Search This Blog

5.10.10

அழிவு வேலைக்காரர்கள் நாம் -பெரியார்


கேரள சீர்திருத்த மகாநாடு


சகோதரிகளே! சகோதரர்களே!!

இன்று இங்கு இவ்வளவு பெரிய கூட்டத்தையும், வாலிபர்களுடைய உற்சாகத்தையும் பார்க்க எனக்கு அளவிலா மகிழ்ச்சி ஏற்பட்டிருக்கின்றது. ஆனால் உங்கள் பாஷையாகிய மலையாளத்தில் பேச எனக்குத் தெரியாம லிருப்பதற்கு வருந்துகின்றேன். எனினும் ஏதோ எனக்குத் தெரிந்த சாதாரண தமிழ் பாஷையில் என்னுடைய அபிப்பிராயத்தை வெளியிடுகிறேன். ஒருவாறாக உங்களுக்கு அது புரியக் கூடும் என்று கருதுகின்றேன்.

சகோதரர்களே! மகாநாட்டைத் திறந்து வைத்த பொழுது நமது நண்பர் திருவாளர் ராமவர்மா தம்பான் அவர்கள் செய்த பிரசங்கத்தில் அநேக விஷயங்கள் சொல்லி இருக்கின்றார்கள். அவைகள் நான் உங்களுக்குச் சொல்ல வேண்டுமென்று கருதி இருந்தவைகளுக்கும் மேலாகவே சொல்லப்பட்டிருப்பவைகளாகும். ஆகையால் இப்போது நானும் அதைத்தான் திருப்பிச் சொல்ல வேண்டிய நிலையில் இருக்கின்றேன்.

இன்று இங்கு கூடிய இந்த மகாநாட்டிற்குக் கேரள சீர்திருத்தச் சங்க மகாநாடு என்று பெயர் கொடுக்கப் பட்டிருக்கிறது. ஆனால் திருவாளர் தம்பான் அவர்கள் சொன்னபடிக்கு நமது லட்சியத்தின்படி பார்ப்போமானால் சீர்திருத்தம் செய்யப்படவேண்டிய காரியம் ஒன்றுமே இருப்பதாக எனக்குப் புலப்படவில்லை. ஒரு பெரிய தலைகீழான புரட்சியேதான் நாம் செய்ய வேண்டிய வர்களாய் இருக்கின்றோம்.

ஆதலால் இச்சங்க மகாநாட்டில் இந்நாட்டுக்கு ஏதாவது பயன் ஏற்பட வேண்டுமானால் இதைக் கேரள புரட்சிச் சங்க மகாநாடு என்றுதான் சொல்லவேண்டும். ஏனெனில் நமது முன்னேற்றத்திற்கும் மனிதத் தன்மைக்கும் இயற்கைக்கும் விரோதமாய் இருக்கும் மதம், ஜாதி முதலிய காரியங்களில் சீர்திருத்தம் செய்யத்தக்க பாகமோ, மீத்துவைத்துக் கொள்ளத்தக்க பாகமோ ஒரு சிறிதுமே கிடையாது. ஆதலால் தான் அவைகளை அடியோடு அழிக்க வேண்டியவர்களாய் இருக்கின்றோம்.

அதோடு இல்லாமல் அவை களுக்கு அதிகமாக ஆதரவளித்து வரும்படியான கடவுள் உணர்ச்சியென்பதையும் நாம் அழித்துத் தொலைக்க வேண்டியவர்களாய் இருக்கின்றோம். ஆகவே இந்த நாட்டு மக்களால் மாத்திரமல்லாமல் பொதுவாக உலக மக்களாலேயே மிக்க பிரதானமாய்க் கருதப்படும்படியானவைகளான மேற்கண்ட ஜாதி மதம், கடவுள் உணர்ச்சி ஆகியவைகளையெல்லாம் அடியோடு அழிப்பது என்பதை யாரும் சீர்திருத்த வேலை என்று சொல்ல முடியாது.

தைரியமாய்ச் சொல்வதானால் நாம் அவற்றை ஓர் அழிவு வேலை என்பதாகவே கருதி நம்மையும் அழிவு வேலைக்காரர்கள் என்றே சொல்லிக் கொள்ள வேண்டும். ஆகையால் தான் நமது சுயமரியாதை இயக்கம் இதையே தனக்குத் தலையான கொள்கையாகக் கொண்டிருக்கின்றது. இந்தக் காரியங்களைச் செய்யப் பயந்தவர்களால் உண்மையான ஒரு முற்போக்குக் காரியமும் செய்து விட முடியாது.

இந்த நாட்டில் சீர்திருத்த வேலைகள் வெகுகாலமாக செய்யப்பட்டு வந்திருக்கின்றன. செய்தவர்களையெல்லாம் சாதாரண மனிதர்களாய் கூடக் கருதாமல் பெரிய தெய்வத் தன்மை பொருந்தினவர்களாகவும், விசேச அவதார புருஷர்களாகவும் மகாத்மாக்களாகவும் கூடக் கருதப்பட்டு வந்திருக்கின்றனர். ஆனால் அவர்களால் ஆன வேலை என்னவென்று பார்ப்போமானால் குளிக்கப்போய் சேற்றைப் பூசிக் கொண்டு வந்த பலன் போலதான் ஏற்பட்டு வந்திருக்கின்றனவே அல்லாமல் வேறில்லை.

