ஆரியக் கலாச்சாரத்துக்கு இடம் தராமல் திராவிடக் கலாச்சாரத்தை வளர்ப்போம்!
லட்சோப லட்ச மக்கள் சமுத்திரத்திற்கு முன் நாகையில்
முதல் அமைச்சர் கலைஞர் முழக்கம்
திராவிடர் இயக்கம், திராவிடர் கலாச்சாரம், ஆரியக் கலாச்சாரம் பற்றி திமுக தலைவரும் தமிழ்நாடு அரசின் முதல் அமைச்சருமான கலைஞர் அவர்கள் நாகப்பட்டினத்தில் நேற்று (10.10.2010) நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் விளக்கம் அளித்தார்.
முதல்வர் கலைஞர் தமது உரையில், இன்றைக்கு தமிழகத்தில் வளர்த்துக்கொண்டி ருக்கின்ற திராவிடக் கலாச்சாரம், நாகரிகத்தை இந்தியா முழுமையும் வளர்ப்போம் என்றும் தி.மு.கழகத்தை ஒழிக்க யார் அடியெடுத்து வைத்தாலும் அந்த அடி நொறுங்கிப் போகும் என்றும் குறிப்பிட்டார். மேலும் முதல்வர் கலைஞர் தமது உரையில், சிறுதாவூர் தலித் நில மீட்பு நடவடிக்கை குறித்து என்னிடம் மனு கொடுத்த மனசாட்சி உள்ள மார்க்சிஸ்ட்களே எண்ணிப் பாரீர் என்றும் குறிப்பிட்டார்.
நாகையில் நடைபெற்ற மாபெரும் பொதுக் கூட்டத்தில் முலமைச்சர் கலைஞர் ஆற்றிய உரை வருமாறு:-
வெள்ளம்போல் குழுமியிருக்கும் இந்த மாபெரும் பொதுக்கூட்டத்தினுடைய தலைவர் ஏ.கே.எஸ். விஜயன் எம்.பி. அவர்களே, உரையாற்றி அமர்ந்துள்ள அமைச்சர் பெருமக்களே, உரையாற்றி விளக்கங்கள் தரவேண்டிய வாய்ப்பை உருவாக்காத அமைச்சர் பெருமக்களே, திருவாரூர் - நாகை மற்றும் இந்த வட்டாரத்திலே உள்ள கழக அமைப்புகளின் நிருவாகிகளே, நாடாளுமன்ற கழகக் குழுவின் தலைவர் தம்பி டி.ஆர்.பாலு அவர்களே, என்னுடைய பழம் பெரும் நண்பர் - இந்த இயக்கத்தின் ஆரம்பக் காலம் தொட்டு இதுவரையில் தன்னுடைய இசையால் எதிரிகளையும் இசைய வைத்த பெருமதிப் பிற்குரிய நாகூர் அனீபா அவர்களே, பிறந்த நாள் விழா பரிசு பெற்று அமர்ந்துள்ள அருமை நண்பர் எஸ்.பி.டி. தங்கையா அவர்களே, விலகி வந்து வேறிடம் சென்று மீண்டும் திராவிடப் பாசறை இதுதான் என்று உணர்ந்து வருகை தந்துள்ள அழகு.திருநாவுக்கரசு போன்ற அருமை நண்பர்களே, இன்றைக்கு இந்தக் கூட்டத்திலும் ஒரு திருநாவுக்கரசு இந்தக் கூட்டணி யில் இணைந்திருக்கின்ற செய்தியை வியந்து போற்றுகின்றேன்.
நாடாளுமன்ற, சட்டப்பேரவை முன்னாள் - இந்நாள் உறுப்பினர்களே, கழக முன்னணி நண்பர்களே, தாய்மார்களே, பெரியோர்களே, என் உயிரினும் மேலான அன்பு உடன்பிறப்புகளே,
உயிரினும் மேலான உடன்பிறப்புகளே என்று நான் இப்போதெல்லாம் தொடக்கத்தில் சொல்ல விரும்புவ தில்லை. ஏனென்றால், அந்த ஒரு வார்த்தைக்கு மாத்திரம் காத்திருந்து அதைச் சொன்னவுடன் வீட்டுக்குப் போகலாமா என்று எண்ணி சென்று விடுகின்ற உடன்பிறப்புகளையும் நான் அறிந்தவன் என்ற காரணத் தினால், எனக்கு முன்னால் பேசிய நம்முடைய கழகத் தினுடைய முன்னணித் தளபதிகளெல்லாம் எடுத்துக் காட்டியதைப் போல், தம்பி ஏ.கே.எஸ்.விஜயன் அவர்களால் ஏற்பாடு செய்யப்பட்டு, அவருடைய உழைப்பின் அடையாளமாக, அவருடைய ஆற்றலின் வடிவமாக இந்த மாபெரும் மக்கள்திரளை இங்கே நாம் காண முடிகின்றது.
வருகிற வழியெல்லாம் இந்தக் கூட்டத்தினுடைய தாக்கத்தை நாங்கள் உணர்ந்தோம். எனக்கு நாகப் பட்டினம் புதிய ஊர் அல்ல, இங்கே நம்முடைய நண்பர்கள் எடுத்துக்காட்டியதைப் போல், ஒரு காலத்தில் ஒவ்வொரு அமாவாசை நாளிலும் என்னை அழைத்து, அன்றைக்கு திராவிடர் கழகத்தின் தளபதிகளில் ஒருவரான நண்பர் ஆர்.வி. கோபால் கூட்டம் நடத்துவது வாடிக்கை. அமாவாசை வரத் தவறினாலும் தவறும். அந்த நேரங்களிலே நான் கலந்து கொள்கின்ற கூட்டங்கள் என்றைக்கும் தவறியதில்லை. அப்படி மாதா மாதம் பேசிய நான் - இங்கே இன்றைக்கு வரும்போது நீண்ட இடைவெளிக்குப் பிறகு வருகி றேன் என்ற காரணத்தால், நீங்கள் வந்து என்னை சந்திக் கிறீர்கள் என்று அல்ல, எத்தனை முறை தன்னுடைய வீட்டுச் செல்வத்தை, தன்னுடைய குழந்தையை தூக்கி வைத்துக்கொண்டு கொஞ்சினாலும், தாய்க்கு மனநிறைவு ஏற்படாதோ அதைப்போல எத்தனை முறை என்னை அழைத்து, அழைத்து கூட்டம் போட்டாலும் உங்களுக்கும் தெவிட்டப் போவதில்லை, எனக்கும் தெவிட்டப் போவதில்லை.
