Search This Blog

22.2.13

காவிரி நீர்ப் பிரச்சினையில் முதற்கட்ட வெற்றியே! - கி.வீரமணி

போக்குவரத்து நெரிசல் குறைந்து பத்திரமாகப் பயணம் செய்யலாம்  வெளிநாடுகளில், வடமாநிலங்களிலும் இம்முறை பின்பற்றப்படுகிறதே!
காவிரி நீர் பிரச்சினை யில் தற்போது நமக்குக் கிடைத்துள்ளது முதற்கட்ட வெற்றிதான் - இதனைத் தொடர்ந்து மத்திய அரசு மேற்கொள்ளவேண்டிய நடவடிக்கைகளைப் பொறுத்துத்தான் முழு வெற்றி வந்தாகவேண்டும்; இதற்காக ஒருமித்த குர லில் மத்திய அரசை வலி யுறுத்த வேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

1. முதன் முதலாக காவிரி நடுவர் மன்றம் என்ற ஒன்று அமைத்துத் தீர்வு காண தமிழக அரசு முயற்சி எடுக்கவேண்டும் என்று எம்.ஜி.ஆர். முதல மைச்சராக இருந்த அ.தி. மு.க. அரசு கூட்டிய சர்வ கட்சிக் கூட்டத்தில் (19.2.1980) எடுத்து வைத்தது திராவிடர் கழகமே! (ஆவண ஆதாரம் உண்டு).

2. காவிரி நீர்ப் பங்கீட்டுக்கு என அமெரிக்கா - கனடா போன்ற நாடுகளில் உள்ள நதி நீர்ப் பங்கீடு குறித்து, அங்குள்ள சுதந்திர நிபுணர்களைக் கொண்ட அமைப்பான டெனசி நதி பள்ளத்தாக்கு ஆணையம் (Tenasy River Valley Authority CVA) போன்ற ஒன்றை நிரந்தர தீர்வுக்காக நிரந்தரமாக அமைக்கவேண்டும் என்று மத்திய அரசினை வற்புறுத்திட வேண்டும் என்ற ஆலோசனையை காவிரி சம்பந்தப்பட்ட அச்சர்வ கட்சிக் கூட்டத்தில் முன்வைத்தது திராவிடர் கழகம்.

3. காவிரி நடுவர் மன்றம் அமைக்க கலைஞர் தலைமை யில் 1989 இல் அமைந்த தி.மு.க. ஆட்சி - அன்றைய பிரதமர் சமூகநீதிக் காவலர் வி.பி. சிங் அவர்களிடம் வற்புறுத்தி, அதனைப் பெற்ற பெருமையும் வழங்கிய கொடையும் முறையே தி.முக..வுக்கும், வி.பி. சிங் அவர்களின் தேசிய முன்னணி ஆட்சிக்கும் உரியதாகும்.

4. இந்தியஅரசியல் சட்டத்தின் 262 ஆம் பிரிவின்படி, நதிநீர்ப் பங்கீடு சம்பந்தமாக மாநிலங்களுக்கிடையே ஏற்படும் தாவாவை தீர்த்து வைக்க, நதிநீர் சம்பந்தமாக மாநிலங்களுக்கிடையே ஏற்படும் வழக்குகளைத் தீர்க்கும் சட்டம் (The Inter State Water Disputes Act) 1956 (33 of 1956) என்பதில் உள்ள 11 ஆவது செக்ஷன்படி உச்சநீதிமன்றத்திற்கேகூட நதிநீர்ப் பங்கீடு வழக்குகளை நடுவர் மன்றம் விசாரித்த நிலையில், தீர்ப்புக் கூற அதிகாரம் கிடையாது.
ஆனால், அதன் செக்ஷன் 4-ன்படி,  மத்திய அரசு அதன் சட்டக் கடமையை நிறைவேற்றிடவேண்டும்என்று ஆணை பிறப்பிக்கும் அதிகாரம் அதற்கு உண்டு.


இந்த அடிப்படையிலேயே, கருநாடக அரசு தொடக்க முதலே செய்த அத்தனை சட்டவிரோத அடாவடித்தனங் களையும் தாண்டி, காவிரி நடுவர் நீதிமன்றம் 2007 பிப்ரவரி மாதத்தில் அதன் இறுதித் தீர்ப்பை வழங்கியது.

5. 1990 ஆம் ஆண்டு ஜூன் 2 ஆம் தேதி காவிரி நடுவர் மன்றம் அமைந்த பிறகு அடுத்த 1991 ஆம் ஆண்டின் ஜூன் 25 ஆம் தேதி தமிழ்நாட்டிற்கு இடைக்காலத் தீர்ப்பாக 205 டி.எம்.சி. தண்ணீரை கருநாடகம் தமிழ்நாட்டிற்கு வழங்கவேண்டும் என்று நடுவர் மன்றம் தீர்ப்பு வழங்கியது. (இதனைக் கூட இதுவரை கருநாடக அரசு தவறாமல் வழங்கி தமிழக விவசாயிகளின் வாழ்வா தாரத்தைக் காப்பாற்றிட உதவியதா என்றால் இல்லை).


இந்நிலையில், இறுதித் தீர்ப்பு 2007 ஆம் ஆண்டு பிப்ரவரியில் வழங்கியுள் ளதில்,
ஓடிவரும் நீரின் மொத்த அளவு    - 740 டி.எம்.சி.
இதில் தமிழ்நாட்டிற்குரிய பங்கு    - 419 டி.எம்.சி.
கருநாடகத்திற்கு    - 270 டி.எம்.சி.
கேரளாவிற்கு    - 30 டி.எம்.சி.
புதுவைக்கு    - 7 டி.எம்.சி.
சுற்றுச்சூழலை பாதுகாக்க    - 10 டி.எம்.சி.

இந்த இறுதித் தீர்ப்பு வெளியான 6 ஆண்டுகள் கழித்து, அதுவும் உச்சநீதி மன்றம் மத்திய அரசிடம் கேள்வி மேல் கேள்விகளை தலையில் குட்டுவதுபோல் குட்டிக் கேட்ட பிறகே, இறுதி கெடுவுக்கு முதல் நாள் பிப்ரவரி 19 ஆம் தேதி யன்றுதான் வெளியிட்டது என்பது மத்திய அரசுக்குப் பெருமை தருவதல்ல.

இடையில் கருநாடகத்தில் வரவிருக் கும் சட்டமன்றத் தேர்தல் என்ற அரசியல் கண்ணோட்டம் அதன் தவக்கத்திற்குரிய முக்கிய காரணமாக இருந்திருக்கக் கூடும்.

வழமையான மத்திய அரசின் காலந்தாழ்ந்த செயலாக்கத்தின்மூலம், அதற்குரிய முழு நன்றி - பாராட்டைத் தமிழக மக்களிடம் பெற இயலாத நிலை.


நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பை மத்திய அரசு தனது கெசட்டில் வெளி யிடுவது என்பது அரசியல் சட்டப்படி ஆற்றிடவேண்டிய சட்டக் கட்டாயம் ஆகும். அதனைச் செய்ய வைக்கவே வழக்கு, மக்கள் - விவசாயிகள் போராட்டம் தேவை என்பது விசித்திர மானதொன்றாகும்.

6. கெசட்டில் வெளியிடப்பட்ட நிலை யில், இது எனது வெற்றி என்று முதல மைச்சர் செல்வி ஜெயலலிதா அவர்கள் பெருமைப்படுகிறார்; அதில் யாருக்கும் சங்கடம் இல்லை. அதேநேரத்தில், தொடக்கம்முதல் இதற்காகக் குரல் கொடுத்தவர்கள், போராடியவர்கள் அனைவரின் பங்கினைப் புறந்தள்ளு வதோ, இருட்டடிப்பதோ சரியல்ல! அதே நேரத்தில், இந்த முக்கிய வாழ்வாதார காவிரி நீர்ப் பிரச்சினையில் முந்தைய எம்.ஜி.ஆர்., கலைஞர் அரசுகள் கூட்டியது போல அனைத்துக் கட்சிக் கூட்டத்தை, அவருடன் தோழமையாக உள்ள கூட்டணிக் கட்சிகள், எதிர்க்கட்சிகள் உள்பட பலரும் கேட்டும் அவர் கூட்ட மறுத்தது இதனால்தானோ என்று எண்ண வேண்டியுள்ளது.


கருநாடகத்தில் ஷெட்டர் அரசு மூச்சுக்காற்றுக்காக வென்டிலேட்டரில் இருக்கும் அரசு என்றாலும்கூட, இது வரை இந்தப் பிரச்சினைக்காக பத்து முறை சர்வகட்சிக் கூட்டங்கள், அனைத் துத் தலைவர்களுடன் பிரதமரை டில்லி சென்று சந்தித்து வற்புறுத்தியது முதலிய பல வகையிலும் நடந்துகொண்ட முறை சுட்டிக்காட்டப்படவேண்டும்.

என்றாலும் அனைத்துத் தமிழ்நாட்டுக் கட்சிகளும்  (தனித்தனியாகவேனும்) குரல் கொடுத்தன; வாதாடின - நாடாளு மன்றத்திலும், வெளியிலும்; எனவே, இது அனைத்துக் கட்சிகளின் வெற்றி என் பதைவிட, தமிழ்நாட்டு மக்கள் அனை வருக்கும் கிடைத்த - காலந்தாழ்ந்த வெற்றியாகும். இதற்குக் காரணமான அத்தனைப் பேருக்கும் இந்த வெற்றியில் உரிமை கொண்டாட பாத்தியதை உண்டு. இப்போதுஅந்த ஆராய்ச்சி முக்கியமல்ல.
அதைவிட  அடுத்த கட்டம்தான் மிக முக்கியமானது.


7. இந்த இறுதித் தீர்வுப்படி நிரந்தர மாக காவிரி நீர்ப் பங்கீடு செய்ய இரண்டு முக்கிய அமைப்புகளை அமைக்க வேண்டியது மத்திய அரசின் முக்கிய கடமையாகும்.

1. காவிரி நதிநீர் நிர்வாக வாரியம் இதற்குத் தலைவர், இரண்டு முழு நேர உறுப்பினர்கள், இரண்டு பகுதி நேர உறுப்பினர்கள்,

மத்திய அரசே நியமிக்கவேண்டியது. இதன் தலைவருக்கு குறைந்தது 20 வருட அனுபவமும், தலைமைப் பொறியாளராக இருந்த அனுபவமும் இருக்கவேண்டியது அவசியம். மற்ற இருவரில் ஒருவர் நீர்ப் பாசனத் துறையில் 15 ஆண்டுகள் அனுபவமும், தலைமைப் பொறியாளராக பணியாற்றிய அனுபவமும் அவசியம். இன்னொருவர் விவசாயத் துறையிலிருந்து நியமிக்கப்படுவார்.

அரசிதழில் வெளியிடப்பட்ட அடுத்த 90 நாள்களுக்குள் இந்த அறிவிக்கை நடைமுறைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அதற்குமேல் அதனை முறைப்படுத்த ஒரு கண்காணிப்பு - முறைப்படுத்தும் கமிட்டி ஆகிய ஒன்றும் தேவை.

இவை இரண்டையும் உடனடியாக மத்திய அரசு - முந்தைய காலதாமதம் போல் இன்றி - நியமித்து, இப்பிரச்சி னையை சுதந்திரமாக முடிவு செய்ய அத்தகைய அமைப்புகளின் பொறுப்பில் விட - உரிய நடவடிக்கைகளை மேற் கொள்ளவேண்டும்.

முதல்கட்ட வெற்றிதான் - முழு வெற்றியல்ல!

இன்று காலை தமிழ்நாட்டு எம்.பி.,க் கள் பிரதமரிடம் சென்று, நன்றி தெரி வித்து, மேற்கொண்டு அமைப்புகள் அமைக்கக் கேட்டுக்கொண்ட நிலையில், பிரதமர் மன்மோகன்சிங், உடனே அமைப்பதாக உறுதியளித்துள்ளார் என்பது மகிழ்ச்சிக்குரியது - நன்றி!

ஒட்டுமொத்தமான குரலாக தமிழ் நாட்டு மக்கள், கட்சித் தலைவர்கள், எம்.பி.,க்கள் எல்லோரும் மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்தாக வேண்டும்.
இந்த செயல்பாட்டைத் தடுத்து நிறுத் திட கருநாடகம் வரிந்து கட்டிக் கொண் டுள்ளது என்பதைப் பார்க்கையில், நாம் அடைந்துள்ள முதல் கட்ட வெற்றியையே முழு வெற்றிபோல் கருதி, ஏமாந்துவிடக் கூடாது.

2. இந்த இறுதித் தீர்ப்பின் விளைவு களை தெளிவாக விவசாயிகளும், தமிழக மக்களும் புரிந்து கொள்ளத் தவறக் கூடாது!

3. இந்த கெசட் வெளியாவதன்மூலம் ஏற்கெனவே 1892, 1924 ஆகிய ஆண்டு களில் சென்னை ராஜதானிக்கும், மைசூர் அரசுக்கும் இடையே போடப்பட்ட ஒப்பந் தங்களே முடிவுக்கு வந்து புதிய நிலை சட்ட ரீதியாகப் பிறக்கிறது.
இதிலிருந்து பலர் கூறிய அபாண்டமும் வெளிச்சத்திற்கு வந்துவிட்டது. 1924 ஒப்பந்தத்தைப் புதுப்பிக்கவில்லை தி.மு.க. அரசு, எனவே ஒப்பந்தம் முடிந்ததற்கு தி.மு.க.வும், கலைஞரும் காரணம் என்று வெங்கட்ராமன்கள் முதல் இங்குள்ள பலரும் பேசிவந்த புரட்டு உடைந்துவிட்டது!


இனிமேல் உச்சநீதிமன்றத்திடம் சென்று முறையிட முடியாது என்பதாலும், கருநாடகத்திடம் எளிதில் நியாயம் கிடைக்காது என்பதாலும் நமது கவனம் - இரு அமைப்புகளையும் விரைந்து நியமிக்க வேண்டும் என்று மத்திய அரசிடம் அழுத்தம், வற்புறுத்தலில் இருக்கவேண் டும். இது மிகமிக முக்கியம். மிகமிக அவசரம்!

25 comments:

தமிழ் ஓவியா said...


பார்ப்பனர் நடத்திய பசுவதை அய்தேரயப்ராஹ்ணம் கூறுகிறது

அய்தரேய ப்ராஹ்ணம் இரண்டாம் பஞ்சிகையின் தொடக்கத்தில் சொல்லுவதாவது:

யஜ்னேவை தேவா - ஊர்த்வம் ஸ்வர்க்கம் லோக மாயம்ஸ்தே பியயுரஸ்மின் நோத்ருஷ்ட்வா மனுஷ்யாஸ்ச ரிஷ்யஸ் சானுப் ரஞ்ஞாஸ் யந்தீதி (அய்தரேயப்ராஷ் மணம்த்ஷதீய பஞ்சிகா பிரதம காண்டம்)

இதன்பொருள்:- தேவர்கள் யாகம் செய்து ஸ்வர்க்கத்தை அடைந்தார். ஆதலால், மனிதர்களும் ரிஷிகளும் யாகம் செய்யக் கடவர் யூபஸ்தம்பங்களையும் நாட்ட வேண்டும் . யூபம் - யாகத்தில் கொல்லப்படும் உயிர்களைப் பிணிக்கும் தூண்.

இதன்பின் யாகத்தால் உயிர்களைக் கொல்லக் கட்டளையிடுகிற மந்திரமாவது:-

தைவ்யா:- சாமி தார ஆரபத்வமுத மனுஷ்யா இத்யாஹ. அன்வேனம் மாதா மன்ய தாமனு பிதானுப்ராதா ஸ்கர்யோனு ஸகா ஸயூட்ய இதிஜனித்ரை ரேவைனம் தத்ஸ மனு மத மாலா பந்த உதி சீனாம் அஸ்பபதோ நிதித்தாமஸுர்யம் சக்ஷீர்க்ம ப்தாத் வாந்தப் ராண மன் வஸ் ருஜ தாந்திரி க்ஷமஸும் திச ஸ்ரோத்திரம், ப்ருதிவிசரீம்

(அய்தரேயப் ராஹ் மணம் பஞ்சிகா 2 காண்டம் 6)

இம்மந்திரத்தினால் பசுவின் தாய் தந்தையரைக் கேட்டுக் கொள்ளுவதாவது இந்தப் பசுவை எனக்கு கொடுங்கள்.

இவ்வாறு வேண்டிக் கொண்ட பின்னர் அத்வர்யு வென்னும் தலைமைப் புரோகிதனுடைய கட்டளையைப் பெற்றுக் கொண்டு பசுவை சமித்ரசாலா என்னுமிடத்திற்கு அழைத்துக் கொண்டு போய் வடக்கு திசையில் அப்பசுவின் கால்கள் இருக்கும் படியாகச் செய்து சமிதா வென்னும் பசுவைக் கொல்லும் புரோகிதன் முஷ்டி என்னும் குறுந்தடியால் பசுவினுடைய கழுத்தில் அடித்துக் கொலை செய்வான். அதன்பின் சுரா இடா ஸுனு ஸ்வதீதி என்னும் மரப்பலகையில் கொலையுண்ட பசுவின் பிணத்தைக் கிடத்தி தோல் உரித்துச் சதையை அரிந்தெடுத்து சிறிது நெருப்பிலிட்டு மீதியுள்ள மாமிசத்தைப் புரோகிதர்கள் யாவரும் பங்கு போட்டு எடுத்துக் கொள்ளுவார்கள்.

இந்த பசுவைப் பங்கிடும் முறை ஞான சூரியன் முதல் பக்கத்தில் மேற்படி மந்திரமும், அதன் தமிழ் அர்த்தமும் எழுதியிருப்பதால் இதில் எழுதவில்லை. இம்முறை கோபதப் ராஹ்மணம் என்னும் வேத நூலிலும் இருக்கிறது. யாகத்தில் கொலையுண்ட பசு சுவர்க்கத்தை அடைகிறது என்று கீழ்க்காணும் மந்திரம் கூறுகிறது:

பார்வை நியாமான; ஸம்ருத்யும் ப்ரா பஸ்யத் ஸதேவான் நான் வகா மயதைதும் தம் தேவா அப்ரூ வன் கம் னேஹிஸை வர்க்வத்வர் லோகம் கமயிஷ் யாம இதி

(அய்தரேயப் ராஹ் பஞ்சிகா காண்டம் 6)

பொருள்: யாகத்திற்கு கொண்டு வந்த பசு மரணத்தை காண்கிறது; மரணத்தினின்றும் தேவர்களை காண்கிறது.

தேவர்கள் பசுவைப் பார்த்து: நாங்கள் உன்னை சுவர்க்கத்திற்கு அழைத்துச் செல்லுகின்றோம் என்பார்கள். பசு கொல்லப்பட்டபிறகு அதன் சதையை அறுத்தெடுக்க வேண்டிய முறை மந்திரமாவது:-

அந்த ரே வோஷ் மாணம் வாரயத்வா திதி பசுஷ் வேதத் ப்ராணன் தாதிஸ் யேன மாஸ்ய வக்ஷ கருணுதாத் ப்ரசஸா பஹீ சலா தோஷ்ணீ கஸ்யபேவாம் ஸாச்சித் ரேஸ்ரோணீ வகவேஷாரூஸ்ரேக பர்ணாஷ்டீ வந்தாஷட்விம் சதி ரஸ்ய வங்காயஸ்கா அனுஷ்ட யோச்யா வயதத்; காத்ரம் காத்ரமஸ் யானூனம்.

(அய்தரேயப் ராஹ் மணம் பஞ்சிகா 2 காண்டம் 6)

பொருள்: மார்பிலிருந்து பருந்தின் வடிவத்தில் சதையை அறுத்தெடுக்க வேண்டும். பின் கால்களிலிருந்து இரண்டு துண்டுகளை அறுத்தெடுக்க வேண்டும். முன் கால்களிலிருந்து அம்பு வடிவமாக இரண்டு துண்டுகளை அறுத்தெடுக்க வேண்டும். தோளிலிருந்து ஆமையின் வடிவமாக இரண்டு துண்டுகளை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்தந்த அவயங்களிலிருந்து இருபத்தாறு துண்டுகளை அறுத்தெடுத்த பின் எல்லாவற்றையும் அறுத்தெடுத்துக் கொள்க.

பசுவின் மல மூத்திரம் முதலியவை தரையில் புதைக்கப்பட வேண்டும். அதற்குப் பிரமாணம்:-

உத்ய கோஹம் பார்த்திவம் (அய்தரேய பஞ்சி 2 க6)

பசுவைக் கொல்லும் போது ஹோதா என்னும் புரோகிதன் சொல்ல வேண்டியது:-
அத்ரிகோ சமீத்வம் ஸுசமீ சமீத்வம்

சமீத்வ மத்ரிகா அத்ரிகா அத்ரகா உர் இதித்ரிர்ப் ரூயாத்

(அய்த பஞ்சிகா 5 காண்டம் 7)

பொருள்: நன்றாக அடித்துக் கொல், கொல், கொல். அடிப்பதை நிறுத்தாதே.

தொகுப்பு: பெ.சுந்தரராசன்.

தமிழ் ஓவியா said...


அரசிதழில் வெளியிடப்பட்ட காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பு விவரம்காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பின் விவரத்தை ஆறு ஆண்டுகளுக்குப் பின்னர் மத்திய அரசு உச்சநீதிமன்ற உத்தரவின்படி 19.2.2013 அன்று அரசிதழில் வெளியிட்டது.

அதன் விவரம் வருமாறு:

காவிரி நதியில் இருந்து கிடைக் கும் மொத்த நீர் அளவு 740 டிஎம்சி ஆகும். அதில் கேரளத்துக்கு 30 டிஎம்சி, கர்நாடகத்துக்கு 270 டிஎம்சி, தமிழ்நாட்டுக்கு 419 டிஎம்சி, புதுச்சேரிக்கு 7 டிஎம்சி என மொத் தம் 726 டிஎம்சி தண்ணீர் ஒதுக்கப் பட வேண்டும்.

சுற்றுச்சூழல் பாதுகாப்புக்காக 10 டிஎம்சியும், கடலில் கலக்கும்போது தவிர்க்க முடியாத வகையில் செல் லும் உபரி நீருக்காக 4 டிஎம்சி நீரும் ஒதுக்க வேண்டும்.

கேரளத்துக்கு ஒதுக்கப்படும் 30 டிஎம்சி நீரில் கபினி துணை ஆற்றில் 21 டிஎம்சி, பவானி துணை ஆற்றில் 6 டிஎம்சி, பம்பாறு துணை ஆற்றில் 3 டிஎம்சி செல்லும் வகையில் தண்ணீர் திறக்கப்பட வேண்டும்.

காவிரி நதியில் இடர்பாடு காலங்களில் நீர்வரத்து குறைவாக இருக்கும் என்பதால், அதற்கேற்ப நீரின் அளவை கேரளம், கர்நாடகம், தமிழ்நாடு, புதுச்சேரி இடையே குறைத்துக் கொள்ளலாம்.

