Search This Blog

12.10.10

பா.ஜ.க.வின் தார்மீக ஒழுக்கம் பாரீர்!

கருநாடக சட்டமன்றத்தில் அரசியல் கேலிக் கூத்து சட்ட விரோதமாக உறுப்பினர்களை நீக்கி
பா.ஜ.க. ஆட்சியைக் காப்பாற்றிய சபாநாயகர்! குடியரசுத் தலைவர் ஆட்சியை அமலாக்குக!
தமிழர் தலைவர் அறிக்கை

கருநாடக மாநிலத்தில் சட்ட விரோதமாகச் செயல் பட்டு சபாநாயகர் பா.ஜ.க. ஆட்சியைக் காப்பாற்றியுள்ளார். இந்த நிலையில், பா.ஜ.க. ஆட்சியை டிஸ்மிஸ் செய்து, குடியரசுத் தலைவர் ஆட்சியை அமலாக்க வேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

அறிக்கை வருமாறு:

கருநாடக சட்டசபையில் அங்கே ஆளும் கட்சியாக உள்ள பா.ஜ.க.வின் எடியூரப்பா அமைச்சரவை, சில அதிருப்தி எம்.எல்.ஏ.,க்களும், சுயேச்சைகளும் ஆளுங்கட்சிக்கு தாங்கள் தந்த ஆதரவை விலக்கிக் கொள்ளப்படுகிறது என்று மாநில ஆளுநர் பரத்வாஜ் அவர்களிடம் தெரிவித்த நிலையில், (28 மாத காலம் ஆட்சியான) பா.ஜ.க. ஆட்சி தனது ஆதரவை அக்டோபர் 12 ஆம் தேதிக்குள் நிரூபிக்கவேண்டும் என்றும் முன்பு ஆளுநர் ஆணையிட்டார்.

கருநாடக சட்டமன்றத்தில்
கட்சிகளின் நிலை

அதில் அவர் (அக்டோபர் 6 ஆம் தேதியன்று இருந்த ஆளுங்கட்சிக்கான ஆதரவு) பலத்தை நிரூபிக்க முன்வரவேண்டும் என்று தெளிவாகக் குறிப்பிட்டி ருந்தார். அதன்படி,

சட்டமன்றத்தில் மொத்த எண்ணிக்கை 225

கட்சி வாரியாக

பா.ஜ.க. 116

காங்கிரஸ் 73

மதச் சார்பற்ற ஜனதா தளம் 28

சுயேச்சைகள் 6

நியமன உறுப்பினர் 1

சபாநாயகர் 1

225

இதில் 11 பா.ஜ. கட்சி எம்.எல்.ஏ.,க்களும், 6 சுயேச்சை உறுப்பினர்களும் தங்களது ஆதரவை எடியூரப்பா அரசுக்கு விலக்கிக் கொள்வதாக, மாநில ஆளுநருக்குக் கடிதங்களை கொடுத்ததால் ஆளுநர் 12 ஆம் தேதிக்குள் முதலமைச்சர் எடியூரப்பாவை அவரது ஆட்சி பலத்தை நிரூபிக்க ஆணையிட்டார்!

இதுதான் சரியான ஜனநாயக நடைமுறை. இதற் கிடையில் தனக்குப் போதிய மெஜாரிட்டி இருக்காது என்ற அச்சத்தில், சுயேச்சை எம்.எல்.ஏ.,க்களையும், 11 பா.ஜ.க. எம்.எல்.ஏ.,க்களையும் சபாநாயகர் கட்சித் தாவல் சட்டத்தின்கீழ் பதவி நீக்கம் செய்துள்ளார்.

சட்டப்படி சரிதானா?

சட்டப்படி,

1. கட்சித் தாவல் தடைச் சட்டம் சுயேச்சை எம்.எல்.ஏ.,க்களைக் கட்டுப்படுத்தாது.

2. 11 பா.ஜ.க. எம்.எல்.ஏ.,க்களைக்கூட எப்போது கட்சித் தாவல் தடை சட்டத்தின்கீழ் பதவி நீக்கம் செய்வது சட்டப்படி சரியானது என்றால்,

அவர்கள் சட்டசபைக்கு வந்து பா.ஜ. கட்சி கொறடா ஆணைக்கு விரோதமாக, ஆளுங்கட்சிக்கு எதிராக வாக்களித்தனர் என்பதற்குப் பின்னரே செய்தால்தான் சரியானது.

அவர்கள் ஆளுநரைச் சந்தித்ததாலோ, வெளியூர் களில் இருந்ததைக் காரணமாகக் காட்டியோ பதவி நீக்கம் செய்வது சட்ட விரோதம்.

அவைக்கு வந்து ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.,க்கள் அதனை எதிர்த்து, எதிர்க்கட்சிக்கு ஆதரவாக வாக்களித் தனர் என்பது திட்டவட்டமாகத் தெரிந்தால் ஒழிய, பதவி நீக்கம் செய்ய இயலாது.

