Search This Blog

18.10.15

பெரியார் கொள்கை தோற்று விட்டதா? நீர்த்துப் போய் விட்டதா?

நீர்த்து விட்டதா பெரியார் கொள்கை?




இப்பொழுது சிலருக்கு வாடிக்கையாகி விட்டது. பெரியார் கொள்கை தோற்று விட்டதா? நீர்த்துப் போய் விட்டதா? ஜாதீய உணர்வுகள் தலை தூக்கி விட்டனவா? திராவிடர் இயக்கத்திற்கான அர்த்தம் என்ன? என்று தொலைக்காட்சிகளில் விவாதக் கணைகளைத் தொடுக்கிறார்கள் - ஒருங்கிணைப்பாளர்களும் - இத்தகைய வினாக்களை முன் வைக்கிறார்கள்.
அதற்கான விடைகள் அளிக்கப்படுகின்றன என்றாலும் அவை போதுமானதாக இல்லை; போதுமான நேரமும் தரப்படுவதில்லை.

இத்தகைய கேள்விகள் எழுப்பப் படுவதற்கு காரணம் என்ன?

ஆங்காங்கே ஒரு சில இடங்களில் காதலைக் காரணம் காட்டி தாழ்த்தப்பட்ட தோழர்கள் படுகொலை செய்யப்படுகின் றனர்.  இது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.

அதே நேரத்தில் நாள் ஒன்றுக்கு நூற்றுக் கணக்கான ஜாதி மறுப்புத் திருமணங்கள் நாட்டில் நடந்து கொண்டுதானிருக்கின்றன.
கடந்த காலங்களில் இல்லாத வகை களில் மதங்கள், சமுதாயப் பிரிவு களைக் கடந்து செய்யப்படும் சிறப்புத் திருமணப் பதிவுகள் மூன்று மடங்காக அதிகரித்துள்ளன. (காலைக்கதிர் 29.9.2015 பக்கம் 3).

பதிவுத் திருமணங்களும் இந்த வகை யில் நடந்து கொண்டு தானிருக்கின்றன. இவை எல்லாம் வெளிச்சத்துக்கு வருவ தில்லை.  அதே நேரத்தில் தாழ்த்தப்பட்டவர்கள் தங்களைவிட உயர் ஜாதியினர் என்று கருதப்படும் பிரிவுகளில் உள்ள பெண் களைக் காதலித்தால், குறிப்பிட்ட சில வட்டாரங்களில் அரிவாளைத் தூக்கு கிறார்கள்.


காதலிப்பவன் தாழ்த்தப்பட்டவராக இருந்தால், அதனை ஏற்றுக் கொள்ளும் மனப்பக்குவம் சில பகுதிகளில் இல்லை; (நகரப்புறங்களில் பெரும்பாலும் இந்தப் பிரச்சினை ஏற்படுவதில்லை)


உலகம் போச்சு உலகம் போச்சு! என்று ஆற்றோடு அடித்துச் செல்லப்படும் நரி சத்தம் போட்டு சத்தம் போட்டுக் கூவிற்றாம்!


பரிதாபப்பட்ட மக்கள் அந்த நரியை ஆற்று வெள்ளத்திலிருந்து காப்பாற்றிக் கரை ஏற்றி உலகம் போச்சு உலகம் போச்சு! என்று கதறினாயே - என்ன விசேஷம் என்று கேட்டபோது அந்த நரி சொல் லிற்றாம். என்னை நீங்கள் ஆற்று வெள் ளத்திலிருந்து காப்பாற்றா விட்டால், என்னைப் பொறுத்தவரை உலகம் போய் விட்டதல்லவா? என்று சொல்லிற்றாம்.


அதே போல சில குறிப்பிட்ட பகுதியில் ஆதிக்க ஜாதியினர் - தங்களுக்கும் கீழ் கூலி வேலை செய்து கொண்டிருந்தவனின் மகன் படித்து ஒரு படி மேலே உயர்ந்த நிலையில், அந்த ஆதிக்க ஜாதியில் பிறந்த பெண்ணைக் காதலித்தால் அடேயப்பா பூகம்பம் ஏற்பட்டதுபோல் கோபக்கனல் பீறிட்டு வெடிக்கிறது. நாம் என்ன? நமது தகுதி என்ன? குடிப் பெருமை என்ன? நம் வீட்டுப் பெண்ணை கேவலம் இந்தச் சேரிப் பயல் காதலிப்பதா என்று காட்டுத்தனமாய் கொலைக் கருவிகளைத் தூக்குகிறார்கள்.


