Search This Blog

23.5.10

திராவிடர்-தமிழர்


திராவிடர்-தமிழர்

தமிழ்நாட்டில் திராவிடர் இயக்கங்களுக்கு எதிராக திராவிடர் இயக்கத்தால் பலன் பெற்றோர், மரியாதை பெற்றோர், விளம்பரம் பெற்றோர் மண்ணை வாரித் தூற்ற ஆரம்பித்துள்ளனர்.

இது ஒன்றும் புதிதல்ல. சிலம்புச் செல்வர் என்று அழைக்கப்பட்ட ம.பொ.சி.யும், அவரைச் சேர்ந்தவர்களும் திராவிட எதிர்ப்பு மாநாடுகளைப் பல்வேறு இடங்களில் நடத்தியதுண்டு.

திராவிடர் இயக்கத்தினால் பகுத்தறிவும், தன்மான உணர்ச்சியும், வகுப்புரிமையும் பெற்ற தமிழர்கள் ம.பொ.சி.யையும், அவரைச் சேர்ந்த கூட்டத்தாரையும் புறக்கணித்தார்கள். கடைசியில் திராவிட இயக்கத்தின் ஆதரவினால்தான் ம.பொ.சி.க்கு மேலவைத் தலைவர் என்ற பதவியும் கிடைத்தது என்பது வரலாறு நினைவூட்டும் பாடமாகும்.

இன்றைக்குத் தமிழ்நாட்டில் தமிழர்கள் கல்வி, வேலைவாய்ப்புகளில் இட ஒதுக்கீடு கிடைத்து மேன்மை நிலை பெற்று வருவதற்கும், பெயருக்குப் பின்னால் ஜாதி வாலை நறுக்கிக் கொண்டதற்கும், தமிழ் செம்மொழி என்ற நிலையை எய்தியதற்கும், தை முதல்நாள்தான் தமிழ்ப் புத்தாண்டின் தொடக்கம் என்று சட்ட ரீதியாக ஆக்கப்பட்டதற்கும், சென்னை மாநிலத்திற்குத் தமிழ்நாடு என்ற பெயர் மாற்றம் ஏற்பட்டதற்கும், சுயமரியாதைத் திருமணம் சட்டப்படி செல்லுபடி ஆனதற்கும் காரணமே திராவிடர் இயக்கம்தான் என்பது சிறுபிள்ளைகள்கூட அறிந்திட்ட உண்மையாகும்.

இந்த உண்மைகளையெல்லாம் மறைத்துவிட்டு, திராவிட இயக்கத்தால் தமிழர்கள் உரிமைகளை இழந்தார்கள் என்று நாக்கூசாமல் ஒரு சிலர் பேசுகின்றனர் என்றால் இதைவிட நன்றிகெட்டதனமும், பார்ப்பனியத்துக்கு வால் பிடிக்கும் விபீஷணத்தனமும் வேறு ஒன்றும் இருக்கவே முடியாது.

திராவிடர் என்ற பெயர் திராவிட இயக்கம் சூட்டிய புதிய பெயர் அல்ல. அது வரலாற்று ரீதியானதாகும். சிந்து சமவெளி நாகரிகம், திராவிடர் நாகரிகம் என்று கண்டுபிடித்ததற்குக்கூட காரணம் திராவிடர் இயக்கம் தானே?

திராவிடர் கழகம் என்று தந்தை பெரியார் பெயர் சூட்டிக் கொண்டதால் திராவிடர் இனத்தைச் சேர்ந்த மலையாளிகளின் ஆதிக்கத்தை தந்தை பெரியார் கண்டிக்கவில்லையா?

திருவெறும்பூரில் பெல் நிறுவனம் தொடங்கப்பட்ட போதும் நெய்வேலியில் நிலக்கரி ஆலை உருவாக்கப்பட்ட போதும், பணிகளில் மலையாளிகளின் ஆதிக்கம் தென்பட்டபோது பொதுக்கூட்டம் போட்டு கண்டனம் எதிர்ப்புத் தெரிவித்தது தந்தை பெரியார் அல்லவா? திராவிடர் கழகம் அல்லவா?