அந்த அளவிற்கு இந்த மாவட்டத்தில் - அதிலும் குறிப்பாக நாகை மாவட்டத்தில் நான் தொடர்புடை யவனாக அந்தக் காலத்தில் இருந்து இந்தக் காலம் வரையில் இருக்கிறேன். அதைத்தான் தம்பி பொன்முடி இங்கே பேசும்போது, சொந்த மாவட்டத்திற்கு வருகின்ற மகிழ்ச்சியை தலைவருடைய முகத்திலே காண முடிந்தது என்று சொன்னார். நானும் சொந்த மாவட்டங்களுக்கு என்னை அழைப்பவர்களுடைய முகமலர்ச்சியை ஆங்காங்கே பார்த்திருக்கிறேன். அதிலே பொன்முடியும் ஒருவர் என்பது நான் பட்டியலிட்டு வைத்திருக்கின்ற பெயர்களிலே ஒன்று.
சுயமரியாதை உணர்வோடு தமிழர்கள்
வாழவேண்டுமென்பதற்காக உருவானது தி.மு.க.
யாருக்குத்தான் சொந்த மாவட்டங்களிலே நடக் கின்ற நிகழ்ச்சியைப் பற்றி மகிழ்ச்சி இருக்காது. அது பற்றிய புத்துணர்ச்சி இருக்காது என்பதை நடத்திய வர்கள் நன்றாக அறிவார்கள். திராவிட முன்னேற்றக் கழகம் ஏதோ ஒரு அரசியல் காரணத்துக்காக உருவாக்கப்பட்ட இயக்கம் அல்ல என்பதை நான் பலமுறை விளக்கியிருக் கிறேன். இது ஒரு சமுதாய இயக்கம். தந்தை பெரியார் அவர்கள் சுயமரியாதை உணர்வோடு தமிழர்கள் வாழ வேண்டும், திராவிட இன உணர்வை அவர்கள் பெற வேண்டும் என்பதற்காக பாடுபட்டதை எண்ணிப் பார்த்து - அந்தப் பயிற்சிப் பாசறையிலே பயின்று - அவருடைய வழிநின்று தொண்டாற்ற உருவாக்கப்பட்டதுதான் - பேரறிஞர் அண்ணா அவர்களால் 1949 ஆம் ஆண்டு தோன்றிய இந்த திராவிட இயக்கம் - திராவிட முன்னேற்றக் கழகம்.
இந்தக் கழகத்தைக் கட்டிக் காக்கின்ற பெரும் பொறுப்பு நமக்கெல்லாம் உண்டு. இந்தக் கழகம் இன்றைக்கு அரசியலிலே பெற்றிருக்கின்ற வெற்றிகளை மாத்திரமல்ல, சமுதாயத் துறையிலே பெற்றிருக்கின்ற வெற்றிகளையெல்லாம் நீங்கள் மிக நன்றாக அறிவீர்கள். ஒரு காலத்திலே தீண்டாமை என்ற ஒரு கொடுமைக்கு ஆளாகி, அவர்கள் கிட்டே வரக்கூடாது எட்டித்தான் நிற்க வேண்டும் என்றெல்லாம் துரத்தப்பட்ட சாதாரண சாமானிய மக்கள் இன்றைக்கு சமமாக உட்கார்ந்து அவர்களும் மற்றவர்களும் உயர்குலத்தோரும் ஒரே பகுதியில் சமத்துவபுரத்திலே வாழ்கிறார்கள் என்றால், அதுதான் திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய சமுதாயக் கொள்கையாகும். (பலத்த கைதட்டல்)
சிறுபான்மை சமுதாய மக்களுக்கு, பிற்படுத்தப் பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு பாதுகாப்பு அரணாக இருப்பதுதான் திராவிட முன்னேற்றக் கழகம். உங்களுக்கு ஒன்றைச் சொல்ல விரும்புகின்றேன். சான்றுகளோடு சொல்ல விரும்புகிறேன். அண்மையில் கழக அரசு இஸ்லாமிய மக்களுக்கு 3.5 சதவிகித இட ஒதுக்கீடு தந்தது. அதை சில பேர் கேலி பேசினார்கள், கிண்டல் செய்தார்கள். எதிர்த்தும் அறிக்கை விட்டார்கள். அப்படிப்பட்டவர்கள் இன்றைக்கு உணர்ந்து கொள்ள வேண்டும். அவர்களுடைய கருத்துக்கு காதுகொடுத்த இஸ்லாமியப் பெருமக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
சிறுபான்மை மக்கள் தி.மு.கழக அரசு
அளித்த இடஒதுக்கீட்டினால் பயனடைந்தனர்
அவர்களுக்கு 3.5 சதவிகித இடஒதுக்கீடு வழங்கிய காரணத்தால் தமிழ்நாட்டில் - இந்த ஆட்சியில் பொறியியல் கல்லூரிகளில் மாணவர்களின் சேர்க்கை 5034 பேர் பொறியியல் கல்லூரிகளிலே மாணவர்களாக இஸ்லாமியப் பெருமக்கள் சேர்ந்திருக்கிறார்கள் என்பதை எண்ணிப் பார்க்கும்போது இந்தத் திட்டம் திராவிட முன்னேற்றக் கழக அரசால் உருவாக்கப்பட்ட போது - அறிவிக்கப்பட்ட போது கேலி செய்தவர்கள், கிண்டல் செய்தவர்கள், எதிர்த்தவர்கள், இதற்காக வேறு வேறு நிகழ்வுகளில் மறைமுகமாக நம்மைத் தாக்கி எழுதியவர்கள், பேசியவர்கள், அதனாலேயே நம் மீது விரோதம் கொண்டவர்கள், நாம் ஏதோ சிறுபான்மை என்கின்ற பெயரால் இஸ்லாமிய மக்களுக்கு நன்மை செய்கிறோம் என்று எடுத்துக் கொண்டு அதை எதிர்த்தவர்கள், அவர்களுடைய எதிர்ப்பு உண்மை தானோ என்று முஸ்லிம் மக்கள் கருதியபோது, நான் அவர்களுக்கு அளித்த உத்தரவாதம் - பொறுமையாக இருங்கள், நீங்கள் எத்தகைய லாபத்தை உங்களுடைய சமுதாயத்திற்கு - எதிர்காலத்து மக்களுக்கு அடைய இருக்கிறீர்கள் என்பதை பார்க்கத்தான் போகிறீர்கள் என்று சொன்னேன். அதற்கு ஏற்ப 2010ஆம் ஆண்டிலே மாத்திரம் பொறியியல் கல்லூரிகளிலே மாணவர்களின் சேர்க்கை 5034 பேர் இஸ்லாமிய மாணவர்கள் இடம் பெற்றிருக்கிறார்கள் என்பதை மகிழ்ச்சியோடு தெரி வித்துக் கொள்கிறேன். இப்படிப்பட்ட லட்சியங்கள் தி.மு.கழக ஆட்சியிலே ஒன்றல்ல, இரண்டல்ல.
இது நாகப்பட்டினம் - பழைய ஒன்றிணைந்த நாகப்பட்டினம் மாவட்டம் - நாகப்பட்டினம் என்றால் நான் நாகர்கோவிலிலே சில வாரங்களுக்கு முன்பு பேசும்போது குறிப்பிட்டேன். இதுதான் உண்மையான திராவிட இனத்தினுடைய பூர்வீக மாவட்டம். திராவிட இனத்தினுடைய நாகர் என்று ஒரு வகுப்பினர் இருந்தார்கள். அந்த நாகர்கள் வாழ்ந்த பூர்வீக இடம் இன்றைக்கு லெமூரியா கண்டம் என்று அழைக்கிறோமே அந்தக் கண்டம்தான், அந்த லெமூரியா கண்டத்தினுடைய மக்கள்தான் லட்சக்கணக்கான, பல்லாயிரக்கணக்கான வருடங்களுக்கு பிறகு கொஞ்சம், கொஞ்சமாக மாறுதல் அடைந்து, அவர்கள் திராவிட நாகரிகத்திற்கு உரியவர்கள் என்று விளங்குபவர்கள். அப்படி விளங்குபவர்களை உதாரணத்திற்கு சொல்லவேண்டுமானால், இன்றைக்கும் நாகர்கள் தமிழகத்தினுடைய பூர்வீகக் குடிகள் என்பதற்கு அடையாளமாகத்தான் நாகர்கோவில், திருநாகேஸ் வரம், நாகப்பட்டினம் என்கின்ற இந்த ஊர்களெல்லாம் `நாகர், `நாக என்ற அடைமொழியோடு அழைக்கப்பட்டிருக் கின்றன - இன்றைக்கும் அழைக்கப்படுகின்றன. அந்த நாகர்களுடைய பரம்பரையிலே வந்து, திராவிடர்களாக, திராவிட நாகரிகத்துக்குச் சொந்தக்காரர்களாக இருக்கின்ற நாம், குறிப்பாக இந்தப் பகுதியிலே நாகப்பட்டினத்திலே வாழ்கின்ற நாம் திராவிட இன கலாச்சார நாகரிக, பண்பாடு அத் தனைக்கும் சொந்தக் காரர்கள். இதை அழிக்க, ஒழிக்க சிலர் - ஏற்றத்தாழ்வில் நம்பிக்கை உள்ளவர்கள் - சில பேர் கங்கணம் கட்டிக் கொண்டு இந்த மக்களை தங்களுக்கு அடிமைகளாக ஆக்கிக்கொள்ள வேண்டும் என்று கருதியவர்கள் ஏமாந்துவிட்டார்கள். அப்படி ஏமாந்ததற்குக் காரணம் வேறு யாருமல்ல, தந்தை பெரியார், அவர் வழி வந்த பேரறிஞர் அண்ணா, அவர்கள் வழி நின்று இயக்கம் நடத்துகின்ற நாம். நாம் இருக்கின்ற காரணத்தால்தான் நம்மால் ஏற்பட்ட அந்த மறுமலர்ச்சிதான் தந்தை பெரியாருடைய எண்ணத்தை, பேரறிஞர் அண்ணா வினுடைய கருத்தை வெற்றி பெறச் செய்த திராவிட இயக்கம் இன்றைக்கு இந்தியாவிலே கேள்விக்குறியாக அல்ல. ஆச்சரியக்குறியாக மாறியிருக்கிறது. திராவிட இயக்கமா? திராவிடனா? என்று கேள்வி கேட்டவர்கள், இப்பொழுது திராவிட இயக்கமா! என்று ஆச்சரியத் தோடு பார்க்கிறார்கள். இன்னும் கொஞ்சம் காலத்திற்கு பிறகு திராவிட இயக்கம் - நான் நாகப்பட்டினத்திற்கு சொல்லுகின்றேன். இப்பொழுது தமிழகத்திலே இருக்கிறது. தென் பகுதியிலே இருக்கிறது, தென் இந்தியாவிலே இருக்கிறது. ஆரம்ப காலத்திலே திராவிடன் இந்தியா முழுவதும் வாழ்ந்தான். இன்றைக்கு இங்கே காணுகின்ற இந்த எழுச்சி எதிர்காலத்திலே இந்தியா முழுவதும் திராவிட உணர்வை, திராவிட இயக்கத்தினுடைய அந்தத் தாக்கத்தை நிச்சயமாக ஏற்படுத்தும் என்று இந்த மாபெரும் பொதுக் கூட்டத்திலே அறைகூவல் விடுத்து வெளியிட விரும்புகின்றேன்.
திராவிட இயக்கம் என்பது ஏதோ ஒரு சில பதவிப் பொறுப்புக்களை ஏற்க வேண்டும் என்பதற்காக அல்ல. தேர்தலிலே நிற்க வேண்டும் என்பதற்காக அல்ல. இந்த இயக்கத்தை அறிஞர் அண்ணா தொடங்கிய போது, பெரியார் சொன்னார், இவர்களெல்லாம் தேர்தலிலே நிற்கப் போகிறார்கள் என்று. நாங்கள் சொன்னோம், நாங்கள் தேர்தலில் நின்றாலும், அதிலே வென்றாலும் எங்களுடைய கொள்கை அய்யா அவர்களே, பெரியார் அவர்களே உங்களால் ஊட்டப்பட்ட அந்தக் கொள்கை களை வெற்றிபெறச் செய்வதற்காகத்தான் நாங்கள் பாடுபடுவோம், பணியாற்றுவோம் என்று உறுதி எடுத்துக் கொண்டோம். அந்த உறுதியை நிறைவேற்றுகின்ற வகையிலேதான், இன்றைக்கு தி.மு.கழக அரசு செயல்பட்டு வருகிறது. நான் நாகப்பட்டினம் மாவட் டத்தில் - திருவாரூர் மாவட்டம் இணைந்த இந்த பகுதியில் விவசாயிகள் நிரம்பிய இந்த வட்டாரத்தில் தி.மு.கழக அரசு விவசாயிகளுக்காக - வேளாண் துறையில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டிருப்பவர்களுக்காக ஆற்றி உள்ள பணிகள் சிலவற்றைச் சொல்ல விரும்புகின்றேன். நண்பர்களெல்லாம் எடுத்துக் காட்டியதைப் போல ஒரு கிலோ அரிசி ஒரு ரூபாய்க்கு வழங்குகிற திட்டம், இன்றைக்கு நடைமுறைப்படுத்தப்பட்டிருக்கிறது. 22 இலட்சத்து 40 ஆயிரத்து 739 விவசாயக் குடும்பங்களுக்கு ஏழாயிரம் கோடி ரூபாய் கூட்டுறவுக் கடன் தள்ளுபடி செய்யப்பட்டது. நான் ஆட்சிப் பொறுப் பேற்று முதலமைச்சராக கோட்டைக்குச் சென்று கையெழுத் திடுவதற்கு முன்பு ஆட்சிப் பொறுப்பேற்று உறுதி மொழியில் கையெழுத்திட்ட அந்த நேரத் திலேயே அடுத்த கையெழுத்துபோட்டேனே அது விவசாயி களுடைய கடன் 7,000 கோடி ரூபாய் தள்ளுபடி என்ற கையெழுத்துத்தான். விவசாயிகளுக் கான பயிர்க் கடன் வட்டி 2005 - 2006இல் வட்டி 9 சதவிகிதம் என்று இருந்ததை 2006 - 2007இல் கழக அரசில் 7 சதவிகிதமாகக் பயிர்க் கடன் வட்டியைக் குறைத்தேன். 6 லட்சத்து 31 ஆயிரத்து 283 பேருக்கு 1250 கோடியே 65 லட்சம் ரூபாயும், 2007 - 2008இல் 5 சதவிகிதமாகக் குறைத்து 6 லட்சத்து 48 ஆயிரத்து 397 பேருக்கு 1,393 கோடியே 97 லட்சம் ரூபாயும், 2008 - 2009இல் மேலும் 4 சதவிகிதமாக பயிர்க் கடன் வட்டியைக் குறைத்து 6 லட்சத்து 92 ஆயிரத்து 192 பேருக்கு 1,570 கோடியே 99 லட்சம் ரூபாயும், 2009-10இல் பயிர்க் கடன் வட்டியையே ரத்து செய்து 8 லட்சத்து 98 ஆயிரத்து 540 பேருக்கு 2169 கோடியே 48 லட்சம் ரூபாயும், நடப்பாண்டில் 30.9.2010 வரை 4 லட்சத்து 43 ஆயிரத்து 320 பேருக்கு 1,340 கோடியே 23 இலட்சம் ரூபாயும் என 2006 க்கு பின் மொத்தம் 33 இலட்சத்து 12 ஆயிரத்து 732 விவசாயிகளுக்கு 7 ஆயிரத்து 778 கோடியே 29 லட்சம் ரூபாய் பயிர்க்கடன்கள் வழங்கப் பட்டிருக்கின்றன என்பதை விவசாயப் பெருங்குடி மக்கள் நிறைந்திருக் கின்ற இந்தக் கூட்டத்தில் நான் சொல்லிக்கொள்ள விரும்புகின்றேன்.
