Search This Blog

26.2.13

இதுதான் மதச் சார்பின்மையா? அறிவியல் மனப்பாங்கா? வெட்கக் கேடு - மானக் கேடு!இந்திய அரசியல் சட்டத்தின்மீது உண்மையான நம்பிக்கை கொண்டு அதன்படி, கடமையாற்றுவேன் என்றுதான் பிரதமர், முதல் - பஞ்சாயத்துத் தலைவர் வரை உறுதி மொழி கூறி பிறகு பதவியேற்கிறார்கள்!

ஆனால் நம்முடைய நாட்டில் மதச் சார்பின்மை எப்படி கேலிக் கூத்தாக்கப்படு கிறது என்ற செய்தி அன்றாடம் ஏடுகளில் ஏராளமாக வந்து கொண்டுள்ளது. இதைவிட வெட்கக்கேடு, உறுதிமொழி மீறல் என்ற குற்றம் வேறுண்டா?

முதலமைச்சர் ஜெயலலிதாவுக்குப் பிறந்த நாளை அவருடைய கட்சிக்காரர்கள் கொண் டாடுவது அவர்களுடைய உரிமை.

அதற்காக தமிழக அரசின் வீட்டுவசதி வாரிய அலுவலகத்தையே யாக சாலையாக மாற்றியா கொண்டாடி, மதச் சார்பின்மை - Secular State - என்பதை கொச்சைப்படுத் துவது?

இதுபற்றி பேச, எழுத, கண்டிக்க, ஜன நாயக வாதிகள் - இடதுசாரிகள் என்ற முற் போக்கு அக்மார்க் முத்திரையாளர்கள் முன்வர வேண்டாமா?

ஒரு நாளேடு - அதுவும் அம்மாவின் ஆட்சிக்கு முழு ஆதரவு தரும் அக்கிரகார பூணூல் நாளேடு இன்று காலை வெளி யிட்டுள்ள செய்தி இதோ:

யாக சாலையாக மாறிய வீட்டுவசதி வாரிய அலுவலகம் 

சென்னை நந்தனத்தில் உள்ள, வீட்டு வசதி வாரிய தலைமை அலுவலக வர வேற்பறை, நேற்று திடீரென, யாக சாலையாக மாறியதால், ஊழியர்கள் மத்தியில் குழப்பம் ஏற்பட்டது. தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தின், தலைமை அலுவலகம் நந்தனத்தில் உள்ளது.

வாரியத்தின் தலைவர், நிர்வாக இயக்குநர், செயலர் ஆகி யோரின் அலுவலகங்கள் இங்கு செயல்படு கின்றன. இந்நிலையில், நேற்று காலை, வாரிய பணியாளர்களும், அதிகாரிகளும் வழக்கம் போல், வாரிய அலுவலகத்துக்கு வந்தனர். ஆனால், வாரிய அலுவலக கட்டடத்தின் தரைத் தளத்தில், வரவேற்பறை அமைந்துள்ள பகுதியில், புரோகிதர்கள் புடைசூழ, அக்னி வளர்க்கப்பட்டு, யாகம் நடந்து கொண்டிருந்தது.

வாழை, மாவிலை தோரணம் என்று, வழக்கமான அரசு அலுவலகத்துக்கான நிலையில் இருந்து, முற்றிலும் மாறுபட்டு, ஒரு யாக சாலையாகவே மாறியிருந்தது. இதைப் பார்த்த ஊழியர்கள், நம் அலுவலகத்துக்கு தான் வந்திருக்கிறோமா அல்லது ஏதாவது யாக சாலைக்குள் சென்று விட்டோமா என்று குழப்பத்தில் ஆழ்ந்தனர்.

காரணம் என்ன? இதுகுறித்து விசாரித்த போது, அண்ணா தொழிற்சங்கம் சார்பில், முதல்வர் ஜெயலலிதா பிறந்த நாளை முன்னிட்டு, இந்த யாகம், பூஜைகளுக்கு ஏற்பாடு செய்யப் பட்டதாக, வீட்டு வசதி வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர். முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்த நாளை முன்னிட்டு, விளையாட்டுப் போட்டிகள், மருத்துவ முகாம்கள், நலத்திட்ட உதவிகள் வழங்குதல் என, ஏராளமான நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வரும் நிலையில், வீட்டுவசதி வாரிய தொழிற் சங்கத்தினர், வாரிய தலைமை அலுவலகத்தை, யாக சாலையாக மாற்றி யிருப்பது குறிப் பிடத்தக்கது. - (தினமலர் பக்கம் 12)

யாகசாலை நடத்தலாமா? வீட்டு வசதி வாரியம் கட்சி அலுவலகமாக மாற்றப்பட லாமா? யாகக் குண்டம் அங்கேதான் நடத்த வேண்டுமா? எளிமையாகக் கொண்டாடுதல் என்பது இதுதானா?

மதச்சார்பின்மைபற்றி எழுத்தில், பேச்சில் பீற்றிக் கொள்ளும் முற்போக்காளர்கள் எல்லாம் இதைக் கண்டும் காணாததுபோல் முக்காடு போட்டுக் கொண்டு சீட்டுப் பிச்சைக் காக திருவோடு ஏந்தி நிற்கலாமா?
இது ஒருபுறம், இன்னொருபுறம்  செயற் கைக்கோள்களுடன் சிறீஹரிகோட்டாவில் உள்ள விண்வெளி விஞ்ஞானிகள் மிகச் சிறப்பாகத் தயாரித்த பி.எஸ்.எல்.வி.20 ராக்கெட் வெற்றி கரமாக பறந்தது என்பது நமக்கெல்லாம் மகிழ்ச்சியே! விரைவில் செவ்வாய்க் கிரகத் தினை நோக்கி நம் செயற்கைக் கோள் செலுத் தப்படும் என்று பெருமிதத்துடன் நமது குடிய ரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி கூறியுள்ளார்!

ஆனால் அந்த இஸ்ரோ நிறுவனத்தின் தலைவராக உள்ள ராதாகிருஷ்ணன் நாயர், இதை விண்வெளிக்கு அனுப்புமுன், திருப்பதி சென்று வெங்கடாஜலபதியிடம் வைத்து (Miniature
-  சிறிய மாடல்) அர்ச்சனை செய்து பிறகே திரும்பி, இந்த ராக்கெட்டைச் செலுத் தியுள்ளார். இவ்வளவு விஞ்ஞானிகளின் மூளையை - ஆராய்ச்சியை - அறிவை - வெறும் சூன்யப்பிரதேசமாக ஆக்கிக் காட்டியிருக்கிறார்! 

விஞ்ஞானிகளே இப்படி மூடநம்பிக்கை பரப்பும் முகவர்களாக இருக்கலாமா? நல்ல வேளை கோவிந்தா கோவிந்தா கோஷம் கொடுக்கச் செய்யவில்லை!
அவருக்குப் பக்தி இருந்தால், அது அவரது சொந்த விஷயம்; வீட்டுக்குள் பூஜை புனஸ்காரம் என்று புரண்டு புரண்டு எழட்டும் நமக்குக் கவலை இல்லை; இப்படி பொதுவான ஒரு அறிவியல் சாதனையை - விஞ்ஞான வளர்ச் சிக்கு விரோதமாகச் செய்து காட்டுவது எவ் வகையில் நியாயம்? மதச் சார்பின்மைக் கொள்கைக்கு விரோதமல்லவா?

நாளைக்கு கிறிஸ்துவர் அதிகாரி வந்தால்  சர்ச்சுக்குப் போவார் - இஸ்லாமி யர் மசூதிக்குப் போவார் என்றால் அதை விடக் கேலிக் கூத்து வேறுண்டா?
அரசியல் சட்டத்தின் 51A(h) பிரிவின் கீழ் உள்ள, குடிமகனின் அடிப்படைக் கடமை அறிவியல் மனப்பான்மை வளர்ப்பது என்ப தற்கு நேர்மாறானதல்லவா - ராதாகிருஷ் ணன்களின்  பக்திப் பரவசம்?

இவர் முன்பும் இதேபோல ஏழுமலையான் தரிசனம் செய்துவிட்ட ராக்கெட் ஏன் பாதி துரத் திலேயே வீழ்ந்தது? வெட்கமாக இல்லையா? 

வெளிநாட்டவர்கள் இதனைப் பார்த்து மகிழ்வார்களா? காரித் துப்ப மாட்டார்களா? பூசாரிகளாக இருந்து செய்வது, இஸ்ரோ தலைவரே செய்வது வெட்கக் கேடு மட்டுமல்ல, இந்தியாவுக்கே மானக்கேடும் ஆகும்!

           -------------- - ஊசி மிளகாய் அவர்கள் 26-2-2013 “விடுதலை” யில் எழுதிய கட்டுரை

16 comments:

தமிழ் ஓவியா said...


தூக்குத் தண்டனை ரத்து செய்ய இயக்கம் நடத்துவோம்! - தமிழர் தலைவர் எழுச்சியுரை


வீரப்பன் கூட்டாளி என்று கூறி நால்வருக்கு அளிக்கப்பட்ட தண்டனை - மறுபரிசீலனை செய்க!

உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி கே.டி. தாமஸ் கூறியபடி ராஜீவ்காந்தி கொலை வழக்கில் மூவருக்கு அளிக்கப்பட்ட தூக்குத் தண்டனையையும் மறுபரிசீலனை செய்ய வேண்டும்

தூக்குத் தண்டனை ரத்து செய்ய இயக்கம் நடத்துவோம்!

மார்ச் 5ஆம் தேதி முற்றுகைப் போராட்டத்துக்கு வாரீர்!

தமிழர் தலைவர் எழுச்சியுரை

சென்னை, பிப்.26- கொடுங்கோலன் ராஜ பக்சேவுக்கு வரவேற்பு - வீரப்பன் தோழர் களுக்குத் தூக்கா? எனும் தலைப்பில் சென்னை பெரியார் திடலில் திராவிடர் கழகத்தின் சார்பில் நடத்தப்பட்ட சிறப்புக் கூட்டத்தில் (25.2.2013) மரண தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என்று கூறினார் - திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள். அவர் உரையில் குறிப்பிட்டதாவது:

உணர்ச்சி வயப்படக் கூடிய சூழலில் இங்கு நாம் கூடியிருக்கிறோம். தமிழர்களின் சிவப்பு ரத்த வண் ணத்தில் இனப்படுகொலையாளி ராஜபக்சேவுக்கு இங்கு சிவப்புக் கம்பள வரவேற்பு அளிக்கப்படுகிறது.

சிறப்புக் கூட்டம் ஏன்?

இந்த மனிதநேயமற்ற கொடிய செயலைக் கண்டிக்கும் சிறப்புக் கூட்டம் இது.

தமிழ் ஓவியா said...

இங்குத் திரளாகக் கூடியுள்ள நீங்கள் ஒவ் வொருவரும் பத்துப் பேர்களுக்கு எடுத்துக் கூற வேண்டும். போர் என்று சொன்னால் அதில்கூட சில நெறிமுறைகள் உண்டு. ஆனால் ஈழத்தில் தமிழர் களைக் கொன்று குவித்த இனப்படுகொலையில் அவை எல்லாம் பின்பற்றப்படவில்லை.

மீறப்பட்ட போர் நெறிகள்

குழந்தைகள், பெண்கள், முதியோர்கள், மாற்றுத் திறனாளிகள் இவர்கள்மீது குண்டு வீசக் கூடாது - இவர்கள் பாதுகாக்கப்பட வேண்டும்.

இவை எல்லாம் மீறப்பட்டுள்ளன. சிறுவர்கள் தங்கி இருந்த செஞ்சோலை என்ற விடுதியின்மீது குண்டுகள் வீசி அங்கிருந்தவர்களை சிங்கள இராணுவம் படுகொலை செய்யவில்லையா?

குண்டு போட மாட்டோம் (No Fire Zone) பாதுகாப்பான பகுதி என்று தமிழர் மக்களை நம்பச் செய்த அவர்கள்மீது கொத்துக் குண்டுகளை வீசிப்படுகொலை செய்யவில்லையா?

பச்சிளம் பாலகன் பாலச்சந்திரன் - பிரபாகரனின் மகனாகப் பிறந்தான் என்பதற்காக படுபாதகமாக மார்பில் குண்டு பாய்ச்சிப் படுகொலை செய்ய வேண்டுமா? தனக்கு விரைவில் மரணம் வரப் போகிறது என்று தெரியாத அந்தப் பாலகனைச் சுட்டுக் கொன்று விட்டார்களே, தமிழினம் பூண் டற்றுப் போய்விட வேண்டும் என்பதுதான் அவர்கள் முடிவு. இந்தக் காட்டு விலங்காண் டித்தனத்தை எதிர்த்து நாம் குரல் கொடுக்க வேண்டும். இதற்குக் காரணமான ராஜபக்சேவைக் கூண்டில் ஏற்ற வேண்டும். முற்றுகைப் போராட்டம்!

அதற்காகத்தான் வரும் 5ஆம் தேதி சென்னையில் உள்ள இலங்கைத் தூதரகத்தை முற்றுகையிடும் போராட்டத்தை டெசோ அறிவித்துள்ளது.

அதே நாளில் டில்லியில் நாடாளுமன்ற வளாகத்தில் திமுக நாடாளுமன்ற உறுப்பினர்களும், நமது விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் அவர்களும் பங்கு கொள்ளும் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.

ராஜபக்சேவுக்கு எதிரானது மட்டுமல்ல; உலகத்தின் கவனத்தை ஈர்ப்பதற்குக் குறிப்பாக ராஜபக்சேவுக்கு சிவப்புக் கம்பள வரவேற்பு கொடுக்கும் இந்தியாவிற்கு உணர்த்தவும் தான் இந்த நடவடிக்கைகள்.

டெசோ சார்பில் டில்லியில் மாநாடு!

மார்ச் 7ஆம் தேதி அனைத்துக் கட்சித் தலைவர்களும் பங்கு ஏற்கும் மாநாடும் டெசோ சார்பில் நடைபெற உள்ளது.

காலந் தாழ்ந்தாலும் ராஜபக்சே போன்ற இனப்படுகொலையாளிகள் தப்பிக்கக் கூடாது.

வீரப்பன் கூட்டாளி என்று சொல்லப்பட்டுத் தண்டனை இரண்டாவதாக வீரப்பன் கூட்டாளி என்று சொல்லி நான்கு தோழர்களுக்குத் தூக்குத் தண்டனை பற்றிய பிரச்சினையாகும்.

எந்த வகையிலும் குற்றத்தில் தொடர்பு இல்லாத நிரபராதிகளுக்கு தூக்குத் தண்டனை அளிக்கப்பட்டுள்ளது. தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் இங்கு வந்திருக்கிறார்கள். அவர்களின் கண்ணீர் துடைக்கப்பட வேண்டும்.
கீழ்மட்ட நீதிமன்றத்தில் ஆயுள் தண்டனை மேல் முறையீட்டில் தூக்குத் தண்டனை என்பது நியாயமா? பத்து குற்றவாளிகள் விடுதலை பெறலாம்; ஆனால் ஒரே ஒரு நிரபராதிகூட தண்டிக்கப்படக் கூடாது என்பதுதான் நீதியின் நிலைப்பாடு.

நீதிபதி வி.ஆர். கிருஷ்ண அய்யரின் கருத்து

உச்சநீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதியும் கேரள மாநிலத்தின் முன்னாள் அமைச்சருமான ஜஸ்டிஸ் வி.ஆர். கிருஷ்ண அய்யர் தெரிவித்த கருத்து இம்மாதம் 17ஆம் தேதி வெளிவந்த இந்து ஏட்டில் வெளிவந்துள்ளது.

தமிழ் ஓவியா said...

தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட -வீரப்பன் கூட்டாளிகள் என்று கூறப்பட்டவர்களின் கருணை மனுவினை குடியரசு தலைவர் தள்ளுபடி செய்தது தவறாகும். வழக்கறிஞர்களைக்கூட சந்திக்க அனுமதி மறுப்பது எந்த வகையில் சரி? கண்ணுக்குக் கண் பல்லுக்குப் பல் என்பது ஒரு காலத்தில் இருந்திருக்கலாம். இன்று அப்படியல்ல; தீர்ப்பு வழங்கப்பட்ட தண்டனை என்பது குற்றவாளிகளைத் திருத்தப் பயன்பட வேண்டும். ஒரு கொலைக்கு இன்னொரு கொலை தீர்வாகாது. அப்படி செய்வது அரசு செலவில் செய்யப்படும் மற்றொரு கொலையாகவே கருதப்பட வேண்டும் என்று நீதித் துறையில் நீண்ட அனுபவம் கொண்ட வி.ஆர். கிருஷ்ண அய்யர் சொல்லியுள்ளாரே!

தூக்குத் தண்டனை எதிர்ப்பு இயக்கம் நடத்துவோம்!

தூக்குத் தண்டனையை இந்திய அரசமைப்புச் சட்டத்திலிருந்தே நீக்க வேண்டும் என்றும் அழுத்தமாகக் கூறியுள்ளார்.

இந்த மேடை அடுத்து ஒரு இயக்கத்தை நடத்தும். தூக்குத் தண்டனையை எதிர்த்து ஓர் இயக்கமாகவே நடத்துவோம்! (பலத்த கரஒலி!)

இந்தச் சிறப்புக் கூட்டம் நடைபெறும் இந்த நாளில் இன்னொரு முக்கிய சேதி ஏடுகளில் இடம் பெற்றுள்ளது. தீர்ப்புக் கொடுத்தவரே தவறை ஒப்புக் கொள்கிறார்

உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி கே.டி. தாமஸ், திருவனந்தபுரத்தில் செய்தியாளர்களிடம் தெரிவித்த கருத்து மிகவும் முக்கியமானது.

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தீர்ப்பு வழங்கிய உச்சநீதிமன்ற நீதிபதிகள் அமர்வுக்குத் தலைமை வகித்துத் தீர்ப்புக் கூறியவர் ஜஸ்டிஸ் கே.டி. தாமஸ்.

அந்த வழக்கில் கைது செய்யப்பட்ட 26 பேர்களுக்கு தடா நீதிமன்றம் தூக்குத் தண்டனை விதித்தது. அப்பொழுதே அதனை நான் கண்டித்து விடுதலையில் அறிக்கை ஒன்றை வெளியிட்டேன். நீதிபதி ஒருவர் என் வீட்டுக்கே வந்து துணிவாகக் கருத்தை எழுதி இருக்கிறீர்கள்! என்று கூறி என்னைப் பாராட்டிச் சென்ற அவர் பெயரைச் சொல்ல நான் விரும்பவில்லை.

ராஜீவ்காந்தி வழக்கில் நான்கு பேர்களுக்குத் தூக்குத் தண்டனையை உறுதி செய்த உச்சநீதிமன்ற நீதிபதி கே.டி. தாமஸ் கூறும் கருத்து முக்கியமானது.

உச்சநீதிமன்றத்தில் என் தலைமையிலான அமர்வு, ராஜீவ்காந்தி கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப் பட்டவர்களின் மேல் முறையீட்டு மனுவை விசாரித்தபோது, குற்றம் சாற்றப்பட்டவர்களின் இயல்பு மற்றும் குணாதி சயங்களை நாங்கள் பரிசீலிக்கவில்லை. அவற்றை கருத்திலும் எடுத்துக்கொள்ள வில்லை. ஆகவே, அவர் களின் மரண தண்டனை அரசியல் சட்டத்தின் பிரிவு 22-க்கு விரோதமானது. மிகவும் கால தாமதமாக அவர்களை தூக்கில் போடுவது அரசியல் சட்டத்துக்கு எதிரானதும் ஆகும்.

தமிழ் ஓவியா said...


2010ஆம் ஆண்டு எஸ்.பி.சின்கா தலைமையிலான உச்சநீதிமன்ற அமர்வு , கொலை வழக்கை விசாரித்த போது, குற்றவாளிகளின் இயல்பையும், குணாதிசயத்தை யும் கவனத்தில் கொள்ள வேண்டும் என்று சுட்டிக் காட்டியது. அதாவது, மரண தண்டனை விதிக்கப்படும் குற்ற வாளியின் இயல்பு மற்றும் குணாதிசயங்களை கவனத்தில் எடுத்துக் கொள்ளாமல் தண்டனை அளிக்கக்கூடாது என்பது அவர்களின் முக்கியமான சுட்டிக் காட்டுதல் ஆகும். இது இந்த வழக்குக்கும் பொருந்தும். மேலும், மரண தண்டனை அளிக்கப்பட்ட முந்தைய தீர்ப்புகளில் இருந்த சில தவறு களையும் நீதிபதி சின்கா தலைமையிலான அமர்வு சுட்டிக் காட்டியது குறிப்பிடத்தக்கது. ராஜீவ்காந்தி கொலை குற்றவாளிகள் முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகிய மூவரும் 20 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் தண்டனை அனுபவித்து வருகிறார்கள்.

தமிழ் ஓவியா said...

வீரப்பன் கூட்டாளி என்று கூறி தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டோரின் குடும்பத்தவர்கள் கழகத் தலைவரிடம் மனு அளித்தனர். அருகில் தந்தை டிசோசா (சென்னை பெரியார் திடல், 25.2.2013)

ஆயுள் தண்டனையைப் பொறுத்த வரை, ஒவ்வொரு கைதி யும் தனது தண்ட னையை மறுபரிசீலனை செய்யும்படி கோர உரிமை உள்ளது. அவரது தண்டனை குறைத்து அறிவிக்கப்பட்டாலும், அறிவிக்கப்படாவிட்டாலும் அவர்களுக்கு இவ்வாறு கோர உரிமை உள்ளது.

ஆயுள் தண்டனை கைதிகளுக்கே தங்களது தண்ட னையை மறுபரிசீலனை செய்யும்படி கோர உரிமை இருக்கும்போது, மரண தண்டனை கைதிகளுக்கும் அந்த உரிமை இருக்கிறது. மரண தண்டனை விதிக்கப்பட்டதால் மிக நீண்ட காலமாக சிறையில் வாடும் இவர்கள் மூவரும், தங்களின் தண்டனையை மறுபரிசீலனை செய்ய வாய்ப்பு அளிக்கப்படாமல், ஆயுள் தண்டனை காலத்தையும் தாண்டி தண்டனை அனுபவித்து விட்டார்கள். அவர்களுக்கு இது 3-வது தண்டனையாக உள்ளது. இது போன்ற தண்டனை கேள்விப்படாத ஒன்றாகவும், அரசியல் சட்டத்துக்கு எதிரானதாகவும் உள்ளது என்று கூறியுள்ளாரே - இதற்கு என்ன பதில்?

தங்கள் தண்டனையை மறுபரிசீலனை செய்யக் கோரும் உரிமை பாதிக்கப்பட்டவர்களுக்கு இருக்கிறது என்று சொல்லி இருப்பவர் உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி என்ற முறையில் மட்டுமல்ல; அந்தத் தீர்ப்பை வழங்கியவரே கூறுகிறார். இதனை அரசு கவனத்தில் கொள்ள வேண்டும்.

ராஜீவ்காந்தி கொலையை ஒன்றும் நாங்கள் நியாயப்படுத்தவில்லை. அதே நேரத்தில் நிரபராதிகள் தண்டிக்கப்படக் கூடாது என்பது தான் எங்கள் கருத்து.

தடா சட்டம் பொருந்துமா?

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டவர்களை தடா சட்டத்தின் கீழ் கைது செய்து விசாரணை நடத்தியதே அடிப்படையில் தவறாகும்.

தடா சட்டம் ரத்து செய்யப்பட்ட நிலையில் தடா சட்டத்தின்கீழ் விசாரணை நடத்தித் தண்டனை அளித்தது முரண்பாடுதானே!

பொதுவாக கிரிமினல் சட்டத்துக்கும், இந்தப் பொடா சட்டத்துக்கும் அடிப்படையிலே எதிரானது.

கிரிமினல் வழக்கில் குற்றத்தை நிரூபிக்க வேண்டியது காவல்துறையின் கடமை. ஆனால் பொடா சட்டம் அதற்கு நேர் எதிரானது. குற்றம் சுமத்தப்பட்டவர்கள் தாங்கள் நிபாரதிகள் என்று நிரூபிக்க வேண்டும். தடாவின் கீழ் சிறையில் அடைக்கப்பட்ட ஒரு கைதி தான் குற்றமற்றவன் என்று எப்படி நிரூபிக்க முடியும்?

காவல்துறை அதிகாரிகள் என்ன கூறுகிறார்களோ அவற்றை அப்படியே நீதிமன்றம் ஏற்றுக் கொண்டு தண்டனை வழங்குவதுதான் தடா சட்டம்! எவ்வளவுப் பெரிய கொடுமை?

ஒரே குற்றத்துக்கு மூன்று தண்டனையா?

முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோர் 20 ஆண்டுகள் தண்டனை அனுபவித்துள்ளனர். ஆயுள் தண்டனைக் காலத்தைத் தாண்டி தண்டனை அனுபவித்து விட்டனர். அவர்களுக்கு மூன்றாவது தண்டனையைக் கொடுக்க முடியுமா என்ற வினாவை எழுப்பியுள்ளார் ஜஸ்டிஸ் கே.டி. தாமஸ்.

தங்களால் வழங்கப்பட்ட தீர்ப்பு துரதிர்ஷ்டமானது என்ற வார்த்தையைக்கூடப் பயன்படுத்தியுள்ளார்.

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை வழங்கப்பட்டவர்களுக்குச் சொல்லப்படும் இதே நியாயம் வீரப்பன் கூட்டாளிகள் என்று சொல்லப்படும் தோழர்களுக்கும் பொருந்தக் கூடியதே!

நீதிப் போக்கு மாறி விடக்கூடாது

எங்களுடைய கோரிக்கை எல்லாம் நீதிப் போக்கு மாறி விடக் கூடாது என்பதுதான். நிரபராதிகள் தண்டிக்கப்படக் கூடாது என்பதுதான். எனவே மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம் என்று குறிப்பிட்டார் - திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள்.

தமிழ் ஓவியா said...


ஒரு சிறப்புக் கூட்டத்தின் சீலம்!


சென்னையில் திராவிடர் கழகத்தின் சார்பில் பெரியார் திடலில் நடைபெற்ற சிறப்புக் கூட்டம் (25.2.2013) நல்லதோர் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியது என்பதில் அய்யமில்லை.

கொலைகாரன் ராஜபக்சேவுக்கு வரவேற்பு - வீரப்பன் தோழர்களுக்குத் தூக்கா? எனும் தலைப்பில் நடைபெற்ற சிறப்புக் கூட்டத்தில் பல்வேறு கருத்துகள் விமர்சனத்திற்கு உட்படுத்தப்பட்டன.

1) பொதுவாக தூக்குத் தண்டனை 204 நாடுகளில் தடை செய்யப்பட்டுள்ளது. உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி வி.ஆர். கிருஷ்ண அய்யர் அவர்கள்கூட இந்திய சட்டத்திலிருந்து தூக்கு தூக்கி எறியப்பட வேண்டும் என்ற கருத்தினைத் தெரிவித்துள்ளார்.

ஒரு கொலைக்குப் பரிகாரம் இன்னொரு கொலையல்ல; தூக்குத் தண்டனை என்பது அரசு செலவில் செய்யப்படும் ஒரு கொலையே என்ற நீதிபதியின் கருத்து வரவேற்கதக்கது.

தூக்குத் தண்டனையை எதிர்த்து ஓர் இயக்கமாக நடத்துவோம் என்ற அறிவிப்பினை திராவிடர் கழகத் தலைவர் சிறப்புக் கூட்டத்தில் அறிவித்தபோது மிகப் பெரிய வரவேற்பு இருந்தது (பலத்த கைதட்டல்).

2) ராஜபக்சேயைப் பொறுத்தவரையில் யுத்த நெறிகளை மீறிய போர்க் குற்றவாளி என்பதற்குப் பல்வேறு காரணங்கள் எடுத்து வைக்கப்பட்டன.

குறிப்பாக விடுதலைப்புலிகள் தலைவர் மாவீரன் பிரபாகரனின் மகன் என்ற ஒரே காரணத்துக்காக பாலகன் பாலச்சந்திரன் சிங்கள இனவெறி இராணுவத்தால் சுட்டுக் கொல்லப்பட்டது ஒன்றே போதுமானது - ராஜபக்சே போர்க் குற்றவாளி என்பதற்கு.

மற்ற நாடுகளைவிட இந்திய அரசு புரிந்து கொண்டு, இலங்கையின்மீது இந்திய அரசு வைத்துள்ள பார்வையில் மாற்றம் தேவை! போர்க் குற்றவாளியாக உலக நீதிமன்றத்தில் ராஜபக்சே நிறுத்தப்பட இந்தியா முன் வரவேண்டும் என்பது கூட்டத்தின் அடிநாதமாகவும் இருந்தது.

வரும் 5ஆம் தேதி சென்னையில் உள்ள இலங்கைத் தூதரகத்தை முற்றுகையிடும் போராட்டம் டெசோ சார்பில் அறிவிக்கப்பட்டது. சரியானதோர் கால கட்டத்தில் அறிவிக்கப்பட்டது - சரியான செயல்பாடாகும். அதே நாளில் டில்லியில் நாடாளுமன்ற வளாகத்தில் திமுக நாடாளுமன்ற உறுப்பினர்களும், விடுதலைச் சிறுத்தைக் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் எம்.பி. அவர்களும் பங்கேற்று ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்திட உள்ளனர்.

உலக நாடுகள் மத்தியிலும், இந்தியாவில் உள்ள அனைத்துக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் மத்தியிலும் புதியதோர் தாக்கத்தை இந்தப் போராட்டம் ஏற்படுத்தும் என்பதில் அய்யமில்லை.

மேலும் கூடுதலாக 7.3.2013 அன்று டில்லியில் டெசோ சார்பில் நடத்தப்பட உள்ள மாநாட்டில் அனைத்துக் கட்சித் தலைவர்கள் சேனல் 4 - இயக்குநர் சர்வதேச பொது மன்னிப்பு சபையைச் சேர்ந்தவர்கள் எல்லாம் மாநாட்டில் பங்கேற்பது உலக நாடுகளின் கவனத்தைப் பெரிதும் ஈர்க்கக் கூடியதாகும்.

ஜெனிவாவில் அமெரிக்கா தீர்மானம் ஒன்றைக் கொண்டு வரவிருக்கும் இந்தக் கால கட்டத்தில் இந்தியாவின் தலைநகரில் டெசோ நடத்தவிருக்கும் மாநாடு என்றென்றும் வரலாற்றில் சிறப்புடன் பேசப்படப் போகிறது என்பதில் அய்யமில்லை.

3) ராஜீவ் காந்தி படுகொலையில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள நிலை குறித்து, அன்று உச்சநீதிமன்றத்தில் அத்தகைய தீர்ப்பை வழங்கிய நீதிபதிகள் அமர்வுக்குத் தலைமை வகித்த கே.டி. தாமஸ் அவர்கள் அந்தத் தீர்ப்பு துரதிர்ஷ்ட வசமானது. மறு விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்று சொல்லி இருப்பது - கூட்டத்தில் முக்கியமாக எடுத்துக் கொள்ளப்பட்டு, இத்திசையில் அந்த வழக்கு மறு விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்று சிறப்புக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

தடா சட்டமே செல்லாது என்று ஆகிவிட்ட பிறகு அதன் அடிப்படையில் விசாரணை நடத்தப்பட்டதும், தண்டனை விதிக்கப்பட்டதும் சட்டப்படி தவறுதானே என்று திராவிடர் கழகத் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்கள் எடுத்து வைத்த வினா அனைவரையும் சிந்திக்கத் தூண்டுவதாகும்.

4) வீரப்பன் கூட்டாளிகள் என்ற பெயரால் நால்வருக்கு அளிக்கப்பட்ட தூக்குத் தண்டனை விசித்திரமானது. கீழ்மட்ட நீதிமன்றம் ஆயுள் தண்டனை அளித்த நிலையில், உச்சநீதிமன்றம் தூக்குத் தண்டனை அளிப்பது என்ன நியாயம்?

வீரப்பனை ஒரு முறைகூடப் பார்த்தறியாத இந்த நிரபராதிகள் தண்டிக்கப்படக் கூடாது.

10 குற்றவாளிகள் தப்பிக்கலாம். ஆனால் ஒரே ஒரு நிரபராதி தண்டிக்கப்படக் கூடாது என்ற சட்டத்தின் தார்மீகக் குரலும் சிறப்புக் கூட்டத்தில் தலை தூக்கி நின்றது. திராவிடர் கழகத் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்கள் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் திருமாவளவன் எம்.பி., பேராசிரியர் சுப. வீரபாண்டியன் ஆகியோர் உயரயாற்றினர்.

ஒரு சிறப்புக் கூட்டம் இவ்வளவு சிந்தனைகளின் உயராய்வுப் பெற்றியைப் பெற்றது என்பது சாதாரணமானதல்ல.

தமிழ் ஓவியா said...


பெரியார் சிலை அருகில் பொதுக்கழிப்பிடமா? திராவிடர் கழகம் ஆர்ப்பாட்டம்!


லால்குடி, பிப்.26- புள்ளம்பாடியில் தந்தை பெரியார் சிலை அருகே பொதுக் கழிப்பிடம் கட்டப்படுவதைக் கண்டித்து திராவிடர் கழகம் சார்பில் நாளை ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது.

லால்குடி மாவட்டம், புள்ளம்பாடி பேரூராட்சிக்கு உள்பட்ட திருமழபாடி சாலையில் தந்தை பெரியார் அவர்களின் ஆறரை அடி முழு உருவச் சிலை 24.5.1997 இல் திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள் தலைமையில் அ.தி.மு.க. அமைச்சரவையில், முன்னாள் நிதியமைச்சராக இருந்த நாவலர் இரா. நெடுஞ் செழியன் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.

தற்போது புள்ளம்பாடி பேரூராட்சி நிருவாகத்தின் சார்பில் பெரியார் சிலைக்கு அருகில் பொதுக் கழிப் பிடம் கட்ட ஆரம்பித்ததைத் தடுத்து நிறுத்தினோம். ஆனால், பேரூராட்சி நிருவாகம் கழிப்பிடம் கட்டி வருகின்றது.

இச்செயல் பெரியாரை அவமதிப்பதாகும். மேலும், தமிழர்களின் மனதைப் புண்படுத்தும் செயலாகும் என அம்மாவட்ட ஆட்சியருக்கும், பேரூராட்சி நிருவாக அலுவலருக்கும் மனு அனுப்பப்பட்டது.

இதுகுறித்து திருச்சி வழக்குரைஞர் முத்துக் கிருஷ்ணன்மூலம், சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் 21.2.2013 இல் மனு கொடுக்கப்பட்டது. இவ்வழக்கை விசாரித்த நீதிபதிகள் எஸ். சித்ரா வெங்கட்ராமன், எஸ்.விமலா ஆகியோர் அடங்கிய அமர்வு, இம்மனுவிற்கு பதில் அனுப்புமாறு, திருச்சி மாவட்ட ஆட்சியருக்கும், புள்ளம்பாடி பேரூராட்சி அலு வலருக்கும் தாக்கீது அனுப்ப உத்தரவிட்டனர். இவ்வழக்கு 26.2.2013 (இன்று) இல் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என கூறியுள்ளனர்.

இதற்கிடையில், 27.2.2013 புதன் மாலை 4 மணிக்கு புள்ளம்பாடி பேரூராட்சி அலுவலகத்தின்முன், கழிப்பறை கட்டுவதைக் கண் டித்து இலால்குடி மாவட்ட செய லாளர் ஆல்பர்ட் தலைமையில் அனைத்துக் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடை பெறும் என்று புள்ளம்பாடி திராவிடர் கழக ஒன்றிய செய லாளர் மு. திருநாவுக்கரசு தெரிவித்துள்ளார்.

தமிழ் ஓவியா said...


கழகப் பொறுப்பாளர்களுக்கு கழகத் தலைவரின் முக்கிய அன்பு வேண்டுகோள்!


விலகிக் கொள்ள விரும்புபவர்கள் தாராளமாகவே விலகிக் கொள்ளலாம்!


பெரியார் சிலை அருகில் பொதுக்கழிப்பிடமா? திராவிடர் கழகம் ஆர்ப்பாட்டம்!

அன்பார்ந்த கழகக் கொள்கைக் குடும்பத்தவர்களே,

கடந்த ஆறு மாதங்களுக்கு மேல் - அமெரிக்கவில் சிகிச்சை பெற்றுத் திரும்பிய நிலையில் டெசோ மாநாடு தொடங்கி, கழகப் பொதுக் குழு, செயற்குழு கலந் துரையாடல் கூட்டங்கள், பிரச்சாரக் கூட்டங்கள், போராட்டங்கள் என்று அடுக்கடுக்கான பணிகளை ஓய்வின்றி, இடைவெளியின்றி எம்மைச் செய்யும்படி ஆக்கி, இடையில் 50 ஆண்டு விடுதலைப் பணி நிறைவு விழா, 80ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா என்றெல்லாம் விழாக்களை நடத்தி உற்சாகத்தையும் ஊட்டி, இயக்கம் என்பதன் முழுப் பொருள் என்னவென்பதை நன்கு உணர்த்தியுள்ளீர்கள். மகிழ்ச்சி. நன்றி.

1) நமது கழகப் பொறுப்பாளர்கள் மாவட்டத் தலைவர், ஒன்றியத் தலைவர், நகர மற்றும் கிளைக் கழகத் தலைவர், இளைஞர் அணி, மாணவர் அணி, அதுபோல மகளிர் அணி, திராவிட மகளிர் பாசறை, தொழிலாளர் அணி, விவசாய அணி ஆகியோர் அனைவரும் தத்தம் பணிகளை நெட்வொர்க்கிங்போல் அடிக்கடி கலந் துரையாடல் சந்திப்புகளை ஆங்காங்கு, மாதத்திற்கு குறைந்தபட்சம் இரு முறையாவது நடத்தி, உடனடியாக தலைமைக் கழகத்திற்கு - எங்களுக்கு - தகவல்களை அனுப்பிட வேண்டியது அவசர - அவசியம் ஆகும்.

2) நம் கழகம் கட்டுப்பாட்டிற்கு எடுத்துக்காட்டானது என்பது உலகறிந்த செய்தியாகும்; இதில் ஒரு சில இடங்களில் கோஷ்டி மனப்பான்மை நோய்க்கு ஆளாகி, தலைமைக்கு தம் எதிர்ப்பைத் தெரிவிப்பதுபோலவோ அல்லது அச்சுறுத்தலாகவோ, நாங்கள் பொறுப்பு களிலிருந்து விலகிக் கொள்கிறோம் என்று எழுதி அனுப்புபவர்கள் ஒன்றைச் சிந்திக்க வேண்டும்.

இவர்கள் யாரும் தேர்தல்மூலம் பொறுப்புக்கு வந்த வர்கள் அல்ல. மாறாக, கருத்திணக்க அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்டு கழகத் தலைமையின் ஒப்புதலோடு கழகப் பொறுப்பாளர்களால் நியமிக்கப்பட்டவர்கள் ஆவார்கள்.

எனவே யாராவது விலகிக் கொள்கிறோம் என்றால் அவர்களைச் சங்கடப்படுத்த விரும்பாமல் தாராளமாக தலைமை அனுமதிக்கும்; ஆனால் ஒரு முக்கிய நிபந்தனையுடன்.

அடுத்த 10 ஆண்டு காலத்திற்குள் கழகத்தில் அவர்களுக்கு மீண்டும் எந்தப் பொறுப்பும் தர இயலாது. அப்படிக் கோரத் தகுதியை இழந்தவர்களாக அவர்களே ஆக்கிக் கொண்டவர்கள் ஆவார்கள்.

கழகக் கட்டுப்பாடு கருதி இது ஒரு கசப்பான முடிவாக இருப்பினும் செய்துதீர வேண்டியது கட்டாயமாகும்.

விடுதலை நாளேட்டை வெளிநாட்டுத் தமிழர்கள் முதல் உள்நாட்டில் உள்ள கட்சி சார்பற்ற பலரும் வியந்து பாராட்டிடும் நிலையில், அதன் வளர்ச்சிதான், இயக்கத் தின் இரத்த ஓட்டமாகும். ஆகவே அதன் சந்தாக்களைச் சேர்ப்பது - அதனைப் பரப்புவது என்பது தான் பெரியார் தொண்டர்களின் முன்னுரிமைப் பணியாகும். உறுப்பினர் சேர்க்கையிலும் ஆர்வம் காட்டுக!

அடுத்துப் பிரச்சாரம்! பிரச்சாரம்! பிரச்சாரம்!
ஆண்டு வேலைத் திட்டத்தில் இத்திங்கள்

பிப்ரவரி: தமிழர் உரிமைக் காப்பு, டெசோ - ஈழத் தமிழர் வாழ்வுரிமை காப்பு - நன்றாக நடைபெறுகிறது.

மார்ச்: மகளிர் உரிமை பிரச்சார மாதம். அதையும் செய்ய ஆவன செய்வோம்!

மூன்றாம் கடமை - போராட்டக் களம் காண்பது - அதனை மகிழ்ச்சியுடன் கருஞ்சிறுத்தைகள் செய்து மகிழ்கின்றனர்.

எனவே உடனே ஒவ்வொரு மாவட்டத் தலைவர்கள், செயலாளர்கள் கிளைக் கழகத் தலைவர் வரை சுற்றிச் சுழன்று - கலந்துரையாடல் கூட்டங்களை நடத்துங்கள்! தவறாதீர்!!
கடமையாற்றுங்கள், மானம் பாராத, நன்றி பார்க்காத தொண்டறச் செம்மல்களாக நடந்து நாட்டுக்கு வழிகாட்டுங்கள்!கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்

சென்னை

26.2.2013

தமிழ் ஓவியா said...


அடிமைப்படக்கூடாது...


உழைத்தவன் உழைப்பின் பயனை அடையவேண்டுமானால் - இப்படி யாகம், சாத்திரம், வேதம், மோட்சம், கர்மம், முன்ஜென்மம், கடவுள் செயல் என்கின்ற பித்தலாட்டங்களுக்கு அடிமைப்படக்கூடாது. 'விடுதலை", 26.2.1968

தமிழ் ஓவியா said...


ஜெனிவா மனித உரிமைக் கவுன்சிலில் அமெரிக்காவின் தீர்மானம் வருகிறது!


ஜெனீவா, பிப். 26- ஜெனீவாவில் அய்.நா. மனித உரிமை கவுன்சில் மாநாடு நேற்று தொடங்கியது. இதில் தாக்கல் ஆகும் இலங்கையின் போர்க் குற்றத்துக்கு எதிரான தீர்மானத்தை ஆதரிக்க இந்தியா முடிவு செய்து உள்ளது.

இலங்கையில், கடந்த 2009ஆம் ஆண்டு மே மாதம் 2ஆவது வாரத்தில், விடுதலைப்புலிகளுக்கும் ராணுவத் தினருக்கும் இடையே உச்ச கட்ட போர் நடைபெற்றது.
போரின் இறுதி நாளில் மட்டும் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட அப்பாவி தமிழர்கள் குண்டு வீச்சில் கொத்து கொத்தாக பலியானார்கள். போரின் போது பொது மக்களுக்கு பாதுகாப்பு அளிப்பதற்காக அமைக்கப்பட்ட போர் இல்லா மண்டலத்தில் தஞ்சம் புகுந்த மக்களும் ஈவு இரக்கமின்றி சுட்டுக் கொல்லப்பட்டனர்.

வெள்ளைக்கொடி பிடித்தபடி, சரண் அடைய சென்ற விடுதலைப் புலிகள் இயக்கத்தினரும் கொடூரமாக கொல்லப்பட்டனர். விடுதலைப்புலி கள் இயக்கத்தலைவர் பிரபாகரன் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் அனை வரும் இந்த போரில் கொல்லப்பட்ட தாக அறிவிக்கப்பட்டது.

போர் முடிவுக்கு வந்த பிறகும் தமிழர்கள் அழிக்கப்பட்டனர். தமிழ்ப் பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்டனர். இங்கிலாந்தை சேர்ந்த சேனல்-4 என்ற டெலிவிஷன் நிறுவனம் இந்த இனப்படுகொலை குறித்து நெஞ்சை உருக்கும் காட்சிகளுடன் ஆவணப் படங்களை ஏற்கெனவே வெளியிட்டு இருந்தது.

பிரபாகரனின் 12 வயது மகன் பாலச்சந்திரன் ராணுவ முகாமில் பிணைக் கைதியாக பிடித்து வைக்கப் பட்டு படுகொலை செய்யப்பட்டதை சித்தரிக்கும் உருக்கமான படங்களை யும், சமீபத்தில் அந்த டி.வி. சேனல் வெளியிட்டது. இந்த காட்சிகள் உலகம் முழுவதிலும் அதிர்வலை களை ஏற்படுத்தியது.

அமெரிக்கா அறிக்கை

போர் முடிவுக்கு வந்தவுடனேயே இலங்கை ராணுவத்தின் அட்டூழியம் குறித்து உலக நாடுகள் கண்டனக்குரல் எழுப்பின. இலங்கை அரசின் போர்க் குற்றத்துக்கு எதிராக ஐ.நா.மனித உரிமை கவுன்சிலில் பிரச்சினை எழுப் பப்பட்டது.

சில ஆண்டுகளுக்கு முன்பு 3 பேர் கொண்ட குழுவை இலங்கைக்கு அமெரிக்கா அனுப்பி வைத்திருந்தது. இலங்கையில் நடைபெற்ற அத்து மீறல் குறித்து அறிக்கை தயாரித்த அந்த குழுவினர், அதை ஐ.நா.மனித உரிமை கவுன்சிலில் தீர்மானமாக தாக்கல் செய்தனர்.
அதன் மீது விவாதம் நடந்தபோது அனைத்து குற்றச்சாட்டுகளையும் மறுத்ததுடன், உரிய நிவாரண பணி கள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக வும் தெரிவித்து இருந்தது. திருத்தத் துடன் நிறைவேற்றப்பட்ட அந்த தீர்மானத்தால் எந்த பயனும் இல்லை. அத்துமீறல்கள் தொடர்ந்ததால் மேலும் ஒரு குழுவை அமெரிக்கா இலங்கைக்கு அனுப்பி வைத்தது. இலங்கையில் நடைபெறும் நிவார ணப்பணிகள் திருப்தி அளிக்கவில்லை என்ற அடிப்படையில் மேலும் ஒரு தீர்மானத்தை அந்த குழு தயாரித் துள்ளது. இந்த நிலையில், சுவிட்சர்லாந்து நாட்டின் ஜெனீவா நகரில், ஐ.நா.மனித உரிமை கவுன்சிலின் 22ஆவது மாநாடு நேற்று தொடங்கியது. கவுன்சிலின் தலைவர் நவி பிள்ளை மாநாட்டை தொடங்கி வைத்தார். 47 நாடுகள் உறுப்பினராக இருக்கும் இந்த கவுன்சிலின் மாநாடு, மார்ச் 22-ந்தேதி வரை நடைபெற இருக்கிறது.

இந்த மாநாட்டில், இலங்கைக்கு எதிரான அமெரிக்காவின் 2ஆவது தீர்மானம் மார்ச் 20ஆம் தேதி தாக்கல் செய்யப்படலாம் என்று எதிர்பார்க் கப்படுகிறது. தீர்மானத்தின் மீதான விவாதத்திற்குப் பிறகு, ஓட்டெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டு, இலங்கை மீது எடுக்க வேண்டிய நடவடிக்கை குறித்து முடிவு செய்யப்படும்.

அமெரிக்காவின் 2ஆவது தீர்மா னத்துக்கு ஆதரவு அளிப்போம் என்று, இங்கிலாந்து மற்றும் ஐரோப்பிய கூட்டமைப்பு நாடுகள் அறிவித்து உள்ளன. தமிழ்நாட்டில் இருந்து கொடுக்கப்பட்டு வரும் அழுத்தம் காரணமாக, இந்தியாவும் தீர்மா னத்தை ஆதரிக்கும் என்று, மத்திய அரசு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த முறை இலங்கைக்கு ஆதரவாக இருந்த சீனா, ரஷியா ஆகிய நாடுகளுக்கு இந்த மாநாட்டில் ஓட்டுரிமை கிடையாது. இதனால், இந்த மாநாட்டில் இலங்கைக்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றப் பட்டு, அந்த நாட்டிற்கு எதிராக பொருளாதார தடை உள்ளிட்ட கடுமை யான நடவடிக்கை எடுக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழ் ஓவியா said...


மதுரையில் மன்றல்! கழகத் தோழர்களுக்கு முக்கிய வேண்டுகோள்


மதுரை, நெல்லை, சிவகங்கை, மண்டலக் கழகப் பொறுப் பாளர்கள், மாவட்டத் தலைவர் செயலாளர்கள், நகரத் தலைவர் கள், செயலாளர்கள் மற்றும் கழகத் தோழர்களுக்கு,

நம் கழகத் தலைவர், தமிழர் தலைவர் ஆசிரியர் வீரமணி அவர்களின் ஆணைக்கிணங்கி கடந்த ஆண்டு நவம்பர் 25ஆம் சென்னையிலும், டிசம்பர் 30 திருச்சியிலும் மன்றல் 2012 என்ற மாபெரும் ஜாதி மறுப்பு இணை தேடல் பெருவிழாவினை சிறப்பாக நடத்தினோம்.

இந்தப் பெருவிழாவில் பங்கெடுத்த தன் மூலம் பலர் தங்களது இணையரைத் தேர்ந்தெடுத்து நமது தலைமை நிலையத்தில் உள்ள பெரியார் சுயமரியாதைத் திரு மண நிலையத்தில் திருமணம் செய்து தமது வாழ்க்கையினை சிறப்பாக அமைத்துக் கொண்டனர். மேலும் பலர் வரும் மாதங் களில் திருமணம் செய்வதற்காக தனது இணைகளைத் தேர்ந் தெடுத்துள்ளனர்.

தந்தை பெரியாரின் இலட்சியமான ஜாதி ஒழிப்புக் கொள் கையினை நாம் இந்த மன்றல் நிகழ்ச்சியின் மூலம் செவ்வனே நிறைவேற்றி வருகிறோம். இனி இந்த ஆண்டின் துவக்க நிகழ்ச்சியாக மன்றல் 2013 மதுரையில் வரும் மார்ச் 17-ஆம் தேதி நடைபெற உள்ளது. ஜாதி உணர்வு மிகுந்திருப்பதாகச் சொல்லப்படும் மதுரையில் நமது ஆற்றல் மிக கழகத் தோழர்களின் துணையோடு ஜாதி மறுப்பு இணைதேடல் பெருவிழாவினை நடத்தும் நல்வாய்ப்பு கிட்டியிருக்கிறது.

களங்கள் பல கண்ட திராவிடர் கழகத் தோழர்கள் ஜாதீயத்தை கலங்க வைக்க ஆற்ற வேண்டிய செயல்பாடுகள்.

1. நகர்ப்பகுதியிலும், நகரைச் சுற்றியுள்ள பகுதியிலும் நல்ல வண்ணம் சுவரெழுத்துப் பிரச்சாரத்தை மேற்கொள்வது.

2. மக்கள் நடமாட்டம் அதிகமாக உள்ள பகுதிகளில் எல்லாம் பிளெக்ஸ் போர்டு வைப்பது.

3. தலைமைக் கழகத்திலிருந்து அனுப்பி வைக்கப்படும் சுவரொட்டிகளை பொதுமக்கள் பார்வைக்கு படும்படியான இடங்களில் ஒட்டுவது.

4. மக்கள் ஆங்காங்கு கூடுகின்ற பகுதிகளிலெல்லாம் மன்றல் 2013 பற்றிய துண்டறிக்கைகளை வழங்குவது.

இந்த நான்கு பணிகளையும் நாம் ஒழுங்கான முறையில் செய்து முடித்தால் மன்றல் 2013இன் தொடக்கமே வெற்றிப் படிக்கட்டுகளை எண்ணத் துவங்கிவிடும். நம் நாட்டை ஜாதியற்ற பூமியாக மாற்றிக் காட்டும் மாபெரும் வாய்ப்பாக நமக்குக் கிடைத்திருக்கும் பொன்னான வாய்ப்பு இந்த மன்றல் 2013 ஜாதி மறுப்பு இணைதேடல் பெருவிழா. இது சத்தமின்றி நடக்கும் புரட்சி. இப்புரட்சியை மக்களிடம் கொண்டு சேர்ப்பது மட்டுமே நம் பணி!

குறிப்பு: நிகழ்ச்சி ஏற்பாடு மட்டுமே இம்மூன்று மண்டலங்களைச் சேர்ந்தது. ஏனைய கழக மாவட்டத் தோழர்களும் விளம்பரங்கள் மூலம் மன்றலை மக்களிடம் கொண்டு சேர்க்கலாம். ஜாதி மறுப்புத் திருமணம் செய்ய விரும்பும் எந்தப் பகுதியில் இருப்போரும் இந்நிகழ்வில் பங்கேற்கலாம்.

திருமகள், மாநில அமைப்பாளர்,
பெரியார் சுயமரியாதைத் திருமணம் நிலையம்,
சென்னை - 600 007

தமிழ் ஓவியா said...


நம் இளைஞர்களின் நிலைநாம், நம் இளைஞர்களைத் தயா ரிக்க வேண்டும்; வாக்கு வங்கி அரசிய லுக்குத்தான் நம் இளைஞர்கள் இருக்கி றார்களா?

தந்தை பெரியார், காமராசர், திராவிடர் இயக்கம் இவர்களின் உழைப் பால் இன்று சிகாகோவிலும், லண்டனி லும் கணினிப் பொறியாளர்களாக கைநிறைய சம்பளம் பெறுபவர்களாக இருக்கின்றனரென்றால் அதற்கு எந்தத் தடியும் தாடியும் காரணம்?