தமிழ்நாடு, ஆந்திரா, மலையாளம் உள்ளிட்ட மாநிலங்களை இணைத்து தெட்சிணப் பிரதேசம் என்ற ஓர் அமைப்பை உருவாக்கும் திட்டம் கருவுற்றபோது, அதனைக் கண்டித்து புயல்குரல் எழுப்பியவர் திராவிடர் கழகத் தலைவர் தந்தை பெரியார் அல்லவா!

அதற்கான ஆலோசனைக் கூட்டம் பெங்களூரில் நடைபெற்றபோது, அதனைக் கண்டித்து காமராசருக்கு தந்தி கொடுத்தவர் தந்தை பெரியார் ஆயிற்றே!

மொழிவாரி மாநிலம் உருவாக்கப்பட்ட போது சென்னை எங்களுக்கே என்று ஆந்திரர்கள் குரல் கொடுத்த போது தந்தை பெரியார் கடுமையாக எதிர்க்கவில்லையா?

24.1.1955 நாளிட்ட விடுதலை ஏட்டில் தந்தை பெரியர் வெளியிட்ட அறிக்கையில் கீழ்க்கண்டவாறு குறிப்பிட்டுள்ளாரே!

இப்பொழுது நான் மந்திரிகளுக்கு ஒரு வேண்டுகோள் விடுத்துக் கொள்ள வேண்டியவனாய் இருக்கிறேன். அதாவது தமிழ்நாட்டில் பாமர மக்கள் மொழியாகிய தமிழ் மொழியை அரசியல், சமுதாய இயல் காரியங்களில் அரசாங்கம் சிறிதும் இலட்சியம் செய்வதில்லை. இது தவிர இந்தியை நுழைத்துப் பள்ளிக்கூடங்களிலும், பரீட்சைகளுக்கும் பாடமாக ஏற்பாடு செய்து, படிக்கும் பிள்ளைகளுக்குக் கொடுக்கும் தொல்லைகள் ஒருபுறம் இருக்க, உத்தியோகத் தகுதியைக் கொண்டு வந்து புகுத்திப் பெரும்பாலான தமிழ் மக்களை உத்தியோகத் தகுதியற்றவர்களாக ஆக்குவது மற்றொரு புறமிருக்க, இவையெல்லாம் போதாது என்று கருதியோ, என்னமோ, தமிழ் எழுதப்படிக்க, பேசத் தெரியாத மலையாளிகளையும், கன்னடியர் (மங்களூர்க்காரர்)களையும் தமிழ்நாட்டிலே மாகாணத் தலைமை உத்தியோகம், ஜில்லா தலைமை உத்தியோகம் மற்றும் கெஜட் பதிவு அதிகாரிகள், கமிஷனர்கள் முதலிய உத்தியோகங்களில் நியமிப்பது என்பது சர்வ சாதாரண காரியமாக இருந்து வருகிறது. ஜனநாயக நாடு, சுதந்திர நாடு, மக்கள் ஆட்சி என்கின்ற அலங்காரப் பெயர்களைச் சொல்லிக்கொண்டு, நடைபெறுகிற ஆட்சியில், 100 க்கு 80 பேர்களுக்கு மேற்பட்டுக் கல்வியறிவில்லாத பாமர மக்கள் நிறைந்திருக்கும் நாடு என்பதைச் சிறிதும் உணராமல், மேற்கண்ட மாதிரியான நாட்டு மொழி தெரியாத அன்னிய மொழியாளர்களை அதிகாரிகளாக நியமிப்பதென்றால் குடிமக்கள் அதிகாரிகளிடம் எப்படிப் பேச முடியும்?

என்ற வினாவைத் தொடுத்தவர் தந்தை பெரியார்தானே!

திராவிடர் இயக்கம் என்பதாலேயே கன்னடர், மலையாளிகளின் ஆதிக்கத்தை தந்தை பெரியார் எதிர்க்கத்தானே செய்தார்?