2005 - 2006இல் நெல் கொள்முதல் ஒரு குவிண்டா லுக்கு 600 ரூபாய், கழக அரசு அதை உயர்த்தி 2010 - 2011இல் சாதாரண நெல் விலை 1050 ரூபாய். சன்ன ரக நெல் விலை 1,100 ரூபாய் என வழங்குகிறது.
பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தில் 2006இல் 50 சதவிகிதம் காப்பீட்டுத் தொகையை அரசே மானியமாக வழங்கி ஊக்கப்படுத்தியதால் 2005 - 2006இல் ஒரு லட்சம் விவசாயிகள் பயனடைந்த நிலையில், 2009 - 2010 ஆம் ஆண்டில் 7 லட்சத்து 80 ஆயிரம் விவசாயிகள் அரசின் மானிய உதவி பெற்று பயிர்க் காப்பீடு செய்தார்கள். கடந்த 4 ஆண்டுகளில் விவசாயிகளுக்கு 891 கோடி ரூபாய் இழப்பீட்டுத் தொகை பயிர்க் காப்பீட்டுக்காக வழங்கப்பட்டிருக்கின்றன என்பதை நான் இங்கே மிகவும் மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கின்றேன்.
கரும்பு விவசாயிகளுக்கு 2005 - 2006இல் டன் ஒன்றுக்கு கிடைத்த விலை 1,014 ரூபாய்., 2009 - 2010இல் போக்கு வரத்துக் கட்டணத்தையும், ஊக்கத் தொகை யையும் சேர்த்து டன் ஒன்றுக்கு 1,650 ரூபாய் என உயர்த்தப் பட்டது. 2010 - 2011 முதல் இப்பொழுது 2 ஆயிரம் ரூபாய் என கரும்பு விவசாயிகளுக்கு உயர்த்தப்பட்டிருக்கிறது. கழக அரசு விவசாயிகளுக்கு வழங்கும் உதவிகளால் உணவு தானிய உற்பத்தி 2005 - 2006இல் 61 லட்சம் டன், 2008 - 2009இல் 91 லட்சம் டன் என்பதை மறந்துவிடக் கூடாது. யாரோ சொன்னதாக தம்பி துரைமுருகன் சொன்னார் - தமிழ்நாடு படுபாதாளத்திற்கு சென்றிருக் கிறது என்று சொன்னதாக சொன்னார். அது உண்மை தான். நாங்கள் பாதாளத் திற்கு போக வேண்டிய காரணம், வறண்ட காலத்தில் கூட பூமிக்கு அடியில் இருக்கின்ற தண்ணீரையெல் லாம் எடுத்து மழையில்லாத நேரங்களில் பயிர் செய்வதற்காக நாங்கள் பாதாளம் வரையிலே செல்கின்றோம் (பலத்த கைதட்டல்) இல்லை என்று மறுக்கவில்லை. அந்த அளவிற்கு விவசாயத்தைப் பெருக்கவே வேளாண்மைத் தொழிலை இந்தியாவி னுடைய பெரிய தொழில்களில் ஒன்று என்ற அந்த கருத்துடன், அந்த நம்பிக்கையுடன் அதை வளர்க்க வேண்டும், அதிலே ஈடுபட்டிருக்கின்றவர்களை வாழ வைக்க வேண்டும் என்பதற்காகத்தான், நாங்கள் இந்த அரசை விவசாயத் தொழிலாளர்களுக்கு, விவசாயப் பெருங்குடி மக்களுக்கு உரிய அரசாக நிர்வகித்து வருகின்றோம். ஆனால் நண்பர்கள் இங்கே எடுத்துக் காட்டியதைப் போல், கம்யூனிஸ்ட் நண்பர்கள் இதை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். அவர்கள் ஏற்றுக் கொள்கின்ற காலம் வரும். ஏனென்றால் நான் பலமுறை எடுத்துச் சொன்னதைப்போல இந்த வட்டாரத்திலே உள்ள விவசாயி களுக்கு பண்ணையாளர்களால், முதலாளிகளால், மிராசுதாரர்களால் இழைக்கப்பட்ட கொடுமை களையெல்லாம் கண்டித்து போராட்டம் நடத்தியவன் நான். அந்தப் போராட்டங்களில் ஈடுபட்ட வன்தான் நான். அப்படிப்பட்ட நான், விவசாயிகளுக்கு எதிராக கம்யூனிசத்திற்கு எதிராக அல்ல; கம்யூனிசம் வேறு, கம்யூனிஸ்ட் வேறு, கம்யூனிசம் என்பது ஒரு கொள்கை. கம்யூனிஸ்ட் என்பது அந்தக் கொள்கைகளை ஏற்றுக் கொண்டு கொடி பிடிப்பவர். நான் சொல்லுகின்ற கம்யூனிசத்தை புரிந்துகொள்ள வேண்டும்.
