Search This Blog

26.5.12

ஆராய்ச்சியே அறிவைப் பெருக்கும்!-பெரியார்


மனிதன் மற்ற உயிர் வர்க்கங்களில் இருந்து மாறுபட்ட தனி அறிவு படைத்திருப்பவன். அதாவது பகுத்தறிவைக் கொண்ட வன். நமக்கு இந்த பகுத்தறிவு இருந்தாலும் இந்த அறிவு மற்ற நாட்டுக்காரர்களையும் மேல்நிலைக்குக் கொண்டு போகப் பயன்படுகின்றது. நமக்கு இந்த அறிவு இருந்தும் மிருகப் பிராயத்துக்குப் போகத்தான் பயன்படுகின்றது.

நம் மக்களின் அறிவை வளர்க்க, நல்ல நிலைக்குத் திருப்பிவிட எவனும் தோன்றவும் இல்லை. பாடுபடவுமில்லை. எத்தனையோ மகான்கள், மகாத் மாக்கள், தெய்வீக அம்சம் பொருந்தியவர்கள், ரிஷிகள் தோன்றினார்கள். ஒருவன்கூட இந்தப் பணிக்கு உதவவில்லை. மாறாக, நம்மை மடமையில் ஆழ்த்தத்தான் பயன்பட்டார்கள்.

நாங்கள்தான் மக்களுக்கு அறிவு ஏற்படும்படி தொண்டு செய்கின்றோம். எனது அனுபவத்தையும் அரசியலில் நான் கண்ட பித்தலாட்டமும் கண்டு தான் எனது பணியை மக்களை அறிவு பெறும்படிச் செய்து சிந்திக்கச் செய்யக்கூடிய வேலையினை மேற்கொண்டு விட்டேன்.

எனக்கு மேம்பட்ட அறிவாளிகள், விஷயங்கள் தெரிந்தவர்கள் ஏராளம் இருந்தாலும் ஒருவனும் இந்த வேலைக்குத் துணியவில்லையே. இந்த நாட்டில் சோத்துக்கும், கூழுக்கும் மக்களுக்கு வகை இல்லை என்றால் எப்படி? இருக்கின்றதைப் பங்கிட்டுக் கொடுத்தால் உணவுப் பண்டம் பற்றாதா? ஏன் இல்லை? இருக்கிறதை பங்கிட்டுக் கொடுத்தால் செல்வம் போதாதா? மக்களுக்கு வீடு இல்லை, வீடு இருப்பதைப் பங்கிட்டுக் கொடுத்தால் வீடு போதாதா? இருந்தும் பின் எது இல்லை? அறிவு என்பது ஒன்றுதானே இல்லை. இந்த அறிவு ஏற்பட எங்களைத் தவிர எவன் பாடுபடுகின்றான்? உங்களுக்குச் சோறு வேண்டுமா? எனக்கு ஓட்டு கொடு. உங்களுக்கு பணம் வேண்டுமா? எங்களுக்கு ஓட்டு கொடு. உங்களுக்கு வீடு வேண்டுமா? எங்களுக்கு ஓட்டு கொடு! என்று பித்தலாட்டமாகக் கூறி ஓட்டுக் கேட்கத்தானே வருகின்றார்களே ஒழிய, எவன் உண்மையை எடுத்துச் சொல்லுகின்றான். மனிதனுடைய அறிவு கோயிலிலோ, குளத்திலோ, புராணங்களிலோ இல்லை. ஆராய்ச்சியில், சிந்தனையில் தான் உள்ளது.

தோழர்களே! இன்றைய அரசியல் என்ன? எந்தக் கட்சிக் காரன் ஆனாலும் தேர்தலில் ஜெயிக்கணும் என்பதே நோக்கமாயிருக்கிறான். இதைத் தவிர எவனாவது கொள்கையைச் சொல்லுகிறானா?

--------------ஜனவரி 19, 24, 26 ஆகிய தேதிகளில் மதுரை, திண்டுக்கல், சேலம் ஆகிய நகரங்களில் நடைபெற்ற பொதுக்கூட்டங்களில் தந்தை பெரியார் அவர்கள் ஆற்றிய விளக்கவுரை - விடுதலை 8.2.1964

7 comments:

தமிழ் ஓவியா said...

கா. அப்பாத்துரையார்தமிழ் ஆண்டைப் போலச் சிந்துசமவெளி மக்களுக்கு ஆண்டுப் பிறப்பு தை மாதத் திலேயே தொடங்கிற்று. சுமேரியருக்கு இராசிகள் பத்தாயிருக்க, சிந்து சமவெளி மக்களுக்கு எட்டேயிருந்தன. இதனால் சிந்துவெளி நாகரிகத்தின் பழைமை கி.மு. 5610 வரை எட்டுவதாக தெரிகிறது. இது சுமேரிய நாகரிகம் பிறப்பதற்கு ஆயிரக்கணக் கான ஆண்டுகளுக்கு முற்பட்ட காலமாகும். மனித நாகரிகத்தின் பிறப்பிடமும், வளர்ப்புப் பண்ணையும் எகிப்தோ, பாபிலோனோ அல்ல சிந்துவெளியும் தென்னாடுமே என்பதை, இது அறுதியிட்டுக் காட்டு கிறது. (தென்னாடு கா. அப்பாத்துரை பக்கம் 48).

இதன் மூலம் தை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டு என்பதை நிறுவுகிறார் பன்மொழிப் புலவர்.

