சுட்டுக் கொல்லப்படுவதற்கு முன், தமிழீழத்
தலைவர் பிரபாகரனின் மகன் ராணுவத்தின் பிடியிலிருந்தார். பிறகே அந்த
பாலகன் சுட்டுக் கொல்லப்பட்டார். கொடியவர்களால்
பிரிட்டனின் உள்ள சேனல் - 4 என்கிற
தொலைக்காட்சி அண்மையில் ராணுவ நிலவறை ஒன்றில் தமிழீழத் தலைவர் பிரபாகரனின்
12 வயது மகன் பாலச்சந்திரனை இலங்கை ராணுவம் தனது மறைவிடத்தில் சிறைபிடித்து
வைத்திருந்ததை வெளியிட்டுள்ளது.
2009ஆம் ஆண்டில் மே மாதம், இலங்கை
உள்நாட்டுப் போர், முடிவுக்கு வரும் நிலையில் இருந்தபொழுது, பாலச்சந்திரன்
சாகடிக்கப்படுவதற்குமுன் இந்தப் படங்கள் எடுக்கப்பட்டதாக இந்த சானல் - 4
குறிப்பிட்டுள்ளது. 2012ஆம் ஆண்டின் ஆவணப்படம் பாலச்சந்திரன், தரையில்
மடிந்து கிடப்பதையும், நெஞ்சில் 5 துப்பாக்கிக் குண்டுகள் துளைத்த நிலையில்
இருந்ததையும் காட்டியது.
அதன் தொடர்ச்சியாக இந்தப் படம் விரைவில்
ஒளிபரப்பப்படும். இந்தப் படங்கள் மூன்றும் ஒரே கேமிராவில்
எடுக்கப்பட்டதாகவும், பிரபாகரனின் மகன் ராணுவத்தின் பிடியில்
இருந்தபோதுதான் கொல்லப்பட்டான் என்பதையும் தெளிவுபடுத்துகிறது.
கால்லம் மக்ரே என்பவர் சின்ன வயது பாலகன் கொலை என்று இந்தக் கட்டுரைக்குத் தலைப்பிட்டுள்ளார்.
-----------------------------தி இந்து 19.2.2013 முதல் பக்கம் -”விடுதலை” 19-2-2013
32 comments:
டில்லி
மெட்ராஸ் நல்ல மெட்ராஸ் என்ற பாடலைப்பற்றி எழுதப்பட்டு இருந்தது.
இப்பொழுது இந்தியா வின் தலைநகரமான டில்லியைப்பற்றி எழுத நேர்ந்திருக்கிறது.
இன்று ஏடுகளில் வெளிவந்த தகவல்; டில்லி மாநகராட்சி மன்ற பெண் உறுப்பினர்கள் டில்லி ஆளு நரிடம் ஒரு புகார் மனுவைக் கொடுத்துள்ளனர்.
என்ன புகார்? டில்லி மாநகராட்சி ஆண் உறுப் பினர்கள் எங்களுக்குப் பாலியல் தொல்லைகளைக் கொடுக்கின்றனர் என்பது தான் அந்தப் புகார். ஆளுநர்கள் நம் நாட்டில் என்னென்ன வேலைகளை எல்லாம் கவனிக்க வேண்டி யிருக்கிறது? (ஆந்திர மாநில ஆளுநராக இருந்த திவாரி என்ற கிழடே மாளிகைக்குள் கிருஷ்ண லீலைகளை நடத்திடவில் லையா என்ற கேள்வியைக் கேட்டால் பதில் சொல் லுவது கடினம்தான்!)
புகார் கொடுத்ததோடு நிற்கவில்லை பெண் கவுன்சிலர்கள்! மாநகராட்சி கூட்டத்திலும் பிரச்சினை யைக் கிளப்பி சும்மா தூள் கிளப்பி விட்டனர்.
இந்தியாவின் தலை நகரமான புதுடில்லி பெண் கள் பாதுகாப்பாக வாழத் தகுதியிழந்து விட்டது என்று ஒரு பெண் முதல் அமைச்சரான ஷீலா தீட் சித்தே புலம்பி இருக்கிறார் என்றால், எங்கே போய் முட்டிக் கொள்வது?
2009இல் - 404
2010இல் - 414
2011 இல் - 453
இந்தப் புள்ளி விவரங் கள் டில்லியில் நடைபெற் றுள்ள பெண்கள்மீதான வன்புணர்ச்சி!
மும்பையை எடுத்துக் கொண்டால்
2009இல் - 201
2010இல் - 226
2011இல் - 400
2011இல் பெங்களூருவில் - 2011
அய்தராபாத்தில் - 157 - என்று புள்ளி விவரங்கள் கூறுகின்றன.
பாரத புண்ணிய பூமி என்று பெருமை அடித்துக் கொள்கிறார்கள். அந்தப் புண்ணிய பூமியின் தலை நகரத்தில்தான் இப்படிப் பட்ட வெட்கக் கேடு!
பக்தி பரவினால் ஒழுக்கம் வளரும் என்று தமிழ்நாடு (T.N.P.S.C.) தேர்வாணையத் தலைவர் நட்ராஜ் திருவாய் மலர்ந்துள்ளார் - இந்துக் கண்காட் சியில்; இந்தியாவில் பக் திக்கா குறைச்சல்? இந்துக் கண்காட்சிகளை நடத்திக் கொண்டுதானே இருக் கிறார்கள்.
கும்பமேளாக்கள், மகாமகங்கள் இன்னொரு பக்கத்தில். இந்துத்துவா வில் நம்பிக்கை கொண்ட பிஜேபி சட்டப் பேரவை உறுப்பினர்கள் சட்டமன்றம் நடந்து கொண்டு இருக்கும் போதே சகல வசதிகளும் உள்ள கைப்பேசியில் நிர்வாணப் படங்களைப் பார்த்து ரசித்துக் கொண்டு இருக்கின்றனர். இங்கு சங்கராச்சாரியார்களின் கதையே நாய் போட்ட விட்டையாக இருக்கிறது.
இதுதான் இந்துத்துவா கொழிக்கும் புண்ணிய பாரதமோ!
- மயிலாடன்
வாய் திறக்காதது ஏன்?
செய்தி: பத்திரிகைக் கவுன்சில் தலைவர் ஜஸ்டிஸ் கஜேந்திர கட்ஜீ அரசியல்வாதி போலப் பேசுகிறார் - அவர் பதவி விலக வேண்டும்.
- பி.ஜே.பி. குற்றச்சாற்று
சிந்தனை: ஆடிட்டர் ஜெனரல் வினோத்ராய் அய்க்கிய முற்போக்குக் கூட்டணி அரசை வெளிநாட்டுக்குச் சென்ற நிலையில்கூட கடுமையாக தாக்கிப் பேசி யுள்ளாரே - அதுபற்றி பிஜேபி வாய் திறக்காதது ஏன்?
இனி மேடைப் பேச்சல்ல - தமிழர்கள் சுனாமியாக எழுவார்கள்! தமிழர் தலைவர் எச்சரிக்கை
நாகப்பட்டினம், பிப்.19- இனி மேடைப் பேச்சல்ல - தமிழர்கள் சுனாமியாக எழுவார்கள் என்றார் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி. நாகப்பட்டினத்தில் டெசோ சார்பில் தமிழக மீனவர்களின் வாழ்வுரிமைக்காக நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் ஆற்றிய எழுச்சியுரையில் குறிப் பிட்டதாவது:
இன்றைக்கு வெளிவந்த இந்து ஏட்டில் மாவீரன் பிரபாகரனின் மகன் பாலச்சந்திரன் பிரபாகரன் சிங்கள வெறியர்களால் சுட்டுக் கொல்லப்பட்ட படம் ஒன்று வெளி வந்துள்ளது. அதைப் பார்த்தது முதல் ரத்தம் கொதிக் கிறது - உள்ளம் பதைபதைக்கிறது.
யுத்தம் என்று சொன்னால்கூட அதற்கென்று சில நியதிகள், மரபுகள், தர்மங்கள் இருக்கின்றன. குழந்தைகள், முதியவர்கள், நோயாளிகள் விதி விலக்கு அளிக்கப்பட வேண்டியவர்கள்.
முள் வேலிக்குள் இலட்சக்கணக்கான ஈழத் தமிழர்கள் முடக்கப்பட்டுள்ளனர். அவர்களின் உயிராவது எஞ்சி யிருக்கிறது.
பிரபாகரனுக்கு மகனாகப் பிறந்தது குற்றமா?
ஆனால் பிரபாகரனின் மகன் என்ற ஒரே காரணத்தால் அந்த வாய்ப்புக்கூட அளிக்கப்படவில்லை - எவ்வளவுப் பெரிய கொடுமை!
பிரபாகரனின் மகனாகப் பிறந்தான் என்பது குற்றமா?
ராஜபக்சே எவ்வளவுப் பெரிய கொடியவன் - இனவெறியன் என்பதற்கு இது ஒன்று போதாதா?
இலங்கை சிங்கள அரசிடம் மனித உரிமையை, மனிதநேயத்தை எதிர்பார்க்க முடியுமா?
அட்டையிடம் ரத்ததானத்தை எதிர்பார்க்கலாமா? ஓநாய் சைவம் ஆகுமா?
இனி மேடைப் போராட்டம் தேவைப்படாது
இவர்களிடம் மனு போட்டுக் கொண்டு இருக்க முடியுமா? இனி மேடைப் போராட்டம் தேவைப்படாது.
குற்றம் செய்தவர்கள் அதற்குரிய விலையைக் கொடுத்தே தீர வேண்டும்.
வெள்ளைக் கொடி பிடித்து சமாதானம் கோரி சரணடைந்தவர்களைப் படுகொலை செய்திருக்கிறார்கள்.
இது யுத்தநெறி பிறழ்ந்த பெருங் குற்றம் அல்லவா! இத்தகைய கொலைகாரர்கள் குற்றக் கூண்டில் நிறுத்தப்பட வேண்டாமா?
ஈழத்தில் உள்ள தமிழர்கள் மட்டும் கொன்றொழிக்கப் படவில்லை; தமிழ்நாட்டுத் தமிழர்களையும் மீனவர் களையும் தாக்குகிறார்கள். சுடுகிறார்கள் - நாதியற்றுப் போய் விட்டார்களா தமிழர்கள்?
இந்தியாவில் தான் தமிழ்நாடு இருக்கிறதா?
இந்தியாவில் தமிழ்நாடு இல்லையா? அதையாவது வெளிப்படையாகக் கூறட்டும் இந்திய அரசு.
இந்திய அரசுக்கு எல்லா வகைகளிலும் கோரிக்கை வைத்தாயிற்று - வேண்டுகோள்களும் கொடுத்தாயிற்று.
அடுத்து நம் நிலை எதுவாக இருக்க முடியும்? - இருக்கவும் வேண்டும்?
மேடை வழிப் போராட்டம், பேச்சுகள், ஆர்ப்பாட்டங்கள் பலனளிக்காத நிலையில், தமிழர்கள் சுனாமியாகப் பொங்கி எழுவார்கள்.
சுனாமிகளை எல்லாம் கண்டவர்கள் தான் இந்த நாகை மக்கள் கடலூர் மக்கள்.
நம்மையே நாம் அர்ப்பணிப்போம்!
நம்மையே அர்ப்பணித்துக் கொள்ளக் கூடிய போராட்டமாக இருக்கும் என்று தளபதி ஸ்டாலின் நேற்று அறிவித்துள்ளார். நாம் வாக்களித்துதான் இந்திய அரசு வந்து இருக்கிறது என்பதை மறந்திட வேண்டாம் என்று எழுச்சியுரையாற்றினார் - தமிழர் தலைவர் கி.வீரமணி.
பிழைப்பு!
மகன்: பொழுது விடிந்து பொழுது போனால் கலைஞர் குடும்பத்தைப் பற்றியே பார்ப்பன ஏடுகள் (தினமலரில்) ஏதாவது அக்கப்போராக எழுதிக் கொண்டு இருப்பது - ஏன் அப்பா?
அப்பா: நல்லது பேசினாலும், அல்லது பேசினாலும் கலைஞரைப் பற்றி எழுதினால்தான் பிழைப்பு நடக்கும் என்பதால்தான் மகனே!
