Search This Blog

27.10.10

பெரியார் பற்றிய இந்தியா டுடே விமர்சனத்துக்கு ஒரு மறுப்பு


இந்தியா டுடே விமர்சனத்துக்கு ஒரு மறுப்பு
எம்.சி. ராஜா - உண்மையான வரலாற்றுப் பின்னணி


மயிலை சின்னத்தம்பி பிள்ளை ராஜா என்ற பெயர்தான் எம்.சி. ராஜா என்று அறியப்பட்டிருந்தது. 1883 ஆம் ஆண்டு ராஜா அவர்கள் மயிலை சின்னத்தம்பி பிள்ளையின் மகனாகப் பிறந்தார்.

சிலர் குறிப்பிடுவதுபோல், அவர் செயின்ட் தாமஸ் மவுன்டில் பிறக்கவில்லை. மயிலாப்பூரில் அல்லது அந்நாளில் மயிலாப் பூருடன் சேர்ந்திருந்த ராயப்பேட்டையில் பிறந்து, பின்னர் செயின்ட் தாமஸ் பகுதிக்குக் குடியேறினார். ராஜா அவர்களின் தந்தை சின்னத்தம்பி பிள்ளை ஏழ்மையான தாழ்த்தப்பட்ட வகுப்பினர். லாரன்ஸ் அசைலத்தில் மேனேஜராகப் பணியாற்றியவர். ராயப்பேட்டை வெஸ்லி மிஷன் உயர்நிலைப்பள்ளியில், வெஸ்லி கல்லூரியில் பயின்று சென்னை கிறித்துவக் கல்லூரியில் பட்டம் பெற்று பள்ளி ஆசிரியராகப் பணியாற்றினார்.

அரசியலில் பங்கேற்று செங்கல்பட்டு டிஸ்டிரிக்ட் போர்டு எனப்படும் செங்கல் பட்டு மாவட்டக் கழகத் தலைவரானார். ராஜா அவர்களை 1916 இல் ஆதிதிராவிட மகாஜன சபை செயலாளராக இருந்த வரை ஈர்த்தது நீதிக்கட்சிதான். சென்னை சட்டமன்றத்திற்கு 1920 இல் தேர்தல் நடைபெற்றபோது முதல் தேர்தலில் 1920 நவம்பரில் நீதிக்கட்சி வேட்பாளராக நின்றுதான் சட்டமன்றம் சென்றார். நீதிக் கட்சியின் துணைத் தலைவராக சட்ட மன்றத்தில் தேர்ந்தெடுக்கப் பெற்றார். சென்னை சட்டமன்றத்திற்கு உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் தாழ்த் தப்பட்டவர் எம்.சி. ராஜாதான். அதுவும் தேர்ந்தெடுத்தது நீதிக்கட்சிதான். இதை யெல்லாம் மறைத்து விடுகிறார்கள்.

1922 இல் தாழ்த்தப்பட்ட சகோதரர் களைப் பறையன், பஞ்சமன் என அழைத்ததை மாற்றி ஆதிதிராவிடர், ஆதி சூத்திரர் என்று தீர்மானம் கொண்டு வந்தபோது, அதனை ஏற்று நிறைவேற்றியது நீதிக்கட்சிதான். 1921-க்குப் பிறகு 1923 இல் நீதிக்கட்சியிலிருந்து வெளியேறித் தனி வழி காணவேண்டும்; தாழ்த்தப்பட்டோர் தலைவராக வேண்டும் என்று நீதிக்கட்சியின் தலைவர்களில் ஒருவர் என்பதைவிட தாழ்த்தப்பட்டோர் தலைவராக வேண்டுமென்று அனைத்து இந்திய தாழ்த்தப்பட்டோர் அமைப்பினை 1928 இல் உருவாக்கி, அதன் தலைவரானார். 1926 முதல் 1937 வரை டில்லி சட்டப்பேரவையில் விளங்கினார். 1937 இல் ஏற்பட்ட கூர்மா வெங்கட்டரெட்டி நாயுடு (கே.வி. ரெட்டி நாயுடு) அமைச்சரவையில் சென்னை மாநில வளர்ச்சித் துறை அமைச்சரானார்.

ஆனால், எம்.சி. ராஜாவின் வாழ்க்கை வரலாற்றில் இரண்டு சறுக்கல்கள். ஒன்று, நீதிக்கட்சி தொடங்கிய காலத்திலிருந்து இணைந்து பணியாற்றிய எம்.சி. ராஜா, குறுகிய காலத்தில் சட்டமன்ற உறுப்பினர், துணைத் தலைவர் பதவி களைப் பெற்ற எம்.சி. ராஜா, நீதிக்கட்சியையும், தியாகராயரையும் விமர்சித்தார்.

