தீட்சிதர்களின் ஆதிக்கத்திலிருந்த சிதம்பரம் கோயிலை அரசு கட்டுப்பாட்டில் கொண்டு வந்து சாதனை படைத்தவர் கலைஞர் சீர்காழி மண்டல மாநாட்டில் தமிழர் தலைவர் பேச்சு
தீட்சிதர்களின் ஆதிக்கத்தில் இருந்த சிதம்பரம் கோயிலை இந்து அறநிலையத் துறையின் கீழ் கொண்டு வந்து சாதனை படைத்தவர் தமிழக முதல்வர் கலைஞர் என்று திராவிடர் கழக தலைவர், தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் கூறி விளக்கவுரையாற்றினார்.
கீழ்காழியில் 27.9.2010 அன்று நடைபெற்ற மண்டல மாநாட்டில் திராவிடர் கழக தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் ஆற்றிய உரை வருமாறு:
பல கிராமங்களுக்கு வந்திருக்கின்றேன்
ஒரு நீண்ட இடைவெளிக்குப் பின்னாலே சீர்காழியிலே உங்களை எல்லாம் சந்திப்பதிலே மிகுந்த மகிழ்ச்சி அடைவதை நான் மீண்டும் தெரிவித்துக் கொள்கின்றேன். அண்ணாமலைப் பல்கலைக் கழகத்திலே நான் மாணவனாக இருந்தபொழுது இந்தப் பகுதிகளுக்கெல்லாம் அடிக்கடி அழைக்கப்பட்டு வந்திருக்கின்றேன். பல கிராமங்களுக்கு வந்திருக்கின்றேன். இதில் சில கிராமங்களுக்கு நடந்தும் வந்திருக்கின்றேன்.
இன்னும் சில கிராமங்களுக்கு சைக்கிளின் முன் பகுதியிலே அமரவைத்து அல்லது பின்கேரியர் பகுதியிலே என்னை அமர வைத்து தோழர்கள் கிராமங்களுக்கு பிரச்சாரத்திற்காக அழைத்துச் சென்றிருக்கின்றார்கள். அது வள்ளுவக் குடியானாலும், அது பனங்காத்த குடியானாலும், இன்னும் பல்வேறு பகுதிகள் ஆனாலும் எல்லா பகுதிகளுக்கும் இடையறாது போய் பார்க்கக்கூடிய அளவிற்கு வாய்ப்பைப் பெற்றவன். ஒவ்வொரு வாரமும் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்திலே இருக்கிறபொழுது வாரவிடுமுறை விடுவார்கள். அந்த விடுமுறைகளில் இந்த வட்டாரத்துத் தோழர்களும் என்னை அழைத்து வருவார்கள். அதிக விளம்பரம் எல்லாம் கூட கிடையாது. தெருமுனைப் பிரச்சாரங்கள் போல கூட்டம் இருக்கும். திராவிடர் விவசாய சங்கம்-அய்யா பக்கிரிசாமி அவர்களைப் பற்றிச்சொன்னார்கள்.
தந்தை பெரியார் காலத்தில் திராவிட விவசாய தொழிலாளர் சங்கம் சிறப்பாக இயங்கிய நிலையிலே பல்வேறு நிலைகளிலே இந்த இயக்கக் கொள்கைகள் பரப்பப்பட்டன. இடையறாது கிராமம் கிராமமாகப் பிரச்சாரம் செய்யக்கூடிய வாய்ப்பினைப் பெற்ற எனக்கு ஒரு இடைவெளி இருந்ததே என்று மனதிலே சங்கடமாக இருந்தது.
மாபெரும் விழாவாக...
ஆனால் அந்தச் சங்கடமெல்லாம் இன்றைக்கு நீங்கக் கூடிய அளவிற்கு ஒரு பெரிய திருவிழாவாக. ஒரு அறிவு பூர்மான விழாவாக, மூட நம்பிக்கை ஒழிப்புப் பேரணி மிகச்சிறப்பாக நடைபெறக் கூடிய அளவிலே, இப்படிப்பட்ட கொள்கைகளை சொல்லக்கூடிய ஒரு அரசு இந்த நாட்டிலே இருக்கிறது.
இந்த ஆட்சியின் அமைச்சர்கள் கொள்கை விளக்கக் கர்த்தாக்களாக இருக்கிறார்கள் என்று சொல்லக்கூடிய அளவிற்கு அறிவு ஆசான் தலைவர் தந்தை பெரியார் அவர்கள் பெற்றிருக்கின்றார்.
எடைக்கு எடை நாணயம் கொடுத்தீர்கள்
நீங்கள் எனக்கு எடைக்கு எடை நாணயம் கொடுத்தீர்கள். அதற்காக தலைவணங்கி நன்றி செலுத்துகின்ற நேரத்திலே, அந்த நாணயம் தந்தை பெரியார் அவர்களாலே, அன்னை மணியம்மையார் அவர்களாலே உருவாக்கப்பட்டு ஆதரவற்ற குழந்தைகள் அனாதை என்ற சொல்லை நாங்கள் எப்பொழுதும் சொல்லுவதில்லை.
நாகம்மையார் குழந்தைகள் காப்பகம்
திருச்சியிலே அய்யா அவர்களாலே உருவாக்கப்பட்ட குழந்தைகள் இல்லம் 50 ஆண்டுகள் கடந்து பொன்விழா கொண்டாடியிருக்கின்றோம்.
திருச்சி நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு நீங்கள் அன்போடு கொடுத்த நாணயம் அதனுடைய வளர்ச்சிக்கு சேர்க்கப்படும் என்பதை மகிழ்ச்சியாக உங்களுக்கு எடுத்துச்சொல்லுகின்றோம். அதோடு ஏழு தீர்மானங்கள் முத்தாய்ப்புத் தீர்மானங்களாக இங்கே நிறைவேற்றப்பட்டிருக்கின்றன.
சீர்காழி ஜெகதீசன்
அது மட்டுமல்ல, பகுத்தறிவுச் சுடரை ஏந்துவீர் என்ற நல்ல நூலை நம்முடைய சீர்காழி ஜெகதீசன் அவர்கள் எழுதியிருக்கின்றார். அவர் நல்ல கவிஞராகவும் இருக்கிறார் என்பது எனக்குத் தெரிய வந்தது.
அவர் அடிக்கடி கடிதம் எழுதுவார். அவர் அரசு ஊழியராக இருந்த காலகட்டத்திலேயிருந்து பகுத்தறிவாளராக இருந்தவர். அவர் மாற்றலாகி எங்கு போனாலும் அங்கு அவர் சிறப்பாகத் தோழர்களை ஒருங்கிணைத்து நடத்துவார்.
எனவே அந்தக் காலகட்டம் வரையிலே மிகத் தெளிவாகத் தெரியும். அதைத்தான் பேராசிரியர் பழமலய் அவர்கள் மிக அழகாகச் சொன்னார்கள். ஒரு ஆய்வுரையாக சுருக்கமாகப் பேசினாலும் கூட, இன்னும் விளக்கமாக அவர் பேசுவார். ஆய்வுரை போல அவர் எழுதிய நூலிலே கருத்துகள் இருக்கின்றன.
இதைப் பற்றி நான் பின்னாலே சொல்லுகின்றேன். நேரம் அதிகமாகிவிட்ட காரணத்தாலே உங்களுக்கு ஒரு வேண்டுகோள்.
பெரியாரின் அறிவார்ந்த நூல்கள்
தந்தை பெரியார் அவர்கள் எழுதிய புத்தகங்கள் இங்கே கொண்டு வரப்பட்டிருக்கின்றன. அறி வார்ந்த நூல்கள். குடிஅரசு ஏடுதான் தமிழ் நாட்டின் சமூகப் பொருளாதார அரசியல் பிரச்சினைகளை எல்லாம் 80 ஆண்டுகளுக்கு முன்னாலே இருந்த செய்திகளை எல்லாம் தெரிந்து கொள்ள வேண்டுமானால் நாங்கள் வெளியிட்டிருக்கின்ற குடிஅரசு தொகுதிகளை வாங்கிப் பார்த்தால் தெரியும். இதுவரையிலே நாங்கள் 19 குடிஅரசு தொகுதிநூல்களை வெளியிட்டிருக்கின்றோம்.
புத்தகங்களை வாங்கிப் பரப்புங்கள்
அதுபோல தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, பெருந்தலைவர் காமராஜருடைய கருத்துகளை உள்ளடக்கிய தகுதி, திறமை, புரட்டு போன்றவற்றைப் பற்றிய நூல்கள். அது போலவே பொற்கால ஆட்சியை நடத்திக்கொண்டு வருகின்ற 87 வயதானாலும் இளைஞராக இன்றைக்கு செயல்பட்டுக் கொண்டிருக்கின்ற முதல்வர் கலைஞர் அவர்களுடைய கருத்துகள் போன்ற எல்லா நூல்களும் இங்கேயிருக்கின்றன.
நீங்களும் நீண்ட நேரம் காத்திருக்கின்றீர்கள். இந்தநேரத்தில் அதிக நேரத்தை நாம் பயன்படுத்த முடியாது என்ற காரணத்தினாலே அந்தப் புத்தகங்களை நீங்கள் படியுங்கள். பிறருக்கும் கொடுக்க வேண்டும், பரப்ப வேண்டும் என்று அன்போடு உங்களை நாங்கள் வேண்டிக்கொள் கின்றோம்.
அருமை நண்பர்களே, தந்தை பெரியார் அவர்கள் 132ஆம் ஆண்டு பிறந்தநாள் விழா இவ்வளவு சிறப்பாக நடைபெறுகிறது. இதிலே அவர்கள் பெற்றிருக்கிற வெற்றிகளைப் பற்றி எனக்கு முன்னாலே பேசிய அத்துணை பேரும் மாண்புமிகு அமைச்சர் உள்பட, எல்லோரும் ஒவ்வொரு கோணத்திலும் எடுத்துச்சொன்னார்கள். மூடநம்பிக்கை ஒழிப்பதிலே, மனித உரிமைகளைப் பெறுவதிலே தந்தை பெரியார் அவர்கள் தோற்றிய சுயமரியாதை இயக்கம் அதன் இன்றைய வடிவமான திராவிடர் கழகம் எப்படி எல்லாம் இந்தப் பணியை செய்து கொண்டிருக்கிறது!
இரட்டைக் குழல் துப்பாக்கி
அரசியல் துறையிலே திராவிட முன்னேற்றக் கழகம் எப்படி இரட்டைக் குழல் துப்பாக்கியாக இருந்து நடத்திக்கொண்டு வருகின்றது என்பதை உங்களுக்கு மிகத் தெளிவாக எடுத்துச் சொன்னார்கள்.
நான் சுருக்கமாக உங்களுக்குச் சொல்ல விழைகிறேன். இந்த சீர்காழிக்கு வரும்பொழுது நந்தன் கதை நினைவுக்கு வரும். நந்தன் என்பவன் இருந்தானா? இல்லையா? என்பது பற்றி ஆராய்ச்சி இல்லை. இருந்ததாகவே வாதத்திற்கு வைத்துக் கொண்டாலும் நந்தனார் சரித்திரத்திலே அவரை எப்படி எவ்வளவு கொடுமையாக நடத்தியது பார்ப்பனீயம்?
உழைப்பின் உருவங்கள்
ஜாதி தத்துவம், வர்ணாசிரம தர்மம். நம்முடைய உடன் பிறந்த சகோதரர்களுக்குக் கூட உழைக்கக் கூடிய பாடுபடக்கூடிய, பாட்டாளி மக்களாக இருக்கக்கூடிய, சமுதாயத்தைச் சார்ந்தவர்களை எல்லாம் அவர்கள் வயலிலே இறங்கி நாற்று நட்டால்தான் இவர்கள் சோற்றிலே கைவைக்க முடியும் என்று சொல்லக்கூடிய அளவிற்கு உழைப்பின் உருவங்களாக இருக்கக்கூடிய நம்முடைய சகோதரர்களை எப்படி நடத்தினார்கள்?