நீர் அளவைக்
கணக்கிடும் பகுதி

கேரளம்-கர்நாடகம் இடையே ஓடும் நீரை கபினி நீர்த்தேக்கத்தை வைத்தும், கேரளம்- தமிழ்நாடு இடையே ஓடும் நீரை பவானி துணை ஆறு பகுதியில் உள்ள சாவ டியூர் நீர் அளவை மய்யத்தை வைத் தும், பம்பாறு துணை ஆறு பகுதி யில் அமராவதி நீர்த்தேக்கத்தை வைத்தும் நீர் அளவை கணக்கிட வேண்டும்.

கர்நாடகம்-தமிழ்நாடு இடையே ஓடும் நீரை, பில்லிகுண்டுலு நீர் அளவை மய்யம் அல்லது இரு மாநில எல்லை பகுதியில் வேறு ஏதேனும் பொதுவான மய்யத்தை வைத்து கணக்கிட வேண்டும். தமிழ் நாடு-புதுச்சேரி இடையே ஓடும் நீரை கணக்கிட ஏற்கெனவே ஏழு பகுதிகளில் மையங்கள் உள்ளன.

ஒவ்வொரு மாதமும் திறந்துவிடவேண்டிய நீரின் அளவு

காவிரியிலிருந்து தமிழகத்துக்கு கர்நாடகம் திறந்துவிட வேண்டிய நீரின் அளவு (அடைப்புக்குறியில் டிஎம்சி அளவில்):
ஜூன் (10), ஜூலை (34), ஆகஸ்ட் (50), செப்டம்பர் (40), அக்டோபர் (22), நவம்பர் (15), டிசம்பர் (8), ஜனவரி (3), பிப்ரவரி (2.5), மார்ச் (2.5), ஏப்ரல் (2.5), மே (2.5) என்றவாறு காவிரி நீரை தமிழ்நாட்டுக்கு கர்நாடகம் வழங்க வேண்டும்.

தமிழகத்துக்கு ஒதுக்கப்பட்ட நீரில் இருந்து 182 டிஎம்சி நீர், சுற்றுச் சூழல் பாதுகாப்புக்காக ஒதுக்கப் பட்ட 10 டிஎம்சி நீர் ஆகியவற்றை சேர்த்து மேற்கண்ட மொத்த நீரின் அளவான 192 டிஎம்சி நீர் கணக் கிடப்படுகிறது.

மாதந்தோறும் திறந்து விடப் படும் நீரின் அளவை 10 நாள்கள் இடைவெளி விட்டு தமிழ்நாட்டுக்கு ஒழுங்குமுறை அமைப்பு திறந்துவிட வேண்டும்.

காவிரி ஒழுங்குமுறை ஆணையம்

நீர் சரியாக திறந்து விடப்படு கிறதா என்பதை மத்திய நீர் ஆணைய உதவியுடன் அய்ந்து ஆண்டுகள் வரை (புதிதாக உருவாக் கப்படவிருக்கும்) காவிரி ஒழுங்கு முறை ஆணையம் கண்காணிக்க வேண்டும்.

தண்ணீரை திறந்து விடுவதில், நீர் ஆதார மாநிலம் தன்னிச்சையாக முடிவெடுக்க முடியாது. சம்பந்தப் பட்ட மாநிலங்களில் நீர் மின் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு, அதன் தேவைக்காக காவிரி நீர் தேக்கி வைக்கப்படும் நிலை ஏற்பட நேர்ந்தால், அதனால் நீர் பெறும் மாநிலங்களின் தேவை பாதிக்கப் படக்கூடாது.

காவிரியில் இருந்து திறக்கப்படும் நீர் அல்லது நீர்த்தேக்கம் அல்லது அணையில் இருந்து திறக்கப்படும் நீரில் இருந்து குடிநீருக்காகவும் நகராட்சி தண்ணீர் தேவைக்காகவும் 20 சதவீதத்தை பயன்படுத்தலாம். தொழிற்சாலை தேவைக்காக 2.5 சதவீத நதி நீரை பயன்படுத்தலாம். ஒதுக்கப்பட்ட நீரை மாநிலங்கள் பயன்படுத்த தவறினாலோ அல்லது பெற முடியாமல் போனாலோ அதை, அடுத்துவரும் நீர் ஆண்டில் கோர முடியாது.

பருவ காலம் எவை?

காவிரி நதியிலிருந்து கிடைக்கும் 740 டிஎம்சி நீர் அளவைக் கொண்டு சாதாரண பருவ ஆண்டு என் பதை கணக்கிட வேண்டும்.
தண்ணீர் பருவ ஆண்டு என் பதை ஜூன் ஒன்றாம் தேதி தொடங்கி மே 31 ஆம் தேதி முடிவ டையும் நாள் வரை கணக்கிட வேண்டும்.

நீர்ப்பாசன காலம் என்பதை ஜூன் ஒன்றாம் தேதி முதல் அடுத்த ஆண்டு ஜனவரி ஒன்றாம் தேதி வரை கணக்கிட வேண்டும்.

காவிரி நதி என்பதை மாநிலங் களில் ஓடும் காவிரி நீரையும், காவிரி யில் நேரடியாகவும் மறைமுகமாக வும் கலக்கும் நீரையும் சேர்த்து கருத வேண்டும் என்று அரசிதழில் நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பு விவரங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.

காவிரி நடுவர்மன்ற இறுதித் தீர்ப்பின்படி தமிழ்நாட்டுக்கு காவிரி நதியில் இருந்து மொத்தம் 419 டிஎம்சி நீர் பங்கு ஒதுக்கப்பட வேண்டும்.

அதில் 192 டிஎம்சி நீரைத்தான் கர்நாடகம் தமிழ்நாட்டுக்கு திறந்து விட வேண்டும். மீதமுள்ள 227 டிஎம்சி நீரில், தமிழக எல்லைக்குள் ஓடும் காவிரியில் தானாகச் சென்று கொண்டிருக்கும் தண்ணீரும், நொய்யல், பவானி, கொள்ளிடம் உள்ளிட்ட கிளை ஆறுகளில் இருந்து காவிரியில் கலக்கும் தண் ணீரும் அடங்கும் என்பது குறிப் பிடத்தக்கது.

தமிழ் ஓவியா said...


குடியரசுத் தலைவரின் உரை


வழக்கம்போலவே நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படுவதற்கான நாடாளுமன்றத்தின் தொடரைத் தொடங்கி வைத்து குடியரசுத் தலைவர் உரை நிகழ்த்தியுள்ளார்.

அரசின் கொள்கையையும், திட்டங்களையும் முன்னோட்டமாக அறிவிக்கும் உரை இது.

கூட்டத்தின் தொடக்கத்திலேயே தி.மு.க., அ.இ.அ.தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர்கள் விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின் மகன் - பாலகன் பாலச்சந்திரன் கொல்லப்பட்ட விதம் குறித்து, கவன ஈர்ப்புப்போல முழக்கங்களை எழுப்பினர்.

இந்தப் பிரச்சினை உலகம் சார்ந்த ஒன்றாகக் கிளர்ந்துள்ளது என்றாலும், இந்தியாவுக்கு அதிகத் தொடர்பும், அக்கறையும் உள்ள பிரச்சினையாகும்.

குடியரசுத் தலைவரின் உரையில் இலங்கையில் தமிழர்கள்படும் துயரம் குறித்து ஓடுகிற ஓட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது என்றே கருதவேண்டி யுள்ளது.

ஜெனீவாவில் நடக்க இருக்கும் மனித உரிமைக் கவுன்சில் கூட்டத்தில் அமெரிக்கா கொண்டு வரவிருக்கும் தீர்மானத்தின்மீது இந்தியாவின் நிலைப்பாடு குறித்து குடியரசுத் தலைவர் குறிப்பிடாதது வருந்தத்தக்கதாகும்.

இலங்கையில் ஈழத் தமிழர்களுக்கு இழைக் கப்படும் இன்னல்கள், மறுக்கப்படும் உரிமைகள் குறித்து இந்திய அரசின் செயல்பாடுகள் உணர்வு பூர்வமாக இல்லாமல் இயந்திரத் தன்மையில்தான் இருந்துவந்திருக்கின்றன.

அதுவும் 12 வயதுப் பாலகன் பாலச்சந்திரன் சுட்டுக் கொல்லப்பட்ட விதம்பற்றி உலகமே அதிர்ச்சி அடைந்திருக்கும் இந்தக் காலகட்டத்தில், இந்தியக் குடியரசுத் தலைவரின் உரை மரத்துப் போன தன்மையில் இருப்பது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவதாகும்.

இந்த நிலையில், தி.மு.க., அ.இ.அ.தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர்கள் குடியரசுத் தலைவர் உரைக்கு முன்னதாக முழக்கம் செய்திருப்பது சரியானதே என்பது உறுதியாகி விட்டது.

குடியரசுத்தலைவரின் உரையில் பொருளாதார வளர்ச்சி வேலை வாய்ப்பு, விண்வெளி ஆய்வுகள் பற்றி எல்லாம் கூறப்பட்டு இருந்தாலும், மகளிர் இட ஒதுக்கீடுபற்றி ஒரு வார்த்தை இல்லையே - ஏன்?

மக்கள் தொகையில் கிட்டத்தட்ட சரி பகுதியினரான பெண்கள்பற்றிய உரிமைப் பிரச்சினையை மத்திய அரசு அறவே கைவிட்டுவிட்டது என்று கருத இடமிருக்கிறது.

வர்மா ஆணையத்தின் பரிந்துரைகள்பற்றி கருத்துத் தெரிவிக்கும் அதேவேளையில், அத னோடு தொடர்புடைய, மகளிர் உரிமைகளுக்காக நாடாளுமன்றத்தில் உரத்த முறையில் குரல் கொடுக்க அதிக வாய்ப்பு ஏற்படும் மகளிர் இட ஒதுக்கீட்டுப் பிரச்சினையை அறவே கைவிட்டதை ஜீரணித்துக் கொள்ள முடியவில்லை.

சமூகநீதி தொடர்பான எந்த அறிவிப்புகளும் கிடையாது. குடியரசுத் தலைவர் உரை நிகழ்த்திய அன்று மாலையில் குண்டுவெடிப்புச் செய்திகள் வெடித்துக் கிளம்பியுள்ளன.

இந்தியாவில் இதற்குமுன் நடந்திருக்கிற குண்டுவெடிப்புகளுக்குக் காரணமான குற்றவாளி களுக்குத் தண்டனை கிடைப்பதில் அளவிறந்த காலதாமதம் ஆகிக் கொண்டிருப்பதும் இதுபோன்ற குண்டுவெடிப்புகளுக்கும் காரணம் ஆகும்.

1992 இல் நடைபெற்ற பாபர் மசூதி இடிப்புக்குப் பின் இந்தியாவில் வன்முறைகள் தொடர்கதை களாகி விட்டன. மாலேகான் குண்டுவெடிப்பு என்பது குறிப்பிடத்தக்கதாகும். அதற்குக் காரணமான குற்றவாளிகள் தண்டிக்கப்பட வில்லை.

மாறாக, குற்றவாளிகளை அடையாளம் கண்டு குற்றப் பத்திரிகை தயாரித்த காவல்துறை அதிகாரி கொல்லப்பட்டுள்ளார். இதுதான் இந்தியாவின் இன்றைய பிரத்தியட்ச நிலை!