இரண்டாவது, அம்பேத்கரின் வழிக்கு மாறுபட்ட சறுக்கல். ஒடுக்கப்பட்ட மக்களின் அரசியல் பிரதிநிதித்துவம் என்பது தனி நியமனாக இல்லாமல், தனி ஒதுக்கீடாக மாற வேண்டும் என்று 1927 இல் மத்திய சட்ட சபையில் அகில இந்திய தாழ்த்தப்பட் டோர் உறுப்பினராக நியமனம் செய்யப் பட்டு, 1928 இல் மத்தியக் குழுவிற்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட ராஜாவின் அறிக்கைகள் அம்பேத்கர் அவர்களின் எழுத்துகள் ராஜாவின் அறிக்கையின் தொடர்ச்சி என்பவர்கள் அம்பேத்கரின் எண்ணம், செயலுக்கு எதிராகச் சென்ற மாபெரும் துரோகத்தை எப்படி மன்னிக்கிறார்கள் என்பது வரலாற்றாசிரியர்கள் வியக்கின்ற ஒன்று.

இந்திய தேசிய காங்கிரசின் இரண்டு வலதுசாரிகளான டாக்டர் பி.எஸ். மூஞ்சேயுடன், ஜாதவுடன் உடன்பாடு மேற்கொண்டார். ராஜா கொடுத்த ஆதரவிற்காக மூஞ்சே தாழ்த்தப்பட்டவர்களுக்கு இட ஒதுக்கீடு செய்தார். அனைத்து இந்திய அளவில் தாழ்த்தப்பட்டவர்களுக்குத் தனி தொகுதிக்காகப் போராடி வந்த வேளையில், தாழ்த்தப்பட்டோர் தலைவராக ஆன எம்.சி. ராஜா மேற்கொண்டது சறுக்கல் என்பதை விடத் துரோகம் என்று சொல்லலாம்.

எனவேதான், அதாவது அம்பேத்கருக்குச் செய்த துரோகத்தினால் தான், புனேயில் செய்துகொண்ட ஒப்பந்தத்தின் விளைவாகத்தான் அவருடைய முந்தைய செயல்கள் மதிப்பிழந்து போயின. எனவேதான், சுயமரியாதை இயக்கம் ராஜாவைக் கடுமையாக விமரிசனம் செய்தது.

இங்கே ஓர் உண்மையைப் புரிந்து கொள்ள வேண்டும்; நீதிக்கட்சி தொடங்கிய காலத்தில் இணைந்து பணியாற்றிய, நீதிக்கட்சியிலிருந்து வெளியேறி நீதிக்கட்சியையும், தியாகராயரையும் விமரிசிக்கப்பட்ட காலத்தில் கடுமையாக விமரிசனம் செய்யவில்லை.

ஆனால், எப்போது - 1932 இல் அம்பேத்கர் செயல், எண்ணங்களுக்கு மாறாக, அகில இந்திய தாழ்த்தப்பட் டோர் மாநாட்டில் அம்பேத்கர் - இரட்டைமலை சீனிவாசனே எங்கள் பிரதிநிதி - காந்தியை நம்பாதீர்கள் என் றாரோ அந்த ராஜா, தலித்களுக்குத் தனித் தொகுதி என்ற உயிரான கொள்கையைப் பலி கொடுத்து மூஞ்சேயுடன் ஒப்பந்தம் செய்துகொண்டதுதான் அவருடைய வாழ்க்கையின் கரும்புள்ளி.

சமீபத்தில் பெருந்தலைவர் எம்.சி. ராஜா சிந்தனைகள் தொகுதி ஒன்று வே. அலெக்ஸ் தொகுத்து, தமிழில் ஆ. சுந்தரம் மொழி பெயர்த்த நூல் வெளி வந்துள்ளது. இந்நூலில் 1930 இல் ஜே. சிவசண்முகம் பிள்ளை எழுதிய, இண்டியா பப்ளிஷிங் ஹவுஸ் வெளியிட்ட The Life Select writings and Speeches of Rao Bahadur M.C. Raja வின் வாழ்க்கை, 1927 இல் எம்.சி. ராஜா அவர்கள் எழுதி வெளி யிட்ட ஆங்கில நூலினைச் சென்னை சேத்துப்பட்டுக் கூடம், ஒடுக்கப்பட்ட இந்துக்கள் என்னும் தலைப்பில் வெளி யிட்டது. அத்துடன் 1923 ஆம் ஆண்டு ஜூலை 21, 22 ஆகிய நாள்களில் கோவில் பட்டியில் ஆதிதிராவிடர் பேரவையில் ராஜா அவர்கள் பேசிய உரை ஆகியவற் றையும் இணைத்து இந்நூல் வெளி வந்துள்ளது.