நம்முடைய சகோதரர்களை எவ்வளவு கேவலப்படுத்தி வைத்திருந்தார்கள் என்பதற்கு அடையாளம் எவ்வளவு பெரிய பக்தனாக இருந்தால் கூட, நாத்திகனாக இருக்க வேண்டிய அவசிய மில்லை. கடவுளை மறுக்கிறவனுக்காக தண்டனை என்று சொன்னால் அதில் பொருள் இருக்கிறது. ஆனால் கடவுள் நம்பிக்கை பக்திக்காகவே வைத்திருக் கிறார்களே, அந்த நந்தன் சரித்திரத்தைக் கொஞ்சம் எண்ணிப்பாருங்கள்.
பக்கத்திலே இருக்கிறது சிதம்பரம். இப்பொழுது ரயிலில் ரொம்ப சீக்கிரம் போகலாம். ஆனால் அன்றைக்கெல்லாம் அவ்வளவு சீக்கிரம் போக முடியாது.
தில்லைக்குப் போவது ஏதோ வானவெளிப் பயணம் மாதிரி ஒரு மிகப்பெரிய இலக்கு அந்தக் காலத்தில். ஆனால் இன்றைக்கு இந்த மண்டலத்திற்குப் போகலாமா? அந்த மண்டலத்திற்குப் போகலாமா என்று ஆராய்ந்து கொண்டிருக் கிறார்கள். தில்லை சென்று நடராஜரை தரிசனம் செய்ய வேண்டுமென்பது கதைப்படி நந்தனுக்கிருந்த மிகப்பெரிய ஆர்வம்.
தரிசனம் செய்ய தீட்சிதர்கள், அய்யர்கள் விடவில்லை. கோயிலுக்கு நிலம் எப்படி வந்தது? நம்முடைய மன்னர்கள் செய்த வேலை. மன்னர்கள் சதுர்வேதி மங்கலங்களாகக் கொடுத்தார்கள். இறையிலி நிலங்களாகக் கொடுத்தார்கள். மன்னர்கள் நிலங்களைப் பார்ப்பனர்களுக்குக் கொடுத்து வரிகூட கட்ட வேண்டாம் என்று அப்படியே கொடுத்தார்கள்.
உத்தமதானபுரங்கள்
அப்படியெல்லாம் உருவாகித்தான் இன்றைக்கு உத்தமதானபுரங்கள் இருக்கின்றன. சதுர்வேதி மங்கலங்கள் இருக்கின்றன. நந்தன் தில்லைக்குச் சென்று நடராஜரை வழிபடவேண்டும் என்று சொல்லுகின்றார். அவரை அனுப்பக்கூடாது என்பதற்காக ஒரு நிபந்தனை போடுகிறார் அவருடைய எஜமானன்.
அவ்வளவு வயலிலும் உள்ள நெல்லை விளைய வைத்து விட்டுச்செல்ல வேண்டும் என்று சொல்லுகின்றார். பார்ப்பனர்கள் கல் நெஞ்சக்காரர்கள் என்பதற்கு இதைவிட சிறந்த உதாரணங்கள் வேறு கிடையாது.
கல்நெஞ்சப் பார்ப்பான்
அன்றைக்கே எழுதி வைத்துவிட்டார்கள்-காகத்தையும் படைத்து கல்நெஞ்சப் பார்ப்பானையும் ஏன் படைத்தாய்? என்று. படைத்தானா? இல்லையா? என்பது அப்புறம்.
நந்தன் கவலையோடு படுக்கச்செல்கின்றார். கனவில் நடராஜரை வேண்டிக்கொள்கின்றான். பொழுது விடிந்து பார்த்தால் அவ்வளவு நிலமும் விளைந்து போய்விட்டது.
நந்தன் சிதம்பரத்திற்குப் போய் அங்கு நடராஜர் பெருமானை தரிசிப்பதுதான் அவருடைய நோக்கம். கடவுள் பக்தியைப் பற்றி நினைக்கின்ற பக்தர்கள் எண்ணிப் பார்க்க வேண்டும்.
ஏன் தந்தை பெரியார் கடவுள் இல்லை என்று சொன்னார்? ஏன் கடவுள் மறுப்பாளர்கள் வந்தார்கள் என்பதற்கு இந்த உதாரணம் ஒன்றே போதும்.
முதல்வர் கலைஞரின் சாதனை
தில்லைவாழ் அந்தணர்கள், தீட்சிதர்கள் சிதம்பரம் கோயில் எங்களுக்கே உரியது என்று ஆணவத்தோடு சொன்னார்கள்.
காலம் காலமாக இருந்த ஆணவத்தை, அந்த தீட்சிதர்களின் ஆதிக்கத்தை முறித்து அது இந்து அறநிலையப் பாதுகாப்புத்துறைக்கு உரியதுதான் என்று ஆக்கிய பெருமை வரலாற்றிலே முதல்வர் கலைஞர் அவர்களுடைய சாதனைகளிலே தலை சிறந்த சாதனை.
இன்றைக்கும் உச்சநீதிமன்றத்திற்குப் போய் அல்லாடிக் கொண்டிருக்கின்றான். ஆனால் நடராஜர் பெருமான் காலைத் தூக்கியவர் அப்படியே நிற்கிறார். இன்னும் அவர் காலை கீழேகூட போடவில்லை. கொடுமைக்கார தீட்சிதர்கள்
தீட்சிதர்கள் எவ்வளவு கொடுமையானவர்கள்? ஜாதியை சொல்லுவதற்காக மன்னிக்க வேண்டும். நீ பறையன், நீ கீழ்ஜாதிக்காரன், நீ நடராஜரை தரிசிக்க வேண்டுமானால் என்ன செய்ய வேண்டும்?
நீ உயர்ந்த ஜாதி ஆனால்தான் கடவுளை வணங்கமுடியும். அப்பொழுதுதான் கடவுளைப் பார்க்க முடியும் என்று வைத்திருக்கின்றான். மனுதர்மத்தில் இதைத்தான் எழுதி வைத்திருக்கின்றான். சூத்திரனுக்கு கடவுளைத் தொழ உரிமையே இல்லை என்று எழுதி வைத்திருக்கின்றான்.
இதுதான் மனுதர்மத்தில் மிகத் தெளிவாக இருக்கின்ற வாசகம். அதனால்தான் சம்பூகன் கடவுளைப் பார்க்கத் தவம் செய்தான் என்று தெரிந்தவுடன் அவனை வாளால் வெட்டிக் கொன்றான் என்பது கதை. கடவுளைக் காண என்ன செய்ய வேண்டும்? நந்தா தீக்குளித்துவிட்டு வா என்று சொன்னார்கள்.
நீ முதலில் குளித்துக்காட்டப்பா!
நந்தன் தீக்குளித்தார். தீயிலிருந்து எழுந்து வந்தார் என்று சொன்னார்கள். தீயிலிருந்து எழுந்து வந்தாரா? என்று பகுத்தறிவு உள்ள எல்லோரும் யோசனை செய்வார்கள். இன்றைக்கு எப்பேர்ப்பட்ட பக்தனையும் கொஞ்சம் தீக்குளித்துவிட்டு வா என்று சொன்னால் சரிங்க என்று ஷவரில் குளிக்கிறமாதிரி குளித்து வருகிறேன் என்று யாரும் சொல்லமாட்டான். முதலில் நீ குளித்துக்காட்டப்பா அப்புறம் நான் வருகிறேன் என்று சொல்லக்கூடிய அளவிற்கு சிந்திக்கின்ற யுகம் இந்த யுகம்.
நந்தன் நடராஜர் பெருமானை எப்படியும் தரிசித்து விட வேண்டும் என்ற மகிழ்ச்சியோடு போகிறார். நந்தன் வெளியேதான் நிற்கிறார் அப்பொழுதுகூட. நந்தன் நிலங்களை விளைய வைத்துவிட்டுச் சென்றார். அடுத்து தீக்குளித்தார். எல்லாம் தடை ஓட்டத்தில் தாண்டித் தாண்டி வந்துவிட்டார்.
கருணையே வடிவான நடராஜ பெருமான் என்ன செய்தார்? தன்னுடைய பக்தன் எவ்வளவு கஷ்டப்பட்டு வந்திருக்கின்றான் என்று சொல்லி கதவைத் திற உடனே வா என்று சொன்னாரா? சொல்லவில்லை. அவர் அப்படியே நின்று கொண்டிருக்கின்றார்.
நந்தியே, சற்று விலகியிரும் பிள்ளாய்!
நந்தி மறைத்துக்கொண்டிருக்கிறது. சிவபெருமான் என்ன சொல்லியிருக்க வேண்டும்? பக்தா உள்ளே வா. நீதான் மேல்ஜாதிக்காரனாக தீட்சிதர் களுக்கு சொந்தக்காரனாக ஆகிவிட்டாயே. ஆகவே பரவாயில்லை உள்ளே வரலாம் என்று சொல்லி கட்டி அணைத்தார் என்கிற கதை இருக்கிறதா? இல்லை.
மாறாக உங்களுக்குத்தெரியும். நடராஜர் நந்தியே சற்று விலகியிரும் பிள்ளாய் என்று கதைப்படி சொன்னாராம். அதனால் வெளியவே நிற்கிறார் நந்தனார். உயர்ஜாதி ஆனபிற்பாடும் கூட.
சிவபெருமான் சொன்னவுடனே நந்தி விலகுகிறது. அங்கிருந்துதான் கும்பிட்டார். உடனே தேவர்கள் மோட்சத்திற்கு அழைத்துக் கொண்டார்கள்.
நந்தன் நெருப்பில் விழுந்தவுடனே அவர் மோட்சத்திற்குத்தான் போயிருப்பார். அதில் ஒன்றும் சந்தேகமே இல்லை.
--------------தொடரும்----”விடுதலை”5-10-2010
நடராஜர் செய்யாத காரியத்தை நாடாளும் முதலமைச்சர் கலைஞர் செய்தார் சீர்காழியில் தமிழர் தலைவர் கொள்கை முழக்கம்!
கடவுள்நடராஜன் செய்யாத காரியத்தை நாடாளும் முதலமைச்சர் கலைஞர் செய்தார் என்று சீர்காழி பொதுக்கூட்டத்தில் கலைஞர்அவர்களைப் பாராட்டி தமிழர்தலைவர் கி.வீரமணி அவர்கள் கூறினார்.
சீர்காழியில் 27.9.2010 அன்று நடைபெற்ற மண்டல மாநாட்டில் திராவிடர் கழக தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் ஆற்றிய உரையின் நேற்றைய தொடர்ச்சி வருமாறு:
தலையாய வெற்றி
இன்றைக்கு அறிவு ஆசான் தலைவர் தந்தை பெரியார் 132ஆம் ஆண்டு பிறந்தநாள் விழாவை நாம் கொண்டாடுகிறோம் என்றால் அவர் பெற்ற வெற்றிகளில் எப்பேர்ப்பட்ட வெற்றி- தலையாய வெற்றி. நந்தியே விலகி இரு என்று நடராஜர் நந்தியைப் பார்த்து சொன்னாரே தவிர, நந்தனே உள்ளே வா என்று அழைக்கவில்லை. ஆனால் இன்றைக்கு அய்ந்தாவது முறையாக கலைஞர் அவர்கள் முதலமைச்சராக ஆகி பொற்கால ஆட்சியை நடத்திக்கொண்டிருக்கின்றார்.
அனைத்து ஜாதியினர் அர்ச்சகர்
தந்தை பெரியார் நெஞ்சில் தைத்த முள்ளை நான் அகற்றுவேன் என்று சொல்லி அனைத்து ஜாதியினரும், அர்ச்சகர், ஆதிதிராவிடர் உள்பட என்று ஆக்கி, அந்த சட்டத்தைப் போட்டதினாலே இன்றைக்கு ஆதிதிராவிடர் எங்கே போயிருக்கிறார் என்றால் எல்லா ஜாதியிலிருந்தும் போயிருக்கிறார்கள்.
