Search This Blog

27.5.12

பறையன் பட்டம் போகாமல் சூத்திரப்பட்டம் போகாது என்றவர் பெரியார்-5
21-ஆவது காங்கிரஸ் மாநாடு 1925 நவம்பர் 21, 22 நாட்களில் காஞ்சிபுரத்தில் நடக்க இருந்த நிலையில் (அம் மாநாட்டில் இருந்துதான் தந்தை பெரியார் காங்கிரசை விட்டு வெளியேறுகிறார்) அம்மாநாட்டுக்கு வருகை தருமாறு யாருக்கு அழைப்பு கொடுக்கிறார் தந்தை பெரியார்?

தீண்டாதார்

பிராமணரல்லாத இந்துக்களுடைய வகுப்புவாரி பிரதிநிதித்துவத்தை விட தீண்டாத சமூகத்தின் வகுப்பு வாரி பிரதிநிதித்துவம் மிகவும் முக்கிய மானது என்பதை நாம் கோபுரத்தின் மீதிருந்தும் சொல்வோம். ஏனெனில் சமூகப் பெருக்கத்திற்குத் தக்கபடி கல்வியிலோ, உத்தியோகத்திலோ, மற்றும் பல பொது வாழ்க்கையிலோ, அவர்கள் முன்னேறவேயில்லை. இதன் காரணத்தினால் தேசத்தில் 5-இல் ஒரு பாகம் ஜனங்கள் தேச நலத்தை மறந்து சர்க்காரின் தயவை நாடி அன்னிய மதத்தில் போய் விழுந்து நமக்கு எதிரிகளாய் முளைத்துக் கொண்டு வருகிறார்கள். சுயகாரியப் புலிகளுக்கு இதைப் பற்றி கவலையிராதுதான். பொறுப்புள்ள பொது மக்கள் இதைக் கவனியாமல் விடுவது தேசத் துரோகமென்றும் எவ்வளவோ பெரிய பாவிகளென்றும் தான் சொல்ல வேண்டும். சுமார் இருபத்தைந்து வருடங்களுக்கு முன்பாகவாவது இச்சமூகங்களுக்கு வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் அளிக்கப்பட்டிருக்குமே யானால், இன்றைய தினமும் இந்தியாவில் இருக்கும் இவ்வளவு அபிப்பிராய பேதங்களும் ஒற்றுமையின்மையும் பிரிட்டிஷ் கொடுங்கோன்மையும், பிராமணக் கொடுமையும், நமது நாட்டில் இருக்குமா? தெருவில் நடக்கக்கூடாத மனிதனும், கண்ணில் தென்படக் கூடாத மனிதனும் அவனவன் மதத்தை அறியக் கூடாத மனிதனும், அவனவன் தெய்வத்தைக் காணக் கூடாத மனிதனும் இந்தியாவில் இருக்கக் கூடுமாவென்பதை பொது நோக்குடைய ஒவ்வொருவரும் யோசிக்க வேண்டுமென்பதோடு ராஜீய மகாநாட்டில் இதை வலியுறுத்தி அமுலுக்குக் கொண்டு வரும்படி செய்ய வேண்டியது தேசபக்தர்களின் கடமையென்பதை வணக்கத்துடன் மீண்டும் தெரிவித்துக் கொள்கிறோம்.
---------------------------குடிஅரசு -08.-11.-1925

பார்ப்பனரல்லாத மக்களுக்கான வகுப்பு வாரி உரிமை என்று வரும் போது, அதில் தீண்டப்படாத மக்களின் வகுப்பு வாரி பிரதிநிதித்துவம்தான் முக்கியம் என்பதைக் கோபுரத்தின் மீதிருந்தும் சொல்வோம் என்றாரே - இதைவிட தந்தை பெரியாரைப் புரிந்து கொள்வதற்கு என்ன வேண்டும் சோதரரே!

15.11.1925 அன்று மற்றுமொரு அறிக்கையையும் வெளியிட்டுள்ளார் பெரியார்.

காஞ்சிபுரம் தமிழர் மகாநாடுகள்

காஞ்சிபுரத்தில் 31 ஆவது ராஜீய மாநாடு நாளது நவம்பர் மாதம் 21, 22ஆம் தேதிகளான சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் சென்னை நவசக்தி ஆசிரியர் ஸ்ரீமான் திரு.வி. கலியாண சுந்தர முதலியாரவர்கள் அக்ராசனத்தின் கீழ் கூடும்.

அது சமயம் சர்வ கட்சியார்களு மடங்கிய பிராமணரல்லாதார் மகா நாடொன்றும் கூடும்.

பிராமணல்லாதார் முன்னேற்றத்தில் கரிசனமுள்ள தமிழ் நாட்டுப் பிராமணரல்லாதார் அனைவரும் வந்திருந்து, தங்களது முன்னேற்றத் திற்கான ஒரு திட்டத்தைக் காணவும், அதைச் சரிவர அமுலுக்குக் கொண்டு வரவும் ஏற்பாடு செய்ய வேணுமாய்க் கேட்டுக் கொள்கிறேன்.

இது விஷயத்தில் ஒவ்வொருவரும் தங்கள் ராஜீய அபிப்பிராய பேதங் காரணமாகவாவது, சொந்த அசவு கரியம் காரணமாகவாவது அலட்சிய மாய் இருந்து விடாமல் கண்டிப்பாய் வரவேண்டுமாய் மறுபடியும் வினயத் துடன் கேட்டுக் கொள்கிறேன்.

தீண்டாமையை ஒழிக்கவேண்டியது பிராமணர் அல்லாதாருக்கு மிகவும் முக்கியமானதொரு கடனாகும். ஏனெனில், தீண்டாதார்களின் முன் னேற்றந்தான் பிராமணரல்லாதார்களின் முன்னேற்றமாகும். தீண்டாதார்களின் துன்பந்தான் பிராமணரல்லாதாரின் துன்பமாகும். தீண்டாமை ஒழிவதன் மூலமாய்த்தான் பிராமணரல்லாதார் கடைத்தேற முடியும். தீண்டாமை ஒழிவதன் மூலமாய்த்தான் நாடு சுய ராஜ்யமடையும். ஆதலால், தீண்டாமை விலக்கில் கவலையுள்ளவர்களும், தீண்டாதாரென்னு சொல்லப்படுபவரும் அவசியம் காஞ்சிபுரத்திற்கு வந்து அதற்கென்று ஓர் மாநாடு கூட்டி காரியத்தில் பலன் தரத்தக்க திட்டங்களைக் காண வேண்டுமாயும் கேட்டுக் கொள்ளுகிறேன்.

