கவர்னர் - ஜெனரல்,
திரு.சி. இராஜகோபாலாச்சாரியார்
எழுபதாவது ஆண்டு விழாவுக்கு,
தில்லி 22-11-1948
சீரார் ஈ.வெ.ரா. அவர்களுக்கும், எனக்கும் உள்ள அக நகும் நட்பு யார் என்ன சொன்ன போதிலும் என்றும் குறையாது.
-----------------------இராஜகோபாலாச்சாரி
**************************************************************************************
பெரியார் நீடு வாழ்க!
தமிழ்ப் பேராசிரியர்
உயர் திரு. மறைமலை அடிகளார் அவர்கள்.
சாதி, சமயப் பூசல்களை யொழித்து, "எவ்வுயிரும் என்னுயிர் போல் எண்ணி யிரங்கி"த் திருவருள் நெறி நின்று ஒழுகுதலாகிய பழந்தமிழ்க் கொள்கையே சைவ நன் மக்கட்குரிய உண்மைக் கொள்கையாயிருந்தும், முப்பத்தைந்தாண்டுகட்குமுன், சொற்பொழிவாலும், நூல்களாலும் யான் அதனை விளக்கிய காலையில், அதனை எதிர்த்தும், என்னைப் பகைத்தும், எனக்குத் தீது செய்தவர்கள் சைவரிற் கற்றவர்களே. அஞ்ஞான்று எனக்குதவியாய் நிற்றற்கு எவருமில்லை. பின்னர், பெரியார் திரு. ஈ.வெ.ரா. இராமசாமி அவர்கள், யான் விளக்கிய கொள்கைகளையே மேலுந் திட்பமாய் எடுத்து விளக்கிப் பேசவும், எழுதவுந் துவக்கிய காலந்தொட்டு, ஆரியச்
சேர்க்கையால் தமிழ் மொழிக்குந் தமிழர் கோட்பாட்டிற்குந், தமிழரது வாழ்க்கைக்கும் நேர்ந்த குறைப்பாட்டைத் தமிழர் உணர்வாராயினர்.
அவரிற் கற்றவரும் என் மேற்கொண்ட சீற்றந் தவிர்வாராயினர். ஆதலால் பெரியார் இராமசாமி அவர்களின் தமிழ்த் தொண்டைப் பெரிதும் பாராட்டி அவர்கள் நீடு இனிது வாழ்கவென்று திருவருளை வேண்டி வழுத்துகின்றேன்.
----------------------------மறைமலையடிகள், 05-12-1948
*****************************************************************************************
கருத்து வேற்றுமைக்கு மதிப்பளிப்பவர்!
தமிழ்ப் பெரியார்.
திரு.வி.கல்யாண சுந்தரனாரவர்கள்.
ஈரோட்டில், சென்னை மாகாணச் சங்க இரண்டாம் ஆண்டு மாநாடு (11,12-10-1919)-ல் குழுமியது. அதன் தலைவர் திரு.லாட் கோவிந்ததாஸ், வரவேற்புத் தலைவர் திரு. ஈ.வெ. இராமசாமிப் பெரியார் நட்பை அம்மாநாட்டிலேயே யான் பெற்றேன்.
.....நாயக்கர், சென்னை மாகாணச் சங்கத்தின் உதவித் தலைவருள் ஒருவர். யான் அமைச்சருள் ஒருவன்.
டாக்டர் வரதராஜீலு நாயுடுவும், யானும், நாயக்கர் வீட்டில் தங்கினோம். நாயக்கர் தலையிலும், உடலிலும், இடுப்பிலும் பட்டணி ஒளி செய்தது. அவர் மனைவியார் தோற்றம் மணிபூத்த பொன் வண்ணமாகப் பொலிந்தது. அவர் ஜமீன்தாராகவும், இவர் ஜமீன்தாரணியாகவும் காணப்பட்டனர்.
நாயக்கர், பேச்சில் கருத்துச் செலுத்தாத காலமுண்டு. அவர் பேச்சில் கருத்து செலுத்திய பின்னர், தமிழ்நாட்டிக் காளமேகமானார். நாயக்கர் பேச்சு மழையாகும்; கன மழையாகும்; கல் மழையாகும். மழை மூன்று மணிநேரம் - நான்கு மணிநேரம் பொழியும்.
முன்னாலில் தமிழ்நாட்டில் காங்கிரஸ் தொண்டு செய்தவர் என்ற முறையில் எவர்க்கேனும் பரிசில் வழங்கப்புகுந்தால், முதற்பரிசில் நாயக்கருக்கே செல்வதாகும். தமிழ்நாட்டுக் காங்கிரஸ், நாயக்கர் உழைப்பை நன்றாக உண்டு கொழுத்தது. அவர் காங்கிரசில் வெறி கொண்டு நானா பக்கமும் பறந்து உழைத்ததை, யான் நன்கு அறிவேன். நாயக்கரும், யானும் சேர்ந்து, சேர்ந்து, எங்கெங்கேயோ தொண்டு செய்தோம். காடு, மலையேறியும் பணி புரிந்தோம்.
நாயக்கர் ஒத்துழையாமையில் உறுதி கொண்டு, பலமுறை சிறை புகுந்தார். அவ்வுறுதிக்கு இடர் விளைவித்தது சுயராஜ்யக் கட்சி. சுயராஜ்யக் கட்சியின் கிளர்ச்சிக்கு இணங்கிக் காங்கிரஸ் சட்டசபை நுழைவுக்கு ஆதரவு நல்கியதானது, நாயக்கருக்கு எரியூட்டிற்று....
..... நாயக்கர் "சுயராஜ்யக் கட்சி ஒத்துழையாமை உணர்வையே போக்கும், பட்டம் - பதவிக் கட்சியாகும்" என்பார். "தற்போது காங்கிரசில் உற்றுள்ள சோர்வை நீக்கிப் பழைய ஒத்துழையாமையை உயிர்ப்பிக்கச் சுயராஜ்யக் கட்சியை ஒரு கருவியாகப் பயன்படுத்தல் வேண்டும்" என்று யான் சொல்வேன். "மீண்டும் ஒத்துழையாமை எழுமா?" என்று அவர் கேட்பார். "அது எழுந்தே தீரும்; வேறு வழியில்லை என்று யான் உரைப்பேன். "சுயராஜ்யக் கட்சியால் பிராமணர்க்கு ஏற்றமும், மற்றவர்க்கு இறக்கமும் உண்டாகும் என்று இராம சாமியார் கூறுவார். யான் அதை மறுப்பேன்.
.... நாயக்கர் ஜஸ்டிஸ் கட்சியில் சேர்ந்து சுயமரியாதை இயக்கங்கண்டு பிரசாரம் செய்தார். அதனால், தென்னாட்டுக்குக் கேடு விளைதல் கண்டு, யான் எதிர்ப் பிரசாரம் செய்தேன். இருவர் போரையும் தென்னாடு வேடிக்கை பார்த்தது. போரிட்டோம்; பத்திரிக்கையில் போரிட்டோம். மேடையில் போரிட்டோம்; என் உடல் நலம் குன்றும் வரை, யான் முன்னணியில் நின்று போர் புரிந்தே வந்தேன். போர் உச்சம் பெற்ற காலத்திலும் நாயக்கர் வீட்டுக்கு யான் செல்வேன்; என் வீட்டிற்கு அவர் வருவார். எங்கள் நட்புக்கு குலையவே இல்லை. ஒரே மேடையில் இருவரும் பேசுவோம். அவர் கொள்கையை அவர் சொல்வார். என் கொள்கையை யான் சொல்வேன். ஒரே இடத்தில் உண்போம்; உறங்குவோம்; நட்பு முறையில் உறவாடுவோம்.
நாயக்கர் சுயமரியாதை, எனது சன்மார்க்க இயக்கத்தினின்று பிறந்தது. அதற்கும் இதற்கும் நூற்றுக்குத் தொண்ணூறு பங்கு ஒற்றுமை; பத்துப் பங்கு வேற்றுமை. எங்களுக்குள் போர் மூட்டியது. வேற்றுமைப் பகுதி ஆக்கம் பெறவில்லை. ஆக்கம் பெறாமையும், எங்கள் போர் நிறுத்தத்துக்கு ஒரு காரணம்.
இளமையில் யான் பொறுமை காப்பது அரிதாகவே இருந்தது.... காஞ்சி மாநாட்டிலே நாயக்கருக்கும், எனக்கும் உற்ற கருத்து வேற்றுமை காரணமாக அவர் "குடிஅரசு" எய்த சொல்லம்புகள், பொறுமையை என்பால் நிலை பெறுத்தின. சொல்லம்புகளை யான் தாங்கப் பெருந்துணை செய்தவர் நண்பர் நாயக்கரே.... நாயக்கர், சாதி வேற்றுமையை ஒழித்தவர்; அதை நாட்டினின்றுங் களைந்தெறிய முயல்பவர்.
வைக்கத்தில் (1924) தீண்டாமை ஒழிப்புப் போராட்டம் எழுந்தது. நாயக்கர் அங்கே சென்று சத்தியாக்கிரகஞ் செய்தார். திருவாங்கூர் அரசாங்கம் அவரைச் சிறைப்படுத்தியது. அப்பொழுது யான் "வைக்கம் வீரர்" என்ற தலைப்பீந்து, பெரியாரின் தியாகத்தை வியந்து வியந்து நவசக்தியில் எழுதுவேன். "வைக்கம் வீரர்" என்பது பெரியாருக்கொரு பட்டமாகவே வழங்கலாயிற்று.
இராமசாமியார் காங்கிரசில் தொண்டாற்றிய காலத்தில் இவர் முயற்சியால் ஈரோட்டில் இந்தி வகுப்பொன்று நடைபெற்றது. திறப்பு விழாவுக்கு யானும் சென்றிருந்தேன். தென்னாட்டில் இந்தி விதையிட்டவர் நாயக்கரே. காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில், அது செடியாகி நின்றது. காங்கிரஸ் ஆட்சி, அச்செடியைத் திடீரென மரமாக்கக் கட்டாயத்தில் இறங்கியது. "அது இஷ்டப்படி வளரலாமே" என்றார் நாயக்கர். இக்கருத்து வேற்றுமை பெருங்கிளர்ச்சித் தீயாயிற்று. நாயக்கர், கிளர்ச்சித் தலைவராக முன்னணியில் நின்றார். அவரது கெழுதகை நண்பர் இராஜகோபாலாச்சாரியார், காங்கிரஸ் ஆட்சித் தலைவராக வீற்றிருந்தார். அடக்குமுறை எழுந்தது. நாயக்கர் ஏறக்குறைய ஆயிரவருடன் சிறை புகுந்தார். அடக்குமுறையை யான் "நவசக்தி" வாயிலாக மறுத்து வந்தேன். அம்மறுப்பு, நாயக்கர் கிளர்ச்சிக்குத் துணை போயிற்று.
வைக்கம் வீரர்க்குப் பலதிற அணிகளுண்டு. அவைகளுள் ஒன்று வைராக்கியம்.
மயிலை மந்தைவெளியிலே (08-03-1924) நாயக்கரால் நிகழ்த்தப் பெற்ற சொற்பொழிவிலே இராஜ நிந்தனை இயங்கியதென்று அவர் கைது செய்யப்பட்டார். வழக்கு நடந்தது. நாயக்கர் இராயப்பேட்டையிலே தங்கினார். ஓர் இரவு "குகானந்த நிலைய"த்திலே நாயக்கர் ஒரு திண்ணையில் உறங்கினார். யான் மற்றொரு திண்ணையில் உறங்கினேன். பதினொரு மணிக்கு மழை தொடங்கியது. நண்பரை எழுப்பினேன். அவர் கண் விழிக்கவில்லை. மழை பெருகியது. மீண்டும் நேயரை எழுப்பினேன். கண்கள் மூடியபடியே இருந்தன. பெரியாரைப் பலமுறை எழுப்பி எழுப்பி பார்த்தேன். பயன் விளையவில்லை. நாலு மணிக்கு மழை நின்றது. ஆறு மணிக்கு வைக்கம் வீரர் எழுந்தார். எனக்குச் சொல்லொண்ணாச் சிரிப்பு. "மழை பெய்தது தெரியுமா?" என்று நண்பரைக் கேட்டேன். "மழையா?" என்றார். நாயக்கரைத் தீண்டியுள்ள பாம்பு, 124-ஏ வழக்கு நடப்புக் காலம்! அந்நிலையில், நண்பருக்குக் கவலையற்ற உறக்கம்! என் எண்ணம் நாயக்கர் மனத்தின் மீது சென்றது. "அவர் மனம் பொன்னா? சஞ்சலமுடையதா?" என்ற ஆராய்ச்சியில் இறங்கினேன்.
1942-ம் ஆண்டு இராமசாமிப் பெரியார் ஜெனரல் ஆஸ்பத்திரியில் படுக்கையில் கிடந்தபோது, அவரைக் காணச் சர்க்கரைச் செட்டியாரும், சண்முகானந்தசாமியும், ஜானகிராம் பிள்ளையும், யானும் சென்றோம். யான் அவர் கட்டிலிலே நெருங்கி அமர்ந்தேன். நாயக்கர் என் கையைப் பற்றிக் கதறினார். என் கைக்குட்டை நனைந்தது. இருவருங் கருத்து வேற்றுமையுடையவர்; போரிட்டவர். பெரியார் கண்கள் ஏன் முத்துக்களை உகுத்தன? அக்காட்சி கண்டவர், "இங்கே பலர் வருகிறார்; போகிறார். எவரைக் கண்டும் பெரியார் அழுதாரில்லை. இவரைக் கண்டதும் அவருக்கு அழுகை ஏன் பெருகியது? என்று ஒருவரோடொருவர் பேசியது என் காதுக்கு எட்டியது. அழுகைக்குப் காரணம் என்ன?
அஞ்சாமையும், உண்மையும் உள்ள இடத்தில் கருத்து வேற்றுமைக்கு இடந்தரல் என்ற பெருங்குணம் அமைந்திருக்கும். கருத்து வேற்றுமைக்கு இடமுள்ள நாடுதான், நாகரிக நாடாக இருக்க முடியும். கருத்து வேற்றுமைக்கு இடங்கொடாத ஆட்சி கொடுங்கோல் ஆட்சியாகத்தான், மிருக ஆட்சியாகத்தான் காட்சியளிக்கும். நாங்கள் பல்லாண்டுகளாகக் கருத்து வேறுபாடுடையவராக இருந்தும், சென்னை வந்தால், அவர் இராயப்பேட்டையிலுள்ள என் வீட்டிற்கு வருவார். நானும் அவர் அழைக்கும் போதெல்லாம் ஈரோடு செல்வேன்.
*********************************************
இராமசாமிப் பெரியார், ஈரோட்டில் பிறந்து வளர்ந்தவர். அவர் தம் புகழோ, தென்னாட்டிலும், வடநாட்டிலும் பிற நாடுகளிலும் மண்டிக் கிடக்கின்றது! காரணம் என்ன? தோழர் ஈ.வெ.ரா. வின் உண்மையும், வாய்மையும், மெய்மையுஞ் செறிந்த அறத் தொண்டாகும்.
ஈ.வெ.ரா.விடம் ஒருவித இயற்கைக்கூறு அமைந்துள்ளது. அதனின்றும் அவரது தொண்டு கனிந்தது. அஃதென்னை? அஃது அகவுணர்வு வளர்ந்து செல்லும் பேறு. இப்பேறு பலர்க்கு வாய்ப்பதில்லை. மிகச் சிலர்க்கே வாய்க்கும்.
உரிமை வேட்கை, அஞ்சாமை முதலியன ஈ.வெ.ரா.வின் தோற்றத்திலேயே பொலிதல் வெளிடைமலை.
பெரியார் கல்லூரி காணாதவர்; பாடசாலைப் படிப்புக் குறைவு. ஆனால், எவருக்கும் எளிதில் கிடைக்காத இயற்கையறிவை ஏராளமாகப் பெற்றிருக்கிறார்.
..... இவர் இயற்கைப் பெரியார். நான் என் வாழ்நாளில், இதுகாறும் செய்த ஆராய்ச்சிகளுள் அகப்படாத பல பெரியார் கருத்துக்களும், அரிய யோசனைகளும், இப்பெரியாரின் இயற்கையறிவில் உதித்திடக் காண்கிறேன்.
"தனக்கென வாழாப் பிறர்க்குரியாளன்." இது பெரியாருக்குத் தான் பொருந்தும்.
***********************************************************************************************
பிறர் செய்திராத பெரும்பணி செய்தவர்!
சர்.ஏ. இராமசாமி முதலியார் அவர்கள்.
(1928)
சென்ற நாற்பதாண்டுகளாகத் திரு. ஈ.வெ.ரா. அவர்கள், இத்தென்னாட்டில் பிரம்மாண்டமான பணியாற்றி வருகின்றவர். இன்றைய தமிழ்நாட்டில் ஒவ்வொரு வீட்டிலும் ஈ.வெ.ரா. அவர்களின் பெயர் சொந்தப் பெயராகவே உரிமையுடன் வழங்கப்படுகிறது. அவருடைய பெயரும், புகழும் தமிழ்நாட்டில் மட்டுமின்றி ஆந்திர தேசத்திலும், பம்பாயிலும், மத்திய மாகாணங்களிலும், பிற இடங்களிலும் பரவி இருக்கின்றன என்பதைப் பெருமிதத்தோடு நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்.
"எங்கெங்கே தமிழ் உணர்ச்சி தவழ்கின்றதோ, எங்கெங்கே சமூதாய சீர்திருத்தம் பேசப்படுகின்றதோ, எந்தெந்த இடத்தில் புரட்சி வாடை வீசுகின்றதோ - அங்கெங்கெல்லாம் ஈ.வெ.ரா.வின் ஒளிவீசித் திகழ்கின்றது." ஒரு சில ஆண்டுகளுக்குள் இத்தகை பரந்த செல்வாக்கு அவருக்கு எப்படி ஏற்பட்டுவிட்டது? அவருடைய வாழ்க்கை முறையில், நடைமுறைத் திட்டத்தில் இடையறாத பெருந்தொண்டில், பேச்சில், எழுத்தில் பொதுமக்களை எல்லாம் தன்பால் ஈர்க்கத்தக்க அத்தகைய தனிச் சிறப்பு என்னதான் பொதிந்து கிடக்கின்றது?
சென்ற முப்பது அல்லது நாற்பது ஆண்டுகளில், வேறு யாரும் செய்து முடிக்காத அரும்பணியை அவர் ஒருவரே ஆற்றி இருக்கிறார் என்று எல்லோராலும் சொல்லப்படுகின்றதே, அதெற்கென்ன காரணம்? பொதுநலத் தொண்டு புரிவதில் அவர் அப்படி என்ன பதைபொருளைக் கண்டுபிடித்துவிட்டார்? இதைத் தான் நாம் சிந்தித்தறிய வேண்டும்.
இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்னே நாங்களெல்லாம் கூடத்தான், சமூக சீர்திருத்தத்தைப் பற்றிப் பேசி வந்தோம். சமூக சீர்திருத்தத்தைத் தேசீய முறையில் கையாளுவதா, அல்லது ஆராய்ச்சி முறையில் கையாளுவதா என்று நாங்கள் அக்காத்தில் தர்க்கம் பண்ணிக்கொண்டிருந்தோம். நான் அந்த நாட்களையும் நினைத்துப் பார்க்கிறேன். இந்த நாட்களையும் பார்க்கிறேன். வியக்கத்தக்க பேராற்றலைப் பொதுமக்களிடத்தெல்லாம் நண்பர் நாயக்கர் எழுப்பிவிட்டதைத்தான் பார்க்கிறேன்.
அந்தக் காலத்தையும், இந்தக் காலத்தையும் ஒப்பிட்டுப் பார்க்கிறேன்; மக்களிடத்தே புது எழுச்சியைப் பார்க்கிறேன்.
நண்பர் ஈ.வெ.ரா. காலத்தையே மாற்றிவிட்டாரா என்ன?
அந்தக் காலத்தில் நாங்கள் படித்த கூட்டத்தாரைக் கொண்டு, சீர்திருத்த ஆர்வத்தை நாட்டில் எழுப்பிவிடலாம் என்று நம்பினோம். ஆனால் இராமசாமி நாயக்கரவர்கள், படித்த கூட்டத்தாரைப்பற்றிக் கவலைப்படுவதே கிடையாது. என்ன ஆனாலும் சரி, சீர்திருத்தம் மட்டும் கூடவே கூடாது என்று சூள் உரைத்துவிட்ட (படித்த) கூட்டத்தாரிடம், சீர்திருத்தப் பணியாற்றுவதில் ஈ.வெ.ரா. அவர்களுக்கு நம்பிக்கை கிடையாது; ஆம்! படிப்பு வாசனை அறியாத பாமர மக்களிடம் தம் முழுச் சக்தியையும் அவர் செலவிட்டுப் பணியாற்றி வருகிறாரே, அதிலேதான் அவருடைய வெற்றியின் ரகசியம் அடங்கி இருக்கிறது. பரிதாபத்திற்குரிய வாழ்க்கையில் உழன்று கொண்டிருக்கும் பாமர மக்களை, அவர்களுடைய நீண்ட உறக்கத்தினின்றும் தட்டி எழுப்புவது, அவர்களுடைய உள்ளத்தில் தம் கருத்துக்கள் நேரே சென்று பதியக்கூடிய வண்ணம் பேசுவது; எழுதுவது - இவற்றின் தொகுப்புத் தான், இராமசாமி நாயக்கரின் பெருந்தொண்டு.
தங்கள் வாழ்க்கையின் இலட்சியத்தை உணர வழியின்றி, எங்கும் நிறைந்த அந்தகாரத்தில் தங்களுக்கு வழிகாட்டக்கூடிய ஒளி ஒன்று கிடைக்குமா என்று வாடி வருந்திக் கொண்ட ஆயிரமாயிரம் மக்கள் வதைவதை அவர் கண்டார். சோர்ந்து போன அவர்களுடைய உள்ளங்களுக்குச் சுறுசுறுப்பை ஊட்டினார். மங்கி மறைந்து போன பகுத்தறிவு உணர்ச்சியைத் தட்டி தட்டி எழுப்பினார்; எதனையும் ஆராய்ந்து பார்க்கத் தூண்டும் சிந்தனா சக்தியை அவர்களுக்கு அளித்தார். இதைவிடச் சிறந்த தொண்டு வேறு என்னதான் இருக்க முடியும்?
எந்தக் கருத்தையும் பகுத்தறிவுக் கண்கொண்டு ஆராய்ந்து காரணகாரியத் தத்துவங்களுக்குப் பொருந்தி வருகின்றதா என்று எண்ணிப் பார்த்து அதன் பின்னரே ஒப்புக் கொள்ள வேண்டும் என்னும் உணர்ச்சியை, அவர் பாமர மக்களுக்கெல்லாம் ஊட்டிவிட்டார். உண்மை விடுதலைக்கு இதைவிட விரைவாக நம்மைச் செலுத்தும் பாதை வேறு இருக்க முடியுமா?
சமூதாய சீர்திருத்தத் துறையில் அவர் ஆற்றிய பெரும்பணி, சிந்தனா சக்தியை மக்கள் உள்ளத்திலெல்லாம் எழுப்பிவிட்டதே. சீர்திருத்த எண்ணங்களின் வளர்ச்சிக்கு மட்டுமல்ல, இந்த நாட்டின் வளர்ச்சிக்கே இப்பணி மிகமிக இன்றியமையாதது என்பதை யார் மறுக்க முடியும்?
தம்முடைய அச்சம், தயை, தாட்சண்யமற்ற - ஆணித்தரமான கண்டனங்களால் யார் யார் மனம் புண்படும் என்பதைப் பற்றி அவர் கவலைப்படுவதே கிடையாது. தாம் எடுத்துக்கூறும் கருத்துக்கள் அறிவுக்கும், ஆராய்ச்சிக்கும், அநுபவத்திற்கும் பொருந்துவனதாமா என்பதைத் தான் அவர் எண்ணிப் பார்ப்பார். மற்றபடி தம்முடைய தொண்டு யார் யார் உள்ளத்தில் என்னென்ன எதிரொலிகளைக் கிளப்பும் என்பதைப் பற்றி அவர் சிறிதும் எண்ணமாட்டார். சமூதாய சீர்திருத்தவாதி ஒருவருக்கு அமைந்திருக்க வேண்டிய சிறப்பான பண்பு - இந்த அஞ்சாத நெஞ்சந்தான். இது என்னுடைய நண்பர் இராமசாமி நாயக்கர் அவர்களிடம் பூரணமாய் அமைந்திருக்கிறது.
நண்பர் நாயக்கர் அவர்கள், இதுவரையில் வேறு யாரும் செய்திராத அளவு, மறுமலர்ச்சி இயக்கத்தை இந்தத் தென்னாட்டில் பரவச் செய்துவிட்டார். இளைஞர் உலகத்தின் முழு ஆற்றலையும், பெருந்தீரத்தையும் ஒன்றாய்க் கூட்டிக் கலந்து, பேரெழுச்சியை உண்டு பண்ணி விட்டார். இளைஞர் கூட்டம் மட்டுமன்று முதியவர் கூட்டமுந்தான் அவரால் எழுச்சி பெற்றுவிட்டது. உள்ளபடியே தம்முடைய நாட்டு வளர்ச்சியில் நாட்டம் கொண்ட ஒவ்வொருவரும் ஈ.வெ.ரா. அவர்களுக்குக் கடமைப்பட்டுத்தான் இருக்கிறார்கள்.
************************************************
பிரெஞ்சு தேசத்தில் ருசோ என்பவர் (1712 - 1778) அந்நாட்டின்
சுயமரியாதையைக் காப்பாற்ற உழைத்ததுபோல், நம் நாட்டின்
சுயமரியாதையைக் காக்க உழைக்கும் நமது நாயக்கர், 'தமிழ்நாட்டின் ருசோ' ஆவார். (1926)
********************************************************************************************
சிறந்த மனிதர்களில் ஒருவர்!
சர். ஆர். சண்முகஞ் செட்டியார் (1939)
இராமசாமிப் பெரியார் அவர்களுடைய பொதுநலத் தொண்டுகள் பலவற்றில் நான் நெருங்கிக் கலந்திருக்கிறேன். அதுமட்டுமல்ல, அவர்களோடு கால் நூற்றாண்டுக்கு மேல் அந்நியோன்யமாகப் பழகக்கூடிய நல்ல அதிர்ஷ்டத்தையும் பெற்றிருக்கிறேன். இந்தியாவில் இன்று பொதுவாழ்வில் உள்ள மிக முக்கியமான பிரபலஸ்தர்களில் பெரியார் அவர்களும் ஒருவர் என்பதைத் தயங்காமல் கூறுவேன். சென்ற 25-ஆண்டுகளாக இந்நாட்டின் பொதுவாழ்வில் முக்கியமான பங்கெடுத்துக் கொண்டிருப்பவர்களில் மிகப் பேர்பெற்ற தலைவர்கள் அனேகருடன் நெருங்கிப் பழகியுள்ள காரணத்தைக் கொண்டே நான் மேற்கண்ட கருத்தை அழுத்தமாய்த் தெரிவிக்கிறேன்.
செய்கையில் உண்மை - நீதியை நிலைநாட்டுவதில் அடங்கா ஆர்வம் - சிறிதும் தன்னலமென்பதே இல்லாத வாழ்க்கை - இவைகளே ஒரு மனிதனைச் சிறந்தவனாக ஆக்கக்கூடியனவென்றால், உண்மையிலேயே பெரியார் நம்முடைய மிகக் சிறந்த மனிதர்களில் ஒருவராவார்.
நாட்டிற்குத் தொண்டு புரிவதாகவே தம்முடைய வாழ்க்கையைப் பயன்படுத்துவதிலுள்ள அவரது ஆர்வமும், இந்திய சதூயத்திலுள்ள கேடுகளை ஒழிப்பதற்காக அவைகளுக்கெதிராய்ச் செய்து வரும் பிரசார முறைகளும், அவற்றின் மீது அவருக்குள்ள நியாயமான கோபாவேசமும், இக்காரணங்களுக்காக அவர் செய்துள்ள மகத்தான தியாகங்களும், தமிழ்நாட்டு மக்களின் உள்ளத்தில் பெரியாருக்கு ஒரு நிரந்தரமான இடங்கிடைக்குமாறு செய்துவிட்டன.
நமது நாட்டைப் போன்ற பெரும்பரப்பான ஒரு நாட்டில், குறிப்பிட்ட அளவான துறைகளில், உண்மையான தேசத்தொண்டு செய்வதற்கு இடமிருக்கிறது. பெரியார் அவர்கள், சிறப்பாகத் தமிழ்நாட்டிற்குள் மட்டும் தமது வேலையைச் செய்வதென்று நிர்ணயித்துக் கொண்டிருக்கிறார். ஆனால், இக்குறிப்பிட்ட எல்லைக்குள் அவர்கள் செய்யும் தொண்டானது அரசியல், சமூகம், பொருளாதாரம், மதம் ஆகிய பொது வாழ்க்கையின் எல்லாத் துறையிகளிலும் மிகமிகத் தீவிரமான முறையியென்றே சொல்ல வேண்டும். தாம் மேற்போட்டுக் கொண்ட இவ்வேலையினின்றும், அகில இந்தியத்தலைமையென்னும் பேராசைகளால் அவர் எக்காலத்திலம் இழுக்கப்பட்டதேயில்லை.
*****************************************************************************************
தென்னிந்தியாவிலேயே ஓர் இளைஞர்!
ரெவரண்ட் ஜான் பிட்மன் (1928)
சமூக சீர்திருத்தத் துறையில் இடைவிடாத சேவை செய்து வரும் இராமசாமி நாயக்கர் அவர்கள், தென்னிந்தியாவிலேயே ஓர் இளைஞர் ஆவார்.
******************************************************************************************
கொள்கைக்காக உயிரையும் கொடுப்பவர்!
முன்னால் முதல் மந்திரி,
பனகல் அரசர், சர்.பி. ராமராயநிங்கவாரு அவர்கள்
(1928)
மதிப்பு வாய்ந்த எனது நண்பர் தோழர் இராமசாமி நாயக்கர் அவர்கள் தற்காலத்திய பெரிய சமூக சீர்திருத்தக்காரராவார். அவர், சமூக சீர்திருத்தத்தை மிகவும் புனிதமாகக் கருதுகிறார். தம் கருத்தை நிறைவேற்றுவதில் அவர் எத்தகைய தியாகமும் செய்யத் தயாராயிருக்கிறார். எந்த ஒரு கொள்கையைத் தாம் நேர்மையானதாக எண்ணினாரோ, அதற்காக அவர் பல தடவை சிறை சென்றதும் உங்களுக்குத் தெரியும். சமூக சீர்திருத்தக் கொள்கை முற்போக்கடைய இன்னும் எத்தனை தரம் வேண்டுமானாலும் சிறைக்குப் போகவும், மற்றும் தமது உயிரையே கொடுக்கவும் அவர் தயாராயிருக்கிறார்.
தோழர். ஆர்.கே. சண்முகம் அவர்கள் தெரிவித்தது போல் சமூக சீர்திருத்தத் துறையில் பலர் அனேக வருஷம் பாடுபட்டுப் பயன்பெறாமற் போன வேலையைச் சில வஹஷத்தில் இவர் பயனளிக்குமாறு செய்துவிட்டார். அரசியல் சீர்திருத்தத் துறையில் பலர் அனேக வருஷம் பாடுபட்டுப் பயன்பெறாமற் போனவேலையைச் சில வருஷத்தில் இவர் பயனளிக்குமாறு செய்துவிட்டார். அரசியல் சீர்திருத்தத்தைவிடச் சீர்திருத்தம் இன்றியமையாதது என்பதை அவரே முதலில் கண்டவர். இந்தியா விடுதலை பெறுவதற்கு முன்னால், சமுதாய சீர்திருத்தத்தை துறையில் பெரும்பணி ஆற்றியாக வேண்டுமென்பது அவருடைய முடிந்த முடிவு.
**********************************************************************************************
ஓர் உண்மையான சிங்கம்!
முன்னால் கவர்னர்,
சர்.கே.வி.ரெட்டிநாயுடு அவர்கள்.
(1928)
தமக்கு ஒன்றை உரியதாக்கிக் கொண்டு, அதையே தம் முழு வேலையாகவுங் கொண்டு கடந்த 20-அல்லது 25-ஆண்டுகளாக வேலை செய்கிற ஒருவருக்கு, இரண்டு அல்லது மூன்று விசேஷ குணங்கள் அமைய வேண்டும். அவ்விதக் குணங்களமைந்தவர்கள் இத்தென்னிந்தியா முழுவதும் தேடினாலும், நமது நாயக்கரைத் தவிர, வேறு யாரையும் கண்டுப்பிடிக்க முடியாது. அத்தகைய குணங்கள் எவையெனில், முதலாவது தைரியம், இரண்டாவது தியாகம், மூன்றாவது தம்முடைய வேலையை எவ்வாறு நடத்தி அனுபவத்திற்குக்
கொண்டு வருவது என்பது.
தோழர் இராமசாமி நாயக்கர் அவர்களின் தைரியத்தைப் பற்றி அதிகம் விவரிக்க வேண்டியதில்லை. அவர் ஓர் உண்மையான சிங்கம்! சிங்கத்தின் இதயத்தைப் பெற்றிருக்கிறார்! வாழ்க்கையில் பயமென்பது அவருக்கு இன்னதென்றே தெரியாது. அத்தகைய பயமின்மை இருந்தாலொழிய இத்தகைய (சமூதாய சீர்திருத்தக்) காரியங்களில் யாரும் வேலை செய்ய முடியாது.
அவசியம் நேர்ந்தால், அவர் எவ்விதத் தியாகமும் செய்யத் தயாராயிருக்கிறவர். பழைய காலத்து வீரர்கள் தங்கள் ஆயதத்தை உபயோகிப்பது போல், தோழர் நாயக்கர் தமது பேனாவைப் பயமின்றி எங்கும் செலுத்துகிறவர்.
*********************************************************************************************
பெரிய தியாகி!
கப்பலோட்டிய தமிழர்,
வ.உ. சிதம்பரம்பிள்ளை அவர்கள்.
(1928)
திரு. இராமசாமி நாயக்கரைப்பற்றி, நான் அதிகம் சொல்ல வேண்டியதில்லை. அவரைப் பற்றி "அய்ரோப்பாவிலே உள்ள பார்லிமெண்டில்" பேசப்படுகிறது என்றால் நாயக்கரின் புகழைப்பற்றி நான் என்ன சொல்வது?
திரு. நாயக்கரிடத்திலுள்ள விசேஷ குணம் என்னவென்றால், மனதிற்படும் உண்மையை ஒளிக்காமல் சொல்லும் ஓர் உத்தம குணந்தான். அவரை எனக்கு 20-வருடமாய்த் தெரியும். அவரும் நானும் ஒரே இயக்கத்தில் சேர்ந்து வேலை
செய்து வந்தோம். அந்த இயக்கத்தின் (காங்கிரஸ்) நேர்மையற்றவர்கள் சிலர் வந்து புகுந்த பின், நானும் அவரும் விலகிவிட்டோம். பிறகு நாயக்கர் அவர்களால் ஆரம்பித்தது நடத்தப்பெறும் சுயமரியாதை இயக்கத்தைப் பார்த்து இது எல்லா இயக்கத்திலும் நல்ல இயக்கமாயிருப்பதால் நானும் என்னாலான உதவியை அவ்வியக்கத்திற்குச் செய்து வருகிறேன். சுருங்கச் சொல்லின், நாயக்கவர்கள் தமிழ்நாட்டின் எல்லாத் தலைவர்களையும் விடப் பெரிய தியாகி என்று தான் சொல்ல வேண்டும்.
******************************************************************************************
எங்களால் மறக்க முடியாதவர்!
ராவ்சாகிப் N. சிவராஜ் B.A., B.L., M.L.C., அவர்கள்
(1928)
********************************************************************************************
ஒரு கொள்கையாகவே தோன்றுகிறார்!
முன்னாள் அமைச்சர்,
திரு.எஸ்.இராமநாதன் M.A., B.L.,
(1930)
வைக்கம் வீரர் ஒரு மனிதரல்லர்; அவர் எனக்கு ஒரு மனிதராகத் தோன்றவில்லை. ஒரு கொள்கையாகவே தோன்றுகிறார்.
உலகத்தில் எந்தெந்தத தேசங்கள் முன்னேறியிருக்கின்றனவோ, அந்தந்தத் தேசங்களில் இவரது கொள்கை நிலவக் காணலாம். மற்றும், தீவிரமாக எந்த மக்கள் சுதந்திரப் போராட்டம் செய்திருக்கின்றரோ அந்த மக்கள் இந்தக் கொள்கையையே கொண்டிருப்பதையும் காணலாம்.
********************************************************************************************
சரியென்று பட்டதை வலியுத்துபவர்!
முன்னாள் முதன்மந்திரி,
டாக்டர் பி.சுப்பராயன் அவர்கள்
(1928)
நான் காங்கிரசிலிருந்த காலம் முதற்கொண்டு நாயக்கர் அவர்களை அறிவேன். அவர் - மற்றவர்களுடைய உணர்ச்சி எவ்வாறு பாதிக்கப்படும் என்பதை கொஞ்சமும் மதியாது, தமக்குச் சரியென்றுட்டதை வலியுறுத்திவந்த ஒரு காரணத்தாலேயே நான் அவரிடம் மாறாத அன்பு கொண்டேன். அத்தகைய ஒரு சிறந்த குணமே, இப்போது நம் மக்களின் முற்போக்கக்கு அவசியமாயிருக்கிறது.
நம்மால் கற்பிக்கப்பட்ட - மனிதனுக்கு மனிதன் உள்ள வேற்றுமையே நமது தேசத்தை நாம் ஆள்வதற்குத் தகுதியற்றவர்களாகச் செய்திருக்கிறது..... அந்த அர்த்தத்தோடுதான், இன்று இராமசாமி நாயக்கர் அவர்கள், பிராமணரல்லாதார் இயக்கத்தின் தலைவராய் விளங்குகிறார். இந்த இயக்கத்தின் முக்கிய அம்சத்தை அவர் அறிந்துவிட்டார். காலஞ்சென்ற எனது நண்பர் நாயர் பெருமாள் இவ்வியக்கத்தைத் துவக்கும் போது, சமூக சீர்திருத்தத்தையே குறிக்கோளாகக் கொண்டிருந்தார். அத்தகைய கொள்கையே, தோழர் நாயக்கர் அவர்களும் கொண்டிருக்கிறார்.
********************************
(1929)
எனது நண்பர் திரு. ஈ.வெ.ரா. இராமசாமி நாயக்கர் அவர்களால் ஆரம்பிக்கப்பட்ட இந்த (சுயமரியாதை) இயக்கம், நன்றாக வேருன்றி அசைக்க முடியாத நிலையோடு நிற்பதல்லாமல் அது பெரும்பான்மையான மக்களைத் தன்னுள் கவர்ந்து கொண்டு வருவதைக் காணக்காண, நான் அளவிட முடியாத மகிழ்ச்சியடைகிறேன்.
*******************************************************************************************************
நாயக்கர் சேவையை நாடு மறவாது!
டாக்டர் பி.வரதராஜீலு நாயுடு அவர்கள்,
(1934)
"............. ஸ்ரீ நாயக்கர் தமிழ்த் தேசத்திற்குச் செய்துள்ள ஊழியத்தை ஒருவரும் மறந்திருக்க முடியாது. பெரும் தனவந்தராகவும், ஈரோட்டு முனிசிபல் சேர்மன் தாலுக்கா, ஜில்லா போர்டு மெம்பர் ஆகிய பதவிகளையும் வகித்து உல்லாசமாயிருந்த ஸ்ரீராமசாமி நாயக்கர், 1915-ம் வருடம் முதற்கொண்டு தேசீய இயக்கத்தில் ஈடுபட்டார். கோயம்புத்தூர் ஜில்லா மாநாட்டிற்கும், சென்னை மாகாணச் சங்க மாநாட்டிற்கும் 1915, 1917- ஆகிய வருடங்களில் வரவேற்புத் தலைவராயிருந்து நாயக்கர் செய்த சேவைகளை யாவரும் அறிவார்கள். பிறகு காங்கிரசில் சேர்ந்து, ஒத்துழையாமைப் போராட்டத்தில் முன் அணியில் நின்று அவர் தொண்டாற்றியதை நாம் எடுத்துக்காட்ட வேண்டியதே இல்லை.
1924-ம் ஆண்டில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டிக்குத் தலைவராகவும், அகில இந்தியக் காங்கிரஸ் கமிட்டியில் மெம்பராகவும் இருந்து, நாயக்கர் நல்ல வேலைகளைச் செய்துள்ளார். தீண்டாமையைத் தொலைக்க வைக்கத்தில் சத்தியாக்கிரகம் செய்து சிறைப்பட்ட பாக்கியம் பெற்ற தமிழ்த் தலைவர் நாயக்கர் ஒருவரேயாவர். அரசியல் போராட்டத்தில் அவர் சிறைப்பட்டு கோயம்புத்தூர் சிறையில் 1922-ஆம் ஆண்டில் தவம் செய்தார். பிறகு காங்கிரசிலிருந்து விலகி (ஸ்ரீவரதராஜீலு நாயுடு உட்பட) எல்லாத் தேசியவாதிகளையும் எதிர்த்துப் பிரசாரம் செய்ததும், "சுயமரியாதை" இயக்கத்தை அவர் தோற்றுவித்ததும் யாவருக்கும் தெரிந்த விஷயமேயாகும். அய்ரோப்பாவில் யாத்திரை செய்து ரஷியாவைத் தரிசித்ததன் பயனாகப், "பொது உடைமை"க் கொள்கையில் இன்று வெகு தீவிரமாக இறங்கியிருக்கின்றார். அவருக்கும் நமக்கும் மாறுபட்ட கருத்துக்கள் என்னவிருப்பினும், தமக்கு நியாயமென்றுபட்ட கருத்துக்களை அஞ்சாது வெளியிடுவதில் ஸ்ரீநாயக்கர் முதல் ஸ்தாபனம் பெற்றவரென்பதை ஒருவரும் மறுக்க முடியாது. சமய - சமூக - அரசியல் துறைகளில் ஸ்ரீநாயக்கர் செய்துள்ள தியாகமும், ஊழியமும், அவர் பட்டுள்ள கஷ்டங்களும் இத்தேசத்தினர் ஒருநாளும் மறக்க முடியாதென்பதே நமது கருத்தாகும்..."
-------------------------"தமிழ்நாடு" தலையங்கம்
***************************************************
1933
"நாயக்கர் அவர்கள் நபட்டிற்குப் புரிந்த சேவையை நான் மறுக்க முடியாது. நானும், சக்கரவர்த்தி ராஜகோபாலாச்சாரியாரும், நாயக்கரும் ஒரே சமயத்தில் இரவும் பகலும் இடைவிடாமல் ஒன்றித்துப் பிரசாரம் புரிந்துவந்திருக்கிறோம். தோழர் ஈ.வெ.ரா. அவர்கள் மிகப் பரந்த நோக்கமுடைய உலக அபிமான இயக்கத்தை (International Movement) ஆதரித்துப் பிரசாரம் செய்கிறார்."
************************************************************************************************
உண்மைக் களஞ்சியம்!
சர். ஏ.டி. பன்னீர் செல்வம், பார் - அட்- லா
(1938)
நமது மாபெரும் தலைவர் பெரியாருக்குச் சத்தியாக்கிரகம், அகிம்சை, "சாகும்வரை உண்ணாவிரதம்" முதலிய வித்தைகளில் நம்பிக்கை இல்லை. ஆனால், அவர் தமக்குச் சரியெனப்பட்டதை எவருடைய தயவு தாட்சணியத்திற்கும் கட்டுப்படாது. பட்டவர்த்தனமாகச் சொல்லுவார். அது மற்றவர்களுக்குப் பிடிக்குமோ, பிடிக்காதோ அதைப்பற்றி அவருக்குக் கவலையே கிடையாது. தம் கருத்தைப் பற்றி மற்றவர்கள் என்ன எண்ணுவார்ககளோ என்ற பயம் அவருக்கு இருப்பதே இல்லை.
நமது பெரியார் அவர்கள் ஒரு மகாத்மாவல்ல. ஆனால், தாம் நினைத்ததைச் சாதிக்கும் ஒரு நேர்மைவாதி. அவருடைய அபிப்பிராயங்கள் ஆணித்தரமானவை. ஆனால், அவர் பிடிவாதக்காரரல்ல. தம் காரியத்தைச் சாதித்துக் கொள்வதற்காக அவர் பட்டினி கிடப்பதில்லை; "சாகும்வரை உண்ணாவிரத"மிருப்பதில்லை. நேர்மையான வழியிலேயே பாடுபடுவார். காங்கிரஸ்காரருக்கு வார்தா எப்படியோ, அப்படியே திராவிடருக்கு ஈரோடு. அவர்கள் வார்தா போவது போல, நாம் அறிவுரை கேட்க ஈரோடு வருகிறோம். பெரியார் தமிழ்நாட்டின் உண்மைக் களஞ்சியம்!
*****************************************************************************************
முதலமைச்சராயிருக்க உரிமையுடையவர்!
திருவாங்கூர் முன்னாள் திவான்,
சர். சி.பி. இராமசாமி அய்யர் அவர்கள்
(1945)
ஈ.வெ.ராமசாமி நாயக்கர் அவர்கள், வெகுவாக மதிக்கப்படுகின்ற ஒரு பார்ப்பனரல்லாத தலைவர். இந்நாட்டின் பிற பகுதிகளிலிருந்து தமிழ்நாட்டைத் தனியாகப் பிரித்துவிடவேண்டுமென்பதைப் பகிரங்கமாகவே அவர் சொல்லி வருகிறார். அத்தகைய தீர்மானம் ஒன்று, சமீப காலத்தில் நடைபெற்ற சேலம் ஜஸ்டிஸ் மாநாட்டில் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. பாகிஸ்தானைப் போலவே தமிழ்நாடும் ஒரு சுதந்திர அரசாங்கத்தைக் கொண்ட தனிநாடாகவே அவரால் சித்தரிக்கப்படுகிறது. இன்றைய நிலைமை அடிப்படையாய்க் கொண்டு பார்த்தால் பாகிஸ்தானத்தில் முதல் அமைச்சராக இருப்பதற்கு ஜின்னாவிற்கு எவ்வளவு உரிமை உண்டோ, அவ்வளவு உரிமை தமிழ்நாட்டின் தனி ஆட்சியில் இராமசாமி நாயக்கருக்கு உண்டு.
*************************************************************************************
பெரியார் இராமசாமி!
முன்னால் அமைச்சர்,
அட்வகேட், S.முத்தையா முதலியார் அவர்கள்
"பெரியார் இராமசாமி"க்குக் கருத்துரை தர, திருவாளர் சிவப்பிரகாசத்தின் வேண்டுகோளை உவப்புடன் ஏற்கிறேன்.
"மகாத்மா" வெனுஞ் சொல் காந்தியாருக்கே சிறப்புப் பெயராக உரிதாய்விட்டது போல், "பெரியார்" எனும் சொல் "ஈ.வெ.ரா" வுக்கே இந்நாட்டில் உரிதாய்விட்டது. பத்தாண்டுகளுக்கு முன் நடந்த இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் ஈ.வெ.ரா. சிறை சென்று, காங்கிரசு கவர்ன்மெண்டின் காருண்யத்தினால் பெல்லாரி ஜெயிலில் வதியும் பொழுது, கடற்கரையில் தீவிரமாய் நடக்கும் கூட்டங்களொன்றில் நான் பேசுகையில், வடநாட்டுத் தலைவரை "மகாத்மா" வென்று அழைப்பதுபோல், தென்னாட்டுத் தலைவரை அதற்கீடான "பெரியார்" என்றே அழைக்கவேணும், அச்சொல் அவருக்கே தனிச் சொல்லாக வழங்கவேணுமென்று சொன்னது, இப்பொழுது ஞாபகம் வருகிறது. அச்சொல் நிலைத்தது பற்றி மகிழ்ச்சி. அச்சொல்லைத் தலையாகக் கொண்ட நூல் வருவது, மேலும் மகிழ்ச்சி.
இவ்விருவர்களுக்குமுள்ள பொருத்தங்களில் சிலவற்றைக் குறிப்பிடுகிறேன். மகாத்மா, தம் தொழிலையும், பதவிகளையும் விட்டுப் பொதுநல ஊழியத்தில் ஈடுபட்டார். அப்படியே பெரியாரும், தம் பெரிய லாபகரமான வியாபாரத்தையும், பல பொது ஸ்தாபனங்களில் தலைவர், அங்கத்தினர் என்ற பதவிகளையும் உதறித் தள்ளிவிட்டு வெளியேறினார். அன்னிய ஆங்கிலேய ஆட்சியை ஒழிக்க, இருவரும் பலமுறை சிறை சென்றுள்ளார்கள். மகாத்மாவின் மனைவி ஸ்ரீமதி கஸ்தூரியம்மையாரும் மகாத்மாவைப் பின்பற்றிச் சிறை சென்றார். பெரியாரின் மனைவி ஸ்ரீமதி நாகம்மையாரும் அவ்வாறே. காந்தியாரும் கதர் நூல் நூற்றார். பெரியார் நூலும் நூற்றார்; மூட்டை தலையில் தாங்கி கதரும் விற்றார். மகாத்மா அகிம்சா தர்மத்தையும், சாத்வீகத்தையும் கையாண்டார். பெரியாரும் அக்கொள்கையை ஏற்று, அவ்விதமே நடக்க அறிவுரை செய்கிறார்.
இவர்களுக்குள்ள மாறுபாடுகளையும் சில சொல்லுகிறேன்.
மகாத்மா எளிய வாழ்வென்று சொல்லிக் கொண்டு மன்னரும் மகிழக்கூடிய சுகவாழ்வு வாழ்ந்தார். குறிப்பிட்ட நேரத்தில் நிமிஷம் தவறாமல் ஸ்தானம், உணவு, பானம், நடை, வேலை, உறக்கம் முதலியன. ஆட்டுப் பால் என்றால் ஆடே உடன் பிரயாணம் செய்ய வேண்டும். பழங்கள், பருப்புகள் முறைப்படி தவறாமல் எக்காலத்திலுமுண்டு. பணிவிடையாட்கள் பல பேர். டாக்டர் எப்போழுதும் கூடவே பிரயாணமென்றால் தகுந்த முன்னேற்பாடு, பரிவாரங்கள், வேலையாட்கள், காரியதரிசிகள் உட்பட எவரும். 3 வது வகுப்பு வண்டி பிரயாணமென்றால் வண்டி முழுமையும் சில சமயங்களில் தனி இரயில்ககள் கூட. சென்ற இடங்களிலெல்லாம் அரண்மனையையொத்த விடுதிகள். பங்கி காலனியானாலும் முன்னதாகவே லட்ச ருபாய் செலவில் வசதிகள் செய்தபிறகு! நடக்கும் பொழுது கைலாகு கொடுத்துத் தாங்கி நடப்பவர்கள் பலர். எட்டியிருந்து பார்ப்பவர் சொல்வது இது. கிட்டவிருந்து பழகுபவர்கள் சொல்வது பலவிருக்கலாம்.
பெரியார் கதையென்ன? எளிய வாழ்வு என்று சொல்லிக் கொள்ளாமல், வறியவனும் வெறுக்கக்கூடிய வண்ணம் பாடுபடுகிறார். கிடைத்ததை உண்பதும், கண்டதைக் குடிப்பதும், கிடைக்காவிட்டால் பட்டினியுமே. ஸ்நானம் 4, 5- நாட்களுக்கு இல்லாமலே போனாலுமே போய்விடும். கூப்பிட்ட இடத்திற்குப் போக வேண்டியது. (பிறர்) நினைத்த நேரத்திலெல்லாம் தொண்டை காய்ந்து கால் கடுக்கும் வரையில் பேச வேண்டியது. 3-வது வகுப்புப் பிரயாணம்தான். ஆனால், மூச்சுவிடக்கூட இடமிருக்காத கூட்டம். தப்பித் தவறி மேல் வகுப்புக்குப் போனால் அங்கும் அப்பொழுதும் அதே அவஸ்தைதான். பரிவாரம் ஒன்றுமில்லை. தம் பையைத் தாமே தூக்கிக் கொள்ளவேணும். தளர்ச்சி அதிகரிக்க துணையாகச் சகா ஒருவர் இருவர் - இவ்வளவு தான். சென்றவிடயங்களில் அனேகமாய்த் தோப்போ, திடலோ, ரயிலடியோ அல்லது போகும் வண்டிதானோ! எங்காவது ஜாகை, சௌகரியமிருந்தால், அங்கும் 20-பேர் கூட்டம். உறங்க, ஓய்வெடுக்க இடமில்லாமல்! டாக்டர் என்றால் விரோதி. மருந்தென்றால் விஷம். வரவர இப்பொழுது தான், தன்னுடம்பும் தசை, நரம்புகளாலானதுதான் என்ற எண்ணமுண்டாகியது.
காங்கிரசில் முழுமையும் ஈடுபட்டு நடந்துவரும்பொழுது, காஞ்சீபுரம் மாநாட்டில் இந்த ஸ்தாபனத்தினால் தமிழருக்கு நலன் கிடைக்காது; திராவிடனுக்குத் தாழ்மையும், தீமையுந்தான் உண்டாகுமென்று இவரும், திரு.வி. கல்யாணசுந்தர முதலியாரும் கண்டு கொண்டார்கள். பெரியார் அதைவிட்டு அப்பொழுதே விலகினார். திரு. வி.க. - திருத்தலாமென்ற எண்ணங்கொண்டு அங்கே இருந்தார். அவருக்கும் பின்பு நினைவெல்லாம் கனவாகிவிட்டது. இருவரும் மறுபடியும் ஒன்று சேர்ந்துவிட்டார்கள். திராவிடஸ்தான் பிரிவினையிலும், இந்தியெதிர்ப்பிலும் இருவரும் ஒத்துழைக்கிறார்கள். வெற்றி கிடைக்குமென்ற நம்பிக்கை நம்பிக்கை அதிகரிக்கிறது. தென்னாடு தனிநாடாகி, தமிழும், தமிழனும் தழைத்து மகிழும் நாள் கிட்டுகிறது. ஆண், பெண் ஒவ்வொருவரும் தழைத்து மகிழும் நாள் கிட்டுகிறது. ஆண், பெண் ஒவ்வொருவரும்உணர்ச்சியுடனும் ஊக்கத்துடனும் செயல்புரிய வேண்டும். (20-11-1948)
**********************************************
நம் மதிப்பிற்குரிய தலைவர் ஈ.வெ.இராமசாமி அவர்கள் தலைமையேற்று உயிர் நாடியாயிருந்து வேலை செய்துவரும் திராவிடர் கழகத்துக்குத் திராவிட நாட்டுப் பிரிவினையையே அதன் முக்கியக் கொள்கையாக அமைத்துவிட்டார். அதற்குப் பெருத்த ஆதரவு கிடைத்து விட்டதென்பதோடு, அதன் கொள்கையும் நன்கு பரவி, பொதுமக்களுடையவும், இதர அரசியல் ஸ்தாபனங்களைச் சேர்ந்தவர்களுடையவும் ஒருமித்த ஆமோதிப்பைப் பெற்றுவிட்டது மகிழ்ச்சிக்குரியதொன்றாகும்.
*********************************************
சுதந்திரத் திராவிடத் தனியரசுக்குப் பெரியார் இராமசாமியவர்கள் பெரும் போராட்டம் துவக்கி நடத்தி வருகிறார்கள். பெரியாரோடு கருத்து வேறுபாடு கொண்டு நிற்போர்கூட, இந்த நிலையில் வினயமாக ஆலோசித்து சுதந்திரத் திராவிடத் தனியரசு பெற அவருடன் ஒத்துழைக்க முன்வர வேண்டியது அவசியம் (1947)
*******************************************************************************************************
நீண்ட காலம் வாழ்வாராக!
முன்னால் உயர்மன்ற நீதிபதி.
மலையாளம், M.கோவிந்தன். B.A.,B.L.,
(1929)
உலகத்திலுள்ள எல்லா மக்களும் ஒரே ஜாதியினர் என்று உபதேசித்த காலஞ்சென்ற பெரியார் ஸ்ரீநாராயண குருசாமி அவர்களால் இவ்வுண்மை மலையாளம் என வழங்கப்படும் நாட்டில் நன்கு உணரப்பட்டது. மக்கள் அனைவரும் சகோதரர்களென்பதே அவரது மதத்தின் சாரம். இவ்வுண்மையை உள்ளபடி நன்கு உணர்ந்த திரு.கே. அய்யப்பன் என்னும் பிறர்க்கென வாழும் வாலிபர், இவ்வுபதேசத்தைப் பரப்பி வருகின்றார்.
மேற்கு மலைத் தொடர்ச்சிக்குப் பக்கத்தே என் நண்பர் திரு.ஈ.வெ.இராமசாமியார் மற்றெவரையும் விட நன்றாக இவ்வுண்மையை உணர்ந்து, ஜாதி என்னும் பேயைப் போராடி ஒழிக்கத் தமது ஆயுள் முழுவதிலும் உழைக்கத் தயாராக முன்வந்துள்ளனர். திரு. இராமசாமியார் பலசாலி என்பது உங்கட்குத் தெரியும். சுதந்திரத்திற்காக நன்றாகப் போராடுபவர்.
வைக்கம் சத்தியாக்கிரக நாட்களில், யான் இவருடன் முதன்முதல் அறிமுகமானேன். வைக்கம் சத்தியாக்கிரகத்திற்கு இவரே உயிராக இருந்தார். அந்நீண்ட தொடர்ச்சியான போரைச் சித்தியேற்படும் படியான முடிவிற்குக் கொண்டு வந்துவிட்டுத் திரு. இராமசாமி சுயமரியாதை இயக்கத்தைத் துவங்கினார். ஏனைய நடவடிக்கைகளையும் அவர் நடத்தி வைத்தார். இவர் அழுத்தமான காங்கிரஸ்வாதியாகவும், ஒத்துழையாமையிலீடுபட்டவராகவும் இருந்தார். அரசியல் துறையில் அவர் ஆற்றிய சேவையைப்பற்றி நாங்கள் அவ்வளவு தெரிந்தவர்களல்ல. அவரது மனம், இப்போது மிகவும் முக்கியமான சமூதாயத்துறையிலீடுபட்டிருக்கிறது. கோட்டயத்தில் நடைப்பெற்ற எஸ்.என்.டி.பி. மாநாட்டில் 10.000- க்கு அதிகப்பட்ட மக்கட்கு இவர் சுயமரியாதை இயக்கத்தின் தத்துவங்களைப் பற்றிச் செய்த சொற்பொழிவை யான் கேட்டேன்.
சொற்பொழிவு எளியதாகவும், நேரானதாகவுமிருந்தது. அவரது வாயினின்றும் வந்த ஒவ்வொரு சொல்லும் உண்மையுணர்வோடு வந்தது. மிகக் கவனத்துடன் மக்கள் கேட்டனர். எனது சுயமரியாதை விதைகள் முளை கண்டிருந்ததானது, இவரால் போஷிக்கப்பட்டன. மிகுந்த விளைவு கட்டாயம் ஏற்படும். நல்ல காலத்திலேயே இவர் இங்குச் "சுயமரியாதை" இயக்கத்தைத் துவக்கினார். செல்வாக்குடையவர்கள் இவரைப் பின்பற்றுகின்றனரென்பதை, யான் பார்க்கிறேன்.....
இந்நாட்டிலே களங்கமற்ற கோடிக்கணக்கான மக்களுக்குப் பிறப்பினால் ஏற்பட்டிருக்கும் அநீதியான தடை நீக்கவும், ஒவ்வொரு மனிதனும் யாதொரு தடையுமின்றி முன்னேற்றமடையச் சமயமும், வசதியுமளிக்கவும், நாகரிக உலகத்தால் எள்ளி நகையாடப் பாத்திரமாகவிருக்கும் தாழ்ந்த நிலைமையிலிருந்து இந்தியாவை முன்னேற்றவும் திரு. இராமசாமியார் சுயமரியாதை இயக்கத்தைத் துவங்கினார். முன்னரே அவ்வியக்கம் பரவி இம்மாகாணத்தின் பல பாகங்களில் வேரூன்றிவிட்டது. இப்போதிருக்கும் பொதுஜன இயக்கமென்பதையும் விட இவ்வியக்கம் நன்கு நடவடிக்கை எடுத்து வருகின்றது. மக்களைப் பிளவுப்படுத்தும் தடைகளையொழித்துச் சித்தி பெறுமென்பதும், மக்களை அய்க்கியப்படுத்துமென்பதும் திண்ணம்.
இயக்கத்தைச் சித்தியான முடிவுக்குக் கொணரப் பணியாற்றவும், ஒற்றுமைப்பட்ட இந்திய மக்களின் உன்னத நிலையைக் கண்டு களிக்கவும், திரு. ராமசாமியார் நீண்ட காலம் உடல் நலத்துடனும், வன்மையுடனும் வாழ்வாராக!
*************************************************************************************************
-------------------------------------நூல்:- சாமி சிதம்பரனார் எழுதிய “தமிழர் தலைவர்” நூலிலிருந்து 9 ஆம் பதிப்பு பக்கம் 199-226
-------------------------------------நூல்:- சாமி சிதம்பரனார் எழுதிய “தமிழர் தலைவர்” நூலிலிருந்து 9 ஆம் பதிப்பு பக்கம் 199-226