தாழ்த்தப்பட்ட சகோதரர் கடவுளுக்குப் பக்கத்திலே நின்று மணியடிக்கப் போகிறார். அய்யய்யோ, கடவுள் தீட்டாகி விடுமே என்று பார்ப்பனர்கள் உச்ச நீதிமன்றத்திற்கு ஓடியிருக் கின்றார்கள். உச்சநீதிமன்றத்தையும் அவர்கள் கர்ப்பக்கிரகம் மாதிரி நினைத்துக்கொண்டிருக் கின்றார்கள்.
நடராஜர் செய்யாததை கலைஞர் செய்தார்
கடவுள் நடராஜர் செய்ய முடியாததை பெரியாரின் தொண்டர் கலைஞர் செய்து காட்டினார் என்பதற்கு அடையாளம் என்ன? நந்தியே விலகியிரு என்று சொல்லவில்லை. நந்தனே உள்ளே வா என்று சொன்னார்கள். நீயும் மனிதன், நீ மண்ணல்ல. உனக்கும் அந்த உரிமை இருக்கிறது. நீதான் மிக முக்கியமானவன் என்று சொல்லக்கூடிய அளவுக்கு வந்தார் என்றால் பெரியாரின் பெருவெற்றிகளுக்கு இதைவிட மிகப்பெரிய எடுத்துக்காட்டு வேறு இருக்க முடியாது. அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர்.
அதற்கு முன்பு ஆதிதிராவிடர் அய்கோர்ட் ஜட்ஜ் ஆகலாம். ஆதிதிராவிடர் அமைச்சராகி யிருக்கி றார்கள். அவர்கள் சிறப்பாக செயல்படுகிறார்கள்.
ஆதிதிராவிடர் அர்ச்சகர் ஆக முடியாதா?
ஆதிதிராவிடர் அர்ச்சகர் ஆக முடியாது என்று சொன்னால் என்ன அர்த்தம்? அதற்கு என்ன காரணம் சொல்லுகிறார்கள்? ஜாதி. அந்த ஜாதியை வேரடி மண்ணோடு பெயர்க்க வேண்டும் என்று சொல்லுகின்ற இயக்கம்தான் தந்தை பெரியாருடைய சுயமரியாதை இயக்கம். இந்தக் கொள்கை ஏன் பரவ வேண்டும்? ஒரு பக்கத்தில் சமுதாயத்தின் பங்குகள். இன்னொரு பக்கம் அந்த சமுதாயத்தின் தாக்கம், பிரதிபலிப்பு. இரட்டைகுழல் துப்பாக்கி யான திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சியிலே இருக்கின்ற காரணத்தினாலே ஈரோட்டு குரு குலத்திலே கலைஞர் அவர்கள் சிறப்பாக பயிற்சி பெற்ற காரணத்தாலே சொன்னார்.
கலைஞரைப் பாராட்டினோம்
முதல் வேலை, என்னுடைய வேலை என்னவென்று சொன்னால் பெரியார் நெஞ்சில் தைத்த முள்ளை நான் அகற்றுவேன் என்று சொன்னார். அதற்காகவே அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் என்ற சட்டத்தைக் கொண்டு வந்தார். நாம் பாராட்டினோம். நீதிமன்றங்களில் சில தடைகள் இருக்கும். ஆனால் தடைக்கற்கள் ஆயிரம் உண்டென்றாலும், அதைத் தாங்கும் தடந்தோள்கள் நம்முடைய தோள்கள் என்று சொல்லக்கூடிய அளவிற்கு இன்றைக்கு அந்த வாய்ப்பை நாம் பெற்றிருக்கின்றோம்.
63 ஆண்டு சுதந்திரத்திற்குப் பிறகு...
இரண்டு நாள்களுக்கு முன்பு ஒரு செய்தி. ரொம்ப வேடிக்கையான செய்தி. இன்னமும் சுதந்திரம் அடைந்து 63 ஆண்டுகள் ஆகிவிட்டது, 1947-லே இருந்து. இன்றைக்கு 2010ஆம் ஆண்டு. நாம் வருடா வருடம் சுதந்திரதினம் கொண்டாடு கின்றோம். மிட்டாய் கொடுக்கிறோம், கொடி யேற்றுகிறோம், எல்லாம் செய்கிறோம். தீண்டாமை ஒழிப்பு பேசுகிறார்கள். காந்தி பிறந்தநாளில் கடைப் பிடிக்கிறார்கள்.
மத்திய பிரதேசத்தில் பி.ஜே.பி. ஆட்சி
வடநாட்டிலே மத்திய பிரதேசத்திலே பி.ஜே.பி ஆட்சி நடைபெறுகிறது. பி.ஜே.பி. ஆளுகிற மாநிலத்திலே ரொம்ப தூரம் போக வேண்டாம். ரொம்ப தூரம் போக வேண்டும் என்றால் நீங்கள் போபால் வழியாகத்தான் போக வேண்டும். போபாலை யாரும் மறக்கமாட்டார்கள். ஏனென்றால் விஷவாயுமூலம் இந்த உலகமே அறிந்த நாடு.
அதைவிட கொடுமையான விஷவாயு செய்தியை நான் சொல்லுகின்றேன். அந்த விஷவாயு ஒரேயடியாக ஆளை சாகடித்துவிட்டால் தொல்லையில்லாமல் போகும்.
ஒரு நாயை சத்திரியர் வளர்த்தார். பிரம்மாவினுடைய முகத்திலிருந்து பிறந்தவன் பிராமணன், தோளிலிருந்து பிறந்தவன் சத்திரியன், தொடையி லிருந்து பிறந்தவன் வைசியன். காலிலிருந்து பிறந்தவர் சூத்திரன். பஞ்சமர் எங்கேயிருந்து பிறந்தார் என்று அய்யா அவர்களைக் கேட்டார்கள்.
அய்யா பளிச்சென்று பதில் சொன்னார். இது போன்ற செய்திகள் இளைய தலைமுறையின ருக்குத் தெரிய வேண்டும். ஏனென்றால் அந்தக் கொடுமைகள் எல்லாம் இன்றைக்கு இல்லை. கல்யாணம் இதைத்தான் சொன்னார்.
பாலம் கட்டியவர் யார் என்று பார்ப்பார்களா?
நல்ல பெரிய பெரிய பாலமாக நீங்கள் கட்டியிருக்கின்றீர்கள். ஏற்கெனவே சங்கடப் பட்டவன், இப்பொழுது பாலத்தில் போகும் பொழுது இரண்டு நிலையையும் அறிந்தவனுக்குத் தான் பாலத்தினால் ஏற்பட்ட நன்மை என்ன என்பது தெரியும்.
ஆனால் காரில் வேகமாகப் போகிறவருக்கு ஆக்சிலேட்டரை அழுத்துவதில்தான் கவனம் இருக்கிறதே தவிர, பாலம் கட்டியதால் நாம் வேகமாகப் போகிறோம். அதனால் என்ன பயன் என்பது எவருக்கும் தெரியாது. அதைத் தெரிந்து கொள்ளத் தயாராக இருக்க மாட்டார்கள்.
தலைவர்களைப் பற்றி நினைப்பதில்லை
அதனால்தான் ரொம்பபேர் யாருக்கு நன்றி செலுத்தவேண்டுமோ அந்தத் தலைவர்களைப் பற்றி அவர் நினைப்பதில்லை. இது நம்முடைய சமுதாயத்தின் கூறுபாடு. பஞ்சமன் எங்கே பிறந்தான் என்று தந்தை பெரியார் அவர்களிடம் கேட்டார்கள். அவன்தான் பிறக்க வேண்டிய இடத்தில் அவனுடைய அப்பாவுக்கும், அம்மாவுக்கும் பிறந்தான் என்று பதில் சொன்னார் (கைதட்டல்).
இப்படி பெரியார் சொன்ன பிறகுதான் நமக்குப் புத்தி வந்தது. ஒரு பக்கம் நம்மாள்கள் சந்திர மண்டலத்திற்குப் போய்க் கொண்டிருக்கின்றான். நம்ம ஊர் மயில்சாமி அண்ணாதுரை சந்திரயானை அனுப்ப உதவி செய்கிறார். விண்வெளிக்கு அனுப்புகிறோம். அணுகுண்டு களம் அமைத்து விட்டோம். உலகத்தை அப்படியே சுழற்றுகிறோம்.
இந்த சம்பவத்தை எத்தனைபேர் பத்திரிகையில் படித்தீர்கள் என்று தெரியவில்லை. ரொம்ப கொடுமையான சம்பவம். ஒரு சத்திரிய சமுதாயத்தைச் சார்ந்த பெண்மணி இங்கு சத்திரியன், வைசியன் என்ற பிரிவு கிடையாது. உச்சநீதிமன்றத் தில், உயர்நீதிமன்றத்தில் எல்லாம் தீர்ப்பு கொடுத்து விட்டார்கள். இங்கே பிராமணன், சூத்திரன் இரண்டே பிரிவுதான் உண்டு.
நாய்க்கு ரொட்டி கொடுத்தார்
வடநாட்டில் மத்திய பிரதேசத்தில் ஒருவர் நாய் வளர்க்கிறார். அந்த வீட்டு நாய் வெளியே போய் சுற்றி வருகிறது. ஒரு தாழ்த்தப்பட்ட சகோதரி கையில் ரொட்டி வைத்திருக்கிறார். ஆதிதிராவிட சமுதா யத்தைச் சார்ந்த விவசாயி அம்மையார் தனது பசிக்காக ரொட்டி சாப்பிட்டுக்கொண்டிருக் கின்றார். இந்த நாய் பின்னால் வந்து நிற்கிறது. பசி என்பது எல்லோருக்கும் இருக்கக் கூடியதுதானே?
இது உயர்ஜாதிக்காரன் வளர்ந்த நாய். உயர் ஜாதிக்காரன் வளர்த்ததால்தான் பசிவரும் என்ற நியதி ஏதாவது இருக்கிறதா, இல்லை. இந்த அம்மையார் ரொட்டியை கையில் வைத்துக் கொண்டு சாப்பிட்டுக்கொண்டு வருகின்றார். நாய் வாலாட்டிக்கொண்டு பசியோடு நிற்கிறது. நாய் பசியோடு இருக்கிறதே என்ற மனிதாபிமானத்தோடு தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சார்ந்த, உழைக்கின்ற சமுதாயத்தைச் சார்ந்த அவர்களுக்குத்தான் மனிதாபிமானம் அதிகம்.
அந்த சகோதரியார் ஒரு துண்டுரொட்டியை நாய்க்குக் கொடுத்தார். இந்த நாய் ரொட்டியைத் தின்றதைப் பார்த்துவிட்ட நாயின் சொந்தக்காரர் ரொட்டி கொடுத்தவர் எவ்வளவு பெரிய கருணைவான் என்று பாராட்டுவதற்குப் பதிலாக நன்றி சொல்லுவதற்குப் பதிலாக என்ன செய்தார்? இந்த செய்தி பத்திரிகையில் வந்திருக்கிறது. யார் அந்த ரொட்டியைக் கொடுத்தது என்று அவர் கேட்கிறார். ரொட்டியைக் கொடுத்தது இன்னார் என்று தெரிந்தவுடனே நேராக தண்டனை கொடுத்து நீ தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சார்ந்தவர்.
நான் உயர்ந்த ஜாதியைச் சார்ந்தவராயிற்றே
நான் உயர்ந்த ஜாதியைச் சேர்ந்தவர். நான் வளர்த்த நாய் இது. என்னுடைய நாய்க்கு உன்னுடைய ரொட்டியைப் போடலாமா? ஆகவே நீ தண்டனைக்குரியவர் என்று சொல்லி தண்டனை கொடுத்தார் என்பது முந்தாநாள் செய்தி. அதே மத்தியப் பிரதேசத்திலே கொஞ்ச நாளைக்கு முன்னாலே ஒரு மாவட்ட நீதிபதி வந்தார். அந்த பதவியிலே ஏற்கெனவே ஒரு தாழ்த்தப்பட்ட நீதிபதி உட்கார்ந்து பணியாற்றினார். அவர் மாற்றப்பட்டுப் போகிறார்.
