Search This Blog

13.5.12

மாற்றங்கள் வாழ்வில் அவசியமே! - பெரியார்பெரியார் அவர்கள் மணமக்களை வாழ்த்தி அறிவுரை கூறுகையில் குறிப்பட்டதாவது:-

எங்களுடைய முயற்சிக்கு முன்வரை இந்த நாட்டில் நமக்கு சம்பந்தமில்லாத பார்ப்பனர்கள் நம்மை அடிமைப்படுத்த ஏற்படுத்திய முறையில் தான் இத்தகைய நிகழ்ச்சிகளை நடத்தி வந்தோம்.

சுயமரியாதை இயக்கம் தோன்றிய பிறகு தமிழர்களின் வாழ்வில் சகல துறைகளிலும் புரட்சிகரமான மாறுதல் செய்ய முற்பட்டது போலவே, இந்தத் திருமண முறையிலும் இப்படிப்பட்ட மாறுதல் செய்யப்படுகின்றது. எங்களின் இந்த மாறுதல் திருமண முறையானது இன்றைக்கு தமிழ் மக்களிடம் தக்கபடி செல்வாக்குப் பெற்று வருகின்றது.

நாம் தமிழ் மக்கள், தமிழ் நாட்டுக்குரிமையான மக்கள், இப்படிப்பட்ட நமக்கு இத்தகைய நிகழ்ச்சிக்கு என்ன முறைதான் இருந்தது என்று கூறுவதற்கில்லை. நம்மிடையே பார்ப்பனர்கள் இடைக்காலத்தில் தான் புரோகித முறையினைப் புகுத்தினார்கள். இந்த முறை நம்மை மடையர்களாக, இழிமக்களாக வைக்கவே ஏற்படுத்தப்பட்ட முறையாகும். எங்கள் முயற்சியானது இவற்றை எல்லாம் ஒழிக்க வேண்டும்.

மனிதன் தனது தேவைக்கு ஏற்ப, வசதிக்கு ஏற்ப பல துறைகளிலும் மாறுதல் ஏற்படுத்திக் கொள்ளுவதுபோல திருமணத் துறையிலும் வசதிக்கு ஏற்ப, தேவைக்கு ஏற்ப மாற்றியும், சுருக்கிக் கொள்ளவும் வேண்டும்.

சுயமரியாதை திருமணத்தின் மூலம் பெண்ண டிமையும், அர்த்தமற்ற மூட நம்பிக்கைகளும் நீக்கப் படுகின்றது. நமது இனஇழிவு ஆனது நீக்கப்படு கின்றது என்று எடுத்துரைத்தார். மேலும் பேசுகையில், மணமக்கள் சிக்கனமாகவும், வரவுக்குள் அடங்கிய செலவு உள்ளவர்களாகவும், பகுத்தறிவு உணர்ச்சி உடையவர்களாகவும், மற்றவர்களுக்கு உதவுபவர்களா கவும் வாழ வேண்டிய அவசியம் பற்றி தெளிவுபடுத்தி அறிவுரையாற்றினார்.


--------------------28.6.1963 அன்று திருச்சியில் நடைபெற்ற திருமண விழாவில் தந்தை பெரியார் அவர்கள் ஆற்றிய அறிவுரை - "விடுதலை" 9.7.1963

2 comments:

தமிழ் ஓவியா said...

கலப்பு மணம் கூடாதாமே!

கலப்பு மணம், பெண் சொத்துரிமைச் சட்டங்கள் ரத்துச் செய்யப்பட வேண்டும்.

- கொங்குவேளாளக் கவுண்டர்கள் பேரவைத் தீர்மானம் கரூரில் இப்படி ஒரு பேரவை கூடி தீர்மானங்களை நிறைவேற்றியுள்ளது.

கலப்புத் திருமணம் செய்து கொள்வதால் கொங்கு வேளாளர் மக்களின் கலாச்சாரம் கெட்டுப் போய் விடுகிறதாம். பெண்களுக்குச் சொத் துரிமை அளிப்பதால் கொங்கு வேளா ளர்களின் நிலவுடைமை பாதிக்கப் படுகிறதாம்.

இந்த 21ஆம் நூற்றாண்டிலும் இப்படியெல்லாம் பேசுபவர்களும், தீர்மானம் போடுபவர்களும் இருக் கிறார்கள் என்பது ஆச்சரியத்துக்கும், அதிர்ச்சிக்கும் உரியதே!