திராவிட இந்தியா ஒன்று நீங்கலாக இவ் வளவு பழமைக்காலம் முதல் இன்றளவும் தழைத்து வரும் நாகரிகம் உலகில் வேறெதுவும் கிடையா தெனலாம். திராவிடமாவது இந்தியப் பரப்பு முழுவதிலு மிருந்து படிப்படியாகத் தேய்வுற்றுத் தென் கோடி யில் ஒரு கோடி மக்கள் அளவிலேயே உயிர்ப்புடன் நிலவுகின்றது.

(உலக இலக்கியங்கள் கா. அப்பாத்துரையார் பக்கம் 28).

1920ஆம் ஆண்டில் கில்பர்ட் சிலேட்டரால் எழுதப் பெற்ற கூந னுசயஎனையை நுடநஅநவே ஐனேயை ஊரடவரசந என்ற நூலைப் பன்மொழிப் புலவர் கா. அப்பாத் துரையார் 1955ஆம் ஆண் டில் மொழி பெயர்த்துள் ளார். அவருக்கே உரிய முறையில் ஆங்காங்கே விளக்கங்கள் ஆய்வுலகின் புதிய முடிவுகள் ஆகிய வற்றை அடிக்குறிப்பாகவும் தந்துள்ளார். திராவிடர் இந்தியாவுக்கு வெளியே யிருந்து வந்திருக்க வேண் டும் என்ற தவறான கருத்தை ஆராய்ச்சியாளர் பலர் கொண்டிருந்தனர் என்று கூறுவதோடு இந் தியாவினுள் படையெடுத்து வந்த எவரும் இந்தியாவின் தொல்குடிகளைப் போல மேம்பட்ட நாகரிகம் உடைய வரில்லை என்பதையும் அழுத்தமாக நிறுவுகிறார் அப்பாத்துரையார்.

இவற்றின் மூலம் திராவிடர் திராவிடம் என்ப தெல்லாம் வெறும் மாயை எனும் மாய்மாலக்காரர் களுக்குப் பன்மொழிப் புலவர் தம் புலமை மிக்க பன்மொழி ஆய்வோடு பதில் அளித்து இருக்கிறார்.
இன்று நம் பன் மொழிப்புலவரின் நினைவு நாள் (1989)

- மயிலாடன்

(குறிப்பு: தகவல் களுக்கு உதவியது பன் மொழிப் புலவர் கா. அப்பாத் துரையார் - கு.வெ. பாலசுப்பிரமணியன்) 26-5-2012

தமிழ் ஓவியா said...

பாரத புண்ணிய பூமியில் நாளும் 2000 பெண் சிசுக் கொலைகள்! அய்.நா. தரும் அதிர்ச்சித் தகவல்!சென்னை, மே.25-இந்தியாவில் நாள் ஒன்றுக்கு 2000 பெண் சிசுக் கொலைகள் செய்யப்படுகின்றன என்று அய்.நா. ஆய்வறிக்கையில் கூறுகிறது.

பெண் சிசு கொலைக்கு முடிவு கட்ட மத்திய, மாநில அரசுகள் விழிப்புணர்வு ஏற்படுத்தினாலும் பெண் குழந்தைகளின் பிறப்பு விகிதம் நாளுக்கு நாள் குறைந்து வருவதாக புள்ளி விபரங்கள் தெரிவிக் கின்றன. 2001ஆம் ஆண்டு பாலின விகிதாச்சாரப்படி 1 முதல் 6வயதுக்குட்பட்ட குழந்தைகளில் ஆயிரம் சிறுவர்களுக்கு 927 சிறுமிகள் மட்டுமே இருந்தனர். இப்போது வெளியாகியுள்ள 2011ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பில், ஆயிரம் சிறுவர் களுக்கு 914 சிறுமிகள் மட்டுமே உள்ளதாக தெரிவிக்கப் பட்டுள்ளது.

உலக நாடுகளை பொறுத்தவரை ஆண், பெண் குழந்தைகள் பிறப்பு விகிதம் 100:105. ஆனால் இந்தியாவில் இது 100:90 ஆக உள்ளது. கடந்த 30 ஆண்டுகளில் இந்தியாவில் 1.2 கோடி பெண் சிசுக்கள் கருவில் அழிக்கப்பட்டுள்ளன. இந்தியாவில் மட்டும் ஒவ்வொரு நாளும் 2ஆயிரம் பெண் சிசுக்கள் சட்டத்துக்கு புறம்பாக கருவில் அழிக்கப்படுவதாக அய்.நா. வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் தெரிவிக் கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டின் நிலை

மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, தமிழகத் தின் மக்கள் தொகை 7 கோடியே 21 லட்சத்து 38 ஆயிரத்து 958 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 52 சதவீதம் பேர் கிராமப்புறங்களில் வசிக்கின்றனர். சென்னை, மதுரை, கோவை உள்ளிட்ட முக்கிய தலைநகரங்களான நகர்ப்புறங்களில் 48 சதவீத மக்கள் வசிக்கின்றனர். இதில் ஆண்கள் எண்ணிக்கை 3 கோடியே 71 லட்சத்து89 ஆயி ரத்து 229. பெண்கள் எண்ணிக்கை 3 கோடியே 49 லட்சத்து 49 ஆயிரத்து 729 என்ற அளவில் குறைவாகவே உள்ளனர்.

அய்.நா.சபை எச்சரிக்கை:

சமுதாயத்தில் சமமாக இருக்க வேண்டிய பெண் இனம் குறைந் தால் பல கட்ட சீரழிவுகளை வருங்கால சமுதாயம் சந்திக்க வேண்டியிருக்கும். அதிகரித்து வரும் பெண் கருக்கொலை, நாட்டில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்துவதாக அமையும். அப்படிப்பட்ட சூழ்நிலை உருவானால், குழந்தைகளும், பெண்களும் வன்புணர்ச்சிகளுக்கு ஆளாவார்கள். ஒரு பெண்ணை பலர் மனைவியாக பங்கிட்டு கொள்ளும் நிலையும் உருவாகும் என்று அய்..நா.சபை எச்சரித்துள்ளது.