இந்த உரைகளில் நீதிக்கட்சியைக் கடுமையாக விமரிசித்துள்ளார். ஆனால், தந்தை பெரியாரும் சரி, சுயமரியாதை இயக்கமும் சரி, எம்.சி. ராஜாவிற்கு அந்தக் காலங்களிலேயே தக்க பதிலை முறையாக அவர் மறுக்கவியலாதவாறு அளித்துள்ளன. குடிஅரசு வெளியிடும் தொகுதிகளில், அன்றைய நாள் குடிஅரசு படிக்க இயலாதவர்களுக்கு இன்று திராவிடர் கழகம் வெளியிட்டு அரிய சேவை செய்கிறது.

இந்த நூலைக் குறித்து அக்டோபர் 27, 2010 இந்தியா டுடே தமிழ் ஏட்டில் வரலாற்றில் மறைக்கப்பட்ட தலித் ஆளுமை என்னும் தலைப்பில், அந்நூலை விமரிசனம் செய்துள்ள விமரிசகர் தலைப் பிலேயே நீதிக்கட்சியின் தவறுகளை விமரிசனம் செய்ததால் இருட்டடிப்பு செய்யப்பட்ட எம்.சி. ராஜாவின் எழுத்துகள் வெளிச்சத்துக்கு வந்துள்ளன என்று ஏதோ இப்போதுதான் இவை வெளி வந்தது போன்ற மாயையை உருவாக்கி உள்ளதைக் காண்கிறோம்.

------------------"விடுதலை”22-10-2010


இந்தியா டுடே விமர்சனத்துக்கு ஒரு மறுப்பு எம்.சி. ராஜா - உண்மையான வரலாற்றுப் பின்னணி

கட்டுரையின் தொடர்ச்சி...

நாம் மேலே குறிப்பிட்டவாறு 1927 இல் எழுதிய நூலைச் சேத்துப்பட்டுக்கூடம் ஒடுக்கப்பட்ட இந்துக்கள் என்னும் பெயரில் தமிழாக்கித் தன் மூன்றாவது வெளியீடாக 2006-லேயே வெளியிட் டுள்ளது. ஏற்கெனவே ஜே.சிவசண்முகம் பிள்ளை வெளியிட்டுள்ள நூல், சென்னை சட்டப்பேரவையில் 26 அக்டோபர் 1939 இல் எம்.சி. ராஜா பேசிய பேச்சுகள் ஆகியன அச்சில் வெளிவந்துள்ளன.

ராஜா அவர்கள் ஆகஸ்ட் 20, 1943 இல் இறந்தார். அவர் இறந்த பின் அல்ல, அவருடைய காலத்திலேயே வெளிவந்துள்ளன. இறந்த பின்னரும் வெளிவந்துள்ளன.

உண்மை இவ்வாறு இருக்கையில், பெரியாரைப்பற்றி அவதூறு பேசுவதில், கொச்சைப்படுத்துவதில் தாழ்த்தப்பட்ட சகோதரர்கள் சிலரும் சுகம் காணுகின் றனர் என்றே தோன்றுகிறது.

தந்தை பெரியாரின் வாழ்க்கை திறந்த புத்தகம். ஒளிவு மறைவு இல்லாதது. பூனா ஒப்பந்தத்தில் தான் செயல்பட்ட விதம் ஒருபோதும் மன்னிக்க முடியாதது என்று எம்.சி. ராஜா பின்னாளில் கருதியதாக காம்டே எனும் ஆய்வாளர் பதிவு செய் துள்ளதாக நூல் மதிப்பீட்டாளரே எழுதியுள்ளார்.

ஆனால், தந்தை பெரியாரைப் பொருத்தவரையில் சருக்கலோ, தவறுகளோ கிடையாது. 1947 இல் இந்திய விடுதலை குறித்து அவர் கொண்ட கருத்து, 1950 இல் குடிஅரசு கொண்ட கருத்து தெளிவானதாகவும், சரியான தாகவும் இருப்பதை 63 ஆண்டுகளுக்குப் பின்னும் மெய்ப்பிக்கப்படுகிறது.

வகுப்புவாரி பிரதிநிதித்துவம் என்ற பெயரில் சுயமரியாதை இயக்கம் செயல்படுத்திய திட்டங்களில் உண்மை இல்லை. வகுப்புவாத ஏகாதிபத்தியமும், ஜாதியின் கொடுங்கோன்மையுமே என்று ராஜா தவறாகக் கணித்தார்.

தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் தந்தை பெரியார் 126 ஆம் ஆண்டு பிறந்த நாள் மலரில் பயணங்கள் என்றும் முடிவதில்லை - பாதைகளும் எப் போதும் தவறுவதில்லை என்று எழுதியவற்றை நினைவுபடுத்திக் கொள்வது நல்லது.

தமிழர் தலைவர் குறிப்பிட்டார், கொள்கைகள் நமக்கு அடிப்படையானவை; அத்துபடியானவை. அவைகளைப் பாதுகாப்பதும், பரப்புவதும், திரிபுவாத விஷமத்தன விமர்சனங்களின் விலாவை ஒடிப்பதும்தான் நம் முன் உள்ள ஒரே பணி.

இந்தச் சிந்தனையோடுதான் இந்தியா டுடே விஷம விமர்சனத்திற்கு இங்கே பதிலளித்தோம்.

தந்தை பெரியார் தொடங்கியது கட்சி அல்ல - இயக்கம். அவர்களின் அரசியல் பதவிகள், புகழ் பெருமைகள், பாராட்டுகள் இவைகளைத் துறந்த அப்பழுக்கற்ற தூய செயல்பாடுகளே மக்களை மானமும், அறிவும் உள்ள மக்களாக ஆக்கும். அவர்தம் நன்றி பாராட்டாத பணிகளே தொண்டறமாய் அமைந்தன. பகுத் தறிவும், மனிதநேயமும் தான் அதன் வழிமுறையும் இலக்குமாக அமைக்கப் பட்டுள்ளன.

இவைதான் இன்றும், அன்றும், என்றும் தமிழர் தலைவர் குறிப்பிட்டது போல் சுயமரியாதை இயக்கம்பற்றிய உண்மைகள்.

கடவுள், மதம், ஜாதி, மொழி, நாடு என்ற எந்தப் பற்றும் இல்லாதவனாக என்னை ஆக்கிக் கொண்டு அறிவுப் பற்று, மனிதப் பற்று மட்டுமே கொண் டவனாக அந்தப் பார்வையிலேயே எதையும் பார்த்துப் பணிபுரிபவன் என்ற தந்தை பெரியாரின் விளக்கம் வீண் அபவாதங்களுக்குப் பதிலாக அமையும்.

தந்தை பெரியாரின் சுயமரியாதை இயக்கம் எந்தக் காரியமானாலும், காரணகாரியமறிந்து செய். சரியா, தப்பா என்பதை அந்தக் காரணகாரிய அறி விற்கும், ஆராய்ச்சிக்கும் விட்டுவிட்டு, எந்த நிர்ப்பந்த சமயத்திலும் அதன் முடிவுக்கு மரியாதை கொடு என்றது.

மனிதன் சரி என்று கருதிய எண்ணங்களுக்கும், இழப்புகளுக்கும் மரியாதை கொடுப்பதுதான் சுதந்திரமாகும். சுதந்திரத்திற்கும், சுயமரியாதைக்கும் அதிக தூரமில்லை. இன்றைய சுதந்திர வாதிகள் சுயமரியாதையை அலட்சியம் செய்கிறார்கள். இது உண்மையிலேயே மூடவாதம் என்று சொல்வோம். சுய மரியாதை அற்றவர்களுக்கே சுதந்திரம் பயனளிக்காது என்பதுதான் சரியான வார்த்தையாகும் என்று குறிப்பிட்ட பெரியார் கருத்து சரியானதாகவே இன்றும் இருக்கிறது.

எனவே, எம்.சி. ராஜாவின் எழுத்துகளை மீண்டும் அறிமுகப்படுத்தும் வகையில் பெரியாரைக் குறை கூறு வதோ, கொச்சைப்படுத்துவதோ, உண் மையான சுய சிந்தனையாளர் பெரியாரை இழிவுபடுத்துவதோ முறையாகாது. இதுபோல் சேற்றை வாரி வீசும் பணியைத் தொடராமல் இருப்பது நல்லது.