கம்யூனிச கொள்கைகளுக்கு எதிராக
இருக்கிறார்கள் இன்றைய கம்யூனிஸ்ட்கள்
ரஷ்யாவிலே உதயமான கம்யூனிசக் கொள்கை, மார்க்சியக் கொள்கை புனிதமானது. ஏழைகளை வாழ வைக்கக்கூடியது. தொழிலாளர்களுக்கு உதவுக்கூடியது. அவர்களுடைய தோளை உயர்த்தக்கூடியது. அவர் களுடைய உழைப்புக்குப் பெருமை அளிக்கக் கூடியது. ஆனால் இந்தியாவில், குறிப்பாக இப் பொழுது உள்ள கம்யூனிஸ்டுகள் இருக்கிறார்களே, அவர்கள்தான் அந்த கம்யூனிசத்துக்கு எதிரிகளாக இன்றைக்கு இந்தியாவிலே இருக்கிறார்கள். நான் அண்ணன் ஜீவானந்தம் அவர்களை அறிவேன். நான் தஞ்சை மாவட்டத்திலே விவசாயிகளுக்காகப் பாடுபட்ட சீனிவாசராவ் போன்றவர்களை அறிவேன், தோழர் கல்யாணசுந்தரத்தை அறிவேன், விவசாயிகளுக்காக பாடுபட்ட ராமமூர்த்தி போன்ற நண்பர் களையெல்லாம் அறிவேன். ஆனால் அவர்கள் வேறு, இன்றைக்கு இருக்கின்ற கம்யூனிஸ்டுகள் வேறு என்பதை எண்ணும்பொழுது, நான் மிகுந்த மனக் கவலை அடைகின்றேன். ஏனென்றால் ஒரே ஒரு உதாரணம் சொல்லுகின்றேன். ஒரு மூன்று நான்கு ஆண்டுகளுக்கு முன்பு, கம்யூனிஸ்டு கட்சிகளுடைய தலைவர்கள் - அதிலும் குறிப்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சித் தலைவர்கள் ஊர்வலமாக வந்து, ஒரு மனுவை முதலமைச்சராக இருந்த என்னிடம் கொடுத்தார்கள். அந்த மனுவிலே என்ன எழுதியிருந்தார்கள் என்றால், இன்னார் சென்னைக்கு அருகில் உள்ள பஞ்சமர் களுடைய நிலத்தை - தலித் மக்களுடைய நிலத்தையெல்லாம் சுரண்டிக் கொண்டிருக்கிறார்கள். ஆக்கிர மித்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்களை வெளியேற்றி நீதி வழங்க வேண்டும் என்று என்னிடத்திலே ஒரு மனுவைக் கொடுத்தார்கள். நான் யார் எவர் என்றெல்லாம் சொல்ல விரும்பவில்லை. அப்படி சொல்வதை கம்யூனிஸ்டு நண்பர்களும் விரும்பமாட்டார்கள். ஏனென்றால், அவர்களுக்கு ரொம்ப எரிச்சலை உண்டாக்கக் கூடிய பெயர் அது. அதனால் நான் சொல்ல விரும்பவில்லை. ஊரை மாத்திரம் சொல்கிறேன். ஊர் பெயர் சிறுதாவூர். (கைதட்டல்)
அந்த ஊரிலே உள்ள நிலங்களையெல்லாம் சுருட்டிக் கொண்டு, ஆக்கிரமித்துக் கொண்டு, ஏழை எளிய பாட்டாளி மக்களை, தொழிலாளிகளை, உழவர்களை இவர்களுடைய நிலங்களையெல்லாம் ஆக்கிரமித்து வீடு கட்டிக் கொண்டு - பங்களா கட்டிக் கொண்டு வாழ் கிறார்கள். அவர்களை உடனே வெளியேற்ற வேண்டும் என்று மனு கொடுத்தார்கள். கொடுத்தவர்கள் சாதாரண மானவர்கள் அல்ல. கம்யூனிஸ்டு கட்சியினுடைய பெரிய தலைவர்கள். சட்டமன்ற உறுப்பினர்கள். கட்சியினுடைய மாநில அளவிலே உள்ள செயலாளர்கள். அவர்கள் தந்த அந்த மனுவை நான் மதிக்க வேண்டுமா வேண்டாமா? மதித்தேன்.
மதித்து நடவடிக்கை எடுக்க ஆரம்பித்தேன். முதல மைச்சர் என்ற முறையில் அரசாங்கத்தின் சார்பில் நடவடிக்கை எடுத்தால் ஒரு பத்து நாளைக்குள்ளே நிலைமை மாறிவிட்டது. இவர்கள் அந்தப் பக்கம் போய்விட்டார்கள். எந்தப் பக்கம்? சிறுதாவூர் பக்கம். இவர்கள் சிறுதாவூர் பக்கம் போய்விட்ட காரணத்தால், நாங்கள் எடுத்த நடவடிக்கைகளுக்கு அவர்களால் ஆதரவு அளிக்க முடியவில்லை. நடவடிக்கைக்கு உள்ளானவர்கள் எங்களை திட்டினார்கள், நாசமாகப் போங்கள் என்றார்கள். உங்களை விட்டேனா பார் என்றார்கள். எதிர்நடை போட்டார்கள். எதிர்ப்புக் குரல் எழுப் பினார்கள். அதற்கெல்லாம் இவர்கள் பதில் சொல்வார்கள் என்று எண்ணினால் அதற்கு எதிர்ப்புக் குரல் கொடுப்பவர்கள் யார் யார் என்று பார்த்தால், இன்றைய எதிர்க் கட்சியினுடைய தலைவி - அவர்களோடு கூட்டணி சேர துடித்துக் கொண்டு, நேரம் காலம் பார்த்துக் கொண்டு இருக்கின்ற கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்கள், இவர்கள்தான் புகார் கொடுத்தார்கள் - பஞ்சமர்கள் நிலங்களெல்லாம், பாட்டாளி மக்கள் நிலங்களெல்லாம் பறிபோய் விட்டன. அதைப் பாது காத்துத் திரும்ப வாங்கித் தாருங்கள் என்று விண்ணப்பம் கொடுத்தார்கள்.
அந்த மனுவின் மீது நாங்கள் நடவடிக்கை எடுக்கத் தொடங்கினால், எங்களுக்கு துணை நிற்பதற்கு பதிலாக அங்கே போய் சேர்ந்து கொண்டு எங்களை விட்டேனா பார், தி.மு.க. இனி ஆட்சிக்கே வரக் கூடாது என்கிறார்கள். ஏன்? சிறுதாவூரில் கைவைத்து விட்டோமாம். அதனால் ஆட்சிக்கு வரக் கூடாது என்கிறார்கள். இதை மனசாட்சி உள்ள கம்யூனிஸ்ட் கட்சித் தோழர்கள், உண்மையான தோழர்கள் எண்ணிப் பார்க்க வேண்டுமென்று நான் கேட்டுக் கொள்கின்றேன்.
சோனியா காந்திக்கு ஆதரவாக
முதல் குரல் கொடுத்தது தி.மு.கழகம்
ஏனென்றால் ஓர் அரசியலில் கூட்டணி வரலாம், போகலாம். கூட்டணி இன்றைக்கு ஒன்றும் என்னைப் பொறுத்தவரையில் நிலையானது அல்ல. எனக்குத் தெரியும். கூட்டணிகள் சில கொள்கைகளின் அடிப் படையிலே சேருகின்றன. தி.மு.க.வுக்கும் காங்கிர சுக்கும் கூட கூட்டணி எப்போது ஏற்பட்டது? அன்னை என்று எல்லோராலும் புகழப்படுகின்ற - தியாகத் திருவிளக்கு என்று நான் அடிக்கடி கூறுகின்ற சோனியா காந்தி அவர்களை அரசியலில் இருந்தே விரட்ட வேண்டும் என்று ஒரு கூட்டம் - மதவாத கூட்டம் ஆர்ப்பரித்து எழுந்தபோது, தெற்கே இருந்து ஒரு குரல் திருமதி சோனியா காந்தி அவர்களுக்கு ஆதரவாக கேட்டது! தெற்கே இருந்து ஒரு கரம் நீட்டப்பட்டது. அந்தக் கரம் திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு சொந்தமான கரம். (பலத்த கைதட்டல்) அந்தக் கரத்தை நீட்டியது நாம்தான். சோனியா காந்தி அவர்களை காப்பாற்றக்கூடிய வல்லமை படைத்தவர்கள் என்பதற்காக அல்ல. அந்தக் கரத்தை நாம் நீட்டியது - ஆண்டாண்டு காலமாக தமிழகத்தை மாத்திரமல்ல இந்திய தரணியிலேயே மதவாதத்தைக் கிளப்பி, சாதி பேதங்களை உருவாக்கி, மக்களை மவுடீகர்களாக ஆக்கி, அதன் காரணமாக அந்த அடிப்படையில் அரசியலை நடத்தலாம் என்று எண் ணியிருந்த பா.ஜ.க. போன்ற பிற்போக்கு இயக்கங் களுக்கு யாரும் ஆதரவு அளித்து விடக் கூடாது, அவைகளுக்கு எதிர்ப்பாக இருக்கின்ற நடவடிக்கை களுக்கு நாம் பக்கபலமாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்திலே தான் திருமதி சோனியா காந்தி அவர்களுக்கு நாம் கரம் நீட்டி வலுவளித்தோம். பக்கத் துணையாக நின்றோம். இன்றைக்கும் பக்கத் துணையாக இருக்கிறோம்.
இத்தகைய ஆபத்துகள் சோனியாகாந்தி அவர்களை சூழுகின்ற நேரத்திலெல்லாம் முற்போக்கு சக்திகளுக்கு ஆதரவாக என்னென்ன செய்ய வேண்டுமோ அவை களையெல்லாம் தி.மு.கழகம் சார்பாக செய்வோம். இதில் எந்தவிதமான இருவேறு கருத்துக்களுக்கும் இடம் கிடையாது.
நேற்றைக்குக் கூட அம்மையார் அவர்கள் திருச்சி யில் பேசும்போது கூட்டணி மகிழ்ச்சிகரமாக இருக்கிறது என்று சொன்னார்கள். ஆம்! கூட்டணி மகிழ்ச்சிகரமாகத் தான் இருக்கிறது. தி.மு.கழகத்திற்கும் காங்கிரசுக்கும் உள்ள கூட்டணி மகிழ்ச்சிகரமாக இருக்கிறது. இது மகிழ்ச்சிகரமாக இருக்கக் கூடாது என்று எண்ணுகின்ற ஒரு சில சூழ்ச்சிக்காரர்களுக்கு - அவர்கள் அளித்த விளக்கம்.
தி.மு.க. - காங்கிரஸ் கூட்டணி என்று அவர்கள் பெயர் குறித்து விளக்கம் சொல்லாவிட்டாலும் கூட, எங்கள் கூட்டணி என்று அவர்கள் சொன்னதிலிருந்து இந்தக் கூட்டணி உதயமாகும்போது, சோனியா காந்தி அவர்களைப் பற்றி தமிழகத்திலே உள்ள எதிர்க்கட்சித் தலைவர் என்னென்ன சொன்னார் - பதிபக்தி இல்லாதவர், அதுமாத்திரமல்ல, கணவனுக்கே துரோகம் செய்தவர் என்றெல்லாம் சொன்னவர். பதிபக்தி இல்லாதவர் என்று யாரைச் சொன்னாரோ அப்படிப்பட்ட அம்மையார் அவர்கள் அதை பொருட்படுத்தாமல், அதைப் பற்றி கவலைப்படாமல் அரசியலிலே தனக்கு கிடைத்த பெரும் பொறுப்பை - பிரதமர் பதவியையும் கூட என் கண்ணெதிரே நாங்களெல்லாம் அமர்ந்திருக்கும் போதே என்னிடத்திலே சொல்லி விட்டு சென்றார்கள். ராஷ்டிரபதி பவனுக்குச் சென் றார்கள். அங்கு சென்று பிரதமர் பதவி எனக்கு வேண்டாம் என்று சொல்லி விட்டு - பிரதமராக பதவியில் இருக்க எல்லா தகுதியும் இருந்தும்கூட, உறுப்பினர்களின் ஆதரவு நாடாளு மன்றத்தில் இருந்தும் கூட, கட்சிகளினுடைய ஆதரவு இருந்தும் கூட, நாமெல்லாம் அம்மையாரை ஆதரித்தும் கூட எனக்கு வேண்டாம், நான் கட்சித் தலைவியாகவே இருந்து விட்டுப் போகிறேன் என்று அந்தப் பதவியை உதறி எறிந்தவர் சோனியா காந்தி அவர்கள்.
அந்த சோனியா காந்தி அவர்களைப் பார்த்து, பதிபக்தி இல்லாதவர் என்று சொன்னவர்கள், இன்றைக்கு சோனியா காந்தியோடு நாங்கள் அணி சேர்வோம், அணி சேர்ந்து தி.மு.கழக ஆட்சியை கவிழ்ப்போம் என்று கூறுகிறார்கள் என்றால், நாடு எப்படிப்பட்ட விசித் திரங்களையெல்லாம் சரித்திரத்திலே சந்திக்கிறது என்பதை தயவு செய்து நீங்கள் எண்ணிப்பார்க்க வேண்டும். இவர்களுடைய பேச்சை நம்புகின்ற அளவிற்கு - இவர்களுடைய நாணயத்தை ஏற்றுக் கொள்கின்ற அளவிற்கு டெல்லியிலே உள்ளவர்கள் ஒன்றும் கண்களை மூடிக் கொண்டிருப்பவர்கள் அல்ல; பச்சைக் குழந்தைகள் அல்ல. சரித்திரம் படித்தவர்கள்தான், வரலாறு தெரிந்தவர்கள்தான்.
