கேள்வி - விடை
கே : கட்சிகள் என்றால் என்ன?
வி: நல்ல லட்சியங்களைச் சொல்லி ஜனங்களை ஏமாற்றி தங்கள் வசம் செய்து சுயநல லாபம் அடைவது. உதாரணமாக காங்கிரஸ் கட்சி, தேசீயக் கட்சி முதலிய பல கட்சிகள்.
கே: அப்படியானால் சுயமரியாதைக் கட்சி இதில் சேராதோ?
வி: சேராது!
கே: ஏன்?
வி : அது யாரையும் ஓட்டுக் கேட்பதில்லை, பணம் கேட்பதில்லை, உத்தியோகம் கேட்பதில்லை, பதவி கேட்பதில்லை, பட்டம் கேட்பதில்லை. அது மாத்திரமல்லாமல் அதில் சேர்ந்தவர்கள் எல்லாம் தங்கள் சொந்த நேரத்தையும், பணத்தையும், செல்வாக்கையும் இக்கட்சிக்குச் செலவழித்துக் கொண்டு இருக்கிறார்கள்.
எது அதிகக்கெடுதி
மக்களைக் கோவிலுக்குப் போகவேண்டாம் என்று சொல்லுகிறவர்களால் ஜனங்களுக்குக் கெடுதி என்று சொல்வதனால் கோவிலுக்குப் போகும் படி சொல்லுகின்றவர்களால் அதைவிட அதிகமான கெடுதி என்றே சொல்லலாம்.
கோவிலை இடிக்கின்றவர்களை விட, கோவில் கட்டுகின்றவர்களாலேயே மக்களுக்கு நஷ்டமும் கஷ்டமும் ஏற்படுகின்றன.
கடவுள் கல்லிலும், செம்பிலும், படத்திலும் இருக்கிறார் என்று சொல்லுகின்றவர்களை விட, கடவுள் இல்லை என்று சொல்லுகின்றவர்கள் நல்லவர்கள்.
100 ரூபாய் இனாம்
தானாக ஏற்பட்ட கடவுள் எங்காவது உண்டா?
இந்த மூவரில் யார் நல்லவர்கள்?
கருப்பக் கவுண்டர் உதைப்பதாகச் சொல்லி மிரட்டி ஓட்டு வாங்கி னார்.
தனபாலு செட்டியார் பணம் கொடுத்து ஓட்டு வாங்கினார்.
பஞ்சாபகேச அய்யர் சுயராஜ்யம் வாங்கி கந்தாயம் தள்ளிப் போடுவதாக ஆசைக்காட்டி ஓட்டு வாங்கினார்.
இம்மூவரில் யார் யோக்கியர்கள்?
இவர்களில் யார் பதிவிரதைகள்?
1. சீதா, புருஷன் பந்தோபஸ்தினால் வேறு புருஷன் சாவகாசம் செய்ய முடியவில்லை.
2. மீனாக்ஷி புருஷன் உதைத்து விடுவானே என்று உதைக்குப் பயந்து சோரம் செய்யவில்லை.
3. நாமகிரி ஜனங்கள் கேவலமாய் பேசுவார்களே என்று மானத்திற்குப் பயந்து வேறு புருஷனை இச்சிக்கவில்லை.
4. இரஞ்சிதம் தன் மனதிற்குப் பிடித்த கணவன் கிடைக்கவில்லை என்று கருதி யாருக்கும் இணங்கவில்லை.
5. சரஸ்வதி மேல் லோகத்தில் செக்கில் போட்டு ஆட்டுவாரென்ற கஷ்டத்திற்குப் பயந்து யாருக்கும் இணங்கவில்லை.
6. மேனகை தான் கேட்டளவு பணம் கொடுக்கவில்லை என்று கருதி யாருக்கும் சம்மதிக்கவில்லை.
7. கோகிலா தன் காதலனுடன் செய்து கொண்ட ஒப்பந்தத்திற்கு விரோதமே என்று கருதி வேறு யாருக்கும் ஒப்பவில்லை.
இவர்களில் யார் பதிவிரதைகள் ?
------------------தந்தைபெரியார் - “ குடி அரசு” - 21.12.1930
2 comments:
"ஆக, பெண்கள் யோக்கியமாக இருப்பது இம்மாதிரியான காரணங்களினால் தான் என்று நீங்கள் நினைத்தால், நீங்கள் எவ்வளவு பெரிய வக்கிர புத்திக்காரர்"
//guna said...
"ஆக, பெண்கள் யோக்கியமாக இருப்பது இம்மாதிரியான காரணங்களினால் தான் என்று நீங்கள் நினைத்தால், நீங்கள் எவ்வளவு பெரிய வக்கிர புத்திக்காரர்"
October 10, 2010 10:10 PM //
இந்தளவுக்காவது புரிந்து கொள்ள முடிந்ததே சந்தோஷம்....
பெண்களின் யோக்கியதையை பற்றி தீர்மானிக்க இவர்கள் யார்? என்பது வக்கிரப் புத்தியாக தெரியவில்லையா....?
புருஷன் இல்லாவிட்டால் பெண்கள் கெட்டுப்போய்விடுவார்கள் என்பது ஆணாதிக்க வக்கிரபுத்தி இல்லையா?
அப்படி என்றால் எத்தனை பெண்கள் இளம்வயதிலேயே கணவனை இழந்திருக்கிறார்களே அவர்கள் எல்லாம் தவறானவர்களாக காட்டுவது வக்கிரப் புத்தி இல்லையா?
இப்படி பெண் கடவுள்களே கட்டுப்பாடாக இருப்பதற்கு இந்த ஆணாதிக்க கடவுள்களே காரணம் என்று கூறப்பட்டுள்ள இந்த இந்து மதப்புராணம் ஒரு வக்கிரபுத்தியுள்ள புராணம்,ஒரு வக்கிரபுத்தியுள்ள மதம் என்பது தெரியவில்லையா...?
இதில் உமது தாயும் அடக்கம் அந்த தாயையும் கேவலப்படுத்தியுள்ளனரே, தமக்கைகள், உறவினர்கள் என எல்லோரையும் இழிவு படுத்தியிருப்பது வக்கிரப் புத்தியாக தெரியவில்லையா...?
பதிவிரதைகள் என்றால் ஒவ்வொருவரின் தாய், தமக்கைகள் இல்லையா...?
என்னய்யா! வக்கிரக்"guna"த்தை நீ வைத்துகொண்டு பிறர் மீது பாய்கிறாய்!
Post a Comment