எம்.சி. ராஜா இன்று இருந்தால், 117 வயதுக் கிழவராக, எப்படி மூஞ்சேயுடன் உடன்பாடு கண்டதற்கு வருந்தினாரோ, அதுபோல் சுயமரியாதை இயக்கம் குறித்துத் தவறாகக் கணித்ததற்கும் வருத்தம் தெரிவித்திருப்பார்.

தந்தை பெரியார் தொடர்ந்து வகுப்புரிமையை வலியுறுத்தினார் - போராடினார். 3.12.1950 திருச்சி வகுப்புரிமை மாநாட்டில் டாக்டர் நாயர் பந்தலில், எம். ரத்னசாமி தலைமையில், இந்தத் தீர்மானத்தை முன்மொழிந்தவர் தந்தை பெரியார்.

சென்னை சர்க்காரில் உள்ளது போலவே, மத்திய சர்க்காரிலும் உத்தி யோகங்களை வழங்குவதில் வகுப்புவாரி முறை அமல் நடத்தப்பட வேண்டும் என இம்மாநாடு கோருகிறது. வேலை அளிப்பதில் மட்டுமன்றி, வேலை உயர்வு தரும்போதும் இந்தக் கொள்கையே பின்பற்ற வேண்டுமென இந்த மாநாடு தீர்மானிக்கிறது.

1950 இல் தந்தை பெரியார் போட்ட தீர்மானம் 2002 இல் அரசியல் சட்டத் தின் 85 ஆவது திருத்தமாக அரசியல் சட்ட 16 ஆவது பிரிவு திருத்தம் வாயிலாக நிறைவேறியது. 1982 இல் தந்தை பெரியார், கழகத் தலைவர் அம்மா அவர்கள் மறைந்த பிறகும், 1.1.1982 இல் மதுரை ரீகல் திரையரங்கில் நடைபெற்ற மதுரை திராவிடர் கழக இளைஞர் எழுச்சி மாநாட்டில் நிறைவேறிய தீர்மானம் இது.

வேலை வாய்ப்புகளில் தாழ்த்தப் பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களுக்குச் செய்யப்படும் இட ஒதுக்கீட்டினை அரசுத் துறையில் மட்டுமன்றி, தனியார் துறை, கூட்டுத் துறை ஆகிய துறைகளிலும் அமல்படுத்த அரசு ஆணை பிறப்பித்து நடைமுறைப்படுத்தவேண்டும் என்று இம்மாநாடு கேட்டுக்கொள்கின்றது.

அய்யா கடைசிவரை வலியுறுத்தி யது வகுப்புவாரி பிரதிநிதித்துவத்தை. அதுமட்டுமல்லாது, தீண்டாமை, ஜாதி ஒழிப்பு என்பதை நடைமுறைப்படுத்தவே அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகவேண்டும் என்று வலியுறுத்தினார். கலைஞர் அரசுதான் அதனை நிறை வேற்றி அய்யாவின் நெஞ்சில் வடிந்து கொண்டிருந்த குருதியைத் துடைத்தது.

தாழ்த்தப்பட்டவர் நலனில் தந்தை பெரியார் காலத்தும் சரி, அதன் பின்னும் சரி இம்மியளவும் விட்டுக் கொடுக்காமல், இட ஒதுக்கீடு, தீண் டாமை ஒழிப்பு, ஜாதி ஒழிப்பு என்று பாடுபட்டு வரும் ஒரே இயக்கம் திராவிடர் கழகம்தான்.

பெரியாரின் பெரும் பணிகள் தாழ்த்தப்பட்டவர்களுக்குப் பெரும் பணி செயலூக்கம் கொண்ட சாதனையை நிகழ்த்தியிருக்கிறது. விளம்பரங்கள் இல்லாமல், பதிவுகள் இல்லாமல் பெரியாரால், பெரியாரின் சுயமரியாதை இயக்கம், திராவிடர் கழகம் ஆற்றியுள்ள சாதனைகள் ஏராளம். அளவிட முடியாதது.

தாழ்த்தப்பட்டவர்களுக்கு ஒன்று சொல்வோம். அன்றும், இன்றும், என்றும் உங்களைப்பற்றி உங்களுக்கு நேர்ந்த, நேர்ந்துவரும் இழிவு குறித்து, உங்களுக்கு இழைக்கப்படும் ஜாதிக் கொடுமைகள், ஜாதி வக்கிரங்களை எடுத்துக் கூறிவரும் இயக்கம் திரா விடர் கழகம். ஒரு விடுதலை என்பது மறக்கவோ, மறைக்கவோ முடியாதது. ஏதோ எம்.சி. ராஜாவைத் திட்டமிட்டு மறைத்துவிட்டதுபோல வதந்தி பொய்ப் பிரச்சாரங்கள் இதோடு நிற்கட்டும்.

