Search This Blog

29.5.12

ஏழைகள் துயரம் நீங்க வழி -பெரியார்

தோழர்களே, இந்த தேசத்தில் ஏற்பட்டிருக்கும் ஜன சமூக அமைப்பின் அஸ்திவாரமே சரியாய் இல்லாமல் இருக்கிறது. இந்த அஸ்திவாரத்தின் மீது கட்டக்கூடிய எந்த அமைப்பும் ஜன சமூகத்திற்கு நன்மை அளிக்கக்கூடியதல்ல. ஒரு தகப்பன் வயிற்றில் பிறந்த பிள்ளைகளுக்கு எப்படி சம அந்தஸ்தும், சம உரிமையும் உண்டோ, அப்படியே ஒரு தேசத்தில் பிறந்தவர் களுக்கும் இருக்க வேண்டியது அவசியமாகும். அப்போதுதான் மக்கள் சுகமாக வாழ முடியும். ஏதோ தான் பிறந்த வேளையின் பலன் கஷ்டத்தை அனுபவிக்க வேண்டியது தான்; மற்றொருவன் சுகத்தை அனுபவிக்கப் பாத்தியதையுடையவன் தான் என்னும் சோம்பேறி எண்ணமே மக்களை அழித்து வருவதற்கு முக்கிய கருவியாய் இருக்கிறது. இந்த எண்ணம் மாறுபட வேண்டியது அவசியமாகும். இதற்காக எவ்வளவு தியாகம் செய்தாலும் அது வீணாகாது. ஜனங்களின் மனோபாவமும், வாழ்க்கையை நடத்தும் முறையும் மாறினாலொழிய, வேறொரு முறையாலும் நன்மை உண்டாகாதென்பது திண்ணம். தற்போதிருக்கும் நிலைமையில் சுயராஜ்யம் வந்தால் குருட்டு நம்பிக்கையும், வைதீகமும் தான் வலுக்கும். தற்போது சுயராஜ்யம் அனுபவிக்கும் தேசங்களை எடுத்துக் கொள் ளுங்கள். ஏழைகள் நிலைமை அங்கே எப்படி இருக்கிறது? அமெரிக்கா ஜனநாயக ஆட்சியுடையதாகத்தான் இருக்கிறது. அங்கே லட்சக்கணக் கானவர்கள் வேலையில்லாமல் திண்டாடுகின்றார்கள். அமெரிக்கா உலகில் செல்வத்திற்கே இருப்பிடமாயிருந்தும் அங்கே ஏழைகள் நிற்க நிழலின்றி, உறங்க இடமின்றித் தவிக்கிறார்கள். ஜெர்மனியின் நிலைமை இன்று எவ்விதமாக இருக்கிறதென்பது அனை வருக்கும் தெரிந்த விஷயமே. சூரியனே அஸ்தமிக்காத சாம்ராஜ்யத்தை உடையதென்று சொல்லும் இங்கிலாந்தும் சுயராஜ்ய தேசமேயாகும். உலகத்தின் பல நாடுகள் இங்கிலாந்தின் ஆளுகைக்குட்பட்டிருக் கின்றன. ஆனால், அங்கு ஏழைகள் படும் துயரம் கொஞ்ச நஞ்சல்ல. சுயராஜ்யமுள்ள ஒவ்வொரு தேசமும் இப்படித்தான் இருக்கிறது. சுய ராஜ்யமோ, அந்நிய ராஜ்யமோ, குடி அரசோ, முடிஅரசோ எந்தவிதமான முறையிலும் மக்கள் சுகம் பெற முடியாத நிலைமையில் உலகம் இன்று இருந்து வருகிறது.