--------------------------------------ஈரோடு ஈ.வெ. ராமசாமி 15--.1.1-25

காங்கிரசை விட்டு வெளியேறி சுயமரியாதை இயக்கம் கண்ட தந்தை பெரியார் அவர்கள் 1929 பிப்ரவரி 17, 18 ஆகிய நாட்களில் செங்கற்பட்டில் முதல் மாகாண சுயமரியாதை மாநாட்டினைக் கூட்டினார். அம் மாநாட்டுக்காக பெரியார் விடுத்த அழைப்பில்கூட முக்கியமாக எதைக் குறிப்பிடுகிறார்?

தனிப்பட்ட ஸ்திரீகளும், தங்களை விதவைகள் என்றோ, வேசிகள் என்றோ நினைத்துக் கொண்டு இருப் பவர்களும் அவசியம் வரவேண்டு மென்று கேட்டுக் கொள்கிறோம். தவிர அரசாங்க உத்தியோகஸ்தர்களும் அதிகாரிகளும் கண்டிப்பாய் வர வேண்டியது மிகவும் அவசியமாகும் என்று தெரிவிப்பதோடு, இந்த மாநாடு எவ்வழியிலும் அரசியல் மாநாடு என்ப தல்ல என்றும் அவர்களுக்கு உறுதி கூறுகின்றோம். அன்றியும் அரசாங்க சட்டமெம்பர் திவான் பகதூர் கனம் கிருஷ்ண நாயர் அவர்களும் மற்றும் பல பெரிய அதிகாரிகளும் வரச் சம்மதித்து இருக்கிறார்கள்.

முக்கியமான இம்மாநாட்டில் யோசித்து தீர்மானிக்கப்படும் விஷ யங்கள் என்னவென்றால் சமத்தும், சமஉரிமை, சமசந்தர்ப்பம், சிக்கனம், அன்பு, இரக்கம், ஒழுக்கம் ஆகிய வை ஏற்படவும் குருட்டு நம்பிக்கை, மூடப் பழக்க வழக்கம், தீண்டாமை, பெண் அடிமை ஆகியவை எடுபடவும், எளியோரை வலியோர் அடக்கி ஆளாமலும், பாமரர்களைப் படித்தவர்கள் ஏமாற்றாமலும், ஏழைகளை செல்வந்தர் கொடுமைப் படுத்தாமலும் இருப்பதற்கும் பகுத்தறிவு வளர்ச்சி பெறவும் தன் முயற்சியில் நம்பிக்கை உண்டாகவுமான தன்மை கள் போன்ற விஷயங்களேதான் அங்கு நடைபெறும். ஆகையால் இவைகளை அரசியல் விஷயமென்று யாரும் சொல்ல முடியாது. அரசியல் விஷயம் என்று ஏதாவது சொல்ல வந்தால் அது மேல் கண்ட விஷ யங்கள் நிறைவேறி அமுலுக்கு வர அரசாங்கத்தின் உதவி ஏதாவது வேண்டியிருந்தால் அந்த அளவுக்கு அதுவும் அரசாங்கத்தின் ஆதரவை எதிர்பார்க்கும் அளவுக்கு ஏதாவது பேசப்படுமே ஒழிய வேறு ஒன்றும் நடைபெறாது என்று உறுதி கூறுகிறோம்.

இந்த 3, 4 வருஷத்திய மகாநாடு களில் இதுவே முக்கியமான மகாநாடாக இருக்கும். அன்றியும் இனி நமது பிரச்சாரமும் வேலைத் திட்டமும் எப்படி இருக்க வேண்டும் என்பதும் இம்மகாநாட்டில்தான் முடிவு செய்யப்படும். ஆதலால் செங்கல்பட்டு மாநாட்டிற்கு எல்லோரும், முக்கியமாய் வாலிபர்களும், பெண்களும், தாழ்த்தப் பட்டவர்களும் அவசியம் வர வேண்டுமாய் வேண்டிக் கொள் ளுகின்றோம்.
------------------------------------------குடிஅரசு -13-.01.-1929

தாழ்த்தப்பட்ட மக்களின் உரிமை மீது தந்தை பெரியார் அவர்களுக்கு இருந்த அக்கறைக்கு யார் சான்றிதழ் கொடுக்க வேண்டும்? 1929 செங்கற் பட்டு முதல் சுயமரியாதை மாநாடு தொடங்கி, இன்றுவரை திராவிடர் கழக மாநாட்டுத் தீர்மானங்களையெல்லாம் கொஞ்சம் அசைபோட்டுப் பாருங்கள்.

செங்கற்பட்டு சுயமரியாதை மாகாண மாநாடு 1929 தீர்மானம்-7:

மனித நாகரிகத்திற்கும், தேச முன்னேற்றத்திற்கும் தடையான தீண்டாமை என்பதை ஒழித்து எல்லா ரஸ்தாக்கள், குளங்கள், கிணறுகள், பாடசாலைகள், சத்திரங்கள், தண்ணீர்ப் பந்தல்கள் முதலிய பொது ஸ்தாபனங் களைத் தட்டுத் தடங்கலின்றி அனுபவிக்க சகல ஜனங்களுக்கும் சம உரிமை கொடுக்கவேண்டும் என்று தீர்மானிக்கிறது.

தீர்மானம் -21:
தீண்டாதார் எனப் படுவோருக்கு சர்க்காரில் காலியாகும் உத்தியோகங்களில் முதல் உரிமை கொடுக்க வேண்டும் என்று தீர்மானிக் கிறது.

ஈரோடு இரண்டாவது சுயமரியாதை மாநாடு 10.5.-30இல் நடைபெற்றபோது வடித்தெடுக்கப்பட்ட தீர்மானம்:

தீர்மானம் - இ:

தீண்டாமை என்னும் கொடுமை மனித தர்மத்திற்கு விரோத மென்று இம்மகாநாடு கருதுவதுடன், ஜனசமூகத்தில் எந்த வகுப்பாருக்கும் பொது உரிமைகளை மறுக்கும் பழக்க வழக்கங்களை உடனே ஒழிக்க வேண்டுமென்றும், பொது ரஸ்தாக்கள், குளங்கள், கிணறுகள், தண்ணீர்ப் பந்தல்கள், கோயில்கள், சத்திரங்கள் முதலிய இடங்களில் சகலருக்கும் சம உரிமை வழங்கவேண்டுமென்றும் இம் மாநாடு தீர்மானிக்கிறது.

1931--இல் விருதுநகர் மாநாடு இயற்றிய தீர்மானம்:

தீர்மானம் -இ: தீண்டாமை என்பது இந்து சமூகத்திலுள்ள சகல சாதி களையும் பிடித்த நோயென்றும், தீண்டாமை ஒழிய வேண்டுமானால் பிராமணீயம் ஒழிய வேண்டுமென்றும் இம்மாநாடு தீர்மானிக்கிறது.

4-.8-.1940இல் திருவாரூரில் நடைபெற்ற மாநாட்டின் தீர்மானம்:

தீர்மானம் 6: ஆதி திராவிடர் சமு தாயத்திற்கு சர்க்காரால் அளிக்கப்பட்ட தனித் தொகுதி காப்பு முறை பூனா ஒப்பந்தத்தால் அழிக்கப்பட்டு, அச் சமுதாயத்திற்குச் சரியான பிரதிநிதி வரமுடியாமல் செய்யப்பட்டு விட்டதால் இனி வரும் தேர்தல்கள் யாவற்றிற்கும் தனித் தொகுதி முறையையே ஏற்படுத்த வேண்டுமென்று சர்க்காரைக் கேட்டுக் கொள்ளுகிறது.

தீர்மானம் -9: திராவிட நாட்டு ஆதிதிராவிடர்களை அரிஜனங்கள் என்ற பெயரால் அழைப்பதை மாற்றி ஆதிதிராவிடர்கள் என்ற பெயரா லேயே அழைக்க வேண்டு மென்று சர்க்காரையும் பொது ஜனங்களையும் கேட்டுக் கொள்ளுகிறது.

தீர்மானம் -10: தற்போது உள்ள வகுப்புவாரி பிரதிநிதித்துவ எண் ணிக்கை திராவிடர்களுக்கும் ஆதி திராவிடர்களுக்கும் மிகக் குறைவாக இருப்பதால் ஜனசங்கைக்கு ஏற்படி அவ்விகிதங்கள் ஏற்படுத்தப்பட வேண்டுமென்றும், அவ்விகிதப்படி உத்தியோகங்கள் அடையும் வரை அதிகமாகப் பிரதிநிதித்துவம் அடைந் திருக்கும் கூட்டத்தாருடைய நிய மனம் நிறுத்தி வைக்கப்பட வேண்டு மென்றும் சர்க்காரைக் கேட்டுக் கொள்ளுகிறது.

சேலத்தில் 27.-8.-44இல் நடைபெற்ற மாநாட்டில் உருவாக்கிய தீர்மானம்:

தீர்மானம் (1) : மக்கள் பிறவியினால் சாதிபேதம் கற்பிக்கப்பட்டிருப்பதையும், அவற்றுள் உயர்வு, தாழ்வு கற்பிக்கப்பட்டிருப்பதையும், இக்கழகம் மறுப்பதோடு, அவைகளை ஆதரிக் கிற, போதிக்கிற, கொண்டிருக்கிற மதம், சாஸ்திரம், ஸ்மிருதி, புராணம், காவியம் என்பவை முதலாகிய எவைகளையும் பொதுமக்களும் குறிப்பாக நமது கழகத்தவர்களும் பின்பற்றக் கூடா தென்றும் தீர்மானிக்கிறது.

29-.9-1945 திருச்சியில் நடைபெற்ற மாநாட்டுத் தீர்மானம் வருமாறு:

திராவிட நாட்டிலுள்ள மக்கள் யாவரும் ஜாதி, வகுப்பு அவை சம்பந்தமான உயர்வு, தாழ்வு இல்லாமல் சமுதாயத்திலும் சட்டத்திலும் சம உரிமையும் சம சந்தர்ப்பமும் பெற்று சம வாழ்வு வாழச் செய்ய வேண்டும்.

இந்தத் தீர்மானங்கள் எல்லாம் எவற்றின் அடிப்படையில்? தாழ்த்தப்பட்டவர்கள் மீது திராவிடர் கழகத் துக்கு அக்கறை இல்லை என்றால் இந்த மாநாடுகளும், முயற்சிகளும், உழைப்பும், பொருள் செலவும் எவற்றுக்காக?

இந்திய அரசியல் சட்டத்தில் அண்ணல் அம்பேத்கர் அவர்களின் கடுமையான முயற்சியால் வேலை வாய்ப்பில் மட்டும்தான் இட ஒதுக்கீடு 16(4) கொண்டு வர முடிந்தது. காரணம் அரசியல் சட்ட வரைவுக் குழு உறுப் பினர்களில் பெரும்பாலானவர்கள் பார்ப்பனர்களே!

தந்தை பெரியார் தலைமையில் திராவிடர் கழகம் கடுமையாகப் போராடியதன் விளைவாகத்தானே இந்திய அரசியல் சட்டம் முதன் முதலாகத் திருத்தப் பட்டது! கல்வி யிலும் இட ஒதுக்கீடு 15(4) என்கிற நிலைமை கொண்டு வரப்பட்டது. கல்வியில் இட ஒதுக்கீடு இல்லா விட்டால், உத்தியோக சாலைகளுக்குள் நுழைவது எப்படி?

திராவிடர் இயக்கம் இந்தத் துறையில் பொறித்துள்ள சாதனை முத்திரைகள் ஒன்றா இரண்டா?

****************************************


தாழ்த்தப்பட்டோர் - தந்தை பெரியார் சிந்தனைகள்


பறையன் பட்டம் போகாமல் சுத்திரப்பட்டம் போகாது! பறையன் பட்டம் போகாமல் உங்களுடைய சூத்திரப் பட்டம் போய்விடும் என்று கருதுவீர்களேயானால் நீங்கள் வடிகட்டின முட்டாள்களேயாவீர்கள். மற்றும் பேசப் போனால், பறையன், சக்கிலி என்பதற்கு இன்னார்தான் உரிமை என்றும், அது கீழ்ஜாதி என்பதற்கு இன்னது ஆதாரமென்றும் சொல்லுவதற்கு ஒன்றுமேயில்லை. கைபலமே ஒழிய, தந்திரமே ஒழிய வேறில்லை. உங்கள் சூத்திரப் பட்டங்களுக்கும் கடவுள், மதம், சாஸ்திரம், புராணம், இதிகாசம் ஆகிய அநேக ஆதாரங்கள் உண்டு. இத்தனையையும் நாசமாக்கி அடியோடு ஒழித்தாலல்லாமல் உங்கள் தலையில் இருக்கும் சூத்திரப் பட்டம் கீழே இறங்காது. ஆகவே, யாருக்காவது மான உணர்ச்சி இருந் திருந்தால், நீங்கள் சாதியை ஒன்றாக்குகிறீர்களே என்று நம்மைக் கேட்டிருக்க மாட்டார்கள்.

ஆகவே, ஆதித் திராவிடர் நன்மையைக் கோரிப் பேசப்படும் பேச்சுகளும் செய்யப்படும் முயற்சிகளும் ஆதிதிராவிடரல்லாத மக்களில் பாப்பனரல்லாத எல்லோருடைய நன்மைக்கும் என்பதாக உணருங்கள்.

------------------------தந்தை பெரியார் -குடிஅரசு 11-.10.-1931

29.-9-.35 அன்று சேலம் ராசிபுரம் ஆதிதிராவிடர் மாநாட்டில் பெரியார் தலைமையுரை:

அரசாங்கத்தால் வழங்கிய சீர்திருத்தத்தில் உங்களுக்கு சுயமரியாதை உள்ள சீர்திருத்தம் இருந்தது. அதை தேசாபிமான சீர்திருத்தம் என்னும் பூனா ஒப்பந்தம் பாழாக்கிவிட்டது.

பூனா ஒப்பந்ததை உங்களில் சிலர் ஆதரிப்பது எனக்கு ஆச்சரியமாய் இருக்கிறது. அதற்கு அவர் கள் சொல்லும் காரணம் மிகமிக ஆச்சரியமாய் இருக்கிறது.

அதாவது நீங்கள் மேல் ஜாதிக்காரர்களைப் போய் ஓட்டுக் கேட்க வேண்டுமாம். மேல் ஜாதிக் காரர்கள் உங்களை வந்து ஓட்டு கேட்க வேண்டுமாம். இதில் பரஸ்பர நோக்கம் ஏற்படுமாம்.

இது மைனா பிடிக்கிற வித்தையே ஒழிய இதில் நாணயமோ, அறிவுடைமையோ இல்லை. பார்ப்பனர் அதிகாரியாக இருக்கின்ற கச்சேரிக்குள் நீங்கள் போகவேண்டுமானால் சர்க்கார் உத்தரவும், பொதுத் தெருவில் நீங்கள் நடக்க வேண்டுமானால் பீனல் கோட் சட்டமும் வேண்டி இருக்கிறது. நீங்கள் பார்ப்பன அக்கிரகாரத்தில் நடந்து போய் அவர்கள் வீட்டு வாசல் நடை கடந்து உள் ஆசாரத்தில் படுத்து வயிற்றைத் தடவிக் கொண்டிருக்கும் பார்ப்பானிடம் போய் ஓட்டுக் கேட்க முடியுமா?

------------------- 16-.6.19-29 - கள்ளக்குறிச்சி தென்னார்க்காடு மாவட்ட ஆதி திராவிட மாநாட்டில் திறப்பாளராக இருந்து பெரியார் அவர்கள் ஆற்றிய உரையின் ஒரு பகுதி:

மேற்கண்ட மதமும், கடவுளும் வந்து குறுக்கிடுகின்றன. ஆதலால் இந்நிலைக்கு ஆதாரமானதென்று சொல்லப்படும் மதத்தையும், கடவுளையும் எதிர்த்து நின்று அவற்றை அழித்தால் ஒழிய, வேறு மார்க்கமில்லை என்று பதிலளிக்கவும் ஒழுக்கமாகவும், தைரியமாகவும், தெளிவாகவும் இருந்தாலொழிய வேறு மார்க்கத்தில் முடியவே முடியாது. அன்றியும் உங்களுக்கு சுயமரியாதை உணர்ச்சி வேண்டும். நாம் ஏன் தாழ்த்தப் பட்டவர்கள்? நாம் ஏன் ஒருவரை சாமி என்று கூப்பிட வேண்டும்? என்கிற உணர்ச்சி வர வேண்டும். நீங்களும் மற்றவர்களைப் போல மனிதர்கள்தான் என்று கருதவேண்டும் என்று மனிதர்களாக வாழவேண்டிய வழிமுறைகளை வகுத்துக் கொடுத்தவர் தமிழகத்தில் பெரியார் தாம் என்பதை எவராலும் மறுக்க முடியாது.

நம் நாட்டிலுள்ள தாழ்த்தப்பட்டோரின் தலைவர்கள் என்று கூறிக் கொள்பவர்களே தாழ்த் தப்பட்டோரின் விடுதலையையே குறிக்கோளாகக் கொண்டுள்ள திராவிடர் இயக்கத்தையும், திட்டத் தையும், என்னைப் பற்றியும் வீணாகப் பழிக் கின்றார்கள் என்றால் வடநாட்டுப் பிடிப்பிலுள்ள டாக்டர் அம்பேத்கரைப் பற்றி நாம் குறை கூறமுடியுமா?

என்னையோ, அல்லது திராவிடர் இயக் கத்தையோ வீணாகக் குறை கூறினாலும், இல்லா விட்டாலும் ஒன்று கூறுகிறேன். தோழர்களே! திராவிட இயக்கம் தனது கடைசி மூச்சிருக்கும் வரையில் இந்த நாட்டில் பள்ளன், பறையன் என்ற இழிசாதிகளை ஒழித்து அவர்களை முன்னேற்றவே உழைக்கும் என்ற உறுதியை வழங்குகிறேன். தாழ்த்தப்பட்டோர் பெடரேஷனில் சேருவதை யான் இன்னும் வேண்டாமென்று கூறவில்லை. அதில் வரும் நன்மைகளையும் நீங்கள் அடையுங்கள்.

திராவிடர் கழகத்தில் தாழ்த்தப்பட்டோர் சேர்ந்தாலும் சேராவிட்டாலும் அதன் உழைப்பின் பலனை அனுபவிக்கதாழ்த்தப்பட்ட தோழர்களுக்கு உரிமை உண்டு.

------------------------------பெரியார், விடுதலை 8-.7-.1947


---------------------- கவிஞர் கலி. பூங்குன்றன் அவர்கள் 26-5-2012 “ஞாயிறுமலரில் எழுதிய கட்டுரை

6 comments:

தமிழ் ஓவியா said...

கருத்துச் சுதந்திரம், நடமாடும் சுதந்திரம் பறிப்பு, சிறுவர்கள் கடத்தல், பெண்களுக்கு எதிரான பாகுபாடு இதுவே இன்றைய இலங்கையில் நிலவும் சூழல்! விரைவில் டெசோ மாநாடு கலைஞர் அறிவிப்பு

சென்னை, மே 28- இலங்கைத் தீவில் நடைபெறும் உரிமைப் பறிப்புகளை எடுத்துக்காட்டி தனியீழமே தீர்வு - விரைவில் டெசோ மாநாடு என்று அறிவித்துள்ளார் தி.மு.க. தலைவர் கலைஞர். இதுபற்றி இன்றைய முர சொலியில் கலைஞர் அவர்கள் எழுதியிருப்பதாவது:

கேள்வி:- இலங்கைத் தமிழர்களுக்கு தனித் தமிழ் ஈழம் அமைந்தால்தான் விடிவு ஏற்படும் என்று நீங்கள் சொல்வதை நிரூபிப் பதைப் போல தொடர்ந்து அங்கே தமிழர்கள் சித்ரவதை செய்யப் படுவதாக இன்று கூட ஏடுகளில் செய்தி வந்திருக்கிறதே?

கலைஞர்:- அமெரிக்க வெளி யுறவுத் துறை அமைச்சர் ஹிலாரி கிளிண்டன் 200 நாடுகளில் மனித உரிமை நிலை குறித்த 2011ஆம் ஆண்டுக்கான அறிக்கையை வாஷிங்டன் நகரில் வெளியிட்டி ருக்கிறார். அந்த அறிக்கையில், 44 பக்கங்களுக்கு இலங்கை அரசு மீது கடுமையான குற்றச்சாட்டுகள் கூறப்பட்டுள்ளதாம். குறிப்பாக, தமிழர்கள் பெரும் பாலும் வசிக்கும் பகுதிகளில் சிங்கள ராணுவம் மற்றும் அரசு ஆதரவு குழுக்கள் சட்டத்திற்குப் புறம்பாகச் செயல்பட்டு கொலை களை நிகழ்த்தி வருகின்றன. இதன் மூலம் மனித உரிமை மீறல்கள் நடைபெற்றுள்ளன. அரசியல் நோக்கம் கருதி இந்தக் குழுக்கள் இயங்குகின்றன. விடுதலைப் புலிகளின் அனுதாபிகள் என கருதப்படுவோர் துன்புறுத்தப் படுகிறார்கள். ஏராளமானவர்கள் காணாமல் போவது இங்கு முக்கிய பிரச்சினையாக உள்ளது. முந் தைய ஆண்டுகளில் ஆயிரக்கணக் கில் காணாமல் போயுள்ளனர். இதற்கு அரசு தரப்பில் எந்தப் பொறுப்பும் ஏற்கப்படவில்லை. சிங்கள ராணுவக் கண்காணிப்பில் தடுப்பு முகாம்களில் வைக்கப் பட்டுள்ள தமிழர்கள் துன்பப் படுத்தப்படுகின்றனர். அரசு அதிகாரிகளால் பொது மக்கள் கைது செய்யப்பட்டு சிறை வைக்கப்படு கிறார்கள். இவ்வாறு கைது செய்யப்படுவோரில் பலர் விசாரணையின் போது மரணம் அடைந்துள்ளனர். நீதி விசார ணையின்றி ஏராளமான தமிழர் கள் சிறை வைக்கப்பட்டுள்ளனர். உண்மையான நீதி மறுக்கப் படுவது பெரும் பிரச்சினையாக உள்ளது. தமிழர்களின் தனிப்பட்ட உரிமைகளில் அரசு தலையிடு கிறது. பத்திரிகை சுதந்திரம் நசுக்கப்படு கிறது. கருத்து சுதந் திரம், ஒன்று கூடும் உரிமை, நட மாடும் சுதந்திரம் போன்றவற்றிற்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. பெண்களுக்கு எதிரான பாகுபாடு உள்ளது. சிறுவர்களைக் கடத்துதல், தவறாகப் பயன்படுத்துதல் போன்ற சம்பவங்கள் இங்கு மிகப் பெரிய பிரச்சினையாக உள்ளது. மனித உரிமை மீறல்களால் எண்ணில டங்காத தமிழர்கள் பாதிக்கப் பட்டுள்ளனர் என்று ஹிலாரி கிளிண்டன் வெளியிட்ட அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாக இன்று ஏடுகளில் வெளி வந்துள் ளது. மேலும் இலங்கைக்கான பிரிட்டிஷ் துதர் ஜான் ரான்கின், இலங்கையில் தமிழர் அதிகம் வசிக்கும் வடக்கு, கிழக்குப் பகுதிகளில் இலங்கை ராணுவம் அதிகம் குவிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்திருக் கிறார். இதுபற்றி இன்று தினமணி வெளியிட்ட செய்தியில், ஈழத் தமிழர்களுக்கு எதிராக கொடூரங்களை நிகழ்த்து வதாக இலங்கை அரசின் மீது ஏற்கெனவே பல்வேறு குற்றச் சாட்டுகள் உள்ள நிலையில், பிரிட்டிஷ் தூதர் வெளியிட்டுள்ள தகவல் மேலும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது என்று குறிப் பிட்டுள்ளது. அமெரிக்காவும், பிரிட்டனும் தெரிவித்துள்ள இப்படிப்பட்ட கருத்துக்களுக்கிடையே இலங்கை அதிபர் மகிந்தா ராஜபக்ஷே, வெளிநாடுகளின் நெருக்குதல் களை ஏற்று இலங்கையில் ராணு வத்தை குறிப்பிட்ட இடங்களில் இருந்து வாபஸ் பெற முடியாது என்று சொல்லியிருப்பது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சு வதைப் போல உள்ளது. இதையெல்லாம் பற்றி விவாதித்து முடிவெடுக்கத் தான் டெசோ மாநாட்டினை விரைவிலே கூட்டுவதாக அறிவித் திருக்கிறோம்.28-5-2012

தமிழ் ஓவியா said...

வேலூர் அழைக்கிறது!

அருமைத் தோழர்களே! நாளை வேலூர் மாநகரிலே திராவிடர் கழக மகளிரணி மற்றும் மகளிர் பாசறை சார்பில் புத்துலகப் பெண்கள் மாநில மாநாடு முழு நாள் நிகழ்ச்சியாக நடைபெற உள்ளது.

தோழர்கள் என்ற சொல்லை இருபாலருக்கும் பயன்படுத்தினார் தந்தை பெரியார் என்பதும், உலகிலேயே புதுமைதான் - புரட்சிதான்!

புரோகிதத்தைத் தவிர்த்த சுயமரியாதைத் திருமணத்தைத் அறிமுகப்படுத்தியதோடு அல்லாமல் பெண்களையே தலைமை வகித்து அத்தகைய திருமணங்களையும் நடத்தும் ஒரு புரட்சியையும் செய்து வைத்தார் அந்த உண்மை யான புரட்சித் தலைவர்.

1930-இல் ஈரோட்டில் நடைபெற்ற இரண்டாவது சுயமரியாதை மாகாண மாநாட்டுப் பந்தலிலேயே சிவகாமி - சிதம்பரனார் திருமணத்தை தோழர் நாகம்மையார் நடத்தி வைப்பார் என்று முன்மொழிய அன்னை நாகம்மையார் அதனை நடத்தியும் வைத்துள்ளார்.

அது ஒரு புரட்சித் திருமணமாகும். சிவகாமி அம்மையார் கணவனை சிறு வயதிலேயே இழந்த வர். அந்தக் கால கட்டத்தில் விதவைப் பெண் ணுக்குத் திருமணம் என்பது நினைத்தே பார்க்க முடியாத அசாதாரண நிகழ்வாகும்.

பெண்கள் உரிமைபற்றி தந்தை பெரியார் சிந்தித்ததுபோல - கருத்துக்கள் கூறியதுபோல உலக வரலாற்றில் வேறு யாரும் சிந்தித்து இருக்கவும் முடியாது; பெண்களுக்காகப் போராடிய வர்களும் கிடையாது.