இப்படி இருந்தும் இனியும் அதே துறையில் அநேகர் பாடுபடு கின்றார்கள் என்றாலும், அவர்களாலும் இன்று பலனுள்ள ஒரு காரியமும் நடத்த முடியவில்லை. நடைபெறுமென்ற நம்பிக்கையுமில்லை. காரணம் என்னவென்றால், அவர்கள் மக்களுக்கு எந்தெந்த பலன் ஏற்படவேண்டும் என்கிறார் களோ அந்தந்தப் பலன்களுக்கு எதிராயிருக்கும் அஸ்தி வாரமான தடைகளை நீக்கும் விஷயத்தில் அவர்கள் சிறிதும் சம்மதிப்பதில்லை. அதன் கிட்டப் போவதற்கே பயப்படு கின்றார்கள். மற்றும் பலர் அவைகளைக் காப்பாற்றிக் கொண்டே சீர்திருத்தம் அடைய வேண்டும் என்கின் றார்கள்.

ஆதலால்தான் அப்படிப்பட்டவர்களால் இதுவரை ஒன்றும் செய்ய முடியவில்லை. ஒரு கானலை அதாவது காட்டை விவசாயம் செய்யும்படியான வயல்களாக ஆக்க வேண்டுமானால் முதலில் அதிலுள்ள புதர்களையும் முட்களையும், செடி, கொடிகளையும் பிடுங்கி நெருப்பிட்டுக் கொளுத்தி ஆகவேண்டும். பிறகு மேடுகளை வெட்டி பள்ளத்தில் போட்டு நிரவவேண்டும், கல்லுகளையும், பாறைகளையும் உடைத்து வெளியாக்க வேண்டும். இந்தக் காரியங்களெல்லாம் செய்த பிறகே அந்த பூமி எந்த விதமான வெள்ளாமை செய்யப் பயன்படும் என்று கருதி அதற்கேற்ற எருக்களிட்டு, பயிர்களைச் செய்து பயன்பெற வேண்டும்.

அப்படிக்கில்லாமல் உள்ள நிலையிலேயே பயிர் செய்வதானது மனிதனது முயற்சியும், ஆற்றலும் விதைப் பண்டமும் வீணாய் போவதுடன் பயனற்ற கொடியும் செடியும் மேலும் வளர்ந்து துஷ்ட மிருகங்களும், விஷ ஜந்துக்களும் தாராளமாய்க் குடியிருக்கத்தகுந்த புதர்களாகத்தான் ஏற்பட்டு விடும். ஆகையால் நாம் இப்போது புதர் களிலுள்ள கொடி, செடி, முள், புல், பூண்டு ஆகியவைகளை அழித்து நெருப்பு வைத்துக் கொளுத்தும் வேலை யில் இருக்க வேண்டியவர்களாய் இருக்கின்றோம்.

இந்த வேலை செய்யும் முன் பயிர்செய்யும் வேலையில் நாம் ஒரு காலமும் புகக்கூடாது. மேடு பள்ளங்களைச் சமனாக்காமல் அதில் தண்ணீர் பாய்ச்சும் வேலையை நாம் தொடங்க மாட்டோம். ஏனெனில் நாம் பாய்ச்சும் தண்ணீரெல்லாம் ஏற்கனவே தண்ணீர் நிறைந்திருக்கும் பள்ளத்திற்கே போய்ச் சேர்ந்து விடும். மேட்டிற்கு எவ்வளவு தண்ணீர் பாய்ச்சினாலும் அங்கு கொஞ்சம் கூடத் தங்காது.

ஆகவே, தைரியமான அழிவு வேலை - அதாவது காட்டைத் திருத்தி மேட்டை வெட்டி பள்ளத்தில் போட்டு சமனாக்கும் சமத்துவ வேலையைக் கைக்கொள்ள வேண்டும். அதற்கு பயப்படக் கூடாது. இந்த வேலையில் நமக்குப் பெரிதும் கஷ்டமுண்டு என்பதையும் மனதில் வைக்க மறந்து விடக் கூடாது. புதர்களில் இருந்து கொண்டு சுகமாய் வாழ்ந்து வரும் ஜந்துக்களால் நமக்கு பல ஆபத்துகள் ஏற்படலாம். அதற்கும் துணிந்து தைரியத்தோடு தான் அழிவு வேலை செய்ய வேண்டியிருக்கின்றது.

ஆகவே, சகோதரர்களே! இப்போது நமது நாட்டில் ஆக்க வேலை செய்வது என்பது சாத்தியப்படாதது என்பதை நான் உங்களுக்குத் தெரிவித்துக் கொள்ளுகின்றேன். பாழும் மதத்தின் பேரால் உலகமே பல பிரிவுகளாக பிரிந்து கிடக்கின்றது. குறிப்பாக, நமது நாடு மதத்தின் பேரால் பிரிந்தது மாத்திரமல்லாமல், ஜாதிகளின் பேரால் பல பிரிவுகளாகப் பிரிந்து கிடக்கின்றன.