இதை வைத்துக் கொண்டு பெரியாரியல்   தோற்று விட்டது என்று சில அறிவு ஜீவிகள் கருத்துத் தானங்களை வழங்க ஆரம்பித்து விடுகிறார்கள்.
ஆதிக்க ஜாதியைச் சேர்ந்த ஆண் தாழ்த்தப்பட்ட பெண்ணைக் காதலித்து திருமணம் செய்து கொண்டால் அது வெளியில் வருவதில்லை - அங்கே பெரியார் இயக்கம் ஜெயித்து விட்டது என்று ஜெய பேரிகை கொட்டு வதில்லையே!


தங்கள் உள்ளத்தில் குடி கொண்டிருந்த ஜாதீய வெறியும் - ஆணவமும் மிராசுத் தன் மையும் கொண்டு தாழ்த்தப்பட்ட மக்களைத் தனிமைப்படுத்தத் திட்டமிடுகிறது ஒரு வட்டாரம்.

ஏற்கெனவே அரசியல் கட்சியை ஆரம் பித்துப் போணியாகாதவர்கள், அரசியலில்காலூன்றுவதற்கான கொள்கையும், சித்தாந் தங்களும் இல்லாதவர்கள், குறுக்கு வழியில் ஜாதியைச் சொல்லிக் கூட்டம் சேர்ப்பது எளிது என்ற எண்ணத்தில் புலிக்குப் பயந் தவர் எல்லாம் என் மேலே படுத்துக் கொள்ளலாம் என்ற நரித் தந்திரமாக என்ன செய்கிறார்கள்?

தலித் சமுதாய இளைஞர்கள் எல்லாம் நம்ம ஜாதிப் பெண்களைக் கையைப்பிடித்து இழுக்கிறார்கள் - இதை நாம் அனுமதிக்க லாமா? வாரீர்! வாரீர்!! என் தலைமையில் கூடுவீர்! கூடுவீர்!! என்று கூக்குரல் போட்டு, தலித்  - தலித் அல்லாதவர்கள் என்று உத்திப் பிரிக்கும் விஷம வேலையில் ஈடுபட்டார்கள்.

வடக்கே  முஸ்லிம் - முஸ்லிம் அல்லா தார்  (Polarisation)  என்று  மதவாதத்தை முன்னிறுத்தி ஒரு வகையில் பி.ஜே.பி. வெற்றி பெற்றது அல்லவா - அந்த யுக்தி இவர்களின் நாக்கில் கொஞ்சம் தேனைத் தடவியது.

தமிழ்நாட்டில் அந்த மதவாதம் எடு படாது என்று தெரிந்த நிலையில், அதற்குப் பதில் ஜாதீயவாதத்தை முன் வைக்கலாம் என்று நப்பாசையில் ஒரு முயற்சியைச் செய்து பார்த்தார்கள்.

பல்வேறு ஜாதித் தலைவர்களை ஒருங்கிணைத்து (பார்ப்பனர் உட்பட) அனைத்து சமுதாய இயக்கம் (42 ஜாதிகள்) உருவாக்கப்பட்டனவே - அதற்கு அரசியல் வடிவம் கொடுக்கும் வகையில் சமூக ஜனநாயகக் கூட்டணி என்று நாமகரணம் சூட்டப்பட்டதே - அவை எல்லாம் என்னாச்சு? அவைகளின் முகவரி எங்கே?

அந்த அமைப்புக்கு யாராவது கடிதம் எழுதினால் கடிதம் மரண அலுவலகத்துக் குத்தான் (Dead Letter Office) போய்ச் சேரும். ஏன் அந்த சமுதாயக் கூட்டணி விமானம் அரசியல் வானில் (Take Off) பறக்கவில்லை? அல்லது பறக்க முடிய வில்லை?

