தமிழர்களைக் கொன்று குவித்த இடிஅமீன் காமன்வெல்த் போட்டி நிறைவு விழாவில் தலைமை விருந்தினரா? இளிச்சவாயர்களல்ல தமிழர்கள் உணர்வுகள் உரிய நேரத்தில் வெளியாகும் புரிந்துகொள்ளட்டும் டில்லி அரசு! தமிழர் தலைவரின் கண்டன அறிக்கை
டில்லியில் நடைபெற்றுவரும் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளின் நிறைவு விழாவில், ஈழத் தமிழர் களைக் கொன்று குவித்த இடிஅமீன் ராஜபக்சேயை தலைமை விருந்தினராக அழைத்திருப்பதைக் கண்டித்து, திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:
இலங்கையில் ஈழத் தமிழர்களை - அவர்கள் அந்த நாட்டின் சொந்த குடிமக்கள் என்பதைப்பற்றி சிறிதும் கவலைப்படாமல், இன ஒடுக்கல் என்ற அடிப்படையில், அன்றாடம் அழித்து ஒழித்ததோடு, அவர்களில் உயிருடன் வாழும் மக்களை, முள்வேலிக்குள் பட்டியில் அடைக்கும் மிருகங்களைப்போல அடைத்து வைத் துள்ள கொடுங்கோலன் - இலங்கை அதிபர் ராஜபக்சேவை, இந்திய அரசு காமன்வெல்த் விளையாட்டின் கடைசி நாள் தலைமை விருந்தினராக அழைப்பது மிக மிகப் பெரிய தமிழின விரோதச் செயலாகும்!
இடிஅமீன் ராஜபக்சேவுக்குச் சிவப்புக் கம்பள வரவேற்பா?
பல நூற்றுக்கணக்கான கோடி ரூபாய்களை இலங்கைக்குத் தந்தும், தமிழர்களின் மீள்குடியேற்றம், மறுவாழ்வு, சுதந்திரக் காற்றைச் சுவாசிக்கும் உரிமை இன்னமும் ராஜபக்சே அரசால் தமிழர்களுக்கு வழங் கப்படாத நிலையில், டில்லி அந்தக் கொடுங்கோல னுக்கு, இடிஅமீனைவிட இழிவான ஒருவருக்கு இப்படி சிவப்புக் கம்பளம் விரித்து மரியாதை செலுத்துவது மனிதநேயம் படைத்த அனைவரது கண்டனத்திற்கும், வேதனைக்கும் உரிய ஒன்றாகும்!
மத்திய ஆட்சி அதிகாரத்தில் உள்ளவர்கள் ஈழத் தமிழர்களின் வாழ்வுரிமையைப்பற்றி கிஞ்சிற்றும் கவலைப்படாமல், ஏதோ ஒப்புக்குப் பேசுவது போன்ற நாடகங்களையே அவ்வப்போது அரங்கேற்றுகிறார்கள். இதற்கு காங்கிரஸ் கட்சி கடும் விலையைக் கொடுக்கவேண்டிய நிலை ஏற்படலாம்!
பா.ஜ.க. போன்ற மதவெறி அமைப்புகளின் மாற்றாக காங்கிரஸ் இருப்பதால், இது பலவீனமடையக் கூடாது என்று பொதுவில் நின்று சிந்திக்கிறவர்களின் ஆத ரவுகூட மத்திய அரசின் இத்தகைய முன்யோசனையற்ற செயல்களால் இழக்கப்படக்கூடிய நிலையே உருவாகிறது!
30 ஆயிரம் தமிழர்கள் இன்னமும் முள்வேலி முகாம்களுக்குள் வாடி வதிந்து கொண்டுள்ள நிலை!
சாக்குப் போக்குகளை நம்பத் தயாராக இல்லை
இலங்கைக் கடற்படையால் - சிங்களவர்களால் - தமிழக மீனவர்கள் தங்களது வாழ்வாதாரமான மீன்பிடித் தொழிலைச் செய்ய இயலாமல், உயிரையும் பணயம் வைத்துப் பலியாகும் பரிதாபம் அன்றாடம் தொடரும் அவலமாகி வருகிறது.
இவ்வளவுக்கும் காரணமான கல்லுளிமங்கனுக்கு இப்படி ஒரு ராஜ மரியாதை தேவையா? ஏதோ சாக்குப் போக்குக் கூறுவதுபோல், அவரிடம் நேரில் மத்திய அரசு இனிமேல்தான் வற்புறுத்தப் போவதற்காக அவரை அழைத்துள்ளது போன்று ஒரு சமாதானம் சொல்லுவதை நம்புவதற்கு நாட்டு மக்கள் தயாராக இல்லை.
அய்.நா. பொதுச்செயலாளர் பான்-கி-மூன் போன்றவர்களுக்குள்ள நடுநிலை உணர்வு, நியாயத்திற்கு வாதாடும் தன்மை மத்திய அரசுக்கு இருக்கவேண்டாமா?
தப்புக் கணக்குப் போடவேண்டாம்!
தமிழர்களை இளிச்சவாயர்கள், ஏமாந்தவர்கள் என்று எண்ணி தப்புக் கணக்குப் போடவேண்டாம்!
தமிழர்கள் உணர்வு வெளிப்படுத்தப்படவேண்டிய நேரத்தில் வெளியாகும்! புரிந்துகொள்ளட்டும் டில்லி அரசு!
தலைவர்,
திராவிடர் கழகம்.
சென்னை
13.10.2010
----------------------" விடுதலை” 13-10-2010-
0 comments:
Post a Comment