இவை மாத்திரமல்லாமல் பணக்காரன் - ஏழை, படித்தவன் - பாமரன் என்கின்ற பிரிவுகளும் நிரந்தரமாய் இருக்கும்படி ஏற்பாடுகள் ஆகிக் கொண்டும் வருகின்றன. இந்தப்படி நிரந்தர மாயிருக்கும் படியாக ஏற்பாடு செய்து கொண்ட மேல் ஜாதி, கீழ் ஜாதி முதலாகிய பிரிவுகளை அழிக்க ஆரம்பித்தால் இதை ஆதரவாய்க் கொண்டு மற்றொரு கெடுதி நமது நாட்டில் நிரந்தரமாய் இருக்கும்படியாக அதாவது, பணக்காரன் ஏழை என்கின்ற பிரிவு நிரந்தரமாய் இருக்கும்படியாக ஒரு புது முயற்சி நமது நாட்டில் இப்போது அதிகமாகச் செய்யப்பட்டு வருகின்றது.

முதலாளி, தொழிலாளித் தன்மையும் நிரந்தரமாய் இருக்க ஏற்பாடாகி வருகின்றது. இவைகள் எல்லாம் அரசியல் கிளர்ச்சியாலும் சீர்திருத்த முயற்சி யாலுமே தான் செய்யப்படுகின்றது. அதாவது இவ் வேற்பாடு களைத்தான் இன்றைய முன்னேற்றமென்றும், சீர்திருத்த மென்றும், சுதந்திரமென்றும் சொல்லப்பட்டு வருகின்றன. நமது பாமர ஜனங்கள் இதன் இரகசியத்தைத் தெரியாமல் அதில் விழுந்து விளக்கில் விட்டில் பூச்சிகள் விழுவது போல் விழுந்து மடிந்து வருகின்றார்கள்.

இதற்காகவே தான் கடவுளும், மதமும், ஜாதியும், அரசியலும் ஏற்படுத்தப்பட்டதென்றும், அந்தப்படியே பயன்படுத்தப்பட்டு வருகின்றதென்றும் நான் உறுதியாய்க் கூறுகிறேன். இவைகளையெல்லாம் அடியோடு ஒழிப்பதுதான் நாம் மனித சமுகத்திற்குச் செய்ய வேண்டிய உண்மையான தொண்டாகும். இதை விட்டுவிட்டுச் செய்யும்படியான வேறு எந்தத் தொண்டும் மனித சமுகத்திற்குக் கேடு விளை விப்பதாகும்.

ஆகவே நாட்டிற்கு நன்மை செய்வதாய்க் கூறிக்கொண்டு மக்களை மீளாத அடிமையிலும், கொடுமையிலும் ஆழ்த்தப் போகும் பாதகமான வேலைகளை எல்லாம் கூட நாம் அழிக்க வேண்டியவர்களாய் இருக்கின்றோம். நாட்டுச் செல்வங்களை நாட்டிலுள்ள மக்களில் சிலர் தங்கள் தேவைகளுக்கு மேலாகவும் தகுதிக்கு மேலாகவும் சேர்த்து வைத்துக் கொண்டு அவை களையெல்லாம் அக்கிரமமான வழியில் செலவு செய்து கொண்டு மக்களை அடிமைப்படுத்தி ஆனந்தமாய் வாழ்ந்து கொண்டு இருக்கின்ற மக்களேதான் இன்று இந்த நாடு தரித்திர நிலையில் இருக்கின்றது விடுதலை பெற வேண்டும் என்று பாசாங்கு செய்கின்றார்கள். கஷ்டப்படும் மக்களும், ஏழை மக்களும் தங்கள் மீது திரும்பாமல் இருக்கட்டும் என்று அன்னிய நாட்டுக்காரர்களை நமக்குக் காட்டி நம்மை அந்தப்பக்கம் திருப்பி விடுகின்றார்கள்.

சாதாரணமாக, நாம் குழந்தைகளிடம் இருந்து ஏதாவது சாமான்கள் எடுத்துக்கொள்ள வேண்டுமென்றால், எப்படி அதற்கு வேறு ஒரு வேடிக்கையைப் பார்க்கச் சொல்லி ஆகாயத்தைப் பார், அந்தப் பக்கம் பார் என்பதாக பராக்குக் காட்டி, அது அந்தப் பக்கம் திரும்பிப் பார்க்கும் போது நாம் அந்த சாமானை எடுத்துக் கொள்ளுகின்றோமோ அது போலவே பாமர மக்களை சுயராஜ்யம் பார், பூரண சுயேச்சையைப் பார், மோட்சம் பார், கடவுளை பார் என்று பராக்கு காட்டி அவர்கள் வேலையின் பயனையும் அவர்களது செல்வத்தின் பங்குகளையும் சிலரே கொள்ளை அடித்துக் கொள்ளுகின்றார்கள். இந்தக் கூட்டத்தாரின் தந்திரமே தான் இந்த நாட்டில் தரித்திரம் என்பதற்கும் அடிமைத்தனம் என்பதற்கும் அறிவும் ஆராய்ச் சியும் அற்றதனம் என்பதற்கும் ஆதாரமாய் இருக்கின்றன.