அதற்குக் காரணம் வெகு வெகு எளிது;  பெரியார் கொள்கை தோற்றுவிட்டது என்று புலம்புகிறவர்களுக்கு இந்த இடத்தில்தான் வெகு அழகாக வட்டியும் முதுலுமான பதில் பாங்காகக் கிடைக்கும். இதற்கு முன்பும்கூட தமிழக அரசியல் அரங்கில் ஜாதிக் கட்சிகள் அரங்கம் ஏறி ஆழம் பார்த்ததுண்டு; விளக்கெண்ணெய்க் கும் கேடாக முடிந்ததே தவிர, பிள்ளை பிழைத்த பாடில்லையே!

ஜாதிப் பெயரைச் சொல்லி ஆங்காங்கே சில குட்டித் தலைவர்கள் சிலம்பம் ஆட லாம் - தேர்தல்  களத்திலே நின்று வாக்கு களை வாங்கச் சொல்லுங்கள் பார்க்கலாம்.

டாக்டர் ராமதாஸ்  அவர்களேகூட பா.ம.க. என்ற படுதாவுக்குள் நுழைந்து அரசியல் நடத்த முடியுமே தவிர வன்னியர் கட்சி என்று கூறி வாக்கு வாங்கச் சொல்லுங்கள் பார்க்கலாம். தாழ்த்தப்பட்டவர்கள் அமைப்பு வைத் துக் கொள்ளவில்லையா? அது ஜாதிக்  கட்சிதானே? என்று சில மே(ல்)தாவிகள் கேட்பது நம் செவிகளில் விழத்தான் செய்கிறது.

தாழ்த்தப்பட்டவர்கள் சங்கம் வைத்துக் கொள்வதும் கட்சி நடத்துவதும், மற்ற ஜாதியினர் அமைப்பு வைத்துக் கொள்வதும் ஒன்றல்ல.

தாழ்த்தப்பட்டவர்கள் தாங்கள் தாழ்த் தப்பட்ட நிலையிலிருந்து விடுபட்டு தலை தூக்கி உரிமைக் குரல் கொடுக்க அந்த அமைப்புத் தேவைப்படுவது காலத்தின் கட்டாயம்!

தொழிலாளர்கள் ஏன் சங்கம் வைத்துக் கொள்கிறார்கள் என்று கேட்க முடியுமா? அதே போன்றதுதான் தாழ்த்தப்பட்டவர்கள் அமைப்பினை வைத்துக் கொள்வதும்.

இது எப்படி இருக்கிறது என்றால் முசுலிம்கள் கட்சி வைத்துக் கொள்ளும் போது, இந்துக்கள் ஏன் கட்சி வைத்துக் கொள்ளக் கூடாது என்று கேட்கும் விதண் டாவாத இந்துத்துவவாதிகள் கேட்பது போன்றதே!

அடிப்பவனுக்கும் சங்கம்,  அடிப்பட்ட வனுக்கும் சங்கம் என்பது சம நீதி ஆகாது என்பது பால பாடமாகும். இந்த ஜாதி சங்க சமுதாயக் கூட்டணியாக இருந்தாலும் சரி, அதன் அரசியல் வழி வடிவமாக இருந்தாலும் சரி அவர்கள் தேசிய அளவில் யாருக்கு நடைப் பாவாடை விரிக்கிறார்கள் என்பதை கவனிக்க வேண்டும். பாரதீய ஜனதா என்ற இந்துத்துவவாத பார்ப்பனீயப் படை யெடுப்புக்கு இவர்கள் தூசுப் படையாக இருக்கத் தயாரானார்கள் என்பதையும் மறக்காமல் மனதில் ஆணி அடித்து இறுத்த வேண்டும்.

