Search This Blog

25.5.12

இனிவரும் உலகத்தில் கடவுள்கதி!


(இனிவரும் உலகம் என்ற நூல் தந்தை பெரியார் அவர்களால் எழுதப்பட்டு 1944-ஆம் ஆண்டு மூன்றாவது பதிப்பு வெளியாகியுள்ளது. அதில் கடவுள் தன்மையையும், மோட்ச - நரகத்தின் புரட்டுகளையும், எதிர்கால பகுத்தறிவு உலகத்தின் சிறப்பையும் விளக்கியுள்ள பகுதியையே நேயர்கள் சிந்தனைக்காகக் கீழே தருகிறோம். -ஆர்.)

இனிவரும் உலகத்தில் கடவுள் தன்மை எப்படி இருக்கும் என்று அறிய மக்கள் கண்டிப்பாக ஆசைப் படாமல் இருக்க மாட்டார்கள். அதைச்சற்று இங்கு ஆராய்வோம்.

கடவுள் தானாக யாருக்கும் தோன்றுவதில்லை. பெரியோர்களால் சிறார்களுக்குப் போதிக்கப்பட் டும், காட்டப்பட்டுமே தோற்றமான எண்ணமும் உருவகமுமாகும். ஆனதால் இனிவரும் உலகத்தில் கடவுளைப் பற்றி போதிக்கிறவர்களும், காட்டிக் கொடுப்பவர்களும் மறைந்து விடுவார்கள். யாராவது இருந்தாலும் அவர்களுக்கும் கடவுள் மறக்கப்பட்டுப் போகும்.

ஏனெனில், கடவுளை நினைக்க மனிதனுக்கு ஏதாவது ஒரு அவசியம் இருந்தால்தானே நினைப்பான்? சகல காரண காரியங்களுக்கும் மனிதனுக்கு விவரம் தெரிந்து விடுவதாகவும் சகல தேவைகளும் மனித னுக்கு கஷ்டப்படாமல் பூர்த்தியாகவும் இருந்தால், ஒரு மனிதனுக்குக் கடவுளைக் கற்பித்துக் கொள்ளவோ நினைத்துக் கொள்ளவோ அவசியம் ஏன் ஏற்படும்?

மனிதன் உயிரோடு இருக்குமிடமே அவனுக்கு மோட்சமாய்க் காணப்படுமானால் விஞ்ஞானப் பெருக்கம் ஏற்பட்ட இடத்தில் கடவுள் சிந்தனைக்கு இடம் இருக்காது.

சாதாரணமாக மனிதனுக்கு இன்று கடவுள் நிச்சயத்திற்கு ஒரே ஒரு காரணம் தானே சொல்லப்படுகிறது? அக்காரணம் என்னவென்றால், இந்த உலகத் தோற்றத்துக்கு காரணம் என்ன? காரண பூதமாக இருப்பது எது? அதுதான் கடவுள் என்று சொல்லப்படுகின்றது.

இது விஞ்ஞானிகளுக்கு சுலபத்தில் அற்றுப் போன விஷயம் பஞ்சபூதங்களின் சேர்க்கையே உலகம் என்பர். நம்முடைய வாழ்வில் நாம் எதைக் கடவுள் செயல் என்று உண்மையாய்க் கருதுகிறோம்? நம் அனுபவத்திற்கு வந்த ஒவ்வொன்றுக்கும் நாம் சமாதானம் தெரிந்து கொள்கிறோம்; தெரியாதவற்றை தெரியாது என்று ஒப்புக் கொள்கிறோம். தெரிந்ததை தெரிந்தது என்று சொல்லுகிறோம். இதுவேதான் உலக நடப்புக்கும் கொள்ள வேண்டிய முறையாகும். ஒரு சமயம் உலக நடப்புக்குக் காரணம் தெரியாவிட்டாலும், அதற்காக ஒரு காரியத்துக்கும் ஆகாத தேவையில்லாத கடவுளை எவனும் வணங்க மாட்டான்.

புதிய உலகத்தில் மோட்ச, நரகத்துக்கு இடம் இருக்காது; நன்மை, தீமை செய்ய இடமிருந்தால்தானே மோட்சமும், நரகமும் வேண்டும்? எவருக்கும் யாருடைய நன்மையும் தேவையிருக்காது. புத்திக் கோளாறு இருந்தால் ஒழிய, ஒருவனுக்கு ஒருவன் தீமை செய்ய மாட்டான். ஒழுக்கக் கேட்டுக்கும் இடமிருக்காது. இப்படிப்பட்ட நிலையில் மோட்ச, நரகத்துக்கு வேலை ஏது? ஆள் ஏது?

எனவே, இப்படிப்பட்ட நிலை புதிய உலகத்தில் தோன்றியே தீரும். தோன்றாவிட்டாலும் இனிவரும் சங்கதிகள் அடைந்த மாறுதல்களைக் காண வேண்டுமென்றும். இவைகளால் உலகில் மக்களை இப்போது வாட்டி வரும் பல பிரச்சினைகள் தீர்க்கப்பட்டு வாழ்க்கை என்றால் பெருஞ்சுமை என்று சலித்துக் கொண்டும் வாழ்க்கை என்றால் போராட்டம் என்று திகைத்துக் கொண்டும் இருக்கிற நிலைமை போய். வாழ்க்கை என்றால் மக்களின் இன்ப உரிமை என்ற நிலைமை உண்டாக வேண்டுமென்னும் ஆவலுடன் பணியாற்றி வருவார்கள்.

நம்மால் என்ன ஆகும்? அவனின்றி ஓரணுவும் அசையாதே! என்று வாய் வேதாந்தம் பேச மாட் டார்கள். நம் கண்முன் காணப்படும் குறைபாடுகளைப் போக்க நாம் எப்படி உழைக்க வேண்டும் என்பதே அவர்களின் கவலையாகவும், அவர்களின் எண்ண மாகவும் இருக்கும். எப்போதோ, யாரோ, எதற்காகவோ எழுதி வைத்த ஏட்டின் அளவோடு நிற்க மாட்டார்கள். சுயசிந்தனையோடு கூடியதாகவே அவர்களின் செயல்கள் இருக்கும் மனித அறிவீனத்தினால் விளைந்த வேதனைகளை மனித அறிவினாலேயே நீக்கிவிட முடியும் என்ற ஆசையும், நம்பிக்கையும் கொண்டு உழைப்பார்கள்.

அவர்களின் தொண்டு; மனித சமுதாயத்தை நாளுக்கு நாள் முன்னுக்குக் கொண்டு வந்தவண் ணமாகவே இருக்கும் சுய சிந்தனைக்கு இலாயக்கற்ற வர்களே இந்த மாறுதல்களைக் கண்டு மிரள்வதும், காலம் வரவரக் கெட்டுப் போச்சு என்று கதறுவதுமாக இருப்பார்கள்.

இன்றைய மக்களிலே பலருக்கு பழமையிலே இருக்கும் மோசம் அறிவையே பாழ் செய்து விடு கிறது. புதிய உலகத் தோற்ற வேகத்தைத் தடை செய்து விடுகிறது. பழைய முறைப்படி உள்ள அமைப்பு களால் இலாபமடையும் கூட்டம் புதிய அமைப்பு ஏற்படுவதைத் தடுக்க முயற்சிப்பது இயற்கை. ஆனாலும், பாமரரின் ஞானசூன்யம், அறியாமை, சுயநலக்காரரின் எதிர்ப்பு எனும் இரண்டு பெரிய விரோதிகளைக் கண்டு கலங்காமல் வேலை செய்வோரே. இனிவரும் உலக சிற்பிகளாக முடியும். அந்த சிற்பிகளின் கூட்டத்திலே நாமும் சேர்ந்து நம்மாலான காரியத்தைச் செய்ய வேண்டுமென்று வாலிபர்கள் பகுத்தறிவாளர்கள் ஆசைப்பட்டு உழைக்க முன்வர வேண்டுகிறேன்.

------------------------தந்தைபெரியார் - "விடுதலை" 7.1.1968

4 comments:

தமிழ் ஓவியா said...

இதுதான் தமிழ்நாடு


தமிழ்நாட்டில் கடந்த 60 வருடங்களாக நாத்தி கக் கருத்துகள் பரவி இருப்பதால் எங்களுடைய பீடத்தைத் தமிழ்நாட்டில் அமைப்பதில் நாங்கள் வெற்றி பெறவில்லை என்று திருவாளர் நித்யானந்தா கூறி இருக்கிறார்.

பெரியார் பிரச்சாரம் செய்தாலும், திராவிடர் கழகம் பிரச்சாரம் செய்தாலும், தமிழ்நாட்டில் பக்தி வெள்ளம் கரை புரண்டு ஓடிக் கொண்டு தானிருக்கிறது என்று சில மே(ல்)தாவிகள் சொல்வதுண்டு. நடைமுறையில் எது உண்மை என்பது திருவாளர் நித்யானந்தாவின் கூற்றில் இருந்து புரிந்து கொள்ளலாம்.

தமிழ்நாட்டில் சாமியார்கள் கடை விரிக்க ஆசைப் பட்டாலும் கூட போணியாகவில்லை - கட்டிக் கொண்டோம் என்ற நிலைதான்; அல்லது அந்தச் சாமியார்களைத் தோலுரிக்கும் பகுத் தறிவுப் பிரச்சாரம் தமிழ்நாட்டில்தானே வேகமாக நடந்து கொண்டிருக்கிறது.

பிரேமானந்தா என்னும் சாமியாருக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டதும் தமிழ் நாட்டில்தானே!

ஜெகத்குரு என்று போற்றப்படும் சங்கராச் சாரியார் கைது செய்யப்படுவதும், சிறையில் அடைக்கப்படுவதும் கூட தமிழ்நாட்டில்தான் நடக்க முடியும். அந்த அளவுக்கு மக்கள் மத்தி யில் பகுத்தறிவு அடித்தளம் உருவாக்கப் பட்டுள்ளது என்பதை மறுக்க முடியுமா?

புட்டபர்த்தி சாயி பாபா கூட தொடக்கத்தில் தமிழ் நாட்டுப் பகுதியில் தன்னை நிலை நிறுத்திக் கொள்ள முயற்சித்தாலும் கூட, அதில் வெற்றி பெற முடியாமல்தான் ஆந்திரப் பகுதி யிலும், கருநாடகப் பகுதியிலும் தன் கூடாரத்தை வைத்துக் கொண்டார்.

தொடக்கத்தில் அவரைப் பற்றிக் கட்டிவிடப் பட்ட புனை சுருட்டுகள், இருந்த இடம் தெரியாமல் புதைந்து போயின.

அவரது அற்புதப் பிரச்சாரம் எல்லாம் அடி பட்டுப் போயின என்பதுதான் உண்மையாகும்.

பிரதமர்களும், குடியரசுத் தலைவர்களும் சாயிபாபாவை சந்திப்பார்கள் என்ற நிலைக்கு மாறாக சாயிபாபாவே பறந்து வந்து முதல் அமைச்சரைச் சந்தித்ததும் தமிழ்நாட்டில்தானே!

தமிழ்நாட்டில் தந்தை பெரியார் அவர்களால் உண்டாக்கப்பட்ட இயக்கமும் சரி, பிரச்சாரமும் சரி, அவை வெறும் ஆன்மீக எதிர்ப்பு மட்டுமல்ல - அதனோடு நகமும் சதையுமாக ஒட்டிக் கொண்டு உறவாடும் சமூகப் பிரச்சினைகள் மக்கள் மத்தியில் அக்கக்காக அலசப்பட்டதால் - இங்கு ஆத்திகம் என்பதே உயர் ஜாதியினரின் நலம், நாத்திகம் என்பதே பெரும்பான்மை மக்களின் நலம் என்று மடாதிபதியான குன்றக் குடி அடிகளாரையே சொல்ல வைத்ததன் பின்ன ணியைச் சற்று எண்ணிப் பார்க்க வேண்டும்.

