Search This Blog

23.2.10

தேசிய நீரோட்டம் என்னும் அணையை உடைப்பது யார்?



முல்லைப் பெரியாறு பிரச்சினை இன்னும் எத்தனைக் காலத்திற்குத்தான் தமிழ்நாட்டு மக்களை அலைகழிக்கப் போகிறதோ தெரியவில்லை.

காவிரி நீர்ப் பிரச்சினையானாலும், முல்லைப் பெரியாறு அணைப் பிரச்சினையானாலும் இதில் கருநாடகமும், கேரளமும், நீதிமன்ற தீர்ப்புகளைச் சற்றும் மதிப்பதாகவே தெரியவில்லை.

உச்சநீதிமன்றம் சில நாள்களுக்குமுன் அறிவித்த தீர்ப்பில் அய்வர் கொண்ட ஒரு குழுவை நியமித்துள்ளது. அக்குழு முடிவு செய்யும் என்று கூறியிருப்பது வேடிக்கையானது. அப்படியானால், அதே உச்சநீதிமன்றம் 142 அடி வரைத் தண்ணீரைத் தேக்கிக் கொள்ளலாம் என்று நிபுணர் குழுவின் அடிப்படையில் தீர்ப்புக் கூறியதே அது என்ன ஆனது? தான் வழங்கிய தீர்ப்பை தானே உச்சநீதிமன்றம் மதிக்கவில்லையே! இதைவிடக் கேலிக் கூத்து வேறு எதுவாகத்தான் இருக்க முடியும்?

142 அடி தண்ணீரைத் தேக்க அணை பலமாக உள்ளதா இல்லையா? என்பது குறித்து புதிதாகத் தெரிந்துகொள்வதற்கு என்ன இருக்கிறது?

மத்திய நீர்வள ஆணையத்தின்மூலம் ஒன்பது பேர் கொண்ட உயர்நிலைப் பொறியாளர்கள் அடங்கிய விற்பன்னர் குழு 10.10.2000, 11.10.2000 ஆகிய இரு நாள்களில் ஆய்வுகளை மேற்கொண்டு அணை பலமாகவே உள்ளது, 142 அடி நீரைத் தேக்கிக் கொள்வதில் எவ்விதப் பிரச்சினையும் கிடையாது என்று அறுதியிட்டுக் கூறிவிட்டதே அதற்குமேல் என்ன புதிய குழு?

நீதிமன்றம், நீதிமன்ற தீர்ப்பை மதிக்கவில்லை; விற்பன்னர் குழு இன்னொரு விற்பன்னர் குழுவின் முடிவை மதிக்கவில்லை என்பதெல்லாம் கவுரவமான நடப்புகள்தானா?

இதில் குறிப்பிடத்தக்க அம்சம் என்னவென்றால், மத்திய அரசின் வேடிக்கை விளையாட்டாகும். உச்சநீதிமன்றம் ஒரு தீர்ப்பு வழங்கிவிட்டது; அதனைச் செயல்படுத்த வைக்கவேண்டியது மத்திய அரசின் கடமை. இதற்கிடையில் உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி நடந்துகொள்ளாமல் முல்லை பெரியாறு நீர்த் தேக்கத்தின்மூலம் தமிழ்நாட்டுக்குக் கிடைக்கவேண்டிய தண்ணீரைத் தடுக்கும் வகையில் புதிய அணை ஒன்றைக் கட்டுவதற்கு கேரள அரசு முயற்சிப்பதும், மத்திய அரசை அணுகுவதும். மத்திய அமைச்சர் ஜெய்ராம்ரமேஷ் அதுகுறித்து ஆய்வுகளை மேற்கொள்ள அனுமதியளிப்பதும் அசல் சிறுபிள்ளைத்தனமான செயல்பாடு அல்லவா?

உச்சநீதிமன்ற தீர்ப்பை முடக்கும் வகையில் கேரள அரசு ஒரு புதிய சட்டத்தையும் இயற்றுகிறது என்றால், அதுகுறித்து உச்சநீதிமன்றம் வாய் திறக்கவில்லை என்பது, நீதித்துறையின்மீது மக்களுக்கு இருக்கும் மதிப்பீட்டைக் குறைக்காதா?

கருநாடக மாநிலமும் இதுபோல்தான் காவிரி நீர்ப் பிரச்சினையில் நீதிமன்ற தீர்ப்புக்கு விரோதமாக ஒரு சட்டத்தை இயற்றியது. இந்தப் போக்குகள் நீதித்துறைக்கும் சரி, மத்திய அரசுக்கும் சரி உகந்த மரியாதை ஆகவே ஆகாது.

மத்திய அரசின் அணுகுமுறையில் அரசியல் நோக்கம் இருப்பது வெளிப்படையாகும். அடுத்த ஆண்டு கேரளாவில் சட்டப் பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த நேரத்தில் முல்லைப் பெரியாறு பிரச்சினையில் சட்டப்படியும், நியாயப்படியும் தமிழ்நாட்டுக்கு உரிய நீதி கிடைத்துவிட்டால், அது கேரள தேர்தலைப் பாதிக்கக் கூடும் என்று காங்கிரஸ் கருதுகிறது.

அங்கு ஆட்சியில் இருக்கும் சர்வதேசியம் பேசும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கும் இந்த மனப்பான்மை மேலோங்கி நிற்கிறது. இந்த அரசியல் சித்து விளையாட்டில் தமிழ்நாட்டு விவசாய மக்களும், நீதியும், நியாயமும் பலிகடா ஆக்கப்பட்டுள்ளன என்பதுதான் உண்மையாகும்.

எப்படியோ தேசிய நீரோட்டம் என்கிற அணையை இந்தியத் தேசியவாதிகளான காங்கிரசும், சர்வதேச தேசியவாதிகளான கம்யூனிஸ்டுகளும் உடைத்திட முடிவு செய்துவிட்டனர் நீதிமன்றமும் தன்னாலான உதவியையும் செய்து வருகிறது என்பதை தமிழ்நாட்டு மக்கள் உணரவேண்டும்.

------------------------" விடுதலை” தலையங்கம் 23-2-2010

1 comments:

ஃபித்னா.காம் said...

அருமையான தலையங்கம். இது குறீத்து அடுத்த பாண்டு பதில்கள் பகுதியில் நானே அனானி பெயரில் கேள்வியைக் கேட்டு அதற்கு பதில் கொடுக்கிறேன்.