ஆகையால், ஏழைகள் துயரத்தைப் போக்க இந்திய சுயராஜ்யம் இப்போது சிலரால் கருதப்படும் முறையில் யாதொரு நன்மையும் கொடுக்கப் போவதில்லை என்பது நிச்சயம். சமதர்மத்தையும், பொதுவுடைமையயும் அஸ்திவாரமாக கொண்ட ராஜாங்க அமைப்பொன்றே மக்கள் சுகவாழ்க்கைக்குரிய வழியாகும். இதற்காக ஏன் நாம் தியாகம் செய்யத் தயாராயிருக்கக் கூடாதென்று கேட்கிறேன். உலகத்தில் பல வகையில் ஜீவராசிகள் மரணமடைகின்றன. பல நோய்களால் இறக்கிறவர்களின் தொகை சாதாரணமல்ல. மதத்தின் பெயரால் யாதொரு விவேகமும் இல்லாமல் ஒருவருக் கொருவர் சண்டையிட்டுக் கொண்டு உயிரை மாய்த்துக் கொள்கிறார்கள். இன்னும் பல வழிகளில் மரணமடையும் போது மக்களின் உன்னத வாழ்க்கை அமைப்பை உத்தேசித்து சிலரோ, பலரோ உயிரைத் தியாகம் செய்வது கூட பெரிய காரியமாகுமோவென்று கேட்கிறேன். மனிதனுக்கு மனிதன் எதற்காக வித்தியாசங்கள் காண்பிக்கப்பட வேண்டும்? அறிவுள்ள எவரும் இனி இந் நிலைமையைச் சகித்துக் கொண்டு ஒரு க்ஷணமானது வாழ முடியாது. பலாத்காரம் கூடாது. இம்முறைகளை மாற்ற பலாத்காரம் ஒருபொழுதும் வெற்றியடைய முடியாது. பலாத்காரம், பலாத்காரத்தையே பெருக்கும். உண்மை மறந்து விடும். ஆகையால், ஜனங்களுடைய மனதை மாற்ற பாடுபட வேண்டியது தான் முறையேயொழிய, பலாத்காரத்தினால் சாதித்து விடலாமென்று எண்ணுவது மனித இயற்கைக்கு விரோதமான தத்துவமாகும். இந்த தேசத்தில் முன்னேற்றமுள்ளவர்கள் ஒன்று, பிற்போக்கானவர்கள் மற்றொன்றாக இரண்டு கட்சிகளாகவே இருக்க முடியும். இப்படி பிரிக்கப் பட்டாலொழிய மக்கள் அபிவிருத்தியடைய மார்க்கமில்லை. நமது மக்களுக்கு விஷயத்தை அறியக்கூடிய பகுத்தறிவு விருத்தியடைந்தாலொழிய மற்றெந்த ராஜ்ய முறையாலும் ஒரு நன்மையும் விளைந்து விடப் போவதில்லை.

--------------------8.7.1934ஆம் தேதி கும்பகோணத்தில் தந்தை பெரியார் அவர்கள் ஆற்றிய சொற்பொழிவின் சுருக்கம் - "விடுதலை" 26.1.1964

2 comments:

தமிழ் ஓவியா said...

பந்தியில் இடமில்லை!


பந்தியிலேயே இடம் இல்லை; அப்படியிருக்கும் போது இலையில் பொத்தல் என்று சொல்லுவதில் அர்த்தம் உண்டா என்று சொல்லுவதுண்டு.

அந்தப் பழமொழி யாருக்குப் பொருந்துகிறதோ, இல்லையோ கண்டிப்பாக பாரதீய ஜனதா கட்சிக்கு நூற்றுக்கு நூறு மிகத் துல்லியமாகவே பொருந்தி விடும்.

பா.ஜ.க. மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் இந்தியாவில் ஒன்பது மாநிலங்களில் ஆட்சியதிகாரத்தில் இருக்கின்றன.

இவை அந்தக் கட்சிக்குப் பலம் என்பதைவிட பலகீனம்தான் அதிகம் என்று சொல்ல வேண்டும். தென்னகத்தில் பி.ஜே.பி. முதன் முதலாக ஆட்சியைப் பிடித்த மாநிலம் கருநாடகம்தான். அந்த மாநிலம் ஒன்று போதும் - பி.ஜே.பி. என்பது ஆட்சிப் பொறுப்பில் இருப்பதற்குச் சிறிதும் அருகதையற்ற கட்சி என்பதற்கு.

அய்க்கிய முற்போக்குக் கூட்டணி (UPA) ஆட்சியை நோக்கி ஊழல் என்று விரலை நீட்டுவதற்கும் பா.ஜ.க.வுக்குத் தகுதியில்லை என்பதற்கு கருநாடகத்தில் நடைபெற்ற எடியூரப்பா தலைமையிலான பி.ஜே.பி. ஆட்சி போதுமானதே!

இது அன்னியில் பி.ஜே.பி. ஆளும் மாநிலங்களிலும் ஏகப்பட்ட கோஷ்டிச் சண்டைகள்! மூத்த வழக்குரைஞரும், மத்திய பி.ஜே.பி. ஆட்சியில் அமைச்சராக இருந்தவருமான ராம் ஜெத் மலானி அவர்களே பி.ஜே.பி.க்குள் நடக்கும் உட்கட்சிச் சண்டைபற்றி வெளிப்படையாகவே விமர்சனம் செய்துள்ளார்.