இன்று ஆயிரம் ரூபாய் கொடுத்து கிரிக்கெட் பார்க்க டிக்கெட் வாங்குகிற இளைஞர்கள் பல்வேறுப் போதை களுக்கு ஆட்பட்டுள்ளனர் நுகர்வுக் கலாச்சாரம் அவர்களை ஆட்டிப் படைக்கிறது.

யாருக்கோ வந்த விருந்து என்று நினைக்கிறார்கள். ஒரு வீதியில் ஒரு வீடு தீப்பற்றி எரிந்தால், அந்தத் தீ உன் வீட்டுக்கு வர எவ்வளவு நேரம் ஆகும்? என்று தெரியாமல் இருக்கின்றனர்.

இந்த இளைஞர்களை சரியான பாதைக்குக் கொண்டு வரவேண்டிய கடமை நமக்கு இருக்கிறது அதனைச் செய்வோம்.

- சென்னை பெரியார் திடல் சிறப்புக் கூட்டத்தில் தமிழர் தலைவர் கி.வீரமணி (25.2.2013)

தமிழ் ஓவியா said...


தூக்குத் தண்டனையை மறு ஆய்வு செய்க! பேரா. சுப.வீரபாண்டியன் முழக்கம்!


சென்னை, மார்ச் 1- ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தூக்குத் தண் டனை விதிக்கப்பட்ட வர்கள் மீதான தீர்ப்பை மறு ஆய்வு செய்ய சட் டத்தில் இடம் உண்டு என்றார் திராவிட இயக் கத் தமிழர் பேரவையின் பொதுச் செயலாளர் பேராசிரியர் சுப.வீர பாண்டியன். 25.2.2013 அன்று சென்னை பெரி யார் திடலில் நடைபெற்ற சிறப்புக் கூட்டத்தில் உரையாற்றுகையில் அவர் குறிப்பிட் டதாவது.

திராவிட இயக்கத் தமிழர் பேரவை யின் பொதுச் செயலாளர் பேராசிரியர் சுப.வீர பாண்டியன் அவர்கள் தமதுரையில் குறிப் பிட்டதாவது:-

நாகப்பட்டினத்தில், தமிழக மீனவர்களுக்காக ஆர்ப்பாட்டம் நடந்த அன்று இந்து ஏட்டில் பாலகன் பாலச்சந்திரன் படுகொலை செய்யப் பட்டதை பார்த்த போது திடுக்கிட்டோம்.

அதே நேரத்தில் நமது ஆசிரியர் அவர்கள் சென் னையில் இது குறித்து ஒரு பொதுக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யலாமா என்று கருத்து கூற பத்தே நிமிடத்தில் இந்த கூட் டம் ஏற்பாடு செய்ய முடிவு செய்யப்பட்டது.

இந்த நாட்டிலே தண் டிக்கப்பட வேண்டிய குற்றவாளிகள் வரவேற் கப்படுகிறார்கள் - வர வேற்கப் பட வேண்டிய வர்கள் தண்டிக்கப்படு கிறார்கள்.

பாலச்சந்திரன் படு கொலை செய்யப்பட்டுக் கிடந்த காட்சியைவிட அடுத்துத் தனக்கு என்ன நடக்கப் போகிறது என் பதை அறியாமல் தின் பண்டத்தைத் தின்று கொண்டிருக்கும். காட்சி தான் நம்மைப் பெரிதும் பாதிக்கச் செய்கிறது. ஒரு படம் உலகையே உலுக்கி எடுத்து விட்டது.

இந்தியாவின் தலை நகரமான புதுடில்லியில் டெசோ சார்பில் மார்ச் 7ஆம் தேதி மாநாடு - கருத் தரங்கம் நடைபெற உள் ளது. அது உலகம் முழு வதும் நம் உணர்வைக் கொண்டு சேர்க்கும்.

இரண்டு செய்திகள் கொலைக்காரன் ராஜ பக்சேவுக்கு வரவேற்பு - வீரப்பன் கூட்டாளிகள் என்பதற்காக நான்கு பேர் களுக்குத் தூக்கா.

இழுத்து மூடு நீதிமன்றத்தை!

தூக்குத் தண்ட னையே கூடாது என்று சொல்லுபவர்கள் நாம். கசாப் தூக்கிலிடப்பட் டது ஏன் ரகசியமாக வைக்கப்பட்டது ஏனென் றால் வெளியில் தெரிந் தால் சில மனித உரிமை அமைப்புகள் நீதிமன்றம் சென்று விடுவார்களாம்.

எப்படிப்பட்ட தந் திரம். அப்படியென்றால் மனித உரிமைகள் பற்றி இந்த அரசினர் என்ன நினைத்துக் கொண்டு இருக்கிறார்கள்! நீதிமன் றங்கள் இந்த நாட்டில் ஏன்? இழுத்து மூட வேண்டியதுதானே!

குடியரசுத் தலைவராக கே.ஆர்.நாராயணன் இருந்தார் - அவரைத் தொடர்ந்து அப்துல் கலாம் இருந்தார் - அப் பொழுதெல்லாம் அவர் கள் கருணை மனுக் களை நிராகரிக்கவில்லை; தூக்குத் தண்டனையை நிறைவேற்றச் சொல்ல வில்லை.

பிரணாப் குடியரசுத் தலைவராக ஆனபின்...

பிரணாப் முகர்ஜி குடி யரசுத் தலைவரானபின் தூக்குத் தண்டனைகள் அவசர அவசரமாக நிறை வேற்றப்படு வது - ஏன்? தெரிந்து கொள்ளலாமா?

வீரப்பன் கூட்டாளி கள் என்பதற்காக தூக்குத் தண்டனையா? இங்கே அவர்களின் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் நம் எதிரில் கண்ணீர் வடித்துக் கொண்டு அமர்ந்துள் ளார்கள். அவர்களுக்கு நாங்கள் சொல்லு வதெல்லாம் கலங்காதீர் கள்! கலங்காதீர்கள்!! உங் களுக்காகக் குரல் கொடுக் கக் கூடியவர்கள் நியாயம் கேட்கக்கூடியவர்கள் இங்கே இருக்கிறார்கள்.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டிக்கப்பட் டவர்கள் 22 ஆண்டுகள் சிறையில் இருந்து விட்ட னர். இப்பொழுது அவர் களைத் தூக்கில் போட வேண்டும் என்று கூறுகி றார்கள். ஒரு குற்றத்திற் காக? இரண்டு தண்டனை களா? சட்டத்தில் அதற்கு இடமுண்டா?

இதுபோன்ற வழக்கு களை மறு ஆய்வு செய்ய சட்டத்தில் இடம் உண்டு. உச்சநீதிமன்ற நீதிபதியே கூறி இருக்கிறார். அதைத் தான் நாங்களும் வலி யுறுத்துகிறோம். இந்தக் கூட்டத்தின் வாயிலா கவும் வலியுறுத்துகிறோம்.

சு.சாமி ஓட்டம்

சு.சாமி ஒரு தொலைக் காட்சிப் பேட்டிக்கு வந்தார். அப்பொழுது அவரைப் பார்த்து ஒரு கேள்வி கேட்டேன். உங் களை எப்பொழுது கைது செய்யப் போகிறார்கள் என்று கேட்டேன் ஏன்? என்னை எதற்குக் கைது செய்யவேண்டும் என்று கேட்டார். ஜெயின் கமிஷ னில் உங்கள் பெயரும், சந் திரசாமி பெயரும் குறிப் பிடப்பட்டுள்ளதே என்று சொன்னேன். உடனே நடையைக் கட்டிவிட் டார் என்று குறிப்பிட் டார்.

தமிழ் ஓவியா said...


தனிச் சலுகை

ஏழைகள் வாழ்வு மலரவே சமதர்மம் விழைகிறோம். எல்லா வகுப்பினரும் சம வாய்ப்புப் பெறும் வரையில் திட்டமிட்டுப் பரம்பரையாய்த் தாழ்ந்துள்ள சமூகத்தினர்க்குத் தனிச் சலுகை தரப்படவேண்டும். - (விடுதலை, 8.12.1967)

தமிழ் ஓவியா said...


தளபதி மு.க.ஸ்டாலின் பல்லாண்டு பல்லாண்டு வாழ்க! வளர்க!!


60 ஆம் ஆண்டில் அடிவைக்கும் இளைஞர்களின் இதயத்துடிப்பாம்

தளபதி மு.க.ஸ்டாலின் பல்லாண்டு பல்லாண்டு வாழ்க! வளர்க!!

இன்று மார்ச் 1 இல் 60ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் அருமைத் தளபதி மானமிகு மு.க.ஸ்டாலின் அவர்கள், சீரிளமைத் திறத்தோடு சிறப்பான உழைப்பின் உருவமாகி, பெரியார், அண்ணா, கலைஞர் என்ற வரிசையில் கலைஞரின் தகுதிமிக்க அரசியல் வாரிசாகி, வாகைசூடிடும் கொள்கை வைரமாகும்! அடக்கம், அன்பு, கொண்ட கொள்கையில் உறுதி, லட்சோபலட்ச இளைஞர் பட்டாளத்தின் ஈடுஇணையற்ற தளநாயகன், தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள் உழைப்பில் கலைஞர் போல் உயர்ந்து நிற்கிறார்!

