மார்க்சு - ஏங்கல்சு
மார்க்சு - ஏங்கல்சு இந்த இருவரும் புதிய வெளிச்சம் பாய்ச்சியவர்கள். இவர்கள் 1847 இல் வெளியிட்ட அறிக்கை உலகப் பந்தையே குலுக்கி எடுத்தது!
இந்த அறிக்கையை இந்தி யாவிலேயே முதன்முதலில் தமிழில் மொழி பெயர்த்து வெளியிட்ட உண்மையான புரட்சித்தலைவர் தந்தை பெரியாரே! 4.10.1931 நாளிட்ட (இந்நாள்) குடிஅரசு இதழில் வெளியிடப்பட்டது.
ருசியாவுக்குப் பெரியார் சென்றதால், அதன் தாக்கத்தின் காரணமாக இவ்வாறு செய்திருக்கலாம் என்று சிலர் கருதக்கூடும்.
அதுவும் உண்மையல்ல - அவர் மேனாட்டுச் சுற்றுப் பயணத்தை மேற்கொண்ட நாள் 13.12.1931; அதற்கு இரு மாதங்களுக்கு முன்னதாகவே இதனை வெளியிட்டு விட்டார் என்பதுதான் புரட்சிக் கோடிட்டுக் காட்டத்தக்கதாகும்.
இந்த அறிக்கையை வெளியிட்ட தந்தை பெரியார் அதற்கொரு முகவுரையையும் எழுதியுள்ளார்.
நியாயப்படி பார்த்தால் சமதர்ம உணர்ச்சி உலகில் ரஷியா தேசத்தைவிட இந்தியா வுக்கே முதன்முதலில் ஏற்பட்டிருக்க வேண்டியதாகும். ஆனால், அந்தப்படி ஏற்படாமல் இருப் பதற்கு இங்கு அனேக விதமான சூழ்ச்சிகள் நடைபெற்று வந்தி ருப்பதாலும், சூழ்ச்சிக்காரர்கள் இந்திய மக்களை வெகு ஜாக்கிர தையாகவே கல்வி, அறிவு, உலக ஞானம், சுயமரியாதை உணர்ச்சி முதலியவைகள் பெறுவதற்கு மார்க்கமில்லாமல், காட்டுமிராண்டித் தன்மையில் வைத்து வந்ததோடு, கடவுள் பேராலும், மதத்தின் பேராலும் ஏற்படுத்தப்பட்ட உணர்ச்சி யானது - அடிமையாக இருப்பதே கடவுள் சித்தம் என்றும், மோட்ச சாதனம் என்றும் புகட்டி வந்த தாலும், அதே சூழ்ச்சிக்காரர்கள் அடிக்கடி வேற்றரசர்களை அழைத்து வந்து மக்களை மிருகத்தனமான ஆதிக்கத்தில் அடக்கி ஆளச் செய்து வந்த தாலும், உலகில் சமதர்ம உணர்ச்சி முதன்முதலில் இந்தி யாவிலேயே ஏற்பட்டிருக்க வேண்டியது மாறி ரஷியாவுக்கு முதல் ஸ்தானம் ஏற்படவேண் டியதாயிற்று...
உலகில் சமதர்ம உணர்ச்சிக்கு விரோதமான தன்மைகளில் மற்ற தேசத்திற்கும், இந்தியாவுக்கும் ஒரு முக்கிய வித்தியாசம் இருந்து வருகிறது. அதாவது, முதலாளி (பணக் காரன்), வேலையாள் (ஏழை) என்பதுவேயாகும். ஆனால், இந்தியாவிலோ மேல்ஜாதியார் - கீழ் ஜாதியார் என்பது ஒன்று அதிகமாகவும் முதன்மையான தாகவும் இருப்பதால் அது பணக்காரன் - ஏழைத் தத்துவத்திற்கு ஒரு கோட்டையாய் இருந்து காப்பாற்றிக் கொண்டு வருகின்றது (குடிஅரசு, 4.10.1931, பக்கம் 3) என்று குறிப்பிட்டுள்ளார்.
உலகில் பொதுவுடைமை ஆட்சி முதலாவதாகப் பூத்த ருசியாவில் இன்று அந்த நிலை இல்லாது போனது பெரும் வருத்தத்திற்குரியது. அங்கு ஏற்பட்ட வீழ்ச்சி உலகின் பல் வேறு பகுதிகளிலும் அது தாவிப் படர்வதைத் தடுத்து நிறுத்தி விட்டது.
புதிய பொருளாதாரக் கொள்கை என்கிற திரிசூலத்தின் (தனியார் மயம், தாராளமயம், உலக மயம்) தாக்குதலுக்குச் சிக்காத நாடு ஏதும் இல்லை என்ற நிலை ஏற்பட்டுவிட்டது.
தமிழ்நாடு சமூகநல வாரி யத்தின் தலைவராக இருக்கக் கூடிய கவிஞர் சல்மா சீன அரசின் அழைப்பை ஏற்று ஒரு மாதம் அங்கு சுற்றுப்பயணம் செய்து திரும்பியுள்ளார்.
சீனாவைப்பற்றி அவர் கணித்துச் சொல்லியிருப்பது கவனிக்கத் தக்கதாகும்.
கம்யூனிஸ நாடு என்பதற்கு எந்த அடையாளமும் இப்பொழுது சீனாவில் இல்லை. உலகப் பொருளாதாரத்திற்கு முழுமையாகத் தன்னை தகவமைத்துக் கொண்டுவிட்டது சீனா (குமுதம், 29.9.2010) என்று சொல்லியிருக்கிறார்.
பெரியாரியல் பார்வையில் பகுத்தறிவு சமதர்ம சுயமரியாதை வெளிச்சத்தை உலகின் ஒவ்வொரு சந்து முனைக்கும் கொண்டு செல்லும்போது காலத் துக்கேற்ற பொதுவுடைமைச் சிந்தனை பூத்துக்குலுங்கிட அதிக வாய்ப்புண்டு.
----------------- மயிலாடன் அவர்கள் 4-10-2010 “விடுதலை” யில் எழுதிய கட்டுரை
0 comments:
Post a Comment