அடுத்த பிரதமர் குஜராத் மாநில முதல் அமைச்சர் நரேந்திரபாய் தாமோதரதாஸ் மோடிக்குச் சொந்த மாநிலத்திலேயே கட்சிக்குள் கடுமையான அதிருப்தி!

அம்மாநில முன்னாள் முதல் அமைச்சர் கேசுபாய் படேல் மோடியை எதிர்த்து முன்னிலையில் நிற்கிறார். குஜராத்தில் மோடி அமைச்சரவையில் இடம் பெற்றிருந்த கோர்தன் ஜடாபியா மகா குஜராத் ஜனதா கட்சி என்ற தனிக் கடையைத் தொடங்கி விட்டார்.

பி.ஜே.பி. கூட்டணிக் கட்சியான அய்க்கிய ஜனதா தளத்தைச் சேர்ந்த பீகார் முதல் அமைச்சர் நிதிஷ்குமார் மோடி தன் மாநிலத்துக்குள் வருவதை விரும்பாதவர். இவற்றையும் தாண்டி நீதிமன்றங்களில் அடிக்கடி மோடியின் தலையில் ஆழமான காயங்களை உண்டாக்கும் குட்டுகள் விழுந்து கொண்டு தானிருக்கின்றன.

சிறுபான்மை மக்களின் கடும் எதிரி - இந்து மத வெறியர் என்ற அடையாளம் நாடு தழுவிய அளவில் அவர்மீது உண்டு, என்னதான் சாமர்த்தியம் காட்டினாலும் இந்த அடையாளத்தை அவ்வளவு எளிதாக அழித்துவிட முடியாது - முடியவே முடியாது!

பி.ஜே.பி.யில் மோடி உட்பட அரை டஜனுக்கு மேற்பட்ட பிரதமருக்கான வேட்பாளர்கள் இருக்கின்றனர். யார் காலை யார் இழுப்பார்கள்? என்பது சுவையான நிகழ்வுகளே!

கட்சியின் தேசியக் குழு புதுடில்லியில் நடைபெற்றபோது, அந்தக் கூட்டத்தைப் புறக்கணித்த மோடி கடந்த வாரம் மும்பையில் நடைபெற்ற தேசியச் செயற்குழுவின் முதல் நாள் கூட்டத்தைப் புறக்கணித்தார். இரண்டாம் நாள் கூட்டத்திற்கும் நரேந்திரமோடி வரவில்லை என்றால், அது அகில இந்திய அளவில் பெரும் அளவுக்குச் சர்ச்சை ஏற்படுவதற்கு வழிவகுக்கும் என்பதால், மோடியின் பரம எதிரியும். பி.ஜே.பி.யின் முன்னாள் பொதுச் செயலாளருமான சஞ்சய் ஜோஷியைப் பதவி விலக வைத்து விட்டார் - பி.ஜே.பி.யின் அகில இந்தியத் தலைவரான நிதின்கட்காரி.

இவை எல்லாம் ஒட்ட வைக்கும் தற்காலிக ஏற்பாடு என்பது அரசியல் அறிந்த அனைவருக்கும் தெரிந்ததுதான்.

இதற்கிடையே தம் வாழ்நாளுக்குள் எப்படியும் அந்தப் பிரதமர் நாற்காலியில் உட்கார்ந்து பார்த்துவிட வேண்டும் என்று மூச்சு முட்ட ஆசையைத் தேக்கி வைத்திருக்கும் எல்.கே. அத்வானி தம் அதிருப்தியைத் தெரிவிக்கும் வகையில் தேசியச் செயற்குழுக் கூட்டம் முடிந்து மும்பையில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பங்கு ஏற்காமலேயே டில்லிக்கு நடையைக் கட்டி விட்டார்.

இந்தச் சண்டைகள் எல்லாம் ஓய்ந்து ஒருவருக்கொருவர் சமாதானம் அடைவதற்குள் தேர்தல் வந்த வேகம் தெரியாமல் நடந்து முடிந்து விடும் ஆசைக் கனவு கண்டவர்கள் கொட்டாவி விட வேண்டியதுதான்!
மக்களைக் கூறுபோட்டு, சிறுபான்மை மக்கள் மீது நஞ்சைக் கக்கும் உயர் ஜாதி ஆணவ அமைப்பு மீண்டும் ஒரு முறை ஆட்சிக்கு வருவதை வெகு மக்கள் விரும்ப மாட்டார்கள் என்பது உறுதி! உறுதி!!29-5-2012

தமிழ் ஓவியா said...

மாபெரும் சமூக சீர்திருத்தவாதியான தந்தை பெரியார் அவர்களின் வாழ்வைப் பற்றி சிங்கப்பூர் பேராசிரியர் வெங்கடாசலபதி நினைவு கூர்கிறார்சிங்கப்பூர் தேசிய பல்கலைக் கழகத்தின் கலாச்சார உறவுகளுக்கான இந்தியன் கவுன்சிலின் இருக்கையில் தற்போது வீற்றிருக்கும் பேராசிரியர் ஏ.ஆர்.வெங்கடா சலபதி அவர்கள், 2012 மார்ச் 28 அன்று ஆற்றிய ஒரு பொது உரையில், மாபெரும் சமூக சீர்திருத்தவாதியான தந்தை பெரியார் ஈ.வெ. ராமசாமி அவர்கள் முதன் முதலாகக் கடல் கடந்து சிங்கப்பூருக்கு வந்த நிகழ்ச்சியை நினைவு கூர்ந்து பேசினார். ஈரோடு முதல் வொல்கா வரை - மலேயாவிலும், அய்ரோப்பாவிலும் பெரியார், 1929- 1932 என்ற தலைப்பிலான தனது உரையில் அவர், இந்த மூன்று ஆண்டு காலத்தில் தந்தை பெரியார் அவர்கள் மலேசிய நாட்டிற்கும், அய்ரோப்பிய நாடுகளுக்கும் மேற்கொண்ட சுற்றுப் பயண நிகழ்ச்சிகளைப் பற்றி பேசினார்.

திராவிடர் இயக்கத்தின் தலைவரான தந்தை பெரியார் ஒரு கடவுள் மறுப்பாளராக இந்திய வரலாற்றின் மீது ஓர் ஆழ்ந்த பாதிப்பை ஏற்படுத்தினார். சமூக சமத்துவம் மற்றும் பெண்கள் முன்னேற்றம் பற்றிய ஆற்றல் மிகுந்த தந்தை பெரியார் அவர்களின் கருத்துகள், கொள்கைகள் எவ்வாறு பல்வேறுபட்ட நாடுகளிலும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது என்பதைப் பற்றி பேராசிரியர் வெங்கடாசலபதி தனது உரையில் விரிவாக விளக்கிக் கூறினார்.

தனது அரசியல் வாழ்க்கையைக் காங்கிரஸ் கட்சியில் துவங்கிய தந்தை பெரியார் அவர்கள், காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி தனியாக, சுயமரியாதை இயக்கம் என்ற இயக்கத்தைத் தொடங்கினார். சமூகத்தில் மக்களிடையே நிலவும் சமத்துவமின்மைக்கு மதமும், ஜாதியுமே முக்கியமான காரணிகள் என்ற கருத்தின் அடிப்படையில் அவர் தனது புதிய இயக்கத்தை உருவாக் கினார்.

தனது வெளிநாட்டுச் சுற்றுப் பயணங்களை முடித்துக் கொண்டு திரும்பிய தந்தை பெரியார்அவர்கள் சமதர்மக் கோட்பாடு மற்றும் ஆங்கிலேயரின் காலனி ஆதிக்க எதிர்ப்புக் கோட்பாடு ஆகியவற்றைக் கொண்டு தனது இயக்கத்தை மறுமலர்ச்சி பெறச் செய்தார்.

இந்தச் சுற்றுப் பயணத்தின் விளைவாகவே, தந்தை பெரியார் அவர்கள் சமதர்மக் கோட்பாடு மற்றும் ஆங்கிலேயரின் காலனி ஆதிக்க எதிர்ப்புக் கோட்பாடு ஆகியவற்றைத் தனது புகழ்பெற்ற சுயமரியாதை இயக்கத்தில் புகுத்தினார் என்று பேராசிரியர் வெங்கடாசலபதி குறிப்பிட்டார்.

காலனி இந்திய நாட்டின் சமூக, பண்பாட்டு வரலாறு பற்றி ஆங்கிலத்திலும், தமிழிலும் பல நூல்களை பேரா. வெங்கடாசலபதி அவர்கள் எழுதி வெளியிட்டுள்ளார்.29-5-2012