எந்தப் பார்ப்பன எதிர்ப்பை முன் னிறுத்தி பார்ப்பனர் அல்லாத மக்களுக்கு சமூக நீதியைத் தந்தை பெரியாரும் திராவிடர் இயக்கமும் பெற்றுத் தந்ததோ, அந்தப் பலன்களை மூச்சு முட்ட அனுபவித்துக் கொண்டே பெரியாரைத் தூக்கித் தூரப் போட்டு விட்டு, திராவிடர் இயக்கத்தைத் தூஷித்து விட்டு, பார்ப்பனீய ஜனதாவுக்கு பராக்குப் பாடுகிறார்கள் என்றால் இவர்களை அடையாளம் காண வேண்டாமா? அடையாளம் கண்டதால் தான்  நம் மக்கள் வைக்க வேண்டிய இடத்தில் இவர்களை வைத்துள்ளனர். இவர்கள் கால் ஊன்ற வேண்டுமானால் தந்தை பெரியார் தேவை; எங்கள் கட்சியில் நாங்கள் பார்ப்பனர்களைச் சேர்த்துக் கொள்ள மாட்டோம் என்று முழங்கு வார்கள்.
இவர்களுக்கு நாலு சீட்டு சட்ட மன்றத்திலும் நாடாளுமன்றத்திலும் தேவைப்பட்டால் திராவிடக் கட்சிகளின் தோள்கள் தேவை. மத்தியில் வன்னியர் களுக்கு அமைச்சர்களாக இருக்க வேண்டு மானால் தி.மு.க. அல்லது அதிமுக கூட்டணி தேவை. 1989இல் தொடங்கி 1996 முடிய மூன்று தேர்தல்களிலும் தனித்துப் போட்டியிட்டு ஒரு இடத்தைக்கூட சட்டமன்றத்தில் பெற முடியாத நிலையில் தோல்வியின் பளுவால் துவண்டு, 1998ஆம் ஆண்டு முதல் திமுக/அதிமுக என்ற இரு திராவிட அரசியல் கட்சிகளின் தோன்றாத் துணையான தோள்களில் சாய்ந்து தானே இரண்டொரு இடங்களைப் பெற்றனர். எந்த அளவுக்குச் சென்றனர்? இனி எவனாவது பிராமணனிடம் வாலாட்ட முடியுமா? அவங்களுக்கு ஒண்ணுன்னா நாங்க முன் வந்து நிற்போம் என்று ஜாதி அமைப்புத் தலைவர்கள் (?) கூட்டிய கூட்டம் ஒன்றில் (சேலம் 27.12.2012) பேசுகிறார்கள் என்றால் - இதுதான்  பார்ப்பனர்களை எங்கள் கட்சியில் சேர்க்க மாட்டோம் - கறுப்புச் சட்டை நாங்கள் அணிந்திருக்கிறோம் என்று வீராப்புப் பேசியதற்கான இலட்சணமா?

தந்தை பெரியார் பார்ப்பனர் - பார்ப்பனர்அல்லாதார் என்று பிரித்தார் - பார்ப்பனர்கள் ஆதிக்கத்தில் இருந்த உரிமைகளை எல்லாம் உரிமைகள் மறுக்கப்பட்ட மக்களுக்குப் பெற்றுத் தந்தார்.

இதுபற்றி தந்தை பெரியார் எழுதி யுள்ளதை இவ்விடத்தில் குறிப்பிடுவது அவசியம் -முக்கியம்.

நான் அரசியலில் பல மாறுதலில் ஈடுபட்டிருக்கலாம் என்றாலும் சமுதாயத் துறையில் பார்ப்பனீய வெறுப்புள்ளவன் நான். அதுதான் என்னைப் பகுத்தறிவு வாதியாக (நாத்தினாக) ஆக்கியது. இந்தச் சமுதாயச் சீர்திருத்தம் என்பதற்கு முதற்படி பார்ப்பன ஆதிக்கத்திலிருக்கும் பதவி உத்தியோகங்களை விகிதாச்சாரம் கைப் பற்ற வேண்டியது என்பதைத்தான் A,B, C,D யாகக் கொண்டோம் கொள்கிறோம். ஆனதினாலேயே தான் வகுப்புவாதி என்று சொல்லப்பட்டேன் என்பதல்லாமல் நானும் வகுப்புவாத உருவமாகவே இருந்து வருகிறேன் என்றார் தந்தை பெரியார் (விடுதலை 5.3.1969).

பெரியார்அவர்களின் இந்த அடிநாதக் கோட்பாட்டைப் புரிந்து கொள்பவர்கள், அதன்படி ஒழுகுபவர்கள் மட்டுமே தந்தை பெரியாரை உச்சரிக்க யோக்கியதாம்சம் உடையவர்கள் ஆவார்கள்.

தந்தை பெரியார் அவர்களின் இந்தக் கொள்கையாலும்,  உழைப்பாலும் பயன் பெற்றவர்கள் கிளையிலிருந்து ஆணி வேரை வெட்டுவது போல பார்ப்பனர் களைப் பாதுகாத்து தாழ்த்தப்பட்டவர்களை எதிரிகளாகக் கூக்குரல் போடுவது எத்தகைய விபரீதம் - கீழ்க்குரல் என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும்.
அதிலும் கடை மட்ட நிலைக்குத் தள்ளப்பட்ட தாழ்த்தப்பட்ட மக்களுக்கு முன்னுரிமை கொடுத்தார். 

பறையன் பட்டம் ஒழியாமல் உங்கள் சூத்திரப் பட்டம் ஒழியாது என்று பார்ப்பனர் அல்லாத மக்களுக்குப் பால பாடமும் சொல்லிக் கொடுத்தார். (குடிஅரசு 11.10.1931).

இதைத் தெரியாமல் தான் தந்தை பெரியார் பெயரை உச்சரித்தார்களா? கருப்புச் சட்டையும் அணிந்தார்களா?

இன்றைக்குக்கூட நிலை என்ன? சாஸ்திரப் படி ஏன் இந்திய அரசமைப்புச் சட்டப்படி இவர்கள் ஒன்று சேர்ந்திருக்கிற சமூக அமைப்பில் அடங்கியுள்ள அத்தனைப் பிற்படுத்தப்பட்ட - மிகவும் பிற்படுத்தப்பட்ட, முன்னேறிய ஜாதியினர் உள்ளிட்ட பார்ப்பனர் அல்லாதார் அத் தனைப் பேரும் - பார்ப்பனிய இந்துத்துவா கோட்பாட்டின்படி சூத்திரர்கள்தானே? மறுக்க முடியுமா? பார்ப்பனர்களை இவர்களின் சமூகக் கூட்டணியில் அங்கம் வைக்கக் செய்து விட்டதாலேயே இந்தச் சூத்திர இழிவு நீங்கி விடுமா?

அந்த சூத்திர இழிவு நீங்க வேண்டும் என்ற உணர்வும், உணர்ச்சியும், சுயமரி யாதையும் உண்டாக்குவதற்குத் தந்தை  பெரியார் தானே தேவைப்படுவார்? திரா விடர் இயக்கச் சித்தாந்தம் தானே தேவைப்படும்?
பார்ப்பனர், பார்ப்பனர் அல்லாதார் என்ற அடையாளத்தைக் காட்டிய பெரியார் எங்கே? தலித்துகள் - தலித்துகள் அல்லா தார் என்று பிரித்துக் கலகம் விளைவிக்கும் இந்தப் பார்ப்பனீய அடிமைத்தனம் எங்கே?

பெரியார் தேவையில்லை - திராவிடர் இயக்கம் தேவையில்லை என்றால் திரா விடர் இயக்கம் தோன்றுவதற்கு (2016 நவம்பர் 20ஆம் தேதி நூற்றாண்டு காண்கிறது) முன்பிருந்த கால கட்டத்திற்குச் செல்லத்தான் தாயராக இருக்க வேண்டும்.

இரயில்வே உணவு விடுதியில் கூட பிராமணாள் - இதராள் என்று போர்டு மாட்டி  இருந்தார்களே - அந்தப் போர்டை எடுத்துக் கழுத்தில் மாட்டிக் கொள்ளத் தயாராக இருக்க வேண்டும்.

மருத்துவக் கல்லூரியில் சேர வேண்டு மென்றால் சமஸ்கிருதம் படித்திருக்க வேண்டும் என்ற அந்த நிபந்தனையின் கீழ் வராண்டாவில் நின்று வாய்ப் பிளந்து பார்த்துக் கொண்டு இருக்க  வேண்டும்.

இவை எல்லாவற்றையும் தொகுத்து எழுதுவதற்குக் காரணம் யாரையும் காயப் படுத்த வேண்டும் என்ற உள்நோக்கத்தோடு அல்ல. காயப்பட்டு புண் ஆறி அடி எடுத்து வைக்கும் பார்ப்பனர் அல்லாத சமுதாயத் திற்குத் தெரிந்தோ தெரியாமலோ துரோகம் செய்வது தடுக்கப்பட வேண்டும்  என்று தந்தை பெரியார் சொல்லிக் கொடுத்த அந்த இனவுணர்வு - சமூக நீதி சுயமரியாதை உயர்வுக் கோட்பாட்டுச் சித்தாந்தத்தின் அடிப்படையில்தான்.

சட்டமன்றத்தில் அமர்வதற்கு, அமைச்ச ராக ஒருவர் போய் உட்காருவதற்காக ஒரு நூற்றாண்டுக்கால தலைகீழ்ப் புரட்சியைத் தலை கவிழ்த்துக் கொச்சைப்படுத்த வேண்டாம், கூடாது என்ற எண்ணத்தில் எழுதப்படுவதே! தாழ்த்தப்பட்ட மக்களும், பிற்படுத்தப் பட்ட மக்களும், சிறுபான்மையினரும் இந்நாட்டின் பெரும்பான்மை மக்கள். இவர்களுக்குள்ள விகிதச்சார அளவுக்கு உரிமை, நம்மிடம் வந்து சேரவில்லை. அதற்குள்ளாகவே இதுவரை கிடைத்தவற் றைத் தட்டிப் பறிக்கக் கழுகுக் கூட்டம் வட்டமிட்டுக் கொண்டு அலைகிறது.

ஏற்கனவே போராடிப் பெற்றதைத் தக்க வைத்துக் கொள்ளவும், பெற வேண்டியதை ஈட்டவும். கண்டிப்பாக தந்தை பெரியார்  தேவைப்படுகிறார் - திராவிடர் இயக்க சித்தாந்தம் தேவைப்படுகிறது - பதவித் தன்னலத் தீயில் இவற்றை எல்லாம் தரை மட்டமாக்கத் துடிக்க வேண்டாமே!

நீர்த்து விட்டது  - தோற்றுவிட்டது திராவிடர் இயக்கம், பெரியார் கொள்கை  என்று சொல்கிறவர்கள், அது நீர்த்து விட வேண்டும், தோற்க வேண்டும் என்ற ஆசை யில் எழுதுகிறவர்கள் உண்டு; புரியாமல் அரைவேக்காட்டுத்தனமாக எழுதுகிறவர் கள் உண்டு. சமூக வரலாற்று விஞ்ஞானத் தைப் புரிந்து கொண்டால் திராவிடர் இயக்கமும், தந்தை பெரியாரும் காலத்தால் பெற்றெடுக்கப்பட்ட வரலாற்றின் தேவைகள்!

திராவிட இயக்கத்தால் கொண்டு வரப்பட்டது வகுப்புவாரி உரிமை, தந்தை பெரியார்தம் புரட்சியால் அரசமைப்புச் சட்டத்தில் முதல் திருத்தமாகக் கொண்டு வரப்பட்டுப் பாதுகாக்கப்பட்டது. இந்த இடஒதுக்கீடு மத்திய அரசுத் துறைகளில் கல்வியிலும், வேலை வாய்ப்பிலும் பிற்படுத் தப்பட்டவர்களுக்கு 27 விழுக்காடு இட ஒதுக்கீடு கொண்டு வரப்படுவதற்குக் கார ணமாகவும் காரணியாகவும் இருந்தது திரா விடர் கழகம். இதற்காக 42 மாநாடுகளையும், 16 போராட்டங்களையும் நடத்தியுள்ளது.

அதனால்தான் இந்தத் திட்டத்தை அறிவிக்கும்போது பிரதமர் வி.பி. சிங் மறக்காமல் தந்தை பெரியார் அவர்களை நினைவு கூர்ந்தார்கள்.

தமிழ்நாட்டில் 69 சதவீதம் அரசமைப் புச் சட்டம் பாதுகாப்புடன் இருப்பதற்கும் (76ஆவது திருத்தம்) காரணம் திராவிடர் கழகம் அதற்கான சட்டத்தை எழுதிக் கொடுத்தவர்கூட திராவிடர் கழகத் தலைவர் மானமிகு கி. வீரமணி அவர்களே என்பது உலகத்திற்கே தெரியும். முதல் திருத்தம் என்றால் தந்தை பெரியாரையும், 76ஆவது திருத்தம் என்றால் ஆசிரியர் கி. வீரமணி அவர்களையும் வரலாறு என்றும் பேசிக் கொண்டே இருக்கும். இந்நிலையில் பெரியாரியல் நீர்த்து விட்டது. திராவிட இயக்கம் தோற்றுவிட்டது என்பது கருத்தற்றது; அவை பிதற்றல்! இந்தப் பிதற்றல்  கூட்டணியில் ஜாதியும் மதமும் தமிழ்த் தேசியமும் இருக்கிறது என்பதைக் கவனிக்க வேண்டும்..
திராவிடர் இயக்கமும், தந்தை பெரியார் அவர்களும் போராடிப்  பெற்றுத் தந்த இடஒதுக்கீடு சமூகத்தில் எத்தகைய விளைவை ஏற்படுத்தியுள்ளது.

Justice Has helped Tamilnadu,says Assocham Report என்ற தலைப்பில் வந்தத் தகவல்:Justice pursued since  the pre Independence period has helped Tamilnadu to see development of Education and Employment; which in turn has led to an inclusive growth the Associated Chambers of Commerce and industry India (Assocham) said in its latest focus report (The  New Indian Express 28.10.2010 page 5)

நாடு விடுதலை பெறுவதற்கு முன் பிருந்தே கடைப்பிடிக்கப்பட்டு வந்த சமூகநீதிக் கொள்கை தமிழ்நாட்டின் கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளின் முன்னேற்றத் திற்குப் பெரிதும் உதவியுள்ளதாகவும், இதன் விளைவாக அனைத்துத் தரப்பினரையும் உள்ளடக்கிய ஒட்டு மொத்த வளர்ச்சிக்கு வழி வகுத்துள்ளது என்றும் கிராமப்புற கட்டமைப்பு மேம்பாட்டுடன் இணைந்து  சேவைத் துறை வளர்ச்சி பெற தமிழ் நாட்டுக்கு உதவியுள்ளது  - அதனால்  தமிழ்நாட்டில் நீடித்த வளர்ச்சி ஏற்பட் டுள்ளது என்று இந்திய ஒருங்கிணைந்த வர்த்தக மற்றும் தொழில் கூட்டமைப்பு வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட் டுள்ளது. (28.10.2010).

திராவிடர் இயக்கத்தால் தந்தை பெரி யாரின் தொண்டால் இப்படிப் பலன்களை அன்றாடம் துய்த்துக் கொண்டு, தீட்டிய மரத்தில் கூர்ப்பாய்ச்ச துடிக்கலாமா?

யாரையும் காயப்படுத்த அல்ல - நேர்மையாக சிந்திக்கத் தூண்டவே இந்தக் கட்டுரை. 

-------------------------- கவிஞர் கலி. பூங்குன்றன் அவர்கள் 17-10-2015 “விடுதலை” ஞாயிறுமலரில் எழுதிய கட்டுரை
17-10-2015

1 comments:

விஸ்வேஸ்வரன் said...

அய்யாவின் கருத்துக்கள் நீர்த்தும் போகாது தோற்றும் விடாது. மாறாக தமிழ் மக்கள் மனத்தில் பரவலாகப் படிந்து விடட ஒன்று.
பெரியார் தொண்டர்களின் பணி பெரியார் அவர்களின் பணியை அடுத்த நிலைக்குக் கொண்டு செல்ல வேண்டும்.சாதி மறுப்புடன் இணைந்து கடவுள் மதம் மறுப்பு இணைந்து செய்ய வேண்டும் சங்கரன்கள்(காஞ்சி) ஆசாராம், நித்யானந்தா , தினகரன் , டாலிபான் எனப் பலரும் அவர்களின் செயல்களும் பெரியாரின் கருத்துக்களைப் பரப்ப உதவுகின்றனர்.தமிழ்ப் பண்புகளைக் குறிக்க திருக்குறளைப் பயன் படுத்த வேண்டும. அது போன்ற மாற்று இல்லாது கடவுள் மறுப்பு மக்களைச் சென்றடையாது.
எதிர்மறைக் கருத்துக்கள் பரவும் போது உண்டாகும் வெற்றிடம் நிரப்பப் பட்டால்தான் காவிகளுக்கு புகுந்து குழப்ப இடைவெளி இருக்காது. சிந்தியுங்கள்.