திராவிடர் கழகப் பொருளாளர் வழக்கறிஞர் கோ.சாமிதுரை அவர்கள் குறிப்பிட்டதுபோல்,

அரசமைப்புச் சட்டத்தில் தீண்டாமை ஒழிக்கப்பட்டது என்பதை அய்யா நம்பவில்லை. ஜாதிகள் இருக்கும்வரை தீண்டாமையை ஒழிப்பது குதிரைக் கொம்பேயாகும். அதுவே ஜாதி ஒழிக்கப்பட்டது என்று சொன்னால்தான் இந்தியாவிற்கே விடிவு காலம் என்றார். நீதிமன்றத்திலும் ஒதுக்கீடு கேட்கும் இயக்கம் தந்தை பெரியாரின் திராவிடர் கழகம், தமிழர் தலைவர் தலைமையிலான திராவிடர் கழகம்.

எம்.சி. ராஜவைப் பற்றி எழுதுவது ஆனாலும் சரி, தீண்டாமை, ஜாதி ஒழிப்புப்பற்றி எழுதுவதானாலும் சரி, அங்கே, தாழ்த்தப்பட்ட மக்களுக்காகப் பெரியார் ஆற்றிய தொண்டுகளை வேண்டுமென்றே, மிகச் சிறு குழுவினர் விரல் விட்டு எண்ணக் கூடியவர்கள் மறைக்கப் பார்க்கிறார்கள். பொய்யைப் பேசுகிறார்கள்; எழுதுகிறார்கள். இதற்காகவே நம்முடைய எதிரிகளின் கையாள்களாக இவர்கள் மாறிப்போய் இருக்கிறார்கள். இதனால் இரண்டுவித ஆதாயங்கள் அவர்களுக்கு உடனடியாகக் கிடைக்கின்றன.

(1) நல்ல விளம்பரம் (2) பூணூல் திருமேனிகளோடு நெருங்கிய தொடர்பு -


அதன்மூலம் கிடைக்கிற சலுகைகள். இதனாலேயே பெரியாரைத் தாக்குகிறார்கள். பிழைக்கிறார்கள் என்று சங்கொலி பொறுப்பாசிரியர் க. திருநாவுக்கரசு பொருத்தமாக முன்பு எழுதியது நினைவிற்கு வருகிறது.

சங்கராச்சாரியாருடன் சமரசம்

எம்.சி. ராஜா 1930-களில் சங்கராச்சாரியுடன் சமரசம் செய்துகொண்டு, அவரைப் பணிந்து போற்றியதுண்டு. பெரியாரோ, அண்ணல் அம்பேத்கரோ என்றேனும் அவ்வாறு செய்ததுண்டா? சுயமரியாதை இயக்கத்தின் அடிப்படைகளுக்கு மாறாகச் செல்வோர், கடுமையாக விமர்சிக்கப்படுகிறார்கள். ஆனால், அவர்களைத் தாழ்த்துவதோ, இருட் டடிப்புச் செய்வதோ நோக்கம் அல்ல.

எனினும் சிலர் கேட்கலாம். யாரோ இந்தியா டுடேயில் எழுதி விட்டார்கள் என்பதற்கு இவ்வளவு விளக்கமா? என்று.

அவர்களுக்கு நாம் சொல்லும் பதில்:

நாம் இத்தகைய பொய்க் கூற்று களுக்கும், பொய்ப் பிரச்சாரங்களுக்கும் பதில் அளிக்கத் தவறிவிட்டால், இப் போதையை வழித் தோன்றல்கள், எதிரிகளின் கூற்று உண்மை என்று எண்ணி விடுவார்கள். எனவே, விளக்கம் அளித்தால் எதிர்காலம் சரியாக மதிப்பிடும்.

(நிறைவு)

---------------முனைவர் பேராசிரியர் நா.க. மங்களமுருகேசன் ”விடுதலை”23-10-2010 இல் எழுதிய கட்டுரை

2 comments:

periyar said...

போட்டோவில் இருக்கும் சொறி நாய் யார்?

நம்பி said...

//periyar said...

போட்டோவில் இருக்கும் சொறி நாய் யார்?
October 27, 2010 7:14 PM //

எந்த போட்டோவைக் கேக்குற வெறி நாய்?