Search This Blog

24.2.13

காவிரிநீர்பிரச்சினை அன்றே சொன்னது திராவிடர் கழகம்

அன்றே (1980-இல்) சொன்னது திராவிடர் கழகம்



19.12.1980 அன்று காவிரிநீர்பிரச்சினை தொடர் பாக முதலைமைச்சர் எம்.ஜி.ஆர் கூட்டிய அனைத்துக் கட்சி கூட்டத்தில் திராவிடர்கழகத்தின் சார்பில் எழுத்துருவில் அளிக்கப்பட்ட கருத்துரு.

காவிரி நீர் பங்கீட்டுப் பிரச்சினை என்பது தமிழ் நாட்டு மக்களின் வாழ்வோடு ஒட்டிய முக்கிய பிரச் சினை, இதில் அரசியல் கண்ணோட்ட மாகவோ, வேறு வகையான எண்ணங்களோ குறுக்கிடாமல் நடுநிலை யோடும், நிகழ்கால வருங்கால சந்ததியினரின் வாழ்வு குறித்த கவலையோடும், பொறுப்போடும் சிந்தித்துத் தீர்வு காணவேண்டியது அனைத்து மக்களின் முக்கிய கடமையாகும். தமிழ்நாட்டில் காவிரிப் படுகைப் பகுதி வேளாண்மைக்கு மிக உகந்ததாக இருக்கிறது. படுகைப் பகுதி முழுவதிலும் பெரும்பாலும் நெல்லே பயிரிடப்படுகிறது. காவிரியில் ஜூன் மாதத்தில் தண்ணீர் விடப்பட்டு, ஜூலையில் பெருக்கெடுக்கும் பொழுது குறுவைச் சாகுபடி நன்றாக நடைபெறும். அப்படிக் குறுவைப் பயிர் சாகுபடி செய்யமுடியாத நிலங்களில் ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் சம்பாப் பயிர்நடவாகி நவம்பர்,  டிசம்பரில் பயிரிடப்படுகிறது. பெய்யும் மழையின் உதவி கொண்டு, குறுவை நிலங் களில் அறுவடை முடிந்து தாளடி பயிரிடப்படுகிறது. காவிரிப் பள்ளத்தாக்கில் மழை பெய்வது, அதாவது மேட்டூர் அணைக்குக் கீழ்ப்பகுதியில் அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான காலத்தில் வடகிழக்குப் பருவக்காற்றின் விளைவாக. ஆனால், மேட்டூருக்கு மேற்பகுதியான கேரளா, கர்நாடக மாநிலங்களில் ஜூன் முதல் அக்டோபர் வரையில் மழை பெய்வது தென்மேற்குப் பருவக்காற்றின் விளைவாக என்கின்ற இந்தச் செய்தியை நினைவில் கொள்வது நல்லது.
1924 ஆம் ஆண்டு ஒப்பந்தத்தைப்பற்றி எல்லோரும் அறிவார்கள். ஆனால், இது எதன் அடிப்படையில் அமைந்ததென்றால் பழைய சென்னை அரசுக்கும், மைசூர் அரசுக்கும் இடையே 1892 ஆம் ஆண்டு ஏற்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையிலாகும். அந்தப் பழைய ஒப்பந்தத்தின்படி, மைசூரில் எந்தப் புதிய பாசனத்திட்டம் துவங்கவேண்டுமென்றாலும் சென்னை யின் ஒப்புதலின் பேரில்தான் செய்யவேண்டும். இதன்படி       சென்னை மைசூரைக் கட்டுப்படுத்த முடியுமே தவிர, தடுக்க முடியாது. தடுக்க முடிந்திருந்தால் பாலாறு பாழாறு ஆகியிருக்காதே!

பின்னர் பேச்சுவார்தைகள் நடந்து 1924 ஆம் ஆண்டு ஓப்பந்தம் நிறைவேறியது. இதில் முதல் முடிவே ஏற்கெனவே நடைமுறையில் இருந்த பழைய பாசன வசதிகளை அப்படியே பாதுகாக்கும் உறுதியாகும்.

இரண்டாவதாக, மேலும் இருப்பதாகக் கருதப்பட்ட எஞ்சிய தண்ணீர்  ஒரு பகுதியை உடனடியாகவும், இன் னொரு பகுதியை ஒரு குறிப்பிட்ட வகையிலும் பங்கிட வழி செய்யப்பட்டது.

கடைசியாக, இதற்கு மேலும் எஞ்சிய தண்ணீர் உள்ளதா என்பதை 50 ஆண்டு அனுபவத்தில் கண்டறிந்து, அதைப் பற்றி 1974 ஆம் ஆண்டில் மறுஆய்வு நடத்தவேண்டும் என்பதாகும்.

ஆகையால், 1924 ஆம் ஆண்டு ஒப்பந்தம் 1974 ஆம் ஆண்டில் காலாவதி ஆகிவிட்டது என்னும் கூற்றே தவ றானதாகும். மறு ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட வேண்டும் என்றே அது சொல்கிறது.

அரசுகோப்புகளில் ஒரு செய்தி கட்டாயம் இடம் பெற்றி ருக்கும். அதாவது, 1972 மே மாதம் 29 ஆம் தேதி மத்திய நீர்ப்பாசன அமைச்சரான டாக்டர் கே.எல்.ராவ் அவர்கள் முன்னிலையில் புதுடெல்லியில் நடைபெற்ற மூன்று மாநில முதல் அமைச்சர்களின் மாநாட்டு நிகழ்ச்சிக் குறிப்புகளே அவை. அப்போது குறிப்பிட்டதென்ன ?

''மறு ஆய்வு செய்யப்படவேண்டிய காலமான 1974 ஆம் ஆண்டு விரைவில் வர இருப்பதால் செய்துகொள்ளப்பட்ட இடைக்கால தற்காலிக ஏற்பாடுகளைப் பற்றியே இன்னும் விவாதித்துக்கொண்டிராமல், நாம் நிரந்தரத் தீர்வுக்கான ஏற்பாடுகள் பற்றி எண்ணிடவேண்டும். இதற்காக நம்பகமான விவரங்களைத் திரட்டித் தந்திட உண்மை கண்டறியும் குழு (Fact finding committee) ஒன்று அமைக்கப்படவேண்டும்'' என்பதே அது. ஆகையால் நாம் இப்போது இந்த ஒருமித்த கருத்துக்குச் செயல்வடிவம் தர வலியுறுத்திடல் அவசியமாகும்
1973 ஆம் ஆண்டு ஏப்ரலில் டெல்லியில் நடைபெற்ற மாநிலங்களின் மாநாட்டில், ''காவிரிக்குழு''வின் முடிவுகள் ஏற்கப்பட்டன. மேற்கொண்டு இதன் வழியில் நடவடிக் கைகள் நடைபெறவில்லை, 1973 அக்டோபரில் புதிய நெறி யென்று காட்டப்பட்டது. படேல் குழு அமைக்கப்பட்டது.

