Search This Blog

23.5.15

கண்ணகிக்கு வீரம் இருந்ததாகக் காட்ட முடியுமா?உண்மையான தமிழன் சிலப்பதிகார மாநாடு நடத்துவானா? - பெரியார்

சிலப்பதிகாரம் பற்றி தந்தை பெரியார்
  

சிலப்பதிகாரம் மூடநம்பிக்கைக் களஞ்சியம்

இப்போது நமது இந்த வகை பிரசாரத்தால் பாரத, ராமாயண, மனு தர்ம சாஸ்திரங்களுக்கும் மதிப்பு குறைந்து விட்டதால்
மனு தர்மத்தையும், ஆரிய தர்மத்தையும் பெரிதும் கொண்ட சிலப்பதிகாரத்தைத் தலையில் தூக்கிக் கொண்டு ஊரூராய் திரிந்து பிரச்சாரம் செய்ய ஒரு கூட்டம் கிளம்பியிருக் கிறது.

இந்த சிலப்பதிகாரம் எப்படி அமைந்திருக்கிறது என்றால் ஆபாச மூட நம்பிக்கை, ஆரியக் கருத்துகளை உட்கருத்தாகக் கொண்டு நல்ல தமிழ் அமைப்பை உடையாகக் கொண்டு தேவடியாளுக்குச் சமமாக அதாவது தேவடியாள் எப்படி பார்ப்பதற்கு அலங்காரமாக இருப்பாளோ, ஆனால் உள்ளே போய்ப் பார்த்தால் உள்ளமெல்லாம் வஞ்சகம் நிறைந்தும் உடலெல்லாம் நோய் கொண்டும் உடையால், அணியால் மக்களை ஏய்த்துப் பிழைத்துக் காணப்படுவாளோ அது போலதான் இந்த சிலப்பதிகாரமுமாகும்.

பாரத-ராமாயணம் போல் அது நாவல் சித்திரக்கதை. அதுவும் குறிப்பிட்ட கொள்கை இல்லாமல் எழுதின கதை.

ஆரியம் தலை தூக்கி நம் அரசர்கள் ஆரியத்திற்கு அடிமைகளாய்த் தாசர்களாய் இருந்த காலத்தில் பகுத்தறிவும் இன  உணர்ச்சியும் இல்லாமல் சித்தரித்த கதையாகும்.

மூட நம்பிக்கைக் களஞ்சியம்; ஆரியக் கோட்டைக்கு அரண். இப்படிப் பட்டதை, தமிழர் பண்புக்கு என்று பிரசாரம் செய்தால் இது மானமுடைமை ஆகுமா?

ஆதிமுதல், அந்தம் வரை, பார்ப்பானை பார்ப்பனியத்தைப் புகுத்தி அமல்படுத்த வேண்டும்; எப்படி எப்படி நாம் நடக்க வேண்டும் என்பதைக் காட்டுகிறது.

நான் ஒன்றும் பயந்து கொண்டு பேசுகிறேன் என்றோ, பொய் பேசுகிறேன் என்றோ நினைக்க வேண்டாம். அந்தக் கதைகளில் உள்ள கருத்தை அப்படியே எடுத்துக் காட்டுகிறேன். ஆகையால் கவனமாகக் கேளுங்கள்.

போன ஜன்மம், வருகிற ஜன்மம் என்று தலைவிதியைக் காட்டி மனிதனை எப்படிப்பட்ட இழிவுக்கும் ஆளாகச் செய்கிறது. பார்ப்பான் சொல்லுகிறபடி, அவன் எது கேட்டாலும் எடைக்கு எடை தங்கம் கொடுக்க வேண்டு மென்று சொல்லுகிறது. ஆரூடம், ஜோதிடம், பில்லி சூனியம் ஆகியவற்றைப் பற்றிச் சொல்லு கிறது.

முட்டாள்தனமாக கற்பையும் பெண் அடிமையையும் பெருமைப்படுத்துகிறது.

கோவலனை அரசன் தண்டித்த மாதிரி நம் நாட்டு ராஜாக்களுக்கே ரொம்பவும் அவமானம் தருவதாகும். ராஜா வீட்டு சிலம்பு எங்கோ போய் விட்டது. கோவலன் சிலம்பு வைத்திருப்பது ராஜாவினுடையது என்று பொய்க்குற்றம் சாட்டப்பட்டதன் உண் மையைக் கண்டுபிடிக்க முடியாத அரசன், கோவலனை வெட்டிக் கொல்லச் சொல்லு கிறான். கோவலன் இறந்து போகிறான்.


இதையறிந்த அம்பாள் கண்ணகிக்குப் பெரும்கோபம் வந்து நிரபராதிகளான மதுரை மக்களைச் சுட்டுச் சாம்பலாக்கினாள்.

 இந்த அம்பாளின் கற்பைப் பற்றிச் சொல்லுவதாய் இருந்தால், தேவடியாள் வீட்டிற்குக் கணவன் போனதை அறிந்த கண்ணகி அந்தத் தேவடியாளை ஏதாவது செய்திருக்க வேண்டும். தாசி மாதவி, கோவலன் கண்ணகியின் கணவன் என்று தெரிந்து அவனை அனுபவிக்கிறாள்.

தேவடியாளுக்கு இதுவா தர்மம்? அப்படிப் பட்டவளுக்குக் கண்ணகி பொருள் கொடுத்து வசதி செய்யலாமா? கோவலன் ஒழுக்கமற்றவன்; கண்ணகி புத்தியற்ற மடப்பெண். அகலிகை, சீதை, துரோபதை, தாரை எல்லாம் கற்புக் கரசிகளாய் இருக்கும்போது, கண்ணகி கற்புக்கு மாத்திரம் முட்டாள்தனம் வேண் டுமா? மற்றும் இந்த அம்மாளுக்குக் கோபம் வந்ததும், தன் மார்பைத் திருகி எறிகிறாள்.

இது என்ன புத்தி? மார்பைக் கையில் திருகினால் வந்துவிடுமா? இந்தப்படி நடந்த சங்கதியும், அனுபவமும் சிலப்பதிகாரம் தவிர வேறு எதிலும் எங்கும் காணக் கிடைக்க வில்லை. அந்தப்படி திருகிப் பிடுங்கின மார்பு (முலை) வீசி எறிந்தால் அது நெருப்புப் பற்றிக் கொள்ளுமா? அதில் பாஸ்பரஸ் இருக்குமா? இந்த மூட நம்பிக்கைக் கற்பனையானது என்ன பயனைக் கொடுக்கிறது?

இதனால் கண்ணகிக்கு வீரம் இருந்ததாகக் காட்ட முடியுமா? அக்கினி பகவானுக்குக் கண்ணகி பார்ப்பனர்களைத் தவிர மற்றவர்களைச் சுடு என்று கட்டளையிட்டாளாம், மதுரை நகரம் சாம்பலாயிற்றாம்;
இதுதான் கண்ணகி கற்பின் பெருமையா? அக்கினி பகவானுக் கென்ன புத்தி வேண்டாமா? ஒரு பெண் பிள்ளை முட்டாள்தனமாக உளறினால் நிர பராதிகளைச் சுடலாமா? ஒரு பட்டணத்தைக் கொளுத்தலாமா என்கின்ற அறிவு வேண் டாமா? பார்ப்பனர்களை எதற்காக மீதி விடவேண்டும். ஆகவே வர்ணாச் சிரம தர்ம மனுநூல், இராமாயண-பாரதத்திற்கும் இதற் கும் என்ன பேதம்? இராமன் பார்ப்பனன். ஆக சூத்திரனைக் கொன்றான்  என்பது இராமாயணம்.

பார்ப்பானை மட்டும் காப்பாற்ற வேண்டு மென்பது சிலப்பதிகாரம். எவ்வளவு முட்டாள்தனமான கொடுமை செய்தாலும் பார்ப்பனர்களைக் காப்பாற்றினால் அவள் பதிவிரதை ஆகிவிடுவாள் என்பது சிலப்பதிகாரம். பாண்டியன் விசாரணை செய்து, அவனுக்குக் கிடைத்த உண்மை மீது கோவலனுக்குத் தண்டனை விதித்தான். ஆனால் கண்ணகி ஒரு விசாரணையும் செய்யாமல் ஒரு குற்றமும் காணாமல் நிரபராதிகளான மக்களை, பெண்களைச் சுட்டு எரித்துக் கொன்றாள். இவள் கற்புக்கரசி, வணங்கத்தக்கவள், தெய்வமானவள். பாண்டியன் குற்றவாளி. இதுதானே சிலப்பதிகாரக் கதை. இதுதான் தமிழர் பண்பாம். இதற்கு மாநாடாம்!

எவ்வளவு முட்டாள்தனம், இந்த மாதிரி யான ஆபாசமும், அநீதியும் நிறைந்து இருக்கும் கதைகளை நாம் வைத்துக் கொண்டு நமக்குச் சொந்தம் என்று சொல்வது?

இவற்றைத்தான் நாம் ஒழிக்க வேண்டு மென்று சொல்லுகிறோம்; சமுதாயத்திற்கு உதவாக்கரை என்று ஒதுக்கி வைக்கிறோம்.
ஆனால் மாநாடு கூட்டும் அன்பர்களோ பார்ப்பானிடம் லஞ்சம் வாங்கிக் கொண்டு, அவன் பிச்சை என்று இடும் பச்சை நோட்டுகளுக்காகப் பிரச்சாரம் செய்கிறார்கள், இந்தப் பச்சோந்திகள்.

மற்றும் இவர்கள், கண்ணகிதான் கற்பு டையவள் என்று கூறுகிறார்கள்; அப்பொழுது மற்றவர்கள் எல்லாம் கற்பில்லாதவர்களா? இது மனிதத் தன்மைக்கே பொருத்தம் இல்லை. ஆனால் அந்த மாதிரி நடந்ததை நாம் பார்த்து இருக்கவும் முடியாது.

இந்தக் கதையைச் சொல்லி நம் பெண்களெல்லாம் கண்ணகிகளாகத் திகழ வேண்டும், அவள்போல் கற்புக்கரசியாக வேண்டும் என்று பிரச்சாரம் செய்கின்றவர்களின் பிள்ளைக் குட்டிகள் முதலாவது இந்த மாதிரி நடந்தால் பொறுப்பார்களா? என்று கேட் கிறோம். இந்தப் பிரசார பிரம்மாக்களின் மாப்பிள்ளைமார்கள் தேவடியாள் வீட்டில் போய் இருந்தால், இவர்கள் பெண்கள் தாசி வீட்டிற்குப் பணம், நகை எல்லாம் அனுப்ப சம்மதிப்பார்களா? இப்படி நடந்தால் ஆண்கள் ஒழுக்கம் உள்ளவர்களாக ஆவார்களா?

இது ஒழுக்கத்தைக் கற்பிக்கும் நூல் ஆகுமா?

ஆகவே, இது போன்ற கதைகள் பெண் களுடைய அடிமைத் தனத்திற்கு அடிகோலுதலாகவும், முட்டாள்தனத்திற்கு மூலாதாரமாகவும், பிற்போக்கிற்கு வழி அமைப்பதாயும், பார்ப்பானுடைய உயர்வைக் காப்பாற்றுவதற் காகவும் செய்யப் பட்ட இலக்கியங்களே தவிர, மனித சமுதாயத்திற்கு எந்த நன்மைக்காகவும் செய்யப்பட்ட இலக்கியங்களாகாது.


----------------------------22.7.1951 இல் சேலம் பொதுக்கூட்டத்தில் தந்தை பெரியார் அவர்கள் ஆற்றிய சொற்பொழிவு-"விடுதலை", 27.07.1951.
*********************************************************************************


உண்மையான தமிழன் சிலப்பதிகார மாநாடு நடத்துவானா? - பெரியார்

சென்ற வாரத்தில் சென்னையிலே சிலப்பதிகார மாநாடு என்ற பேரால் ஒரு மாநாடு நடந்தது. உள்ளபடியே கேட்கிறேன், உண்மையான திராவிடன் - தமிழ் மகனாக இருந்தால் சிலப்பதிகார மாநாடு நடத்துவானா? பார்ப்பனர்களுக்கு நல்ல பிள்ளையாக நடத்துவதற்கு ஆக நடத்தப்படுவது என்பதல்லாமல் வேறு என்ன சொல்ல முடியும்?
மற்ற நூல்களைப்பற்றி சொல்ல வேண்டியதில்லை. இந்த 15, 20 வருஷங்களில் நாம் செய்த பிரச்சாரத்தினால் மக்கள் மன்றத்தில் இராமாயணம் நாற்ற மெடுத்துப் போய்விட்டது. அதைக் கொண்டாடவே வெட்கப்படத்தக்க தன்மையிலே வந்து விட்டது. கீதை அஞ்ஞாத வாசம் செய்கிறது. அதனால்தான் இன்று இதை - சிலப்பதிகாரத்தைப் பிடித்துக் கொண்டார்கள். காரணம், இது தமிழ்நாட்டுக் கதை - தமிழன் தொகுத்தது என்று சொல்லித் தமிழர்களை ஏமாற்றுவதற்கே ஆகும்.


இதிலே மட்டும் என்ன வாழ்கிறது? ஒரு ஓவியம் மிக நன்றாக, அழகாக, கண்டோர் வியக்கச் சித்தரிக்கப் பட்டிருக்கிறது என்று வைத்துக் கொள்ளுங்கள். ஆனால், அந்த ஓவியத்திலேயே ஒரு திராவிடனைக் கால்அடியிலே, கண் பிதுங்க, நாக்கு வெளியே தொங்க, மிதித்துக் கொண்டிருக்கிற மாதிரி சித்தரிக் கப்பட்டிருக்கிறது என்றால் அதை வாழ்த்தவா முடியும்? அதிலே சொட் டுகிற கலைக்காக? அப்படித்தான் சிலப்பதிகாரமும். அதிலே கலை இருக்கிறதென்றால் இருக்கட்டுமே, அதற்காக நம் வாழ்வே இருள் காடாக வேண்டுமா?

சிலப்பதிகாரம் என்பது ஆரியத்தைப் பரப்புகிற ஒரு நூல் என்பதல்லாமல் வேறு என்ன? ஆரம்பம் முதல் இறுதி வரையிலே ஒரே ஆரியம்தானே சாட்சியளிக் கிறது. ஏதோ கதை தமிழ்நாட்டிலே நடந்ததாக ஏற்படுத்தியிருப்பதைத் தவிர.


கோவலனுக்கும், கண்ணகிக்கும் நடக்கிற கல்யாணம் ஆரியப் புரோகிதப்படி - ஆரிய முறைப் படி ஏற்பட்ட திருமணம். அது பெண் அடிமைத் திருமணம். அடுத்தபடியாக அது பண மூட்டைகள் திருமணம். கண்ணகி என்று கூறப்பட்டிருக்கிற பெண்ணுக்குச் சிறிதாவது அறிவு, மனித உணர்ச்சி, தன்மானம் இருந்தது என்று யாராவது ஒப்புக் கொள்ள முடியுமா? அந்தக் கதையின்படி மணமகன் கோவலன் திருமணத்தின்போதே தாசி மீது காதல் கொண்டு தாசி வீடு போய்விடுகிறான். அப்படி யிருந்தும் ஆரியக் கதையில் ஒரு சார்பான கற்பு என்னும் முட்டாள் தனத்தால் கணவனுக்குப் பண உதவி, பண்ட உதவி செய்து வருகிறாள். சொத்து, சுகம், நகை, நட்டு எல்லாவற்றையும் கொடுத்து விடுகிறாள். கணவன் தாசி வீடு போய்விட்டால், இருக்கிற சொத்தையெல் லாமா விட்டுவிட வேண்டும்? ஒரு கணவன் அந்தப்படி நடக்கிற ஒரு மனைவிக்கு அப்படி கொடுப் பானா? கொடுத்தால் கூட்டிக் கொடுப்பவன் என்றுதானே சொல்வோம்.


இந்தக் காலத்திலே ஒரு மடப்பெண்ணாவது இப்படி நடக்க முடியுமா? இதைப் படித்தால் பெண் ஒழுங்காய் நடப்பாளா? ஆண் ஒழுங்காய் நடப்பானா? இதுதான் கற்பு. ஆனால், அப்புறம் ஒவ்வொரு பெண்ணின் கதியும் என்னவாவது? அடுத்தபடியாக ஆருடம் சொல்லுவது, குறி சொல்லுவது போன்ற ஆரிய ஏமாற்றுப் பித்த லாட்டம் சிலப்பதிகாரத்திலே காணப்படுகின்றன.


இதெல்லாம்தான் போகட்டும் என்றால் கடைசி யிலே என்ன நடக்கிறது? நம்முடைய தமிழ்நாட்டு அரசனை ஒரு முட்டாளாகச் சித்தரித்துக் காட்டப்பட்டிருக் கிறது. யாரோ ஒரு ஆசாரி, கோவலன் தான் சிலம்பைத் திருடினான் என்று சொன்ன வுடன் கோவலனைக் கொன்று விடுகிறான். இந்த அரசனை எப்படிப் புத்திசாலி என்று ஒத்துக் கொள்ள முடியும்? இதுதான் போகட்டும் என்றால் கோவலன் இறந்த பிறகு கண்ணகி கோபங்கொண்டு ஒரு பக்கத்துக் கொங்கையைத் திருகி எறிகிறாளாம். உடனே அது நெருப்புக் கட்டியாக மாறுகிறதாம். அதனால் மதுரையே தீப்பிடித்து எரிகிறதாம். நம்ப முடியுமா? பாண்டியன் நடந்து கொண்ட அயோக்கியத்தனத்திற்கு மதுரை மக்கள் சாம்பலாக வேண்டுமா? இதுவா கற்புக்கு யோக்கியதை? தமிழ்க் கவிக்கும் பார்ப்பனக் கவிக்கும் என்ன பேதம்? ஆரியப் புராணங்களுக்கும் தமிழன் இலக்கியங்களுக்கும் என்ன பேதம்? இரண்டும் ஆரிய அடிப்படைக் கொள்கைப் பிரச்சாரம்தானே! அக்கினி பகவான் வந்து கண்ணகியை நான் யாரைச் சுட்டுச் சாம்பலாக்கட்டும் என்று கேட்டால் இந்த மகா பதிவிரதை பார்ப்பனர்களைச் சுடக் கூடாது என்று கட்டளையிடுகிறாள். இதை எப்படித் தமிழர் நூல் என்று கொள்ள முடியும்? கண்ணகிக்கும் சீதைக்கும் என்ன வித்தியாசம்? தமிழர்கள் சிலப்பதிகாரத்தின் தர்மம் வர்ணாசிரமம்தானே.


இராமாயணத்தின் கடைசி தர்மம் சூத்திரன் (சம்பூகன்) கொல்லப்பட்டு வருணாசிரம தர்மம் காப்பாற்றப்பட்டதுதானே! சிலப்பதிகாரத்தின் கடைசி தர்மம், சூத்திரர்கள் அகாரணமாய் எரிக்கப்பட்டு, பார்ப்பனர் காப்பாற்றப்பட்ட வருணாசிரம தர்மந்தானே? இந்த விஷயத்தில் இராமாயணத்திற்கும் சிலப்பதிகாரத்திற்கும் பேதம் என்ன? இதெல்லாம் பார்ப்பனர்களுக்கு நல்ல பிள்ளையாகி நலம் பெற செய்யும் தன்மானமும், இன உணர்ச்சியும் அற்ற தன்மை தானே!

-----------------------30.3.1951 அன்று காங்கேயம் பொதுக் கூட்டத்தில் மணியம்மையார் தலைமையில் தந்தை பெரியார் அவர்கள் ஆற்றிய உரை - "விடுதலை" 3.4.1951


1 comments:

கொ. வை.அரங்கநாதன் said...

எப்பொழுதும் சிலப்பதிகாரத்தை உயர்த்தி பேசியும், பூம்புகார் என படமும் எடுத்து, பூம்புகாரில் ஒரு நினைவு சின்னமும் ஏற்படுத்தியுள்ள கலைஞர் உண்மையானத் தமிழன் இல்லையா?