சுயமரியாதைத் திருமண மேடையைக்கூட தந்தை பெரியார் அவர்கள் பெரும்பாலும் பெண்களின் உரிமைகளுக்கான குரல் கொடுக்கும் ஒரு களமாகவே பயன்படுத்தினார் என்றே சொல்ல வேண்டும்.

இந்த மேடையில் தந்தை பெரியார் அவர்களால் வலியுறுத்தப்பட்ட பல கொள்கைகள், திட்டங்கள் பிற்காலத்தில் சட்டங்களாக மலர்ந்து மணம் வீசிக் கொண்டிருக்கின்றன.

பெண்களுக்குக் கல்வி உரிமை, உத்தியோக வாய்ப்பு, சொத்துரிமை, விவாகரத்து உரிமை, விதவைத் திருமணம், திருமண வயது, கர்ப்ப ஆட்சி என்று பெண்கள் பற்றித் தொடாத துறையில்லை என்று சொல்லும் அளவுக்குப் பல மணி நேரங்கள் திருமண மேடையில் பேசிய சாதனையாளர் தந்தை பெரியார்.

அதனால்தான் பெண்களே மாநாடு கூட்டி அவருக்குப் பெரியார் என்ற பட்டத்தை அளித்துப் பெருமை பெற்றார்கள்.

தமிழின மக்களின் நலம் சார்ந்த உரிமை வாழ்வுக்காகத் தம்மை ஒப்படைத்துக் கொண்ட தந்தை பெரியார் அவர்களை நீண்ட காலம் வாழ வைப்பதற்காகத் தம் வாழ்வை முற்றிலும் அர்ப் பணித்தவர் அன்னை மணியம்மையார் அவர்கள்.

அவர்கள் பிறந்த வேலூர் மண்ணில் நாளைய தினம் பெண்கள் புத்துலக மாநில மாநாடு பல்வேறு சிறப்பு அம்சங்களுடன் நடைபெற உள்ளது. கருத்தரங்கம், பட்டிமன்றம், பேரணி, கலை நிகழ்ச்சி, பொது மாநாடு என்று முற்றும் பெண்களே கலந்து கொள்ளும் புரட்சி மாநாடு இது!

கழகத் தலைவர் என்ற முறையில் தமிழர் தலைவர் மட்டும்தான் விதிவிலக்காக இம்மா நாட்டில் பங்கு ஏற்கிறார்.

புரட்சிகரமான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளன. பெண்கள் சந்திக்கும் அத்துணைப் பிரச்சினைகளுக்கும் தீர்வு காணும் உண்மையான புரட்சி மாநாடு இது.

கழகத் தோழர்களே, ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் நீங்கள் வர வாய்ப்பு இல்லை என்றாலும் வீட்டுப் பெண்களைக் கண்டிப்பாக மாநாட்டுக்கு அனுப்பி வையுங்கள்.

கோடை விடுமுறை நாள் என்பதால் மாணவி களையும் கண்டிப்பாக அனுப்பி வையுங்கள்.

திராவிடர் கழகத்தைத் தவிர வேறு எந்த அமைப்பாலும் இத்தகைய மாநாட்டை நடத்திட முடியாது. ஏன்? அப்படிச் சிந்திக்கக் கூட முடியாது.

நமது இயக்க வரலாற்றில் மிகவும் வித்தியாசமாக நடக்க இருக்கும் இந்த மாநாட்டை நோக்கி கட்சி களுக்கு அப்பாற்பட்டு அனைத்துப் பெண்களும் குவியட்டும்! குவியட்டும்!!

கழக மகளிர் மற்றும் பாசறைப் பொறுப்பாளர்கள் மட்டுமல்ல; அனைத்துப் பெண்களும் ஒன்று திரளட்டும். நாடெல்லாம் பேசப்படும் இந்த மாநாட் டுக்கு வரத் தவறாதீர்!28-5-2012

தமிழ் ஓவியா said...

உலக மயமாகும் பெரியார் கொள்கை - லட்சியங்கள்!

மலேசிய திராவிடர் கழகத்தின் புத்தெழுச்சி தமிழர் தலைவர் இரண்டு நாள் சூறாவளி சுற்றுப் பயணம்!

(நமது சிறப்புச் செய்தியாளர்)


சிங்கப்பூர், மே 27-சிங்கப்பூரில் கடந்த 18 ஆம் தேதி மாலை ஜோரோங் வட்டார நூலகத்தின் அரங்கில் மலேசியா-சிங்கப்பூரில் பெரியார் சுற்றுப் பயணம் 1929 -1954 நூல் வெளியீட்டு விழாவை முடித்துக் கொண்ட பிறகு, 19-5-2012 சனிக்கிழமை காலை சிங்கப்பூரிலிருந்து விமானம் மூலம். மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் மாலை நடைபெற்ற மலேசிய திராவிடர் கழக 65 ஆம் ஆண்டு விழா, கழகக் கட்டட மீட்புக்கான நிதி நன்கொடை நிகழ்வுகளை உள்ளடக்கிய ம.தி.க.வின் விழாக்களில் கலந்து கொள்ள தமிழக திராவிடர் கழகத் தலைவர், தமிழர் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்கள் அன்று காலை 11.30 மணி அளவில் அடைந்தார்.

விமான நிலையத்தில் வரவேற்புகோலாலம்பூர் விமான நிலையத்தில் மலேசிய திராவிடர் கழக தேசியத் தலைவர் பி.எஸ்.மணியம், துணைத் தலைவர் மு.சு.மணியம், பொதுச் செயலாளர் கே.ஆர்.அன்பழகன், துணைப் பொதுச் செயலளார் பிரகாஷ் ஆகியோர் வரவேற்று அழைத்துச் சென்று, நிகழ்ச்சி நடைபெற விருக்கும் ஓட்டலில் தங்க வைத்தனர்.

நலம் விசாரிப்பு

தமிழர் தலைவருடன் சிங்கப்பூர் பெரியார் சேவை மன்றத் தலைவர் வி.கலைச் செல்வம், அதன் நிர்வாக உறுப்பினர் ராஜராஜன் ஆகியோரும் சென்றனர்!. மாலை 6 மணி அளவில், உடல் நலம் தேறி வரும் டத்தோ சுப்ரா என்று அனைவராலும் அழைக்கப்படும் டத்தோ எஸ்.சுப்பிரமணியம் அவர்களது இல்லத்திற்கு தேசியத் தலைவர் மற்றும் தோழர்களுடன் சென்று, கண்டு, அவரது உடல் நலத்தை அவரது வாழ்விணையரிடம் விசாரித்து, உரையாடி தேநீர் அருந்திவிட்டுத் திரும்பினர்.
சுமார் இரவு 7 மணி அளவில், மலேசிய வெளி உறவுத் துணை அமைச்சர் திரு. கோகிலன் பிள்ளை அவர்கள் தமிழர் தலைவர் தங்கியிருந்த அறைக்கே வருகை தந்து, நலம் விசாரித்து நீண்ட நேரம் உரையாடிக் கொண்டிருந்து, சுமார் இரவு 8 மணி அளவில் நிகழ்ச்சி அரங்கிற்கு ஒன்றாகவே சென்றனர்!

தமிழ் ஓவியா said...

குடும்பம் குடும்பமாகப் பங்கேற்பு

மலேசியாவின் ஒரு முனையின் கடாரம் (கெடா) பகுதி, பினாங்கு தொடங்கி ஜோகூர்பாரு மறுமுனை வரை உள்ள பற்பல மாநிலக் கிளைக் கழகப் (பிரதிநிதிகள்) பேராளர்கள், பொறுப்பாளர்கள் குடும்பம் குடும்பமாக நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

ஒரு வட்ட மேசைக்கு 10 பேர் என 50 மேசைகளில் அனைவரும் அமர்ந்த நிலையில் விழாவின் மேடை அருகில் இருந்த வட்ட மேசைகளில் தமிழர் தலைவர், துணை அமைச்சர் டத்தோ கோகிலன்பிள்ளை, டத்தோ சரவணன், பல்வேறு ம.இந்தியன் காங்கிரஸ், இந்திய சுதந்திரக்கட்சி, கிரேகன் கட்சி தலைவர்கள் பலரும் அமர வைக்கப்பட்டு நிகழ்ச்சிகள் துவங்கின. வேறு ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள துணை அமைச்சர் கோகிலன் அவர்கள் விடைபெற்றுச் சென்றார்!

அனைவரையும் பொதுச் செயலாளர் கே.ஆர்.அன் பழகன் வரவேற்று உரையாற்றிய பின் தலைமை உரையைத் ம.தி.க.தேசியத் தலைவர் பி.எஸ். மணியம் அவர்கள் சுருக்கமாக நிகழ்த்தி, துணை அமைச்சர் டத்தோ சரவணன் அவர்களைத் தொடங்கி வைக்குமாறு கேட்டுக் கொண்டார்.உடனடியாக 20 ஆயிரம் மலேசிய வெள்ளி நன்கொடை!

கட்டட மீட்புக்குத் தேவைப்படும ஒரு லட்சத்து 20 ஆயிரம் மலேசியா டாலர் வெள்ளி (சு.ஆ.) என்று தேசியத் தலைவர் கூறினார். டத்தோ சரவணன் அவர்கள் தனது நன்கொடையாக 20 ஆயிரம் மலேசிய வெள்ளிக்கான காசோலையை உடனே அளித்து, மிகச் சிறப்பான எழுச்சி உரையாற்றித் துவக்கி வைத்தார்கள்.

அதற்கடுத்து, வாழ்த்துரை சிறப்புரை நிகழ்த்தினார் தமிழர் தலைவர். சுமார் 35-40 நிமிட உரையை வந்த அத்துணைப் பேரும் உற் சாகம் கரை புரள வரவேற்றுக் கைதட்டி மகிழ்ந்தனர்.

தொய்வு நீங்கியது

கடந்த 23 ஆண்டுகளாக மலேசிய திராவிடர் கழகத் தின் தொய்வு நீக்கப்பட்டு, முன்பு போல வீறு நடை போட்டு, பெரியார் தம் கொள் கைகள் மலேசிய மண்ணுக்கு மட்டுமின்றி உலகத்திற்கே எப்படி தேவைப் படும் மனித நேயக் கொள்கை என்பதை விளக்கினார்.ஊக்கமூட்டும் புத்தாக்க உரை

புத்தாக்கமும், புத்துணர்ச்சியும் கழகம் பெற அது பெரும் ஊக்க உரையாக அமைந்தது என்று கூறி, கலந்து கொண்ட மூத்த கழகத் தொண்டறச் செம்மல்கள் மிகவும் மகிழ்ந்தனர்.

விழுவது முக்கியமல்ல, உடனடியாக எழுவதே முக்கியம். எதிர்நீச்சலில் வெற்றி பெறுவதுதான் ஈரோட்டு ஏந்தலின் இயக்கத்தின் வாடிக்கை என்று விளக்கினார் தமிழர் தலைவர்.

மூத்த கழகப் பொறுப்பாளர்களுக்குச் சிறப்பு!

மூத்த கழகப் பொறுப்பாளர்கள் பலரும் பாராட்டப் பெற்றனர் - மூவர் பெருமைப்படுத்தப்பட்டனர்.

தமிழர் தலைவர் அம்மூவரையும் வாழ்த்தி - பொன்னாடை போர்த்தி மாலை அணிவித்தார்.

(1) 83 வயது நிரம்பிய மந்திங் நடராசனார்,

(2) 77 வயதுள்ள ஜோகூர் மாநில கூலாய் பகுதி குணமணி,

(3) 75 வயதான தொண்டர் திலகம் கழக ஆலோசகர் எஸ். சுப்பிரமணியம்

ஆகியோருக்கு சிறப்புச் செய்யப்பட்டது மகுடம் போன்ற வரலாற்று பெருமை மிக்க நிகழ்ச்சியாகும்.

தமிழ் ஓவியா said...

விருந்து (ஊடிரசளந னுநேச) பல்வேறு வகைகளைக் கொண்டு அடுக்கடுக்காக பரிமாறப்பட்ட நிலை ஒரு புறம், இசை நிகழ்ச்சி, கலை நிகழ்ச்சிகள், முக்கியப் பொறுப்பாளர்களின் உரைகள் மறுபுறம் மேடையில் என்று இடைவிடாது நடந்த வண்ணமே இருந்தன.

பாசமும், பரிவும் போட்டி போட்டன!

பல மாநிலங்கள், முக்கிய நகரங்களிலிருந்து வந்த கழகப் பொறுப்பாளர்கள் மிகவும் பாசத்துடனும், பரிவுடனும் ஆசிரியரிடம் நலம் விசாரித்து, சிறிது நேரம் மேசைக்கே வந்து நின்று ஒளிப் படங்களையும் எடுத்துக் கொண்டே இருந்தனர்! தேசியத் தலைவர் குறுக்கிட்டு அண்ணனை சாப்பிடவிடமாட்டீர்களா? என்று அன்புடன் கேட்டார்!

இரவு 11.30 மணி வரை இவர்களது அன்பு நீண்ட வண்ணம் இருந்தது. பிறகே அனைவரிடமும் விடை பெற்று அறைக்குச் சென்று நள்ளிரவு 12 மணி அளவில்தான் உறங்கி னார்கள்!