பயிர்களுக்குப் பாசனம் ஆகும் தண்ணீரைக் குறைத் தால் எவ்வளவு சேமிக்கமுடியும் ; எஞ்சிய தண்ணீர் கடலில் விரயமாகாமல் எவ்வாறு தடுக்கலாம் என ஆராயுமாறு வலியுறுத்தப்பட்டது. தமிழகத்திற்கு எதிராகத் திருப்பி விடப்பட்ட இந்த முடிவுக்குக் காரணம் அரசியல் என்றே தெளிவாக உணரலாம்.

இதற்குப் பின்னரே, நடைமுறைக்கு ஒவ்வாத பல திட்டங்கள் மத்திய அரசாலும், கர்நாடக, கேரள மாநில அரசுகளாலும் முன்வைக்கப்பட்டன.
இவை அமலுக்கு வந்தால், படுகைப் பகுதியின் குறுவை விளைச்சலே நாசமாகும்.

இந்தப் பிரச்சினையின் சாராம்சம் என்னவென்றால், இப்போது நமக்குள்ள பாசனத்திட்டம் பாதுகாப்பாக இருக்க, மேட்டூருக்கு மேலுள்ள மாநிலங்கள் நமக்கு எவ்வளவு தண்ணீருக்கு உறுதிமொழி தரமுடியும் என்பதை முடிவு செய்திட வேண்டும். இது நடந்தால் 1924 ஆம் ஆண்டு ஒப்பந்தப்படி நமது படுகையில் கிடைக்கும் தண்ணீரைக் கணக்கிடுவதும், பங்கிடுவதும் இப்போது இங்குள்ள வளர்ச்சித் திட்டங்களின் அடிப்படையில் எளிதாகும்.

ஆகவே, இப்போது நடைபெற இருக்கும் பேச்சு வார்த்தைகளின்போது நாம் எடுத்து வைக்கவேண்டிய கருத்துகளாவன ; -

1. 1972 மே மாதம் மாநில முதல்வர்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டவாறும், 1924 ஆம் ஆண்டு ஒப்பந்தத்தில் காட்டப்பெற்றுள்ளவாறும் இப்போது நடைபெறும் பேச்சுவார்தைகள் 1924 ஆம் ஆண்டு ஒப்பந்தத்தின் மறு ஆய்வுதான் - என்பது.

2. பயிர்களுக்குப் பயன்படுத்தும் இப்போதைய பாசன முறைக்குத் தேவையான அளவு தண்ணீர் மேட்டூருக்கு விடுவதற்கு உறுதிமொழி தரப்படவேண்டும். இதில் விட்டுக்கொடுப்பதோ, அளவைக் குறைப்பதோ ஏற்கத் தக்கதல்ல - என்பது.

3. பயிர்களுக்குப் பயன்படுத்தும் தண்ணீரின் அளவைக் குறைப்பதற்குத் தண்ணீரைக் கட்டுப் படுத்தும் முறைகளை நாம் மேற்கொள்வோம் என்றும், இத்துறையில் மத்திய அரசின் வழிகாட்டு நெறிகளை ஏற்போம் என்றும் நாம் உறுதிமொழி தரலாம் என்பது.

4. அளவைக் குறைப்பதால் மீதமாகும் தண்ணீரைப் பற்றி பின்னர் கணித்தறிந்து படுகைப் பகுதிகளில் சமப்பங்கீடு செய்வது குறித்துக் காலக்கெடு குறிப்பிடாமல் ஒரு ஏற்பாட்டிற்கு ஒத்துக் கொள்ள லாம் என்பது.

பத்தாண்டுகட்கு மேலாக உருப்படியான பயனின்றி நடைபெற்றுவரும் காவிரி நீர்ப்பங்கீடு பற்றிய பேச்சு வார்தைகளுக்கு சுமுகமாக ஒரு முடிவு மேற்கூறிய வண்ணம் அமையாமற்போகுமானால் நாம் அடியிற் கண்டவாறு மாற்றுத்திட்டம் ஓன்றினைத் தரலாம் ;

1. பிரச்சினையை நடுவர் குழுவுக்கு (tribunal) விட லாம். அல்லது,

2. காவிரிப் பள்ளத்தாக்கு ஆணை அமைப்பு (cauvery valley authority) ஒன்றினை உருவாக்கி, அதிகபட்சம் பயன்பெறவும், படுகைப் பகுதியின் நீர்த் தேக்கங்கள் சமவாய்ப்பும் பயனும் பெறவும், இப் போதுள்ள பாசன அமைப்பு பாதுகாக்கப்படவும் வழிவகை காண்பதாகும்.

இதில் ஆழமாகத் சிந்தித்து அனுபவம் அதிகம் உள்ள நிபுணர்களான திருவாளர்கள் எஸ்.பி.நமச் சிவாயம், (ஓய்வுபெற்ற தலைமைப் பொறியாளர்)   நீரியல் நிபுணர் பி.குமாரசாமி போன்றவர்களைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டியது அவசியமாகும்
தங்கள் உண்மையுள்ள,

கி.வீரமணி                                                                
பொதுச்செயலாளர், 
திராவிடர் கழகம்

சென்னை 19.12.80 ----"விடுதலை” 24-2-2013

15 comments:

தமிழ் ஓவியா said...


கருத்துப்புரட்சி முரசறைய கம்பத்தில் கூடுவோம்! கூடுவோம்!!


ஒரு காலகட்டத்தில் மதுரைக் கழக மாவட்டம் என்றால் பரந்து விரிந்ததாகும். கழக நடவடிக்கை களைச் சிறப்பாக செய்வதற்காக நிருவாக வசதிக்காக எல்லைகள் குறுக்கப்பட்டு பல கழக மாவட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

மதுரை மாநகரம், மதுரைப் புறநகரம், திண்டுக்கல், பழனி, விருதுநகர், தேனி மாவட்டம் என்று பிரிக்கப்பட்டு தனித் தனியே மாவட்டக் கழகப் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டு, கழகப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

நமது கழகத் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்கள் மேற்கொண்ட இந்தச் சீர்திருத்தமானது மிகப் பெரிய வெற்றியை ஈட்டித் தந்துள்ளது.