பாபர் மசூதி இடிப்புக் குற்றவாளிகள் துணைப் பிரதமராகவே வர முடியும் என்றால், 2000 சிறுபான்மை மக்கள் கொல்லப்படுவதற்குக் காரணமாக இருந்தவர்தான் பிரதமர் பதவிக்கான வேட்பாளர் என்றால், இந்த நாட்டில் குண்டு வெடிப்புகளுக்கு முற்றுப்புள்ளி எங்கே இருந்து கிடைக்கப் போகிறது? 22-2-2013

தமிழ் ஓவியா said...


தாண்டவமாடுகின்றன...

இந்திய மக்களின் கல்வி அறிவு வாசனையற்ற தன்மையும், பாமரத் தன்மையும், அடிமைத்தன்மையும் எல்லாம் சேர்ந்து உலகத்தில் வேறு எந்தத் தேசத்திலும் இல்லாத அவ்வளவு மதங்களும், மத வேற்றுமைகளும், மத மாற்றமும் இங்குத் தாண்டவமாடுகின்றன. - விடுதலை, 30.4.1958

தமிழ் ஓவியா said...


வர்க்கப் பார்வையைச் சிதைக்கும் சாதி

பிறப்பில் சாதிய உயர்வு தாழ்வு எனும் தத்துவம் வேத சாஸ்திரக் கருத்துக்களோடு இணைந்து இந்தியாவில் சமூக ஆதிபத்திய கருத்தாக நிலைநாட்டி வருவது பிராமணியம் என்பதாகும்.

இந்தியாவைத் தவிர, உலகில் மற்றெல்லா நாடுகளிலும், குறிப்பாக மேலைநாடுகளில் ஆளும் வர்க்கத்தின் அடிப்படையில் ஆதிபத்தியம் நிலவியது. பொருள் உற்பத்தி உறவு முறையில் - அரசியல், பொருளாதாரம், ஆட்சி அதிகார ஆதிக்கம் வகிக்கும் வர்க்கம் மேலான வர்க்கமாக கருதப்பட்டது.

உதாரணமாக, மன்னர்கள் நிலப் பிரபுக்கள், முதலாளிகள் உயர்வான சமூக அந்தஸ்து படைத்தவர்களாக கருதப்பட்டனர்.

ஆனால் இந்தியாவில் மேற்கூறியவாறு வர்க்க அடிப்படையில் உயர்வு தாழ்வு எனும் சமூக அந்தஸ்து நிலவி வந்தபோதிலும் இவை அனைத்திற்கும் மேலாக முதன்மையாக பிறப்பில் சாதிய உயர்வு தாழ்வு எனும் சாதிய முறை ஏற்படுத்தப்பட்டது வேத சாத்திரக் கருத்துக்களேயாகும்.

இந்தியாவில் அடிமை முறையும், நிலப்பிரபுத்துவ உற்பத்தி உறவுமுறையும், பின்னிப் பிணைந்திருந்த சமுதாயத்தில் பொருள் உற்பத்தி உறவுமுறையில் அரசியல், பொருளாதாரம், ஆட்சி அதிகாரம் என்ற அமைப்பில் ஏற்படும் வர்க்கப் பாகுபாடு அல்லது வர்க்கப் பிரிவுகளை மக்கள் பார்க்க விடாது தடுத்தும், தடைப்படுத்தியும் வந்தது பிராமணியம் எனும் தத்துவமாகும்.

-எம்.வி.சுந்தரம் எழுதிய சாத்திரப் பேய்களும், சாதிக் கதைகளும் (ஒரு மார்க்ஸியப் பார்வை) நூலின் பக்கம் 54-55

தமிழ் ஓவியா said...


யக்ஞவல்கியா கூறுகிறார்!


ஒரு பிராமணன் சண்டாளனுடைய கிணற்றிலிருந்து தண்ணீரைக் குடித்தால், அல்லது சண்டாளன் பாத்திரத்தில் தண்ணீர்க் குடித்தால் சாந்தா பானா செய்ய வேண்டும். இவ்வாறு யக்ஞவல்கியா இயற்றிய அங்கிரா என்ற நூல் கூறுகிறது.

சாந்தபானா செய்வதென்றால், செய்த பாவம் அல்லது தீட்டுத்தீர ஒரு இரவும், ஒரு பகலும் பட்டினி கிடக்க வேண்டும். அதன்பின் முதலில் பஞ்சகவ்யம் அருந்த வேண்டும். (இத்தகைய இந்துமத மாநாட்டில் தாழ்த்தப்பட்ட மக்களும் கலந்து கொள்கிறார்களே- என்னசெய்ய!)

தமிழ் ஓவியா said...


கடவுளுக்கு ஆபத்து!


கடவுள் நம்பிக்கை பற்றி சமீபத்தில் கொரியாவில் கணக்கு எடுத்தார்கள். 42 சதவிகிதம் பேர் மட்டுமே கடவுள் இருப்பதாக நம்புகிறார்கள். 58 சதவிகிதம் பேர் கடவுள் என்று ஒருவர் இல்லை என்றார்கள். 30 சதவிகிதம் பேரே சொர்க்கம் - நரகம் என்று இருப்பதாக நம்புகிறார்கள். 70 சதவிகிதம் பேர் மரணத்துக்குப் பிறகு எதுவுமே இல்லை என்று நினைக்கிறார்கள்.

நன்றி: ராணி 3.4.1983

தகவல்: ரெ.அய்யாசாமி, விராட்டிபத்து

தமிழ் ஓவியா said...


தன்மானத்தினைப் பங்கப்படுத்தாத மாற்றங்கள் ஏற்புடையனவே! - முனைவர் அ.இராமசாமி

நாடு தழுவிய தமிழ் அடையாளத் தேடல்கள் அவசியம் - எழுத்தாளர் எஸ்.இராமகிருஷ்ணன்

ஆதிச்சநல்லூர் தொடங்கி அரப்பா வரை மீள் அகழ்வாய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டும் - தமிழர் தலைவர் கி.வீரமணி

திராவிடர் வரலாற்று ஆய்வு மய்ய சிறப்புக் கூட்டத்தில் அறைகூவல்கள்!

சென்னை, பிப். 22- திராவிடர் வரலாற்று ஆய்வு மய்யத்தின் சிறப்புக் கூட்டம் சென்னை - பெரியார் திடலில் 20.2.2013 அன்று நடைபெற்றது.

அன்னை மணியம்மையார் மன்றத்தில் மாலையில் நடைபெற்ற கூட்டத்தில் உருமாறும் தமிழ் அடையாளங்கள் எனும் தலைப்பில் எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் சிறப்புரை ஆற்றினார். கூட்டத்திற்கு திராவிடர் வரலாற்று ஆய்வு மய்யத்தின் தலைவர், வரலாற்றுப் பேராசிரியர் முனைவர் அ.இராமசாமி தலைமை வகித்தார். மய்யத்தின் செயலாளர் பேராசிரியர் முனைவர் ந.க.மங்கள முருகேசன் அறிமுக உரை ஆற்றினார். நிறைவுரையினை திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி வழங்கினார்.

முனைவர் அ.இராமசாமி

திராவிடர் வரலாற்று ஆய்வு மய்யத்தின் தலைவர், பேராசிரியர் முனைவர் அ.இராமசாமி தனது தலைமையுரையில் குறிப்பிட்டதாவது:-

கடந்த காலங்களில் மனித சமுதாயம், குறிப்பாக தமிழ்ச் சமுதாயம் பல்வேறு மாற்றங்களுக்கு ஆளாகி வந்துள்ளது. இவை மொழி மாற்றங்கள், பண்பாட்டு மாற்றங்கள், அன்றாடம் வாழ்க்கையில் கடைப்பிடிக்கப்படும் பழக்க வழக்க மாற்றங்கள் என பல்வகைப்படும். தமிழ்ப் பண்பாட்டுப் படையெடுப்புக்கு ஆளாகி இன்றளவும், முழுவதும் மீண்டு வர முடியாத நிலைகளும் நீடித்து வரு கின்றன. மாற்றமே கூடாது என்பது பகுத்தறிவு வாதத்திற்கு ஏற்புடையது ஆகாது. தன்மானத்தை இழக்காத மாற்றங்கள் ஏற்றுக் கொள்ளக்கூடியவையே.

சிலப்பதிகார இலக்கிய காலம் தொட்டே பண்பாட்டு மாற்றங்களுக்கான நிகழ்வுகள், அதனை முழுவதும் ஏற்றுக் கொள்ளாத எதிர்ப்பு நிகழ்வுகள் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டே வருகின்றன. கோவலன், மாதவியின் இல்லத்திற்கு சென்றதால் தனிமைப்பட்டு நின்ற கண்ணகிக்கு, தேவந்தி எனும் பார்ப்பனப் பெண், சோம குண்டத்தில் மூழ்கி எழுந்தால் கோவலன் திரும்பி வந்து விடுவான் என அறிவுறுத்திய வேளையில், சோம குண்டத்தில் மூழ்கி எழுந்தால் அது எப்படி மாற்றத்தினை ஏற்படுத்திட முடியும் என கண்ணகி கேட்ட செய்திகள் இலக்கியக் குறிப்புகளாக உள்ளன.

ஆரியப் பண்பாட்டு மாற்றத்தை ஏற்றுக்கொள்ள மறுக்கும் நிலையினை வெளிப்படுத்துவதாக சிலப் பதிகாரக் குறிப்புகள் உள்ளன. புலால் உண்ணாமை - பார்ப்பனப் பண்பாடா கவும், புலால் உண்ணுதல் - பார்ப்பனர் அல்லாத பண்பாடாகவும் உருமாற்றம் பெற்றிருந்தாலும், யாகம் வளர்த்து அதில் மிருகங்களை வெட்டிப் போட்டு, அது வெந்தபின் அதன் மாமிசத்தை சுவைத்துச் சாப்பிட்ட ஆரியர்கள் பிற்காலத்தில் புத்த மதத்தை அழித்தொழிக்கும் ஆதிக்க அணுகு முறையாக புலால் உண்ணாமையை தமது பண் பாடாக எடுத்துக் கொண்ட வரலாற்று உண்மை களும் உண்டு.

இப்பொழுது வெளிவரும் தமிழ் நாளிதழ் ஒன்று, ஒரு அரசியல் தலைவர் சிறைச்சாலையிலிருந்து வெளிவந்ததை தலைவர் ரிலீஸ் (Release) என தலைப்பிட்டு செய்தி வெளியிடுகிறது. ரிலீஸ் என்பதற்கு விடுதலை எனும் தமிழ்ச் சொல் இருந் தாலும் ஆங்கிலக் கலப்புடன் செய்தி வெளியிடு வதை, தமிழ்ப் பயன்பாட்டுக்கு எதிரான அணுகு முறையாகவே கருத வேண்டும்.

எனினும் எந்த ஒரு மாற்றத்தையும், அதன் நோக்கம், பின் விளைவுகள், ஆதிக்க அடையாளத் தின் வெளிப்பாடு என பல்வேறு தளங்களில் உற்று நோக்கி, மனித வாழ்வுக்கு இயைந்த மாற்றங்களை ஏற்றுக் கொண்டு, புறந்தள்ள வேண்டியவைகளை - எதிர்க்க வேண்டியவைகளை அடையாளம் கண்டு சுயமரியாதையுடன் வாழும் வழிமுறைகளை கைக்கொள்ள வேண்டும்.

தமிழ் ஓவியா said...

- இவ்வாறு முனைவர் அ.இராமசாமி தனது உரையில் குறிப்பிட்டார்.

முனைவர் ந.க.மங்கள முருகேசன்

திராவிடர் வரலாற்று ஆய்வு மய்யத்தின் செயலாளர், பேராசிரியர் முனைவர் ந.க.மங்கள முருகேசன் சிறப்புப் பேச்சாளர் பற்றிய அறிமுக உரையினை ஆற்றி, வருகை தந்தோரை வரவேற்றுப் பேசினார்.