இந்த நாட்டின் செல்வத்தில் எவ்வளவு பெரிய பாகம் மதமும் கடவுளும் என்கின்ற பேரால் வேலை செய்யாத சோம்பேறிகள் அனுபவிக்கின்றார்கள் என்பதை நமது மூட ஜனங்கள் அறியாமலேயே இந்த நாடு தரித்திரமான நாடு என்று அழுகின்றார்கள்.

இந்த நாட்டில் உள்ள சந்நியாசிகள், துறவிகள், மதாச்சாரிகள் என்பவர்களுக்கு உள்ள சொத்துகளும், வரும்படிகளும் வேறு யாருக்காவது இருக்கின்றதென்று யாராவது சொல்ல முடியுமா? அவர்களுக்கு எதற்காக அவ்வளவு சொத்தும் வரும்படியும் வேண்டி இருக்கின்றதென்று எந்த பொருளாதாரவாதியாவது கவனிக்கின்றானா? ஒரு சந்நியாசி கோடிக் கணக்கான ரூபாய் சொத்தும் வருஷத்தில் லட்சக்கணக்கான ரூபாய்கள் வரும்படியும் உடையவனாக இருந்தால் அந்த நாடு ஏழை நாடு, தரித்திர நாடு என்று யாராலாவது சொல்ல முடியுமா என்று கேட்கின்றேன். ஒரு முழம், முக்கால் முழம் உயரமுள்ள குழவிக் கல்லுகளுக்கு நமது நாட்டில் எத்தனை கோடி ரூபாய்கள் சொத்தும் எத்தனை லட்ச ரூ. வரும்படியும் இருக்கின்றன வென்று பாருங்கள்.

இப்படி எத்தனை நூற்றுக்கணக்கான, ஆயிரக்கணக்கான குழவிக்கல்லுகள் நமது நாட்டில் செல்வத்தோடு யானை, ஒட்டகம், குதிரை, பல்லக்கு, தேர், ரதம் முதலிய வாகனங்களோடு பல பெண்டாட்டிகளோடு பல கலியாணங்களோடு வாழ்கின்றன என்பவைகளை நேரில் பார்க்கும் ஒரு யோக்கியன் உண்மையில் நமது நாடு தரித்திரமுள்ள நாடு என்று சொல்ல வருவானா?

இதை எந்த பொருளாதார நிபுணனாவது கவனித்து நமது நாடு தரித்திரமுள்ள நாடு என்று சொல்லுகின்றானா? மற்றும் பிரபுக்கள் செல்வவான்கள் லட்சுமி புத்திரர்கள் என்று சொல்லிக் கொண்டு எத்தனை ஆயிரக்கணக்கான ஏக்கர் பூமிகள் உடையவர்களும் எத்தனை ஆயிரக்கணக்கான ரூபாய்கள் இன்கம்டாக் வரிகொடுக்கக் கூடிய லாபம் அனுபவித்துக் கொண்டு லட்ச லட்சமாய் கோடி கோடியாய் பொருள் சேர்த்து தாசிவேசி ராஜபோகம் அனுபவித்துக் கொண்டு நிரந்தர ராஜாவாகவும் நிரந்தர ஜமீனாகவும் நிரந்தர பிரபுவாகவும் நிரந்தர பாளையக்காரராகவும் இருக்க முயற்சி மேல் முயற்சி செய்து கொண்டு இருக்கும் மக்கள் பல நூற்றுக் கணக்காக ஆயிரக்கணக்காக இருந்து கொண்டு இருக்கும் இந்த நாட்டை தரித்திரமுள்ள நாடு என்று யாராலாவது சொல்ல முடியுமா?

மற்றும் நாள் ஒன்றுக்கு 100, 200, 500, 1000, ரூபாய்கள் வீதம் சம்பாதிக்கும் வக்கீல்களும் டாக்டர்களும் ஏராளமாய் இருந்து கொண்டு ஒவ்வொருவரும் அய்ம்பதாயிரம், லட்சம், அய்ந்து லட்சம் பெறும்படியான பங்களாக்களில் வாழ்ந்து கொண்டு நிலத்தில் கால் படாமல், நகத்தில் அழுக்குப்படாமல், சரீரத்தில் வேர்வை இல்லாமல் பிழைத்துக் கொண்டிருக்கும் மக்கள் பல ஆயிரக்கணக்காக லட்சக்கணக்காக வாழும் இந்த நாட்டை தரித்திரமுள்ள நாடு என்று யாராவது சொல்ல முடியுமா என்று யோசித்துப் பாருங்கள்.

மற்றும் இந்தக் கூட்டத்தினர்கள்தானே இன்றைய தினம் இந்த நாடு தரித்திர நாடு, ஏழை நாடு, அடிமை நாடு, சுதந்திர நாடு என்றும் ஆக வேண்டும் சுயராஜ்ஜிய நாடு ஆக வேண்டும் என்றும் பிரமாதமாய்க் கூப்பாடு போடுகின் றார்கள். ஒவ்வொரு காலத்திலும் வருகின்ற சீர்திருத்தங்களில் எல்லாம் இந்த மாதிரி ஜனங்கள்தானே நமது பிரதிநிதிகளாய் இருந்து நமக்காக என்று ஆட்சி புரிந்து வருகின்றார்கள். இப்படிப்பட்டவர் களுக்குத் தானே இன்னமும் அதிகாரமும், பெருமையும் கீர்த்தியும், பணமும், வரவும் ஏற்படவும் நாம் மதத்தையும், கடவுளையும், ஜாதியையும் காப்பாற்ற முயற்சிப்ப தோடு சுயராஜ்ஜியமும் பெற வேண்டுமென்று பெரிய பாடுகளைப் படுகின்றோம்.

நமது நிலைக்குக் காரணமென்ன? நமது தரித்திரத்திற்கு யார் காரணம்? நமது செல்வமும் பாடும் என்ன ஆகின்றது? என்கின்ற அறிவு நமக்கு இல்லாமல் இருக்கிற முட்டாள்தனமே நமது இன்றைய இழிவு நிலைக்குக் காரணமாயிருக்கின்றது. மதத்தையாவது ஜாதியையாவது கடவுளையாவது உண்மை யென்று நம்பி அவைகளைக் காப்பாற்ற முயற்சிக்கும் எவனா லும் மக்களுக்கு சமத்துவமும் அறிவும் தொழிலும் செல்வமும் ஒருக்காலும் ஏற்படவே ஏற்படாது என்பது எனது உறுதி.

ஆனால் இவைகளை அழிக்க மக்கள் ஒரு காலமும் சம்மதிக்க மாட்டார்கள். இவைகளைக் காப்பற்ற அனேக விதமான ஸ்தல ஸ்தாபனங்கள் ஆதியிலேயே ஏற்பாடு செய்யப் பட்டு வந்து குழந்தைப் பருவ முதலே நமக்குள் புகுத்தப்பட்டு வந்திருப்பதால் இது சுலப சாத்தியமான காரியமாக இருக்க முடியவில்லை.

இவைகளில் எங்கு கைவைத்தாலும் நமது எதிரிகள் நம்மீது நாஸ்திகன் என்னும் ஆயுதத்தை வீசி எறிந்து நம்மை கொல்லப் பார்த்து விடுவார்கள். நமது மக்களும் பெரும்பாலும் மூடர்களாயிருப்பதால் அந்த நாஸ்திகம் என்னும் ஆயுதத்தைக் கொண்டே நமது எதிரிகளுக்கு உதவியாகவும் நமக்கு எதிராகவும் நின்று நமது முயற்சிகளுக்கு இடையூறு செய்வார்கள்.

ஆகையால் நாம் இன்றைய நிலையில் இருந்து ஒரு சிறு மாறுதல் செய்ய வேண்டுமானாலும் நமது எதிரிகளின் ஆயுதமாகிய நாதிகத்திற்கு பயப்படாமல் ஆமாம் நான் நாத்திகன் தான் என்று சொல்லிக் கொண்டு அந்த நாத்திகத்தையே நாட்டில் எங்கும் மூலை முடுக்குகளில் கூட பரப்ப நாம் துணிய வேண்டும். அப்போது தான் நமது எண்ணம் ஈடேற முடியும். ஆதலால் நாம் இனிச் செய்ய வேண்டியது முக்கியமாய், நாதிகப் பிரசாரமேயாகும். அதாவது எனக்கு இந்த மதம் வேண்டாம் இந்த ஜாதி வேண்டாம், இந்த சாஸ்திரம் வேண்டாம், இந்தக் கடவுள் வேண்டாம் இவைகள் இல்லாமல் ஜீவிக்க என்னால் முடியும் எனக்கு வேண்டியதெல்லாம் சமத்துவமும் மனிதத் தன்மை யுமேயாகும் என்று தைரியமாய்ச் சொல்ல வேண்டும்.

அதுவும் இந்த நாட்டில் இந்த உலகத்திலேயே வேண்டுமே ஒழிய மேல் உலக சங்கதியை இதில் கலக்க வேண்டாம் என்று தைரியமான பிரசாரம் செய்ய வேண்டும். இன்றைய வாலிபர்களுக்கு இது தான் முக்கிய வேலை என்பது எனது உறுதியான அபிப்பிராயமாகும். இதற்கெல்லாம் முதலில் மனிதனை மோட்சத்தை, சுவர்க்கத்தை மறக்கச் சொல்ல வேண்டும்.

மோட்சமும் சுவர்க்கமும் இன்றைய கள்ளு சாராயக் கடைகளை விட தாசி வேசிகள் வீடுகளைவிட மோசமானது என்பதை மக்கள் உணரும்படி செய்ய வேண்டும். மோட்ச நரகம் என்பது எப்படி திருடர்கள் பிரயாணிகளை வழிப்பறி செய்வதற்கு தனி வழியில் ஆள் அடையாளம் தெரியாமல் வேஷம் போட்டுக் கொண்டு வந்து வழி மறித்து மண்டையை உடைக்க தடிக் கம்பையும், ஈட்டியையும் ஆயுதமாகக் கொண்டு பொருள் பறித்துச் செல்லுகின்றார்களோ அது போலவே பகல் வழிப்பறிக்காரர்கள் மக்களின் வாழ்க்கைப் பிரயாணத்தில் வழி மறித்துப் பொருள் பறித்துப் போகச் செய்து கொண்ட ஆயுதங்களேயாகும். ஆகையால் அதே மனிதன் முதலில் மறந்தாக வேண்டும்.

இந்த உலக வாழ்க்கையையும் ஒழுக்கத்தையும் மக்களுக்கு உதவி செய்வதையும் தனது அளவுக்கும் தேவைக்கும் மேல்பட்டதை அடைய ஆசைப்படாமலுமிருக்க வேண்டி யதையே மோட்சம் என்று லட்சியம் கருத வேண்டும். இந்தப்படி அளவுக்கும் தேவைக்கும்மேல் மக்களை அடையச் செய்யாமல் பார்த்துக் கொள்ளுவதையே மக்களை மோட்சத்திற்கு அனுப்பும் வேலையென்று நாம் கருத வேண்டும். மனிதன் இந்த நாட்டில் எப்படி தனது தேவைக்கும் அளவுக்கும், தகுதிக்கும் மேல் அடைய ஆசைப்படுகின்றானோ அதற்கு ஆதரவாய் இருப்பதற்காகவே மூடர்களுக்கு மேல் உலகத்தில் அவரது தகுதிக்கும், அளவுக்கும், தேவைக்கு மேலாக அனுப விக்க ஆசை காட்டி இங்கு தட்டிப் பிடுங்கிக் கொள்ளுகிறார்கள்.

மூடர்களும், பேராசைக் காரர்களும்தான் மோட்சத்தை விரும்புவதை நாம் பல உதாரணங்களால் காணலாம். மோட்சத்திற்கும், சுவர்க்கத்திற்கும் பாமர மக்களுக்கும் சொல்லப்படும் கருத்துக்களை சற்றுக் கவனித்துப்பாருங்கள். மனிதனுக்கு எதெதில் சாதாரணமாய் ஆசை வரக்கூடுமோ அதையேதான் மோட்சத்தில் சிருஷ்டித்து இருக்கிறார்கள்.

அதாவது இங்குள்ள மனிதனுக்குப் பொருள் வேண்டும், பெண் வேண்டும், தேவையானதெல்லாம் நினைத்த மாத் திரத்தில் வேண்டும், நல்ல வாலிபப் பருவம் வேண்டும், சதா இடைவிடாமல் போக போக்கியம் வேண்டும், சாகாமல் இருக்க வேண்டும் ஆகிய இந்த விஷயங்கள் மனிதனுக்குச் சாகும் வரையிலும் செத்த பிறகும் அனுபவிக்கக் கூடியதாய் ஆசைப் படக்கூடியது என்பது யாரும் அறிந்ததாகும்.

ஆகவே, இந்தக் காரியங்களையே மேல் உலகத்தில் இருப்பதாகவும் அதை அடையக் கூடும் என்றும் ஆசையுண் டாகும்படி அதாவது மேல் உலகத்தில் எங்கு பார்த்தாலும் பொன்னும் ரத்தினங்களும் இறைந்து கிடக்குமென்றும் உலகமே பொன்னுலகமென்றும் அங்கு அரம்பை, ஊர்வசி முதலாகிய தேவகன்னிகைகள் என்பவர்கள் என்றைக்கும் வாலிபமாய் நம் பக்கத்தில் இருந்து கொண்டு நமக்குச் சதா போகம் கொடுத்துக் கொண்டிருப் பார்களென்றும், காமதேனு கற்பகவிருட் சங்கள் நமக்கு எது தேவையோ அது உடனே கொண்டு வந்து கொடுக்கு மென்றும், நரை, திரை மூப்பில்லை யென்றும், நாம் சாகாமல் சிரஞ்சீவியாய் இருப்போமென்றும் சொல்லி ஏற்பாடு செய்து விட்டதால் அவைகளை மனிதன் நித்தியமாய் நம்பி இந்த உலகத்தையும், இங்குள்ள போகபோக்கியங்களையும் அநித்தியமாய் எண்ணி கஷ்டப்பட்டு சம்பாதித்த பொருள்களையெல்லாம் இந்த மோட்சத்திற்கு என்றே செலவு செய்வ துடன் நில்லாது இதற்காக என்று பலவித மான அக்கிரமமான வழிகளிலும் மற்ற மக்களை வஞ்சித்தும், பட்டினி போட்டும் பொருள் பறித்தும் கூட இதற்காகச் செலவு செய்ய வேண்டியிருக்கின்றது.