மறுநாள் காலை 10 மணி அளவில் கோலாலம்பூரில் உள்ள ஆசிரியரின் பழைய நண்பர்களில் ஒருவரான இளையான்குடி முக்குமின் புத்தகக் கடை உரிமை யாளர் அவர்களை நேரில் சந்தித்து நலம் விசாரித்து, சில புத்தகங்களைப் பெற்று திரும்பி மதிய உணவுக்குப் பின் சிறிது நேரம் ஓய்வுக்குப் பின் மாலை 4 மணி அளவில் தேசியத் தலைவர் திரு.பி.எஸ்.மணியம் இல்லம் சென்று, குடும்பத்தாருடன் தேநீர் அருந்திவிட்டு, முதல் மாநில நிகழ்ச்சியான மந்திங் திராவிடர் கழகக் கிளையில் 65 ஆம் ஆண்டு விழா. சுயமரியாதை வீரர் 83 வயது நடராசனாருக்குப் பாராட்டு விழா, மாணவர் களுக்கு பரிசளிப்பு விழாவில் கலந்து கொள்ளப் புறப்பட்டனர்!

வழிநெடுக கடும் மழை. காரோட்டினார்கள் ம.தி.க. தலைவரும், பொதுச் செயலாளர் அன்பழகன் அவர்கள்.

சீனப் பிரமுகர்களும் பங்கேற்பு

காஜாஸ் வழியாக பல்வேறு கிராமங்கள், நகரங்களைக் கடந்து மந்திங் நகருக்குள் சுமார் மாலை 5.30 மணி அளவில் அடைந்தனர். நிகழ்ச்சி கெய்ரோ தமிழ் பள்ளி கட்டடத்தில் மிகச் சிறப்புடன் நடை பெற்றது.

அப்பகுதி நகராண் மைக் கழக உறுப்பினர் கான் என்ற சீனப் பிரமு கரும், கழகத் தலைவர் களை வரவேற்று உரை யாற்றினார்.

தமிழ் ஓவியா said...

மலாக்கா - ஜாசீன் நகர் நிகழ்ச்சி

அங்கே முதுபெரும் பெரியார் பெருந்தொண் டர் நடராசனாரைப் பாராட்டி வாழ்த்தி தமிழர் தலைவர் உரையாற்றி, மாணவர்களுக்குக் கல்வி பற்றியும், கழக வளர்ச்சி பற்றியும் உரையாற்றி விட்டு மாலை 6.45 மணிக்கு தேநீர் விருந்து முடித்து, சிரம்பான் வழியாக 200 கிலோ மீட்டர் தூரம் உள்ள மலாக்கா - ஜாசீன் நகர் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள மழையிலும் வேகமாகப்பயணம் செய்து, இரவு 7.30 மணி நிகழ்ச்சிக்கு, இரண்டு மணி நேர கால தாமதம் ஆனதால், இரவு 9.30 மணிக்கு ஜாசீன் ஓட்டல் அரங்கிற்குள் ஏற்பாடாகி இருந்த நிகழ்வில் கலந்து கொண் டனர்.

தமிழ்நாடு போல வர வேற்பு தாரைத் தப்பட்டை கொம்பு முழக்கம், கொட்டு மேள முழக்கம் - பட்டாசு வெடிச் சத்தம்.

ஓட்டலுக்குள் அழைத்து நிகழ்ச்சியினைத் துவக்கி னார் தேசிய துணைத் தலை வர் காந்தராஜ் அவர்கள்.

அப்பகுதி சட்ட மன்ற உறுப்பினர்(மலேசிய காங்கிரஸ்) டத்தோ பெரு மாள் அவர்களும், முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர் முனுசாமி அவர்களும், ஏராள மான தோட்டப் பகுதி தொழி லாளர்களும், பல கட்சி பிரமுகர்களும் அவ்வளவு நேரம் தாழ்ந்தும் காத்தி ருந்தது, தாமதமாகச் சென்ற எங்களை அதிரச் செய்தது!

கழகக் கொள்கையாளர்கள்

ஜாசீனைச் சுற்றி ஏராளமான தோட்டப் புறங்கள் - அதில் உள்ள பலரும் கழக கொள்கையினர் என்பது கூடியிருந்த மக்களின் கரைபுரண்டு ஓடிய உற்சாகத்தின் மூலம் தெரிய வந்தது!

துணைத் தலைவர் காந்த்ராஜ் அவர்கள் அப் பகுதியில் கழகத்தின் அரண்போல் பாதுகாத்து வளர்த்துள்ளார். முதுபெரும் பெரியார் பெருந் தொண்டர் முனுசாமி அவர்கள் பாராட்டப் பெற்றார்.

தமிழர் தலைவரை வரவேற்ற கழகத் துணைத் தலைவர் காந்த்ராஜ், 1982 ஆம் ஆண்டு இதற்கு முன் வருகை தந்தார் தமிழர் தலைவர். அதற்கடுத்து 30 ஆண்டுகள் கழித்து இப்போது வருகை தருவது எங்களுக்கு மிகுந்த ஊக்கத்தினையும் உற்சாகத்தி னையும் தருகிறது என்று குறிப்பிட்டார்.

காலதாமதத்திற்கு மன்னிப்புக் கேட்டு உரையை இரவு 9.45 க்கு தொடங்கி இரவு 10.30 மணிக்கு முடித்தார் தமிழர் தலைவர்.

விசித்திர அனுபவம்

அதன் பிறகு அனைவரிடமும் விடை பெற்று, மலாக்கா வந்தடைந்தார். மலாக்காவில் கழகப் புரவலர்களில் ஒருவரான ஜோகூர்பாரு டத்தோ பாலகிருஷ்ணன் அவர்கள் வரவேற்று, இரவு உணவுக்கு ஒரு ஓட்டலுக்கு அழைத்துச் சென்று இரவு 11.30 மணி அளவில் விருந்தளித்தார். (இவர் மலேசிய திராவிடர் கழகக் கட்டட மீட்பு நிதியாக தேசியத் தலைவர், பொதுச் செயலாளரிடம் 5 ஆயிரம் மலேசிய வெள்ளிகளை அளித்தார் என்பது குறிப்பிடப்பட்டது மேடையிலே பிறகு இரவு 12.15 மணிக்கு கார்மூலம் - சிங்கப்பூருக்கு ( 200 கி.மீ.தூரம்) பயணமாகி, சிங்கப்பூர் இல்லத்திற்கு விடியற்காலை 3 மணி அளவில் வந்து சேர்ந்தார்.

தமிழ்நாட்டை விடக் கடுமையான சுற்றுப் பயணம் இது என்பது அவருடன் சென்றவர்களுக்கும் ஒரு விசித்திர அனுபவமாகும்!
மலேசியாவின் சிலாங்கூர், மலாக்கா, ஜோகூர்பாரு - முதலிய பல மாநிலங்களில் ஒரே நாளில் அமைந்து பின் மறுநாடான சிங்கப்பூரில் முடிந்தது!28-5-2012