உருமாறும் தமிழ் அடையாளங்கள் எனும் தலைப்பில் உரையாற்றிட உள்ள எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் மண்வாசனைமிக்க எழுத் தாளர், விருதுநகர் மாவட்டம் மல்லாங்கிணறு கிராமத்தைச் சார்ந்த இவர் தனது 48 வயது கால வெளியில் 25 ஆண்டுகள் தமிழ் எழுத்துப் படைப் பில் கவனம் செலுத்தி பல்வேறு தளங்களில் பதிவு செய்துள்ளார்.

சிறுகதைகள், நாவல்கள், கட்டுரைகள் என பல தளங்களில் முத்திரை பதித்துள்ளார். இவரது படைப்புகள் மூன்று பல்கலைக்கழகங்களிலும், 9 கல்லூரிகளிலும் பாட நூல்களாக பயிற்றுவிக்கப் படுகின்றன. இவரது நாவல்கள் சமூகத்தின் பல்வேறு தட்டு மக்களது வாழ்வின் எதிரொலிப்பாக இருக்கின்றன. குறும்பட ஆக்கத்தில் தனி ஆர்வம் உள்ளவர். அதற்கான பயிற்சிப் பட்டறைகளை நடத்துகிறார்.

உலக சினிமா எனும் படைப் பிலக்கியம் படைத்தவர். அண்மையில் வெளிவந்த எனது இந்தியா எனும் இவரது கட்டுரைத் தொகுப்பு நூல், இவரது வரலாற்று ஆய்வினை வெளிப்படுத்தும் விதமாக சிறப்பாக உள்ளது.

தமிழ் ஓவியா said...

எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன்

உருமாறும் தமிழ் அடையாளங்கள் எனும் தலைப்பில் எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் உரையாற்றியதாவது:-

ஆரம்ப காலத்தில் ஆதிக்கவாதிகளுக்கு, பின்னர் ஆங்கிலேயர்களுக்கு பல்லக்குத் தூக்கித் தூக்கி தமிழ் இனம் தனது அடையாளங்களை இழந்து விட்டது. தமிழ் அடையாளங்கள் பெரும்பாலும் இலக்கியம் சார்ந்த குறிப்புகளாக உள்ளன. வரலாற்று ஆய்வுக் குறிப்புகளிலிருந்து கிடைப்பவை மிகவும் குறைவு. தமிழ் அடையாளம், தமிழ்நாடு மட்டுமல்ல, இந்தியா முழுவதும், பிற நாடுகளிலும் பரவி இன்றும் இருக்கிறது.

ஒரிசா மாநிலத்தில் உள்ள பழங்குடி மக்களிடையே சுமை தூக்குதலை, காவடி எடுத்தல் என்பதாகக் குறிப்பிடும் வழக்கம் உள்ளது. பாகிஸ்தானில் கொற்கை எனும் பெயரில் ஊர் உள்ளது. பண்டைய தமிழ் மன்னர்களின் பெயர் களில் இடங்கள் மற்றும் பயன்பாடு இன்றளவும் தொடர்கின்றன. தமிழ் அடையாளங்கள் இந்தியா முழுமையும் தேடப்படும் வகையில் மீளாய்வு செய்ய வேண்டும். ஒட்டுமொத்த தமிழ் அடையாளங்கள் குறித்த வரலாறு பதிவு செய்யப்பட வேண்டும்.

- இவ்வாறு எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் தனது உரையில் குறிப்பிட்டார். (முழு உரைத் தொகுப்பு விரைவில் விடுதலையில் வெளிவரும்).

தமிழர் தலைவரின் நிறைவுரை

திராவிடர் வரலாற்று ஆய்வு மய்யத்தின் புரவலர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் தனது நிறைவுரையில் குறிப்பிட்டதாவது: தனது பெயரை மறந்து பயணம் செய்து கொண்டு இருந்த இனம் தமிழ் இனம். தனக்கென முழுமையான வரலாறு உறுதி செய்யப்படாத நிலையில் பண்பாட்டு ஆதிக்கத்தில் அடிமைப் பட்டுக்கிடந்தது. அந்த அன்னிய பண்பாட்டுப் படையெடுப்பினை முறியடிக்க இயக்கம் கண்டவர் தந்தை பெரியார் ஆவார்.

பெரியாருக்கு முன்பு பண்பாட்டுப் படை யெடுப்பினை மேலோட்டமாக எதிர்த்து வந்த நிலைமைகள் நிலவின. உடல் நோயின் உண்மை நிலை அறிய எக்ஸ்ரே பரிசோதனை செய்தல் போல, சமுதாயத்தில் நிலவும் ஆதிக்க அடிமை நிலையினை ஊடுருவிப் பார்த்து, உண்மை நிலையறிந்து ஆதிக்க நிலையினை முறியடிக்க முற்பட்டார். வெற்றியும் கண்டார். முறியடிக்கும் நிலைகள் இன்றளவும் தொடர்ந்து கொண்டிருக் கின்றன.

தமிழ் ஓவியா said...

தமிழ் மொழிப் பயன்பாட்டிலேயே தங்களது ஆளுமையை ஆதிக்கவாதிகள் உணர்த்தும் வகையில் வெளிப்படுத்தி வருகின்றனர். வீட்டுக்குப் போக வேண்டும் எனும் சொற்றொடரை ஆத்துக்குப் போக வேண்டும் எனும் பழக்கமாகக் கொண்டு உள்ளனர். தமிழ்த் தாத்தா எனும் அடைமொழி இடப்பட்ட உ.வே.சாமிநாத அய்யர் தனது சுயசரிதையில் உணவு அருந்தும் பழக்கத்தினை விசாரிக்கும் தன்மையில் தமிழைப் மட்டப்படுத்திப் பார்க்கும் முறையினை வலியுறுத்தியுள்ளார்.

தம்மைவிட பெரியவர்களைப் பார்த்து போஜனம் முடிந்ததா? எனக் கேட்கவேண்டும். சாப்பிட்டு விட்டீர்களா? எனக் கேட்பது மரியாதைக் குறைவு ஆகும். தமக்கு கீழானவர் களைப் பார்த்து சாப்பிட்டு விட்டீர்களா? எனக் கேட்கலாம் என்று குறிப்பிடுகிறார்.

மொழிப் பயன்பாட்டிலேயே தமிழை மட்டப் படுத்திப் பார்க்கும் மனப்போக்கு தமிழ்த் (?) தாத்தாவிடமே இருந்தது என்றால் மற்றவரிடம் எப்படி ஆதிக்க உணர்வுகள் நிலவியிருக்கும் என்பதை தமிழர்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்.

இப்பொழுது பார்ப்பனர் அல்லாதாரிடையே பேசப்பட்டு வரும் திராவிடரா? தமிழரா? எனும் விவாத நிலையினை, ஆதிக்கவாதிகளின் ஒருவகையான பிரித்தாளும் அணுகுமுறையாகவே கருத வேண்டும். புலால் உண்ணலை இயல்பாகக் கொண்ட இனத்தை, புலாலை, அன்னிய பதார்த்தம் என சொல்ல வைத்துக் கொண்டிருக்கின்றனர்.

தாங்கள் ஆதிக்க அடிமைகளாக இருக்கும் நிலை மறந்து தமிழர்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். பெயரில் என்ன இருக்கிறது? என தமிழர்களையே குறை கூறுவார்கள் அந்த ஆதிக்க வாதிகள்.

தமிழ் ஈழப் பகுதிகளில் நிலவிவந்த 89 தமிழ் ஊர்ப் பெயர்களை மாற்றி சிங்கள மொழிச் சொற்களில் அந்த இடங்களை அழைக்க, சிங்கள அரசு எடுத்துள்ள முயற்சிகள், தமிழ்ப் பண்பாட்டு அழிப்பு வேலையாகவே கொள்ளப்பட வேண்டும். அந்த முயற்சிகள் முறியடிக்கப்பட வேண்டும். தமிழ்நாட்டில் கூட அந்த ஆதிக்க முறியடிப்பு முயற்சிகள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. மாயவரம் மீண்டும் மயிலாடுதுறை ஆனது. ஆனால் அந்த மீள்வுக்கான முயற்சிகள் முழுமை அடையவில்லை.

கல்வி கற்கும் இடம் பள்ளிக்கூடம் என்பது சமணர்கள் நடத்திய சமணப் பள்ளியிலிருந்து வந்த சொல் ஆகும். சமணர்கள் காலத்தில் கல்வியளிப்பது அனைவருக்கும் பொது; அது அறிவுக்கொடை என அழைக்கப்பட்டது. பின்னாளில் வைதிக மதம் வலுப்பட்ட வேளையில் கல்வி என்பது அனை வருக்கும் பொதுவல்ல; ஒரு குறிப்பிட்ட வகுப் பினரே கல்வி கற்க முடியும் எனும் நிலையினை உருவாக்கினர். அறிவுக்கொடை என்பது ஞான தானம் எனும் உருமாற்றம் பெற்றது.

சிந்து சமவெளி நாகரிக அடையாளங்களான மொகஞ்சதாரோ - அரப்பா ஆய்வுகள் திராவிடப் பண்பாட்டு அடையாளங்களே எனும் கருது கோளுக்கு பல குறிப்புகள் உள்ளன. இந்நிலையில் மொகஞ்சதாரோ - அரப்பா காலத்து காளை மாட்டுச் சின்னம் (திராவிடர் அடையாளம்), குதிரையாக (ஆரியர் அடையாளம்) மாற்றப்பட்டு, எதிர்ப்பு நிலை கண்டு ஆதிக்கவாதிகள் பின்வாங் கியது இன்று நிலவும் உண்மையல்லவா?

திராவிடர்களின் முழுமையான வரலாறு அறிய தமிழ்நாட்டில் உள்ள ஆதிச்சநல்லூரிலிருந்து அரப்பா வரை அகழ்வாய்வுகள் மீளாய்வு செய்யப் பட வேண்டும். ஆதிக்கவாதிகளின் அணுகுமுறை முற்றுப் புள்ளியில் முடியாது. அது தொடரும் செயலாகும். அதை எதிர்க்க, முறியடிக்க தமிழர்கள், தமிழ் அறிஞர்கள், வரலாற்று அறிஞர்கள் விழிப்புடன் செயலாற்ற வேண்டும். தமிழ் இன உணர்வுகள் உறுதிப்பட வேண்டும். - இவ்வாறு தமிழர் தலைவர் உரையாற்றுகையில் குறிப்பிட்டார்.

நிறைவாக நிகழ்ச்சி தொடர்பான நன்றியினை திராவிடர் வரலாற்று ஆய்வு மய்யத்தின் இணைச் செயலாளர் பேராசிரியர் முனைவர் ஆ.தானப்பன் கூறி முடித்தார்.

நிகழ்ச்சியினை திராவிடர் வரலாற்று ஆய்வு மய்யப் பொருளாளர் வீ.குமரேசன் தொகுத்து வழங்கினார்.

நிகழ்ச்சிக்கு திராவிடர் கழகத்தின் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், பெரியார் நூலக வாசகர் வட்டத்தின் தலைவர் மயிலை ந.கிருஷ்ணன், திராவிட இயக்க ஆய்வாளர் க.திருநாவுக்கரசு, அகில இந்திய பிற்படுத்தப்பட்டோர் ஊழியர்கள் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் ஜி.கருணாநிதி மற்றும் வரலாற்றுப் பேராசிரியர்கள், பொதுநல இன உணர்வாளர்கள், பத்திரிகையாளர்கள், திராவிடர் கழக, பகுத்தறிவாளர் கழகத் தோழர் என பல தரப்பட்டவர்கள் பெரும் திரளாக வந்திருந்தனர்.

தமிழ் ஓவியா said...


கூலிப் பட்டாளமா?

மிகக் கேவலமாக - அற்ப புத்தியுடன் இன்னொரு மணியம்மை என்று நாலாந்தர முறையில் அட்டைப்படம் போட்டு, உள்ளே கொச்சையான க()ட்டுரையை வெளியிட்ட இதழை, தமிழ்நாட்டின் பல பகுதிகளிலும் சுயமரியாதை உள்ள தமிழர்கள், திமுக தோழர்கள் எரித்தனர்.

இதுபற்றி இன்றைய இனமலரான ஒரு கருமாதி ஏடு அப்படி எரித்தவர்கள் எல்லாம் கூலிப்பட்டாளம் என்று எழுதியுள்ளதே.

இது அந்த இதழ் எழுதியதைவிட மிகமிக மோசமானது - தமிழர்களைக் கேவலப் படுத்துவதாகும். தமிழர்கள் சிந்திக்க மாட்டார்களா?

தமிழ் ஓவியா said...


டெசோ சார்பில் வெளிநாட்டுத் தூதர்கள் சந்திப்பு


புதுடில்லி, பிப். 22- டெசோ அமைப்பின் சார் பில் அமைக்கப் பட்ட எம்.பி.க்களின் குழுவினர் ஜப்பான், பெரு ஆகிய நாடுகளின் தூதர்களை சந்தித்து ஜெனீவாவில் இலங்கைக்கு எதிராக கொண்டு வரப்பட உள்ள தீர்மானத்தை ஆதரிக்கு மாறு கேட்டுக் கொண் டனர்.

மேலும் மார்ச் மாதம் புதுடில்லியில் டெசோ சார்பில் நடைபெறும் மாநாட்டில் கலந்து கொள்ள அகில இந்தி யத் தலைவர்களுக்கும் அழைப்பு விடுத்தனர்.

டெசோ அமைப்பின் சார்பில் அய்.நா. மனித உரிமை ஆணையத்தின் உறுப்பு நாடுகளாக உள்ள நாட்டின் தூதர்களைச் சந்திக்க எம்.பி.களின் குழு அமைக்கப்பட்டது.

இதன்படி புதுடில்லி யில் கழக நாடாளுமன்ற குழுத் தலைவர் டி.ஆர். பாலு, விடுதலைச் சிறுத் தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி. ஆகியோர் ஜப் பான் நாட்டு தூதரக அமைச்சரை சந்தித்த னர்.

அவரிடம் டெசோ தீர்மான நகல்களை அளித்து, ஜெனீவாவில் இலங்கைக்கு எதிராக கொண்டு வரப்பட உள்ள தீர்மானத்திற்கு ஆதரவு அளிக்குமாறு கேட்டுக் கொண்டனர்.

இதேபோன்று மாநிலங்களவை கழகக் குழுத் தலைவர் திருச்சி சிவா, வசந்தி ஸ்டேன்லி, ஜின்னா ஆகியோர் அடங்கிய எம்.பி.கள் பெரு நாட்டுத் தூதரைச் சந்தித்து இதே கோரிக் கையை எடுத்து வைத்த னர்.

அப்போது திருச்சி சிவா உள்ளிட்ட எம்.பி. கள் பெரு நாட்டுத் தூத ரிடம் ஜெனீவாவில் இலங்கைக்கு எதிராக கொண்டு வரப்பட இருக் கின்ற தீர்மானத்தை ஆதரிக்குமாறு கேட்டுக் கொண்டனர்.

மேலும் சரத்பவார், சுஷ்மா சுவராஜ், முலா யம் சிங் யாதவ், லாலு பிரசாத் யாதவ், சரத் யாதவ் உள்ளிட்டோரை டெசோ சார்பில் சந்தித்த டி.ஆர்.பாலு மார்ச் மாதம் டில்லியில் நடை பெறும் டெசோ மாநாட் டில் கலந்து கொள்ள அழைப்பு விடுத்தார்.

தமிழ் ஓவியா said...

உங்களுக்குத் தெரியுமா?தந்தை பெரியார் அவர்களின் தமிழ் எழுத்துச் சீர்த்திருத்தத்தை நடைமுறைப்படுத்த 1948 ஆம் ஆண்டிலேயே அன்றைய முதலமைச்சர் ஓமந்தூர் ராமசாமி(ரெட்டியார்)ஒரு குழு அமைத்தார்.அந்தத் திட்டத்தைப் பின்னால் முதலமைச்சரான ராஜகோபாலாச்சாரியார் கை கழுவினார் என்ற வரலாறு உங்களுக்குத் தெரியுமா?

தமிழ் ஓவியா said...இலங்கையில் போர் முடிந்து நான்கு ஆண்டுகள் உருண்டோடிவிட்டன! இன்னமும் அங்கே இயல்பு நிலை திரும்பவில்லை. சொந்த நாட்டு மக்களாகிய தமிழ் மக்கள் அங்கே ஏதோ பிடிபட்ட நாட்டின் போர்க் குற்றவாளிகள் போல் கொடுமையாய் நடத்தப்படும் கோரம் படமெடுத்தாடுகிறது.

முள்வேலிக்குள்தான் அங்கு எஞ்சியுள்ள தமிழர்கள் பலர் முதியவர்கள், பெண்கள், ஆண்கள், குழந்தைகள் - சொல்லொணாத் துயரத்துடன் அரை வயிற்றுக் கஞ்சிக் குக்கூட வழியில்லாமல் அவலமான வாழ்க்கையை சுமந்து, உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு நடமாடும் பரிதாப நிலை!

எம் தமிழச்சிகளின் நிலையோ எழுதவும் கூசும் வகையில் சிங்கள இராணுவத்தால் நடத்தப்படுகின்ற சோகம் தொடர் கதையாகி வருகிறது!

குறைந்தபட்ச மனித உரிமை, வாழ்வுரிமைகூட இன்னும் எம் தமிழர்களுக்குக் கிடைக்கவில்லை.

வட பகுதியான யாழ்ப்பாணம் கிழக்குப் பகுதிகள் எங்கும் சிங்கள இராணுவ ஆட்சியே; ஒவ்வொரு குடி மகனுக்கும் ஒரு இராணுவ சிப்பாய் என்பதுபோன்று உள்ள நெருக்கடி நிலை!

போர் நடந்து முடிந்தபிறகு தமிழர்களை மீள் குடியமர்த்துதல் நடைபெறாமல், அந்தப் பகுதிகளில் எல்லாம் சிங்களவர்களைக் குடியமர்த்தும் திட்டமிட்ட அநீதி அரங்கேறிக் கொண்டுள்ளது.

தமிழர்களின் அடையாளங்களைக்கூட விட்டு வைக்கக் கூடாது என்ற சிங்களப் பேரினவாதம் நிர்வாணத் தன்மையில் வெறிகொண்டு, ஊர்ப் பெயர்களை மாற்றுவது முதல் அங்கே தமிழர்கள் வழிபடும் கோயில், சர்ச், பள்ளிவாசல் எல்லாம் அழித்தொழிக்கப்படும் அவலம் அன்றாட நிகழ்வுகளாகி வருகின்றன.

இதுபற்றி டெசோ தலைவர் மானமிகு கலைஞர் அவர்கள் இந்தியப் பிரதமருக்கும், அய்க்கிய முற்போக்குக் கூட்டணியின் தலைவர் திருமதி சோனியாகாந்தி அவர்களுக்கும் தமது வேதனையைத் தெரிவித்து, தடுத்து நிறுத்த வேண்டும் என்று எழுதிய கடிதத்திற்கு அந்த அம்மையார் அவர்கள், மிகுந்த பொறுப்புணர்ச்சியுடன் கலைஞருக்குக் கடிதம் எழுதி, இதுபற்றி கவலை கொள்கிறேன்; அவசியம் வெளி உறவுத் துறை அமைச்சருடன் பேசி ஆவன செய்வதாக குறிப்பிட்டிருப்பது சற்று ஆறுதல் தருகிறது. நடவடிக்கை செயலில் தெரிய வேண்டும்.

இது ஒருபுறம்; தமிழக மீனவர்கள்மீது சிங்கள இராணுவத்தின் தாக்குதல், உரிமைகள் பறிப்பு நாளொரு முறையும் பொழுதொரு வேளையும் நடந்த வண்ணமே உள்ளது. வழக்கமான வெண்டைக்காய் பதிலையே மத்திய அரசு தருகின்ற நிலை!

இலங்கையில் அப்பட்டமான மனித உரிமை மீறல், போருக்குப் பின் மேலும், மோசமான இடி அமீன்தர்பார், ஆள் தூக்கிச் செல்லும் அரசின் கூலிப்படை ஏவுதல் மூலம் காணாமற் போனவர்கள் பட்டியலில் பல்லாயிரக் கணக்கில் உள்ளனர்.

வருகின்ற மார்ச் மாதத்தில் ஜெனிவா மனித உரிமை ஆணையத்தில் இலங்கையின் இந்த அடாவடி அட்டகாசத்தை எதிர்த்து அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானம், மனிதாபிமானத்தின் மற்றொரு வெளிப்பாடு; இதில் இந்திய அரசு அதன் பங்கை அதிகமாகச் செய்து அழிந்து கொண்டிருக்கும் தமிழினத்தைக் காப்பாற்றிட வேண்டும்.

தமிழ்நாட்டின் தொப்புள் கொடி உறவுள்ள தமிழர்களின் வாக்களிப்பால்தான் மத்தியில் இன்றைய இந்திய அரசு உள்ளது என்ற உண்மையை உணர்ந்து தம் கடமையைச் செய்திட தயங்கக் கூடாது.

இந்நிலையில் உலக நாடுகள் உண்மைகளை உணர்ந்து, இலங்கையின் யதேச்சதிகார ஆட்சி எப்படி மனித உரிமைகளைப் பறிக்கும் ஹிட்லர் ஆட்சியாக மாறி யுள்ளது என்று உணர்ந்திடும் நிலை கண்டு, இலங்கை அதிபர் கொடுங்கோலன் ராஜபக்சே குமுறுகிறார் - கொக்கரிக்கிறார்.

அய்.நா.வும், இதர பல உலக நாடுகளும் இலங்கை உள்நாட்டு விவகாரத்தில் தலையிடுகின்றனவாம்; பசப்புரை பகருகின்றார். மிரட்டுகிறார். அய்.நா.வை மிரட்டி, சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தினர்களையும் போர் நடக்கும்போது மிரட்டி, கப்பலேற்றிய கபட வேடதாரி மற்றொரு வேடம் தரித்து உள்நாட்டு இறையாண்மை பற்றிப் பேசுகிறார்.

எம் தமிழினம் பூண்டோடு, கூண்டோடு அழிக்கப்படும் முயற்சிகளை நாங்கள் வேடிக்கை பார்த்துக் கொண்டி ருக்க வேண்டுமா?

அய்.நா.வின் நோக்கம் என்ன? உலகம் ஒரு குலம் என்ற நிலை ஓங்கியுள்ளபோது, அநீதி, அக்கிரமம், அழிப்பு வேலைகளை கை கட்டி மனிதநேயம் உள்ளோர் வேடிக்கை பார்ப்பார்களா?

கணவனும், மனைவியும் கொஞ்சிப் பேசிடும் குடும்ப வாழ்க்கையில் தான் பிறர் தலையிடக் கூடாதே தவிர, கணவன் மனைவியைக் கொலை செய்ய முயன்றால் அடுத்த வீட்டுக்காரன் வேடிக்கை பார்க்கலாமா? கண்டித்துக் கடமையாற்றுவது தவறா என்று அறிஞர் அண்ணா அவர்கள் நல்லதொரு உவமை கூறியதைவிட, வேறு இதற்குப் பொருத்தமான பதில்தான் ஏது?

உள்நாட்டுப் பிரச்சினை என்றால், இந்திய அரசிடம் இலங்கை உதவி கேட்கலாமா? இராணுவப் பயிற்சிக்கு வரலாமா? 1000 கோடி ரூபாய்களைப் பெற்று அந்நாட்டுப் பிரச்சினையைத் தீர்க்க - புனர் வாழ்வுக்கு நிதி கேட்கலாமா? இந்திய வீடு கட்டுவோரை, பல்கலைக் கழகத்தவரை அழைக்கலாமா?

சர்வதேச போர்க் குற்றவாளியான ராஜபக்சேக்களை உலகம் பார்த்து தண்டனை வழங்கும் காலம் தூரத்தில் இல்லை.

-கி.வீரமணி,ஆசிரியர்.

தமிழ் ஓவியா said...

தமிழ்நாட்டின் தமிழ்த்தெருவில் தமிழ்தான் இல்லை என்று வருந்திப் பாடினார் பாவேந்தர். கடந்த தி.மு.க.ஆட்சியில் சென்னை மாநகராட்சிப் பகுதிக் கடைகளில் தமிழில் எழுத வலியுறுத்தப்பட்டது.அன்றைய மேயர் மா.சுப்பிரமணியம் தெருத்தெருவாகச் சென்று எழுதவும் வைத்தார். இன்று அந்த நிலை தொடருகிறதா? தி.மு.க.ஆட்சி மாறிய உடனேயே தமிழ் வணிகர்கள் மீண்டும் இங்கிலீசுக்கு மாறிவிட்டார்கள்.அ.தி.மு.க.ஆட்சி கொஞ்சமாவது கவலைப் பட்டதா? தி.மு.க.ஆட்சியில் `தமிழ்...தமிழ் எனக் குரல் எழுப்பும் தீவிர(?)தமிழ் உணர்வாளர்கள் இப்போது எங்கே போனார்கள் என்று தெரியவில்லை. அதுமட்டுமல்ல,சென்னை சாலைகளில் இருபுறங்களிலும் தமிழ்ப் பண்பாட்டு ஓவியங்களை தி.மு.க. அரசு அழகாக வரைந்திருந்தது. இளைய தலைமுறைக்கு எடுத்துச் சென்ற தமிழரின் கலை ஓவியங்களை அ.தி.மு.க.அரசு கடந்த சில நாட்களுக்கு முன் அழித்துவிட்டது.தீவிரமாகத் தமிழ்ப் பேசும் ஒரு அமைப்பும் இதுவரை எதிர்ப்புக் குரல் எழுப்பவில்லை.

தமிழை, தமிழரின் கலைகளை திராவிட இயக்க ஆட்சி தூக்கிப் பிடித்தது;

அதனை ஆரியம் இன்றைக்கு அழிக்கிறது;திராவிடத்துக்கு எதிராகப் பேசிவரும் சில தமிழ்(?)தீவிரங்கள் வாய்மூடி மவுனியாக இருக்கின்றன.

இந்த முண்டங்கள்தான் சொல்கின்றன-திராவிடத்தால் வீழ்ந்தோமாம்?

ஆரியத்தால் வீழ்த்தப்பட்டோம் என்பதும் உண்மை;

இப்போதும் ஆரியத்தால்தான் வீழ்த்தப்பட்டுவருகிறோம் என்பதும் உண்மை.

அதற்கு இதைவிடவா வேறு சாட்சி வேண்டும்?

- திராவிடன்

தமிழ் ஓவியா said...

மதத்தின் பெயரால் இசைப் பெண்களுக்குத் தடை!


ஜம்மு காஷ்மீரின் ஸ்ரீநகரில் ஒரு இசைக்குழு.பிரகாஷ்(காலை ஒளி)என்ற அந்தக் குழு மூன்று இஸ்லாமிய இளம் பெண்களால் தொடங்கப்பட்டது.இப்போது அந்தக் குழு அம்மாநில இஸ்லாமிய மத குரு பஷீருத்தீன் அகமது என்பவரால் தடை ஆணை(பத்வா) பிறப்பிக்கப்பட்டுள்ளது.இதனால் அக்குழு தற்போது கலைக்கப்பட்டுள்ளது. மேடையில் பாடுவது இஸ்லாமுக்கு விரோதமானது. இசையும் நடனமும் இஸ்லாம் மதத்தில், தீயவை-அனுமதிக்கப்படாதவைஎன்று கூறியுள்ளார் பஷீருத்தீன் அகமது.

இசை இஸ்லாமில் தடுக்கப்பட்டது என்பதை நாங்கள் அறிந்திருக்கவில்லை. நாங்கள் எந்தத் தவறும் செய்யவில்லை என்று அந்தப் பெண்களில் ஒருவர் பிபிசி செய்தி நிறுவன செய்தியாளரிடம் கூறியுள்ளார். காஷ்மீரிலிருந்து பல இசைக் கலைஞர்கள் உருவாகி, இன்றளவும் இசை வாழ்க்கையை முன்னெடுத்து வருகின்றனர் என்று சுட்டிக்காட்டுகின்ற அந்தப் பெண்கள், தம்மீது மட்டும் ஏன் மத ஆணை எனவும் கேள்வி எழுப்பியுள்ளனர்.

நௌஷாத், குலாம் அலி, மெஹ்தி ஹஸன் போன்ற சிறந்த இசை மேதைகள் முஸ்லிம்களாக இருந்தாலும் அவர்களது இசைப் பயணம் நிறுத்தப்படவில்லை.இசை இஸ்லாத்துக்கு எதிரானது என்றும், அது ஆடவர்களின் உணர்வுகளைத் தூண்டுகிறது என்றும் கூறப்பட்டால் முஸ்லிம் ஆடவர்கள் மன உறுதி இல்லாதவர்கள் என்று நாங்கள் கருதலாமா? தமது இசைக்குழுவின் மீது தடை விதிப்பதற்காக மதகுரு தெரிவித்த கருத்து தவறானது என்றும் அப்பெண்கள் கூறியிருக்கின்றனர்.

காஷ்மீரில் தங்களுக்கு ஆதரவாக யாரும் குரல் கொடுக்கவில்லை என்றும் மூன்று பேர் அடங்கிய அந்த இசைக் குழுவினர் வருத்தப்படுகிறார்கள் என்று பிபிசி கூறியுள்ளது.

இதேவேளை, முஸ்லிம்களின் புனித குர்-ஆன் இசைக்கு எதிரானது அல்ல என்கிறார் இசையறிஞரும் ஆய்வாளருமான நா.மம்மது.

``இசை இஸ்லாத்துக்கு எதிரானது என்றால், ஆண்கள் பாடுவதையும் தடை செய்ய வேண்டுமல்லவா?

பெண்கள் பாடுவதையும், அவர்கள் இசைக் கருவிகளை வாசிப்பதையும் மட்டும் தடை செய்வது என்பது பெண்கள் மீதான ஓர் ஒடுக்குமுறையே.

அடிப்படை வாதத்தை பேணும் இஸ்லாமியத் தலைவர்களே இசையையும் கலைகளையும் ஒடுக்குவதற்கு முயற்சி செய்து வருகிறார்கள்.

இசையை இஸ்லாமியர்களிடமிருந்து எந்த சக்தியாலும் ஒதுக்கிவிட முடியாது என்று அழுத்தமாகக் கூறுகிறார் மம்மது..

இசை என்பது மனித உணர்வு சார்ந்தது.மதங்கள் தோன்றுவதற்கு முன்பே தோன்றியது.மொழிகள் உருவாவதற்கு முன்னமே மனிதன் காடுகளில் வாழ்ந்த காலத்திலேயே இசை தோன்றிவிட்டது.எனவே, இசையைத் தவிர்த்துவிட்டு வாழமுடியாது.இதனை பஷீருத்தீன் அகமது போன்ற மதவாதிகள் உணரவேண்டும்.

பாகிஸ்தானின் புகழ்பெற்ற பாடகி மறைந்த நசியா ஹாசனின் குரலை இன்று உலகம் கேட்டுக்கொண்டிருக்கிறதே.அப்படி ஒரு குரல் இன்னும் இன்னொருவருக்கு வாய்க்கவில்லை. டிஸ்கோ திவானே..என்ற பாப் பாடல் மூலம் உலக இசை ரசிகர்களைக் கவர்ந்தவர் நசியா ஹசன். இந்தப் பாடலின் சாயலில் `குர்பானி இந்தித் திரைப்படத்தில் இவர் பாடிய ஆப் ஜெய்சா கோயியே......பாத் பஞ்சாயிஎன்ற பாடல் 1980 களில் இந்தியாவையே கிறங்கவைத்தது. இப்போது கலைக்கப்பட்டுள்ள பெண்கள் இசைக்குழுக்களில் இருந்த 3 பெண்களும் 10 ஆம் வகுப்பு மாணவிகள்.வருங்காலத்தில் இவர்களில் நசியா ஹசன்களும் உருவாகலாம்.

இன்னும் எத்தனைக் காலம்தான் பெண்களை அடக்கிவைக்க மதவாதிகள் நினைக்கிறார்களோ!அடக்க அடக்கத்தான் ஆர்வம் அதிகரிக்கும். பாகிஸ்தானில் மலாலாக்களுக்கு கல்வி உரிமை மறுப்பு.சவூதியில் ரிசானாவுக்கு கொடூர மரணதண்டனை.ஆப்கனில் கேட்கவே வேண்டாம்.இப்போது காஷ்மீர் வழியாக தலிபானிசம் இந்தியாவிற்குள் நுழைகிறதோ என்ற அய்யத்தை இந்தச் சம்பவம் ஏற்படுத்தியுள்ளது.

- அன்பன்

தமிழ் ஓவியா said...
அமைச்சர்களைக் கூட, அய்ந்து ஆண்டுகளுக்குள் ஒரு முறையாவது தொகுதியில் நேரில் பார்த்து விடலாம். ஆனால், அத்தனை பேரையும் காப்பதாய் சொல்லப்படுகிற ஆண்டவனை, சாகிற வரை எந்த பக்தனாலும் நேரில் பார்க்க முடியாது. தங்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அமைச்சர், தங்களின் பிரச்சினைகளைத் தெரிந்து கொள்ள, அடிக்கடி தொகுதிக்கு நேரில் வர வேண்டும் என அப்பகுதி மக்கள் விரும்புவார்கள்.

அப்படி வரவில்லை என்றால் அடுத்த தேர்தலில் அவருக்கு சரியான பாடத்தைக் கற்பிக்கவும் தயங்க மாட்டார்கள்.

அதே மக்கள் - தங்கள் பிரச்சனைகளை தெரிந்து கொள்ள ஆயுளுக்கும் நேரில் வராத கடவுள்களுக்கு என்ன தண்டனை கொடுக்கப் போகிறார்கள்....? அமைச்சருக்கு ஒரு நியாயம்... கடவுள்களுக்கு ஒரு நியாயமா??

- செல்வன்

தமிழ் ஓவியா said...

சமத்துவம் ஓங்க!

ஜாதி ஆணவம்
கழற்றி எறிய வேண்டிய
பழைய சட்டை

சிலர் சுயநலத்திற்காகவே
மீண்டும் மீண்டும்
ஜாதியை சலவை செய்து
மாட்டிக்கொள்கிறார்கள்.

ஜாதி மறுப்பாளர்களிடம்
மாட்டியும் கொள்கிறார்கள்.

- ப.நாகராஜன், பன்னத்தெரு

தமிழ் ஓவியா said...

உள்ளே வெளியே

வரவேற்பறையில்,
கண்ணாடிச் சிறைக்குள் வண்ண வண்ண மீன்கள்...

முற்றத்தில்,
கம்பிக் கூண்டுக்குள் காதல் பறவைகள்..

வாசலில்,
சங்கிலியால் பிணைக்கப்பட்ட நாய்...
வெளிச்சுவரில்,
ஜீவகாருண்ய இல்லம்!?

- பாண்டூ, சிவகாசி

தமிழ் ஓவியா said...

கற்பனைக் கதைகள்


சுருங்கக் கூறவேண்டுமானால், பிராமணர்கள் கல்வியைத் தங்களுக்கே சொந்தமாக்கிக் கொண்டு தங்களுடைய நிலைமையை துஷ்பிரயோகப்படுத்தி, தங்கள் விருப்பம்போல் எழுதிய கட்டுக்கதைகளுக்கு எல்லா விஷயங்களையும் உட்படுத்தி வைத்தார்கள்.இந்த கற்பனைக்கதைகள் அனைத்தும் வேண்டுமென்றே கெட்ட எண்ணத்துடன்,சாமர்த்தியமாய்ப் பிறரை அழுத்தி, தங்கள் நிலைமையை உயர்த்திக் கொள்வதற்காகவே எழுதப்பட்டவையாகும்.

- ஹென்றி பெவரிட்ஜ் (விரிவான இந்திய சரித்திரம்; முதற்பாகம் 1895)

தமிழ் ஓவியா said...

ராஜபக்சே போர்க் குற்றவாளியே!


கொடூரமாக தமிழர்கள் கொலை செய்யப்பட்ட காட்சிகள்
பிரிட்டன் சேனல்-4 தயாரித்த ஆவணப் படம் டில்லியில் வெளியீடு

புதுடில்லி, பிப். 23- இலங்கையில் நடந்த இறுதிக்கட்ட போரில், அப்பாவி தமிழர்கள் மீதும், விடுதலைப்புலிகள் மீதும் சிங்கள ராணுவம் நடத்திய போர் வெறியாட்டம், நேற்று டெல்லியில் ஆவணப்படமாக வெளியிடப்பட்டது. இலங்கை அரசு போர்க்குற்றங்கள் செய்ததற்கான மேலும் சாட்சியங்களும், ஆதாரங்களும் இதன் மூலம் வெளி உலகத்துக்கு அம்பலமாகி உள்ளன. ராஜபக்சே போர்க் குற்றவாளி என்பது இதன்மூலம் உறுதியாகிறது.

இலங்கையில், தமிழர்களுக்கு தனி நாடு கேட்டுப் போராடி வந்த விடுதலைப் புலிகளுக்கும், சிங்கள ராணுவத்துக்கும் இடையே 26 ஆண்டுகளாக கடும் சண்டை நடந்து வந்தது. இந்தப் போர் கடந்த 2009 ஆம் ஆண்டு இறுதிக் கட்டத்தை அடைந்தது. அந்த ஆண்டின் தொடக்கத்தில் நடந்த இந்தப் போரில் அப்பாவி பொது மக்கள் உள்பட பல்லாயிரக் கணக்கில் பலியானார்கள்.

வெள்ளைக்கொடி ஏந்தியபடி சரணடைய வந்த வீரர்கள் அனைவரும் கொல்லப் பட்டதுதான் கொடூரம் ஆகும். இது பற்றிய ஆவணப்படங்களை, இங்கிலாந்தைச் சேர்ந்த 'சேனல்-4' தொலைக்காட்சி பலமுறை வெளியிட்டு உலகையே அதிர வைத்தது.

12 வயது பாலச்சந்திரன்

சில நாள்களுக்கு முன்னர் இந்த தொலைக் காட்சி, ரத்தத்தை உறைய வைக்கும் மேலும் ஒரு கொடூரக் காட்சியையும் வெளியிட்டது. விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் 12 வயது இளைய மகன் பாலச்சந்திரனை, சிங்களப் படைகள் பிடித்து வைத்து, சாப்பிடுவதற்கு சில உணவுகளைக் கொடுத்து, பின்னர் அவனை நெஞ்சில் நேருக்கு நேர் சுட்டுக்கொன்ற காட்சிதான் அது.

உலகத்தையே பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கிய இந்தக் காட்சி, இலங்கை மீது போர்க் குற்ற நட வடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி வரும் மனித உரிமை ஆர்வலர்களுக்கு மேலும் ஒரு சாட்சியமாக அமைந்தது.

தமிழ் ஓவியா said...

இலங்கை அரசு தமிழர்கள் மீது நடத்திய போர் வெறியாட்டம் தொடர்பான ஆவணப்படம் (டாக்குமெண்டரி சினிமா) ஒன்றை சேனல்-4 தொலைக்காட்சி தயாரித்துள்ளது. நோ பயர் சோன் (தாக்குதல்கள் நடத்தக்கூடாத பகுதிகள்) என்ற பெயரில் தயாரிக்கப்பட்ட இந்த சினிமா நேற்று டில்லியில் உள்ள கான்ஸ்டிடியூஷன் கிளப் என்ற அரங்கில் திரையிடப்பட்டது.

இயக்குநர் கெல்லம் மெக்கரே!

சர்வதேச பொது மன்னிப்பு சபையின் இந்திய கிளை, அமைதிக்கான நோபல் பரிசுக்கு உரியவர் களை பரிந்துரைக்கும் குழுவும் இதற்கு ஏற்பாடு செய்து இருந்தது. இலங்கையின் கொலைக்களம் என்ற பெயரில் இரு ஆவணப்படங்களை தயாரித்து வெளியிட்ட இயக்குநர் கெல்லம் மெக்கரேதான் இந்தப் படத்தையும் தயாரித்து, இயக்கி உள்ளார்.

தாக்குதல்கள் நடத்தக்கூடாத பகுதிகளில், சிங்கள ராணுவம் அத்துமீறி கொடூரத் தாக்குதல் களை நடத்தி, பல்லாயிரக்கணக்கான மக்களை ஈவு இரக்கம் இன்றி கொன்று குவித்ததால், இந்த சினிமாவுக்கு நோ பையர் சோன் என்று மெக்கரே பெயரிட்டுள்ளார்.

படம் தொடங்கியதும், இயக்குநர் மெக்கரே தோன்றி, போர்க் காட்சிகள் குறித்து விளக்கம் அளிக்கிறார். பின்னர், காண்போர் கண்களை குளமாக்கி, கண்ணீர் வரவழைக்கும் போர்க்காட்சிகள் வெளியாகின்றன.
உச்சக்கட்ட கொடூரம்!

போர் நடத்தக்கூடாத பகுதி என்று அறிவிக்கப் பட்ட இடங்களிலும், பாதுகாப்பான பகுதி என்று அறிவிக்கப்பட்ட இடங்களிலும் சிங்கள ராணுவம் கொத்துக் கொத்தாக குண்டுகளை வீசும் கொடூரக் காட்சிகள், ஊரெங்கும், அப்பாவி மக்கள் உயிர் இழந்து பிணங்களாக கிடக்கும் காட்சிகளும் இடம் பெற்றுள்ளன. தாயும், குழந்தையும் ஒன்றாக வீழ்ந்து கிடக்கும் நெஞ்சை உறையச் செய்யும் காட்சி, மருத்துவ மனைகளில் நூற்றுக்கணக்கானோர் உடலின் பல பாகங்கள் சிதைந்த நிலையில் சிகிச்சை பெறுவது போன்ற நெஞ்சை பதற வைக்கும் காட்சிகளும் இடம் பெற்றுள்ளன. அப்பாவிப் பெண்கள் ஆடைகள் களையப்பட்டு, நிர்வாணமாக சுட்டுக் கொல்லப் பட்டிருக்கும் காட்சி, சிங்கள ராணுவத்தின் உச்சகட்ட கொடூரத்தை வெளிப்படுத்துவதாக உள்ளது.

மேலும், பெண் புலிகள் என்ற சந்தேகத்தில், ஏராளமான பெண்களை ஒரு லாரியில் ஏற்றி சிங்கள ராணுவத்தினர் கொண்டு செல்கிறார்கள். ஆனால், அவர்கள் என்ன ஆனார்கள் என்று தெரியவில்லை. சிங்கள ராணுவத்தால் சிறைப் பிடிக்கப்பட்ட விடுதலைப்புலிகளின் தளபதிகளில் ஒருவரான கர்னல் ரமேஷ், மன்றாடுவதும், அவரிடம் ஏதோ வாக்குமூலம் வாங்கும் காட்சியும், பின்னர் அவர் கொல்லப்பட்டு, முகம் சிதைந்த நிலையில் பிணமாகக் கிடப்பதும் காட்டப்படுகிறது. பெண் புலிகளின் தளபதியாக இருந்த இசைப்பிரியாவை சிங்கள ராணுவம் சீரழித்து, படுகொலை செய்த காட்சியும் இடம் பெற்று உள்ளது.

போரில் இடம் பெயர்ந்த தமிழர்கள் நிராதரவாக திறந்த வெளியில் அவதியுறுவது, கொத்துக்குண்டு வீச்சில் பலியானவர்களின் உடல்கள் அப்புறப்படுத்த முடியாமல் சிதறிக்கிடந்த காட்சிகளும், குண்டு மழை யால் பீதி அடைந்த மக்கள் கைக்குழந்தைகளுடன் வேறு இடங்களுக்குச் செல்வது ஆகிய காட்சிகளும் இந்த சினிமாவில் காட்டப்படுகின்றது.

உலக நாடுகளால் தடை செய்யப்பட்ட கொத்துக் குண்டுகளை சிங்கள ராணுவம் பயன்படுத்தியதும், அதனால், அப்பாவித் தமிழ் மக்களின் உயிர் கொத்துக் கொத்தாக பறிக்கப்பட்டதும் இந்த சினிமாவில் காட்டப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது. 20 நிமிடங்கள் ஓடும் இந்த ஆவண சினிமா, மனித உரிமை ஆர்வலர்கள் மட்டுமல்லாது, ஒட்டு மொத்த உலகத்தையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது.

போர்க்குற்றம்

இந்த சினிமாவில் இடம் பெற்று உள்ள மனதைப் பதை பதைக்கச் செய்யும் காட்சிகள், இலங்கையில் போர் குற்றம் நடந்ததற்கு மேலும் ஒரு உறுதியான ஆவணமாகவும், இலங்கை மீது போர்க்குற்ற நடவடிக்கை எடுக்க வலுவான சாட்சியங்களாக இருக்கும் என்று இயக்குநர் மெக்கரே தெரிவித்தார்.

அடுத்த மாதம் ஜெனிவாவில் நடைபெற உள்ள அய்.நா. மனித உரிமைகள் கவுன்சில் கூட்டத்திலும் இந்த சினிமா திரையிடப்பட உள்ளது.

தமிழ் ஓவியா said...


அஸ்திவாரம் கிடையாதுபார்ப்பனர்களால் போற்றி வளர்க்கப்படும் இந்து மதம் என்று சொல்லப்படுகிற மதத்துக்கு அஸ்திவாரம் கிடையாது.
(விடுதலை, 11.7.1954)

தமிழ் ஓவியா said...


அடிமைப்படக்கூடாது...


உழைத்தவன் உழைப்பின் பயனை அடையவேண்டுமானால் - இப்படி யாகம், சாத்திரம், வேதம், மோட்சம், கர்மம், முன்ஜென்மம், கடவுள் செயல் என்கின்ற பித்தலாட்டங்களுக்கு அடிமைப்படக்கூடாது. 'விடுதலை", 26.2.1968