உதாரண மாக ஏழை மக்கள் கஞ்சிக்கு அலையும் போது குடம் குடமாய் பால் குடங்களைத் தினமும் கல்லின் தலையில் கொட்டி அவற்றை நாற வைப்பதின் கருத்து என்ன என்று பாருங்கள். குடியிருக்க நிழல் இல்லாமல் மக்கள் திரியும்போது மலைகளையும் பாறைகளையும் உடைத்து கோட்டைகள் போல் சந்திரகாந்த மண்டபங்கள் போல் மக்கள் கோவில்கள் கட்டுவதின் கருத்து என்னவென்று பாருங்கள். எவ்வித தொழிலும் செய்வதற்கு மூலதனம் இல்லாமலும் தொழிலில்லாமலும் மக்கள் வயிறு வளர்க்கக் கப்பலேறி வேறு நாட்டிற்குக் கூலிகளாய் போய் சொத்துப் பொத்தென்று மாண்டு மடிந்து கொண்டிருக்கும்போது பொம்மைகளை வைத்து உற்சவம் செய்வதும் அவற்றிற்கு பத்து லட்சம், ஒருகோடி, பத்துக் கோடிக் கணக்காக நகைகளும், பாத்திரங்களும், வாகனங்களும் துணிகளும் சேர்த்து வைப்பதின் கருத்தென்னவென்று பாருங்கள்.

நாளுக்கு நாள் வாழ்வு கஷ்டத்திற்கு வந்து ஏழைகள் மலிந்து வரும்போது லட்சம், அம்பதாயிரம், மூன்று லட்சம் ரூபாய்கள் செலவு செய்து கும்பாபிஷேகங்கள் செய்வதின் கருத்து என்னவென்று யோசித்துப் பாருங்கள். பூமிகளை உழுது கஷ்டப்பட்டு பயிர் செய்யும் குடியானவர்கள் அரை வயிற்றுக் குக்கூட போதும்படியான ஆகாரமில்லாமல் கஷ்டப்படும்போது குழவிக்கல்லுகளுக்கும், செம்பு, பித்தளை பொம்மைகளுக்கும் தினம் பத்து மூட்டை, இருபது மூட்டை, முப்பது மூட்டை போன்ற அரிசிகள் போட்டுப் பொங்கி நைவேத்தியம் செய்து பாடுபடாத சோம்பேறிகளுக்குக் குடும்பத்துடன் போட்டுக் கொண்டிருக்கும் கருத்து என்ன என்று எண்ணிப்பாருங்கள்.

மக்களில் நூற்றுக்கு 10 பேர்களுக்குக்கூட அதாவது சராசரி படிப்பு எழுத்து வாசனைகூட இல்லாமல் இருக்கும்போது வேத பாட சாலை, தேவார பாடசாலை முதலியவைகளும் கல்லுகள், பொம்மைகள் பின்னால் நின்று கொண்டு ஆயிரத்திற்கு ஒருவருக்குக்கூட புரியாத வேத பாராயணம் முதலியவைகள் செய்யப்படுவ தற்கும் லட்சக்கணக்காய் செலவு செய்யப் படுவதின் நோக்கம் என்ன என்பதை யோசித்துப் பாருங்கள்.

இப்படியாக நமது நாட்டில் இது போலவே எவ்வளவு காரியங்கள் நடைபெறுகின்றது என்பதை நோக்கினால் மற்ற மக்களை எவ்வளவு பாடுபடுத்தியாவது, அவர்கள் எவ்வளவு கஷ்டப்பட்டுக் கொண்டிருந்தாலாவது சிறிதும் லட்சிய மில்லாமல் நாம் மோட்சத்திற்குப் போக வேண்டும். நாம் பிரபுவாய் இருக்க வேண்டும். லட்சுமி புத்திரராய் ராஜாவாய் நிரந்தர செல்வ வானாய் சிரஞ்சீவியாய் இருக்க வேண்டும் என்கின்ற பேராசையல்லாமல் வேறு தத்துவம் அதில் என்ன இருக்கிறது என்பதை யோசித்துப் பாருங்கள். இந்த மாதிரி மோட்சம் கற்பிக்கப்பட்டு அதை அடைவதே மனிதனின் முக்கிய லட்சியம் என்று போதிக்கப்பட்டிருக்கின்ற பேராசை ஜனங்கள் மலிந்திருக்கும் இந்த நாட்டில் இந்த உணர்ச்சியை அழிக்காமல் என்ன காரியம் நம்மால் செய்ய முடியும் என்பதை யோசித்துப் பாருங்கள். ஆதலால்தான் முதலில் மோட்ச உணர்ச்சி ஒழிக்கப்பட வேண்டியது அவசியம் என்று கருது கின்றேன்.

சகோதரர்களே!


இந்த மோட்ச உணர்ச்சி ஒழிக்கப்பட வேண்டியதைப் போலவே நரக உணர்ச்சியும் அழிக்கப்பட வேண்டும். மோட்ச உணர்ச்சி எப்படி பேராசையின் பிரதி பிம்பமோ, அது போலவே நரக உணர்ச்சியும், அடிமைத் தனத்தினுடையவும், பயங்காளித்தனத் தினுடையவும், பிரதி பிம்பமாகும், நரகத்திற்குப் பயப்படுவதாலேயே அநீதிகளுக்கு மனிதன் ஆளாகின்றான். தைரியமில்லாத கோழையாயிருக்கின்றான்.

