Search This Blog

2.2.13

அண்ணா முடிவெய்திவிட்டார்! அண்ணா வாழ்க! - பெரியார் இரங்கல்

04.02.1969 அன்று சென்னை வானொலி மூலம், பேரறிஞர் அண்ணா தமிழக முதல்வர் நள்ளிரவு 12.22  மணிக்கு 03-02-1969 இல் மறைவுற்றமைக்கு தந்தை பெரியார் ஈ.வெ.ராமசாமி அவர்கள் ஆற்றிபு ஆழ்ந்த இரங்கல் உரை:

அண்ணா முடிவெய்துவிட்டார். அண்ணா வாழ்க! அதாவது அண்ணா தொண்டு வாழ்க. தோழர்களே! நோய் வருவதும் முடிவெய்துவதும் மனித ஜீவனுக்கு இயற்கையேயாகும். இதில் யாரும் தப்ப முடியாது ஆனால், அதற்காக மக்கள் வருந்துவதும், துக்கம் கொண்டாடுவதும் மக்களுக்கு ஒரு சம்பிரதாயமேயாகும் என்றாலும், இவ்விஷயத்தில் அறிஞர் அண்ணா அவர்கள் சம்பிரதாயத்தை எல்லாம் தாண்டி மக்களின் உச்சநிலைத் துக்கக் கொண்டாட்டத்தைப் பெற்றுவிட்டார்.

யானறிந்த வரை, சரித்திரம் கண்ட வரை, அண்ணா முடிவுக்குப் பொது மக்கள் காட்டிய துக்க கொண்டாட்டத் தில் 4ல்,  8ல் ஒரு பங்கு அளவுகூட வேறு எவருடைய முடிவுக்கும் காட்டிய தான நிகழ்ச்சி கிடையவே கிடையாது.
இந்த அளவுக்கு அண்ணா தமிழ் மக்கள் உள்ளத்தில் இடம் பெற்று விட் டார்கள். இது அண்ணாவின் இரண் டாண்டு ஆட்சியில் தமிழர்களுக்கு ஏற் பட்ட உணர்ச்சி என்பதோடு, இவ்வி ஷயத்தில் மனித வாழ்வில் வேறு யாருக் கும் கிடைக்கமுடியாத பெருமையை அண்ணா அடைந்துவிட்டார் எனவே அண்ணாவின் நற்குண நற்செய்கை பெருமைக்கு இதற்கு மேல் எடுத்துக் காட்ட  முடியாது.

இன்று  மக்களுக்கு உள்ள கவலை எல்லாம் நானறிந்த வரை அண்ணா முடிவடைந்து விட்டாரே, இனி ஆட்சி எப்படி இருக்குமோ என்பதுதான். நான் சொல்லுவேன்   அண்ணா இறந்து விட்டார். அண்ணா வாழ்க என்பதற் கிணங்க, இனி நடைபெறும் ஆட்சியில் எந்தவித மாறுதலும் (திருப்பமும்) இல் லாமல் அவரது கொள்கை  வளர்ந் தேவரும் ஆட்சியாளர்கள் தாங்கள் தமி ழர்கள், தமிழர்களுக்காகத் தமிழர்களாக ஆட்சி செய்கிறோம் என்கின்ற உணர்ச் சியோடு, மற்ற இனத்தார் காட்டும் இன உணர்ச்சியைத் தங்களுக்கு வழி காட்டியாக வைத்துக் கொண்டு, அதன் படி நடந்து கொள்வார்கள் என்றே கருதுகிறோம். இயற்கையும் அவர்களை அந்தப்படி நடக்கச் செய்யும் என்பது உறுதி. அதற்காக யாரும் கவலைப்பட வேண் டாம் என்று வேண்டிக் கொள்ளுகிறேன்.

அண்ணா நோய் வாய்பட்டிருந்த காலத்தில் மேன்மை தங்கிய கவர்னர் பெரு மானும், மாண்புமிகு மந்திரிமார் களும் பட்ட கவலையும் காட்டிய ஆறுதல் ஆதரவுகளும் சிகிச்சை செய் வதில் டாக்டர் சதாசிவம், கிருஷ்ண மூர்த்தி, முதல் வேலூர் டாக்டர்களும் எடுத்துக் கொண்ட மனிதத் தன்மைக்கு மேற்பட்ட முயற்சியும், 15 லட்சத்துக்கு மேற்பட்ட மக்கள் கூட்டத்தை ஒழுங் குபடுத்தி ஒழுங்காக நடத்தியதில் போலீஸ் அதிகாரிகளும், சிப்பந்திகளும் நடந்து கொண்ட பாதுகாப்புத் தன்மைகளும், ரேடியோ நிலையத்தாரும், பத்திரிக்கைக்காரர் களும், விஷ யங்களை  அவ்வப்போது மக்களுக்குக் கூடியவரை தெரிவித்து வந்த நேர்மையும், மிக மிகப் பாராட்டத்தக்கதும் நன்றி செலுத்துவதற்கு உரியதுமாகும்.

தமிழ் மக்கள் அண்ணாவிடம் காட்டிய அன்பு போலவே இன்றைய நமது மந்திரிகள் எல்லோரிடமும் காட்டி பரிவாய் நடந்து கொள்ள வேண்டு மென்று வேண்டிக் கொண்டு இதை முடித்துக் கொள்ளுகிறேன்.

8 comments:

தமிழ் ஓவியா said...


அண்ணாவும் - காமராசரும்!

தி.மு.க. பெரிய வெற்றியடையும் செய்தி மகிழ்ச்சியுடன் வந்து கொண்டுள்ளது. பெருந் தலைவர் காமராசர் தோற்று விட்டார் என்று தி.மு.கவினர் மகிழ்ச்சியுடன் கூறுகின் றனர். அறிஞர் அண்ணா அனைவரையும் அமைதி காக்கச் சொல்லி மிகவும் வருத்தப் பட்டாராம். காமராசர் வெற்றி பெற்று புது டில்லி சென்றால் தமிழ்நாட்டிற்கு எவ்வளவோ செய்வார்.நம்மால் அவ்வளவு செய்ய முடியுமா என்றாராம். உலகத் தமிழ் மாநாடு மிகச் சிறப்பாகச் சென்னையில் நடக்கின்றது. முதல்வர் அறிஞர் அண்ணா காமராசரை அழைத்துச் சிறப்பிக்கின்றார். சிலர் கிண்டல் செய்கின்றார்கள். காமராசர் என்ன தமிழறிஞரா என்று அறிஞர் அண்ணா அவர்கள் உடல் நலம் பாதிக்கப் பட்டுச் சென்னை அரசு மருத்துவமனையிலே இருக்கின்றார். பார்க்க வந்த காம ராசர் மருத்துவர்களிடம் கேட்கின்றார். சரியான பதிலை அளிக்காமல் திணறுகின்றனர். உடனே காமராசர் அமெரிக்கா கொண்டு சென்று மருத்துவம் பார்க்க உடனே ஆவன செய்யுங்கள் ஆம்! என்று ஆணையிடுகின்றார் !

மும்பை விமான நிலையத்திலே நள்ளிரவு நேரத்திலே மாநில ஆளுநர் வந்திருக்கின்றார். அண்ணா அவர்கள் நீங்கள் ஏன் வந்தீர்கள் என்று கேட்டுள்ளார். அவர் பெருந்தலைவர் காமராசரின் ஆணை! உங்களை இங்கு பார்த்து அனுப்பிவைக்கச் சொன்னார் என்றாராம் .

அது தமிழகம்! இன்று நீங்களே சொல்லுங்கள்!

- சோம. இளங்கோவன்

தமிழ் ஓவியா said...


கமல்ஹாசன் மீது பார்ப்பனர் சங்கம் திடீர் பாய்ச்சல்!


சென்னை, பிப். 3- இஸ்லாமியர்கள் பிரச்சினையை முடித்து விட்ட கமல்ஹாசன் அடுத்து பார்ப்பனர்களிட மிருந்து புது எதிர்ப்பை எதிர்கொண்டுள்ளார். விஸ்வரூபம் படத்தில் பார்ப்பனர்கள் இழிவுபடுத்தப்பட்டிருப்பதாக பார்ப்பனர் சங்கம் ஒன்று கூறியுள்ளது. இதுகுறித்து தமிழக அரசின் உள்துறைச் செயலாளர் மற்றும் சென்னை காவல்துறை ஆணையர் ஆகியோரிடம் அந்த சங்கம் புகார் மனுவைக் கொடுத்துள்ளது. இது தொடர்பாக புகார் மனுவைக் கொடுத்த அதன் தலைவர் ராமகிருஷ்ணன் கூறுகையில், விஸ்வரூபம் படத்தை அமெரிக்காவில் பார்த்த என் உறவினர் ஒருவர் அதிர்ச்சியடைந்து, தொடர்பு கொண்டார். படத்தின் கதாநாயகி பிராமணப் பெண். அவருக்கு கமல் சிக்கன் சமைத்துக் கொடுப்பதுபோல் காட்சி வருகிறது. இது எங்களின் உணர்வை புண்படுத்து கிறது. கமல் முற்போக்குவாதி, அறிவுஜீவி என்று சொல்லிக்கொண்டு மடத்தனமான வேலைகளில்தான் ஈடுபடுவார். அவரை நாங்கள் ஒருபோதும் பார்ப்பனராக அங்கீ கரித்தது கிடையாது. பூணூல் என்பது சொறிந்துகொள் வதற்கு வசதியாக இருக்கிறது என்று ஒருமுறை கமல் தெரிவித்திருந்தார். அப்படிப்பட்டவர் எப்படி பார்ப்பனராக இருக்க முடியும். விஸ்வரூபம் படத்திற்கு ஏற்பட்டுள்ள பிரச்சனையை தீர்க்க அங்கே இங்கே சென்று முட்டு வதைவிட ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள ஆஞ்சநேயர் கோவிலுக்கு வந்து தேங்காய் உடைத்திருந்தால் விஸ் வரூபத்தின் தடைகள் உடைபட்டு போயிருக்கும் என்றார். இன்னொரு பார்ப்பனர் சங்கம் தடை கூடாது என்கிறது இந்த விவகாரம் குறித்து தமிழ்நாடு பார்ப்பனர் சங்கத் தலைவர் நாராயணன் கருத்து தெரிவித்துள்ளார்.

அவர் படத்துக்குத் தடை விதிக்கக் கூடாது என்று வலியுறுத்தி யுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், விஸ்வரூபம் படத்தில் பார்ப்பனர்களை இழிவுபடுத்தியிருப்பதால் அப் படத்தை தடை செய்ய வேண்டும் என்று வேறு பார்ப்பன சங்கத்தினர் புகார் தெரிவித்திருகின்றனர். அப்படி படத்தை தடை செய்யக்கூடாது. ஒருவனை அழவிட்டு கண்ணீரை வேடிக்கை பார்ப்பவன் பார்ப்பனன் அல்ல. அதனால் படத்தை எதிர்க்கக்கூடாது. அவர் மிகுந்த பொருட் செலவில் படத்தை எடுத்திருப் பதால் தடை செய்யக்கூடாது. ஆனால், கமலஹாசனை நாங்கள் ஒரு மனிதனாகவே மதிப்பது கிடையாது. தாய்நாட்டையும், தாய்மொழியையும், கலாச்சாரத்தையும் குழிதோண்டி புதைக்கும் பணியை கமல் காலம் காலமாக செய்து வருகிறார். தன் வீட்டு பெண்கள் எப்படி இருக்கிறார்களோ அப்படித்தான் உலகத்தில் இருக்கும் அத்தனை பெண்களும் இருப்பதாக கமல் கருதுகிறார். அவர் வீட்டு பெண்கள் எப்படி இருந்தாலும் இருந்து விட்டு போகட்டும், அதே நிலைப்பாட்டுடன் தேசத்தில் உள்ள அனைவரையும் எண்ணுதல் கூடாது. கமல் எங்கள் இனத்தை கேவலப்படுத்தி காட்சி வைத்திருந்தால் அவர் அழிந்து போகவேண்டும் என்று நினைக்க மாட்டோம். அவராகவே தன் தவறை உணர வேண்டும் என்றார்.

தமிழ் ஓவியா said...

அர்ச்சனை செய்ய முத்தின தேங்காய்தான் நல்லதா?



இரண்டு நண்பர்கள் கோவிலுக்கு போனார்கள் . கோவில் வாசலில் அர்ச்சனை தட்டு வாங்கும் போது,
நல்ல முத்துன தேங்காயா கொடுங்க ! என்று கேட்டு வாங்கினான் ஒருவன் .

அர்ச்சனை செய்ய முத்தின தேங்காய்தான் நல்லதா? என்று கேட்டான் நண்பன். இல்ல - இல்ல வீட்டுல சட்டினி செய்ய அதுதான் நல்லது! என்றான் அந்த பக்தன் !

- சந்திரன் வீராசாமி, திருச்சி

தமிழ் ஓவியா said...

ஆத்திரேலியப் பழங்குடிகள்


4,000 ஆண்டுகளுக்கு முன்னர் தமிழர்களின் குடியேற்றம் ஆத்திரேலியாவில் இடம்பெற்றுள்ளதை மரபணு ஆய்வுகள் தெரிவித்துள்ளன.

40,000 ஆண்டுகளுக்கு முன்னர் ஆத்திரேலியக் கண்டத்தில் மனிதக் குடியேற்றம் ஆரம்பிக்கப்பட்டது முதல் 1800களில் ஐரோப்பியர்களின் வருகை வரை ஆத்திரேலியா உலகில் தனித்திருந்த பிரதேசம் என நம்பப்பட்டு வந்தது. ஆனால், ஆத்திரேலியப் பழங்குடியினரின் மரபணுச் சோதனைகள் மூலம், இவ்விடைப்பட்ட காலப்பகுதியில் தமிழர்களின் வருகை அதிகமாக இருந்தது தெரிய வந்துள்ளது.

ஆத்திரேலியாவில் டிங்கோ(ராஜபாளைய வகையை சார்ந்த ஒல்லியான உடலமைப்பு கொண்ட நாய்கள்) நாய்களை தமிழர்களே அறிமுகப்படுத்தினர் என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

அறிவியலுக்கான தேசியக் கழகத்தின் செயலமர்வுகளில் இது குறித்த ஆய்வுகள் வெளியிடப்பட்டன. தமிழர்கள் தம்முடன் நுண்கற்கள் எனப்படும் கல்லாயுதங்களையும் தம்முடன் கொண்டு வந்ததாகவும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

ஆத்திரேலியாவின் ஆரம்பகாலக் குடியேற்றம் பற்றிய ஆய்வுக்கு ஆத்திரேலியப் பழங்குடியினரதும், நியூ கினி, தென்கிழக்காசியா, இந்தியா ஆகிய பகுதிகளைச் சேர்ந்த மக்களினதும் மரபணுக்கள் ஒப்பிடப்பட்டன.

இவவய்வுகளின் படி, 35,000 முதல் 45,000 ஆண்டுகளுக்கு முன்னர் ஆத்திரேலியப் பழங்குடியினரதும், நியூகினியினரதும் மரபியலில் ஒற்றுமை இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இக்காலப்பகுதியில், ஆத்திரேலியாவும், நியூ கினியும் சாகுல் என்றழைக்கப்பட்ட ஒரே நிலப்பகுதியைக் கொண்டிருந்தன.

இதே வேளையில், 4,000 முதல் 4,500 ஆண்டுகளுக்கு முன்னர் தமிழகத்திற்கும், ஆத்திரேலியாவுக்கும் இடையில் இருந்தமையும் எமக்குத் தெளிவாகத் தெரிகின்றது, என செருமனியைச் சேர்ந்த மானுடவியலுக்கான மாக்ஸ் பிளாங்க் கல்விக் கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் ஸ்டோன்கிங் தெரிவித்தார். இக்காலப்பகுதியைச் சேர்ந்த மனித எச்சங்கள், மற்றும் தொல்லியல் கண்டுபிடிப்புகளையும் இவர்கள் ஆராய்ந்தனர்

தமிழ் ஓவியா said...

இறையருள் இல்லை!


தாமஸ் ஆல்வா எடிசனின் யூகம் எப்போதும் சரியாகவே இருக்கும். அவருடன் பணிபுரிந்த ஒரு நண்பர் தாமஸின் யூகம் பற்றி கூறினார். யூகிப்பதில் எடிசனுக்கு நிகர் எடிசன்தான்! நாங்கள் ஒரு திட்டத்தைச் செயல்படுத்த பலமுறை முயற்சி செய்து தோற்றிருப்போம். அதை எடிசனிடம் கொடுத்தால் நாங்கள் தொடர்ந்த அதே வழியில்தான் அவரும் செல்வார். இதைத்தானே நாமும் செய்தோம் என்று எண்ணிக் கொண்டிருக்கும்போது, அதில் ஒரு மாற்றத்தைச் செய்வார். அந்தச் சோதனை வெற்றிபெற்றுவிடும். அந்த மாற்றத்தைச் செய்ய வேண்டுமென்று எப்படித் தோன்றியது என்று கேட்டால் எனக்குத் தெரியாது; ஏதோ தோன்றியது செய்தேன்! என்பார்.அப்படித் தோன்றுவது இறையருளா என்று கேட்டால் இல்லை என்று சொல்லிவிடுவார்.

நூல்: தாமஸ் ஆல்வா எடிசன், பக்கம் 124

தொகுப்பு: பாவலர் ப. கல்யாணசுந்தரம்

தமிழ் ஓவியா said...

காந்தியாருக்கே இந்த நிலை என்றால்

திலகர் இறந்தபோது இறுதி நிகழ்ச்சியில் கலந்து கொள்ள காந்தியார் சென்றார். திலகரின் பாடையைத் தூக்குவதற்காக காந்தியார் சென்ற போது, அங்கிருந்த பார்ப்பனர்கள் நீ வைசியன் இந்தப் பாடையைத் தூக்கக் கூடாது! என்று கூறி காந்தியாரைப் பிடித்துத் தள்ளினார்கள்.

ஒரு முகம்மதியரையோ,சீக்கியரையோ நீ யார் என்று கேளுங்கள்.தான் ஒரு முகம்மதியர் அல்லது சீக்கியர் என்றே அவர் பதில் கூறுவார்.தனக்கென்று ஒரு சாதி இருந்த போதிலும்கூட, அவர் தன் சாதியை சொல்வதில்லை. நீங்களும் அவர் பதிலில் திருப்தியடைந்து விடுகிறீர்கள்.தான் ஒரு முகம்மதியர் என்று அவர் கூறியதும் நீங்கள் அவரை நீ சன்னியா, ஷேக்கா,சையதா,சாதிக்கா,பிஞ்சாரியா என்றெல்லாம் கேட்கப் போவதில்லை.

தானொரு சீக்கியர் என்றதும், நீங்கள் அவரை ஜாட்டா,ரோதாவா,மாழ்பியா,ராம்தாசியா என்றெல்லாம் கேட்கப்போவதில்லை.

ஆனாலும், நான் ஓர் இந்து என்று என்று எவராவது சொன்னால், நீங்கள் அந்தப் பதிலால் திருப்தியடைந்து விடுவதில்லை.அவருடைய சாதி என்னவென்று தெரிந்து கொள்வது அவசியம் என்று உணர்கிறீர்கள்.ஏன்? ஓர் இந்துவைப் பொறுத்தமட்டில்,அவருடைய சாதி என்ன என்பதைத் தெரிந்து கொள்ளாமல் - அவர் எத்தகைய மனிதன் என்பதை உங்களால் உறுதியாக தெரிந்து கொள்ள முடியாது என்கிற அளவுக்கு, சாதி முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது.

- அண்ணல் அம்பேத்கர்-”உண்மை” பிப்ரவரி 01-15 - 2013

தமிழ் ஓவியா said...

சுவாமி அக்னிவேஷ்


தமிழ்நாட்டில் தலித்களுக்கு எதிரான பிரச்னைகள் ஏராளம். ஆனால், பல புகார்களுக்கு போலீஸார் எஃப்.ஐ.ஆரே பதிவது இல்லை. எல்லாவற்றுக்கும் எதிராகப் போராட இதுதான் சரியான நேரம்.

பெண்கள், பாதிக்கப்பட்டோர், தலித் தலைவர்கள் என்று அனைவரும் ஒன்றிணைய வேண்டும். தேசிய அளவில் போராட வேண்டும். தர்மபுரியில் இருந்து தர்மசாலா வரை நடைபயணம் போக வேண்டும்.

கலப்புத் திருமணம் செய்வதே இதற்கு முக்கியத் தீர்வு. அதுதான் தலித் ஒடுக்குமுறைகளை முற்றிலும் தடுக்கும் ஒரே ஆயுதம். மதம் மாறி, சமூகம் மாறி, ஏன் நாடு மாறியும் திருமணம் செய்ய வேண்டும்.

இது மட்டும் நடந்தால், 20 வருடங்களுக்குப் பிறகு பேதம் என்ற விஷயமே இருக்காது.

மோடி பிரதமரா? (சிரிக்கிறார்) அப்படி ஒரு விஷயம் நடந்தால், அது தேசிய விபத்து. அவர் செய்த கொடுமைகளுக்கும் குற்றங்களுக்கும் அவர் சிறைக்குத்தான் போக வேண்டும். பிரதமர் ஆகக்கூடாது. குஜராத் மக்கள் வேறு, இந்திய மக்கள் வேறு!

- சுவாமி அக்னிவேஷ்,

ஜூனியர் விகடன், 27--.01.2013

தமிழ் ஓவியா said...





டங்ஸ்டன் இழை கடவுள்

ஃபியூஸ் போன பல்பை எரிய வைக்க முடியாத கடவுளை

திட்டிக்கொண்டிருந்த போது

அல்லா தன்னை மரணத்திலிருந்து காப்பாற்றினாரென்று மகிழ்ந்தான் நண்பனொருவன்

என்னிடம் கோபித்துக்கொண்டு போன சூரியன்

திரும்ப வரும்வரை இந்த ஃபியூஸ் போன பல்பை

உயிர்தெழுவதற்கு உதவுமாறு தொழுதேன் அல்லாவிடம்

இந்த இரவில் யார் வெளிச்சம் கொடுத்தாலும் அவன் உன்னதமானவனென்றேன்

அந்த பல்ப் எரியவில்லை தொழுகைக்கு பின்னும்

இருள் அந்த இடத்தைவிட்டு நகரவில்லை

இருளை கண்ணாடி போல உடைக்க முடியாது

வெளிச்சத்தை தரும் அமுத சுரபி யாரிடமிருக்கிறது

அறியாமை போல பரவியிருக்கும்

கரிய இருளின் சருகுகளை கூட்டித்தள்ள வேண்டும்

இருள் மாமிசமாகிறது பசித்தவர்கள் வரிசையில் நிற்கிறார்கள்

அது எல்லோரையும் வசீகரிக்கும் வார்த்தையாகிறது

நான் வெளிச்சத்தின் உணவுக்காக காத்திருக்கின்றேன்

சிலுவை சுமந்த மனிதனின் பிதாவின் மேல் என் கோரிக்கை விழுகிறது

நீண்ட நேரமாகியும் அந்த பல்பு எரியவில்லை

நான் சூரியனுக்காக காத்திருக்கத் தொடங்கினேன்

அந்த தெருவழியே வந்த தாமஸ் ஆல்வா எடிசன் சொன்னார்

கொண்டு வா அந்த உயிரற்ற பல்பை டங்ஸ்டண் இழைகள் பொருத்தப்பட்டது இனி எரியுமென்றார்

டங்ஸ்டன் இழை இராத்திரி நேரங்களின் கடவுளானது இப்படித்தான்

- கோசின்ரா