உண்டா?

பெண் ரொம்ப அழகுதான். 32 லட்சணத்தில் 30 இருக்கின்றது. மூக்கும், கண்ணும் இல்லாவிட்டால் என்ன பிரயோசனம்? அதுபோலத்தான் இவை ஆகும்.

இன்னும் சொல்லுகின்றேன், இந்த நாட்டில் உள்ள இத்தனைக் கோவில்கள் உலகில் எந்த நாட்டிலாவது உண்டா? இதன்பேரால் நடக்கின்ற மடத்தனம் உலகில் எங்காவது உண்டா? ஒவ்வொரு கோவிலிலும் 50 லட்சம்; 80 லட்சம்; கோடி இப்படிப் போட்டாலும் கட்ட முடியாது. இவைகளால் ஒரு காதொடிந்த ஊசி நன்மையாவது உண்டா?

தோழர்களே, நான் முன் கூறியதுபோல நமது நாடு எல்லா வளப்பமும் பொருந்திய இயற்கை அமைப்புடையது. ஆனால், அறிவு மட்டும்தான் குறைவாக உள்ளது. இதனை எடுத்துக் காட்டி பிரச்சாரம் செய்வதுதான் எங்கள் தொண்டாகும். நான் இன்று நேற்று செய்யவில்லை. காங்கிரசை விட்டு வெளிவந்த 30, 35 வருஷத்திய தொண்டு இதுதான். நம்மை மடையர்களாக காட்டுமிராண்டிகளாக ஆக்கி வைத்துள்ள இந்தக் கடவுள், மதம், சாஸ்திரம், ஜாதி இவற்றை எல்லாம் எதிர்த்துப் போராடுகின்றேன். 1926-இல் குடிஅரசுவில் என்ன கொள்கைகளை வைத்து எழுதினேனோ அதே கொள்கைப்படிதான் இன்றும் பாடுபடுகின்றேன். கொஞ்சங்கூட மாற்றிக் கொள்ளவில்லை.

இந்த நாட்டில் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக இப்படிப்பட்ட கேடானவைகளைப் பற்றி எடுத்துச் சொல்லி மாற்றவும், அறிவுப் பிரச்சாரம் செய்யவும் எவருமே முன்வரவில்லை. 2,500 ஆண்டுகளுக்கு முன் புத்தர் தோன்றி அறிவுப் பிரச்சாரம் செய்தார். அவருக்குப் பிறகு அவரது மார்க்கமும், அவரைப் பின்பற்றியவர்களும் பார்ப்பனரால் ஒழிக்கப்பட்டு விட்டனர்.

அப்படி அறிவுப் பிரச்சாரம் செய்த புத்தனையும், சமணனையும் ஒழித்துக்கட்ட தலைசிறந்து விளங்கியதுதான் இந்த காஞ்சிபுரம் ஆகும். புத்தருக்குப் பிறகு எவரும் தோன்றவே இல்லை. நாங்கள்தான் துணிந்து அறிவுப் பிரச்சாரம் செய்கிறோம்.

எங்களைப் போல வேறு எவரும் இந்த கடவுள், மதம், சாஸ்திரங்கள், மூடநம்பிக்கைகள், காட்டுமிராண்டித் தன்மைகள் இவற்றை எல்லாம் ஒழிக்க வேண்டும் என்றும், இதனால் நாம் அடைந்துள்ள காட்டு மிராண்டித் தனங்கள் ஒழிக்க வேண்டிய அவசியம் பற்றியும் எடுத்துப் பேச மாட்டார்கள்.
எந்த பெரிய மனிதன் அறிவாளி என்பவர்களை எடுத்துக் கொண்டாலும் முன்னோர்கள் சொன்னது, மகான் சொன்னது, அவதார புருஷர்கள் சொன்னது, அதற்கு மாறாக நடக்கக் கூடாது என்பதில் தான் கருத்தைச் செலுத்தி எடுத்துச் சொல்வார்களே ஒழிய, இவற்றைக் கண்டிக்க மாட்டார்கள்.

இவற்றை எல்லாம் சுத்த மடத்தனம், காட்டுமிராண் டித்தனம் என்பது இப்படிப்பட்டவர்களுக்குத் தெரியாது என்பதல்ல. தெரிந்தும் எடுத்துச் சொல்ல அஞ்சு கின்றார்கள்.

இந்த 20-ஆம் நூற்றாண்டில் 1961-ஆம் ஆண்டிலும் விஞ் ஞான, அதிசய அற்புதங்களை எல்லாம் கண்டுபிடித்து சந்திர மண்டலத்துக்குச் செல்லுகின்ற காலத்தில் இப்படிப்பட்ட 2,000, 3,000 ஆண்டுகளுக்கு முன் தோன்றி காட்டுமிராண்டிக் காலத்து கடவுள், மதம், சாஸ்திரம், நடப்புகள் இவற்றைக் கட்டிக் கொண்டு அழுவதா?

நாங்கள் இன்று எடுத்துக் கொண்டு பாடுபடும் துறையானது, இதுவரை எவனும் ஈடுபட்டு வெற்றி பெறாத துறையாகும். எவனும் ஈடுபட அஞ்சிய துறையாகும். இன்று நாங்கள் இந்தத் துறையில் துணிந்து பாடுபட்டு வரும் எங்கள் கொள்கைகள் வீண் போகவில்லை. நல்ல பலனை அளித்துத்தான் உள்ளது என்பதை நாங்கள் நன்கு உணருகிறோம்.

தோழர்களே, நான் அடுத்த அரசியலைப் பற்றி சில வார்த்தைக் கூற வேண்டும். அரசியலைப் பற்றி எனக்காகவோ, வேறு யாருக்காகவோ பேச வரவில்லை. உங்களுக்காகப் பேசுகின்றேன்.

எந்தக் கெட்டிக்காரனாக இருந்தாலும், யாராயிருந்தாலும் உங்கள் மத்தியில் வந்து பேசுவார்களேயானால் பேசுவது எல்லாம் பேசிவிட்டு கடைசியில் தங்களுக்கோ, தங்கள் கட்சிக்கோ ஓட்டு கேட்பவர்களாகவே இருப்பார்கள்.

நான் பேசுகின்றேன் என்றால், நான் பேசிவிட்டு எனக்கோ, எங்கள் கட்சிக்கோ ஓட்டு கேட்கவில்லை. இப்படி இருக்க நீங்கள் யார் பேச்சைக் கேட்கணும்? எவன் ஒருவன் தனக்காகவோ, தங்கள் கட்சிக்காக வோ ஓட்டு கேட்காமல் ஓட்டுப் பற்றி பேசுகின்றானோ, அவனுடைய பேச்சைக் கேட்க வேண்டுமா அல்லது தனக்காக ஓட்டுக் கேட்பவர்கள் பேச்சைக் கேட்க வேண்டுமா என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும்.

தனக்காக ஓட்டுக் கேட்காத நாங்கள் சுயநலம் இல்லாமல் நடுநிலையில் இருந்து பேசுபவர்கள். நாங்கள், இன்னாருக்கு ஓட்டுப் போடுங்கள் என்று கூறுவதுகூட இன்னாருக்கு ஓட்டுப் பண்ணி கெட்டு விடாதீர்கள் என்பதற்காகத்தான் ஆகும்.

நமது கையில் சரித்திர ஆதாரங்கள் எல்லாம் உள்ளன. நமது நாட்டை மூவேந்தர்கள், பல்லவர்கள், மராட்டியவர்கள், முஸ்லிம்கள், வெள்ளைக்காரர்கள் ஆண்டு இருக்கின்றனர். வெள்ளைக்காரன் போன பிறகு பார்ப்பான் ஆண்டு இருக்கின்றான். அவனுக்குப் பிறகு தமிழன் ஆள்கின்றான்.