தமிழ்நாடு சமூக நலத்துறையை சேர்ந்த உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:

தமிழகத்தை பொறுத்தவரை பெண் சிசு கொலையை ஒழிக்கவும், பெற்றோர்களால் நிராகரிக்கப்படும் பெண் குழந்தைகளை மீட்கவும் 1992ஆம் ஆண்டு தொட்டில் குழந்தை திட்டம் தொடங்கப்பட்டது. இத்திட்டத்தின் மூலம் இதுவரை 4ஆயிரத்துக்கும் மேற்பட்ட குழந்தைகள் காப்பாற்றப்பட்டுள்ளன. கடந்த 2001ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, தமிழகத்தில் ஆயிரம் ஆண் குழந்தைகளுக்கு 927 பெண் குழந்தைகள் இருந் தனர். 2011ஆம் ஆண்டு கணக் கெடுப்பில் பெண் குழந்தைகள் எண்ணிக்கை 946 ஆக உயர்ந்துள் ளது என்றார்.

2030 ஆம் ஆண்டில்

சில தனியார் மருத்துவமனை களில், கள்ளத்தொடர்பு உள்பட முறைகேடாக உருவாகும் கருவை செலக்டிவ் அபார்ஷன் மூலம் அழிக்கின்றனர். பெண் சிசு கொலை செய்தது கண்டுபிடிக்கப் பட்டால் சம்பந்தபட்டவர் களுக்கு குறைந்தபட்சமாக 14 ஆண்டுகள் சிறை தண்டனையும், அதிகபட்சமாக ஆயுள் தண்டனை யும் கிடைக்கச் சட்டத்தில் இடமுள்ளது.

மேலும் அந்த மருத்துவமனை மற்றும் ஆய்வு கூடங்களின் அங்கீகாரத்தை ரத்து செய்வதோடு, அபராதத் தொகையுடன் கூடிய தண்டனையும் கிடைக்கும். பெண் சிசு கொலையை தடுக்க அரசு பல நடவடிக்கை எடுத்தாலும் இதுபோன்ற கொடுஞ்செயல்களுக்கு சிலர் ஆதரவளிப்பதால் பெண் சிசு கொலைகளை முழுமையாக கட்டுப் படுத்த முடியவில்லை.

இதனால் 2030ஆம் ஆண்டில் இந்தியாவில் பெண் களை விட 20 சதவீத ஆண்கள் அதிகமாக இருப் பார்கள் என்று லண்டனில் சர்வதேச சுகா தாரம் மற்றும் வளர்ச்சிக்கான யு.சி.எல்.நிறுவனம் நடத்திய ஆய்வு தெரிவித்துள்ளது.
26-5-2012

தமிழ் ஓவியா said...

ஏழை மக்களின் தலைகள்தான் கிடைத்ததா?

திருடன் கையில் சாவி கொடுப்பது என்பார்கள். அந்த நிலைதான் - பெட்ரோல் விலையை நிர்ணயிக்கும் முடிவை பெட்ரோல் நிறுவனத்தின் கையில் விட்டு வைப்பதாகும். கடந்த 8 ஆண்டு ஆண்டுகளில் 39 முறை பெட்ரோல் விலை உயர்த்தப்பட்டுள்ளது. இந்த மூன்று ஆண்டுகளில் மட்டும் 17 முறை விலை உயர்த்தப்பட்டுள்ளது.

உலகில் கச்சாப் பொருள்களின் விலையேற்றத் திற்கு ஏற்ப பெட்ரோல் விலையில் மாற்றம் ஏற்படும் என்று சொன்னால்கூட எத்தனை முறை பெட்ரோல் விலையைக் குறைத்திருக்கிறார்கள்?

இதில் இன்னொரு விடயமும் - கவனிக்கத் தக்கது. உலகம் தழுவிய இந்தப் பிரச்சினையில் மற்ற மற்ற நாடுகளில் பெட்ரோல் விலையை ஒப்பிடும் பொழுது இந்தியாவில் அதிகமாக இருப்பது ஏன் என்ற வினாவும் எழுகிறது. பாகிஸ்தானில் ஒரு லிட்டரின் விலை ரூ.59 வங்கதேசத்தில் ரூ.43.40, இலங்கையில் ரூ.69.70, அமெரிக்காவில் ரூ.39.60 இந்த நிலையில் இந்தியாவில் மட்டும் ரூ.77 என்ற நிலை ஏன்?

பெட்ரோல் விலை இந்த அளவு உயர்வுக்குக் காரணம் அதற்குள் திணிக்கப்படும் வரிதான் என்பது மறுக்கப்பட முடியாத உண்மையாகும். அதைக் குறைப்பது குறித்து ஏன் யோசிக்கக் கூடாது? எண்ணெய் நிறுவனங்களுக்கு நட்டம் நட்டம் என்று கூறுகிறார்களே அதாவது உண்மையா? எண்ணெய் நிறுவனங்கள் ஒவ்வொரு காலாண் டிலும் தெரிவிக்கும் அறிக்கை கவனிக்கத் தக்கதாகும்.

எடுத்துக்காட்டாக 2010-2011ஆம் ஆண்டின் IOC நிறுவனத்தின் இரண்டாம் காலாண்டில் (4 மாதத்தில்) நிகர லாபம் ரூ.5294 கோடி, அரசுக்குச் செலுத்தியுள்ள வரி ரூ.832.27 கோடியாகும். HPCL என்று கூறப்படும் நிறுவனத்தின் லாபம் ரூ.2142.22 கோடியாகும். அரசுக்குச் செலுத்திய வரி ரூ.90.90 கோடியாகும். BPCL நிறுவனத்தின் நிகர லாபம் ரூ.2142.22 கோடியாகும் அரசுக்குச் செலுத்திய வரி ரூ.198 கோடியாகும்.

இந்த மூன்று நிறுவனங்களின் நான்கு மாத லாபம் ரூ.10,699.61 கோடியாகும்.

உண்மை நிலவரம் இவ்வாறு இருக்க, பெட்ரோல் நிறுவனங்கள் நட்டம் அடைவதாகக் கூறுவதில் கூட அய்யவினா எழுகிறதே!
அப்படி லாபம் ஈட்டப்பட்ட அந்தக் கால கட்டத் தில் பெட்ரோல் விலை குறைக்கப்படவில்லையே! இப்பொழுதைக்கு உடனடியாக டீசல் விலை, மண்ணெண்ணெய் விலை, சமையல் எரிவாயு விலை ஏற்றப்படாவிட்டாலும் அடுத்த கட்டமாக ஏற்றபடக் கூடிய அபாயம் தலைக்குமேல் கூரிய கத்தியாகத் தொங்குகிறது என்றே கணிக்கப் படுகிறது.

பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டால், அதன் விளைவு - எல்லா மட்டங்களிலும் விலை உயர்வு இறக்கை கட்டிக் கொண்டு பறக்க ஆரம்பித்துவிடுமே!

ஏழை, நடுத்தர மக்கள், அன்றாடம் கூலிக்காரர்கள், மாதாந்திரச் சம்பளக்காரர்கள் இந்தத் திடீர்க் கூடுதல் விலையை எப்படி சமாளிப்பார்கள்? திடீர் பெட்ரோல் விலை உயர்வு போல திடீர் வருமானம் எங்கிருந்து இம்மக்களின் வீட்டில் கொட்டப் போகிறது?

போதும் போதாதற்கு தமிழ்நாடு அரசோ அதன் பங்குக்கு மின்கட்டண உயர்வு, பால் விலை உயர்வு, பேருந்துக் கட்டண உயர்வு என்று மக்களின் தலையில் ஆணி அடித்து விட்டது.

கல்வி நிறுவனங்கள் திறுக்கப்படும் நேரம் - குடும்ப வருமானத்தில் அதற்காகவும் பணம் தேவைப்படும் ஒரு சூழல்! விலைவாசி உயர்வு என்பது சமூக அமைப்பின் முகத்தையே மாற்றக் கூடியதாயிற்றே!

பெரிய பெரிய தொழிலதிபர்களுக்கு வரிச் சலுகை, வரி தள்ளுபடி, வாராக்கடன், வெளி நாடுகளில் கறுப்புப்பணம் என்று பல லட்சக் கணக்கான கோடிகளை இந்தியாவின் வரவுக்குள் கொண்டு வர இயலாமல், ஏழை எளிய மக்களின் தலைகளில் மிளகாய் அரைப்பது ஈவு இரக்கமற்ற செயலாகும்.

கூட்டணி கட்சியான திமுக உட்படப் போர்க் கொடி தூக்கி இருப்பதை மத்திய அரசு உணர வேண்டும்; செயல்பட வேண்டும் என்பதே நமது வேண்டுகோள்!

தனியார் நிறுவனங்கள் விலை நிர்ணயம் செய்யும் முறையும் மாற்றப்பட்டாக வேண்டும் இது மிக மிக முக்கியமாகும்.
26-5-2012

தமிழ் ஓவியா said...

வேலூருக்கு வாருங்கள் சோதரிகளே!மே 29 ஆம் தேதி வேலூர் மாநகரில் திராவிடர் கழக மகளிரணி மற்றும் மகளிர் பாசறை இணைந்து நடத்தும் புத்துலகப் பெண்கள் மாநில மாநாடு - பல்வேறு சிறப்பு அம்சங்களுடன் மிகக் கம்பீரமாக நடைபெற உள்ளது.

பெண்களுக்கான உரிமைப் பிரச்சினைகள் மிக ஏராளமாகவே உள்ளன.

பெண்கள் படிக்கவில்லையா? உத்தியோகம் பார்க்கவில்லையா? என்று மேலோட்டமாகப் பேசும் மேதாவிகளுக்கு நாட்டில் பஞ்சமில்லை.

அறியாமையாக இருக்கலாம் - பெண்கள் என்றால் அலட்சியமாகப் பார்க்கும் அகம்பாவமாகக் கூட இருக்கலாம்.
வெகுதூரம் போகவேண்டாம். பெண்களுக்கு நாடாளுமன்றத்தில், சட்டப் பேரவைகளில் 33 விழுக்காடு இடங்கள் என்தற்கான சட்டம் எத்தனை ஆண்டுகளாக நிலுவையில் உள்ளது!

தேவகவுடா பிரதமராக இருந்த 1996 ஆம் ஆண்டில் இருந்து பேசப்பட்டுதான் வருகிறது. கடைசியாக மாநிலங்களவையில் மூன்றில் இரு பங்கு உறுப்பினர்களின் ஆதரவுடன் மசோதா நிறைவேற்றப் பட்டது. (9-3-2010)

ஆனால் மக்களவையில் நிறைவேற்றப்பட முடியாத நிலை! கட்சிகளைக் கடந்து ஆண் ஆதிக்கம் தலை தெறித்து நிற்கிறது.

இது பற்றிய தகவல்களைச் சற்றுப் பின்னோக்கிப் பார்ப்போம்!