என்னதான் பார்ப்பனர் அல்லாதார் ஜாதிப் பெருமைப் பேசினாலும், இந்து சமூக அமைப்பில் நாம் எல்லோரும் சூத்திரர்கள் - பஞ்சமர்கள்தானே! இந்த ஜாதி உணர்வைக் கட்டிக் காக்க ஆசைப்பட்டால் - நிலையான சூத்திரத் தன்மைக்கு அஸ்திவாரம் போட்டு அடுக்குமாடிக் கட்டுகிறோம் என்று பொருளாகாதா?

இந்துசமூக வருணாசிரம அமைப்பில் மட்டத்தில் உசத்தி என்ற நிலைப்பாட்டில் மகிழ்ந்து குலவப் போகிறோமா?

தேவாங்கன், முதலியாரைப் பார்த்து கைக்கோளப்பயல் என்கி றான்.முதலியார் தேவாரங்களைப் பார்த்து சேடப்பயல் என்கிறான் - இருவரும் தெலுங்கர்களைப் பார்த்து வடுகப்பயல் என்கிறான்! - என்று தந்தை பெரியார் அவர்கள் சேலம் விக்டோரியா மார்க்கெட் மைதானத்தில் பேசினாரே - இன்றைக்கு 72 ஆண்டு களுக்கு முன் (குடிஅரசு 28.4.1940) அதுதான் இப்பொழுதும் பொருந்து கிறது!

திராவிட லெனின் என்று தந்தை பெரியார் அவர்களால் போற்றப்பட்ட டாக்டர் டி.எம். நாயர் அவர்கள் புகழ் பெற்ற சென்னை சேத்துப்பட்டு ஸ்பர்டஸ் சாலை உரையில் (1919) ஒன்றை அழகாகக் குறிப்பிட்டாரே!

ஆரியக்கூட்டம், திராவிடக் கூட்டத் தைவிட மிக மிகச் சிறியதானாலும் அவர்கள் கையாண்ட போராயுதங் களான - தூரத்திலிருந்தும், மறைந்தும் தாக்கக்கூடிய வில் அம்புகளுக்கு முன்னால், பக்கம் நின்று போராட மட்டும் கூடியதான திராவிடர் போரா யுதங்களான வாள், வேல் பலனளிக் காது போகவே, பரதேச ஆரியர் வென் றனர். சுதேச திராவிடர் தோற்றனர்.
இவ்வாறாகவும் சாம, பேத, தான, தண்டமென்னும் ஆரிய சதுர்வித உபாயங்கள் மூலமும் திராவிடர்களின் ஒற்றுமையையும் குலைக்கலாயினர்.

எப்படியென்றால், திராவிடர் களிலேயே சிலருக்குச் சில இடங்களில் வர்ணாசிரம முறையின்கீழ் உயர்வுகள் கொடுத்தனர். உதாரணமாக, நம் தலைவர் பி. தியாகராய செட்டியாரின் இனமான நெசவாள திராவிடர்களை, தேவாங்க பிராமணர்களென்றனர். பட்டு நூல் வியாபாரிகளை, சவுராஷ்டிர பிராமணர்களென பிரமோஷன் கொடுத் தனர். திராவிடப் பொற்கொல்லர்களை, விஸ்வ கர்ம பிராமணர்களென்று மாற்றினர்.

திராவிட விவசாயிகளை வன்னிய குல சத்திரியர்களென்றும், பற்பல தொழிலில் ஈடுபட்டிருந்த திராவிடர் களை கவுரவ சத்திரியர் (நாயுடு, ரெட்டி)களென்றும், வியாபாரங்களில் ஈடுபட்டிருந்த திராவிடர்களை, (கோமுட் டிகளை) ஆரிய வைசியர்களென் றும் பிரித்தனர்.


திராவிட நாட்டுக்கோட்டை செட்டிமார்களை, தன வைசியர் களென்றும், இதேபோல், வடநாட்டிலும் தங்களுக்குக் கங்காணி வேலை செய்யத் தயாரென்று சொன்ன திராவிடர்கள் பலரை பூமிஹார் பிராமணர் களென்றும், நாய் பிரா மணர் களென்றும், விவசாயத்தில் ஈடுபட்டவர்களை குர்மி சத்தி ரியர்களென்றும், ராஜபுத்திர சத்திரியர் களென்றும், மகாஜன வைசியர்களென்றும் பலவாறாகப் பெயர் சூட்டி திராவிடர்களுக்குள்ளேயே - கோட்டைக்குள்ளேயே குத்து வெட்டு, போட்டா போட்டியும், பொறாமையும் ஏற்படுத்தினர்.