வைதிக - ஆத்திக நம்பிக்கை கொண்டவர் கள் கூட தந்தை பெரியாரை மதித்ததும், போற்றியதும், பாராட்டியதும் எந்த அடிப்படையில் என்பதையும் எண்ணிப் பார்க்க வேண்டும்.

திருவண்ணாமலையில் பீர் சாமியார் என்று கூறி ஒரு பெண்மணி ஆட்டம் போட்டதைச் சுட்டிக் காட்டிய நிலையில் இரண்டொரு நாட் களிலேயே, அந்த ஆட்டம் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டது மானமிகு கலைஞர் அவர்களின் ஆட்சியில்.
மற்ற மற்ற மாநிலங்களில் ஆட்சியில் இருப் போர் சாமியார்களின் முகவரிகளைத் தேடிச் சென்று காலில் விழும் கலாச்சாரம் உண்டு. தமிழ் நாட்டில் அந்த நிலை இல்லை என்பது யதார்த்தம்.

இவற்றையெல்லாம் உள்ளடக்கியதுதான் திருவாளர் நித்யானந்தாவின் கருத்தாகும்.

தமிழ்நாட்டில் இருக்கக் கூடிய ஆன்மிகவாதி களுக்கு இடையே கூட பார்ப்பனர், பார்ப்பனரல் லாதார் என்ற வேறுபாட்டு உணர்வு உண்டு என்பது ஒரு கூடுதல் தகவலாகும். 25-5-2012

தமிழ் ஓவியா said...

பக்தி.. ஒரு தரம்... இரண்டு தரம்! ஏலம்!கோயில் விழாக்களுக்குப் பக்தர் கள் கூடுகிறார்கள், கூடுகிறார்கள் என்று வேட்டுச் சத்தத்தைவிட அதிகமாகவே பேசுகிற - பக்தியை வியாபாரமாகக் கொண்ட ஆசாமிகள் கூறுவதுண்டு.

பக்தர்களைக் கவர்ந்து இழுத்திட பல உபாயங்கள். அதில் இந்த ரெக்கார்டு டான்ஸ் அரைகுறை ஆடைகளுடன் ஆபாசமான சேட்டை களுடன் ஆட்டம் பாட்டம்! இரட்டை பொருள் தரக்கூடிய பாடல்கள் - இடை இடையே இதில் சொல் லாடல்கள் வேறு.
இந்த ஆபாசத்தின் அளவு கரை உடைந்து போவதைப் பார்த்து முகம் சுளித்த சிலர் நீதிமன்றம் சென்றனர். நீதிமன்றமும் இந்த ஆபாசக் கூத்துக் குத் தடை விதித்து விட்டது.

இந்த ஆபாசம் இல்லாவிட்டால் கூட்டம் எங்கே இருந்து கூடும். கோயில் தொழில் பொழைப்புப் போச்சே! நீதிமன்றம் சென்று கெஞ் சினார்கள் நீதிமன்றமும் சற்றே மனம் இரங்கி ஆணை ஒன்றினைப் பிறப்பித்துள்ளது.

ஆபாசமான ஆட்டம் பாட்டங்கள் கூடாது. அப்படி ஆனால் காவல் துறை தலையிடும் நள்ளிரவு வரை ஆடுவதும் கூடாது. இரவு 7.30 மணியிலிருந்து 10.30 மணிக்குள் கடையைக் கட்டிவிட வேண்டும் என்று உத்தரவு.

