Search This Blog

20.5.12

அயோத்திதாசரைப் பெரியார் மறைத்தாரா?-பறையன் கட்சி, பள்ளன் கட்சி என்று பெயர்! - 4

பறையன் கட்சி, பள்ளன் கட்சி என்று பெயர்! - (4)


திராவிடர் அடையாளம் சாதியால் மாசுபடுத்தப்பட்டதால் தமிழ் அடையாளத்தை அயோத்திதாசர் முன்வைத்தார். 1907 ஆம் ஆண்டில், தான் தொடங்கிய வார இதழுக்குத் தமிழன் என்றே அவர் பெயர் சூட்டினார். மொழி அடையாளத்தை முன்னிறுத்தினால் சாதி அடையாளம் மெல்ல மெல்ல மறையும் என்று அவர் நம்பினார். தமிழ் பாஷைக்குரியோர் யாவரையும் தமிழ் சாதி என்று அழைக்கலாமெனவும் அவர் ஆலோசனை சொன்னார்.

இப்படி மொழியை முதன்மைப் படுத்திப் பத்திரிகைகளில் எழுதுவதோடு வார்த்தைகளிலும் பேசிக் கொண்டு வந்தால், சாதிப் பிரிவினைகள் நாளுக்கு நாள் மறந்து பாஷைப் பிரிவினைகள் பெருகிக் கொண்டே வரும். அத்தகைய பாஷைப் பிரிவினைகளின் பெருக்கத்தால் மேல் சாதி கீழ்ச்சாதி என்னும் பொறாமைகள் அகன்று தமிழ் பாஷைக்காரர்கள் யாவருமேனும் ஒன்று கூடி கல்வி விருத்தியிலும் கைத் தொழில் விருத்தியிலும் ஒற்றுமை அடைந்து தேசத்தைச் சீர்திருத்தாவிடினும், தாங்களேனும் சீரடைவார்கள் என்று நம்பிக்கை தெரிவித்தார். (அ.சி.தொகுதி 1, பக்கம் 42).

ஆனால் இன்று தமிழ் அடை யாளம் பேசுகிறவர்கள் சாதியைக் கைவிட்டிருக்கிறார்களா? அவர்கள் தாழ்த்தப் பட்ட மக்களை எவ்வாறு நடத்துகிறார்கள்? நாள்தோறும் தமிழகத்தில் நடந்து வரும் சாதிய வன்கொடுமைகளின் பட்டியலில் இதற்கான பதிலை நாம் காணலாம். தமிழ் அடையாளம் என்பது சாதியைக் கைவிடாதது மட்டுமன்றி பிற தேசிய இனங்களுக்கு எதிரான இன வெறியாக வெளிப்படத் தொடங்கியிருப்பதையும் நாம் இப்போது பார்க்க முடிகிறது. தமிழ் நாட்டின் நதிநீர் உரிமைகள் அண்டை மாநில அரசுகளால் மறுக்கப்படுகின்றன என்பது உண்மைதான். ஆனால், அதற்குத் தீர்வு குறுகிய இனவெறி ஆகாது.

திராவிட அரசியல் விமர்சிக்கப்பட வேண்டும். ஆனால் அதை இன்னொரு குறுகிய அடையாளத்தைக் கொண்டு செய்துவிட முடியாது. சாதியால் கறையுண்ட திராவிடத்துக்கு மாற்று சாதி பேதமற்ற அரசியல்தானே தவிர சாதிப் பற்றை மூடி மறைத்துக் கொண்டிருக்கும் தமிழ் அரசியல் அல்ல என்று தோழர் இரவிக்குமார் சண்டே இந்தியன் (29.-4.-2012) இதழில் குறிப்பிட்டுள்ளார்.

இதில் காணப்படும் முரண்பாடுகளைக் கவனிக்க வேண்டும். திராவிட அடையாளம் சாதியால் மாசுபடுவதால் தமிழ் என்னும் மொழி அடை யாளத்தை முன்வைத்தார் அயோத்திதாசர் என்று கூறுகிறார்.

அதில் அவர் வெற்றி பெற்றாரா? விளக்கம் இல்லை - அவர் கூற்றில். அவரைத் தொடர்ந்து இயக்கம் நடத்தப் பட்டதா?

சாதிக்கப்பட்டவை என்ன என்பதற்கு இதுவரை யாரும் பட்டியலிட வில்லை. இன்று தமிழ் அடையாளம் பேசுகிறவர்கள் சாதியைக் கைவிட்டிருக்கிறார்களா என்று தோழர் இரவிக்குமாரே கேள்வியும் எழுப்புகிறார். ஏன் இந்த முரண்பாடு? மொழி அடை யாளத்தின் மூலம் ஜாதி அடையாளம் அழியும் என்ற அயோத்திதாசரின் கருத்து என்ன ஆயிற்று என்பதற்கு ஏன் பதில் சொல்லவில்லை - தோழர் இரவிகுமார்? சொல்ல முடிய வில்லை என்றே எடுத்துக் கொள்ள வேண்டும்.

திராவிடன் அல்லது தமிழன் என்று அடையாளப் படுத்தப்படுகிற தமிழ் நாட்டில் மட்டும்தான் சாதி இருக்கிறதா? இவை இல்லாத மற்ற மற்ற மாநிலங்களில் எல்லாம் சாதிகள் ஒழிந்து சவக்குழிக்குப் போய்விட்டனவா?

ஜாதி என்பது பார்ப்பனீயம் உருவாக்கிய வருண அமைப்பின் விளைவு! - அதனை ஒழிக்க, அதனை அந்த இடத்தில் சந்திப்பதை விட்டு, வேறு ஓர் இடத்தில் நின்று தேடுவது சதிராடுவது ஏன்? ஒரு பொருளை எந்த இடத்தில் தொலைத்தோமோ அந்த இடத்தில்தான் தேட வேண்டும் என்பார் தந்தை பெரியார்.

அந்த ஆரியச் சர்ப்பத்தைச் சந்திக்க சரியான ஆயுதம் திராவிடன் என்பதுதான் தந்தை பெரியார் அவர்களின் முடிவு.

ஆரியர் என்று வருங்கால் - அதன் எதிர்நிலை திராவிடர் என்பதுதான் சரியானதாக இருக்க முடியும். வரலாற்றின் நெடுகிலும் ஆரியர் திராவிடர் போர் என்பது நிகழ்ந்து வருகிற ஒன்றே.

இராமாயணம் என்பதே ஆரியர் - திராவிடர் போராட்டத்தைச் சித்தரிக் கும் காவியம் என்று வரலாற்று ஆசிரி யர்கள் கூறி இருப்பதை அறியாதவரா தோழர் இரவிகுமார்?

திராவிடர் இயக்கம் என்று வரும்பொழுது, அரசியலுக்குள் நுழையாத திராவிடர் கழகம், அரசியல் -கட்சி என்ற நிலைப்பாட்டினை எடுத்த நீதிக்கட்சி, தி.மு.க. என்பவை ஜாதி ஒழிப்புக்காகப் போராட வில்லையா? தாழ்த்தப்பட்ட மக்களின் முன்னேற்றத் திற்காகத் தம் பங்களிப்பைச் செலுத்த வில்லையா?

மக்கள் மத்தியில் விழிப்புணர்வு எனப்படுவது அடிப்படையானது. தந்தை பெரியார் அவர்கள் தம் வாழ்நாள் முழுவதும் பிரச்சாரம் பிரச்சாரம் என்பதில் மூழ்கிக் கிடந்தார்.

அவர் உரை வீச்சு என்பது வருணாசிரமத்தின் ஆணி வேரைச் சுட்டது. ஒடுக்கப்பட்ட மக்களின் சிந்த னையில் புத்தெழுச்சிப் பொறியைத் தட்டி எழுப்பியது.

தாழ்த்தப்பட்ட மக்கள் வாழும் பகுதியில் நடக்கும் நிகழ்ச்சிகளில் பங்கேற்பது, அவர்கள் வீட்டில் உணவு அருந்துவது, தாழ்த்தப்பட்ட மக்களைத் தங்கள் இல்ல நிகழ்ச்சிகளுக்கு அழைப்பது - பங்கேற்கச் செய்வது: - இவற்றையெல்லாம் தமிழ்நாட்டில் செய்த இயக்கம் எது? செய்த தலைவர்கள் யார்?

இதன் காரணமாக திராவிடர் கழகம் என்றால் பள்ளன் கட்சி- பறையன் கட்சி என்று அழைக்கப் படவில்லையா?

படுத்த படுக்கையில் இருந்த மூதாட்டி மீனாம்பாள் சிவராஜ் அவர்களிடம் நீதிக்கட்சி பவள விழா மலருக்கான பேட்டி ஒன்று எடுக்கப் பட்டது. அதில் அவர் குறிப்பிடுகிறார்.

நான் ஏராளமான சுயமரியாதைத் திருமணங்களுக்குத் தலைமை தாங்கி நடத்தி இருக்கிறேன். பெரியார் அவர் கள் கலந்து கொண்ட திருமணங் களிலும் கலந்து கொண்டு பேசியி ருக்கிறேன்.

சென்னை பெரம்பூரில் என் தலைமையில் பெரியார் அவர்கள் கலந்து கொண்ட சுயமரியாதைத் திருமணம் ஒன்று நடைபெற்றது. கடுமையான மழை, தாழ்த்தப் பட்டோர் பகுதி. ஒரே சேறும் சகதியுமாகிவிட்டது - திருமணம் முடிந்து சாப்பிட்டுவிட்டுப் போகச் சொன்னார்கள். நான் ஏதோ சமாதானம் சொல்லி சாப்பிடவில்லை. பெரியார் என்ன செய்தார் தெரியுமா? மேலே இருந்த ஓலைகளை கீழே எடுத்துப் போட்டு அப்படியே உட் கார்ந்து சாப்பிட ஆரம்பித்துவிட்டார். பெரியார் எந்த ஏற்றத் தாழ்வும் பார்க்க மாட்டார் என்று அந்தப் பேட்டியில் குறிப்பிட்டாரே (நீதிக்கட்சி 75 ஆவது ஆண்டு பவளவிழா மலர் 1992- பக்கம் 125).

தந்தை பெரியார் மட்டுமல்ல - திராவிடர் கழகத் தொண்டர்களும் அப்படித்தான்.

தாழ்த்தப்பட்ட மக்களின் விடு தலைக்காக எத்தனை எத்தனை மாநாடுகள் - அவற்றில்தான் எத்தகைய தீப்பொறிப் பறக்கும் புரட்சிகரத் தீர்மானங்கள் -_ உரை வீச்சுக்கள். நினைத்துப் பார்க்க வேண்டாமா?

இந்தியத் துணைக் கண்டத்தில் தாழ்த்தப்பட்ட மக்களுக்காக திராவிடர் இயக்கம் பாடுபட்டது போல் அமைப்பு ரீதியாக உழைத்த ஓர் அமைப்பை இணைத்துத்தான் பேச முடியுமா?

தாழ்த்தப்பட்ட மக்களுக்காக எத்தனை எத்தனை மாநாடுகள் நடத்தப்பட்டன திராவிட இயக்கத்தின் சார்பில்?

சேலம் இராசிபுரம் ஆதிதிராவிடர் மாநாடு -29-.5-.1935; கள்ளக்குறிச்சியில் தென்னாற்காடு மாவட்ட ஆதிதிராவிடர் மாநாடு 16.-6.-1929; சென்னை ஆதிதிராவிடர் மாநாடு 13-.7.-1929; இராமநாதபுரம் ஆதிதிராவிடர் மாநாடு 25-.8.-1929; ஆதனூர் 2 ஆவது ஆதிதிராவிடா மாநாடு 13-.10.-1929; திருநெல்வேலி தீண்டாமை விலக்கு மாநாடு 10-6-1930; சேலம் ஆதிதிராவி டர் மாநாடு 16-.5-.1931; லால்குடி தாலுகா ஆதிதிராவிடர் மாநாடு 30-.5.-1931; திருச்சி ஆதி திராவிடர் மாநாடு 5-.7.-1931; கோவை ஆதிதிராவிடர் மாநாடு 5-.7.-1931; தஞ்சை ஜில்லா ஆதிதிராவிடர் மாநாடு 4.-7.-1931; கோவை ஆதி திராவிடர் மாநாடு 7-.12.-1931; லால்குடி தீண்டப்படாத கிறித்துவர் மாநாடு 23-.1-.1932;

அருப்புக்கோட்டை தாழ்த்தப்பட் டோர் 3 ஆவது மாநாடு 28.-8.-1932; லால்குடி தாலுக்கா ஆதி திராவிடர் கிறித்துவர் மாநாடு 7-.5.-1933; சென்னை தாழ்த்தப்பட்ட கிருத்தவர்மாநாடு 7-.8.-1933; தஞ்சை ஜில்லா 3 ஆவது ஆதி திராவிடர் மாநாடு , சீர்காழி ஆதி திராவிடர் மாநாடு 10-.7.-1935; திருச்செங்கோடு ஆதி திராவிடர் மாநாடு 7-.3.-1936; பெரியகுளம் தாலுக்கா தேவேந்திரகுல மாநாடு 3-.8.1936;

சேலம் ஜில்லா ஆதி திராவிடர் 6 ஆவது மாநாடு

சிதம்பரம் ஆதிதிராவிடர் மாநாடு 6-.5.-1937;

ஆம்பூர் ஆதி திராவிட மாநாடு 4-.7.-1937;

திருச்செங்கோடு தாலுகா ஆதிதிராவிடர் மாநாடு 1-.8.-1937;
அருப்புக்கோட்டை தாலுகா தாழ்த்தப்பட்டோர் மாநாடு 3.-1.-1938;

1938 டிசம்பர் 26, 27 நாட்களில் சென்னை மாநில தமிழ் மாநாடு சர் ஏ.டி.பன்னீர்செல்வம் அவர்கள் தலைமையிலும் பண்டித நாராயணி அம்மையார் தலைமையில் பெண்கள் மாநாடு நடைபெற்றன. அந்த மாநாட்டுப் பந்தலிலேயே நேரம் ஒதுக்கி, தாழ்த்தப் பட்டோர் மாநாடு நடத்திட வாய்ப்பு அளிக்கப்பட்டது என்றால் திராவிடர் இயக்கத்தின் உண்மை உணர்வு, தாழ்த்தப்பட்ட மக்கள்பால் எப்படி இருந்தது என்பதற்கு இந்த உரைகல் போதாதா?

இந்த மாநாடுகளில் நிறைவேற்றப் பட்ட தீர்மானங்கள் என்ன? சுயமரியாதை இயக்க - திராவிடர் இயக்கத் தலைவர்கள் இம்மாநாடுகளில் வெளியிட்ட கருத்துக்கள் என்ன என் பதைத் தெரிந்து கொண்டால், திராவிடர் இயக்கத்தின் மீது புழுதி வாரித் தூற்றுபவர்களின் முகவிலாசங்கள் வெளிறிப் போய்விடும்.

அயோத்திதாசரைப் பெரியார் மறைத்தாரா?

தந்தை பெரியார் அவர்கள்மீது சேற்றை வாரி இறைப்பது என்பதில் மிகவும் துருதுருத்து இருப்பவர்களில் சிலர் அயோத்திதாசர் என்ற தாழ்த்தப்பட்ட சமூகத் தலைவரை பெரியார் மறைத்தார் என்று குற்றஞ் சாட்டி வருகின்றனர். யாரையும் மறைத்தோ, இருட்டடித்தோ ஈரோட்டுச் சிங்கம் தன்னை உயர்த்திக் காட்ட வேண்டிய அவசியம் இல்லாதவர் - அது சுயச் சிந்தனையின் ஊற்று -சுட்டெரிக்கும் சூரியன்!

திராவிடர் இயக்க ஆய்வாளர் மானமிகு க. திருநா வுக்கரசு அவர்கள் எழுதியுள்ள திராவிடர் இயக்கம் தலித்துகளுக்கு எதிரானதா? எனும் நூலில் இதுகுறித்துத் திரட்டித் தந்துள்ள விளக்கம் இதோ!

அயோத்திதாசரது நூல்கள்: பூர்வத் தமிழொளி எனும் புத்தரது ஆதிவேதம், விபூதி ஆராய்ச்சி, கபாலீஸ்வரர் சரித்திர ஆராய்ச்சி, அரிச்சந்திரன் பொய்கள், திருவள்ளுவர் வரலாறு, புத்த மார்க்க வினா - விடை, இந்திரர் தேச சரித்திரம், விசேஷ சங்கைத் தெளிவு, விவேக விளக்கம், தென்னிந்தியர் தேச புத்த சாட்சியக்காரர்களில் ஒருவராகிய ஸ்ரீஅம்பிகை அம்மன் அருளிய திரிவாசகம், ஆத்திசுவடி, குன்றை வேந்தன், வெற்றி ஞானம், தென்னிந்தியர் தேச புத்த தர்ம சாட்சியக்காரர்களில் ஒருவராகிய ஸ்ரீமுருகக்கடவுள் வரலாறு, யதார்த்த பிராமண, வேஷ பிராமண வேதாந்த விவரம் ஆகியனவாகும்.

இந்த நூல்கள் எல்லாம் நமக்கு 1980ஆம் ஆண்டின் கடைசியில்தான் கிடைத்தன. 1960களில் திரு.வி.க.வின் வாழ்க்கைக் குறிப்புகளைப் படித்த நமக்கு - பெ.சு. மணி எழுதியதற்கு பிறகு - நம் தோழர் எஸ்.வி. இராஜதுரை நீலகிரியிலிருந்து படியெடுத்து அனுப்பினார். இதற்கு இடையில் எத்தனை ஆண்டுகள் ஓடி மறைந்துள்ளன. இப்படி நூல்கள் இருப்பதாகவே எவர்க்கும் தெரியாமல் போனதேன்? இவற்றை யார் மறைத்தது?

_ 1938 வரை வாழ்ந்த ஆர். வீரையன் அயோத்திதாசர்க்கு என்ன செய்தார்?

_ 1941 வரை வாழ்ந்த ம. பழனிசாமி அயோத்திதாசரது சிந்தனைகளைப் பிரச்சாரம் செய்தாரா?

_ 1945 வரை வாழ்ந்த இரட்டை மலை சீனிவாசன் அயோத்திதாசப் பண்டிதரின் சிந்தனைகளை _ நூல்களை முன்னெடுத்துச் செல்லாமல் பதிப்பிக்காமல் போனதேன்?

_ 1947 வரை வாழ்ந்த எம்.சி. ராஜா அயோத்திதாசரை நினைவுபடுத்த என்ன செய்தார்?

_ 1958 வரை வாழ்ந்த சுவாமி சக ஜானந்தாவுக்கு அயோத்திதாசர் பற்றிய மதிப்பீடு என்ன? அவர் அயோத்தி தாசரது சிந்தனைகளுக்குச் செய்தது என்ன?

_ 1964 வரை வாழ்ந்த மேயர் சிவராஜ் அயோத்திதாசரது சிந்தனைகளை முன்னெடுத்துச் செல்ல உதவினாரா?

_ 1966 வரை வாழ்ந்த எல்.சி. குருசாமி அயோத்தி தாசரது சிந்தனைகளை வெளிப்படுத்தாதது ஏன்?

இப்படி நாங்களும் தாழ்த்தப்பட்ட தலைவர்களை வரிசைப்படுத்திக் காட்டிக் கேட்க முடியும்?

ஏன் திருமாவளவனைக்கூட இப்படிக் கேட்க முடியும்? அதற்கெல்லாம் என்ன காரணம் என்பதை நாட்டுக்குத் திருமாவளவன் போன்றவர்கள்தான் விளக்க வேண்டும்.

இக்கட்டுரையாளரான நாம் தலைவர் அல்லர். ஓர் ஆய்வாளன். நம்மினமும், மொழியும், நாடும் வாழ் வாங்கு வாழ வேண்டும் என்பதன்றி நமக்கு வேறொரு பேராசை எப்போதும், எதிலும் இருந்ததில்லை. இனியும் இருக்கப் போவதில்லை. ஆகவேதான் திருமாவளவன் இவற்றையெல்லாம் விளக்கினால் விளங்கிக் கொள்ள நாம் ஆயத்தமாய் இருக்கின்றோம்.

அயோத்திதாசப் பண்டிதர் பற்றிய சிந்தனைகளை ஒருவாறு உள்வாங்கிக் கொண்ட நாம், 1990ஆம் ஆண்டுகளின் தொடக் கத்தில் பரிதி. இளம்வழுதியைச் சந்தித்தோம். நாம் அயோத்தி தாசரைப்பற்றிப் படித்ததை எல்லாம் எடுத்துக் கூறினோம். வியந்தார்.

அப்போது பரிதி, எங்க அப்பாதான், மேடையிலே பேசும்போது, நாங்க அயோத்தி தாசப் பண்டிதர் பரம்பரையடா என்று சொல்லுவார். எனக்கு அவரைப் பற்றி ஒன்றும் தெரியாது என்று கூறினார். நாம் அயோத்தி தாசர்க்கு ஒரு நினைவுச் சின்னம் எழுப்ப வேண்டும் என்று கேட்டுக் கொண்டோம். நாங்கள் இருவரும் அமைச்சராய் இருந்த க.சுந்தரம் அவர்களைச் சென்று பார்த்தோம். அதன்பிறகே தாழ்த்தப்பட்ட தலைவர்களைப் பற்றிய களத்தில் நின்ற காவலர்கள் எனும் எமது நூல் வெளிவந்தது. அயோத்திதாசர்க்கு ஒரு சிலை அமைக்க வேண்டும் என்று விரும்பி மீஞ்சூருக்குச் சென்றோம். சுந்தரம், கும்மிடிபூண்டி வேணு, பரிதி எல்லோரும் அதற்கு உதவ முன்வந்தனர். இதற்கிடையே மறுமலர்ச்சி தி.மு.க. உதயமாயிற்று. தொடங்கிய பணிகள் அப்படியே நின்றுவிட்டன.

இங்கே நாம் பார்க்க வேண்டியது. அயோத்திதாசரது சிந்தனைகள் அவரது மறைவுக்குப் பின் பிரச்சாரம் செய்யப்படவில்லை. அவரது வெளியீடுகள் அவர் வாழ்ந்த காலத்திலேயே அறிஞர்களிடையே எடுத்துச் செல்லப்படவில்லை. அவரது சிந்தனைகளை வெளிக் கொணர்ந்தவர்களைப் பாராட்டவில்லை.

அயோத்திதாசரது மரணத்திற்குப் பின் _ அதாவது 5 ஆண்டுகளுக்குப் பிறகுதான் பெரியார் காங்கிரசில் (1919) சேருகிறார். அதற்கு முன்பே அவர்க்குத் தாழ்த்தப்பட்டோர் மீது ஓர் அனுதாபம் இருந்திருக்கிறது. மனித குலத்தின் மிகக் கொடிய பழக்கம் தீண்டாமை என்பதை உணர்ந்த அவர், 1917 ஆம் ஆண்டிலேயே ஈரோடு நகராட்சித் தலைவராக இருந்தபோது கொங்கப் பறைத்தெரு என்பதை வள்ளுவர் தெரு எனப் பெயர் மாற்றம் செய்தார். ஈரோடு நகராட்சிப் பள்ளிகளில் தீண்டப்படாத வகுப்புப் பிள்ளைகள் சேரவும், படிக்கவும் வழி செய்தார்.

பெரியாரது குடிஅரசைப் புரட்டினால் எத்தனை ஆதி திராவிட அமைப்புகளின் நிகழ்ச்சிகளுக்கு அவ்வேட்டில் முன்னுரிமை வழங்கப்பட்டு இருக்கின்றன என்பதை தெரிந்து கொள்ளலாம்.

பெரியார்க்கு இயல்பிலேயே மனிதநேயம் இருந்ததால்தான் இப்படியெல்லாம் தொடக்கக் காலத்திலேயே செய்ய முடிந்தது. காங்கிரசில் பெரியார் இருந்தபோது அவர் தலைமையில் வைக்கம் போராட்டம் நடந்தது. அதைப்பற்றி அம்பேத்கர் பாராட்டி எழுதினார் என்று தனஞ்சய் கீர் (அம்பேத்கர் வரலாற்றை எழுதியவர்) கூறுகிறார்.

அயோத்திதாசரைப்பற்றிய வெளியீடுகள் பெரியார்க்குக் கிடைத்திருக்குமானால் - _ அவரது கவனத்திற்கு எவரேனும் எடுத்துச் சென்றிருப்பார்களானால் கட்டாயம் விமர்சனம் செய்திருப்பார். ஒத்த கருத்துகளை _ உடன்பாடானவற்றைப் பாராட்டியிருப்பார். குடியரசில், விடுதலையில் எழுதியிருப்பார்.

சென்னையில் _ இராயப்பேட்டையில் திரு.வி.க.வின் வீட்டருகிலேயே வாழ்ந்த அயோத்திதாசரின் சிந்தனைகள் திரு.வி.க.வுக்கே கிடைக்கவில்லையே! அந்தக் காலத்தில் ஓர் அறிஞர் நூல் ஒன்று எழுதினால் அறிவார்ந்த பெருமக்களிடம் எடுத்துச் சென்று கொடுத்து அபிப்ராயம் கேட்கின்ற வழக்கத்தை _ எழுதி அனுப்புமாறு வேண்டுகோள் விடுக்கும் வழக்கத்தை வைத்திருந்தனர். அயோத்திதாசர் அப்படி யாருக்கும் அனுப்பியதாகத் தெரியவில்லை. அதற்குக் காரணம் என்னவென்றும் புரியவில்லை. இதனால் அவரது கருத்துகள் அவர் காலத்திலேயே பரவ வழியில்லாமல் ஆகிவிட்டது.

திரிசிரபுரம் மீனாட்சி சுந்தரம் பிள்ளை காலத்தில் சங்க இலக்கியங்கள் கிடைக்கவில்லை. சங்க இலக்கியங்கள் கிடைக் காததனால் தமிழை அவர் போதிக்காமல் விட்டாரா என்ன? அவர் வாழ்ந்த காலத்தில் கிடைத்திருந்தால் மேலும் சிறப்பாகச் சங்க இலக்கியங்கள் அவரது உரையையும் பெற்றிருக்கும் அல்லவா? அதுபோலத்தான் பெரியார்க்கு அயோத்திதாசரது சிந்தனைகள் நூல்கள் கிடைக்கவில்லை; கிடைத்திருந்தால் அவரது கருத்தைக் கூறியிருப்பார். கட்டாயம் எழுதியிருப்பார்.

வள்ளலார் தமது இறுதிக் காலத்தில் சிந்தனையின் உச்சிக்கே சென்று சமயச் சிந்தனையாளர்களின் வட்டத்திலே ஞான வொளியைப் பாய்ச்சிய மேதை!

சாதியிலே மதங்களிலே சமய நெறிகளிலே
சாத்திரச் சந்தடிகளிலே கோத்திரச் சண்டையிலே
ஆதியிலே அபிமானித்து அலைகின்ற உலகீர்!
அலைந்தலைந்து வீணேநீர் அழிதல் அழகல்லவே!
நால்வருணம் ஆசிரமம் ஆச்சாரம் முதலாம் நவின்ற
கலைச் சரிதம்எலாம் பிள்ளை விளையாட்டே
மேல் வருணம் தோல் வருணம் கண்டறிவார் இல்லை
நீவிழித்திது பார் என்றனுக்கு விளங்கிய சற்குருவே!
என்று பாடுகிறார் வள்ளலார்.

வள்ளலார் (1823_1874) அயோத்தி தாசர்க்கு (1845_1914) முன்பு வாழ்ந்தவர். சைவ சித்தாந்தியாய் இருந்து அதிலும் நம்பிக்கையை இழந்து, ஞானவொளியை நாடியவரை, அயோத்திதாசர் _ அவர்க்குப் பின்வந்தவர் என்பதால் அவரைப்பற்றி இவர் ஒன்றும் சொல்லவில்லையே என வருத்தம் கொள்ளுவது, விமர்சனம் செய்வது எப்படி நமக்குக் குறையாகக் கொள்ள முடியாதோ, அப்படியே பெரியாரது எழுத்துக்களில் அயோத்திதாசரது சிந்தனைகளை விமர்சனங்களை அல்லது பாராட்டைத் தேடுவது, குறையாகக் கொள்ள முடியாது என்றே நாம் கருதுகின்றோம்.

அயோத்திதாசரது கருத்துகளைப் பற்றிப் பெரியார் கருத்து கூறாததற்கு, எந்தவித உள்நோக்கமும் இருக்க முடியாது என்பதை, அவரது வாழ்க்கை வரலாறு நமக்கு உணர்த்து வதால்தான் இப்படிக் குறிப்பிடுகின்றோம் என்கிறார் ஆய்வாளர் க. திருநாவுக்கரசு.

இதற்கு மேலும் விழிக்கவில்லை என்றால், குற்றம் சொல்வோர் பொய்த் தூக்கம் போடுவோரே!


--------------- பார்ப்போம்-------------கவிஞர் கலி. பூங்குன்றன் அவர்கள் 19-5-2012 “விடுதலை”ஞாயிறுமலரில் எழுதிய கட்டுரை

4 comments:

தமிழ் ஓவியா said...

அயோத்தி தாசர்


பண்டிதமணி அயோத் திதாசரின் பிறந்த பொன் னாள் இந்நாள் (1845).

ஒடுக்கப்பட்ட மக் களின் உரிமைச் சங்கநாதம் இவர். இரட்டைமலை சீனிவாசன் இவரின் நெருங்கிய உற வினர் ஆவார். 1891 டிசம் பரில் திராவிட மகா ஜனசபை யின் சார்பாக முதல் மாநாடு நடை பெற்றது. இதற்கு முன் முயற்சி எடுத்தவர்கள் அயோத்திதாசரும், இரட்டைமலை சீனிவா சனும் ஆவர்.

கல்வி கற்கக் கூடிய வாய்ப்புகளுக்கு உள்ள சமூகத் தடையை நீக்க வேண்டும்; கிராம ஒன்றி யங்கள், நகராட்சிகள் ஆகி யவற்றில் பிரதிநிதித்துவம் தரவேண்டும்; முன்சீப், மணியக்காரர் வேலை தரப்பட வேண்டும்; இந்துக் கள் பணி புரியும் நீதிமன் றங்களில் செல்வதற்கான தடையையும், பொது நீர் நிலைகளைப் பயன்படுத் துவதற்கான சமூகத் தடை களையும் நீக்க வேண்டும்; பறையர் என்பதைக் கேவலப்படுத்தும் நோக்கில் சொல்வதோ, பறையர்க்கு இழிவான சிறு பணிகளைத் தருவதோ கூடாது என்று அம்மாநட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தாழ்த்தப்பட்டவர்களுக் குக் கல்வி அளிக்கப்பட வேண்டும் என்பதில் அயோத்திதாசர் முக்கிய மாகக் கவனம் செலுத்தி னார். கல்விதானே உண் மையான கண் - அதனை இந்துத்துவ வருணாசிரம சமுதாயம் அவித்து விட்டதல்லவா?

அவருக்குக் கிடைத்த ஒரு பவுத்த சிந்தனையா ளர்தான் - அமெரிக்க இராணுவத்தில் கர்னலாகப் பணியாற்றி, ஒடுக்கப்பட்ட மக்களுக்குக் கல்விக் கண் கொடுத்தவர் கர்னல் ஆல்காட்!

1894 இல் சென்னை யில் தீண்டப்படாத மக் களுக்காக தனிப் பள்ளிக் கூடங்களைத் திறந்தார். அவருக்கு அயோத்திதாசர் அளித்த விண்ணப்பம் முக்கியமானது. தமிழ் நாடெங்கும் தாழ்த்தப்பட்ட பிள்ளைகளுக்குக் கல்விச் சாலைகளைத் திறக்க வேண்டிய விருப்பத்தை அதில் வெளியிட்டிருந்தார்.

அந்த விண்ணப்பத்தில் சில வரலாற்றுக் குறிப்புகள் கிடைக்கின்றன. பஞ்ச மர்கள்தான் ஆரம்ப காலத் தில் திராவிடர்களென அழைக்கப்பட்டதை அதில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஆரியர்களுக்கும், திராவிடர்களுக்குமிடையே ஏற்பட்ட பகை உணர்வு களை எல்லாம் அதில் வெளிப்படுத்தியுள்ளார்.
ஆரியராவது திராவிட ராவது என்று பேசும் அறிவு ஜீவிகள் முதலில் அயோத்திதாசரைப் படிக் கட்டும்.

- மயிலாடன் 20-5-2012

.

தமிழ் ஓவியா said...

ஆன்மீக சிதறல்கள்!


எது வேண்டும் சொல் மனமே?

பலன் தரும் ஸ்லோகம்

(தீய கனவுகள், எதிரி பயம், மரண பயம் நீங்க..)

ஓம் ருத்ரம் பஸுபதிம் ஸ்தானும் நீலகண்டம் உமாபதிம்

நமாமி ஸிரஸா தேவம் கிம் நோ ம்ருத்யு: கரிஷ்யதி

கால கண்டம் காலமூர்த்திம் காலஜ்ஞம் காலநாஸனம்

நமாமி ஸிரஸா தேவம் கிம் நோ ம்ருத்யு: கரிஷ்யதி

- மார்க்கண்டேயர் அருளிய மஹாம்ருத்யுஞ்ஜய ஸ்தோம்ரம்

பொதுப் பொருள்: பாவம் செய்பவர்களுக்கு துக்கத்தைக் கொடுத்து வருந்தச் செய்கிறவரே, விவேகமற்றவர்களுக்கு விவேகத்தைத் தருபவரே, புகழ் மங்காதவரே மகாதேவா நமஸ்காரம், கறுத்த கழுத்தைக் கொண்டவரே, பார்வதியின் கணவரே மகாதேவா, தலை தாழ்த்திய நமஸ்காரம். உம்மை நம்பும் என்னை, யமன் முதலான எந்த பயம்தான் அணுக முடியும்? விஷத்தைக் கண்டத்தில் கொண் டவரே, கால வடிவினரே, காலத்தை நிர்ணயிப்பவரே... யமனை அழித்த வரே மகாதேவா நமஸ்காரம்.

(இந்த துதியை திங்கட்கிழமை தோறும் துதித்து வந்தால் யம பயம் அகலும். துர்க்கனவு தோஷங்கள் நீங் கும். சத்ரு உபாதைகள் தொலையும்).
- தினகரன் ஆன்மீக மலர் 19.5.2012

யமபயம் நீங்குமா?எத்தனை வயதில் நீங்கும்? தமிழ்நாட்டில் ஆண்களின் சராசரி வயது 68 ஆகவும் பெண்களின் சராசரி வயது 71.5 ஆகவும் உள்ளதே. இதற்கும் இந்தத் துதிக்கும் சம்பந்தா சம்பந்தம் உண்டா?

இந்தத் துதி தமிழ்நாட்டுக்கா? இந்தியாவுக்கா? உலக நாடுகள் அத்தனைக்குமா?

திருக்கடையூரில் மார்க்கண் டேயன் என்பவன் என்றும் 16 வயதில் இருப்பதாகச் சொல்லப்படுகிறதே - அவன் இப்பொழுது எங்கே இருக் கிறான்? கொஞ்சம் கண்டுபிடித்துச் சொல்லுங்கள் பார்க்கலாம்.

திங்கள்கிழமை தோறும் இந்தத் துதியைப் பாடினால் எமபயம் நீங்கும் என்றால், எதற்கு மருத்துவமனைகள் மருத்துவர்கள் - இழுத்து மூடி விட லாமா?

இதோ ஒரு நரம்பியல் நிபுணர்

நரம்புக்கோளாறு நீக்கும் சோளீஸ்வரர்

நரம்புக் கோளாறுகள் நீக்கும் சிறந்த பரிகாரத் தலமாக விளங்கு கிறது பேரம்பாக்கம் சோளீஸ்வரர் கோயில். இவ்வூரில் உள்ள முதியவர் ஒருவர் நரம்புக் கோளாறினால் பெரிதும் பாதிக்கப்பட்டார். அவருக்கு மருத்துவம் பார்க்க மூன்று லட்ச ரூபாய் வரை செலவாகும் என்று தெரிந்தது. ஆனால் முதியவரோ சோளீஸ்வரர் மீது நம்பிக்கையுடன் பிரார்த்தனை செய்து கொண்டார். அவரது பிரார்த்தனை பலித்தது.

மருத்துவமனைக்குச் செய்திருக்க வேண்டிய செலவை, கோயிலுக்குப் புதிய கொடிமரம் அமைத்துத் தந்து பிரார்த்தனையை நிறைவேற்றினார். நரம்புக் கோளாறு, நரம்புத் தளர்ச்சி நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் சோளீஸ்வரரை நாடி வருவதும், அவர்கள் நலமடைந்தபின் நன்றிக் கடன் செலுத்த வருவதும் பெருகி வருவது கண்கூடு. இவ்வாலயம் காஞ்சிபுரத்திற்கு வடக்கே 45 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.
- தினகரன் ஆன்மீகமலர் 19.5.2012

இப்படிப்பட்ட ஒரு நரம்பியல் நிபுணர் - மருத்துவர். எளிதாக எங்கே கிடைக்கப் போகிறது? மருத்துவத் துறையில் நரம்பியல் துறையையே எடுத்து விடலாமே! சுகப்பிரசவம் வேண்டுமா? புதுக்கோட்டை மாத்ரூ பூதேஸ்வரர் இருக்கவே இருக்கிறார். (குங்குமம் 23.4.2009).

எப்படிப்பட்ட மகப்பேறு மருத்துவர் பார்த்தீர்களா? மருத்துவத் துறையில், கண் மருத் துவர், பல் மருத்துவர், இதய நோய் மருத்துவர் எலும்பு முறிவு மருத்துவர், உணவு செரிமானத்துறை மருத்துவர் என்று இருப்பதுபோல இந்து மதக் கடவுள்களிலும் நரம்புக்கோளாறு நீக்கும் சோளீஸ்வரர், ஆயுள் விருத்தி செய்யும் அசகாய சூரர்கள் உள்ளனரோ!

மக்களின் மூடப் பக்தியை எப்படி யெல்லாம் தூண்டில் போட்டுப் பிடிக் கின்றனர் பார்த்தீர்களா?

நேபாளத்துக்குப் பக்தி யாத்திரை சென்ற கும்பகோண கோயில் குருக் களே விமான விபத்தில் பலியானாரே!

இவற்றை வெளியிடுவதும் இந்த ஏடுகள்தான்! என்னே, இரட்டை வேடம்!

நோய் தீர்க்கும் துறைகள் மட்டு மல்ல - சகல நிவாரணங்களும் அளிக் கும் பண்டக சாலையாக (ளுரயீநச ஆயசமநவ) இந்து மதம் இருப்பதைப் படித்தால் வெகுவாக வயிறு குலுங்கச் சிரிக்க லாம். கேட்டதெல்லாம் தருவாள் பழ வந்தாங்கல் எல்லை முத்தம்மன் (ஆனந்தவிகடன் 8.4.2009).

வழக்குகளில் வெற்றி பெற வேண் டுமா? கொல்லங்குடி (சிவகங்கை) வெட்டுடையாள் காளியை அணுக வேண்டும்.
(ராணி 7.3.2010)

பேசாமல் அரசாங்கம் என்ற ஒன்றே தேவையில்லை நீதிமன்றங் களும் தேவையில்லை. ஊருக்கு ஊர் இதுபோன்ற கோவில்களைக் கட்டி பார்ப்பனர்களை அர்ச்சகர்களாக்கி, துதிப் பாடல்களை அவிழ்த்துக் கொட் டினால், ஆகா ஆனந்த சாம்ராஜ்ஜியம் ஓகோ என்று கொழிக்குமே - அப்படித்தானே!

ஆடுவோமே பள்ளுப் பாடுவோமே! ஆலயங்கள் இருக்க என்ன பயம் என்று துள்ளுவோமே!

குறிப்பு: மக்களை மூடத்தனத்தின் பக்கம் திருப்பி மோசமான ஆபத்து களில் சிக்க வைக்கும் இந்தப் போக் கிரித்தனத்தை அனுமதிக்கலாமா? இவற்றைக் கண்டிக்க இந்த இயக் கத்தைத் தவிர வேறு எது? 20-5-2012

தமிழ் ஓவியா said...

ஆட்சியர் அலுவலகமா? ஆச்சாரக் கூடமா? திருப்பூரில் உச்சநீதிமன்ற ஆணை மீறல்


திருப்பூர், மே 20- திருப்பூர் மாவட்ட ஆட் சியர் அலுவலகம் - அலு வலகமாக இல்லாமல் ஆச்சாரக் கூடமாக வழிபாட்டுக் கூடமாக ஆகியிருக்கிறது. இது உச்ச நீதிமன்ற ஆணைக்கு விரோதமானதாகும்.

திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் தற்போது பஞ்சு ஒழுங்கு முறை விற்பனை கூட வளாகத்தில் செயல் பட்டு வருகிறது. கடந்த ஆண்டு 8.9.2011 அன்று சிறீ கற்பக விநாயகர் ஆலயம் என்ற மத வழிபாட்டுச் சின்னம் மாவட்ட ஆட்சியர் தலைமையிலேயே இங்கு நிறுவப்பட்டுள்ளது. திருப்பூர் மாவட்ட ஆட் சியர் அலுவலகத்திலேயே மதச்சார்பின்மைக்கு இந்தக் கதி என்றால் மற்ற இடங்களில் கேட் கவா வேண்டும்.

கிடாவெட்டு காவல் நிலையம்

காங்கேயம் வட் டாட்சியர் அலுவலக வளாகத்தில் காவல் நிலையம், மகளிர் காவல் நிலையம் ஆகியவை ஒருங்கே அமைந்துள் ளன. அந்த வளாகத்தி லேயே கச்சேரி கறுப் பண்ண சாமி கோவில் என்ற மத வழிபாட்டுச் சின்னம் உள்ளது. இக்கோவிலில் தினமும் பூசைகள் நடத்தப்பட்டு ஆடு, கோழி பலியிடும் மூடநம்பிக்கை நிகழ்வும் பக்தர்களால் நடத்தப் படுகிறது. இதில் சிறப் பம்சமாக மதுவகை களை வைத்தும் பூசை செய்யப்படுகிறது. இந்தக் கற்பனை காவல் கடவுளுக்கு நிஜ காவல் நிலையத்தின் சார்பில் வருடத்திற்கு ஒரு முறை மதுவுடன் கூடிய கிடா வெட்டு நிகழ்வும் நடை பெற்று வருகிறது. இதை உறுதிப்படுத்தும் வகையில் இந்த ஆண்டு கிடாவெட்டு நிகழ்வு 9.5.2012 புதன் கிழமை வெகு விமரிசையாக நடைபெற்றது. காங்கே யம் காவல் நிலையத்தின் சார்பில் முக்கியப் பிர முகர்கள் விருந்துக்கு அழைக்கப்பட்டிருந்தனர். காங்கேயம் பழைய கோட்டை சாலையி லுள்ள அண்ணாமலை மண்டபத்தில் அனை வருக்கும் கறி விருந்து ஏற்பாடு செய்யப்பட்டி ருந்தது.

இப்படி காங்கேயம் காவல்நிலையத்தில் மூடநம் பிக்கை கூத்தாடுவதற்கு காரணம் காங்கேயம் காவல் துறையினருக்கு அவர்கள் மீதும், அவர் கள் வைத்திருக்கும் துப் பாக்கிகளின் மீதும் நம் பிக்கை இல்லை போலும் மாறாக கச்சேரி கறுப் பண்ணசாமியின் மீது அதீத நம்பிக்கை.

அரசு அலுவலகங்க ளில் மத வழிபாட்டுத் தலங்களை அமைக்கக் கூடாது என்று ஏற்கெ னவே அரசு உத்தரவிட்டு உள்ளது. இந்த உத்தரவை அமல்படுத்த வேண்டி யது அரசின் கடமை. ஏற்கெனவே உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் அதை அமல்படுத்த அரசு தேவையான நடவடிக் கைகளை மேற்கொள்ள வேண்டும். அரசு அலு வலக வளாகங்களில் மத நல்லிணக்கம் பாதுகாக் கப்படவேண்டும் என்று மதுரை உயர்நீதிமன்றம் (கிளை) ஒரு பொது நல வழக்கில் 17.3.2010 அன்று உத்தரவு பிறப்பித்துள்ளது.
ஆகவே, அரசு நீதி மன்ற உத்தரவுக்கு கட் டுப்படாத, அவ்வுத்தரவு களை அவமதிக்கத் தக்க முறையில் மேற்கண்ட மதச்சார்புச் செயல்கள் மிகுந்து கொண்டேயி ருப்பதால் தற்போது புதியதாகக் கட்டப் பட்ட, இனி புதியதாகக் கட்டப்படுகிற அரசு கட்டிட வளாகங்களி லும் இது போன்ற மதச் சார்பின்மையை எள்ளி நகையாடுகிற, கேலிக் கூத்தாக்குகின்ற மதவழி பாட்டுச் சின்னங்கள் அமையவிருக்கிறதோ? என்ற அய்யப்பாடு மதச் சார்பின்மையாளர்கள், பகுத்தறிவாளர் மத்தியில் தோன்ற மேற்கண்ட சம் பவங்கள் காரணமாகின் றன.

தமிழ் ஓவியா said...

எனவே, தமிழக அர சின் தலைமைச் செய லாளர் அவர்கள் நீதிமன்ற, அரசு உத்தரவுகளைச் செயல்படுத்தும் வகை யில் உடடினயாக அரசு அலுவலக வளாகங்க ளில் அமைக்கப்பட்டுள்ள மதவழிபாட்டுச் சின் னங்களை அகற்றும் நடவடிக்கைக்கு உத்தரவு பிறப்பித்தும் ஆயுத பூஜை கொண்டாடும் அரசு அலுவலகங்களுக்கு குறிப்பாக காவல்நிலை யங்களுக்கு மதச்சார்பின் மையை வலியுறுத்தும் வகையில் சுற்றறிக்கை அனுப்பியும் ஆவன செய்க!
தவறுகளைச் சுட்டிக் காட்டுவது எங்கள் கடமை

தவறுகளைக் களை வது அரசின் கடமை!

இந்தியா மதச்சார் பற்ற நாடா? இந்து மதச் சார்புள்ள நாடா? மேற்கண்ட வளாகத் திற்கு தென்புறம் உள்ள காவல் குடியிருப்பின் முகப்பில் பிள்ளையார் கோவில் கட்டப்பட்டு தினசரி பூசை நடை பெற்று வருகிறது. மேலும் காங்கேயத்திலுள்ள கீழ் பவானி பாசன வசதி அலுவலகத்தில் பூசை நடைபெற்று வருகிறது.

ஊராட்சியில் மத ஆட்சி

வெள்ளகோவில் ஊராட்சி மன்ற வளா கத்தில் கிழக்கு முகமாக சிமெண்ட் அட்டை வேய்ந்து சுவர் எழுப்பி தற்சமயம் புதியதாக பிள் ளையார் கோவில் மெரு கூட்டப்பட்டுள்ளது. தினமும் கற்பூர ஆரா தனைகள், நீராட்டுதல், பட்டுடுத்தல், போன்ற புனஸ்காரங்களுக்கு இங்கு பஞ்சமில்லை.

ஒவ்வொரு ஆண்டும் அரசு அலுவலகங்களில் குறிப்பாக காவல்நிலை யங்கள் வாழை மரங்கள், மாவிலைத் தோரணங் கள், தேங்காய், பழம், சந்தன குங்குமம் விபூதிப் பட்டை சகிதமாக ஆயுத பூசை கொண்டாடப் பட்டு மதச்சார்பின்மை குழி தோண்டிப் புதைக் கப்பட்டு வருகிறது.

அரசு உத்தரவு அறிக்கை

தமிழ்நாடு அரசு பொது இலாகா (ஜெனரல் எம்) நினைவுக் குறிப்பு எண் 7553.66-2 நாள் 29 ஏப்ரல் 1968இல் வெளியிடப் பட்ட இலாகா தலை வர்களுக்கான அறிவிப் புப்படி மதச்சார்பற்ற ஆட்சி நாடு ஆகையால் எந்த மதத்தைச் சார்ந்த சாமியார்கள் (சாதுக்கள், மகான்கள், அவதாரங் கள் உள்பட) கடவுள் கள், பெண் கடவுள்கள் ஆகியவற்றின் படங்கள், சிலைகள் முதலியவற்றை அரசாங்க அலுவலகத் தில் அல்லது அரசுக்குச் சொந்தமான இடத்தில் வைத்திருப்பது சரியல்ல என்று அரசாங்கம் கருது கிறது. இந்தக் கட்டடங் களில் இப்போது இவை இருக்குமாயின் அவற் றைப் படிப்படியாகவும், எவ்வித ஆடம்பரமுமில் லாமல் பிறர் கவனத்தை ஈர்க்காத வகையிலும் அல்லது எவ்வித அசம் பாவிதம் நிகழாத வகை யிலும் அகற்ற வேண்டும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.