இவ்வாறாக திராவிட இன ஒற்றுமையை நாளாவட்டத்தில் சின்னாபின்னப்படுத்தி, பிரித்து ஆளல் முறையைக் கையாண்டு, இத்திராவிட நாட்டையும், திராவிட மக்களையும் அடிமை கொண்டு, அன்றிலிருந்து இன்றுவரை ஆரியர்கள் ஆக்கிரமித்துக் கொண்டு இந்தியாவின் புரோப்பரைட்டர்களாகி விட்டிருக்கின் றனர் என்றார் டாக்டர் டி.எம். நாயர்.

இவற்றைப்பற்றி எல்லாம் நம் அருமை கொங்கு வேளாள மக்கள் சிந்திக்க வேண்டாமா? அவர்களில் படித்தவர்கள் இல்லையா? பகுத்தறிவா ளர்கள் - இளைஞர்கள் இல்லையா? உமது முதுகில் ஏன் பூணூல்? நீ மட்டும் ஏன் கர்ப்பக் கிரகத்தில் நுழைய வேண்டும்? என்று பார்ப்பனர்களைப் பார்த்துக் கேட்க வேண்டிய இளைஞர்கள் இப்படித் தறி கெட்டுத் தீர்மானம் போடலாமா?

ஜாதி அடையாளத்தைத் தூக்கி எறிந்து நாம் மனிதர்கள் என்ற ஒப்பரவு நிலையை அடைய வேண்டாமா?

ஆரியம் விதைத்த பார்த்தீனியம் எவ்வளவுப் பெரிய விபரீத முதலைக் கிணற்றில் நம் மக்களைத் தள்ளி விட்டது! பெரியாரைத் துணைக் கோடல் - என்றார்.

திருவள்ளுவர் - பெரியாரின் வெளிச்ச உலகத்துக்கு வாருங்கள் சந்திர மண்டலப் பயணத்துக்குத் தயாராகுங்கள். ஜாதிச் சகதிக்குள் சாய வேண்டாம்! எந்த ஜாதியாக இருந்தாலும் இந்து பார்ப்பன வருணாசிரமத் தர்மத்தின்படி நாம் எல்லோரும் சூத்திரர்கள் தான். இந்த இழிவை ஒழிப்பைத் தோள் தட்டுக! 13-5-2012

தமிழ் ஓவியா said...

திருமணம்


திருமணத் தகவல் - இலவச சேவை - மணமகன் தேவை என்ற விளம்பரம். இப்படி ஒரு விளம்பரம் இந்து நாடார், சி.எஸ்.அய். நாடார் மண மகன்களுக்கு மணமகள் தேவை என்று வெளிவந்துள்ளது. மணமகளின் ஊர் - கல்வித் தகுதி - தேவையான கல்வித் தகுதி (மணமகன்) என்றெல்லாம் விவரம் தெரிவிக்கப்பட்டதுகூட சரி. கடைசியாகத் தரப்பட்ட விவரத்தின் தலைப்பு - பெண் உரிமை என்று போட்டு, 40 பவுன் 50 பவுன் என்று வெளியிடப்பட்டுள்ளது. சிலருக்கு நேரில் என்று குறிப்பிட்டுள்ளது.

மறைமுகமாக பெண்களை இழிவுபடுத்தும் செயல் அல்லவா இது? பெண் முதுகலைப் பட்டம் பெற்று இருந்தாலும் பொறியியல் பட்டம் பெற்று இருந்தாலும்கூட பெண்ணுக் காக இத்தனைப் பவுன் நகை போடுவ தாக விளம்பரம் செய்வது சட்டப்படி சரியானதுதானா?

கல்வி வளர்ந்திருந்தாலும் சமூகத் தின் மனப்பான்மை வளரவில்லை என்பது வெட்கக் கேடு அல்லவா!

படித்த பெண்கள் இதனை எப்படி அனுமதிக்கிறார்கள்? பெண்ணுரிமை பேசும் மற்ற மற்ற அமைப்புகள் இது பற்றி ஏன் குரல் கொடுக்கவில்லை? 12-5-2012