காஞ்சிபுரம் சங்கராச்சாரியார் மீது வண்டி வண்டியாக அசிங்கமும், ஆபாசமும், கேவலமும் இருந்தும் அவற்றைப்பற்றி ஒரு வரி எழுதுவார்களா மகனே?
இராமேசுவரத்தில் தமிழர்களின் குரல்!
தமிழ்நாட்டுப் பிரச்சினை, தமிழர்களின் பிரச்சினை என்றால் மத்திய அரசுக்கு மாற்றாந்தாய் மனப்பான்மை இருக்கிறது; ஓரவஞ்சனை இருக்கிறது என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் மானமிகு தொல். திருமாவளவன் கூறி இருப்பது அலட்சியப்படுத்தப்படக் கூடியதல்ல.
நடந்திருக்கிற - நடந்து கொண்டு இருக்கிற பிரச்சினைகளைச் சீர்தூக்கிப் பார்த்தால் அந்த முடிவுக்குதான் வர வேண்டியிருக்கிறது. லண்டனில் ஹெல்மட் அணிந்து இரு சக்கர வாகனம் ஓட்ட வேண்டும் என்ற விதிமுறை உண்டு. அங்கு வாழும் பஞ்சாபிகள் அந்நாட்டு விதிக்குக் கட்டுப்பட்டாக வேண்டும் என்று வரும்பொழுது, இந்திய அரசு உடனடியாகத் தலையிடுகிறது.
இங்கிலாந்து செல்லும் இந்தியப் பெண்களுக்கு வர்ஜினி சோதனை நடத்தினால் மூக்கின்மேல் கோபம் வருகிறது இந்திய அரசுக்கு.
ஆனால் தமிழர்களின் தொப்புள் கொடி உறவினர்களான ஈழத் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டாலும், தமிழ்ப் பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆட்பட்டாலும் அதற்குரிய முக்கியத்துவத்தைக் கொடுப்பதில்லை. மிஞ்சிப் போனால் வருத்தத்தைத் (Concern) தெரிவித்துக் கொள்வார்கள். அவ்வளவுதான். இவற்றை வைத்துப் பார்க்கும் பொழுது மானமிகு தொல். திருமாவளவன் வைத்த குற்றச்சாற்றைப் புறந்தள்ளிட முடியாது.
ஆஸ்திரியா நாட்டின் தலைநகர் வியன்னாவில் ஒரு கலவரம் ஏற்பட்டது. சீக்கியர்களில் இரு பிரிவுகள் உண்டு. தலைப்பாகை கட்டிக் கொள்பவர்கள் அதர்மி பிரிவினர். தலைப்பாகை கட்டிக் கொள்ளாதவர்கள் தேரா பிரிவைச் சேர்ந்தவர்கள் - இவர்கள் சீக்கியர்களில் தாழ்த்தப்பட்டவர்களாம்.
(இந்து மதத்தை விட்டு விலகி ஓடினாலும், இந்தப் பாழாய் போன ஜாதியும், தீண்டாமையும் ஒழியாது போலும்!)
தேரா பிரிவுக் குரு நிரஞ்சன்தாஸ் வியன்னா சென்றிருந்தபோது, அவரது ஆதரவாளர்கள் குருஜியின் காலைத் தொட்டு வணங்கினர். சீக்கியர்கள் அவர்களின் புனித நூலான கிரந்த் சாகிப்பை மட்டுமே வணங்க வேண்டும் என்று இருக்கும் பொழுது, எப்படி குருவின் காலில் விழலாம் என்று வியன்னாவில் சீக்கியர்களிடையே கலகம் மூண்டது. கலவரத்தில் சீக்கிய குரு கத்தியால் குத்தப்பட்டு மரணம் அடைந்தார்.
அதன் எதிரொலியாக இந்தியாவிலும் குறிப்பாக பஞ்சாபிலும் கலகம் மூண்டது. இந்திய அரசு தலையிட்டு சமாதானம் செய்தது. அதே நேரத்தில் ஈழத் தமிழர் பிரச்சினையில் இந்தியா எப்படி நடந்து கொள்கிறது?
பிரேசில் நாட்டில் ரியோடி ஜெனிரோ நகரில் ரியோபிளஸ் 20 அய்.நா. மாநாடு 2012 ஜூனில் நடைபெற்றது.
அம்மாநாட்டில் பங்கு கொண்ட இலங்கை அதிபர் ராஜபக்சே, இலங்கைக் கடல் எல்லைக்குள் தமிழக மீனவர்கள் மீன்பிடிக்க வந்தால் 20 ஆண்டுகள் சிறையில் அடைப்பேன் என்று கத்தினார்.
அந்த மாநாட்டில் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் கலந்து கொண்டிருந்தும் அதுகுறித்து ஒரு வார்த்தை பேசவில்லையே.
இராமேசுவரத்தில் நேற்று உரையாற்றிய திராவிடர் கழகத் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்கள் முக்கியமாக ஒரு கருத்தினைத் தெரிவித்துள்ளார்.
நாடுகளுக்கான கடல் எல்லைகள் வரையறுக் கப்பட்டுள்ளன. கரையிலிருந்து 22 கி.மீட்டர் தூரத்தை உள்நாட்டுக் கடல் எல்லையாகக் கொள்ள வேண்டும். 44 கி.மீட்டர் தூரம் வரை சுங்கம் வரி வசூலிக்கும் எல்லையாகும். 320 கி.மீட்டர் தூரம் பொருளாதார எல்லை என்று வரையறை செய்யப் பட்டுள்ளது.
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை தேவிப்பட்டினத் திலிருந்து 34 கடல் மைல்கள் வரை சென்று மீன் பிடிக்கலாம். ஆனால் தனுஷ்கோடியிலிருந்து மீனவர்கள் மீன்பிடிக்க 6 மைல் தூரம் சென்றாலே இலங்கை எல்லை வந்து விடுகிறது என்று முக்கிய மான நிலையை எடுத்துக் கூறினார்.
இதைப்பற்றி எல்லாம் இலங்கை சிங்கள அரசு அலட்சியம் செய்வதைக் கூடப் புரிந்து கொள்ளலாம். ஆனால் இந்தியா ஏன் புரிந்து கொள்ளவில்லை என்பதுதான் கேள்விக்குறி.
ஜனநாயக வழிமுறைகள் இந்தியாவுக்கு உரைக் காதோ என்ற கேள்விக்குறி எழுந்துள்ளது. இந்த நேரத்திலாவது இந்தியா புரிந்து கொள்ளத் தவறுமேயானால், இந்தியாவிலேயே அமைதியாக இருக்கக் கூடிய தமிழ் மண்ணையும் உஷ்ணப்படுத்தி விடும் என்று எச்சரிக்கின்றோம்.
பெரிதாக்குகிறார்கள்
தண்ணீரில் வீழ்ந்து உயிருக்கு மன்றாடுபவன் ஒரு புல் மிதந்து வந்தாலும் அதைப் பிடித்துக் கொண்டு கரையேற நினைப்பது போல், இன்று பார்ப்பனரும், அவர்கள் கூட்டாளிகளும் பதவி ஆசையால் அற்பக் காரியங்களை யும் பெரிதாக்குகிறார்கள்.
(விடுதலை, 12.7.1972)
விவேகானந்தரின் பெயரால் பார்ப்பனீயத்தை வளர்க்கும் செயல்
விவேகானந்தரின் 150ஆம் ஆண்டு என்ற போர்வையில் தமிழ்நாட்டில் உள்ள பார்ப்பன சக்திகள், சங்பரிவார்க் கூட்டத்தினர் ஒரு திட்டமிட்ட வேலையில் இறங்கி உள்ளனர் (விடுதலை தலையங்கம் நாள் 8.2.2013).
தமிழக அரசின் அனுமதியுடன் சென்னையில் உள்ள அனைத்துக் கல்வி நிறுவனங்களுக்கும் விவே கானந்தர் ரதம் செல்கிறது.
இந்து மதத்தின் சிறப்புகள், வேதங்களின் தத்துவங்கள், உபநி ஷடதத்தின் கருத்துக்கள் சிலவற்றை விவேகானந்தா எடுத்துக் கூறுவதாக பார்ப்பனர்கள் வெளிப்படுத்து வார்கள்.
விவேகானந்தரின் அறிவுரைகள் என்ற நூல் சென்னை மயிலையில் செயல்பட்டு வரும் ஸ்ரீ ராமகிருஷ்ண மடத்தினால் 2008இல் வெளியடப்பட்டுள்ளது. நூலின் 83ஆம் பக்கத்தில் விவேகானந்தர் பின்வரும் இந்து மத சார்பான பிற்போக்குக் கருத்துக்களைக் கூறுகிறார்:
நமது நாட்டின் உயிர் வாழ்க் கையை மேலோட்டமாகப் பார்த் தால் சாம்பல் பூத்து இறந்து விட் டதைப்போல் காணப்படுகிறது. ஆனால் அதன் அடியில் நெருப்பைப் போன்று இன்றும் கனன்று எரிந்து கொண்டிருக்கிறது. நமது நாட்டின் வாழ்க்கை மதத்தில்தான் அமைந் திருக்கிறது. அதன் மொழியும் மதம் தான்; மதமே அதனுடைய கருத் துக்கள்; அதனுடைய அரசியல், சமு தாயம், நகராட்சி மன்ற அமைப் புகள், பிளேக் தடுப்பு வேலைகள், பஞ்ச நிவாரணப் பணிகள் ஆகிய இவை எல்லாமே மதத்தின் மூல மாகத்தான் நடத்தப்பட்டு வந்திருக் கின்றன.
இனிமேலும் அப்படியே நடத்தப்பட வேண்டும். அவ்விதம் இப்பணிகள் நடத்தப்படாவிட்டால், எனது நண்பரே, உம்முடைய எல் லாக் கூச்சல்களும், புலம்பல்களும் ஒன்றுமே இல்லாமல் பயனற்றவை யாக முடிந்து போகும்.
நமது நாடு தற்போது இந்திய அரசியல் சட்டப்படி ஒரு மத சார்பற்ற (Secular) நாடு, விவேகானந்தர் ஒரு நூற்றாண்டுக்கு முன்னால் சொன்ன மதச்சார்பான கருத்துக் களை இன்றைய பகுத்தறிவு உலகம் ஏற்றுக் கொள்ளவே முடியாது.
அரசியல், சமுதாயம், நகராட்சி அமைப்புகள் எல்லாமே மதத்தின் மூலமாகத்தான் நடத்தப்பட்டு வரு கின்றன என்ற கருத்து இஸ்லாமி யர்கள், கிறிஸ்துவர்கள், சீக்கியர்கள், புத்தர்கள் என்று பல்வேறு மதங் களைச் சார்ந்தவர்கள் வாழும் இந்திய நாட்டில் ஏற்றுக் கொள்ளவே முடி யாது.
விவேகானந்தரின் பாரதமே உயிர்த்தெழு என்ற நூலின் 167ஆம் பக்கத்தில் ஆன்மீகப் பண்பாடும் துறவும் கொண்ட பிராமணனே நமது இலட்சியம் என்று கூறப்பட்டுள்ளது. இது கண்டிப்பாக இந்து மதத் தையும், வர்ணாஸ்ரம தர்மத்தையும் பரப்பும் பிற்போக்கான செயலாகும். சென்னை நகரின் கல்விக் கூடங்களில் இவற்றைக் கொண்டு செல்ல தமிழக அரசு அனுமதிப்பது - மத சார்பற்ற அரசுக்கு விரோதமான செயலாகும்.
அரசியல் சட்டத்தின் 42ஆவது திருத்தத்தின் மூலம் அடிப்படைக் கடமைகள் என்ற பிரிவு 1976ஆம் ஆண்டு 51-ஏ என்ற புதிய திருத்தத் தின்மூலம் சேர்க்கப்பட்டன. இதன் படி ஒவ்வொரு குடிமகனும் அறிவியல் மனப்பான்மை, மனிதநேயம், ஆராய்ச்சி மற்றும் சீர்திருத்தத்தில் ஆர்வம் போன்ற பண்புகளை வளர்த் துக் கொள்ள வேண்டும். இந்தப் பகுத்தறிவுக் கொள்கைக்கு முற்றிலும் முரணானது ஆன்மீகப் பண்பாடும் துறவும் கொண்ட பிராமணனே நமது இலட்சியம் என்ற கொள்கை.
-இர. செங்கல்வராயன், செய்யாறு
வேண்டுகோள்: 8.2.2013 விடுதலை தலையங்கத்தை ஆயிரம், இரண்டாயிரம் நகல்கள் அச்சிட்டு மாவட்ட திராவிடர் கழகத் தலைமையகங்கள் பொது மக்களுக்கு விநியோகிக்க வேண்டுகிறோம்.
இந்துத்துவா சிந்தனையோ! ஆட்சிக்கு வந்தால் மடங்களுக்கு ரூ.500 கோடியாம்! எடியூரப்பா உளறல்
ஹங்கல் (கர்நாடகா), பிப். 19-கர்நாடக முன்னாள் முதல் அமைச்சர் எடியூரப்பா பாரதீய ஜனதாவில் இருந்து விலகி கர்நாடகா ஜனதா கட்சியைச் தொடங்கியுள் ளார். இந்த நிலையில் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் மடங்கள், கல்வி நிறுவனங் களுக்கு ரூ. 500 கோடி ஒதுக்கப்படும் என்று எடியூ ரப்பா அறிவித்துள்ளார்.
24-ஆவது விஜயயார்யா சங்க மேஸ்வர ஜெயந்தி விழா ஹங்கலில் நேற்று முன்தினம் நடந்தது. இதில் கலந்து கொண்ட எடியூரப்பா இது தொடர்பாக கூறியதாவது:-
கர்நாடகா ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்தால் கல்வித் துறைக்கு முக்கியத் துவம் அளிக்கப்படும். கல்வி நிறு வனங்களுக்கும், மடங்களுக் கும் ரூ. 500 கோடி ஒதுக் குவோம்.
பால்வளத்துறையை மேம்படுத் துவோம். பெண் களின் முன்னேற்றத்திற்கு ஊக்கம் அளிக்கப்படும். சமூக வளர்ச்சிக்கு மடங்கள் பெரும் பங்கு ஆற்றுவதால் மடங்களுக்கு தமது கட்சி அதிகமான நிதி உதவி அளித்து ஊக்கப்படுத்தும்.
- இவ்வாறு அவர் பேசினார்.
பெண்ணாளும் மாநிலத்தின் நிலை இதுதானா!
பெண்ணாளும் மாநிலத்தின் நிலை இதுதானா!
தூக்குத் தண்டனை தேவைதானா? தி.மு.க. தலைவர் கலைஞர் வெளிப்படுத்தும் வேதனைகள்!
சென்னை, பிப்.19- பெண்ணாளுகின்ற தமிழ் நாட்டில் பெண்கள் பாலியியல் கொடுமை அதிகரித்து வருவது குறித்தும், தூக்குத் தண்டனை குறித்தும் தி.மு.க தலைவர் கலைஞர் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு: உடன்பிறப்பே, தமிழகத்தில் பெண் முதலமைச்சர் ஒருவர் ஆட்சிக் கட்டிலில் அமர்ந்து கோலோச்சி வருகின்ற நிலையில் கடந்த சில மாதங்களில் நடைபெற்ற பாலியல் பலாத்காரத்திற்கு ஆளாக்கப் பட்ட பெண்களின் பட்டியலைப் பார்த்தால்; வேலூர் மாவட்டம், திருப்பத்தூரை அடுத்து ஆண்டியப்பன் கிராமத்தில் ஒன்பது வயது சிறுமி காயத்ரி, பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு படுகொலை.
சிவகிரியில் நந்தினி என்ற பெண் கற்பழிக் கப்பட்டுக் கொலை. சைதாப் பேட்டையில் விஜயா என்ற பெண்ணின் சடலம். தூத்துக்குடி மாவட்டம் திருவைகுண்டத் தில் 13 வயது சிறுமி, பள்ளி மாணவி புனிதா கற் பழிக்கப்பட்டு கொலை. நாகை மாவட்டத்தில் 11 வயது தலித் இனத்தைச் சேர்ந்த சிறுமியை இரண்டு பேர் சேர்ந்து கற்பழிப்பு.
விருத்தாசலத்தில் மணிமுத்தாறு நதிக் கரையில் சுகந்தி என்கிற இளம் பெண் கற்பழிப்பு. சிதம்பரம் அருகில் மஞ்சக்குழி கிராமத்தில், சந்தியா என்கிற இளம்பெண், கற்பழிக்கப்பட்டு 3ஆவது மாடியிலிருந்து வீதியிலே எறியப்பட்டாள்.
தருமபுரியில்...
தர்மபுரியில் அரூர் தாலுக்காவில்தாதராவலசை கிராமத்தில்மேனகா என்கிற இளம்பெண் திருமண மானவர் கற்பழிக்கப்பட்டு படுகொலை. தூத்துக்குடி மாநகரில், மாதாநகர் 2ஆவது தெருவில் மாரியம்மாள் என்கிற இளம் பெண் கணவனைப் பிரிந்து 3 குழந்தை களுடன் தந்தை வீட்டில் வசித்து வந்தார்.
விடியற் காலையில் வீடு புகுந்து கற்பழிப்பு. விழுப்புரம் வானூர் ருக்மணிபுரம் பள்ளி மாணவி கல்கி என்பவள் கற்பழிக்கப்பட்டு சவுக்குத் தோப்பில் பிணமாகத் தொங்க விடப்பட்டாள். உடுமலையில் 12 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். சிறுமி அவமானம் தாங்க முடி யாமல் தீக்குளித்தாள். நாமக்கல்லில் 18 வயது இளம் பெண், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் நான்கு பேர் கொண்ட கும்பலால் கற்பழிப்பு.
வேலூர் மாவட்டத்தில்...
வேலூர் மாவட்டம், ஆர்க்காடு அருகில் திமிரி என்கிற ஊரில் அபிநயா என்கிற 17 வயது பெண், அச்சுறுத்தல், மிரட்டல் காரணமாக, கற்பைக் காப்பாற்றிக் கொள்ள தீக்குளித்து தற்கொலை. சென்னை, பொழிச்சலூரில் பிரேமலதா கற்பழித்துக் கொலை செய்யப்பட்டு காட்டில் பிணமாக வீசப் பட்டுக் கிடந்தாள்.
திருச்சி மாவட்டம், தொட்டியம் அருகில் திருமணமான மீனா என்கிற இளம்பெண் தன் உறவினர் வீட்டுத் திருமண நிகழ்ச்சிக்குச் சென்றிருந்த போது 4 பேர் கொண்ட கும்பல் காரில் கடத்திச் சென்று கற்பழிப்பு. ஒரத்தநாடு, புதூரில் 6ஆம் வகுப்பு படித்து வந்த 11 வயது சிறுமி, ஆடு மேய்த்துக் கொண்டிருந்தபோது கற்பழிப்பு. ராணிப்பேட்டை அருகில் சுடுகாட்டில் சிறுமி கொலை செய்யப்பட்டு, எரிந்த நிலையில் பிணமாகக் கிடந்தார்.
என்று தொடர்ந்து கட்டுக்கடங்காமல், பெண்கள் மீதான கொடுமைகள் நடைபெற்று வருகின்றன என்பதைப் புரிந்து கொள்ளலாம். டெல்லியில் மருத்துவக் கல்லூரியில் படித்து வந்த மாணவி பாலியல் வன்முறைக்கு ஆளாகி மரணமடைந்த போது நான் அதற்காக வெளியிட்ட இரங்கல் செய்தியில், ஏதோ ஒரு இடத்தில் மாத்திரமன்றிஇந்தியாவில், குறிப்பாகத் தமிழ்நாட்டில் அண்மைக் காலமாக இத்தகைய கொடுமையான பாலியல் வன் முறைக்கு மாணவிகளும் ஏழைப்பெண்களும் ஆளாக்கப்படும் செய்திகள் தொடர்ந்து வந்து கொண்டே இருக் கின்றன.
இத்தகைய செயல்களில் ஈடுபடும்கொடிய வர்களுக்குக் கடுமையான தண்டனை என்பது அவர்களை ஆயுள் முழுவதும் தனிமைச் சிறையில் அடைத்து வைக்க வேண்டும் என்பதுதான். இதுபற்றி மத்திய, மாநில அரசுகள் உறுதியான முடிவு எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டேன். என்னுடைய இந்தக் கருத்தையொட்டியே வர்மா கமிஷன் பரிந்துரைகளும் அமைந்து, அதாவது பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டு, கொலை செய் வோருக்கு ஆயுள் தண்டனை என்று கூறப்பட்டி ருந்தது.
ஆனால் தமிழக அரசைப் பொறுத்த வரையில் இந்த பாலியல் வழக்குகளில் நடவடிக்கை எடுப்பது என்பது, காவல் நிலை யத்தில் பெயருக்கு ஒரு வழக்குப் பதிவு என்ற அளவிலே தான் இருந்து, டெல்லிச் சம்பவத்திற்குப் பின்னர் இந்த ஆட்சி யினரும் கூட, தீவிரமான கருத்துக்களைத் தெரி விக்க வேண்டும் என்பதற்காக, பாலியல் பலாத் காரத்தில் ஈடுபடுவோர் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும்; ரசாயன ரீதியில் ஆண்மையைப் போக்க வேண்டுமென்றெல்லாம் அறிவித்தி ருந்தார்கள்.
13 வயது மாணவிக்கு ஏற்பட்ட அவலம்
ஆனால்அதற்குப் பிறகும் பாலியல் பலாத்காரச் சம்பவங்கள் நின்ற பாடில்லை. கோவையில் 13 வயது மாணவிக்கு மயக்க ஊசி செலுத்தி பாலியல் குற்றம் செய்ததால் மாணவியின் தாய்மாமன் உட்பட அய்ந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளார்கள். இந்தச் சம்பவத்திற்கு மாதர் சங்கம் போன்ற பல அமைப்புகள் கண்டனம் தெரிவித் துள்ளன. இந்தச் செய்தி 17-2-2013 தேதிய நாளேடுகளில் வந்துள்ளது.
மேலும் அன்றைய நாளிதழிலேயே தர்மபுரி மாவட்டத்தில், பொம்முடி அருகே கடந்த 14ஆம் தேதியன்று 16 வயது சிறுமி ஒருவரை கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்ததாகச் செய்தி வந்துள்ளது. இவ்வாறு பாலியல் குற்றங்கள் அதிகரித்து வரும் நிலையிலேதான், பண்பாட்டுக் கும், நாகரிகத்துக்கும் முற்றிலும் எதிரான இந்தக் குற்றங்களைப் புரிவோருக்கு அளிக்கப்பட வேண்டிய தண்டனை பற்றிய கேள்விகளும் எழு கின்றன. மத்திய அரசு, வர்மா கமிஷன் அளித்த பரிந் துரைகளுக்கு மேல் ஒரு படி சென்று, அவர் களுக்குத்தூக்கு தண்டனை அளிக்க வேண்டு மென்றே அறிவித்துள்ளது.
வேண்டாம் தூக்குத் தண்டனை
தூக்குத் தண்டனை என்பது தற்போது இந்திய அரசியலில் மிகப் பெரிய கேள்விக்குறியாக எழுந் துள்ளது. பேரறிவாளன் உள்ளிட்ட மூன்று பேரின் தூக்கு தண்டனையைப் பற்றி கேள்வி எழுந்த நேரத் திலே கூட, பொதுவாகவே தூக்கு தண்டனையே கூடாது என்பதுதான் என்னுடைய கருத்து. பேரறி வாளன் உள்ளிட்ட மூன்று பேர் தூக்கு தண்டனை பற்றியும் ஏற்கெனவே கழகத்தின் சார்பில் வேண்டு கோள் வைக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்திருந் தேன்.
இதற்கிடையே வீரப்பனின் நண்பர்களான ஞானப்பிரகாசம், சைமன், மீசை மாதையன், பிலவேந்திரன் ஆகிய நான்கு பேர் மீது வழக்கு விசாரணை நடத்திய மைசூர் தடா நீதி மன்றம் ஆயுள் தண்டனை தான் அவர்களுக்கு விதித்தது. ஆனால் இந்தத் தீர்ப்பை எதிர்த்து, உச்ச நீதி மன்றத்தில் மேல் முறையீடு செய்த காரணத்தால் தான், உச்ச நீதி மன்றம் இந்த நான்கு பேருக்கும் விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை, தூக்குத் தண்டனையாக மாற்றி 2004ஆம் ஆண்டு தீர்ப்பளித்தது.தீர்ப்பளித்து ஒன்ப தாண்டு காலமாக இந்தத் தூக்குத் தண்டனை நிறை வேற்றப் படவில்லை.
இதற்கிடையே அவர்கள் நான்கு பேரும் இந்தியக் குடியரசுத் தலைவருக்கு கருணை மனு அனுப்பினார்கள். அந்தக் கருணை மனுவினை இந்தியக் குடியரசுத் தலைவர் நீண்ட கால நிலு வைக்குப் பிறகு, கடந்த 11ஆம் தேதியன்று நிராகரித்த நிலையில், தற்போது அவசர அவசரமாக அவர்களைத் தூக்குத் தண்டனைக்கு ஆளாக்கு வதற்கான முயற் சிகள் மேற்கொள்ளப்பட்டு,அது பற்றிய செய்திகள் ஏடுகளில் வந்து கொண்டுள்ளன.
அந்த நான்கு பேரின் சார்பாக தூக்கு தண்டனை விதிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், தண்டனையை நிறைவேற்றத் தடை விதிக்கக் கோரியும் உச்ச நீதி மன்றத்தில் 16-2-2013 அன்று மனு தாக்கல் செய்திருக்கிறார்கள். மேலும் அந்த மனுவில் தங்களுக்கு விதிக்கப்பட்ட தூக்குத் தண்டனையை ஆயுள் தண்டனையாக மாற்றி அமைக்க வேண்டுமென்றும் கேட்டுக் கொண்டிருக் கிறார்கள். இவர்களின் சார்பில் வழக்கறிஞர்கள் காலின் கன்சால்வஸ், சமிக் நாராயண் ஆகியோர் உச்ச நீதி மன்றத் தலைமை நீதிபதி திரு. அல்டமாஸ் கபீர் அவர்களின் இல்லத்திற்கே சென்று இந்த மனுவினை தாக்கல் செய்து, உடனடியாக அதன் மீது விசாரணை வேண்டுமென்று கேட்டிருக் கிறார்கள்.
தலைமை நீதிபதி அவர்கள், அந்த நான்கு பேரும் ஞாயிற்றுக் கிழமை தூக்கில் போடப்படலாம் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை என்றும்,மனு உரிய நேரத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்றும் கூறியிருக்கிறார்.தலைமை நீதிபதி அவர்களின் இந்த அறிவிப்பினையொட்டி தூக்குத் தண்டனை பற்றிய கருத்துகள் பல முனை களிலும் நாடெங்கிலும் பரபரப்பாக வெளியிடப்பட்டு வருகின்றன. இதற் கிடையே, புதன்கிழமைவரை அவர்களைத் தூக்கிலிட, உச்சநீதிமன்றம் இடைக் காலத்தடை விதித் துள்ளது.
தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ள நான்கு பேருக்கும், வீரப்பனுக்கும் எந்தத் தொடர்பும் கிடையாது என்று வீரப்பனின் துணைவியாரே கூறியிருக்கிறார். தண்டனை விதிக்கப்பட்டுள் ளவர்களின் குடும்பத்தினரும் அவர்களை நிரபராதிகள் என்று சொல்லியிருக்கிறார்கள். 1993ஆம் ஆண்டு ஜெயலலிதா ஆட்சியில் வேண்டுமென்றே வழக்கு தொடுக்கப் பட்டதாகவும், எனவே சி.பி.அய். மறு விசாரணை செய்ய வேண்டுமென்றும் அவர்கள் வைத்துள்ள கோரிக்கை அலட்சியப்படுத்தக் கூடியதல்ல.
குற்றவாளிகள் தப்பித்தாலும், நிரபராதிகள் தண்டிக்கப்பட்டு விடக் கூடாது என்பதை பொறுப் பிலே உள்ளவர்கள் மனதிலே கொள்ள வேண்டும். உச்ச நீதிமன்ற அரசியல் சட்ட அமர்வு திரிவேணிபென் என்பவருக்கும் குஜராத் மாநிலத்திற்குமிடையே நடைபெற்ற ஒரு வழக்கில் ஏற்கனவே அளித்தத் தீர்ப்பில், இந்திய அரசியல் சட்டத்தின் 32ஆவது பிரிவின்படி தூக்குத் தண்டனையை நிறைவேற் றுவதற்கு காரண மில்லாமல் மிகுந்த கால தாமதம் ஏற்படுமானால் துக்குத் தண்டனை விதிக்கப் பட்டவர் உச்ச நீதி மன்றத்தை நிவாரணம் கேட்டு அணுகலாம் என்று குறிப்பிட்டிருந்ததை இப்போது எடுத்துக் காட்டுகிறார்கள்.
தூக்குத் தண்டனையை நிறை வேற்றுவதில் ஒன்பதாண்டு கால தாமதம் ஏற் பட்டிருப்பதால் தூக்குத் தண்டனை விதிக்கப் பட்டுள்ள நால்வரும் உச்ச நீதி மன்றத்தில் தூக்குத் தண்டனையை மாற்றி அமைக்க வேண்டும் என்று கோருவதற்கு உரிமை உள்ளது என்ற வாதமும் வைக் கப்படுகிறது. இந்திய அரசியல் சட்டத்தின் 72ஆவது பிரிவின் கீழ் இந்தியக் குடியரசுத் தலைவர் வழங்கும் ஆணை நீதிமன்றத்தின் பரிசீலனைக்கு உட்பட்ட தாகும் என்று உச்ச நீதி மன்றம் கேகர்சிங் என்ப வருக்கும் மத்திய அரசுக்கும் இடையே நடைபெற்ற வழக்கில் வழங்கப்பட்ட உச்ச நீதி மன்றத்தின் தீர்ப்பும் இப்போது எடுத்துக் காட்டப்படுகிறது.
மேலும் உச்சநீதி மன்றத்தின் முன்னாள் நீதியரசர் திரு. வி.ஆர்.கிருஷ்ண அய்யர் அவர்கள் இந்த நால்வரின் தூக்குத் தண்டனை பற்றி தெரிவித்திருக்கும் கருத்துகள் ஆழமாகப் பரிசீலிக்கப்பட வேண்டிய வையாகும். சட்டப் புத்தகத்தில் இருந்து தூக்குத் தண்டனையை எடுத்துவிட வேண்டும் என்று அரசு அதிகாரத் தில் உள்ளவர்களை நான் கேட்டுக் கொள் கிறேன்.அரசாங்கம் செயல்படுத்தும் தூக்குத் தண்டனை என்பது அரசாங்கமே செய்யும் கொலைக்கு சமமானதே அன்றி வேறல்ல.அரசாங்கமே செய்யும் இத்தகைய கொடுங் குற்றங்களுக்கெதிராக இந்திய நாட்டு மக்கள் அணி திரள வேண்டும்.
அரசியல் சட்டம் வழங்கியுள்ள வாழும் உரிமையை அரசாங்கம் தன்னிச்சையாக தூக்கியெறிய அனு மதிக்கக் கூடாது. உலகின் 90 சதவிகித நாடுகள் துக்குத் தண்டனையை ஏற்கனவே ரத்து செய்துவிட்டன. இந்திய நாடும் தூக்குத் தண்டனையை ரத்து செய்து இது காந்தி தேசம் என்பதை உலகத்திற்கு நிரூபிக்க வேண்டும் என்று திரு.கிருஷ்ண அய்யர் அவர்கள் தெரிவித்திருக்கும் கருத்துகளைத்தான் நான் பல்லாண்டு காலமாகச் சொல்லி வருகிறேன்.
இன்றைய நிலையில் இந்தக் கருத்துகளை மத்திய அரசும், சட்ட வல்லுநர்களும், நீதி மன்றங்களும் சீர்தூக்கிப் பார்த்து மனித உரிமைகளையும் மனித நேயத்தையும் போற்றக் கூடிய வகையில் தூக்குத் தண்டனையைசட்டப் புத்தகத்திலிருந்து அகற்றி விடுவது பற்றி தீவிரமாகப் பரிசீலனை செய்ய வேண்டுமென்று வலியுறுத்துகிறேன். நீண்ட காலமாக வலியுறுத்தப்பட்டு வரும் இந்தக் கருத்து ஏற்கெனவே உரிய முறையில் பரிசீ லனை செய்யப்பட்டு ஏற்கப்பட்டிருக்குமானால், இப்போது தொடர்ந்து நிறைவேற்றப்பட்டு வரும் தூக்குத் தண்டனைகள் நிகழாமலேயே தடுக்கப் பட்டிருக்கலாம்.
அன்புள்ள,
மு.க.
(நன்றி: முரசொலி, 19.2.2013
கேப்டன் லஷ்மி ஷேகல்
நாடு முழுவதும் விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த நேரம். அப்போதைய சென்னை மாகாணத்தில் ஸ்வாமிநாதனுக்கும் அம்மு குட்டிக்கும் மூத்த மகளாகப் பிறந்தார் லஷ்மி. இவரது தங்கை மிர்னாளினி. சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராக இருந்தார் ஸ்வாமிநாதன். சமூக சேவையிலும் இந்திய சுதந்திரப் போராட்டத்திலும் தீவிரமாகச் செயல்பட்டு வந்தார் அம்முகுட்டி.
படிப்பும் செல்வாக்கும் நிறைந்த குடும்பம். அம்மாவின் மூலம் இளம் வயதிலிருந்தே லஷ்மிக்கு நாட்டு விடுதலையிலும் சமூக முன்னேற்றத் திலும் ஆர்வம் ஏற்பட்டது. பல தலைவர்களைச் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. கல்லூரியில் படிக்கும்போது இளைஞர் காங்கிரஸில் சேர்ந்து அறப்போராட்டங்கள், நிதி திரட்டுதல் போன்ற செயல்களில் ஈடுபட்டு வந்தார். சிறை சென்றார்.
காங்கிரஸில் இருந்து லஷ்மியின் கவனம் திசை திரும்ப ஆரம்பித்தது. இரண்டு காரணங்கள். மாணவர்கள் படிப்பைத் துறந்து தேச விடுதலைப் போராட்டத்தில் இறங்கச் சொன்னார் காந்தி. நாட்டு விடுதலைக்கும், விடுதலைக்குப் பிறகான முன்னேற்றத்துக்கும் கல்வி அவசியம் என்று கருதினார் லஷ்மி. எந்த பிரிட்டிஷாருக்கு எதிராகப் போராடுகிறோமோ, அதே பிரிட்டிஷாருக்கு ஆதரவாக இரண்டாம் உலகப் போரில் செயல்பட வேண்டும் என்ற காந்தியின் கொள்கையில் அவருக்கு உடன்பாடு இல்லை.
படிப்பில் கவனம் செலுத்தினார். அப்போது கம்யூனிஸ்ட் இயக்கத்தைச் சேர்ந்த சுஹாசினி நம்பியார் சிறிது காலம் லஷ்மியின் வீட்டில் தங்கினார். அவர் மூலம் கம்யூனிஸ்ட் இயக்கம் பற்றியும் தலைவர்கள் பற்றியும் நிறைய புத்தகங்கள் கிடைத்தன. லஷ்மி ஆர்வமுடன் அவற்றைப் படித்தார். நிறைய விவாதம் செய்தார். சென்னை மருத்துவக்கல்லூரியில் எம்.பி.பி.எஸ். பட்டம் பெற்றார். மகப்பேறு மருத்துவத்தில் சிறப்பு பட்டம் பெற்றார்.
திருவல்லிக்கேணி கஸ்தூரிபா காந்தி மருத்துவமனையில் மருத்துவராகப் பணி புரிந்தார். அப்போது பி.கே.என். ராவ் என்பவரைத் திருமணம் செய்துகொண்டார். மிகக் குறுகிய காலத்திலேயே அந்த உறவு பிரிவைச் சந்தித்தது. 1940ஆம் ஆண்டு உறவி னருக்கு மருத்துவ உதவி செய்வதற்காக சிங்கப்பூர் சென்றார் லஷ்மி. அங்கு புலம் பெயர்ந்த இந்தியப் பெண்களுக்கு மருத்துவம் செய்ய அங்கேயே தங்கினார். மருத்துவமனை கட்டினார். விரைவிலேயே சிறந்த மருத்துவராக மக்களால் கொண்டாடப்பட்டார்.
ராஷ் பிகாரி போஸ் ஆரம்பித்த இந்திய சுதந்திர லீக் இயக்கத்தின் சிங்கப்பூர் கிளையில் பணிபுரியும் வாய்ப்பு லஷ்மிக்கு வந்தது. 1942இல் பிரிட்டனுக்கும் ஜப்பானுக்கும் இடையில் நடந்த போரில் காயம்பட்டவர்களுக்கும், சிங்கப்பூருக்கு வந்த அகதிகளுக்கும் சிகிச்சை அளித்தார். இந்திய சுதந்திர லீக் சார்பில் பத்திரிகைகளுக்கு நிறைய எழுதினார். இந்தியாவுக்கு வானொலி மூலம் செய்திகளை அனுப்பும் பணியிலும் ஈடுபட்டார்.
1943ஆம் ஆண்டு இந்திய சுதந்திர லீக் அழைப்பை ஏற்று, சுபாஷ் சந்திரபோஸ் சிங்கப்பூர் வந்தார். இந்திய தேசிய ராணுவத்தை அமைத்து, இந்திய விடுதலைக்காகப் போராட வேண்டும் என்ற திட்டம் அவரிடம் இருந்தது.
லஷ்மியின் அறிவு, துணிவு, ஓயாத உழைப்பு போன்றவற்றை அறிந்திருந்த நேதாஜி, இந்திய தேசிய ராணுவத்தின் பெண்கள் படைக்கு அவரைப் பொறுப்பேற்குமாறு அழைப்பு விடுத்தார். அதுமட்டுமின்றி, ஆசாத் விடுதலை அரசின் ஒரே பெண் அமைச்சராகவும் லஷ்மியை நியமித்தார் நேதாஜி.
20 பெண்களுடன் ஆரம்பிக்கப்பட்டது ஜான்சி ராணி படை. இந்தப் படைதான் ஆசியாவில் தொடங்கப்பட்ட முதல் பெண்கள் படை. ஜான்சி ராணி படையின் செயல்கள், திட்டங்கள் வெளியே தெரிய ஆரம்பித்தன. சிங்கப்பூர், மலேஷியாவில் இருந்து சுமார் 1,500 பெண்கள் விருப்பத்தோடு வந்து சேர்ந்தனர். இவர் களில் பெரும்பாலானவர் கள் இந்தியாவுக்கு வந் திராத இந்தியர்கள்.
இந்தப் படையின் கேப்டனாக லஷ்மி இருந்தார். சிறப்பாகப் பயிற்சி பெற்ற ஜான்சி ராணி படை சிங்கப்பூரில் இருந்து கிளம்பியது. பர்மாவை அடைந்து, அங்கிருந்து டெல்லி சென்று போரிடுவதாகத் திட்டம். இந்திய-பர்மிய எல்லையில் பெண்கள் படை தடுத்து நிறுத்தப்பட்டது. ஆயுதங்கள், உணவு வரும் பாதைகள் அடைக்கப்பட்டன. அங்கு கிடைத்த கிழங்குகளைச் சாப்பிட வேண்டியிருந்தது. கிழங்கின் நச்சுத்தன்மையாலும் நோயாலும் ஏராளமான வீராங்கனைகள் பலியாயினர். நேதாஜி, பெண்கள் படையை மலேஷியாவுக்குத் திரும்பச் சொன்னார்.
லஷ்மி மறுத்துவிட்டார். உயிர் பிழைத்தவர்களுக்கு மருத்துவ சிகிச்சை செய்து கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த நேதாஜி, தன்னோடு லஷ்மியை வரச் சொல்லி வற்புறுத்தினார். அந்த அழைப்பையும் நிராகரித்தார் லஷ்மி. அப்போது மருத்துவமனை மீது வீசப்பட்ட குண்டு பல வீராங்கனைகளின் உயிரைக் குடித்தது.
லஷ்மி கைது செய்யப்பட்டு இந்தியாவுக்கு அழைத்துச் செல்லப்பட்டார். 1947... இந்தியா சுதந்திரம் பெற்றது. தன்னுடன் இந்திய தேசிய ராணுவத்தில் பணிபுரிந்த கேப்டன் பிரேம் குமார் ஷேகலைத் திருமணம் செய்துகொண்டார் லஷ்மி. கான்பூரில் வாழ்க்கையை ஆரம்பித்தனர். சுபாஷினி, அனிஷா என்ற இரு மகள்களுக்குத் தாயானார் லஷ்மி. கான்பூரில் மருத்துவமனை அமைத்தார். கிராமப் புறங்களில் மருத்துவம் செய்வதற்கு பெண்களைத் தயார் செய்தார்.
1971ஆம் ஆண்டு அந்தக் கட்சியின் சார்பில் மாநிலங்கள் அவை உறுப்பினர் ஆனார். 1972இல் பங்களாதேஷ் போரில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மருத்துவ உதவி செய்தார், நிதி திரட்டினார். 1981ஆம் ஆண்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் அனைத்து இந்திய ஜனநாயக மாதர் சங்கம் என்ற அமைப்பைத் தோற்றுவித்தார்.
1984ஆம் ஆண்டு போபாலில் யூனியன் கார்பைட் விஷ வாயு விபத்து நிகழ்ந்தது. மருத்துவக் குழுவுடன் சென்று, பாதிக்கப்பட்ட மக்களுக்கு மருத்துவ உதவி செய்தார் லஷ்மி. அதேபோல் இந்திரா காந்தி சுடப்பட்ட பிறகு, சீக்கியர்களுக்கு எதிராகக் கிளம்பிய கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவ சேவை அளித்தார். 1998ம் ஆண்டு லஷ்மி ஷேகலின் சேவையைப் பாராட்டி, இந்திய நாட்டின் உயரியவிருதான பத்மவிபூஷண் வழங்கப்பட்டது. 2002ஆம் ஆண்டு கம்யூனிஸ்ட் கட்சிகளின் சார்பில் குடியரசுத் தலைவர் தேர்தலில், அப்துல் கலாமை எதிர்த்துப் போட்டியிட்டார். வெற்றி பெறவில்லை.
மூப்பு வந்தது. உருவம் மாறியது. உடல் தளர்ந்தது. ஆனாலும், 92 வயது வரை தினமும் மருத்துவமனைக்குச் சென்று, நோயாளிகளுக்குச் சிகிச்சை அளித்து வந்தார் லஷ்மி. தேச விடுதலை, பெண்கள் விடுதலை, ஏழைகளுக்கு மருத்துவ சேவை என்று தம் வாழ்நாள் முழுவதையும் நாட்டுக்காக அர்ப்பணித்த கேப்டன் லஷ்மி, 2012 ஜூலை 19 அன்று, 98ஆவது வயதில் ஓய்வெடுத்துக் கொண்டார். அவர் விருப்பப்படி, இறந்த பிறகு உடல், மருத்துவக் கல்லூரி ஆராய்ச்சிக்காக அளிக்கப்பட்டது.
அறிவு, துணிச்சல், தேச நலன், எளிய மக்கள் மீது அன்பு, மருத்துவ சேவை என்று வாழ்ந்த அரிய மனிதர் லஷ்மி ஷேகல், ஒரு நூற்றாண்டு கால இந்திய வரலாற்றின் முக்கியமான, தவிர்க்க முடியாத அத்தியாயம்!
வார ஏட்டுக்கு ஒரு சூடு! இது விபச்சாரத்தைவிட இழிவானது குமுதம் ரிப்போர்ட்டர் இதழைக் கண்டித்து சுப.வீ.
சென்னை, பிப். 19- கருத்துச் சுதந்திரம் வேண்டும் என்னும் கருத்துடையவர் கள்தாம் நாம். ஆனால், அநாகரிக மாகவும், அருவருக்கத்தக்க வகையிலும் எழுதுவது கருத்துச் சுதந்திரம் ஆகாது. இப்போது வெளிவந்துள்ள குமுதம் ரிப்போர்ட்டர் என்னும் குப்பை இதழ் ஒன்று, நம் தலைவர் கலைஞர் அவர் களையும், குஷ்புவையும் தொடர்புபடுத்தி, மனம் புண்படும் வகையில் எழுதியுள்ளது. இன்னொரு மணியம்மை என்று தலைப் பிட்டு, தன் வக்கிர புத்தியை வெளிப் படுத்தியுள்ளது.
ஒரு பெண் நடிகையாய் இருந்தால் அவரைப்பற்றி என்ன வேண்டுமானாலும் எழுதலாமா? இந்த இதழின் ஆசிரியர் வரதராஜனைப் பார்த்துக் கேட்கிறேன், உங்கள் வீட்டுப் பெண்களைப்பற்றி இப்படி நாங்களும் எழுதட்டுமா? அரசி யல் எழுது, ஆயிரம் விமர்சனங்களை வை, வேண்டாமென்று சொல்லவில்லை. ஆனால், ஆபாசமாகவும், அருவருப்பாக வும் எழுதித்தான் பணம் சேர்க்க வேண்டுமா? இதனைவிட நீ வேறு பிழைப்பு நடத்தலாமே?
மணியம்மையின் வரலாறு தெரியுமா உனக்கு? 1957 ஆம் ஆண்டு போராட் டத்தில் தந்தை பெரியார் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்தார். நம் ஆசிரியர் வீரமணி அவர்கள் அப்போது சட்டக் கல்லூரி மாணவராக இருந்தார். அந்த நேரத்தில், திருச்சி சிறையில், சட்ட எரிப்புப் போராட்டத்தில் கலந்து கொண்டு சிறை சென்றிருந்த மணல் மேடு வெள்ளைச்சாமி, பட்டுக்கோட்டை ராமசாமி ஆகிய இருவரும் சிறையிலேயே இறந்துபோனார்கள்.
இருவரின் உடல் களையும் அதிகாரிகள் சிறையிலேயே புதைத்து விட்டனர். உடனே மணியம்மையார்தான், நடிகவேள் ராதாவின் காரில் சென்னை வந்து அன்றைய முதலமைச்சர் காமராஜர் அவர்களைச் சந்தித்து, வாதாடி, மீண்டும் அவர்களின் உடல்களைத் தோண்டி எடுக்க வைத்தார். அதற்குப் பிறகு அந்த உடல்களை ஏந்தியபடி, திருச்சி முழுவதும் மாபெரும் ஊர்வலத்தை நடத்தி, அய்யா களத்தில் இல்லாதபோதும், இயக்கத்திற்குப் புதிய வலிவை ஊட்டியவர் மணியம்மையார் தான். இந்த வரலாறெல்லாம் வரத ராசன்களுக்கு எங்கே தெரியப் போகிறது?
கண்டதையும் எழுதிக் காசு சேர்ப்பது, பெண்ணின் முகத்தில் ஆசிட் வீசுவதைப் போலக் கொடுமையானது. விபச்சார விடுதி நடத்துவதைவிட இழிவானது. (பேசியபடியே, அந்த இதழை அவர் மேடையில் கிழித்தெறிந்தார்).
(16.2.2013 அன்று மாலை, சென்னையை அடுத்துள்ள மேடவாக்கம் பகுதியில் நடைபெற்ற திராவிடர் இயக்கத் தமிழர் பேரவை நடத்திய, திராவிட இயக்க நூற்றாண்டு நிறைவுப் பொதுக்கூட்டத்தில், சுப.வீரபாண்டியன் ஆற்றிய உரையின் ஒரு பகுதி இது).
பாவத்தின் சம்பளமோ!
பொன்னேரி - அண்ணாதுரையின் மகள் காயத் திரி (20) பொன்னேரி பஞ்செட்டி நெடுஞ்சாலையில் உள்ள கிறித்துவ ஆலயத்தில் மூத்த கன்னியாஸ்திரி மேரி செபஸ்டியானுக்கு உதவியாளராகப் பணிபுரிந்து வந்தவர். நேற்று காலை, தேவாலய வளாகத்தில் உள்ள ஆலமரத்தில் தூக்கில் தொங்கினார். பாவத்தின் சம்பளம் மரணம் என்பார்கள் கிறித்த வர்கள். இந்த மரணம் எதில் சேர்ந்ததோ!
அந்தோ, நீ யார் கோவில்?
கச்சத்தீவு அந்தோணியார் ஆலய விழாவை முன்னிட்டு மண்டபம் அகதி முகாமிலிருந்து ஏதிலிகள் பிப்ரவரி 21 முதல் வெளியேவரத் தடை விதிக்கப் பட்டுள்ளதாம். விழாவுக்கு ஏதிலிகள் சென்றுவிடாதபடி கண் காணிக்கப்படுகிறதாம்!
பட்டுப்புடவையை இரவல் கொடுத்துவிட்டு, புடவையை உடுத்திக் கொண்ட சீமாட்டி போகும் இடமெல்லாம் இரவல் கொடுத்த பெண்மணி பாயைத் தூக்கிக் கொண்டு போன கதையாக அல்லவா இருக்கிறது!
இந்தியா இனாமாகத் தூக்கிக் கொடுத்த கச்சத் தீவில் உள்ள கோவிலுக்குச் செல்லக் கூடாது என்று இந்தியாவே இவ்வளவு கெடுபிடிகளைச் செய்கிறது - வெட்கக்கேடு!
மூடப்பட்டது கோவில் இங்கல்ல - சீனாவில்
சீனாவின் தென்கிழக்கு மாகாணமான சாங்ஷியில் உள்ள மவுண்ட்வுடாய் இங்குள்ள 2 புத்தக் கோவில்களில் பக்தர்களிடம் அதிகக் கட்டணம் வசூலிக்கப்பட்டதால், அந்த இரு கோவில்களும் இழுத்து மூடப்பட்டனவாம்.
பகுத்தறிவுக் கருத்துகளைப் போதித்த புத்தருக்குக் கோவில் கட்டியதே முதல் தவறு. அது ஒரு பக்கம் இருக்கட்டும்.
பூசாரிகள் அதிகக் கட்டணம் வசூலித்ததால், கோவில் இழுத்து மூடப்பட்டதாம். அந்த அளவுகோல் இந்தியாவில் மேற்கொள்ளப்பட்டால், அனேகமாக எல்லாக் கோவில் களையும் இழுத்து மூடவேண்டியதுதான்!
மூன்று முறை கிளீன்போல்டு
சச்சின் டெண்டுல்கர் பற்றிய புகழ் புராணம் இன்னும் ஓய்ந்தபாடில்லை. பாரத ரத்னா கொடுக்கவேண்டும் என்ற அளவுக்குக்கூடச் சென்றனர். அதற்குப் பதிலாக மாநிலங் களவை உறுப்பினராகவும் ஆக்கப்பட்டுவிட்டார்.
ஒரு நாள் விளையாட்டுக்கு ஒரு வழியாக குட்பை கொடுத்துவிட்டார் (அவராகச் சென்றார் என்பதைவிட, வெளியேறும் நிலைக்கு நிலைமை முற்றிவிட்டது).
பெங்களூருவில் நடைபெற்ற பயிற்சி ஆட்டத்தில் உள்ளூர்க்காரர்கள் பந்து வீச்சில் மூன்று முறை சச்சின் போல்டு ஆகிவிட்டாராம். இது அதிர்ச்சியாம்.
பார்ப்பனர் அல்லாத ஒரு விளையாட்டுக்காரர் இப்படி ஆடியிருந்தால், அடேயப்பா, எப்படி எப்படி எல்லாம் கரித்துக் கொட்டியிருப்பார்கள் - எழுதுவார்கள் இந்தப் பார்ப்பன ஊடகக்காரர்கள்.
அவர், அனைத்துவகை கிரிக்கெட் போட்டிகளிலிருந்தும் ஓய்வு பெறுவதுதான் எஞ்சியுள்ள மரியாதையாவது காப்பாற்றப்படும்!
வீறுகொண்டெமுக!
கொஞ்சி விளையாடிய
குழந்தைமுகம் கண்டும்
துமுக்கி கொண்டு
துடிதுடிக்கக் கொல்லத்
துணிந்தனரே!
பால்வடியும் முகத்தைப்
பார்த்தவர்க்குக் கண்ணில்லையா?
பச்சைப் பசுந்தளிரைப்
பழிகாரப் பாவிகள்
பதைக்கப் பதைக்கக்
கொன்றனரே!
பிஞ்சுமனம் துவண்டவிதம்
அறிவோமா நாம்?
கறைபடிந்த காந்தியும்
புனிதம் தொலைந்த புத்தரும்
வரலாற்றின் ஏடுகளில்
வாழ்விழந்து போயினரே!
நெட்டைமரமென நின்றுபுலம்புகிறோம்!
வெற்றுப் புலம்பல்
விடியலைத் தந்திடுமோ?
வீறுகொண்டு எழுக
வீரத் தமிழினமே!
- மறைமலை
இலங்கைத் தூதரகத்தை முற்றுகையிடுவோம், வாரீர்! பிப்ரவரி 28ஆம் தேதி போராட்டம்!
பிரபாகரன் மகன் படுகொலைப் படங்கள் பொய்யா?
இலங்கைத் தூதரகத்தை முற்றுகையிடுவோம், வாரீர்!
பிப்ரவரி 28ஆம் தேதி போராட்டம்!
தமிழர் தலைவர் அறிவிப்பு
மாவீரன் பிரபாகரனின் மகன் பாலச் சந்திரனைப் படுகொலை செய்ததோடு அல்லாமல் அந்த உண்மைச் செய்தியை - வெளியில் வந்த படங்களை பொய்யென்று கூறி உலக மக்கள் கண்களில் மிளகாய்ப் பொடியைத் தூவும் இலங்கை அரசின் தூதரக அலுவல கத்தை முற்றுகையிடும் போராட்டம் வரும் 28ஆம் தேதி நடைபெறும் என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:
இங்கிலாந்தின் சேனல் 4 தொலைக்காட்சி மூலம் அந்நிறுவனத்தின் இயக்குநர் கெல்லம்மெக்ரே - மாவீரன் பிரபாகரனின் 12 வயது பாலகன் பாலச்சந்திரன் கொடூரமாக மார்பில் அய்ந்து குண்டுகளைப் பாய்ச்சிப் பச்சைப் படுகொலை செய்யப்பட்ட படங்களை உலகெங்கும் பரப்பி பெரும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தி விட்டார்.
இன்று உலகளவில் பேசப்படும் முதல் நிலைச் செய்தி இதுதான். இதன் மூலம் இலங்கை சிங்கள இனவாத அரசு - அதன் அதிபர் மகிந்த ராஜபக்சேயின் மனிதாபிமானமற்ற கொடிய இட்லர் முகம் உலகெங்கும் அம்பலப்படுத்தப்பட்டு விட்டது.
ஜெனிவாவில் அமெரிக்கத் தீர்மானம் கொண்டு வரப்படும் ஒரு கால கட்டத்தில்...
அதுவும் ஜெனிவாவில் மனித உரிமைக் கவுன்சிலில் அமெரிக்க அரசால் இலங்கைக்கு எதிராகப் புதியதோர் தீர்மானம் கொண்டு வரப்பட உள்ள ஒரு கால கட்டத்தில் இப்படி ஒரு செய்தி உலகெங்கும் தொலைக்காட்சி மூலம் அதிரடியாக வெளி வந்திருப்பது - இலங்கை அரசின் மீதான உலகப் பார்வை மேலும் கொழுந்து விட்டு எரியக் கூடிய நிலைதான். போர்க் குற்றவாளிதான் ராஜபக்சே என்பதற்குக் கூடுதல் சாட்சியமாகும்.
மிகப் பெரிய நெருக்கடியில் இலங்கை அரசு
கடுமையான - அதேநேரத்தில் உண்மையான இந்தக் குற்றச்சாற்றிலிருந்து எப்படியாவது விடுவிக்கப்பட வேண்டும் என்ற மிகப் பெரிய நெருக்கடிப் பள்ளத்தாக்கில் இலங்கை அரசும், ராஜபக்சேவும் தள்ளப்பட்டு விட்டனர்.
பொய்தானே - இந்தக் கொடியவர்களின் கையில் உள்ள கேடு கெட்ட பொல்லாத ஆயுதம்?
ஹிட்லரும், முசோலினியும், இடி அமீன்களும் என்றாவது உண்மைகளைப் பேசி இருக்கிறார்களா? இலங்கை இராணுவ செய்தித் தொடர்பாளர் (பிரிகேடியர் ரூபன் வானிகசூர்யா) என்ற ஒருவர் பெயரால் பிரிட்டன் சேனல் 4 ஒளிபரப்புப் படங்கள் பொய்யானவை என்று மறுப்பு வெளி வந்துள்ளது.
கெல்லம்மெக்ரே திட்டவட்ட அறிவிப்பு
படுகொலை செய்யப்பட்ட பிரபாகரன் மகன் பாலசந்திரன் படம் உண்மையானதுதான்; சித்திரிக்கப் பட்டவையல்ல; வெளியிடப்பட்ட படங்களுக்கான பொறுப்பினை ஏற்றுக் கொண்டுள்ளார் - பிரிட்டன் நிறுவனத்தின் இயக்குநர் கெல்லம்மெக்ரே.
அது மட்டுமல்ல, தமிழ்ப் பெண்களுக்கு எதிராக சிங்கள இராணுவ வெறியர்கள் நடத்திய பாலியல் வன்கொடுமை, சரண் அடைய வந்த போராளிகளை சுட்டுக் கொன்ற காட்சிகள் எல்லாம் விரைவில் ஒளிபரப் பப்பட உள்ளன என்று பிரிட்டன் நிறுவனம் அறிவித் திருப்பதன் மூலம் ராஜபக்சேயின் வயிற்றில் புளியைக் கரைத்துள்ளார் இயக்குநர் கெல்லம்மெக்ரே.
28இல் முற்றுகைப் போராட்டம்!
இந்த நிலையில் உலக மக்களின் கண்களில் மிளகாய்த் தூள் தூவி உண்மைத் தகவலை முற்றிலும் தகர்த்திட வழக்கமான பொய்ப் பிரச்சாரம் என்னும் பட்டத்தை உலகெங்கும் பறக்க விட முயற்சிக்கிறார்.
ராஜபக்சேயின் இந்தக் கேவலத்தைக் கண்டிக்கும் வகையிலும், கீழே தள்ளியதோடு அல்லாமல் குழியையும் பறிக்கும் இலங்கைப் பாசிச அரசின் முகமூடியைக் கிழிக்கும் வகையிலும், இந்திய அரசே இலங்கைத் தூதரகத்தை இழுத்து மூடு! எனும் முழக்கத்தை முன்னெடுப்போம்.
வரும் 28.2.2013 வியாழன் காலை 11 மணிக்கு சென் னையில் உள்ள இலங்கைத் தூதரகத்தை முற்றுகையிடும் போராட்டத்தை திராவிடர் கழகம் மேற்கொள்ளும்.
தமிழின உணர்வாளர்கள் கட்சிகளைக் கடந்து ஓரணியில் ஒன்றுபடுவோம் வாரீர்! வாரீர்!!
கி.வீரமணி
தலைவர், திராவிடர் கழகம்
பார்ப்பனர் நடத்திய பசுவதை அய்தேரயப்ராஹ்ணம் கூறுகிறது
அய்தரேய ப்ராஹ்ணம் இரண்டாம் பஞ்சிகையின் தொடக்கத்தில் சொல்லுவதாவது:
யஜ்னேவை தேவா - ஊர்த்வம் ஸ்வர்க்கம் லோக மாயம்ஸ்தே பியயுரஸ்மின் நோத்ருஷ்ட்வா மனுஷ்யாஸ்ச ரிஷ்யஸ் சானுப் ரஞ்ஞாஸ் யந்தீதி (அய்தரேயப்ராஷ் மணம்த்ஷதீய பஞ்சிகா பிரதம காண்டம்)
இதன்பொருள்:- தேவர்கள் யாகம் செய்து ஸ்வர்க்கத்தை அடைந்தார். ஆதலால், மனிதர்களும் ரிஷிகளும் யாகம் செய்யக் கடவர் யூபஸ்தம்பங்களையும் நாட்ட வேண்டும் . யூபம் - யாகத்தில் கொல்லப்படும் உயிர்களைப் பிணிக்கும் தூண்.
இதன்பின் யாகத்தால் உயிர்களைக் கொல்லக் கட்டளையிடுகிற மந்திரமாவது:-
தைவ்யா:- சாமி தார ஆரபத்வமுத மனுஷ்யா இத்யாஹ. அன்வேனம் மாதா மன்ய தாமனு பிதானுப்ராதா ஸ்கர்யோனு ஸகா ஸயூட்ய இதிஜனித்ரை ரேவைனம் தத்ஸ மனு மத மாலா பந்த உதி சீனாம் அஸ்பபதோ நிதித்தாமஸுர்யம் சக்ஷீர்க்ம ப்தாத் வாந்தப் ராண மன் வஸ் ருஜ தாந்திரி க்ஷமஸும் திச ஸ்ரோத்திரம், ப்ருதிவிசரீம்
(அய்தரேயப் ராஹ் மணம் பஞ்சிகா 2 காண்டம் 6)
இம்மந்திரத்தினால் பசுவின் தாய் தந்தையரைக் கேட்டுக் கொள்ளுவதாவது இந்தப் பசுவை எனக்கு கொடுங்கள்.
இவ்வாறு வேண்டிக் கொண்ட பின்னர் அத்வர்யு வென்னும் தலைமைப் புரோகிதனுடைய கட்டளையைப் பெற்றுக் கொண்டு பசுவை சமித்ரசாலா என்னுமிடத்திற்கு அழைத்துக் கொண்டு போய் வடக்கு திசையில் அப்பசுவின் கால்கள் இருக்கும் படியாகச் செய்து சமிதா வென்னும் பசுவைக் கொல்லும் புரோகிதன் முஷ்டி என்னும் குறுந்தடியால் பசுவினுடைய கழுத்தில் அடித்துக் கொலை செய்வான். அதன்பின் சுரா இடா ஸுனு ஸ்வதீதி என்னும் மரப்பலகையில் கொலையுண்ட பசுவின் பிணத்தைக் கிடத்தி தோல் உரித்துச் சதையை அரிந்தெடுத்து சிறிது நெருப்பிலிட்டு மீதியுள்ள மாமிசத்தைப் புரோகிதர்கள் யாவரும் பங்கு போட்டு எடுத்துக் கொள்ளுவார்கள்.
இந்த பசுவைப் பங்கிடும் முறை ஞான சூரியன் முதல் பக்கத்தில் மேற்படி மந்திரமும், அதன் தமிழ் அர்த்தமும் எழுதியிருப்பதால் இதில் எழுதவில்லை. இம்முறை கோபதப் ராஹ்மணம் என்னும் வேத நூலிலும் இருக்கிறது. யாகத்தில் கொலையுண்ட பசு சுவர்க்கத்தை அடைகிறது என்று கீழ்க்காணும் மந்திரம் கூறுகிறது:
பார்வை நியாமான; ஸம்ருத்யும் ப்ரா பஸ்யத் ஸதேவான் நான் வகா மயதைதும் தம் தேவா அப்ரூ வன் கம் னேஹிஸை வர்க்வத்வர் லோகம் கமயிஷ் யாம இதி
(அய்தரேயப் ராஹ் பஞ்சிகா காண்டம் 6)
பொருள்: யாகத்திற்கு கொண்டு வந்த பசு மரணத்தை காண்கிறது; மரணத்தினின்றும் தேவர்களை காண்கிறது.
தேவர்கள் பசுவைப் பார்த்து: நாங்கள் உன்னை சுவர்க்கத்திற்கு அழைத்துச் செல்லுகின்றோம் என்பார்கள். பசு கொல்லப்பட்டபிறகு அதன் சதையை அறுத்தெடுக்க வேண்டிய முறை மந்திரமாவது:-
அந்த ரே வோஷ் மாணம் வாரயத்வா திதி பசுஷ் வேதத் ப்ராணன் தாதிஸ் யேன மாஸ்ய வக்ஷ கருணுதாத் ப்ரசஸா பஹீ சலா தோஷ்ணீ கஸ்யபேவாம் ஸாச்சித் ரேஸ்ரோணீ வகவேஷாரூஸ்ரேக பர்ணாஷ்டீ வந்தாஷட்விம் சதி ரஸ்ய வங்காயஸ்கா அனுஷ்ட யோச்யா வயதத்; காத்ரம் காத்ரமஸ் யானூனம்.
(அய்தரேயப் ராஹ் மணம் பஞ்சிகா 2 காண்டம் 6)
பொருள்: மார்பிலிருந்து பருந்தின் வடிவத்தில் சதையை அறுத்தெடுக்க வேண்டும். பின் கால்களிலிருந்து இரண்டு துண்டுகளை அறுத்தெடுக்க வேண்டும். முன் கால்களிலிருந்து அம்பு வடிவமாக இரண்டு துண்டுகளை அறுத்தெடுக்க வேண்டும். தோளிலிருந்து ஆமையின் வடிவமாக இரண்டு துண்டுகளை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்தந்த அவயங்களிலிருந்து இருபத்தாறு துண்டுகளை அறுத்தெடுத்த பின் எல்லாவற்றையும் அறுத்தெடுத்துக் கொள்க.
பசுவின் மல மூத்திரம் முதலியவை தரையில் புதைக்கப்பட வேண்டும். அதற்குப் பிரமாணம்:-
உத்ய கோஹம் பார்த்திவம் (அய்தரேய பஞ்சி 2 க6)
பசுவைக் கொல்லும் போது ஹோதா என்னும் புரோகிதன் சொல்ல வேண்டியது:-
அத்ரிகோ சமீத்வம் ஸுசமீ சமீத்வம்
சமீத்வ மத்ரிகா அத்ரிகா அத்ரகா உர் இதித்ரிர்ப் ரூயாத்
(அய்த பஞ்சிகா 5 காண்டம் 7)
பொருள்: நன்றாக அடித்துக் கொல், கொல், கொல். அடிப்பதை நிறுத்தாதே.
தொகுப்பு: பெ.சுந்தரராசன்.
தாண்டவமாடுகின்றன...
இந்திய மக்களின் கல்வி அறிவு வாசனையற்ற தன்மையும், பாமரத் தன்மையும், அடிமைத்தன்மையும் எல்லாம் சேர்ந்து உலகத்தில் வேறு எந்தத் தேசத்திலும் இல்லாத அவ்வளவு மதங்களும், மத வேற்றுமைகளும், மத மாற்றமும் இங்குத் தாண்டவமாடுகின்றன. - விடுதலை, 30.4.1958
உங்களுக்குத் தெரியுமா?
தந்தை பெரியார் அவர்களின் தமிழ் எழுத்துச் சீர்த்திருத்தத்தை நடைமுறைப்படுத்த 1948 ஆம் ஆண்டிலேயே அன்றைய முதலமைச்சர் ஓமந்தூர் ராமசாமி(ரெட்டியார்)ஒரு குழு அமைத்தார்.அந்தத் திட்டத்தைப் பின்னால் முதலமைச்சரான ராஜகோபாலாச்சாரியார் கை கழுவினார் என்ற வரலாறு உங்களுக்குத் தெரியுமா?
இலங்கையில் போர் முடிந்து நான்கு ஆண்டுகள் உருண்டோடிவிட்டன! இன்னமும் அங்கே இயல்பு நிலை திரும்பவில்லை. சொந்த நாட்டு மக்களாகிய தமிழ் மக்கள் அங்கே ஏதோ பிடிபட்ட நாட்டின் போர்க் குற்றவாளிகள் போல் கொடுமையாய் நடத்தப்படும் கோரம் படமெடுத்தாடுகிறது.
முள்வேலிக்குள்தான் அங்கு எஞ்சியுள்ள தமிழர்கள் பலர் முதியவர்கள், பெண்கள், ஆண்கள், குழந்தைகள் - சொல்லொணாத் துயரத்துடன் அரை வயிற்றுக் கஞ்சிக் குக்கூட வழியில்லாமல் அவலமான வாழ்க்கையை சுமந்து, உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு நடமாடும் பரிதாப நிலை!
எம் தமிழச்சிகளின் நிலையோ எழுதவும் கூசும் வகையில் சிங்கள இராணுவத்தால் நடத்தப்படுகின்ற சோகம் தொடர் கதையாகி வருகிறது!
குறைந்தபட்ச மனித உரிமை, வாழ்வுரிமைகூட இன்னும் எம் தமிழர்களுக்குக் கிடைக்கவில்லை.
வட பகுதியான யாழ்ப்பாணம் கிழக்குப் பகுதிகள் எங்கும் சிங்கள இராணுவ ஆட்சியே; ஒவ்வொரு குடி மகனுக்கும் ஒரு இராணுவ சிப்பாய் என்பதுபோன்று உள்ள நெருக்கடி நிலை!
போர் நடந்து முடிந்தபிறகு தமிழர்களை மீள் குடியமர்த்துதல் நடைபெறாமல், அந்தப் பகுதிகளில் எல்லாம் சிங்களவர்களைக் குடியமர்த்தும் திட்டமிட்ட அநீதி அரங்கேறிக் கொண்டுள்ளது.
தமிழர்களின் அடையாளங்களைக்கூட விட்டு வைக்கக் கூடாது என்ற சிங்களப் பேரினவாதம் நிர்வாணத் தன்மையில் வெறிகொண்டு, ஊர்ப் பெயர்களை மாற்றுவது முதல் அங்கே தமிழர்கள் வழிபடும் கோயில், சர்ச், பள்ளிவாசல் எல்லாம் அழித்தொழிக்கப்படும் அவலம் அன்றாட நிகழ்வுகளாகி வருகின்றன.
இதுபற்றி டெசோ தலைவர் மானமிகு கலைஞர் அவர்கள் இந்தியப் பிரதமருக்கும், அய்க்கிய முற்போக்குக் கூட்டணியின் தலைவர் திருமதி சோனியாகாந்தி அவர்களுக்கும் தமது வேதனையைத் தெரிவித்து, தடுத்து நிறுத்த வேண்டும் என்று எழுதிய கடிதத்திற்கு அந்த அம்மையார் அவர்கள், மிகுந்த பொறுப்புணர்ச்சியுடன் கலைஞருக்குக் கடிதம் எழுதி, இதுபற்றி கவலை கொள்கிறேன்; அவசியம் வெளி உறவுத் துறை அமைச்சருடன் பேசி ஆவன செய்வதாக குறிப்பிட்டிருப்பது சற்று ஆறுதல் தருகிறது. நடவடிக்கை செயலில் தெரிய வேண்டும்.
இது ஒருபுறம்; தமிழக மீனவர்கள்மீது சிங்கள இராணுவத்தின் தாக்குதல், உரிமைகள் பறிப்பு நாளொரு முறையும் பொழுதொரு வேளையும் நடந்த வண்ணமே உள்ளது. வழக்கமான வெண்டைக்காய் பதிலையே மத்திய அரசு தருகின்ற நிலை!
இலங்கையில் அப்பட்டமான மனித உரிமை மீறல், போருக்குப் பின் மேலும், மோசமான இடி அமீன்தர்பார், ஆள் தூக்கிச் செல்லும் அரசின் கூலிப்படை ஏவுதல் மூலம் காணாமற் போனவர்கள் பட்டியலில் பல்லாயிரக் கணக்கில் உள்ளனர்.
வருகின்ற மார்ச் மாதத்தில் ஜெனிவா மனித உரிமை ஆணையத்தில் இலங்கையின் இந்த அடாவடி அட்டகாசத்தை எதிர்த்து அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானம், மனிதாபிமானத்தின் மற்றொரு வெளிப்பாடு; இதில் இந்திய அரசு அதன் பங்கை அதிகமாகச் செய்து அழிந்து கொண்டிருக்கும் தமிழினத்தைக் காப்பாற்றிட வேண்டும்.
தமிழ்நாட்டின் தொப்புள் கொடி உறவுள்ள தமிழர்களின் வாக்களிப்பால்தான் மத்தியில் இன்றைய இந்திய அரசு உள்ளது என்ற உண்மையை உணர்ந்து தம் கடமையைச் செய்திட தயங்கக் கூடாது.
இந்நிலையில் உலக நாடுகள் உண்மைகளை உணர்ந்து, இலங்கையின் யதேச்சதிகார ஆட்சி எப்படி மனித உரிமைகளைப் பறிக்கும் ஹிட்லர் ஆட்சியாக மாறி யுள்ளது என்று உணர்ந்திடும் நிலை கண்டு, இலங்கை அதிபர் கொடுங்கோலன் ராஜபக்சே குமுறுகிறார் - கொக்கரிக்கிறார்.
அய்.நா.வும், இதர பல உலக நாடுகளும் இலங்கை உள்நாட்டு விவகாரத்தில் தலையிடுகின்றனவாம்; பசப்புரை பகருகின்றார். மிரட்டுகிறார். அய்.நா.வை மிரட்டி, சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தினர்களையும் போர் நடக்கும்போது மிரட்டி, கப்பலேற்றிய கபட வேடதாரி மற்றொரு வேடம் தரித்து உள்நாட்டு இறையாண்மை பற்றிப் பேசுகிறார்.
எம் தமிழினம் பூண்டோடு, கூண்டோடு அழிக்கப்படும் முயற்சிகளை நாங்கள் வேடிக்கை பார்த்துக் கொண்டி ருக்க வேண்டுமா?
அய்.நா.வின் நோக்கம் என்ன? உலகம் ஒரு குலம் என்ற நிலை ஓங்கியுள்ளபோது, அநீதி, அக்கிரமம், அழிப்பு வேலைகளை கை கட்டி மனிதநேயம் உள்ளோர் வேடிக்கை பார்ப்பார்களா?
கணவனும், மனைவியும் கொஞ்சிப் பேசிடும் குடும்ப வாழ்க்கையில் தான் பிறர் தலையிடக் கூடாதே தவிர, கணவன் மனைவியைக் கொலை செய்ய முயன்றால் அடுத்த வீட்டுக்காரன் வேடிக்கை பார்க்கலாமா? கண்டித்துக் கடமையாற்றுவது தவறா என்று அறிஞர் அண்ணா அவர்கள் நல்லதொரு உவமை கூறியதைவிட, வேறு இதற்குப் பொருத்தமான பதில்தான் ஏது?
உள்நாட்டுப் பிரச்சினை என்றால், இந்திய அரசிடம் இலங்கை உதவி கேட்கலாமா? இராணுவப் பயிற்சிக்கு வரலாமா? 1000 கோடி ரூபாய்களைப் பெற்று அந்நாட்டுப் பிரச்சினையைத் தீர்க்க - புனர் வாழ்வுக்கு நிதி கேட்கலாமா? இந்திய வீடு கட்டுவோரை, பல்கலைக் கழகத்தவரை அழைக்கலாமா?
சர்வதேச போர்க் குற்றவாளியான ராஜபக்சேக்களை உலகம் பார்த்து தண்டனை வழங்கும் காலம் தூரத்தில் இல்லை.
-கி.வீரமணி,ஆசிரியர்.
ராஜபக்சே போர்க் குற்றவாளியே!
கொடூரமாக தமிழர்கள் கொலை செய்யப்பட்ட காட்சிகள்
பிரிட்டன் சேனல்-4 தயாரித்த ஆவணப் படம் டில்லியில் வெளியீடு
புதுடில்லி, பிப். 23- இலங்கையில் நடந்த இறுதிக்கட்ட போரில், அப்பாவி தமிழர்கள் மீதும், விடுதலைப்புலிகள் மீதும் சிங்கள ராணுவம் நடத்திய போர் வெறியாட்டம், நேற்று டெல்லியில் ஆவணப்படமாக வெளியிடப்பட்டது. இலங்கை அரசு போர்க்குற்றங்கள் செய்ததற்கான மேலும் சாட்சியங்களும், ஆதாரங்களும் இதன் மூலம் வெளி உலகத்துக்கு அம்பலமாகி உள்ளன. ராஜபக்சே போர்க் குற்றவாளி என்பது இதன்மூலம் உறுதியாகிறது.
இலங்கையில், தமிழர்களுக்கு தனி நாடு கேட்டுப் போராடி வந்த விடுதலைப் புலிகளுக்கும், சிங்கள ராணுவத்துக்கும் இடையே 26 ஆண்டுகளாக கடும் சண்டை நடந்து வந்தது. இந்தப் போர் கடந்த 2009 ஆம் ஆண்டு இறுதிக் கட்டத்தை அடைந்தது. அந்த ஆண்டின் தொடக்கத்தில் நடந்த இந்தப் போரில் அப்பாவி பொது மக்கள் உள்பட பல்லாயிரக் கணக்கில் பலியானார்கள்.
வெள்ளைக்கொடி ஏந்தியபடி சரணடைய வந்த வீரர்கள் அனைவரும் கொல்லப் பட்டதுதான் கொடூரம் ஆகும். இது பற்றிய ஆவணப்படங்களை, இங்கிலாந்தைச் சேர்ந்த 'சேனல்-4' தொலைக்காட்சி பலமுறை வெளியிட்டு உலகையே அதிர வைத்தது.
12 வயது பாலச்சந்திரன்
சில நாள்களுக்கு முன்னர் இந்த தொலைக் காட்சி, ரத்தத்தை உறைய வைக்கும் மேலும் ஒரு கொடூரக் காட்சியையும் வெளியிட்டது. விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் 12 வயது இளைய மகன் பாலச்சந்திரனை, சிங்களப் படைகள் பிடித்து வைத்து, சாப்பிடுவதற்கு சில உணவுகளைக் கொடுத்து, பின்னர் அவனை நெஞ்சில் நேருக்கு நேர் சுட்டுக்கொன்ற காட்சிதான் அது.
உலகத்தையே பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கிய இந்தக் காட்சி, இலங்கை மீது போர்க் குற்ற நட வடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி வரும் மனித உரிமை ஆர்வலர்களுக்கு மேலும் ஒரு சாட்சியமாக அமைந்தது.
இலங்கை அரசு தமிழர்கள் மீது நடத்திய போர் வெறியாட்டம் தொடர்பான ஆவணப்படம் (டாக்குமெண்டரி சினிமா) ஒன்றை சேனல்-4 தொலைக்காட்சி தயாரித்துள்ளது. நோ பயர் சோன் (தாக்குதல்கள் நடத்தக்கூடாத பகுதிகள்) என்ற பெயரில் தயாரிக்கப்பட்ட இந்த சினிமா நேற்று டில்லியில் உள்ள கான்ஸ்டிடியூஷன் கிளப் என்ற அரங்கில் திரையிடப்பட்டது.
இயக்குநர் கெல்லம் மெக்கரே!
சர்வதேச பொது மன்னிப்பு சபையின் இந்திய கிளை, அமைதிக்கான நோபல் பரிசுக்கு உரியவர் களை பரிந்துரைக்கும் குழுவும் இதற்கு ஏற்பாடு செய்து இருந்தது. இலங்கையின் கொலைக்களம் என்ற பெயரில் இரு ஆவணப்படங்களை தயாரித்து வெளியிட்ட இயக்குநர் கெல்லம் மெக்கரேதான் இந்தப் படத்தையும் தயாரித்து, இயக்கி உள்ளார்.
தாக்குதல்கள் நடத்தக்கூடாத பகுதிகளில், சிங்கள ராணுவம் அத்துமீறி கொடூரத் தாக்குதல் களை நடத்தி, பல்லாயிரக்கணக்கான மக்களை ஈவு இரக்கம் இன்றி கொன்று குவித்ததால், இந்த சினிமாவுக்கு நோ பையர் சோன் என்று மெக்கரே பெயரிட்டுள்ளார்.
படம் தொடங்கியதும், இயக்குநர் மெக்கரே தோன்றி, போர்க் காட்சிகள் குறித்து விளக்கம் அளிக்கிறார். பின்னர், காண்போர் கண்களை குளமாக்கி, கண்ணீர் வரவழைக்கும் போர்க்காட்சிகள் வெளியாகின்றன.
உச்சக்கட்ட கொடூரம்!
போர் நடத்தக்கூடாத பகுதி என்று அறிவிக்கப் பட்ட இடங்களிலும், பாதுகாப்பான பகுதி என்று அறிவிக்கப்பட்ட இடங்களிலும் சிங்கள ராணுவம் கொத்துக் கொத்தாக குண்டுகளை வீசும் கொடூரக் காட்சிகள், ஊரெங்கும், அப்பாவி மக்கள் உயிர் இழந்து பிணங்களாக கிடக்கும் காட்சிகளும் இடம் பெற்றுள்ளன. தாயும், குழந்தையும் ஒன்றாக வீழ்ந்து கிடக்கும் நெஞ்சை உறையச் செய்யும் காட்சி, மருத்துவ மனைகளில் நூற்றுக்கணக்கானோர் உடலின் பல பாகங்கள் சிதைந்த நிலையில் சிகிச்சை பெறுவது போன்ற நெஞ்சை பதற வைக்கும் காட்சிகளும் இடம் பெற்றுள்ளன. அப்பாவிப் பெண்கள் ஆடைகள் களையப்பட்டு, நிர்வாணமாக சுட்டுக் கொல்லப் பட்டிருக்கும் காட்சி, சிங்கள ராணுவத்தின் உச்சகட்ட கொடூரத்தை வெளிப்படுத்துவதாக உள்ளது.
மேலும், பெண் புலிகள் என்ற சந்தேகத்தில், ஏராளமான பெண்களை ஒரு லாரியில் ஏற்றி சிங்கள ராணுவத்தினர் கொண்டு செல்கிறார்கள். ஆனால், அவர்கள் என்ன ஆனார்கள் என்று தெரியவில்லை. சிங்கள ராணுவத்தால் சிறைப் பிடிக்கப்பட்ட விடுதலைப்புலிகளின் தளபதிகளில் ஒருவரான கர்னல் ரமேஷ், மன்றாடுவதும், அவரிடம் ஏதோ வாக்குமூலம் வாங்கும் காட்சியும், பின்னர் அவர் கொல்லப்பட்டு, முகம் சிதைந்த நிலையில் பிணமாகக் கிடப்பதும் காட்டப்படுகிறது. பெண் புலிகளின் தளபதியாக இருந்த இசைப்பிரியாவை சிங்கள ராணுவம் சீரழித்து, படுகொலை செய்த காட்சியும் இடம் பெற்று உள்ளது.
போரில் இடம் பெயர்ந்த தமிழர்கள் நிராதரவாக திறந்த வெளியில் அவதியுறுவது, கொத்துக்குண்டு வீச்சில் பலியானவர்களின் உடல்கள் அப்புறப்படுத்த முடியாமல் சிதறிக்கிடந்த காட்சிகளும், குண்டு மழை யால் பீதி அடைந்த மக்கள் கைக்குழந்தைகளுடன் வேறு இடங்களுக்குச் செல்வது ஆகிய காட்சிகளும் இந்த சினிமாவில் காட்டப்படுகின்றது.
உலக நாடுகளால் தடை செய்யப்பட்ட கொத்துக் குண்டுகளை சிங்கள ராணுவம் பயன்படுத்தியதும், அதனால், அப்பாவித் தமிழ் மக்களின் உயிர் கொத்துக் கொத்தாக பறிக்கப்பட்டதும் இந்த சினிமாவில் காட்டப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது. 20 நிமிடங்கள் ஓடும் இந்த ஆவண சினிமா, மனித உரிமை ஆர்வலர்கள் மட்டுமல்லாது, ஒட்டு மொத்த உலகத்தையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது.
போர்க்குற்றம்
இந்த சினிமாவில் இடம் பெற்று உள்ள மனதைப் பதை பதைக்கச் செய்யும் காட்சிகள், இலங்கையில் போர் குற்றம் நடந்ததற்கு மேலும் ஒரு உறுதியான ஆவணமாகவும், இலங்கை மீது போர்க்குற்ற நடவடிக்கை எடுக்க வலுவான சாட்சியங்களாக இருக்கும் என்று இயக்குநர் மெக்கரே தெரிவித்தார்.
அடுத்த மாதம் ஜெனிவாவில் நடைபெற உள்ள அய்.நா. மனித உரிமைகள் கவுன்சில் கூட்டத்திலும் இந்த சினிமா திரையிடப்பட உள்ளது.
Post a Comment