இத்தனை பேர்கள் ஆண்டதில் மனிதனுக்கு அறிவு வளர வழி வகுத்துக் கொடுத்திருப்பார்களா? அறிவு ஏற்பட வேண்டும், மானம் ஏற்படச் செய்ய வேண்டும் என்பது மிக மிக முக்கியம். இந்த மூவேந்தர்கள் காலம் முதல் பார்ப்பான் ஆட்சி வருகின்றவரை இந்த அறிவு வளர்ச்சிப் பற்றியோ, மானத்தைப் பற்றியோ கவலைப்பட்டு ஆளப்பட்டு இருக்கின்றதா என எண்ணிப் பார்க்க வேண்டும்.

வெள்ளைக்காரன் இந்த நாட்டை ஆளத் தொடங்கின காலத்துக்கு முன்வரை எந்த அரசனாவது எந்த நாயக்கன், முஸ்லிம், மராட்டிய ராசாவாவது ஒரு பள்ளிக்கூடம் மக்கள் படிக்க ஏற்படுத்தினார்களா என்றால் இல்லையே! மாறாக ஏராளமான சமஸ்கிருதப்பள்ளிகள், கோவில், குட்டிச்சுவர்கள் சோம்பேறிகளுக்கு மடங்கள் கட்டினார்களே ஒழிய, எழுத்தறிவுக்கு வகை செய்யவில்லையே!

ஏதோ வெள்ளைக்காரன் ஆட்சியில்தான் கொஞ்சம் பள்ளிகள் ஏற்படலாயின. இதுவும் பார்ப்பான் படிக்கப் பயன்பட்டனவே ஒழிய, நமது மக்களுக்குப் பயன்படவில்லை. பார்ப்பானுக்கு வைத்த பள்ளியானாலும் நம்மை புகாதே என்று தடுக்க முடியவில்லை. அதற்காக நாம் படிக்காது இருப்பதற்கு என்ன என்ன வழியோ அதுகளெல்லாம் செய்யப்பட்டன. நாம் 100-க்கு 6-7 படித்தவர்களாக இருக்கும்போதே பார்ப்பான் மட்டும் 100-க்கு 100 வெள்ளைக்காரன் பள்ளிகளால் படித்து இருந்தார்கள். இந்த வெள்ளைக்காரன் 200 ஆண்டு ஆட்சி செய்து விட்டு அவன் போகும் போது நாம் 100-க்கு 12-14 பேர்கள்தான் படித்து இருந்தோம்.

வெள்ளையன் இந்த நாட்டை விட்டுப் போன பிற்பாடும் காமராஜர் பதவிக்கு வரும் வரையிலும் கூட நாம் 100-க்கு 16 பேர்களே படித்து இருந்தோம். இன்று காமராசர் ஆட்சியில்தான் 100-க்கு 32 பேர்கள் படித்து இருக்கின்றோம் என்று எடுத்துரைத்தார்.

மேலும் பேசுகையில், இன்றைய காமராசர் ஆட்சி மீண்டும் ஏற்பட நாம் காங்கிரசை ஆதரிக்க வேண்டிய அவசியம் பற்றியும், எதிர்க்கட்சிகளின் பித்தலாட்ட பிரச்சாரங்கள் பற்றியும் விளக்கும்போது மழையின் காரணமாக கூட்டம் நிறுத்த வேண்டி வந்தது.

-----------10.9.1961 அன்று காஞ்சிபுரம் பொதுக்கூட்டத்தில் தந்தை பெரியார் அவர்கள் ஆற்றிய அறிவுரை - விடுதலை 30.9.1961

13 comments:

தமிழ் ஓவியா said...

சபாஷ் மாணவிகள்!


நடைபெற்ற பன்னிரெண்டாம் வகுப்புத் தேர்வில் இவ்வாண்டும் மாநில அளவில் - மாணவர்களைவிட மாணவிகள் அதிக விழுக்காட்டளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

மாணவிகளின் தேர்ச்சி 89.7 விழுக் காடாகவும், மாணவர்களின் தேர்ச்சி 83.2 விழுக்காடாகவும் உள்ளது. மாநில அளவில் அதிக மதிப்பெண்கள் பெற்றவர்கள் வரிசையிலும் பெண்கள்தான் முதல் மூன்று இடங்களைப் பெற்றுள்ளனர்.

அடுப்பூதும் பெண்களுக்குப் படிப்பெதற்கு என்று சொல்லப்பட்ட காலம் ஒன்று இருந்தது. அந்த பத்தாம் பசலித்தனத்தை எதிர்த்துப் போர்க் குரல் கொடுத்தவர் - தந்தை பெரியார். மக்களிடம் பிரச்சாரம் செய்து விழிப்புணர்வை ஏற்படுத்தியது அவர் கண்ட இயக்கம்தான்!

வாய்ப்புக் கொடுக்கப்பட்டால் பெண்கள் தங்கள் திறமையை நிரூபிப்பார்கள் என்பதற்கு இது ஓர் எடுத்துக்காட்டாகும்.

தேர்வில் பெண்கள் தங்கள் சாதனை களைப் படைத்திருந்தாலும், கல்லூரிகளில் சேர்ந்தாலும் கல்வியில் இடைமுறிவு (னுசடியீ டீரவள) என்பது மாணவர்களைவிட பெண்கள்தான் அதிகம். மக்கள் தொகையில் கிட்டத்தட்ட சரி பகுதி எண்ணிக்கையில் இருக்கக்கூடிய பெண் களின் அறிவும் ஆற்றலும், உழைப்பும் உரிய வகையில் பயன்படுத்தப்படாதது - சமூகத் திற்குத்தான் இழப்பு என்பதை முதலில் உணர வேண்டும்.

ஒரு வீட்டில் நான்கு பிள்ளைகள் இருந்தால் முதலில் பெண்ணைத்தான் படிக்க வைக்க வேண்டும்; ஆசிரியர் பணி பெண்களிடம்தான் ஒப்படைக்கப்பட வேண்டும் என்று தந்தை பெரியார் தெரிவித்த கருத்து ஆழமான எதார்த்தமான பொருள் கொண்டதாகும்.

ஒரு குழந்தைக்கு முதல் ஆசிரியராக இருப்பவர்கூட பெண்தானே! எனவே பெண்கள் கல்வி அறிவு பெறுவதுபற்றி சமுதாயம் முக்கிய கவனமும், அக்கறையும் செலுத்துதல் அவசியமாகும்.

ஊராட்சி ஒன்றிய அளவில் கல்லூரிகள் பெருகினால், இடையில் கல்வியைவிடும் வாய்ப்புக் குறைந்து விடும்.

வேலை வாய்ப்பில் பெண்களுக்கு 50 விழுக்காடு என்ற சட்டம் கொண்டு வரப் பட்டால் இடையில் கல்வியை விடும் நிலையும் ஏற்படாது.

இதற்குமேல் சட்டமன்றங்களிலும் நாடாளு மன்றத்திலும் பெண்களுக்கு 33 சதவிகித இடஒதுக்கீடு சட்டம் நிறைவேற்றபடாமல் முட்டுக்கட்டைப் போடும் கட்சிகளைக் கடந்த ஆண்களின் ஆதிக்கம் ஒரு முடிவுக்கு வந்தாக வேண்டும்.

கல்வியில் சாதனை படைத்துவரும் பெண்கள், இன்னும் தங்கள் உரிமைகளுக்காக வீதிகளில் வந்து போராடும் துணிவைப் போதுமான வகையில் பெறுவதில் தயக்கம் இருப்பதை அறிய முடிகிறது. வெறும் ஏட்டுக் கல்வி பெண்களின் முன்னேற்றத்திற்குத் துணை புரிந்துவிடாது.

உரிமைகளுக்காகப் போராடும் போர்க் குணமும் பெண்களுக்கு வந்தாக வேண்டும்; அதற்குப் பெரியாரியலைத் தெரிந்து கொள்ள முன்வரவேண்டும். பெண்கள் உரிமைபற்றி பெரியார் அளவுக்குச் சிந்தித்தவர்கள் யாரும் இருக்க முடியாதே!
நியாயமாக தந்தை பெரியார் அவர்களின் பெண்ணுரிமைச் சிந்தனைகள் தொடர்பான கருத்துக்கள் அடங்கிய பாடங்களையாவது பள்ளி, கல்லூரிகளில் வைக்க வேண்டும். அதற்கான அழுத்தத்தைக் கொடுக்க வேண்டும் 23-5-2012

தமிழ் ஓவியா said...

