Search This Blog

4.2.13

வள்ளலார் ஜோதி ஆகிவிட்டாரா?பிராமணர்கள் காய்கறி உணவாளர்கள் ஆனது எப்போது?

வள்ளலாரின் நினைவு நாளைப்பற்றி தகவல் வெளி யிட்ட ஒரு நாளேடு வடலூர் வள்ளலார் ஜோதியான நாள் என்று குறிப்பிட்டுள்ளது.

ஜோதி ஆவது என்றால் என்ன? வள்ளலார் பிந்தைய காலத்தில் புதுத் தெளிவு பெற்று ஆகமம் உட்பட பல மூடநம்பிக்கைகளைத் தோலுரித்து வெளுத்துக் கட்டினார். ஆறாம் திருமுறை யைப் படித்தவர்கள் நன்கு அறிவர்.

கண்மூடிப் பழக்கமெல்லாம் மண் மூடிப் போக! என்றார்; அத்தகைய வள்ள லாரை ஜோதியாகி விட்டார் என்று எழுதுவது குறும்புத் தனமா - பார்ப்பனத்தனமா?

தந்தை பெரியாரோ திராவிடர் கழகமோ இல்லை என்றால் மகாவிஷ்ணு 11ஆம் அவதாரமாக கோட்சே உரு வில் தோன்றி மகாத்மாவை அழைத்துக் கொண்டார் என்று புதுக்கதை கட்டியி ருக்க மாட்டார்களா?

சிதம்பரத்தில், நந்தனுக்கு என்ன நடந்தது? சிதம்பரம் நடராஜனை நேரில் சென்று தரிசிக்க வேண்டும் என்று நந்தன் விரும்பினார். சாத்திர  ஆகமத் தடைகள் குறுக்கே நின்றன.

சிவன், சிதம்பரம் தீட்சதர் கள் கனவில் தோன்றி நந் தனை தீக்குளித்து வர ஏற் பாடு செய்தான்; அவ்வாறே நந்தன் தீக்குளித்து எழுந்த  போது பிராமண வடிவத் தில் காணப்பட்டானாம்.  (நியாயமாக சிவன் நந்தன் கனவில் தோன்றியிருக்க வேண்டாமா? அங்கேதான் இருக்கிறது சூழ்ச்சி!)

என்ன கதை இது! நந்தனை பிராமண வடிவத்தில் தான் தரிசிக்க அனுமதிக்க வேண்டுமா? நந்தன் கட வுளின் படைப்பு இல்லையா! (எல்லாம் அவனால் படைக் கப்பட்டது தானே!)

பெத்தான் சாம்பான் என்ற ஆதி திராவிடர் தோழர் சிவபக்தன், நந்தனைப் போல நாள்தோறும் விறகு வெட்டிக் கொண்டு வந்து அதன்மூலம் மடப்பள்ளியில் சமையல் நடந்தது - அதன் காரணமாக பெத்தான் சாம்பானுக்கு மோட்சம் கொடுக்கச் சொல்லி, தில்லை மூவாயிரவருள் ஒருவரான சிவாச்சாரியார் என்பவருக்கு சிவ பெருமான் ஒரு சீட்டோலை எழுதி அனுப்பினானாம்.
என்ன நடந்ததாம்? அந்த பெத்தான் சாம்பான் செத்துக் கிடந்தாராம். கொலைக் குற்றம் சிவாச்சாரியார்மீது விழுந்தது.

நான் கொலை செய்ய வில்லை; மோட்சம்தான் கொடுத்தேன் என்றானாம். அந்தச் சிவாச்சாரி.

திருஷ்டாந்தரமாக அங்கிருந்த ஒரு முள்ளிச் செடியைத் தீப்பற்றி எரியச் செய்து, அந்தச் செடிக்கு மோட்சம் அளித்து தன் திறமையை நிரூபித்து, அக்  கொலைக் குற்றத்திலிருந்து நீங்கினாராம்.

இவை நம்பத் தகுந்தவை யல்ல என்பது கடுகு மூக்கு முனை அளவுக்குச் சிந்திப் பவர்களுக்கும் விளங்குமே காந்தியார் படுகொலை செய்யப்பட்டு இறந்தார் என்பது எல்லோருக்கும் தெரியும். பிஜேபி மத்தியில் ஆட்சியில் இருந்தபோது பாடத் திட்டத்தில் காந்தியார் மரணமடைந்தார் என்று எழுதவில்லையா?

படு கொலையைத் தந்திரமாக  எப்படி மறைத்துள்ளனர்! விழித்துக் கொண்டிருக்கும் போதே விளையாடும் திருடர் என்று புரட்சிக் கவிஞர் எவ்வளவு அழகாகப் பாடியி ருக்கிறார்?

-----------------------------------------   மயிலாடன் அவர்கள் 4-2-2013 “விடுதலை” யில் எழுதிய கட்டுரை
*********************************************************************************

விஸ்வரூபம் படத்தில் வரும் பிரச்சினைக் குரிய சில காட்சிகள் பற்றி இஸ்லாமியருக்கும், படத் தயாரிப்பாளருக்கும் இடையே ஓர் ஒப்பந்தம்  ஏற்பட்டு, இனி படம் வெளிவரத் தடையில்லை என்ற ஒரு சூழ்நிலை வந்து, அரசும் தடை யுத்தரவை ரத்து செய்துள்ளது. இப்போது, திடீரென கிடப்பது கிடக்கட்டும்; கிழவியைத் தூக்கி மணையில் வை என்பதுபோல், திடீ ரென்று தமிழ்நாடு பிராமணர் சங்கத்தவருக்கு ரோஷம் பொத்துக் கொண்டு வந்து சென்னை காவல்துறை ஆணையரிடம் இவாள் தங்களது சங்கத்தின் சார்பில், பிராமண  சமூகத்தின் கலாச்சாரத்தைக் கேலி செய்வதுபோல் சில காட்சிகள், சில வசனங்கள் விஸ்வரூபம் படத்தில் உள்ளன என்று புகார் மனு கொடுத்து அக்காட்சிகளை நீக்கிவிட வேண்டும் என்று கோரிக்கையும் விடுத்துள்ளனர்!

அந்தக் காட்சி என்னனாண்ணு  அவாள்  சொல்றான்னு நோக்குத் தெரியுமோ?

நடிகர் கமல்ஹாசன் திரைக்கதை இயக்கத்தில் வெளிவர உள்ள விஸ்வரூபம் படத்தில் எங்களது பிராமண சமூகத்தின் கலாச்சாரத்தைக் கேலி செய்வதுபோல் சில காட்சி வசனங்கள் உள்ளன.

அமெரிக்கா போன்ற வெளிநாடுகளில் பார்த்த பலர்; கதாநாயகி பிராமண சமூகத்தைச் சார்ந்த பெண் என்றும், ஒரு காட்சியில் கமல் அவளுக்கு மாமிசம் சமைத்துக் கொடுப்பது போலவும் இருப்பதாக எங்களிடம் கூறினர்.

இது திரைக்கதைக்குத் தேவையற்றது. இந்தக் காட்சிகள் பிராமண சமூகத்தின் பழக்க வழக்கங்களை கொச்சைப்படுத்துவதுபோல் உள்ளது. எனவே நீக்க வேண்டும், இதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்கள்!

பிராமண சமூகத்துப் பெரியவாள்களே, சின்னவாள்களே, உங்களுக்கு உங்களது பாரம்பரியம் கலாச்சாரம் என்ன என்பது மறந்துவிட்டதா?
வேதம், சதபத பிரமாணம், இராமாயணம், மஹாபாரதம் - இத்தியாதி இத்தியாதி உங்கள் கலாச்சாரத்திற்கு வேர்கள் தானே?

யாகக் கலாச்சாரம் ஆரியக் கலாச் சாரம்தானே! அவை அத்தனையிலும் யாகத்தில் பசுக்களையும், பிராணிகளையும், குதிரைகளை யும் வெட்டி கொன்று அப்படிக்கூட இல்லாமல் ஆடுகளின் அவிர்ப் பாகங்களுக்காக, அவற்றின் விதைகளை அழுத்தி ஹிம்சித்து (அப்போதுதான் உறுப்புகளின் சுவை குன்றாமல் இருக்குமாம்; என்னே மாமிச ருசி!) உயிர்களைக் கொன்று யாகம் நடத்தும் முறை சிவானந்த சரஸ்வதி எழுதிய ஞானசூரியன் அட்டைப் படத்தில் அப்படியே போடப்பட்டுள்ளதே - அதை ஏன் பிராமண சங்கத்தவர்கள் வசதியாக மறந்து விட்டார்கள்?

பார்ப்பனர்கள் காய்கறி சாப்பிடும் பழக்கத்தை, மகாவீரர், புத்தர் ஆகிய சமண, பவுத்தப் பிரச்சாரங்களுக்குப் பிறகுதான் என்பதை எவராது மறுக்க முடியுமா? (இந்துமதம் எங்கே போகிறது? - அக்னி ஹோத்திரம் ராமானுஜ தாத்தாச்சாரியார் - காண்க பக்கம் 25-26)

வால்மீகி இராமாயணத்தில் எத்தனை வகை மாமிசத்தை காட்டில் சாப்பிட்டான் ஸ்ரீராமபிரான் என்பதை எந்த பிராமணர் சங்க நிருவாகியாவது மறுக்க முடியுமா?

மஹாபாரதத்திலும் பார்ப்பனர்கள் இறைச்சி -மாமிசம் சாப்பிடும் காட்சிகள் இல்லையா?

அது அப்போது; இப்போது அப்படி இல்லை என்றாவது சங்கத்தவர் மறுக்க முடியுமா? காலஞ்சென்ற இதயம் பேசுகிறது மணியன் தனது வெளிநாட்டுச் சுற்றுப் பயண அனுபவங்களைப்பற்றி எழுதி வந்த போது, ஒரு செய்தியைக் குறிப்பிடத் தவறவில்லை.

அமெரிக்காவில் இவரை வரவேற்ற பார்ப்பன நண்பர், இவருக்கு காய்கறி சாப்பாடு போட்டுவிட்டு, அவர் மாட்டு  மாமிசம் - (க்ஷநநக) பசு மாட்டிறைச்சியை  வறுத்து  சாப்பிட்டபோது,  மணியன் ஏன் ஓய், நீர் இப்படி மாட்டிறைச்சியை (பீப்பை) சாப்பிடலாமோ? என்று கேட்டபோது, அவர், மிஸ்டர் மணியன், நான் சாப்பிடுவது இந்தியாவின் ழடிடல ஊடிற இந்திய புனித பசு அல்ல; மாறாக அமெரிக்க ஊடிற பசு மாமிசம்தான். இந்தியன் ஊடிற தானே சாப்பிடக் கூடாது என்று சொன்னது இவரைத் தூக்கி வாரிப் போட்டது என்று கூறியுள்ளார்!

இன்றும் முட்டை, கோழிக்கறி,  ஆட்டுக்கறி, மீன் இவற்றை பார்ப்பனர்கள் சாப்பிடும் பழக்கமில்லை என்று கூறி விட முடியுமா பி.சங்க.பிரமுகர்களால்?
அவ்வளவு தூரம் போவானேன்? மேற்கு வங்கத்திற்குச் சென்று விஜிட்டேரியன் ஹோட் டல்களில் உணவு உண்ணட்டுமே!

அங்கே மீனே விஜிட்டேரியன் அய்ட்டம் தானே?

பேனர்ஜி,  முக்கர்ஜி, சட்டர்ஜி என்ற ஜியில் முடியும் அத்தனை வங்கத்துப் பார்ப்பனர்களும் மற்றும் அடுத்த பெரிய ஜாதியான காயஸ் தர்களும் மீன் உணவை சர்வ சாதாரணமாக சாப்பிடுகின்றனரே அங்கே!

எனவே இப்படி குறுக்கு வழியில் பி. சங்கத்திற்கு  விளம்பரம் தேட முயற்சிப்பது நல்லதோ!

இந்து மதக் கடவுள்கள் பல மிலிட்டரி ஓட்டல் கடவுள்கள்தானே?

 --------------- ஊசி மிளகாய் 4-2-2013 “விடுதலை” யில் எழுதிய கட்டுரை

9 comments:

தமிழ் ஓவியா said...


திராவிட இயக்க நூற்றாண்டு மலர்


திராவிட இயக்கத் தமிழர் பேரவையின் சார்பில் அதன் பொதுச் செயலாளர் மானமிகு சுப. வீரபாண்டியன் அவர்களின் முயற்சியால் திராவிட இயக்க நூற்றாண்டு சிறப்பு மலர் ஒன்று காலங்கருதி வெளியிடப்பட்டுள்ளது.

அதன் வெளியீட்டு விழா சென்னையில் 2.2.2013 மாலை நடைபெற்றது. தி.மு.க. பொருளாளர் மானமிகு மு.க. ஸ்டாலின் அவர்கள் அதனை வெளியிட்டார்.

திராவிட இயக்கமும், தமிழ்த் தேசிய உணர்ச்சியும் (க. திருநாவுக்கரசர்), திராவிட இயக்கமும் வகுப்பு வாரி உரிமையும் (கலி. பூங்குன்றன்) திராவிட இயக்கமும் தாழ்த்தப்பட்டோரும், (ஆ. இராசா), திராவிட இயக்கமும் மதவெறி எதிர்ப்பும் (அருணன்), திராவிட இயக்கமும் பெண் விடுதலையும் (பேராசிரியர் கு. இராமாத்தாள்), திராவிட இயக்கமும், மொழிப் போரும் (பேராசிரியர் அ. இராமசாமி) திராவிட இயக்கமும் பகுத்தறிவும் (பேராசிரியர் ந.க. மங்களமுருகேசன்) திராவிட இயக்கமும் பார்ப்பனீய எதிர்ப்பும் (வசந்தி ஸ்டான்லி), திராவிட இயக்கமும் நாடகக் கலையும் (பேராசிரியர்மு. இராமசாமி) ஆகிய கட்டுரைகள் சிறப்பு மலரில் இடம் பெற்றுள்ளன.

திராவிட இயக்க நூற்றாண்டுக் கால கட்டத்தில் திராவிடத்தால் வீழ்ந்தோம் என்று ஆரிய ஆதிக்கத்தின்மீது விழும் அடியைத் தடுத்தாட் கொள்ளும் ஒரு பணியில் ஒரு சிலர் ஈடுபட்டுக் கொண்டு இருக்கின்றனர்.

பார்ப்பன ஊடகங்கள் இத்தகையவர்களைத் தாங்கிப் பிடிப்பதை எளிதில் அறிந்து கொள்ள முடியும்.

பேராசிரியர் சுப. வீரபாண்டியன் அறிமுகவுரையில் கூறியதுபோல வார்த்தைகளுக்காக அர்த்தத்தை அகராதியில் தேடிக் கொண்டு இருப்பதைத் தவிர்த்து யதார்த்த மக்கள் வாழ்வில் தேடிட வேண்டும்.

பார்ப்பன எதிர்ப்புதான் என்னை நாத்திகவாதி ஆக்கியது. அதுதான் எனக்கு ஏ,பி,சி,டி.யாக இருந்தது என்று கூடச் சொல்லியிருக்கிறார் தந்தை பெரியார். (விடுதலை 5.3.1969).

இன்றைக்கு தமிழ்நாடுக்கு வந்த வாழ்வெல்லாம், சீர் எல்லாம் இந்தத் தன்மையில் கிடைத்ததுதான்.

தமிழ்நாட்டில் ஏற்பட்டுள்ள எல்லா வகையான முற்போக்கு வளர்ச்சிக்கும் திராவிட இயக்கத் தையோ, தந்தை பெரியார் அவர்களையோ தவிர்த்து விட்டு ஒன்றைக்கூட கை நீட்டிக் கூற முடியாது.

இந்த மலரில் இடம் பெற்றுள்ள கட்டுரைகளில் தலைப்புகளைத் தாண்டி இன்னொன்றை எடுத்துக் காட்டுவதுகூட அவ்வளவு எளிதானதல்ல.

திராவிட இயக்கம் என்று சொல்லும் பொழுது திராவிடர் கழகம் சமுதாயத்தளத்திலும், தி.மு.க. என்பது அரசியல் தளத்திலும் உறுதியாக நின்று திராவிடர் இயக்கத் தத்துவத்தை கட்டிக் காப்பதுடன் மேலால் கொண்டு செலுத்திக் கொண்டும் இருக்கின்றன.

திராவிட இயக்கத்தில் ஆரியம் புகுந்ததால் ஏற்பட்ட அவலத்தையும் நாடு இன்று கண்டு கொண்டுதானிருக்கிறது.

அந்த வகையில், திராவிட இயக்கத்தின் சாதனைப் பட்டியல்களையும் மலரில் தொகுத்துக் கொடுக்கப்பட்டு இருந்தால் புதிய தலைமுறை யினரின் புத்திக்கு நல் விருந்தாக இருந்திருக்கும்.

விழாவில் நன்றி கூற வந்த தோழர் மானமிகு உமாபதி அவர்கள் வித்தியாசமான ஓர் அணுகு முறையை மேற்கொண்டு அனைவரின் கவனத் தையும் கலகலப்பாக ஈர்த்தார்.

மீட்டிங்கின் அக்ராசனாதிபதி அவர்களே! தி.மு.க. பொக்கிஷதாரர் மு.க. ஸ்டாலின் ஜி அவர்களே! பிரசங்கம் செய்த மகாராஷ்ட்ரி அவர்களே, இந்த விசேஷ வைபவத்திற்கு வருகை தந்த மகா ஜனங்களே... என்று பேச ஆரம்பித்தார்.

திராவிட இயக்கம் தோன்றியிராவிட்டால் இப்படிப் பட்ட தமிழ்தான் இன்று வரை தொடர்ந்திருக்கும் என்று தோழர் உமாபதி அவர்கள் கூறியது நகைச் சுவைக்காக அல்ல - நடைமுறை உண்மையாகும்.

தமிழ் வளர்த்த தாத்தா என்று சொல்லுவார்களே, திரு உ.வே.சா. அவர்களேகூட வானொலியில் (1941) பேசும் போது என்ன சொன்னார் தெரியுமா?

ஓர் ஏழை வேலைக்காரனைப் பார்த்து சோறு தின்றாயா என்று கேட்கலாம். ஆனால் ஒரு தனவானைப் பார்த்து போஜனம் ஆயிற்றா என்று கேட்க வேண்டும். துறவிகளைப் பார்த்து பிக்ஷை ஆயிற்றா என்று கேட்க வேண்டும் என்று பேசியதில் உள்ள வருண தர்மமும், மொழி ஆபாசமும் எத்தகையது என்பதைப் புரிந்து கொள்ளலாம். திராவிட இயக்கத் தமிழர் பேரவை வெளியிட்டுள்ள மலர் ஒன்றின் விலை ரூபாய் நூறுதான், தமிழர்கள் வாங்கிப் படிப்பார்களாக! 4-2-2013

தமிழ் ஓவியா said...


தொல்லை


வரவுக்கும் மேலாக வாழ்க்கைத் திட்டம் ஏற்படுத்திக் கொண்டு துன்பப்படுபவர்கள் நாணயமாய் வாழ முடியாமல் நாட்டுக்குத் தொல்லை விளைவிப்பவர்கள்.
(குடிஅரசு, 19.9.1937)

தமிழ் ஓவியா said...

திராவிடத்தால் வாழ்ந்தோம்! உணர்வார்களா - தமிழ்த் தேசியம் பேசும் தோழர்கள்?


பிப்ரவரி 3ஆம் தேதி டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழில் வந்துள்ள ஒரு கட்டுரை. மேற்கு வங்காளத்தில் இரண்டு சதவீதமே உள்ள பார்ப்பனர் கள் பெரும்பான்மையான அரசு பொறுப்புகளை இதுவரைஆக்கிரமித்து உள்ளனர்.

ஜெய்தீப் மசூம்தார் என் பவர் எழுதியுள்ள இக்கட்டுரையில் மேற்கு வங்காளத்தில் பிற்படுத்தப்பட் டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர் ஒருவர் கூட மாநில முதல்வர் ஆக முடியவில்லை என்றும், பார்ப்பனர்களோ அல்லது பிற முற் போக்கு ஜாதியினரோ தான் மாநி லத்தை ஆண்டுள்ளனர் என்று பதிவு செய்கிறார். அதுமட்டுமின்றி பெரும் பான்மையான அமைச்சர் பதவி களையும், கிட்டத்தட்ட எழுபது சத வீதம், பார்ப்பனர்களே அனுபவித்து வருகின்றனர்.

இதில் கொடுமை என்னவென்றால் மிக நீண்ட காலமாய் மேற்கு வங்கத்தினை ஆண்டவர்கள் முற்போக்குவாதிகள் எனப்படும் கம்யூ னிஸ்ட்டுகள் ஆவர். ஆனால் நிலைமை என்னமோ ஒரே கதைதான். எந்தக் கட்சியானாலும், அதை கட்டுப் பாட்டில் வைத்திருப்பது என்னவோ பார்பனர்களோ அல்லது பார்ப்பனத் தாக்கம் பெற்றவர்களோ அடிவருடி களோ என்பதில் யாதொரு சந்தேகமும் இல்லை.

அதனால்தான் அய்யா அவர்கள் தெளிவாக பார்ப்பனர்கள் இயக்கத்தில் நுழைய முடியாத வகையில் திராவிடர் கழகம் என்று தோற்றுவித்தார். அதுமட்டுமல்ல இந் நாட்டின் முதல் தேவை வருண ஒழிப்பே அன்றி வர்க்க ஒழிப்பு அல்ல என்று உணர்ந்து அதனை கையில் எடுத்தார் மாபெரும் தலைவர் தந்தை பெரியார்.

தமிழ் ஓவியா said...

வெள்ளைக்காரன் நாட்டை விட்டு ஒழிந்தாலும் நமக்கு விடிவு இல்லை, ஏனென்றால், ஆட்சியும் நிர்வாகமும் பார்ப்பன பனியாக்களின் கைகளுக்குத் தான் போய்ச் சேரும் என்று தொலை நோக்காக அன்றே கூறினாரே, அது தானே இப்பொழுதும் நடக்கிறது மற்ற மாநிலங்களில். தமிழ்நாடு விதிவிலக்காக உள்ளது என்றால் அதற்காக திராவிட இயக்கமும் அதன் தலைவர்களும் கொடுத்துள்ள உழைப்பு அளப்பற்கரியது. அதே கட்டுரையில் மூத்த அய்பிஎஸ் அதிகாரி நாஸ்ருள் இஸ்லாம் கூறிய கருத்தும் பதிவு செய்யப்பட்டுள்ளது .அது யாதனில், மேற்கு வங்கத்தில் உள்ள பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப் பட்டோர், தாழ்த்தப்பட்டோர், பழங்குடி யினர், இசுலாமியர் அனைவரும் ஒன் றிணைந்து அரசியல் போராட்டம் தொடங்க வேண்டிய காலம் வந்துள்ளது, அப்படி நாம் இணைந்து போராடும் பொழுது இம் மாநிலத்தினை ஆளுபவர் களை நாம் தீர்மானிக்கலாம், அதுமட்டு மின்றி, விரைவில் மேற்கு வங்காளத்தில் நம் இனத்தை சார்ந்தவர் ஒருவர் முதல் வர் ஆகலாம் என்று நாஸ்ருள் கூறி யுள்ளார். இக் கட்டுரையை படித்தவுடன் நமக்குத் தோன்றும் கருத்து, மேற்கு வங்காளத்திற்கு உடனடி தேவை பெரி யாரின் கருத்தியல்.

தமிழ்நாட்டில் பார்ப்பனீயத்தின் தாக்கம், திராவிட இயக்கத்தாலும், பெரியாரின் கருத்தியல் வீச்சாலும் புற்றுக்குள் ஒளிந்து கொண்டாலும், பிற மாநிலங்களில் இன்னும் கோலோச்சிக் கொண்டுதான் உள்ளது. மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா அவர்கள் பெரியார் திடலில் பேசும்பொழுது ஒரு செய்தியைச் சொன்னார். பகுஜன கட்சி உறுப்பினர் ஒருவர், சிவா அவர்களிடம். 'எனக்கு உங்களை மிகவும் பிடிக்கும், காரணம் நாடாளுமன்றத்தில் முன் வரிசையில் அமர்ந்து இருப்பவர்கள் எல்லாம் பார்ப்பனர்கள் அல்லது மேல் ஜாதியை சார்ந்தவர்கள், அதில் நீங்கள் மட்டும் தான் பிற்படுத்தப்பட்ட ஜாதியை சார்ந்தவர். இதனாலேயே உங்கள் மீது எப்பொழுது மரியாதையும், விருப்பமும் கொண்டுள்ளேன்' என்றாராம். அதற்கு சிவா அவர்கள் 'எங்கள் மாநிலத்தில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு வந் திருப்போர் எல்லாமே பிற்படுத்தப்பட்ட தாழ்த்தப்பட்ட வகுப்பை சார்ந்தவர்கள் தான் என்றாராம்' இது திராவிட இயக் கத்தின் தாக்கத்தின் வெளிப்பாடு அல்லவா? திராவிட இயக்கத்தின் செயல்பாட்டின் பயனை எல்லாம் அனுபவித்துவிட்டு இன்று அந்த இயக்கம் என்ன செய்து விட்டது?

பெரியார் என்ன கிழித்து விட்டார் என ஒரு சிலர் கேட்பது எல்லாம் காலத்தின் கோலமல்லவா! திராவிட இயக்கத்தைப் பின்நிறுத்தி தமிழ்த் தேசியம் பேசும் பேர்வழிகள் வைக்கும் வாதங்களில் முக்கியமானது இப்ப எங் கேங்க பார்ப்பனியமெல்லாம்? அதெல் லாம் முடிந்து போன ஒன்று. ஆகவே பார்ப்பனர்களும் தமிழர்கள்தான், எனவே தமிழ்த் தேசியமே பிரதானமானது, என மூச்சிரைக்க முழங்கிவிட்டு திரா விடத்தை வேரறுக்க கிளம்பி உள்ளனர். இது ஒன்றும் புதிது அல்ல. 1950-களில் ம.பொ.சி. முயற்சித்து தோற்றுப்போய் கடைசி காலத்தில் மீண்டும் திராவி டத்தில் கரைந்தது போலத்தான். ஒரு வகையில் இந்த நவீன போலி தமிழ்த் தேசியவாதிகளுக்கு நன்றி சொல்லத் தான் வேண்டும். இல்லையென்றால் தற்பொழுது மீண்டும் ஒரு எழுச்சி ஏற்பட்டு திராவிட இயக்கத்திற்கு ஆதர வாக அதிக அளவில் நூல்களும், கட்டு ரைகளும், பரப்புரைகளும், இணைய முக நூல்களில் விவாதமும் வெளிப்பட் டிருக்குமா? ஒருவகையில் நமக்கு நன்மைதான். ஒன்று மட்டும் உண்மை, திராவிடத்தைத் தவிர்த்துவிட்டு எழுப்பப்படும் எந்தக் குரலும் பார்ப் பனீயத்துக்கு மீண்டும் கம்பளம் விரிக்கும் வேலைதான். நுனிப்புல் மேயும் நவீன தமிழ்த் தேசிய மேதாவிகள் முதலில் செய்ய வேண்டியது ஆழமாக படிக்கவேண்டியது மற்றும் பிற மாநிலங்களில் என்ன நிலை என அறிய வேண்டியது. செய்வார்களா? வட நாட் டில் முற்போக்குப் பேசும் தலைவர்கள் கூட பெயரின் பின்னால் ஜாதி ஒட்டிக் கொண்டிருக்கும் பொழுது, தமிழ் நாட்டில் முழு நேர மற்றும் பகுதி நேர ஜாதித் தலைவர்கள் பின்னால்கூட ஜாதி பட்டம் இல்லையே. இதற்கு என்ன காரணம் என உணர்வார்களா உணர் விழந்து தமிழ்த் தேசியம் பேசும் தோழர்கள்?

- வெளிச்சம்

தமிழ் ஓவியா said...


வீரத்துறவி பெயரில் வில்லங்க துணிச்சல்!


ஆசிரியருக்குக் கடிதம்

வீரத்துறவி பெயரில் வில்லங்க துணிச்சல்!

முதல்வர் தொகுதியில் மதமாற்றமா?

மூக்கு சிவக்குது தினமலருக்கு!.ஆன்மீக பூமியான சிறீரங்கத்தில் விவேகானந்தரின் பெயரையும், படத்தையும் வைத்து சில கிறிஸ் தவ அமைப்புகள் மதமாற்ற பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருவது கொந்தளிப்பை ஏற்படுத் தியுள்ளதாம்.

கிறிஸ்தவம் என்ன நாத்திக அமைப்பா? மயிலாப்பூர் ராமகிருஷ்ணா மடம் சார்பில் வெளியிடப்பட்ட சுவாமி விவே கானந்தரின் ஞானதீபம் என்ற நூலிலிருந்து அமெரிக்கா,அய்ரோப்பா நாடுகளில் 1894,1895,1901 உட்பட பல ஆண்டுகளில் நடந்த சர்வமதக் கூட்டங்களில் விவே கானந்தர் பேசிய பேச்சுகளை எடுத்து துண் டறிக்கையாக வெளியிட்டு இந்துக்களை கிறிஸ்துவ மதத்திற்கு மாற்றுவதற்கான முயற்சி நடக்கிறதாம்.வெளியிடப்பட்டுள்ள பேச்சு முழுவதும் விவேகானந்தர் இயேசுவைப் போற்றிப் பேசுவதாக உள்ளதாம். ராம கிருஷ்ணா மடம் சார்பில் வெளியிடப்பட் டதைத்தானே எடுத்து போட்டிருக்கிறார்கள்? விவேகானந்தர் அப்படி பேசவில்லை என்றால் மறுத்துப்பார்! பிரசுரிக்கப்பட்ட வாசகங்கள் விவேகானந்தர், கிறிஸ்தவர்களுக்காக பேசிய பேச்சாம்! தினமலர் கூறுகிறது. அப்படின்னா விவேகானந்தர் ஆளுக்கு தகுந்த மாதிரி பேசுற ஆளோ? பேச நா இரண்டுடையாய் போற்றி! அய்ம்புலன்களையும் அடக்கி ஆள்பவன் தானே துறவி;

அதிலென்ன வீரத்துறவி விவேகானந்தர்? வீரம் இருந்தால் துறவியாக முடியாது! துறவியாக இருந்தால் வீரம் இருக்கக்கூடாது!. விவேகானந்தர் டுபாக்கூரோ?

சிறீரங்கம் சிருங்கேரி மடத் தில் இது தொடர்பான ஆலோசனைக்கூட்டம் நடக்க இருக்கிறதாம். காவல் துறை யினருக்கும் புகார் கொடுக்கப்பட்டுள்ள தாம்.கையெழுத்து இயக்கம் தனியாக நடத்தப்படுகிறதாம். முதல்வரின் தனிப் பிரிவிற்கும் மனு அனுப்புவதற்கான முயற்சி ஒரு பக்கம் நடக்கிறதாம்.தமிழக முதல்வரும் இந்தத் தொகுதியின் எம்.எல்.ஏ வுமான ஜெய லலிதா உடனடியாக தலையிட்டு நடவடிகை எடுக்க வேண்டும் என எட்டுகாலத்திற்கு எழுதியுள்ளது தினமலர். முதல்வர் தொகுதி யில் இப்படியொரு மதப்பிரச்சாரமா? என வெகுண்டெழுகிறது தினமலர்! சிறீரங்கத் தில் ஜெயலலிதா வெற்றி பெற்றதால் அந்தத் தொகுதியே பார்ப்பனப்பண்டாரங்களின் பகுதியாக அரசு கெசட்டில் வெளியிடச் சொல்கிறதா தினமலர்?

- கி.தளபதிராஜ்

தமிழ் ஓவியா said...


பொறுக்குமா இனமலருக்கு?

தி.க., ஆர்ப்பாட்டம்

தி.க., தலைவர் வீரமணி: சேலம் ரயில்வே கோட்டத்தை, கேரளாவுக்கு கொண்டு செல்ல கடும் முயற்சியில் ஈடுபட்டு வருவதை கண்டித் தும், அதை தடுத்து நிறுத்த, தமிழக எம்.பி.,க்கள், கட்சி பேதம் பாராமல், பார்லிமென்டில் இந்த பிரச்னையை எழுப்ப வேண்டும் என்பதை வலியுறுத்தியும், 9ம் தேதி சேலத்தில், தி.க., ஆர்ப்பாட்டம் நடத்தும்.

டவுட் தனபாலு: உங்க கோரிக்கை நல்ல கோரிக்கை தான்... ஆனா, மத்திய அரசை விழுந்து விழுந்து ஆதரிச்சிட்டு இருக்கிற உங்க, "அரசியல் ஆசான்' கருணாநிதியை, இந்த பிரச்னையில மத்திய அரசுக்கு நெருக்கடி கொடுக்க சொல்றதை விட்டுட்டு, ஆர்ப்பாட் டம் எல்லாம் அவசியமான்னு தான், எனக்கு, "டவுட்!'
- தினமலர், 5.2.2013 பக். 8

கோரிக்கை நல்ல கோரிக்கை தானாம் - அதற்காக போராடக் கூடாதாம். திராவிடர் கழகத்திற்கு ஆசான் தந்தை பெரியார்தான்; தன்னை ஆசான் என்று கலைஞர் அவர்களும் ஒப்புக் கொள்ளமாட்டார். தினமலருக்கே உரித் தான சில்மி(வி)ஷம் இது.

சமுதாயப் புரட்சி இயக்கமான திராவிடர் கழகம் உரிமைகளுக்காகத் தொடர்ந்து தன் வழியில் போராடிக் கொண்டுதானிருக்கிறது.

இடஒதுக்கீட்டுப் பிரச்சினை, கொலை குற்ற வாளியாக பெயிலில் அலைந்து கொண்டிருக்கும் காஞ்சி சங்கராச்சாரியார் மீதான வழக்குப் பிரச்சினை.

மகளிர் பிரச்சினை, ஈழத் தமிழர் பிரச்சினை, அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமைப் பிரச்சினை, பிராமணாள் பெயர் அழிப்பு! - இப்படி எத்தனையோ போராட்டங்களை தன் வழியில் திராவிடர் கழகம் நடத்திக் கொண்டுதான் இருக்கிறது!

சேலம் ரயில்வே கோட்டப் பிரச்சினைக்காகவும் ஏற்கெனவே பலமுறை போராடித் தடுத்து நிறுத்தியிருக்கிறது திராவிடர் கழகம்.

இப்பொழுதென்ன தினமலரின் புதுக்கரடி?

தமிழ்நாட்டு உரிமைக்காக எந்தப் போராட்டம் நடத்தினாலும் தினமலர் - இனமலர் கூட்டத் திற்குப் பொறுக்காதே! நல்ல கோரிக்கை என்று எழுதும் தினமலர் இதற்காக ஏதாவது நாலு வார்த்தை எழுதியதுண்டா? தமிழன் வீட்டில் சாவு விழுந்தால் விசாரிக்கக் கூடப் போகாத பார்ப்பனக் குடும்பம் கருமாதிக்கு மட்டும் கரெக்டா போய் விடும் - தன் சுரண்டல் புரோகிதத் தொழிலுக்காக.

தமிழ்நாட்டின் உரிமை என்றால் குமட்டிக் கொண்டு வருகிறது - இந்தக் கும்பலுக்கு!5-2-2013

தமிழ் ஓவியா said...


இனப்படுகொலையாளன் இந்தியாவுக்கு வருவதா?


இனப்படுகொலையாளன் இந்தியாவுக்கு வருவதா?
கறுஞ்சட்டைத் தோழர்களே கழகக் கொடியுடன் திரள்வீர்! திரள்வீர்!!

அருமைக் கழகத் தோழர்களே!

தமிழினப் படுகொலையாளன், சிங்கள வெறியன் ராஜபக்சே இந்தியாவுக்கு வருகை தருவதைக் கண்டிக்கும் வகையில், டெசோவின் முடிவுப்படி வரும் 8.2.2013 வெள்ளி காலை 10 மணிக்கு சென்னை வள்ளுவர் கோட்டம் அருகில் கறுப்புடை அணிந்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.

தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறுகிறது. தமிழர் தலைவர் பங்கேற்கிறார். சென்னை மண்டலக் கழக வீரர்களே, வீராங்கனைகளே, கழகக் கொடியுடன் ஆர்ப்பரித்து வாரீர்! வாரீர்!!
- தலைமை நிலையம், திராவிடர் கழகம்

தமிழ் ஓவியா said...


பொழைப்பா?


இனப்படுகொலையாளன் ராஜபக்சே இந்தியா வரு வதை எதிர்ப்பது - கறுப்புச் சட்டை - கொடி போராட் டம் நல்ல பொழைப்பாம். கார்ட்டூன் போடுகிறது கருமாதிப் பத்திரிகை.
பார்ப்பனர்கள் தமிழர்கள்தான் என்று ஒட்டாரம் பிடிக்கும் தமிழ்த் தேசிய வியாதிகளுக்கு இது சமர்ப்பணம்!

எங்கே பிணம் விழும் - கருமாதி, கருமாந்திரம் என்று சொல்லி பணம் பண்ணலாம் என்று பொழைப்பு நடத்தத் துடிக்கும் பார்ப்பனக் கும்பலின் கருமாதிப் பத்திரிகை இப்படித்தான் பொழைப்பைப் பற்றி எழுதும்! 6-2-2013

தமிழ் ஓவியா said...


விவேகானந்தர் பெயரால்...


விவேகானந்தரின் 150 ஆம் ஆண்டு என்ற போர்வையில் தமிழ்நாட்டில் உள்ள பார்ப்பன சக்திகள், சங்பரிவார்க் கூட்டத்தினர் ஒரு திட்டமிட்ட வேலையில் இறங்கியுள்ளனர்.

சென்னையில் உள்ள அனைத்துக் கல்வி நிறுவனங்களுக்கும் விவேகானந்தர் ரதம் செல்லுகிறதாம் - அரசின் அனுமதியோடு; இது ஒரு தவறான முன்னுதாரணமாகும். விவே கானந்தர் முற்போக்குப் பேசினார் - இளை ஞர்களை விழித்தெழச் செய்தார் என்றெல்லாம் அவரைப்பற்றித் துதி பாடுவார்கள்.

ஆனால் அவர் சொன்ன முற்போக்கு சாயல் தெரிவது போன்றவற்றைக்கூட வெளியில் எடுத்துச் சொல்ல மாட்டார்கள். மாறாக இந்து மதத்தின் சிறப்புகள் வேதங்களின் உயர்ந்த தத்துவங்கள், உபநிஷத்தில் எழுதப்பட்டுள்ள தாக சிலவற்றை விவேகானந்தர் கூறுவதாக வெளிப்படுத்துவார்கள்.

அமெரிக்கா வரை சென்று இந்து மதத்தைப் பரப்பினார் என்பதைத்தான் பெரிதுபடுத்து வார்கள். அதன் மூலம் விவேகானந்தர் என்றால் ஒரு வசீகரத்தை மக்கள் மத்தியில் இளை ஞர்கள் மத்தியில் உருவாக்குவதுதான் இதன் பின்னணியில் உள்ள இரகசியம்.

பூணூல் என்பது ஆசிரமத்தில் சீடர்கள் கோவணம் கட்டுவதற்குப் பயன்படுத்திய கயிறு என்று கூடச் சொல்லி இருக்கிறார் - இவற்றை எல்லாம் வெளிப்படுத்துவார்களா? இதில் இன்னொரு கொடுமை - மோசடி என்ன தெரியுமா? பொதுத்துறை நிறுவனமான பெல் நிறுவனம் விவேகானந்தரின் பாரதமே உயிர்த்தெழு எனும் நூல் திருவெறும்பூர் பெல் நிறுவனத்தில் பணியாற்றும் அனைத்துப் பணியாளர்களுக்கும் பெல் செலவில் இலவசமாகக் கொடுக்கப்பட்டுள்ளது.

யார் வீட்டுப் பணத்தை எடுத்து யாருக்குத் தானம் செய்வது? மதச் சார்பற்ற அரசுக்குச் சொந்தமான ஒரு நிறுவனம் குறிப்பிட்ட மதப் பிரச்சாரகரான விவேகானந்தரின் நூலை வழங்குவது சட்டப்படி சரியானது தானா?

மதச் சார்பற்றவர்கள், இஸ்லாம், கிருத்துவம் முதலிய மதங்களைச் சார்ந்தவர்களுக்கு இத்தகைய நிறுவனங்களில் உள்ள நிலைப்பாடு என்ன?

ஓர் அரசு நிறுவனத்தில் தேவையில்லாத மதச் சர்ச்சைகளை அந்த நிறுவனத்தின் தலைமை நிருவாகமே ஏற்படுத்தலாமா?

ஆன்மீகப் பண்பாடும், துறவும் கொண்ட பிராமணனே நமது லட்சியம். பிராமண லட்சியம் என்று நான் எதைக் குறிப்பிடுகிறேன்? உலகியல் சிறிதும் இல்லாத உண்மை அறிவு வளம் மிக்க பிராமணத்துவத்தையே நான் கூறுகிறேன். இதுதான் இந்து இனத்தின் லட்சியம்

- என்று இந்நூலில் 167ஆம் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளது.

இதன் பொருள் என்ன? மிக வெளிப் படையானது.

பிராமணத்துவம் என்பதுதான் அறிவு வளம் மிக்க தத்துவமாம். அதனை அடைவதுதான் இந்து இனத்தின் லட்சியமாம்.

பிராமணத்துவம் என்பதற்குத் தம் வசதிக்கேற்ப வெண்டைக்காய், விளக் கெண்ணெய் வியாக்கியானம் ஒரு பக்கம் இருக்கட்டும்;

இதுதான் இந்த இனத்தின் லட்சியம் என்று கூறப்பட்டுள்ளதே! இது கண்டிப்பாக இந்து மதத்தைப் பரப்பும் ஒரு செயல் அல்லவா!

இந்த இந்துத்துவத்தைப் பரப்பும் வேலையில் அரசு செலவில் ஒரு பொதுத்துறை நிறுவனம் ஈடுபடலாமா?

இதுபோன்ற நிறுவனங்களில் பார்ப்பன ஆதிக்கமும், ஆர்.எஸ்.எஸ். ஊடுருவலும் இருப்பதே இதற்கெல்லாம் காரணம் என்பது விளங்கவில்லையா?
கல்விக் கூடங்களில் இவற்றையெல்லாம் கொண்டு செல்ல தமிழ்நாடு அரசு எப்படி அனுமதிக்கிறது?

இவற்றை எல்லாம் வெளிச்சத்துக்குக் கொண்டு வருவோம் - மக்கள் கருத்தை உருவாக்குவோம்! 8-2-2013