பெண்கள் மசோதா அன்று முதல் இன்று வரை

1974: நாட்டில் பெண்களின் நிலை தொடர்பாக ஆய்வு செய்ய நியமிக்கப்பட்ட கமிட்டி, மத்திய கல்வி மற்றும் சமூக நலத்துறை அமைச்சகத் திடம் அறிக்கை சமர்ப்பித்தது. அதில், நாடாளு மன்றத்தில் பெண்களுக்கு பிரதிநிதித்துவம் அளிக்க வேண்டுமென தெரிவிக்கப்பட்டது.

1993: ஊராட்சி மற்றும் நகராட்சி அமைப்பு களில், பெண்களுக்கு மூன்றில் ஒரு பங்கு இடங்களை ஒதுக்க வகை செய்யும் 73 மற்றும் 74 ஆவது அரசியல் சட்டத் திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டது.

1996: (செப்டம்பர்-12) தேவகவுடா தலைமையிலான அரசு பதவியில் இருந்தபோது, 81 ஆவது அரசியல் சட்டத் திருத்தமாக பெண்கள் இட ஒதுக்கீடு மசோதா, நாடாளுமன்றத்தில் அறிமுகம் செய்யப் பட்டது. அதன் பின், கவுடா அரசு சிறுபான்மை அரசாகி விட்டதால், 11 ஆவது மக்களவை கலைக்கப்பட்டது.

1998: (ஜூன் 26) 12 ஆவது மக்களவையில், 84 ஆவது அரசியல் சட்டத் திருத்த மசோதாவாக தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு, இந்த மசோதாவை தாக்கல் செய்தது. இந்த முறையும், வாஜ்பாய் அரசு சிறுபான்மை அரசாகி, மக்களவை கலைக்கப்பட்டதால், மசோதா நிறைவேறாமல் போனது.

1999: (நவம்பர் 22) 13 ஆவது மக்களவை யில் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசால், இந்த மசோதா மீண்டும் அறிமுகம் செய்யப்பட்டது. ஆனால் ஒருமித்த கருத்தை எட்ட முடியவில்லை என்பதால், மசோதா நிறைவேற்றப்படவில்லை. 2002 மற்றும் 2003 இல் இந்த மசோதா மீண்டும் தாக்கல் செய்யப் பட்டாலும் நிறைவேற்ற முடியவில்லை.

2008: (மே 6) அய்க்கிய முற்போக்கு கூட்டணி அரசால், மாநிலங்களவையில் இம்மசோதா தாக்கல் செய்யப்பட்டு, சட்டம் மற்றும் நீதித்துறை தொடர்பான நாடாளுமன்ற நிலைக்குழுவின் பரிசீலனைக்கு அனுப்பப்பட்டது.

2009: (டிசம்பர் 17) நிலைக்குழு, தன் அறிக்கையை சமர்ப்பித்தது. நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் மசோதாவை தாக்கல் செய்யலாம் என தெரிவித்தது.

2010: (பிப்ரவரி 22) நாடாளுமன்றத்தின் கூட்டுக் கூட்டத்தில் உரை நிகழ்த்திய குயடிரசுத் தலை பிரதிபா பாட்டீல், பெண்கள் இட ஒதுக்கீடு மசோதா நிச்சயம் நிறைவேற்றப்படும் என்றார்.

2010: (பிப்ரவரி 25) பெண்கள் இட ஒதுக்கீடு மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.

2010: (மார்ச் 8) மாநிலங்களவையில் மீண்டும் மசோதா தாக்கல் செய்யப்பட்டது. வரலாறு காணாத அளவிலான ரகளை அரங்கேறியது.

2010: (மார்ச் 9 ) பெண்கள் இட ஒதுக்கீடு மசோதா, மாநிலங்களவையில் மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்களின் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டது.

16 ஆண்டுகளாக இதோ வருகிறது - அதோ வருகிறது என்று கண்ணாமூச்சி நடைபெற்று வருகிறது.

இனி இவர்களை நம்பிப் பயனில்லை. மக்கள் மன்றம்தான் முடிவு செய்ய வேண்டும்.

மகளிரே தலைமை தாங்கி வீதிக்கு வந்து போராட வேண்டும்.

நல்ல முடிவு எடுப்போம் வாருங்கள் தோழிகளே! வாருங்கள் தாய்மார்களே, வாருங்கள் சோதரிகளே!

வேலூர் புத்துலகப் பெண்கள் மாநாடு உங்களை எல்லாம் அழைக்கிறது ( மே 29 முழுநாள் நிகழ்ச்சிகள்) வாரீர்! வாரீர்!!

- மின்சாரம் 26-5-2012

தமிழ் ஓவியா said...

விக்னப்பட்ட விக்னேஷ்வரன்

கவுதம புத்தரின் பிறந்த நாள் இந் நாள்! ஆம், அந்த நாளைத் தேர்ந் தெடுத்தார் தந்தை பெரியார் (27.5.1953)

என்னைக் கீழ் ஜாதி என்று சொல்லுவது இந்தக் கடவுள்தானே - இதனை நசுக்குகிறேன் - உடைத்துத் தூள் தூளாக்குகிறேன் என்று கூறி பிள்ளையார் பொம்மை உடைக்கும் போராட்டத்தை நடத்தினார் தந்தை பெரியார்.

கோயிலுக்குள் சென்று அந்தப் பிள்ளையாரை உடைக்கச் சொல்ல வில்லை; கடையில் விற்கும் பிள்ளையார் பொம்மையைக் காசு கொடுத்து வாங்கித் தான் உடைக்கச் சொன்னார்.