நம் நாட்டின் பக்தியின் யோக் கியதை எந்தத் தரத்தில் இருக்கிறது என்பதற்கு இது ஒன்று போதும்.

கோயிலுக்குள் மட்டும் என்ன வாழ்கிறது. கோபுரத்தில் இல்லாத கொக்கோகமா? தேர்களில் செதுக் கப்படாத ஆபாசமா?
இவைகளுக்காக எழுதப்படும் தல புராணங்களில் வழிந்தோடும் ஆபாசமா?

சுருக்கமாகச் சொன்னால் பக்தி என்பதே - ஆபாசம், அருவருப்பு, காமரசனைகளின் ஒட்டு மொத்த மான கலவைதான்.
இளைஞர்களும், இளம் பெண் களும் கூடும்! இரகசியம் - இதுதான்-

இதைவிட இன்னொரு தமாஷ் உண்டு.

1998-இல் (ஆகஸ்ட் 13) நாளிட்ட தினத்தந்தியில் வெளி வந்த தகவல் அது நமது திருச்சி மருத்துவர். கு. இராசசேகர் அவர்களால் அனுப்பி வைக்கப்பட்ட ஒரு தகவல் அது. தலைப்பே வித்தியாசமானது பக்திச் சலுகை. பக்திச் சலுகை கோவில் விழாவிலும் நுழைந்தது, ஆடிச் சலுகை என்பது அதன் தலைப்பு.

தூத்துக்குடி மாவட்டம் சிறீவை குண்டம் கைலாசநாதர் கோவிலில், ஆடி கிருத்திகைக்கு, நெய்விளக்கு பூஜைக்கு கட்டண சலுகை அறிவித் திருக்கிறார்களாம்.

வழக்கமான கட்டணம் 5 ரூபாய்க்கு பதிலாக 3 ரூபாய் செலுத் தினாலே போதுமாம்.

இதுதவிர, பக்தர்களுக்கு மாதந் தோறும் பரிசுகள் வேறு உண்டாம்.

இந்த கொண்டாட்டங்களும் பரிசு மழையும் இந்த ஆண்டு தை முதல் அடுத்த ஆண்டு தை வரை தொடருமாம்.
ஏற்கெனவே பரிசு மோகத்தால், எழுதப் படிக்கத் தெரியாதவன்கூட வாரப் பத்திரிக்கைகளையும் தீபாவளி மலர்களையும் வாங்கிக் கொண்டுள் ளான்.

இப்போது கோவில்களும் பரிசு மோகத்தைக் கிளப்பி, பணம் பண்ணத் துவங்கி விட்டன.
என்ன செய்வது?

இடையறாத பகுத்தறிவுப் பிரச் சாரத்தின் தாக்கம், பக்தர்கள் எண்ணிக்கையையும், பக்தியின் அவசியத்தையும் குறைத்துவிட்டதே!

இனி, அவர்களுக்கு, பரிசுச் சீட்டு ஒன்றுதான் கதிபோலும்.
- டாக்டர் கு. ராஜசேகர்

பக்தியின் பரிதாப நிலையைப் பார்த்தீர்களா!

கடைகளில் இரண்டு வாங் கினால் ஒன்று இனாம் என்று சொல்லுவதற்கும் இதற்கும் அடிப் படையில் என்ன வேறுபாடு?
பக்தி அப்படியே கரை உடைத்து வெள்ளமாகப் பிரவாகிப்பதாகப் பேசுகிறார்களே - எழுதுகிறார்களே - அதன் யோக்கியதை இதுதான்!

ஹி... ஹி... வாயால் சிரிக்க முடியவில்லையே!

தமிழ் ஓவியா said...

விக்னப்பட்ட விக்னேஷ்வரன்

கவுதம புத்தரின் பிறந்த நாள் இந் நாள்! ஆம், அந்த நாளைத் தேர்ந் தெடுத்தார் தந்தை பெரியார் (27.5.1953)

என்னைக் கீழ் ஜாதி என்று சொல்லுவது இந்தக் கடவுள்தானே - இதனை நசுக்குகிறேன் - உடைத்துத் தூள் தூளாக்குகிறேன் என்று கூறி பிள்ளையார் பொம்மை உடைக்கும் போராட்டத்தை நடத்தினார் தந்தை பெரியார்.