நீதிபதி நாற்காலியை கழுவிவிட்டனர்
அந்த மாவட்ட நீதிபதி இடத்திற்கு இன்னொருவருர் வருகிறார். அவர் பார்ப்பனர்கூட அல்ல; அவர் உயர் ஜாதிக்காரர். பார்ப்பனீயம் எப்படி எல்லாம் நம்முடைய மூளையைக் கெடுத்திருக்கிறது என்பதற்கு உதாரணம்- ஜாதிக்கு ஆதாரம். மாறுதல் ஆகி வந்த நீதிபதி அலுவலக அட்டெண்டரை கூப்பிடுகிறார். ஒரு குடம் தண்ணீர் கொண்டு வா என்று சொல்லி, அந்தத் தண்ணீரை, சென்ற தாழ்த்தப்பட்ட நீதிபதி அமர்ந்த நாற்காலி மீது ஊற்றி கழுவச் சொல்லுகின்றார்.
தமிழ்நாட்டில் நடக்குமா?
நண்பர்களே! இப்படிப்பட்ட ஒரு அவலம் தமிழ்நாட்டில் நடக்குமா? எண்ணிப்பாருங்கள் நடக்காது. நடக்க விடமாட்டோம். காரணம் இது பெரியார் பிறந்த மண் என்பதுதான் (கைதட்டல்). இன்னும் சில இடங்களில் இரட்டைக் குவளை முறை எல்லாம் இருக்கிறது. இதை ரகசியமாக வைத்திருக்கிறார்கள். இன்னமும் நம்மால் சகிக்க முடியவில்லை. இன்னமும் போராட்டம் நடத்திக் கொண்டுதான் இருக்கின்றோம்.
இரட்டைக் குவளை முறை
ஆனால் அதே ஆள் என்ன பண்ணுகிறான்? ஒரு குவளையில் டீ மட்டும் குடிக்கின்றான். ஜாதி எங்கேயிருக்கிறதென்றால் டீ கடையிலே மட்டும் இருக்கிறது. ஏன் இரட்டை குவளை என்று கேட்டால் இது கிராமம், அப்புறம் என் கடையில் டீ குடிக்கமாட்டார்கள். தகராறு பண்ணுவார்கள்.
இப்பொழுது நீங்கள் வந்திருக்கின்றீர்கள், சொல்லுகிறீர்கள். நீங்கள் போன பிறகு வந்து தகராறு பண்ணுவார்கள். இதைப் புரிந்து கொள்ளுங்கள் என்று பதில் சொல்லுகின்றான்.
------தொடரும்------ “விடுதலை”6-10-2010
சமுதாய மாற்றத்திற்காகப் பாடுபடுகின்ற கட்சி திராவிடர் கழகத்தைப் போல் இந்தியாவில் பார்க்க முடியாது! சீர்காழியில் தமிழர் தலைவர் விளக்கம்
சமுதாய மாற்றத்திற்காகப் பாடுபடுகின்ற கட்சி இந்தியாவிலே திராவிடர் கழகத்தைப் போல் இன்னொரு கட்சியைப் பார்க்க முடியாது என்று திராவிடர் கழக தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் கூறினார்.
சீர்காழியில் 27.9.2010 அன்று நடைபெற்ற மண்டல மாநாட்டில் திராவிடர் கழக தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் ஆற்றிய உரையின் நேற்றைய தொடர்ச்சி வருமாறு:
டீக்கு மட்டும் ஜாதி; சாராயத்தில் இல்லையே!
ஜாதி என்பது இரட்டை குவளை முறையில் டீக்கு மட்டும் இருக்கிறது. கள்ளச்சாராயம் காய்ச்சாத இடமில்லை. சாராயம் குடிக்கின்ற இடத்திற்குப் போகிறான். அங்கே என்ன வகுப்பு வாரி பிரதிநிதித்துவம் பார்க்கின்றானா? அங்கே ஏதாவது ஜாதியைப் பார்க்கின்றானா?
அந்த இடத்தில்தான் சமரச சன்மார்க்கம் நடக்கிறது. சாராயம் குடிக்க வருகிறவர்கள் என்ன ஜாதி? சாராயம் காய்ச்சுகிறவர் என்ன ஜாதி? என்பது தெரியாது.
நான் ஜாதியைக் குறிப்பிடுகிறேனே என்று தவறாக எண்ணக்கூடாது. சாராயம் எல்லோரும் காய்ச்சுகிறார்கள். அது குடிசைத் தொழில் மாதிரி சாராயம் குடிக்கிற இடத்தில் சகோதரத்தும் தானே வந்துவிடும். சாராயத்தை ஒரு கிளாசில் ஊற்றிக் கொடுக்கிறார்கள். முதலில் அரைகிளாஸ் உள்ளே இறங்குகிறவரையிலே சாதாரணமாக குடிக்கிறான். முழு கிளாஸ் சாராயத்தைக் குடித்தவுடனே இன்னொருத்தனுக்கு ஊற்றிக்கொடுப்பதற்கு முன்னாலே இவன் பொறுக்க மாட்டேங்கிறானே, எனக்குக் கொடு என்று இழுக்கிறான்.
பிரதர் என்று சொல்லுகின்றான்
ஒரு கிளாஸ் சாராயம் உள்ளே போனவுடனே பிரதர் என்று சொல்லுகின்றான். அதுவும் இங்கிலீஷில் சொல்லுகிறான் சாதாரணமல்ல. அங்கே ஒவ்வொரு ஜாதிக்கும் தனித்தனி கிளாஸ் வைத்திருக்கின்றானா? சாராயக் கடையிலே ஒழிந்த ஜாதி டீக்கடையிலே தலைதூக்குகிறதே என்ன காரணம்? எவ்வளவு விழிப்பாக இருக்க வேண்டியிருக்கிறது?
இந்த மாதிரி ஓர் அமைப்பே கிடையாது
எனவே, சமுதாய மாற்றத்திற்காக இன்னமும் உழைக்க வேண்டியிருக்கிறது. மாற்றங்கள் வந்து கொண்டிருக்கின்றன. இடையறாத பிரச்சாரம் இந்த மாதிரி ஓர் அமைப்பு இந்தியாவில் எங்கேயுமே கிடையாது. முன்னாலே பிரச்சாரம் பண்ணிக் கொண்டு போவதற்கே ஓர் இயக்கம்; பின்னாலே நடைமுறையிலே அதை அரசியல் ஆக்குவதற்கு இன்னொரு கட்சி. சேப்பர்ஸ் அண்ட் மைனர்ஸ் பாலம் அமைக்கக்கூடிய சூழல்கள் இவை எல்லாமே இருக்கின்றன. வகுப்புவாரி உரிமையைப் பற்றி நம்முடைய தோழர்கள் நிறைய சொன்னார்கள். வகுப்பு வாரி உரிமையைக் கொண்டு வந்த அமைச்சர் முத்தையா அவர்களுடைய பெயரை உங்களுடைய குழந்தை களுக்குச் சூட்டுங்கள் என்று தந்தை பெரியார் சொன்னார்.
ஒரு பார்ப்பனர் எம்.எல்.ஏ.,
ஒரு பார்ப்பன நண்பர் ஒவ்வொரு கட்சியிலேயும் இருந்துவிட்டு பிறகு எந்தக் கட்சிக்குப் போகலாம் என்று நினைத்துக்கொண்டிருக்கின்றார். அவர் ஒரு சட்டமன்ற உறுப்பினரும் கூட. அப்படிப்பட்ட ஒரு பார்ப்பனர்-அவர் சொன்னார், நாங்கள் பிராமணர் சங்கம் எல்லாம் வைத்திருக்கின்றோம். உங்களை சந்திக்க வேண்டும் என்று சொன்னார். மனிதாபி மான அடிப்படையில் நாம் எல்லோரையும் சந்திக்கக் கூடியவர்கள். அவர் வந்து சொன்னார், இல்லிங்க, எங்களுக்கும் நீங்கள் இட ஒதுக்கீட்டிற்காகப் போராடுங்கள் என்று சொன்னார்.
அவர் சொன்ன செய்தி
நான் சொன்னேன், ரொம்ப மகிழ்ச்சிங்க. கலைஞர் அவர்களிடம் நீங்கள்தான் சொல்ல வேண்டும். நீங்கள் சொல்லிவிட்டால் இட ஒதுக்கீடு கொடுத்துவிடுவார் என்று சொன்னார். எங்களுக்கும் இடஒதுக்கீடு வேண்டும் என்று சொன்னார்கள். நாங்கள் பிராமணர்களை ஒன்று சேர்த்து ஓர் அமைப்பையே வைத்திருக்கிறோம் என்று சொன்னார்கள். இவர் இப்படி சொன்னவுடனே நான் கேட்டேன். உங்களுக்கு சில வரலாற்று விசயம் சொல்ல வேண்டும்.
பார்ப்பனர்களுக்கு 16 சதவிகிதம்
வகுப்புவாரி உரிமை என்பதை நீதிக்கட்சி ஆட்சியில் முத்தையா முதலியார் கொண்டு வந்தார். 1928இல் வகுப்புவாரி உரிமை உத்தரவு கொடுத் தார்கள். தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை விட பார்ப்பனர்கள் எண்ணிக்கையில் அதிகம் இல்லை. அவர்கள் நூற்றுக்கு மூன்று பேர்கூட கிடையாது. ஆனால் 16 சதவிகிதம் பார்ப்பனர்களுக்கு ஒதுக் கினார்கள். இரண்டு அல்லது மூன்று சதவிகிதம் இருந்த பார்ப்பனர்களுக்கு 16 சதவிகிதம் ஒதுக்கினார்கள். எதிலே?. கம்யூனல் ஜி.ஓ. உத்தரவில்.
ஆனால், நூற்றுக்கு நூறு அனுபவித்த காரணத்தினாலே அவர்கள் ஒரு சதவிகிதத்தை விட்டுக்கொடுக்கத் தயாராக இல்லை. அது அவர்களுடைய ஏக போக உடைமைதானே!
சென்னைக்குச் செல்ல மாயவரத்தில் இருந்து வண்டி புறப்பட்டது என்றால், ரயிலில் ஏறி படுத்துக்கொள்வான். வைத்தீசுவரன் கோவில் தாண்டி சீர்காழிக்கு வருகிறபொழுது நாம் இரண்டு பேர் வண்டி ஏறுகிறோம். ரயிலில் உட்கார வேண்டிய இடத்தில் படுத்திருக்கிறவனைப் பார்த்து அய்யா கொஞ்சம் எழுந்துஉட்காருகிறீர்களா? இடம் கொடுக்கிறீர்களா? என்று கேட்டால், இவன் அப்படியே நிமிர்ந்து பார்ப்பான். ஆள் என்னை மாதிரி ஒல்லியாக இருக்கிறவனாக இருந்தால், ஏய்யா, உனக்கு வேறு வேலையில்லை அடுத்த கம்ப்பார்ட்மென்ட்டுக்குப் போய் பாரய்யா. இங்கே வந்து ஏன் எங்ககிட்டே கேட்கிறீர்கள். பக்கத்து இடம் காலியாக இருக்கிறதே அங்கே போய்யா என்று சொல்லுவான். ஆள் நன்றாக மோட்டாவாக இருந்தால், ஏங்க, அவசரப் படுகிறீர்கள்? கொஞ்சம் நிதானமாக இரு என்று சொல்லுவான். அது மாதிரி காலம் காலமாக கொடுமையை அனுபவித்துவிட்டான்
மனுவே போடாமல் வழக்கு
மெடிக்கல் காலேஜுக்கு மனுவே போடாமல் செண்பகம்துரைராஜன் என்பவர் வழக்குப் போட்டார். கம்யூனல் ஜி.ஓ. வகுப்புவாரி உரிமை செல்லாது என்று உயர்நீதிமன்றத்திலே தீர்ப்பு வாங்கி, உச்சநீதிமன்றத்திலே அதை உறுதி செய்யப்பட்ட நிலையிலேதான் தந்தை பெரியார் போர்க்கொடி உயர்த்தினார். திராவிடர் இயக்கம் போராடியது. சமூக நீதிக்கொடி ஏற்றப்பட்டது.
இட ஒதுக்கீடு யார் கேட்க வேண்டும்?
இந்திய அரசியல் சட்டம் தந்தை பெரியார் அவர்கள் நடத்திய போராட்டத்தினால் முதன் முறையாகத் திருத்தப்பட்டது என்பதை நாடாளு மன்றத்திலே அன்றைய பிரதமர் ஜவஹர்லால் நேரு அவர்கள் பதிவு செய்தார்கள். அன்றைய மத்திய சட்ட அமைச்சர் டாக்டர் அண்ணல் அம்பேத்கர் அவர்கள் அந்த சட்டத்திருத்தத்தைக் கொண்டு வந்துதான் மாற்றம் ஏற்படுத்தினார்கள்.
இந்த செய்திகளை எல்லாம் அந்தப் பார்ப்பன நண்பருக்குச் சொன்னேன். 16 சதவிகிதம் வாங்கியவர்கள் இப்பொழுது 7 சதவிகிதம் வேண்டும் என்று வந்திருக்கின்றீர்களே, தாராள மாக உங்களுக்கு இடஒதுக்கீடு கொடுக்க வேண்டும் என்பதில் எங்களுக்கு மாறுபட்ட கருத்தில்லை.
ஏனென்றால், பொதுவாக நம்முடைய நாட்டில் தலைகீழாக நடக்கிறது. இடஒதுக்கீடு யார் கேட்க வேண்டும் என்றால், யார் சிறுபான்மையினரோ அவர்கள்தான் இடஒதுக்கீடு கேட்க வேண்டும்.
நியாயப்படி பார்த்தால் பெரும்பான்மையோர் இடஒதுக்கீடு கேட்பது நம்முடைய நாட்டில்தான். இடமே நம்முடையது. நாம் இன்னொருவருக்குக் கொடுத்துவிட்டு, எனக்குக் கொஞ்சம் இடம்விடு, எனக்கு கொஞ்சம்இடம்விடு என்று சொல்வது சரியா? நம்முடைய வீட்டில் அவன் குடிபுகுந்து கொண்டான்.
இப்பொழுது நாம், அய்யா எங்களை கொல்லைப்புறத்திலாவது இருக்க வையுங்கள் அல்லது தாழ்வாரத்திலாவது இருக்க அனுமதி கொடுங்கள் என்று கேட்கிறோம்.
வீட்டை நாம் காக்க வேண்டும் என்பதுதான் மிக முக்கியம் இன்னும் சில பேர் வீடு நமக்கு வந்ததா? இல்லையா? என்று கவலைப்படாமல் எனக்கு முன்னால்தான் கொடுத்தது என்று சொல்லுகின்றார்.
மண்டல் கமிஷன் அறிக்கை
மண்டல் கமிஷன் வந்தபொழுது என்ன சொன்னார்கள்? பார்ப்பனர்கள் எப்படியிருப் பார்கள் என்பதற்கு உதாரணம் மண்டல் கமிஷன் அறிக்கையையே வெளியிடவில்லை; வெளி வரவில்லை; அந்த அறிக்கையில் என்ன இருக்கிறது? எத்தனை சதவிகிதம் என்பது தெரியவில்லை; இடஒதுக்கீடு செய்தியே வெளிவரவில்லை.
வெளியே வராத ஒரு சூழலில் இந்து பத்திரிகை ஒரு செய்தியை முக்கியத்துவம் கொடுத்து அவசரமாக வெளியிட்டது. மவுண்ட்ரோடு மகாவிஷ்ணு என்று விடுதலையில் எழுதுவோம்.
பழைய விடுதலை ஆசிரியர் குருசாமிதான் அந்தப் பெயரை வைத்தார். இந்து பத்திரிகையில் எழுதினான்.Burry the Mandal Report என்று. இந்து பார்ப்பனர்களுக்கு ஆத்திரம் எவ்வளவு இருக்கிறது பாருங்கள்.
பரிந்துரையில் என்ன என்பதே தெரியாது
மண்டல் கமிஷன் அறிக்கையில் என்ன பரிந்துரை இருக்கிறது என்பது யாருக்கும் தெரியாது. இதைப் படித்துவிட்டு மண்டல் அவர்கள் தொலைபேசி மூலம் என்னிடம் பேசினார். இந்தமாதிரி எழுதியிருக்கின்றார்கள். உங்களுடைய சமுதாய அமைப்பான திராவிடர் கழகம்தான் போராட முடியும்.
நீங்கள் அதைப் பற்றிக் கவலைப்படாதீர்கள் என்று சொன்னார். அன்றைக்கு திருச்சியில் மத்திய கமிட்டி கூடுகிறது. நாங்கள் ஒரு தீர்மானத்தை நிறைவேற்றினோம்.Burry the Mandal Report என்று எழுதியிருக்கின்றார்கள். அதைக் கண்டிக்கின்றோம் என்று சொன்னோம்.
உடனே இந்து பத்திரிகை செய்தியாளர் கமிட்டிக்கூட்டம் முடிந்த பிறகு என்னிடம் கேட்டார், சார், உங்களுக்கு அதில் என்ன இருக்கிறது என்று தெரியுமா? ஏன் கண்டிக்கிறீர்கள் என்று கேட் டார். அதே கேள்வியை நான் திருப்பி உங்களுக்குப் பதிலாகச் சொல்லுகின்றேன்.
புதையுங்கள் என்று எழுதியது இந்து
அதிலே என்ன இருக்கிறது என்று தெரியாமல் இந்து பத்திரிகை மண்டல் ரிப்போர்ட்டை புதையுங்கள் என்று எழுதுகிறீர்களே, அது நியாயமா? என்று கேட்டேன். ஒன்றே ஒன்று இப்பொழுது தெரிந்துபோய்விட்டது.
நீங்கள் புதையுங்கள் என்று எழுதினால், மண்டல் கமிஷன் அறிக்கை எங்களுக்கு சாதகமானது என்று எங்களுக்குத் தெரியும். ஏனென்றால், நான் விடுதலை ஆசிரியர் பொறுப்பை ஏற்றுக்கொண்டு போகும் பொழுதே அய்யா அவர்களிடம் நான் கேட்டேன்.
பெரியார் அவர்களிடத்திலே, அய்யா, நான் வக்கீலாக இருக்கிறேன். சட்டம் படித்தேன். நான் இயக்கத்தில் இருந்தால்கூட விடுதலை நாளேடு கொள்கை நாளேடு இதற்கு தலையங்கம் எழுதுவது சாதாரண விசயமல்ல.
கொள்கைக்கு மாறாக எழுத முடியாது. இது என்னுடைய கருத்து இல்லை என்று நீங்கள் ஏதாவது அறிக்கை கொடுத்து விட்டால் நான் என்னுடைய பொறுப்பைத் தொடர முடியாது.
உடனே நடைமுறைப்படுத்துங்கள் மண்டல் கமிஷனை
ஆகவே, நான் எப்படி எழுத வேண்டும்? எனக்குக் கொஞ்சம் அறிவுரை சொல்லுங்கள். எனக்குத் தெளிவுபடுத்துங்கள் என்று கேட்டுவிட்டுத்தான் நான் விடுதலை அலுவலகத்தில் ஆசிரியர் பணியைத் தொடங்க ஆரம்பித்தேன்.
அய்யா தெளிவோடு சொன்னார்
அய்யா அவர்கள் எல்லாவற்றிலும் ரொம்பத் தெளிவாகச் சொல்லக்கூடிய தலைவர். பட்டென்று, பட்டறிவோடு பேசக்கூடியவர். என்னப்பா, நீதான் இங்கிலீஷ் படித்திருக்கிறாயே. அதோடு சட்டம் வேறு படித்திருக்கிறீர்கள்.இந்து பத்திரிகையும்தான் படிக்கிறீர்கள். இந்து பத்திரிகையைப் பாருங்கள். தலையங்கம் என்ன எழுதியிருக்கிறான் என்று பாருங்கள். அதற்கு நேர் எதிராக எழுது. அதுதான் நமது கொள்கை (கைதட்டல்).
இப்படி ரொம்பத் தெளிவாகச் சொல்லி விட்டார். இதைவிட கலங்கரை விளக்கம் நமக்கு வேறு என்ன இருக்கிறது? அன்றிலிருந்து இன்று வரை அப்படித்தான் நடந்துகொண்டிருக்கிறது.
மண்டல் ரிப்போர்ட்டை (Burry the mandal report) புதையுங்கள் என்று இந்து பத்திரிகை எழுதியவுடனே, நான் உடனே ஆங்கிலத்தில் (Mondal harry up)என்று சொன்னேன். மண்டல் கமிஷன் அறிக்கையை உடனே செயல்படுத்து என்று எங்கே பார்த்தாலும் சொன்னோம்.
நான் இளைஞர்கள் மத்தியிலே பேசும்பொழுது கூட வேடிக்கையாகச் சொன்னேன். இளைஞர்களே! உங்கள் காதலியிடம் பேசும்பொழுது கூட முதலில் மண்டல் கமிசனைப் பற்றி பேசிவிட்டு அப்புறம் உங்கள் காதலைப் பற்றிப் பேசுங்கள் என்று சொன்னேன்.
இன்றைக்கு மண்டல் கமிஷன் எவ்வளவு பெரிய வெற்றியாக வந்திருக்கிறது என்பதை எண்ணிப் பாருங்கள். எனவே எங்களைப் பொறுத்த வரையிலே நாங்கள் சமுதாயப் பணியை செய்து கொண்டிருக்கக் கூடியவர்கள்.
அறிவியல் கருவி வந்தால் மற்ற நாடுகளில் மூடநம்பிக்கை போகும். ஆனால், நம்முடைய நாட்டிலே அறிவியல் கருவி வந்தால் மூடநம்பிக்கை பெருகும். காரணம் என்ன? இந்த அறிவியல் கருவியை வைத்துக்கொண்டுதான் மூட நம்பிக் கையை வளர்த்துக்கொண்டிருக்கின்றார்கள்.
கம்ப்யூட்டரில் பிள்ளையார் வரைகிறான். கடவுளைப் பார்க்க வேண்டுமா? மூன்று கொடுங்கள் என்று செல்ஃபோனால் கேட்கிறான்.
----------(தொடரும்)---------“விடுதலை” 7-10-2010
விநாயகனின் சக்தி எங்கே?
களிமண்ணால் பிள்ளையாரை மனிதனே உருவாக்கி துண்டு துண்டாக வெட்டி கடலில் கரைக்கிறான் மூடநம்பிக்கையின் முடைநாற்றத்தை விளக்கினார் தமிழர் தலைவர்
களிமண்ணால் பிள்ளையாரை மனிதனே உருவாக்கி துண்டு துண்டாக வெட்டி கடலில் கரைக்கிறான் அதில் எங்கே விநாயகனுக்கு சக்தி இருக்கிறது? என்று தமிழர் தலைவர் திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி அவர்கள் மூட நம்பிக்கையை விளக்கி உரையாற்றினார்.
சீர்காழியில் 27.9.2010 அன்று நடைபெற்ற மண்டல மாநாட்டில் திராவிடர் கழக தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் ஆற்றிய உரையின் நேற்றைய தொடர்ச்சி வருமாறு:
தந்தை பெரியார் அவர்கள் இனிவரும் உலகம் என்ற நூலில் இனிமேல் எதிர்காலத்தில் ஒவ் வொருவர் கையிலும், பையிலும் தொலைபேசி இருக்கும் என்று சொன்னார். இன்றைக்கு எல்லோர் கையிலும் தொலைபேசி இருக்கிறது. செல்பேசி இருக்கிறது. ஒவ்வொருவரும் ஆள்காட்டி பேசிக் கொள்வார்கள்.
இனிமேல் ஒருவர் ஒரு இடத்திலிருந்து கொண்டே எல்லா இடங்களுக்கும் பேசிக்கொண்டி ருக்கலாம் என்று சொன்னார். அதுதான் வீடியோ கான்ஃபரன்சிங்.
பெரியாரின் சமூக சிந்தனை
இன்றைக்கு அவ்வளவும் வந்தாகிவிட்டது. அவ்வளவு அறிவியல் சமூக சிந்தனையாளர் தந்தை பெரியார் அவர்கள். எனவே அவருடைய சமூக சிந்தனை வந்தாகிவிட்டது. இன்றைக்கு நாம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றிருக்கின்றோம்.
கம்ப்யூட்டரில் பிள்ளையார் படம்
அந்தக் கம்ப்யூட்டரில் இவன் பிள்ளையாரை வரைகிறான். இந்தக் கூட்டம் முறைப்படி முன்னாலேயே நடந்திருக்க வேண்டும். 12ஆம் தேதியே இந்தப் பொதுக்கூட்டம் நடந்திருக்க வேண்டும். என்னுடைய சுற்றுப்பயணத்தில் ரொம்ப நாளைக்கு முன்னாலேயே தேதி கொடுத்தேன்.
ஜெகதீசன் புத்தகம் வெளியிடுவதற்காக கேட்டார். எனக்கும் சீர்காழியில் பேசி ரொம்பநாள் ஆகிவிட்டது என்று நினைத்தேன். புத்தகத்தை மண்டபத்தில் வெளியிடாதீர்கள். பொது மக்கள் மத்தியில் பேச வேண்டும். எல்லா கட்சி நண்பர்களும் இருப்பார்கள். அரசியல் கட்சி தெளிவுள்ள பகுதி அது. எல்லா கட்சி நண்பர்களும் வருவார்கள். அதனால் சீர்காழி பொதுக்கூட்டத்தில் பேச தேதி கொடுத்திருந்தோம்.
பதற்றத்தோடு சொன்னார்
திடீரென்று நமது ஜெகதீசன் ரொம்ப பதற்றத்தோடு, ரொம்ப சங்கடத்தோடு ஃபோன் பண்ணி சொன்னார். காவல்துறையினர் 12ஆம் தேதி நடைபெறவிருந்த பொதுக்கூட்டத்தை அனுமதிக்க முடியாது. ஏனென்றால் அன்றைக்குத்தான் பிள்ளையாரை எல்லாம் கரைக்கப் போகிறார்கள். ஊர்வலம் அன்றுதான் வருகிறது என்று சொன்னார்கள் என்று சொன்னார்.
நான் தலைமையைக் கேட்டுதான் சொல்வேன் என்றும் சொன்னார். அதுதான் இந்த இயக்கத்தினுடைய கட்டுப்பாடு. அவர்களாக யாரும் எதுவும் செய்யமாட்டார்கள்.
நான் சொன்னேன். பரவாயில்லை, அவர்கள் என்ன நோக்கத்தோடு ஊர்வலம் வைத்தார்கள் என்பதைப் பற்றி எல்லாம் கவலைப்படவேண்டாம்.
காவல் துறையின் மரியாதையைக் குறைக்கக் கூடாது
காவல்துறை நமக்கு, பொதுமக்களுக்குப் பாதுகாப்பாக இருக்கிற துறை, பெரியார் அவர்களுடைய கருத்துப்படி காவல்துறைக்கு இருக்கின்ற மரியாதையை எந்தக் கட்சிக்காரரும் குறைத்துவிடக்கூடாது.
காவல்துறையினுடைய பணி என்பது சாதாரண மானதல்ல. மத்தளத்திற்கு இரு பக்கம் அடி என்றால் அவர்களுக்கு பலபக்கம் அடி. அப்படிப் பட்ட ஒரு துறை.
பலிகடா ஆக்கக்கூடிய சூழ்நிலை
பல நேரங்களில் அவர்கள் பலிகடா ஆக்கப் படக்கூடிய சூழ்நிலைகளும் உண்டு. எனவே காவல்துறையினருக்கு நாம் சங்கடத்தை உண்டாக்க வேண்டாம். அதிகாரிகள் காக்கி சட்டையைப் போட்டுக் கொண்டு பெரிய பதவியில் இருக்கத்தான் நாம் பாடுபடுகின்றோம். நம்மால் அவர்களுக்கு சங்கடம் வரக்கூடாது. பரவாயில்லை, இன்னொரு நாள் மாற்றி வைத்துக்கொள்ளலாம். நீங்கள் யாரும் சங்கடப்படாதீர்கள் என்று சொன்னேன். தோழர்கள் எல்லாம் கொஞ்சம் வேகமாக இருந்தார்கள். நான் உடனே சொன்னேன். இந்த அரசாங்கம் நமது அரசாங்கம். இந்த அரசாங்கத்திற்கு நாம் சிக்கலை உண்டாக்கக் கூடாது. எனவே அவர்கள் எந்த நோக்கத்திற்காக சொன்னார்கள் என்பது புரியும். புரியாமல் இல்லை. ஆகவே இன்னொரு நாள் வைப்பதில் ஒன்றும் தப்பில்லை. நீங்கள் தெளிவாக நாளைக்கு சொல்லிவிடுங்கள் என்று தெளிவாக சொன்னோம்.
மூடநம்பிக்கை ஒழிப்புப் பிரச்சாரம்
நாங்கள் மூடநம்பிக்கை ஒழிப்புப் பிரச்சாரம் செய்கின்றோம். அது அறிவியல் மனப்பான்மையை வளர்க்கும். இந்தத் தீர்மானத்தில் ஒரு முக்கியமான தீர்மானமாகப் போட்டிருக்கின்றோம்.
முதலமைச்சர் அவர்களுடைய கவனத்திற்கு என்று போட்டிருக்கின்றோம். மூடநம்பிக்கை ஒழிப்பு என்பதும், மக்கள் மத்தியில் சீர்திருத்த உணர்வு ஏற்படும் வகையில் பிரச்சாரம் செய்வது என்பதும், ஒவ்வொரு குடிமகனின் கடமை என்று இந்திய அரசமைப்புச் சட்டம் 51-H பிரிவில் திட்டவட்டமாக வலியுறுத்தப்படுகிறது. அரசியல் சட்டத்தில் Fundamantal Duties என்று இருக்கிறது.
அடிப்படை கடமைகள்
எல்லோருக்கும் அடிப்படை உரிமைகள் பற்றித்தான் தெரியும். வழக்கறிஞர்களுக்குக் கூட. ஆனால், அதற்கடுத்து அடிப்படை கடமைகள் என்று ஒன்று இருக்கிறது. fundamantal duties என்று பதில் சொல்லப்பட்டிருக்கிறது. ஒவ்வொரு குடிமகனுக்கும் அடிப்படை கடமைகள் உண்டு.
1.விஞ்ஞான மனப்பான்மையை வளர்க்க வேண்டும். 2. ஏன், எதற்கு என்று கேட்க வேண்டும். 3. மனிதநேயத்தை வளர்ப்பது 4. சீர்திருத்தம். ஒவ்வொரு குடிமகனுடைய பொறுப்பு
ஒவ்வொரு இந்தியக் குடிமகனுடைய கடமை என்னவென்றால் இவை அத்தனையையும் பரப்ப வேண்டிய பொறுப்பு ஒவ்வொரு இந்தியக் குடிமகனுக்கும் உண்டு. எதைப் பரப்ப வேண்டும்? அறிவியல் மனப்பான்மையை. அரசியல் சட்டத்தில் இப்படி இருக்கிறது. நம்மாள் வருடா வருடம் பிள்ளையார் சதுர்த்தியைக் கொண்டாடு கின்றார்கள்.
ஆரம்பத்தில் இது தமிழர்களுடைய, திராவிடர்களுடைய பண்பாடு கிடையாது. கி.பி.7ஆம் நூற்றாண்டுக்குப் பிறகுதான் வட நாட்டிலிருந்து பிள்ளையார் என்பது வாதாபியி லிருந்து இறக்குமதி செய்யப்பட்ட கடவுள்.
அபிதான சிந்தாமணி
இதற்குப் பெரியாருடைய ஆதாரம் தேட வேண்டாம். 1910இல் வெளிவந்த அபிதான சிந்தாமணி. புலவர் சிங்காரவேலு முதலியார் எழுதிய என் சைக்ளோபீடியா, எல்லா விசயத்தைப் பற்றியும் இருக்கக் கூடியது.
புராணங்கள், இலக்கியங்களில் ஆதாரபூர்வமாக இருக்கிறது. இவை எல்லாவற்றைப் பற்றியும் எடுத்துப் போட்டிருக்கின்றார்கள். தெ.பொ. மீனாட்சி சுந்தரனார் எழுதியிருக்கின்றார். பிறந்தது எப்படியோ? என்று எழுதியிருக்கின்றார். வட நாட்டிலிருந்து வந்தது.
வாதாபி கணபதே பஜம்! பஜம்!
பாட்டுப்பாடும் பொழுது முதலில் பாடுவார்கள். வாதாபி கணபதே பஜம்! பஜம்! என்று பாடுவார்கள். வாதாபி கணபதி என்றால் வாதாபியிலிருந்து வந்தது.
ஏழாம் நூற்றாண்டிற்குப்பிறகு வந்தது. வேதத்தி லேயோ அல்லது வேறு இடத்திலேயோ விநாயகர் புரம் என்று எழுதி வைத்திருக்கிறதா என்றால் இல்லை. இதிலே பெரிய சிக்கலே நாங்கள் படித்த அளவுக்குப் புராணத்தை எவனும் படித்துத் தொலைக்கவில்லை (கைதட்டல்). பெரியார் படித்த அளவுக்கு இராமாயணத்தை வேறு யாருமே படித்ததில்லை. ஆகவே அவருக்கு எந்த புள்ளி, எந்த கமா எங்கே இருக்கிறது என்பது தெரியும். பக்தி என்பது மூடநம்பிக்கையின் அடையாளம்.
கண்முன்னாலேயே கடவுளை உண்டாக்குகிறான்
இவன் அறிவு எவ்வளவு மழுங்கிப்போய்விட்டது என்று பாருங்கள். இவன் களி மண்ணைக் கொட்டி வைத்திருக்கின்றான். வண்டியில் கொண்டு வந்து களிமண்ணைக் கொட்டி வைத்திருக்கின்றான். நம் கண் முன்னாலேயே களி மண்ணால் கடவுளை உண்டாக்குகின்றான்.
அச்சு வைத்திருக்கின்றான். இரண்டு ரூபாய் பிள்ளையார் வேண்டுமா? நான்கு ரூபாய் பிள்ளையார் வேண்டுமா? கடவுளை சைஸ் வாரியாக விற்கிறவன் நம்மூரில்தான் இருக்கின்றான். வேறு எந்த நாட்டிலேயும் கிடையாது.
பிள்ளையாரை மணைக்கட்டையில் அடக்கி வைத்து. அதற்கு ஒரு பேப்பர் குடை வைத்து பெரப்ப பழம், இவை எல்லாம் வைத்து, கொழுக்கட்டையை இவன் செய்து சாப்பிட்டுவிட்டு-பிள்ளையார் சாப்பிட மாட்டார். மூன்றுநாள் களி மண் பிள்ளையாரை வீட்டில் வைத்திருந்து விட்டு, பிறகு கிணற்றிலேயோ, ஆற்றிலேயோ போட்டு விடுவான். அவரவர்கள் எடுத்துப் போட்டு விடுவார்கள். யாருக்கும் பிரச்சினை இல்லை. சில வருடங்களுக்கு முன்பு போலீஸ்காரர்களுக்கு வேலையே கிடையாது. இது சாதாரண பக்தி.
மதவெறி இயக்கங்கள்
மதவெறி இயக்கமாக இருக்கிற ஆர்.எஸ்.எஸ், சங்பரிவார் அமைப்புகள், காந்தியைக் கொன்ற கோட்சேவை பயிற்றுவித்த அமைப்புகள், இந்தியாவி லேயே இந்திய அரசால் மூன்று முறை தடை செய்யப்பட்ட ஓர் இயக்கம் என்று சொன்னால் அது ஆர்.எஸ்.எஸ். என்பதைத் தவிர வேறு கிடையாது. இதை யாரும் மறுக்க முடியாது. இந்த மண் பெரியார் மண். தலைகீழ் நின்றாலும் காவிக்கொடியை ஏற்ற முடியாது.
காவிக்கொடி ஏற்றுகிறவன் எல்லாம் அடிக்கடி ஜெயிலுக்குப் போய்க்கொண்டிருக்கின்றான். உங்களுக்குத் தெரியும். காஞ்சிபுரத்திலிருந்து ஆரம் பித்து நித்யானந்தா வரை போய் கொண்டிருக்கின் றான். கடவுள் இல்லை என்பதை அவர்கள் ஒரு வகையில் பிரச்சாரம் செய்து கொண்டிருக்கின் றார்கள். நாங்கள் ஒரு வகையில் பண்ணுகின்றோம். காஞ்சிபுரத்தில் தேவநாதன் என்று ஒரு அர்ச்சகன். அவன் பெண்களை சந்திக் கத் தேர்ந்தெடுத் திருக்கின்ற இடம் கர்ப்பக்கிரகத் திற்குப் பின்னால். நாங்கள் கூட அவ்வளவு அற்புத மாக கடவுள் இல்லை என்று காட்ட முடியாது.
பெரியார் கருத்தை அவன் இப்படி விளக்கி விட்டான். நாங்கள் பல மணி நேரம் தொண்டை வறள கத்திக்கொண்டி ருக்கின்றோம். அவன் அந்த நிகழ்ச்சிகள் எல்லாம் போட்டோவாக எடுத்து, வீடியோவாக எடுத்து ரூ.80 லட்சம் சம்பாதித்து விட் டான் என்று ரிப் போர்ட்டே இருக்கிறது. சி.டி.யை வளைகுடா போன்ற நாடுகளுக்கு அனுப்பி அவ்வளவு பணம் சம்பாதித்துவிட்டான். பகவான் அப்படியே நிற்கிறார். திருப்பதி ஏழு மலையானுக்குப் போட்ட நாமத்தை தேவநாதன் இவன் இருந்த கோவில் கடவுளுக்குப் போட்டு விட்டான். நகையைக் காணோம், தங்கத்தைக் காணோம். அதைக் காணோம், இதைக் காணோம் என்று சொல்லுகின்றான். அது மட்டுமல்ல; கடவுள் நம்மைக் காப்பாற்றவில்லை. எல்லோருக்கும் தெரிகிறது. இந்தப்போடு போடுகிறவனால் விட முடியவில்லை. தண்ணீர் போடுகிறவனாலே விட முடியவில்லை. சிகரெட் குடிக்கிறவனாலே விட முடியவில்லை. கடவுள் நம்பிக்கைகாரர்களே இந்த கடவுள் நம்பிக்கையை விட முடியவில்லை.
அரோகரா என்று சொல்லுகின்றான். திருவண்ணாமலை கோவிலுக்கு வெடிகுண்டு மிரட்டல். திருவண்ணாமலை அகண்ட தீபமாக எரிகிறவர். திருவண்ணாமலையாரிடம் தீவிரவாதி யாராவது போனால் அவர் எழுந்திருக்க வேண்டாமா? ஆனால் அவர் தீவிரவாதியை நம்பவில்லை. ஏ.கே.47த்தான் கடவுள் நம்புகிறார்.
நமது காவல்துறைதான் கடவுளுக்கும் பாதுகாப்பு கொடுக்கிறது. மனிதன் கடவுளைக் காப்பாற்றுகிறானா? மனிதனைக் காப்பாற்று கிறானா? என்பதை மிகத் தெளிவாகத் தெரிந்துகொள்ளலாம்.
பிள்ளையாரை இங்கு எதற்காக இறக்குமதி பண்ணினான். இந்த நாட்டிலே மதக்கலவரத்தை உண்டாக்க மசூதிப் பக்கம் போய்தான் நாங்கள் மேளம் அடிப்போம் என்று சொல்லுகின்றார்கள். எங்களுக்கு அதைப் பற்றிக் கவலை இல்லை. நாங்கள் கோவிலுக்கு முன்னால் கூட்டம் போடுவோம். ஒருசிறு அசம்பாவிதம் நடக்காது.
தந்தை பெரியார் 1954இல் பிள்ளையாரை உடைத்துக்காட்டினார். உலகத்திலேயே அதை ஒரு இயக்கமாக செய்தவர் தந்தை பெரியார்தான்.வேறு இயக்கம் கிடையாது. உச்சநீதிமன்றம் வரையிலே வழக்கு போனது. நாங்கள் தண்டனை பெற்றாலும் இந்த பகுத்தறிவு பிரச்சாரத்தை செய்வோம். அரசியல் சட்டப்பிரிவின்படி அறிவியல் மனப்பான்மையை நாங்கள் வளர்க்கின்றோம். இந்தக் கதையை சொன்னால் அவ்வளவு அசிங்கமானது. விக்னேஸ்வரனை தொழுதால் எந்த கோணலும் வராது. அவ்வளவு பாதுகாப்பு இருக்கும். விக்னம் இல்லாமல் செய்கிறவருக்கு ஏன் இவ்வளவு பாதுகாப்பு? பிள்ளையாரை கரைக்கிற வரையில் நமது காவல்துறை அதிகாரிகள் தாங்க மாட்டார்களே.
---------(தொடரும்)---”விடுதலை” 8-10-2010
கடவுள், மத நம்பிக்கையாளர்களால்தான் நாட்டில் இரத்த ஆறு ஓடுகிறது
சீர்காழி பொதுக்கூட்டத்தில் தமிழர் தலைவர் விளக்கவுரை
கடவுள், மத நம்பிக்கையாளர் களால்தான் இந்த நாட்டில் இரத்த ஆறு ஓடுகிறது என்று திராவிடர் கழக தலைவர், தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் கூறி விளக்கவுரையாற்றினார்.
சீர்காழியில் 27.9.2010 அன்று நடைபெற்ற மண்டல மாநாட்டில் திராவிடர் கழக தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் ஆற்றிய உரையின் நேற்றைய தொடர்ச்சி வருமாறு:
அபிதான சிந்தாமணியில் இருக்கிறது-விநாயகர் சதுர்த்தி விரதம், விநாயகர் புராணம் இவை எல்லாவற்றையும் எழுதிக்கொண்டு வந்தார்கள்.
எத்தனை விநாயகர்?
1751 பக்கம் இந்த நூல்-1910இல் போடப்பட்ட நூல் அபிதான சிந்தாமணி. இவருக்கு சிந்தாமணி விநாயகர் எனவும், வக்கிரகுண்டர் விநாயகர் எனவும், கலாதரர் எனவும், கணேசர் எனவும், பாலச்சந்திரர் எனவும், கபில விநாயகர் எனவும், கசாலகர் எனவும், தூமதேபி எனவும், அகோத்கடர் எனவும், உடும்பி விநாயகர் எனவும், வல்லபை கணேசர் எனவும் பெயர்.
அம்மாவைப் போல் பெண் வேண்டுமாம் விநாயகருக்கு!
நாமெல்லாம் நினைத்துக்கொண்டிருக்கின்றோம். விநாயகருக்கு மனைவி கிடையாது என்று. விநாயகர் சொன்னாராம், அவருடைய தாயாரிடம், அம்மா, நான் கல்யாணம் பண்ணிக்கொள்ள வேண்டு மானால் உன்னை மாதிரி பெண் வேண்டும் என அம்மாவைப் பார்த்துச் சொன்னாராம். அதனால் ஆற்றங்கரையில் பிள்ளையார் உட்கார்ந்திருக் கிறாராம். என்னை மாதிரி யார் வருகிறார் என்று பார். அவர்களை கல்யாணம் பண்ணிக்கொள் என்று விநாயகருடைய அம்மா சொன்னாராம். இப்படி கதையில் இருக்கிறது. ஏனென்றால் கதை எழுதுகிறவன் அந்தந்த காலகட்டத்தில் தோன்றியதை எழுதினான்.
விநாயகருக்கு எத்தனை மனைவிகள்?
விநாயகருக்கு சித்தி புத்தி, வல்லபை, விஷ்ணு மூர்த்தியின் குமாரியாகிய மோதை, சுமகை, சுந்தரி, மனோரமை, மங்கலை, கேசனி, காந்தை, சாரு ஹாசை, சுமத்திமை, நந்தினி, காமதை முதலியவரை மணந்தவர் என்று எழுதி வைத்திருக்கின்றான். விநாயருக்கு ஒரு பெண்டாட்டி, இரண்டு பெண்டாட்டி இல்லை. பதினாறு பெண் டாட்டிகளை கணக்குப் போட்டிருக்கின்றான். இதில் சித்தி ஒரு மனைவி, புத்தி ஒரு மனைவி, புத்தியும் அவருக்கு வெளியிலிருந்துதான் வருகிறது. ஏனென்றால் களிமண் ஆனதினாலே வெளியி லிருந்துதான் புத்தி வரும்.
சித்தி, புத்தி விநாயகரே என்று நம்மாள் பொருள் தெரியாமலே பாடிக்கொண்டிருக்கின்றான். ஏனென்றால் இன்னொரு மொழியிலிருந்து வந்ததினாலே இவனுக்கு என்னவென்றே தெரியாது. வல்லபை கணபதி வல்லபை கணபதி என்பதைப் பற்றி நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டும். யாருக்காவது சந்தேகம் இருந்தால் அங்கே போய் பார்க்க வேண்டும். தாய்மார்களை வைத்துக்கொண்டு சொல்வது எனக்கே கொஞ்சம் சங்கடமான நிலை. வல்லபை என்பது விநாயகருடைய மனைவி. சுப்பிரமணியன் விநாயகருடைய தம்பி.
சுப்பிரமணியம்-சூரபத்மனோடு சண்டைக்குப் போகின்றார். சூரபத்மன்-அசுரன். அசுரன் என்றால் ரொம்ப பலமானவன். அவனுக்கு வீரர்கள் அதிகம். ஆனால் சுப்பிரமணியனுக்கு படை வீரர்கள் இல்லை. தனக்குப் படை வீரர்கள் வேண்டும் என்று தம்பி சுப்பிரமணியம் அண்ணனிடம்-விநாய கனிடம் கேட்கின்றார்.
ஆயிரக்கணக்கான வீரர்கள் உற்பத்தி
உடனே கணேசர் என்ன பண்ணுகிறார்? உனக்கு இராணுவம் வேண்டும்-சைனியம் வேண்டும். அவ்வளவு தானே என்று சொல்லி, தனது மனைவி வல்லபை மூலம் ஆயிரக்கணக்கான வீரர்களை உற்பத்தி பண்ணி அனுப்புகிறார். சைனியம் வந்து கொண்டேயிருக்கிறது. ஃபேக்டரியில் அச்சடித்து வெளியே வந்து கொட்டுகிற மாதிரியே இருக்கிறது. ஒரு கட்டத்தில் போதும், போதும் என்று சுப்பிரமணியரே நினைத்தார்.
கார்க் அடைக்கிற மாதிரி...
உடனே சைனியத்தை நிறுத்துவதற்காக விநாயகர் என்ன செய்தார்? துதிக்கையை வைத்து கார்க் மாதிரி அடைத்துவிட்டார். இதற்கு மேல் சொன்னால் எனது தகுதிக்கு குறைச்சல். உண்மையிலேயே ரொம்ப அசிங்கமான விசயம் அது. நான் இதை விட ரொம்ப நாசூக்காக சொல்ல முடியாது. இதெல்லாம் கற்பனை என்று நினைக்காதீர்கள். சிதம்பரம் ரொம்ப பக்கத்திலேயே இருக்கிறது போய் பார்க்கலாம்.
தீபாராதனை எதற்கு?