பிள்ளையார் உருவச் சிலையை உடைப்பதில் ஒன்றும் அதிசயப்பட வேண்டியதில்லை. இப்படி உடைப்பதைத் தவிர வேறு வழி இருந்தால் சொல் லுங்கள் - சூத்திர மந்திரிகளே! சூத்திர பார்லிமெண்ட் சட்டசபை மெம்பர்களே! வைஸ்சேன்ஸ்லர் முதல் கல்வி மான் களே!

உலகப் பிரசித்தி பெற்ற கோடீஸ் வரர்களே! புலவர்களே! பிரபுக்களே! மாஜி ஜமீன்தார்களே! மாஜி மகா ராஜாக்களே! ஸ்ரீலஸ்ரீ!, ஸ்ரீலஸ்ரீ!! ஸ்ரீலஸ்ரீ!!! பண்டார சந்நிதிகளே! சொல்லுங்களேன்! கேட்க - தலை வணங்க - சித்தமாக இருக்கிறேன். (விடுதலை 7.5.1953) என்று அறிக்கை விட்டார் அறிவுலக ஆசான் பெரியார்.

அன்று என்ன இன்றும் கூடக் கேட்கத் தயார்தான்! பதில் சொல்லத் தான் ஆசாமிகள் இல்லை.

நாடெங்கும் பிள்ளையார் பொம்மை உடைபட்டது! உடைபட்டது!!

ஆம் விக்னம் இல்லாமல் காப்பாற்று வார் என்று வாய்ப்பறை கொட்டுகிறார் களே - அந்த விக்னேஸ்வரர்தான் பகிரங்கமாக உடைத்து நொறுக்கப் பட்டார்.

சூரபத்மனை அழித்த சூரர் என்று பீற்றிக் கொள்கிறார்களே கருஞ் சட்டைக்காரனிடம் கைவரிசையைக் காட்ட வேண்டியதுதானே!

பொது மக்கள் பார்த்துக் கொள் வார்கள். முதல் மந்திரி ஆச்சாரியார் தூபம் போட்டுப் பார்த்தார். சில கோழைகள் பெரியார் படத்தை எரித் தனர். என் படத்தை எரிக்க நானே படம் தருகிறேன் - தருகிறேன்! என்றார் அந்தப் பகுத்தறிவுப் பகலவன்.
வெளிறிப் போனது பக்தர் கூட்டம்.

இவ்வளவுக்கும் இந்த விநாயகன் யார்? இந்து மதக் கடவுளா? இல்லை - இல்லை இதில் ஒரு உருட்டல் புரட் டலைச் செய்தது இந்தப் புரட்டர் கூட்டம்

புத்தனுக்குப் பெயர் விநாயகன் - மானாயகன் என்றால் தலைவன்!

புத்தன் அரசக் குடும்பத்தில் பிறந் தவர் ஆதலால் அரச மரம் அடியில் புத்தர் சிலைகள் வைக்கப்பட்டு இருந் தன. அந்த இடத்தில் எல்லாம் சைவக் கடவுளான விநாயகன் (பிள்ளையார்) பொம்மையை வைத்து உண்மையான விநாயகனாகிய புத்தர் சிலைகளை அப்புறப்படுத்தி விட்டனர். அயோக்கிய சிகாமணிகள்!

ஆற்றில் குளத்தில் தள்ளி விட்டனர். பல இடங்களில் துணி துவைக்கும் கற்களைப் புரட்டிப் பார்த்தால் அவை புத்தர் சிலைகளாக இருப்பதைக் காண லாம்.

பார்ப்பனப் புரட்டுக்கும் பித்தலாட் டத்துக்கும் அளவும், எல்லையும் உண்டோ! (மே 27 - இந்நாள் தான் பிள்ளையார் பொம்மையை உடைக்கும் போராட்டம் நடத்தப்பட்டது 1953இல்).

தமிழ் ஓவியா said...

காவிரி நீர் பிரச்சினையில் கருநாடக அரசு சட்ட விரோதமாக அடாவடித்தனம் செய்து வருகிறது

பிரதமர் தலைமையில் கண்காணிப்புக்குழு அமைவதால் கூட்டங்கள் சரியானபடி நடப்பதில்லை

புதிய தலைவரை நியமனம் செய்து நியாயமான தீர்வை மத்திய அரசு வழங்க வேண்டும்

தமிழர் தலைவர் விடுத்துள்ள அறிக்கைகாவிரி நீர்ப்பிரச்சினையில் கருநாடக அரசு சட்ட விரோதமாக நடந்து வருவதால் கண்காணிப்புக் குழுவுக்குப் புதிய தலைவரை நியமனம் செய்து தமிழ்நாட்டுக்கு நியாயமான தீர்வை வழங்கிட மத்திய அரசு முயல வேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள முக்கிய அறிக்கை வருமாறு:-

விவசாயிகள் பெரிதும் கவலை அடைந்துள்ளதை கடந்த சில நாள்களாக தஞ்சை, திருச்சி, நாகை, திருவாரூர் மாவட்டங்களில் சுற்றுப்பயணம் செய்து, நிலைமையை நேரில் கண்ட நாம் தெரிந்து கொண்டோம்.

திராவிடர் கழகத்தின் சார்பில் கடந்த மார்ச் மாதத்திலேயே வஞ்சிக்கப்படும் தமிழ்நாடு என்ற தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணங்களை மேற்கொண்டு, காவிரிப் பிரச்சினை போன்ற பல்வேறு பிரச்சினைகளுக்குத் தீர்வு காணவேண்டும் என்ற விழிப்புணர்வை மக்களிடையே உருவாக்கினோம்.

டெல்டா விவசாயிகளின் கவலை

காவிரிப் பிரச்சினைக்கு அவ்வப்போது தற்காலிகத் தீர்வுகளை காணுவதே வழமையாக உள்ளதே தவிர, நிரந்தரத் தீர்வு ஒப்பந்தம் என்பது கொடிய கானல் நீரோடையாக அமைந்துள்ளது.

டெல்டா விவசாயிகளின் கவலைக்குக் காரணம் ஜீன் 12ந் தேதி மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்படக்கூடிய சூழல் இவ்வாண்டு இராது என்ற யூகமே ஆகும். காரணம் மேட்டூர் அணையில் தற்போதுள்ள நீர்மட்ட அளவு 41.47 ஆயிரம் கனஅடிதான்.

மொத்தம் உள்ள கொள்ளளவு 93.47 ஆயிரம் கனஅடியாகும்.

சென்ற ஆண்டு இதே காலகட்டத்தில் இருந்த நீரின் அளவு 84 ஆயிரம் கனஅடி ஆகும்.

நமக்கு இடைக்காலத் தீர்ப்பு நிவாரணமாக கர்நாடக அரசால் தரப்பட வேண்டிய அளவு 205 (தமிழ்நாட்டுக்கு) டி.எம்.சி. மே வரை முதல் 4 மாதங்களில் 137 ஆயிரம் கனஅடி.

ஜீலை 42. 76 ஆயிரம் கனஅடி
ஆகஸ்ட் 54.72 ஆயிரம் கனஅடி
செப்டம்பர் 29.36 ஆயிரம் கன அடி
குறுவை சாகுபடிக்கு இப்படித் தண்ணீர் பங்கீடு இருக்க வேண்டும் என்று ஏப்ரல் 1992லேயே காவிரி நடுவர் மன்றத்தில் தமிழக அரசு வழக்குப் போட்டு எடுத்து வைத்த வாதங்களின்படியேதான் மேற்காணும் அளவீடு ஆகும்.!

கர்நாடக அரசின் அடாவடித்தனம்

கர்நாடக அரசு இந்த மாத கணக்குப்படி நீர் அளிப்பதில்லை.

கர்நாடக அரசு முற்றிலும் நியாய விரோதமாகத் தங்களின் கோடைப் பயிர் விவசாயத்துக்குத் தண்ணீர் தேவை என்பதற்காக பிப்ரவரி முதல் மே மாதம் வரை தங்களிடம் உள்ள நான்கு பெரிய அணைகளில் காவிரித் தண்ணீரைத் தேக்கி வைத்து அடவாடித்தனம் செய்து வருகிறது. இதுபற்றி மூன்று மாதங்களுக்கு ஒருமுறை கூடிவிவாதித்துப் பரிகாரம் தேடிட வேண்டிய காவிரிநீர்க் கண்காணிப்புக் குழு (MONITERING COMMITTEE) ) கடந்த (10) பத்து மாதங்களாக கூட்டப்படவே இல்லை!

இதை தமிழ்நாடு முதல் அமைச்சர் செல்வி ஜெயலலிதா அவர்களும் கடிதம் மூலம் சுட்டிக்காட்டியுள்ளதாகத் தெரிகிறது!

காவிரி(ஆறு) ஆணையக் கூட்டத்தை அதன் தலைவரான பிரதமர் உடனடியாக கூட்டி இப்பிரச்சினைக்குத் தீர்வு காண வேண்டியது அவரச அவசியமாகும்!

முந்தைய தேசிய ஜனநாயக முன்னணி (NDA) அரசில் இந்த காவிரி ஆணையத்திற்குப் பிரதமர் (வாஜ்பேயி) தலைவராக இருப்பார் என்று அமைந்தபோதே பிரதமர் போன்ற பல்வகைப் பொறுப்பைச் சுமப்பவர் தலைவராக இருந்தால் உடனடியாக தீர்வுக் காண முடியாமல் கூட்டங்களே நடக்க முடியாமல் போகக்கூடும்; காலதாமதம் ஏற்படும்; பருவத்தே பயிர் செய்ய வேண்டியது தள்ளிக்போகக் கூடும். உடனடி பரிகாரம் கிடைக்காமலும் போகக்கூடும் என்று நமது கழகம் சுட்டிக்காட்டியதை ஏற்று வேறு தலைவரைப் போடவில்லை. அதனால் இவ்வளவு பெருஞ்சுமை. விவசாயிகளுக்கு ஏற்படும் நிலைமை உருவாகிறது!

காவிரி ஆணையத்துக்குப் புதுத் தலைவர் தேவை

எனவே இதுபற்றி இணக்கமாக மத்திய அரசு சிந்தித்து காவிரி நீர் ஆணையத்திற்கு ஒரு புதுத்தலைவரை (அவர் தேசிய நீர்வளத்துறை அமைச்சராகவோ அல்லது சிறந்த நீதிபதி தகுதியில் உள்ளவர்களோ அல்லது வழக்கில் சம்பந்தப்படாத மாநிலங்களைச் சார்ந்த வல்லுனர்களாகவோ இருக்கலாம். நியமிக்க வேண்டும்!

கர்நாடகத்தின் வறட்டுப் பிடிவாதத்தினை மாற்றிட நியாயமான தீர்வை மத்திய அரசு உருவாக்கி தரவேண்டியது அதன் தலையாய கடமையாகும்.

கி.வீரமணி
தலைவர், திராவிடர் கழகm

தமிழ் ஓவியா said...

வேலூர் அழைக்கிறது!

அருமைத் தோழர்களே! நாளை வேலூர் மாநகரிலே திராவிடர் கழக மகளிரணி மற்றும் மகளிர் பாசறை சார்பில் புத்துலகப் பெண்கள் மாநில மாநாடு முழு நாள் நிகழ்ச்சியாக நடைபெற உள்ளது.

தோழர்கள் என்ற சொல்லை இருபாலருக்கும் பயன்படுத்தினார் தந்தை பெரியார் என்பதும், உலகிலேயே புதுமைதான் - புரட்சிதான்!

புரோகிதத்தைத் தவிர்த்த சுயமரியாதைத் திருமணத்தைத் அறிமுகப்படுத்தியதோடு அல்லாமல் பெண்களையே தலைமை வகித்து அத்தகைய திருமணங்களையும் நடத்தும் ஒரு புரட்சியையும் செய்து வைத்தார் அந்த உண்மை யான புரட்சித் தலைவர்.

1930-இல் ஈரோட்டில் நடைபெற்ற இரண்டாவது சுயமரியாதை மாகாண மாநாட்டுப் பந்தலிலேயே சிவகாமி - சிதம்பரனார் திருமணத்தை தோழர் நாகம்மையார் நடத்தி வைப்பார் என்று முன்மொழிய அன்னை நாகம்மையார் அதனை நடத்தியும் வைத்துள்ளார்.

அது ஒரு புரட்சித் திருமணமாகும். சிவகாமி அம்மையார் கணவனை சிறு வயதிலேயே இழந்த வர். அந்தக் கால கட்டத்தில் விதவைப் பெண் ணுக்குத் திருமணம் என்பது நினைத்தே பார்க்க முடியாத அசாதாரண நிகழ்வாகும்.

பெண்கள் உரிமைபற்றி தந்தை பெரியார் சிந்தித்ததுபோல - கருத்துக்கள் கூறியதுபோல உலக வரலாற்றில் வேறு யாரும் சிந்தித்து இருக்கவும் முடியாது; பெண்களுக்காகப் போராடிய வர்களும் கிடையாது.

சுயமரியாதைத் திருமண மேடையைக்கூட தந்தை பெரியார் அவர்கள் பெரும்பாலும் பெண்களின் உரிமைகளுக்கான குரல் கொடுக்கும் ஒரு களமாகவே பயன்படுத்தினார் என்றே சொல்ல வேண்டும்.

இந்த மேடையில் தந்தை பெரியார் அவர்களால் வலியுறுத்தப்பட்ட பல கொள்கைகள், திட்டங்கள் பிற்காலத்தில் சட்டங்களாக மலர்ந்து மணம் வீசிக் கொண்டிருக்கின்றன.

பெண்களுக்குக் கல்வி உரிமை, உத்தியோக வாய்ப்பு, சொத்துரிமை, விவாகரத்து உரிமை, விதவைத் திருமணம், திருமண வயது, கர்ப்ப ஆட்சி என்று பெண்கள் பற்றித் தொடாத துறையில்லை என்று சொல்லும் அளவுக்குப் பல மணி நேரங்கள் திருமண மேடையில் பேசிய சாதனையாளர் தந்தை பெரியார்.

அதனால்தான் பெண்களே மாநாடு கூட்டி அவருக்குப் பெரியார் என்ற பட்டத்தை அளித்துப் பெருமை பெற்றார்கள்.

தமிழின மக்களின் நலம் சார்ந்த உரிமை வாழ்வுக்காகத் தம்மை ஒப்படைத்துக் கொண்ட தந்தை பெரியார் அவர்களை நீண்ட காலம் வாழ வைப்பதற்காகத் தம் வாழ்வை முற்றிலும் அர்ப் பணித்தவர் அன்னை மணியம்மையார் அவர்கள்.

அவர்கள் பிறந்த வேலூர் மண்ணில் நாளைய தினம் பெண்கள் புத்துலக மாநில மாநாடு பல்வேறு சிறப்பு அம்சங்களுடன் நடைபெற உள்ளது. கருத்தரங்கம், பட்டிமன்றம், பேரணி, கலை நிகழ்ச்சி, பொது மாநாடு என்று முற்றும் பெண்களே கலந்து கொள்ளும் புரட்சி மாநாடு இது!

கழகத் தலைவர் என்ற முறையில் தமிழர் தலைவர் மட்டும்தான் விதிவிலக்காக இம்மா நாட்டில் பங்கு ஏற்கிறார்.

புரட்சிகரமான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளன. பெண்கள் சந்திக்கும் அத்துணைப் பிரச்சினைகளுக்கும் தீர்வு காணும் உண்மையான புரட்சி மாநாடு இது.

கழகத் தோழர்களே, ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் நீங்கள் வர வாய்ப்பு இல்லை என்றாலும் வீட்டுப் பெண்களைக் கண்டிப்பாக மாநாட்டுக்கு அனுப்பி வையுங்கள்.

கோடை விடுமுறை நாள் என்பதால் மாணவி களையும் கண்டிப்பாக அனுப்பி வையுங்கள்.

திராவிடர் கழகத்தைத் தவிர வேறு எந்த அமைப்பாலும் இத்தகைய மாநாட்டை நடத்திட முடியாது. ஏன்? அப்படிச் சிந்திக்கக் கூட முடியாது.

நமது இயக்க வரலாற்றில் மிகவும் வித்தியாசமாக நடக்க இருக்கும் இந்த மாநாட்டை நோக்கி கட்சி களுக்கு அப்பாற்பட்டு அனைத்துப் பெண்களும் குவியட்டும்! குவியட்டும்!!

கழக மகளிர் மற்றும் பாசறைப் பொறுப்பாளர்கள் மட்டுமல்ல; அனைத்துப் பெண்களும் ஒன்று திரளட்டும். நாடெல்லாம் பேசப்படும் இந்த மாநாட் டுக்கு வரத் தவறாதீர்!28-5-2012