Search This Blog

11.2.13

சுயமரியாதை வீரய்ய செட்டியாருக்கும் சுய ஆக்ஷி சுப்பையருக்கும் சம்பாஷணை




சு.ம.வீரைய்யசெட்டியார்:- என்ன ஓய்!சு.ஆ. சுப்பைய்யரே நேற்றெல்லாம் சீமை வேட்டி கட்டிக் கொண்டிருந்தீர். இன்று திடீரென்று கதர் வேஷ்டியும், கதர் குல்லாயும், தடபுடலாயிருக்கின்றதே?

சு.ஆ:- சுப்பையர்:- ஒன்றும் விசேஷமில்லை. இன்று முதல் காங்கிரசில் சேர்ந்து விட்டேன்.

சு.ம.வீ:- அதென்ன திடீரென்று சேர்ந்து விட்டாய் காங்கிரசைப்பற்றி குற்றம் சொல்லிக் கொண்டிருந்தாயே.

சு.ஆ.சு:- நான் பி.ஏ. பாஸ் செய்து எத்தனை நாள் ஆச்சுது?

சு.ம.வீ:- 3 வருஷ மாச்சுது.

சு.ஆ.சு:- உத்தியோகத்திற்கு எத்தனை விண்ணப்பம் போட்டேன் உனக்குத் தெரியாதா?

சு.ம.வீ:- ஆம், சுமார் 50, 60 விண்ணப்பம் போட்டாய். அதற்கென்ன இப்போது?

சு.ஆ.சு:- ஒரு விண்ணப்பத்திற்காவது பதில் கிடைத்ததா சொல் பார்ப்போம்?

சு.ம.வீ:- அது சரி அதற்கு யார் என்ன செய்வார்கள். உத்தியோகம் இருந்தால் தானே கிடைக்கும்.

சு.ஆ.சு:- உத்தியோகம் காலியாகவா இல்லை? எனக்குப் பிறகு எஸ்.எஸ்.எல்.சி பாசு பண்ணின அப்துல்ரகிமான், பறக்கருப்பன், ஜோசப்பு, இரங்கசாமி நாயக்கன், இராமசாமி நாடான் இவர்களுக்கு எல்லாம் வேலை கிடைத்துக் காயமாகி ஒன்று இரண்டு பிரமோஷன்கூட ஆகிவிட்டது. நான் பி.ஏ. பிரசிடென்சி 9தாவதாகப் பாசு பண்ணி இருக்கின்றேன். என் விண்ணப் பத்திற்குப் பதில் கூட இல்லை. இந்த கவர்ன்மெண்டை என்ன பண்ணுவது?

சு.ம.வீ:- அது ஏன் அப்படி? உன் விண்ணப்பங்கள் போய்ச் சேருகிறதில்லையா?

சு.ஆ.சு:- இல்லையப்பா உங்கள் எளவுதான்.

சு.ம.வீ:- என்ன சங்கதி?

சு.ஆ.சு:- சுயமரியாதை என்று ஒரு கலகத்தை உண்டாக்கி அதில் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் என்று கூச்சல் போட்டுக் கடைசியாக அது எங்கள் தலையில் வந்து விடிந்தது.

சு.ம.வீ:- அடபாவி அதற்கு நாங்களா ஜவாப்தாரி. ஜஸ்டிஸ் கட்சிக் காரரல்லவா? அந்தப்படி கேட்டது.

சு.ஆ.சு:- அது எனக்குத் தெரியும். ஜஸ்டிக்கட்சிக்காரர் முக்கிமுக்கிப் பார்த்தும் ஒன்றும் முடியாமல் போய் கடைசியாக அவர்களே வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் வேண்டாம் என்கின்றபோது உங்க எளவு சுயமரியாதைக் கலகம் வந்து அதற்கு உயிர் உண்டாக்கி எங்கள் தலையில் கையை வைத்து விட்டது.

சு.ம.வீ:- சரி அதற்கும் - கதருக்கும், காங்கிரசுக்கும் என்ன சம்பந்தம்?

சு.ஆ.சு:- அதனால்தான் காங்கிரசில் சேர்ந்தேன்.

சு.ம.வீ:- ஏன்?

சு.ஆ.சு:- இந்தக் கவர்ன்மெண்டை ஒழித்துவிட்டு வேறு வேலை பார்ப்பது என்றுதான்.

சு.ம.வீ:- உங்களால் ஒழித்து விடமுடியுமா?

சு.ஆ.சு:- ஏன் முடியாது? மாளவியாவே சொல்லி விட்டாரே. ஒரு மாதத்தில் சுயராஜியம் வரப்போகின்றது என்று சொல்லிவிட்டாரே. ஒரு சமயம் காந்தி சொன்னாலும் சந்தேகப்படலாம். அவர் இப்படியே 5,6 தரம் சொல்லிச் சொல்லி ஏமாற்றி விட்டார். மாளவியா வாக்குத் தவராது.

சு.ம.வீ:- அப்படியே சுயாராஜியம் வந்து விட்டதாகவே வைத்துக் கொள். அப்போது மாத்திரம் உனக்கு உத்தியோகம் கிடைத்து விடுமா?

சு.ஆ.சு:- ஏன் கிடைக்காது? இந்த வகுப்புவாரி பிரதிநிதிக் குண மெல்லாம் தவுடு பொடியாகிவிடாதா? அதற்காகத்தானே சுயராஜியம் கேட்பது. இந்த வெள்ளைக்கார ஆட்சி கூட வகுப்புவாரிபிரதிநிதித்துவம் கொடுப்பதில்லை என்றுசொன்னால் அதனிடம் எங்களுக்கு என்ன சண்டை?

சு.ம.வீ:- வகுப்புகள் இருக்கும்வரை வகுப்புவாரிஉரிமை வேண் டாமா?

சு.ஆ.சு:- வகுப்புவாதம் கூடாது என்றுதானே காங்கிரஸ் சொல்லுது.

சு.ம.வீ:- வகுப்புவாதம் கூடாது என்பது சரிதான். வகுப்பு போக வேண்டும் என்றும் காங்கிரஸ் சொல்ல வேண்டாமா?

சு.ஆ.சு:- அதுவும் போகத்தான் வேண்டும்.

சு.ம.வீ:- அப்படியானால் உங்கள் சுயராஜியத்தில் இந்து, மகமதியன், கிறிஸ்தவன் முதலாகிய வகுப்பெல்லாம் போய்விடுமா?

சு.ஆ.சு:- இவைகளை எப்படிப் போக்க முடியும்?

சு.ம.வீ:- அப்படியானால் அவரவர்களுக்குள்ள உரிமை கொடுக்கத்தானே வேண்டும்.

சு.ஆ.சு:- ஒவ்வொருவருக்கும் தனித்தனி உரிமை கேட்டால் அது வகுப்புவாதமில்லையா?

சு.ம.வீ:- வகுப்பு போகாத சுயராஜியத்தில் வகுப்பு உரிமை வேண் டாமா?

சு.ஆ.சு:- அது எப்படியோ போகட்டும். இந்துக்களுக்குள் கூட வகுப்புவாதம் எதற்கு?

சு.ம.வீ:- உங்கள் சுயராஜியத்தில் இந்துக்களுக்குள் சூத்திரன், பஞ்சமன் என்கின்றதாகிய வகுப்புகளாவது இல்லாமல் போய்விடுமா?

சு.ஆ.சு:- இப்படிப் பேசுவதுதான் வகுப்பு வாதம் என்பது?

சு.ம.வீ:- எப்படி?

சு.ஆ.சு:- வெகுகாலமாய் பெரியவாள் காலம்தொட்டு இருக்கின்ற வழக்கத்தை கேவலம் இந்த சுயராஜியத்திற்காக ஒழிக்கவேண்டும் என்று சொல்வது நியாயமாகுமா? இதனால் தான் உங்களை தேசீய பத்திரிகைகள் வகுப்புத்துவேஷிகள் என்று கூப்பிடுகின்றார்கள். சுயராஜியம் இல்லாவிட் டாலும் பரவாயில்லை. சூத்திரன், பஞ்சமன் ஆகிய வகுப்புகள் இல்லாமல் செய்ய நாங்கள் சம்மதிக்க மாட்டோம்.

சு.ம.வீ:- ஏனப்பா அது என்ன அவ்வளவு கஷ்டம்?

சு.ஆ.சு:- இன்றைக்கு சூத்திரன் என்கின்ற வகுப்பு வேண்டாம், நாளைக்கு பஞ்சமன் என்கின்ற வகுப்பு வேண்டாம், நாளானண்ணைக்கு பிராமணன் என்கின்ற வகுப்பு வேண்டாம் என்பதாக வரிசையாய் சொல்ல ஆரம்பித்து விடுவீர்கள்.

சு.ம.வீ:- சொன்னால் என்னப்பா முழுகிப்போகும்.

சு.ஆ.சு:- குதிரையும், கழுதையும் ஒன்று என்றால் நீ ஒப்புக்கொள் வாயா?

சு.ம.வீ:- அப்படியானால் பிராமணன், சூத்திரன், பஞ்சமன் என் கின்றவர்களில் யார் குதிரை யார் கழுதை? அதற்கு என்ன அடையாளம்? சொல் பார்ப்போம் (என்று சட்டையை முழங்கைக்குமேல் ஏற்றிச் சுருட்டி னார் வீரைய்யன்.)

சு.ஆ.சு:- அதெல்லாம் எனக்குத்தெரியாதப்பா. சங்கராச்சாரிசுவாமி களிடமிருந்து “பிராமணாள் எல்லாரும் காங்கிரசில் சேருங்கள்” என்று ஒரு ரகசிய ஸ்ரீமுகம் வந்ததாக எங்கப்பா சொன்னார் அதனால் சேர்ந்தேன். எங்கப்பாவும் எங்க மாமாவும் பேசிக்கொண்டிருந்ததை நான் சொன்னேன். என் மேல் கோபித்துக்கொள்ள வேண்டாம். என்னமோ என் வேலையை நான் பார்க்கின்றேன் உன் வேலையை நீ பார். நமக்குள் சண்டையெதற்கு. என் அபிப்பிராயமெல்லாம் உனக்குத் தெரிந்ததுதானே? நான் போகிறேன் நேரமாச்சுது ( என்று சொல்லிக்கொண்டே நழுவிவிட்டார். )

 - -------------------------------------- சித்திரபுத்திரன் என்ற பெயரில் தந்தைபெரியார் எழுதிய  உரையாடல் - ”குடி அரசு” 26.07.1931

5 comments:

தமிழ் ஓவியா said...


இந்து - ஆன்மீகக் கண்காட்சியா?


5ஆவது இந்து - ஆன்மீக சேவைக் கண்காட்சி ஒன்றை சென்னையில் பி.ஜே.பி.யின் முன்னணித் தலைவர்களுள் ஒருவரும் முன்னாள் துணைப் பிரதமருமான லால்கிஷன் அத்வானி தொடங்கி வைக்கிறாராம்.

கடந்த ஆண்டுகூட சென்னை வைஷ்ணவா கல்லூரியில் இப்படி ஒரு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

தமிழ்நாடு பணியாளர் தேர்வு மய்யத்தின் தலைவராக இருந்த நட்ராஜ் என்பவர் வரவேற்புக் குழுத் தலைவராக இருந்து அந்தக் காரியத்தைச் செய்தார் (இது அரசின் மதச் சார்பின்மை தன்மைக்கு விரோதமானதே!)

இந்தக் கண்காட்சியில் ரவி சங்கரின் வாழும் கலை, ஆரிய சமாஜம், இஸ்கான், ஈஷா யோகா பீடம், காஞ்சி காம கோடி பீடம், மேல் மருவத்தூர் ஆதி பராசக்தி சித்தர் பீடம், பிரம்ம குமரிகள் இயக்கம், மாதா அமிர்தானந்தமயி மடம், வேலூர் நாராயண பீடம், வனவாசி சேவா, கேந்திரம், உளுந் தூர்பேட்டை சாரதா ஆசிரமம், விவேகானந்த கேந்திரா உள்ளிட்ட அமைப்புகள் இந்தக் கண்காட்சியில் பங்கு ஏற்கின்றனவாம்.

சரி, இந்த அமைப்புகள் எத்தகைய சேவைகளை செய்யத் துடிக்கின்றனவாம்?

(1) மக்கள் மத்தியில் பேதங்கள் கூடவே கூடாது; அதுவும் பிறப்பின் அடிப்படையிலான உயர் ஜாதி தாழ்ந்த ஜாதி- இவை கூடாது என்று கூறப் போகிறார்களா? பிரச்சாரம் செய்யப் போகி றார்களா?

2) தீண்டாமை க்ஷேமகரமானது என்று மறைந்த காஞ்சி சங்கராச்சாரியார் சந்திரசேகரேந்திர சரஸ்வதி திருவாய் மலர்ந்துள்ளாரே - அது தவறு; தீண்டாமை ஒழிக்கப்பட வேண்டும் என்பதுதான் எங்களின் கொள்கை என்று அறிவிப்பார்களா?

3) இந்துமதம் ஜாதியின் காரணமாக பிளவு பட்டுக் கிடக்கிறது - எனவே ஜாதி முறையைப் பின்பற்றத் தேவையில்லை என்று அதிகார பூர்வமாக அறிவிப்பார்களா?

4) இஸ்லாம் மதத்தில் இருப்பதுபோல, கிறித்துவ மதத்தில் இருப்பதுபோலவே இந்து மதத்தைச் சேர்ந்த எந்தப் பிரிவு, எந்த ஜாதியைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் கோயில் அர்ச்சகர் ஆவதற்கான பயிற்சியைப் பெற்றால் இந்துக் கோயில்களில் தாராளமாக அர்ச்சகராகலாம் என்று தீர்மானம் நிறைவேற்றிக் கொடுப்பார்களா?

5) இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் பார்ப்பனர்கள் தொடர்ந்த வழக்கை விலக்கிக் கொள்வார்களா?

6) சங்கர மடங்களில் இந்து மதத்தில் எந்தப் பிரிவைச் சேர்ந்தவர்களும் சங்கராச்சாரியாக வருவதற்குத் தடையில்லை என்று அறிவிப் பார்களா?

7) இந்து மதத்தைச் சேர்ந்தவர்கள் மத்தியில் வேறுபாடுகளை வெளிப்படுத்தும் எந்தவித மதச் சின்னங்களையும் அணியப் போவதில்லை, குறிப்பாகப் பூணூல், நெற்றியில் தீட்டப்படும் அடையாளங்கள் இவற்றைக் கைவிடுவது என்று முடிவு எடுத்துச் சொல்லுவார்களா?

8) இந்து ஆன்மீக சேவைக் கண்காட்சி என்று அறிவித்துள்ளதால், அந்தச் சேவை என்ன என்பதை வெளிப்படையாக அறிவிப்பார்களா?

9) சேரிகளில் வாழும் தாழ்த்தப்பட்டவர்களுக்கு பார்ப்பனர்கள் உள்ளிட்ட உயர்ஜாதி என்று கருதப் படும். மக்கள் மத்தியிலே வீடுகட்டிக் கொடுப் பார்களா?

இவற்றை எல்லாம் செய்யாமல் இந்து ஆன்மீக சேவைக் கண்காட்சி என்பது ஊரை ஏமாற்றும் வேலை மட்டுமல்ல, ஏற்கெனவே இந்து மதம் கடைப்பிடித்து வரும், துவேஷங்களை, ஜாதி வேற்றுமைகளை, தீண்டாமை என்னும் தீய நோயை மேலும் நீரூற்றி, எரு போட்டு வளர்ப்பதற்கான ஏற்பாடுதான் இது என்பது வெளிப்படை.

இந்து மதத்தின்மீது கடுமையான விமர் சனங்கள் இருப்பதால், அதிலிருந்து தப்பித்துக் கொள்ள இது போன்றகள் காட்சி என்னும் ஜிகினா வேலைகளில் ஈடுபடுகின்றனர் என்பதைப் பார்ப்பனரல்லாத மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் - எச்சரிக்கை! 12-2-2013

தமிழ் ஓவியா said...

தெலங்கானா நாத்திக அமைப்பு அறிவிப்பு:



இவை அச்சு அசலான மூட நம்பிக்கைகள் என்பது உங்களுக்குத் தெரியுமா!