மூளை வேண்டும்

கொலம்பசைப் பாராட்டி நடைபெற்ற விருந்து ஒன்றில் அவர்மீது பொறாமை கொண்ட சிலரும் கலந்து கொண்டனர். அவர்களுள் ஒருவர், கொலம்பஸ் மட்டுமல்ல, வேறு யார் அட்லாண்டிக் கடலில் பயணம் செய்திருந்தாலும் புதிய நாடுகளைக் கண்டுபிடித்திருப்பார்கள் என்று கூறினார்.

இதனைக் கேட்ட கொலம்பஸ், விருந்தில் வைக்கப்பட்டிருந்த முட்டை ஒன்றினை எடுத்தார். சொன்னவரிடம் கொடுத்து, இதைச் செங்குத்தாக மேசையின்மேல் நிறுத்தி வையுங்கள் பார்க்கலாம் என்றார். நிறுத்தி வைத்துப் பார்த்து முடியாமல், உங்களால் செங்குத்தாக நிறுத்தி வைக்க முடியுமா? என்று கொலம்பசைக் கேட்டார்.

முட்டையை வாங்கிய கொலம்பஸ் குறுகலான பகுதியை மேசையின்மீது மெதுவாகத் தட்டினார். முட்டையில் சிறிய பள்ளம் விழ, முட்டை மேசையின்மீது செங்குத்தாக நின்றது. எதிரில் இருந்தவர், இப்படிச் செய்வது என்றால் நானும் செய்திருப்பேனே என்றதும்,

எந்தக் காரியத்தையும் ஒருவர் செய்து காட்டிய பிறகு அது சுலபமாகத்தான் தோன்றும். முதல்முறையாக அதைச் செய்வதற்குத்தான் மூளை வேண்டும் என்று சிரித்துக் கொண்டே சொன்னாராம் கொலம்பஸ்.--பெரியார் பிஞ்சு 2012

தமிழ் ஓவியா said...

பிரெஞ்சுப் புரட்சி நூல்

தாமஸ் கார்லைல் என்ற ஆங்கில எழுத்தாளர் பிரெஞ்சுப் புரட்சியைப் பற்றி விரிவான புத்தகம் எழுதினார். தான் எழுதிய கையெழுத்துப் பிரதியை நண்பர் ஒருவரிடம் படித்துப் பார்க்கச் சொல்லிக் கொடுத்தார்.

மாதங்கள் பல ஆகியும், கையெழுத்துப் பிரதியை வாங்கிச் சென்ற நண்பர் கொண்டுவந்து கொடுக்கவில்லை. பல ஆண்டுகள் உழைத்து உருவாக்கியதாயிற்றே என நினைத்த கார்லைல், நண்பரின் வீட்டிற்குச் சென்றார்.

நண்பரிடம், தங்களுக்குக் கொடுத்த பிரதியை வாங்க வந்தேன். என்னிடம் வேறு படிகளும் இல்லை. எனவே, உடனே திருப்பிக் கொடுத்தால் நன்றாக இருக்கும் என்றார். நண்பரோ, சிறிதும் வருத்தமின்றி, தாங்கள் கொடுத்த பிரதியை எங்கோ தொலைத்துவிட்டேன் என்றார்.

கேட்ட சில வினாடிகள் அதிர்ச்சியில் உறைந்தார் தாமஸ் கார்லைல் . உடனே மனதைத் தேற்றிக் கொண்டு வீட்டிற்குச் சென்றார். எந்தச் சலனமுமின்றி பொறுமையோடு எழுத ஆரம்பித்தார். எழுதியும் முடித்தார். கார்லைல் இரண்டாவதாக எழுதியதுதான் இன்று ஆங்கில இலக்கியத்தில் குறிப்பிடத்தக்க நூலாகக் கருதப்படும் பிரெஞ்சுப் புரட்சி என்னும் நூல் ஆகும்.

தமிழ் ஓவியா said...

கொள்கையில் உறுதி

ஆங்கில இலக்கியத்தில் புரட்சிக் கவிஞன் என அழைக்கப்பட்டவர் ஷெல்லி. ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகத்தில் ஷெல்லி படித்துக் கொண்டிருந்தபோது, மதத்தையும் கடவுள் நம்பிக்கைகளையும் தாக்கிக் கவிதைகளை எழுதினார். அப்போது பல்கலைக் கழகத்தின் தலைவராக இருந்த ரெக்டரின் கவனத்திற்கு இது வந்தது. அவர் ஷெல்லியை அழைத்து, நாத்திகக் கவிதைகளை எழுதினால் கல்லூரியை விட்டு வெளியே அனுப்பிவிடுவேன் என எச்சரித்தார்.

இதனைக் கேட்ட ஷெல்லி, என் மனதுக்குப் பிடித்த கவிதைகளை எழுதுவதை என்னால் விடமுடியாது. கல்லூரியை விட்டுவிடுவது எனக்குச் சுலபம் என்றார். ரெக்டர் மீண்டும் எடுத்துச் சொல்லியும் கேட்காததால் கல்லூரியில் இருந்து நீக்கப்பட்டார்.

காலப்போக்கில் பிரபலமடைந்த ஷெல்லியின் கவிதைகள் ஆங்கில இலக்கியத்தில் அவருக்கு நிலையான இடத்தைப் பெற்றுத் தந்தன. சந்தக் கவிதைகள் எழுதுவதில் தனிச்சிறப்புப் பெற்றார். ஷெல்லி இறந்து 2 நூற்றாண்டுகளாகியும் அவரது கவிதைகள் ஆங்கில இலக்கியத்தில் அழியாத இலக்கியங்களாகத் திகழ்கின்றன.

நாத்திகக் கவிதைகள் எழுதினார் என்பதற்காக வெளியேற்றிய கல்லூரி, தன்னிடம் படித்த புகழ்மிக்க மாணவர் ஷெல்லி என்பதற்காக அண்மையில் ஷெல்லிக்குச் சிலை எடுத்து விழா கொண்டாடி ஷெல்லியைக் கௌரவித்துள்ளது.

தமிழ் ஓவியா said...

விதி விலக்கானவர்

அமெரிக்க நாட்டின் குடியரசுத் தலைவராக தொடர்ந்து 4 முறை தேர்ந்தெடுக்கப்பட்ட பெருமைக்குரியவர் பிராங்க்ளின் ரூஸ்வெல்ட். அவருடன் போட்டியிட்டுத் தோற்றவர்களுள் ஒரே உலகம் என்ற புகழ்பெற்ற நூலை எழுதிய வெண்டல் வில்க்கி குறிப்பிடத்தக்கவர்.

ரூஸ்வெல்ட்டின் நம்பிக்கைக்குரிய செயலாளர் ஹேரி ஹாப்கின்ஸ். விவாதத்திற்குரிய மனிதராக இருந்து நாணயமானவராகவும் திகழ்ந்தவர். ஹாப்கின்சால் ரூஸ்வெல்ட்டுக்குக் கெட்ட பெயர் ஏற்படுவதாக நினைத்தவர்களுள் வெண்டல் வில்க்கியும் ஒருவர்.

வில்க்கி ரூஸ்வெல்ட்டைச் சந்தித்தபோது, ஹாப்கின்ஸ் போன்ற விவாதத்துக்குரிய மனிதரை ஏன் உங்களுடன் நெருக்கமாக வைத்துள் ளீர்கள்? உங்களுக்கு இதனால் என்ன லாபம்? எனக் கேட்டார்.

அமெரிக்கக் குடியரசுத் தலைவரின் பொறுப்பு மகத்தானது. அதிகாரமுள்ள தலைவருக்கு உண்மையான நண்பர்கள் இருப்பது கஷ்டம். எத்தனையோ பேர் என்னிடம் வருகின்றனர், பேசுகின்றனர். வருகின்ற ஒவ்வொருவரும் எதையோ எதிர்பார்த்துத்தான் வருகின்றார்கள். என்னால் அவர்களிடம் மனம் விட்டுப் பேச முடிவதில்லை. ஆனால், ஹாப்கின்ஸ் அவர்களிலிருந்து விதிவிலக்காக இருக்கிறார். எனக்கு வேண்டியவராக, என்னிடம் எதையும் எதிர்பார்க்காதவராக இருக்கிறார். நீங்களும் ஒரு காலத்தில் குடியரசுத் தலைவராக ஆகலாம். அப்போதுதான் ஹாப்கின்ஸ் போன்றோரின் தேவையை உங்களால் உணரமுடியும் என்றார் ரூஸ்வெல்ட்

தமிழ் ஓவியா said...

உண்மைக்காக உயிரையே கொடுத்த ஜியார்டனோ புருனோ :

இத்தாலி நாட்டில் படைவீரரின் மகனாக 1548இல் பிறந்தார் ஜியார்டனோ புருனோ.

பல புத்தகங்களைப் படித்து மாற்றுக் கருத்தால் கவரப்பட்டதால் 1572இல் கிறித்தவ மடத்திலிருந்து நீக்கப்பட்டார். 1575இல் நோமிலியன் மடத்தில் சேர்ந்து வேத சாஸ்திரம் படித்தார்.

கோப்பர்நிக்கசின் விண்மீன் சுழற்சியினாலும் வானியல் கொள்கைகளாலும் கவரப்பட்டதால் வேத நூல் அறிவுக்குப் பொருந்தாது என்று கூறி ஏற்றுக்கொள்ள மறுத்தார். தெய்வீகத் தன்மையைக் கெடுத்தார் என்று கூறிய பாதிரியார் இவரைக் கைது செய்யத் திட்டமிட்டார்.

அங்கிருந்து ரோம் சென்றார். அங்கும் இவரது கருத்துகளை வெறுத்த சிலர் கைது முயற்சியைத் தொடரவே 1578 -இல் ஜெனிவா சென்றார்.

பிழைதிருத்துநராக புரோட்டஸ்டண்ட் மதம் இவரைச் சேர்த்துக் கொண்டது. பின்பு, மூடக் கருத்துகளைப் பரப்புவதாகக் கூறி கைது செய்ய முயற்சி செய்தது. கைது செய்யாமல் இருக்க வேண்டுமென்றால் மன்னிப்புக் கேட்கச் சொல்லியது. இவர் மறுக்கவே, எச்சரித்து இடம் மாறிக் குடியேற அனுமதித்தது.

டௌலிஸ் பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி மாணவராகச் சேர்ந்து டாக்டர் பட்டம் பெற்றார். வானியல் பற்றிய சந்தேகங்களுக்கு விளக்கம் அளித்தார். இவரது கருத்துகளைப் பிடிக்காத சிலர் இவரை வெளியேற்றத் திட்டமிட்டனர்.

1581இல் பாரிஸ் வந்தார். பலரது எதிர்ப்பு இங்கும் இருந்தாலும், பிரெஞ்சு அரசர் மூன்றாம் ஹென்றியின் ஆதரவு இருந்தது. எண்ணங்களின் நிழல் என்ற நூலினை எழுதினார். பின்னர் இங்கிலாந்து செல்ல அனுமதி கேட்டார்.

1583இல் லண்டன் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் கோப்பர்நிக்கசின் கோட்பாடுகளை விளக்கி, பூமி தன்னைத்தானே சுற்றி சூரியனையும் சுற்றி வருகிறது என்ற உரையினை நிகழ்த்தினார். அதில், அறிஞர்களும் டாக்டர்களும் தங்களைத் தெய்வீகப் பிறவி என்று நினைப்பதைக் கண்டித்தார். 1585வரை இங்கிருந்து 7 புத்தகங்களை எழுதினார்.

பின்பு, தமது கொள்கைகளைப் பரப்புவதற்காக வெனிஸ் நாடு சென்றார். ஜியாவன்னி அன்புடன் வரவேற்பதுபோல் வரவேற்றுக் கீழே தள்ளினார். பல குற்றச்சாட்டுகளைச் சுமத்தி 1592ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 9 நாள்கள் இருட்டறையில் பூட்டி வைத்து மதவாதிகளின் கைக்கூலியாகச் செயல்பட்டனர்.

மத நீதிமன்றத்தில் மே மாதம் ஒப்படைக்கப்பட்டார் புருனோ. இந்தப் பிரபஞ்சம் எல்லையற்றது, ஆதி அந்தம் இல்லாதது என்றார். கிறித்துவ மதக் கோட்பாட்டை மதிக்கவில்லை போன்ற பல குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு வெனிஸ் சிறையில் அடைக்கப் பட்டார்.

ரோம் கேட்டதன் பேரில் 1592 பிப்ரவரி 27 அன்று ரோம் அனுப்பப்பட்டார். அங்கு, எந்தவித விசாரணையுமின்றி 6 ஆண்டுகள் இருட் டறையில் அடைக்கப் பட்டார். தனக்குக் கொடுக்கப் போகும் தண்டனை என்ன என்பதைத் தெரிந்தும் பிரபஞ்சக் கொள்கை யையும் கோப்பர்நிக்கசின் பூமி சுற்றும் கொள்கையையும் விளக்கி, தண்டனையை ஏற்கத் தயார் என்றார்.

பிரபஞ்சம் எல்லையற்றது என்ற கருத்து மதக் கோட்பாட்டுக்கு விரோதமானது. மத விரோதியை உயிருடன் கொளுத்த வேண்டும் என்று தீர்ப்புக் கூறினர்.

தம் கொள்கைகளை - கோப்பர்நிக்கசின் கொள்கைகளை - அறிவியல் கருத்துகளைப் பரப்புவதற்காக நாடு நாடாகச் சென்றவர்.

9 ஆண்டுகள் இருட்டுச் சிறையில் இருந்தவர். விண்மீன்களுள் ஒன்றே சூரியன் என்ற புருனோவை, 1600ஆம் ஆண்டு பிப்ரவரி 8ஆம் நாள் சூரியன் உதிக்கும் முன்பே ரோம் நகர வீதியின் நடுப்பகுதியில் கட்டைகளை அடுக்கி வைத்துத் தீயிட்டு உயிருடன் எரித்தனர். உண்மையை அஞ்சாமல் எடுத்துக்கூறி கொண்ட கொள்கைக்காக உயிரை நீத்தார்.

இவரது கொள்கை, தத்துவம், அறிவியலின் மதிப்பினை 17ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த மக்கள் உணரத் தொடங்கினர். 19ஆம் நூற்றாண்டு தத்துவ அறிஞர்களை ஏற்றுக் கொண்டது. பின்பு, புதிய சிந்தனையுடன் கூடிய விடுதலை இயக்கங்கள் ஆதரிக்கப்பட்டன. தொலைநோக்கியின் கண்டுபிடிப்புக்குப் பிறகு இவர் கூறிய கருத்துகள் ஆதாரத்துடன் நிரூபிக்கப்பட்டு உலகத்தால் ஏற்றுக் கொள்ளப்பட்டன.

280 ஆண்டுகள் கழித்து ரோம் நகரம் விழாக்கோலம் பூண்டது. 1880இல், இவரை எரித்த இடத்தில் நினைவுச் சின்னம் எழுப்பி 30,000 மக்கள் அஞ்சலி செலுத்தக் கூடினர்.

புருனோ வாழ்க என்ற கோஷத்தை எழுப்பி ரோம் மக்களால் அறிஞராக ஏற்றுக் கொள்ளப்பட்டவரே ஜியார்டனோ புருனோ.

- மேகா

தமிழ் ஓவியா said...

பூமியின் வயது என்ன?
Print E-mail

மனிதர்களுடைய வயதைக் கணக்கிடுவது போல் பூமியின் வயதையும் கணக்கிடலாம் என்று கண்டறிந்துள்ளனர்.

பூமியின் வயது என்ன என்று கணக்கிட, கடலின் வயது என்ன என்று ஆராய்கின்றனர். கடலில் உள்ள உப்பின் அளவு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

ஓராண்டில் சேரும் உப்பின் அளவு எவ்வளவு எனக் கண்டறிந்தனர். கடல் நீரில் உள்ள மொத்த உப்பின் அளவை, ஓராண்டில் சேரும் உப்பின் அளவைக் கொண்டு வகுத்தால் கடலின் வயது சுமார் 300 கோடி ஆண்டுகள் என்று கண்டறிகின்றனர். கடல் தோன்றுவதற்கு முன்பே பூமி தோன்றியதால் பூமியின் வயது 300 கோடி ஆண்டுகளுக்கும் அதிகம் என்று கண்டறிந்துள்ளனர்

கடலின் வயதைக் கொண்டு பூமியின் வயதைக் கண்டறிவது போல் பாறையின் வயதைக் கண்டறிந்து அதன் வாயிலாகப் பூமியின் வயதைக் கண்டறியும் முறையும் உள்ளது.

பாறைகளில் படிந்துள்ள யுரேனியம் கதிரியக்கத் தன்மை உடையது. அதாவது, கதிரியக்கத் தன்மை காரணமாக யுரேனியம் படிப்படியாகச் சிதைந்து கடைசியில் காரீய உலோகமாக மாறிவிடுகிறது. இவ்விதம் யுரேனியம் சிதைய எவ்வளவு காலம் ஆகும் என்று கண்டுபிடித்துள்ளனர்.

ஒரு பாறையில் எஞ்சி இருக்கும் யுரேனியத்தின் அளவைக் கொண்டு கணக்கிட்டால் பாறைகள் குறைந்தபட்சம் 350 கோடி ஆண்டு வயது கொண்டவை எனத் தெரிகிறது.

பூமியும் இதர கோள்களும் ஒரே வேளையில் தோன்றியன எனக் கருதுவர். விண்வெளியிலிருந்து பூமிக்கு வந்துள்ள விண்கற்கள் உருக்குலைந்து உடைந்த கிரகத்தின் துண்டு துணுக்குகள் என்று கருதுவர்.

எனவே, பூமியில் வந்து விழுந்துள்ள விண்கற்களை வைத்து ஆராய்ந்தால் அவை 450 கோடி ஆண்டுகளுக்கு முன் தோன்றியவை என்று தெரிய வந்துள்ளதால் பூமியின் வயது 450 கோடி ஆண்டுகளுக்கு அதிகமாகலாம். எனவே, பூமியின் வயது குறைந்தபட்சம் 450 கோடி ஆண்டுகளாக இருக்க வேண்டும்.

சூரியனின் வயது சுமார் 500 கோடி ஆண்டுகள் என்பர். சூரியனிலிருந்துதான் பூமி தோன்றியது என்று நம்புகின்றனர். எனவே, பூமியின் வயது சுமார் 500 கோடி ஆண்டுகளாகவும் இருக்கலாம்.

எனினும், இவையெல்லாம் வெறும் குத்துமதிப்பான கணக்குகள்தான். சில நூறு கோடி ஆண்டுகள் கூடக் குறைய இருக்கலாம்.

ந.க.மங்களமுருகேசன்

தமிழ் ஓவியா said...

அறிஞர்களில் வாழ்வில்..
Print E-mail

வாழ்க்கைக்கு சாவே இல்லை!

தூக்கு மேடைக்குச் செல்வதற்கு முதல் நாள் இரவு ஒப்பற்ற இலக்கியத்தைப் படைத்தவர் ஜூலியஸ் பியூசிக். செக்கோஸ்லோவாகியா நாட்டின் புரட்சிமிக்க எழுத்தாளராகத் திகழ்ந்தவர்,பத்திரிகையாளர், அந்நாட்டுப் பொதுவுடைமைக் கட்சியின் உறுப்பினர்.

நாஜிக்களின் தலைவன் ஹிட்லரால் செக்கோஸ்லோவாகியா நாட்டினர் துன்புறுத்திக் கொலை செய்யப்பட்டனர். நாஜிக்களின் நாசப் போக்கைக் கண்டித்து 1929இல் சிருஷ்டி பத்திரிகையில் தலையங்கம் எழுதினார் ஜூலியஸ் பியூசிக்.

இவரது எழுத்துகள் நாட்டு மக்களைத் தட்டி எழுப்பி வீறுகொள்ள வைத்தன. மக்களைத் தூண்டிவிட்டதற்காக பியூசிக்கையும் வேட்டையாட உத்தரவிட்டார் ஹிட்லர். இதனை அறிந்த பியூசிக் தலைமறைவானார். எனினும், பத்திரிகை தொடர்ந்து வெளிவந்தது. நிறைய இலக்கியங்களைப் படைத்தார்.

1942 ஏப்ரல் 24 இல் ஹிட்லரின் ரகசிய காவல் துறையினர் பியூசிக்கைக் கைது செய்து கொடுமைப்படுத்தினர். அவர்மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. நீதிமன்றத்தில் நீதிபதியிடம், உங்கள் நாடகத்தை நான் பார்ப்பது மட்டுமல்ல, உணரவும் செய்கிறேன். உங்கள் தீர்ப்பு என்ன என்பது எனக்குத் தெரியும். எனது உயிரைப் போக்க, விசாரணை என்பது ஒரு நாடகம். உண்மையில் குற்றவாளி நீங்கள்தான். நான்தான் நீதிபதி, எனது தீர்ப்பை எப்போதோ எழுதிவிட்டேன். என் தீர்ப்பின் மூலம் நாஜிசத்திற்கு மரண தண்டனை விதிக்கிறேன். எதிர்காலம் என் தீர்ப்பை நிச்சயம் நிறைவேற்றும் என்றார்.

தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டதும், தாய், சகோதரி, மனைவி ஆகியோருக்குக் கடிதம் எழுத அனுமதி கேட்டார். அனுமதி கொடுக்கப்பட்டது. ஒரே கடிதமாக எழுதினார். எனக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அந்தப் பேதைகளால் என் மன மகிழ்ச்சியை மாய்க்க முடியவில்லை. தூக்கிலிடுவதால் எந்த ஒரு மனிதனின் மதிப்பும் தாழ்வதில்லை. என் வாழ்வு முடிந்த பிறகு, நான் இதுவரை மகிழ்ச்சியுடனேயே இருந்தேன் என்ற உண்மையினை உணர்ந்து நீங்களும் மகிழ்ச்சியடையுங்கள் என்பதே எனது விருப்பம் என்று முடித்தார்.

தூக்குத் தண்டனையை நிறைவேற்றுவதற்கு முந்தைய நாள் இரவு, சிறைக்காவலன் பியூசிக்கிடம் வந்து உங்கள் தேசபக்தியை விரும்பும் ஆயிரக்கணக்கானோரில் நானும் ஒருவன். தங்களது கடைசி ஆசையைச் சொல்லுங்கள், நிறைவேற்றுகிறேன் என்றார்.

கொஞ்சம் தாள்களும், எழுதுகோலும் தேவை என்றார். கொண்டுவந்து கொடுத்ததும் எழுதி முடித்துவிட்டு, தனது மனைவியிடம் எப்படியாவது ஒப்படைத்துவிடுங்கள் என்று சிறைக் காவலரிடம் கொடுத்தார் பியூசிக்.

காலையில் தூக்குமேடையில், தூக்குக் கயிற்றை முத்தமிட்டபடியே இன்பத்துக்காக வாழ்ந்தேன்; இன்பத்துக்காகப் போராடினேன்; இன்பத்துக்காக இதோ இறந்து கொண்டிருக்கிறேன். எனவே, துன்பம் என் பெயரோடு எந்தக் காலத்திலும் இணைக்கப்படக்கூடாது; அது முறையல்ல. வாழ்க்கையை நான் முழுமையாகக் காண்கிறேன். என்னிடம் இருக்கும் அனைத்தும், வாழ்க்கை எனக்கு அளித்த பரிசு. வாழ்க்கை மிகச் சிறந்தது, உயர்ந்தது, ஈடு இணையற்றது. அழிக்கவே முடியாதது. வாழ்க்கைக்குச் சாவே இல்லை என்றார்.

சிறைக்காவலர் கடைசியாக பியூசிக் எழுதியவற்றை அவரது மனைவி அகஸ்டினாவிடம் ஒப்படைத்தார். அவர் அதனைப் புத்தகமாக வெளியிட்டார். 12 மணி நேரப் படைப்புக் காவியம். உலகம் முழுவதும் வீர காவியமாக 80 உலக மொழிகளில் 200 பதிப்புகளைக் கண்ட வெற்றிக் காவியமாக உலா வருகிறது. தமிழில் தூக்கு மேடைக் குறிப்புகள் என்ற தலைப்பில் வெளியாகியுள்ளது.

ஜூலியஸ் பியூசிக் இறக்கவில்லை; நூல் வடிவில் உலவி நம்முன் - நம்மிடையே வாழ்ந்து கொண்டிருக்கிறார்.

தமிழ் ஓவியா said...

சகுனங்கள் சரியா?
Print E-mail


மக்களிடையே மண்டிக் கிடக்கின்ற மூடநம்பிக்கைகளுள் சகுன நம்பிக்கையும் ஒன்று. இதனால் ஏற்படும் பாதிப்புகள், கேடுகள், இழப்புகள் ஏராளம் என்பதோடு இவை உருவாக்கும் மன உளைச்சல், வீண்பழி, மனத்தளர்ச்சி, வாழ்விழப்பு போன்றவை ஏராளம். குறிப்பாக, விதவைப் பெண்களும், திருமணத்தை எதிர்நோக்கும் இளம்பெண்களும் அடையும் இழப்பும், இன்னல்களும் ஏராளம். ஒரு பெண்ணின் வாழ்வையே பல்லியின் ஓசையில் பலிகொடுக்கும் அவலமும் இதில் அடங்கும். எனவே, சகுனம் பற்றிய விழிப்புணர்வு பிஞ்சுகளுக்கேயன்றி பெரியவர்களுக்கும் வேண்டும்.

சகுனங்கள் பல வகைப்படும்:

மனிதர்கள்: எதிரில் வரும் மனிதர்கள் யார்? என்பதை வைத்து சகுனம் பார்க்கப்படுகிறது.

சலவைத் தொழிலாளி, பால்காரர் எதிரில் வந்தால் நல்ல சகுனம்; எண்ணெய், விறகு எடுத்துக்கொண்டு எதிரில் வந்தால் கெட்ட சகுனம்.

காரணம், பால் மங்கலப் பொருள். அழுக்கு நீக்கி ஆடை வெளுப்பவர் சலவைத் தொழிலாளி. எனவே, நல்ல சகுனம். எண்ணெய், விறகு அமங்கலப் பொருள். எனவே, அது கெட்ட சகுனம்.

விதவை வாழ்வு இழந்தவள். அதனால் கெட்ட சகுனம். சுமங்கலி வாழ்வுடையவள். எனவே, நல்ல சகுனம்.

ஒலி: சங்கு ஊதினால், வெடிவெடித்தால் கெட்ட சகுனம். மணி ஒலித்தால் நல்ல சகுனம்.

பறவை: சில பறவைகள் கத்தினால் நல்லது. ஆந்தை போன்றவை கத்தினால் கெட்ட சகுனம்.

பல்லி: கத்துகின்ற இடத்தைப் பொறுத்து நல்ல சகுனம், கெட்ட சகுனம் என்று கொள்ளப்படுகிறது.

விலங்கு: கழுதை கத்தினால் நல்ல சகுனம். பூனை குறுக்கே வந்தால் கெட்ட சகுனம்.

தோணி(ஓடம்) : ஆற்றின் இக்கரையில் இருந்தால் நல்ல சகுனம். அக்கரையில் இருந்தால் கெட்ட சகுனம்.

தும்மல்: சிலர் தும்மினால் நல்ல சகுனம். சிலர் தும்மினால் கெட்ட சகுனம்.

வார்த்தைகள்: ஒரு காரியத்திற்குச் செல்லும் போது, காதில் விழும் வார்த்தைகளை வைத்து நல்ல கெட்ட சகுனம் கணிக்கப்படுகிறது.

பொருள்கள் தவறிவீழ்தல்: விழாமல் பிடித்துக் கொண்டால் நல்ல சகுனம். தவறி விழுந்தால் கெட்ட சகுனம். தவறி விழுந்து பொருள் உடைந்தால் பாதிப்பு வரும் என்ற நம்பிக்கை.

மேற்கண்ட சகுனங்களை மூன்று வகையாகப் பிரிக்கலாம்.

1. காட்சியின் தன்மையை வைத்து நல்ல காட்சியாயின் நல்ல சகுனம்; கெட்ட காட்சியாயின் கெட்ட சகுனம்.

2. நாம் எதிர்நோக்கும் ஆளோ, பொருளோ, வாகனமோ அமைவது, சாதகமான நிலையாயின் நல்ல சகுனம், பாதகமான நிலையாயின் கெட்ட சகுனம்.

3. மரபுவிழா சொல்லப்படும் சகுனங்கள்: முதலாவதாக, நல்ல காட்சி - நற்சகுனம் கண்டால் - நல்லது நடக்கும் என்பதும், கெட்ட காட்சி - கெட்ட சகுனம் கண்டால் கெட்டது நடக்கும் என்பதும், நம் மனதில் எழும் வெறுப்பு விருப்புகளின் வெளிப்பாடாகும்.

இரண்டாவதாக, காட்சி சாதகமா அல்லது பாதகமா என்பதை வைத்து எழும் சகுன நம்பிக்கை, நடக்கப்போகும் காரியத்தின் முன்னறிவிப்பாக இக்காட்சிகளைக் கருதும் அறியாமையால் எழுகிறது.

மூன்றாவதாக, பல்லி, பூனை போன்ற சகுன நம்பிக்கைகள் மரபு வழியில் கற்பிக்கப்பட்ட சகுன நம்பிக்கைகள் ஆகும்.

விதவை என்பவள் வாழ்விழந்தவள், அலங்கோலப்படுத்தப்பட்டவள். எனவே, அவள் எதிரில் வந்தால் கெட்டது நடக்கும் என்ற நம்பிக்கை. அவள் மீதுள்ள வெறுப்பால் எழுந்தது. நடக்கப்போகும் கெடுதலுக்கு அவள் எப்படிப் பொறுப்பாவாள் என்பதைச் சிந்திக்க வேண்டும்.

நடக்கப்போகும் கெடுதலுக்கு வாழ்விழந்த பெண்ணை, அபாய அறிவிப்பாக ஆக்குவதும், அதை நம்புவதும் அடிமுட்டாள்தனமல்லவா? அநியாயம் அல்லவா?

நடக்குப்போகும் காரியத்திற்கு, புறப்படுமுன் நல்லதாயின் நல்லது நடக்கும் என்பதும், கெட்டதாயின் கெட்டது நடக்கும் என்பதும், காட்சியோடு காரியத்தைப் பொருத்திப் பார்க்கும் மூடத்தனத்தின் விளைவாகும்.

இந்தக் காட்சிகளை பலமுறைச் சோதித்துப் பார்த்தால், கெட்ட சகுனத்தைப் பார்த்துச் சென்றபோது நல்லது நடப்பதையும், நல்ல சகுனத்தைப் பார்த்துச் சென்றபோது கெட்டது நடப்பதையும் நாம் அறியலாம்.

எந்தவொரு காட்சியும், வார்த்தையும், ஒலியும் நடக்கப்போவதை அறிவிக்கக் கூடியவை அல்ல. எல்லாம் நமது உள விருப்பு, வெறுப்பின் வெளிப்பாடுகள்; தொடர்புப்படுத்திப் பார்ப்பதன் விளைவுகள்.

மேலும், ஒரே காட்சியை, ஒரே சகுனத்தைப் பார்த்துச் செல்கின்ற அனைவருக்கும் ஒரே மாதிரியான பலன்கள் கிடைப்பதில்லை. விதவையைப் பார்த்துச் சென்ற ஒருவருக்குக் கெட்டது நடந்திருந்தால், இன்னொருவருக்கு நல்லது நடந்திருக்கும். எனவே, காட்சிகளுக்கும், நடக்கப்போகும் காரியங்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்பதை, பிஞ்சுக் குழந்தைகள் மட்டுமின்றி பெரியவர்களும் நன்கு சிந்தித்து, சகுன நம்பிக்கையென்னும் மூடநம்பிக்கையை விட்டொழித்து பகுத்தறிவுப் பாதையில் பரிசோதித்து, சிந்தித்துச் செயல்பட வேண்டும்.

- சிகரம்

தமிழ் ஓவியா said...

மார்க்


12ஆம் வகுப்பின் தேர்வு முடிவுகள் - வெளி வந்துள்ளன. கடந்த ஆண்டைவிட அதிக விழுக்காட்டில் இருபால் மாணவர்களும் வெற்றி பெற்றுள்ளனர்.

அதிக மதிப்பெண்கள் பெற்றவர்களின் ஒளிப் படங்கள் உட்பட ஊடகங் களில் வெளியாகித் தூள் கிளப்புகின்றன.

அதே நேரத்தில் அதிக மதிப்பெண்கள் பெறாதவர்கள், தேர்வில் தோல்வி கண்டவர்கள் சோர்ந்து விழுந்துவிட வேண்டுமா?

முழங்காலை தாடை யோடு ஒட்ட வைத்து வாழ்க்கையே ஒட்டு மொத்தமாகப் போய் விட்டது என்று கண்ணீர் வடித்துக் கொண்டு இருக்க வேண்டுமா?

தேர்வில் தோல்வி கண்டவர்கள் மறு முறையும் எழுதலாம், வெற்றி பெறலாம் அதற் காக வாய்ப்புக் கதவுகள் திறந்தே இருக்கின்றன.

குறைந்த மதிப்பெண் பெற்றவர்கள் மற்றவர்கள் முகத்தில் விழித்திட வெட்கப்பட வேண்டிய அவசியமில்லை.

உலகில் பெரிய தலை வர்களாகப் போற்றப்படு பவர்கள், தொழிலதிபர் கள், விஞ்ஞானிகள் எல் லாம் மெத்தப் படித்த மேதைகளா? அதிக மதிப் பெண்கள் பெற்று தங்கக் கோப்பைகளை வாரிச் சென்றவர்களா?

எடுத்துக்காட்டுக்கு ஒன்றிரண்டு. தேசப் பிதா என்கிறார்களே, மகாத்மா என்றும் மதிக்கப்படுகின் றாரே - தேர்வில் அவர் பெற்ற மதிப்பெண் என்ன தெரியுமா?

ஆங்கிலத்தில் 200-க்கு 89 கணக்கில் 175-க்கு 59, அறிவியல் பாடத் திட்டத்தில் 100-க்கு 45, புவியியலில் 75-க்கு 34, வரலாற்றில் 75-க்கு 20.

இப்படி மதிப்பெண் பெற்றதால் வாழ்க்கையில் காந்தியார் என்ன ஓரங் கட்டப்பட்டு விட்டாரா?

கணித மேதை என்று சொல்கிறார்களே கும்ப கோணம் ராமானுசம் மூன்று முறை தொடர்ந்து ஆங்கிலத் தேர்வில் தோல்வி கண்டு விட்டார் - அதனால் அவரின் கணிதத் திறன் மதிப் பற்றுப் போய் விட்டதா?

கணினித் துறையில் சாதனை படைத்த பில் கேட்ஸின் படிப்பு வெறும் ஏழாம் வகுப்புதானே!

மின் விளக்கு முதல் ஆயிரத்துக்கு மேற்பட்ட பொருள்களின் கண்டு பிடிப்புக்குச் சொந்தக் காரரான தாமஸ் ஆல்வா எடிசன் பள்ளியில் மக்குப் பையன்தான்.

மதிப்பெண்கள் வேண் டாம் என்று சொல்ல வில்லை; அதற்காகக் குடியே மூழ்கி விட்டது என்று துவள வேண் டாமே! தற்கொலை முயற்சிகள் வேண்டாமே!

- மயிலாடன் 23-5-2012

.

தமிழ் ஓவியா said...

வேலூரில் வேங்கைகளின் பாய்ச்சல்!


- மின்சாரம் -

பெண்கள் மாநாடு எத்தனை எத்தனையோ நடந்துதான் உள்ளன. வரும் 29 ஆம் தேதி வேலூரில் நடக்க இருக்கும் மாநாடு சாதாரண மாநாடல்ல - பத்தோடு பதினொன்றல்ல - அது புத்துலகப் பெண்கள் மாநில மாநாடு!

தந்தை பெரியார் அவர்களின் மறைவிற்குப் பிறகு, ஒரு சமூகப் புரட்சி இயக்கத்திற்குத் தலைமை தாங்கியவர் ஒரு பெண் வேங்கையல்லவா - அன்னை மணியம்மையார் அல்லவா - அவரை ஈன்றெடுத்த அந்த வரலாறு மின்னு கின்ற மண்ணிலே பெண்கள் மாநாடு என்கிறபோது, அதன் வீச்சு ஒரு வித்தியாசமாகத்தான் இருக்கும்.

மாநாட்டுத் திறப்பாளர் - கொடியேற்றுபவர் - தலைவர் - கருத்தரங்கம், பட்டி மன்றம் - கலை நிகழ்ச்சிகள் - தீர்மானங்களை முன்மொழிதல் வரை - முற்றிலும் பெண்கள்! பெண்களே!! கழக மகளிரணி - பாசறை அமைப்புகளைச் சேர்ந்த வீராங்கனைகளே!

மாநாட்டு நிறைவுரை நிகழ்த்தும் நமது தமிழர் தலைவர் அவர்கள் மட்டும்தான் விதி விலக்கு!

பேரணியிலும் பெண்களின் ஆதிக்கம்தான்! பெரியார் சமூகக் காப்பு அணி - அந்தச் சீருடையுடன் பெண்கள் இராணுவ மிடுக்குடன் ஏறு நடைபோட்டுச் செல்லும் காட்சியைக் காணக் கண்கள் கோடி வேண்டும்!

பெரியார் படைக்க விரும்பியது வெறும் புதுமைப் பெண்ணல்ல - புரட்சிப் பெண்ணே! சாயலில் கூட பெயரில் கூட ஆண்-பெண் என்ற வேறுபாடு கூடாது என்ற கருத் தைக் கூறிய தலைவரின் படை வரிசை வீராங்கணை களாயிற்றே!

அந்த மிடுக்கும் நடப்பும் ஒவ்வொரு அடியிலும் மின்னித் தெறிக்குமே!

இந்த வேலூருக்கு இதற்கு முன்பும் கூட முத்திரை பதித்த வரலாற்று மகுடங்கள் உண்டு. பெண்கள் மாநாடு வேலூருக்குப் புதியதும் அல்ல!

வடஆற்காடு மாவட்ட பார்ப்பனர் அல்லாத வாலிபர் மாநாடு இதே வேலூரில் 1929 ஆம் ஆண்டு ஜனவரி 5,6 ஆகிய இரு நாட்களிலும் நடைபெற்றுள்ளது. அந்த இரு நாள் மாநாடுகளிலும் தந்தை பெரியார் பங்கு கொண்டு கர்ச்சனை செய்துள்ளார்.

தமிழ் ஓவியா said...

திருமதி வடிவாம்பிகை தாமோதரம் தலைமையில் அப்பொழுது பெண்கள் மாநாடும் நடைபெற்றுள்ளது. இந்த அம்மையார், யார் என்றால் வேலூர் துணை ஆட்சியரின் (Deputy Collector) துணைவியர் ஆவார். அம்மாநாட்டில் பங்கு கொண்ட பெண்மணிகளின் பட்டியல் பெருமைக் குரியதாகவே இருக்கிறது. ஆண்டாளம்மாள் கிருஷ்ண சாமி நாயுடு, முனியம்மாள், ருக்மணியம்மாள் வீரராகவலு நாயுடு, பங்கஜம்மாள் குப்புராவ் நாயுடு, ராஜம்மாள் பரணிநாயுடு, பாக்யம்மாள் சுந்தரராஜூலு நாயுடு, கிருஷ்ணவேணியம்மாள், விஜயலட்சுமியம்மாள் பத்மநாப நாயுடு, சுப்பம்மாள் ராமய்ய ரெட்டி, துளசியம்மாள் கிருஷ்ண ரெட்டியார், மிஸ். வேணு அம்மாள் - விட்லு அம்மாள், சாரதாம்பாள் கஜேந்திர நாயுடு, ரத்னம்மா, வரலட்சுமி அம்மாள், மிஸ். சாவித்திரி அம்மாள், ஜெயம்மாள் சென்னகேசவலு நாயுடு, அம்மணியம்மாள் புண்ணியகோடி முதலியார், காவேரி அம்மாள் பெருமாள் நாயுடு, மிசஸ் செங்கம்மா, மிசஸ் சி.டி. நாயகம் சொர்ணகுமாரி, பாக்கியம்மாள் பத்ம நாபமுதலியார் போன்றவர்கள் அப்பெண்கள் மாநாட்டில் பங்கு கொண்ட பிரபல குடும்பங்களைச் சேர்ந்த பெண்மணிகள் ஆவர்.
பார்ப்பனர் அல்லாத வாலிபர் மாநாட்டில் நிறை வேற்றப்பட்ட பெண்ணுரிமை பற்றிய தீர்மானங்கள் கண் ணில் ஒற்றிக் கொள்ளத் தக்கவை!

5 (அ) நமது பெண்மணிகளுக்கு குடும்ப சொத்தில் ஆண்களைப் போலவே சரிபங்கு இருக்க வேண்டுமென்று இம்மாநாடு தீர்மானிக்கிறது.

(ஆ) விதவைகள் என்பவர்களுக்கும், அவர்களின் புருஷர்களுக்குள்ள சொத்துக்கள் முழுவதிலும் பூர்ண சுதந்திரம் இருக்கவேண்டும்.

(இ) பாகம்பிரியாத குடும்பங்களிலும் புருஷர்களுக்குக் கிடைக்கக்கூடிய சொத்துக்களின் உரிமை முழுவதும் அவர்கள் இறந்த பிறகும் அவர்களின் மனைவிகளுக்குக் கிடைக்க உரிமை இருக்க வேண்டும்.

(ஈ) ஆண்கள் தங்கள் மனைவிகள் காலம் சென்று விட்டால் மறு விவாகம் செய்து கொள்ள உரிமை இருப்பது போலவே எல்லாப் பெண்களுக்கும் புருஷன் இறந்து போனால் மறுவிவாகம் செய்து கொள்ள உரிமை இருக்க வேண்டும்.

(உ) ஜாதி வித்தியாசம் இல்லாமல் ஒவ்வொருவரும் தங்களுக்கு இஷ்டமான வகுப்பில் கலியாணம் செய்து கொள்ள பெண்களுக்கும், ஆண்களுக்கும் சம உரிமை இருக்க வேண்டும். இவ்விஷயங் களை ஒவ்வொரு வாலிபரும் பிரச்சாரம் செய்வதோடு சட்டசபை அங்கத்தினர் களையும் இந்தக் கொள்கைக்கு ஏற்றபடி அரசாங்கத்தில் சட்டம் இயற்றும்படி செய்ய வேணுமாய் இம்மகாநாடு கேட்டுக் கொள்கிறது.

(

தமிழ் ஓவியா said...

ஊ) ஒவ்வொரு வாலிபரும் கூடுமான வரை தங்களுக்கு ஏற்ற விதவைப் பெண்ணையே விவாகம் செய்து கொள்ள முயற்சி செய்ய வேண்டுமாய் இம்மகாநாடு கேட்டுக் கொள்கிறது.

(எ) பெண்களுக்கு 18 வயதும், ஆண்களுக்கு 24 வயதும் சென்ற பிறகே கல்யாணம் செய்ய வேண்டும் என்று இம்மகாநாடு தீர்மானிக்கிறது.

1929 செங்கற்பட்டு முதல் மாகாண சுயமரியாதை மாநாட்டில்தான் ஆண்களுக்கு நிகராக பெண்களுக்கும் சொத்துரிமை என்பது குறித்துத் தீர்மானம் நிறைவேற்றப் பட்டதாகப் பொதுவாகக் கூறப்படுவதுண்டு.

ஆனால் அம்மாநாட்டுக்கு 40 நாட்களுக்கு முன்னதாகவே நடைபெற்ற வேலூர் மாநாட்டிலேயே அத் தகைய முற்போக்குத் தீர்மானம் நிறைவேற்றப் பட்டதை எண்ணும் பொழுது அணுக்கள் எல்லாம் சிலிர்க்கின்றன!

பெண்கள் மாநாடு அதே வேலூரில் மீண்டும் ஒரு முறை 1938 (டிசம்பர் 26) இலும் நடைபெற்றுள்ளது. இந்தி எதிர்ப்புப் போரில் சிறைக் கோட்டம் ஏகிய மூதாட்டிகள் தருமாம்பாள், கொடியேற்றிட, நாராயணி யம்மாள் தலைமை யில் நடைபெற்றுள்ளது. தாமரைக் கண்ணியம்மையார் மாநாட்டுத் திறப்பாளர். இந்தி எதிர்ப்புப் போராட்டம் காரணமாக தந்தை பெரியார் அவர்கள் சிறைக் கோட்டத்தில் இருந்த அந்தக் கால கட்டத்தில் இந்தத் தமிழ்ப் பெண்கள் மாநாடு நடை பெற்றுள்ளது.

அந்தக் கால கட்டத்தில் பார்ப்பனர்கள் எவ்வளவு கேவலமாக நடந்து கொண்டனர் என்பதற்கு அம்மாநாட் டில் அமைச்சர் பி.டி.ராஜன் பற்றி நிறைவேற்றப்பட்ட தீர்மானமே சான்றாகும்.

1. சிறை சென்ற பெரியார் ஈ.வெ.ரா. தொண்டர்கள், தாய்மார்கள் ஆகியோரை இம்மாநாடு பாராட்டுகிறது.

2. இந்தி எதிர்ப்பிற்காகச் சிறை வைக்கப்பட்டுள்ள எல்லோரையும் நிபந்தனையின்றி உடனே விடுதலை செய்யுமாறு அரசாங்கத்தாரை வற்புறுத்துகிறது.

3. குழந்தைகட்குப் பால் கிடைக்குமென்று கருதியே பெண்கள் குழந்தைகளுடன் சிறைக்கு வருகிறார்கள் என்று மந்திரி கனம் டாக்டர் ராஜன் கூறியதை வாபஸ் வாங்கிக் கொண்டு மன்னிப்புக் கேட்கவேண்டும்; இன் றேல் மந்திரி பதவியை விட்டு ராஜிநாமா செய்யவேண்டும் என இம்மாநாடு தீர்மானிக்கிறது.

4. விதவை மணத்தையும், கலப்பு மணத்தையும் இம்மா நாடு பெரிதும் ஆதரிப்பதுடன், பால்யமணம் செய்தல் கூடாதெனத் தமிழ் மக்களை வேண்டிக் கொள்கிறது.

பெண்களின் உரிமைகளுக்காக மாநாடு கூட்டுவது - போர்ப்பறை கொட்டுவது - தீர்மானங்களை நிறைவேற்று வது - பேரணி நடத்தி முழக்கமிடுவது என்பது போன்ற முற்போக்கு நடவடிக்கைகள் அனைத்தையும் செய்தது - இந்தியத் துணைக் கண்டத்திலேயே தமிழ்நாட்டில்தான் - அதற்குக் காரணம் புரட்சித் தந்தை பெரியாரும், திராவிடர் இயக்கமும்தானே!
திராவிடத்தால் வீழ்ந்தோம் என்று அனுமார்தன மாகக் கூச்சல் போடுவோர் சிந்தித்துப் பார்க்க வேண்டும்!
எல்லாவற்றிற்கும் பதிலடி கொடுப்போம்! போர் முரசறைவோம் வாரீர் - வேங்கைப் பாய்ச்சலாக வேலூரை நோக்கி! கடல்காணா வேலூர் - பெண்கள் சமுத்திர மாகத் தத்தளிக்கட்டும்! வாரீர்! வாரீர்!! 23-5-2012