நாங்கள் எல்லாம் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் படிக்கும்பொழுது திராவிடர் கழக தலைமை நிலையம் சிதம்பரத்தில் இருக்கும். மறைந்த கு.கிருஷ்ணசாமி அவர்கள்தான் தலைவர். தலைமை அலுவலகத்திற்குப் போய் விட்டு வருவோம். அங்கு பக்கத்தில்தான் வல்லபை கணபதி கோயில் இருக்கிறது. ரொம்ப பேர் வெளிச்சம் போதவில்லை என்று கிட்டக்க போய் பார்ப்பான். அய்யர் தீபாராதனை காட்டுவதற்கே வெளிச்சத்தில் பார்ப்பதற்குத்தான். அதே போல தருமபுரிக்கு பக்கத்தில் மத்தூர் என்ற ஊர் இருக்கிறது. அங்கேயும் வல்லபை கணபதி கோயில் இருக்கிறது. அங்கே இருக்கிற ஒருவர் கோவிலுக்குள் சென்று வல்லபை கணபதி படத்தையே எடுத்து அனுப்பிவிட்டார். இந்த அசிங்கத்தை அசிங்கம் என்று சொன்னால் எங்கள் மீது வழக்கு போடுவேன் என்று சொல்லுகின்றான்.
உடைந்த எலும்பை உடைந்த எலும்பாக...
எக்ஸ்ரே கருவிமீது யாராவது வழக்குப் போடுவார்களா? எக்ஸ்ரே கருவி உடைந்த எலும்பை உடைந்த எலும்பாகத்தான் காட்டும்.
நீதிமன்றங்களில் இந்த விசயங்களைக் கொண்டு சென்றால்தான் வெளிச்சத்திற்கு வரும். நீதிபதிக்கும் தெரியவரும். ஏனென்றால் அங்கேயும் ரொம்பபேர் பிள்ளையார் படம் மாட்டியிருக்கின்றார்கள்.
கடவுளைக் கற்பித்தவன் முட்டாள்
ஆகவேதான் கடவுளைக் கற்பித்தவன் முட்டாள். கடவுளைப் பரப்பியவன் அயோக்கியன். கடவுளை வணங்குகிறவன் காட்டுமிராண்டி என்று தந்தை பெரியார் அவர்கள் சொன்னார் என்றால் யாரையும் வைவதற்கு அல்ல. யாரையும் கோபித்துக் கொள் வதற்கு அல்ல. வசைபாடுவதற்கு அல்ல.
மனிதன் மூடத்தனத்தில் இருந்தபொழுது பிறந்த கருத்து-கடவுள் மூடநம்பிக்கை. சீர்காழியில் அய்யா அவர்களை அழைத்தார்கள். அய்யா அவர்கள் கடவுள் மறுப்பு வாசகத்தைச் சொன்னார். கட வுளைக் கற்பித்தவன் முட்டாள், கடவுளைப் பரப்பியவன் அயோக்கியவன். கடவுளை வணங்கு கிறவன் காட்டுமிராண்டி என்று.
ஏனய்யா, இவ்வளவு அசிங்கமான கடவுளை இன்னமும் இவன் கும்பிட்டுக் கொண்டிருக்கின்றான். இவன் காட்டுமிராண்டி காலத்து அறிவை அந்த மனப்பான்மையை வைத்திருக்கின்றான் என்ப தற்காக சொன்னார். யாரையும் வைவதற்கு அல்ல.
பெரியாருக்கு எதிர்ப்பு காட்ட....
அய்யா வருகிறார் என்றவுடன் இங்கேயிருக்கிற புத்திசாலிகள் என்ன செய்தார்கள்? பெரியாருக்கு எதிர்ப்புக் காட்டுவதற்காக இங்குள்ள கடைவீதியில் பக்கத்தில் ஒரு பெரிய போர்டை எழுதி வைத்து விட்டார்கள்.
ஏனென்றால் இப்பொழுது இருக்கின்ற இளைஞர்களுக்கு இந்த வரலாறு தெரியாது. என்ன எழுதி வைத்தார்கள் தெரியுமா?
கடவுளைக் கற்பித்தவன் அறிவாளி. கடவுளைப் பரப்பியவன் யோக்கியன். கடவுளை வணங்குகிறவன் நாகரிகமானவன். இந்த மூன்று வார்த்தையைப் போட்டு அய்யா அவர்கள் பார்க்கிற மாதிரி எழுதி வைத்து விட்டார்கள்.
சீர்காழியில் அய்யா பேசுகிறார்
நமது தோழர்கள் ஆத்திரப்பட்டார்கள். நமது பொதுக்கூட்டத்திற்கு முன்னாலே இப்படி ஒரு போர்டை எழுதி வைத்திருக்கின்றார்கள் என்று அய்யா அவர்களிடம் சொன்னார்கள். அய்யா அவர்கள் இருக்கட்டும், அதுதான் முக்கியம் என்று சொன்னார். இதே சீர்காழியில் அய்யா பேசினார்.
ஏம்பா, கடவுள் என்பவன் தானாக உற்பத்தி ஆனவன் அல்ல. மனிதன்தான் கடவுளை உற்பத்தி பண்ணியவன். அந்த மனிதன் முட்டாளாக இருக்கும்பொழுது இந்த மாதிரி கடவுளை உண்டாக்கினான். எனக்குப் போட்டி என்று நினைத்து நீ என்னுடைய விசயத்தையே ஒத்துக் கொண்டாயே, உன்னை அறியாமல்.
உடனே போர்டை கழற்றிவிட்டான்
கடவுளை உண்டாக்கியவன் அறிவாளி என்று எழுதிய வைத்திருக்கிறாய் அல்லவா? அப்படி என்றால் கடவுள் தானாக உண்டானவன் அல்ல. மனிதன்தான் உண்டாக்கினான் என்று நான் சொன்ன விசயத்தை நீ ஒத்துக்கொண்டாய். உனக்கும் , எனக்கும் என்ன பிரச்சினை? கடவுளை கற்பித்தவன் முட்டாள் என்று நான் சொல்லு கின்றேன். நீ அறிவாளி என்று சொல்லுகின்றாய். இதை வேண்டுமானால் இரண்டு பேருமே விவாதம் பண்ணிக்கொள்ளாமே என்று சொன்னார்.
சீர்காழியில் எழுதி வைத்தவன் டக்கென்று போர்டைக் கழற்றி எடுத்துவிட்டுப் போய்விட்டான் (சிரிப்பு-கைதட்டல்). இதுவரை தந்தை பெரியாரிடம் கேள்வி கேட்டவர்களுக்கெல்லாம் பெரியார் பதில் சொல்லியிருக்கின்றார். பெரியார் கேட்ட கேள்விக்குத்தான் இந்த நாட்டில் எவரும் பதில் சொல்லவில்லை (கைதட்டல்).
புண்படுத்துவது எங்கள் நோக்கமல்ல
ஆகவே யாரையும் புண்படுத்துவது எங்களுடைய நோக்கமல்ல. இந்து முன்னணி சகோதரர்கள் உள்பட, ஆர்.எஸ்.எஸ்.சில் இருக்கிற தமிழர்கள் உள்பட, பா.ஜ.க வில் இருக்கிற தமிழர்கள் உள்பட அவர்கள் எல்லாம் எங்களுக்கு எதிரிகள் அல்லர். சமூக நீதிக்குப் பாடுபட வேண்டும். மூடநம்பிக்கையை ஒழிக்க வேண்டுமானால் நீங்கள் என்ன செய்ய வேண்டும்? மின்சாரத்தை ஒதுக்க முடியுமா?
பெரியார் எங்களுக்கு மட்டும் உரியார் அல்லர். பெரியாருடைய கொள்கை அறிவியல் கொள்கை. மின்சாரத்தை நீங்கள் யாரும் மறுக்க முடியாது, ஒதுக்க முடியாது. கொஞ்சம் பவர்கட் என்றால் உடனே கோபித்துக்கொள்கிறான் அல்லவா?
ஏனென்றால் அவ்வளவு தொழிற்சாலை அந்த, அளவிற்கு வளர்ந்திருக்கிறது. எல்லாம் அவன் செயல். அவனின்றி ஓரணுவும் அசையாது என்று சொல்லுகின்றீர்களே. அப்படியானால் யாரிடம் கோபித்துக்கொள்ள வேண்டும்? அப்பொழுது அவன் செயல் இல்லை. இது மனிதன் செயல் என்று இப்பொழுது சொல்லுகின்றான். ஆகவே கடவுள் நம்பிக்கை என்பது மிகப்பெரிய மூடநம்பிக்கை.
மூடநம்பிக்கையின் விளைவு
அந்த மூடநம்பிக்கையினால்தானே இன்றைக்கு மனிதர்கள் மோதிக்கொள்ளுகிறார்கள். கடவுள் இல்லை என்று சொல்லுகின்ற எங்களால் எந்தக் கோவிலுக்காவது ஆபத்தா? கடவுள் இல்லை என்று சொல்லுகின்ற நாங்கள் எங்கேயாவது கலவரம் பண்ணியிருக்கின்றோமா? மதம் இல்லை என்று சொல்லுகின்ற எங்களால் யாருக்காவது சங்கடம் உண்டா?
யாருக்காவது விரோதி உண்டா?
மதத்தை ஒப்புக்கொள்ளாத நாங்கள் யாருக்காவது விரோதியாக இருந்திருக்கிறாமா? மதத்தை ஏற்றுக்கொள்கிறவன்தானே என் மதம் பெரிது; என் கடவுள் பெரிது; கடவுள் இங்கேதான் பிறந்தார் என்று சொல்லுகின்றான். அந்த இடத்தில் நீ மசூதி கட்டிக்கொண்டுவிட்டாய் என்று சொல்லுகின்றான். எனவே மதவாதிகள் சம்மட்டி எடுத்துக் கொண்டிருக்கின்றார்கள். கடவுள் நம்பிக்கையாளர்களால் இரத்த ஆறு கடவுள் நம்பிக்கையாளர்கள் இரத்தஆறு ஓடச்செய்கிறார்கள். மனிதநேயம் படைத்த பெரியார் தொண்டர்கள் மனிதர்களாக இருங்கள்; சகோதர்களாக வாழுங்கள் என்று சொல்லு கிறார்கள். எனவே கடவுளும், மதமும் நம்மைப் பிரித்திருக்கிறது. இணைக்கவில்லை. பெரியார் நம்மை மனிதராக்கி இணைத்திருக்கிறார். பெரியார் தத்துவம் என்பது மனிதநேயம்.
அரசியல் சட்டத்தில் ழரஅயளைஅ என்று சொல்லப்பட்டிருக்கின்றது. ஆகவே பெரியார் தத்துவத்தை கடைப்பிடிப்பதன் மூலமாக ஒருவருக்கு ஒருவர் ஜாதி பிரச்சினைக்கோ, ஜாதிச் சண்டைக்கோ, மதச்சண்டைக்கோ இடமில்லை.
மாறுபட உரிமை உண்டு
மாறுபட்டால்கூட அவரவர் உரிமை அவரவர்க்கு. இந்தியாவில் மதப்பிரச்சினையால் இந்தியா முழுக்க பதற்றம். ஆனால் தமிழ்நாட்டில் அந்தப் பதற்றமே இல்லை. காரணம் என்ன? இந்த மண் பெரியார் பிறந்த மண்.
பெரியார் தொண்டர்கள் ஆளக்கூடிய மண்
பெரியார் ஆண்ட மண். அது மட்டுமல்ல. பெரியாருடைய தொண்டர்கள் ஆளக்கூடிய மண். எனவே தான் இந்த மண்ணில் மனிதநேயம் ஆளும். இந்த மண்ணில் சமூகநீதிக் கொடி பறக்கும். இந்த மண்ணில் அனைவர்க்கும் அனைத்தும் என்ற தத்துவம் இருக்கும் என்று கூறி வாய்ப்பளித்த உங்களுக்கு நன்றி கூறி முடித்துக்கொள்கின்றேன்.
-இவ்வாறு தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் உரையாற்றினார்.
--------" விடுதலை” 9-10-2010
0 comments:
Post a Comment