Search This Blog

13.5.10

பல்கலைக் கழகப் பட்டம் பெறாத ஒப்பரிய மாமேதை பெரியார்

தன்னேரில்லா தந்தை பெரியார்

எப்பொருள் யார்யார் வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்ப தறிவு

என்று ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே ஏற்றமிகு கருத்தைச் சொன்னார் வள்ளுவர்.

எதையும், ஏன்?, எப்படி?, எதற்காக? என்று வினாக்களைத் தொடுத்து விளக்கம்காணுங்கள் என்றார் சிந்தனைச் செம்மல் சாக்ரடீசு.

இதைப் போல், அறிவார்ந்த சமுதாயம் அமைய, பகுத்தறிவு நெறியே பண்பார்ந்த அரிய நெறி என்றார் வெண்தாடி வேந்தர் ஈரோட்டுப் பெரியார் அவர்கள்.

சாதிபேதமற்ற சமுதாயம்,

மூடநம்பிக்கைச் சேற்றின் முடைநாற்றம் இல்லாத சமுதாயம்,

ஆணுக்குப் பெண் அடிமை என்று வீணுக்காய் வீம்பு பேசாத சமுதாயம்,

ஆண்டை அவன், அடிமை அவன் என்ற தீண்டாமைக் கொள்கையைத் தீவைத்துப் பொசுக்குகின்ற சமுதாயம்,

எனப் புதியதோர் சமுதாயம் உருவாக்கப் புரட்சிக் கனலை மூட்டியவர்தான் தந்தை பெரியார் அவர்கள்.

ஏனென்றா கேட்கிறீர்கள்? அதை மழிக்க என் நேரத்தையும் பணத்தையும் செலவழிக்க நான் தயாராக இல்லை! இது தந்தை பெரியாரின் மூடி மறைக்காத பதில்!

அவர்தாம் தம் 94 ஆம் அகவையிலும் இறுதிநாள் வரை, இந்த மண்ணின் மூலை முடுக்கெல்லாம் சூறாவளியாய்ச் சுற்றிச் சுழன்று வந்து, தான் எண்ணிய பகுத்தறிவுச் சிந்தனைகளைத் தோயாமல் துவளாமல் அள்ளி அள்ளி வழங்கினார். கொண்ட கொள்கையில் நிலை குலையாத மலைபோல் நிமிர்ந்து நின்று, கொஞ்சமும் பிறழாமல் கொள்கை வழியில் வென்று காட்டியவர் பெரியார்.

காங்கிரஸ் இயக்கத்தில் பெரியார் இருந்த காலம் அது.

மது விலக்குக் கொள்கைதான் நம் உயிர் மூச்சு, என்று அதி தீவிரமாகக் கூறி வந்தார் காந்தியார்.

கேட்ட பெரியார், தன் வீட்டுத் தோட்டத்தில் இருந்த அய்நூற்றுக்கும் மேற்பட்ட தென்னை மரங்களை ஒரே நேரத்தில் வெட்டி வீழ்த்தினார்.

மரங்கள் இருந்தால்தான் கள் இறக்க முடியும்; மது இறக்க முடியும்; அதனால் வேரோடு வெட்டி வீழ்த்திவிட்டேன் என்று கட்சிக் கடமை போற்றும் திடமான கொள்கைத் துடிப்புடன் உடனடியாகச் செயல்பட்டவர்தான் தந்தை பெரியார்.

எங்கோ கேரள மாநில வைக்கம் பகுதியில், தீண்டாமை எனும் தீய நாகம் சீறிப் படமெடுத்தாடுகின்றது என்று கேள்விப்பட்டவுடன் கிளர்ந்தெழுந்து, அங்கே சென்று மாபெரும் அறப்போர் நடத்திச் சிறைவாசம் ஏற்றவர்தான் கொள்கைக் கோமான் தந்தை பெரியார்.

சமுதாயத்தில் சமத்துவம் தேவை; குறிப்பாகக் கணவனும் மனைவியும் இல்வாழ்வுச் சோலையில் சம நண்பர்களே தவிர, ஆணுக்குப் பெண் ஏது அடிமை? என்று அழுத்தந்திருத்தமாகக் கேட்டவர்தான் அவர்.

அய்யோ, எங்களுக்குப் பெண் குழந்தைகளே வேண்டாம்; ஆண் குழந்தைகள் மட்டுமே வேண்டும்! என்று பிதற்றும் பேதையர்க்குப் பாடம் புகட்ட ஒரு புதுச்சட்டத்தையே உருவாக்க வேண்டும் என்றார் அவர்.

நாட்டில் இருக்கும் வேலை வாய்ப்பில், சொத்துரிமையில் அய்ம்பது சதவிகிதத்தை மகளிர்க்கே ஒதுக்கிவிட்டால், ஏன் இந்தப் பேத உணர்வு இருக்கப் போகிறது? என்று கேட்டார்.

மேடையில் மட்டும் இப்படிப் பேசிக் கொண்டிராமல் செய்கையிலும் புரட்சி செய்தவர்தான் தந்தை பெரியார்.

ஆண்களைப் போல் பெண்களும் உடை அணியவேண்டும் என்ற புதுமைக் குரல் கொடுத்த தந்தை பெரியார், அதைத் தானே நடமுறைப்படுத்த வேண்டி தன் துணைவியார் நாகம்மையார் அவர்கள் அணிந்து கொள்ள லுங்கி வாங்கிக் கொடுத்தாராம். அந்த அம்மையாரும், லுங்கியைக் கட்டிக் கொண்டு, வீட்டிலிருந்து வெளியே வரக் கூச்சப்பட்டு சில நாட்கள் இல்லத்துக்குள்ளேயே இருந்தாராம்!

ஆடம்பரம் அறவே கூடாது; எளிமைதான் ஏற்றம் தரும் என்பதிலும் ஆணித்தரமான நம்பிக்கை கொண்டவர் பெரியார்.

ஒரு முறை அவர் தன் வயதான காலத்திலும், இரயிலில் மூன்றாம் வகுப்புப் பெட்டியில் பயணம் செய்து வந்ததைக் கண்ட அவருடைய இயக்கத் தொண்டர்கள், என்னய்யா இது? மூன்றாம் வகுப்புப் பெட்டியில் வருகிறீர்களே? இது சரிதானா? என்று கேட்டனராம்.

என்ன செய்வது? இப்படி மூன்றாம் வகுப்பில் வருவது எனக்கு மட்டும் பிடிக்கிறதா? நான் புறப்பட்டு இரயில் நிலையம் சென்று நான்காம் வகுப்பு டிக்கட் உள்ளதா? என்று கேட்டேன். இல்லை என்றார்கள். பின்னர் மூன்றாம் வகுப்பு டிக்கட் வாங்கி வந்திருக்கிறேன். அதனால் என் உடம்பு என்ன தேய்ந்துவிட்டதா? என்று திருப்பிக் கேட்டாராம் தந்தை பெரியார். இங்ஙனம் எளிமைக்கும் சிக்கனத்திற்கும் எடுத்துக் காட்டாய்த் திகழ்ந்தார் அவர்.

அந்த வகையில் கொஞ்சம் கொஞ்சமாகச் சிக்கனப்படுத்திச் சேர்த்து வைத்த பெரியாரின் சொத்தெல்லாம் இன்று இலவச மருத்துவ மனைகளாக, அனாதைச் சிறார் இல்லங்களாக, மகளிர் தொழிற்பயிற்சிக் கல்லூரிகளாக வடிவமெடுத்து, தமிழ்ச் சமுதாயத்தின் நலிந்த பிரிவினர்க்கு ஒப்பரிய தொண்டாற்றி வருகின்றன. தந்தை பெரியார் அந்தக் கட்டடங்களின் உருவில் நிரந்தரமாய் நம்முன்னர்ச் சிரித்துக் கொண்டிருக்கிறார்.

நாம் எண்ணிய பின்னர் எண்ணத்தின் முடிவுகளைத் திண்ணிய வகையில் சொல்வதும், நிறைவேற்றுவதும் தந்தை பெரியாருக்கே உரித்தானவை.

சிந்தனைச் செம்மல் ரூசோதான் சொன்னார்: சிந்திக்கத் தெரியாதவன் முட்டாள்; சிந்திக்காமல் இருப்பவன் அறிவிலி; சிந்திக்க மறுப்பவன் கோழை; சிந்தித்ததைத் திரித்துக் கூறுபவன் வஞ்சகன்; சிந்தித்தித்தைச் சிந்தித்தபடி, சிந்தாமல் சமுதாயத்திற்கு விருந்தாக்குபவனே மாமேதை!

பல்கலைக் கழகப் பட்டம் பெறாத அத்தகைய ஒப்பரிய மாமேதைதான் தந்தை பெரியார் அவர்கள்.

அவரே ஓர் அற்புத சகாப்தம்!

-------------------------------- கா.வேழவேந்தன் அவர்கள் ” உழைப்பவர் உலகம்”
ஏப்ரல் 2010 இதழில் எழுதிய கட்டுரை

3 comments:

அ.முத்து பிரகாஷ் said...
This comment has been removed by a blog administrator.
அ.முத்து பிரகாஷ் said...

"நாட்டில் இருக்கும் வேலை வாய்ப்பில், சொத்துரிமையில் அய்ம்பது சதவிகிதத்தை மகளிர்க்கே ஒதுக்கிவிட்டால், ஏன் இந்தப் பேத உணர்வு இருக்கப் போகிறது?"

எத்தனை ஆண்டுகளுக்கு முன்னால் நமது பெரியார் சொன்னது ... இன்னமும் 33 க்கே மூச்சு வாங்குது ... நாம் போக வேண்டிய தூரம் வெகு தூரம் ...

வேழ வேந்தன் அவர்களுக்கும் ஓவியா அவர்களுக்கும் நன்றிகள்!

தமிழ் ஓவியா said...

தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி