Search This Blog

24.2.10

காஞ்சி மடத்தின் முன் பெரியார் சிலை வந்த வரலாறு


காஞ்சியிலே...

உங்களுக்கு ஒரு சேதி தெரியுமா? கடந்த 30 ஆண்டுகாலமாக சங்கராச்சாரியார்கள் உள்பட காஞ்சி மடப் பக்தர்கள் தூங்கி எழுந்து முதலில் விழிக்கும் முகம் தந்தை பெரியார்தான்.

ஆச்சரியமா? காஞ்சி மடத்தின் முன் தந்தை பெரியார் சிலை இந்நாளில்தான் (1980) தமிழர் தலைவரால் திறந்து வைக்கப்பட்டது. அன்றுமுதல் பெரியார்தான் அவாளுக்கு முதல் தரிசனம்.

சிலை மட்டுமல்ல; கடவுள் மறுப்பும், ஆத்மா மறுப்பு வாசகங்கள்கூட, அதுவும் தமிழிலும், ஆங்கிலத்திலும்!

காஞ்சி மடத்துக்கு வரும் பக்தர்கள்கூட தந்தை பெரியாரை அங்கு சந்தித்துவிட்டுதான் மடத்துக்குள் செல்லவேண்டும்.

காஞ்சி மடத்துக்குள் என்ன நடக்கிறது? என்ன நடந்தது? ஆம், தந்தை பெரியார் சிலையாக நின்று சொல்லிக் கொண்டிருக்கிறாரோ!

அங்கு அய்யா சிலையை வைப்பதற்கு அடேயப்பா, எத்தனை எத்தனை முட்டுக்கட்டைகள் தெரியுமா?

1974 ஆம் ஆண்டு அங்கு சிலை வைக்க முயற்சிக்கப்பட்டது. அங்கு சிலை வைக்க எவ்விதத் தடையும் இல்லை, காஞ்சி நகராட்சி, மாவட்ட ஆட்சியர், மாவட்டக் காவல்துறை அதிகாரி ஆகியோரிடம் தடையில்லாச் சான்றும் பெறப்பட்டது. 1975 இல் சிலை வைப்பதற்கான பீடமும் அமைக்கப்பட்டு விட்டது. இடையில் ஆளுநர் ஆட்சி! (அவசர நிலை காலம்) இரண்டு பார்ப்பனர்கள் ஆலோசகர்கள் அதற்கு முட்டுக்கட்டை போட்டனர்.

ஆளுநர் ஆகட்சி முடிவுக்கு வந்த பிறகு, கழகத்தின் சார்பில் சிலை வைக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்-பட்டன.

அடுத்து வந்தது எம்.ஜி.ஆர். தலைமையிலான அ.இ.அ.தி.மு.க. ஆட்சியாயிற்றே!

அங்கே பெரியார் சிலை வைத்தால் பக்தர்கள் மனம் புண்படும் என்றார் திராவிட இயக்க வழிவந்ததாகக் கூறிக்கொண்ட முதலமைச்சர் எம்.ஜி.ஆர்.

அதனை எதிர்த்து செங்கற்பட்டு மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் சி.பி. இராசமாணிக்கம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தார். நீதிபதி மோகன் அருமையான தீர்ப்பை வழங்கினார். காஞ்சி மடத்தின் முன் பெரியார் சிலையை வைக்கத் தடையில்லை என்றாரே பார்க்கலாம்.

சட்டமன்றத்தில் இது எதிரொலித்தது. எதிர்க்கட்சித் தலைவர் கலைஞர் அவர்கள் அங்கு அய்யா சிலை வைத்தே தீருவோம் என்று முழங்கினார். அப்பொழுது அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள் என்ன கூறினார்கள் தெரியுமா? அந்தச் சிலையை உடைப்போம் என்று முழக்கமிட்டனர் (வெட்கப்படத்தக்கது!).

எல்லாவற்றையும் கடந்து வழக்கம்போல தந்தை பெரியார்தான் வென்றார். இந்நாளில் இவற்றையெல்லாம் அசை போடுவோமாக! அய்யா சிலை வைக்கும் பணியில் தங்களை ஒப்படைத்துக் கொண்டு உழைத்த சுயமரியாதைச் சுடரொளிகளாகி விட்ட சி.பி. இராசமாணிக்கம், டி.ஏ. கோபாலன், கம்மாபுரம் இராசகோபால், காஞ்சி கே.டி.எஸ். மணி உள்ளிட்டோரை மறவாமல் நினைவு கூர்வோமாக!

---------------- மயிலாடன் அவர்கள் 24-2-2010 “விடுதலை” யில் எழுதிய கட்டுரை

2 comments:

மணிகண்டன் said...

***
அப்பொழுது அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள் என்ன கூறினார்கள் தெரியுமா? அந்தச் சிலையை உடைப்போம் என்று முழக்கமிட்டனர் (வெட்கப்படத்தக்கது!).
****

Did this article come in viduthalai when DK was morally supporting CM jayalalitha when she was in power ?

தமிழ் ஓவியா said...

ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் கண்டிக்க வேண்டியவைகளை கண்டிப்பதும் ஆதரிக்க வேண்டியவைகளை ஆதரிக்கவும் எப்போதும் தயங்கியதில்லை தி.க.

நீங்கள் குழப்பத்தில் இருக்கிறீர்கள். தமிழ் ஓவியா வலைப்பதிவுகளைப் படியுங்கள் தெளிவு கிடைக்கும்.

நன்றி