உண்மை இவ்வாறிருக்க திராவிட இயக்கத்தால் நாம் வீழ்ந்தோம் என்பது பேச்சல்ல பிதற்றலே!

-----------------------" விடுதலை”தலையங்கம் 21-5-2010

**************************************************************************************

திராவிடர்-தமிழர் (2)

தமிழர் கழகம் என்று பெயர் சூட்டாமல் திராவிடர் கழகம் என்று தந்தை பெரியார் பெயர் வைத்ததற்கு என்ன காரணம்?

திராவிடன் என்றால் எந்தக் கிறுக்குப் பிடித்த பார்ப்பானும் உள்ளே நுழைய முடியாது. தமிழர் கழகம் என்றால் நானும் தமிழ் பேசுகிறேன் என்று பார்ப்பனர்கள் ஊடுருவி விடுவார்கள்.

நாம் வைக்கும் பெயர் பார்ப்பனத் தூசுகூட உள்ளே நுழைய முடியாத வசதி இருக்கவேண்டும் என்று தந்தை பெரியார் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

மற்றும் தந்தை பெரியார் கூறும் ஒரு முக்கிய கருத்து அடிக்கோடிட்டுக் கவனிக்கத் தகுந்ததாகும்.

‘தமிழ்’ என்பதும், ‘தமிழர் கழகம்’ என்பதும் மொழிப் போராட்டத்துக்குத்தான் பயன்படுமேயொழிய, இனப் போராட்டத்துக்கோ, கலாச்சாரப் போராட்டத்திற்கோ சிறிதும் பயன்படாது. (‘விடுதலை’, 27.1.1950)

திராவிடர் என்பதையும் புறக்கணித்துவிட்டு, தமிழர் என்ற பெயரைத் தாங்கி யார் கட்சி நடத்தினாலும் அது பார்ப்பனர்களின் கைக் கருவியாக, பாதந்தாங்கியாகத்தான் ஆகமுடியும்.

வரலாற்று ரீதியாக ஆரியம் என்பதற்கு திராவிடம்தான் எதிர்ப்பாகும். ஆரியராவது திராவிடராவது? இது வெள்ளைக்காரன் கட்டிவிட்ட கதை என்று ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் சொன்னதைத் தான் சிலர் இப்பொழுது நகல் எடுத்துப் பேசுகிறார்கள்.

உண்மையான எதிரியைத் தப்பிக்க விட்டு வேறொரு திசையில் தமிழர்களைக் கவனப்படுத்தும் ஆபத்தான போக்காகும் இது.

பார்ப்பன எதிர்ப்பு உணர்ச்சி இல்லாத தமிழ் உணர்வு எதற்குப் பயன்படும்? பார்ப்பன எதிர்ப்பு உணர்ச்சிதானே தமிழர்களுக்கு இனவுணர்ச்சியை ஊட்டியது?

அந்த உணர்ச்சிதானே பார்ப்பனர்களின் சமஸ்கிருதத்தையும், அந்தக் குடும்பத்தைச் சார்ந்த இந்தியையும் எதிர்க்கச் செய்தது?

திராவிடர் என்ற உணர்ச்சியைக் கொச்சைப் படுத்துபவர்களையும், எதிர்க்கின்றவர்களையும் ஆரியப் பார்ப்பனர்களும், அவர்களின் ஊடகங்களும் தூக்கிப் பிடிக்கும். தெரிந்தோ, தெரியாமலோ அந்தக் குழியில் வீழ்பவர்கள், பார்ப்பனர்களுக்குத் துணை போகிறவர்களும் விபீடணர்களான குற்றவாளிகளே ஆவார்கள்.

தமிழர் பார்வையில் இந்தி எதிர்ப்பு என்பது ஒரு மொழி ஆதிக்கத்தை எதிர்ப்பதாகும். திராவிடப் பார்வையில் இந்தி எதிர்ப்பு என்பது பார்ப்பனியம்அதன் வருணாசிரமம் உள்ளிட்ட அந்நியக் கலாச்சாரத்தைக் கடுமையாக எதிர்ப்பதாகும்.

நன்னிலத்தில் நடைபெற்ற சுயமரியாதை இயக்க மாநாட்டில்கூட இதுபற்றி தீர்மானம் மிகத் தெளிவாகவே இருக்கிறது.

சென்னை மாநிலத்தில் பிரதம அமைச்சராக இருந்து (1937_39) ஆட்சி நடத்திய சக்ரவர்த்தி ராஜகோபாலாச்சாரியார் சென்னை லயோலா கல்லூரியில் பேசும்போது, சமஸ்கிருதத்தைப் படிப்படியாகப் புகுத்தவே முதற்கட்டமாக இந்தியைப் படிக்கச் சொல்லுகிறேன் என்று பட்டவர்த்தனமாகப் பேசினாரே!

ஆரிய திராவிடப் போராட்டம் என்பது இந்நாட்டின் சமுதாயப் போராட்டமாகஅரசியல் போராட்டமாக இருந்து வந்திருக்கிறது. பார்ப்பன வரலாற்று ஆசிரியர்களே வேறு வழியின்றி இந்த உண்மையை ஒப்புக்கொண்டு எழுதியுள்ளார்கள்.

ஆரிய_ திராவிடப் போராட்டத்தை மய்யப்படுத்தியே இராமாயணம் உருவாக்கப்பட்டது. புராணங்களும் எழுதப்பட்டன என்கிற வரலாறுகளைத் தெரிந்துகொண்டிருந்தால், திராவிடத்தால் தமிழர்கள் மோசம் போய்விட்டனர் என்று புலம்பமாட்டார்கள்.

ஒன்று அறியாமையாக இருக்கவேண்டும்; அல்லது பார்ப்பனர்களுக்குத் துணைபோவதற்கு வேறு ஏதாவது காரணம் இருக்கவேண்டும்.

இவர்கள் சுற்றிச் சுற்றி கடைசியாக எங்கே வந்து நிற்கப் போகிறார்கள்? தந்தை பெரியாரையும் அவரால் உருவாக்கப்பட்ட பார்ப்பன எதிர்ப்பு உணர்வையும், அதனால் விளைந்த மறுமலர்ச்சிகளையும் எதிர்க்க வேண்டிய நிலைக்கு வரும்போது ஒட்டுமொத்த தமிழர்களும் நிராகரித்து ஊதித் தள்ளிவிடுவார்கள் என்பதில் அய்யமில்லை.

இது பெரியார் மண். பெரியார் சித்தாந்தம் விளைந்த மண்- பக்குவப்படுத்தப்பட்ட மண்- இந்த இனவுணர்வு எரிமலையோடு விளையாட ஆசைப்பட வேண்டாம்எச்சரிக்கிறோம்!

-------------------- “விடுதலை” தலையங்கம் 22-2-2010


5 comments:

அ.முத்து பிரகாஷ் said...

பேரன்பு ஓவியா அவர்களுக்கு !

மாலை வணக்கங்கள்! நான்கு நாட்களுக்கு பின்னர் தங்கள் பதிவை காண முடிந்தததில் பெரு மகிழ்ச்சி ...

" நாம்தான் திராவிடர்கள் ஆச்சே தமிழர்கள் அல்லவே...? "

இது 'காட்சி' வலைப்பூவில் தொடர்ந்து எழுதிவரும் சாம்ராஜ் அவர்களின் கேள்வி .....

சரிதானே என்று தான் எனக்கும் மனதில் முதலில் தோன்றியது...

தங்களின் பதிவை படித்த பின்னர் தாம் புரிந்தது ஏன் நமது தந்தை பெரியார் அவர்கள் தமிழர் கழகம் என்று பெயர் சூட்டாமல் திராவிடர் கழகம் என்று பெயர் வைத்தார்கள் என ...

அன்பின் நன்றிகள் தோழருக்கு பணிவுடன் ....

சதீஷ் said...

//தமிழர் கழகம் என்று பெயர் சூட்டாமல் திராவிடர் கழகம் என்று தந்தை பெரியார் பெயர் வைத்ததற்கு என்ன காரணம்?//

ஏனெனில் பெரியார் தமிழர் இல்லை. தமிழர் கழகம் என்று வைத்தார் அனைவரும் ‘நீர் தமிழரா” என்று கேள்வி கேட்பர். அதனால் அவர் திராவிடர் என்று வட்டத்தைப் பெரிதாக்கினார்.ஆனால் இந்த திராவிடத்தை தமிழன் மட்டுமே பேண வேண்டிய அவசியம் என்ன?????
அதனாலேயே தமிழன் தமிழனாகவே இருக்க வேண்டும்.

Unknown said...

’கல் தோன்றி மண்தோன்றா காலத்தே முன் தோன்றிய மூத்த குடி'தமிழினம்.. சங்க இலக்கியங்களிலோ, திருக்குறளிலோ “திராவிடர்” மற்றும் “திராவிடம்” என்ற வார்த்தைகளைக் காண முடியாது.
”திரிவடுகர்” என்ற வார்த்தைதான் மருவி ”திராவிடம்” ஆனது..அதாவது ஆரியர்கள் தங்களுக்கு தெற்கே வாழ்ந்த தெலுங்கர்களைத்தான் இப்படி அழைத்தனர்...
அன்று தந்தை பெரியார், அண்ணல் சௌந்திரபாண்டியனார் போன்றோர் நீதிக்கட்சியை ”தமிழர் கழகம்” என பெயர் மாற்ற ஏற்ப்பாட்டின்போது திராவிடர் கழகம் ஆனது எப்படி? மாநாட்டின் உணவு இடைவேளை வரை பெரியார் மற்றும் அனைவராலும் ஒத்துக்கொள்ளப்பட்ட “தமிழர் கழகம்” உணவு இடைவேளைக்குப்பின் (பெரியாரை நடேசனார், பி.டி.தியாகராயர் போன்றோர் சந்தித்தபின்)“திராவிடர் கழகமாக” மாறிய விந்தை என்ன? தமிழினம் என்றைக்குமே அடுத்தவர்களால் நயவஞகத்தால் வஞ்சிக்கப்படும் இனமாகவே உள்ளது வேதனை.

Unknown said...

’கல் தோன்றி மண்தோன்றா காலத்தே முன் தோன்றிய மூத்த குடி'தமிழினம்.. சங்க இலக்கியங்களிலோ, திருக்குறளிலோ “திராவிடர்” மற்றும் “திராவிடம்” என்ற வார்த்தைகளைக் காண முடியாது.
”திரிவடுகர்” என்ற வார்த்தைதான் மருவி ”திராவிடம்” ஆனது..அதாவது ஆரியர்கள் தங்களுக்கு தெற்கே வாழ்ந்த தெலுங்கர்களைத்தான் இப்படி அழைத்தனர்...
அன்று தந்தை பெரியார், அண்ணல் சௌந்திரபாண்டியனார் போன்றோர் நீதிக்கட்சியை ”தமிழர் கழகம்” என பெயர் மாற்ற ஏற்ப்பாட்டின்போது திராவிடர் கழகம் ஆனது எப்படி? மாநாட்டின் உணவு இடைவேளை வரை பெரியார் மற்றும் அனைவராலும் ஒத்துக்கொள்ளப்பட்ட “தமிழர் கழகம்” உணவு இடைவேளைக்குப்பின் (பெரியாரை நடேசனார், பி.டி.தியாகராயர் போன்றோர் சந்தித்தபின்)“திராவிடர் கழகமாக” மாறிய விந்தை என்ன? தமிழினம் என்றைக்குமே அடுத்தவர்களால் நயவஞகத்தால் வஞ்சிக்கப்படும் இனமாகவே உள்ளது வேதனை.

சதீஷ் said...

இன்றைய திராவிடக் கட்சியின் தலைவராக ஒரு பார்ப்பானே தேவைப் படுகிறது (அ.தி.மு.க. தலைமை). அதை நிர்வகிக்க திறமை வாய்ந்த திராவிடன் இல்லை???

தயவு செய்து இனி திராவிடன் என்ற பதத்தை பயன் படுத்த வேண்டாம்.