மேயராகி, அமைச்சராகி, துணை முதலமைச்சராகி, எதிர்கட்சி தலைவராகவும் ஆகி அவர் வகிக்கும் அரசியல் பொறுப்பு எதுவானாலும் தன் அடிகளை அளந்து வைத்து எதிரிகளையும் வீழ்த்தி வியக்கச் செய்யும் வித்தகர் அவர்!

ஆயிரங்காலத்துப் பயிரான திராவிடர் இயக்கங்களின் அரசியல் சரித்திரத்தில் அடுத்தகட்ட அத்தியாயமாய் பரிணமித்து ஜொலிக்கிறார்!

உலகத்தமிழர்களின் உள்ளங்களிலும் நீங்கா இடம் பெற்றவராய் உலா வருகிறார்!

சிறைச்சாலைத் தியாகங்களாலும், சீலத்துடன் கூடிய பொதுவாழ்வின் தொண்டறத்தாலும் மிளிறும் இத்தொண்டர்களின் தோழன், இயக்கத்தின் அரண், கட்டுப்பாடு காத்து, தன் தலைவர் கிழித்த கோட்டை தாண்டாத கொள்கைக் கோமானாகி, நாளும் வளர்கிறார், கழகத்தையும் வளர்க்கிறார் - கண்ணியத்துடன் கடமையாற்றும் கழகக் கட்டுப்பாட்டின் இலக்கணமாம் அவர்!

வளர, வளர அவரிடம் ஆர்வம் குன்றாது இருப்பதைப் போலவே, அடக்கம் அவரை உயர்த்திடும் அற்புதக் கவசமாகி அவரது வளர்ச்சிக்கு அதுவே வெளிச்சமாகவும் உதவுகிறது!

60ஆம் ஆண்டு அகவையில் கூட இளைஞர் போன்று ஓடி ஆடும் ஓயாத தேனீயாகி, இவர் எப்படி சலிப்பின்றி இலட்சியப் பயணம் செல்கிறார் என்று சிலர் வியக்கக் கூடும்.

அந்த இரகசியம் ஊர் அறிந்தது; உலகறிந்தது. 95 வயதிலும் போராட்டக் களம் காணவே ஆயத்தமான தலைவர் தந்தை பெரியார்தம் ஈரோட்டுக் குருகுல இணையற்ற மாணவராம் 90 வயது இளைஞர் நம் மானமிகு சுயமரியாதைக்காரரான கலைஞரின் ஆணை ஏற்று, செயல்படும் இவர் 60 வயது இளைஞர் என்பதுதான்! இவர் எல்லாம் பெற்று, எதிர்காலத்தை மட்டுமல்ல, நிகழ்காலத்திலும் வரலாற்று வைரவரிகள் எழுதிட, வளர்ந்து உயர்ந்திட வாழ்த்துகிறோம்! வாழ்த்துகிறோம்!!


கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்

1.3.2013 சென்னை

தமிழ் ஓவியா said...


சித்திரை முதல் நாள் அறிவிப்புக்கு வேதனை


தை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டு என
புதிய சட்டம் இயற்ற தமிழக அரசுக்குக் கோரிக்கை!
மலேசிய மாநாட்டில் தீர்மானம்!

மலேசியத் தமிழ் இலக்கியக் கழகத்தின் சார்பில் தலைநகர் கோலாலம்பூர், தான்சிறீசோமா அரங்கில், கடந்த ஞாயிறன்று தை முதல் நாளே தமிழாண்டுத் தொடக் கம் உலகப் பரந்துரை மாநாடு, அதன் தலைவர் அ. இராமன் தலைமையில் நடைபெற்றது. காப்பாளர் இரா. தமிழ ரசி தமிழ் வாழ்த்துடன் மாநாடு தொடங்கியது.

துணைச் செயலாளர் கரு. பன்னீர் செல்வம் வரவேற்புரையாற்றினார். சமுதாயக் காவலர் சே.பி. சாமுவேல் இராசு மாநாட்டு மலரை வெளியிட்டு உரையாற்றினார். நீண்ட வரிசையில் நின்று மாநாட்டு மலரைப் பலர் பெற்றுக் கொண்டனர்.

மலேசியத் தமிழ்நெறிக் கழகத் தலைவர் இரா. திருமாவளவன், தமிழிய ஆய்வுக் களம், தலைவர் இர. திருச் செல்வம், மலேசிய சைவ நற்பணிக் கழகத் தலைவர், திருமுறைச் செல்வர் ந. தர்மலிங்கம், தமிழ்நாடு தேவநேயப் பாவாணர் அறக்கட்டளை நிறுவனர் பாவலர் கதிர். முத்தையன் ஆகியோர் ஆய்வுரை நிகழ்த்தினர்.

தமிழ்நாடு பச்சையப்பன் கல்லூரி முன்னாள் முதல்வரும் தமிழாலயம் சிறப்பாசிரியருமான பேராசிரியர் முனைவர் மு.பி. பாலசுப்பிரமணியன் நிறைவுப் பேருரை நிகழ்த்தினார்.

தமிழ்ப் பண்பாட்டின் வெளிப்பாடான நாட்டிய நிகழ்ச்சி நடைபெற்றது. மு. நிர்மலாதேவி தருமலிங்கம் தொகுத்து வழங்கிய, தொன்மை, நாகரிகம் தொடர் பான ஆவணப்படங்கள் மற்றும் குமரிக் கண்டம் ஆணவப் படங்கள் உள்ளடக்கிய வெண்திரைக்காட்சிகள் பார்வையாளர் களை வெகுவாகக் கவர்ந்தன.

முன்னாள் முதல்வர் முத்தமிழறிஞர் கலைஞர், திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி மற்றும் மலேசியாவிலிருந்து வந்திருந்த வாழ்த்துச் செய்திகள் படிக்கப் பெற்றன.

தமிழ் இலக்கியக் கழகச் செயலாளர் மா. கருப்பண்ணன், மாநாட்டின் தீர்மானங்களைப் படித்தார். அவை பலரால் முன்மொழியப்பட்டு வழிமொழியப் பட்டன.

துணைத் தலைவர் ந. பொன்னுசாமி நன்றி கூறினார்.

நடுவத் தலைவர் போகையா முனியாண்டி நெறியாளராக இருந்து நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கினார்.

மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட முக்கிய தீர்மானங்கள் வருமாறு:

1. மலேசியத் தமிழ் இலக்கியக் கழகம் மற்றும் தமிழ் அமைப்புகளின் வேண்டு கோளை ஏற்று, தை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டு எனச் சட்டம் இயற்றி அறிவித்த அன்றைய முதல்வர் கலைஞர் அவர்களுக்கு உளமார்ந்த நன்றியை இம்மாநாடு தெரிவித்துக் கொள்கிறது.

2. அச்சட்டத்தை ரத்து செய்து, சித்திரை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டு எனத் தமிழ் பண்பாட்டுக்கு விரோதமாக இன்றைய தமிழக அரசு சட்டம் இயற்றியதற்கு மிகுந்த வேதனையை இம்மாநாடு தெரிவித்துக் கொள்கிறது.

3. அச்சட்டத்தை மறுபரிசீலனைக்கு உட்படுத்தி, மீண்டும் தை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டு எனப் புதிய சட்டம் இயற்றி அறிவிக்க இன்றைய தமிழக அரசை இம்மாநாடு வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.

4. தை முதல் நாளைப் பொங்கல் மற்றும் தமிழ்ப்புத்தாண்டாக, மலேசியத் தமிழ்ப் பெருமக்கள் அனைவரும் இணைந்து மகிழ்ச்சியுடன் கொண்டாடி வருகிறார்கள். அந்நாளை, பொது விடுமுறை நாளாக அறிவிக்குமாறு, மலேசிய நடுவணரசை இம்மாநாடு கேட்டுக் கொள்கிறது.

5. தொன்மை வாய்ந்த மூத்த தமிழுக்குச் செம்மொழித் தகுதி வழங்கிச் சிறப்பித்த இந்திய நடுவணர சுக்கும் அதற்குத் துணைபுரிந்த அன்றைய முதல்வர் கலைஞர் அவர்களுக்கும் நெஞ்சம் நிறைந்த நன்றியை இம்மாநாடு தெரிவித்துக் கொள்கிறது. இந்திய நடுவணரசின் மனிதவள மேம்பாட்டுத்துறையின்கீழ் சென்னையில் இயங்கிவரும் செம் மொழித் தமிழாய்வு நடுவண் நிறுவனத்திற்குக் கூடுதல் நிதி உதவி அளிப்பதுடன், தற்போது முடங்கிக் கிடக்கும் அதன் நிருவாகத்தைச் சீர்படுத்தி மேலும் சிறப்புடன் செயற்பட உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு இந்திய நடுவணரசை இம்மாநாடு கேட்டுக் கொள்கிறது.

6. தமிழர் வாழ்வியல் திருமறையாக வும் உலகப் பொதுமறையாகவும் திகழும் திருக்குறளை, தேசிய நூலாக அறிவித் துப் பெருமைப்படுத்துமாறு இந்திய நடுவணரசை இம்மாநாடு கேட்டுக் கொள்கிறது.

மற்றும் பல தீர்மானங்கள் அம் மாநாட்டில் நிறைவேற்றப்பட்டன.