பூதங்கள், பேய்கள். மனித மறுபிறப்பு, சுவர்க்க, நரகக் கற்பனைகள்,
மந்திரங்கள், மகிமைகள், செய்வினை ஆகியவற்றில் துளியேனும் உண்மை இல்லை.
வாஸ்து, ஜோதிடம், கைரேகை கே.பி.ஜே. லக்கி மோதிரங்கள், அதிர்ஷ்டக் கற்கள் இராசி பலன்கள் குபேர- லட்சுமி எந்திரங்கள், குடும்ப தோசங்கள் அனைத்துமே நவீன மோசடிகள், தில்லுமுல்லுகள்!
பரலோகம், கூட்டுப் பிரார்த்தனைகள் அனைத்துமே ஒட்டுமொத்த மோசடிகள்!
பாபா, சுவாமிஜீக்கள் மகிமை பெயரில் செய்யப்படும் அனைத்தும் ஜிம்மிக்குகளே! மந்திரமல்ல, தந்திரமே!!

மக்கள்=பிரஜா நாத்திக சமாஜம், மாநிலக் குழு செல்: 9959652769, 9849757222

மந்திர - தந்திர மோசடிகளை விளக்கி தெலங்கானா மக்கள் நாத்திக அமைப்பு வெளியிட்டுள்ள பிளெக்ஸ்= நெகிழிப் பதாகை.

- தமிழில்: கோரா, திருவூர் -602025, 8.2.2013

தமிழ் ஓவியா said...


தீராது


பார்ப்பனீயமும், மத ஆதிக்கமும் ஒழிந்தாலொழிய இந்தியாவில் யோக்கிய மான ஆட்சியை ஒருக்காலும் நாம் எதிர் பார்க்க முடியாது. பார்ப்பனீய மதத்தாலும், ஆதிக்கத்தாலும் நமது நாட்டுக்கு ஏற்பட்ட கெடுதிகளை எவ்வளவு காலத்திற்கு எடுத்துச் சொன்னாலும் தீராது என்றுதான் சொல்லவேண்டும்.
(குடிஅரசு, 17.8.1930)

தமிழ் ஓவியா said...


காதலர் நாள்

இன்று உலகெங்கும் காதலர் நாள் கடைப் பிடிக்கப்படுகிறது.

காதல் என்பது மனித இயற்கை - அது கட்டில் அகப்படும் தன்மையதோ என்று பாடினார் புரட்சிக் கவிஞர்.

காதல் மட்டும் அல்ல; எதுவாக இருந்தாலும் கட்டுக்கு அப்பாற் போனால் ஆபத்துதான். ஏதோ விதி விலக்காக காதல் தோல்வி அடைவதாலோ தவறுதலான புரிதலாலோ எதிர் விளைவுகள் ஏற்படுவதை முன்னிறுத்தி, காதலே கூடாது -அது ஒழுக்கக் கேடானது என்று கூக்குரல் போடுவது அசல் பிற்போக்குத்தனமாகும். காதல் இல்லாமல் பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்டு நடத்தப்பட்ட திருமணத் தம்பதிகளின் வாழ்க்கையில் புயல்கள் வீசவில்லையா!

விவாகரத்துத் திருமணம் இத்தகையவர்களிடம் தான் அதிகம் என்ற புள்ளி விவரம் - எதைக் காட்டுகிறது?

சமுதாயத்தின் பல்வேறு கேடுகளுக்குச் சரியான வளர்ப்பும், முறையான கல்வித் திட்டமும் இல்லாததே காரணம் ஆகும்.

காதல் நாளை எதிர்த்து சில சக்திகள் புறப்பட்டுள்ளன; ஆர்.எஸ்.எஸ்., இந்து முன்னணி போன்ற சங்பரிவார்கள் கும்பல் இதனைக் கையில் எடுத்துக் கொண்டுள்ளன.

இந்(து)த மதவாத சக்திகள் காதலை வெறுப் பதற்கு அடிப்படைக் காரணம், காதல் திரும ணத்தில் ஜாதிக்குச் சாவுமணி அடிக்கப்படுகிறது. மதத்திற்கு மரணக் குழி வெட்டப்படுகிறது என்பதுதான்.

ஜாதி என்பது பற்றி ஆர்.எஸ்.எஸின் வேதப் புத்தகம் என்று கூறப்படும் பஞ்ச் ஆஃப் தாட்ஸ் எனும் நூலில் கோல்வாக்கர் என்ன கூறுகிறார்?

நீண்ட காலமாக சிலர் ஜாதியை எதிர்த்து வருகின்றனர். ஜாதி அமைப்பு முறை இருந்த பழங்காலத்தில் நாம் மிக உயர்ந்த நிலையில் இருந்தோம். ஜாதி என்கிற அமைப்பு நமது முன்னேற்றத்திற்கோ, வளர்ச்சிக்கோ முட்டுக் கட்டையாக இருந்ததில்லை. அவற்றிற்கு ஆதாரமும் கிடையாது. ஜாதி அமைப்பு முறை சமுதாயத்தில் ஒற்றுமையைக் காப்பாற்றவே பயன்பட்டுள்ளது என்று கூறியுள்ளார்.

இந்த அடிப்படையிலேயே இன்றைக்கு ஆர்.எஸ்.எஸ்., உள்ளிட்ட இந்து வெறிக் கும்பல் ஜாதியை ஒழிக்கும் காதலை, காதல் திருமணங் களை எதிர்க்கும் வேலையில் ஈடுபட்டு வருகிறது.

ஜாதியைக் காப்பாற்றக் கூடியவர்களும் காதலை வெறுப்பார்கள் - எதிர்ப்பார்கள் என்பதை இன்றைக்கு நேரிடையாகக் காண முடிகிறது.

அந்த வகையில் பார்க்கும் பொழுது இந்த நவீன அரசியல்வாதிகளும் இந்த ஆர்.எஸ்.எஸ்., இந்துத்துவா கூட்டத்தைச் சேர்ந்தவர்கள்தான் என்பது அம்பலமாகி விட்டது.

ஒரு கேள்விக்கு இந்துத்துவா வாதிகள் பதில் சொல்லக் கடமைப்பட்டுள்ளனர். இவர்களின் முக்கிய கடவுளான கிருஷ்ணன் என்பவன் காதல் லீலை மன்னன் தானே?

வீட்டுக்கு வீடு கோபியர்களுடன் கொஞ்சும் படத்தை மாட்டி வைத்துக் கொண்டு வழிபடும் இவர்கள், காதலை வெறுப்பது ஏன்?

காதலைப்பற்றி தந்தை பெரியார் சொன்ன கருத்துக்களை தவறான வகையில் வியாக்கி யானம் செய்ய சிலர் புறப்பட்டுள்ளனர்.

எல்லாமே காதல் தான் - அதற்கு மேல் உலகில் வேறு எதுவும் இல்லை என்று கூறுவதைத்தான் தந்தை பெரியார் குறிப்பிடுகிறார். அது ஒரு வகையான உணர்வு - அதற்கு அளவுக்குமேல் முக்கியத்துவம் கொடுக்கத் தேவையில்லை என்று கூறும் தந்தை பெரியார் இதில் மற்றவர்கள் பிரவே சிப்பது அதிகப் பிரசங்கித்தனமும், அனாவசிய மான ஆதிக்கம் செலுத்துவதும் ஆகும் என்று குறிப்பிட்டுள்ளார்.

காதல் என்பது குறிப்பிட்ட வயது அளவு ஓர் ஆணின் - பெண்ணின் தனிப்பட்ட முடிவாகும். அது கூடாது என்பதோ, தடுப்பதோ அதிகப் பிரசங்கித் தனமும், அனாவசியமாய் ஆதிக்கம் செலுத்துவதுமாகும் என்ற தந்தை பெரியார் அவர்களின் கருத்தைத்தான் திராவிடர் கழகம் வலியுறுத் துகிறது.

கல்விக் கூடங்களில் ஆண் - பெண் மாணவர்கள் சேர்ந்து கற்கும் தன்மையைத் தந்தை பெரியார் வரவேற்கிறார் (விடுதலை 22.5.1967) என்பதையும் குழப்பவாதிகளுக்குச் சுட்டிக் காட்டுகிறோம். 14-2-2013

தமிழ் ஓவியா said...


தேவையில்லாதவர்கள்


ஆரியர்கள் இனி நம் நாட்டுக்குத் தேவையில்லாதவர்கள்; ஒழிக்கப்பட வேண்டியவர்கள். இவர்கள் இல்லாம-லிருந்தால் இந்த இழி நிலைக்கு நாம் வந்திருப்போமோ? (விடுதலை, 21.3.1954)