இவர்கள் யார் என்பதை இன்று நேற்றல்ல, கடந்த காலத்திலே இவர்கள் அமைத்த கூட்டணிகளில் எப்படியெல்லாம் இருந்தார்கள் என்பதையெல்லாம் எண்ணாதவர்கள் அல்ல. திரும்பிப் பார்க்காதவர்கள் அல்ல. ஆகவே, தி.மு.கழகத்தை ஒழிப்பது ஒன்று தான் என்னுடைய முதல் வேலை என்று கருதிக் கொண்டு, யார் அடி எடுத்து வைத்தாலும் அந்த அடி நொறுங்கிப் போகின்ற அளவுக்கு (பலத்த கைதட்டல்) தி.மு.கழகம் வலுவானதாக இருக்கிறது. ஆக, யாரையும் ஏமாற்றி, பழையதை எல்லாம் மறந்து விடுங்கள் என்று மன்னிப்பு கேட்டு மண்டியிட்டு, எங்களை எதிர்க்கின்ற வாளாக, கேடயமாக அவர்களை ஆக்கிக் கொள்ளலாம் என்று இங்கே உள்ள எதிர்க்கட்சி கருதுமேயானால், அந்த எதிர்க்கட்சிக்கு லாலி பாடுகின்றவர்கள், துதி பாடுகின்றவர்கள், ஆலவட்டம் சுற்றுகின்றவர்கள் அவர்களுக்கு நடை பாவாடை விரிப்பவர்கள் யாராயினும் அவர்களெல்லாம் ஏமாந்தே போவார்கள்.
தி.மு.கழகத்தை தேர்தலில் தோற்கடிக்க
நினைப்பவர்கள் தோற்றுப்போவார்கள்
ஏனென்றால், நாங்கள் இந்த இயக்கத்தின் சார்பாக, சந்திக்காத கொடுமைகள் இல்லை. எங்களுக்கு கிடைக் காத ஏமாற்றங்கள் இல்லை. நாங்கள் பார்க்காத துரோகங்கள் இல்லை. நாங்கள் அனுபவிக்காத வேதனைகள் இல்லை. நாங்கள் செல்லாத சிறைச் சாலைகள் இல்லை, எங்களில் எத்தனை பேர் சித்திரவதைக்கு ஆளாகி சிறைச் சாலையிலே மாண் டிருக்கிறார்கள். சிட்டிபாபுவை இழந்ததை மறந்து விடமுடியுமா? தீக்குளித்து செத்துப் போனவர்கள் எல்லாம் எங்களுடைய மொழியைக் காப்பாற்றுவதற் காக, தமிழை காப்பாற்றுவதற்காக. தமிழுக்கு ஒரு தீங்கு என்றால் அதைத் தடுத்தே தீருவேன் என்பதற்காக தீக்குளித்து மாண்டவர்கள் எல்லாம் எங்கள் அணி வகுப்பிலே இருந்தவர்கள். இன்றைக்கும் அவர்களுடைய வாரிசுகள் இங்கே இருக்கின்றார்கள். ஆகவே திராவிட முன்னேற்றக் கழகம் என்பது ஒரு அரசியல் இயக்கம் என்றோ, இதை இந்த தேர்தலுக்குப் பிறகு அடுத்த தேர்தலில் தோற்கடித்து விடலாம் என்றோ யார் கங்கணம் கட்டினாலும் அவர்கள் தோற்றுத்தான் போவார்கள் (கைதட்டல்). எங்களை தேர்தலுக்குத் தேர்தல் சந்தித்து தோற்கடித்து விடலாம் என்று யாரும் கருத முடியாது. ஏனென்றால் இது ஒரு எந்தத் தலைமுறையும் சிந்தித்துப் பார்க்கின்ற ஒரு இயக்கம்.
இன்று காலையிலேயிருந்து நான் என்னுடைய மைத்துனர் தட்சிணாமூர்த்தி அவர்களுடைய இல்லத்தில் மறைந்து விட்ட என்னுடைய தங்கையின் திருவுருவப் படத்தை திறந்து வைத்து விட்டு வருகிற வழியிலே சந்தித்த இளம் பிள்ளைகள், சிறுமிகள், வாலிபர்கள், மாணவர் கள், வயதானவர்கள் இவர்க ளெல்லாம் தி.மு.கழகம் அவர்களுடைய செல்லப் பிள்ளை, அவர்களுடைய பிள்ளை என்ற அந்த உணர்வோடுதான் இருக்கிறார்கள்.
எனவே அரசியலிலே பதவிகள் வரலாம், போகலாம். ஆனால் நாம் பெற்றிருக்கின்ற சுயமரியாதையை என்றைக்கும் யாரும் இழந்துவிடத் தயாராக இருக்க மாட்டார்கள். அதுதான் பெரியார் எங்களுக்கு கற்றுக் கொடுத்த அந்த உணர்வு. அண்ணா எங்களுக்கு போதித்த அந்த உணர்வு சுயமரியாதைதான். தம்பி துரைமுருகன் குறிப்பிட்டதைப் போல, மற்றும் பாலு குறிப்பிட்டதைப் போல, மற்ற தம்பிமார்களெல்லாம் இங்கே எடுத்துக் காட்டியதைப் போல இந்த இயக்கத் தினுடைய வளர்ச்சி எங்கெங்கே எவ்வெப்பொழுது, நம்முடைய இசை முரசு நாகூர் அனீபா அந்தக் காலத்திலே பாடுவாரே, நாகூர் அனீபா அந்தக் காலத்திலே பாடியதையும் கேட்டிருக் கிறோம். இந்தக் காலத்திலே அனீபா குரலில் பலர் பாடியதையும் கேட்டிருக்கிறோம். திராவிட நாட்டைப் பற்றி அவர்கள் பாடியது - புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் பாடியது - வாழ்க வாழ்கவே வளமார் திராவிட நாடு என்ற அந்த வார்த்தைகள் நம்முடைய காதுகளில் இன்றைக்கும் ஒலித்துக் கொண்டிருக்கிறது.
ஆகவே, திராவிடம் - திராவிட இனம் - திராவிடக் கலாச்சாரம் இவைகளை காப்பாற்ற, அவைகளை எதிர்த்து வருகின்ற ஆரியமாயினும், ஆரியக் கலாச்சாரம் ஆயினும் அதற்கு இடம் தராமல் திராவிடக் கலாச் சாரத்தை வளர்ப்போம், அதை இந்தியா முழுமையும் வளர்ப்போம். இன்றைக்கு தமிழகத்திலே வளர்த்துக் கொண்டிருக்கின்ற இந்தக் கலாச்சாரம் - இந்த நாகரிகம் - இந்த வரலாறு எனக்குப் பிறகு - நான் மறைந்த பிறகு - நான் இருக்கும்போதே நடந்தாலும் நடக்காவிட்டாலும் என்னுடைய பிள்ளைகள், என்னுடைய பேரன் பேத்திகள் அவர்கள் காப்பாற்றுவார்கள் அந்தக் கலாச்சாரத்தை, அவர்கள் காப்பாற்ற வேண்டும் என்று கேட்டுக் கொண்டு அதற்கு எடுத்துக்காட்டாக - அந்த தைரியத்தை எனக்குத் தருகின்ற வகையிலே அமைந்துள்ள இந்த மாபெரும் மக்கள் சமுத்திரத்தை இங்கே உருவாக்கிக் காட்டிய நாகை மாவட்டத் தோழர்கள் அனை வருக்கும் நன்றியைத் தெரிவித்து விடைபெறுகிறேன். (பலத்த கைதட்டல்)
இவ்வாறு முதல்வர் கலைஞர் உரை ஆற்றினார்.
**************************************************************************************
வாழ்க திராவிடம்! வளர்க இனவுணர்வு!!
நாகப்பட்டினத்தில் நேற்று (10.10.10) நடைபெற்ற மாபெரும் பொதுக்கூட்டக் கடலில் தி.மு.க. தலை வரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மானமிகு மாண்புமிகு கலைஞர் அவர்களின் உரையானது - வெறும் அரசியல் சம்பந்தப்பட்டதல்ல - மாறாக வரலாற்றுக் கருவை உள்ளடக்கிய சங்கநாதமாகும்.
திராவிட இயக்கம் என்றால் அதனைக் கேலி செய்யும், கொச்சைப்படுத்தும் பார்ப்பனர்களின் வட்டாரம், அதற்குத் துணைபோகும் விபீடண வட்டாரங்களுக்குச் சவுக்கடி கொடுத்தது போன்ற தாகும். இன்னொரு வகையில் சொல்லப்போனால், நடுநிலையாளர்களைச் சிந்திக்கச் செய்யும் சூரணம் என்றும்கூடச் சொல்லலாம்.
தி.மு.க. என்றால், அது வெறும் அரசியல் கட்சியல்ல - தமக்கென்று தனித்தன்மையான சமுதாயக் கொள்கைகளைக் கொண்ட அரசியல் கட்சியாகும்.
இந்த வகையில் தி.மு.க. மட்டுமே தனித்தன் மையாக ஒளிர்கிறது. தி.மு.க.வில் பார்ப்பனர்கள் உறுப்பினர்களாக இருந்தாலும், இதுவரை நடைபெற்ற எந்தத் தேர்தலிலும் பார்ப்பனர்களை வேட்பாளராக நிறுத்தவில்லை என்பது அடிகோடிட்டுக் காட்டத் தகுந்ததாகும்.
அண்ணா அவர்கள் முதலமைச்சராகப் பொறுப்பேற்ற நேரத்தில், செய்தியாளர்கள் ஒரு கேள்வியை கூர்மையாகக் கேட்டார்கள்.
தங்கள் அமைச்சரவையில் பிராமணர்களுக்கு இடம் உண்டா என்பதுதான் அந்தக் கேள்வியாகும்; அண்ணா அவர்கள் யாரும் சற்றும் தயங்காமல் எங்களை நம்பி அவர்கள் வரவில்லையே! என்று அட்டகாசமாகப் பதில் சொல்லி அவர்களின் வாயை அடைத்தார்.
ஆட்சிக்கு வந்த கட்சிகள் எத்தனையோ எத்தனையோ சாதனைகளைச் செய்திருக்கலாம். திட்டங்களைச் செயல்படுத்தியிருக்கலாம். ஆனால், மற்ற ஆட்சிகளால், கட்சிகளால் நினைத்தே பார்க்க முடியாத சாதனைகளைச் செய்து முடித்திருப்பது தி.மு.க. ஆட்சியே!
இந்த ஆட்சியே தந்தை பெரியாருக்குக் காணிக்கையாக்கப்பட்டதுதான் என்று முதலமைச்சர் அண்ணா அவர்கள் அறிவித்ததும், இது சூத்திரர்களுக்காகச் சூத்திரர்களால் ஆளப்படும் அரசு என்று கலைஞர் அவர்கள் கணீர் என்று பிரகடனம் செய்ததும் திராவிட இனக் கண் ணோட்டத்தில் கூறப்பட்டவைதான்.
சுயமரியாதைத் திருமணச் சட்டம், சென்னை மாநிலத்துக்குத் தமிழ்நாடு என்று பெயர் சூட்டல், இந்திக்குத் தமிழ்நாட்டில் வேலையில்லை - இரு மொழிகள்தான் என்ற சட்டம், அனைத்து ஜாதி யினருக்கும் அர்ச்சகர் சட்டம், தைமுதல் நாள்தான் தமிழ்ப் புத்தாண்டு என்ற சட்டம், தமிழ் மொழியைச் செம்மொழியாக அறிவித்தது - பெரியார் நினைவுச் சமத்துவப் புரங்கள் உருவாக்கம் என்று ஒரு பட்டிலை எடுத்துக்கொண்டால், இவற்றை அசல் திராவிட இயக்கத்தின் அரசியல் வடிவமான தி.மு.க.வைத் தவிர, வேறு யாராலும் சிந்தித்துப் பார்க்கப்படவே முடியாது என்றால், செயல் படுத்துவதுபற்றிய கேள்வியே எழவில்லை.
இந்த வரலாற்று உண்மைகள் தமிழ்நாட்டின் இளைஞர்கள் இதயத்தில் பசுமரத்தாணிபோல பதிவு செய்யப்படவேண்டும். இந்த உணர்வு மங்கடிக்கப்பட்டால் திராவிடத்தின் எதிர் அமைப்பான ஆரியம் மீண்டும் மனுதர்மக் கொடியை ஏற்ற வெகுநேரம் பிடிக்காது.
தி.மு.க. ஆட்சியைப் பார்ப்பனர்கள் எதிர்ப்பது - விஷமத்தனமாகச் செய்தி வெளியிடுவது எல்லாம் ஆரியர் - திராவிடர் என்ற இனப் போராட்டத்தின் மய்யப் புள்ளியை மய்யமாக வைத்துத்தான்.
ஒரு செய்திக்குத் தலைப்பைப் போடுவதில்கூட இந்த உண்மையைத் தெரிந்துகொள்ளலாம்.
குன்னூரில் மத்திய அமைச்சர் மாண்புமிகு ஆ. இராசா அவர்களின் சீரிய முயற்சியால் வெகுசிறப்பாக நடத்தப்பட்ட பயிற்சி முகாம்கள் நாடெங்கும் விரிவாக்கப்படவேண்டும்.
திராவிடத்தைக் கொச்சைப்படுத்தி தமிழ் உணர்வை வளர்ப்பதுபோல சிலர் பாசாங்கு செய்யக்கூடும்; இது இன்னொரு வகையில் பார்ப்பனர்களை ஊடுருவல் செய்வதற்கும், ஆரிய வல்லாண்மையை மீண்டும் நிலை நிறுத்துவதற்கும் மேற்கொள்ளப்படும் வீடண சூழ்ச்சி என்பதை நம் மக்கள் உணர்வார்களாக!
கலைஞர் அவர்களின் நாகை உரையைத் துண்டறிக்கையாக வெளியிடும் ஒரு முயற்சியை தி.மு.க. தலைமை நிலையம் மேற்கொண்டால் மிகுந்த பயன் அளிக்கும்!
வாழ்க திராவிடம்! வளர்க இனவுணர்வு!!
-------------------- ”விடுதலை” தலையங்கம் 11-10-2010
0 comments:
Post a Comment