இவைகளை யெல்லாம்விட மனிதன் சிறிதாவது முற்போக்கடைய வேண்டு மானால் சிறிதாவது இயற்கையின் இன்பத்தை நுகர வேண்டுமானால் யெல்லா வற்றையும்விட மனிதனுக்கு விதி - கர்ம பலன் - என்கின்றதான உணர்ச்சிகள் கண்டிப்பாய் ஒழிய வேண்டும். விதியும் கர்மபலனும் என்கின்ற வைகளான உணர்ச்சி இந்திய நாட்டிற்கு ஏற்பட்டிருக்க வில்லையானால் இன்றைய தினம் இந்தியா அநேக விஷயங்களில் ருஷியர்களுக்கு ஏன் இந்த உலகத்தில் உள்ள மற்ற எந்த நாட்டு மக்களின் நிலைமைக்கு மேலாக இருந்து அநேகமாக உலக மக்களுக்கே சமத்துவத்தையும் சம இன்பத்தையும் இயற்கை இன்ப நுகர்ச்சி யையும் கொடுத்து சர்வ சுதந்திரத்துடன் வாழச் செய்திருக்கும் என்று தைரியமாய்ச் சொல்லுவேன்.

ஆகையால், இந்தக் கர்ம பலன் உணர்ச்சி மனிதத் தன்மைக்கு மிகவும் கேடான எதிரி என்பதை நீங்கள் நன்றாய் ஞாபகத்தில் வைக்க வேண்டும். நான் மேலே காட்டிய இந்தக் காரணங்கள்தான் இந்த உலகத்தில் நமது நாட்டை மாத்திரம் இந்த இழிவான நிலையிலும், மீளா அடிமைத் தனத்திலும் வைத்திருக்கின்றன. இவைகள் ஒழிந்தால் தானாகவே இந்தியா சுயமரியாதை பெற்று விடும்! சுதந்திரம் பெற்று விடும்! மனிதத் தன்மை அடைந்துவிடும். ஆகையால் சகோதரர்களே, நீங்கள் இந்திய நாட்டின் முற்போக்குக்கும் விடுதலைக்கும் மனிதத் தன்மைக்கும் பாடுபட வேண்டு மானால் மேற்கண்ட காரியங்களில் உங்கள் கவனத்தைச் செலுத்த வேண்டும் என்றே கேட்டுக் கொள்ளுகிறேன்.

இதற்கு மாறுபாடான அபிப்பிராய முள்ளவர்கள் சிலர் - ஏன் பலர் இருக்கலாம். இன்றைய உலகம் பெரிதும் அப்படிப்பட்ட வர்களையே அதிகமாகக் கொண்டிருக் கின்றது. ஆதலால் இந்த எனது அபிப்பிராயம் அவர்களுக்கு மிக்க கஷ்டமானதாகத் தோன்றலாம். அவர்களால் நமக்குப் பல வித கஷ்டங்களும், தொல்லைகளும், தடைகளும், ஆபத்துகளும் ஏற்பட்டாலும் ஏற்படலாம். நாம் அவைகளைத் தாராளமாய் எதிர்பார்த்து அவைகளைப் பற்றி ஆச்சரியப்படாமல் பயப்படாமல் சமாளித்து நிற்க முனைந்து கொண்டுதான் இந்தத் தொண்டு செய்ய வேண்டும்.

சுயமரியாதை இயக்கத் தொண்டு என்பது மற்ற தொண்டுகளைப் போல் அதாவது ஏதாவது, புராணங்களைப் படித்து விட்டு பக்தி ரசக் கீர்த்தனை பாடிவிட்டு அல்லது மேடைகளில் நின்று இந்த இராட்சச அரசாங்கத்தை அழிக்க வேண் டும் என்று சொல்லிவிட்டு மக்களிடத்தில் இருந்து பண்டிதன் என்றோ, பக்திமான் என்றோ, தேசிய வீரன் என்றோ சுலபத்தில் பெருமை பெற்றுவிடக் கூடிய காரியமல்ல என்பதை ஞாபகத்தில் வைத்துக் கொள்ளுங்கள். போகிற இடத்தில் எல்லாம் கல்லடி படவும், வசவு கேட்கவும் கலகக்காரர் களாலும் நமது எதிரிகளின் கூலிகளாலும் தொல்லைப்படத் தயாராயிருக்க வேண்டும் என்பதை ஞாபகத்தில் வைத்துக் கொள்ளுங்கள்.

ஆகவே, இவ்வளவு நேரம் எனக்குச் சரி என்று பட்டதை நான் மக்களுக்குச் செய்ய வேண்டிய தொண்டு என்று நினைத்ததை எனது நாடு என்று சொல்லப்படுவதை மற்ற நாடுகள் எதற்கும் இளைத்ததல்ல என்னும் படியான நிலைமைக்குக் கொண்டு வர வேண்டியதற்கு ஏற்ற சாதனம் என்று கருதியதை உங்களுக்கு எடுத்துச் சொன் னேன். உங்கள் அபிப்பிராயங்களையும் என்னிலும் உங்களிலும் மாறுபட்டவர்களது அபிப்பிராயங்களையும் பொறுமையாய் கேட்டு எல்லாவற்றையும் நடுநிலையில் இருந்து யோசித்து உங்கள் புத்திக்கு எட்டிய முடிவுப்படி நடக்க முயலுங்கள். குற்றமிருப்பினும் அனுபவத்தில் சீக்கிரம் திருத்த மாகிவிடும்.

------------------- தந்தைபெரியார் -- “குடிஅரசு” - 14.9.1930

0 comments: