தானம்!
நாவலர் சோமசுந்தர பாரதி யார் மெத்த படித்தவர் - சைவத்தில் ஆழ்ந்த நம்பிக்கை கொண் டவர் - தமிழ் மொழிமீது அளவிறந்த பற்றுக்கொண்டவர்.
1938 இல் தந்தை பெரியார் தலைமையில் நடைபெற்ற இந்தி எதிர்ப்பின்போது தந்தை பெரியார் அவர்களின் நம்பிக்கைக்குரிய தளகர்த்தராகத் திகழ்ந்தவர்.
மறைமலை அடிகள் போன்றே பார்ப்பனியம் எந்த வகையிலும் தலையெடுப்பதை, ஊடுருவல் செய்வதை ஏற்காதவர். தமது திருமணம் நடந்தது பற்றி அவர் கூறியிருப்பது கவனிக்கத்தக்கதாகும்.
என்னுடைய 14 வயதிலே எனக்குக் கல்யாணம் நடந்த போது நேரிட்டதைச் சொல்கிறேன். எட்டையபுர சமஸ்தானத்தில் ஒரு கிராமத்திலே, நாகரிக உணர்ச்சி பரவ முடியாத ஊரிலே எனக்குக் கல்யாணம். நான் வைதீக உணர்ச்சி உள்ளவன். நல்ல சைவன் - இப் பொழுது இருக்கும் சைவம் போன்றதல்ல. என்னுடைய சிவ நெறி வேறு. இன்று சைவப் பண்டிதர்கள் கூறும் சைவம் நான் கொள்வதல்ல. உண் மையே எனக்குச் சிவம். எனக்குக் கல்யாணம் பார்ப்பனரை வைத்துச் செய்வதாகக் கூறினார்கள். அப்படிப்பட்ட கல்யாணம் எனக்கு வேண்டாம் என்றேன். சைவ ஆகமங்களின்படி பார்ப்பனர்களைச் சண்டாளர்கள் என்று கூறப்பட்டிருக்கிறது. கோவில்களில் அவர்கள் துவ ஜஸ்தம்பத்துக்கு அப்புறம் நுழை யக்கூடாது. வந்தால் தீட்டாகி விடும் என்று ஆகமம் கூறுவதால், அப்படிப்பட்ட சண்டாளர் களைக் கொண்டு நான் கலியாணம் செய்துகொள்ள மாட் டேன் என்றேன். என் குடும்பத்தார் திருநெல்வேலிக்கும், மதுரைக்கும் போய் பண்டிதர்களைக் கேட்டார்கள். திருநெல்வேலி பண்டிதர்கள் கூட சரியாகச் சொல்லவில்லை. மதுரையிலிருந்த பண்டிதர்கள் பையன் சொல்லுவது உண்மைதான். ஆகமம் அப்படித்தான் கூறுகிறது என்று சொன்னார்கள் என்று நாவலர் பசுமலை சோமசுந்தர பாரதியார் கூறியுள்ளார். கூறினார் என்றால், அவர் கூறிய இடமும் வரலாற்றுச் சிறப்புமிக்க முக்கிய நிகழ்ச்சியில்;
கம்பராமாயணம் - பெரிய புராணம் கொளுத்தப்படவேண் டுமா? வேண்டாமா? என்ற விவாதப் போரில் சேலத்தில் அறிஞர் அண்ணாவுடன் நாவலர் பாரதியார் சொற்போர் நடத்தினார் அல்லவா (14.3.1948) அந்த நிகழ்ச்சியில்தான் நாவலர் பாரதியார் அவ்வாறு கூறினார்.
அந்த விவாதப் போர் தீ பரவட்டும் என்ற நூலாகவும் வெளிவந்துள்ளது. அதில் நாவலரின் இந்தக் கூற்று இடம் பெற்றுள்ளது.
சாத்திரப்படி பார்த்தாலும் பார்ப்பனர்களை அழைத்து கலியாணம் நடத்துவதுகூட குற்றம்தானே. சொல்லுவது கருஞ்சட் டைத் தோழர்கள் அல்லவே! சொன்னவர் சைவத்தில் பழுத்த பெரும் புலவராயிற்றே!
நாவலர் பாரதியாரின் இந்தக் கூற்றுக்கு எந்தப் பார்ப்பன வட்டாரமும் இதுவரை பதில் சொன்னதாகத் தெரியவில்லையே!
சைவத்தின் நிலை இது என்றால், இந்து மதத்தின் பராசஸ்மிருதியோ பார்ப்பானுக்குத் தானம் கொடுக்கச் சொல்லுகிறது! அப்படி தானம் பெறும் தகுதியுடைய பார்ப்பனர்கள் யார் என்றும் அந்த ஸ்மிருதி வரையறை செய்கிறது.
அந்தப் பிராமணர் வேதம் படித்திருக்கவேண்டும்; தபசு செய்யவேண்டும்; ஒழுக்கம் வேண்டும். இம்மூன்றும் உள்ளவனாக அந்தப் பிராமணன் இருந்தால் சம்பாதித்த பொருளை நல்வழியில் செலவழிக்கவேண்டும். இவனும் ஒரு தடவை தானம் வாங்கிவிட்டால், இன்னொரு தடவை தானம் வாங்கக் கூடாது. தேவகர்மமோ, பிதுர்கர்மமோ ஒருவருக்கு ஒரு நாள் செய்திருந்தாலும், அவனுக்குக் கொடுக்கும் எல்லா தானமும் வீண். இத்தகையவனுக்குக் கொக்குப் பார்வை உடையவன் என்று ஸ்மிருதி கூறுகிறது. ஒரு புத்திரனே புத்திரன், மற்ற புத்திரர்கள் எல்லாம் காமப் புத்திரர்கள். இத்தகையவர்களுக்குத் தானம் கொடுத்தால், புத்திர ஹானி ஏற்பட்டுவிடும். மூன்று வேளைக்குமேல் உணவுக்கான பொருள்களை அந்தப் புரோகிதன் வைத்திருக்கக் கூடாது. அப்படி வைத்திருந்தால், அவனுக்குத் தானம் கொடுப்பவன் நரகத்துக்குப் போவான் என்று பராச ஸ்மிருதி கூறுவதாக சாமி கைவல்யம் விவரிக்கிறார்.
தானம் கொடுக்கும் தனவந்தர்களே, சூத்திரர்களே! இந்தத் தகுதி உடைய புரோகிதன் எங்காவது உண்டா? இல்லையென்றால், இவர்களுக்குத் தானம் கொடுத்து நரகத்துக்குத்தான் போகப்போகிறீர்களா? - எச்சரிக்கை!
-------------- மயிலாடன் அவர்கள் 19-10-2010 “விடுதலை “யில் எழுதிய கட்டுரை
0 comments:
Post a Comment