ஒவ்வொரு மாவட்டமும் கழகப் பணிகளில் தீவிரம் காட்டி, மக்கள் மத்தியில் தந்தை பெரியாரின் கொள்கைகள் திட்டமிட்ட வகையில் ஆழமாகவும் அடர்த்தியாகவும், விரிவாகவும் செய்யப்படக் கூடிய வாய்ப்பு அதிகரித்துள்ளது.

திராவிடர் கழகத்தில் பல்வேறு அணிகள் உருவாக்கப்பட்டு அவரவர்களுக்கும் பணிகள் ஒதுக்கப்பட்டு, அவர்களின் சாதனைகள், இலக்குகள் மாதந்தோறும் தலைமைச் செயற்குழுக் கூட்டத்தில் விவாதிக்கப்படுகின்றன.

கம்பத்தில் வரும் 27ஆம் தேதி நடைபெற விருக்கும் மதுரை மண்டல மாநாடு - இந்தக் காலகட்டத்தில் பல வகைகளிலும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.

ஈழத் தமிழர் பிரச்சினை
ஜாதி - தீண்டாமை பற்றிய பிரச்சினை
தனியார்த் துறைகளிலும் இட ஒதுக்கீடுப் பிரச்சினை
பெண்ணியல் உரிமைகள்
வஞ்சிக்கப்படும் தமிழ்நாடு

இந்த அய்ந்து பிரச்சினைகளையும் முன்னிறுத்தி கம்பம் மாநாடு கழக வரலாற்றுக் கம்பத்தில் கம்பீரமாகப் பறக்க இருக்கிறது.

சிறப்பான கருத்தரங்கம்
எழுச்சியூட்டும் பேரணி
தமிழர் தலைவர் கருத்துரை வழங்கும் பொது மாநாடு

- என்று பல அணிகளுடன் கம்பம் மாநாடு வெகு நேர்த்தியாக நடைபெற உள்ளது. இதற்கு முன் இரண்டு முறை - பல்வேறு காரணங்களால் ஒத்தி வைக் கப்பட நேர்ந்தது!

இந்த நிலையில் வட்டியும் முதலுமாக மிகப் பெரிய அளவில் மாநாடு நடந்தேற மாவட்டக் கழகப் பொறுப்பாளர்கள் மும்முரமாக இறங்கியுள்ளனர்.

திராவிடர் கழகம் என்றால் ஒட்டுமொத்தமான தமிழர்களின் பாடி வீடாயிற்றே உரிமை முரசும் ஆயிற்றே!

அனைத்துத் தரப்பினரும் ஆதரவுக் கரம் நீட்டுகின்றனர்.

நமது கழகப் பொறுப்பாளர்களும் சரி, கழகத் தோழர்களும் சரி மக்கள் மத்தியில் பரவலான மதிப்பிற்கும், ஆதரவுக்கும் உரியவர்கள் ஆயிற்றே!

அதன் ஒட்டுமொத்த வலிமையை வரும் 27ஆம் தேதி கம்பத்தில் காணத்தான் போகிறோம்.

கழகக் குடும்பத்தினரே, தமிழின உணர்வாளர்களே, எஃகு போன்ற உறுதிபடைத்த இளைஞர் பட்டாளமே, பெரியார் படைக்க விரும்பிய புரட்சிப் பெண்களே! ஈழத் தமிழர்களின் வாழ்வுரி மைக்காக தோள்தட்டி எழுந்து நிற்கும் தோழர்களே! வரும் 27ஆம் தேதி நீங்கள் கூட வேண்டிய இடம் கொள்கைக் கொடி கம்பீரமாகப் பறக்க இருக்கும் கம்பத்தில்.

கம்பத்தில் கூடுவோம்! கருத்துப் புரட்சி முழக்குவோம்!!

வாரீர்! வாரீர்!!

தமிழ் ஓவியா said...

மராட்டிய மாநிலம் மும்பை நகரில் பன்னாட்டு புத்தநெறி மாநாடு


இந்தியாவில் தோன்றிய முதல்புரட்சியாளர் புத்தரே!

புத்தநெறி என்பது சடங்குகள் சார்ந்த மதம் அல்ல - புத்தநெறி பகுத்தறிவு சார்ந்த வாழ்க்கை முறை!

மாநாட்டினை தொடங்கி வைத்து தமிழர் தலைவர் பேருரை!

சமூகநீதி பேராளிகளுக்கு அம்பேத்கர் சமூகநீதி விருதினை தமிழர் தலைவர் வழங்கினார்


மும்பை, பிப்.24- மராட்டிய மாநிலம் மும்பை நகரில் பன்னாட்டு புத்தநெறி மாநாடு பிப்ரவரி 23, 24, 25 ஆகிய மூன்று நாட்கள் நடை பெறுகிறது.

புத்தநெறி மாநாட் டின் முதல் நாள் நிகழ்ச் சியில் தமிழர் தலைவர் பங்கேற்று, மாநாட் டினைத் தொடங்கி வைத் தார். மும்பை மாநகர் லோக் கிராம் கிழக்கு கல்யாண் பகுதியில் நடைபெறுகின்ற மாநாட்டினை புத்த விகாஸ் சங்கம் ஒருங் கிணைத்து நடத்துகிறது.

மாநாட்டின் முதல் நிகழ்ச்சியாக தமிழர் தலைவர் கி.வீரமணி - சமூகப் புரட்சியாளர் அண்ணல் அம்பேத்க ரின் உருவப்படத்திற்கு மலர் வைத்து மரியாதை செலுத்தினர். மாநாட் டின் பெரும் தலைவர் பெருமைமிகு கியான் ஜோதி ஸ்தவீரர், புத்த விகாஸ் சங்கத்தின் தலைவர் சுரேஷ் காரத், செயலாளர் சுரேஷ் மாட்டே மற்றும் மாநாட்டின் முக்கியப் பேராளர்கள் தமிழர் தலைவருடன் இணைந்து அண்ணல் அம்பேத்கருக்கு மரி யாதை செலுத்தினர்.

மாநாட்டில் சமூக நீதிக் களத்தில் பணி யாற்றிய பல்வேறு பெரு மக்களுக்கு அம்பேத்கர், பெரியார் சமூகநீதி விரு தினை தமிழர் தலைவர் வழங்கினார். மூன்று நாள் மாநாட்டில் மராட் டியம் மற்றும் அண்டை மாநிலங்களில் வெள் ளுடை அணிந்த சங்கத் தினர் - ஆண்களும், பெண்களுமாய் ஆயிரக் கணக்கில் பங்கேற்றனர். பர்மா, கம்போடியா, இந்தோனேசியா ஆகிய நாட்டிலிருந்தும் பேரா ளர்கள் வந்திருந்தனர். புத்த பிக்குகள், குருமார் கள் பலர் வருகை தந் திருந்தனர்.

தமிழர் தலைவரின் தொடக்க உரை

பன்னாட்டு புத்த தம்ம மாநாட்டினை தொடங்கி வைத்து தமிழர் தலைவர் பின் வருமாறு உரையாற் றினார்.

தமிழ் ஓவியா said...

பன்னாட்டு புத்த தம்ம மாநாட்டில் கலந்து கொண்டிருக்கும் உங்கள் அனைவருக்கும் எங்களது நல்லெண் ணத்தையும் வாழ்த்து களையும் தெரிவித்துக் கொள்கிறோம். பெரி யார் மண்ணிலிருந்து, பாபா சாகிப் அம்பேத் கரின் மண்ணிலுள்ள உங்களுக்கு வாழ்த்துகள். உங்களிடம் உங்களது தாய் மொழியான மராட் டியத்தில் பேச இயல வில்லை. எமக்கு மராட் டிய மொழி தெரியா ததோ, அது போல உங் களுக்கு தமிழ் மொழி தெரியாததோ அது ஒரு குறைபாடு - இடர்ப்பாடு அல்ல. காரணம் நாம் உறவாடும் மொழி டாக் டர் அம்பேத்கரின் கொள்கை மொழி, புத்தரின் தத்துவ மொழி, தந்தை பெரி யாரின் கொள்கை மொழி. நாம் பேசுவது சமத்துவத்தின் மொழி; நாம் பேசுவது மானிடத்திற்கான மேம் பாட்டுப் பணி மொழி. அந்த வகையில் நமக்குள் மொழி என்பது ஒரு தடை அல்ல. மகாத்மா ஜோதிபா பூலே மண் ணில், டாக்டர் அம் பேத்கர் பிறந்த மண் ணில் புத்த மாநாட்டினை தொடங்கி வைத்து உரை யாற்றுவதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறோம்.

இந்த நாட்டில் அரசியல் தளத்தில் பணி ஆற்றுவது என்பது ஒருவகையில் எளிது. நீரோட்டத்தோடு நீந்துவது போன்றதாகும். ஆனால் சமூக நோக்கத் தளத்தில் பாடுபடுவது மிகவும் கடினமான பணி யாகும். நீரோட்டத் தினை எதிர்த்து நீந்துவது போன்றதாகும். அத் தகைய பணியினை டாக்டர் அம்பேத்கரும், தந்தைபெரியாரும் தோள் மேல் சுமந்து மானிட மேம்பாட்டிற் காகப் பாடுபட்டுள்ளனர்.

தமிழ் ஓவியா said...

1936ஆம் ஆண்டில் வடபுலத்தில் பஞ்சாப் மாநிலத்தில் உள்ள அமைப்பு டாக்டர் அம் பேத்கர் அவர்களை ஒரு மாநாட்டில் பேச அழைத்திருந்தனர். தனது பேச்சினை ஆழமான ஆய்வுச் சொற்பொழி வாகத் தயாரித்து ஜாதி ஒழிப்பு எனும் தலைப் பில் மாநாட்டு ஏற் பாட்டாளருக்கு மாநாடு நடைபெறுவதற்கு முன்பே அம்பேத்கர் அனுப்பியிருந்தார். சொற்பொழிவின் உள் ளடக்கத்தினைப் படித்த மாநாட்டு ஏற்பாட் டாளர்களில் ஒரு சிலர் அதில் கூறியிருந்த கருத் துகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்தனர். இதனால் மாநாட்டுக்கு அம்பேத் கரை அழைத்தவர்கள், ஆட்சேபனைக்குரிய பகுதிகளை நீங்கி விட்டு உரையாற்றிட அம்பேத் கர் அவர்களிடம் கேட் டனர். ஆனால் அம்பேத் கரோ அதற்கு மறுப்பு தெரிவித்து விட்டார். தன்னைப் பேச அழைத்து விட்டு, தனது கருத்துக் களைக் தடை விதித்த நிலையில் அம்மாநாட் டில் கலந்துகொள்ள மறுத்துவிட்டார். தான் ஒரு சுயமரியாதைக்காரர் என நிரூபித்தார்.

இந்நிகழ்வினை கேள் விப்பட்ட தந்தை பெரி யார் தனது குடிஅரசு இதழில் அம்பேத்கர் காட்டிய துணிவு மற்றும் கருத்தைப்பற்றி பாராட்டி எழுதினார். மேலும் அம்பேத்கர் அந்த மாநாட்டிற்கு தயாரித்த உரையினை தமிழில் மொழிபெயர்த்து வெளியிட அனுமதியும் வேண்டினார். அம் பேத்கர் அனுமதியும் அளித்தார். அந்த நாளி லிருந்து தந்தைபெரி யாரும், டாக்டர் அம் பேத்கரும் இணைந்து பணியாற்றிட முற்பட் டனர். இருவரும் ஒரே நாணயத்தின் இரண்டு பக்கங்கள் ஆயினர். பெரிய தலைவர்கள் ஒன் றாக சிந்திப்பது மட்டு மல்ல; ஒன்றுபோல போராடுவது போலவும் திகழ்வார்கள் என்பதற்கு தந்தை பெரியாரும், டாக்டர் அம்பேத்கரும் சரியான எடுத்துக்காட்டு. அம்பேத்கரின் அந்த உரைதான் பின்னர் ஜாதி ஒழிப்பு (ஹடையைவடி டிக ஊயளவநள) எனும் தலைப் பில் பரந்து பட்டு புகழ் பெற்றது.

இந்தியாவில் தோன் றிய முதல் சமூகப் புரட்சி யாளர் புத்தர். தந்தை பெரியார் 1954 ஆண்டில் தமிழ்நாடு- ஈரோட்டில் புத்தரின் கருத்துகளை பரப்பிட மாநாடு கூட் டினார். இலங்கைப் பல்கலைக்கழகத்தின் புத்த பண்பாட்டுத் துறை பேராசிரியர் டாக்டர் ஜி.பி. மல்லல சேகராவை தலைமை தாங்கிட வைத் தார். டாக்டர் அம்பேத் கர் அவர்களுக்கு உறு துணையாக இருந்த ராஜ்போஜ் மாநாட் டினை துவக்கிட வைத்தார். தமிழ்நாட்டில் புத்தரின் கருத்துகளைப் பரப்பிய முதல் தலித் தலைவர் அயோத்தி தாசப் பண்டிதர். தென் னாப்பிரிக்கா, மலேசியா, சிங்கப்பூர் என பிற நாடுகளிலும் புத்த கருத்துகளை பரப்புரை செய்தார். தமிழ்நாட்டில் லட்சுமி நரசு, புத்தர் கருத்துகளை பரப்புவ தில் முக்கியப் பங்கு ஆற்றினார்.
புத்தரின் கருத்துகள் உண்மையின் வெளிப்பாடு ஆகும். மகாத்மா ஜோதிபாஃபுலே புத்தரைப்பற்றிக் குறிப் பிடும் பொழுது சத்ய புருஷர் என கூறுகிறார். புத்தநெறியானது வைதிகக் கருத்துகளைப் பரப்பி ஆளுமை செலுத்தி வந்த பார்ப் பனியத்திற்கு எதிரானது மக்களுக்கு உகந்த மாற்று நெறியாக மலர்ந்தது. புத்தம் என்பது சடங் குகள் கடைப்பிடிக்க வற்புறுத்தும் மதமல்ல; பகுத்தறிவின் அடிப்படையிலான வாழ்க்கை வழியாகும். தந்தை பெரியார் உறுதி யுடன் வெளிப்பட்ட நாத்திகர் ஆவார். வழிப் பாட்டுச் சிலை மறுப் பாளர். சிலை உடைப் பாளரும் கூட. டாக்டர் அம்பேத்கர், தாம் புத்த நெறியைத் தழுவியதற்குக் காரணமாக மூன்று கொள்கைகளை குறிப்பிடுகிறார். மற்ற மதங்களில் இல்லாத கொள்கைகள் அவை. மற்ற மதங்கள் எல்லாம் கடவுளைப் பற்றியும், இறப்பிற்கு பின்பான வாழ்க்கையினை வலி யுறுத்திய வேளையில், புத்த நெறிதான் இம்மை யில்- உயிரோடு இருக்கும் பொழுது வாழ்வது பற்றிக் கூறுகிறது; மனி தர்கள் அனைவரும் சமம். மனிதர்களிடையே சமத்துவத்தைப் போதிக் கிறது; சமூகத் தளையி லிருந்து விடுதலை, மனிதரிடையே சமத் துவம், சகோதரத்துவம் பற்றிக் கூறுவது புத்த நெறியே! புத்தநெறி மனித ரின் சுயமரியாதையினை வலியுறுத்துகிறது. தந்தை பெரியார் - புத்த நெறி யினை பரப்பியதற்கு அதன் சுயமரியாதை வலியுறுத்தும் நெறியே அடிப்படையாகும்.

தமிழ் ஓவியா said...

ஒரு சமயம் டெல்லி யிலே தந்தை பெரியாரி டம் பத்திரிகை நிருபர் ஒருவர் கேள்வி கேட் டார். புத்தமதம் புத்தம் சரணம் கச்சாமி, தம்மம் சரணம் கச்சாமி; சங்கம் சரணம் சச்சாமி என்று போதனை செய்கிறதே! நீங்கள் பகுத்தறிவாளராக இருந்துகொண்டு எப்படி புத்த மதத்தினை ஆத ரித்துப் பேசுகிறீர்கள்? பெரியார் எந்தவித சங்கடமுமில்லாமல் உடனடியாக பதலளித் தார்.

புத்த போதனையின் பொருள் என்ன? புத்தம் சரணம் கச் சாமி- நான் எனது தலை மைக்கு என்னை ஆட் படுத்திக் கொள்கிறேன்.

தம்மம் சரணம் கச்சாமி - நான் என்னை நன்னெறிகளுக்கு ஆட் படுத்திக் கொள்கிறேன்.

சங்கம் சரணம் கச்சாமி - நான் என்னை அமைப்புக்கு அர்ப் பணித்துக் கொள்கிறேன்.

இந்த போதனையில் சடங்காச்சாரங்கள் எங்கே வருகின்றன. பகுத் தறிவிற்கு அல்லாத கருத் துகள் இதில் எதுவும் இல்லை. பகுத்தறிவுக்கு புறம்பானது எதுவும் இல்லை. எனவே புத்த நெறியினைப் பரப்பு வதில் என்னிடம் ஏதும் முரண்பாடு இல்லை என தந்தை பெரியார் கூறியபின்பு பத்திரிகை நிருபர் வாயடைத்துப் போனார்.

புத்த மதக்கொள்கை எனக் குறிப்பிடும் பொழுது திரிபுவாதங் களுக்கு இடம் தராத வகையில், கொள்கை விளக்கமாக தம்மம் (புத்தநெறி) என்பதோடு, எதுவெல்லாம் தம்மம் இல்லை என்பதையும் குறிப்பிடுகிறார்.

எது புத்தநெறி அல்ல?

இயற்கையை மிஞ்சிய சக்தியில் நம்பிக்கை வைப்பது புத்தநெறி அல்ல!

கடவுள் (ஈஸ்வர்) மேல் நம்பிக்கை வைப்பது அவசியமான புத்தநெறி அல்ல!

பிரம்மத்தோடு இணைந்தநெறி புத்த நெறி அல்ல!

ஆத்மாவை நம்புவது புத்த நெறி அல்ல!

ஊகங்களின் மீதான நம்பிக்கை புத்தநெறி அல்ல!

ஊகங்கள் அடிப் படையில் வளர்ந்த செய் தியை படிப்பது புத்த நெறி அல்ல

புத்தநெறி பற்றி படிப் பதுமட்டும் புத்தநெறி அல்ல!

புத்தகத்தில் உள்ளதில் குற்றம் காணக் கூடாது என்பதும் புத்தநெறி அல்ல!

இப்படி எதுவெல் லாம் புத்தநெறிஅல்ல என்பது வலியுறுத்தப் பட்டு பார்ப்பன மதத் தினை எதிர்த்த காரணத் தால் புத்தமதம் அது தோன்றிய மண்ணிலி ருந்து பார்ப்பனர்களால் விரட்டி அடிக்கப்பட் டது.

தமிழ் ஓவியா said...


சுயமரியாதை என்பது தன்னுடைய மரியா தையைக் காப்பது மட்டு மல்ல. பிறருடைய மரி யாதையை மதித்து நடப் பதும் சுயமரியாதை ஆகும். அந்த வகையில் பார்ப்பன மதம் சுயமரி யாதையை மறுக்கின்ற மதம். புத்தநெறி சுய மரியாதையைப் பேணிப் போதிக்கும் முறை. நடை முறைப்படுத்தும் முறை ஆகும்.

மனிதரில் பேதம் கற்பிப்பது பார்ப்பன மதம், பிறப்பதில் பேதம் கற்பிக்கிறது. மனித சமுதாயத்தில் சரி பாதி யாக இருக்கும் மகளிரை பேதப்படுத்தி அடிமைப் படுத்தி வைக்கிறது. பெண்களுக்கு ஜாதி என்பது கிடையாது. உயர் ஜாதி குடும்பத்துப் பெண்களும் அடிமைப் படுத்தப்பட்டே உள் ளனர். சிறுவயதில் தந் தைக்கு கட்டுப்பட்டிருப் பது; திருமணம் ஆனபின் கணவருக்கு கட்டுப் பட்டிருப்பது; பின்னா ளில் மகனுக்கு கட்டுப் பட்டு இருப்பது என பெண்களுக்கு அடிமைத் தனம் என்பது வாழ்நாள் முழுவதும் தொடரும் நிலை பார்ப்பன மதத் தில் மனுதர்மத்தில் உள் ளது. இதனை களைந்திட வந்தநெறி புத்தநெறி யாகும்.

புத்தர், அம்பேத்கர், தந்தை பெரியார் ஒரு குறிப்பிட்ட மக்களுக்கு மட்டும் சொந்தமானவர் கள் அல்ல. உலகம் முழுமைக்கும், மானிடம் முழுவதற்கும் உரியவர் கள். இந்த சமூகப் புரட்சியாளர்கள் காட் டிய வழியில் நாம் இணைந்து பாடுபட வேண்டும். மேற்படி கருத் துகளைக் கூறும் பொழுது நான் சொன்னதை நீங்கள் ஏற்றுக் கொள்ள வேண் டியது இல்லை. உங் களது பகுத்தறிவுக்கு உகந்தது எனத் தோன்றி னால் ஏற்றுக் கொள்ளுங் கள். பெரியார் இயக்கத் தின் சார்பாக உங்களை யெல்லாம் தமிழ்நாட் டிற்கு வருகை தந்திட வேண்டுகிறேன். வருங் காலத்தில் உங்களது மாநாட்டினை பெரியார் பிறந்த மண்ணில் நடத்த லாம். பெரியார் இயக்கம் அதற்கு உறுதுணையாக, பக்கபலமாக இருக்கும். காரணம் - புத்தம் என் பது மதம் அல்ல; மானி டம் பேணிட வந்த மாண்பு நெறி.

வாழ்க புத்தநெறி!
வளர்க பகுத்தறிவு!
வாழ்க தந்தை பெரியார்! வாழ்க டாக்டர் அம்பேத்கர்!

இவ்வாறு தமிழர் தலைவர் உரையாற்றி மாநாட்டினைத் தொடங்கி வைத்தார்.

வீ. குமரேசன்

மாநாட்டில் பகுத்தறி வாளர் கழகப் பொதுச் செயலாளர் பங்கேற்று வாழ்த்துரை வழங்கி னார். 1924இல் தந்தை பெரியார் கேரளத்தில் நடத்திய மனித உரிமை வைக்கம் போராட்டம் தான் டாக்டர் அம்பேத் கர் அவர்களுக்கு மகர் பொதுக்குள குடிநீர் போராட்டம் நடத்திட உந்து சக்தியாக இருந்தது. மனிதன் பிறப்பால் பேதம் கற்பிக்கப்பட்டு, பெரும் பகுதியினர் கல்வி மறுக்கப்பட்ட நிலையில், இந்திய அரசமைப்புச் சட்டத்தின் முதல் திருத்தம் கொண்டு வர அதன் மூலம் கல்வியில் இடஒதுக்கீடு உறுதிப் பட போராட்டம் கண் டவர் தந்தை பெரியார். அப்பொழுது சட்ட அமைச்சராக இருந்தவர் அண்ணல் அம்பேத்கர். இந்திய அரசமைப்புச் சட்டத்தின் முதல் திருத்தத்திற்கு வித்திட் டவர் தந்தை பெரியார். அரசமைப்புச் சட்டத் தின் 77ஆவது திருத்தத்திற்கு வழி கோலியவர் அவரது கொள்கை வழித் தோன் றல் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள். சமூகநீதிக் களத்தில் பெரியாரிஸ்ட்கள், அம்பேத்கரிஸ்ட்களும் இணைந்து பணியாற்றிட வேண்டும் என தனது உரையில் குறிப்பிட்டுப் பேசினார்.

தமிழர் தலைவருக்கு விருது

பன்னாட்டு புத்தநெறி மாநாட்டில் தமிழர் தலைவருக்கு, டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் சமூக நீதி விருது வழங்கப்பட் டுள்ளது. மாநாட்டு பொறுப்பாளர்கள் அனைவரும் இணைந்து சமூகநீதி விருதினை, தமிழர் தலைவர் ஆற்றி வரும் சமூகநீதிக்கான பணியினை பெருமைப் படுத்தும் விதத்தில் அளிப்பதாகக் கூறி, அதன் வாசகங்களுடன் விருதினையும், விருது நினைவுப் பரிசினையும் வழங்கினார்.

மாநாட்டில் தமிழர் தலைவர் ஆற்றிய ஆங் கில சொற்பொழிவு ழரஅயளைஅ வால யேஅந ளை க்ஷரனனாளைஅ நூல் வடிவில் அனைவருக்கும் வழங்கப் பட்டது. மேலும் தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர் படம் பொறித்த அட்டையும் ஒரே நாணயத்தின் இரண்டு பக்கங்கள் எனும் தலைப்பில் (தமிழ், இந்தி, ஆங்கிலம்) அனை வருக்கும் வழங்கப் பட்டது.

புத்தநெறி மாநாட் டில் தமிழ்நாட்டிலிருந்து மாநில ஊடகத் துறைச் செயலாளர் பிரின்சு என்னாரெசு பெரியார், புகைப்படக் கலைஞர் பா. சிவகுமார், பெரியார் புத்தக நிலையம் பூமி நாதன் மற்றும் தோழர் கள் சுரேஷ், வெற்றி ஆகியோர் கலந்து கொண்டனர். ஆங்கிலம் மற்றும் இந்தியில் வெளி யிடப்பட்ட இயக்கப் புத்தகங்களை மாநாட் டுக்கு வருகை தந்தோர் பெரும் திரளாக விரும்பி வாங்கிச் சென்றனர்.

தமிழ் ஓவியா said...

கடவுள் வணக்கம்

நாகாலாந்து தேர்தலில் தேர்தல் மய்யங்களில் வாக்குப் பதிவுக்குமுன் சம்பந்தப்பட்ட பகுதியில் உள்ள கிறித்துவ பாதிரியார் ஒவ்வொரு வாக்குப்பதிவு மய்யத்துக்கும் வந்து கடவுள் வணக்கம் சொல்வார். அதற்குப் பிறகே வாக்குப் பதிவு தொடங்கப்படுகிறது. தேர்தல் அமைதி யான முறையில் நடக்கவேண்டும் என்பதற்காகத்தான் இந்தப் பிரார்த் தனையாம்!

கடவுளைக் கும்பிட்டு விண்ணப்பம் போட்டால்தான் கடவுள் கருணை காட்டுவாரா? தேர்தல் அமைதியாக நடக்க அருள்புரிவாரா? பாதிரியார் சொன்னதற்குப் பிறகுதான் இந்தச் சங்கதிகள் எல்லாம் கடவுளுக்குத் தெரியுமா?

இதன்மூலம் கடவுள் என்பவர் ஒன்றும் தெரியாத மரக்கட்டை, நாம் தான் சொல்லிக் கொடுக்கவேண்டும் என்றுதானே பொருள்.
நாகாலாந்தில் அடிக்கடி சட்டம் ஒழுங்கு தலைதூக்கி நிற்கிறதே - அதற்கொரு வணக்கம் போட்டு, கடவுளைத் தலையிடச் சொல்லி அமைதியை ஏற்படுத்தக் கூடாதா?

பக்தர்கள் தன்னிடம் மன்றாட வேண்டும்; கோரிக்கை வைக்க வேண்டும் என்று ஒரு கடவுள் கருதி னால், அதைவிட தற்பெருமைத்தனம் வேறு உண்டா?

கொஞ்சம் சிந்திக்கலாமே!

தமிழ் ஓவியா said...


என்னே சாமர்த்தியம்!


நெம்மேலி கடல் நீரைக் குடிநீராக்கும் நிலையத்தை முதல் அமைச்சர் செல்வி ஜெயலலிதா திறந்து வைத்து நிகழ்ச்சியை வெளியிட்டுள்ள ஏடுகள், மிகவும் விழிப்பாக அந்தத் திட்டம் எப்பொழுது தொடங்கப்பட்டது. அதன் முதலீடு என்ன என்பதை மிக விழிப்பாக இருந்து இருட்டடித்துள்ளனர். ஆகா, என்னே சாமர்த் தியம்!

(கலைஞர் ஆட்சிக் காலத்தில் தொடங்கப் பட்டது என்பது மக்களுக் குத் தெரிந்து விடக் கூடாது என்பதுதான் அதிலுள்ள ரகசியம்)

தமிழ் ஓவியா said...

வீட்டுக்கு வீடு சோறு போடலாமே!

ஒடிசா மாநில நிதிநிலை அறிக் கையில் விவசாயிகளுக்கு இலவச கைப்பேசி, மீனவர்களுக்கு இலவச சிம்கார்டு வழங்கும் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒன்று செய்யலாம், அரசாங்கமே சோறாக்கி வீட்டுக்கு வீடு சென்று பரிமாறலாம். முக்கியமானது நம் நாட்டில் சோற்றுப் பிரச்சினைதானே?

தமிழ் ஓவியா said...

விரட்டியடிப்பு

திருக்கடையூர் கோவிலுக்குச் சாமி கும்பிட வந்த இலங்கை நாடாளு மன்ற உறுப்பினர் கருணரத்ன ஜெய சூரியா, தமிழர்களால் விரட்டியடிக் கப்பட்டார்.

புத்த மதத்தைச் சேர்ந்த ராஜபக்சே திருப்பதி வந்து ஏழுமலையானைத் தரிசிப்பதும், இன்னொரு புத்த மதக்காரர் திருக்கடையூர் வந்து சாமி கும்பிடுவதும்தான் வேடிக்கை.

இந்த முட்டாள்தனங்களின், முக மூடிகளையெல்லாம் கிழித்தவர்தான் கவுதம புத்தர். ஆரியம் புத்தரையும், மகாவிஷ்ணுவின் அவதாரமாக்கியது. அதன் விளைவுதான் இவர்கள் இந்து மதக் கடவுள்களை நோக்கி ஓடி வருவது.

பச்சிளம் பாலகனைக்கூட மார்பில் குண்டு மாரி பொழிந்து படுகொலை செய்யும் மனித உரு ஓநாய்கள் வரும் போது எரிச்சலை எந்த வழியிலாவது காட்டவேண்டும் என்கிற கோபம் இயல்பானதே!

தமிழ் ஓவியா said...

விவேகானந்தர்

ஆன்மிகம் மற்றும் சேவைக் கண் காட்சி என்ற பெயரில் இந்துத்துவா சக்திகள் மீனம்பாக்கம் ஜெயின் கல்லூரியில் ஏற்பாடு செய்துள்ளன. விவேகானந்தரின் 150 ஆவது பிறந்த நாளையொட்டி இந்த ஏற்பாடாம்.

இதில் காஞ்சி சங்கராச்சாரி யாரின் நூல்கள் முக்கிய இடம் பெற்றுள்ளன. தீண்டாமை ஷேமகர மானது என்று சொன்னவர் காஞ்சி சங்கராச்சாரியார் சந்திரசேகரேந்திர சரஸ்வதி.

விவேகானந்தர் என்ற ஏமாற்று முற்போக்கு முகமூடி அணிந்து பார்ப்பனீய இந்துத்துவ சமாச்சாரங் களுக்குப் புத்துயிர் ஊட்டுவதுதான் இந்தக் கண்காட்சியில் புதைந்துள்ள ரகசியம், புரிந்துகொள்க!

தமிழ் ஓவியா said...

இதுதான் அரசியலோ!

கருநாடக மாநிலத்தில் இரு பிஜே.பி. அமைச்சர்கள் பதவி விலகி விட்டனர். இதற்கு முன்பும் சிலர் பதவி விலகியுள்ளனர். சிலர் காங்கிரசிலும் சேருகின்றனர்.

பி.ஜே.பி. அங்கு பெரும்பான்மையை இழந்துவிட்டது என்பது மிகவும் வெளிப்படை. இருந்தாலும் பெரும்பான்மையை நிரூபிக்கவேண் டும் என்று ஆளுநர் உத்தரவு பிறப்பிக்கவில்லை. முதலமைச்சரும் முன்வந்து நிரூபிக்கும் அளவுக்கு அரசியல் நாகரிகம் பெற்றிடவும் இல்லை. இவற்றிற்கெல்லாம் உண்மை யான காரணம் என்ன? எல்லாம் அரசியல் தான்! தந்தை பெரியார் அரசியலை ஏன் வெறுத்தார் என்பது இப்பொழுது புரிகிறதா?

தமிழ் ஓவியா said...


அஸ்திவாரம் கிடையாது



பார்ப்பனர்களால் போற்றி வளர்க்கப்படும் இந்து மதம் என்று சொல்லப்படுகிற மதத்துக்கு அஸ்திவாரம் கிடையாது.
(விடுதலை, 11.7.1954)

தமிழ் ஓவியா said...


அடிமைப்படக்கூடாது...


உழைத்தவன் உழைப்பின் பயனை அடையவேண்டுமானால் - இப்படி யாகம், சாத்திரம், வேதம், மோட்சம், கர்மம், முன்ஜென்மம், கடவுள் செயல் என்கின்ற பித்தலாட்டங்களுக்கு அடிமைப்படக்கூடாது. 'விடுதலை", 26.2.1968

தமிழ் ஓவியா said...


மதுரையில் மன்றல்! கழகத் தோழர்களுக்கு முக்கிய வேண்டுகோள்


மதுரை, நெல்லை, சிவகங்கை, மண்டலக் கழகப் பொறுப் பாளர்கள், மாவட்டத் தலைவர் செயலாளர்கள், நகரத் தலைவர் கள், செயலாளர்கள் மற்றும் கழகத் தோழர்களுக்கு,

நம் கழகத் தலைவர், தமிழர் தலைவர் ஆசிரியர் வீரமணி அவர்களின் ஆணைக்கிணங்கி கடந்த ஆண்டு நவம்பர் 25ஆம் சென்னையிலும், டிசம்பர் 30 திருச்சியிலும் மன்றல் 2012 என்ற மாபெரும் ஜாதி மறுப்பு இணை தேடல் பெருவிழாவினை சிறப்பாக நடத்தினோம்.

இந்தப் பெருவிழாவில் பங்கெடுத்த தன் மூலம் பலர் தங்களது இணையரைத் தேர்ந்தெடுத்து நமது தலைமை நிலையத்தில் உள்ள பெரியார் சுயமரியாதைத் திரு மண நிலையத்தில் திருமணம் செய்து தமது வாழ்க்கையினை சிறப்பாக அமைத்துக் கொண்டனர். மேலும் பலர் வரும் மாதங் களில் திருமணம் செய்வதற்காக தனது இணைகளைத் தேர்ந் தெடுத்துள்ளனர்.

தந்தை பெரியாரின் இலட்சியமான ஜாதி ஒழிப்புக் கொள் கையினை நாம் இந்த மன்றல் நிகழ்ச்சியின் மூலம் செவ்வனே நிறைவேற்றி வருகிறோம். இனி இந்த ஆண்டின் துவக்க நிகழ்ச்சியாக மன்றல் 2013 மதுரையில் வரும் மார்ச் 17-ஆம் தேதி நடைபெற உள்ளது. ஜாதி உணர்வு மிகுந்திருப்பதாகச் சொல்லப்படும் மதுரையில் நமது ஆற்றல் மிக கழகத் தோழர்களின் துணையோடு ஜாதி மறுப்பு இணைதேடல் பெருவிழாவினை நடத்தும் நல்வாய்ப்பு கிட்டியிருக்கிறது.

களங்கள் பல கண்ட திராவிடர் கழகத் தோழர்கள் ஜாதீயத்தை கலங்க வைக்க ஆற்ற வேண்டிய செயல்பாடுகள்.

1. நகர்ப்பகுதியிலும், நகரைச் சுற்றியுள்ள பகுதியிலும் நல்ல வண்ணம் சுவரெழுத்துப் பிரச்சாரத்தை மேற்கொள்வது.

2. மக்கள் நடமாட்டம் அதிகமாக உள்ள பகுதிகளில் எல்லாம் பிளெக்ஸ் போர்டு வைப்பது.

3. தலைமைக் கழகத்திலிருந்து அனுப்பி வைக்கப்படும் சுவரொட்டிகளை பொதுமக்கள் பார்வைக்கு படும்படியான இடங்களில் ஒட்டுவது.

4. மக்கள் ஆங்காங்கு கூடுகின்ற பகுதிகளிலெல்லாம் மன்றல் 2013 பற்றிய துண்டறிக்கைகளை வழங்குவது.

இந்த நான்கு பணிகளையும் நாம் ஒழுங்கான முறையில் செய்து முடித்தால் மன்றல் 2013இன் தொடக்கமே வெற்றிப் படிக்கட்டுகளை எண்ணத் துவங்கிவிடும். நம் நாட்டை ஜாதியற்ற பூமியாக மாற்றிக் காட்டும் மாபெரும் வாய்ப்பாக நமக்குக் கிடைத்திருக்கும் பொன்னான வாய்ப்பு இந்த மன்றல் 2013 ஜாதி மறுப்பு இணைதேடல் பெருவிழா. இது சத்தமின்றி நடக்கும் புரட்சி. இப்புரட்சியை மக்களிடம் கொண்டு சேர்ப்பது மட்டுமே நம் பணி!

குறிப்பு: நிகழ்ச்சி ஏற்பாடு மட்டுமே இம்மூன்று மண்டலங்களைச் சேர்ந்தது. ஏனைய கழக மாவட்டத் தோழர்களும் விளம்பரங்கள் மூலம் மன்றலை மக்களிடம் கொண்டு சேர்க்கலாம். ஜாதி மறுப்புத் திருமணம் செய்ய விரும்பும் எந்தப் பகுதியில் இருப்போரும் இந்நிகழ்வில் பங்கேற்கலாம்.

திருமகள், மாநில அமைப்பாளர்,
பெரியார் சுயமரியாதைத் திருமணம் நிலையம்,
சென்னை - 600 007