இது சபாநாயகரின் முறையற்ற தடாலடி சட்ட விரோதச் செயல் ஆகும்!

சபாநாயகரின் அறிவிப்பு
உச்சக்கட்ட சட்ட விரோத செயலே!

அடுத்து குதிரை கீழே தள்ளியதோடு, குதிரை குழியையும் பறித்தது என்பதுபோல,

இவ்வளவு பரபரப்பும், எதிர்பார்ப்பும் உள்ள நிலையில், 11.10.2010 கருநாடக சட்டமன்றத்தில் வாக்களிக்கச் சென்ற எம்.எல்.ஏ.,க்களை வாக்களிக்க உள்ளே அனுமதி மறுத்ததும், குரல் வாக்கெடுப்பு மூலம் ஒரு வாக்கு கூடுதலாகப் பெற்று, எடியூரப்பா அமைச்சரவை வெற்றி பெற்றுவிட்டது என்று சபாநாயகர் அறிவித்தது உச்சகட்ட அநியாய சட்ட விரோதச் செயல்.

கருநாடக சட்டமன்றத்தில் நடைபெற்ற அமளி துமளி, அடிதடி, கூச்சல் குழப்பம் நாட்டின் ஜனநாயகத்திற்கே மிகப் பெரிய களங்கத்தை உண்டாக்கிய தேசிய அவமானம் ஆகும்!

வாக்களிப்பதற்குமுன்பே தங்களை பதவி நீக்கம் செய்த சபாநாயகரின் ஒரு சார்பு நிலை சட்ட விரோதம் என்று கூறி, கருநாடக உயர்நீதிமன்றத்தில் வழக்குப் போட்டு அது இன்று விசாரணைக்கு வரும் என்று தெரிகிறது.

இனியும் கருநாடகத்தில் பா.ஜ.க. அரசு - சட்ட விரோதமான, ஜனநாயக விரோதமான பா.ஜ.க. அரசு நீடிப்பது முறையற்றது; ஜனநாயகத்தை கேலிக் கூத்தாக்குவதாகும்!

குடியரசுத் தலைவர் ஆட்சி தேவை

மத்திய அரசு - குடியரசுத் தலைவர் உடனடியாக எடியூரப்பா அரசை பதவி நீக்கம் (டிஸ்மிஸ்) செய்து, குடியரசுத் தலைவர் ஆட்சியைப் பிரகடனப்படுத்த வேண்டும்.

கடந்த பல மாதங்களாகவே அங்கு கனிமவளப் பிரச்சினை மற்றும் பல்வேறு ஊழல் பிரச்சினைகளில் சிக்கி, அவ்வரசு சீரழிந்த நிலையில், அரசியல் கழைக் கூத்து போல நடந்து வந்தது நாடறிந்த உண்மையாகும்!

மோசடிக்குத் துணைபோன சபாநாயகருக்குக் களங்கமாகும்.

கருநாடகத்தின் தலைநகர் பெங்களூருவில் உள்ள சட்டமன்றக் கட்டடம் விதான் சவுதா மிகவும் அழகானது; கம்பீரமானது. ஆனால், அதனுள் நடந்தவைகள் அசிங்கத்திற்குப் பொட்டு வைத்து, ஜனநாயகத்தை அலங்கோலப்படுத்திட்டதாகவே நடந்தது - கொடுமையிலும் கொடுமையாகும்!


தலைவர்,
திராவிடர் கழகம்.

சென்னை
12.10.2010

***************************************************************

பா.ஜ.க.வின் தார்மீக ஒழுக்கம் பாரீர்!

பாரதீய ஜனதா கட்சி மற்ற அரசியல் கட்சி களைப் போன்றதல்ல - தார்மீக நெறிகளைப் பின்பற்றக்கூடியது; ராமனை வழிபடுபவர்கள், ராம ராஜ்ஜியத்தை உருவாக்கக் கூடியவர்கள் என்றெல்லாம் கசிந்துருகுவார்கள்; ஊடகங்கள் அதற்கு ஒத்து ஊதும்; கருநாடகத்தில் அக்கட்சி ஆட்சியைத் தக்க வைத்துக்கொள்ள மேற்கொண்ட நடவடிக்கைகளைப் பார்த்தபின், பா.ஜ.க. என்ற வார்த்தையை உச்சரித்தாலே டெட்டால் போட்டு வாயைக் கழுவ வேண்டும் என்றுதான் நினைப் பார்கள்.

பெரும்பான்மையைச் சட்டப்பேரவையில் நிரூபிக்க வேண்டிய கட்டாயத்துக்கு ஆளான நிலையில், ஆளும்கட்சி சட்டமன்ற அவைத் தலைவரைப் பயன்படுத்திக் கொண்டு, நம்பிக்கை வாக்கெடுப்பில் எதிர்த்து வாக்களிப்பார்கள் என்ற நிலையில், 16 சட்டப்பேரவை உறுப்பினர்களை தகுதி நீக்கம் செய்தது என்றால், இந்த அநீதியை, அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தும் கேவலத்தை என்னவென்று சொல்லுவது!

எந்த அடிப்படையில் 16 உறுப்பினர்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டனர்? அதற்கொரு அடிப்படை இருக்கவேண்டாமா? கட்சியை விட்டு நீக்கப்பட்ட வர்களா? கொறடா கட்டளையை மீறி நடந்து கொண்டார்களா? இவை எதுவும் அதிகாரப்பூர்வமாக இல்லாத நிலையில், ஒரு யூகத்தின் அடிப் படையில் சட்டப்பேரவைத் தலைவர் 16 உறுப்பினர் களை நீக்குவது எப்படி சரியாகும்?

சட்டசபை நடவடிக்கைகளில் நீதிமன்றம் தலையிட முடியாது என்கிற பாதுகாப்பை ஒரு சுயநல சூழ்ச்சிக்குப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறது பாரதீய ஜனதா கட்சி என்றுதானே பொருள்?

கடந்த இரு ஆண்டுகாலமாக கருநாடக மாநிலத்தில் பா.ஜ.க. ஆட்சியில் நடந்துவரும் ஊழல்கள் - அமைச்சர்கள் நீக்கம் - அமைச்சர்கள் சேர்க்கை என்று ஓடிப் பிடித்து விளையாடும் ஆட்டம் சிறுபிள்ளை விளையாட்டு பொதுமக்கள் மத்தியிலே கேலிக்குரியதாக ஆக்கப்பட்டுவிட்டது.

சிறீராம் சேனை என்ற பெயரில் சிறுபான்மை மக்களைச் சீண்டுவது என்பது சர்வசாதாரணமாக ஆனது. கலாச்சாரக் காவலர்களாகத் தங்களைத் தாங்களே அறிவித்துக்கொண்டு சட்டத்தைக் கையில் எடுத்துக்கொண்டு குதியாட்டம் போட்டனர்.

இந்த முகத்தை வைத்துக்கொண்டு மற்ற கட்சி ஆட்சிகளை குறைகூறும் யோக்கியதை இவர்களுக்கு உண்டா?

பிகாரில் நடைபெறவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலில்கூட குற்றப் பின்னணி உள்ள வேட்பாளர்களை அதிகம் நிறுத்தியதில் முதல் பரிசு பெறுவது பா.ஜ.க.தான்.

தொடக்க முதலே கருநாடக மாநிலத்தை ஆண்டு கொண்டிருக்கும் பா.ஜ.க.வுக்குள் பிரச்சினை, பிரச்சினைதான்.

மேலிடத் தூதுவர் வந்து சமாதானம் செய்து வைத்து விட்டுப் போவது வாடிக்கையும், வேடிக்கையுமாகப் போய்விட்டது.

சொந்த கட்சிக்காரர்களே காலை வாருகிறார்கள் - இனி அவர்களை நம்பிப் பயன் இல்லை என்று முதலமைச்சர் எடியூரப்பா கோயில் கோயிலாகச் சுற்ற ஆரம்பித்தார்.

அய்ந்து கோயில்களுக்காவது குடமுழுக்கு நடத்தினால், சோதனைகளிலிருந்து விடுபடலாம் என்று ஜோதிடர் கூற்றை நம்பிக்கொண்டு கோயில் கோயிலாகச் சுற்றினார்.

கருநாடக மாநிலத்தில் உள்ள கோயில்கள் போதாது என்று தமிழ்நாட்டுக்கும் படையெடுத்தார்.

காரைக்காலையடுத்த கோயில் ஒன்றுக்கு ரூ.40 லட்சம் நன்கொடை கொடுத்தார்.

இவ்வளவு செய்தும்கூட பிள்ளை பிழைக்க வில்லை - விளக்கெண்ணெய்க்குத்தான் கேடாய் முடிந்தது.

நேற்று வாக்கெடுப்பில் சூழ்ச்சியின் பின்னணியில் எடியூரப்பா தன் பதவி தப்பித்தது என்று நிம்மதி பெருமூச்சு விடலாம். சபாநாயகர் நடந்துகொண்ட சட்ட விரோத செயல் பிரச்சினைக்குரியதாக ஆக்கப்படும் என்பதில் அய்யமில்லை. அடுத்தடுத்து பா.ஜ.க., ஆளும் கருநாடக மாநிலத்தில் சுவையான பல திருப்பங்கள் அரங்கேறத்தான் போகின்றன.

தென் மாநிலத்தில் ஒரே ஒரு மாநிலத்தில் ஆட்சியைப் பிடித்ததோடு, அவர்களின் கதை முடிந்துவிடக் கூடிய நிலைதான் - நமது ஆழ்ந்த அனுதாபங்கள்!

---------------"விடுதலை” தலையங்கம் 12-10-2010

0 comments: