திருப்பம் தரும் திருப்பத்தூர்!
வரும் 23ஆம் தேதி முற்பகல் வ.ஆ. திருப்பத்தூரில் திராவிடர் கழகப் பொதுக் குழுக் கூட்டம்; மாலை திருப்பத்தூரில் மண்டல மாநாடு - திராவிடர் எழுச்சி மாநாடு நடைபெறவுள்ளன.
கரூர், வாலாஜா, சீர்காழி மண்டல மாநாடுகளைத் தொடர்ந்து திருப்பத்தூரிலும், அடுத்த நவ. 8ஆம் தேதி திருவரங்கத்திலும் கழகத்தின் மண்டல மாநாடுகள்.
ஒவ்வொரு மாநாடும் ஒன்றை இன்னொன்று விஞ்சியது என்று தோள் தட்டிக் கம்பீரமாக நடைபெற்று வருகிறது.
சரி, திருப்பத்தூரைப் பார்ப்போம் என்று எதிர்பார்க்கும் நேரத்தில், சபாஷ் சரியான போட்டி என்று கூறும் அளவுக்கு வாயுவேகத்தில் பணிகள் நடைபெறத் தொடங்கிவிட்டன.
பாரம்பரியமான சுயமரியாதை இயக்கக் குடும்பத்தில் வந்த தோழர் இளைஞர் கே.சி.எழிலரசன் இந்தச் சந்தர்ப்பம் எங்களுக்குக் கிடைத்திருக்கிறது. எல்லா சிறப்புகளும் இந்த மாநாட்டில் மட்டுமே இருந்தன என்று நமது தலைவர் பாராட்டும் அளவுக்கு இருக்கப் போகிறது வந்து பாருங்கள்! என்று தலைமைக் கழகத்திற்கே வந்து சவால் விட்டுச் சென்றிருக்கிறார்.
போகிற போக்கைப் பார்த்தால் பந்தயத்தில் அவர் வெற்றிப் பேரிகை கொட்டுவார் போலத்தான் தோன்றுகிறது!
சாலைகளின் இருமருங்கிலும் 5000 கழகக் கொடிகளாம் - ஒரு லட்சம் காகிதக் கொடிகளாம் - எத்திசை நோக்கினும் ஃபிளக்சுகளின் அணிவகுப்பாம்.
மாநாட்டைத் தவிர எந்தச் சுவரும் வேறு எதையும் பேசக்கூடாது என்கிற போர்க்கால நடவடிக்கையாக மூன்று சுவர் எழுத்துக் குழுக்கள் பம்பரமாகச் சுழன்று கொண்டிருக்கின்றன.
பொதுவாக மண்டல மாநாடு என்கிறபோது - அது ஒரு மாலை நேர மிகப்பெரிய பொதுக்கூட்டம் என்ற அளவில்தான் அதன் தகுதி நிர்ணயிக்கப்பட்டிருந்தது.
அதிலும் ஒரு புரட்சியை ஏற்படுத்திவிட்டார் மாவட்ட கழகத் தலைவரான இவர். பந்தல் போட்டு நடத்தும் மண்டல மாநாடு என்ற பெயரைத் தட்டிச் செல்கிறார்.
பொதுக்குழுவும் சேர்ந்து நடப்பது என்பது - இந்த மாநாட்டுக்கான கூடுதல் சிறப்பும், பெருமையும்!
இவ்வாண்டு சனவரியில் (21-24) இதே திருப்பத்தூரில் அகில இந்திய அளவில் பெரியார் வீரவிளையாட்டுக் கழகத்தின் சார்பில் சடுகுடு போட்டி நடத்தி, புதிய சாதனை முத்திரையைப் பொறித்த இந்தத் தோழர் - கழகத் தோழர்களின் கூட்டு முயற்சியால் கழக மாநாட்டை நடத்துவதிலும் புதிய மைல்கல்லைத் தொடுவார் என்று எதிர்பார்க்கலாம்.
இவருடைய தந்தையார் கே.கே.சின்னராசு, பெரிய தந்தையார் கே.கே.தங்கவேலன் என்று குடும்பமே இயக்கப் பாசறையாகும். தந்தை பெரியார், அன்னை மணியம்மையார், தமிழர் தலைவர் ஆகியோரின் பேரன்புக்கும் பாத்திரமானவர்கள்.
அந்தப் பாரம்பரியப் பலத்தின் பின்னணியில் படைபலத்துடன் ஓர் இளைஞர் பட்டாளம் மாநாட்டை எடுத்துக்கட்டப் புறப்பட்டுவிட்டது.
வ.ஆ.மாவட்டம் நீதிக்கட்சி, சுயமரியாதை இயக்கம், திராவிடர் கழகம் என்ற அமைப்புகளோடு மிகவும் பின்னிப் பிணைந்த ஒன்றாகும்.
தந்தை பெரியார் அவர்களுக்குப் பிறகு இயக்கத்திற்குத் தலைமை தாங்கும் ஒரு தாயைத் தந்த பெருமை (வேலூர்) இந்த மாவட்டத்திற்கு உண்டு. இந்த மாவட்டம் ஜோலார்பேட்டையிலிருந்து, வி.பார்த்தசாதி என்னும் பெருமகன் இயக்க சார்பாக சமதர்மம் எனும் இதழை நடத்தியுள்ளார் (புதன்தோறும் வெளிவந்தது).
இந்த மாவட்டத்தில் நடைபெற்றுள்ள மாநாடுகளின் பட்டியலைப் பார்த்தால் மெய்ச் சிலிர்க்கிறது. நடந்த விதங்களை குடிஅரசு வாயிலாக படித்தால் மூளைக்கு பல் சுவை விருந்தினைப் படைக்கிறது.
செங்கற்பட்டில் 1929 பிப்ரவரி 17, 18 ஆகிய நாள்களில் முதல் மாகாண சுயமரியாதை மாநாடு நடந்தேறியது என்றால், அவற்றிற்கு முன்னோட்டமாக - அதற்கு ஒரு மாதத்திற்கு முன்பாகவே வேலூரில் வட ஆற்காடு ஜில்லா பார்ப்பனர் அல்லாத இளைஞர் மாநாடு நடைபெற்றது (4, 5.1.1929).
கே.வி.மேனன் மாநாட்டுக்குத் தலைமை வகித்துள்ளார். மாநாட்டில் நிறைவேற்றப்பட்டுள்ள ஒவ்வொரு தீர்மானமும், செங்கற்பட்டில் அதற்கு அடுத்த மாதம் பிப்ரவரியில் நடைபெறவிருந்த மாநாட்டுக்கான முகவுரையாக - கட்டியம் கூறுவதாக அமைந்துள்ளதானது, ஆச்சரியத்தைத் தருகிறது - அது, அம்மாநாட்டின் பெருமையை விளக்கப் போதுமானதும்கூட!
குறிப்பாக பெண்ணுரிமை பற்றிய தீர்மானங்கள் அனைத்தும் வேலூர் மாநாட்டின் அசலாகத்தான் செங்கற்பட்டில் நிறைவேற்றப்பட்டுள்ளன.
குருட்டு நம்பிக்கைக்கும், மூடப் பழக்கவழக்கங்களுக்கும் ஆதாரமானதும், அறிவு வளர்ச்சிக்கும், தன் முயற்சிக்கும் தடையானதுமான கருத்துகளும், வாசகங்களுமுள்ள பாடப் புத்தகங்களை பள்ளிக் கூடங்களில் பாடமாக வைக்கக் கூடாதென்று கல்வி இலாகா அதிகாரிகளையும், (யூனிவர்சிட்டி, செனட்) அங்கத்தினர்களையும் டெக்ஸ்ட் புக் கமிட்டி அங்கத்தினர்களையும் ஸ்தலஸ்தாபன நிருவாகிகளையும், பள்ளிக்கூட மேனேஜ் கரஸ்பாண்டுகளையும் இம்மகாநாடு கேட்டுக் கொள்கிறது என்பது போன்ற தீர்மானங்கள் இன்றைக்குக் கூடத் தேவைப்படுபவைகளாகவே உள்ளன என்றால்,
இன்றைக்கு 81 ஆண்டுகளுக்கு முன்பாகவே எவ்வளவு தொலைநோக்கோடு, துல்லியமாக தீர்மானங்களை நிறைவேற்றியுள்ளனர்!
முக்கிய தலைவர்களை மோட்டாரில் அமர வைத்து ஊர்வலமாக அழைத்துச் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டிருந்தும், தந்தை பெரியார் அவர்களின் விருப்பப்படி நடந்தே ஊர்வலமாகச் சென்றுள்ளார்.
வீட்டுக்கு வீடு, கடைக்குக் கடை தலைவர்கள் நிறுத்தப்பட்டு, மாலை அணிவிக்கப்பட்டு, சந்தனம் தரப்பட்டு, பன்னீர் தெளிக்கப்பட்டு, பழங்கள் அளிக்கப்பட்டு உபசரிக்கப்பட்டனர் என்று குடிஅரசு (13.1.1929) விவரிக்கிறது.
அம்மாநாட்டில் தந்தை பெரியார் கூறியுள்ள கருத்து காலத்தையும் கடந்த கணீர் குரலாகும்.
எனது இயக்கத்தையும், தொண்டையும், எனது உடல்நலிவும், சரீரத் தளர்ச்சியும், எதிரிகள் தொல்லையும் ஒரு சிறிதும் தடை செய்ய முடியாமல் என்னை மேலும் மேலும் உற்சாகப்படுத்தி, வெற்றிக் கொடியை நாட்டி வருவதற்குப் பெரிதும் உதவியாய் இருந்து வருவது, இந்த வாலிப இயக்கமே யாகும். உண்மையிலேயே இப்போதைய வாலிபர்களிடம் எனக்கு அளவுக்கு மேற்பட்ட நம்பிக்கை இல்லாதிருக்குமானால் என்னுடைய கடையை வெகுநாளைக்கு முன்பே சுருட்டிக் கட்டிக் கொண்டு வேறு ஏதாவது ஒரு துறையில் மூழ்கி இருப்பேன். ஆதலால் இந்த வாலிப இயக்கம்தான் நமது நாட்டிற்கு மட்டுமல்லாமல் வெளிநாட்டிற்கும் சுதந்திரமும், விடுதலையும், சுயமரியாதையும் வாங்கிக் கொடுக்கப் போகின்றது. எப்படி எனில், எந்த ஒரு நாட்டிற்கும், அரசியல் தலைவனோ, தேசியத் தலைவனோ மதத்தலைவனோ பாஷைத் தலைவனோ, சாஸ்திரியோ முயற்சித்து உண்மையான சுதந்திரமோ, விடுதலையோ வாங்கிக் கொடுத்ததாக சரித்திரக் காலந்தொட்டு நமக்கு ஆதாரங்கள் கிடையாது. எங்கும் வாலிபர் கிளர்ச்சிதான் விடுதலை அளித்திருக்கின்றது. ஒவ்வொரு விடுதலை முயற்சியும் கட்டுப்பாட்டை உடைத்தெறிந்த பின்தான் வெற்றி பெற்றிருக்கின்றது. கட்டுப்பாடுகளை உடைப்பதற்கு வாலிபர்களால்தான் முடியுமே ஒழிய மற்றவர்களால் சுலபத்தில் சாத்தியப்படாது. ஆதலால் நான், முழுவதும் இந்த வாலிபர்களையே மனப்பூர்வமாக நம்பி இருக்கின்றேன். அவர்கள் இயக்கமும், கிளர்ச்சியும், வெகுசீக்கிரத்தில் உலகை நடத்த முன்வர வேண்டும் எனும் ஆசைப்பட்டுக் கொண்டு இம்மகாநாட்டைத் திறக்கின்றேன் (பெருத்த கரகோஷம்) என்று மாநாட்டைத் திறந்து வைத்து தந்தை பெரியார் உரையாற்றியிருக்கிறார்.
இளைஞர்களை பெரியாருக்குப் பிடிக்காது - மாணவர்கள் என்றால் அதிருப்தி என்பதுபோன்ற பிரச்சாரங்கள் எந்த அளவுக்கு பெரிய பொய் என்பது - தந்தை பெரியார் அவர்கள் 81 ஆண்டுகளுக்கு முன் வ.ஆ. மாவட்ட பார்ப்பனர் அல்லாத வாலிபர் மாநாட்டைத் திறந்து வைத்து உரையாற்றுகையில் ரத்தினச் செறிவாக, வாலிப முறுக்காகக் கூறியுள்ளார் என்பதைக் கவனிக்கத் தவறக் கூடாது.
ஆம், இன்றைக்கும் அந்த நிலைதான். இயக்கம் இளைஞர்களின் பாசறையாக வார்த்தெடுக்கப்பட வேண்டும் என்பதிலே நமது தமிழர் தலைவர் அவர்கள் உறுதியாக - குறியாக உள்ளார்கள்.
மண்டல, மாவட்டக் கழகங்கள் என்கிறபோது மண்டலங்களில் அனுபவக் கனிகளையும், மாவட்டங்களில் இளைய குருத்துகளையும் பொறுப்பாளர்களாக அமைத்து வருவது அந்த அடிப்படையில்தான். பெரியார் சமூகக் காப்பு அணி புது முறுக்குடன், ஆனை பிளிற்றுடன் கம்பீரமாக ஏறு நடைபோட உள்ளது. மாவட்டம்தோறும் முகாம்கள் நடத்தப்பட உள்ளன.
திருப்பத்தூர் திராவிடர் எழுச்சி மாநாடு - ஓர் இளைஞர் மாநாட்டுத் தலைவராக இருக்கும் நிலையில், இப்படை தோற்கின் எப்படை வெல்லும்? என்ற வீர கர்ச்சனையோடு, செருக்கோடு வீறு நடை போட்டுப் பணிகளில் மூழ்கிவிட்டது. அந்த முழு மூச்சின் வெற்றியை நேரில் சுவைப்போம், வாருங்கள் தோழர்களே, திருப்பத்தூர் திருப்பத்தைக் கொடுக்கும் - தீரர்களே திரளுங்கள்! திரளுங்கள்!!
வாரீர்! வாரீர்!!
வ.ஆ. முதல் சு.ம. பார்ப்பனர் அல்லாத வாலிபர் மாநாடு (4, 5.1.1929).
வ.ஆ. ஜில்லா சு.ம. முதல் மாநாடு (13.1.1929)
வ.ஆ. ஜில்லா சு.ம. மாநாடு (6, 7.5.1933)
திருப்பத்தூர் தாலுகா முதல் மாநாடு (8, 9.10.1933)
திருப்பத்தூர் தாலுகா இரண்டாவது மாநாடு (11.3.1934)
வ.ஆ. ஜஸ்டிஸ் கட்சி மாநாடு (26.11.1936)
திருப்பத்தூர் தாலுகா 2ஆவது சு.ம. மாநாடு (14.11.1937)
- என்று எத்தனை எத்தனையோ மாநாடுகள் இம்மாவட்டத்தில் - திருப்பத்தூரில் - அந்த வரிசையில் அக்டோபர் 23 - திராவிடர் எழுச்சி மாநாடு புதிய சரிதம் படைக்கும், வாரீர்! வாரீர்!!
-------------------மின்சாரம் அவர்கள் 19-10-2010 “விடுதலை” யில் எழுதிய கட்டுரை
1 comments:
இன்னும் உரக்கச் சொல்லுங்கள்... உறைக்கச் சொல்லுங்கள்...
Post a Comment