கோயிலுக்குள் சென்று அந்தப் பிள்ளையாரை உடைக்கச் சொல்ல வில்லை; கடையில் விற்கும் பிள்ளையார் பொம்மையைக் காசு கொடுத்து வாங்கித் தான் உடைக்கச் சொன்னார்.

பிள்ளையார் உருவச் சிலையை உடைப்பதில் ஒன்றும் அதிசயப்பட வேண்டியதில்லை. இப்படி உடைப்பதைத் தவிர வேறு வழி இருந்தால் சொல் லுங்கள் - சூத்திர மந்திரிகளே! சூத்திர பார்லிமெண்ட் சட்டசபை மெம்பர்களே! வைஸ்சேன்ஸ்லர் முதல் கல்வி மான் களே!

உலகப் பிரசித்தி பெற்ற கோடீஸ் வரர்களே! புலவர்களே! பிரபுக்களே! மாஜி ஜமீன்தார்களே! மாஜி மகா ராஜாக்களே! ஸ்ரீலஸ்ரீ!, ஸ்ரீலஸ்ரீ!! ஸ்ரீலஸ்ரீ!!! பண்டார சந்நிதிகளே! சொல்லுங்களேன்! கேட்க - தலை வணங்க - சித்தமாக இருக்கிறேன். (விடுதலை 7.5.1953) என்று அறிக்கை விட்டார் அறிவுலக ஆசான் பெரியார்.

அன்று என்ன இன்றும் கூடக் கேட்கத் தயார்தான்! பதில் சொல்லத் தான் ஆசாமிகள் இல்லை.

நாடெங்கும் பிள்ளையார் பொம்மை உடைபட்டது! உடைபட்டது!!

ஆம் விக்னம் இல்லாமல் காப்பாற்று வார் என்று வாய்ப்பறை கொட்டுகிறார் களே - அந்த விக்னேஸ்வரர்தான் பகிரங்கமாக உடைத்து நொறுக்கப் பட்டார்.

சூரபத்மனை அழித்த சூரர் என்று பீற்றிக் கொள்கிறார்களே கருஞ் சட்டைக்காரனிடம் கைவரிசையைக் காட்ட வேண்டியதுதானே!

பொது மக்கள் பார்த்துக் கொள் வார்கள். முதல் மந்திரி ஆச்சாரியார் தூபம் போட்டுப் பார்த்தார். சில கோழைகள் பெரியார் படத்தை எரித் தனர். என் படத்தை எரிக்க நானே படம் தருகிறேன் - தருகிறேன்! என்றார் அந்தப் பகுத்தறிவுப் பகலவன்.
வெளிறிப் போனது பக்தர் கூட்டம்.

இவ்வளவுக்கும் இந்த விநாயகன் யார்? இந்து மதக் கடவுளா? இல்லை - இல்லை இதில் ஒரு உருட்டல் புரட் டலைச் செய்தது இந்தப் புரட்டர் கூட்டம்

புத்தனுக்குப் பெயர் விநாயகன் - மானாயகன் என்றால் தலைவன்!

புத்தன் அரசக் குடும்பத்தில் பிறந் தவர் ஆதலால் அரச மரம் அடியில் புத்தர் சிலைகள் வைக்கப்பட்டு இருந் தன. அந்த இடத்தில் எல்லாம் சைவக் கடவுளான விநாயகன் (பிள்ளையார்) பொம்மையை வைத்து உண்மையான விநாயகனாகிய புத்தர் சிலைகளை அப்புறப்படுத்தி விட்டனர். அயோக்கிய சிகாமணிகள்!

ஆற்றில் குளத்தில் தள்ளி விட்டனர். பல இடங்களில் துணி துவைக்கும் கற்களைப் புரட்டிப் பார்த்தால் அவை புத்தர் சிலைகளாக இருப்பதைக் காண லாம்.

பார்ப்பனப் புரட்டுக்கும் பித்தலாட் டத்துக்கும் அளவும், எல்லையும் உண்டோ! (மே 27 - இந்நாள் தான் பிள்ளையார் பொம்மையை உடைக்கும் போராட்டம் நடத்தப்பட்டது 1953இல்).

தமிழ் ஓவியா said...

காவிரி நீர் பிரச்சினையில் கருநாடக அரசு சட்ட விரோதமாக அடாவடித்தனம் செய்து வருகிறது

பிரதமர் தலைமையில் கண்காணிப்புக்குழு அமைவதால் கூட்டங்கள் சரியானபடி நடப்பதில்லை

புதிய தலைவரை நியமனம் செய்து நியாயமான தீர்வை மத்திய அரசு வழங்க வேண்டும்

தமிழர் தலைவர் விடுத்துள்ள அறிக்கைகாவிரி நீர்ப்பிரச்சினையில் கருநாடக அரசு சட்ட விரோதமாக நடந்து வருவதால் கண்காணிப்புக் குழுவுக்குப் புதிய தலைவரை நியமனம் செய்து தமிழ்நாட்டுக்கு நியாயமான தீர்வை வழங்கிட மத்திய அரசு முயல வேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள முக்கிய அறிக்கை வருமாறு:-

விவசாயிகள் பெரிதும் கவலை அடைந்துள்ளதை கடந்த சில நாள்களாக தஞ்சை, திருச்சி, நாகை, திருவாரூர் மாவட்டங்களில் சுற்றுப்பயணம் செய்து, நிலைமையை நேரில் கண்ட நாம் தெரிந்து கொண்டோம்.

திராவிடர் கழகத்தின் சார்பில் கடந்த மார்ச் மாதத்திலேயே வஞ்சிக்கப்படும் தமிழ்நாடு என்ற தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணங்களை மேற்கொண்டு, காவிரிப் பிரச்சினை போன்ற பல்வேறு பிரச்சினைகளுக்குத் தீர்வு காணவேண்டும் என்ற விழிப்புணர்வை மக்களிடையே உருவாக்கினோம்.

டெல்டா விவசாயிகளின் கவலை

காவிரிப் பிரச்சினைக்கு அவ்வப்போது தற்காலிகத் தீர்வுகளை காணுவதே வழமையாக உள்ளதே தவிர, நிரந்தரத் தீர்வு ஒப்பந்தம் என்பது கொடிய கானல் நீரோடையாக அமைந்துள்ளது.

டெல்டா விவசாயிகளின் கவலைக்குக் காரணம் ஜீன் 12ந் தேதி மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்படக்கூடிய சூழல் இவ்வாண்டு இராது என்ற யூகமே ஆகும். காரணம் மேட்டூர் அணையில் தற்போதுள்ள நீர்மட்ட அளவு 41.47 ஆயிரம் கனஅடிதான்.

மொத்தம் உள்ள கொள்ளளவு 93.47 ஆயிரம் கனஅடியாகும்.

சென்ற ஆண்டு இதே காலகட்டத்தில் இருந்த நீரின் அளவு 84 ஆயிரம் கனஅடி ஆகும்.

நமக்கு இடைக்காலத் தீர்ப்பு நிவாரணமாக கர்நாடக அரசால் தரப்பட வேண்டிய அளவு 205 (தமிழ்நாட்டுக்கு) டி.எம்.சி. மே வரை முதல் 4 மாதங்களில் 137 ஆயிரம் கனஅடி.

ஜீலை 42. 76 ஆயிரம் கனஅடி
ஆகஸ்ட் 54.72 ஆயிரம் கனஅடி
செப்டம்பர் 29.36 ஆயிரம் கன அடி
குறுவை சாகுபடிக்கு இப்படித் தண்ணீர் பங்கீடு இருக்க வேண்டும் என்று ஏப்ரல் 1992லேயே காவிரி நடுவர் மன்றத்தில் தமிழக அரசு வழக்குப் போட்டு எடுத்து வைத்த வாதங்களின்படியேதான் மேற்காணும் அளவீடு ஆகும்.!

கர்நாடக அரசின் அடாவடித்தனம்

கர்நாடக அரசு இந்த மாத கணக்குப்படி நீர் அளிப்பதில்லை.

கர்நாடக அரசு முற்றிலும் நியாய விரோதமாகத் தங்களின் கோடைப் பயிர் விவசாயத்துக்குத் தண்ணீர் தேவை என்பதற்காக பிப்ரவரி முதல் மே மாதம் வரை தங்களிடம் உள்ள நான்கு பெரிய அணைகளில் காவிரித் தண்ணீரைத் தேக்கி வைத்து அடவாடித்தனம் செய்து வருகிறது. இதுபற்றி மூன்று மாதங்களுக்கு ஒருமுறை கூடிவிவாதித்துப் பரிகாரம் தேடிட வேண்டிய காவிரிநீர்க் கண்காணிப்புக் குழு (MONITERING COMMITTEE) ) கடந்த (10) பத்து மாதங்களாக கூட்டப்படவே இல்லை!

இதை தமிழ்நாடு முதல் அமைச்சர் செல்வி ஜெயலலிதா அவர்களும் கடிதம் மூலம் சுட்டிக்காட்டியுள்ளதாகத் தெரிகிறது!

காவிரி(ஆறு) ஆணையக் கூட்டத்தை அதன் தலைவரான பிரதமர் உடனடியாக கூட்டி இப்பிரச்சினைக்குத் தீர்வு காண வேண்டியது அவரச அவசியமாகும்!

முந்தைய தேசிய ஜனநாயக முன்னணி (NDA) அரசில் இந்த காவிரி ஆணையத்திற்குப் பிரதமர் (வாஜ்பேயி) தலைவராக இருப்பார் என்று அமைந்தபோதே பிரதமர் போன்ற பல்வகைப் பொறுப்பைச் சுமப்பவர் தலைவராக இருந்தால் உடனடியாக தீர்வுக் காண முடியாமல் கூட்டங்களே நடக்க முடியாமல் போகக்கூடும்; காலதாமதம் ஏற்படும்; பருவத்தே பயிர் செய்ய வேண்டியது தள்ளிக்போகக் கூடும். உடனடி பரிகாரம் கிடைக்காமலும் போகக்கூடும் என்று நமது கழகம் சுட்டிக்காட்டியதை ஏற்று வேறு தலைவரைப் போடவில்லை. அதனால் இவ்வளவு பெருஞ்சுமை. விவசாயிகளுக்கு ஏற்படும் நிலைமை உருவாகிறது!

காவிரி ஆணையத்துக்குப் புதுத் தலைவர் தேவை

எனவே இதுபற்றி இணக்கமாக மத்திய அரசு சிந்தித்து காவிரி நீர் ஆணையத்திற்கு ஒரு புதுத்தலைவரை (அவர் தேசிய நீர்வளத்துறை அமைச்சராகவோ அல்லது சிறந்த நீதிபதி தகுதியில் உள்ளவர்களோ அல்லது வழக்கில் சம்பந்தப்படாத மாநிலங்களைச் சார்ந்த வல்லுனர்களாகவோ இருக்கலாம். நியமிக்க வேண்டும்!

கர்நாடகத்தின் வறட்டுப் பிடிவாதத்தினை மாற்றிட நியாயமான தீர்வை மத்திய அரசு உருவாக்கி தரவேண்டியது அதன் தலையாய கடமையாகும்.

கி.வீரமணி
தலைவர், திராவிடர் கழகm